எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 31, 2013

அயோத்தியை நோக்கி! தொடர்ச்சி

சீதா கி ரசோயியில் பார்த்த குருமார்களின் படத்துக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த கதை மனதைக் கவர்ந்தது.

ஒரு விஷயம் முக்கியமாச் சொல்லணும். இங்கெல்லாம் செல்வதற்கு எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வராது. ஆட்டோ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கேயே நிறுத்தப்படும்.  அதுக்கப்புறமாக் குறைந்தது அரைகிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டி இருக்கும்.  நிறைய நடை.  ஆட்டோவோ!  அதை ஆட்டோனு எல்லாம் சொல்ல முடியாது. டில்லியில் இருக்கிறவங்களுக்கு பட்பட்டினு ஒண்ணு பழக்கமாகி இருக்கும்.  இந்த ஆட்டோவுக்கும், பட்பட்டிக்கும் இடைப்பட்டது இது. ஒரே சத்தம்.  இதிலே ஆட்டோ ஓட்டுநர்கள் பாட்டு வேறே போட்டுடுவாங்க.  தெருவில் பின்னால் வண்டி வந்தாலோ, எதிரே வண்டி வந்தாலோ கண்கள் தான் கவனம் வைச்சுக்கணும்.  ஆனால் இந்த ஆட்டோக்கள் போடும் சப்தத்தில் முன்னாலும் பின்னாலும் வர வண்டிங்க தானாவே ஒதுங்கிடும்னு வைச்சுக்குங்க. :P  இந்த அழகிலே டிரைவருக்கு இருபக்கமும் இரண்டு பேர் உட்கார, உள்ளே மெயின் சீட்டில் எதிரும்புதிருமாக நாலும், நாலும் எட்டுப்பேர் உட்கார்ந்துக்கறாங்க.  இதைத் தவிரப் பின் சீட்டில் எதிரும் புதிருமாக ஆறுபேர் உட்கார்ந்துக்கறாங்க. கிட்டத்தட்டச் சென்னையில் டாடா டாக்சி என்ற பெயரில் ஓடும் வண்டியைப் போல் இருக்கை வசதி.  ஆனால் ஆட்டோ போல் அமைப்பு. ஆட்டோக்சினு சொல்லலாமோ!

இது முழுதும் நமக்கு மட்டும் வேண்டும்னா வண்டி ஓட்டுநரிடம் இதுக்காக சம்பிரதாயமான பேச்சு வார்த்தையில் பேசி முடிக்கணும்.  ஹிஹிஹி, இந்த ட்ரிப்பில் நாங்க ரொம்ப ரசிச்சது இது.  ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு நீங்க வரீங்களானு நாம கேட்டதுமே, அவங்க நம்ம கிட்டே உங்களுக்கு மட்டும் தனியா வர முடியாது. மத்த சவாரிங்களும் வருவாங்கனு சொல்லுவாங்க. அதுக்கு நாம் "இதை நாங்க ரிசர்வ்" செய்துக்கறோம்னு சொல்லணும்.  ரிசர்வ் கூடக் கிடையாது.  ரிஜர்வ்! :))) அப்போ ஓட்டுநர், தோ போலியே ந பாபு னு சொல்லுவார்.  மறுபடி நாம ரிஜர்வ் என்பதை உறுதி செய்யணும். அதுக்கப்புறமா இந்த வண்டியிலே நாம் ஏறிக்கலாம்னும், வேறே யாரையும் ஓட்டுநர் ஏத்த மாட்டார்னும் தெரிஞ்சுக்கலாம். :)) இதை வந்த அன்னிக்குக் காரிலே வந்ததாலே கவனிச்சு வைச்சுக்கலை.  அப்புறமாத் தான் புரிஞ்சது.

ஏற்கெனவே சாலைகள் மோசம்.  இதிலே இந்த வண்டிப் பிரயாணம் வேறே. வண்டி குலுக்கின குலுக்கல்லே என்னோட வயிறு உதரவிதானத்துக்கு மேலே வந்திருக்குமோனு சந்தேகம்.  இன்னும் போகலை! சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டுப் போனா அவ்வளவு தான். நல்ல வேளையா நாங்க காலம்பர குடிச்ச ஒரே ஒரு டீயோட கிளம்பி இருந்தோம்.  சரயு நதிக்கரையிலிருந்து ராம் தர்பார், சீதாகி ரசோயி பார்த்துட்டு, கோசலை, சுமித்திரை ஆகியோரின் அந்தப்புரங்களையும் பார்த்தோம். பின்னர்  தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசித்தோம்.  படங்கள் கீழே.  அதன் பின்னர் ஶ்ரீராம ஜென்ம பூமி பார்க்க வேண்டி ஆட்டோவில் கிளம்பினோம்.  ஶ்ரீராம ஜென்ம பூமியைக் காலை பதினோரு மணிக்குள் தான் பார்க்க முடியும்.  அதன் பின்னர் பகல் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  நாங்கள் சென்ற சமயம் பதினெட்டாம் தேதி அங்கே ஏதோ கிளர்ச்சி என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கே ராமஜென்மபூமி செல்லும் சாலைகளை மூடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஆகவே ஆட்டோ ஓட்டுநரும், வழிகாட்டியும் எங்களை தாக சாந்தி செய்து கொள்ளக் கூட விடவில்லை.  இதை முடிச்சுட்டு அப்புறமா எங்கே வேணாலும் போய்க்குங்க என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டோ ராம ஜென்ம பூமி நோக்கிச் சென்றது.

அதோடு இல்லாமல் ஶ்ரீராமன் பட்டாபிஷேஹம் செய்து கொண்டப்போ அவருடன் வந்த வாநர சேனைகள் எல்லாம் அயோத்தி சுற்று வட்டாரங்களிலேயே தங்கிட்டாங்க போல!  எங்கெங்கு காணினும் வாநரங்களடா! கையிலே எதுவும் கொண்டு போக முடியாது.  நாம் கொண்டு போகும் எந்தப் பொருளையும் ஆட்டோவில் (செருப்பைக் கூட) விட்டுட்டுப் பார்த்துக்கோப்பானு சொல்லிட்டுப் போக முடியாது.  அவங்களே மறுத்துடறாங்க.  வாநரங்கள் சர்வ சகஜமா உலவிட்டு இருக்குங்க. யாரையும் ஒண்ணும் பண்ணலைனாக் கூடக் கையிலே எதையும் எடுத்துட்டுப்போக யோசிக்க வேண்டி இருக்கு.

அங்குள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலின் ஆஞ்சநேயர்.


ராமர், சீதை, லக்ஷ்மணனோடும் ஆஞ்சநேயனோடும்

எல்லா இடங்களிலும் ஶ்ரீராமர் இப்படியே காணப்படுவதால் எது எங்கே எடுத்ததுனு கொஞ்சம் புரியாமல் போகிறது. :))))

இது சகல பரிவாரஃங்களோடு இருப்பதாகச் சொல்கின்றனர்.  கீழே சின்னச் சின்னதாக மற்ற மூர்த்தங்கள்.

புத்ர காமேஷ்டி யாகம் நடந்த இடத்தில் உள்ள சந்நிதி.  இங்கே குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டு ஆண்டு முழுவதுக்கும் பாயசம் நிவேதனம் செய்ய 200 ரூ வசூலிக்கின்றனர்.  குழந்தை பிறந்ததும், இங்கே கொண்டு வந்து பிரார்த்தனையை மணி கட்டி நிறைவேற்றுகின்றனர். மணிகள் கட்டியது படம் சரியாக வரலை.  பிரதிபலிப்பு அதிகமாப் போயிருக்கு. டெலீட் செய்துட்டேன். :(
அரசக் கோலத்தில் தசரதன் அமர்ந்திருக்க, ரிஷ்ய சிருங்கர், வசிஷ்டர், கெளதமர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் சூழ நடத்தப்பட்ட புத்ர காமேஷ்டி யாகத்தில் பாயசக் கிண்ணத்தோடு வரும் புருஷன் படத்துக்கு நடுவே சிவப்பு உடையில். 

Wednesday, October 30, 2013

அயோத்தியை நோக்கி!


சரயு நதிக்கரையில் துலாமாசத் தர்ப்பணம் முடித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பண்டிட் மூலம் கோதான சங்கல்பம் செய்து கொண்டு அவருக்கு தக்ஷிணையும் கொடுத்தோம்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி அயோத்தி நகரில் ஶ்ரீராமன் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம்.  மேலே காணப்படுவது ஶ்ரீராம் தர்பார் என்னும் சின்னஞ்சிறு கோயிலின் நுழைவாயில்.  நாம் சந்நிதி என்பதை அங்கே தர்பார் என்கின்றனர்.

ஶ்ரீராமர், தன் குடும்பத்தோடு.  வெளிச்சமும் அதிகம் அதோடு விளக்குகள் வேறே என்பதால் படம் தெளிவாக வரவில்லை. அடுத்துக் காண்பது சீதா கி ரசோயி என்னும் சீதையின் அந்தப் புரச் சமையலறை.  அங்கே ஒரு சந்நியாசி இருந்தார்.  அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை;  அல்லது பேச மாட்டார் என எண்ணுகிறோம்.  ஆனால் இங்கெல்லாம் நாங்க இரண்டு பேரும் கோயிலை நிர்வகிப்பவர்களும் தான் இருந்தார்கள்.


மஞ்சள் உடை உடுத்தி இருப்பவர் தான் சந்நியாசி.

சமையல் பாத்திரங்கள்.  இப்போ இதிலே சமைக்கிறாங்களானு தெரிஞ்சுக்க ஆவல்.  ஆனால் சொல்ல யாரும் இல்லை.  வழிகாட்டிக்கும் இது பத்தித் தெரியலை. :(

வரவங்க சாப்பிடறதுக்கு அடுக்கி வைச்சிருந்த இலைக்கட்டுகள்.  இங்கே கொஞ்சம் வெளிச்சம் கம்மி என்பதால் ஓரளவுக்குப் படம் வந்திருக்குனு நினைக்கிறேன்.  அடுத்து கனக பவனம் போகலாம்.  ஆஞ்சநேயரைப் பார்க்கலாம்.  நாளைக்கு.  சரியா?


Tuesday, October 29, 2013

அயோத்தியை நோக்கி! சரயு நதிக்கரையில்!

சாலைகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டின் பிரபலமான மவுன்ட்ரோடையும், நூறடிச் சாலையையும் விட அகலமானது.  அப்படி இருக்கையிலேயே பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலைமை.  அதுவும் சுங்கச் சாவடி அருகே மிக மட்டமான சர்வீஸ் ரோடு.  நாங்க அந்த சர்வீஸ் ரோடில் போயிருக்கணும்.  ஆனால் ஓட்டுநர் பாலத்தின் மீது போனார்.  சரி, வடக்கே போய்த் திரும்பணுமோனு நினைச்சோம்.  சற்று நேரத்தில் ஒரு பெரிய ஆற்றுப் பாலம்.  கங்கை என்றார் ஓட்டுநர்.  அங்கே எப்படி கங்கை வந்தது?  பூகோள ரீதியாக வாய்ப்பே இல்லையே எனத் தோன்றினாலும் திக்குத் திசை புரியாமல் என்னத்தை சொல்வது? பாலம் தாண்டியும் அயோத்தி வந்தபாடில்லை.  லக்னோவில் இருந்து இரண்டரை மணி நேரம் என்றார்கள். இப்போ மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.  ஓட்டுநரை வண்டியை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் விசாரிக்கச் சொன்னோம்.  அரை மனதாக அவர் இறங்கிப் போய் விசாரித்து வந்தார்.  பின்னர் சற்றுத் தூரம் சென்று வலப்பக்கமாகத் திரும்பினார். வண்டி தென் கிழக்கே சென்றது.  சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் ஓட்டுநர் தவறாகச் சென்று விட்டதையும் புரிந்து கொண்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியில் அந்த நதி சரயுதான் என்றும், சரயுநதிப்பாலம் எனவும் புரிந்தது.  இருட்டி விட்டதால் பெயர்ப்பலகையும் கண்ணில் படவில்லை.  அரைமணியில் ஊர் வந்துவிட்டது.  ஆனாலும் இருட்டு அப்பி இருந்தது.  எங்கேயும் தெரு விளக்குகளே இல்லை.  இதுவே நம்ம தமிழ்நாடு என்றால் இம்மாதிரி பிரசித்தி பெற்ற ஒரு முக்கியமான இடத்தை இருளில் மூழ்க அடிப்பார்களா என்றும் தோன்றியது. அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், "ஜெய் சியாராம்!" என கோஷமிட்டனர்.  நாங்களும் "ஜெய் சீதா ராம்" என பதிலுக்கு கோஷமிட்டோம்.  அங்கிருந்த ஒருவரிடம் நல்ல தங்குமிடம் பற்றி விசாரித்ததில் அவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொல்லித் தன்னுடன் வந்த ஒரு சிறுவரை வண்டியில் ஏற்றினார்.  ஓட்டுநருக்குச் சம்மதமில்லை. அவர் தன் வண்டி முதலாளி மூலம் யாரோ வழிகாட்டியின் பெயரை வாங்கி வைத்திருந்ததால் அவரிடம் தான் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். 

எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்த அந்த ஆள் கடைத்தெருவுக்கு ஓட்டச் சொல்லி அங்கிருந்த ஒரு ஆளைக் காட்டினார்.  இவர் தான் நீங்கள் தேடி வந்த வழிகாட்டி என்றார்.  ஓட்டுநருக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை.  ஆனால் அந்த வழிகாட்டி அந்தச் சிறுவனை இறக்கிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வரும் வழியெல்லாம் விளம்பரம் செய்திருந்த ராம்ப்ரஸ்த் என்னும் ஹோட்டலுக்கு ஓட்டும்படி கூறினார்.  வண்டியும் அங்கே சென்றது.  பாதையெல்லாம் குண்டும், குழியும்.  மழை வேறு விட்டு விட்டுப் பெய்ததால் சேறு, சகதி. எங்கெங்கு காணினும் குடிசைகள், மண் குடிசைகள். மேலே தார்பாலின் மட்டும் போடப்பட்ட தாற்காலிக வீடுகள்.  அங்கேயும் ஆடு, மாடுகள். எல்லாவற்றையும் தாண்டி சரயு நதியின் தென் கரையில் அமைந்திருந்த ராம்ப்ரஸ்த் ஓட்டலுக்குச் சென்றது.  சாமான்களை இறக்காமல் உள்ளே சென்று அங்கே ரிசப்ஷனில் இருந்த நபரிடம் பேசினோம்.  முதலில் அறையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அறையைக் காட்டினார். அறை வசதியாக இருந்தது.  வாடகை அவர் அதிகம் சொல்ல, நாங்கள் மறுக்க, பேரம் நடந்து கடைசியில் ஏ.சி. வேண்டாம்னு சொன்னதாலே ஏ.சி. இல்லா அறை வாடகைக்கு ஒத்துக் கொண்டார்.  அப்போத் தான் கண்டிப்புக் காட்டினாரே ஒழிய மிகவும் பணிவாகவும், அன்பாகவும், மரியாதையாகவும் கடைசி வரை இருந்தார்.

வட மாநிலங்களில் ஹோட்டலில் அறை எடுத்தால் நாம் மாலை ஆறு மணி, இரவு பத்து மணி, நள்ளிரவு பனிரண்டு மணி, காலை இரண்டு மணி, மூன்று மணி என்று போய் அறை எடுத்தாலே அன்று மதியம் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கணக்குப் பண்ணி முடிந்து விடும்.  நண்பகல் பனிரண்டுக்குப் பின்னர் மறுநாள் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.  அதோடு அறை வாடகையை முன்னாலேயே கொடுத்துவிட வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம் போல இன்று மதியம் மூன்று மணிக்கு வந்தால் நாளை மதியம் மூன்று மணி வரை என்ற கணக்குக் கிடையாது.  அதோடு இங்கே அட்வான்ஸ் என நூறு ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு கடைசியில் பில் செட்டில் செய்தால் போதும்.  ஆனால் வட மாநிலங்களில் இன்றைய தினம் மதியம் பனிரண்டு மணிக்கு நாம் கொடுத்த அட்வான்ஸ் முடிந்து நாம் ஒரு மணி நேரம் கூடத் தங்கினாலும் அடுத்த ஒரு நாள் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். நாம் அந்த நாள் தங்குவதெனில் அந்த நாளுக்குரிய கட்டணத்தையும் அன்றே மாலைக்குள் வாங்கிக் கொண்டு விடுவார்கள்.  ஆகவே நாங்கள் இரண்டு நாட்கள் தங்கப் போவதாக முன் கூட்டியே சொல்லிவிட்டு இரண்டு நாள் வாடகையில் கொஞ்சம் போல் நிறுத்திக் கொண்டு மற்றதை முன்பணமாகச் செலுத்தினோம்.  கீழேயே உணவகம் இருப்பதால் அங்கே போய் ஆர்டர் செய்தால் சூடாக உணவும் கிடைக்கும்.  மற்றபடி பால், காபி, டீ என எல்லாமும் கிடைக்கும்.  ரூம் செர்விசும் உண்டு என்றனர். 
சரயு நதிக்கரையில். இங்கே அவ்வளவு ஆழமோ, வேகமோ இல்லை.  அயோத்தி நகர் இதன் கரையில் அமைந்துள்ளது.

படகில் ஏறும் மக்கள். ஓரளவுக்கு சுத்தமாக இருந்தாலும் ஹரித்வார் கங்கையின் படித்துறையைப் போல் அவ்வளவு சுத்தம் என்று சொல்ல முடியவில்லை.  நம் மக்கள் எங்கே சென்றாலும் துணி, ப்ளாஸ்டிக் பைகள், வளையல்கள், மாலைகள், சாப்பாட்டுப் பொட்டலங்கள் எனப் போட்டுவிடுவார்களே! :(


நாங்கள் டிரைவரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்து சாமான்களை வைத்து விட்டுக் கை, கால் கழுவிக் கொண்டு மணி ஏழேகால் ஆகிவிட்டபடியால் கீழே போய் ஒரேயடியாக இரவு உணவை முடித்துக்கொள்ள நினைத்தோம்.  அதுக்குள்ளே வழிகாட்டி நபர் ஒரு ஆட்டோக்காரரையும் அழைத்து வந்து மறுநாள் செல்லவேண்டிய பயணத்திட்டத்தைக் கேட்டார்.  அவரைக் காலை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் கீழே சென்று உணவருந்தினோம்.  அருமையான உணவு.  தந்தூர் ரொட்டியும் ஆலு மட்டரும் சொல்லி இருந்தோம். தந்தூர் ரொட்டி நல்ல பெரிதாக, மிருதுவாக மிக அருமையாக இருந்தது.  சப்ஜியில் காரமும் அதிகம் இல்லை.  மசாலாப் பொருட்களோ, வெங்காயம், பூண்டோ இல்லாமலேயே அருமையாக இருந்தது.  அதற்குப் பின்னர் பாலோ, லஸ்ஸியோ சாப்பிட்டிருக்கலாம்.  மதியம் முழுவதும் காஃபி, டீ சாப்பிடவில்லையே என காஃபி ஆர்டர் செய்தோம்.  அதுதான் நாங்க செய்த தப்பு.  நம்ம ரங்க்ஸ் மு.ஜா. மு. அண்ணாவாகத் தனக்குக் காஃபி வேண்டாம் என அறிவிப்புச் செய்துவிட்டார்.  கொண்டு வந்த காஃபியில் இருவரும் பாதிப்பாதி என முடிவு செய்து இரண்டு கப் கொண்டு வரச் சொல்லி அவருக்குப் பாதி கொடுத்தேன்.  அதுவே இன்ஸ்டன்ட் காஃபி.  அதையும் சரியாகப் போடவில்லை.  பால் காயவில்லை. அதோடு காபியில் இன்ஸ்டன்ட் போட்டுக் கலந்ததும் மறுபடி மேலே மோரில் சாட் மசாலா தூவுவது போல இன்ஸ்டன்ட் பவுடரைப் போட்டுக் கொடுக்கிறார்கள். நல்ல உணவு சாப்பிட்டதுக்கு திருஷ்டியாக அமைந்தது என நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு பில்லைக்கொடுத்துவிட்டுக் காலை ஆறு மணிக்கு அறைக்குத் தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து உடனடியாகப் படுத்து விட்டோம்.  உறவினர், பையர், பெண் எல்லாரிடமிருந்தும் அலைபேசி அழைப்புக்கள் வரப் பேசிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தூங்கி விட்டோம். மறுநாள் காலை எழுந்து நான் மட்டும் அறையிலேயே குளித்துவிட்டேன்.  அதுக்குள்ளே வழிகாட்டி வந்து பார்த்துவிட்டு நாங்கள் எழுந்திருக்கவில்லை எனச் சென்றுவிட்டதாக ரிசப்ஷனில் சொல்லவே அவரை அலைபேசியில் ஆட்டோவுடன் வரும்படி அழைத்தோம்.  சரயு நதியில் குளித்து அன்று பித்ரு த்ர்ப்பணம் செய்ய நினைத்திருந்தார் ரங்க்ஸ்.  அதற்கேற்றாற்போல் அன்று துலாமாசப் பிறப்பும் கூட.  ஆகவே சரயு நதிக்குச் செல்லத் தயாரானோம்.

Saturday, October 26, 2013

அயோத்தியை நோக்கி!

இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை.  உணவு வண்டி வரும்.  ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.  ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க.  காஃபி என்றால் 90 ரூ,  டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது.  ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம்.  டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம்.  அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம்.  விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும்.  சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது.  லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம்.  விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒண்ணும் புரியவில்லை.

சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம்.  அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம்.   யாரையும் காணோம்.  அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை.  அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம்.  அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைச்சுக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.  அங்கே போனால் தங்க அறை இருக்கு.  ஆனால் வாடகை!!!  அம்மாடியோவ்!  விமானக் கட்டணத்தை விடவும் அதிகம்.  ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை!

நேரே அயோத்யா போயிட்டால் என்ன?

எப்படி?

இந்தக் காரிலேயே!

கட்டுப்படி ஆகுமா?

இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா?  இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

கேட்டுப் பாருங்க.

கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்  அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார்.  அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம்.  அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம்.  என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை.  அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா?  சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே!  பெரிய ஊரா, சின்ன ஊரா?  எதுவுமே புரியலை.  மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.  சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது.  எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை.

ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது.  கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை.  அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன்.  படம் எடுக்கலாமேனு கேட்பீங்க. அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம்.  இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  இனி வேகமாகச் செல்வோம்.

Friday, October 25, 2013

எங்கே போனேன்? தெரிஞ்சுக்க வாங்க!


பல வருடங்களாக இந்த இடம் செல்ல ஆசை.  98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.  ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை.  அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம்  நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம்.  அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள்.  இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம்.  கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடம்


ஶ்ரீராம ஜன்மபூமி.

பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி.  முக்கியமாய்ச் சாப்பாடு கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும்.  செலவு குறையும்.  ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம்.  அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள்.  கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம்.  ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள்.  இது ரொம்பவே நுணுக்கமான விஷயம்.  சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது.


இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம்.  வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயில் பயண வசதி இல்லை.  லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர்.  மூன்று நாட்கள் பயணம்.  முன்னெல்லாம் போயிருக்கோம் தான்.  ஆனால் இப்போ முடியுமா?  அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார்.  கட்டணம்???  ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.  ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும்.

விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம்.  விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள  ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம்.  விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம்.  சென்னையில்  இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம்.  இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம்.  டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம்.  அது வேறேயா!  கடவுளே!

இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெண்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது.  சென்னைக்கு மட்டும் கிடையாதாம்.  என்ன அநியாயம்! 

Thursday, October 24, 2013

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.


காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.


என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

Saturday, October 12, 2013

சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள் மூன்றாம் பகுதி!

பிரம்மா ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்தாலும் காசி மாநகரம் மட்டுமே ஈசன் படைத்ததாக ஐதீகம்.  எல்லா உலகங்களிலும் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப் பரம்பொருளின் திரிசூலத்தின் நுனியில் அமைந்த இடம் காசிமாநகர்ம். இங்கே அவன் ஆணையே செல்லும் என்பார்கள்.  காசியில் மரணமடையும் ஜீவன்களை சாக்ஷாத் அன்னபூரணியே தன் மடியில் இருத்த, ஈசன் அவர்கள் காதுகளில் தாரக மந்திரம் ஓத ஜீவன்கள் முக்தி அடைவதாகச் சொல்வார்கள்.  இந்தக் காட்சி பகவான் ஶ்ரீராமகிருஷ்ணருக்கு கங்கைக்கரையில் கிட்டியதாகவும் படிச்சிருக்கோம்.  அத்தகைய காசிக்கு முதலில் வந்த அம்பிகை விசாலாக்ஷியை விடப் பின்னர் வந்த அன்னபூரணி தான் பிரபலம் அடைந்திருக்கிறாள்.  அது ஏன்?

நம்ம வீடுகளிலே எல்லாம் அம்மா தானே சமைச்சுச் சாப்பாடு போடறாங்க. அத்தகைய அம்மாவான ஜகதாம்பிகை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்றாட உணவை அளித்து வந்தாள்.  ஒரு நாள் ஈசன் அன்னையிடம், எல்லா ஜீவன்களுக்கும் உணவளித்து முடிந்துவிட்டதா எனக் கேட்க, ஆயிற்று என அன்னை சொல்ல, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு சின்னப் பெட்டியை எடுத்துப் பார்த்தார் ஈசன்.  அங்கே ஒரு சின்ன்ன எறும்பு. அதன் வாயில் ஒரு அரிசித் துகள். ஈசன் புன்னகை புரிந்தார்.  அம்பிகையுடன் திருவிளையாடலுக்கு ஆயத்தமானார்.  அதற்கும் காரணம் இருந்தது. காசிமாநகரில் பஞ்சம் தலை விரித்தாடியது.

அந்தப் பஞ்சத்தைப்போக்கக் காசி ராஜன் செய்த முயற்சிகளெல்லாம் பலனளிக்கவில்லை.  செய்வது என்ன எனத் தெரியாமல் தவித்தான். அன்னபூரணியாக அன்னை அங்கே சென்று அக்ஷய பாத்திரத்தால் உணவளித்தல் ஒழியப் பஞ்சம் தீராது.  ஆகையால் ஈசன் அன்னையிடம் மாயையான இவ்வுலகில் உணவும் ஒரு மாயை, உணவளிப்பதும் மாயை எனக் கூற அன்னைக்கு வருத்தம் ஏற்பட்டது.  இவ்வுலகம் பொருட்கள் நிரம்பியது எனவும், பொருட்களால் ஆனது, ஆற்றல் மிகுந்தது எனவும் கூறுகிறாள். அப்போது ஈசன் இல்லை என மறுக்க அன்னையும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறாள்.  இரு நாழி நெல்லைப் படியளந்து அன்னையிடம் கொடுக்கிறார் ஈசன்.  இதை வைத்து உலகத்து உயிர்களுக்கெல்லாம் படியளக்கச் சொல்கிறார். அன்னை அங்கிருந்து மறைகிறாள்.

சர்வலோக நாயகியான அன்னை அந்த நெல்லை விதையாக வைத்துக் கொண்டாள். என்ன செய்யவேண்டும் என  அவளுக்கா தெரியாது!  உலகமே வயலானது.  கடலே ஏரியானது.  ஈசனின் விடை வாஹனமே உழவு மாடானது.  பலராமனின் கலப்பையை உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டாள். உலகத்து நாயகியான அன்னை அறம் வளர்த்த நாயகியானாள். அங்கிருந்து கையில் அக்ஷயபாத்திரமும் அதில் நிறைந்த பாலமுதோடும் காசி மாநகருக்கு வந்து உணவுக் கூடம் அமைத்தாள்.  பசியென வந்தோருக்கெல்லாம் இல்லை எனாது அமுது படைத்தாள். அன்னையைப் பிரிந்த ஈசன் பிரிவால் வருந்தி தன் கையில் திருவோட்டை எடுத்து வந்து அவளிடம் பிக்ஷை என நீட்ட வந்திருப்பது சர்வேசன் எனத் தெரிந்தும் அன்னை அதில் பிக்ஷை இட்டாள்.

காசிராஜன் அன்னையைச் சோதிக்க நினைத்தான்.  அன்னையிடமிருந்து தானியங்களைக் கடனாகக் கேட்டான்.  அன்னை மறுத்தாள்.  அரசனை அங்கே வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள்.  காசிராஜன், தன் மந்திரிமாரோடு மாறு வேஷத்தில் வந்து அன்னையிடம் உணவு உண்ண வந்த கூட்டத்தோடு அமர்ந்து உணவு உண்டான்.  உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்த அதிசயத்தைக் கண்டான்; வியந்தான்.


இது சாமானிய மனிதரால் இயலாது; சாக்ஷாத் அம்பிகையே வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவள் காலடிகளில் விழுந்து வணங்கி அங்கேயே இருக்க வேண்டுகிறான்.  அன்னை தான் தென் திசை நோக்கிச் செல்வதால் அங்கே தங்க இயலாது எனக் கூறி காசிமாநகரில் அன்றிலிருந்து பஞ்சமே ஏற்படாது எனவும் அருளாசி புரிந்தாள்.  அன்னையின் சாந்நித்தியத்தை அங்கே நிறுவ வேண்டும் எனக் காசி ராஜன் வேண்ட அன்னையும் அவ்வாறே தன் தெய்வீக சாந்நித்தியத்தை அர்ச்சா விக்ரஹமாக நிறுவினாள்.  மன்னனுக்கு முக்தியையும் கொடுத்தாள்.

இதைத் தான் பிரம்ம கபாலத்தில் அன்னை இட்ட பிக்ஷை எனச் சிலர் கூற்று.  ஆனால் காசிமாநகரில் இதை மேற்கண்டவாறே சொல்கின்றனர்.  மேலும் காசிமாநகரில் அன்றிலிருந்து இன்று வரை உணவுப் பஞ்சமே வந்ததில்லை என்றும், எல்லா நாட்களும் ஏகாதசி, போன்ற விரத நாட்களிலும் கூட இல்லை எனாது இரவு பகல் எனப் பாராமல் உணவு கிடைக்கும் ஒரே இடம் அன்னை அன்னபூரணி அருளாட்சி செய்யும் காசிமாநகரம் தான் எனவும் கதியற்றவர்களுக்குக் காசியே துணை என்றும் கூறுவார்கள்.

தங்கமயமான அன்னபூரணியை வங்கி லாக்கரில் இருந்து தீபாவளி சமயம் மட்டுமே எடுத்து வருகின்றனர்.  கண்கள் கூசும் வண்ணம் பிரகாசிக்கும் சுவர்ண அன்னபூரணி நவரத்தினக் கிரீடம் அணிந்து, தங்கக் குடைக்குக் கீழே, தங்கப்பட்டாடை உடுத்தி, கையில் தங்கக் கிண்ணமும், தங்கக் கரண்டியும் பிடித்த வண்ணம், மார்பிலும், கழுத்திலும் நவரத்தின மாலைகள் மின்ன வெள்லிவிடையோனுக்கு பிக்ஷை அளிக்கும் காட்சியை தீபாவளி சமயம் மட்டுமே காசி மாநகரில் காண முடியும்.  அவள் அருகே ஶ்ரீதேவி, பூதேவித் தாயார்களும் அருகே சொர்ண விக்ரஹமாக அமர்ந்த வண்ணம் காட்சி கொடுப்பார்கள்.

ஈசன் கைகளில் இருப்பது பிரம்ம கபாலம் தான் என்றும் இங்கே அன்னபூரணி அளித்த பிக்ஷைக்குப் பின்னரே அது கைகளை விட்டு அகன்றது என்றும் கூறுகின்றனர். ஆதி சங்கரர் அன்னபூரணியை "நித்தியான்ன தானேஸ்வரி" என்று போற்றிப் பாடி உள்ளார்.  வெறும் அன்னத்தை மட்டுமின்றி ஞான வைராக்கியத்தையும் பிக்ஷையாகப் போட்டு இகம், பரம் அனைத்துக்கும் உதவுவாள்.  இவளே தென் திசையாகிய காஞ்சிக்கு வந்து காமாக்ஷியாக நிலைபெற்றாள்.  இவளே ஶ்ரீலலிதை.  சிவப்பரம்பொருளை நாடுபவர்களுக்கு அவர்களின் ஆன்மிகப் பசியை நீக்கி ஞானமாகிய முக்தியை உணவாக அளிப்பவள் இவளே.


Friday, October 11, 2013

சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்! இரண்டாம் பகுதி


இந்தக் கதை அநேகமாக அனைவரும் அறிந்ததே.  எனினும் திரும்பச் சொல்கிறேன். அம்பிகையின் உடலைத் தூக்கிக் கொண்டு ஈசன் தாண்டவம் ஆடியபோது, மஹாவிஷ்ணு அதைப் பார்த்துவிட்டு அம்பிகையின் உடலைப் பல துண்டங்களாக்கினார்.  அவை அனைத்தும் பூமியில் விழுந்த இடங்களே சக்திபீடங்கள் எனப்படுகின்றன.  அந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடமே மேல் மலையனூர் என்று சொல்கின்றனர்.  இங்குள்ள அங்காளியம்மன் போட்ட பிக்ஷையால் தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து அகன்றது என்றொரு ஐதீகம்.  ஈசனைப் போலவே தனக்கும் இருந்த ஐந்து முகங்களால் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய மண்டை ஓடு அவர் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக் கொண்டது.

மண்டை ஓடு கைகளை விட்டு அகலவில்லை என்பதால் இது அம்பிகை பிக்ஷை அளித்தாலே தன் கைகளை விட்டு அகலும் என்பதை ஈசன் புரிந்து கொண்டதாகவும், அம்பிகை எந்த ஊரில் பிக்ஷை இடுகின்றாளோ அங்கே தான் மண்டை ஓடு அகலும் என்பதையும் புரிந்து கொண்டவராக பிக்ஷாடனக் கோலத்தில் ஊர் ஊராக அலைகிறார். மண்டை ஓட்டு மாலை அணிந்து நாகாபரணத்தையும் அணிந்து கொண்டு, இடுப்பில் புலித்தோலுடன், ஒரு கையில் உடுக்கையை ஏந்தி, இன்னொரு கையில் பிரம்மகபாலத்தோடு ஈசன் உலகெல்லாம் உய்வதற்காக பிக்ஷை எடுத்தான்.  சாதாரணக் கோலமா அது!  பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கோலம் அன்றோ!  அதோடு சர்வ லோக நாயகனுக்கு பிக்ஷை இடும் தகுதி தான் யாருக்கு உண்டு!  அன்னை ஒருத்தியைத் தவிர எவரால் பிக்ஷை இட இயலும்?

இந்த நிகழ்வு நடந்த இடம் மேல் மலையனூர் என்றும் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை அன்று அங்காளியானவள் தன் முழு பலத்தோடும், வலுவோடும் இருப்பதாகவும் அனைத்துக்கும் மூலாதார சக்தியானவள் அன்று சுடுகாட்டில் உள்ள ஆவிகள், பேய், பிசாசுகள், பூதங்கள் அனைவருக்குமே சூரை இடுவாள் என்றும் கூறுகின்றனர்.  இதை மயானக் கொள்ளை என்ற பெயரில் அழைக்கின்றனர்.  உலகெங்கும் அலைந்து திரிந்து பிக்ஷை எடுத்த சர்வேசன் கடைசியில் இங்கே வந்து சேர்ந்தான்.  அன்று மாசி மாத அமாவாசை நாள். ஈசன் அன்னையிடம் தன் திருவோட்டை ஏந்தி, 'பவதி பிக்ஷாம் தேஹி!' என்று கேட்க முதல் கவளம் சூரையை பிரம்ம கபாலத்தில் அன்னை போடுகிறாள்

அந்தக் கபாலத்தில் இருந்த பிரம்மஹத்தி ஆவலுடன் தனக்குக் கிடைத்த உணவை உடனே உண்கிறது.  இரண்டாவது கவளத்தையும் அன்னை கபாலத்திலேயே இடுகிறாள்.  அதையும் பிரம்மஹத்தி சாப்பிட்டு முடிக்கிறது.  உணவின் ருசியில் தன்னையும் மறந்த பிரம்மஹத்தி ஆவலுடன் எதிர்பார்க்கும் மூன்றாவது கவளத்தை அனனை சூரையாகச் சுடுகாட்டில் வாரி இறைத்துவிடுகிறாள்.  பிரம்மஹத்தி அந்தச் சூரையை உண்ணும் அவசரத்துடன் ஈசன் உடலில் இருந்து இறங்க வேண்டி கபாலத்துள் புகுந்து அதன் வழியே கீழே இறங்குகிறது.  கபாலம் ஈசன் கைகளை விட்டு அகன்று விட, கீழே இறங்கிய பிரம்ம கபாலம் சூரையைச் சாப்பிடுகிறது.  அப்போது ஈசன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்துவிட்டார்.  அதன் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.  இதைத் தான் "சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்," எனப் பாடலாசிரியர் பாடி இருக்க வேண்டும். எனினும் வேறு சில புராணக்கதைகளும் இது பற்றிச் சொல்கின்றன.

இந்த பிக்ஷையையே அன்னபூரணி இட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.  அதைக் குறித்து நாளை பார்ப்போம்.  நேரப் பற்றாக்குறையால் விரிவாக எழுத முடியவில்லை. 

Thursday, October 10, 2013

சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்.அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது.  அதைத் தான் மேற்கண்ட பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.  சிரம் அறுபட்டது பிரம்மாவுக்கு.  அதன் பின்னர் ஈசனின் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டு விடாமல் இருக்க, அம்பிகை அளிக்கும் பிக்ஷையில் அந்தக் கபாலம் விலகுகிறது.  அதைக் குறித்துப் பார்ப்போமா?   எனினும் அதற்கு முன்னர் சிறிது அம்மன் புகழ் பாடுவோம். இந்த ஆதிபராசக்தியே அருள் மிகு அங்காளம்மன்  என்னும் பெயரில் அருள் பாலிப்பதாகக் கூறுகின்றனர்.  முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.


முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.


தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

ஒரு சமயம் திருக்கைலையில் ஈசனும், அம்பிகையும் வீற்றிருக்கையில் ஈசனைப் போலவே ஐந்து தலைகள் கொண்ட பிரம்மாவும் அங்கே வந்தார்.  ஒரு க்ஷணம் தன் கணவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகளா என்ற எண்ணத்தோடு உமை பார்க்க, பிரம்மாவோ பார்வதி தேவி தன்னைத் தவறாகப் பார்ப்பதாக எண்ணி கர்வம் கொன்டார்.  அந்த நேரம் அவரின் அகங்காரம் அதிகமாகித் தன்னைப் படைத்த நாராயணனைக் கூட மறந்துவிட்டார். மூலாதார சக்தியான ஈசனையும், சக்தியையும் மறந்தார்.  பஞ்சபூதங்களையும் படைத்தது அவர்களே என்பதையும் மறந்து அகங்காரம் தலை தூக்க, அந்தத் தலையை ஆதிசிவன் வெற்றிலைக்காம்பு கிள்ளுவது போல் கிள்ளி எறிய, அகங்காரம் பிரம்மாவிடமிருந்து மறைந்தது.  ஆனால் பிரம்மனின் மறைந்த தலை ஒரு கபாலத் திருவோடு உருவில் ஈசன் கைகளில் வலக்கையில் ஒட்டிக் கொண்டது. உலக நன்மை கருதியே ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்தாலும் தர்மம் தவறியதால் அதற்கான தண்டனை தான் பிரம்ம கபாலம் அவர் கைகளில் ஒட்டிக் கொண்டது.

ஈசன் பிக்ஷாடன மூர்த்தியாகி பிக்ஷை கேட்கப் புறப்பட்டார். ஶ்ரீமந்நாராயணன் இருக்கும் இடமான பத்ரிநாத் சென்றதாகவும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ரிஷி, முனிவர்கள் தங்கள் கர்வம்,அகங்காரம் ஆகியவற்றை தானம் செய்ததாகவும் அங்கே சொல்வார்கள்.  அப்போது தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து நழுவி,  அங்கே ஓடிக் கொண்டிருக்கும் அலக்நந்தா நதியின் வெள்ளத்தில் விழுந்ததாக ஐதீகம். பத்ரிநாத்தில் இன்னமும், இன்றும் பிரம்மகபாலம் என்னும் இடம் உள்ளது.  அங்கே சென்று பிக்ஷை செய்வித்து, முன்னோர்களுக்கும் பித்ருகடன் தீர்ப்பது வழக்கம். இந்த பிக்ஷாடன மூர்த்தியின் தத்துவமெ நம் உலகியல் ஆசைகளான காமம், க்ரோதம், கோபம், ஆணவம், பொறமை ஆகியவற்றைத் துறந்து ஞானத்தை  பிக்ஷையாக ஏற்கவேண்டும் என்பதே.

இந்தச் சிரமது அறுத்த கதை வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.  பிரம்மா சிரம் அறுத்தது என்னமோ ஈசன் தான். கைகளில் கபாலம் ஒட்டிக் கொண்டதும் சரியே.  ஆனால் கபாலம் விலகியது மட்டும் அம்பிகை அருளினால் என்று சக்தி உபாசகர்கள் சொல்கின்றனர்.  சாக்தர்கள் சொல்வது அவள் போட்ட பிக்ஷையால் ஈசன் கைகளிலிருந்து பிரம்ம கபாலம் அகன்றது என்பதே. அதை நாளை பார்ப்போம். 

Wednesday, October 09, 2013

பெருமாளே, பெருமாளே! :))))

முந்தாநாள் கோயிலுக்குப் போயிருந்தோம்.  தாயார் சந்நிதிக்கு முதல்லே போனோம்.  மூணரைக்கு நடை சாத்திடுவாங்கனு சொன்னதால் கிட்டத்தட்ட ஓட்டம் .  அங்கே உள்ளே நுழையும்கொலு மண்டபக் கதவு சார்த்துவதும், நாங்க போவதும் சரியா இருந்தது.  திறந்து உள்ளே போய் 50 ரூ சீட்டுக் கேட்டால் சீட்டுக் கொடுப்பவர் பேசாம உள்ளே போங்கண்ணே!  சீட்டெல்லாம் வாங்கிட்டிருந்தீங்கன்னா நேரம் ஆயிடும்.  மூடறதுக்குள்ளே போய் தரிசனம் பண்ணுங்கனு சொன்னார். இது முதல் ஆச்சரியம்

இரண்டாவது ஆச்சரியம், பெருமாள் சந்நிதியில்.நேரே போயிட்டே இருக்கலாம், பெருமாள் சாவகாசமாக் காத்து வாங்கிட்டு இருக்கார்னு சொன்னாங்க.  அங்கேயும் சீட்டுக் கொடுக்கும் வரிசையில் நிற்கப் போனால் திரும்பக் கோயில் ஊழியர் வந்து எதுக்குக் காசு கொடுத்துப் போறீங்க?  ஒருத்தருமே இல்லை.  பேசாம இந்த இலவச தரிசன வரிசைக்கு வந்து பார்த்துட்டுப் போங்க.  சீக்கிரமா உள்ளே போயிடலாம்னு சொல்லிட்டார்.   கொஞ்சம் சுத்த வேண்டி இருந்தது தான்.  கயிறு கட்டித் தடுப்புக் கிட்டத்தட்டத் திருப்பதி போலச் செய்திருக்காங்க.  முன்னால் இத்தனை நீள வரிசைக்குக் கயிறு கட்டியதில்லை. ஆர்யபடாள் வாசல் வழியே உள்ளே போனால் நேரே ஐம்பது ரூ சீட்டு வாங்கும் கிளி மண்டபத்துக்குப் போயிடலாம்.  இப்போ அதுக்குச் சுத்த வேண்டி இருக்கு.  அதை விடவும் இலவச தரிசனத்துக்கு நான்கைந்து இடங்களில் சுத்தினாலும் விரைவில் உள்ளே போய் தரிசனம் பண்ண முடிஞ்சது.  நிஜம்மாவே பெருமாள் காத்து வாங்கிண்டு தான் இருந்தார்.  நம்பெருமாளுக்குச் சிரிப்புத் தாங்கலை. என்ன ஓசியிலே பார்க்க வந்தியானு கேட்கிறார் போல இருக்குனு நினைச்சேன்.  திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.  போ, போ னு விரட்டலை.

ஆஹா, இது ஶ்ரீரங்கம் கோயில் தானா?


வீட்டிலே விருந்தாளிகள்.  ஆகையால்  ஆருக்கும் அடங்காத நீலியின் தொடர் பதிவு நாளைக்குத் தான். :)))))

Tuesday, October 08, 2013

பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்!

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்.//

தேவி உபாசகர்களின் கருத்து படைப்பு, காப்பு, அழிப்பு மூன்றுக்கும் ஆதாரமாக இருப்பது ஒரு பராசக்தி. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் பராசக்தி ஒருத்தியாலேயே நடைபெறுவதாக ஐதீகம்.  இவற்றைக் கடந்து அதீதமாக நிற்பது பராசக்தியான காமேசுவரியாகும்.  இந்த மூன்று தொழிலும் அவளுடைய மாயை.  இந்த மாயையால் அகில சராசரங்களையும் அவள் ஆட்டுவிக்கிறாள்.  இந்தத் தொழில்களுக்காகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை சிருஷ்டித்தாள்.  காரியமில்லா நிலையில் உள்ள ஒரே வஸ்துவான அம்பாள் காரியமாகிறபோது பலரூபங்களையும் எடுக்கிறாள்.  இவற்றில் உயர்வு தாழ்வு என்பது நம் மனம் கற்பிக்கும் பேதமே அன்றி உண்மையில் இல்லை. அம்பாளையே பல ரூபங்களில் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் அனைத்தும் ஒரே சக்தியே. இத்தகைய சக்தியானவள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய அனைத்தையும் செய்வதற்காக முறையே  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகியோரைப் படைத்ததாக சாக்தர்கள் சொல்வார்கள்.  மஹாவிஷ்ணுவை ஸ்திதி கர்த்தாவாக அம்பிகையே நியமிப்பதாக சாக்தர்கள் சொல்வார்கள்.  அப்போது இவ்வுலகைக் காப்பதற்காக மஹாவிஷ்ணு பல அவதாரங்களையும் எடுக்க வைத்தாளாம் அம்பிகை.  லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்ருஷ்டிகர்த்ரீ--ப்ரம்மரூபா; கோப்த்ரீ--கோவிந்தரூபிணீ; ஸம்ஹாரிணி--ருத்ரரூபா; திரோதானகரி--ஈஸ்வரி;  ஸதாசிவா--அநுக்ரஹதா:  பஞ்சக்ருத்ய பராயணா! என்று அம்பிகையைக் குறித்து வரும்.  அப்படி அம்பிகையே கோப்த்ரீயாக கோவிந்தரூபிணியாக இருப்பதாகவும் அவளே இந்தப் பத்து அவதாரங்களையும் எடுத்ததாகவும் லலிதாம்பாள் சோபனம் சொல்கிறது.  இங்கேயோ பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள் என்று வருவதால் பரந்தாமனைப் பத்து அவதாரங்கள் எடுக்க வைத்தவள் அம்பிகை என்ற பொருள் கொள்ள வேண்டும்.  கீழே லலிதாம்பாள் சோபனத்தின் பாடல்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்.  ஏற்கெனவே பகிர்ந்தவையே.அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.

சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்

இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்


“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.

மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.  கீழே பரசுராமாவதாரப் பாடல்கள்

கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.

அடுத்து பூரணமான மனிதன்.  ஶ்ரீராமன்.  மர்யாதா புருஷோத்தமன்.  மனிதனாக எப்படி வாழ்ந்து காட்டுவது, ஒரு அரசனாக அரசனுக்குரிய நீதி பரிபாலனத்தை எப்படிக் காப்பது?  அதற்காக மனைவியையே துறக்க வேண்டி இருந்தாலும் அவளையும் துறந்து அரச தர்மத்தைக் காப்பது என இருந்த மஹாவீரன்.  தான் ஒரு அவதாரம் என்ற நினைப்பில்லாமல் மனிதனாகவே வாழ்ந்து காட்டியவன்.

“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து நம்ம கண்ணன் வந்தே விட்டான்.  சகலரையும் மகிழ்வித்துக் கொண்டு தான் பூரண அவதாரம் என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிலைநாட்டிக் கொண்டு கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்.  கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.

“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.

அடுத்து இனி நடக்கப் போகும் அவதாரம்.

அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்

Monday, October 07, 2013

பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-- தொடர்ச்சி.  அபிராமி பட்டர் சொல்வது

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.

ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

இறைவன் ஆணா, பெண்ணா?  இந்தக் கேள்விக்குப் பதில் எவராலும் சொல்ல இயலாது.  பெண்ணென்றால் அவன் பெண்ணே!  ஆணென்றால் அவள் ஆணே! ஆணாகிப் பெண்ணாகி நின்றான அந்த அர்த்த நாரீஸ்வரர் ஆன கோலத்தையே மேலுள்ள பாடல் வரிகள் சுட்டுகின்றன.    புரட்சிகரமாக  ஆணும், பெண்ணுமாகக் கலந்து உமையொருபாகனாக இருக்க ஈசனைத் தவிர எவரால் இயலும்?  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர திருத்தலம்.  அர்ச்சனை செய்யும்போது கூட ஒரு நாமம் ஈசனுக்குரியதாகவும், அடுத்த நாமம் அம்பிகைக்கு உரியதாகவும் அமைந்திருக்கும் என்கின்றனர்.  ஆண், பெண் சமத்துவத்தைக் குறிக்கும் வண்ணம் சிறப்புப் பெற்ற கோலம் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்.  இதைக் குறித்துப் பலவாறு கூறுவது உண்டு.  பிருங்கி முனிவர் ஈசனை மட்டுமே வணங்கி வந்த நிலையில், அம்பிகைக்குக் கோபம் வந்து அவர் சக்தியை இழக்குமாறு செய்ததாகவும் அப்போது ஈசன் பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் அளித்து உதவ, உமையன்னை மனம் வருந்தி தானும் ஈசனுக்குச் சமமாக அவரின் பாதியாகவேண்டும் என தவம் கடுமையாக இருந்ததாகவும், சிவன் தம்முடலில் பாதியை அவளுக்குக் கொடுத்ததாகவும் கூறுவார்கள்.  ஈசனோடு இணைந்த உமையன்னையைக் கண்ட பிருங்கி முனிவர் வேறு வழியில்லாமல் இருவரையும் வணங்கினார் என்பார்கள்.  இத்தகைய அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்ட நாள் திருக்கார்த்திகை தினம் எனச் சொல்வதுண்டு.  அன்று திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரரைக் கண்டு வணங்கி வழிபடுவது சிறப்பு.

இப்படி அர்த்தநாரீஸ்வரரைக் குறித்துப் பற்பல விளக்கங்கள் இருந்தாலும் ஆதிசங்கரர் சொல்வது இன்னும் அருமையானது.  நிர்க்குணப்ப்ரம்மம் ஆனது தனக்கென்ரு எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈஸ்வரனாக இருக்கையில் அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாய் என்கிறார்.  அப்படிப் பார்த்தாலும் பாதி உடம்பு தான் இருக்கணும்.  ஆனால் முழு தேகத்தையும் அம்பிகையே ஆக்கிரமித்துக் கொண்டு செக்கச் செவேலெனக் காமேச்வரியாக ஆகிவிட்டதாகச் சொல்கிறார்.  இதையே அபிராமி பட்டர் சொல்கையில்,

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!


படங்கள் உதவி: கூகிளார்.

Sunday, October 06, 2013

பாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை!

பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை).


இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து  மாயா சக்தியால் தோன்றியுள்ளதாக ஐதீகம். ஒரே பிரம்மம் தான் இத்தனை உருவங்கள், குணங்கள் உள்ள ஜீவராசிகளாயும், பிரபஞ்சங்களாயும் தோன்றுகிறது என்றும் ஒன்றான பிரம்மத்தைப் பலவாகக் காட்டுவது அம்பிகையான மாயாசக்தி எனவும் அம்பிகையின் மாயா சக்தி எனவும் கூறுவார்கள்.   இந்தப் பாருள் பிரம்மத்தை அடக்கியவண்ணமும் அவளே காட்சி அளிக்கிறாள்.  பிரம்மமாகவும் அம்பாளே காட்சி அளிக்கிறாள்.  இவளே ஞானாம்பிகை.  இந்த அகண்ட பேரண்டத்தில் பரப்ரும்மத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு அம்பாளாகக் காட்சி தருவதும் அவளே. அதோடு மட்டுமின்றி ஜீவாத்மாக்களைப் பிறவியாகிய பெரும் கடலில் இருந்து விடுவித்து முக்தி என்னும் கரையில் சேர்ப்பவளும் அவளே!  ஆகவே இந்தக் காளியானவள் பரப்ரும்மத்தை மட்டும் உள்ளடக்கியவளாய் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பவதாரிணியாகவும் விளங்குகிறாள்.

இவளுடைய மூன்று கண்களில் வலக்கண் சூரிய வடிவம் எனப் பார்த்தோம்,  அது பகலைப் படைக்கிறது. இடக்கண் இரவைப் படைக்கிறது.  இரண்டுக்கும் நடுவே உள்ள அக்னியாகிய கண்ணானது சந்த்யா காலத்தைப் படைக்கிறது.  ஆகவே அது சிவந்து விளங்குகிறது.  இவ்வாறு காலத்தையும் கடந்து நிற்பதால் காலஸ்வரூபிணி என்றும் இவளைச் சொல்லலாம்.

//பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //

வேத மந்திரங்களாலும் இவளைப் பற்றி வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு எல்லையற்றவள்.  ஏனெனில் வேதங்களின் பரம தாத்பரியமான அத்வைதமாகவும் இவளே விளங்குகிறாள்.  அவளே அனைத்துமாய் எங்கும் நிறைந்தவளாய் காலங்களை எல்லாம் கடந்தவளாய் இருக்கிறாள்.  இதோ பாரதியின் பார்வையில் காளி:

"யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்:
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ!
பூதமைந்தும் ஆனாய்-காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்!"

பாரதி கண்ட காளி இவள். பாரதி காளியின் பக்தன். கண்ணனின் பக்தன் ஆனால் காளியின் பக்தனும் ஆனான்.பாரதி எவ்வாறு காளியைத் துதித்தான் என்றால்

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண்" என்றும் "நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்:அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே!
சொல்லத்தகுந்த பொருளென்று காண்!இங்குசொல்லுமவர் தமையே!
அல்லல் கெடுத்தமரர்க்கிணையாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்." என்கிறான்.


பாரதி கண்ட அந்தக் காளியின் காட்சி எவ்வாறு என்பதைப் பார்ப்போமா?

படர்ந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்ததனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் குருதி சொட்டும் அசுரனின் தலை என்று காண்போரைக் கதி கலங்க வைக்கும் தோற்றமுள்ள இந்தக் காளி, சடலமாகத் தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன்னிரு கால்களைப் பதித்துப் பயங்கரமாகத் தரிசனம் தருகிறாள். ஆனால் இந்தத் தோற்றம் ஒவ்வொன்றுக்கும் அரிய தத்துவங்கள் உண்டு.


உயிர்கள் அவளிடம் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவளின் மாலையில் உள்ள அரிந்த சிரங்கள் உணர்த்துகின்றன. மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்துக்கும் சக்தியாக இருப்பவள் அவள் ஒருத்தியே என்பதை உடைந்த கரங்களால் ஆன ஆடை மூலம் தெரிய வரும். ஆணவத்தோடு மனிதர்கள் செய்யும் அற்பக் காரியங்களை அவள் காலக்கிரமத்தில் வெட்டி வீழ்த்துகிறாள் என்பதை இடது கரத்தில் உள்ள வாள் தெரிவிக்கிறது.இயற்கை நடை முறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் மனிதன், இறுதியில் தாயின் வாளுக்கு வெட்டுண்டு பலியாவான் என்பதை வெட்டுண்ட சிரம் தெரிவிக்கிறது. காளியை ஆராதிப்பவர்கள் வீரமாக இருக்க வேண்டும். பயம் கூடாது. அதாவது மரண் பயம். காளி அனுதினமும் சம்ஹாரத் தொழிலைச் செய்கிறாள்.இதையே செந்நிறமான அவளுடைய நீட்டிய நாக்கு காட்டுகிறது. இவளுடைய கோரத் தாண்டவம் நடக்கும் இடம் சுடுகாடு. நம் மனத்தில் ஏற்படும் ஆசை, காமம், கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் ஒழிந்து பஸ்பம் ஆக வேண்டும் . நம் மனம் நிர்மலம் ஆக வேண்டும் என்பதையே அவளது தாண்டவத்தலம் சுடுகாடு தெரிவிக்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் அல்லவா? கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம்? அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா? அப்போதுதான் உலகில் நீதியும், நேர்மையும், நியாயமும் ஏற்பட்டு சாந்தியும், சந்தோஷமும் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தியாக இருந்து நம்மை ரட்சிப்பவளே காளி என்னும் மஹாசக்தி.இவளைத்தான் ஊழிக்கூத்தில் பாரதியார்

"காலத்தொடுநிர்மூலம் படுவுலகும்- அங்கே
கடவுள் மோனத் தொனியே தனியாயிலகும்-சிவன்
கோலங்கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-
கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத்திடுவாய்!
அன்னை!அன்னை! ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை!"

என்று பாடுகிறார்.

அன்னையின் கோபம் ஈரேழு பதினாலு உலகத்தையும் வாட்ட, அவள் கோபத்தைச் சிவன் தான் ஒருவரே தணிக்கமுடியும் என்று உணர்ந்து, சடலம் போலக் கீழே படுக்கிறார். தன்னிலை தெரியாது கோபாவேசத்தில்இருக்கும் அன்னை சிவன் மார்பில் ஏறி நின்று ஊழிக்கூத்தாடினாள். அவள் காலால் மிதியுண்ட சிவன் ஒரு குழந்தையாக மாறி அழ, குழந்தையின் குரல் கேட்ட அன்னை கோபம் தணிகிறாள். அது போல நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள். இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்திலும் காளிக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றிருக்கின்றன.

கருத்து உதவி: தெய்வத்தின் குரல்

Saturday, October 05, 2013

பொன் அம்பலத்தாடும் காளி! 1
பல்லவி
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி

அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)
பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //

காளியைக் குறித்து இதுவரை எழுதியது இல்லை.  அதிலும் ஆருக்கும் அடங்காத நீலியான அவளைக் குறித்து எழுதத் தான் முடியுமா?  இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் சக்தி அவளே. காலங்களுக்கெல்லாம் அவளே பொறுப்பு.  காலமாறுதல்களுக்கும் அவளே பொறுப்பு.  காளி கறுப்பானவள்.  ஆனால் அதே சமயம் நிறமற்றவள்.  என்ன, குழப்பறேனா!  இல்லை.  கடல் நீர் நீலநிறம் என்று நினைக்கிறோம்.  ஆனால் கடல் அருகே சென்று ஒரு கை நீரை அள்ளிப் பாருங்கள்.  என்ன நிறம்?? நிறமற்றுத் தானே இருக்கும்.  காளியும் நம் அக்ஞானத்தால் கருமை நிறமாய்த் தெரிகிறாள். அக்ஞானம் தொலைந்தால் அவள் எல்லையற்ற தெய்வீக ஒளி பொருந்தியவளாகக் காட்சி தருவாள்.  அதே போல் அவள் ரூபமும் நாம் பார்க்கப் பயங்கர வடிவில் இருந்தாலும் அதுவும் நம் அக்ஞானத்தாலேயே அப்படித் தெரிகிறது.  உண்மையில் ஆனந்த சொரூபிணி அவள்.


நான்கு கைகளை உடையவளாக இருக்கும் இந்தக்காளியின் நான்கு கைகளும் மனிதர்களைக் காட்டிலும் அவள் ஆற்றல் அதிகம் என்பதைக் காட்டுவதற்காக  உள்ளன. இடுப்பிலோ கைகளை ஒட்டியாணமாக அணிந்திருப்பாள் காளி.  இவ்வுலகத்து மாந்தரின் கரங்களை இயக்கி அவர்களின் செயல் அனைத்தையுமே காளியாகிய பராசக்தியே நடத்துவதால் இடுப்பில் கைகளால் ஆன ஒட்டியாணம் காணப்படுகிறது.  நாலா திசைகளிலும் பரந்து விரிந்திருக்கும் அவள் சக்தியால் இவளுக்கு "திகம்பரி" என்னும் பெயர் உண்டு.  திசைகளையே ஆடையாகக் கொண்டிருக்கிறாள் இவள். இவள் மாலையோ குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து வெவ்வேறு பருவத்து மக்களின் மண்டையோடுகளாகக் காணப்படும்.  முண்டமாலினி என இதனால் இவளை அழைக்கின்றனர்.  குழந்தை பிறந்ததில் இருந்து எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு இறப்பு நேரிடும்.  வாழ்க்கை அநித்தியமானது.  எனவே அரிதான இந்த மனித வாழ்க்கையில் ஆன்மிக வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே இப்படி மண்டை ஓட்டு மாலைகளைத் தரித்திருக்கிறாள்.


இவள் ஒரு கை வரம் தரும் நிலையிலும், இன்னொரு கை  அபயம் காட்டியும் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டும்,அவர்களைத் துன்பத்திலிருந்து நீக்கிப் பாதுகாத்தும் வருகிறது.  வாள் ஏந்திய மற்றொரு கை தீமைகளை வெட்டிச் சாய்ப்பதில் வல்லவள் என்பதையும் வெட்டிய தலையைப் பிடித்திருக்கும் மற்றொரு கை தீயவர்களைச் சலனமே இல்லாமல் காளி வெட்டித் தள்ளுவாள் என்பதையும் காட்டுகிறது.  சூரிய, சந்திர, அக்னிஸ்வரூபமான தன் கண்களால் இவ்வுலகைப் பகல், இரவு, பருவ மாற்றம் அக்னியின் சக்தியை மாந்தர்க்கு உணர்த்துவது எனக் காட்டி வருகிறாள்.  விரிந்த சடாமுடியுடைய காளனாகிய ஈசனின் மனைவியான காளியும் விரிந்த கரிய கூந்தலோடு காணப்படுவது எல்லையற்று அவள் வியாபித்து இருப்பதையும் அவள் ஆற்றல்களையும் காட்டும்.  அந்த ஈசனின் மார்பின் மீது காளி தன் கால்களை ஊன்றி நிற்பது போலப் பார்க்கிறோம்.  இது சிவனாகிய பரப்ரும்மம் சவம் போல் இருப்பதைக் காட்டும்.  சக்தியானவள்  அவன் மார்பின் மீது ஏறி நடனம் புரிவது அவள் உட்புகுந்து சிவனை இயக்கினால் தான் நாம் சிவத்தையே அறிய இயலும் என்பதைச் சுட்டுகிறது.

எப்படி ஒரு விளக்கில் விளக்கில் எண்ணெய் ஊற்றும் பாகமும், எண்ணெயும் சும்மா இருக்கிறதோ, விளக்கின் திரிச் சுடர் மட்டும் பிரகாசமாய் எரிகிறதோ அப்படியே சிவனில் உறைந்த சக்தி தான் அப்படிச் சுடர் போலப் பிரகாசித்துக் கொண்டு நடனம் ஆடுகிறாள்.  சக்தி இயங்கினாலே நம்மால் சிவனை அறிய முடியும்.  இல்லை எனில் அறிய முடியாது.  செயலற்று சிவன் படுத்திருப்பது  நிர்க்குண பிரம்மத்தைச் சுட்டினால், சிவன் மீது நர்த்தனம் ஆடும் காளி செயலுள்ள சத்குணப்பிரம்மத்தைச் ச்ட்டுக்கிறாள்.  கடலின் மேலே அலைகள் ஆர்ப்பரிப்பது போல் தான் இவையும்.  ஆனால் கடல் உள்ளே அசைவற்று இருப்பது போல் கடலைத் தாங்கி நிற்கும் பூமிப் பகுதியைப் போல் சிவன் காணப்படுகிறான்.

சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  நெருப்பு இருந்தால் உஷ்ணமும் இருக்கும்.  பால் என்பது வெண்மையாகவே இருக்கும். ரத்தினம் ஒளிவீசிப் பிரகாசிக்கும். அது போல் அசையாப் பாம்பின் நிலை சிவனுடையது எனில் ஓடும் பாம்பு சக்தியாகும். சிவசக்தி இணைந்தாலே பிரபஞ்ச இயக்கம் சாத்தியம்.

மற்ற வரிகளுக்கான விளக்கம் நாளை வரும்.


காளி பற்றிய தகவல்களுக்கு உதவி: ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்

http://www.rasikas.org/forum/viewtopic.php?f=11&t=21500&p=242982&hilit=arukkum+adangada#p242982

சுட்டி உதவி: திரு ஈரோடு நாகராஜன்.

ஆருக்கும் அடங்காத நீலியின் விளையாடல்!இந்த வருடம் நவராத்திரிப் பதிவுகள் எழுதறதா நினைக்கலை. எந்தக் குறிப்புக்களும் எடுத்தும் வைச்சுக்கலை.  அதோடு பண்டிகை வேறே கொண்டாட முடியாது என்பதால் சுவாரசியம் இல்லை.  ஆனால் ஆருக்கும் அடங்காத நீலி எழுத வைத்துவிட்டாள்.  இளைய நண்பர் திரு ஜீவா வின் பதிவில் http://jeevagv.blogspot.in/2013/10/blog-post.html இங்கே சென்று பார்க்கவும்.  சிப்பியில் விளையும் அபூர்வ முத்துக்களைப் போல எப்போதேனும் ஒரு அபூர்வ முத்தாகப் பதிவுகள் வரும். ஜீவாவின் பதிவில் கொடுத்த பாடலுக்கு அவர் என்னை அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரிகளின் அர்த்தத்தைச் சொல்லும்படியும், அல்லது பதிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார்.  முதல், மூன்றாம் வாக்கியங்களின் பொருள் புரிந்தாலும் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் புரியவில்லை.  இரண்டு நாட்களாக இதே நினைவு.  கடைசியில் நண்பர் ஈரோடு நாகராஜன்(மிருதங்க வித்வான்) http://erodenagaraj.blogspot.in/2013/09/blog-post.html  அவர்களைக் கேட்டிருந்தேன்.  அருமையான விளக்கத்தை அனுப்பி விட்டார்.  மதியம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பல்லவி 
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி 

அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை 

சரணம் 
ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள் 

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்
சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள் 

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள் பி.கு: சுட்டியெல்லாம் போகிறதில்லை என்பதால் அப்படியே கொடுத்துட்டேன். வாய்ப்புக் கொடுத்த நண்பர்கள் 


நன்றி:  திரு ஈரோடு நாகராஜன், மிருதங்க வித்வான்

நன்றி: திரு ஜீவா

Friday, October 04, 2013

சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!


மணமகனையும், மணமகளையும் அப்படியே உட்கார்த்தி வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டது.  கடைசியா பாணிக்ரஹணம் குறித்துப் பார்த்தோம்.  மணமகன் தன் வலக்கையால் மணமகளின் கரத்தைப் பிடிப்பதற்கும் நான்கு மந்திரங்கள் உண்டு.  பிராமணர் தவிர மற்ற சமூகங்களில் இதன் பின்னரே மாலை மாற்றலும் நடக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.  இதன் பின்னர் அக்னிக்கு வடக்கே மணமகன் மணப்பெண்ணின் வலக்கையைப் பிடித்தவாறே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் தொட்டுக் கிழக்கே பார்த்தோ அல்லது வடக்குத் திசையிலேயோ பாதத்தை எடுத்து வைத்து அவளுடன் நடந்து செல்லவேண்டும்.  ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு.  7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும்.  சாஸ்திரப் படி ஏழு அடிகள் ஒருத்தருடன் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் ஆகிவிடுவார் என்று ஆகிறது.  சாவித்திரி சத்யவானின் உயிரைக் காப்பாற்ற வேண்டி யமதர்ம ராஜனோடு இப்படித் தான் ஏழடிகள் எடுத்து வைத்துப் பின்னர் யமனின் நண்பன் என்ற ஹோதாவில் அவனிடமே வரங்களை வேண்டிப் பெற்றுத் தன் கணவனின் உயிரையும் மீட்டு வருவாள் என்று படித்திருக்கிறோம் அல்லவா!  அதே போல் இங்கே மணமகளோடு சேர்ந்து ஏழடி எடுத்து வைக்கும் மணமகன் தன் மனைவியைத் தன் சிநேகிதியாகவே கருத வேண்டும்.  இத்தனையும் செய்கையில் பிடித்த வலக்கையை விடவே கூடாது.  இது தான் திருமணத்தின் முக்கியக் கர்மாவாகும்.  சட்டப்படியும் இந்த சப்தபதி ஆனாலே திருமணம் நிறைவு பெற்றுத் திருமணம் சட்டரீதியாகவும் செல்லுபடி ஆகும்.

மந்திரங்கள் என்று சொன்னாலும் இன்னொரு விதத்தில் இது மணமகன் - மணமகள் இடையே நடக்கும் உரையாடல் என்றும் சொல்லலாம்.  மணமகன் தன் மனைவியிடம் தாங்கள் இருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாசகத்தைப் பேசுவான்.

முதல் அடி: நீ என் வீட்டுக்கு வருகிறாய்.  மஹாலக்ஷ்மி போன்ற உன் வரவால் என்ன் குலம் விருத்தி அடையட்டும்.  நீ மட்டும் சந்தோஷம் அடையாமல் என்னையும் சந்தோஷப் படுத்தப் போகிறாய்.  எல்லாவற்றிலும் முக்கியமான உணவுப் பொருட்கள் உன்னால் விருத்தி அடைந்து நீ என் இல்லம் வரும்போது நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு அருளட்டும்.

இரண்டாம் அடி:காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு என் வீட்டில் வந்து இருப்பதற்கு வேண்டிய உடல் வலிமையை உனக்குத் தரட்டும்.  அவன் அருளால் உன் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

மூன்றாம் அடி: நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சட்ட, திட்டங்களை மீறாமலும், கடமையுடன் நாம் செயலாற்றும்படியும், அதற்கான நம்பிக்கைக்காகவும் இறைவன் நம்முடன் ஒத்துழைப்பானாக!

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.  அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக,போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் நிறைந்து இருக்குமாறு கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நம்மைத் தாக்கினால் வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் மனங்களுக்குத் தருமாறு அந்தக் கடவுள் அருளட்டும்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகத்தை மட்டுமே பார்க்க மாட்டோம்.  எல்லாவற்றையுமே அனுபவிப்போம்.  அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளான, மழை, வெயில், பனி போன்றவை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு உதவி புரியும் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியை வணங்கவும், அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் ஆண்டவன் அருளட்டும்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

Thursday, October 03, 2013

ஆதார் அடையாள அட்டை பற்றி!

நீங்க ஆதார் அட்டை வாங்கிட்டீங்களா?  பெரியதொரு வேலை. ஆனால் மிக எளிமையான ஒன்று.  எனினும் முன் திட்டம் சரியாக இடாமையாலும், பயிற்சி பெற்ற நபர்கள் இல்லாததாலும் ஆதார் அடையாள அட்டைப் பதிவுக்கு ஏகத்துக்குக் கூட்டம் நெரிகிறது. மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி இருப்பதாகச் சொல்கின்றனர்.  அதோடு ஆதார் கணக்கெடுப்பின் போது  கொடுக்கும் வங்கி எண்ணிற்கு எரிவாயு சிலிண்டரின் மான்யத் தொகையை  மத்திய அரசே நேரடியாக அளிக்கும் என்றும் ஒரு அறிவிப்பு.  தமிழ்நாட்டிற்கு வேண்டாம்னு இங்கே முதலமைச்சர் சொல்ல, தள்ளிப் போடப்பட்டு ஒருவழியா இன்னிக்கு ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு செய்தவர்களுக்கு, இன்று அடையாளங்கள் பதிவு செய்யப்படும்னு நேத்திக்கு தினசரியில் வந்தது.

நம்ம ரங்க்ஸுக்குக் கேட்கணுமா?  இன்னிக்குக் காலம்பர ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிட்டார்.  ஒன்பதே காலுக்கு அங்கே ஆஜர்.  அங்கிருந்து ஃபோன். இன்னிக்கு டோக்கன் மட்டும் தராங்க.  நீ வர வேண்டாம்னு.  டோக்கன் வாங்கறச்சே என்னோட எண்ணுக்கும் சேர்த்துக் கொடுத்துட்டாங்க. (கைலை யாத்திரைக்கு இப்படித்தான் அகஸ்மாத்தாக் கிளம்பினேன். அது போல நான் போகாமலே என் எண் வந்துவிட்டது.) உடனே சமையலை முடிச்சுக் கிளம்பி வானு மறுபடி ஒரு அழைப்பு.  சமையலை முடிச்சுக் கொண்டு பதினொன்றரை மணிக்குக் கிளம்பினேன்.  அங்கே இருக்கும் வரிசையைப் பார்த்தால் இன்னிக்கு ஆகாது போல் இருந்தது.  அங்கே ரங்க்ஸும் எப்போ வேணாக் கீழே விழுந்துடுவேன்ங்கற நிலை.  நான் நின்று கொண்டு அவரை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு வர அனுப்பி வைச்சேன்.  அவர் வந்ததும் நான் போய் உட்கார்ந்தேன்.  தரையில் உட்காரணும்.  நம்மால் ஆகாதது.  கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.  அப்புறமா ரங்க்ஸிடம் சொல்லிட்டு அலுவலகத்துக்குள்ளே போய் உட்கார்ந்துவிட்டேன்.  அலவலக ஊழியருக்குத் தெரிஞ்சவங்க வந்தால் அந்தப் பக்கமாக அனுப்பி வைக்கிறார். என்னத்தைச் சொல்றது.  கொஞ்ச நேரம் கழிச்சு ரங்க்ஸும், அங்கே அறிமுகம் ஆன நண்பர்களோடு உள்ளேயே வந்து உட்கார்ந்தார்.

அத்தனை கூட்டத்துக்கும் படம் எடுக்கக் கணினியில் பதிய இரு இளைஞர்கள் மட்டுமே.  காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது அவங்க இயற்கையின் அழைப்பைக் கூடச் சட்டை செய்யாமல் வேலை செய்ய வேண்டிய நெருக்கடி.  இதிலே அலுவலக ஊழியர்களின் சிபாரிசுகள் வேறே. இரண்டு பேருக்கும் ஒரு ப்ரின்டர், ப்ரின்டரின் கேபிள் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறிப் பயணித்து அலுத்திருக்கும் அதுக்கு.  அங்கேயே நின்றிருந்த சமயம் கேபிளை நாங்களே வாங்கிக் கொடுத்து உதவினோம். ஒருத்தருக்குக் குறைந்தது இருபது நிமிடம் ஆகிறது.  கூடவே ஆட்களைப் போட்டு வரும் மக்கள் உட்காரவும் நாற்காலிகள் போட்டு ஏதேனும் ஒரு கல்யாண மண்டபத்தில் முன் பதிவு செய்து இடம் கேட்டு மக்களையும் அங்கே வரச் சொல்லிச் செய்யலாம்.  நீங்க யாரேனும் போறதா இருந்தால் தண்ணீர்(முக்கியம்) நின்றபடியே சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதேனும் எடுத்துச் செல்லுங்கள்.  நீங்கள் சீக்கிரமே போனாலும் டோக்கன் வாங்கிப் படங்கள் எடுத்து ரேகைகள் பதிவு செய்யக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

ஒரு வழியா எங்களுக்கு நேரம் வரச்சே  பகல் மூன்று மணி ஆகிவிட்டது. வார்ட் நம்பர் நான் சொன்னது சரியில்லைனு ஊழியர் சாதிக்க, இன்னிக்கு கோவிந்தா கோவிந்தா தானோனு நான் நடுங்க. நடுவிலே பல குறுக்கீடுகள் வேறே,  ஒருவழியா நான் சொன்ன வார்டிலேயே என்னோட பெயர், எண் கிடைக்கப் பதிவு முடிஞ்சது.  அடுத்து ரங்க்ஸுக்கும் பதிவு முடிஞ்சு இருவருக்கும் பதிவு முடிந்ததுக்கான அடையாளச் சீட்டைக்(ஆதார் தனியா போஸ்டில் வரும்.) கொடுத்து அனுப்பினார்.  வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது மணி நான்கு. :(   ஆதார் அடையாள அட்டையை ஶ்ரீரங்கம் தொகுதிக்காரங்க வாங்க காந்தி ரோடில் கார்ப்பொரேஷன் அலுவலகத்தில் சென்று ஏற்கெனவே கொடுத்திருக்கும் சீட்டின் எண்ணைக் காட்டி டோக்கன் வாங்கிக்கணும்.  நாளைக்கும் டோக்கன் கொடுக்கிறார்கள்.


For more details contact:

npr.rgi@censusindia.gov.in
www.uidai.gov.in
www.censusindia.gov.in