எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 02, 2024

என்னவோ நேரம்! இன்னும் சரியாகலை! :(

 நானும் அடிக்கடி வரதில்லையா! யாருக்கும் நினைப்பு இருக்காது. நம்மவர் சென்ற மாதம் 10 ஆம் தேதியன்று இரவில் கீழே விழுந்து செக்யூரிடி ஆட்களை வரவழைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டோம். பாதம் தரையில் பாவவே இல்லை. கவலையாகவே இருந்தது. இருந்தாலும் காட்டிக்காமல் சமையலறையை ஒழிக்காமல் அப்படியே மூடி வைச்சுட்டு வந்து நானும்படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் கழிவறை போகணும்னு சொல்லவே எழுப்பி விட்டுக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றேன். அப்போவே ஏதோ குதிக்கிறாப்போல் தான் நடந்தார். திரும்பி வரும்போது ஒரேயடியாய்த் தள்ளி விட்டது உடம்பை. நல்லவேளையாய்க் கட்டிலில் தான் விழுந்தார். உடனேயே ஏதோ பிரச்னை எனத் தெரியவே சர்க்கரை அளவைப் பார்த்தேன் 176 இருந்தது. சர்க்கரை இல்லை. பின்னே என்ன காரணம்? தாமதம் செய்யாமல் உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டு மருத்துவமனியிலும் எமர்ஜென்சியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லவும் வாங்க, ஆனால் உடனே இடம் கிடைப்பது கஷ்டம். ஒரு விபத்து நடந்து அதில் மாட்டிக் கொண்டவர்கள் வந்திருக்காங்க. ஆனாலும் உடனே கவனிப்போம் எனச் சொல்லவே, வந்தது வரட்டும்னு ஆம்புலன்சில் அவரை ஏற்றிவிட்டு நானும் முன்னால் ஏறிக் கொண்டேன்.

மருத்துவமனை போயாச்சு. உடனே ஸ்ட்ரெச்சர் வரலை. கொஞ்சம் தாமதம் ஆனது. அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் ட்ரைவர் ட்யூடி டாக்டரிடம் போய்ச் சொல்லவே அவர் வந்து பார்த்துவிட்டு உடனே ஸ்ட்ரெச்சர்  வரவழைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். திடீர்னு அவருக்கு நம்பர் ஒன் போகாமல் தொந்திரவு பண்ண ஆரம்பிக்கவே வலியில் புலம்பினார். டாக்டர் ட்யூபெல்லாம் போடக் கூடாது, அவராகப் போகணும்னு சொல்லிட்டார் நம்பர் ஒன் போனப்புறமாத் தான் வந்திருக்கும் காரணத்துக்கான மருத்துவம் ஆரம்பிப்பாங்க போல. எனக்குக் கொஞ்சம் கோபம் வரவே இன்னும் எத்தனை நேரம் கவனிக்காமல் இருப்பீங்க எனக் கேட்கவே அவர் முதலில் நம்பர் ஒன் போகட்டும் என்றார்கள். ரொம்ப சிரமத்திற்குப் பின்னர் நம்பர் ஒன் போகவே உடனே ரத்தப் பரிசோதனை. கடவுளே அவருக்கு ரத்தம் எடுப்பவே கஷ்டம். குத்திக் குத்திப் புண்ணாக்கிடுவாங்க. ஒவ்வொரு இடமாஅப் பார்த்து ஒரு வ்ழியா ரத்தம் எடுத்து சோடிஉம் குறைச்சல்னு சொல்லிட்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பிச்சுட்டு, இவரைப் பார்க்கும் மருத்துவருக்கும், சிறுநீரக மருத்துவருக்கும் தகவல் அனுப்பி வைச்சாங்க. 

பின்னர் ஒரு வழியாக் காலை நாலு மணி அளவில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டு அறைக்கு வந்தோம். தூக்கமா? இரண்டு பேருக்கும் தூக்கமே இல்லை. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மட்டும் தகவல் சொல்லி இருந்தேன். வேறே யாருக்கும் சொல்லவில்லை. பையர் வரட்டுமா எனக் கேட்க, வேண்டாம், நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். பின்னர் காலை விடிஞ்சதும் செவிலியர் வந்து ஏற்கெனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளைக் கேட்டாங்க. ஆஹா! தப்புப் பண்ணிட்டோமேனு நினைச்சேன். அது தேவை இல்லைனு நினைச்சு வீட்டிலேயே வைச்சிருந்தேன். அதை எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. இவரைப் பார்த்துக்க ஆளே இல்லையே! அவசரம் அவசரமாக அவரிடம் சொல்லிட்டு, ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக வாக்குக் கொடுத்துட்டு செவிலியர், வார்ட் பாய் ஆகியோரிடமும் சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். எப்போவும் போல் ரெட் டாக்சிக்குக் காத்திருக்காமல் ஆட்டோவிலேயே போயிட்டேன். பைசா ஜாஸ்தி தான். ஆனால் அவசரத்துக்கு என்ன செய்ய? விட்டுக்குப் போனதும் மருந்துகள், மற்றும் தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டு பையில் வைச்சுட்டு, குளித்து விட்டு உடனே கிளம்பிட்டேன். செக்யூரிடி மூலம் ஆட்டோ வரவழைத்துக் கொண்டு முக்கால் மணி நேரத்தில் திரும்ப மருத்துவமனை போயிட்டேன். நல்லவேளையாக் காலை ஆகாரம் வரலை. போனதும் காலை ஆகாரத்துக்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை அவங்க அப்போப் புதுசாக் கொடுத்த மாத்திரைகளோடு சேர்த்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு உட்கார்ந்தேன்.

கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மும்பையில் இருக்கும் மைத்துனரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் வரட்டுமானு கேட்டதுக்கு வேண்டாம் தகவலுக்காகத்க் தான் சொன்னேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவர் அன்றிரவு விமானத்தில் கிளம்பி வந்தார். அன்று முழுவதும் உட்கார்ந்திருந்ததாலும் முதல் நாள் இரவிலும் உட்கார்ந்திருந்ததாலும் உடம்பு கெஞ்சியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரவு பனிரண்டு மணி அளவில் மைத்துனர் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் என்னைக் கீழே வரும்படியும் சொன்னார். அவர் வந்த வண்டியிலேயே என்னைக் கொண்டு விட்டு விட்டுத் திரும்ப அவர் மருத்துவமனை வருவதாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஆகவே சுமார் பனிரண்டரை மணி அளவில் நான் வீட்டுக்கு வர அவர் மருத்துவமனை போனால். மறுநாள் காலை வீட்டு வேலை செய்யும் பெண்ணை வரச் சொல்லி வீடு சுத்தம் செய்து பாத்திரங்களைக் கழுவி வைச்சுட்டு எட்டரைக்கெல்லாம் மறுபடி மருத்துவமனை போய் இரவு தூங்காமல் இருந்த மைத்துனரை விடுவித்தேன்.  அவர் வீட்டுக்குப் போய் விட்டார். அன்றே சிறுநீரக மருத்துவரும் வந்து பார்த்துட்டு பயப்பட வேண்டாம் சோடியம் லெவல் 130க்கு மேல் வந்தால் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று சொன்னார்.

Monday, February 19, 2024

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி

 உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.


உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.


உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.


தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

Sunday, February 18, 2024

என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் உதவலாம்!

 முந்தாநாள் மெடிகல் ஃபார்மசியில் மருந்துகள் வாங்கப் பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அந்தப்பெண் அவ்வளவு தானா மேடம்? வேறே ஏதும் இருக்கானு கேட்டாங்க. ஆமாம், ஒரு டெட்டால் பாட்டிலும் சேர்த்துப் போடுங்க என்றேன். டெட்டாயில் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) தானே மேடம்? எத்தனை லிட்டர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டெட்டாயில் இல்லை, டெட்டால் என்றேன். அதான் மேடம் நானும் சொல்றேன், டெட்டாயில் அரை லிட்டர் போடவா? 

ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

முந்தாநாளே நடந்த இன்னொரு விஷயம். சிலிண்டர் தீர்ந்து விட்டதால் ரீஃபில் பதிவு செய்தேன், வழக்கம் போல் வாடசப் மூலம் என்னுடைய மொபைல் நம்பரில் தான் செய்தேன், எல்லாம் சரியாக வந்தது. ஆனால் எனக்குச்செய்தி எஸ் எம் எஸ் மூலம் வரவே இல்லை. சரினு மறுபடி செய்தால் ஏற்கெனவே பதிவு செய்தாச்சு, சிலிண்டரும் வந்துடும்னு வாட்சப்பில் வந்தது. இந்த டி.ஏ.சி. நம்பர்னு ஒண்ணு வரணுமே! அது வரவே இல்லை. என்னாச்சுனு தெரியலையேனு குழப்பம், நேத்திக்கு சிலிண்டரும் வந்தது,. வழக்கமாய் வருபவர் தான். சிலிண்டரைப் பொருத்திப் பார்த்துட்டுப் பணம் கொடுக்கையில் டிஏசி நம்பர் கேட்க நான் வரவே இல்லை என்றேன், அவருக்கு திடீர்னு எனக்கு மொபைல் பார்க்கத் தெரியலைனு ஜந்தேகம். மொபைலைக் கொண்டானு சொன்னார். காட்டினேன். பிஎஸ் என் எல் ரீசார்ஜ் மெசேஜ் தான் இருந்தது, (அதுவும் ஒரு தனிக்கதை. பின்னால் பார்ப்போம்.) ஏன் வரலைனு கேட்டேன். உடனே அந்த மனிதர் உங்க காஸ் ஏஜென்சிக்குத் தொலைபேசிக் கேளுங்க. அவங்க தான் அனுப்பணும். அனுப்பாமல் விட்டிருக்காங்க என்றார்.

உடனே தொலைபேசினேன். முதலில் ஒரு பெண் எடுத்தார். அவரிடம் விபரங்கள் சொல்லிக் கேட்டால் நான் புதுசுனு வேறே ஒருத்தரிடம் சொல்ல அந்த ஒருத்தர் எடுத்தார் அவரிடம் விபரங்கள் கன்ஸ்யூமர் நம்பர் எல்லாம் சொல்லவே பெயர், விலாசம் சரியாகச் சொல்லிட்டு உங்க மொபைல் நம்பர்னு ஆரம்பிச்சு 988 நு ஆரம்பிக்கும் ஏதோ நம்பரைச் சொல்லவே இல்லையே இது என்னோட நம்பரே இல்லைனேன். உடனே அவர் மீண்டும் பார்த்துட்டு, நவம்பரில் நீங்க சொல்லும் நம்பரில் இருந்து பதிவு செய்திருக்கீங்க. இப்போ இந்த நம்பரில் பதிவு செய்திருக்கீங்கனு சொல்லவும் கோபத்துடன் இந்த மாதிரி ஒரு நம்பருடன் எங்களிடம் எந்தத் தொலைபேசி/அலைபேசி கிடையாது, இந்த ஒரே நம்பர் தான் எங்க நம்பர்னு சொன்னால் அவ்ர் ஒத்துக்கவே இல்லை. நாங்க கொடுத்த செய்து அந்த 988 இல் இருந்து ஆரம்பிக்கும் நம்பருக்குப் போயிருக்கும் ;என்று முடிக்கப் பார்த்தார். நான் விடலை. இதே நம்பரில் இருந்து தான் வாட்சப்பில் சிலிண்டர் புக் செய்தேன். அந்த வாட்சப் செய்திகளை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்யறேன் என்று சொல்லவே அவர் ஒரு சவாலாக அனுப்புங்க பார்ப்போம்னு ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

அது அலுவலக எண்ணாம். நானும் அந்த எண்ணிற்கு எனக்கு வந்த வாட்சப் செய்திகளை ஃபார்வார்ட் செய்து விட்டு மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ரொம்ப நேரம் யாருமே எடுக்கலை. பின்னர் ஒரு பெண் எடுத்து என்ன எனக் கேட்கவும் விபரங்களைச் சொன்னேன். ரொம்பப் பணிவாக, சரி மேடம், நாங்க என்னனு பார்க்கிறோம் மேடம்னு சொல்லிட்டு ஃபோனை வைச்சுட்டார். மறுபடி சிலிண்டர் போடுபவரைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னால் ஏஜென்சிக்காரங்க தான் தப்பான தொலைபேசி எண்ணை இணைச்சிருக்கணும் எனவும் இது அவங்க தப்பு அதனால் அப்படியே விடுங்க, நீங்க பத்து வருஷத்துக்கு மேலாகத் தெரிஞ்சவங்க என்பதால் நானும் சிலிண்டரைக் கொடுத்துட்டேன். பின்னால் பார்த்துக்கலாம் என்று சொன்னார். ர்ங்க்ஸிடம் இதை ஒரு மாதிரி விபரமாகச் சொல்லி என்ன செய்யனு கேட்டால் பேசாமல் இருப்போம் என்றார், இதுக்கு என்ன செய்யலாம்? ஐ.ஓ.சி.யிடம் புகார் கொடுக்கணுமா? ஏஜென்சியில் நம்பரை மாத்தணும்னால் நேரே வரணும் என்றார்கள். எனக்கோ/அவருக்கோ நேரில் போகும் நிலையில் இல்லை. என்னதான் சும்மா இருந்தாலும் மனதில் இது ஓடிக் கொண்டே இருக்கு.


Friday, February 02, 2024

கோலத்தில் கொண்டாடிய பண்டிகை!


 பால்கனியில் கனுப்பிடி வைச்சேன். மொட்டை மாடிக்கு இப்போல்லாம் ஏற முடியாததால் இங்கேயே வைச்சுடுவேன். நான் மட்டும் தான் என்பதால் ஒற்றை இலை போடாமல் இரண்டு இலைகள் போட்டு இரண்டிலும் வைப்பேன். கூட யாரேனும் இருந்தால் எனக்குத் தனி இலை, அவங்களுக்குத் தனி இலைனு இரண்டு ஆயிடும். ஆனால் யாருமே இல்லையே!கனுவன்று போட்ட கோலம்.


 
பொங்கலன்று போட்ட கோலம்.இந்த வருஷம் பூஜை பண்ண முடியலை என்பதால் பால்கனியில் சூரியக் கோலம் போட்டு எல்லாம் எடுத்து வைச்சுப் பண்ணாமல் பொங்கல், அன்னம், அவிசு, காய்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகியவ்ற்றை சுவாமிக்கு எதிரே வைத்து முடிஞ்ச மட்டும் கொண்டு வைத்துக் கொண்டு நிவேதனம் மட்டும் பண்ணினேன். அதுக்குள்ளேயும் அவருக்குப் பசி அதிகமாகி விட்டது. நேரம் ஆயிடுச்சே! :( பின்னர் சாப்பிடும்போது சாப்பாடு இறங்கலை . கஷ்டமாக இருந்தது. படம் எடுக்க முடியலை. ஒரேயடியாகப் பரத்தி இருந்ததால் மற்றவற்றை எடுத்து வைச்சுட்டு முக்கியமான பொங்கல், அவிசு மட்டும் படம் எடுத்துப் போட்டிருக்கேன்.


போகி அன்று போட்ட கோலம்

குட்டிக் குஞ்சுலுவிடம் பொங்கல் தினங்களை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். முதல்நாள் என்ன செய்வோம்,என்பதை வீடு சுத்தம் செய்து பண்டிகை நாளுக்காகத் தயார் செய்வோம் என்றும்  இரண்டாம் நாளான பொங்கலன்று சூரிய, சந்திரர்க்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம் என்றும் சொல்லிவிட்டு மூன்றாம் நாளன்று மாடு, கன்று, பறவைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவங்களுக்கும் இயற்கையைப் பேணி வருவதற்கான நன்றியைச் சொல்லுவோம் என்றும் சொன்னேன். அதோடு சகோதரர்களுக்காகச் சகோதரிகள் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள் என்றும் சொன்னேன். எல்லாமே வாய்ஸ் மெசேஜ் அதான். அதுவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது. ஊருக்குப் போகும் அவசரத்தில்.

Sunday, January 07, 2024

என்ன தான் நடந்தது?

 நான் தான் முடியாமல் அடிக்கடி படுத்துப்பேன் என்பதால் எனக்கு முடியலைனால் யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கறதில்லை. ஆனால் இம்முறை நம்ம ரங்க்ஸ் படுத்து விட்டார். நவம்பர் 25ம் தேதிக்கு முன்னாடி இருந்தே முடியலை, முடியலைனு சொல்லிட்டு இருந்தார். மருத்துவரிடம் போகச் சொன்னால் போகமாட்டேன் என அடம். அன்னிக்கு சனிக்கிழமை காலம்பர மறுநாள் கார்த்திகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரச் சென்றபோது மார்க்கெட்டில் வண்டியைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கார். சொல்லவே இல்லை. எங்கே எப்படி அடிபட்டதுனு தெரியலை. வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டு விட்டார். குளிக்கலை. உம்மாச்சிங்களுக்குப் பூக்கள் எடுத்து வைக்கலை. என்னனு கேட்டால் முடியலை தொந்திரவு பண்ணாதே என்றார். சரினு விட்டுட்டேன். பதினோரு மணிக்கு எழுந்தவர் குளிக்கக் கிளம்ப நான் வற்புறுத்தி மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். அங்கேயும் வண்டியில் போயிருக்கார். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த முடியாலை பின்னர் மருந்துக்கடைக்காரர் பார்த்துட்டு உதவி செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தால் 102க்கு மேல் ஜூரம் இருந்திருக்கு. மருந்தை ஐவியில் செலுத்தி எச்சரிக்கை செய்து ஒரு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்திருக்கார். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு படுத்தவர் சாயந்திரம் தான் எழுந்தார். இப்போ ஒண்ணும் இல்லைனும் சொன்னார். 

மறுநாள் கார்த்திகைக்கு வேன்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நடு நடுவே இவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். கார்த்திகை அன்னிக்குக் காலம்பர இருந்து எழுந்துக்கவே இல்லை. ஆனால் என்னிடம் நீ தனியா எப்படி எல்லாவிளக்கையும் ஏத்திக் கொண்டு வைக்கப் போறேனு மட்டும் கேட்டார். எல்லா விளக்குகளையும் ஏற்றவில்லை. கொஞ்சமாத்தான் ஏத்தப் போறேன்னு சொல்லிட்டுக் கார்த்திகைப் பண்டிகையையும் கொண்டாடி முடிச்சாசு. 

திங்களன்று பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரைப் பார்க்கலாம் என்றால் அவர் வேறொரு மருத்துவரைச் சொல்ல சரினு அவரைப் பார்க்க இருவரும் போனோம். அப்போக் கூட என்னை வர வேண்டாம், நான் மட்டும் போறேன்னு தான் சொன்னார். நான் பிடிவாதமாகக் கூடவே சென்றேன்.முதல் நாளில் இருந்தே தலையில் குத்துவலி மண்டையை உடைக்கிறாப்போல் இருக்குனு சொல்லிட்டு இருந்தார். இந்த மருத்துவர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டு அனுப்பினார். சாயந்திரம் கொஞ்சம் சரியாப் போனாப்போல் இருந்தது திடீரென அதிகமாக ஒரே கத்தல், புலம்பல். இரவு நரகமாக இருந்தது. அதுக்குள்ளே இது நரம்பு சம்பந்தமான பிரச்னை என்பதால் அதற்கேற்ற ஒரு மருத்துவ மனை நியூரோ ஒன் என்னும் பெயரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும் அவங்களைத் தொடர்பு கொள்ளும்படியும் நம்ம ரங்க்ஸே சொல்ல அவங்களைத் தொடர்பு கொண்டுப் பேசினேன். உடனே வரச் சொன்னாங்க. ஆனால் நம்மவரோ அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மறுத்து விட்டார். இருந்த மாத்திரைகளை வைத்துக் கொண்டு வலியைக் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்தோம். ஆனால் அன்றிரவு முதல் நாளை விட மோசமாக ஆகி விட்டது. நடு இரவில் திடீரெனப் படுக்கையில் ஆளைக் காணோம். திகிலுடன் தேடினால் குரல் மட்டும் வருது, ஆள் எங்கேனு தெரியலை. அப்புறம் பார்த்தால் பொதுக் கழிவறை ஒண்ணு உண்டு. அதில் விளக்கே போடாமல் கம்மோடில் போய் உட்கார்ந்திருந்தார். மெல்ல மெல்ல பேசிப் பாதி தூக்கி, பாதி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் சேர்த்தேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து விடிந்ததும் முதலில் அந்த மருத்துவமனைக்குத் தொலைபேசி மருத்துவரைப் பார்க்க நேரம் குறித்துக் கொண்டேன். பத்தரைக்கு மேல் தான் வருவாராம்.

மனடில் கவலை/பயம். பையர், பெண், என் மைத்துனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துட்டு எதிர் வீட்டு மாமா உதவியுடன் மருத்துவமனை கிளம்பினேன்.

Monday, December 11, 2023

மகாகவிக்கு அஞ்சலி!

 
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”


துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

Tuesday, November 28, 2023

கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!


  


  


கார்த்திகை தீபத்திருநாள் படங்கள். இம்முறை கார்த்திகை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் கொண்டாடினேன் எனில் அது குட்டிக் குஞ்சுலுவால் தான். கார்த்திகைக்கு முன்னாலும் தீபாவளிக்குக் கேட்டுக் கொண்டாற்போல் அது என்னிடம் எல்லாமும் கேட்டு வைத்துக் கொண்டது. அதே போல் ஞாயிறன்று கார்த்திகை தீபம் அங்கே நைஜீரியாவிலும் ஏற்றிக் கொண்டாடினார்கள். பட்டுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக் கொண்டு என்னிடம் காட்டியது. ஒரே ஆட்டம் தான். கொண்டாட்டம் தான். அது மட்டும் இங்கேயே இருந்திருந்தால் என்னும் எண்ணமும் வரத்தான் செய்தது. என்றாலும் இத்தனை ஈடுபாட்டுடன் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அதுக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாத ஒன்று.  குஞ்சுலு என்னிடம் பாட்டி, நீ எத்தனை விளக்கு ஏத்தினே? எனக் கேட்டது. சுமார் 20/25 இருக்கும் என்றேன். அதுங்கிட்டே பத்து விளக்குகள் தானாம். ரொம்ப சோகமாச் சொன்னது. அடுத்த வருஷம் நிறைய ஏத்தலாம்னு சொல்லிட்டு இருந்த விளக்குகளை அவ அம்மா ஏத்தினாள். இது கூடவே நின்னுண்டு பார்த்துட்டு இருந்தது. நிலைப்படியில் எல்லாம் நான் வைச்சிருக்கிறதைப் படத்தில் பார்த்துட்டு அதே போல் அங்கேயும் வைக்கச் சொன்னது. ஒரே ஆட்டம், பாட்டம், குதியாட்டம் தான். கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள். அதை ஞாயிறன்று அனுபவித்தேன்.

கார்த்திகைக்கு முன்னாலிருந்தே ரங்க்ஸின் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சரியாக சனிக்கிழமை அன்று காலை ஒரே தலை சுற்றல், நிற்க முடியவில்லை. என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து விடுவார் போல் இருந்ததால் நல்லவேளையாகப் பக்கத்தில் இருந்த நாற்காலியை மெதுவாக நகர்த்தி அதில் உட்கார வைத்தேன். பின்னர் மருத்துவரிடம் அவர் தானாகவே தான் சென்றார். மருத்துவரோ ஜூரம் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லித் தனியே வந்ததுக்குத் திட்டி விட்டுப் பின்னர் மருந்தை ஐவி மூலம் ஏற்றித் தக்கத்துணையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அன்று படுத்தவர் நேற்றுக் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படி இருந்தார். நான் ஏதோ முடிந்ததைச் சமைத்துப் பொரிப் பாகு செலுத்திக் கார்த்திகை தீபத்தை நிறைவேற்றினேன். குழந்தையின் வரவும் அதன் சந்தோஷமும் தான் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று காலை வரை சரியாக இருந்தவருக்கு மத்தியானத்தில் இருந்து தலையில் மீண்டும் வலி. அவரை நேரில் பார்த்தவர்களுக்கு அவருக்குக் கழுத்துப் பிரச்னை இருப்பது தெரிந்திருக்கும். அதனால் ஏற்பட்ட வலி தலை முழுவதும் வியாபித்துப் பொறுக்க முடியாமல் இருக்கு. 
நாளை நியூரோ மருத்துவரிடம் போக நேரம் கேட்டு வாங்கி இருக்கேன். நாளைக்காலை போகணும். திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினால் வீட்டில் யாருக்குமே ஒண்ணுமே ஓடலை. பார்க்கலாம் இறைவன் நினைப்பு என்னனு.