எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 31, 2011

அடுக்குமாடிக்குடியிருப்புக்களும், அடக்க முடியாத் தொல்லைகளும்

இத்தனை கஷ்டங்களைப் பிறருக்கும் கொடுத்துக் கட்டப்படும் கட்டிடங்களில் குடியிருக்க வருவோரின் நிலை பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாக நடுத்தரக் குடிமக்களே தங்களுக்கு என ஒரு சொந்த வீடு வேண்டும் என்று வாங்க நினைக்கின்றனர். இவர்களில் வெகு சிலர் வருமான வரியில் இருந்து தப்பிக்கக் கடன் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டியும் வாங்குகின்றனர். இதிலே முதலில் உள்ளவர்கள் அவர்களே குடியும் வருவார்கள் எனில் பின்னர் சொன்னவர்களோ வாடகைக்கு விட்டுவிடுவார்கள். வீட்டைச் சுற்றி இருக்கும் இடமே இரண்டே இரண்டு அடிதான். இப்போத் தான் தரைத் தளத்தில் கட்டாயமாய்க் கார் பார்க்கிங்கிற்கு இடம் விட்டாகவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. பத்து வருடங்கள் முன் வரையிலும் அது கட்டாயம் இல்லை. ஆகவே கீழேயும் முழுதும் கட்டுவாங்க. மேலேயும் கட்டுவாங்க. கீழே கார் பார்க்கிங் இடம் விடுவதால் இப்போதெல்லாம் இரண்டு தளங்களுக்கு அநுமதி போலிருக்கு. அந்த இடுக்கிலேயும் கீழே இரண்டு குடியிருப்புக்களாவது கட்டறாங்க. புறாக்கூண்டுகள் தான். பக்கத்து வீடுகளின் சுவர் மறைக்கும் என்பதோடு அந்தக் குடியிருப்புக் கட்டப்படும் இடம் இரு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கமாய் வேறு வரும். அங்கே கட்டிடம் இல்லாமல் தோட்டம் இருந்தால் சரி. இல்லை எனில் வெளிச்சமே வராது. ஒரே இருட்டு. பின் பக்கம் வீடு இருந்தால் அவங்க கழிவறையின் பக்கம் சமையலறை இருக்குமாறு வரலாம். அதோடு அவங்க செப்டிக் டாங்கும் இருக்கலாம். பக்கத்து வீடுகளின் குளியலறை, கழிவறையும் வரலாம். இந்த இடத்திலே தான் அவங்க தலைவாசல் அமையும். அதை உள்பக்கமாய் அமைத்தால் இந்தத் தொந்திரவு இருக்காது. வெளிப்பக்கமாய்த் தான் வைக்கிறாங்க. எல்லா அறைகளும் பத்துக்குப் பத்து, பத்துக்குப்பனிரண்டு இருந்தால் அதிகம். அடுப்பிலிருந்து துடுப்பு வரையிலும், பீரோவில் இருந்து கட்டில் வரையிலும் இருந்தால் பிரச்னை தான்.

பெரும்பாலான குடியிருப்புக்களில் சமையலறையில் ஒருத்தர் மட்டுமே நின்று சமைக்கலாம். பத்துக்கு ஐந்து அல்லது பத்துக்கு ஏழுக்குள் தான் சமையலறை இருக்கிறது. அதிலேயே எல்லா சாமான்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். சாமான் குறைவாக இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் நம் மக்கள் சாமான்களைச் சேர்க்கும் வழக்கம் உள்ளவர்களே! ஹால் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையில் தான் ஒரு பக்கம் தடுத்தோ, தடுக்காமலோ சாப்பாடும் சாப்பிட்டாக வேண்டும். வருபவர்களையும் வரவேற்க வேண்டும். இன்றைய நாட்களில் பெரிய வீடு என்றால் பராமரிப்புக் கஷ்டம் என்றொரு நினைப்பு அனைவருக்கும் உள்ளது. அதனாலேயே குடியிருப்புக்களை விரும்புகின்றனர். அவரவர் தங்கள் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும். ஆனால் இதிலும் எல்லைத் தகராறு வந்து விடுகிறது. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இருப்பதில்லை. மாடிப்படிகள் அனைவருக்குமே பொது என்றாலும் கீழே இருப்பவர்கள் முதல் தளத்தில் இருப்பவர்களும், இரண்டாம் தளத்தில் இருப்பவர்களும் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள், நாம் எப்போவானும் துணி உலர்த்தத் தானே போகிறோம் என நினைக்கிறார்கள். ஆகவே அதைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதில் போட்டா போட்டி வருகிறது.

இந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்; பெருக்கிச் சுத்தப் படுத்த ஆளை நியமித்துவிடலாம் என எண்ணி ஆளைப் போட்டால், அதற்குப் பராமரிப்புக்கு என மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அதை அனைவரும் உடனுக்குடனே கொடுப்பதில்லை. அவங்களுக்குள் தலைவராக இருப்பவர் பாடு தான் திண்டாட்டம். அவர் கையைவிட்டுக் கொடுத்துட்டுப் பின்னர் வசூல் பண்ண வேண்டியதாய் இருக்கும். ஒரு சிலர் கொடுக்காமலேயே இழுத்தடிப்பார்கள். இன்னும் சிலர் தலைவராய் இருந்தால் கொடுத்தவர்களைக் கொடுக்கலைனும் சொல்லி விடுவதுண்டு. இது எங்க பக்கத்துக் குடியிருப்பில் நடந்த ஒரு விஷயம். ஆகவே இது ஒரு தொல்லை. இத்தோடு போகாது.

பாதாளச் சாக்கடைத் திட்டமே செயல்படுத்தப் படாததால் இங்கே எல்லா வீடுகளிலும் செப்டிக் டாங்க் தான். ஒரு வீடும், அதிலே குறைந்த பக்ஷமாய் ஆறிலிருந்து பத்து நபர்களுக்குள் இருந்த இடத்தில் இப்போது எட்டு வீடுகளும், ஒரு வீட்டுக்குக் குறைந்தது நான்கு நபர்களுமாக முப்பத்திரண்டு நபர்களும் கழிவறை பயன்படுத்துவார்களே! அதற்கு ஏற்றாற்போல் அல்லவா கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதில்லை. செப்டிக் டாங்கில் கழிவறைத் தண்ணீர் அதிகமாய் வழிந்து வெளியே ஓடி வந்து தெருவுக்குப் போகிறது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலே கட்டிய மழை நீர் வடிகால்க் கால்வாயில் அதை விட்டிருக்கிறார்கள். எங்க வீடு தாண்டி இரண்டு வீட்டுக்கு அப்பால் அந்தக் கால்வாய் முற்றுப் பெறாததால் கழிவு நீர் அப்படியே நிற்கிறது. ஆகவே நாங்க எங்க வீட்டுப் பக்கம் முனிசிபல் கமிஷனரிடம் சொல்லிவிட்டுக் கால்வாயை மூடி விட்டோம். பக்கத்திலோ கழிவு நீர் வெளியே போக வழியில்லாமல் அந்தக் கால்வாயில் விட்டு அதுவும் நிரம்பிக் கழிவு நீர் சாலையிலேயும் வரும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். இத்தனைக்கும் கழிவு நீர் ஊர்தி மாதம் ஒரு முறை வந்தது இப்போது மாதம் இரு முறை வந்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது.

ஒரு முறைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் அதற்கான செலவு ஆகிறது. அனைத்துக் குடியிருப்புச் சொந்தக்காரர்களும் இந்தப் பணத்தைப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஆனால் குடித்தனம் வருகின்றவர்களோ வீட்டுக்காரங்க இது குறித்தெல்லாம் சொல்லவே இல்லை; நாங்க தர முடியாது என்று கூறுகிறார்கள். அப்போ இருக்கும் சொந்தக்காரங்க கையிலிருந்து போட்டு அந்தப் பணத்தைக் கட்டிவிட்டுக் கழிவு நீரை இறைக்க வேண்டும். சொந்தக்காரங்க வாடகை வாங்க வரச்சே அந்தப் பணத்தைக் கேட்டு வாங்கணும். சொந்தக்காரங்க சொல்வதோ நாங்க உபயோகிக்காத கழிவறைச் செலவுக்கு நாங்க ஏன் கொடுக்கணும் என்பதே! ஆக மொத்தம் இருவரும் நழுவிக்கொள்ள அந்தப் பணம் அந்தக் குடியிருப்பு வளாகத்தினுள் குடி இருக்கும் சொந்தக்காரர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியதாகிவிடுகிறது.குடியிருப்போர் தொல்லை தொடரும்.

Friday, July 29, 2011

மூணு மூணாய்த் தான் சொல்லணும்! தொடர் பதிவு!

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

புத்தகம் படித்தல்

பசியோடு வருபவருக்கு வயிறாரச் சாப்பாடு போடுதல்

புத்தகம் படித்தல் தான் மறுபடி ஆனால் இப்போக் குறைச்சிருக்கேன். :(


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

என்னமோ நான் ஆசைப்பட்டுட்டு உடம்பு குண்டாயிருக்கிறாப்போல் எல்லாரும் கேட்பது.
ஹிஹிஹி, இணைய உலகுக்காரங்களைச் சொல்லலை. அவங்க பார்க்கிறது ஆனைக்குட்டியைத் தான். அதுக்கு முன்னால் கொடி போன்ற என்னைப்பார்த்தவங்க இப்போப் பார்க்கிறச்சே கேட்பது இதுதான், ஏன் குண்டாயிட்டேனு! என்னத்தைச் சொல்றது?

அதே தான் நிறம்! என்னடி இது கறுப்பாயிட்டேம்பாங்க. கறுப்பா இருந்தால் என்ன?? தப்பா?

விதவிதமான மாத்திரைகள் சாப்பிடுதல். விட முடியாதே!


3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை.

ரகசியமா வச்சுக்குங்க, கரப்பைப் பார்த்தால் அலறுவேன் ஒருகாலத்தில். அப்புறமா அதோடு குடித்தனம் நடத்தி, இப்போப் பழகிப் போச்சு! பாம்பைக் கண்டால் பயமில்லை. :)))))

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

ஏன் பக்கத்து வீடுகளிலேயே குப்பை போடறாங்க நம்ம மனிதர்கள்?

வீட்டுக்குள்ளே கழிப்பறை இருந்தும் பக்கத்துவீட்டுக் குழந்தைங்க எல்லாம் வாசலையே கழிப்பறையாகப் பயன்படுத்துவது ஏன்?? கேட்டால் குழந்தை தானே னு சொல்றாங்க.

இதை எல்லாம் கேட்டால் விரோதியாகப்பார்ப்பது ஏன்?

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ஹிஹிஹி,புத்தகங்கள் தான், வழியுது. எடுத்து வச்சாலும் திரும்பவும் எப்படி வந்துடுது? இது புரியலை எனக்கு. நாலாம் கேள்விக்கு பதிலா இதை எழுதி இருக்கணுமோ?? :)))))))))))))

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?

காரணமே வேண்டாம் சிரிச்சுட்டுத் தான் இருந்தேன். அப்புறமா வாழ்க்கைப் பயணத்திலே எல்லாம் குறைஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச். இப்போ அதிகம் சிரிக்கிறதில்லை என்றாலும் இணையத்தில் உள்ள ஜோக்குகள், சிலரின் பஸ் போஸ்ட், சில பதிவுகள்னு நினைச்சுச் சிரிக்க வைக்கும்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

கணினி முன்னால் உட்கார்ந்து கொண்டு(முதல் காரியம்)
என்ன எழுதணுமென யோசித்துக் கொண்டு( இரண்டாவது காரியம்)
அதைத் தட்டச்சுகிறேன். (மூன்றாவது காரியம்)


8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

அது வரைக்கும் இருக்க அனுமதிக்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறுவது தான்.ஆண்டவனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பொன்னாளே.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

குறிப்பா எதுனு புரியலை. ஏனென்றால் சில வேலைகளுக்குப் பிறர் உதவி தேவை. என்னைப் பொறுத்த வரைக்கும் வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே சமாளிச்சுப்பேன். குறைந்த பக்‌ஷமாக முப்பது நபர் வரையிலும் சமைத்து விடுவேன். இது தவிர வேறு என்றால் என்னனு தெரியவில்லை. என்னால் இயன்றவரை பிறருக்கு உதவிகள் செய்வதை வலுவில் கேட்டுச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

இது எப்படி முடியும்? அப்படினு யாராவது கேட்டால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுவும் சிலர் அன்றாட வேலைகளுக்கே முடியலைனு சொல்வாங்க. நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாமேனு தோணும். அப்படிப் பட்ட நொண்டிச்சாக்குச் சொல்வதைக் கேட்கையிலே கஷ்டமாய் இருக்கும்.

பொய். அதுவும் என்னை ஏமாற்றப் பொய் சொன்னாங்கனு சில சமயம் தெரிகையில் மனசு வேதனைப் படும்.

அதே போல் நாம உண்மையைச் சொன்னாலும் நம்பாத போது மனம் அதை விரும்பாது. :(


11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

ஒண்ணுமே தெரியாதே! இங்கே இணையம் வந்ததுக்கப்புறமாத் தான் ஒவ்வொருவரும் எப்படிச் சிறப்பாக இருக்கிறாங்க என்பது புரிகிறது. நாம இப்படி இருக்கோமே என்றும் தோன்றும். அதனால் கற்றுக்கொண்டே தான் இருக்கேன். எந்த மொழியிலும் வல்லுநர் இல்லை. ஓரளவு தெரிந்த தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் எதுவும் முழுசாத் தெரியாது. ஆகவே இன்னும் மாணவி தான்.

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
ரசம் சாதம்

சுட்ட அப்பளம்/நெய் தடவினது

இப்போது எங்க வீட்டு நார்த்தை ரசம் பிழிந்த மோர்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அது அன்றன்றைக்கு மாறும். சில நாள் சில பாட்டுக்கள் திரும்பத் திரும்ப வரும்.சங்கீதம் கேட்கப் பிடிக்கும் என்பதால் எல்லாப் பாட்டுக்களுமே பிடித்தவை தான்.


14) பிடித்த மூன்று படங்கள்?

காமெடிப் படங்கள் தான் பிடிக்கும். ஒளவை சண்முகி வரதுக்கு முன்பே அதன் ஒரிஜினல் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சது. குழந்தைங்க அப்பாவைக் கண்டு கொள்ளும் அந்தக் குறிப்பிட்ட சீன் ரொம்பவே ரசிச்சிருக்கேன். He is She, She is He அப்படினு ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்கும் சீன்!!!

தமிழில் நாகேஷ் காமெடி எல்லாமும் பிடிச்சது தான். சோப்பு, சீப்பு, கண்ணாடி எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத காமெடி

சந்திரபாபுவின் சபாஷ் மீனா.


15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

அப்படி எதுவும் இல்லை. அதிகமான எதிர்பார்ப்புக்கள் கிடையாது. அக்கம்பக்கத்தைப் பார்த்து இது இல்லை; அது இல்லைனு நினைச்சுக்கிறதும் கிடையாது. எல்லாத்துக்கும் மேலே ஆடித் தள்ளுபடிக்கு எல்லாம் போன நாளே கிடையாது. துணிக்கடைக்குப் புடைவை வாங்கப் போனாலும் முன் கூட்டியே திட்டம் போட்டு இந்தப் புடைவை, இந்தக் கலர்னு முடிவு பண்ணிட்டுப் போவேன். கிடைச்சால் சரி; இல்லைனா இல்லாத கலரா வாங்கிட்டு வந்துடுவேன். No regrets.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

ஹாஹாஹா, யாருப்பா மாட்டிக்கிறீங்க?? ஒழுங்கா வந்து பேரைக் கொடுங்க, இல்லைன்னா .........

ரேவதி நரசிம்மன்
துளசி கோபால்/ நியூசி போனதும் எழுதினாப் போதும். சலுகை உண்டு.
லக்‌ஷ்மி


என்னை அழைத்துவிட்டு முழி பிதுங்கும் எல்கேவுக்கு நன்றி.

Thursday, July 21, 2011

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடக்க முடியாத் தொல்லைகளும் 5

கொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?? இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச்செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே செண்ட்ரிங் பிரிக்கையிலே பலகை இங்கே எங்க வீட்டு ஏ.சி. கம்ப்ரெஸர் மேலே விழுந்து கீழே விழுந்தது. நல்ல வேளையா நாங்க கொஞ்சம் சுதாரிச்சுக்கொண்டோம். அந்தப் பக்கம் நடமாட்டம் வைச்சுக்கலை. மேலும் சின்னக் குழந்தைகளும் தற்சமயம் இல்லை. என்றாலும் முன்பெல்லாம் அங்கே தான் துணிகளைக் காயப் போடுவோம். இப்போ அதுக்கு முடியலை.

இத்தனைக்கும் எங்க வீட்டின் சுவருக்கும், எங்க காம்பவுண்டின் சுவருக்கும் இடையே நாலடிக்கும் மேல் இடைவெளி விட்டிருக்கோம். ஆனால் எங்க காம்பவுண்டிலிருந்து அந்தக் குடியிருப்புகள் கொஞ்சம் கூட இடைவெளியின்றி ஒரே ஒருத்தர் நடமாட மட்டும் இடம் விட்டு உடனே ஆரம்பிக்கிறது. அவங்களுக்குக் காற்று?? வெளிச்சம்??? அதெல்லாம் பத்திக் கவலைப்பட்டால் எப்படிங்க காசு பண்ண முடியும்?? கிட்டத்தட்ட மூவாயிரம் சதுர அடியே இருக்கும் ஒரு மனைக்கட்டில் எட்டுக் குடியிருப்புகள் வருகின்றன. கீழே இரண்டு, முதல் மாடியில் மூன்று, இரண்டாம் மாடியில் மூன்று. ஐந்து அல்லது ஆறு பேர் குடியிருந்த இடத்தில் ஒரு வீட்டிற்குக் குறைந்தது நான்கு பேர் என வைத்துக்கொண்டால் கூட 32 பேர் இருப்பாங்க. யோசிச்சுப் பாருங்க. L

இதிலே என்ன பிரச்னை என்றால் தினம் தினம் அங்கிருந்து விழும் கான்க்ரீட் கழிவுகள், அரைச்செங்கல்கள், மணல் குப்பைகள், அதோடு அவங்க உடைக்கும்போதுவிழும் துகள்கள் என ஒரே குப்பை. சுத்தம் செய்யக் கூப்பிட்டால் ஒரு நாள் வந்து செய்யறாங்க. அப்புறம் யாருமே வரதில்லை. தினம் தினம் சொல்ல வேண்டி இருக்கு. அது ரொம்பக் கூச்சமா இருக்கிறது. அவங்க மேஸ்திரி, மானேஜர்னு எல்லார் கிட்டேயும் சொல்லிப் பார்த்தாச்சு. சொன்ன அன்று மட்டும் யாரானும் வந்து ஒரு தள்ளுத் தள்ளுவாங்க. இந்த மட்டும் நம்மளைத் தள்ளலையேனு நினைச்சுட்டு, மறுநாள் நான் சுத்தமாய்ப் பெருக்கி எடுப்பேன். வேலை செய்யற அம்மாவுக்குப் பயம், எங்கேயானும் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா? அதோட அவங்க வரதும் மதியம் நாலு மணிக்கு. பக்கத்திலே மும்முரமா வேலை நடக்கும் சமயம். அதனால் நான் காலையிலே ஆளில்லாத சமயமாப் பெருக்குவேன். அந்தக் கட்டிடம் கட்டும் கம்பெனியின் சொந்தக் காரர் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அவரோட தொலைபேசி எண்ணும், அலுவலகமும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு. லேட்டஸ்டா விழுந்தது முந்தாநாள் இரும்பு பாண்டோடு சிமெண்ட் கலவையும், இன்னிக்கு மத்தியானம் மறுபடியும் ஏ.சி. கம்ப்ரெசரில் மட்டப்பலகையும் விழுந்தது. இப்படி எல்லாம் பொருட்கள் விழுகையில் மானேஜரோ, குவாலிடி கண்ட்ரோல் இஞ்சினியரோ, இல்லைனா எம்.டி.யோ இருக்கிறதில்லை. இன்னிக்கு நானும் மட்டப் பலகையைக்கொடுக்க மாட்டேன்னு அடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். அப்புறமா வேறே வழியில்லாமக் கொடுக்க வேண்டியதாப் போச்சு.

ஒரு மாமரமும், வாழைமரமும் சுத்தமாய் உயிரை விடும் நிலையில் இருக்கின்றன. அவங்க கிட்டேச் சொன்னால் மரத்துக்கு ஏம்மா இப்படி அடிச்சுக்கறீங்கனு சொல்றாங்க! ஆனால் நாம் பேசுவதோ சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்? எப்படி மேம்படுத்தலாம்?? மரங்களை அழிக்காமல் இருக்கணும், மரங்களை நட வைக்கணும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நம்முடைய சொந்த மனையை கேவலம் சில லக்ஷங்களுக்காக விற்றுவிட்டுச் சூரியனின் வெம்மையையும், மழைக்குறைவையும், நீர்ப் பற்றாக்குறையையும் நிரந்தரமாகப் பெற்றுக்கொள்கிறோம். பணம் கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது சிலர் கேள்வி. பணம் கொடுத்தால் விவசாயமே நடக்காமல், விவசாய நிலங்களே இல்லாமல் அரிசி எப்படி வரும்?? காய்கனிகளுக்கான தோட்டங்களே இல்லாமல் அவை எப்படி வரும்?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பார்கள் சிலர். வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வெளிநாட்டிலோ கலாசாரம் நம்மைவிட மோசம் என்றெல்லாம் சொல்கிறோமே தவிர, அங்கே ஒரு மரத்தின் ஒரு சின்னக் கிளை கவனக்குறைவால் உடைந்தால் கூட நம் செலவில் ஒரு மரக்கன்றை வாங்கி நட்டு, அது ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை அதற்கான செலவை நாம் ஏற்கவேண்டும். அடுக்கு மாடிக்குடியிருப்பை இஷ்டத்திற்குக் கட்ட முடியாது. கட்டுவதற்கென நிலம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குடிநீர் முதல், அடுப்பு வசதி, அவன் வசதி, பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷர், இன்னும் சில வீடுகளில் துணி துவைக்கும் மிஷினும் சேர்ந்தே வரும். இப்படி அனைத்து வசதிகளும் கட்டாயமாய்ச் செய்து தர வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போருக்கெனச் சில சட்டதிட்டங்களும் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

வீடுகள் கட்டுகையில் பகலிலே ஒன்பது மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து வெளிச்சம் இருக்கும் வரையிலும் தான் கட்ட முடியும். சில இடங்களில் நான்கு, ஐந்து மணிக்கே இருட்டத் தொடங்கி விடும். அதோடு கூட இரவானால் ஒன்பது மணிக்கப்புறமாய்ச் சத்தம் செய்து கொண்டோ, உடைத்துக்கொண்டோ, ஜேசிபி போட்டுத் தோண்டிக்கொண்டோ இருக்க முடியாது. குடியிருப்போர் சங்கம் போலீசுக்குப் போய்விடும். அதன் பின்னர் கட்டடம் கட்டுவோருடைய குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் அவங்க வீடு கட்டும் லைசென்ஸே ரத்துச் செய்யப் படும். ஆனால் நம் நாட்டிலோ??? புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ?? கொஞ்சம் பொறுங்க. சீக்கிரம் முடிச்சுடுவேன். அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போரின் தொல்லைகள் தொடரும்.

Monday, July 18, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 4

நிலத்தின் மதிப்புக்கூடுவது பணவீக்கத்தின் எதிரொலியோ என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் நாட்டில் இந்த ஐடி கலாசாரம் வந்தது முதலே எல்லாப் பொருட்களின் விலைகளும் கூடிக்கொண்டே போகின்றனவே தவிரக் குறைந்தபாடில்லை. முன்னெல்லாம் ஒரு படுக்கை அறை, கூடுமிடம், சமையலறை, குளியலறைக் கழிப்பறை வசதியோடு கூடியது ஐந்து லக்ஷத்துக்குள்ளாகவே விலைக்குக் கிடைத்தன. வாடகையும் அதிகம் போனால் ஆயிரம் ரூபாய்க்குள்ளாகவே இருக்கும். முன்பணம் மூன்று மாதங்களுக்கு மேல் வாங்கினால் அதிகம். அதுக்கே வீட்டுக்காரங்க பயப்படுவாங்க திரும்பக் கொடுக்கணுமே என்று கவலைப்படுவாங்க. இப்போதோ, அப்படி ஒரு படுக்கை அறை உள்ள குடியிருப்புப் பகுதியிலே கிடைப்பது குறைந்த பக்ஷமாக ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரம் வரையிலும் வாடகை கொடுக்கவேண்டும். விலைக்கு வாங்குவது என்றால் சதுர அடி4,000 ரூபாய் வரை அம்பத்தூரிலேயே விற்கின்றனர். எனில் ஐநூறு சதுர அடி உள்ள குடியிருப்பை வாங்க வேண்டுமெனில் குறைந்தது இருபது லக்ஷம் தேவை. இதைத் தவிரவும் குடியிருக்கப் போகும் பகுதியின் உள்ளே தேவைப்படும் முக்கியமான மர வேலைகள் பூரணமாகச் செய்திருக்க மாட்டார்கள். கதவுகளும், ஜன்னல் கதவுகளும் மட்டுமே போடப் பட்டிருக்கும். ஜன்னல்களுக்கும் இப்போதெல்லாம் மரச் சட்டம் வைத்துக் கட்டுவது அரிதிலும், அரிதாகக் காண முடிகிறது. அப்படிக் கட்டினால் அந்தக் குடியிருப்பின் எல்லாக் குடியிருப்புக்களுக்கும் கூடுதல் விலை வைத்துத் தான் கொடுப்பாங்க. நாம கேட்டாலும், கூடுதல் பணம் தனியாகக் கொடுக்கவேண்டும். இதுக்கே இப்படி என்றால் சமையலறையின் அலமாரிகளுக்கு மட்டும் செய்து கொடுப்பாங்களா? நிச்சயமா மாட்டாங்க.

மர வேலைகள் நாம் தான் செய்துக்கணும். சும்மாக் கட்டிக்கொடுக்க மட்டுமே இருபது லக்ஷம் ஆகி இருக்கும். சமையலறை அலமாரிகள், மற்றப் படுக்கை அறை அலமாரிகள், சமையலறையில் சாமான் வைக்கும் அலமாரிகள், வரவேற்பு அறைக்கு, பூஜை அலமாரிக்கு எல்லாம் நாம் தனியாக ஆள் வைத்துச் செய்து கொள்ளவேண்டும். அல்லது கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் இதற்கும் சேர்த்துத் தனியாகப் பேசிக்கொண்டு அவர்கள் மூலம் செய்து கொள்ளவேண்டும். இதற்கு ஆகும் செலவு குறைந்தது இரண்டு லக்ஷத்தில் இருந்து பத்து லக்ஷம் வரையிலும் வீட்டின் மொத்தப் பரப்பளவை ஒட்டி ஆகின்றன. இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் எல்லாவற்றுக்கும் விலைகள் கூடிக்கொண்டே போகின்றன. எப்போதும் தேவை இருப்பதால் இவற்றின் விலை உச்சாணிக்கொம்பை எட்டி விடுகின்றன. அதிலும் ஐடிக்காரர்களுக்கு எல்லாமே நவீனமயமாய் இருக்க வேண்டி உள்ளதே. ஆகவே எலக்ட்ரிக் சிம்னி, மாடுலர் கிச்சன் என எல்லா வீடுகளிலும் அமர்க்களப் படுகின்றது. மாடுலர் கிச்சன் அமைக்கவும் குறைந்த பக்ஷமாய் ஒரு லக்ஷத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இல்லை எனில் அவங்க கர்நாடகம், பழமைவாதி. இப்படியான வீடுகளின் மதிப்பும் கூடுகிறது. ஐடிக்காரங்களுக்கு வருமானவரியில் இருந்து தப்பிக்க இந்த வீட்டு லோன் பெருமளவு உதவியும் செய்கிறது. ஆகவே குறைந்த பக்ஷமாய் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புக்களாவது வாங்கறாங்க. ஒண்ணுமா வாங்க முடியாதவங்களும் இருக்கிறாங்க தான். அது தனி. பெரும்பாலும் பெரிய, பெரிய கம்பெனிகளான டாடா, இன்போசிஸ், சிடிஎஸ், எச் சி எல் போன்ற பெரிய, பெரிய கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு இவ்வகையான கடன்களைக் கொடுத்து ஊக்குவிக்கின்றன என்றே கூறலாம்.

மேலும் இந்த ஐடி கம்பனிகள் எல்லாமும் சென்னையிலும், அதன் சுற்றுவட்டாரம் இருபத்தைந்து, முப்பதுமைல்களுக்குள்ளேயே இருக்கின்றன. இதனால் சென்னையில் ஜனத்தொகை அதிகரித்துள்ளது. அதிகரித்த ஜனத்தொகைக்கு ஏற்பத் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து வசதி போன்றவை சரியாகக் கிடைப்பதில்லை. இதற்கு அரசின் மெத்தனம் முழுப் பொறுப்பு என்றாலும் ஓரளவுக்கு நாமும் காரணம். இதைப் படிக்கும் அனைவரும் என்னை ஏன் சென்னையில் இருக்கிறாய்? கிராமத்தைப் பார்த்துப் போவதுதானே எனக் கேட்கலாம். அம்பத்தூர் ஒரு அழகிய கிராமமாக இருந்ததாலேயும், சென்னையை விட்டுத் தள்ளி அமைதியாகவும், தண்ணீர் வசதியோடும் இருந்ததாலுமே இங்கே வீடு கட்டிக் குடியேறினோம். ஆனால் இப்போதோ அதைக் குறித்த மறு சிந்தனைகளுக்கு உள்ளாகி இருக்கிறோம். நிலத்தடி நீர் முன்பெல்லாம் 100 அடி, 150 அடிக்குள்ளாகக் கிடைத்து வந்தது, தற்சமயம் 300 அடி வரையிலும் போகிறது. எல்லா வீடுகளிலும் கோடையில் கூட முப்பது அடிக்குள்ளாகக் கிணற்றில் நீர் கிடைத்துக்கொண்டிருந்தது, தற்சமயம் ஐம்பது அடியானாலும் கிடைப்பதில்லை. அதோடு மக்கள் பெருக்கத்தினாலும், போக்குவரத்து நெருக்கடியினாலும் திணறுகிறது அம்பத்தூர். சாலைகள் பராமரிப்பும் இல்லாமல், பாதாளச் சாக்கடைத் திட்டமும் நிறைவேற்றப் படாமல், சென்னைக்கே குடிநீர் வழங்கும் புழல் ஏரியும், அம்பத்தூர் ஏரியும், தாங்கல் ஏரியும், கொரட்டூர் ஏரியும், முகப்பேர் ஏரியும் இருந்தாலும் அம்பத்தூரில் உள்ள எந்த வீட்டிற்கும் குடிநீர்க்குழாய் இணைப்புக் கிடையாது.

குடிநீர் முனிசிபாலிட்டி கொடுப்பதில்லை. குழாய்களும் ஒரு சில முக்கியமான தெருக்களிலேயே பதிக்கப் பெற்றுள்ளன. நாங்கள் குடி இருக்கும் பகுதியில் குடிநீர்க் குழாய்களே பதிக்கவில்லை. நாங்க குடிநீர் விலை கொடுத்தே வாங்குகிறோம். அதோடு பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படாமையால் கழிவுநீர் பூமியின் நீரோடு கலந்து நிலத்தடி நீர் தற்சமயம் சுவையும் குறைந்து, துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் குளிக்கவும், தோய்க்கவும் மட்டுமே வீட்டின் நிலத்தடி நீரை வேறு வழியில்லாமல் பயன்படுத்திக்கொண்டு மற்றத் தேவைகளுக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்குகிறோம். இயற்கை நமக்களித்த கொடை நீரும், காற்றும். இப்போது காற்றுக்கும் பஞ்சம், நீருக்கும் பஞ்சம்.

அதோடு ஒரு முக்கியமான விஷயம் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் கட்டிடக் காண்டிராக்டர்கள் சாமான்களைப் போட்டு வைக்க ஒரு குடிசை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போடுகின்றனர். அதில் ஒரு காவலாளியையும் குடி வைக்கின்றனர். அவர்களுக்குக் கழிவறையோ, குளியலறையோ எந்தவிதமான அடிப்படை வசதியும் அங்கே இருக்காது. இதே பெரிய பெரிய கட்டிடக் காண்டிராக்டர்கள் எனில், உதாரணமாக நவீன், தோஷி&தோஷி, அருண் எக்ஸெல்லோ போன்றவர்கள் ஒரு தாற்காலிகக் கழிவறையும், குளியலறையும் அலுவலகமும் ஏற்படுத்தி இருப்பார்கள். வீடு வாங்கவெனப் பார்க்கத் தொலைதூரத்திலிருந்து வரும் பயனாளிகளுக்கும் பயன்படும் அது. ஆனால் இங்கேயோ கட்டுவதே ஒரு கிரவுண்டில் இல்லாட்டி அரை கிரவுண்டில். இதிலே எங்கே போய்க் கழிப்பறையைக் கட்டுவாங்க?

ஒரு வாட்ச்மேனோடு இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் எங்க பக்கத்துக் கட்டிடத்திலும் சரி, எதிரே கட்டுவதிலும் சரி ஒரு குடும்பமே குறைந்த பக்ஷமாய் ஐந்து நபர்கள் தங்கி இருக்கின்றனர். அவங்க சமையல், சாப்பாடு, மற்ற வேலைகளுக்கான தண்ணீர் எல்லாமும் பயனுக்கு எடுத்தது போகக் கழிவு நீர் தெருவிலே கொட்டப் படும். அவங்க கழிப்பறையாகப் பயன்படுத்துவதும் தெருவைத் தான். இது ஆண்களாய் இருந்தாலும் எதிரே குடி இருக்கும் வீடுகளிலோ, பக்கத்தில் இருக்கும் வீடுகளிலோ இருப்பவர்களுக்குப் பிரச்னைகள். பெண்களாய் இருந்தாலும் பிரச்னைகள். எங்க பக்கத்துக் கட்டிடத்தின் வாட்ச்மேன், வாட்ச் வுமன், அவங்க குடும்பம் எங்க படுக்கை அறை பக்கமாய்க் கழிவறை, குளியலறையாகப் பயன்படுத்துவதால் எங்க படுக்கை அறையில் எப்போதும் துர்நாற்றம் கண்ணாடி ஜன்னல் கதவையும் கடந்து வீசிக்கொண்டே இருக்கிறது.

பக்கத்துக் காண்டிராக்டர் ஆன ராகுல் அசோசியேட் எம்.டிக்கு இ மெயில் கொடுத்ததில் உடனடியாகப் பதிலும் கொடுத்ததோடு மானேஜரையும் நேரில் அனுப்பித் தொல்லைகளைக் குறைப்பதாய் வாக்குக் கொடுத்தார். கொஞ்சம் பரவாயில்லை. தங்கி இருந்த நபர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டுப் பெயரளவுக்கு பினைல் ஊற்றினார்கள். என்றாலும் தொல்லை தொடரத் தான் செய்கிறது. ஆனால் எதிரே இருப்பவர்களின் காண்ட்ராக்டரோ எத்தனை முறை சொன்னாலும் எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி ஜல்லி, மணல், செங்கல் என அடுக்கி விட்டு, வீட்டுக்கு எதிரே கம்பி கட்டும் மெஷினையும் வைத்துக்கொண்டு கம்பிகளையும் போட்டு விடுவார்கள். நாம் நடக்கக் கூட வழியில்லை. இருசக்கர வண்டியை எடுக்கும்போது என் கணவருக்குத் தடுமாறும் என்றாலும் கண்டுக்கவே மாட்டாங்க. அவங்க கிட்டே சொல்லிச் சொல்லி அலுத்தும் போச்சு. அந்த எம்.டி. க்கு மெயில் கொடுத்தும் பதில் ஏதும் இன்று வரை வரவே இல்லை.

இன்று தான் பாதாளச் சாக்கடைக்காக ஜேசிபி வந்து தோண்டியதன் காரணமாய் அவங்க இடத்திற்குள்ளேயே மெஷினை வைத்துக்கொண்டு கம்பி கட்டுகிறார்கள். அதை ஆறு மாதங்களாய்ப் பல முறை நாங்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் கேட்கவே இல்லை. தெருவில் நட்ட நடுவில் கம்பிகள் கிலோ கணக்கில் கிடக்கும். அதை நகர்த்தவும் மாட்டாங்க. கடைசிக் கம்பி தீரும்வரை அங்கேயே கிடக்கும். ஆட்டோவோ, வெளி ஊருக்குப் போகக் காரோ வர முடியாது. அப்போவும் அலட்டிக்கவே மாட்டாங்க. சாமானையும் தூக்கிக் கொண்டு நாம் நடந்து போய் இரண்டு , மூன்று வீடு தாண்டி ஏறிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு அவங்களுக்குள்ளேயே ரசித்துச் சிரிச்சுப்பாங்க. அவங்களால் இயன்றதுஅவ்வளவே. :(

Saturday, July 16, 2011

மாயவரம் ஏரு இல்லை பொன்னேர் பூட்டுதல்

 
Posted by Picasa
இங்கே நீங்க பார்க்கிறது மண்ணால் செய்யப் பட்ட பூமித்தாய். மேதினி அன்னை. எங்க ஊர்க் கோயில்க்கும்பாபிஷேஹத்தின் போது யாகசாலை பூஜை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகர் பூஜை முடிச்சுட்டு மேதினித் தாய்க்கும், கடப்பாரை, மண்வெட்டி, ஏர்க்கலப்பை போன்றவற்றிற்கும் பூஜைகள் முடித்துவிட்டுப் பின்னரே ஆரம்பித்தனர்.  
Posted by Picasa
அதற்கு பட்டாசாரியார் சொன்னது ஒவ்வொரு வருஷமும் பொன்னேர் பூட்டுகையில் எடுக்கும் மண்ணைக் கோயிலின் திருப்பணிக்கு எனக் கொடுப்பார்களாம். அப்புறமாய்ப் பொன்னேர் பூட்டு விழா முடிந்ததும், வயலில் விதைத்து, நட்டு, அறுவடை செய்து வந்த முதல் தானியக் கதிர் எல்லாக் கோயில்களுக்கும் வரும். அந்த தானியங்களின் விளைச்சலில் வந்த பணத்தைக் கொண்டு திருப்பணிகள் செய்வார்களாம். இப்போது பொன்னேர் பூட்டும் வழக்கமும் போய்விட்டது. தானியங்களின் விளைச்சலைக் கோயிலுக்குக் கொடுப்பதும் இல்லை. கோயிலின் நிலத்தின் விளைச்சல் கூடக் கோயிலுக்குச் சேர்வதில்லை. அது போகட்டும். பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன?? யார் பதில் எழுதப் போறீங்க?

நானே சொல்லிடறேன். ஹிஹிஹி, சான்ஸை விடுவேனா! தை மாதம் அறுவடை முடிந்ததும், உழவர்களுக்கு நான்கு மாதம் வயல் வேலை இருக்காது. கோடைக்காலமான சித்திரையில் கோடை மழையில் பயறு, உளுந்து விதைப்பார்களாம். அதற்கு முன்னர் வரும் அக்ஷய த்ரிதியை தினத்தன்று கிராமங்களில் வயல் இருப்பவர்கள் எல்லாரும் காலையிலேயே எழுந்து, மாடுகளைக் குளிப்பாட்டி வயலுக்கு அழைத்துச் செல்வார்கள். கூடவே இயற்கை எரு, வீட்டுப் பெண்கள், அங்கே குடிக்க நீராகாரம், பூக்கள், தேங்காய், பழம் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். ஏர்க்கலப்பை, மண்வெட்டி, கடப்பாரை போன்றவையும் கொண்டு செல்லப் படும். அங்கே வயலில் ஈசான்ய மூலையில் ஒரு திட்டாணி கட்டி, அதில் சாணம் அல்லது மண்ணால் பிள்ளையார் பிடித்து வழிபட்டு, மாடுகள், ஏர்க்கலப்பை, கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றுக்கும் வழிபாடுகள் முடிந்து  
Posted by Picasa
முதலில் குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஏரைப் பூட்டி உழப் பின்னர் வீட்டின் நண்டு, சிண்டுகள் உட்படப் பெண்களும் சேர்ந்து சம்பிரதாயமாகச் சிறிது நேரம் உழுவார்களாம். அதன் பின்னரே உழவுத் தொழில் அந்த வருஷத்துக்காக ஆரம்பிக்கும். இதுவே பொன்னேர் பூட்டுவது என்பது.  
Posted by Picasa


ஒரு சிலர் அன்று பஞ்சாங்கம் படிப்பது, சாப்பாடு போடுவது, தானம் கொடுப்பது என்றும் செய்வார்கள். இதெல்லாம் மாறி இன்று அக்ஷய த்ரிதியை நகைக்கடையில் கூட்டம் போடும் நாளாக ஆகிவிட்டது. பொன்னேர் பூட்டுவதா? அப்படின்னா என்று கேட்கும் அளவுக்கு ஏர் பூட்டி உழுவது என்பதே மறந்தும் போய்விட்டது. எவ்வளவு இழந்து வருகிறோம்?? :((((((((((

Friday, July 15, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 3

 
Posted by Picasa
லிஃப்டுடன்கூடிய கலவை மெஷினை ட்ராக்டர் இழுத்து வருகிறது. கலவை மெஷின் வீட்டுக்கு எதிரே வைப்பாங்க. அதிலே சிமெண்ட், ஜல்லி, மணலைக் கொட்டும்போது எழும் தூசியை நாம் சுவாசிக்க முடியாது. முக்கியமாய் ஆஸ்த்மாவினால் அவதியுறும் எனக்கு. இதைச் சொன்னாலும் கேட்டுக்கலை. எங்க வேலை ஆனால் போதும்னு இருக்காங்க. இன்னும் ஒரு தளம் போட்டாச்சுன்னா அப்புறமா இவ்வளவு தொந்திரவு இருக்காதுனு சமாதானம். அதுக்குள்ளே ஏதேனும் உடல்நலம் சீர் கெட்டால் என்ன செய்யறது? அந்தக் கேள்விக்கு பதிலே இல்லை. :( இதை எல்லாம் படிச்சதும் சிலருக்கு எனக்கு அடுக்குமாடிக் குடியிருப்பே பிடிக்காதா எனவும், எல்லாருமே தனி வீடு கட்ட முடியுமா எனக் கிண்டலாயும் தனி மடல்களில் கேட்டிருக்கின்றனர். நிச்சயமாய் எல்லாராலும் கட்ட முடியாதுதான். ஆனால் அரசாங்கம் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தினால் இந்த மாதிரி தீப்பெட்டிபோல் அடுக்குவதைத் தவிர்க்கலாம். சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும், மீறினால் குறைந்த பட்சத் தண்டனையே கடுமையானதாக ஆக்கவேண்டும். உயிருக்கு இந்தியாவில் தான் மதிப்பே இல்லை. இது ஒரு சோகமான, ஆனால் சுடும் உண்மை. அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டக்கூடாது என்பதே என் நிலைப்பாடு இல்லை. அதை முதலில் தெளிவாக்குகிறேன். கட்டட்டும், தாராளமாய்க் கட்டட்டும். தாராளம் கட்டுவதில் மட்டும் இல்லாமல் இடங்கள் தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். குறைந்த பட்சமாய் மூன்று கிரவுண்டு இடமாவது இருக்கவேண்டும். அரை கிரவுண்டு என்பது 1200 சதுர அடிகளே இருக்கும். அவற்றிலே கொஞ்சம் கூட இடம் விடாமல் 1199 அடிகளையும் வீடாய்க்கட்டினால் எப்படி?? அதுவும் பக்கத்திலே இருக்கிறவங்களுக்குத் தான் அத்தனை தொந்திரவும் வருகிறாப்போல் கட்டறாங்க. வீடுகட்டறது என்பது என்ன சும்மாவா?? அஸ்திவாரம் போடறதிலே ஆரம்பிச்சு எவ்வளவு வேலை இருக்கு??அது வேறே சத்தம் தாங்காது. மதியம் முழுவதும், ஜேசிபி மெஷின் வந்து பூமியைத் தோண்டும் சத்தம் சில நாட்கள். அப்புறமாய்க்கம்பி கட்ட மெஷின் ஓட்டுவாங்க. கைகளாலும் கம்பிகளை வளைப்பாங்க. அதுக்கான பட்டறையை நம்ம வீட்டு வாசல்லே போடுவாங்க. வாசலிலே ஒரு அவசரத்துக்குக் கூட நாம வெளியே வந்துட முடியாது. ஒரு பக்கம் இப்படின்னா, எதிரே கட்டறவங்க மட்டும் என்ன சும்மா இருக்க முடியுமா? அவங்களும் வீடுகள் கட்டி லாபம் பார்க்க வேண்டாமா? போடுங்க அவங்க கட்டும் மணல் ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் அவங்க கம்பி கட்டறதை நேரே நம்ம வீட்டுக்கு எதிரேயே வச்சுப்பாங்க. அந்த மெஷினில் உடைக்கும் கம்பியின் கறுப்புத் துகள்களால் நம்ம வீட்டின் வாசலெல்லாம் கறுப்பு, கறுப்பாய்க் காட்சி அளிக்கும். அதைச் சுட்டிக் காட்டினால் ஒரு முறைப்பு, ஒரு கிண்டல், ஒரு நக்கல். இப்போதானே வேலை செய்யற அம்மாவும் பெருக்கினாங்க, நானும் பெருக்கினேனேனு சொன்னால் முறைப்பாங்க. உடனே ஜாடைப் பேச்சுக்கள் ஆரம்பம் ஆகும்.நம் தமிழ் நாட்டிலேயே மிக மிக மோசமான ஒரு நடத்தை இப்படி அடுத்த வீட்டு வாசலில் குப்பையைப் போடுவதுதான். இதை நான் வேறெங்குமே கண்டதில்லை. பக்கத்து வீடு இடிக்கும் முன்னர் அங்கே மாடியில் குடியிருந்தவங்க தெரு நாய்க்குப் போடும் சாப்பாட்டை எல்லாம் சரியா எங்க காம்பவுண்டுக்கு நேரே தான் வைப்பாங்க. அவங்க பக்கம் சுத்தமாய் இருக்காம். அப்படின்னா இங்கே அசுத்தம் பண்ணலாமா?? அதைக் கேட்க முடியாது. இத்தனைக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வராங்கனு தான் பேரு. அவங்க தெருவைப் பெருக்கி நான் பார்ப்பது தீபாவளி அன்று மட்டுமே. தீபாவளிக்கானக் கூடுதல் தொகை வசூலிக்கவே பெருக்குவாங்க. தினசரி விழும் குப்பைகளை நாங்க தான் பெருக்கிச் சுத்தம் செய்து குவித்து வைப்போம், அல்லது ஒரு பையில் போட்டுக் கட்டி வைப்போம். சில சமயம் தென்னை மரங்களைக் கழித்தால் அவற்றை எடுத்துச் செல்ல அவங்களுக்குத் தனியாய்ப் பணம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தாலும் அவங்க வந்து தூக்கிப் போக மாட்டாங்க, நாம தான் வண்டியிலே தூக்கிப் போடணும். சுகாதாரப் பணியாளர்களின் இந்த நடத்தை தனி வீட்டுக்காரங்க கிட்டே மட்டுமே. ஏனெனில் அவங்க ஒருத்தர் கிட்டே இருந்துதானே பணம் வருது. அதுவே அடுக்குமாடிக் குடியிருப்புன்னா அவங்க மாடிக்கே போய்க் குப்பையை எடுத்து வராங்க. அதையும் பார்க்கிறோம். எட்டுக் குடியிருப்பு இருந்தால் எட்டுப்பேருமாய்ச் சேர்ந்து வசூலிச்சு மொத்தம் நூறு ரூபாயிலிருந்து நூற்றைம்பது வரை கொடுக்கிறாங்க இல்லையா? அவங்களுக்கு அதானே லாபம்? ஆகக் கூடி இங்கே மனித நேயம் என்பதெல்லாம் வெறும் பேச்சு என்பதும் தெரிஞ்சுக்கலாம்.என்ன சொன்னேன்? ஆமாம், குப்பை போடறதைப் பத்திச் சொன்னேன் இல்லையா? அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் நாம் குடியிருந்தால் சாண்ட்விச் மாதிரி நாம நசுங்கித் தான் போவோம். இந்தப்பக்கமும் குப்பையை எல்லாம் நம்ம வீட்டு வாசலில் கொட்டுவாங்க. அடுத்த பக்கத்துக்கும் நம்ம வீட்டு வாசல்தான் குப்பைத் தொட்டியாக இருக்கும். மேலே இருக்கிறவங்க பால்கனியில் உலர்த்தும் துணிகள் நம்ம வீட்டிலே தான் வந்து விழும். அவங்க இறங்கி வந்தெல்லாம் எடுத்துக்க மாட்டாங்க. நாமதான் அவங்களைப் பார்த்துத் தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுக்கணும். இல்லைனா வாரக் கணக்கானாலும் துணி விழுந்த இடத்திலேயே கிடக்கும். அவங்க பசங்க பந்து விளையாட அவங்க வாசலுக்கும் காம்பவுண்டுக்கும் இடையே இருக்கும் இரண்டடி இடைவெளிதான் கிடைக்கும். அதிலும் ஒரே நேரத்தில் எல்லாருடைய குழந்தைகளும் ஆளுக்கொரு பந்தை வைத்துக் கொண்டு விளையாடுவாங்க. எல்லாப் பந்துகளும் சரியா விளையாட ஆரம்பிச்ச அடுத்த இரண்டாவது நிமிஷம் நம் வீட்டுத் தோட்டத்துக்குள்ளே வந்துவிழும். அவங்க விளையாடுவதற்கு நேரம், காலம் இருக்காது. குழந்தைகள் தானே. அதை எல்லாம் சொல்லிட்டும் இருக்க முடியாது. உண்மை. ஆனால் நாம்?? நமக்கு வேலையே இருக்காதா? அப்போத் தான் யாராவது தொலைபேசியில் கூப்பிடுவாங்க. பேசிட்டு இருப்போம். அல்லது சமையலில் ஆழ்ந்திருக்கலாம். வழிபாடுகள் பண்ணிட்டு இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். மதிய நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு இதெல்லாம் கவலையே இல்லை.அவங்க பந்துகள் இங்கே வந்து விழுந்ததும் எல்லாரும் கும்பலாய் வந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அழைப்பு மணியை அழுத்துவாங்க. நமக்கு முடிஞ்சால் உடனே கதவைத் திறந்து எடுத்துக்கச் சொல்லலாம். முடியலைனா என்ன செய்யறது?? ஒரு நாள் நாங்க சாப்பிட உட்கார்ந்தோம், பந்துகள் விழ ஆரம்பிக்க இரண்டு முறை சாப்பாட்டு நடுவில் எழுந்து போய்க் கதவைத் திறந்து எடுத்துக்கொடுத்தோம். ஆனால் இதே தொடர்கதையாகவே ஒருநாள் கடுமையாகக் கண்டிச்சோம். அப்புறம் என்ன நடந்ததுனு நினைக்கறீங்க?திரு அண்ணா கண்ணன் எங்க வீட்டின் நிலத்து மதிப்புக் கூடி இருக்குமே எனக் கேட்டிருக்கிறார். இருக்கலாம். அது குறித்த நிலவரம் தெரியவில்லை. ஆனால் கும்பகோணம் போயிருந்தப்போப் பார்த்தேன். பலரும் வீடுகளை இடித்துவிட்டு அங்கேயும் துளிக்கூட இடம் விடாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆரம்பிச்சிருப்பதையும் எண்ணூறு சதுர அடி குடியிருப்பு முப்பது லக்ஷம் எனவும் சொல்கின்றனர். 2,400 சதுர அடிக்கான நிலம் கும்பகோணத்தில் 24 லக்ஷத்தில் இருந்து முப்பது லக்ஷம் வரை ஆகின்றது. இந்த விஷயத்தை அப்புறமாப்பார்க்கலாம். இப்போதைக்குத் தொல்லைகள் தொடர்கின்றன. நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போவது, சாதகமா, பாதகமா என்பது குறித்துப் பலரின் கருத்துக்களையும் அறிய ஆவல்.

Thursday, July 14, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 2

இங்கே எங்க வீட்டுக்கு இருபக்கத்திலும் இருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்களுக்கும் எங்க வீட்டுக் காம்பவுண்ட் சுற்றுச் சுவருக்கும் இரண்டடி கூடக் கிடையாது. அதிலும் இப்போது புதிதாய்க் கட்டுபவர்கள் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியானது நேரே எங்க வீட்டுக்காம்பவுண்ட் சுவற்றிற்கு மேலே வருகிறது. அவங்க போடும் குப்பை எல்லாம் நேரே எங்க வீட்டுக்குள் வந்து விழும், அதோடு மழை நீர் கழிவு நீர், வீடு கழுவும் நீர் எல்லாமே எங்க வீட்டுக்குள் வந்து விழும். அந்தப் பக்கம் நடமாடுவது என்றால் நாங்க யோசிக்க வேண்டி இருக்கும். யாரையாவது குடித்தனம் வைத்தால் அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும். தினம் தினம் சொல்லிட்டு இருக்க முடியுமா? உங்க தண்ணீர், குப்பை எல்லாம் எங்க பக்கம் வருது என்று? சொன்னாலும் கோவிச்சுப்பாங்க. கீழே இறங்கி வந்து குப்பையைக் கொடுப்பவர்கள் ரொம்பக் குறைச்சல். அதிலும் நம்ம ஊரிலே பக்கத்து வீட்டு வாசலில் குப்பையைக் கொட்டுபவர்களைத்தான் இன்று வரை பார்த்து வருகிறேன். அதோடு இந்தக் கட்டடம் கட்டும்போதும், பொறுப்பு எடுத்துக்கொண்டு கட்டும் கட்டிடக் காண்ட்ராக்டர்கள் சாமான்களை எல்லாம் அடுத்த வீட்டு வாசலில் அவங்களை ஒரு மரியாதைக்குக் கூடக் கேட்காமல் போட்டு விடுகின்றனர்.மணல் ஒரு லாரி திடீரென நம் வீட்டு வாசலில் ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் ஒரு லாரி ஜல்லிக்கற்களும் வந்துடும். போதாததுக்கு சிமெண்ட் கலவை போடும் மெஷினை நம்ம வீட்டுக்கு எதிரே வாசலில் வைப்பாங்க. இங்கே தான் எங்களுக்குக் கலவைபோட செளகரியம், மணலும், ஜல்லியும் இங்கே தானே இருக்கு என்பது அவங்க கட்சி. அதோட தண்ணீர் நிரப்பும் பெரிய ட்ரம்மையும் சரியாக நம் வீட்டுக் கதவுக்கு முன்னே வைச்சு தண்ணீரையும் நிரப்பிடுவாங்க. வீட்டிலிருந்து வெளியே வர முடியாது. அவங்க இதை எல்லாம் செய்யும் முன்னர் வீட்டுக்கு வெளியே சென்றிருந்தோமானால் வீட்டுக்கு உள்ளே வர முடியாது. அவங்களைக் கெஞ்சணும். வேலை செய்யும் ஆட்களின் அட்டூழியம் அதுக்கும் மேலே. சாப்பாடு இங்கே தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. சரி, போகட்டும் நிழலுக்கு வராங்கனு விட்டால், சாப்பிட்ட மிச்சம் எல்லாம் வீட்டு வாசலிலேயே கிடக்கும். டீ குடிச்சுட்டு டிஸ்போஸபில் கப்புகளைத் தூக்கி எறிய மாட்டாங்க. அல்லது குப்பைகளோடு சேர்த்தும் வைக்க மாட்டாங்க. அதெல்லாமும் வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்கும் இடத்தில் உருண்டுகொண்டு இருக்கும். இதை எல்லாம் எடுத்துச் சுத்தம் செய்யக் கூடாதா எனக் கேட்டால் நாங்க இந்தப் பக்கம் வரவே இல்லை, நாங்க போடவே இல்லைனு சத்தியம் செய்துடுவாங்க. பக்கத்து பில்டிங் கட்டறவங்க போட்டிருப்பாங்கனு சொல்லிடுவாங்க. பக்கத்து பில்டிங் கட்டறவங்களாலேயும் தொந்திரவு தான் என்றாலும் இங்கே எதிரே இருக்கிறவங்களை விடக் கொஞ்சம் கம்மினு சொல்லிக்கலாம். டீ கப்பெல்லாம் போட்டதில்லை. சாப்பாடு இங்கே வந்து சாப்பிடறதில்லை. அப்படிக் குப்பையாய் இருந்தாலும் பெருக்கிக் கொடுத்தாங்க. இப்போ இவங்க எதிரே கட்ட வந்ததுக்கப்புறம் இவங்க வராங்கனு அந்தக் கட்டிடத்து ஆட்கள் இங்கே வரதில்லை. எதிரே கட்டறவங்க தான் வராங்க. கேட்டால் ஒருத்தரும் உண்மையை ஒத்துக்கறதில்லை. எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் நான் எடுக்க மாட்டேனு சொல்லிடறதாலே நாங்க தான் தினம் சுத்தம் செய்யறோம். என் கண்ணிலே பட்டால் நானும், அவர் கண்ணிலே பட்டால் அவரும் சுத்தம் செய்யறார். அப்போவும் அவங்க பார்த்துட்டுத் தங்களுக்குள்ளே சிரிச்சுப்பாங்க. ஆனால் வந்து செய்து தரமாட்டாங்க.

இவ்வளவு விபரமாக விளக்குவதன் காரணமே இது போல் வெளிநாடுகளில் மேல் நாடுகளில் செய்ய முடியாது என்பதைச் சொல்லவே. அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போருக்கு எனத் தனிச் சட்டமும், தனி வீடுகளில் இருப்போருக்கு எனத் தனிச் சட்டமும் இருக்கின்றது. பிறருக்குத் தொந்திரவு தரக் கூடாது என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே எங்க பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ, அல்லது கச்சேரிகளையோ அங்கே இருப்பவங்க கேட்டால், தெருவுக்கே வேறு தனி நிகழ்ச்சி தேவை இல்லை. அவ்வளவு சத்தமாக வைப்பார்கள். நாம் சொன்னாலும் தப்பாய்ப் போயிடும். சொல்லவும் முடியாது. அதோடு கைபேசியில் அவங்க பேசறது இங்கே கேட்கும். ஒரு சிலர் கைபேசியில் பாட்டும் கேட்கும் வசதி இருப்பதால் கழுத்தில் அதைத் தொங்க விட்டுக்கொண்டு பாட்டும் கேட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். அப்போவும் சத்தம் தாங்காது. மேல் நாடுகளில் என்றால் காரின் ஹாரன் கூட அடிக்க முடியாது. அப்படி யாரானும் ஹாரனை அடித்தால் அவங்களைக் கேவலமாய்ப் பார்ப்பார்கள். சாலைகளில் அத்தனை வண்டிகள் போகும். ஆனால் ஒரு காரின், அல்லது லாரிகளின் ஹாரன் ஒலியே கேட்காது.


அதோடு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மரங்கள் கட்டாயமாய் வளர்க்கப் படவேண்டும் என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே ஒரு கிரவுண்டில் ஒரு குடும்பம் குறைந்த பக்ஷமாக நான்கு அல்லது ஐந்து, ஆறு பேர் இருந்த காலிமனையில் கிட்டத்தட்ட எட்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் குறைந்தது ஒரு வீட்டுக்கு நான்கு என்ற கணக்கில் முப்பது பேருக்கும் மேலாக வருகின்றனர். அப்போ சுற்றி இடம் எங்கே விட முடியும். இரு பக்கமும் இருக்கும் அடுத்த வீடுகளில் இடம் கொடுத்தால் அதையும் சேர்த்துக் கட்டுவாங்க போல. அப்படி கொஞ்சம் கூட இடம் விடாமல் கட்டிடறாங்க. இதை எப்படி அரசு அநுமதிக்கிறது என்பது புரியவில்லை. இதற்கென விதிமுறைகளை அரசு எப்படி வகுத்திருக்கிறது என்பதைப் புரிய வைக்கவேண்டும். முக்கியமாய் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சிபோன்ற உள்ளாட்சித் துறைகள் இவற்றை அநுமதிக்கும் முன்னர் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறாத நகராட்சிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பை முழுதும் தடை செய்யாவிட்டாலும் ஒரு கிரவுண்டு காலிமனையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டக்கூடாது எனத் தடை செய்யலாம். தனி வீடாக இரண்டு கட்ட மட்டும் அநுமதிக்கலாம். மூன்று கிரவுண்டு காலி மனையில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிக்கவேண்டும். அதுவும் சுற்றிலும் மரங்கள், செடிகள் வளர்க்க இடம் விட்டுப் பின் பக்கம் இரண்டு தென்னை மரமாவது வைத்துவிட்டு, முன்பக்கம் நிழல் தரும் வேப்பமரம், அசோகாமரம் வேறு ஏதேனும் மரங்களை வைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு பாதிப்பு என ஒருபக்கம் அலறிக்கொண்டே இன்னொரு பக்கம் இருக்கும் வீடுகளில் உள்ள மரங்களை எல்லாம் உயிரோடு வெட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறோம். இது குறித்து.........

Tuesday, July 12, 2011

அடுக்குமாடிக்குடியிருப்புகளும், அடக்கமுடியாத் தொல்லைகளும்!

நாங்க அம்பத்தூருக்கு வந்த புதுசுலே வீடுகள் அனைத்துமே தனித்தனியாகவே இருந்தன. அந்த தனிவீடுகளிலேயே பகுதியாகப் பிரிக்கப் பட்டு வாடகைக்கு விடப் பட்டது. அல்லது ஒரே காம்பவுண்டுக்குள்ளேயே சின்னச் சின்ன வீடுகள் கட்டப் பட்டு மூன்று வீடுகளுக்கு ஒரு குளியலறை, கழிவறை என்று ஏற்படுத்தப் பட்டு வசித்தனர். கூட்டம் அதிகம் இல்லை. நகரில் இருந்து தூரம் என்பதோடு நகருக்குச் செல்லவும் பேருந்து வசதிகளும் அதிகம் இல்லை. ஆனாலும் ரயிலில் அரை மணி நேரத்திலே சென்னை சென்ட்ரல் போக முடிந்திருக்கிறது. தண்ணீர் சுவையாக இருக்கும். மதுரை போன்ற நகரத்தில் இருந்துட்டு வந்த எனக்கு முதலில் சிரமமாய் இருந்தாலும், அப்புறம் பழகி விட்டது. பக்கத்துப் போர்ஷன் காரங்களோட பேசணும்னாலும் வீட்டைப் பூட்டிக்கொண்டே போகணும். ஒவ்வொருவருக்கும் தனி வாசல், எதிரே ஏக்கர் கணக்கில் பெரிய திறந்த வெளி, மரங்கள், மரங்கள், மரங்கள்.அப்போல்லாம் டேபிள் ஃபேன் தான். சீலிங் ஃபேன் வைச்சுக்கலை. அடிக்கடி மாற்றலாகும் என்பதால் சீலிங் பேன் போடுவதும் கழட்டுவதும் ஒவ்வொரு முறையும் ஆள் தேடணும்னு டேபிள் பேன் தான். அதுவே டிசம்பரில் இருந்து தேவையும் படாது! நாங்க இருந்த வீட்டில் இருந்து வைஷ்ணவி கோயிலுக்கும், திருமுல்லைவாயில் கோயிலுக்கும் நடந்தே போவோம். எந்தப் பயமும் இருக்காது. அப்புறமும் நாங்க பெண்களாய்ச் சேர்ந்து நடந்தோ அல்லது பேருந்திலோ போயிருக்கோம்.இப்போ அந்த அம்பத்தூரானு இருக்கு. நகரமயமாக்குதல் என்ற பெயரிலே எல்லா இடங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வருகின்றன. கார்த்திக் ஒரு பதிவில் சென்னையில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தி இருக்கலாமே என்றார். என்ன அடிப்படை வசதி இருக்கு சென்னையிலே?? அவர் சொல்றார் அம்பத்தூரிலே வேணா இல்லை, மற்ற இடங்களிலே இருக்குனு சொல்றார். எனக்குத் தெரிஞ்சு அரை மணி நேரம் மழை பெய்தால் கோயம்பேடு நூறடிச் சாலை நிரம்பி வழிகிறது. தண்ணீர் போக வழியில்லை. சென்னையின் பிரதான சாலைகள் எல்லாத்துக்கும் இந்தக் கதிதான். அம்பத்தூருக்குக் கேட்கணுமா??மற்ற மாநிலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்னால் அடிப்படை வசதிகளை அவங்க நிறைவேற்றி இருக்கணும். அப்புறம் தான் கட்டிடம் அஸ்திவாரமே போடமுடியும். ஆனால் இங்கே?? கழிப்பறைக் கழிவு நீர் செப்டிக் டாங்குகளில் நிரம்பிக் கொள்ளும்படியான ஏற்பாடுதான் இன்னும் உள்ளது. பாதாளச் சாக்கடை என்பதே இல்லை. திட்டம் ஆரம்பிக்கப் போகிறோம்னு சொல்லி குடியிருப்போரிடம் ஒன்பதாயிரம் வசூல் செய்ய ஆரம்பித்தது அம்பத்தூர் நகராட்சி. ஆனால் அதை எதிர்த்ததால் கொஞ்சம் கீழே இறங்கி ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்டி வருஷம் பத்துக்கும் மேல் ஆகிறது. இன்று வரை பாதாளச் சாக்கடைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை. இந்த அழகில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு அவங்க பாட்டுக்கு அனுமதி கொடுத்துட்டே போறாங்க. ஏனென்றால் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் எத்தனை குடியிருப்புகள் வருகின்றன என்பதைக் கணக்கிட்டு அவங்களுக்கு என பெட்டர்மெண்ட் டாக்ஸ் வசூலிக்கிறாங்க இல்லையா? குடியிருப்பு அதிகம் ஆக, ஆக நகராட்சிக்கு வருமானம் அதிகம். செலவும் செய்யவேண்டாமே! போய்க் கேட்டால் இதோ போடுவோம்னு சொல்லிட்டாப் போச்சு.அடுத்துக் குடிநீர். சென்னை முழுதுக்குமே இங்கிருந்து புழல் தண்ணீர் தான் குடிக்கப் போகிறது. ஆனால் அம்பத்தூர் மக்களுக்கு ஒரு சில இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் நகராட்சியால் வழங்கப் படுகிறது. அதுவும் எல்லா இடங்களிலும் இல்லை. இத்தனைக்கும் அம்பத்தூரைச் சுற்றிலும் ஒரு காலத்தில் ஏரிகள் நிறைய இருந்தன. இப்போது தான் கொஞ்சம் விழித்துக்கொண்டு தாங்கல் ஏரியையும் முகப்பேர் ஏரியையும் தூர் வாரிச் சுத்தம் செய்திருக்கின்றனர். இங்கே எங்க வீட்டுக்கு அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவே இல்லை. ஏரி கடும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதோடு, சில இடங்களில் பார்த்தீனியமும் வளர்ந்து நீரை உறிஞ்சுகிறது. இதை எல்லாம் ஒழுங்கு செய்தாலே குடிநீருக்குக் கை ஏந்த வேண்டாம். முக்கியமாய் அடுக்கு மாடி கட்டும் முன்னர் காலி மனை குறைந்த பக்ஷமாக மூன்று கிரவுண்டு இருக்கவேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். கர்நாடகாவில் பங்களூருவில் ஐந்து கிரவுண்ட் காலி மனை என்றால் தான் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதி கிடைக்கும். மூன்று கிரவுண்ட் என்றால் தனியாக ஓரிரு வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அதோடு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டவென சில விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுகிறார்கள்.


குடியிருப்பைச் சுற்றிலும் குறைந்த பக்ஷமாக நான்கடி இடமாவது இருக்கவேண்டும். மரங்கள் குடியிருப்பின் முன்னாலும், பின்னாலும் கட்டாயமாய் இருக்கவேண்டும். குடியிருப்புக் கட்ட அஸ்திவாரம் போடும்போதே கழிவு நீர் செல்லும் சாக்கடை வசதிகள், மற்றும் கழிப்பறை நீர் செல்லும் செப்டிக் டாங்கின் முறையான இணைப்புகள், விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவேண்டும். குடி நீர் வசதிக் குழாய்களையும் முதலிலேயே பதிக்க வேண்டும். இவை இத்தனையையும் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சி அநுமதியை முறைப்படி பெற்றுச் செய்து முடிக்க வேண்டும். இதைக் கட்டாயமாகக் கர்நாடகாவில் பின்பற்றுகின்றனர். குஜராத்திலும் பின்பற்றுகின்றனர். குஜராத் பற்றித் தனியாகச் சொல்கிறேன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஒரு கிரவுண்டில் ஒருத்தர் வீடு கட்டிக் குடி இருந்தால் கூட அவர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தன்னோட மனையைக் கொடுத்துவிட்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும், கையில் லட்சங்களில் ரொக்கமும் பெற முடிகிறது. இந்த மாதிரி ஒரு கிரவுண்டில் எல்லாம் மற்ற மாநிலங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிப்பதில்லை.


தொல்லைகள் தொடரும், ஏற்கெனவே படிச்சவங்க தயவு செய்து பொறுத்துக்கணும். இங்கே இதன் எதிர் விளைவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. :D

Monday, July 11, 2011

வீட்டைக் கண்டு பிடிச்சால் பரிசு! :P

வீடு எங்கே போச்சு?? காணோமே!


வீட்டைக் காணோம்; சில தினங்கள் முன்பு எங்க வீட்டின் எதிரே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர் வீட்டின் இருபக்கமும் கொட்டி இருந்த கட்டுமானப்பொருட்கள். இவற்றுக்கு இடையே வீடே மறைந்துவிட்டது. வீட்டின் வாயிலில் கோலம் போடவே மணலை மிகுந்த சிரமத்துடன் அகற்ற வேண்டியதாகிவிட்டது. இத்தனைக்கும் முதல்நாளே அந்தக் கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். 
Posted by Picasaஉடனே நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்னார். எடுத்துவிட்டார், வீட்டை விட்டு அவசரத்துக்குக் கூட வெளியே வரமுடியாதபடி. :))))))) 
Posted by Picasa
அப்பாடா, ஒரு வழியாக முறத்தினால் மணலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!!  
Posted by Picasa

Saturday, July 09, 2011

அப்பாடா! "ஜில்"லைவிடச் சீக்கிரமா முடிச்சுட்டேனே! :P

அன்றிரவு முழுதும் யோசனையில் இருந்துட்டுக் காலை எழுந்ததும், எழுந்திருக்காததுமா, என் கணவர் காப்பி குடித்துவிட்டு உடனே அந்த வீட்டிற்குப்போய்ப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். சாதாரணமாகவே பேச்சுக் கொடுத்தால் எல்லாத்தையும் வெளிப்படையாகக் கொட்டிவிடும் சுபாவம் கொண்ட நான் அன்னிக்கு மாடியில் வீட்டுக்காரங்க போர்ஷன் பக்கம் இருந்த ராட்டினத்தில் தண்ணீர் இழுக்கையில் ரொம்பக் கஷ்டப் பட்டேன். அதைப் பார்த்த வீட்டுக்கார அம்மா, "வேலைக்கு உதவிக்கு யாரையானும் வைச்சுக்கோ; தண்ணீர் அவங்க சேந்திக் (எங்க ஊரிலே சேந்தி என்றால் பரண் :P) கொடுத்தால் நீ எடுத்து விட்டுக்கோ." என்று யோசனை சொல்லவே, நான் வெள்ளந்தியாக(ஹிஹி பத்திரிகைகள்; சினிமா தயவு :P)(வெகுளியாக) "எதுக்குங்க , அதெல்லாம்? இன்னும் ஒரு வாரமோ; பத்து நாளோ; நாங்க அம்பத்தூர் போறோம்" னு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாதிரியாப் பார்த்திருக்காங்க. முட்டாள்: மண்டு: அசடு: அது கூடத் தெரியாமல் உள்ளே வந்துட்டேன். அந்த அம்மா கறுவிக்கொண்டு இருந்திருக்காங்க.

கணவர் வருகையில் ஒன்பது மணி ஆயிடுச்சு. நான் அதுக்குள்ளே குளிச்சுட்டுச் சமைச்சு வைச்சிருந்தேன். (நல்லாச் சமைப்பேனாக்கும்.:D) வந்ததும், அவரும் குளிச்சுச் சாப்பிட்டுட்டு, (உடனே விஷயத்தைச் சொல்லற வழக்கம் கிடையாது; இப்போவும், :D அப்போ புதுசா, நானா எதுவும் கேட்டுக்கலை; இப்போ துளைச்சு எடுத்துடுவேன் சொல்ற வரைக்கும்.:)))))))))) மெதுவா, "அங்கேயே வாத்தியாரைப் பார்த்து நாள் பார்த்துட்டேன். இன்னிக்கே நாள் நல்லா இருக்காம்; சாயந்திரமா மூணு மணிக்குக் கிளம்பிப் போய்ப் பால் காய்ச்சிடலாம்; 2-50க்கு ரயில் இருக்கு. அதில் போனால் மூணு மணிக்குப் போயிடலாம். ஸ்டேஷன்லே இருந்து வீடு கிட்டக்க. என் நண்பன் வீட்டிலே பால் வாங்கி வைப்பாங்க. அவன் அதை எடுத்துட்டு நேரே வீட்டுக்கு வந்துடுவான். பால் காய்ச்சிச் சாப்பிட்டுட்டு, நாளைக்கு உடனே சாமானை எடுத்துடலாம். நான் நாளைக்கு லீவ் போட்டுக்கறேன். நண்பன் கிட்டேயே சொல்லி அனுப்பிடுவேன்." என்றார்.

வீட்டுக்கார அம்மாவுக்கு இதை ஒரு செய்தி என்ற அளவிலேயே நான் சொல்லி இருந்ததால் அவங்க கிட்டே சொல்லிட்டேன் என்பதை என் கணவர் கிட்டே சொல்லத் தோணலை. அந்த அம்மாவும் ஒண்ணும் கேட்டுக்கலை. இதிலே ஒரு ஜோக் என்னன்னா அந்த அம்மாட்டே பேசறச்சே அவங்களோட குழந்தைங்க யாருமே அங்கே இல்லாததால், குழந்தைங்க இல்லையானு கேட்டேன். அவங்க, "மூணு பசங்க இருக்காங்க"னு சொல்லி இருந்தாங்க. நான் புரிஞ்சுண்டது மூணும் ஆண் பிள்ளைகள்னு. ஆனால் அவங்களுக்கு மூணும் பெண் குழந்தைகள். அந்தப் பொண்ணுங்க எல்லாம் அவங்க சொந்தக்காரங்க வீட்டிற்கு லீவுக்குப் போனவங்க அன்னிக்கு வரவும், அவங்களைக் காட்டி அந்த அம்மா, இவங்க தான் என்னோட பசங்க னு சொல்லவும் என் வழக்கம் போல் சிரிப்பு வந்தது. நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

சிரிப்பாய்ச் சிரிக்கப் போற விஷயம் யாருக்குத் தெரியும்? அன்னிக்கு மத்தியானம் போய்ப் பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, நண்பரோட அம்மா, அப்பா வயசானவங்க வந்திருந்தாங்க. அவங்களை வைச்சுச் சம்பிரதாயப்படி பால் காய்ச்சி, ஸ்வாமி படத்தை வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து, எல்லாருக்கும் கொடுத்துட்டு, கொஞ்சம் அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் போன்றவைகளையும் வைத்து நிவேதனம் செய்து அவற்றையும் ஸ்வாமி படங்கள், விளக்கு போன்றவைகளையும் அங்கேயே வைச்சுட்டுத் திரும்ப வில்லிவாக்கம் வந்தோம். மறுநாள் வீடு மாத்தணும். காலம்பர சீக்கிரம் எழுந்து குளிச்சுச் சமைச்சாச்சுன்னா கிளம்பறதுக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சுக்கலாம். அப்புறம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்னு நினைச்சுச் சமைக்க ஆரம்பிக்கையில் என் சித்தி பையர்கள் இருவர் என்னைப் பார்க்கத் தேடிப் பிடிச்சுக்கொண்டு வந்தார்கள். நல்லதாப் போச்சு, வீடு மாத்த உதவிக்கும் ஆள் கிடைச்சதுனு நினைச்சு அவங்களையும் வரவேற்று சமைச்சுப் போட்டு, சாமான்களை(நல்லவேளையா முழுதும் பிரிக்கலை) எடுத்துக் கட்ட ஆரம்பித்தோம். அதுக்குள்ளே என் கணவர் ஒரு வான் பார்த்துக்கொண்டு வந்தார். அந்த வானில் சாமான்களைப் போட்டுவிட்டு, முன்னாலேயே நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டு போயிடலாம்னு பேசி இருந்தார். அவங்களும் ஒத்துக்கொண்டு வந்தாங்க.

சாமானை இறக்க ஆரம்பிச்சோமோ இல்லையோ வீட்டுக்காரரும், அவர் மனைவியும் வந்து தடுத்தாங்க. காலி பண்ண விடமாட்டோம்னு ஒரே சத்தம், சண்டை. எனக்குப் பயமாப் போச்சு. ஆனால் என் தம்பிங்க எதையும் கண்டுக்காம அவங்களை நகர்த்திவிட்டு சாமான்களை எடுத்துச் செல்ல ஆரம்பிக்க ஒரே களேபரம். ஒரு மாசம் முன்னால் சொல்லணுமாம். இல்லாட்டி அட்வான்ஸ் திருப்பித் தர மாட்டாங்களாம். நல்லவேளையா ஒரு மாசம் தான் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். மூணு மாதம் அட்வான்ஸுக்கு மிச்சம் அப்புறமாத் தரேன்னு சொல்லி இருந்திருக்கார். அது கொடுக்கிறதுக்குள்ளே இவ்வளவும் கண் மூடித் திறக்கிறாப்போல் என்பார்களே அப்படி நடந்துடுச்சு. அதனால் நாங்க இருந்த நாட்கள் போக மிச்சம் பணம் இருந்ததைக் குறித்துக் கவலைப்படாமல் போனால் போகட்டும்னு சொல்லிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தோம். ஓரிரு குடித்தனக்காரர்களும் எங்க பக்கம் பேசினாங்க. தண்ணீரே இல்லாமல் எல்லாத்துக்கும் கீழே வந்து இறங்க வேண்டி இருக்கு; இதுக்கு நூறு ரூபாய் வாடகை கொடுக்க முடியுமா என அவங்களும் கேட்டனர். அம்பத்தூர் வீட்டுக்கு அப்போ அறுபது ரூபாய் வாடகை. கிட்டத்தட்ட அறுநூறு சதுர அடிக்கும் மேலே இருக்கும். அப்போ அந்தக் கணக்கெல்லாம் தெரியாது என்றாலும் வீடு நல்ல பெரிய வீடு, சகல வசதிகளோடும். அந்த வீட்டில் நாங்கள் குடித்தனம் இருந்த போது அடுக்கடுக்காக வந்த அனைத்து விருந்தாளிகளையும் தாங்கியது. நேற்றுத்தான் அம்பத்தூர் வந்தாப்போல் இருக்கிற எங்கள் குடித்தனம் இப்படியாக அம்பத்தூரில் ஆரம்பித்து --------- (D)வருடங்களைக் கடந்துவிட்டது. அப்போ அம்பத்தூர் வந்தது அதிலிருந்து திரும்பத் திரும்ப இங்கே வரதும், வெளிமாநிலங்கள் போறதுமாக இருந்த வாழ்க்கையில் சில வருடங்கள் முன்னால் என் கணவர் பணி ஓய்வு பெற்றதிலிருந்து அம்பத்தூரே நிரந்தரம் என ஆகிவிட்டது.

Wednesday, July 06, 2011

மாதங்கி மெளலிக்காகச் சில எண்ணங்கள்.

ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு காவியங்களும் நம் மனதைக் கவர்ந்தாற்போல் மற்றக் காவியங்கள் கவர்ந்தனவா என்றால் இல்லை எனலாம். அதிலும் சீதையின் அக்னிப்ரவேசமும், அவளை நாடு கடத்தியதும் இன்றளவும் பெண்ணுரிமைவாதிகளால் ஆழமாகவும், அழுத்தமாகவும் விவாதிக்கப் பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தன்னலமே மிகுந்த இந்நாட்களில் தலைவன் எப்படித் தன்னலவாதியாக இருக்கிறானோ அவ்வாறே தொண்டர்களும் தன்னலம் மிகுந்தே காணப்படுகின்றனர். ஆகையால் இன்றைய காலகட்டத்தில் வேண்டுமானால் அதைத் தவறு எனக் கூற முடியும். ஆனால் ராமாயண காலத்தில் நல்லாட்சியும், மக்கள் அரசனிடம் குறை காணாத தன்மையுமே முக்கிய்மாக இருந்து வந்தது. அரசன் நல்லாட்சி புரியவில்லை எனில் நாட்டுக்குக் கேடு. இன்றோ நாட்டை விடச் சொந்த நலன்களே முக்கியம். ஆகையால் ராமனும், சீதையும், பாண்டவர்களும், திரெளபதியும் கேள்விக்கு உரியவர் ஆகின்றனர். மாதங்கி மெளலி தன்னுடைய ஒரு பதிவிலும், எல்கேயின் பதிவிலும், சீதையின் அக்னிப்ரவேசம் குறித்தும், திரெளபதி குறித்தும் அவருடைய சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்.

மாதங்கியின் பதிவு இந்த்ரப்ரஸ்தம்

எல்கேயின் பதிவு பெண்ணுரிமைவாதிகளே ஒரு நிமிஷம்

மறுபடியும் சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த சந்தேகம்! :)))))

ராமரை சீதையின் கணவராகவே பார்ப்பதால் எழும் பிரச்னை இது. இந்தக் கால கட்டத்திற்கு சுயநலம், தன்னலம் மட்டுமே இருந்தால் தான் சரியா இருக்கு. அதை வைத்துப் பார்க்கிறோம். ஆனால் அரசர்களுக்கு எனத் தனியாகக் கடமைகள், தர்மம் உண்டு. அந்த தர்மத்தின்படி, தன் குடிமக்களுக்கு அரசன் ஒரு முன்னுதாரணமாகவே திகழ வேண்டும். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாய் இருக்க வேண்டும்.

நம் அரசனே இப்படி இன்னொருத்தர் வீட்டில் தங்கிய பெண்ணை அவள் மீதுள்ள ஆசையால் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டான் என்றால், நம் மனைவிமார்களும் தவறு செய்தால் நாமும் ஏற்கவேண்டி இருக்குமே எனக் குடிமக்கள் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் வந்து சொல்லவே, குடிமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், அவர்களுக்காக எதையும் , அவர்களின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான் நம் அரசன் என்பதைத் தெரிவிக்க வேண்டியும் எடுத்த முடிவு.

சட்டென்று ஒரு நிமிஷச் சிந்தனையிலோ, ஆவேசத்திலோ எடுக்கவில்லை. பின்னர் அவன் நிரூபிக்கச் சொன்னதின் காரணமும், பொதுவான மக்கள் சபையின் முன்னர் அனைவரும் தெரியும் வண்ணம் சீதையின் பரிசுத்தம் நிரூபிக்கப்படவேண்டும் என்ற ஆசையே ஆகும். மற்றபடி ராமன் சீதைச் சந்தேகப் பட்டான் என்று கொள்ள முடியாது.

சீதைக்கு ராமனின் மேல் வருத்தமும், கோபமும் ஒரு மனைவிக்கு உள்ள நியாயமான கோபம் இருக்கத் தான் செய்தது. அதே சமயம் அவனின் அரச கடமையையும் புரிந்து கொண்டதாலேயே காட்டில் வசித்தாள். பின்னரும் இவ்வளவெல்லாம் நிரூபித்துக் கொண்டு கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டுமா என்ற சுய அபிமானம்/சுய கெளரவம் காரணமாய் பூமித் தாயை வேண்டிக்கொண்டு மறைந்து போனாள்/

அடுத்து திரெளபதி குறித்த அலசல்.


மாதங்கி, திரெளபதி குறித்த உங்கள் ஆழ்ந்த வாசிப்பு அநுபவம் வியப்பாக இருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கிறது. நிச்சயமாக திரெளபதி ஐந்து பேரை மணந்ததால் அனைவரின் கவனத்துக்கும், இகழ்ச்சிக்கும், கேலிக்கும் ஆளானவள் தான். கர்ணன் ஒன்றும் அவளைக் குறித்துப் பெருமையாக நினைத்ததாக மஹா பாரதத்தில் எங்கேயுமே சொல்லப்படவில்லை. அதேபோல் கர்ணனை திரெளபதி மணந்து கொள்ள நினைத்ததாகவும், ஐந்து பேர் போதாமல் ஆறாவது ஒருவரின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் பாரதத்தில் எங்கேயும் கூறவில்லை. மேலே கூறப்பட்டவை மூலத்திலிருந்து மாறுபட்டவை.

நீங்கள் வாசித்த புத்தகம் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் கோணத்திலிருந்து பார்க்கப்பட்டு எழுதப் பட்டது தான். பலரும் பல விதங்களில் திரெளபதியின் கதாபாத்திரத்தை அலசி இருக்கிறார்கள். அது போல் இது திரெளபதியின் கோணத்தில் அலசப்பட்டது.

அதோடு ஒரு வருடத்திற்குப்பின்னர் மற்றொரு கணவனிடம் வாழ்க்கை நடத்துகையில் முந்தைய கணவனோடு இருந்த நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை; அதற்கு வியாசர் வரம் கொடுத்திருக்கக் கூடாதா? என்று திரெளபதி நினைப்பதாகவும் நீங்கள் படித்த கதையில் வருகிறது. அதற்கு விடை வியாசர் கொடுத்த வரத்திலேயே உள்ளது. அதிலேயே முழுமையாக எல்லாம் அடங்கி விடுகிறது.

திரெளபதியின் இந்த ஐந்து கணவர்களைத் திருமணம் செய்து கொள்வது என்பதற்கு நம் புராணங்களிலேயே காரணம் கூறப்பட்டுள்ளது. கணவனை தாசி வீட்டுக்குக் கூடையில் சுமந்து சென்றதாகக் கூறப்படும் சதி நளாயினி தன் கணவனான ரிஷியின் பல்வேறுவிதமான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவரோடு இல்வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். சிறிது கால இல்வாழ்க்கைக்குப் பின்னர் ரிஷியானவர் மீண்டும் தவ வாழ்க்கைக்குப் போக விரும்ப நளாயினிக்கோ இல்வாழ்க்கையில் நிறைவடையவில்லை என்ற எண்ணம். கணவரை வேண்ட, அவரோ இப்பிறவியில் இவ்வளவு தான் இல்வாழ்க்கை அநுபவம் எனவும், அடுத்த பிறவியில் தாமே ஐந்து தனிநபர்களாகப் பிறந்து வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகிறார்.

நளாயினி கொஞ்சம் கவலைப்பட்டுப் போய் தவம் இருக்க, கண்ணெதிரே தோன்றிய ஈசன்,"என்ன வேண்டும்?" என்று கேட்க, அவசரப்பட்ட நளாயினி, ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று வேண்ட, அவ்விதமே ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள் என வரம் கிடைக்கிறது. மீண்டும் கவலை அடைந்த நளாயினியிடம் அடுத்த பிறவியில் அவள் சக்தியின் அம்சமாய்ப் பிறப்பாள் எனவும், பஞ்ச பூதங்களையும் கணவனாக அடைவாள் எனவும், ஆறுதல் கூறுகிறார் ஈசன். இது தான் திரெளபதிக்கு ஐந்து கணவர்கள் கிடைத்த காரணம்.

இன்னொரு கோணத்தில் நம் உடலின் பஞ்சேந்திரியங்களையும் பாண்டவர்களாகவும், திரெளபதியை ஜீவாத்மாவாகவும் கூறுவதுண்டு. ஜீவாத்மாவுக்குள் பஞ்சபூதங்களும் அடக்கமாகிக் கடைசியில் பரமாத்மாவோடு ஐக்கியமாவதையே திரெளபதி ஐந்து கணவர்களை மணந்ததற்கு உதாரணமாகக் கூறுவார்கள். இது குறித்து கர்நாடகாவின் ஜி.வி. ஐயர் என்பவர் ஒரு திரைப்படமாக சம்ஸ்கிருதத்தில் எடுத்து ஆங்கில சப் டைட்டில்களோடு வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் கிடைத்தால் ஒரு முறை பார்க்கவும். உங்கள் சிந்தனைத் தெளிவுக்கு மிகவும் உதவும்.

ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்-//

பரிபூரணமாகச் சொந்தம் ஆவாள் என்னும்போது முந்தைய கணவனைக்குறித்த நினைவுகள் எவ்வாறு வரும்?? அப்புறம் வியாசர் கூறியதற்கு அர்த்தமே மாறிப் போகிறது அல்லவா??

ராஜராஜேஸ்வரி கூறுவது போல் திரெளபதி அம்மனும், மஹாபாரதத்தின் திரெளபதியும் ஒருவர் அல்ல என்று கேள்விப் படுகிறேன். மிகச் சமீபத்தில் தான் இது பற்றித் தெரிய வந்தது. இது குறித்துத் தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பகிர்வேன். நன்றி, வணக்கம்.

ஏற்கெனவே திரெளபதி குறித்து நான் எழுதிய சில பதிவுகளின் சுட்டி கீழே. அதிலே ஒரு பதிவில் திரெளபதி அம்மனும் மஹாபாரதத் திரெளபதியும் ஒருவரே என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்துத் தேடல்கள், ஆய்வுகளில் இருவரும் வேறு எனச் சொல்கின்றனர். இது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

திரெளபதி பதிவிரதையா

திரெளபதி பதிவிரதையா

Sunday, July 03, 2011

My Wish for You All

MY WISH FOR YOU...

-Where there is pain, I wish you peace and mercy.

-Where there is self-doubting, I wish you a renewed confidence in your ability to work through it.

-Where there is tiredness, or exhaustion, I wish you understanding, patience, and renewed strength.

-Where there is fear, I wish you love, and courage.

Friday, July 01, 2011

அம்பத்தூருக்கு மாறினோம்! கல்யாணமாம் கல்யாணம்!!

அந்த வீட்டில் கீழே குடி இருந்த ஒரு ஐயங்காரின் பையர் மின் வாரியத்தின் சேர்மனுக்கு உதவியாளர். இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது. ஆனால் என் அம்மா கீழே துணி துவைக்கப் போனப்போ இதைப் பற்றிஅவங்க கிட்டே பேச, அவங்க பையர் கிட்டே சொல்ல, பையரும் கன சிரத்தையாக அவரோட அலுவலகத்தில் இது பற்றி விசாரித்துவிட்டு மறுநாள் என்னைப் பார்த்து, “ஏம்மா, குழந்தை, உனக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருக்காமே? நீ போய்ச் சேர்மனை நேரிலே போய்ப் பார்த்துப் பேசு. நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே அவரோடு பேசறதுக்கு முடியும். போய்ப் பாரு” என்று சொன்னார். மறுநாள் நானும் என் கணவருமாகக் காலம்பரேயே கிளம்பி சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் மின்வாரியத் தலைமை அலுவலகம் போனோம். அங்கே மதியம் தான் நேர் காணல். அதற்கு எதிரே இருந்த என் பெரியப்பா வேலை செய்ய ஸ்டேட் பாங்க் கிளைக்குப் போனோம். சற்று நேரம் அங்கே இருந்துவிட்டு அருகிலிருந்த என் கணவரோட பெரியப்பா மாப்பிள்ளை வேலை செய்த எல் ஐசி கட்டடம் சென்றோம். அப்போதெல்லாம் சென்னையில் அதுதான் உயரமான கட்டடம். சென்னையை அடையாளம் காட்ட எல்லா சினிமாக்களிலும் தவறாமல் இடம் பெறும். கடைசி மாடி வரை போய்ப் பார்த்துவிட்டுப்பின்னர் கீழே இறங்கி மின்வாரிய அலுவலகம் சென்றோம்.

நிறையப் பேர் மாற்றலுக்கு விண்ணப்பித்தும், வேறு காரணங்களை ஒட்டியும் வந்திருக்க என் முறை வர நான்கு மணி ஆகிவிட்டது. என்னோட பேசின சேர்மன்,”என்னம்மா புரியாத பொண்ணா இருக்கியே? வேலை கிடைக்கறதே கஷ்டம்; அதிலும் நீ முதல்முறையிலேயே தேர்வாகி இருக்கே. கிடைச்ச இடத்திலே போய்ச் சேர்ந்துடு. அப்புறமா மனுப்போடு; பார்க்கலாம், சின்ன வயசுதானே; கொஞ்ச நாட்கள் இங்கேயும், அங்கேயுமா இருக்கலாம்.” என்று சொல்லிவிட்டார். என் கணவரோட உத்தியோகமும், அதற்குப் பரமக்குடி என்ன?? மதுரையிலேயே அலுவலகம் கிடையாதுனும் அவருக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே அவர் அதனால் என்ன? ஆறு மாசம் கழிச்சு இங்கே வந்துக்கலாம்; அப்படினு சொல்லிட்டார். என்னனு தெரியாம வெளியே வந்தோம். பலவிதமான எண்ண ஓட்டங்கள். இரண்டு பேரும் பேசிக்காமலேயே பிரயாணம் செய்தோம். அதுக்குள்ளே இங்கே காலம்பர போனவங்களைக் காணோமேனு என் மாமியார் கிட்டத்தட்ட போலீஸுக்குச் சொல்லாத குறை! அவங்களுக்குச் சென்னை நகரமே புதுசு! அதிலே பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்று வருவது பற்றி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கிராமங்களிலே இருந்து அதிக பக்ஷமாய்க் கும்பகோணம் தான் நகரம். இதெல்லாம் அவர்களை கொஞ்சம் கலவரப் படுத்தி இருக்கிறது. என் அம்மாவும், மத்தவங்களும் சொல்லியும் கேட்காமல் சாமிக்கு எல்லாம் வேண்டிக்கொண்டு, இரும்புக் கரண்டியைத் தண்ணீரில் போட்டு(ஏதேனும் பொருட்கள் தொலைந்தாலோ, அல்லது வீட்டுக்கு வெளியே போனவங்க வர நேரம் ஆனாலோ இரும்பைத் தண்ணீரில் போட்டால் வந்துவிடுவார்கள் என்பதை இன்று வரை ஒரு நம்பிக்கையாகக் கடைப்பிடித்து வராங்க; குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த மனிதர்களோ பொருளோ கிடைத்தும் விடும்) என்று அவர்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாங்க.

நாங்க போனோமோ இல்லையோ புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதெல்லாம் தொலைபேசி என்பது எல்லார் வீடுகளிலும் இருக்காது. தெருவுக்கு ஒன்று என்று கூடக் கிடையாது. ரொம்ப அதிசயமா யாரேனும் வைத்திருப்பாங்க. அதுக்கே அலையணும். பொதுத் தொலைபேசியும் அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தான் இருக்கும். ஆகவே செய்திகளைச் சொல்ல முடியாது. அவங்களைச் சமாதானம் செய்தோம். விஷயத்தைச் சொன்னோம். அதற்குள்ளாக என் அம்மாவை மதுரைக்கு வரச் சொல்லி அப்பா கடிதம் வந்திருந்தது. தம்பிக்குக் காலேஜ் திறந்துவிட்டது; அப்பாவுக்கும் ஸ்கூல் திறந்துவிட்டது. அம்மா மதுரை போக மறு நாளைக்கு டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பதாக மதியமே நாங்க பெரியப்பா ஆபீஸ் போயிருந்தப்போ அவர் சொல்லி இருந்தார். ஆகவே மறுநாள் அம்மா கிளம்பிப் போக ஒரு வாரத்தில் என் மாமியாரும், மைத்துனனும் மதுரையில் குடி இருந்த நாத்தனாரோடு அங்கே போயிட்டு அங்கிருந்த வாறே கிராமம் செல்ல இங்கே நாங்க ரெண்டு பேரும் மட்டுமே தனிக்குடித்தனம்.

தண்ணீர் பிரச்னை வேறு. மேலே இருந்து தண்ணீர் இழுக்க முடியவில்லை. கீழே தண்ணீர் ஊறும்போது எடுத்துக்கொண்டு மாடிக்கு வரணும். ஆனால் அதற்குள்ளாக கீழே இருப்பவங்க எடுத்துடுவாங்க. அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரங்க பழக்கத்தில் சில நாட்கள் அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருவேன். ஆனால் இது தொடர்கதையாகும் போல் இருக்க, என் கணவர் வேறே வீடு பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டார். ஒரு சனிக்கிழமை அன்று மதியம் அவருக்கு அரை நாள் லீவு என்பதால் என்னை வில்லிவாக்கத்தில் ஏறி அம்பத்தூர் வரச் சொன்னார். அங்கே ஸ்டேஷனில் அவர் காத்திருப்பதாயும் இருவருமாய் அம்பத்தூரில் வீடு பார்ப்பதுமாயும் ஏற்பாடு. அவ்வாறே மதிய வேலைகள் முடிந்து நானும் கிளம்பி அம்பத்தூர் போய்ச் சேர்ந்தேன். ஸ்டேஷனில் காத்திருந்த என் கணவரோடு அவர் நண்பர் ஒருத்தரும் இருந்தார். முதலில் அவங்க வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். இப்போ அம்பத்தூர் சத்சங்கம் இருக்குமிடத்தில் அப்போ அவங்க வீடு இருந்தது. அங்கே டிபன், காப்பி முடித்துக்கொண்டு இரண்டு மூன்று தெருவில் இருக்கும் வீடுகளைப் பார்த்தோம். ஒரு இடத்தில் பல குடியிருப்புகள் ஆனால் தனித் தனி வீடுகள் ரயில் பெட்டி போல் நீள வாக்கில் வரிசையாக அறைகள் கொண்ட வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீடு கொஞ்சம் பெரிதாக நான்கு அறைகளோடு இருந்தது. இரண்டு வீடுகளுக்கு ஒரு பாத்ரூம், கழிவறை. அதை முடிக்கலாம் என என் கணவர் நினைக்க எனக்கோ சாமான்களை வைக்க இடம் போதாதே எனக் கவலை. என் தயக்கத்தைப் புரிந்தோ என்னமோ, நாளை வரேன், இப்போ அட்வான்ஸ் கொடுக்கப்பணம் போதலை என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

வந்தபோது ஒரு வீட்டில் வீடு காலி விளம்பரப் பலகை இருக்க அங்கே நுழைந்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கேட். ஒரு லாரியே நுழையும் அளவுக்கு. வீடும் பெரிய வீடு. வீட்டைச் சுற்றி ஒரு மாந்தோப்பு. குறைந்தது இருபது மாமரங்களாவது இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்று பின்னால் சொன்னார்கள். வீட்டைப் பார்த்தாலே இங்கே எல்லாம் வாடகை கொடுத்துக் குடி இருக்க நமக்குக் கட்டுமா என்று தோன்ற வீட்டுக்காரங்க பின்னால் இருப்பதாய்ச் சொல்ல, அங்கே போனோம். முதலில் சாவியைக் கொடுக்க மாட்டேன் என்ற வீட்டுக்காரக் கிழவி பின்னர் என்ன நினைத்தாளோ, வீட்டைப் பாருங்க. பேசுவது எல்லாம் முன் குடித்தனக்காரத் தம்பி தான். அவர் வந்து தான் முடிவு செய்யணும் என்றாள். சரினு வீட்டைப் பார்த்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய சமையலறை. பெரிய படுக்கை அறை, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹால். ஆனால் ஒரே குறை சமையலறை நுழையும்போதே இருந்தது. என்றாலும் வீடு பிடித்தது. சாமான்கள் வைக்க, அம்மி ஒன்றும் போட்டிருந்தார்கள். குடித்தனம் வந்தால் கல்லுரலும் தருவதாய்க் கிழவி சொன்னாள். கிணற்றடியே நூறு சதுர அடிக்கும் மேலே. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கிணறு. நடுவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. வீட்டின் அந்தப்பக்கம் இருந்தவங்க அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இருக்கிறவங்க இந்தப்பக்கமும் தண்ணீர் இழுத்துக்கொள்ளலாம். அவ்வளவு பெரிய கிணறை நான் பார்த்ததே இல்லை. தண்ணீரும் இழுத்துக் குடித்தோம். அப்போதே ஐம்பது அடிக்கும் கீழே தண்ணீர் இருந்தாலும் சுவையாக இருந்தது.

வீடும் பிடிக்க, தண்ணீரின் சுவையும் இழுக்கக் கிழவியிடம் கேட்டால் நாளைக்கு வா என்று சொல்லிவிட்டாள். ஒரு பத்து ரூபாயாவது வைச்சுக்கோங்க, டோக்கன் அட்வான்சா இருக்கட்டும்னா வாங்கிக்கலை. நான் யாருக்கும் விடலை; உனக்கு இல்லைனால் தான் மத்தவங்களுக்கு; நீ நாளைக்கு வா என்று ஒரே பேச்சாகச் சொல்லிவிட்டாள். வேறு வழியில்லாமல் திரும்பினோம். இரவெல்லாம் குழப்பம், வீடு கிடைக்குமா, கிடைக்காதா?