எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 29, 2014

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க! இங்கே கொடுங்க!

 

இந்தப் படம் ஏற்கெனவே போட்டுட்டேன்.  திரு இன்னம்புரார் வீட்டுச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அரிசி உப்புமா பண்ணி எடுத்துச் சென்றேன்.  அப்போ இந்தப் பெரிய உருளியில் செய்தேன்.  இதில் செய்தால் எத்தனை மணி நேரம் வைத்திருந்தாலும் களிம்பு ஏறிக் கைத்துப் போகாது.  கைக்காத வெண்கலம் என்றே சொல்வோம் இதை.  இவை அதிகமாய்க் கிடைக்குமிடம் முன்னெல்லாம் நாகர்கோயில்.  நாகர்கோயில் வெண்கலம் என்றும் சொல்வார்கள்.  என்னுடைய வெண்கலப் பானை, வெண்கல உருளி எல்லாமும் நாகர் கோவில் வெண்கலம் தான்.



படத்தில் முன்னால் தெரிவது பித்தளைத் தாம்பாளம். ஒரு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு ஆழமானது.  இதில் சாப்பாடுகள் வைக்க முடியாது.  பூஜை, தர்ப்பணம் இன்ன பிறவற்றிற்குப் பயன்படுத்துகிறோம்.  பின்னால் தெரியும் வெண்கலப்பானை கால்படி வெண்கலப்பானை என்று பெயர்.  ஆனால் நல்ல அரிசி என்றால் கால்படி போட முடியாது.  கால்படி என்பது மெட்ராஸ் வழக்கில் இரண்டு ஆழாக்கு ( 400) கொள்ளளவு.   தென்மாவட்ட வழக்கில் இரண்டு அரைக்கால்படி உழக்கால் போட்டால் கால்படி. அதே (400) கொள்ளளவு.  சொல்வது தான் மாறுபடும். பக்கத்தில் உள்ளது சின்ன உருளி. இதுவும் வெண்கலம் தான்.  இதிலும் உப்புமா, பொங்கல் போன்றவை செய்யலாம்.  குழம்பு வைக்கலாம். மேலுள்ளதிலும் குழம்பு வைக்கலாம்.  இனிப்புகள் செய்ய சர்க்கரைப் பாகு வைத்துக் கிளறலாம்.  அடிப்பிடிக்கும் பயம் இல்லாமல் கிளற முடியும்.  மேலுள்ள உருளியில் தான் முதல் முதல் கோதுமை அல்வாவும், மைசூர்ப்பாகும் செய்யக் கற்றுக் கொண்டேன்.


மாக்கல் சட்டி இது.  கல்சட்டி சமையல் என்றாலே தனி ருசி தான்.  இன்று கூட முருங்கைக்காய்க் குழம்பு இதில் தான் செய்தேன்.  கீரை மசிப்பதெனில் கல்சட்டி தான்.  ஊறுகாய்கள், உப்பு, புளி, மாவடு போட்டு வைக்கலாம்.  இதைவிடப் பெரிய கல்சட்டி எல்லாம் எங்க வீட்டில் இருந்தன.  என்னைக் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க.  இது நான் ரொம்ப ஆசைப்பட்டுக் கும்பகோணத்தில் வாங்கினது.  வாங்கினதும் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கல்சட்டியில் தடவி ஊற வைக்க வேண்டும்.  பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.  அதன் பின் சமைக்கத் தொடங்கலாம்.  அடுப்பில் போட்டு அடியில் தாளிதம் செய்து குழம்பு வைக்கலாம்.  புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு போன்றவை செய்யலாம்.  ருசியில் நிச்சயம் மாறுபாடு இருக்கும்.  அதுவும் குமுட்டி அடுப்பில் கல்சட்டி போட்டுச் செய்தால் அந்த ருசி தனி.


இடப்பக்கம் தெரியும் சின்ன ஜாடி உப்பு ஜாடி.  கல்யாணம் ஆகிக் குடித்தனம் வந்தப்போ ரங்கநாதன் தெரு பழைய ரத்னா ஸ்டோரிலே வாங்கியவை இவை.  இதிலே ஒன்று உடைந்து விட்டது.  மூடி இருந்தது.  அதை எங்க பையர் விளையாடி உடைத்தார்.  நடுவில்  நீலக்கலரில் இருப்பது அமெரிக்காவில் எங்க பெண் என் ஜாடிப் பைத்தியத்தைப் பார்த்துட்டு வாங்கிக் கொடுத்தாள்.  சின்னதில் இருந்து பெரிசு வரைக்கும் கிட்டத்தட்ட ஏழோ என்னமோ.  ஶ்ரீரங்கம் வருகையில் அங்கே உறவினருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டேன்.   இப்போ இதில் புளி போட்டு வைக்கிறேன்.  அன்றாடத் தேவைக்கான புளி இதில் இருக்கும்.   அடுத்து இருக்கும் உயரமான ஜாடி ராஜஸ்தானில் ஊறுகாய்க்கு என வாங்கினது.  அதுவும் பல வருடங்கள், பல ஊர்கள் கண்டுவிட்டது.  இப்போ மொத்தப் புளியையும் அதில் அடைத்து வைக்கிறேன்.



மாவடு போட்டு வைக்கவென சென்னை ஈவ்னிங் பஜார் கண்ணாடிக்கடையில் வாங்கிய பாட்டில் இது.  இன்னொன்றும் உண்டு.  அதில் போன வருஷத்து மாவடு இருக்கிறது.  இதில் இந்த வருஷத்து மாவடு.  ஊறுகாய்களைக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் இல்லை.  மாசக்கணக்கா இருந்தாலும் வெளியேயே வைக்கிறேன்.  சரியான உப்பு, காரம், எண்ணெய், கடுகுப்பொடி போன்றவை போட்டுவிட்டால் பல வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.  போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சி விட்டால் இந்த வருஷம் அதில் வெல்லத்தைப் பாகு வைத்துக் காய்ச்சி ஆற வைத்துச் சேர்த்து ஜீரகப் பொடியைப் போட்டு வைப்பேன்.  சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுக்க சைட் டிஷோடு இதுவும் துணையாக இருக்கும். நாளாக ஆக வெல்லத்தில் ஊறி இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கலவையாக சுவை தூக்கி அடிக்கும்.  இப்போ ரங்க்ஸுக்கு இனிப்புச் சேர்க்கக் கூடாது என்பதால் அந்தத் திப்பிச வேலை எல்லாம் பண்ணமுடியலை.  குமுட்டி அடுப்பு இன்னொரு நாள் போடுகிறேன்.


இன்னும் ஈயச் செம்பு இருக்கிறது.  அதில் தான் தினம் ரசம் வைக்கிறேன்.  வரும் விருந்தினருக்குத் தக்கவாறு ரசம் வைக்க வித்தியாசமான அளவுகளில் ஈயச் செம்பு, ஈய அடுக்கு இருக்கின்றன.  அவற்றைப் பின்னர் பகிர்கிறேன்.  வெளியே சின்ன ஈய அடுக்குத் தான் நாலு பேருக்கு ரசம் வைக்கும் அடுக்குத் தான் இருக்கு.  அதைப் படம் எடுக்க மறந்துட்டேன். 


ராஜலக்ஷ்மி உப்பை ஜாடியில் போட்டு வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.  அதன் பின்னூட்டங்களில் பாரம்பரியப் பாத்திரங்கள் குறித்த பேச்சு வர  அதைத் தொடர்ந்து நான் தினமும் புழங்கும் சில பாரம்பரியப் பாத்திரங்கள் இங்கே படங்களில்.  இப்போதைய நான் ஸ்டிக் உலகில் இவற்றின் பெயர் தெரிந்தவர் மிகக் கொஞ்சமாகவே இருப்பார்கள்.  இன்னும் பெரிய திருச்சூர் உருளியும் இருக்கிறது.  அதை எல்லாம் தினமும் புழங்க முடியாதென்பதால் பெட்டியில் இருக்கு.  வெளியே எடுத்தால் படம் எடுத்துப் போடறேன்.

தாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி! :(

தமிழ்த்தாத்தாவின் மறைவுநாளுக்கான அஞ்சலிப் பதிவை ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன்.  ஆனால் என்ன காரணமோ அது வெளியாகவே இல்லை.  நானும் கவனிக்காமல் இருந்துட்டு இன்னிக்குத் தான் பார்க்கிறேன்.  ரொம்பவே வெட்கமாக இருக்கு!:(  மன்னிக்கவும். :(


தாத்தா, தாமதமாக அஞ்சலி செலுத்தும் என்னை மன்னீப்பீர்களாக!

Monday, April 28, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? --11

மூத்த பையன் ராஜூ பிறந்ததில் இருந்தே தைரியமானவனாக இருந்ததை ரவி கண்டு பிடித்திருக்கிறான்.  முதல் குழந்தை என்பதாலும், அவனுடைய இயல்பான அரவணைத்துச் செல்லும் பழக்கத்தாலும் குடும்பத்தில் அவனுக்குத் தனி இடம் உண்டு.  அதோடு ரவி தன்னருகே அவனை வைத்துக் கொண்டு அனைத்தையும் சொல்லிக் கொடுப்பான்.  அப்படி அவன் சொல்லிக் கொடுத்த பல விஷயங்களில் நீச்சல் பயிற்சியும் ஒன்று.  இந்த வயதுக்குள்ளாக நன்றாகவே நீந்திப் பழகி இருந்தான் ராஜு. ஆகவே அவன் தொட்டியில் முழுகி இறந்தது ரவிக்கு ஆச்சரியத்தையே அளித்தது.  மூச்சை அடக்கியவண்ணம் உள்ளே இருக்கத் தெரியும் அவனுக்கு.  இது எப்படி நிகழ்ந்தது?

சாந்தி ஓடோடியும் வந்தாள்.  ரவி சிலை போல் நிற்பதையும் பெண் குழந்தை சுஜா பெரிய குரலில் அழுவதையும் பார்த்த வண்ணம் வந்தவளுக்குப் பிள்ளையின் கால் தொட்டிக்கு வெளியே தெரிவதைக் கண்டதும், ஏதோ விளையாட்டு எனத் தோன்றியது.  "என்ன விளையாட்டு இது, குழந்தையை அழவிட்டபடி!" என்று ரவியைக் கடிந்த படி பிள்ளையை உலுக்கி அழைத்தாள்.  பதிலே இல்லை என்பதோடு அவள் தொட்ட கால் விறைப்பாக அன்றோ இருக்கிறது!  சாந்திக்கு சந்தேகம்!  "என்ன பண்ணினீர்கள் என் குழந்தையை?" என்று ரவியைப் பார்த்து ஆத்திரமாய்க் கேட்டாள்.  ரவி தான் குழந்தையை ஏதோ பண்ணி அவன் இறந்துவிட்டான் என்றே சாந்திக்குத் தோன்றியது. ரவி அவளை ஒரு கணம் துச்சமாய்ப் பார்த்தான்.  அடுத்த கணம் தன் கைகளில் இருந்த சிவப்பு நாடாவில் ஆழ்ந்தான்.  எங்கே பார்த்திருக்கிறோம் இதை!

ஆஹா, இப்போது நினைவு வந்துவிட்டது.  அன்று இந்தக் குழந்தைக்குப் பொன்னுக்கு வீங்கி வருவதற்கு முதல்நாள் தொட்டிலில் மேலே இருந்து கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த பொம்மையை இந்த நாடாவை வைத்துத் தானே அந்தக் குழந்தை நெரித்துக் கொண்டிருந்தது!  பார்க்க என்னமோ அவள் அந்த பொம்மையையும், நாடாவையும் வைத்து விளையாடுவதாகத் தெரிந்தாலும் உண்மையில் பொம்மையின் கழுத்தில் இதை வைத்து இறுக்கிக் கொண்டிருந்தாள் அவள்.  ரவி போய்ப் பிடுங்கப் போனபோது அது நிமிர்ந்து ரவியைப் பார்த்த பார்வை!  எத்தனை ஜென்மத்திலும் மறக்க இயலாதது.

கோபம், ஆத்திரம், வெறுப்பு, கசப்பு, பகை என அனைத்து உணர்ச்சிகளையும் அந்த ஒரு பார்வை காட்டிக் கொடுத்தது.  லக்ஷம் தேள்களும், பாம்புகளும் அவனை ஒரே சமயம் கடித்தது போல் உணர்ந்தான்.  அதுவோ உடனேயே நாடாவை விட்டு விடுகிறாப்போல் பாவனையுடன் தூக்கி எறிந்தது.  அதையும் பொம்மையையும் ரவி தான் எடுத்து வைத்தான்.  பொம்மையை மறுபடி தொட்டிலில் கட்டப் போனால் அது வீரிட்டு அழுதது.  சாந்தி வந்து ஏதானும் சொல்லப் போகிறாளே என ரவியும் விட்டுவிட்டான்.  இப்போது.... இப்போது,,,, பிள்ளையின் கழுத்தைப் பார்க்க வேண்டுமே.  ரவி குனிந்து தண்ணீர்த் தொட்டியிலிருந்து பிள்ளையை எடுக்கப் போனான். "தொடாதீர்கள் அவனை! செய்யறதையும் செய்துவிட்டு இங்கே நின்று கொண்டு அப்பாவி வேஷம் போட்டு என்னை ஏமாத்த நினைப்பா?" என்று சாந்தி கத்த, அதைக் கவனிக்காமல் பிள்ளையை எடுத்த ரவி அவன் கழுத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.  ஆஹா, கழுத்தை நெரித்த அடையாளம் தெரிகிறதே!

ஆஹா, அந்தப் பிசாசு, பேய், என் பிள்ளையைக் கழுத்தை நெரித்துவிட்டுத் தண்ணீரில் தள்ளி இருக்கிறது.  அப்படி என்றால் அதற்கு எத்தனை முன் யோசனை இருந்திருக்கும்?  அது என்ன நிஜக் குழந்தையா?  பேய், பிசாசு இல்லை ஆவி வகையைச் சேர்ந்ததா?  ஏன் இப்படிப் பண்ணுகிறது! அதற்கு என்னதான் வேண்டும்!  என் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட நினைக்கிறதே!  சாந்தியிடம் இதைச் சொன்னாலும் அவள் ஏற்க மாட்டாளே! இப்போ என் அடுத்த வேலை இருக்கும் ஒரே பெண் குழந்தையை மட்டுமாவது பாதுகாக்க வேண்டும்.  அறையை விட்டு வெளியேறினான் ரவி. தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.  சாந்தி செய்வதறியாது திகைத்துப் போனாள்.  அவளால் அந்தக் குழந்தையைக் கொஞ்சம் கூட சந்தேகிக்க முடியவில்லை.  முதலில் நடந்தவை இரண்டுமே தற்செயல் என நினைத்தவளுக்கு இப்போது அப்படி நினைக்க முடியவில்லை.  ஆனால் அவள் கணவன் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?  சாத்தான் என அவன் வர்ணிக்கும் இந்த நாடோடிக் குழந்தையை வளர்ப்பதாலா?  குழந்தையையே பார்த்தாள் சாந்தி.  அவளைப் பார்த்துக் கள்ளமின்றி வெள்ளைச் சிரிப்புச் சிரித்தது அது. தன்னையுமறியாமல் அதைத் தூக்கி முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொண்டாள். 

Saturday, April 26, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10

ரவிக்குக் கவலையாகத் தான் இருந்தது.  என்றாலும் வந்தாச்சு!  இனி என்ன செய்ய முடியும்?  அழகான மாலை நேரம்! சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் பார்க்கக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தான் இருந்தது.  ஆனால் அனுபவிக்க முடியவில்லை.  மனதில் வெறுமை! பயம்!  சந்தேகம்! எல்லாமும் சூழ்ந்து இருக்கக் கவலையுடன் வீட்டுக்கு வந்தான்.  சாந்தியிடம் கூடப்பேசாமல் தன் அறைக்குச் சென்று படுத்தான்.  இது திட்டமிட்டே நடக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.  ஆனால் சாந்தி புரிந்து கொள்ள வேண்டுமே!  இப்போவானும் அந்தக் குழந்தையை வெளியேற்றுவாளா?

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் உள்ளே வராதது கண்டு சாந்தி அறைக்கு வந்தாள். வரும்போது அந்தக் குழந்தையும் அவள் கைகளில்! வரும்போதே அது சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது.  ரவிக்கு அது தன்னைக் கேலி செய்கிறது என்றே தோன்றியது.  அதே போல் அவனைப் பார்த்து அது கைகளைக் கொட்டிச் சிரித்தது. தன்னை மீறிய கோபத்தில் ஷோபாவை அடிக்கக் கையை ஓங்கினான் ரவி.  சாந்தி அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள். "எப்படிச் சிரிக்கிறது, பார்! என்னைக் கேலி செய்கிறது!" என்றான் ரவி ஆத்திரத்துடன்.

"ஆமாம், அதுக்கு இப்போவே எல்லாம் தெரியும்!" என பழித்துக் காட்டிய சாந்தி, "சரி, உடம்பை வரவழைச்சுண்டாச்சு.  ஓய்வு எடுங்க.  குழந்தைகளை இங்கே வராமல் பார்த்துக்கறேன்."  என்றபடி உள்ளே சென்றுவிட்டாள்.  தனிமையில் விடப்பட்ட ரவிக்கு ஒரே கலக்கமாக இருந்தது.  இறந்து போன தன் இரு குழந்தைகளின் நினைவு அதிகமாக வந்தது.  இருக்கும் இரு குழந்தைகளையாவது காக்க வேண்டுமே என்ற தவிப்பும் கூடியது.  தான் தன் குழந்தைகள் அருகே செல்ல முடியாத இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவங்களுக்கு ஏதேனும் ஆகாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து கொள்ளத் தூக்கமும் வராமல் நோயின் கடுமையால் வலியும் தாங்காமல் தவித்தான்.   தூங்கியவனுக்கு ஏதேதோ கனவுகள்! அந்தக் குழந்தை தன் பையனைத் தண்ணீரில் போட்டு அமுக்குவது போலவும், பையன் மூச்சுக்குத் திணறுவது போலவும் கனவு கண்டான்.

விழித்தவனுக்குக் கனவா, நனவா என்றே தெரியாமல் குழப்பமாக இருந்தது.  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அறையின் ஜன்னல் வழியாக சூரியன் தன் கதிர்களை நீட்டி இருந்தான்.  அவன் பெண் வீறிட்டுக் கத்தும் குரல் கேட்டது. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைக் கைகளால் மறைத்தவாறே அவசரமாக எழுந்தான்.  பெண் கத்திய திக்கை நோக்கி ஓடினான்.  ஓடுகையில் குளியலறையில் இருந்து அந்தக் குழந்தை தவழ்ந்து வருவது போல் அவனுக்குத் தோன்றியது.  சட்டென அந்தக் குழந்தை எந்தப் பக்கமாய்ப் போகிறது எனப் பார்க்க வேண்டித் திரும்பினான்.  தேடியவன் கண்களில் எதுவும் படவில்லை.  எங்கானும் ஒளிந்து கொண்டிருக்கிறதோ? யோசித்தவண்ணம் தன் பெண் இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

குளியலறை வாயிலில் அவள் நின்றிருக்க ஒற்றை விரலால் தொட்டியைச் சுட்டிக் காட்டினாள்.  குழந்தை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது என்பது புரிந்தது.   அவளால் பேச முடியவில்லை.  அவன் மூத்த பையனுக்குக் குளியல் தொட்டியில் அமிழ்ந்து கிடப்பதில் சுகம், ஆனந்தம்.  அன்றும் அதுபோலவே தொட்டியில் அமிழ்ந்திருக்கிறான். அப்படி அமிழ்ந்தவன் தலைகீழாகத் தொட்டியில் தள்ளப்பட்டு முழுக அடிக்கப்பட்டிருக்கிறான். அவசரம் அவசரமாகப் பிள்ளையை வெளியே எடுத்துத் தலைகீழாகவும் தட்டாமாலையாகவும் சுற்றினான். தண்ணீர் குடித்திருந்தால் வெளியே எடுத்துப் பிள்ளைக்கு உயிர் கொடுக்க மிகவும் விரும்பினான்.  ஆனால்????? அவனால் முடியவில்லை.  பிள்ளையின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஓவெனக் கத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் முயன்றான். அப்போது அவன் கண்களில் பட்டது அந்தச் சிவப்பு நாடா.


Friday, April 25, 2014

இந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா?





போன வாரம் சென்னை போனப்போ (ஹிஹிஹி விசா ரெனிவலுக்காகப் போனோம்) முதல்நாள் தம்பி வீடு, மைத்துனன் வீடுனு சாப்பிட்டுக் கழிச்சாச்சு. மறுநாள் விசா ரெனிவலுக்கான நேர்காணல் முடிஞ்சு கைரேகைகள் இன்னபிற சமாசாரங்களைக் கொடுத்துட்டு ரயிலுக்கு வரும் முன்னர் நம்ம இஷ்டமான சங்கீதாவிலே சாப்பாடு வாங்கலாம்னு போனோம். மீ எப்போவும் மு.ஜா. மு. அ. ஆகையால் தயிர் சாதம் போதும்னு சொல்ல, ரங்க்ஸும் தனக்கும் அதுவே போதும்னு இரண்டு தயிர்சாதம் வாங்கினார்.  அங்கே காஃபி நல்லா இருக்கும்.  ஃபில்டர் காஃபி என்பதால் இரண்டு காஃபியும் ஃப்ளாஸ்க்கிலே (ஃப்ளாஸ்க் கையோட எடுத்துட்டுப் போயிடுவோமே!  வீட்டிலிருந்து கிளம்பினால் காஃபியும் வீட்டிலேயே போட்டு எடுத்துட்டுப் போயிடுவோம்) வாங்கிக் கொண்டோம்.

தயிர்சாதம் கொடுத்தது ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில்.  அதைப் பார்க்கையிலேயே எனக்கு நம, நமவென்றிருந்தது. நான் சாப்பிடுவது எல்லாம் கொஞ்சம் தான். ஹிஹிஹி, நேரில் பார்த்தவங்க நம்பமாட்டேன்னு சொல்லிக்கிறது காதிலே விழுது!  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்க மருத்துவரும் அதைத் தான் சொல்றார்.  ஒரு வாரத்துக்கு எல்லாரையும் பக்கத்திலே உட்கார்த்தி வைச்சுட்டுச் சாப்பிடணும்னு முடிவு செய்திருக்கேன். சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடுவேன் என்றாலும் அந்த டப்பாவில் இருக்கும் தயிர்சாதம் என் ஒருத்திக்கே போறாது போல் இருந்தது. ரங்க்ஸுக்கு எப்படிப் போதும்?

ஒரு தீப்பெட்டி சைஸ் டப்பாவில் ஒரே ஒரு ஸ்பூன் சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர், அல்லது பாலை விட்டு, இரண்டு உடைச்ச மு.ப. இரண்டு பச்சை திராக்ஷை, இரண்டு காய்ந்த கிஸ்மிஸ், ஒரு டீஸ்பூன் மாதுளை முத்துக்கள் போட்டு லூஸாகப்( அதாவது தளரப் பிசைந்து) பிசைந்து வைச்சிருந்திருக்காங்க.  இது வீட்டில் போய்த் தான் தெரியும்.  வீடு வரும் வரை ரயிலில் பொதுப் பெட்டியில் முன்பதிவு என்பதால் சாப்பிட வசதி இல்லைனு பிரிக்கலை.  (முன் கூட்டித் திட்டமிடாததால் ஏசி கிடைக்கவில்லை. ) எனக்கு அந்த தயிர்சாதப் பார்சலைப் பார்த்ததிலே இருந்து மன உளைச்சல் தாங்கலை.  நல்லவேளையாக ரயிலில் இட்லி விற்றுக் கொண்டு வந்தாங்க. ஒரு பாக்கெட் இட்லி கேட்டேன். ரங்க்ஸுக்கோ இரண்டுமாக வீணாகிவிடும்னு கவலை. ஆனால் எனக்கு சர்வ நிச்சயமாய் இதெல்லாம் பத்தாதுனு தெரிஞ்சு போச்சு. ஆகையால் பிடிவாதம் பிடிச்சேன்.

நான் கேட்டப்போ இட்லி பார்சல் தீர்ந்து போச்சு. எடுத்துட்டு வரேன்னு போனவர் போனவர் தான். விருத்தாசலம் வரும் வரை வரவே இல்லை. விருத்தாசலத்தில் ஸ்டேஷன் கான்டீன்காரங்க வேறே பிடுங்கி எடுத்தாங்க. அது எப்படி இருக்குமோனு சந்தேகத்திலே வாங்கலை.  ஒருவழியா ஐஆர்சிடிசி காரரே கொண்டு வரவும் ஒரு பாக்கெட் இட்லி வாங்கினால் சட்னி இல்லையாம்.  இரவு/மாலை ஆறரைக்கு அப்புறமா நோ சட்னி டேயாம். சாம்பார்னு அரைக்கரண்டி ஒரு திரவம் உள்ள பாக்கெட்டைக் கொடுத்தார். ரங்க்ஸை இப்போச் சாப்பிடப் போறீங்களானு கேட்டதுக்கு இல்லை வீட்டிலே போய்த் தான் எனச் சொல்லிவிட்டார். நல்லவேளையா வீட்டிலே ஃப்ரிஜில் சட்னி, மிளகாய்ப்பொடி எல்லாம் இருந்தது.  வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம்னு நானும் உள்ளே வைச்சுட்டேன்.  வீட்டுக்கு வர அன்னிக்கு ராத்திரி ஒன்பதரை மணி ஆச்சு. ஒரு மணி நேரம் ரயில் தாமதம்.

வீட்டிலே வந்து சாதம் டப்பாவைத் திறந்தால் ஒரே ஒரு ஸ்பூன் தான் சாதம் இருக்கும் போல! ஒரே கொட, கொட!  வயிற்றெரிச்சல்.  இட்லியைப் பிரிச்சால் நாலு இட்லி. நல்ல வேளையா சுமாரான சைசில் இருந்தன.  ரங்க்ஸ் இட்லி வேண்டாம்னு சொல்ல, கஷ்டப்பட்டு மி.பொ. சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன்.  அந்தக் கொட, கொட தயிர்சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு ரங்க்ஸ் சொன்னார்.  "அரிசி போட மறந்துட்டாங்க போல! வெறும் தயிரோ/பாலோ தான் இருக்கு இதிலே! " என்றாரே பார்க்கலாம்!

இந்தச் சாப்பாடு விலை என்ன தெரியுமா?  ஒரு தயிர்சாதம் 50 ரூபாய். கொள்ளையிலும் கொள்ளை மஹா, மெகா, அநியாயக் கொள்ளையா இருக்கு!
என்னதான் விலைவாசி ஏறி இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?  அங்கே டிஃபன் நல்லா இருக்கும் என்பதால் ரங்க்ஸ் வேறே ஹோட்டல்களுக்குப் போகவும் சம்மதிக்க  மாட்டார்.  அதான் கஷ்டமே!  இன்னொருத்தர் முழுச் சாப்பாடு வாங்கினார். அவருக்கு முழுச்சாப்பாடு மட்டும் எப்படிக் கொடுத்தாங்கங்கறீங்க?  ஒரு கையகல ப்ளாஸ்டிக் தட்டிலே

மூணு ஸ்பூன் சாதம்,

அரை ஸ்பூன் பச்சைப்பயறுபோட்ட கீரை

அரை ஸ்பூன் சாம்பார்,

அரை ஸ்பூன் ரசம்

கால் ஸ்பூன் மோர்/தயிர்

நோ ஊறுகாய்

ஒரு சின்ன அப்பளம்

இதுக்கு அவங்க வாங்கற காசு 150 ரூபாய்.  பேர் முழுச்சாப்பாடு.  இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர் இல்லையா?  அம்மா உணவகத்தில் கூட்டம் கூடுவதன் காரணமே அன்று தான் புரிய வந்தது. :(

Thursday, April 24, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? -- 9

அலுவலகம் செல்லும் முன்னர் மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.  அங்கே மருத்துவரிடம் தன் கவலையைச் சொல்லித் தன்னை சோதனை செய்யவும் சொன்னான்.  அவன் கவலையைப் பார்த்துச் சிரித்தார் மருத்துவர்.  குடும்ப நண்பர் என்பதால் அவனைத் தவறாக நினைக்கவில்லை.  எல்லாப் பரிசோதனையும் பண்ணிவிட்டு மாலை வரச் சொன்னார்.  அலுவலகம் சென்றவனுக்கு வேலையே ஓடவில்லை. இதே நினைவாக இருந்தான்.  மாலை வீடு திரும்புகையில்  மருத்துவரிடம் சென்று தன் சோதனைகளுக்கான முடிவைத் தெரிந்து கொண்டு மனம் அமைதி அடைந்தான்.  பின் வீட்டுக்குச் சென்று இன்றாவது கதவை நன்கு தாளிட்டுத் தூங்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.  ஆனால்........

அவன் சாப்பிட அமர்ந்தான்.  சாந்தி அன்று அவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்து வைத்திருந்தாள்.  வீடே அமைதியாக இருந்தது.  குழந்தைகள் சப்தத்தைக் கூடக் காணோம்.  அங்குமிங்குமாய் வாரி இறைந்து கொண்டிருந்த விளையாட்டுச் சாமான்கள் எவையும் இல்லை.  என்ன ஆயிற்று? சமையலறையில் வேலைகளில் மும்முரமாக இருந்த சாந்தியைப் பார்த்தான்.
சப்தமிடாமல் பின்னால் சென்று அவளை அணைத்தான்.  அப்படியே திரும்பிப் பார்த்துச் சிரித்தாள் சாந்தி.

"குழந்தைகள் எங்கே?"

"ஒரு கார்ட்டூன் சினிமாவுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு சென்றிருக்கிறார்கள்."  என்றாள் சாந்தி.

"அது? உன் செல்லப் பிசாசு?"

"ஆஹா, அதைக் குறித்தும் கவலையா?  தூங்குகிறாள்.  இன்னும் ஒரு மணி நேரமாவது தூங்குவாள்.  குழந்தைகளும் அப்புறம் தான் வருவார்கள்.  அதற்குள்ளாக நீங்க சாப்பிடுங்க. " என்றாள்.

"வேண்டாம்.  என் குழந்தைங்க இல்லாமல் நான் சாப்பிட மாட்டேன்." என்றான் ரவி.  முகத்தை வலித்துக் கொண்டு போலியாகப் பழித்துக் காட்டினாள் சாந்தி.

"என்ன, இன்னிக்கு செம குஷி போலிருக்கு?" என்றான் ரவி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. " என்ற சாந்திக்குச் சட்டெனக் கண்களில் நீர் கட்டியது.  "நம்ம இரு குழந்தைகளும் போனப்புறமா இன்னிக்குத் தான் ஏனோ மனம் கொஞ்சம் அமைதியா இருக்கு!" என்றாள்.

"அப்போ, ராத்திரிக்கு?" என்று ரவி கண்களைச் சிமிட்ட, திட்டவட்டமாக மறுத்தாள் சாந்தி.  "சின்னதுக்கு உடம்பு சரியாகட்டும். இன்னிக்குத் தானே 2 ஆவது நாள்.  ஐந்து நாளாவது ஆகும்னு டாக்டர் சொன்னார்." என்றாள்.

கொஞ்சம் ஏமாற்றம் தான் ரவிக்கு.  இருந்தாலும் சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அறைக்குச் சென்று உடைமாற்றினான்.  உடைமாற்றுகையில் அவன் கால்களைப் பிஞ்சுக்கைகள் கட்டிக் கொண்டன.  கீழே குனிந்து பார்த்தால் அந்த நாடோடியின் குழந்தை.  அவன் கால்களைக் கட்டிக் கொண்டு தூக்கச் சொல்லிக் கொஞ்சியது.  பற்களைக் கடித்துக் கொண்டே அதைத் தன் கால்களிலிருந்து நீக்கவேண்டிக் குனிந்தான் ரவி.  அவ்வளவு தான்! எப்படியோ அவன் தோள்களில் ஏறிவிட்டது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.  தன்னிருகால்களாலும் அவனை இறுக்கிக் கொண்டு விட்டது.

ரவி அதிர்ந்தே போனான்.  இது என்ன, குழந்தையா இல்லை பிசாசா?  இப்படி வலுவாக ஒரு குழந்தையால் கட்டிக்கொள்ள முடியுமா?  மெதுவாகவே அதைப் பிரிக்க முயன்றான் ரவி.  உடனே அது பெருங்குரலில் அழ ஆரம்பிக்க, சமையலறையில் இருந்து ஓடோடி வந்தாள் சாந்தி.  அவனைப் பார்த்துக் கோபமாக, "அடிச்சீங்களா, குழந்தையை?" என்று கேட்க, ரவிக்கு அவள் மேல் கோபம் வந்தது.

"முதல்லே இந்தப் பிசாசை என்னிடமிருந்து பிரிச்சு எடு!" என்றான் கோபமாக.

சாந்தி எவ்வளவோ முயன்றும் அந்தக் குழந்தை ஷோபா அவனை விடவே இல்லை.  இறுக்கிக் கட்டிக் கொண்டு சாந்திக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டது.  "சதிவேலை!  சதிவேலை!" என்று கத்தினான் ரவி.

"என்ன சொல்றீங்க? எட்டு மாசக் குழந்தை சதியா பண்ணும்?"  என்றபடி குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு அவனிடமிருந்து வாங்க முயன்றாள்.  ம்ஹூம்!  அதை மடியில் வைத்துக் கொண்டே ரவி சாப்பிட்டு முடிக்கும்வரை அது அவனை விடவே இல்லை.  ரவியின் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது.  மெளனமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தன் அறைக்குச் சென்று கதவுகளைத் தாளிட்டுவிட்டுப் படுத்தான்.  தூக்கம் என்னமோ சரியாக வரவில்லை.  என்ன என்னமோ கனவுகள்!  காலை எழுந்திருக்கும்போதே லேசான தலைவலி இருந்தது.  ஜூரமும் இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது.

தன் பிரமை என அந்த எண்ணத்தை உதறிவிட்டு ரவி வழக்கம்போல் குளித்து அலுவலகம் சென்றான்.  அவனால் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. தொண்டை முழுங்கும்போது சிரமம் தெரிந்தது.  தோள்பட்டை தூக்க முடியவில்லை. முகம் எல்லாம் ஜிவு ஜிவு எனச் சிவந்திருந்தது.  அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு மருத்துவரைச் சென்று பார்த்தான் ரவி. அவன் சந்தேகத்தை அவரும் உறுதி செய்தார்.  ரவிக்கும் பொன்னுக்கு வீங்கி வந்துவிட்டது.  அவன் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்த மருத்துவர், "நல்லதே நினைப்போம்!" என்றார்.  

Tuesday, April 22, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? -- 8

ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதில் அந்தக் குழந்தை தவழ ஆரம்பித்திருந்தது.  எல்லா அறைகளுக்கும் தவழ்ந்தே செல்லவும் ஆரம்பித்திருந்தது.  இப்போது அந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லையா?  தவழ்ந்து வந்து எல்லாருடனும் படுத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்.  அப்போதெல்லாம் ரவிக்குப் பயமாகவே இருக்கும்.  அது கிட்டே வந்து படுத்துக் கொண்டு இருக்கும் இந்த இருவரையும் ஒரேயடியாக இல்லாமல் பண்ணிடப் போகிறதேனு பயப்படுவான். யோசித்த ரவிக்கு அப்போது.......

சாந்தி அவனை உரக்க அழைக்கும் குரல் கேட்டது.  "ரவி, இங்கே வாங்க கொஞ்சம்!" என்று அழைத்தாள். ரவி சாந்திக்குத் தான் என்னவோ ஏதோ என அலறி அடித்துக் கொண்டு விரைந்தான்.  அங்கே சென்றவனுக்கு அதிர்ச்சி.  சாந்திக்கு ஒன்றும் இல்லை.  அந்தக் குழந்தை தான் சுருண்டு படுத்திருந்தது.  ரவிக்கு ஆச்சரியத்தின் மேலே ஆச்சரியம்.  இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது! என்ன ஆச்சு!  ஒரு வழியாய்த் தொலைந்து விட்டதா? அப்பாடா, நிம்மதி என நினைத்தவாறே, "என்ன சாந்தி? என்ன ஆச்சு?"என்று கேட்டான்.  "குழந்தையைப் பாருங்கள்!" என்றாள்.  கொஞ்சம் தயக்கத்துடனேயே குழந்தையைத் தொட்டான் ரவி.  குழந்தை உடல் அனலாகக் கொதித்தது.  சட்டெனக் கையை எடுத்தான் ரவி.

"டாக்டரிடம் காட்டினாயா? அல்லது அவரை வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

"வேண்டாம்;  வந்துவிட்டுப் போய்விட்டார்.  குழந்தைக்குப்பொன்னுக்கு வீங்கி!(mumps)  இது ஒட்டுவாரொட்டி என்பதால் யாரையும் கிட்டே வரவேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்.  அது தான் குழந்தைகளை இங்கே விடவில்லை.  முக்கியமாய்ப் பையனையும், உங்களையும் கிட்டே நெருங்க விடவேண்டாம்னு சொல்லி இருக்கார். " மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சாந்தி.  'நான் சொல்வது புரியுதா?' என்றபடி.  கொஞ்சம் ஏமாற்றத்தோடு அவளைப் பார்த்த ரவி, 'சரி' என்றபடி வெளியே சென்றுவிட்டான்.  தானே சாப்பிட்டுவிட்டுத்  தொலைபேசியை எடுத்து குழந்தையைப் பார்த்த மருத்துவரிடம் பேசினான்.  அவர் சொன்ன தகவல் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும், இன்னொரு பக்கம் நிம்மதியையும் அளித்தது.  தன் குழந்தைகளோடு சேர்ந்து சிறிது நேரம் விளையாடிவிட்டு அவர்களைத் தூங்க வைத்துவிட்டுத் தானும் அறைக்குச் சென்று படுத்தான்.  ஒருவேளை தன் குழந்தைகளுக்கு இரவில் தான் தேவைப்பட்டால் என்பதால் அறைக்கதவைத் தாழிடவில்லை.

தன்னுடைய கார்ட்டூன் வேலைகளில்  ஆழ்ந்த ரவி புதியதாய் இரு கார்ட்டூன் படங்களுக்கா வேலைகளில் ஆழ்ந்தான்.  கீழே உட்கார்ந்து கொண்டு அவற்றைச் செய்து கொண்டிருந்தவன். அப்படியே எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். ஒரு தலையணையை மட்டும் எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போனான்.  இரவு முழுதும் நல்ல தூக்கம்.  அவன் மேல் மெத்தென ஏதோ இருப்பதாகத் தோன்றவே திடுக்கிட்டுக் கண் விழித்தான் ரவி.  சின்னச் சின்னக் கைகள், சின்னச் சின்னக் கால்கள். அவன் கழுத்தை அந்தக் கைகள் கட்டிக்கொண்டிருக்க கால்கள் அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன.  ஒரு நிமிடம் இறந்து போன தன் நான்காவது குழந்தை நினைவு அவனுக்கு வரக் கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான்.  அணைத்தவனுக்குக் குழந்தையை வருடும்போது தெரிந்த மாறுதல்கள் புரியவரச் சட்டெனத் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து குழந்தையைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டுப் பார்த்தான்.

அந்தப் பிசாசுக் குழந்தை தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டிருந்தது.  எரிச்சல் மேலோங்க ரவி அதைப் பிடுங்கித் தன் கைகளில் தூக்கிய வண்ணம் சாந்தியை நோக்கிச் சென்றான்.  "என்ன இது" என்றான் கடித்த பற்களுக்கு இடையே!  சமையல் வேலைகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்த சாந்தி அவனை நிமிர்ந்து பார்த்துக் கள்ளமில்லாமல் சிரித்தாள்.  "தொட்டிலில் விட்டு விட்டு வந்தேன்.  அதுக்குள்ளே கால் முளைச்சுடுத்து போல!" என்றாள்.

"உன்னுடன் வைத்துக்கொள் இதை எல்லாம்!" என மீண்டும் கோபமாகப் பேசிய ரவி அந்தக் குழந்தையை அப்படியே கீழே வைத்துவிட்டு வெளியேறினான்.  குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினவனுக்குச் சட்டெனப் பொறி தட்டியது.  அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள். ஆஹா,  ஏமாந்து விட்டேனோ! எனப் பதறிப் போனான்.  எதற்கும்  அலுவலகம் செல்லும் முன்னர் மருத்துவரைப் போய்ப் பார்த்துவிட்டே செல்வது என முடிவு செய்தான். 

Sunday, April 20, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ----7

அந்தக் குழந்தையைச் சாதாரணமாய்ப் பார்ப்பவர் எவருக்கும் அதன் பார்வையின் மாறுதல்கள் தெரிவதில்லை. ஆனால் ரவியை அது பார்க்கும்போதெல்லாம்.  அந்தக் கண்களின் கருமணிகளின் ஒவ்வொரு அசைவிலும் இனம் காண முடியா வெறுப்பையும், கொடூரத்தையுமே காண்கிறான்.  அன்று அப்படித்தான் அவனுடைய மூத்த மகன் இறந்து போய் ஒரு மாதம் ஆகி இருந்தது.  சின்னவனும், அவனுடைய ஒரே பெண்ணும் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது அவன் பெண் விளையாட்டுப் போக்கில், "அண்ணாவையும் கூப்பிடு!" என இரண்டாம் மகனிடம் சொல்ல, அவன் அப்பாவியாக, "அண்ணா தான் செத்துப் போயிட்டானே!" என்று சொல்ல, அவன் பெண்ணும், "ஓ, அப்படி எனில் இனிமேல் அண்ணா நம்மோடு விளையாடவே மாட்டானா?" என்று ஏக்கமாய்க் கேட்டாள்.  அங்கே இருந்த ரவியால் கண்ணீரை அடக்க முடியவில்லை.  குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்க வேண்டி அங்கிருந்து எழுந்து சென்றவன் அறையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலுக்கு அருகே வந்து நின்று பார்த்தான்.

குழந்தை தூங்குகிறதோ என அவன் நினைக்கையிலேயே அது தன் பளிங்குக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தது.  அதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்?  கடவுளே, இந்தக் குழந்தையிடமிருந்து எப்பாடுபட்டாவது மற்ற இருவரையும் காப்பாற்றி ஆக வேண்டுமே என நினைத்துக் கொண்டான்.  அடுத்த கணம் அவன் நினைத்தது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை தொட்டிலில் இருந்தே அவன் குழந்தைகள் விளையாடும் இடம் நோக்கிக் கொடூரமான பார்வையைச் செலுத்திவிட்டுப் பின் அவனையும் பார்த்தது. அவனைப் பார்த்து அது சிரித்த சிரிப்பில் ஏளனம் தென்பட்டாற்போல் ரவிக்குத் தோன்றியது. "விட மாட்டேன், அவர்களை! " எனச் சொல்லாமல் சொல்லுவது போலவும் தோன்றியது.  ரவி வேகமாய் அங்கிருந்து அகன்றான்.  இனம் தெரியாக் கவலையுடனும், பாசத்துடனும் குழந்தைகளை அணைத்துக் கொண்டான்.  தொட்டிலில் குழந்தை கடகடவெனச் சிரித்தது.  உன் பாசமும், நேசமும் இன்னும் எத்தனை நாட்கள் எனச் சொல்வது போல் ரவிக்குத் தோன்றியது.

சாந்தியிடம் சென்று மறுபடி மறுபடி கெஞ்சினான்.  அவளுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறிப் புரிய வைக்க முயன்றான்.  சாந்தி காது கொடுத்தே கேட்கவில்லை.  அப்போது ரவிக்குள் ஒரு யோசனை.  சாந்தியும் அவனும் பிரிந்து இருப்பதால் தானே இந்த இடைவெளி?? ஏன் பிரிந்து இருக்க வேண்டும்?  அதுவும் இந்தக் குழந்தைக்காக!  சாந்தி அவன் மனைவி.  பத்து வருடங்களாக அவனுடன் இன்பத்திலும், துன்பத்திலும் பிணைந்தவள்.  எங்கிருந்தோ வந்த ஒரு அநாதைக் குழந்தைக்காக அவர்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும்?  இன்றிரவே சாந்தியிடம் சென்று அவளிடம் இதமாகப் பிரியமாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும் என ரவி நினைத்துக் கொண்டான்.  ரவியின் முகம் திடீரெனப் பளிச்சிட்டதைக் கண்ட சாந்தி, என்ன விஷயம் என விசாரிக்கையில், ரவி அவளைப் பார்த்துச் சிரித்த வண்ணம், இரவு சொல்கிறேன் என்றதும், அவன் பார்வையையும், சொன்னதின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உள்ளூர சந்தோஷமே அடைந்தாள்.

கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக விலகி இருந்த ரவி தன்னை நெருங்குவது குறித்து அவளுக்கு மகிழ்ச்சியே.  அவனைத் தடுக்கக் கூடாது என்றும் நினைத்தாள்.  உள்ளூர ரவிக்கும், அவளுக்குமாய்ப் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்தது  நினைக்கையில் சாந்தியின் மனதிலும் சங்கடமாகத் தான் இருந்தது.  அதைப் போக்க வேண்டும்.  அதற்கு அவளும் ரவியும் மீண்டும் இணைய வேண்டும்.  அவர்கள் சொந்த ரத்தத்தில் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.  ரவியைப் பார்த்தாள் சாந்தி. அவள் பார்வையிலேயே அவள் மனதைப் புரிந்து கொண்ட ரவி அவள் கைகளைப் பிடித்து அழுத்தினான். இருவர் கைகளும் இணைந்த அந்த நொடியிலேயே இருவருக்கும் அவரவர் மனமும், எண்ணங்களும் புரிய வந்தன.  ஆனால் அடுத்த நொடியிலேயே இந்தச் சனியனையும் அவள் பக்கத்தில் படுக்க வைக்காமல் இருக்க வேண்டுமே என ரவியும், அந்தக் குழந்தையை ஒன்றும் சொல்லாமல் இருக்கணுமே என சாந்தியும் நினைக்கக் கைகள் விலகின.  வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்த ரவி இரவுப் பொழுதுக்குக் காத்திருக்கலானான்.  அன்று அலுவலில் வேலை காரணமாகக் கொஞ்சம் வெளியே சென்றிருந்த ரவி மாலை வீடு திரும்பவே நேரம் ஆனது.

என்றாலும் காலை அலுவலகம் கிளம்பும்போது சாந்தியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை நினைவில் வரக் கொஞ்சம் சந்தோஷத்துடனும், உல்லாசத்துடனுமே வீட்டுக்கு வந்தான்.  அவன் வரும்போதே அவனிடமிருந்து மல்லிகை வாசம். வீட்டுக்கு வந்தவன் கண்கள் எதிரே சாந்தி தென்படவே இல்லை.  அவன் குழந்தைகள் இரண்டும் படித்துக் கொண்டிருந்தன. சின்னவள் சுஜா தன் கின்டர் கார்ட்டன் படிப்புக்கான புத்தகங்களில் வண்ணம் அடித்துக் கொண்டிருக்கப் பெரியவன் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். "அம்மா, எங்கே?" என அவர்களிடம் கேட்டான் ரவி.  அதற்கு சுஜா, "குட்டிப்பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை.  அதான் அம்மா அங்கே இருக்கா. எங்களை எல்லாம் அங்கே வரக் கூடாதுனு சொல்லிட்டா!" என்றாள் வருத்தமாக.

"அப்படி என்ன உடம்பு?" என்று கேட்டான் ரவி.



இனி வரப்போகும் நிகழ்வு மூலத்தில்  உண்டு. ஆனால் முன், பின்னாக இருக்கும் என நினைக்கிறேன்.  இதற்கு முன்னர் கதைச்சுருக்கம் கொடுத்தப்போ இந்த நிகழ்வைப் பின்னால் வரும்படி அமைத்திருந்தேன். இப்போது முன்னால் அமைத்திருக்கிறேன்.  இது என் சொந்த விருப்பம் எனச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் அவ்வப்போது தான் எழுதுகிறேன். முன்னால் எழுதி வைத்துக்கொள்ளவில்லை.  நேரமும் இல்லை.  ஆகையால் கதையை எழுதும்போது அதன் போக்கில் போக வேண்டி இருக்கு! :(

Friday, April 18, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ---6

இங்கே

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதினதைப் படிக்கலாம்.  இனி தொடர்ச்சி!

அக்கம்பக்கம் எல்லாம் கசமுசவென்ற பேச்சு.  அடுத்தடுத்து இரு குழந்தைகள், அதுவும் ஆரோக்கியமாகவே இருந்த குழந்தைகள் இறந்திருக்கின்றன.  யார் காரணம்? அவங்களுக்குள் ஏதோ சண்டையாமே?  அதனால் ஒருவர் மேல் இன்னொருவர் கொண்டிருக்கும் ஆத்திரத்தைக் குழந்தைகளிடம் காட்டியதில் இப்படி ஆயிடுச்சோ? இல்லைனா அந்த வீட்டில் ஏதோ  காத்து, கருப்பு நடமாட்டம் இருக்குமோ?  நம்ம குழந்தைகளை அங்கே அனுப்பக் கூடாது.  துக்கம் விசாரிக்க வந்தவங்க அவங்களுக்குள்ளே பேசிக் கொண்டது இருவருக்குமே புரிந்தது.  ஆனால் இது தற்செயல் தான் என எப்படிச் சொல்வது?  பாலு தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான்.  இவன் ஏதோ மாத்திரையை மாத்திச் சாப்பிட்டிருக்கான்.  கிட்ட இருந்து கொடுக்காதது என் தப்பு.  சாந்தி நினைத்துக் கொண்டாள்.  அவளுக்கும் மனம் சமாதானம் ஆகலை என்றாலும் மற்றக் குழந்தைகள் இருக்கே.  அதுவும் புதிதாய் ஒரு பெண் குழந்தை வேறே.  சின்னக் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை. அம்மாக்காரி வேறே விட்டுட்டுப் போயிட்டா!  நாம் தானே பார்த்துக்கணும்!

ரவிக்கோ நெஞ்சு கொதித்தது.  எங்கிருந்த வந்த ஒரு பிசாசுக் குழந்தைக்காக என் குழந்தைகள் ஒவ்வொன்றாக பலி ஆகின்றன.  இந்த சாந்தி ஏன் புரிந்து கொள்ளவே இல்லை? அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!  ரவிக்குத் தலையே சுற்றியது.  அதற்குள்ளாக ஒருத்தர் வீட்டிலே மந்திர ஜபம் செய்தால் கெட்ட ஆவிகளோ, துர் தேவதைகள் நடமாட்டமோ இருந்தால் சரியாகும் என்று சொன்னார்.  அவர் நம்ம நல்லதுக்குத் தான் சொல்கிறார் என ரவிக்குப் புரிந்தது.  ஆனால் அந்தக் கெட்ட ஆவி, துர்தேவதை எல்லாமும் இப்போப் புதுசா வந்திருக்கும் ஷோபா தானே!  சாந்தி மட்டும் அவளை அநாதை விடுதியில் சேர்க்கட்டும்.  இந்த இரு குழந்தைகளையாவது ஒழுங்காக வளர்க்கலாம்.  இவங்களுக்காவது ஆபத்து வராமல் இருக்கணும்.  ரவிக்கு அப்போது இருந்த மனநிலையில் அவன் அந்த நண்பர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான்.  சாந்தியிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டு வீட்டில் மந்திர ஜபம் செய்ய ஏற்பாடுகள் ஆயிற்று.

வந்திருந்தவர் மஹாப் பெரிய மந்திர சித்தி உள்ள பெரியவர் என அனைவருமே ஒருமனதாகச் சொன்னார்கள்.  அவர் ஜபம் முடித்ததும் ரவி அவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லிப் பேசினான்.  வீட்டில் நடந்த விஷயங்களை விவரித்தான்.  புதிதாக வந்த குழந்தையைப் பற்றியும், அதன் பார்வையையும், அந்தக் குழந்தையால் தான் இந்த விபத்துக்கள் என்றும் தன் கடைசிக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து அந்தக் குழந்தைதான் தள்ளி விட்டிருக்க வேண்டும் என்றும், பெரிய பையனை மாத்திரையை மாற்றி எடுக்க வைத்ததும் அந்தப் பெண்ணின் அந்தப் பார்வையால் தான் எனவும் எடுத்துச் சொன்னான்.  பெரியவர் அனைத்தையும் சிரித்த வண்ணம் கேட்டார்.  குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார்.  ரவிக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது.  சாந்தியிடம் பெரியவர் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைச் சொல்லிக் குழந்தையை எடுத்துவரச் சொன்னான்.  அவள் அசந்து தூங்குவதாகவும், தன்னால் இப்போது குழந்தையைத் தொந்திரவு செய்ய முடியாது என்றும் சாந்தி சொல்ல, ரவி கோபமாக அவளை முறைத்துவிட்டு, தானே பெரியவரைத் தொட்டிலருகே அழைத்துச் சென்றான்.  குழந்தை நன்கு தூங்கிக் கொண்டிருந்தது.

தான் தூக்கினால் அந்தக் குழந்தைக்குப் பிடிக்காது எனச் சொல்லியவண்ணம் ரவி அதைத் தூக்கப் போனான்.  குழந்தை தொட்டதும் கண் திறந்து பார்த்து மோகனமாய்ச் சிரித்தது.  அதன் கண்கள் சாதாரணமாகவே இருந்தன.  ரவி எப்போதும் பார்க்கும் சிவந்த கல்லைப் போன்ற மணிகளையோ, கோபத்தின் கொடூரமோ கண்களில் சிறிதும் தெரியவில்லை.  அதற்குள்ளாக சாந்தி அங்கே வந்து, பாருங்க, இந்தக் குழந்தையைப் பாருங்க, என் கண்ணின் மணியைப் பாருங்க.  இந்தக் குழந்தை வந்ததில் இருந்து நான் மாறிடுவேன்னு ரவிக்கு உள்ளூரப் பொறாமை.  அதனால் இப்படி எல்லாம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்." என்று சொல்லிய வண்ணம் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள்.  சற்று நேரம் பெரியவருடன் ரவி நின்று பார்த்தும் குழந்தையிடம் எவ்வித மாறுதலும் இல்லை.  ரவி குழந்தையை அதன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தான்.  சாந்தியும் குழந்தையை அவன் பக்கம் திருப்பினாள்.  ஒரு கணத்துக்கும் குறைவான நேரம் அந்தக் குழந்தை ரவியைப் பார்த்தபோது அவன் நெஞ்சில் என்னிடமா மோதுகிறாய்? என அந்தக் குழந்தை கேட்பது போல் தெரிந்தது. பெரியவரைப் பிடித்து உலுக்கினான்.  "பாருங்கள், இப்போது, அது என்னைப் பார்க்கும் பார்வையைப் பாருங்கள்." என்று உலுக்கினவனுக்கு அதிர்ச்சி.  குழந்தை அவனையும் பார்த்து மோகனச் சிரிப்புச் சிரித்தது.  தன்னைத் தூக்கிக் கொள்ளச் சொல்லிக் கை, கால்களை உதைத்துக் கொண்டு சிரித்தது. செல்லமாய்ச் சிணுங்கியது.

அந்தக் கண்கள்!  அவை கண்களா இல்லை பளிங்குக் கற்களா? ஒரு நேரம் உணர்ச்சி மிகுந்த பார்வை, இன்னொரு நேரம் ஆணையிடும் பார்வை, இன்னொரு நேரம் கொடூரப் பார்வை, இன்னொரு நேரம் குழந்தைப் பார்வை. இப்படி எல்லாம் வித்தியாசமாகப் பார்க்கிறதே!  ரவிக்கு எப்படியானும் அந்தக் குழந்தையை யாரிடமாவது கொடுத்தால் போதும்.  இருக்கும் ஒரு மகனையும், ஒரு மகளையுமாவது கவனமாகக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தலை தூக்கியது.  சாந்தியைப் பார்த்துச் சொல்லத் தொடங்குகையில் குழந்தை களுக்கெனச் சிரிக்க அதை அருவருப்புடன் பார்த்தான்.  அப்போது அது அவனைப் பார்த்த பார்வை.  அவன் என்ன நினைக்கிறான் என்பதை அந்தக் குழந்தை புரிந்து கொண்டு விட்டது.  அது புரிந்து கொண்டிருக்கிறது என்பதை ரவியும் புரிந்து கொண்டான்.  இருவருக்கும் மட்டுமே தெரிந்த இந்த விஷயத்தை சாந்தியிடம் எப்படியாவது சொல்ல வேண்டும்  என ரவி துடித்தான்.

ஆனால் சாந்தியோ அவனைக் கோபத்தோடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையை இப்படிக் குற்றம் சொல்கிறாரே.  நம் குழந்தைகள் இறந்துவிட்டனதான்.  இல்லை எனவில்லை.  அதற்காக அந்தப் பழியை இந்தக் குழந்தையின் தலை மீதா போடுவது! சாந்தி கோபத்துடன் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.  ரவி செயலற்று நின்றான்.  பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு இந்த மந்திர ஜபத்தின் மூலம் நல்லதே நடக்கப் பிரார்த்திக்க்றேன் எனப் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ரவிக்கு அந்தக் குழந்தையின் பார்வையே அவனைச் சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது.  எவ்வளவு அர்த்தங்கள் அந்தப் பார்வையிலே!  இரு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றுவது?  ரவி தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தான். 

Wednesday, April 16, 2014

மூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்!

குழந்தை வரம் வேண்டித் தவிக்கும் ஒரு பெண்.  அதே சமயம் இன்னொருவரின் குழந்தைகளின் விஷமத்தை வெறுக்கவும் வெறுக்கிறாள்.  குழந்தைகளோடு அதிகம் பழகாதவளோ கதாநாயகி என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தக்கதை. இரண்டும் கெட்டான் குழந்தைகள் என்று சொல்லி விட்டுப் பின் அந்தக் குழந்தைகளின் விஷமங்களைப் பொறுக்க மனமில்லை எனில் எப்படி? இது கொஞ்சம் ஆச்சரியத்தை அளித்தாலும் பொதுவாக எல்லார் வீடுகளிலுமே அவரவர் வீட்டுக் குழந்தைகளின் விஷமம் என்றால் பொறுத்துக் கொள்வார்கள். அதுவே அடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் எனில் கொஞ்சம் பொறுத்துக் கொள்வது சிரமம் தான்.  இங்கே கதாநாயகி வாய்விட்டு ஏதும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

 இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள் ஏனெனில் இந்தக் குழந்தைகள் அவள் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகளாகப் போய்விடுகின்றன. பிறந்தது முதல் பார்த்து வருகிறாள் என்பதோடு தங்களுக்கெல்லாம் ஒரு குழந்தையே பிறக்காத போது ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் என்பது உள்ளூர ஒரு பிரமிப்பாகவும் இருக்கிறது.  குழந்தைகள் வரும் சமயம் அவர்களுக்கு ஆகாரம் முதற்கொண்டு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  அதோடு இவளுக்குக் கல்யாணம் ஆனதே அந்த சிநேகிதியால் தான் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது என்பதால் நம் கதாநாயகிக்கு இப்படி நடந்து கொள்வது அதற்கான நன்றிக்கடனோ எனவும் நினைக்க வைக்கிறது.

அந்த சிநேகிதி குழந்தைகளோடு வெகு நேரம் இங்கே கழிக்கிறாள். குழந்தைகள் பொருட்களை உடைப்பதும், புத்தகங்களைக் கிழிப்பதுமாக இருப்பதால் வந்து போன பின்னர் வீட்டைச் சுத்தம் செய்வதும் கஷ்டமாக ஆகிவிடுகிறது.  தனக்குக் குழந்தை பிறக்கவில்லையே என நினைத்தாலும் வேறோரு குழந்தை இப்படி எல்லாம் வந்து விஷமம் பண்ணுவதைப்பொறுக்கவும் முடியவில்லை.  அது தன் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகள் என்பதால் வாயைத் திறக்கவும் முடியவில்லை.  ஒரு குழந்தைக்கே தவமிருக்கும் தங்களுக்கு (ஆம், அந்த சிநேகிதிக்கும் குழந்தை பிறக்கவில்லை.) இரட்டைக் குழந்தைகள் பிறந்த அந்த நாத்தனாரைப் பார்த்து உள்ளூர ஒரு விதப்பொறாமை என்று சொல்லலாமோ? மேலும் அக்கம்பக்கம் எல்லாம் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவரவருக்குத் தெரிந்த வைத்தியம், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் என்று சொல்லி மனதை நோகடிக்கின்றனர்..


அதிலும் கல்யாணம் ஆகி ஒரு வருடத்துக்கும் மேல் என்று ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம்.  அந்தப்பெண் பரிகாரங்கள், பூஜைகள், கோயில்கள் விஜயம் என அனைவராலும் கட்டாயப்படுத்தப் படுவதோடு வளைகாப்புப் பெண்ணோடு மறுமணை என்ற பெயரில் வளை அடுக்கிக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுவாள். கல்லைக் குழந்தையாகப் பாவித்து அதற்குக் குளிப்பாட்டி, மையிட்டுப் பொட்டெழுதி, பாலூட்டிச் சீராட்டி இந்தக் கல்லைப் போல் என் வயிறும் இருக்கே, கடவுளே நீயும் கல்லைப் போல் இருக்கியே, எனக்காக மனமிரங்க மாட்டாயா? என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.  குழந்தை பிறக்காத பெண்கள் தங்களுக்குள்ளாக மெளனமாக அழுவது மட்டும் வெளியே கேட்டால் உலகமே அதிரும்!  அத்தகைய பெரிய ஓசையாக இருக்கும்.


இதிலே ஒவ்வொரு முறையும் இந்தப்பரிகாரங்களுக்கு உட்படுவது என்னமோ பெண் தான்.  அந்தக் காலங்களில் வேண்டுமானால் ஆண்களில் மலட்டுத் தன்மை குறைவாக இருந்திருக்கலாம்.  ஆனால் தற்காலங்களில் உணவு முறை, சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றின் காரணமாக ஆண்களிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது.  என்ன உடைனு சொல்றேன்னு பார்க்கிறீங்களா?  இந்த உடை விஷயம் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது.  இறுக்கமான உடை அணியும் ஆண்களும், பெண்களும் இத்தகைய உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை.  அதிலும் பெண்கள் இப்போது "லெகீஸ்" எனப்படும் ஒரு வகை இறுக்கமான உடையை அணிகின்றனர்.  அதைக் குறித்துப் பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.  என்றாலும் நம் மக்கள் கேட்பதாக இல்லை. இதை எல்லாம் மீறி ஒருத்தருக்கு ஒரு வருஷத்துக்குள்ளோ, இரண்டு வருஷத்துக்குள்ளோ குழந்தை பிறந்தால் ஆச்சரியம் தான்.


ஆனால் இங்கே தோழிகள் இருவருக்குமே குழந்தைகள் இல்லை.  அதில் நம் கதாநாயகிக்குக் கொஞ்சம் ஆறுதல் தான். தனக்கு மட்டுமில்லாமல் தோழிக்கும் குழந்தை பிறக்கவில்லையே என ஒரு சின்ன ஆறுதல்.  ஆனால் அதிலும்  கொஞ்சம் மனம் சங்கடப்படும்படி ஒரு விஷயம்.  நம் கதாநாயகியின் கணவருக்கு  தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த  இந்த ரேவதியைக் கண்டால் இப்போதும் ஒரு புல்லரிப்பு, பரவசம் ஏற்படுகிறது.  அதற்கு மேல் எதுவும் இல்லை தான்.  ஆனால் ஒரு பெண் எதையும் நுணுக்கமாகக் கவனிப்பாள்.  அதிலும் தன் கணவன் தன்னைத் தவிர மற்றொரு பெண்ணைப் பார்க்கையில் எம்மாதிரி மனநிலையில் பார்க்கிறான் என்பதை அவளால் சரியாகக் கணிக்க முடியும்.  அப்படியே இங்கேயும் கணிக்கிறாள். ஆனாலும் அவளால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.  தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை அவளை அடங்கிப் போகச் செய்கிறதோ!

அவள் சிநேகிதியிடமும் இந்தக் குழந்தைகளைக் கூட்டி வராதே, என்னால் அப்புறம் அதுங்க செய்யும் விஷமக் காரியங்களின் விளைவுகளைச் சரி செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. அது தான் ஏன்? தோழியிடம் மனம் விட்டுப் பேசத் தனிமை தான் வேண்டும். அது இல்லாமல் தோழி குழந்தைகளோடு வரட்டும் என அனுமதிப்பது ஏன்?  கொஞ்ச நாட்கள் தான் என்பதாலோ? இருக்கலாம். ரேவதியின் நாத்தனார் நிரந்தரமாக இங்கே இருக்கப் போகிறவள் இல்லை;  அதனால் கடுமையான வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்னு இருக்கலாம். அதே சமயம் தோழியோடு மனம் விட்டுப் பேசியும் ஆகணும். ஆகவே தனக்குப் பிடித்த நெடுந்தொடர் முடிந்ததும் வரச் சொல்லுகிறாள்.

அப்படித் தோழி ஒரு நாள் வருகையில் ஒரு குழந்தை வீட்டிலேயே தூங்க இன்னொன்றை மட்டும் அழைத்துவர, அதுவும் இந்த வீட்டில் தூங்கி விடுகிறது.  சரினு நிம்மதியாப் பேசிக் கொண்டிருந்த தோழிகளுக்கு அதிர்ச்சியாக அந்தக் குழந்தை அறுபதாயிரம் ரூபாய் மடிக்கணினியைக் கீழே தள்ளிவிடுகிறது. சின்னக் குழந்தைக்கு என்ன தெரியும்!  அது பாட்டுக்குச் சிரிக்கிறது எவ்விதக் கல்மிஷமும் இல்லாமல். ஆனால் குழந்தையை அழைத்து வந்த ரேவதியும் தனக்குப் பொறுப்பே இல்லை என்பது போல் உடனே கிளம்பி விடுகிறாள்.  கணினி வேலை செய்யுமோ, செய்யாதோ, கணவர் வந்தால் என்ன பதில் சொல்வது! நம்மைக் கூட இதில் எதுவும் செய்ய விடமாட்டாரே என்றெல்லாம் கலங்கிப் போய் இருக்கும் கதாநாயகி  கணவர் வந்ததும் மெல்ல மெல்ல விஷயத்தைச் சொல்கிறாள்.

ஏற்கெனவே அந்தக் குழந்தைகள் செய்த விஷமங்களை எல்லாம் அடுக்கி, இன்றைய புதிய விஷமத்தைச் சொல்வதற்குள்ளாக அவள் மேல் நெருப்பு வந்து விழுகிறது.  ஆம், அவள் கணவரே அவளைப் பார்த்துப் பொருட்களைக் குறித்துக் கவலைப்படும் உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார்.  இது முழுக்க ஆணாதிக்கம் சார்ந்தது; சுயநலம் சார்ந்தது.  குழந்தை பிறப்பது என்பதற்குப் பெண்கள் மட்டுமே பொறுப்பு என்பது போலவும், தன் மேல் எவ்விதத் தவறும் இல்லை என்பது போலவும் சொல்லி விடுகிறார்.  என்னதான் பின்னால் தப்பை உணர்ந்து தலையை அடித்துக் கொண்டாலும் கீழே கொட்டிய பொருட்களை அள்ளலாமே தவிர, வார்த்தைகளை அள்ள முடியுமா?  திரும்ப வாங்க முடியுமா? சொன்னது சொன்னது தானே! அது என்னமோ ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாகப் பெண்ணினத்தை மட்டுமே குறை சொல்வது வழக்கமாகி வருகிறது.  வழக்கமாக இருக்கிறது. ஆணின் மேலும் தப்பு இருக்கலாம் என்றே அந்த ஆண்களுக்குக் கூடத் தோன்றுவது இல்லை. அதே போல் கதாநாயகியின் புகுந்த வீட்டுக்காரர்கள் ஒரு கத்தரிக்காயை வைத்துக் கொண்டு அதில் கூடப் புழு, பூச்சி இருப்பதாகவும், இவள் வயிற்றில் ஒன்றுமே வரவில்லை என்றும் ஏளனம் செய்வதைக் கண்டிருக்கிறார். இது அவருக்கும் தெரிந்தது தான். மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர் மனைவியைப் புண் படுத்துகிறார்.  சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்கிறார்.

பின்னர் ஏதுமே நடக்காதது போல் கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அதைப் பரிசோதனை செய்துவிட்டு கணினி சரியாக இருக்கு என்று இவ்வளவு நேரம் கவலைப்பட்ட மனைவியிடம் சொல்லாமல் நேரே அந்த ரேவதிக்குத் தொலைபேசிச் சொல்லி மகிழ்கிறார். இப்போதும் மனைவியையோ அவள் கவலையையோ ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.  தான் மணக்க இருந்து ஜாதகக் கோளாறினால் மணக்க இயலாத ரேவதியிடம் பேசுவதில் தான் அவர் மனம் லயிக்கிறது. அதில் ஒரு அல்ப சந்தோஷம்.  குத்துவிளக்கை ஒத்த மனைவி வீட்டில் தவமாய்த் தவமிருக்க, அவளை விட்டு இன்னொருத்தியிடம் பேசி மன மகிழ்ச்சி கொள்ளும் அவலம்.  ஆண்களுக்கே உரிய அலட்சியம் என்று சொல்லலாமா?

மனைவி எப்படி ஆனாலும் தனக்கு உட்பட்டவள், தான் என்ன சொன்னாலும், செய்தாலும் கேட்கக் கடமைப்பட்டவள் என்னும் எண்ணம் எனலாமா? முழு ஆணாதிக்கம் எனலாமா? இத்தனை நேரம் தவியாய்த் தவித்த மனைவியிடம் கணினி சரியாக இருக்கிறது என்பதைச் சொல்லக் கூட முடியாமல் மற்றொருத்தியிடம் பேசிச் சிரிக்கும் மனதை என்ன என்பது! இங்கே நம் கதாநாயகி சுக்குச் சுக்காக உடைந்து நொறுங்கிப் போகிறாள். விசாரிக்க வரும் மனைவியின் மனநிலைமை புரியாமல் மடிக்கணினிக்கு எவ்விதக் கீறலும் இல்லை என்றும் சொல்கிறார். ஆனால் இங்கே மனைவியின் மனமோ கீறல்களும், காயங்களுமாக ரணமாகிக் கிடக்கிறதே!  அது எப்போ சரியாகும்? இந்தக் கேள்விக்கு பதிலை நம்மையே ஊகிக்கும்படி விட்டு விட்டார் ஆசிரியர்.

இந்த நிலையைச் சகித்துக் கொண்டு வாழப் பழகுவாள் அந்தக் கதாநாயகி. அவளுக்குத் தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே!



தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் திரு வைகோ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விமரிசனம் அனுப்பக் கொஞ்சம் தாமதம் ஆனாலும் உடனே நினைவூட்டுவார். அவருடைய தொடர்ந்த சலிக்காத ஊக்குவிப்பு இல்லை எனில் நான் இதில் பங்கேற்றிருப்பேனா என்பது சந்தேகமே! :))))

Monday, April 14, 2014

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்



ஏதேதோ வேலை மும்முரத்தில் தாமதமாகப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவதற்கு மன்னிக்கவும். :)))

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.