எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 31, 2020

வந்துட்டேன்!

நான் வரலைனு தேடியவர்களுக்கு என் நன்றி. இங்கே ஓர் இறுக்கமான சூழ்நிலையில் அனைவரும் இருந்தோம். சென்ற புதன் அன்று காரியங்கள் ஆரம்பிக்க இருக்கையில் மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல் ஆனது. ஆகவே மைத்துனரும், அவர் மனைவியும் திங்கள் அன்றே கிளம்பி வந்து விட்டனர். வாடகைக்காரில் தான் வருவதாக இருந்தனர். ஆனால் அவரால் சரியான நேரத்துக்கு வரமுடியாததால் சொந்தக் காரிலேயே மைத்துனரே ஓட்டிக் கொண்டு வந்து விட்டார். என் கணவரும் மைத்துனரும் மட்டும் போய் புதன்கிழமை ஒரு மாதிரிக் காரியங்களை ஆரம்பித்தாயிற்று. ஆனால் தொடர்ந்து நடக்க வேண்டும். நடுவில் நிறுத்தக் கூடாது. பத்தாம் நாள் காரியத்துக்கு நாங்களும் போகவேண்டும். ஆனால் எங்களை வரக்கூடாது எனச் சொல்லி விட்டார்கள். வெளி ஊர்களில் இருந்தோ அல்லது உள்ளூரில் இருக்கும் உறவினர்களோ வருவதற்கான போக்குவரத்து சாதனங்கள் ஏதும் இல்லாததால் வரமுடியவில்லை. அனைவரும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துப் பேசினார்கள். தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

பத்தாம் நாள் அன்று என் கடைசி நாத்தனார் மட்டும் சென்று காரியத்தை முடித்துவிட்டு வந்தார். 11 ஆம் நாள் காரியம் அண்ணன், தம்பி இருவரும் போய்க் காரியங்களை முடித்துக்கொண்டு திரும்புகையில் காவல்துறையினர் பார்த்துவிட்டு (2 நாட்களாகவே கவனித்திருக்கின்றனர்.) விசாரிக்கவும் இவர்கள் காரணத்தைச் சொல்லவும் விட்டு விட்டார்கள். அதன் பின்னர் 12 ஆம் நாள் காரியமும் அங்கே போய்ச் செய்துவிட்டுக் கடைசியில் 13 ஆம் நாள் சுபகாரியத்தை வீட்டில் வைத்துக் கொண்டோம். அதற்கும் வைதிகர்கள் வந்து கலந்து கொண்டு நவகிரஹ ஹோமம் செய்கையில் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திக்கொண்டு ஹோமம் செய்தார்கள். மனதுக்கும் ஆறுதலாக இருந்தது.  எல்லாம் முடிந்து நேற்று மைத்துனர் அவருக்குத் தெரிந்த அதிகாரி மூலம் நகரை விட்டு வெளியேற உத்தரவு பெற்றுக் கொண்டு இன்று காலை கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறார். அவர் மனைவிக்கு நேற்றே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் புதன் அன்று வரச் சொல்லி இருக்கிறார்.

இதற்குள்ளாகத் தமிழக அரசும், முக்கியமாக நிறுத்த முடியாத, ஒத்திப்போட முடியாத திருமணங்கள் நடத்தவும், இறப்பு, மருத்துவம் முக்கியமாகப் பார்க்கவேண்டியது ஆகியவர்களுக்குச் சிறப்பு அனுமதி கொடுப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். அதனாலும் எங்களுக்குக் காரியங்கள் செய்ய முடிந்தது எனலாம்.  இங்கே எங்கள் வளாகத்திலும் அனைவரையும் சோதித்தே உள்ளே விடுகின்றனர். ரொம்ப உடல் நலம் முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே வேலை செய்யும் பெண்மணி வந்து வேலைகளைச் செய்து கொடுக்கிறார். மற்றவர்களுக்கு வருவதில்லை. பாதுகாவலர்களுக்கு உணவு, தேநீர் போன்றவை இங்கேயே ஏற்பாடு செய்து ஒரு நாளைக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் செய்து கொடுத்து வருகின்றனர். சமையலுக்கு ஏற்பாடு செய்திருந்த மாமி முத்தரசநல்லூரில் இருப்பதால் அங்கிருந்து அவரால் வரமுடியவில்லை. குடமுருட்டிப் பாலத்தை இருபக்கங்களில் இருந்தும் மூடி விட்டார்கள். ஆனாலும் கடைசி 2 நாட்களுக்கு எங்கள் புரோகிதரே எப்படியோ ஆள் ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் வந்து செய்து கொடுத்துவிட்டுப் போனார். மற்ற நாட்களில் வேலை சரியாக இருந்த காரணத்தாலும் மற்றத் துணிகள் சுத்தம் செய்வது, இறப்புத் தீட்டுக் கழிக்கவேண்டிய துணிகளைத் துவைப்பது என நேரம் போய்விட்டது.

இனி வரும் நாட்கள் நல்லபடியாகக் கழியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

Tuesday, March 24, 2020

பிரார்த்தனை ஒன்றே வழி!

மிக மோசமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நிலைமையை இது வரை பார்த்ததில்லை. யாரும் எங்கேயும் போகக் கூடாது.  நாட்டுக்கு நாடு விதித்துக் கொண்டிருந்த தண்டனை, இப்போது மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் எனப் பரவி எங்கும் யாரும் கூட்டமாகவோ 2,3 பேர் சேர்ந்தோ போகக் கூடாது என்று ஆகி விட்டது. நல்லவேளையாக மைத்துனனின் கடைசிக் காரியங்களுக்குச் சென்றிருந்த நாங்கள் வெள்ளியன்று ஸ்ரீரங்கம் திரும்பினோம். ஸ்ரீரங்கத்தில் மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யலாம் என நினைத்து ஏற்பாடுகள் செய்தோம்.  இரண்டாம் மைத்துனர் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் வரமுடியுமா என சந்தேகம். ஆனால் இன்று வண்டிகள் ஓடக்கூடாது என்பதால் நேற்றே கிளம்பி வந்துவிட்டார். இங்கோ? காரியங்கள் செய்யவேண்டிய அரசுக் கட்டிடமான "விஷ்ணு பாதம்" (ஞானவாபி மாதிரி) பூட்டி விட்டார்கள். அங்கே காரியங்கள் செய்வதற்கென ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. இப்போ எங்களுக்குக் குழப்பம்! என்ன செய்வது எனப் புரியவில்லை.

கல்யாணம், காதுகுத்து, இன்னும் கோயில் திருவிழாக்கள், கிரஹப்ரவேசம், சஷ்டி அப்த பூர்த்தி எல்லாவற்றையும் ஒத்திப் போடலாம். இறப்பை எப்படி ஒத்திப் போடுவது? அந்த இறப்புக்கு வரும் உறவினர்களை எப்படித் தடுப்பது? வெளி ஊரில் இருந்து வருபவர்கள் வராமல் இருந்து விடலாம். உள்ளூர்க்காரர்கள்? உடலை எடுப்பது எல்லாம் எப்படிச் செய்வார்கள்? ஏற்கெனவே எங்க வீட்டில் போல் எத்தனையோ வீடுகளில் கடந்த சென்ற வாரத்தில் இறந்திருப்பார்களே! அவங்களுக்கெல்லாம் போன வாரம் இறந்தவருக்கு  இந்த வாரம் தொடர்ந்து நீத்தார் கடன் செய்வது எப்படி? முக்கியத் தேவைகளுக்கு அனுமதி என்கிறார்கள். முக்கியத் தேவைகளில் இதுவும் வரும் என்றே நம்புகிறேன். மைத்துனர் வருவாரா, மாட்டாரா என்று கலங்கிக்கொண்டிருந்தபோது நேற்றே கிளம்பி வரும்படி செய்த அந்த ஆண்டவன் தான் மற்றக் காரியங்களையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பமும், மனக்கவலையுமாக இருக்கிறது! எவ்வளவு மோசமான ஒரு காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம், இனி என்ன செய்யப் போகிறோம்? இதற்கு என்ன முடிவு என்றெல்லாம் யோசித்தால் விடை ஏதும் கிடைக்கவில்லை.

எல்லாம் வல்ல ஆண்டவன் துணையால் அனைவரின் துன்பங்களும் நீங்கட்டும். பிரார்த்திப்போம். 

Sunday, March 22, 2020

மைத்துனர் கணேஷுக்கு அஞ்சலிகள்!


https://sivamgss.blogspot.com/2019/12/blog-post.html இங்கே சொல்லி இருக்கேன், மைத்துனர் உடல் நலம் குறித்து. நவம்பரில் கீழே விழுந்ததில் அறுவை சிகிச்சை நடந்தது.  இந்தச் சிகிச்சை முடிந்து ஜனவரி மாதம் தில்லி சென்று ஒரு வார ஓய்வுக்குப் பின்னர் வேலைக்குச் சென்றவர் அதன் பிறகும் 2,3 முறை கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார். அங்கே காலை வேலைகள் எல்லாம் வழக்கம்போல் முடிந்து மதியம் உணவும் சாப்பிட்டுவிட்டுப்பின்னர் வீட்டில் இருந்த தன் சகோதரிக்கு அழைத்து வழக்கம்போல் பேசி இருக்கிறார்.  நண்பர்கள் சிலருடனும் வாட்சப்பில் செய்தித் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுக்கும் வழக்கத்தில் அப்படியே தூங்கி இருக்கிறார். அலுவலக ஊழியர்களுக்கு இது தெரியும் என்பதால் யாரும் வந்து தொந்திரவு செய்யவில்லை.

3 மணிக்கு வழக்கமாகத் தேநீர் எடுத்து வரும் அலுவலக ஊழியர் தேநீர் எடுத்து வந்திருக்கிறார்.  உள்ளே வந்து பார்த்தவர் நாற்காலியில் ஆளைக் காணோமே எனத் திகைப்புடன் சுற்றிப் பார்த்ததில் நாற்காலியில் இருந்து அப்படியே இடது பக்கமாகச் சரிந்து விழுந்து இருக்கும் கணேஷைப் பார்த்திருக்கிறார். மூக்கில் இருந்து ரத்தக்கசிவு தெரியவே உடனே வெளியே சென்று அனைவரையும் அழைத்திருக்கிறார். அனைவரும் வந்து அந்த வளாகத்திலேயே இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கேயே சொல்லிவிட்டார்களாம் இனி பலன் இல்லை என. என்றாலும் அங்கே இருந்த அரசு மருத்துவமனையான சஃப்தர்ஜங் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அங்கேயும் பார்த்ததுமே உயிர் போய் அரைமணிக்கும் மேல் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு உடனடியாக உடலை எடுத்துச் செல்ல உறவினர் யாரும் இல்லை என்பதால்  சவக்கிடங்கில் உடலை வைத்துவிட்டார்கள்.

பின்னர் எப்படியோ எங்களைத் தொடர்பு கொண்டு உடனே கிளம்பி வரும்படி கூறினார்கள். நாங்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பதால் உடனே கிளம்பினாலும் அடுத்த விமானத்தைப் பிடித்து தில்லி வந்து சேர இரவு 12 மணியாவது ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு, இன்னொரு மைத்துனருக்கும், அங்கே தில்லியிலேயே இருக்கும் நாத்தனாருக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டு உடனடியாகக் கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பிச் சென்றோம். புதன் அன்று தான் தில்லி போக முடிந்தது. உடல் சவக்கிடங்கில் இருந்ததால் அரசாங்க நடைமுறைகளை எல்லாம் முடித்துக் கொண்டு உடலைப் பெற்றுக்கொண்டு வந்து தகனம் முடித்து மறுநாள் அஸ்தியையும் கரைத்துவிட்டுப் பின்னர் வெள்ளியன்று காலை கிளம்பிச் சென்னை வந்து அங்கிருந்து திருச்சிக்கும் விமானத்திலேயே வந்து சேர்ந்தோம்.

55 வயதே ஆகும் கணேஷுக்கு வாழ்க்கையில் ஆஸ்பத்திரி அனுபவங்களே அதிகம். உடலாலும், மனதாலும் பலவகையிலும் துன்பப் பட்டுவிட்டார். இப்போதும் கடந்த ஒரு மாதம் மட்டும் 4 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தார். அதைப் போல் இம்முறையும் வந்துவிடுவார் என்றே நாங்கள் நினைத்தோம். நல்ல படிப்பு, அதனால் கிடைத்த உயர் பதவி, அதிகாரம், உயர்ந்த சம்பளம் எல்லாம் இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவிதமான சுகத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கவே இல்லை. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் உறுத்தல் தான். ஆனால் ஒரே ஆறுதல் கணேஷ் மாமியார் இருக்கும்போது இறந்து போயிருந்தால் இன்னும் கொடுமை. அந்த விதத்தில் கடவுள் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும் இந்த இழப்பை இன்னமும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இல்லை என்பதை நம்பவும் முடியவில்லை.

இறைவன் இருப்பிடத்திலாவது அவர் மனமகிழ்ச்சியுடன் இருப்பார் என நம்புகிறோம். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

Thursday, March 19, 2020

My absence

My younger brother in law Ganesh died on Tusday. It was unexpected. We are in Delhi now and will be returning tomorrow. Rest afterwards.

Sunday, March 15, 2020

தொலைந்து போன பாரம்பரியங்கள்!

பாரம்பரியத் தொழில் அந்த அந்தக் குடும்பத்து வாரிசுகளால் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பொருளில் வந்த ஒரு வீடியோவில் அதைச் சொன்னவரைப்  பற்றி ஒரு பதிவு முகநூலில் பார்த்தேன்.  பி.ஏ. எம்.ஏ. எனப் படித்தால் மட்டும் வேலை கிடைத்து விடுமா என்றும் சொல்லி இருந்தார். ஏனெனில் இவை இரண்டுமே வெறும் பட்டமே. இதை வைத்துக் கொண்டு அரசு உத்தியோகத்தில் எழுத்தராகப் போகலாம். ஆனால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது. ஆகவே தச்சர் பரம்பரை வாரிசுகள் தச்சுத் தொழிலிலும், நாவிதப் பரம்பரை அவங்க பரம்பரை வைத்தியத் தொழிலும், வண்ணார்கள் பரம்பரையும் அவங்க பரம்பரையான துணிகளைப் பராமரிப்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள் படித்த படிப்பை வைத்துத் தொழில் ஆரம்பித்து மேம்பட்டுக் கொள்ளலாம் என்பது தான் அவர் சொல்ல வந்தது. ஆனால் வழக்கம் போல் நம் மக்கள் குலத்தொழில் கல்வியைக் கற்கச் சொல்கிறார் என அவரைக் குற்றம் சொல்லிவிட்டு பிராமணர்கள் மட்டும் படிக்கலாமா, அவங்க மட்டும் ஏன் வேத அத்யயனத்தோடு நிறுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டிருந்தனர். அதற்கு நான் எழுதிய பதில்/விளக்கங்களும் அதற்கான எதிர்வினைகளும். "கீதா" என்னும் பெயரில் என்னுடைய கருத்துகள். பெயர் குறிப்பிடாமல் பதிவரின் கருத்துகள்.  இப்போதைய காலகட்டத்தில் பல பாரம்பரியத் தொழில்கள் முற்றிலும் நசிந்து விட்டன. நடுவில் வந்த ஆங்கிலேய ஆட்சி அனைத்துப் பாரம்பரியங்களையும் அழித்து ஒழித்துவிட்டது. பூக்கட்டுவது கூட ஒரு பாரம்பரியம் தான். எல்லோருக்கும் அப்படி அழகாகப் பூக்கட்ட வராது.  மதுரையில் இன்றளவும் பூக்காரத் தெரு, வளையல்காரத் தெரு (இப்போப் பெயர் மாறி இருக்கோ) என்றெல்லாம் உண்டு. பிராமணர்களில் பல சமையல் வல்லுநர்கள் அந்தக் காலங்களில் ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தனர். இப்போதைய காலங்களில் அவர்களின் வாரிசுகளே பெருமளவு சமையல் ஒப்பந்தக்காரர்களாகக் கல்யாணங்கள், பெரிய விசேஷங்கள், அரசு விழாக்கள் எனக்  கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இதை மறுக்க முடியாது.

கீதா There are so many doctors and engineers who are still practicing veda parayana and doing agnihothram daily. So many efficient persons are in this field. And nowadays in veda patasalas they also teaching in normal education system. It includes veda adyayanam.

சிநேகிதி  LB வேத பாராயணத்தை மட்டும் பார்ட் டைமா பண்ணுவாங்க, ஆனா தச்சனும், வண்ணானும் மட்டும் ஃபுல் டைமா அவங்க குலத் தொழிலையே பண்ணனும், பி.ஏ எம்.ஏ பண்ணக் கூடாதுன்ற செலக்டிவ் வர்ணாசிரமத்தைத்தான் கேள்வி கேட்கிறோம்

கீதா  you are totally wrong and diverting the main message

சிநேகிதி அந்த வீடியோ பாத்தீங்களா?

கீதா   Lakshmi Balakrishnan No need. You people are seeing things. Not looking into it.

சிநேகிதி அந்த வீடியோவ பாக்காம, அதைப் பத்தின என் கருத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்வீங்க. அதுக்கு நான் பதில் சொன்னா நான் விஷயத்தை திசை திருப்பறேன்னு வேற சொல்வீங்க. இது என்ன மாதிரியான விவாதம்?

கீழே இருப்பவை வேறொருத்தரின் பதிலைப் பார்த்துட்டுச் சொன்னதுஎன் கருத்து.  .

நடுவில் ஆசான் (ஐயப்பன் கிருஷ்ணன்) வந்து வேறொரு வீடியோவைக் காட்டினார். அதில் பட்டமேல்படிப்புப் படித்த பெண் கழிவறையைக் கழுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான கருத்து ஸ்ரீநிவாசன் ஐயர் என்பவரால் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர்/ அடையாளம் தவறென முகநூல் சுட்டிக் காட்டிவிட்டது.

கீதா ஆசானே, தில்லியில், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுலப் இன்டர்நேஷனல் மூலம் கட்டப்பட்ட கழிவறைகளைச் சுத்தம் செய்வது பிராமணர்களே! அவர்களில் பலரும் நல்ல படிப்புப் படித்தவர்களே!

கீதா வேத பாராயணத்தைப் பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுவதில்லை. ஆசான் நன்கு அறிந்த மருத்துவர் வாசுதேவன் அவர்களின் மகன் சம்ஸ்கிருதம் மற்றும் இன்னும் சில விஷயங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் படித்தவர். தமிழிலும் வல்லவர். வான சாஸ்திரத்திலும் வல்லவர். அவர் நெரூரில் காஞ்சி மடம் நடத்தும் பாடசாலையில் தான் வேதம் கற்பிக்கிறார். முழு நேரமாக. மற்றவை தான் அவருக்குப் பகுதி நேரத் தொழில்கள். அவரைப் போல் இன்னும் சில இளைஞர்களும் எங்கள் சொந்தத்தில் இருக்கின்றனர். அதில் ஒருவர் இஞ்சினியர், இன்னொருவரும் மருத்துவர்.காஞ்சி மடம் நடத்தும் கல்லூரிகளில் கற்பிக்கின்றனர்.

மேலும் வர்ணாசிரமத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் வர்ணாசிரமம் என்றால் என்ன என்பதே யாருக்கும் புரியலை. வர்ணாசிரமப்படி யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். அதே போல் ஓர் மஹரிஷியின் மகனாக இருந்தாலும் வைசியன் ஆகலாம். அது அவர் செய்யும் தொழிலைப் பொறுத்து. விசுவாமித்திரர் ஓர் அரசர். தவம் செய்து அதன் மூலம் பிராமணர் ஆனவர். அவரால் உபதேசிக்கப்பட்ட காயத்ரி ஜபமே இன்றைக்கும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராமணர்களின் வீடுகளிலும் எதிரொலிக்கிறது. வேதங்களைத் தொகுத்து அளித்தவரும் இன்றைக்கும் அனைவருக்கும் குருவாக வணங்கப்படுபவரும் ஆன வேத வியாசர் ஓர் மீனவப்பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். பீஷ்மரால் விஷ்ணு சஹஸ்ரநாமம் போதிக்கப்பட்டது.  வர்ணாசிரமத்தில் ஜாதி வேறுபாடு கிடையாது. ஜாதி வேறுபாடுகளே கடந்த 200, 300 வருடங்களில் உருவாக்கப்பட்டவை.


கீதா குறிப்பிட்ட வீடியோ எனக்கும் வந்து நானும் பார்த்துவிட்டேன். ஆதலால் தான் இப்போது தேவை இல்லை என்றேன். அதோடு நீங்கள் என்னமோ எல்லோருக்கும் பிராமணர்கள் சேர்ந்து அநீதி இழைத்துவிட்டதாக ஒரு மாற்றமுடியாத எண்ணத்தில் இருப்பதால் உங்களிடம் எதுவும் எடுத்துச் சொல்லுவதில் பலனில்லை. அதனாலும் விலகிப் போனேன். முடிந்தால் தரம்பால் அவர்களின் புத்தகம் The Beautiful Tree தரவிறக்கிப் படித்துப் பாருங்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களில் பெரும்பாலும் நாவிதர்களே அதிகம் என்பது புரியவரும்.

சிநேகிதி  நீங்க சொல்ற புத்தகத்தை நிச்சயம் நான் படிக்கறேன். அதே போல எனக்கு முன்முடிவுகள்னு சொல்லிட்டே நீங்க முன்முடிவுகளோடு உழலாம, நான் சொல்வதில் இருக்கும் அடிப்படை உண்மையை எதிர்கொள்ள முயலுங்கள்.

கீதா அடிப்படை என நீங்கள் சொல்லுவதே தப்பு! நீங்க பொங்கும் அளவுக்கு என்னால் பொங்கவெல்லாம் முடியாது. ஏனெனில் கடந்த காலச் சரித்திரம் என நீங்கள் கற்றது உங்களை அப்படிப் பேச வைக்கிறது. அது சரித்திரமே அல்ல என்பது தெரியும்போது ஒருவேளை மாறலாம். இதிலே ஒரு அடிப்படை உண்மையும் இல்லை. இந்தக் காலத்தில் எவருக்கும் அடிப்படைக் கல்வியோ, பள்ளிக் கல்வியோ, பட்டக் கல்வியோ யாரும் இல்லை என மறுப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சர்வதேச அளவுக்குத் தரமான படிப்பைப்பெறவேண்டும் என்பதற்காகவே "நவோதயா" பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். அந்தப்பள்ளிகள் வந்துவிட்டால் எந்த கிராமப்புற மாணவனும் "நீட்" என்ன சர்வதேசக் கல்வித் தேர்வுகளிலும் போட்டி இட முடியும். முதலில் அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். நாவிதன் மகனோ, வண்ணான் மகனோ, தச்சன் மகனோ அவரவர் விரும்பிய கல்வியைக் கற்க முடியும்.  அவர்கள் கவைக்கு உதவாத வெறும் பட்டப்படிப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்னும் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மட்டும் நவோதயாப் பள்ளிகளை ஆதரித்தால் கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவார்கள். இதைச் சிந்திக்க நாம் மறுப்பதோடு அல்லாமல் அவர்களைக் குலத் தொழிலைக் கற்கச் சொல்லுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் என்பதை உணராமல் அவர்களை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு மேலும் மேலும் தாழ்ந்து போகும்படி செய்கிறோம். முதலில் இதை அந்த இளைஞர்கள் உணர வேண்டும்.

 சிநேகிதி  ஒகே, உங்களுக்கு இந்த ஒரு பார்ட்தான் சிக்கல்னா அதை விட்ருவோம். சரி, எல்லாரும் ஏன் வேதம் *மட்டுமே* படிக்காம, வேறு விஷயங்களை படிச்சு, வருமானத்துக்காக வேறு தொழில் செய்யணும்? ஏன் வேதபரிபாலனம் மட்டுமே போதும்னு இருக்கக் கூடாது? வண்ணானுக்கு பிஏ எம் ஏ சோறு போடாதுன்னா, பிராமணனுக்கு மட்டும் எப்படி எம்.பி.பி.எஸ் சோறு போடலாம்? எம்.பி.பி.எஸ் நாவிதர்களுக்குத்தானே சோறு போடணும்? இதான் என் கேள்வி. அதை விட்டுட்டு நீங்க எவ்ளோதான் சுத்தி சுத்தி அடிச்சாலும் உண்மை அப்படியே நிக்கும்.

கீதா இதிலே ஒரு உண்மையும் கிடையாது. சும்மா வளைச்சு வளைச்சுப் பேசினா அது உண்மை ஆகவும் ஆகாது. வேதம் படிச்சு எல்லோருமே வைதிகர்களாக அன்றும், இன்றும், என்றும் போனதில்லை. அதோடு முன்னெல்லாம் வேத பரிபாலனம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு, உணவுக்கு உத்தரவாதம் எல்லாம் இருந்தன. இப்போது அவை எதுவும் இல்லை. நான் சொல்பவர்களில் பலரும் வேத பரிபாலனம் மட்டுமே போதும் என இருப்பவர்களே! வண்ணான் ஆகட்டும், பிராமணன் ஆகட்டும், நாவிதன் ஆகட்டும், இந்தக் காலத்தில் பி.ஏ. எம்.ஏ. எல்லாம் வெறும் பட்டம் தான். சோறு போடாது. தொழில் கற்றுக்கொண்டால் சோறு போடும். அதைத் தான் அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறது. புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இங்கே யாரும், யாரையும் படிக்க வேண்டாம் என்றோ பட்டம் பெற வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அது மட்டும் போதாது என்றே சொல்லப்படுகிறது.

சிநேகிதி தொழிற் பயிற்சி வேணும்னு சொல்றதுக்கும், அவனவன் குலத்தொழில அவனவன் செய்ய வேண்டியதுதானேன்னு சொல்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தனக்கிருக்கும் ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு இதை சொல்வதற்கும், வேலையில்லா இளைஞர்களின்பாற் கொண்ட உண்மையான அக்கறையோடு தொழிற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை

மேலும் இதற்கு மேல் இந்த விஷயத்தை உங்களோடு விவாதிப்பதில் பொருளிருப்பதாக நான் நினைக்கவில்லை. lets agree to disagree.

//ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு//

கீதா   நம்  சிநேகிதி அந்த வீடியோவில் உள்ளவர் ஆன்மிக அதிகாரத்தின் மமதையோ
டு குலத்தொழிலைக் கற்கவேண்டும் என்று சொல்லி இருப்பதாகச் சொல்கிறார். அது எனக்குப் புரியவில்லை. முதலில் ஆன்மிக வாதிகளே வெகு குறைவு. ஆனால் இப்போதெல்லாம் பக்தியை ஆன்மிகம் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நான்கைந்து கோயில்கள் பற்றியும், வேறு சில பக்திக் கதைகளையும் பகிர்ந்து கொண்டால் "ஆன்மிக எழுத்தாளர்" பட்டம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. எனக்கும் அப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் ஆன்மிகத்துக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது! எங்கோ தொலைவில் இருப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி.

கீதா முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை.// இதைத் தான் முன்முடிவு என்றேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? :)))) குலத் தொழில் பரம்பரையாக வருவது. ஆகவே அதைத் தன் தகப்பனிடமிருந்தோ, பாட்டன், மாமனிடமிருந்தோ எளிதாகக் கற்கலாம். அந்த நுணுக்கங்களைத் தங்கள் வாரிசுகளுக்கு பெரியவர்களும் கற்பிப்பார்கள். அதுவே வெளியிலிருந்து வந்த மாணவன் எனில் தொழில் கற்றுக் கொடுப்பார்களே தவிர்த்து நுணுக்கங்கள்? எதிர்பார்க்கவே முடியாது!

கீதா எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் ஏற்கவில்லை எனினும் மன வருத்தம் இல்லை.

 கீதா சிற்பியின் மகனுக்குத் தான் சிற்பக்கலையின் நுணுக்கங்கள் தெரியும். பரம்பரையாக வந்த தொழில் ரகசியங்களைத் தங்கள் வாரிசுகளுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். இது மனித மனத்தின் போக்கு. இதில் தவறும் காண முடியாது! நாதஸ்வரத்தை நாம் ஆதரிக்காமல் விட்டதால் எத்தனை நாதஸ்வர வித்வான்கள் தங்கள் தொழிலைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது தெரியுமா? இன்று அந்தத் தொழிலே நசிந்து வருகிறது. ஒரு நாதஸ்வர வித்வானிடம் பேசிப்பாருங்கள் ஏன் என்று! அவர் சொல்லுவார் காரணங்களை.

சிநேகிதி நான் பொங்கறேன், வளைச்சு வளைச்சு பேசறேன், அடிப்படையே எதுவுமில்லை, நான் பேசுவதில் உண்மையே இல்லை, நான் வரலாறு என்று கற்றிருப்பது எதுவுமே வரலாறு அல்ல.. இவ்வளவும் நீங்க எனக்கு கொடுத்த சர்டிஃபிகேட்ஸ். இதெல்லாம் என்னை எவ்வளவு தூரம் தெரிஞ்சுகிட்டப்புறம் நீங்க எடுத்த முடிவுகள்? சரி விடுங்க, இதோடேனும் நிப்பாட்டிடலாம்

கீதா உண்மையான சரித்திரம் கடந்த ஐம்பது வருடங்களில் யாருமே படித்தது இல்லை. நானும் சில வருடங்கள் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்திருக்கிறேன். முக்கியமாகத் தமிழ், வரலாறு, பூகோளப் பாடங்கள். அவற்றை எல்லாம் பார்த்துவிட்டுத் தான் சொல்கிறேன். கோபம் இல்லாமல் நிதானமாக யோசித்தால் புரியும். ஆதரிக்க பிராமணர்கள் இல்லாமல் அதுவும் கிராமங்களில் பிராமணர்களே அற்றுப் போனதால் கோயில் திருவிழாக்களில் இருந்து, அனைத்துக்கும் மூடுவிழா ஏற்பட்டதால் பல நாதஸ்வர வித்வான்கள் ஊரை விட்டுச் செல்லும்படியான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை மாயவரத்துக்கு அருகே உள்ள ஊரைச் சேர்ந்த ஓர் நாதஸ்வர வித்வான் எங்களிடம் சொன்னது. நாதஸ்வரக் கலை ஆதரிப்பவர்கள் இல்லாமல் இன்றைய திருமணங்களில் செண்டை மேளம் இடம் பெறுகின்றது. இது யார் குற்றம்?

கீதா பிராமண வெறுப்பு என்பது அடிப்படைக் கலாசாரத்தையே மாற்றி மக்களை எங்கோ கொண்டு போய்விட்டது. இறைவன் மனம் வைத்தால் எல்லாம் மாறலாம். இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தவறாகவோ உங்கள் மனம் புண்படும்படியோ சொல்லி இருந்தால் மன்னிக்கவும். என் கருத்து என்னோடு, உங்கள் கருத்து உங்களுக்கு! அதில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை. நன்றி என்னைப் பொறுத்துக் கொண்டதற்கு.

கீதா எங்க வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியப் பரம்பரை. ஆனால் பின்னாட்களில் என் அப்பாவிடம் இருந்து ஆரம்பித்து அதைத் தொடராமல் விட்டதால் அது குறித்த ஓலைச்சுவடிகள், மருந்து செய்யும் முறைகள், உணவுக்குறிப்புகள் எனப் பலவும் தூக்கிக் கொடுத்து விட்டார்கள். இப்போ யாரிடம் இருக்கோ? குலத் தொழில் என்பதால் எங்களில் ஓரிருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அது அந்தக் காலத்தில் யாருக்கும் புரியவில்லை. இதில் எங்களுக்கு எல்லாம் மிகவும் வருத்தம் தான். இயல்பாக ரத்தத்தில் ஊறி ஒரு விஷயம் வருவதற்கும், கற்றுக்கொண்டு வருவதற்கும் வேறுபாடு உண்டு என்பது என் கருத்து.

கீதா About carpentry it is a traditional work. The technical secrets are in the jenes. And it suits for the sthapathies also.

ரொம்பச் சரி. தச்சுத் தொழிலை விடவும் மருத்துவம் மிகவும் முக்கியமான தொழில் அல்லவா? பேசாமல் முதலில் அதை திரும்பவும் நாவிதர்கள் கையில் கொடுத்துவிடலாமா? அவர்களை மருத்துவர் என்றே அழைப்பதும் உண்டே? அவர்களுக்கே மருத்துவக் கல்லூரிகளில் 100% இடஒதுக்கீடு தந்து, அவர்களின் மரபுச் செல்வத்தை இந்த சமூகம் பயன்படுத்திக் கொள்ளட்டுமே...

கீதா திருமதி லக்ஷ்மி, நேற்று இணையம் சரிவர இயங்காததால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் ஓர் முன் முடிவுடன் இருப்பதால் இது குறித்த விரிவான விளக்கம் தேவை இல்லை என்றே சென்றுவிட்டேன். அதோடு நாவிதராக இருந்தாலும் சரி, தச்சராக இருந்தாலும் சரி, அந்தத் தொழில் அவர்கள் பரம்பரையிலேயே தொடர்ந்து வரும். ஆகவே நாவிதரின் பிள்ளைக்கும் நல்லபடிப்புக் கொடுத்து மருத்துவமும் கற்பித்தால் நல்ல மருத்துவராகப் பரிமளிப்பார். இதைத் தான் முன்னர் ராஜாஜி கொண்டு வந்தார். காலையில் படிப்பு, மாலையில் தொழில் என. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ராஜாஜி அவமானப் பட்டது தான் மிச்சம். இது குறித்து நிறைய எழுதலாம் என்றாலும் அதற்கான இடம் இது இல்லை.
 எங்கள் மாமனார் ஊரில் பல சித்த மருத்துவர்களும் நாவிதர்களே!

சிநேகிதி நான் சொல்ல வருவது அந்த வீடியோவில் உள்ளவர் சொல்வது போல் அவரவர் குலத்தொழிலை அவரவருக்கு மட்டுமே உரிமையாக்குவது பற்றி. அதாவது நாவிதர் தவிர்த்து மற்றவங்கல்லாம் ஏன் மருத்துவம் படிக்கணும்? இப்ப மேல ஒரு எடுத்துக்காட்டு சொல்லிருக்கீங்களே, அவங்கல்லாம் ஏன் வேதபாராயணம் மட்டுமே பண்ணக் கூடாது? எதுக்காக நாவிதர்களின் தொழிலில் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகணும்னு கேக்கறேன்

கீதா Lakshmi Balakrishnan இந்தக் கேள்வியை இப்போத் தான் பார்க்கிறேன். அந்தணர்களில் வேத அத்யயனம் செய்தவர்கள் தனி, போர்ப்பயிற்சி செய்து போர் வீரர்களாக இருந்தவர்கள் தனி,மருத்துவர்களாக இருந்தவர்கள் தனி, சாதாரணக் குடும்பம் நடத்துபவர்களாக இருந்தவர்கள் தனி எனப் பல்லவ ராஜா காலத்திலேயே, அதற்கும் முன்னால் இருந்தே இருந்திருக்கிறது. போர்ப் பயிற்சி செய்பவர்களை அமைச்சராகவும் ஆக்கி இருப்பார்கள். அவர்கள் அமாத்ய பிராமணர் எனப்படுவார்கள். ஆகவே அந்தணர்களில் எவரும் நாவிதர்களின் தொழிலில் எல்லாம் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகவெல்லாம் இல்லை. இதற்கான சான்றுகளை இப்போத் தேடி எடுப்பது கஷ்டம். ஆனால் விரைவில் தருகிறேன். ஆனால் சோழ நாட்டில் அப்படி ஓர் அமைச்சர் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்திருக்கிறார். பிரமராயன் என்றோ என்னமோ பெயர் வரும்.

திரு P L Bhargava எழுதிய India in the Vedic age என்ற நூலில் படித்த ஞாபகம்; பிராம்மணர்களில் போர்செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வாணிகம் செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வேலைசெய்யும் சாதியைச் சேர்ந்தோர் ஒரு காலத்தில் இணைந்ததாகப் படித்த நினைவு. அதே போல் வழிவழியாக எழுத்தாணி பிடிக்கும் ஜாதிகளைச் சேர்ந்தோர் க்ஷத்திரியர்களில் சேர்ந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

அந்தக்காலங்களிலும் பிராமணர்கள் வெறும் வேத அத்யயனத்தோடு நிறுத்திக் கொண்டதில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டும் வேதம் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மற்றவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டே வந்தார்கள். வணிகம் கூடச் செய்திருக்கின்றனர். முதலில் ஸ்வதர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் கற்றுக் கொண்டு வேத அத்யயனம் செய்து கொண்டு ஒதுங்கி இருப்பது ஸ்வதர்மமே அல்ல. அவனுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும். அது கற்பித்தலாகவோ, மருத்துவம் பார்ப்பதாகவோ, அல்லது வேறு முறையில் போர்ப்பயிற்சி கொடுப்பதாகவோ கூட இருக்கலாம். இப்போதும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் தமிழ்நாட்டு பிராமணர்கள்.

குலத்தொழிலைக் கற்பதோ, கற்பிப்பதோ, கற்கச் சொல்லுவதோ அவமானத்துக்கு உரிய விஷயமாக நினைப்பதாலேயே இத்தகைய தவறான புரிதல்கள்!


போடலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து 3 நாட்கள் ட்ராஃப்ட் மோடிலேயே வைத்திருந்து மிகுந்த யோசனைக்குப் பின்னர் பகிர்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

Monday, March 09, 2020

ஊருக்கு வந்த கதை!

எங்களைச் சக்கர நாற்காலியில் உட்கார்த்தி அழைத்துச் சென்ற இரு பெண்மணிகளும் அருமையாக ஒத்துழைத்தார்கள். எங்கள் மருமகள் குழந்தையை ஸ்ட்ராலரில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள். அவளுக்கும் அவ்வப்போது உதவினார்கள். விமானம் ஏறும் வாயில் அருகே போனதும் பயணிகளை அழைக்கும் நேரம் நெருங்கி விட்டிருந்ததால் காத்திருந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்று விமானத்தின் நுழைவாயில் வரைகொண்டு விட்டார்கள். வசதியாக இருந்தது. ஆனால் குழந்தையின் ஸ்ட்ராலரை வாங்கிக் கார்கோவில் போட்டுவிட்டார்கள். துபாயில் தேவைப்படுமே என்றதற்கு அங்கே complimentry strawler கிடைக்கும், ஒன்றும் பிரச்னை இல்லை என்றார்கள்.  விமானப் பயணத்தில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. திரைப்படம் பார்க்கும் வசதி இருந்தாலும் மனம் பதியாததால் படங்கள் பார்க்கவில்லை. குஞ்சுலு அதோட கார்ட்டூனைப் பார்த்துக் கொண்டு வந்தது. அதை அணைத்துவிட்டு அதைத் தூங்க வைக்கக் கொஞ்சம் நேரமானது. பின்னர் அது தூங்கி விமானத்தில் எல்லோரும் தூங்கினாலும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அன்றைய பயணம் முடிந்து துபாயின் மாலை நேரத்தில் விமானம் துபாயை நெருங்கியது.

துபாயில் விமானம் தரை இறங்கியதும் நாங்கள் வெளியே வந்தோம். அதிகாரிகள் சக்கரநாற்காலியில் உட்கார வைக்க வேண்டிய பயணிகளின் பட்டியலில் இருந்து எங்கள் பெயரைக் கேட்டு உறுதி செய்து கொண்டு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிட்டுக் கிளம்பினார்கள். மருமகளுக்கும் காம்ப்லிமென்ட்ரி ஸ்ட்ராலர் கிடைத்தது. அதில் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள். சக்கர நாற்காலியைத் தள்ளிய  இரண்டு ஊழியர்களில்  ஒருவர் பிலிப்பைன்ஸ் காரர். இன்னொரு இளைஞர் பாகிஸ்தானி. 25 வயதுக்குள் இருக்கும் இருவருக்கும். மிகவும் அன்பாகப் பேசிக் கொண்டு வந்தனர். எங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடந்தனர் என்றே சொல்லலாம். ஒரு இடத்திலும் எங்களைக் கீழே இறங்கவே விடவில்லை. பாதுகாப்புச் சோதனையின் போதும் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அவர்களே போய்ச் சொல்லி எங்களை அதிகம் சோதனை செய்யாமல் அனுமதிக்க உதவி செய்தனர்.  அங்கே விமானம் ஏறும் வாயிலில் இறங்கித் தான் உள்ளே செல்லவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கே சென்றதுமே அங்கிருந்த ஓர் அதிகாரி எங்களை விமான வாயிலில் கொண்டுவிடும்படி அந்த இளைஞர்களிடம் சொல்ல அவர்களும் அப்படியே கொண்டு விட்டனர். இரண்டு இடங்களிலும் நாங்கள் முறையே டாலரிலும், தினாரிலும் பணம் டிப்ஸாகக் கொடுத்தோம். அதிலும் அவர்களுக்கு சந்தோஷம்.

துபாய்ப் பயணம் நான்கே மணி நேரத்தில் முடிந்து பயண நியமங்களின் படி சனிக்கிழமை அதிகாலை/ (வெள்ளிக்கிழமை இரவு) ஒன்றே முக்காலுக்கெல்லாம் சென்னையை அடைந்து விட்டோம். அங்கே விமானத்தில் இருந்து வெளியே வருவதே கஷ்டமாக இருந்தது. குஞ்சுலு வேறே அதோட "பேபி"யைக் கீழே எங்கோ போட்டுவிட்டு அழுதது. பிறகு பின்னால் இருப்பவர்களிடம் உதவி கேட்க ஒருத்தர் தேடிக் கொடுத்தார். நல்லவேளை என நினைத்துக் கொண்டேன். வெளியே வந்ததும் சக்கர நாற்காலிக்கான உதவியை நாட ஒரு பெண் சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றாள்.அதற்குள் பாட்டரி கார் வர அதிலே போகலாம் என்றால் அது குறிப்பிட்ட தூரம் தான் போகும். அப்புறமா நடக்கணும் என்றார்கள். சரினு குஞ்சுலுவையும் அவ அம்மாவையும் அதில் வரச் சொல்லிவிட்டு (ஸ்ட்ராலர் சாமான்கள் எடுக்கும் இடத்தில் தான்கிடைக்கும்.) நாங்க சக்கர நாற்காலிக்குக் காத்திருந்தோம். அன்னிக்குனு பார்த்து சுமார் 50 பயணிகள் சக்கர நாற்காலி கேட்டிருக்கிறார்கள். ஆகவேகொஞ்சம் தாமதமாக வந்தது சக்கர நாற்காலி. அதில் ஏறி அமர்ந்து கொண்டு இமிகிரேஷனுக்கு வந்தோம். மருமகள், குழந்தைக்கு ஓசிஐ என்பதால் அவங்க வேறே பக்கம் போய் விட்டார்கள். அங்கே கூட்டமே இல்லை. ஆனால் இங்கே எங்களுக்கு முன்னால் சுமார் 40 பேர்கள் அவர்களுக்கான உதவி நபர்களுடன் நின்றிருந்தனர். அனைவருமே சக்கர நாற்காலிப் பயணிகள்! இத்தனை கூட்டத்தில் நாம் இமிகிரேஷன் முடிக்கச் சுமார் இரண்டு மணி நேரமாவது ஆகும் என நினைக்க, எப்படியே எங்கள் சக்கர நாற்காலியைத் தள்ளியவர்கள் ஒருத்தர் எங்க இருவரையும் நகர்த்திக் கிடைத்த இடைவெளி வழியாக முன்னே கொண்டு போய்விட்டார். ஆனாலும் அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அதற்குள்ளாக செல்லை எடுத்து மொபைல் டாட்டாவில் தானாகப் போயிருந்ததால் எல்லோருக்கும் வந்து சேர்ந்ததையும், இமிகிரேஷனில் காத்திருப்பதையும் தெரிவித்து வாட்சப் செய்தி கொடுத்தேன். எங்களுக்காக வந்து காத்திருக்கும் கார் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள வாட்சப் இல்லாததால் தொலைபேசி அழைப்புக் கொடுத்தேன். அவர் எடுப்பதற்குள்ளாகத் தொடர்பு துண்டித்து விட்டது. என்னனு பார்த்தால் செல்லில் சார்ஜே இல்லை. 12 சதவீதம் தான் இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்த ஓட்டுநரே எங்களைத் தொடர்பு கொள்ள நானும் காத்திருக்கச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தொடர்பு அறுந்தது. இமிகிரேஷனை முடித்துக் கொண்டு பெட்டிகளைப் பார்த்து எடுத்துக் கொண்டோம். அதற்கு அந்த நபர்கள் இருவரும் மிகவும் உதவி செய்தார்கள். சாமான்கள் வைக்கும் 2 டிராலியையும் ஒருவர் தள்ளிக் கொண்டு வர, மற்ற இருவர் எங்கள் இருவரையும் தள்ளிக் கொண்டு வந்தார்கள். வெளியே வந்து விட்டோம். மருமகளின் அப்பாவைப் பார்த்துவிட்டோம். நம்ம ரங்க்ஸ் டிரைவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட அவரும் வந்து விட்டார். அதன் பின்னர் எங்கள் சம்பந்தி எங்களுக்காகக் கொண்டு வந்தா காபியைக் கொடுக்க வண்டியில் போய்ச் சாப்பிடுகிறோம் என வாங்கி வைத்துக் கொண்டேன். குட்டிக் குஞ்சுலுவின் முகம் சுண்டிப் போயிருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. டாடா, பை சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டது. அதைத் தொட்டேன்,கையைத் தள்ளி விட்டது. பின்னர் அவங்க காரில் அவங்க ஏறிக்கொள்ள எங்க காரில் நாங்க ஏறினோம்.  காலை சுமார் எட்டரை மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம்.

குஞ்சுலுவை நடுவில் வாட்சப்பில் பார்த்தோம். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உதட்டைப் பிதுக்குகிறது. தாத்தாவைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டது. பின்னர் எனக்கு மட்டும் பை சொல்லிவிட்டு முகத்தை மூடிக் கொண்டு விட்டது. அழுகை வருகிறது. என்ன செய்ய முடியும். அதன் பின்னர் நாங்க மருத்துவரிடம் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்ததால் குஞ்சுலுவைப் பார்க்கவே முடியவில்லை. நாங்க அதைப் பார்க்கவேண்டும் என நினைக்கும் நேரம் அது தூங்கிக் கொண்டிருக்கும். இன்றோ நாளையோ பார்க்கணும்னு நினைக்கிறோம். அது தூங்காமல் இருக்கணும். இன்னும் ஜெட்லாகில் இருந்து அது வெளியே வரலை. சின்னக் குழந்தை தானே!

Monday, March 02, 2020

ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்!

ஆறு மாச அம்பேரிக்க வாசம் முடிஞ்சு முந்தாநாள் சனிக்கிழமை காலை எட்டரை மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்தாச்சு. அம்பேரிக்காவில் வியாழன் அன்று மாலை ஏழு மணிக்கு விமானம். 3 மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பிட்டோம். கிளம்பும் முன்னர் நான் பனிரண்டரை மணிக்கே புடைவை மாற்றித் தயார் ஆகிட்டேன். ஆனால் புடைவை மாற்றும்போதே மனசில் என்னவோ நெருடியது. அதையும் மீறி நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடைவையையே கட்டிக் கொண்டேன். கொஞ்சம் விறைப்பாக வேறே இருக்கும். உடல், தலைப்பெல்லாம் ஜரிகையோ ஜரிகை. சாதாரணமாகக் கல்யாணங்கள், சின்னச் சின்ன விசேஷங்களுக்குக் கட்டிக் கொண்டு போவேன் இம்மாதிரிப் புடைவைகளை. விமானப் பயணங்கள், இன்னும் சொல்லப் போனால் ரயில், பேருந்துப் பயணங்களில் கூடக் கட்டிக்கொண்டதில்லை. காபினில் வைக்கும் பெட்டியில் இன்னமும் இரண்டு சாதாரணப் புடைவைகள் இருந்தன. ஆனாலும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. மருமகள் எப்போதுமே நான் புடைவை கட்டுவதற்கு ஆக்ஷேபணைகள் தெரிவிப்பாள். ஜீன்ஸ் போட்டுக்கோங்க, இல்லாட்டி சல்வார், குர்த்தா போடுங்க என்பாள். சல்வார், குர்த்தா கைவசம் ஒரே ஒரு உடுப்பு இருந்தது. அதையும் பெட்டியின் அடியில் போட்டுவிட்டேன். ஆனால் அன்னிக்குக் கிளம்பறச்சே அவள் ஒண்ணும் சொல்லலை. எனக்கு மட்டும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

எல்லோருக்குமாக 2 பெட்டிகள் என்பதாலும் பெரிய பெட்டிகள் என்பதாலும் எங்களை விமான நிலையம் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வந்திருந்தார். பெண் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு நாங்க கிளம்பியதும் அவள் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்புவுக்குச் சில சிறப்பு வகுப்புகளுக்குக் கொண்டுவிட்டு அங்கேயே காத்திருந்து அழைத்து வரணும். நாங்க விமானநிலையம் கிளம்பி சௌகரியமா வந்துட்டோம். எமிரேட்ஸில் வந்ததால் அந்த இடத்துக்கு அருகேயே வண்டியை நிறுத்தி இறக்கி விட்டாங்க பையரும், மாப்பிள்ளையும். அவங்க காரைப் பார்க் செய்துட்டு வந்ததும் உடனே  போர்டிங் பாஸ் கொடுக்கும் இடத்தில் பையர் போய் நாங்க எல்லாம் ஒரே குடும்பம் என்பதால் உட்காரும் இருக்கையை ஒரே மாதிரி நான்கு இருக்கை கொண்ட வரிசையில் போடச் சொன்னார். ஏனெனில் மருமகள் பயணத்திட்டம் மிகுந்த யோசனையின் பேரில் ஏற்பட்டது. ஆகவே பயணச்சீட்டுத் தனித்தனியாகவே இருந்தது. அவங்களும் அப்படியே போட்டுத் தந்தாங்க. வீல் சேர் எங்க இரண்டு பேருக்கும் சென்னையில் இருந்து கிளம்பும்போதே சொல்லி இருந்தோம். ஹூஸ்டன் வரை வீல் சேர் கிடைத்திருந்தது. அதே போல் இங்கேயும், எதிரே உள்ள அலுவலகத்தில் போய்ப் பதிந்து கொண்டால் சற்று நேரத்தில் வரும் என்றார்கள். அதற்குள்ளாக அங்கேயே இருந்த ஸ்டார்பக்ஸில் "லாட்டே" காபியும் ஒரு பேகிள்ஸும் சாப்பிடுங்க என வாங்கித் தந்தார் பையர். விமானத்தில் உணவு கொடுக்க எட்டரை மணி ஆகிடும் என்பதால் வாங்கினார். ஆனால் நான் கையில் தயிர் சாதம் கொண்டு வந்திருந்தேன். நம்மவர் தான் அந்த சாதத்தைச் சாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே பேகிள்ஸ் வாங்கவும் வீணாகிடும் என அதைப் பாதி சாப்பிட்டுவிட்டுப் பாதியைக் குஞ்சுலுவுக்குக் கொடுத்தோம்.

bagel with butterக்கான பட முடிவுகள்


அதன் பின்னர் வீல் சேருக்காகப் போனோம். குழந்தைக்கு ஸ்ட்ராலர் கையில் இருந்ததால் குழந்தையை அதில் உட்கார்த்தி வைச்சாச்சு. மருமகள் குழந்தையைத் தள்ளிக் கொண்டு வர, நாங்கள் இருவரும் வீல் சேரில் பயணித்தோம். பிள்ளையும், மாப்பிள்ளையும் லிப்டில் பயணம் செய்யும் வாயிலுக்குச் செல்லும் முன்னர் அவர்களைப் பார்க்கச் சொன்னார்கள். சரினு செக்யூரிடி செக்கப்புக்கு எங்களை இரு பெண்கள் அழைத்துச் சென்றனர். செக்யூரிடியில் எல்லாம் சக்கரநாற்காலிப் பயணிகளுக்குத் தனி முன்னுரிமை உண்டு. ஆகவே நேரே உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள். ஆண்கள் பகுதிக்கு நம்ம ரங்ஸும், பெண்கள் பகுதியில் நானும் மருமகளுமாகப் போனோம். மருமகள் பாஸ்போர்ட் அமெரிக்கன் என்பதோடு இந்தியா வருவதற்கான ஓசிஐயும் இருந்ததால் அவங்களுக்கு விரைவில் முடிந்து விட்டது.

சாதாரணமாக நம்மவர் தான் ஷேவிங் செட்டில் ஏதேனும் ஒன்றை கையில் கொண்டு செல்லும் பையிலோ, பெட்டியிலோ வைச்சுட்டு மாட்டிப்பார். ஆனால் இம்முறை எல்லாத்தையும் நினைவாகக் கார்கோவில் போட்டாச்சு. ஆகவே அவருக்கும் விரைவில் முடிந்து வெளியில் வந்திருக்கார். எனக்குத் தெரியாது. மருமகள் என்னோடூ இருந்ததால் அவள் சென்றது மட்டும் தெரியும். எனக்கு முன்னால் கிட்டத்தட்ட என் வயது ஒரு பெண்மணியைத் திரும்பத் திரும்ப ஸ்கான் செய்து பார்த்துப் பின்னர் உட்காரச் சொல்லி விட்டார்கள். என்னை அழைக்கவும் நான் போனேன். ஸ்கானிங் அறைக்குப் போகும் வழியிலேயே "கணகண்"வென்ற சப்தம் பேரொலியாகக் கிளம்பியது. உடனேயே அங்கே இருந்த அலுவலர் (ஆண்) என்னை மிஷினுக்கு நேரே நிறுத்தி ஸ்கான் செய்தார். எதுவும் அகப்படவில்லை. மீண்டும் அந்தக் கதவு வழியே போய்விட்டு வரச் சொன்னார். உள்ளே நுழையும்போது மணி அடித்தது. அவருக்கு சந்தேகம். மீண்டும் மீண்டும் ஸ்கான் செய்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் போர்டிங் பாஸையும் வாங்கி வைத்துக் கொண்டு ஓர் பெண் அதிகாரியை அழைத்தார்.

எனக்கு ஓரளவு விஷயம் என்னனு புரிஞ்சாலும் அவங்க கிட்டே இதெல்லாம் சொல்ல முடியாது. என்னோட புடைவையின் உலோக ஜரிகைக் கும்பலால் வந்த வினை! அவங்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. உடனே வாய்க்குள்ளாக ஸ்ரீராமஜயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். இது எப்போவுமே மனசில் ஓடிக் கொண்டே இருக்கும். நிற்கையில், நடக்கையில், சமைக்கையில் என. ஆனால் சில சமயம் எங்கோ ஓடிப் போயிருப்பதைத் தேடிப் பிடித்து இழுத்து வரணும். அம்மாதிரி இப்போவும் இழுத்து வந்தேன். ஸ்ரீராமஜயம், ஸ்ரீராம ஜயம், ஸ்ரீராமஜயம்.

வந்த பெண் அதிகாரி என்னிடம் உனக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாள். தனி அறைக்கு அழைத்துச் செல்வாளோ என சந்தேகம். ஆனால் அதையும் அவளிடம் கேட்க முடியாது. நான் என்ன செய்யணும் என்று கேட்டேன். முழு உடல் பரிசோதனைக்கு ஒத்துக்கொள் என்றாள். நான் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்க சொல்வது எனக்குப் புரியாததால் என் மருமகளை அழையுங்கள் என்றேன். நல்லவேளையாகப் பத்தடி தூரத்திலேயே மருமகள் இருந்தாள். அவளும் வந்து கேட்டுவிட்டு இதையே தான் சொன்னாள். நீங்க நகைகளை அவிழ்த்திருக்கலாமே என்றாள். கழுத்துச் சங்கிலியை ஒரே ஒரு முறை மெம்பிஸில் கழட்டி இருக்கேன். மற்றபடி இத்தனை முறை அம்பேரிக்கா போனதில் இப்படி எல்லாம் நடந்ததில்லை. ஆகவே நான் செய்வதறியாது விழித்துவிட்டு அவளைப் பரிசோதனை செய் எனச் சொல்லி விட்டேன். அவள் என்ன நினைத்துக் கொண்டாளோ தனி அறைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கேயே ஸ்கானிங் மிஷ்னை வைத்தும், கைகளாலும் ஒரு முறைக்கு 3 முறை சோதித்தாள். எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் என்னைப் போகச் சொன்னாள். நான் என் பாஸ்போர்ட்டும் போர்டிங் பாஸும் எங்கே எனக் கேட்கவும் எங்கேயோ  போய்விட்டிருந்த அந்த அதிகாரியை அழைத்து எதுவும் கிடைக்கவில்லை. அனுப்பிவிடலாம் என்றாள். அந்த அதிகாரி பாஸ்போர்ட்டையும், போர்டிங் பாஸையும் கொடுக்க நானும் நெடுமூச்சு விட்டுக்கொண்டு நம்ம உறவுகளிடம் வந்து சேர்ந்து கொண்டேன்.