எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 29, 2016

பச்சை நிறமே, பச்சை நிறமே! கிளிகள், பறவைகளின் அடாவடித்தனம்!


தென்னை மரத்திலே கிளிகளைப் பார்த்தீங்களா? தெரியுதா? படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க. இப்படிக் கொத்துக் கொத்தாகக் கிளிகள் வந்து உட்காரும்.
இங்கேயும் அவை தான். காத்திருந்து எடுக்க வேண்டி இருக்கு படத்தை! இதுங்களுக்காகத் தண்ணீர் வைக்கவும் சாப்பாடு போடவும் ஒரு துத்தநாகத் தகட்டை ஜன்னல் கம்பியில் பொருத்தி இருக்கோம். அதிலேயே ஓர் தம்பளரில் தண்ணீரும் சாதமும் முன்னால் வைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் அவை போதவில்லை என்பதால் மண் சட்டி ஒன்று அகலமானதாக வாங்கி அதில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால் இதுங்களுக்கு இருக்கிற அடத்தைப் பாருங்க! சாதம் சாப்பிடாதாம். கொஞ்ச நாட்கள் முன்னர் வரை வெயிலாக இருந்தது. அதான் சாப்பிட வரதில்லைனு நினைப்பேன். ஆனால் தீனி வைச்சால் தின்னும்! எல்லாம்! ஒரு கருகப்பிலையைக் கூட விடறதில்லை! என்ன அநியாயம் பாருங்க!


இந்தத் தட்டில் முதலில் கொஞ்சம் போல் ஓமப்பொடி போட்டுப் பார்த்தோம். அதைத் தொட்டுக் கொண்டு சாதத்தையும் சாப்பிட்டிருந்தது. பின்னர் இன்னும் கொஞ்சம் ஓமப்பொடி கருகப்பிலை கலந்தது போட்டால் அந்தக் கருகப்பிலையைக் கூட விடலை! சாப்பிட்டு முடிச்சுடுத்து. இன்னிக்கு வைச்ச சாதம் தான் அப்படியே இருக்கு!  என்ன அடாவடித் தனம் பாருங்க! :)


இந்த மண் சட்டியில் தான் தண்ணீர் வைக்கிறோம். இப்போ வெயில் இல்லை என்பதால் கொஞ்சம் வருதுங்க. வெயில் ரொம்ப இருந்தால் தண்ணீர் குடிக்கக் கூட வரதில்லை. அதுங்களுக்கும் வெயிலில் சூடு எல்லாம் தெரியும்போல! என்ன ஒண்ணு! நம்மை மாதிரி அதுங்களும் தீனி தின்னிப் பண்டாரங்களா இருக்கு! நாம் தான் அப்படின்னா நமக்கு வாய்ச்சதுங்களும் அப்படியே வந்து சேர்ந்திருக்கு பாருங்க!


இந்த அசோகா (இது அசோகா இல்லைனு ஒருத்தர் சொல்லி இருந்தாங்க, இருந்தாலும் அப்படிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போயாச்சு) மரம் காற்றிலே ஆடும் பாருங்க! எங்க வீட்டு ஜன்னல் கதவை வந்து தொட்டுவிட்டுச் செல்லும். அப்படி ஒரு ஆட்டம். இது காற்றில் ஆடியபோது வீடியோவாக எடுக்க நினைச்சேன். போன வருஷமோ என்னமோ எடுத்துப் போட்டிருந்தேன். ஆனால் இன்னிக்கு வீடியோ வரலை! :)

முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே! நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. இன்னிக்குப் படங்களை பிகாசாவில் ஏத்தும்போது தகராறு ஆரம்பிச்சுடுத்து!  அப்புறமாக் கணினியைச் சமாதானம் செய்து நல்ல வார்த்தை சொல்லி அதிலிருந்து படங்களை பிகாசாவில் ஏத்திட்டு இங்கேயும் போட்டேன். இனிமேலே இந்த மடிக்கணினி படங்களை ஏத்துமா ஏத்தாதானு தெரியலை! ஆனால் என்னோட கணினிக்கு நான் அதைத் தொடாமல் இருந்ததில் இப்போ வருத்தம் குறைஞ்சிருக்கு! :)

Wednesday, June 22, 2016

சர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்!

நேற்று சர்வ தேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. கிட்டத்தட்ட 150 நாடுகள் இதில் பங்கேற்றிருக்கின்றன. இது நிச்சயம் பிரதமரின் தனிப்பட்ட வெற்றி என்றே சொல்லலாம். யோகாசனம் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக் கூடிய ஒன்று. யோகாசனம் செய்பவர்கள் தொடர்ந்து செய்து வர வர அவர்களின் கோப, தாபங்கள் குறைந்து உணவில் விருப்பம் என்பது பசிக்குச் சாப்பிடுதல் என்று மட்டுமே இருக்கும். அதிகம் கார,சாரமான உணவுகளை உண்ண விரும்ப மாட்டார்கள்.  ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும். ஆனால் உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து செய்து வர வேண்டும். மனமும், உடலும் சேர்ந்து இயங்க வேண்டும். வேகமாகவும் செய்யக் கூடாது. ஒவ்வொரு யோகாசன நிலையிலும் குறைந்தது 2 நிமிடம் தாக்குப் பிடிக்க வேண்டும்.

இத்தகைய யோகாசனம் இன்றைய நாட்களில் பெருமளவு மக்கள் கற்றுக் கொண்டு செய்து வந்தாலும் நேற்று நம் பிரதமர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்வைக் கிண்டல் செய்து முகநூலில் ஒரு சிலர் எழுதி இருந்ததைப் படிக்கும்படி நேர்ந்தது. அதில் ஒருவர் பாட்டி வைத்தியத்தைக் குறித்தும் கிண்டல் செய்து எழுதி இனி மோதி இதுக்கும் ஆதரவு தேடுவார் என்றும் தேநீர்க்கடைக்காரர் பிரதமராகி இருக்கையில் ஒரு பாட்டியை அல்லது சமையல்காரரைப் பிரதமர் ஆக்கலாம் என்றும் மிகவும் மோசமாகக் கூறி இருக்கிறார்கள்.  நம் பிரதமரை நாமே கேவலப்படுத்துகிறோம் சிறிதும் வெட்கம் இல்லாமல்! மோதி தேநீர் விற்றவர் தான்! அதனால்  என்ன? யார் பிரதமர் ஆனாலும் எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மேலும் பாட்டி வைத்தியம் ஒன்றும் தப்பே இல்லை. குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பது பற்றிக் கேலி செய்து போட்டிருந்தது. என்னளவில் நான் இப்போதும் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது விளக்கெண்ணெய் சாப்பிட்டு வருகிறேன். அதே போல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்! நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கும் தமிழ்நாட்டில் நிலவும் அதிக வெப்பமான சூழ்நிலைக்கும் இதெல்லாம் அவசியம்.

நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் இந்த விளக்கெண்ணெய் சாப்பிட்டும் எண்ணெய் தேய்த்துக் குளித்தும், குளிகைகள், உரை மருந்துகள் ஆகியவற்றைச் சாப்பிட்டே வளர்ந்தார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு ஒப்பிடுகையில் நம் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? நம் நாட்டுப் பாரம்பரிய மருத்துவ முறை தான் பாட்டி வைத்தியம். அஞ்சறைப்பெட்டி சாமான்களிலேயே சிக்கனமாகவும், அதே சமயம் விரைவில் குணமடையும்படியும் ஒரு காலத்தில் இருந்து வந்தது தான் பாட்டி வைத்தியம். இப்போவும் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் பேத்திகளுக்கு வயிற்றுக்கோளாறு எனில் எங்கள் பெண் முதலில் என்ன கைவைத்தியம் கொடுப்பது என்று தொலைபேசிக் கேட்டுக் கொள்வாள். குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி, குத்துவிளக்கில் வாட்டி வயிற்றில் தொப்புளின் மேல் போடுவது உண்டு. வசம்பு என்று அழைக்கப்படும் மருந்தைப் பிள்ளை மருந்து என்றே சொல்வார்கள். அந்தக் காலத்தில் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதைப் பெயர் சொல்லாதது என்று அழைப்பதோடு இது இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் இந்த வசம்பை நுனியில் விளக்கெண்ணெய் தடவிக் குத்துவிளக்கின் சுடரில் சுட்டுக் கரியாக்கி அந்தப் பொடியோடு விளக்கெண்ணெய் கலந்து தொப்புளைச் சுற்றிப் போட்டால் சற்று நேரத்தில் குழந்தை அழுகை நிற்கும்.

மாந்தம் வந்த குழந்தைகளுக்கு வேப்பெண்ணெய் நல்ல மருந்து. இதை என் தம்பிக்கு மாந்தம் வந்த சமயம் பார்த்திருக்கிறேன். பல்லெல்லாம் கிட்டிப் போய்க் கீழே விழுந்தவனை அரைப் பாலாடை வேப்பெண்ணெய் காப்பாற்றியது. அதன் பிறகே மருத்துவர் வந்து பார்த்தார்.  சூரத்தாவாரை என்றொரு விதை உண்டு. அதை வெந்நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தோடு  விளக்கெண்ணெய் சேர்த்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். இம்மாதிரி நம் நாட்டில், வீட்டில், அண்டை, அசலில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நம் உணவு முறையும், அதற்கேற்ற பழக்கவழக்கங்களும் உணவையே மருந்தாக உண்ணும் முறையும் ஏற்பட்டிருக்கின்றன. இதை நடைமுறைப் படுத்தியது சிறிதும் ஆங்கில அறிவே அற்ற நம் பாட்டிமார் தான்! இது எத்தகையதொரு பிரமிப்பான நடைமுறை என்பதை அறியாதவர்கள் தான் இதைக் கேலி செய்ய முடியும்.

பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நம் நாட்டு மருத்துவ முறை உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அது ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ நம் நாட்டு மருத்துவத்துக்கு ஈடு இணை இல்லை. ஆனால் நம் உடலும், மனமும் ஆங்கில மருத்துவத்துக்குப் பழக்கப்பட்டு விட்டது. நாமும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறோம். இதே யோகாசனத்தை வெளிநாட்டவர் யாரேனும் சர்வதேச யோகாதினமாக்க முயற்சித்திருந்தால் பாராட்டுகளும், புகழ்மாலைகளும் பெருமழையாகக் குவிந்திருக்கும்.


யோகாசனம் 

யோகாசனம் குறித்து நான் மழலைகள் தளத்தில் எழுதிய ஆசனப் பயிற்சிக் கட்டுரைகளை இந்தச் சுட்டியில் மின்னூலாகக் காணலாம். 

Monday, June 20, 2016

மறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(?)!

என்னோட மன்னிக்கும் எனக்கும் 2 அல்லது 3 மாதங்கள் தான் வயதில் வித்தியாசம். என்னைவிட 2 மாதங்கள் அளவே மன்னி சிறியவர். ஆனாலும் நான் "மன்னி" என்றே அழைப்பேன். நான் கொஞ்சம் பெரியவள் என்பதால் மன்னி என்னை "அக்கா" என அழைக்கிறார். ஆரம்ப காலத்திலேயே பெயர் சொல்லிக் கூப்பிடச் சொல்லியும் அவங்க ஒத்துக்கலை! தம்பி மனைவிக்குத் தான் எந்த உறவுமுறைப் பெயரும் சொல்லத் தெரியலை. காரைக்குடிப் பக்கம் ஏதோ இருக்குனு நினைக்கிறேன்.  எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இப்போதெல்லாம் மன்னியை அவங்க வயதில் பெரியவங்களா இருந்தாலும் கூட "மன்னி" என்று அழைக்கும் பழக்கம் இல்லை!

மன்னியைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமே இப்போது இருந்து வருகிறது. நாத்தனாரும் வயதில் பெரியவரானால் மரியாதையாக அழைக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இதெல்லாம் நம் நாட்டில் முன்னர் கிடையாது. இப்போது அமெரிக்கக் கலாசாரத்தின் தாக்கம் இந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது என்பது! அங்கே தான் எல்லோரும் எல்லோரையும் எந்த வயதானாலும் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இந்த விஷயத்தில் நம் மக்கள் அமெரிக்காவை அப்படியே காப்பி அடிக்கின்றனர். இது தான் இன்றைய நாகரிகம்!

உறவு முறைகளை உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கமே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொருத்தர் வீடுகளிலும் ஒரு குழந்தை தான்! வெகு சிலருக்கே 2 குழந்தைகள்! அதிலும் இரண்டும் பெண் எனில் அக்கா, தங்கை தான்! ஆண் எனில் அண்ணா, தம்பி! அண்ணா, தங்கையோ அக்கா, தம்பியோ வெகு அரிதாக இருக்கும். அப்படி இருந்தாலும் மாமா என்னும் உறவு முறைச் சொல் மறைந்து போய்விடும் போலிருக்கு! ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்கள் மாமாவுக்கு எங்கே போக? ஒரே ஒரு ஆண் குழந்தை எனில் அத்தைக்கு எங்கே போவது? இவை தான் இப்படி எனில் சித்தப்பா, சித்திகளும் மறைந்து குறைந்து வருகிறார்கள்.  ஒரே ஒரு பெண் குழந்தை எனில் சித்திக்கோ, பெரியம்மாவுக்கோ எங்கே போவது? ஆண் குழந்தை எனில் சித்தப்பாவோ, அத்தையோ, பெரியப்பாவுக்கோ எங்கே செல்வது?

அதோடு விட்டதா? அந்த ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணான குழந்தைகளையும் அதிகம் படிக்க வைச்சு அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, லண்டனுக்கோ  நம்மோட பெருமைக்காக அனுப்பி வைச்சுடறோம். அவங்க அவங்க வாழ்க்கையை வாழறாங்கனு பெருமையாச் சொல்லிப்போம். நம்மாலே அங்கேயும் போய் நிம்மதியா இருக்க முடியாது! இங்கேயும் தனிமையிலே வசிக்க முடியாது! அங்கே எல்லாத்துக்கும் நாம் பிள்ளை அல்லது பெண் கையைத் தான் எதிர்பார்க்கணும். அவங்க வேலையை முடிச்சுண்டு அவங்க வந்தப்புறமாத் தான் நாம் நமக்கென அவங்களை ஏதானும் உதவச் சொல்லிக் கேட்க முடியும். எங்கானும் கோயில் போவதென்றாலும் அந்தச் சனி, ஞாயிறுகளில் தான்.  அதுவும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறையில் தான். ஆனால் அங்கே வாழும் அவங்களுக்கு அந்த இரண்டு நாட்களில் தான் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, ஒரு வாரத்துக்கான சாப்பாடு தயார் செய்வது என்று அதிகம் வேலை இருக்கும்.  நமக்கோ இங்கே தினசரிகள் தினமும் வரும்! அதோடு வார, மாதாந்தரிகள், எனப் புத்தகங்கள் வரும். படித்துப் பொழுது போகும். அங்கே புத்தகங்கள் நாம் இருக்கப் போகும் சொல்ப காலத்திற்கெனச் சந்தாக் கட்டி வாங்க முடியாது! தொலைக்காட்சி சானல்கள் இப்போதெல்லாம் அங்கேயும் தெரிவதால் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான்.

 வெளிநாடுகளில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் ஆரம்பத்தில் மனதைக் கவரும்!  சுத்தம் பார்க்கிறதும் சாலைக் கட்டுப்பாடு போன்றவையுமே பிரதானமாகத் தெரியுமே அன்றி இங்கே மாதிரி எளிமை இருக்காது! வெளியில் எங்காவது போனால் கூட இங்கே எனில் அக்கம்பக்கம் உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சகஜமாப் பேசலாம். ஆனால் அங்கே அப்படி முடியாது. முக்கியமா  உடம்பு சரியில்லைனா இங்கே வீட்டிலேயே கஷாயம் போட்டுச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறமா மருத்துவர் கிட்டேப் போவோம். அங்கேயும் கஷாயம் போட்டுக்கலாம் தான்! சுக்கு, மிளகு கிடைக்குமே! ஆனாலும் மருத்துவரை உடனே எல்லாம் போய்ப் பார்க்க முடியாது! காத்திருக்கணும்! காத்திருந்து பார்த்தாலும் மருத்துவருக்கான கட்டணங்களைக் கட்ட நாம் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் தான் கட்டுப்படி ஆகும்! இல்லைனா கஷ்டம் தான்! ரெண்டுங்கெட்டான் நிலை! அல்லது திரிசங்கு சொர்க்கம்னு சொல்லலாம்!

அங்கே இருக்கும் நதிகளில் நீர் எத்தனை நிறைய ஓடினாலும் அதில் நாம் குளிக்க முடியாது! அருவிகளில் நீர் கொட்டினாலும் அங்கேயும் குளிக்கவோ ஆயில் மசாஜோ செய்து கொள்ள முடியாது! இங்கே இருக்கும் இந்த சுதந்திரம் தான் உண்மையான சுதந்திரம்!  அங்கே நாம் காரைப் பார்க்கிங் இடத்தில் நிறுத்தும்போது அங்கிருக்கும் மரம் எதிலாவது கவனக்குறைவாக இடித்துவிட்டோமெனில் அபராதம் கட்டவேண்டும். அதே போன்றதொரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்க வேண்டும். வீட்டை அது நம் சொந்த வீடாகவே இருந்தாலும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தோட்டங்களில் பனிக்காலத்தில் பனி சேர விடக்கூடாது. புற்களை ஒழுங்காக வெட்டவில்லை எனில் அங்கே நகராட்சியிடமிருந்து அபராதம் கட்டச் சொல்வாங்க. வீடு வாடகைக்கு இருந்தோமெனில் காலி செய்து வேறு வீடு போகையில் இத்தனை நாட்கள் இருந்த வீட்டை முற்றிலும் நம் செலவில் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அங்கே போட்டிருக்கும் கார்ப்பெட்டுகள் பழுதடைந்தால் புதுசாக வாங்கித் தரணும். இங்கே வாடகையே கொடுக்காமல் ஏமாற்றும் குடித்தனக்காரர்களும் உண்டு. குடித்தனக்காரர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் வீட்டுக்காரர்களும் உண்டு. இதை எல்லாம் பார்த்துத் தான் பெரும்பாலான பெற்றோர்கள் இங்கேயே தனியா இருக்காங்க. அவங்களாலே முடிஞ்சவரை பார்த்துக்கறாங்க, இல்லைனா முதியோர் இல்லத்திலே சேர்ந்துடறாங்க. ஏனெனில் அக்கம்பக்கம் ஒத்தாசைக்கு யாரும் இப்போல்லாம் முன்னைப் போல் வர முடியறதில்லை. அவங்கவங்க வேலை அவங்க அவங்களுக்கு! ஆக மொத்தம் முதியோர் இல்லம் தான் கதி இங்கே இருக்கும் பெற்றோருக்கு!

ஏனெனில் இருக்கும் உறவினரே மிகக் குறைவாக இருக்கும்.  பெற்றோருக்கு இன்னொரு பெண்ணோ, பிள்ளையோ இருக்கா! அதுவும் இல்லை! இருக்கும் ஒன்றிரண்டு உறவினருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். உடல்நலக் கேடு இருக்கும். இந்த அழகில் நாமளும் அவங்க கிட்டேப் போக முடியாது! அவங்களும் நம்மை வந்து பார்க்க முடியாது!  உறவுகள் பெயரளவில் மட்டுமல்லாமல் மனதளவில் கூடச் சுருங்கிப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன.

தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போறேனோ! இப்படி மறைந்து கொண்டிருக்கும் பெயர்களில் தாத்தா, பாட்டி, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, மாமா, மாமி, அத்தை, அத்திம்பேர், அம்மான் சேய், அம்மங்கா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா! மச்சான், மச்சினி, மைத்துனர், மைத்துனி, நாத்தனார் போன்ற எத்தனையோ உறவுப் பெயர்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. வெளிநாட்டு மோகம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறது! வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் சாப்பாடு கூட மாறி வருகிறது. இப்போது கே எஃப்சி பதார்த்தங்களும், பிட்சா, பர்கர் வாங்காத மனிதர்களும் மனிதர்களே அல்ல. நம் இட்லி, தோசையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இவை முன்னணியில் நிற்கின்றன. நம் கலாசாரம் அவர்களைக் கவர்ந்தது போக அவர்கள் கலாசாரத்தில் நாம் மூழ்கியே விட்டோம். வெளிவரவே இல்லை.

ஆறுதல் தரக் கூடிய ஒரே விஷயம் கோயில்களில் கூட்டம், பிரதோஷம் என்றால் எக்கச்சக்கமான கூட்டம்! பக்தியோ, இல்லை பயமோ அல்லது பயம் கலந்த பக்தியோ ஏதோ ஒண்ணு தான் இன்னும் கொஞ்சம் நஞ்சமாக மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தைத் தூக்கிப் பிடித்து வருகிறது. இது மட்டும் இல்லைனா இன்னும் மோசமாக இருக்கும்! :(  இதிலே அண்ணாவை அண்ணா என்றோ தம்பியைத் தம்பி என்றோ கூப்பிடுபவர்கள் அரிது. என் மைத்துனரை எங்க மாமியார் வீட்டில் எல்லோருமே "தம்பி அல்லது அம்பி" என்றே அழைத்து வந்தனர். இதை அவர் ஒரு பெரிய விஷயமாகக் கருதியதில்லை. இத்தனைக்கும் அவர் 60 வயது ஆனவர் தான். கடைசி மைத்துனர் தன் அண்ணாவான இந்த மைத்துனரை "அம்பி" என்றே அழைப்பார். இதெல்லாம் ஒரு நெருக்கத்தைத் தான் காட்டுமே தவிர நாம் அவர்களை விட உயர்வானவர்கள் என்ற பொருளில் எல்லாம் வராது! உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும்போது மனதில் ஏற்படும் நெருக்கம் அவங்களோட பெயரைச் சொல்லி அழைக்கையில் ஏற்படுமா? சந்தேகமே!

இது ஒருவேளை என் தலைமுறைக்காரங்களுக்கு இப்படித் தோன்றலாம்! அதுவும் தெரியவில்லை! அல்லது எனக்குப் புரியவில்லை. நான் இணையத்தில் என் அருமைத் தம்பிகள் அனைவரையும் "தம்பி" என்றே அழைத்து வருகிறேன். ஒருத்தரும் ஆக்ஷேபம் தெரிவிக்கவில்லை! பிழைச்சேன்! அவங்களும் என்னை அன்பாக அக்கா என்றே சொல்கின்றனர். சந்தோஷமாகவே இருக்கு! 

Sunday, June 19, 2016

மீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்டு வந்தேன்!

இரண்டு நாட்கள் முன்னர் திடீர்ப் பயணமாக மதுரை சென்றிருந்தேன். மீனாக்ஷி அம்மாவைப் பார்க்கத் தான். மதுரைன்னாலே நம்ம ரங்க்ஸுக்கு கோபு ஐயங்கார் கடை தான் நினைவில் வரும். ஆகவே மீனாக்ஷியைப் பார்க்கும் முன்னர் நேரே கோபு ஐயங்கார் கடை தரிசனம் தான். ஶ்ரீராம் வேறே இந்தக் கடை இப்போ இல்லை இங்கே, மூடிட்டாங்கனு சொல்லிட்டு இருந்தாரா! அன்னிலே இருந்து மண்டைக்குடைச்சல் தாங்கலை. இப்போத் தான் சரியாச்சு! :) ஆனால் அந்தப் பழைய ருசியும் மணமும் இல்லைனு ரங்க்ஸின் கணிப்பு! :)


காமிராவெல்லாம் எடுத்துட்டுப் போயும் ஒன்றிரண்டு படங்கள் தான் எடுத்தேன். படம் எடுக்கும் மனோ நிலையில் இல்லை. இது கூட ஶ்ரீராமுக்குக் கடை அங்கேயே இருக்குனு காட்டறதுக்காக எடுத்த படம். :) மீனாக்ஷியை அருமையாக தரிசனம் செய்தோம். அர்ச்சனை ஒன்று செய்ததால் சற்று நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. அர்ச்சனை முடியறதுக்குள்ளே கோயில் ஊழியர் அவசரப் படுத்தினார். :( அர்ச்சனை இருக்குனு சொல்லிட்டு நின்று கொண்டிருந்தோம். பச்சைப்பட்டில் ஜொலித்தாள் மீனாக்ஷி! இப்போல்லாம் எலுமிச்சை மாலை வேறே போடறாங்க! முன்னெல்லாம் பார்த்தது இல்லை. இப்போத் தான் இரண்டு முறையாகப் பார்க்கிறேன். தரிசனம் முடிந்த பின்னர் சுவாமி சந்நிதி சென்று அங்கேயும் தரிசித்துக் கொண்டோம். முக்குறுணிப் பிள்ளையாரையும் வணங்கிக் கொண்டோம். கோயில் ஆனையார் சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையே உலா வந்து கொண்டிருந்தார். அர்ச்சனை செய்த தேங்காயைக் கொடுக்கலாம்னு நினைச்சால் பாகன் ஓடு இருப்பதால் கொடுக்காதீங்கனு சொல்லிட்டார். தேங்காயை மறைத்து வைத்துவிட்டுப் பழங்களைக் கொடுத்தோம். ஆனந்தமாக உண்டது.

வடக்கு கோபுர வழியாக வடக்கு ஆடி வீதியில் சென்று கல்யாண மண்டபம் வழியாக சுவாமி சந்நிதி வெளிப் பிரகாரம் போய்த் தான் உள்ளே போக முடிந்தது. முன்னெல்லாம் கோயில் கடைகளைச் சுற்றிக் கொண்டு வன்னி மரத்தடிப் பிள்ளையாரைப் பார்த்துட்டு நேரே அம்மன் சந்நிதி வாயில் வழியாகப் போவோம். இப்போல்லாம் சுவாமி சந்நிதி வழியாகச் சென்று முக்குறுணிப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே அம்மன் சந்நிதி செல்கிறோம். வண்டியை நிறுத்தும் இடம் வடக்கு ஆவணி மூலவீதியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் மைதானத்தில் என்பதால் இப்படிப் போக வேண்டி இருக்கு. வந்த வழியே திரும்பி வெளியே வந்து வண்டியில் ஏறி நம் வலை உலக சிநேகிதி கோமதி அரசுவின் வீட்டிற்குச் சென்றோம். அங்கே திரு அரசு அவர்களும், திருமதி அரசு அவர்களும் பல நல்ல தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நாங்கள் உடனே கிளம்பவேண்டிய அவசியம் இருந்ததால் அவங்களோட விருந்து உபசாரத்தை ஏற்க முடியவில்லை. அங்கிருந்து விடைபெறும்போது கோமதி அரசு வெற்றிலை, பாக்குடன் "தேவன்" அவர்களின் மல்லாரி ராவ் கதைகள் புத்தகமும் இன்னொன்று அவர்கள் மாமனாரின் நூற்றாண்டு விழா மலர் மற்றும் பொன்னீலனின் "அன்புள்ள" ஆகிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தார்கள்.

மதுரையிலிருந்து வந்ததும் நேற்று ஶ்ரீரங்கம் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேஹம் என்பதால் ரங்குவுக்குத் தைலக்காப்புச் சார்த்துவார்கள். முக தரிசனம் மட்டுமே கிட்டும். இன்று முழுவதும் ரங்குவைப் பார்க்க முடியாது. நாளை மாலை நான்கு மணிக்குப்பின்னரே ரங்குவைப் பார்க்க முடியும். ஆகையால் திடீரென (நமக்கு இப்படி திடீர் முடிவுகள் தான் ஒத்துவருது!) முடிவெடுத்து மாலை மூன்றே முக்காலுக்குக் கோயிலுக்குச் சென்றோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டமாகத் தான் இருந்தது. என்றாலும் தரிசனம் அரை மணி நேரத்தில் கிடைச்சுடுத்து! அங்கிருந்து பாட்டரி கார் உடனே வந்துவிட்டதால் அதில் ரங்குவைப் பார்க்க வந்தோம். கூட்டம் தாங்கலை! வழியெங்கும் மனிதர்கள், மனிதர்கள்.  50 ரூ டிக்கெட் வாங்கவே நூற்றுக்கணக்கில் கூட்டம்! சரினு 250 ரூ டிக்கெட்டுக்குப் போனால் அங்கேயும் எங்களுக்கு முன்னால் 50 பேர்! டிக்கெட் கொடுக்கும் கவுன்டர் திறக்கவே இல்லை. அங்கே யாருமே இல்லை! கிட்டத்தட்ட அரைமணி நேரம் நின்ற பின்னர் கரூர் வைசியா வங்கி அலுவலர் ஒருவர் வந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.

தரிசனத்துக்குப் போனால் சந்தனு மண்டப வாயிலில் 250 ரூ டிக்கெட் வாங்கினவங்களை நிறுத்தி வைத்துவிட்டு 50 ரூ டிக்கெட் வாங்கினவங்களையும் இலவச தரிசனக்காரர்களையும் உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கே ஒரே களேபரம், கூச்சல், குழப்பம். கோயில் ஊழியர் ஒருவருக்கும் பக்தர் ஒருவருக்கும் கிட்டத்தட்ட அடிதடி. இந்த அமர்க்களத்தில் இங்கேயும் அரை மணி நின்ற பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே போனால் ரங்குவின் திருமுகத்தையும் திருவடியையும் தரிசனம் செய்து கொண்டிருக்கையிலேயே பிடித்துத் தள்ளி விட்டார்கள். நம்பெருமாளைப் பார்க்கவே முடியலை! :( ரொம்பவே வருத்தமாப் போச்சு! அரை செகன்ட் கூட நிற்கலை! இம்மாதிரி நேரங்களில் நடப்பது தான் என்று தெரிந்தும் நாங்க போயிருக்கக் கூடாது! ஏதோ போனதுக்குப் பெரிய ரங்குவைப் பார்க்க முடிஞ்சதே! அது வரை சந்தோஷம் தான். திரும்பி வருகையில் மடப்பள்ளி அருகே அன்னமூர்த்தி சந்நிதிக்கு வந்தால் அங்கே வழக்கம் போல் கதவு சார்த்தி இருந்தது. துளசிக்காகப் படம் எடுத்தேன். மக்கள் கூட்டம் இருந்ததால் கூட்டம் குறையக் காத்திருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு! மழை வரும் போல் இருட்டி இருந்ததால் குழல் விளக்கு வேறே போட்டுட்டாங்க. அந்த வெளிச்சம் வேறே! :(  இம்முறை தங்க கோபுரத்தைப் படம் எடுக்கலை. அங்கே ஒரே கூட்ட நெரிசல். மேலே ஏறவே கஷ்டமா இருந்தது. மழை வேறே பயமுறுத்தல்!

ஹிஹிஹி, புது சாம்சங் செல்லில் தான் எடுத்தேனாக்கும். நாங்க யாரு! தொ.நு.நி. ஆச்சே. அதைத் தான் கீழே பகிர்கிறேன்.






Wednesday, June 15, 2016

புத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே!

எல்லோரும் புத்தகக் கண்காட்சி பத்திப் பேசறாங்க. நாம மட்டும் பேசலைனா எப்பூடி? எனக்குத் தெரிஞ்சு புத்தகங்களை லைப்ரரியில் அடுக்கி வைச்சிருந்தாப் போல் பார்த்தது முதல் முதல் சித்தப்பா வீட்டில் தான். மதுரையிலே என்னோட பெரியப்பா வீட்டிலும், அம்மாவழித் தாத்தா வீட்டிலும் புத்தகங்கள் இருந்தாலும் இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு இருந்ததில்லை. :) அந்த மாடிக் கூடத்தில் இருந்த ஷெல்ஃபில் எல்லாம் புத்தகங்கள் வழிந்தன. எதை எடுப்பது, எதைப் படிப்பது? ஒண்ணுமே புரியலை, உலகத்திலே! அதைத் தவிரவும் அந்தக்காலத்து விகடன்கள், கல்கிகள்! தீபாவளி மலர்கள்! போதாக் குறைக்குச் சித்தப்பாவுக்கு மாசா மாசம் எல்லாப் பத்திரிகைகளும் அனுப்பும் புத்தகங்கள்! மதிப்புரைக்காக வரும் புத்தகங்கள்!  எல்லாவற்றையும் பார்த்துட்டு மயக்கமே வந்துடுச்சு.

ஏற்கெனவே தாத்தா வீட்டில் விவேக சிந்தாமணியிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை டைரி வரை படிச்சுப் பொது அறிவை வளர்த்திருந்தாலும் கதைகள் மேலுள்ள மோகம் குறைந்ததில்லை. வளரவே செய்திருக்கிறது. ஆகவே அதில் எந்தக் கதைப்புத்தகத்தை முதலில் படிப்பதுனு ஒரு பட்டி மன்றமே நடத்திட்டு ஆனந்த விகடன் பைன்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் கிடைச்சது சிஐடி சந்துரு நாவலோட பைன்டிங்! அப்புறமா தேவனின் லக்ஷ்மி கடாட்சம்!  லக்ஷ்மி கடாட்சம் கிடைச்சப்புறமா ஜஸ்டிஸ் ஜகந்நாதன் என்று வரிசையா தேவனின் நாவல்கள். பின்னர் கல்கியின் நாவல்கள் என்று விழித்திருக்கும் நேரத்தில் புத்தகங்களும் கையுமாகவே இருந்தேன்.  ஆனால் அப்போது புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்ததில்லை. சித்தப்பா வாசகர் வட்டத்துக்கு நெருங்கியவராக இருந்ததால் வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்துமே வந்துவிடும்.

இப்படிப் போய்க் கொண்டிருந்தப்போ கல்கி பத்திரிகையில் அறுபதாம் ஆண்டுகளில் பொன்னியின் செல்வனை இரண்டாம் முறையாகப் போடுவதாக அறிவிப்பு வந்தது.  எங்க வீட்டில் அப்பா வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த விகடனை முன் அறிவிப்புச் செய்யாமல் நிறுத்திவிட்டார். ஆகவே அப்போல்லாம் புத்தகம் படிக்கிறதுன்னா அக்கம்பக்கம் தயவு தான். இதற்காகக் கால் ஒடிய அவங்க வீட்டுக்கு நடையா நடந்து புத்தகத்தை வாங்கிப் படிப்பேன். கேட்டவுடன் புத்தகம் கொடுப்பது ஒரு சிலர் தான். எல்லோரும் புத்தகம் சும்மாவே கிடந்தால் கூடக் கேட்டவுடன் கொடுக்க மாட்டாங்க. பத்துத் தரமாவது வரச் சொல்லி ஆயிரம் கேள்விகள் கேட்டு எப்போத் திருப்பிக் கொடுப்பே? கசக்கக் கூடாது, மடிக்கக் கூடாது ஆயிரம் நிபந்தனைகளுடன் கொடுப்பாங்க. இப்படி இருந்தப்போவே நிறையப் புத்தகம் தேடித் தேடிப் படித்திருக்கேன்.

பொன்னியின் செல்வன் கல்கியில் மீண்டும் வரப்போவது தெரிஞ்சதும் மணியத்தின் படங்களுக்காகவே அதை வாங்க வேண்டும்னு நினைச்சு முடிவு செய்து கல்கி பத்திரிகை வாங்கலாம்னு முடிவு செய்தேன். அப்போ தையல் வேலை பார்த்துட்டு இருந்தோமுல்ல! அதனால் அப்பாவுக்குக் கொடுத்தது போகக் கையில் காசு புழங்கும். மேலும் பத்திரிகை மிஞ்சிப் போனால் எட்டணாத்தான் விற்றதுனு நினைக்கிறேன்.  அப்புறமா வாசலில் ஒரு பழைய பேப்பர் காரர் பழக்கம் ஆனார்! அவரிடம் எடைக்குப் பத்திரிகைகள், பழைய பேப்பர்கள் போடும்போது ஒருமுறை கல்கி பைன்டிங் அமரதாரா கிடைச்சது. அதிலிருந்து அவரிடம் இப்படிப் புத்தகங்கள் கிடைச்சால் என்னிடம் கொண்டு வந்து  கொடுக்கணும்னு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். இப்படியும் நிறையப் புத்தகங்கள் பழைய கல்கி, விகடன் பைன்டிங்கில் படிச்சிருக்கேன். ஆனால் எதுவும் சொந்தமாக்கிக் கொள்ள முடியலை.

பழைய பேப்பர் கடையில் நாலணாக் கொடுத்தால் வேண்டும் என்கிற புத்தகத்தை எடுத்து வந்து படிக்கலாம். தெற்காவணி மூலவீதியிலிருந்து நியூ சினிமா வழியாகத் தெற்குச் சித்திரை வீதி போனால் அங்கே முழுக்க முழுக்கப் பழைய பேப்பர் கடையாக இருக்கும். காலை பத்தரை மணிக்குப் போய்த் தேவையான புத்தகங்களைக் கொண்டு வந்துடுவேன். நாலணாக் கொடுத்துத் தான். ஆனாலும் அப்போவும் புத்தகக் கண்காட்சி எல்லாம் பேச்சுக் கூடக் கிடையாது.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எப்போவானும் சோவியத் பொருட்காட்சி போடும்போது அதில் சோவியத் நாடு புத்தகங்களோடு ஒரு சில புத்தகங்கள் உள்ளூர்ப் பதிப்பும் விற்பாங்க. கடைசியில் 1977 ஆம் ஆண்டில் தான் சென்னையில் புத்தகக் கண்காட்சி முதல் முதலில் தொடங்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அப்போ ராஜஸ்தானில் இருந்தோம். சென்னையில் இருந்திருந்தாலும் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் நம்ம ரங்க்ஸ் அனுப்பியும் வைக்க மாட்டார்; கூட்டியும் போக மாட்டார். :)

ஏற்கெனவே இருக்கும் புத்தகங்களையே என்ன செய்வது என்று அவருக்குக் கவலை பிச்சுக்கும்! இதிலே மேலே மேலே எங்கே புத்தகங்களை வாங்கிச் சேர்க்கிறது! 77 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி வருடா வருடம் பொங்கலுக்கு முன்னாலோ அல்லது பொங்கலை ஒட்டியோ புத்தகக்கண்காட்சி வருடா வருடம் நடைபெற்று வருகிறது.  முதல்லே நடந்தது மதரசா-இ--ஆசம் பள்ளினு சொல்றாங்க. இங்கே நடந்த கண்காட்சிகள் எல்லாம் நல்ல வெற்றி என்றும் சொல்கிறார்கள். அதன் பின்னர் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், ட்ரைவ்- இன் ஹோட்டல்(பழைய இடம், இப்போ அங்கே வேறே ஏதோ வந்திருக்கு) அப்படினு மாறிப் பின்னர் ஒவ்வொரு இடமாக அரங்கங்களைப் பொறுத்தும் அவற்றுக்கான இடங்களைப் பொறுத்தும் மாறி மாறி நடைபெற்று வந்திருக்கின்றது. ஒரு முறை 2010 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்கு என் அண்ணாவோடு போகலாம்னு நினைச்சப்போக் கூட்டம் தாங்கலைனும் மூச்சு விடச் சிரமப் படும்னும் தகவல் வந்தது. அண்ணா பயந்து கொண்டு கூட்டிச் செல்லவில்லை. அவரும் போய்விட்டு நுழைவதற்கே சிரமப் பட்டதாகச் சொன்னார். அந்த வருஷம் பச்சையப்பாவில் நடந்ததுனு நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் புத்தகங்கள் வாங்குவதே இல்லை. நண்பர்களிடமிருந்து பரிசாக வருபவை தான்! நான் வாங்கியதுனு சொல்லப் போனால் சென்னையில் ஆன்மிகக் கண்காட்சி நடந்தப்போ தெய்வத்தின் குரல் புத்தகங்களும், விவேகானந்தர் பற்றிய அறிவுக்கனலே, அருட்புனலே புத்தகமும் வாங்கினேன். வள்ளலார் குறித்த ஒரு புத்தகம் வாங்கினேன்.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் யு.எஸ். போகும்போது ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா வாங்கினேன். எனக்குனு நான் வாங்கிக் கொண்ட புத்தகங்கள் மொத்தம் பத்து இருந்தால் அதிகம். மேலும் இப்போது வைத்திருக்கும் புத்தகங்களையே படிச்சுட்டு ரசிக்கவோ அவற்றைப் பாதுகாக்கவோ யாருமே இல்லை. எங்க குழந்தைங்களுக்குத் தமிழ் எழுதப் படிக்க வராது. மற்றபடி புத்தகங்கள் நிறையப் படிப்பார்கள். வாங்குவார்கள். எல்லாம் ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம்!  இந்தப் புத்தகங்களே எனக்கு அப்புறம் என்னவாகப் போகிறதோ என்று கவலை!

இது போதாது என்று சித்தப்பா வேறே நிறையப் புத்தகங்கள் கொடுத்திருந்தார். சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் வரச்சே என் தம்பி  கேட்டார்னு எல்லாத்தையும் என் தம்பிக்குக் கொடுத்துட்டேன்.  அவர் என்ன செய்தார்னு தெரியலை! ஆகப் புத்தகங்கள் வாங்குவது மட்டுமின்றிப் படித்து ரசித்து அவற்றை நம் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப விமரிசித்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கேற்ற ரசிகர்கள் கிடைக்கவேண்டும். இது எல்லாம் முடியாது என்பதால் நோ புத்தகக் கண்காட்சி. நோ புத்தகம் வாங்குதல்! யாரேனும் கொடுத்தால் படிப்பது தான்! இல்லைனா இல்லை.  பொதுவா எல்லோரும் வீடு என்ன ஆகுமோ, பாத்திரம், பண்டங்கள், நகை நட்டு என்ன ஆகுமோனு கவலைப்படுவாங்க. என்னைப் பொறுத்தவரை என் புத்தகங்கள் என்ன ஆகுமோ! 

Tuesday, June 14, 2016

ஹிஹிஹி, கவுஜ, கவுஜ! :)

சுப்புத் தாத்தா அவர்களுடைய பதிவில் சு.தா. எழுதின ஹிந்திக் கவிதையை மொழி பெயர்த்ததில் ஒரு மாதிரி கவிதை மாதிரி, மாதிரித் தான் வந்திருக்கு. அதை இங்கே பகிர்கிறேன்.


मैं ने इक ख़्वाब देखा.

रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.

सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये

ख़्वाब अब नहीं.
जागूँ है मैं.
जी तरसता है
शायद कहता है.
ख़्वाब की वो चेहरा
कभी तो आएगा ही.

इक और दिन इधर
इंतज़ार में .




என் கனவு!

சாலைப்பயணம்
மொட்டுக்கள் நடனம்
கதைகளில் கவனம்

பார்க்கையில் நிழலாக
மொட்டுக்கள் கருமையில் கவிழ
பூமியைக் கவ்விய இருட்டின் கருமை
ஆழ்ந்த கனவில் ஒளிர்ந்த புன்னகை
மங்கை முகத்தில் மலர்ந்ததை
பார்த்தது சொர்க்கத்தின் திறவுகோல்
ஒற்றைக் குயிலின் அழைப்பு
கனவு கலைந்த விழிப்பு
ஏக்கத்தில் தவிக்கும் மனம்
கனவில் கண்ட முகம்
மீண்டும் வரும் நாளின்
எதிர்பார்ப்பில் காத்திருக்கும் என் பயணம்//

Sunday, June 12, 2016

தயிர்க்காரியும், கீரைக்காரியும்!

காமாட்சி அம்மாவோட பதிவில் தயிர்க்காரியைப் பத்திப் படிச்சதும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பரே, நண்பரே! மதுரையிலும் தயிர்க்காரிகள் வருவாங்க. பலருக்கும் அக்கம்பக்கம் கிராமங்களில் சொந்தமாக மாடுகள் இருக்கும். பெரும்பாலும் பசுக்கள் தான். நான் எருமைப் பால் முத முதலாய்ச் சாப்பிட்டதே கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். எங்க வீட்டிலும் சரி, அக்கம்பக்கம் வீடுகளிலும் சரி, பசும்பால் தான் வாங்குவாங்க. அதிலும் அப்போதெல்லாம் நாட்டுப் பசுக்கள்! பசும்புல்லைத் தின்று வளர்ந்து பால் கொடுக்கும். அநேகமாத் தெருவுக்கு ஒரு வீட்டில் மாடுகள் இருக்கும். தெருக்காரங்க மொத்தமும் அங்கே தான் பால் வாங்குவாங்க. அல்லது எல்லாப் பசும்பாலையும் ஒன்றாகச் சேகரித்துக் கோ ஆபரேடிவ் சொசைடி மூலமும் விநியோகிப்பாங்க. சொசைட்டி பால் வாங்க கூப்பன்கள் உண்டு. நூறு மில்லி, 200 மில்லி, 500 மில்லி என்று கூப்பன்கள். இதிலே கஷ்டம் என்னன்னா 250 மில்லி வாங்கறது தான்! 50 மில்லிக்குக் கூப்பன் இருக்காது. சொசைடி பால் ஊத்தறவர் 50 மில்லி பால் ஊத்திட்டு நாலணா அல்லது இரண்டணா தனியா வாங்கிப்பார். . எல்லோரும் கொடுப்பாங்க! வேறே வழியே இல்லையே.

பால் இத்தனை கிடைத்தாலும்  தயிர்க்காரிகளும் வருவாங்க. தட்டுக்கூடையைச் சுற்றிப் பிரிமணை போல் துணியைச் சுத்தி வைச்சு நடுவில் பெரிய பானையை வைத்து அது நிறையத் தயிர் கொண்டு வருவாங்க. மேலே ஒரு சின்னப் பானையில் மோர்  இருக்கும். இந்த மோரானது கொஞ்சம் கட்டிகளும், கொஞ்சம் நீராகவும் இருக்கும்.  தயிர் அப்படி ஒண்ணும் கட்டித் தயிராக இருக்காது. என்றாலும் தினம் இதை வாங்கும் வாடிக்கைக்காரங்க உண்டு. ஓரணாவுக்குக் கால்படி தயிர் கொடுத்ததாக நினைவு! சரியாத் தெரியலை!

தட்டுக்கூடை க்கான பட முடிவு

இது தான் தட்டுக்கூடை என்பது
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக இலுப்பைத் தோப்புப் பதிவு!

ஆனால் எங்க வீட்டில் வாங்க மாட்டாங்க! தயிர் உறை ஊற்றித் தான் சாப்பிடுவோம். பெரியப்பா வீட்டில் தயிர்க்காரியிடம் தயிர் வாங்குவாங்க. எங்களுக்கெல்லாம் அது சட்டி வாசனை வராப்போல் தோணும். ஆனால் அதே தயிரை வட மாநிலம் போனதும் மண் சட்டியில் வாங்கிச் சாப்பிடுகையில் நன்றாகவே இருந்தது. மாறியது தயிரா, இல்லை என் மனசானு தெரியலை! :) தயிர்க்காரியே காலையில் தயிரைக் கொண்டு வந்துவிட்டு மதிய வேளைகளில் நெய் எடுத்து வருவாள். நெய்ப் பானையைத் திறக்கும்போதே நெய்யின் மணம் மூக்கைத் துளைக்கும். அந்த நெய்க்காரியிடம் நெய் எங்க வீட்டில் வாங்குவாங்க. பூரி பொரிக்க மற்ற பட்சண வகைகளுக்கு அந்த நெய்தான். சாப்பாட்டுக்கு விட்டுக்கத் தனியாய் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சுவாங்க! வெண்ணெயும் இந்த நெய்க்காரியிடமே கிடைக்கும்.

என் பாட்டி வீட்டில், சின்னமனூரில் சித்தி வீட்டில் எல்லாம் வீட்டிலேயே தூணில் சங்கிலி போட்டுக் கயிறு கட்டித் தயிர்ப்பானையில் மத்தோடு சேர்த்துக் கட்டி வெண்ணெய் எடுப்பாங்க. சின்ன வயசில் அதை இழுக்கிறது ஒரு வேடிக்கையாத் தோணும் என்பதால் அவங்க தயிர் கடைகையில் "நானும், நானும்!"னு சொல்லி இழுத்திருக்கேன். இப்போவும் வாரம் ஒரு முறையாவது தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறேன் தான். இங்கேயும் பசும்பால் தான்.

ஆச்சா, இதைப் போலவே அப்போக் கீரைக்காரியும் தெருவிலே வருவாள். அம்பத்தூரிலே இன்னமும் தெருவிலே கீரைக்காரி வராதான். ஆனால் மதுரையிலே வர கீரைக்காரிக்குக் காசு கொடுத்துக் கீரை வாங்கினதே இல்லை. அரிசி போட்டுத் தான் கீரை வாங்குவோம். கீரையோடு சேர்த்து கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி எல்லாமும் வைச்சிருப்பா. அதுக்கும் அரிசிதான்!  ஒரு கிண்ணம் அரிசி போட்டால் வீட்டுக்கு வேண்டிய கீரை, கருகப்பிலை, கொத்துமல்லி, ஒன்றிரண்டு பச்சைமிளகாய், ஒன்று அல்லது இரண்டு தக்காளி கிடைக்கும். இதைத் தவிரவும் அந்த கீரைக்காரி பண்டிகை நாட்களின் போது மருதாணி பறித்து வந்து கொடுப்பாள். அதுக்கெல்லாம் காசு கிடையாது. அவளுக்கு வேலை இல்லைனால் அரைச்சே கொண்டு வந்து தருவாள். இல்லைனா இலைகளைப் பறித்து வந்து தருவாள். நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டு போவது தனி மகிழ்ச்சி தான்.

மருதாணி இட்ட கரங்களில் மறுநாள் காலை பழைய சாதம் தயிர்விட்டுப் பிசைந்து கையில் உருட்டிப் போட்டுச் சாப்பிட்டால் நல்ல மணமாக இருக்கும். இதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்று மறுபடி கொசுவத்தி சுத்தி இருக்கேன்.

Monday, June 06, 2016

சிட்டுக்குருவிகள் அழிந்தனவா? அழிக்கப்பட்டனவா?

House sparrowIII.jpg


படத்துக்கு நன்றி விக்கிபீடியா!

நேத்து மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றபோது சிட்டுக்குருவிச் சப்தம் கேட்கச் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு அழகான சிட்டுக்குருவி, தன் இணையைத் தேடியது அல்லது குஞ்சுகளைத் தேடியது! செல்ஃபோன் டவர்களினால் சிட்டுக்குருவிகள் காணாமல் போயின என்று சொல்பவர்கள் வந்து பார்த்திருக்கணும். அது காணாமல் எல்லாம் போகலை. தனக்கு வசதியான இடமா என்றறிந்து கொண்டு அங்கே சென்று வசிக்கிறது. பழமையான வீடுகள், அந்தக்காலத்துக் கட்டிடங்கள், ஒரு சில பழைய கோயில் வளாகங்கள் ஆகிய இடங்களில் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிகிறது.

இப்போதைய நவீனமயமாக்கலில் சிட்டுக்குருவிகள் தாராளமாக வீட்டுக்குள்ளே வந்து போகும் அளவுக்கு வழி உண்டாக்கிக் கட்டுவதில்லை என்பதே அவை வராமல் இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவை வீடுகளிலே தான் பெரும்பாலும் வசிக்கின்றன. ஆகவே கிராமத்து வீடுகள் பழமை மாறாமல் இருந்தால் அங்கே வசிக்கின்றன. தங்களுக்கேற்ற சுற்றுப்புறச் சூழலை முழுதும் மாற்றி மனிதன் ஏற்படுத்தி வரும் கான்க்ரீட் காடுகளில் வசிக்க விருப்பமில்லாமலேயே சென்னை போன்ற நகரங்களில் காண முடிவதில்லை. அப்படியும் பெரம்பூர், பழைய மதராஸ் ஆகிய பகுதிகளின் பழைய கட்டிடங்களில் வசிக்கின்றன. இதைப் பெரம்பூர்ப் பகுதிக்குச் சென்றிருந்த போதும், பழைய மதராஸ் பகுதியிலும் பார்த்தேன். குருவிகளை வீட்டுக்குள் வந்து கூடு கட்டும்படி வழி உண்டாக்கி வீடு கட்டினால் இருக்கும் சில சிட்டுக்குருவிகள் பல்கிப்பெருக வழி உண்டு!

சிட்டுக்குருவிக்கு மட்டுமா செல்ஃபோன் டவரின் தாக்கம்? மற்றப் பறவைகளுக்குக் கிடையாதா? அவை செல்ஃபோன் டவரிலேயே ஏறிக் குடித்தனம் நடத்துகின்றனவே! அவற்றுக்குப் பாதிப்பு ஏதும் உண்டாவதில்லையே! அது ஏன்? யோசித்துப் பார்த்தோமா? அதோடு சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவான அவை உயிர்வாழக் கிடைக்கும் தானியங்கள் எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. முன்னெல்லாம் முற்றத்தில் உட்கார்ந்து அரிசி பொறுக்கினால் நம்மைச் சுற்றிச் சிட்டுக்குருவிகள் வந்து அமர்ந்து நாம் பொறுக்கிப் போடும் நெல்மணிகளைத் தின்னும். மேலும் அவை பார்க்காதபடிக்கு நாம் அரிசியையும் கொஞ்சம் போடுவோம். அவை நிதானமாகத் தின்றுவிட்டுப் போகும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி உணவு சிட்டுக்குருவிகளுக்குக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வீடுகளில் கிடைக்கும் தானியங்களையே உண்டு வந்த சிட்டுக்குருவிக்கு இப்போது புழுவும், பூச்சியும் மட்டும் போதவில்லைனு நினைக்கிறேன்.  இப்போதெல்லாம் யாருக்கு நிதானமாக அமர்ந்து அரிசி பொறுக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறது! ஒரே ஓட்டம் தான்!

சிட்டுக்குருவியை விடச் சின்னதான தேன் சிட்டு சுண்டு விரல் நீளமே உள்ளது! அவை உயிர்ப்புடன் இருக்கையில் சிட்டுக்குருவி இனம் மட்டும் செல்ஃபோன் டவர் பாதிப்பால் அழிந்தது என்று சொல்வது முட்டாள்தனமாக இல்லையோ! இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். சிட்டுக்குருவி லேகியத்துக்காக வேட்டையாடப் படுவதாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்ததாகச் சொல்கின்றனர். இது உண்மையாகவும் இருக்கலாம். எனினும் கடந்த சில நாட்களில் ஆங்காங்கே சிட்டுக்குருவிகளைப் பார்த்ததில் மிக்க சந்தோஷமாகவே இருக்கிறது. 

Saturday, June 04, 2016

நம் உரிமை! நம் கடமை! அபாரம் போங்க!

அமெரிக்காவில் சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. பொதுவாக வெளிநாடுகளிலேயே சாலைப் பராமரிப்பு நன்றாகவே இருக்கின்றன. நம் நாட்டில் சாலைகளின் தரங்கள் சொல்லிக்கிறாப்போல் இல்லை தான்! சாலையைத் தரமாக மேம்படுத்த நிறையச் செலவு செய்யவேண்டி இருக்கிறது. முக்கியமாய் நம் நாட்டில் சாலைகளை மேம்படுத்துகிறேன் பேர்வழினு அதை வெட்டிக் கொத்திப் பின்னர் கனமாக ஜல்லியைக் கொட்டிச் சாலை போடாமல் ஏற்கெனவே போட்ட சாலை மேலேயே போட்டுக் கொண்டு போகின்றனர். இதனால் அந்தக் காலத்து வீடுகள், கோயில்கள் பள்ளத்தில் போய் விடுகின்றன. சாலையின் தரமும் வெகு விரைவில் பல்லை இளிக்கிறது.

அப்படியே நன்றாகச் சாலையைப் போட்டாலும் பராமரிப்புத் தேவை! அதற்காகச் சுங்கச் சாவடிகளை  ஆங்காங்கே அமைத்து வரி வசூலிக்கின்றனர். அதைக் கொடுக்கவும் நாம் மூக்கால் அழுகிறோம். தரமான சாலைகள் வேண்டும். அவை நன்றாகப் பராமரிக்கவும் படவேண்டும். ஆனால் வரி கட்ட மாட்டோம். நாம் கையை விட்டு எதுவும் செலவு செய்ய மாட்டோம். எல்லாம் அரசே செலவழிக்கணும். அரசு செலவுக்குப் பணத்துக்கு எங்கே போகும் என்றெல்லாம் சிந்திப்போமா, மாட்டவே மாட்டோம். அது எதுக்கு? சுங்கச்சாவடிக் கட்டணத்தை அரசு ரத்து செய்தே ஆகவேண்டும், ஆனால் அதே சமயம் சாலைகள் வெளிநாட்டுத் தரத்துக்குப் போடவேண்டும்.

அதே அமெரிக்காவிலோ மற்ற வெளிநாடுகளிலோ இம்மாதிரி சாலைகள் போடும் பணத்துக்கு எவ்வளவு வரி வசூலிக்கிறாங்க என்பதை அங்கே வசிக்கிறவங்க கிட்டே கேட்டால் தான் தெரியும். ஹூஸ்டனில் எங்க பையர் இருக்கும் பகுதியைச் சேர்ந்த நகராட்சி பராமரிப்புக்கு என வரி வருஷா வருஷம் கிட்டத்தட்ட ஆறாயிரம் டாலர்களுக்குக் குறையாமல் ஒவ்வொரு வீட்டுக்காரரிடமிருந்தும் வாங்குகிறது! நாமாக இருந்தால் முகம் சுளிக்காமல் கொடுப்போமா? இதைக் கட்டவில்லை எனில் அபராதம் போடுவதோடு தண்ணீர், மின்சாரம் போன்றவை நிறுத்தப்படும். ஒத்துப்போமா?

ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பரிசுப் பொருட்கள், பிட்சா ஆர்டர், பார்ட்டி, பாட்டு, நடனம் என்று கொண்டாடுவோம்! ஆனால் அதுக்காக சேவை வரி போட்டால் எதிர்ப்போம். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் செலவழிக்கும் மொத்தப்பணத்தில்  ஒரு சதவீதம் சேவை வரி என்றாலும் கொடுக்க மாட்டோம்!  பதினைந்தாயிரம் போட்டு அன்ட்ராயிட் ஃபோன் வாங்கி அதிலும் சில, பல ஆயிரங்கள் செலவு செய்து வேண்டிய ஆப்ஸ் போட்டு வைத்துக்கொள்வோம். பல திரைப் படங்களைத் தரவிறக்கி வெளியே செல்கையில் பார்த்துக் கொண்டே போவோம். அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் ஆனாலும் கவலையே பட மாட்டோம். ஆனால் பெட்ரோலோ, டீசலோ ஐம்பது பைசா ஏறினால் கூட அலறுவோம். விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம். அரசு கொடுமைப்படுத்துகிறது என்போம். அரசுக்குப் பணம் எங்கிருந்து வரும்? யோசிப்போமா? மாட்டவே மாட்டோம்!

ரயில் பயணம் சுகமாக இருக்கவேண்டும் நமக்கு. கொடுக்கப்படும் உணவுப் பொருட்களும் தரமாக இருக்க வேண்டும். கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக நாம் எந்த அளவுக்கு ஒத்துழைப்போம் என்றால் நிச்சயமாய் நம்மிடமிருந்து எந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கக் கூடாது! ரயிலில் வாங்கிச் சாப்பிடும் உணவுப் பொருட்களின் குப்பையை நம் காலடியிலேயே போடுவோம். யாரும் அங்கே கால் வைத்து நடக்கக் கூட முடியாத வண்ணம் செய்வோம். கழிவறையைப் பயன்படுத்தினால் சுத்தமாக வைத்துவிட்டு வர மாட்டோம். கை கழுவும் இடத்தில் கீழே குப்பையைப் போட்டு வைப்போம். நாம் காஃபி, தேநீர் வாங்கிக் குடித்த கோப்பைகளை அப்படியே கீழே போட்டிருப்போம். வாழைப்பழங்களைத் தின்றுவிட்டுத் தோலைக் காலடியில் போட்டிருப்போம். நாமே வழுக்கி விழுந்தாலும் சரி! அதைத் தனியாக எடுத்துப் போட மாட்டோம்.

நாம் கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டோம். ஆனால் ரயிலைச் சுத்தமாகப் பராமரிப்பதும் ரயில் நிலையத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதும் ரயில்வே துறையின் பொறுப்பு. சுத்தமாக இல்லை எனில் குற்றம் சொல்வோம். ஜப்பானைப் பாருங்கள்! அமெரிக்காவைப் பாருங்கள்! லண்டனைப் பாருங்கள்! என்றெல்லாம் கூப்பிட்டுக் காட்டுவோமே ஒழிய அது சுத்தமாவதற்கு நம் தரப்பிலிருந்து ஒரு சின்னப் பேப்பர் துண்டை அகற்றிக் கூட ஒத்துழைக்க மாட்டோம். இது பொதுச் சொத்து என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் நாசம் பண்ணலாம்! அது நம் உரிமை! ஆனால் குப்பைகளை அகற்றுவது நம் கடமையே அல்ல!

விவசாயிகளின் கடனா அப்படியே தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் கொள்முதல் விலையை மட்டும் அரசு கூட்டிக் கொடுக்க வேண்டும். பயிர்க்கடனைக் கட்டவே மாட்டோம். மின்சாரம் மட்டும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். அது எப்படி எங்கிருந்து வரும் என்ற சிந்தனை எங்களுக்குக் கிடையாது! கொடுக்க வேண்டியது அரசின் கடமை! விவசாயிகள் வயிற்றில் அடிக்கக் கூடாது! எப்படியோ வெளிமாநிலங்களில் கடன் வாங்கியாவது மின்சாரம் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அந்தக் கட்டணத்தைக் கட்டும் பொறுப்பு எங்களுடையதல்ல!

கல்விக்கடனா! தள்ளுபடி செய்யுங்கள்! நாங்கள் இங்கே கடன் வாங்கிப் படிச்சுட்டு வெளிநாட்டுக்குப் போவோம். இந்தியாவுக்காக ஏதும் செய்ய மாட்டோம். அது எங்கள் உரிமை! கல்வியைக் கொடுக்க வேண்டியது தான் உங்கள் கடமையே தவிர எங்களிடமிருந்து பதிலுக்குத் திறமையையும் ஆற்றலையும் எதிர்பார்ப்பது உங்கள் உரிமை அல்ல. அதுக்காக நீங்கள் ஆசைப்படக் கூடாது.

ஆனால் நாங்கள் வெளிநாடுகளுக்குப் போய் இந்தியாவா! சுத்த மோசம்! ஒரே அழுக்கு, குப்பை! எதுக்கெடுத்தாலும் இலவசம்! மக்களை ரொம்பக் கெடுக்கிறாங்கனு சொல்வோம்! அங்கே யார் திரும்பிப் போய் இருப்பாங்க என்றும் சொல்வோம். அது எங்கள் உரிமை!

இது  சும்ம்ம்ம்ம்மா கொஞ்சம் போல் உதாரணம் தான்! 

Friday, June 03, 2016

நடுவில் கொஞ்சம் மொக்கை! :)

சீரியஸா எழுதிட்டு இருக்கேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிப் புரிஞ்சுட்டு இருக்காங்க! அதைப் படிக்கையிலேயே சிரிப்புத் தான் வருகுதையா! சேம் சைட் கோல் அப்படினு பானுமதி வெங்கடேஸ்வரன் சொல்றாங்க! நடப்பதைத் தான் சொல்லி இருக்கேன். அதெல்லாம் தனியா வைச்சுக்கலாம். இப்போ மொக்கைக் கச்சேரி ஆரம்பம்.

ஒரு வாரம் முன்னர் ஜெயா தொலைக்காட்சி(?) ஏதோ ஒண்ணு! அதிலே நம்ம ரங்க்ஸ் சமையல் நிகழ்ச்சி பார்த்துட்டு இருந்தார். அந்த அம்மா சிறு தானியங்களை வைச்சுச் சமைக்கிறதைக் குறித்து அதிகம் சொல்வாங்க. அன்னிக்கு பார்லி அரிசி போட்டு தோசை பண்ணறதைக் குறித்துச் சொன்னாங்களா? உடனே நம்ம வீட்டிலேயும் பார்லி தோசை பண்ணுனு ஒரே ஆவலோடு சொல்லிட்டிருந்தாரா? வீட்டிலே பார்லியே இல்லை. எல்லாத்தையும் சிறுதானியக் கஞ்சி மாவில் சேர்த்துட்டேன். நேத்திக்கு மருத்தவப் பரிசோதனைக்குப் போனப்போ வாங்கிட்டு வந்து நனைச்சு வைச்சேன். இன்னிக்குக் காலை ஆகாரம் அந்த தோசை தான்! வழக்கம் போல் தக்காளிச் சட்னியோடு!

ஒரு கிண்ணம் பார்லி களைந்து ஊற வைச்சேன். பார்லி குறைந்த்து ஆறு மணி நேரம் ஊறணும்னு சொன்னாங்க.
ஒரு கிண்ணம் இட்லிப் புழுங்கல் அரிசி
ஒரு கிண்ணம் பச்சரிசி
முக்கால் கிண்ணம் அல்லது அரைக்கிண்ணம் (உளுந்தின் தரத்துக்கு ஏற்றாற்போல்) உளுந்து
வெந்தயம் இரண்டு டீஸ்பூன்.

பார்லியைக் களைந்து கழுவி தனியாக ஊற வைக்கவும். மற்ற சாமான்களை ஒன்றாகப் போட்டுக் கலந்து களைந்து ஊற வைக்கவும். பார்லி மிக்சியில் அரைபடுமானு சந்தேகமா இருந்ததாலே கிரைண்டரிலேயே அரைச்சேன். நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில்  தோசைக்கு அரைக்கிறாப்போல் அரைச்சு உப்புப் போட்டுக் கலந்து வைத்தேன். காலையில் மாவைப் பார்த்தேன். அதிகமாப் பொங்கவும் இல்லை; பொங்காமலும் இல்லை! அளவாகப் பொங்கி இருந்தது. பின்னர் தக்காளிச் சட்னி வழக்கம் போல் அரைத்துவிட்டு தோசைகளை வார்த்தேன்.

அரைத்த மாவு தோசை வார்க்கும்போது எடுத்த படம்! ஹிஹிஹி, வழக்கம்போல் மறந்துட்டு அப்புறமாத் தான் படம் எடுத்தேன். :) 

தோசை திருப்பிப் போட்டு வேகிறது. தம்பி வாசுதேவன் திருமூர்த்தி! தோசை நடுவிலே அது தீசல் இல்லை. நான் வார்க்கையில் பார்த்தால் நல்ல நிறமாகத் தான் இருக்கு. படம் எடுத்தப்புறமாப் பார்த்தால் கொஞ்சம் கறுப்பாகத் தெரியுது. இரண்டாம் முறையும் எடுத்துப் பார்த்துட்டேன். தோசை தீயலை. ருசியாகவே இருந்தது. நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. ஆனால் நான் கொஞ்சம் சந்தேகத்தோடு இருந்ததால் ஜாஸ்தி அரைக்கலை. :)


இதான் கடைசி தோசை!