ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜயந்திக்கு வந்து பிரசாதம் வாங்கிச் செல்ல அழைப்பு மேல் அழைப்பு. இருவராலும் போக முடியலை. நான் மட்டும் போனேன். சர்க்கரைப்பொங்கல், கறுப்புக் கொ.க.சுண்டல், வடை, பலாச்சுளைகள்,வாழைப்பழம் ஆகியவற்றோடு வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் மனைவி சுமார் 20 வருடங்களாகப் படுத்த படுக்கை தான். :( அதுக்கும் மேலேயே இருக்கலாம். இரு பிள்ளைகள். ஒருத்தர் அம்பேரிக்காவில் மனைவியுடன். இன்னொருவர் சென்னையில் மனைவியுடன். அவ்வப்போது வந்து போவதுடன் சரி. இங்கே மாமா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டு சுயம்பாகமும் கூட. கிரைண்டரில் மாவு அரைத்து வைத்துக் கொள்ளுவார். நாங்க இந்தக் குடியிருப்புக்கு வந்த புதுசிலே வீல் சேரிலே மாமியை உட்கார வைத்துக் கொண்டு லிஃப்ட் மூலம் கீழே அழைத்து வருவார். பெருமாள் மண்டகப்படியின் போது மாமியையும் உடன் அழைத்து வருவார். நாளாக ஆக ஆக மாமியை எழுப்பி உட்கார வைக்க முடியலை. கீழே சரிந்து விட்டார் போல! அதன் பின்னர் அழைத்து வருவதில்லை. அதனால் அவரும் பெருமாளைப் பார்க்க வருவதில்லை. அவ்வப்போது கொஞ்சம் நினைவு வரும். காஃபி, ஹார்லிக்ஸ், சூப், ஜூஸ் போன்ற திரவ ஆகாரங்கள் தான். குழாய் மூலம் ஏற்றப்படும். கவனிச்சுக்க ஒரு செவிலிப் பெண்மணி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் போகும்போதெல்லாம் பார்த்ததே இல்லை.
அந்த மாமிக்கு அம்மா எண்பது வயதுக்கும் மேல் ஆகிறது. இன்னமும் இருக்கிறார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவ்வப்போது வந்து பார்ப்பார். படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணை மாப்பிள்ளை கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்வதைப் பார்த்து மனம் வேதனையுறலாம். என்னமோ தெரியலை. அந்தப் பெரிய மாமியை நான் ஓரிரு முறை பார்த்தது தான். சமையல் எல்லாம் மாமாதான் என்று சொன்னேனே! இத்தனை அமர்க்களத்திலும் பெரிய பெரிய படிகளாக ஐந்து படி கட்டிக் கொலு வைத்துவிடுவார் மாமா! எங்கள் வளாகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் அழைத்து வெற்றிலை, பாக்குக் கொடுப்பார். பூக்கடையிலிருந்து பூக்களை வாங்கி வந்து எல்லா உம்மாச்சிங்களுக்கும் வைச்சு, வரும் பெண்களுக்கும் கொடுப்பார். முன்னெல்லாம் நவராத்திரிக்குப் பரிசுப் பொருளும் ஏதானும் வாங்கிக் கொடுப்பார். இப்போல்லாம் போக முடியலை போல! தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், சுண்டல் தான். சுண்டல் நன்கு குழைந்து அளவாய்க் காரம் போட்டு நன்றாகவே இருக்கும். சின்ன மருமகள் அந்தச் சமயம் சென்னையிலிருந்து வந்தால் அவளை விட்டுக் கொடுக்கச் சொல்லுவார். வரலைனால் குற்றமோ, குறையோ சொல்லுவதில்லை. இன்று வரை தன் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதற்கோ அவங்க உயிர் இருந்தும் ஓர் அசையா பொம்மையாக இருப்பதற்கும் அலுத்துக் கொண்டதே இல்லை. இரண்டு பையர்கள் பிறந்ததும் நடந்த ஏதோ ஓர் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் இப்படி ஆகிவிட்டார் எனக் கேள்விப் பட்டேன். அவர் முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ, கவலையோ, விரக்தியோ தெரியாது. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார். குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் அசோசியேஷன் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு நகைச்சுவைத் துணுக்குகளால் அனைவரையும் சிரிக்க வைப்பார். எந்தவிதமான பித்ரு கர்மாக்களையும் விட்டதில்லை. அவரால் முடிந்த அளவுக்குச் செய்வார்.
எனக்கு எல்லாம் இந்த வேலையே செய்ய முடியாமல் அலுப்பும்/சலிப்புமாக இருப்பதை நினைத்துக் கொண்டு அவரையும் பார்க்கையில் வெட்கமாகவே வரும். :( அவர் அனுபவிப்பது எல்லாம் "கர்மா"! இதை அவர் அனுபவித்தே ஆகணும் என்கிறார்கள். என்னவோ!
***********************************************************************************
கர்மா பாம்பே சாணக்கியாவின் இந்தத் தொடர் பார்க்கப் பார்க்க அசத்துகிறது. பார்ப்பதைத் தவிர்க்கவும் முடியலை. ஆரம்பத்தில் 2006 ஆம் வருடமோ என்னமோ இந்தத் தொடர் "ராஜ் தொலைக்காட்சியில்" தொடராக வந்து பாதியில் நின்று விட்டது. அதன் காரணம் அப்போது இதைத் தயாரித்தவர் தான் என்பதை இப்போத் தான் பாம்பே சாணக்கியா சொன்னதன் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் என்னவோ தெரியலை திடீரென முகநூலில் இந்தத் தொடர்கள் ஃபாஸ்ட் ஃப்ளிக்ஸ் என்னும் பெயரில் வர ஆரம்பித்தன. பின்னர் பாம்பே சாணக்கியா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து மீண்டும் இதைத் தொடரவும், தொடர்ந்து இதில் வரும் வாழ்க்கைப் புதிர்களை விடுவிக்கவும் ரசிகர்கள் விரும்புவதால் தன்னால் பத்துப் பகுதிகள் மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் நன்கொடை அளித்தால் தொடர்ந்து எடுப்பதாகவும் வேண்டுகோள் விடுக்க அப்படியே ரசிகர்கள் மூலம் கிடைத்த நன்கொடையால் "கர்மா -2" பகுதி வெளிவந்து இணையத்திலே சக்கைப் போடு போடுகிறது. கர்மா முதல் பகுதியில் வந்தவர்களில் எல்லோரும் இதில் வரவில்லை. சிலர் கிட்டத்தட்டப் பதினாறு வருடங்கள் ஆனதில் உயிருடன் இல்லை/சிலரால் முடியாமல் போய் விட்டது.
ஆனால் முக்கியக் கதாபாத்திரமான "ருக்கு"வாக அதே ப்ரீத்தி ஶ்ரீநிவாஸ் இப்போ ப்ரீத்தி சஞ்சய் என்னும் (கணவர் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டு ) பெயருடன் அதே ருக்கு கதா பாத்திரத்தில் வருகிறார். மூத்த மாப்பிள்ளையாக அதே சாய்ராமும், முக்கியமான கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளாக அதே பூவிலங்கு மோகனும் நடிக்கின்றனர். இரண்டாவது மருமகளாக கமலா காமேஷின் பெண் உமா ரியாஸ் அதே பாத்திரத்தில் தொடர்ந்தார். இப்போது சில பகுதிகளாக அவரைக் காணவில்லை. வயதான ருக்குப் பாட்டியாக நடித்த பெரியவர் இப்போ இல்லை. இப்போ அந்தக் கதா பாத்திரத்தில் யார் வரப் போறாங்க என்பது இனிமேல் தான் நான் பார்க்கணும். பழைய முதல் பகுதி சுமார் 75 எபிசோட் போன வருஷம் உடம்பு முடியாமல் படுத்திருந்தப்போப் பார்த்தேன். பின்னர் பார்க்கவே முடியலை. இப்போ ஒரு மாதமாக மறுபடி பார்க்க ஆரம்பித்துக் "கர்மா-2" இல் 45 எபிசோட் வரை பார்த்துவிட்டு முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கேன். இதுவும் 77 எபிசோட் வரை யூ ட்யூபில் இருக்கின்றன. அவற்றையும் பார்க்கணும்.
கதை ஒண்ணும் பெரிசா இல்லை. வேத வித்தான சோமசேகர கனபாடிகளின் குடும்பம் (கதை ஆரம்பிப்பது 1934 ஆம் ஆண்டில்) காலப்போக்கிலும் வெள்ளையரின் ஆங்கிலப்படிப்பு மோகத்திலும் எப்படி அக்ரஹார வாழ்க்கையை விட்டு நகர வாழ்க்கைக்கு இடம் பெயர நேர்ந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களும் தான் முக்கியக் கரு. அக்ரஹாரத்திலிருந்து பிராமணர்கள் வெளியேறியது/வெளியேற்றப்பட்டது (மறைமுகமாக) எப்படி ஒரு கலாசாரச் சீரழிவுக்குக் காரணமாய் அமைந்தது என்பதும் சநாதன தர்மத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பிராமணர்கள் இப்போது ஏதோ கொஞ்சம் போல் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் தான் முக்கியக் கரு. கதையின் முக்கியக் கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளுக்கு அவர் காலத்திலேயே இவை எல்லாம் தீர்க்க தரிசனமாகத் தெரிய வருகிறது. அப்போது ஒரு நாள் அவர் கனவில் அவர் தினமும் வணங்கும் ஶ்ரீராமர் வந்து தன்னுடைய இந்தப் படம் தான் அவருடைய ஐந்தாம் தலைமுறையை ஒன்று சேர்க்கும் என்கிறார். அப்படி என்ன விசேஷம் அந்த ஶ்ரீராமர் படத்தில் என்றால் ஶ்ரீராமர் பட்டாபிஷேஹப் படமான அதில் ஶ்ரீராமர் நின்று கொண்டிருப்பார். பரிவாரங்கள் அனைவரும் நிற்பார்கள் அனுமன் உள்பட. ஶ்ரீராமரின் வலக்கரத்தில் ஒரு மச்சம் காணப்படும். இப்படி வரையப்பட்ட அந்தப் படம் சோம சேகர கனபாடிகளால் அவர் குடும்பத்தின் அனைத்து நபர்களுக்கும் திருமணப் பரிசாகக் கொடுக்கப் படுகிறது. இந்தப் படம் தான் குடும்பத்தை ஒன்றாக இணைக்கப் போகிறது. தன்னோட ஐந்தாவது தலைமுறையாவது மீண்டும் கிராமத்திற்கு வந்து இழந்தும்/மறந்தும் போன அக்ரஹார வாழ்க்கை முறையைத் தொடர வேண்டும் என கனபாடிகள் நினைக்கிறார். அது நடந்ததா என்பது இனிமேல் தான் தெரியணும்.
கர்மா தொடர் முதல் பகுதி 1933 ஆங்கில ஆண்டு தமிழ் ஈஸ்வர ஆண்டில் ஆரம்பிக்கும் முதல் பகுதியை இந்தச் சுட்டியில் காணலாம். ஆரம்பத்தில் கோனேரிராஜபுரம், பாலூர், போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்டது இரண்டாம் பகுதியிலும் அங்கேயே அதே வீடுகளிலேயே எடுக்கப்பட்டாலும் கணபதி அக்ரஹாரத்திலும் படப்பிடிப்பு நடந்திருக்கு. அரையபுரத்தில் ஒரு கிராமத்து அக்ரஹார வீட்டைத் தற்காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கட்டி இருப்பது அசத்தி விட்டது. விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். நம்மை எழுந்திருக்க விடாமல் கட்டிப் போடும் தன்மை உள்ள தொடர். பக்கத்து வீட்டில்/அல்லது நம் வீட்டில் நடப்பதை நாம் நேரில் பார்ப்பது போலவே உணர்வோம்.
திருவாரூர்ப் பதிவுகளைத் தொடரணும். இந்தக் கீ போர்ட் ஒரே தகராறு. பிடிவாதம் பிடிக்கிறது. பார்ப்போம். இதைத் தட்டச்ச அரை மணி ஆகிவிட்டது கீ போர்ட் படுத்தலினால். :(