எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 30, 2010

கண்ணன் எங்கே? கண்ணன் எங்கே எனத் தேடுபவர்களுக்கு

கண்ணன் இங்கே கண்ணன் இங்கே. போய்ப் பார்க்கவும். நன்றி. தனிமடலில் கேட்டவர்களுக்கும், பின்னூட்டங்களில் கேட்டவர்களுக்கும் ரொம்ப நன்றி.
கண்ணனுக்காக

Sunday, August 29, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! முடிவு!

வித்யா கேட்ட எதற்கும் பதில் சொல்லவே இல்லை ரமேஷ். மெளனமாய்க் காரை ஓட்டினான்.

"எங்கே போகிறோம் ரமேஷ்?" வித்யா கேட்டாள்.

"நம் வீட்டிற்கு! போய்க் குழந்தையை எப்படித் திரும்ப அழைப்பது என்று பார்க்கலாம்!" என்றான் ரமேஷ்.
"ரமேஷ், உள்ளே என்ன நடந்தது??? அதைச் சொல்லுங்கள் முதலில்!"

"ஒன்றுமில்லை, உன்னிடம் சொல்லவேண்டாம் என நினைத்தேன். தெரிந்தால் ரொம்ப வருந்துவாய்!'

"ரமேஷ்!"" வித்யா முகத்தில் கலக்கம் குமிழியிட்டது.

"வித்யா, உன் தோழி சுபா இருக்கிறாளே, அவள் நல்லவள் இல்லை. எனக்கு..... எனக்கு...... சொல்லவே கஷ்டமா இருக்கு. அவளுக்கு யாரோ ஆண் நண்பர் இருக்கிறான் போல! இன்றைக்கு இரவு அவனை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்திருக்கிறாள். நம்மை மிரட்டினானே வில்லன் அவன் யார்னு நினைக்கிறே?? சுபாவின் கணவன் அரவிந்தன். அவனுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து போய் அவளை மிரட்டுவதற்காக இந்த நாடகம் நடத்தி இருக்கிறான்."

"ஓ, அப்படியா?? அப்போ நம்மை எதுக்குப் பாடாய்ப் படுத்தணும்?? நாம என்ன செய்தோம்? எந்த வகையிலே நமக்கும் அவங்களுக்கும் சம்பந்தம்??" வித்யா விடவில்லை. கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள்.

"ஓஓஓ, அந்த ஆள் நானோ என நினைத்திருக்கிறான். நான் இல்லைனு தெரிஞ்சதும் விட்டுட்டான். அடுத்து அவன் யாருனு தேடுவான் போல!" என்றான் ரமேஷ்.

வித்யா பதில் பேசவில்லை. அதற்குள் வீடு வந்துவிட்டது. ரமேஷுக்கு அவசரம். "வித்யா, முதல்லே குழந்தையைத் தேடும் வழியைப் பார்க்கணுமே, அந்தப் பழைய வேலைக்காரியின் விலாசம் தெரியுமா உனக்கு? அவள் மூலம் தான் இன்னிக்கு வந்தாளே அவளைக் கண்டு பிடிக்கணும். போலீஸில் சொல்லிடுவோமா?" ரமேஷ் பரபரத்தான். வித்யா காரைவிட்டு இறங்கவே இல்லை. அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ரமேஷ் யோசனையோடு அவளைப் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினான். வீட்டுப் படிகளில் காலை வைத்து அழைப்பு மணியை அழுத்தினாலும் யார் வரப் போகிறார்கள் என எண்ணியவாறே, தன் பையில் இருந்த மாற்றுச் சாவியைத் தேடினான். கதவு திறந்தது.

"வித்யா, என்ன அங்கேயே உட்கார்ந்திருக்கே?? சீக்கிரம் உள்ளே வா! வீட்டுக்குள்ளே யாருனு தெரியலையே? கதவு திறக்குதே!" ரமேஷ் சத்தம் போட, "வீட்டில் அந்த வேலைக்காரப் பெண் தான் ரமேஷ் இருப்பாள். வேறே யாரும் இல்லை!" வித்யா உட்கார்ந்த இடத்தில் இருந்தே சொன்னாள். தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. வித்யாவைப் பார்த்தவன் வீட்டுக்குள்ளே பார்த்தான். குழந்தையைப் பார்த்துக்க வந்த புதுப் பெண் தான் நின்றிருந்தாள். ரமேஷுக்கு ஆத்திரம் பொங்கியது. "ஏய், எங்க குழந்தையை என்ன செய்தே? எங்கே குழந்தை?" ரமேஷ் கையை ஓங்கிக் கொண்டு பாய, வித்யா காரிலிருந்து மெல்லக் கீழே இறங்கி உள்ளே வந்தாள். ரமேஷின் ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டாள்.

"பாவம் ரமேஷ், இவள் அப்பாவி, இவளுக்கு ஒன்றும் தெரியாது. இவளை விட்டு விடுங்க, வீட்டுக்குப் போகட்டும்!" என்றாள்.

"வித்யா, வித்யா, என் விதுக்குட்டி, என்ன சொல்றே நீ? நம்ம குழந்தையை இவள்........"

"மேலே போய்ப் பாருங்க ரமேஷ், குழந்தை எங்கேயும் போகலை. இருந்த இடத்தை விட்டுக் குழந்தை நகரவும் இல்லை. இந்தப் பெண்ணும் இங்கேயே தான் இருந்தாள். குழந்தை தூங்குவாள் அவளோட அறையில். நீங்க போய்ப் பார்த்துக்குங்க. அதுக்குள்ளே நான் இவளை செட்டில் பண்ணி அனுப்பிடறேன்."

குழப்பம் நீங்காதவனாய் ரமேஷ் மேலே சென்றான். குழந்தையின் அறையில் மெல்லிய ரீங்காரத்தோடு ஏசி இதமான குளிரில் ஓடிக் கொண்டிருக்கத் தன் பிரியமான பொம்மையை அணைத்த வண்ணம் உறங்கிக்கொண்டிருந்தாள் குழந்தை. முகத்தில் சிரிப்பு. ஏதோ கனவு போலும், ரமேஷின் நெஞ்சை உலுக்கியது அந்தக் காட்சி. ஆஹா, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? மனதைத் தான் இழந்தவைகளின் நினைவுகள் உலுக்க, அதை உதறிக்கொண்டு குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் தொடுகையில் கண் விழித்த குழந்தை, "அப்பா" என்று சிரித்துவிட்டு மீண்டும் தூங்கிப் போனது.

மெல்ல யோசனையுடன் தங்கள் அறைக்கு வந்த ரமேஷ் அங்கே வித்யா இல்லை என்று கண்டதும் ஆச்சரியத்துடன் கீழே இறங்கினான். ஹாலிலேயே சோபாவில் அமர்ந்திருந்த வித்யாவின் கண்களில் கண்ணீர். ரமேஷ் அவளை அணைத்துத் தேற்ற முயன்றான். "போனால் போகிறது வித்யா, பணம், காசு, நகை நட்டுத்தானே? அதான் நான் இருக்கிறேனே? உன் வேலை என்னமோ அப்படியே இருக்கிறது! என் வேலைதானே? நான் சீக்கிரமாய் ஒரு வேலை தேடிக் கொள்கிறேன். எல்லாத்தையும் சம்பாதிச்சுக்கலாம்." என்றான்.

"ரமேஷ், ஆனால், ஆனால் நான் இழக்க இருந்தது உங்களை அல்லவோ?? அந்த இழப்பு வேண்டாம் என்பதால் தானே இந்தப் பாடு பட்டேன்? பட்டோம்??"

ரமேஷுக்கு இப்போது உண்மையிலேயே தூக்கிவாரிப் போட்டது! "வித்யா!" அவனுக்குப் பேச நா எழவில்லை. வித்யாதான் பேசினாள். மடை திறந்தாற்போல் பேசினாள். சுபாவுடன் அந்தரங்கமாய்ப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருநாள் தூக்கத்தில் அவன் சுபாவின் பெயரைச் சொல்லி இருக்கிறான். அப்போது வித்யா கொஞ்சம் சந்தேகப் பட்டுக் கேட்டபோது சுமியின் பெயரைத் தப்பாக அவள் காதில் வாங்கிக் கொண்டதாய்ச் சொல்லி அவளைக் கேலி செய்திருக்கிறான். இன்று அதை நினைவு படுத்திய வித்யா, அதன் பின்னரும் பலநாட்கள் அவன் தூக்கத்தில் சுபாவின் பெயரும், அவளைச் சந்தித்த இடங்களைப் பற்றியும், சுபாவின் அழகைப் பற்றியும் அவன் வர்ணித்ததையும் கூறினாள். ரமேஷுக்கு அவமானமும், வெட்கமும் பிடுங்கித் தின்றன. இப்படியா பலகீனமாய் இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கூசிக் குறுகிப் போனான். கடைசியில் அவர்கள் சந்திப்பு தனியாக நடைபெறப் போவதை அவனுக்கு சுபாவிடமிருந்து வந்த எஸ் எம் எஸ் ஒன்றின் மூலம் தற்செயலாகத் தெரிந்து கொண்டதைச் சொன்னாள் வித்யா. அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றதையும், அங்கே அவள் இல்லை என்றும், அப்போது தான் அவள் கணவனைச் சந்தித்ததையும், அவள் கணவனுக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது என்றும் சொன்னாள். அவர் அவர்கள் இருவரையும் ரெஸ்டாரண்டுகளிலும், சினிமா தியேட்டர்களிலும் நெருக்கமாய்ப் பார்த்திருந்தார் என்றும் அதைச் சொல்லி வருந்தியதாகவும் கூறினாள். அவருக்கும் அவர் மனைவியின் மேல் அளவற்ற காதல் என்பதையும் சொல்லி, மனைவிக்கும் புரிய வைக்கவேண்டும், அதே சமயம் உன் கணவனும் திருந்த வேண்டும் என்று சொல்லவே நாங்கள் இருவருமாய் இந்தத் திட்டத்தைப் போட்டோம் என்று சொல்லிக் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.

ரமேஷ் திக்பிரமை பிடித்து நின்றான். "வித்யா, வித்யா, இப்போ இந்த விஷயம் தெரிந்து போனதுக்கப்புறமும் நீ என்னிடம் அதே பிரியத்தோடு இருப்பாயா? தப்பு வித்யா, தப்பு. இவ்வளவு அருமையான மனைவியைப் புரிஞ்சுக்காமல் ஒரு கண நேர சுகத்தை எண்ணித் தப்புப் பண்ணிப் படுகுழியில் விழ இருந்தேனே. அப்படி மட்டும் நடந்திருந்தால் நம்மிருவர் வாழ்க்கை மட்டுமில்லாமல் சுபாவின் குடும்பமும் சீரழிந்து போயிருக்குமே! வித்யா, நீ எவ்வளவு புத்திசாலி, எத்தனை நல்லவள், எப்படிச் சாதுரியமாக என்னை ஒரு கேள்வி கூடக் கேட்காமல் இதிலிருந்து மீட்டுவிட்டாய்? ஆனால், ஆனால் நான் இதற்குத் தகுதியானவனா? என்னோடு இனியும் நீ சேர்ந்து வாழ்வாயா??"

ரமேஷ் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வித்யா பதிலே பேசவில்லை. "உண்மைதான் ரமேஷ். ஒரு கட்டத்தில் எனக்கு உங்களை விட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது தான். அப்புறமாய் நிதானமாய் உட்கார்ந்து யோசித்தேன். நானும் மனித வள மேம்பாட்டில் மக்கள் நலத்துறையில் இருந்து கொண்டு என் குடும்பத்தை நானே அழித்துக் கொள்வதால் என்ன லாபம்? நான் செய்யும் வேலைகளுக்கு என்ன அர்த்தத்தை அவை கொடுக்கும் என்று யோசித்தேன். அப்புறம் தான் அரவிந்தன் அவர்கள் இந்த வழியைக் காட்டினார். முள் மீது விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்க வேண்டும் என்றே முயன்றோம். ஆனாலும் சில இடங்களில் கொஞ்சம் கிழிந்து தான் போனது. அஜாக்கிரதையால் அல்ல. வேறு வழியில்லாமல் முள் ஆழமாகப்பதிந்திருந்ததே! அதனால்! ஆனாலும் கூடியவரையிலும் எடுத்துவிட்டோம்." என்றாள். மேலும்,"இன்னும் சில நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்குமே!" என்றும் சொன்னாள்.

"அப்படியானால், அப்படியானால், வித்யா, நீ என்னுடன் இருப்பாயல்லவா?? போகிறது, பணம் காசு போனால் போகிறது. நீ மட்டும் இருந்தால் போதும்!"

"ரமேஷ், என்னை இவ்வளவு நேசிக்கும் நீங்களா அப்படி ஒரு காரியத்துக்கு உடன்பட்டீர்கள்?" வித்யா கேட்க, "தெரியலை வித்யா, எனக்கே புரியலை, ஒருவேளை நாம் ஆண்மகன் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததோ? அல்லது சுபாவின் ஏதோ ஒரு செயலால் கவரப் பட்டேனோ? என்னனு புரியலை. ஆனால் இப்போ யோசிச்சுப் பார்த்தால் எவ்வளவு அபத்தம் என்று தெரிகிறது."

வித்யாவின் கைகளைப் பற்றினான் ரமேஷ். "வித்யா, இதைக் கேட்கக் கூட எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் நீ என்னை மன்னிப்பாயா?" அவள் கைகளைப் பற்றித் தன் கண்களில் வைத்துக்கொண்டான். அவன் கண்ணீரால் அவள் உள்ளங்கைகள் நனைந்தன. அப்படியே அந்தக் கைகளைத் தன்னைச் சுற்றிப் பிணைத்துக்கொண்ட வித்யா, "நான் மட்டும் இல்லை ரமேஷ், இழந்த பணமும் கிடைக்கும், நகைகளும் லாக்கரிலேயே பத்திரமாய் இருக்கு. குழந்தை எப்படி இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லையோ, அது போலப் பணமும் எல்லாமும் எடுக்கப் படவில்லை. மேலே மட்டும் பணக் கட்டு ஒன்றை வைத்துவிட்டு உள்ளே பேப்பர்தான் என்றும் நகைகளுக்குப் பதிலாக அது வெறும் பை என்றும், சும்மா நகை வைக்கும் பெட்டிகள், பைகளை அதிலே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

"ஓஓ,அதுவும் அப்படியா?? ஆனால் என்னோட வேலை?? அது போனது போனதுதானே!" ரமேஷின் முகம் கூம்பியது. வித்யா, "இல்லை ரமேஷ், அப்படி எல்லாம் உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வேலையைச் செய்வேனா நான்? அந்த ஹோட்டலில் என்னிடம் கவரை வாங்கிக் கொள்ள வந்தவர் திரு அரவிந்தனின் பிசினசில் சம்பந்தப் பட்டவர். அரவிந்தன் என்னிடம் கொடுத்த கவரிலும் அவருடைய சொந்த பிசினஸ் சம்பந்தப் பட்ட தேவையான விபரங்களே இருந்தன."

ரமேஷுக்கு விம்மி விம்மி அழவேண்டும்போல் இருந்தது. வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் வித்யாவை இறுக அணைத்துக்கொண்டான். " செத்துப்போனால் தவிர மற்றபடி இனி உன்னை நான் பிரியமாட்டேன். எனக்குப் புரிந்துவிட்டது. என் பொக்கிஷம் நீ! ஆனால் ஏன் இப்படிச் செய்தாய் வித்யா? என்னை ஏன் இப்படிப் பரிதவிக்க விட்டாய்?? நேரிலேயே கேட்டிருக்கலாமே?"

"ரமேஷ், உங்களைப் பொறுத்தவரை என்னை ஒரு உயிருள்ள பொம்மையாகவே நடத்தி வந்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் சிறு பையன்கள் பட்டாம்பூச்சியைப் பிடித்து சோப்புப் பெட்டிக்குள் வைத்து அதை மற்றச் சிறுவர்களிடம் காட்டி, வண்ணாத்திப் பூச்சி டான்ஸ் ஆடுது பார், என்று சொல்லி அது துடிக்கிறதை வேறு மாதிரியாக அர்த்தம் பண்ணிக் காட்டிப் பெருமை அடித்துக்கொள்வார்கள். கிட்டத் தட்ட அதுபோல, நீங்கள் என்னை விடமாட்டீர்கள், ஆனாலும் உங்கள் கெளரவத்துக்கு ஒரு கிரீடம் போலவே என்னை நினைக்கிறீர்கள், எனக்கும் சொந்தமாக உணர்வுகள், கோப, தாபங்கள் உண்டு என நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையே? அதான் உங்கள் உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் என் உணர்வுகளையும் காட்டினேன். உங்கள் ஆசையும், பாசமும் இன்னொரு பெண்ணிடம் போவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியுமா என்னால்?? சோப்புப் பெட்டியில் இருந்து பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சிபோலவே நானும் உங்களை, உங்கள் அன்பை மீட்டு எடுக்கத் துடித்தேன். "

ரமேஷுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வித்யாவின் அழுத முகத்தில் ஆழமாக முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான். அன்பு உள்ளங்கள் இணைந்ததும் அங்கே பேச்சுக்கு இடமில்லை. நாமளும் போவோம். அவங்களைக் கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டு!
*************************

எல்லாரும் என்னை மன்னிக்கணும். இது நான் சொந்தமாய் எழுதின கதையே இல்லை. சவான் சீகல்ஸ் நடிச்ச ஒரு படத்தைச் சில நாட்கள்/மாதங்கள் முன் பார்த்தேன். அப்போ இருந்து இந்தக் கதையும் அதன் கருத்தும் மனதைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. இதை நான் நான்காவது அத்தியாயம் எழுதும்போதே ரசிகன் ஸ்ரீதர் கண்டு பிடிச்சுட்டுக் கேட்டார். அதனால் அவரோட பின்னூட்டத்தை நிறுத்தி வைச்சேன். நேற்றைய பதிவில் ஜீவி சாரும் மறைமுகமாத் தெரிஞ்சோ தெரியாமலோ சினிமாக்கதைனு சொல்லிட்டார். நான் செய்தது இந்தக் கதையை இந்திய, அதுவும் தமிழ்நாட்டுக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்களைச் செய்தது மட்டுமே. மற்றபடி புகழோ, கதையின் சுவாரசியம் குறையாமல் இருந்ததோ அதன் மூலகர்த்தாவையே சாரும். புகழ்ந்து பாராட்டினவர்கள் அனைவரும் கதையின் மூலத்தை எழுதினவரைப் பாராட்டவும். நன்றி.

Saturday, August 28, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 8

ரமேஷ் அங்கே இங்கே நகரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான். காரை அங்கிருந்து கிளப்பவும் முயன்றான். இப்போது அவன் பிடரியிலும் ஒரு துப்பாக்கி. எங்கிருந்தோ இன்னொரு துப்பாக்கி வித்யாவின் கழுத்திலும் பதிந்தது. "திரும்பாதே, ரமேஷ்! ஏதானும் பேசினாய் என்றால் முதலில் உன் மனைவியின் பின்னங்கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து முன்னால் வெளியே வரும். நீ அதைப் பார்த்து ரசித்துவிட்டே போவாய்! எப்படி ஆனாலும் உன்னை முதலில் அனுப்ப மாட்டேன். நீ குடும்பத்தில் பற்றுள்ளவன் ஆச்சே?? உன் மனைவிக்கப்புறம் உன் குழந்தை. முதலில் கால்??? ம்ஹும், வேண்டாமா? சரி அப்போ கை விரல்??" என்று கேட்டான். "பாவி, பாவி" ரமேஷ் தன்னை மறந்து அவன் மேல் பாய்ந்தான். வித்யா அலறினாள். "அவன் சொன்னமாதிரி செய்துடுங்க!" என்றாள். "என்ன சொல்றே நீ? யாருன்னே தெரியாது. கொல்லச் சொல்றான். கொன்னுட்டு அப்புறம் பாடியை என்ன செய்யறது? அப்புறம் போலீஸுக்கும் இவனே சொல்லிடுவான். இல்லைனாலும் அவங்க சொந்தக் காரங்க தேட மாட்டாங்களா? எப்படி இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவாங்க வித்யா. அப்புறம் நான் வெளியே நடமாட முடியாது. ஆயுள் தண்டனையோ, தூக்குக் கயிறோ!" ரமேஷ் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

எதுக்கும் அசரவில்லை வில்லன். "போகிறாயா இல்லையா?" என்று கேட்டான் மீண்டும். வித்யா கெஞ்சினாள். உள்ளே போய் அங்கே இருக்கிறவங்க கையிலே, காலிலே விழுந்து இவனைப் பத்திச் சொல்லித் தப்பிக்கலாமோ என்ற நப்பாசை பிறந்தது ரமேஷுக்கு. என்றாலும் வேண்டா வெறுப்பாக எழுந்தான். "ம்ம்ம்ம், இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்!" என்ற வண்ணமே அவன் கையில் வில்லன் துப்பாக்கியைக் கொடுக்க, அதனாலேயே அவனைச் சுட்டுவிடலாமோ என்று ஒரு கணம் நினைத்தான் ரமேஷ். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன் போல, வில்லன் சிரித்தான். "நீ என்னைச் சுடுவதற்கு முன்னர் உன் மனைவி போய்விடுவாள். கொஞ்சம் என் பக்கம் நீ அசைந்தாலும் சரி, இன்னும் துப்பாக்கி அவள் கழுத்தில் தான் வைத்திருக்கிறேன்." என்றான். பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வீட்டை நோக்கி நகர்ந்தான் ரமேஷ். வித்யாவைத் தனியே விட மனமே இல்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றான். வீடு திறந்தே இருந்தது. பெரிய ஹால். சோபாக்கள். "ப" வரிசையில் போடப் பட்டிருந்தன. அங்கேயே தொலைக்காட்சிப் பெட்டியும் வைக்கப் பட்டிருந்தது.

சற்றுத் தள்ளி இடப்பக்கமாய் மாடிக்குச் செல்லும் படிகள் ஹாலில் இருந்தே கிளம்பின. வலப்பக்கமாய் ஒரு அறையின் கதவு மூடியபடி தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஹாலின் நடுவே இருந்து உள்ளே செல்ல வழி இருந்தது. அந்தப் பக்கம் தான் சாப்பாடு சாப்பிடும் அறை, சமையலறை இருக்கவேண்டும். அப்போது மாடியில் யாரோ பாடிக்கொண்டே கீழே இறங்கும் சத்தம் கேட்டது. பெண் குரல்! கடவுளே, ஒரு பெண்ணையா கொல்லவேண்டும்?? அவள் என்னைப் பார்த்ததும் சத்தம் போடப் போகிறாளே? முதலில் ஒளிஞ்சுக்கணும். ஒளிஞ்சுண்ட இடத்தில் இருந்து குறி பார்த்துச் சுட முடியுதானும் பார்க்கணும். சுற்றிச் சுற்றிப் பார்த்த ரமேஷ் அங்கே இருந்த காஷ்மீரத் தடுப்புப் போட்டிருந்ததற்குப் பின்னர் சென்று மறைந்தான். ஹாலையே காஷ்மீரத் தடுப்புப் போட்டு அலுவல் அறையாக மாற்றி உள்ளனர். மெல்ல எட்டிப் பார்த்தான். படிகளில் ஒரு பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் போட்டிருந்த செண்டின் மணம் மூக்கைத் துளைத்தது. பழகிய செண்ட் மணம். இந்த செண்டை யார் போடுவார்கள்? ஆவலில் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்தான். ஆஹா!! ரமேஷின் மனம் துள்ளியது. இது வேறு யாருமே இல்லை. சுபா தான்!

ரமேஷுக்கு சந்தோஷத்தில் என்ன செய்யறதுனு புரியலை! வெளியே வந்தான். திடீரென எங்கிருந்தோ முளைத்த அவனைப் பார்த்த சுபாவும் ஒரு கணம் திகைத்தாலும் பின்னர் மகிழ்ச்சியோடு, "ஹாய், டியர்! இந்த இடம் எப்படி உனக்குத் தெரிந்தது?? இப்போத் தான் உனக்கு ஃபோன் பண்ண இருந்தேன். இதுதான் சமயம்,சீக்கிரம் வானு சொல்ல நினைச்சேன்." என்றாள். ரமேஷ் எதுவுமே பேசாமல் அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டான். அவளும் அவனை உரசிய வண்ணம் வந்து அமர்ந்தாள். ரமேஷின் முகத்தைப் பார்த்த அவள் ஏதோ பிரச்னை எனப் புரிந்து கொண்டு, "என்ன விஷயம்?? ஆளே பத்து நாட்கள் சாப்பிடாத மாதிரி இருக்கிறாயே? எங்கிருந்து வருகிறாய்?? வித்யா போய்விட்டாளா? அவள் காரை எடுத்துண்டு போயிருக்கணுமே? நீ எதிலே வந்தே?" சரமாரியாகக் கேட்டாள் சுபா.

"சுபா, உனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாது இல்லையா? எங்கள் பெண்ணை........." ஆரம்பித்த அவன் குரல் சட்டென நின்றது. இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்? சட்டென்று எழுந்தான். அந்த ஹாலில் இருந்த ஷோகேஸில் வைக்கப் பட்டு இருந்த படத்தைக் கவனித்தான். அதே பையன். வழியில் அவர்களைச் சந்தித்துப் பேசிய அதே பையன் அந்த போட்டோவில் இருந்தான். "யாரு இந்தப் பையன்??" கேட்டுக் கொண்டே அந்தப் படத்தைக் கையில் எடுத்தான். "ஏன், என் பையன் தான், சொன்னேனே உன்னிடம், எனக்கு ஒரு பையன் இருக்கான் என்று!" என்ற சுபா அவன் முகம் மாறியதைக் கண்டு திடுக்கிட்டாள். அந்த போட்டோவின் இருபக்கங்களிலும் படங்களை வைக்கலாம் அது மாதிரியான அமைப்பு அது. அதன் மறுபக்கம் சுபாவும், அவன் பெண்ணைக் கடத்தி வைத்திருக்கும் வில்லனும் சிரித்த வண்ணம் காட்சி அளித்தனர். ஒரு கணம் வேறு யோசனை வந்தாலும், சுபாவிடமே கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு, அந்த போட்டோவைக் காட்டினான் ரமேஷ்.

"ஓஓ, பயந்துட்டியா ரமேஷ்??? அது தான் என் கணவன். இப்போ வர மாட்டார். திங்கள் மாலை தான் வருவார். பிசினஸ் டூர். திங்களன்று முக்கியமான மீட்டிங் இருக்காம். அது முடிந்து விமானத்தைப் பிடிச்சு வீட்டுக்கு வர இரவு பனிரண்டு ஆகிடும். பையனும் ஏதோ நண்பர்களோடு சேர்ந்து படிக்கணும்னு போயிருக்கான். திங்கள் கிழமை அப்படியே ஸ்கூலுக்குப் போயிடுவான். சாயந்திரம் தான் வருவான். அதுவரை நீயும், நானும் தான்!" என்று சொல்லிக் கொண்டே அவனை அணைக்க வந்தாள். அவள் கைகளைத் தட்டி விட்டான் ரமேஷ்.

"அப்போ, அப்போ, உன் கணவனுக்கு நம் விஷயம் தெரிந்திருக்கிறது!" என்றான்.

"என்ன சொல்றே ரமேஷ்?" சுபாவுக்குப் பதட்டம் வந்தது.

"இங்கே வந்து உன்னைக் கொல்லும்படி என்னை அனுப்பியதே இதோ இந்த ஃபோட்டோவில் இருக்கும் உன் கணவர் என்று சொல்கிறாயே, இந்த ஆள் தான்."

சுபா தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார, "ஏன் அதிர்ச்சியாக இருக்கிறதா?? ரமேஷ், இன்னுமா நான் சொன்னதைச் செய்யவில்லை?? சுடு அவளை! முதல்லே அவளைச் சுடு. இல்லாட்டி உன்னை நான் சுட்டுடுவேன்." என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தால் அங்கே அந்த வில்லன் நின்று கொண்டிருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் அதே ஏளனமான சிரிப்பு. அது மட்டும் மாறவே இல்லை.

"வேண்டாம்!" அலறினாள் சுபா.

"ரமேஷ், இப்போ இவளை நீ சுடவில்லை என்றால் உன்னைச் சுட்டுவிட்டு, உன் பெண்ணை அநாதை ஆசிரமத்தில் கொண்டு விடும்படி அந்தப் பெண்ணிடம் சொல்லிடுவேன். அப்புறம் காரில் இருக்கும் உன் மனைவியை நான் என்ன செய்வேன் என்று உனக்குச் சொல்லவேண்டியதில்லை. சுடு இவளை! சுட்டால் நீ பிழைப்பாய்!"

ரமேஷ் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தான். கைகள் நடுங்கின. "இப்படி எல்லாம் இருந்தால் சுட முடியாது. பக்கத்திலே போ! அவள் கழுத்திலே துப்பாக்கியை வை. சுடு!" என்று சொல்லிக் கொடுத்தான் வில்லன்.

ரமேஷ் அவள் அருகே போய்க் கைகள் நடுங்கத் துப்பாக்கியை அவள் கழுத்தில் வைக்க முயல, அவள் மாடிக்கு ஓடித் தப்ப முயல அதற்குள் அங்கே துப்பாக்கியை ஏந்திய வண்ணம் வில்லன் நின்று கொண்டான். வாசல் பக்கம் ஓடித் தப்பலாம் என்று பார்த்தவளுக்கு, "நீங்க இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தப்போ எல்லா ஜன்னலையும் மூடிட்டு, வாசல் கதவையும் உள்பக்கம் பூட்டிட்டுச் சாவியை இதோ இங்கே வைச்சிருக்கேன். சமையலறைப்பக்கமும் போக முடியாது. எல்லாக் கதவையும் சார்த்திட்டேன். இந்த ஒரு அறை தான் உனக்கு இப்போ தப்பிக்க ஒரே வழி! முடிஞ்சால் தப்பிச்சுக்கோ. நீ விழுந்து விழுந்து காதலிக்கிறதா நினைச்ச இந்த ரமேஷ் தான் இப்போத் தான் தப்பிக்கணும், தன் குடும்பம் பிழைக்கணும்னதும் உன்னைக் கொல்ல முயன்றான். இவனை நம்பி நீ காதலிச்சதோட அல்லாம, நான் இல்லாத சமயம் வீட்டுக்கும் வர வைத்திருக்கிறாய்."

"உங்க ரெண்டு பேரோட காதல் ரெஸ்டாரண்டில் காபி, டிபன் சாப்பிடுவதும் டிஸ்கோவில் ஆடுவதுமோடு இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். இன்னிக்கு நீங்க இரண்டு பேரும் எனக்குத் துரோகம் செய்ய நினைச்சு ஏற்பாடுகள் செய்து கொண்டதும் சரியா? அதற்குத் தண்டனை தர வேண்டாமா? சுடு ரமேஷ்! சுடு!"

ஓஓஓவென்று அலறிக்கொண்டே சுபா வில்லன் காலடியில் விழுந்தாள். ரமேஷ் செய்வதறியாது திகைத்தவன், இதுதான் சமயம் என்று வில்லன் கையில் இருந்த சாவியைப் பிடுங்கிக் கொண்டு வாசல் கதவைத் திறந்து ஓடினான். பின்னால் சிரிப்புச் சத்தம் கேட்டது. ரமேஷ் திரும்பிப் பார்த்தான். "நீ தப்பத் தான் சாவியைக் கையிலே வைத்திருந்தேன்!" என்ற வில்லனின் குரல் ரமேஷைத் துரத்த, வேகமாய் ஓடிக் காரில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

வித்யா ரமேஷின் முகத்தைப் பார்த்துவிட்டுத் திகைத்தாள், "என்ன நடந்தது?" என்று கேட்டாள்.

ரமேஷால் பேச முடியவில்லை.


டிஸ்கி:-
அடுத்த பகுதியிலே முடிச்சுடுவேன். :D

Friday, August 27, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 7

ரமேஷ் தொலைபேசியை எடுத்துக் கடைசியாக வில்லன் பேசிய எண்ணுக்கு அழுத்திவிட்டு, "327" என்றான். மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை, ரமேஷின் முகம் மிகப்பிரகாசமாக இருந்தது. "எப்படி வழி?" என்று கேட்டான். பின்னர் தொலைபேசியை வைத்துவிட்டு வித்யாவிடம், "அது ஒரு ஓட்டல் அறை எண். ஓட்டல் பெயர் ப்ரின்ஸி ஸ்டார் என்பதாகும். இங்கே தான் பக்கத்திலே அடுத்த தெருவிலே இருக்காம். " என்றான். உடனே ஒரு எண்ணம் தோன்ற வித்யாவை, "நீ இங்கே இரு. அவன் வந்தால் எப்படியாவது சொல்லிச் சமாளி. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்." என்று கிளம்பினான். வித்யாவோ அவனைத் தனியாக அனுப்பப் பயந்தாள். "அதெல்லாம் முடியாது ரமேஷ், நானும் வருவேன்." என்று சொல்லிய வண்ணம் கூடவே வந்தாள். ரமேஷ் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. "ஒருவேளை அங்கே குழந்தை இருந்தாளென்றால்?? நான் அவளைப் பார்க்கணும்." இப்போது மறுக்க முடியவில்லை அவனால். இருவரும் சென்றனர். ரிசப்ஷனில் அறை எண் 327 பற்றிக் கேட்டனர்.

பின்னர் அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்று, அறையையும் கண்டு பிடித்துவிட்டனர். உள்ளே நுழையணும். ஆனால் பூட்டி இருக்குமோ? தள்ளிப் பார்த்தார்கள். ஆம் பூட்டித் தான் இருந்தது. ரமேஷ் மட்டும் மறுபடி கவுண்டருக்குப் போய், "327, சாவியை உள்ளேயே வைச்சுட்டேன் போல, மாஸ்டர் கீயைக் கொடுங்க!" என்று கேட்க, மும்முரமாகக் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் அவனைச் சரியாகப் பார்க்காமலேயே சாவியைக் கொடுத்தான். இதயம் படபடவென அடித்துக்கொள்ள மெல்ல மெல்ல சத்தமே இல்லாமல் அறையைத் திறந்தார்கள். உள்ளேயும் நுழைந்தனர். விருந்தினர் வந்தால் பேசுவதற்கென போடப் பட்டிருந்த சோபாக்களைத் தாண்டி அறையின் மையப் பகுதிக்கு வந்தாயிற்று. அடுத்துக் குளியலறை ஒரு பக்கம் இருந்தது. பெரிய வார்ட்ரோப் இன்னொரு பக்கம். குளியலறையை ரமேஷ் மெல்லத் திறந்து பார்த்தான். இது வரை யாரையும் காணவே இல்லையே? என்றால்? குழந்தை எங்கே?? அந்தப் பெண் எங்கே? அதற்குள்ளாக வார்ட்ரோபைத் திறந்த வித்யா, "வீல்" என அலறினாள்.

" அமைதி, அமைதி, அமைதி, திருமதி ரமேஷ் அவர்களே! என்னைத் தான் தாங்கள் கடந்த நாலு மணி நேரமாய்ப் பார்க்கிறீர்கள். இப்படிப் பயந்தால் எப்படி??" ரமேஷ் ஆத்திரத்துடன் திரும்ப அந்தப் பெரிய வார்ட்ரோபில் ஒரு பக்கம் சட்டைகள், பாண்ட்கள் மாட்டப் படும் இடத்தில் ஒளிந்து கொண்டிருந்த வில்லன் வெளியே வந்தான். "நினைச்சேன், இரண்டு பேரும் இங்கே தான் வருவீங்க என்று. உங்க குழந்தையை இடம் மாத்தியாச்சு!" என்றான் சற்றும் இரக்கமில்லாமல். "இப்போ எங்கே எங்க குழந்தை? என்று வித்யா கேட்க, அவன் அசட்டையாக வித்யாவை ஒரு பக்கமாய்த் தள்ளி விட்டான். அவன் கையில் நவநாகரீக உடை ஒன்று. அதை வித்யாவிடம் கொடுத்தான். வித்யா கேள்விக்குறியோடு பார்க்க, "உனக்குத் தான், இதை அணிந்து கொண்டு வா. நாம் ராயல் மெரிடீயன் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோவுக்குப் போகிறோம். இது டிஸ்கோவுக்கு ஏற்ற உடைதானே?" வித்யா அந்த உடையைத் தூக்கி வீசி எறிந்தாள். "பளார்!" இரு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு வித்யா அங்கே இருந்த கட்டிலில் விழுந்தாள். ரமேஷ் அவன் மீது ஆத்திரத்தோடு பாய, அவன் ரமேஷையும் அடிக்க, பதறிய வித்யா தடுக்க அவளுக்கு மேலும் அடிகள் விழுந்தன. ரமேஷால் பொறுக்க முடியவில்லை. ஏதேனும் ஆயுதம் கிடைத்தால் ஒரே போடாகப் போட்டுவிட்டு ஜெயிலுக்குப்போய்விடலாமா என்று கூட எண்ணினான்.

ஆனால் அதற்குள் வித்யா, அந்த உடையைப் பொறுக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு மேலே ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு வந்தாள். அவளுக்கு என்னதான் படித்து வேலை பார்த்தாலும் கண்ணியமான ஆடைகளே பழக்கம். இப்படி எல்லாம் அங்கங்கள் தெரியும்படி உடுத்திப் பழக்கம் இல்லை. ஆனால் வில்லனோ, கடுமையாக, "அந்தத் துண்டை எடு! வா என்னுடன்! திருவாளர் ரமேஷ் அவர்களே! ஒரு மணி நேரம் டிஸ்கோவில் இருப்போம். இப்போ நேரம் சரியாக பத்து மணி ஆகிறது. பதினொரு மணிக்கு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிடுவோம். ஆகவே இன்னும் ஒரு மணிநேரத்துக்குள்ளாக அங்கே வந்தாயானால் உன் மனைவியை நீ அழைத்துச் செல்ல முடியும். நானே கொண்டு விட்டாலும் விடுவேன். ஆனால் ஒரு செகண்ட் பிந்தினாலும் உன் மனைவி உனக்குச் சொந்தம் அல்ல." என்றான். ரமேஷ் ஆத்திரத்தோடு, "ஒரு மணி நேரம் என்ன? உனக்கு முன்னாலேயே நான் போய்க் காத்திருப்பேன்." என்று சொல்ல, 'ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? இல்லை தம்பி, இல்லை! நீ உன்னுடைய காரிலே வரும் எண்ணம் இருந்தால் அதை விட்டு விடு. உன் மனைவி அந்தக் காரில் என்னோடு வருகிறாள். இரு, இரு, சட்டைப் பையில் ஏதானும் பணம் வைத்திருக்கிறாயா எனக்குத் தெரியாமல்?? " ஒரு கையால் வித்யாவைத் துப்பாக்கியைக் கொண்டு பயமுறுத்திக்கொண்டே இன்னொரு கையால் ரமேஷை சோதனைபோட்டான். அவன் கையில் பயன்படுத்த முடியாத க்ரெடிட் கார்டுகளைத் தவிர வேறேதுவும் இல்லை என்று கண்டதும் சிரித்தான். "இது! இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்! ஒரு மணி நேரம், ஒரு மணி நேரத்திலே வந்துடு தம்பி!" தர தரவென்று வித்யாவை இழுத்துக்கொண்டு சென்றான் அவன்.

ரமேஷ் அங்கிருந்து கிளம்பி ராயல் மெரிடியன் ஓட்டலை நோக்கி நடந்தான். கால்கள் கெஞ்சின. மணி பார்க்கலாம் என்றாலும் அதுவும் இயலவில்லை. உத்தேசமாய் மணியைத் தெரிந்து கொண்டு நடந்தான். ஒரு வழியாய் ஓட்டலை அடைந்து விட்டான். ஓட்டல் லவுஞ்சில் மணி பதினொன்று ஆகி ஐந்து நிமிடம் ஆகப் போகிறது. ரமேஷ் பதறினான். டிஸ்கோ நடக்கும் இடம் கேட்டுக் கொண்டு ஓடினான். அங்கே யாரும் இல்லை. ஹாலே காலி! ஒவ்வொரு இடமாய்த் தேடினான். திரும்ப கார்கள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்து, தங்கள் காரைத் தேடினான். அப்போது தான் அவன் கார் பாதாளத்தில் இருந்த பார்க்கிங் ஏரியாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. ரமேஷ் ஓட்டமாய் ஓடினான்.

கார் ரமேஷைப் பார்த்ததும் நின்றது. கதவைத் திறந்த வித்யாவைப் பார்த்த ரமேஷ் பின்னால் இருந்த வில்லனிடம், "நான் அப்போவே வந்துவிட்டேன். விடு என்னையும், என் மனைவியையும். இதோடு போகட்டும்." என்று சொன்னான். "உன் மனைவியைக் கேள். அவளை நான் எவ்வளவு மரியாதையோடு நடத்தினேன் என்று." என்றான் வில்லன். ரமேஷ் வித்யாவைப் பார்க்க அவளும் ஆமோதித்தாள். இப்போது அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த வில்லன், "சரி, காரில் ஏறி உட்கார். நீ உன் குடும்பத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வாய் அல்லவா?" மீண்டும் கேட்டான்.

"என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்??? ஏற்கெனவே நான் சம்பாதித்த பணம், நகைகள், சேமிப்புப் பத்திரங்கள் எல்லாம் போயாச்சு. எல்லாவற்றுக்கும் மேலே என்னோட வேலை அதுக்கே உலை வைத்துவிட்டாய்! என் மனைவியையும் அபகரிக்கப் பார்த்தாய்! இன்னும் என்ன செய்தால் எங்களை விடுவாய்??"

கலகலவெனச் சிரித்த வில்லன், " காரை நீயே ஓட்டு ரமேஷ். நான் வழி சொல்கிறேன்." என்றான். அவன் வழி சொல்லக் கார் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறந்தது. சற்று நேரத்தில் ஒரு பண்ணை வீடு வந்தது. மிகவும் அழகான பண்ணை வீடு. யார் அந்த வீட்டில் இருக்கக் கொடுத்து வைத்திருக்காங்களோ என்ற எண்ணம் ரமேஷின் மனதில் உதயம் ஆயிற்று. அடுத்த கணம் காரை அந்தப் பண்ணை வீட்டில் நிறுத்தச் சொன்ன வில்லன். ரமேஷின் கையில் தன் துப்பாக்கியைக் கொடுத்தான். "இதோ பார்! இதில் குண்டுகள் இருக்கின்றன. உனக்கு எதிரேயே நிரப்பி இருக்கிறேன். பார்த்திருப்பாய் அல்லவா? நீ இந்த வீட்டுக்குள் சென்று இந்த வீட்டில் தற்சமயம் இருக்கும் ஒரு நபரைச் சுட்டுக் கொல்ல வேண்டும். அவ்வளவே!" என்றான்.

தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. என்னமோ அல்வா சாப்பிடு என்கிறாப்போல் அல்லவா சொல்கிறான்?? என்ன இது? ஏதோ சிக்கலில் மேலும் மாட்டிவிடப் போகிறான் போல் தெரிகிறதே? ரமேஷ் உறுதியாக மறுத்தான். என்ன ஆனாலும் சரி, நான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று நினைத்த வண்ணம் திட்டவட்டமாய் மறுத்தான்.

Wednesday, August 25, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 6

"ஓகே. இப்போ எனக்குப் பசி, பயங்கரமாப் பசி, சாப்பிடப் போகலாமா?" என்றான். வித்யாவும், ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரு பைசாக் கூட இல்லை என்றால் சத்தியமாக இல்லை. சாப்பிடக் கூப்பிடறானே? ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாதவனாக ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் முன் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டுத் தானும் கீழே இறங்கி அவர்களையும் இறங்கச் சொல்லி வற்புறுத்தினான். அவன் சொல்லை மீறினால் என்ன நடக்குமோ எனப் பயந்து அவர்கள் இருவரும் கீழே இறங்கினார்கள். உள்ளே சென்றனர் மூவரும். அங்கே காத்திருந்த பணியாளர் ஒரு இடத்தை அவர்களுக்கெனக் காட்டி அமர உதவி செய்ய மூவரும் அமர்ந்தனர். உணவுக்காக ஏற்பாடுகள் செய்யும் பணியாளர் வந்து"என்ன உணவு?" என்று விசாரிக்க, பசி இருந்தாலும், ரமேஷும், வித்யாவும் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வில்லன் சிரித்துக் கொண்டே, பணியாளரிடம் தனக்கென உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான். பின்னர் இருவரையும் பார்த்துக் குறிப்பாக, ரமேஷிடம், "உனக்கு உன் குடும்பம் முக்கியம் இல்லையா? குடும்பத்துக்கும், குழந்தைக்கும் எதுவேண்டுமானாலும் செய்வாயா?" என்று கேட்க, ரமேஷ் விரக்தியோடு, "அதான் மொத்த சேமிப்பு, நகை எல்லாத்தையும் இழந்துவிட்டு உட்கார்ந்திருக்கேனே. வேலையும் என்ன கதினு நாளைக்குப் போனால் தான் தெரியும்." என்று சொன்னான்.

"ஓகே,ஓகே, இப்போ நீ அதிகமா ஒண்ணும் செய்யவேண்டாம். என் பர்சிலே பணமே இல்லை. இதோ பார்!" என்று திறந்து காட்டினான். க்ரெடிட் கார்டெல்லாம் நான் வச்சுக்கறதில்லை. உங்க க்ரெடிட் கார்டையும் பயன்படுத்த முடியாது. அக்கவுண்டிலே பணமே இல்லையே! அதனாலே இரண்டு பேரும் இப்போச் சேர்ந்து போய் எங்கே இருந்தாவது பணம் புரட்டிக் கொண்டு வாங்க. அதுவும் அரை மணி நேரத்துக்குள்ளே." என்றான். "இந்த நேரம் எந்தக் கடையும் திறந்திருக்காது. எங்கே போய்ப் பணம் கேட்போம்? பிச்சை எடுத்தாலும் கிடைக்காது." என்று ரமேஷ் ஆத்திரத்துடன் சொல்ல, வித்யா ஆமோதித்தாள். "அது உங்க பிரச்னை!' கையை விரித்துவிட்டான் வில்லன். இருவரும் வேறு வழியில்லாமல் எழுந்தனர்.

சற்று நேரம் எங்கே செல்வது, எப்படிப் பணத்துக்கு ஏற்பாடு செய்வது எனப்புரியாமல் விழித்தனர் இருவரும். பின்னர் இப்போதே ஐந்து நிமிடம் போயிடுச்சே என்ற கவலையில் நடந்தனர். கொஞ்ச தூரம் போய்ப் பார்த்தார்கள் இருவரும். எல்லா இடங்களிலும் கடைகளை மூடிக் கொண்டிருந்தனர். திறந்திருந்தாலும் யாரிடம் போய்ப் பணம் கேட்பது?? சுற்றிச் சுற்றி வந்த இருவரின் காதுகளிலும், "ஹே ராம்!' என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தனர் இருவரும். அங்கே ஒரு அடகுக் கடை. அதன் முதலாளியான வட இந்திய சேட் தான் அப்படிக் கூறி இருக்கிறார். கடையை மூடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர் வேலை செய்யும் ஆட்கள்.

ரமேஷின் மூளையில் பளிச்சிட்டது. உடனே வித்யாவின் கைகளைப் பார்த்தான். ஒரு மோதிரம் மட்டுமே இருந்தது. அவள் அதிகம் தங்க நகைகளை தினசரி அணிவதில்லை. இந்த மோதிரமும் ரமேஷ் அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தில் பரிசாக அளித்தது. அதைக் கழட்டச் சொன்னான். தன்னுடைய வாட்சையும் கழட்டினான். மனசே இல்லாமல் கழட்டினார்கள் இருவரும். அந்த நகைக்கடையில் போய் அதை அடகு வைத்துப் பணம் கேட்டார்கள். கடை மூடும் சமயம் எனப் பணம் தர மறுத்தார் வட இந்திய சேட். கெஞ்சிக் கூத்தாடி அவரை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்து அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வளவு என எண்ணிக் கூடப் பார்க்காமல் ஓடி வந்தனர் இருவரும்.

அரை மணி நேரத்துக்கு இன்னும் ஐந்து நிமிஷங்களே இருந்தன. ஓட்டமாய் ஓடோடி வந்து பார்த்தால் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் இல்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டுக் கழிவறையில் இருந்து அவன் வெளியே வருவதைக் கண்டனர் இருவரும். "என்ன பயந்துட்டீங்களா? அப்படியே நான் போயிருந்தால் என்ன? உங்களுக்கு நல்லது தானே?" என்றான் அவன். "நல்லது தான். ஆனால் எங்க பொண்ணு இருக்கிற இடம் தெரியணுமே! நீ போயிட்டியானா உன்னை எப்படிக் கண்டு பிடிக்கிறது?" பல்லைக் கடித்தான் ரமேஷ்.

"ஓஓ அதுவும் அப்படியா?? ஆமாம், ஆமாம், உனக்கு மனைவி, குழந்தை மேல் பாசம் அதிகமாச்சே!' என்று ஏளனம் தொனிக்கக் கூறினான் அவன். ரமேஷ் அவனை அடிக்கப்பாய, ஒரு கையால் தடுத்துக் கொண்டே இன்னொரு கையால் ரமேஷைக் காருக்குப் போ எனத் தள்ளினான். சற்றே யோசித்தவன் போலக் "கொஞ்ச நேரம் காருக்கு வெளியே காத்திருங்க. இதோ வரேன்." என்று சொல்லிவிட்டு எங்கேயோ போனான். கொஞ்ச நேரம் எந்தப்பிடுங்கலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ரமேஷ் வித்யாவைக் கோபமாய்ப் பார்த்தான். வித்யா ஏதோ சொல்ல ஆரம்பித்த போது, "பேசாதே! நீ எப்படி அந்தக் கவரைக் கொண்டு போய் எங்க ஆபீஸோட போட்டி ஆட்களிடம் கொடுப்பாய்? கொடுத்த கவரைப் பிரிச்சுப் பார்க்கணும்னு தோணலையா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்டான்.

"எனக்கு எப்படித் தெரியும் ரமேஷ்?? நானும் உங்களைப் போலதானே?" என்று வித்யா கேட்க, "அவன் நம்மை ஏதோ சிக்கலில் மாட்டிவிட வலை விரிக்கிறான் என்பது கூடப் புரியாதபடிக்கு நீ என்ன மனித வள மேம்பாட்டுத் துறையிலே வேலை செய்யறே?? மனிதர்களோட எண்ணங்களையோ, எண்ண ஓட்டத்தையோ புரிஞ்சுக்காம என்னத்தை வெட்டி முறிக்கிறே?"

"ரமேஷ், ரமேஷ், வேண்டாம், தயவு செய்து வேண்டாம். இது நம் வீடு இல்லை. மேலும் இப்போ நாம இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு சிக்கலில் இருக்கோம். அதைத் தீர்க்கும் வழியைப் பார்க்கலாம்." என்றாள் வித்யா.

ரமேஷோ கோபம் அடங்காமல், "ஒருவழியா என்னோட எதிர்காலத்தை நாசம் பண்ணியாச்சு! போச்சு, போச்சு, என்னோட ப்ரமோஷனும் போச்சு, அதோட வேலைக்கே உலையும் வைச்சாச்சு!" என்று பல்லைக் கடித்துக்கொண்டே வித்யாவிடம் சொல்ல கண்ணீரோடு முகத்தைத் திருப்பிக் கொண்ட வித்யா, திடீரென, "ரமேஷ், அங்கே பாருங்க, அவன் கைபேசியை காருக்குள்ளே வைச்சுட்டுப் போயிருக்கான்." என்று காட்டினாள். ரமேஷ் சட்டெனக் கோபம் அடங்கியவனாய்த் திரும்பிப் பார்த்தான். காரைத் திறந்து அந்தக் கைபேசியை எடுத்துக் கடைசியாய் அவன் பேசிய தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தான். வில்லன் கூப்பிடும்போது, "327" என்று கூப்பிட்டது நினைவில் வரவே, அவனும் அவ்வாறே கூப்பிட்டான்.

சோதனைப் பதிவு

சோதனை!

Tuesday, August 24, 2010

வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!

ரொம்ப நாட்கள் கழித்துத் தாய்மொழியிலே இன்னிக்குத் திரைப்படம் பார்த்தேன். ஹிஹிஹி, இப்போல்லாம் தாய்மொழிப் படங்களே பார்க்கிறதில்லை. இன்னிக்கு என்னமோ அதிசயமா நம்ம வீட்டிலே வேலை செய்யற பொண்ணு காலம்பர ஐந்தரை மணிக்கே வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டுப்போனாளா?? ஐந்து நாட்களா அவ தினமும் லீவ் போடாமல் வரதுக்கே மழை கொட்டித் தீர்க்குது. இன்னிக்குச் சீக்கிரம் வந்ததுக்குக்கேட்கணுமா? மழை ஆரம்பிச்சுடுச்சு. வேர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணவேண்டியதையும் பண்ணியாச்சு. திடீர்னு கணினியிலே உட்கார போரடிச்சது. குழுமங்களிலேயும் யாரையும் காணோம்.

சரினு தொலைக்காட்சியிலே ஏதாவதுபடம் பார்க்கலாம்னு ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தா, "ஆஹா, இன்ப நிலாவினிலே" னு கண்டசாலா பாடிட்டு இருந்தார். என்னடா இது ஆச்ச்ச்சரியம்னு பார்த்தா ஜெமினியும், சாவித்திரியும் படகிலே டூயட் பாடிட்டுப் போனாங்க. நல்லவேளையா அப்போ நான் துள்ளிக் குதிச்சதைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. ரங்க்ஸுக்கு உண்ட மயக்கம். போய்ப் படுத்துட்டார். நானே தான் ரசிச்சுக்க வேண்டி இருந்தது. நம்ம படமாச்சே. இந்தப் படம் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கும், "ராம பக்த ஹனுமான்" படத்துக்கும் அப்பா தியேட்டருக்குக் கூட்டிப் போய்க் காட்டியது நினைவில் வந்தது. தம்பி அப்போ குழந்தை???? சரியாத் தெரியலை. ஆனால் அப்புறமா மூன்று மணிக்கு எழுந்து வந்த ரங்க்ஸ் இந்தப் படம் 1955-56-ல் வந்ததாகவும், அவர் சிதம்பரத்திலே படிக்கும்போது பார்த்ததாயும் சொன்னார். ஆனால் நான் விபரம் தெரிஞ்சு தான் பார்த்திருக்கேன்.

அதுக்கப்புறமா இந்தப் படத்தை ஒவ்வொரு வருஷமும் திருப்பாவை வகுப்பு நடத்தி வந்த ராஜம்மாள் சுந்தர ராஜன் குழுவினர் பக்தி கலா நிகழ்ச்சி ஒண்ணும் நடத்துவாங்க, பொங்கலுக்கு முன்னாடி. அப்போ முதல் நாள் ஒரு பக்திப் படம் இலவசமாப் போட்டுக் காட்டுவாங்க. வருஷா வருஷம் அது என்னமோ தெரியாது இந்தப் படம் தான் காட்டுவாங்க. அநேகமா அந்தப் பிரிண்டே கிழிஞ்சு சுக்குச் சுக்காப் போயிருக்கும். அவ்வளவு முறை காட்டி இருக்காங்க. அவ்வளவு முறை நானும் பார்த்திருக்கேன். முதல்லே எல்லாம் தம்பியைக் குழந்தைனு சொல்லிக் கூடவே கூட்டிப் போவேன். அப்புறமா பாய்ஸ் நாட் அலவ்ட் னு சொல்லிட்டாங்க. ஆக நான் தனியாவே நாலைந்து தரம் பார்த்திருப்பேனா?? என்றாலும் கடந்த பல வருஷங்களில் என் குழந்தைகளிடம் இந்தப் படத்தைப் பற்றியும், ரங்காராவ் நடிப்பைப் பற்றியும், "கல்யாண சமையல் சாதம்" பாடலைப் பற்றியும் சொல்லி இருக்கேன். இந்தியாவிலே பார்க்க முடியாத எங்க பையர் அமெரிக்காவிலே போய்ப் பார்த்தேன்னு சொன்னார். :P

படத்தை நல்லா ரசிச்சுப் பார்த்தேன். நல்லதொரு நகைச்சுவைப் படம். அதுவும் அந்த ஜோசியர்கள்/புரோகிதர்களுக்கு வெற்றிலைத் தட்டு நகருவதும், கீழே விரித்திருக்கும் கம்பளம் சுருட்டிக்கறதும், கட்டில் கால் மண்டையிலே அடிக்கிறதும், சுத்தோ சுத்துனு சுத்தறதும் கடோத்கஜனோ ஆட்கள், "ஆஹூ தலைவா, இஹூ தலைவா, ஊஹூ தலைவா" னு சொல்றதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. கொஞ்சம் இல்லை நிறைய விட்டலாசார்யா டைப்தான். என்றாலும் மனம் லயித்து, மனம் விட்டுச் சிரிச்சுப் பார்த்தேன். ரங்காராவை விடவும், சாவித்திரி ஆண்மகன் என்று தன்னை வித்தியாசப் படுத்தும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். மணமகனாக தங்கவேலு. அவருக்கு மணமகள் கருங்குரங்காயும், புலியாயும், ராக்ஷசியாவும் தெரியறதும் நல்லா இருந்தது. குழந்தைகள் படம்னு ரங்க்ஸோட தீர்ப்பு. ஆனாலும் அவரும் உட்கார்ந்து முடிவு வரை பார்த்தார். நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! இன்னொரு முறை வந்தாலும் பார்த்துட்டு எழுதறேன். ஓகேயா?

குட்டிப் புலிக்கு வாழ்த்துகள்.


சூடான் புலிக்குக்குட்டிப்புலி பிறந்துள்ளது. தாய்ப் புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துகள். அனைவரும் பூரண உடல் நலத்துடனும், மகிழ்ச்சியோடு இருக்கப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்த வாங்கப்பா எல்லாரும்.

Sunday, August 22, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 5

கண்ணில் ரத்தம் வந்தது ரமேஷுக்கு. வித்யா அவங்க வீட்டிலும் சரி, கல்யாணமாகி வந்தப்புறமும் சரி, ஒரு ராணி மாதிரியே நடத்தப் பட்டிருக்கிறாள். இப்படியான ஒரு நடவடிக்கை, அதுவும் முரட்டுத்தனமான நடவடிக்கையை அவள் கண்டதே இல்லை. ரமேஷ் குரலை உயர்த்திக் கூடப் பேசியதில்லை அவளிடம். தன் மனைவி மாற்றான் ஒருவன் கையால் அடிபடுவதை ரமேஷாலும் சகிக்க முடியவில்லை. வித்யா உடலே நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். ஆறுதல் சொல்லும் வண்ணம் அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான். அந்த ஒரு தொடுகை எத்தனையோ திருப்தியை இரண்டு பேருக்குமே கொடுத்தது. ரமேஷ் திரும்பிப் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டே, "நானே ஓட்டறேன். வித்யாவாலே முடியாது. அதுவும் இப்போது இருக்கும் நிலையில்!" என்று நிறுத்தினான். "ஹாஹாஹா" என்று சிரித்தான் வில்லன். வித்யாவோ அவனைப் பார்த்து, "எங்கள் இருவரின் மொத்த சம்பாத்தியமும், சேமிப்பும் ஆற்றோடு போய்விட்டது. ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கத்தினாள். அவன் அதை அலட்சியம் செய்துவிட்டு, "வித்யா மேடம், உங்களால் ஒரு முக்கியமான வேலை ஆகவேண்டி இருக்கு. நீங்க தான் அதற்குச் சரியான நபர்." என்றான்.

"என்ன, சொல்லித் தொலை!" என்றாள் வித்யா. ரமேஷ் ஆக்ஷேபித்தான். "அவளால் எதுவும் செய்ய முடியாது. நீ எங்கள் குழந்தையை எங்களோடு பேசவும் விடமாட்டேன் என்கிறாய். அதிலேயே அவள் மனம் நொந்து போயிருக்கிறாள். அவளை வேலை வாங்காதே!" என்று கடுமையாகச் சொன்னான். வில்லனோ,"தம்பி, அதெல்லாம் நீ இப்போச் சொல்ல முடியாது. வித்யா நான் சொல்லும் வேலையைச் செய்தே ஆகவேண்டும். வேறே வழியே இல்லை." என்றான். வித்யா, "நான் தயார்!" என்று வறண்ட குரலில் சொல்ல, "இதோபார் வித்யா, நான் சொல்வதைச் சரியாகச் செய்யவேண்டும், இதோ இந்தக் கவரை எதிரே தெரியும் காபி கஃபேயில் நரசிம்மன் என்பவர் காத்திருப்பார். இந்த அட்டையை எடுத்துச் செல். அவரிடம் இதைக் கொடுத்துவிட்டு வா. அவர் வரவில்லை என்றால் காத்திருந்து கொடு." என்றான். "என்ன இருக்கு இந்தக் கவரில்??? ஏதேனும் சட்டத்துக்குப் புறம்பான விஷயம்? அல்லது அஃபின், கஞ்சா மாதிரிக் கடத்தல் விஷயமா? அதெல்லாம் இங்கே நடக்காது." என்றான் ரமேஷ்.

வில்லன் அதுக்கும் சிரித்துக் கொண்டான். "திருமதி வித்யா, இந்த வேலையை மிக அழகாய்ச் செய்து முடிப்பார்கள்." என்று சொன்னான். வித்யா வண்டியில் இருந்து கீழே இறங்கினாள். வில்லன் கொடுத்த கவரை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து எதிரே இருக்கும் காபி கஃபேக்குப் போனாள். கவுண்டரில் இருந்த பெண்ணிடம் நரசிம்மன் பெயரைச் சொல்லிக் கேட்க அவன் இரண்டு டேபிள்களைச் சுட்டிக் காட்டினான். அவற்றில் ரிசர்வ்டு என எழுதப் பட்டிருந்தது. அங்கே போய் உட்கார்ந்து கொண்டாள். நரசிம்மன் இன்னும் வந்திருக்கவில்லை. மெளனமாகத் தனக்குள் யோசித்துக் கொண்டே அந்தக் கவரை அப்படியும், இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே காரைப் பார்க் செய்யச் சொல்லிவிட்டு ரமேஷையும் அழைத்துக் கொண்டு காபி கஃபேயின் வாசலில் இருந்து வித்யாவைப் பார்க்கும்படியான கோணத்தில் வந்து நின்று கொண்டனர் இருவரும். ரமேஷ் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வில்லன் அவனைக் கவனித்துக்கொண்டே,"என்ன பார்க்கிறாய் ரமேஷ்?? அந்தக் கவரில் இருப்பது என்ன தெரியுமா? நீ இப்போப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாயே? அந்த ப்ராஜெக்டின் முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்பு. கணினியில் இருந்து எடுக்கப் பட்டுப் பிரிண்ட் அவுட் போடப் பட்டது. அதைத் தான் நரசிம்மனுக்குக் கொடுக்கறதுக்காக வித்யாவை அனுப்பி இருக்கேன். நரசிம்மன் யாருனு தெரியுமா??" பலமாகச் சிரித்தான் வில்லன். ரமேஷ் கோபம் அடங்காமல் அவனையே பார்த்தான். "நீ இருப்பது A&T தானே? அங்கிருந்து பிரிந்து போய்ப் போட்டிக் கம்பெனி ஆரம்பித்தானே தியாகு?? நினைவிருக்கிறதா? அவனுடைய கம்பெனியில் இந்த ப்ராஜெக்டுக்கான வடிவமைப்பைத் திரு நரசிம்மன் தான் எடுத்துச் செய்தார். அவங்களுக்குக் கிடைக்கலை. உங்க கம்பெனிக்குக் கிடைச்சது. அதுக்கு மூல காரணமே நீ தான்னு தெரியும். அதான் உன்னை ஒரு வழி பண்ணுவதற்காக இந்தத் தகவல்களைத் திரட்டி அந்தக் கம்பெனிக்குக் கொடுக்கப் போறேன். இப்போ நீங்க செய்யும் அதே வேலையை அவங்களும் செய்து காட்டுவாங்க." ரசித்துச் சிரித்தான்.

"யூ, யூ, இடியட், முட்டாள், அறிவற்றவனே! என்ன காரியம் செய்து விட்டாய்? இந்த விஷயம் வெளியே பரவினால், என், பாஸுக்கு மட்டும் தெரிஞ்சால் என்ன நடக்கும் தெரியுமா? அதுவும் வித்யாவை விட்டே செய்யச் சொல்லி இருக்கிறாயே?" கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாத ரமேஷ் அவனை ஓங்கி ஒரு குத்து விட்டு விட்டான். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் தைரியம் வந்து அடிக்கவும் பாய்ந்தான். வில்லன் அலட்டிக்கொள்ளவே இல்லை. கைபேசியை எடுத்து, "327?" என்று கூப்பிட்டான். அவன் கையிலிருந்து அதைப் பிடுங்க முயற்சித்த ரமேஷை ஒரு தள்ளுத் தள்ள ரமேஷ் கீழே விழுந்தான். அவன் எழுந்திருப்பதற்குள், கைபேசியில் பேசி ஏதோ செய்தியை அனுப்பினான். என்னவென்று தெரிந்து கொள்ள ரமேஷ் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. ரமேஷ் மணலைத் தட்டிவிட்டுக் கொண்டே எழுந்தான். காபி கஃபேயில் காத்திருந்த வித்யாவை நோக்கி ஓடினான். அவன் வருவதை உள்ளிருந்தே கண்ட வித்யா, கை அசைத்தாள். அதற்குள் வில்லன் ரமேஷைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.

அப்போது அங்கே கோட், சூட் அணிந்த ஒருவர் வர, அவரும் கவுண்டரில் கேட்டுக் கொண்டே வித்யா அமர்ந்திருக்கும் டேபிளுக்கு வந்தார். வித்யாவைப் பார்த்து ஏதோ சொல்ல அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள். பின் தன் கையில் இருந்த கவரை அவரிடம் கொடுக்க அவரும் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்துவிட்டுச் சிரித்தவண்ணம் தலை அசைத்தார். மீண்டும் வித்யாவை ஏதோ கேட்க மறுத்த வித்யா கை எடுத்துக் கும்பிட்டுவிட்டுப் பின் எழுந்து காரை நோக்கி வந்தாள். ரமேஷை வந்தவன் காருக்கு இழுத்துப் போனான். ரமேஷ் தன் எதிர்காலமே சூன்யமாகிப் போனதை நினைத்து இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். வித்யா காருக்குள் வர அவளிடம் வில்லன், "உன் கணவனைத் தேற்று. நீ அவன் அலுவலக ரகசியங்களைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டாய் என்று வருந்துகிறான் பார்!" என்றான் ஏளனம் தொனிக்க.

"என்ன?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் வித்யா. "ம்ம்ம்ம்?? நல்லதொரு வேலை இல்லையா? செம்மையாகச் செய்து விட்டாய்! இனியும் அப்படியே செய்யணும்!" என்றான் வில்லன் சிரிப்போடு. வித்யா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

Thursday, August 19, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 4

ரமேஷ் துடிதுடித்தான். அவன் கையிலிருந்து தொலைபேசியைப் பிடுங்கித் தன் பெண்ணோடு பேச முயற்சித்தான். ஆனால் அவனை நகரக் கூட விடாமல் அவன் துப்பாக்கி இப்போது அவன் கழுத்தருகே பதிந்திருந்தது. "கொஞ்சம் அசைந்தாலும் சுட்டு விடுவேன்!" என்றான் இரக்கமற்ற வறண்ட குரலில். அவன் பேசினான். "ம், சரி!" என்பதற்கு மேல் வேறு எதுவுமே பேசவில்லை. பின்னர் அவன் வித்யாவிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு தன் பக்கத்தில் வைத்துக்கொண்டான். "இப்போ எங்கே போகணும் தெரியுமா?" என்று கேட்டான். வித்யா ரொம்பப் பணிவோடு, "சொல்லுங்க!" என்று விநயம் காட்ட ரமேஷ் கடுகடுத்தான். "சக்தி லாக்கர்ஸ்" ஒரே வரியில் பதில் வர, இரண்டு பேருக்குமே தூக்கிவாரிப் போட்டது. அந்த லாக்கர்கள் தனியார்கள் நடத்தும் லாக்கர் கம்பனி. அதில் தான் வித்யாவின் நகைகளையும், சேமிப்புப் பத்திரங்களும் வைக்கப் பட்டிருந்தன. அது எப்படி இவனுக்கு???? ரமேஷ் ஒருவேளை இவன் வருமான வரித்துறையைச் சேர்ந்தவனாய் இருப்பானோ என நினைத்தான்.

"நீ யார்? என்ன விஷயமாய் இது எல்லாம் கேட்கிறாய்? சட்டத்திற்குட்பட்ட சொத்துக்களே எங்களிடம் உள்ளது. நீ நினைக்கிறாப்போல் நாங்கள் கள்ளப் பணமெல்லாம் வைத்திருக்கவில்லை!" என்றான் ரமேஷ்.

"ஹா, ஹா, ஹா!" என்று சிரித்த அவன்," என்னை என்ன வருமான வரியோ, விஜிலன்ஸ் துறையிலோ வேலை செய்பவன் என்று நினைத்துவிட்டாயா? அதெல்லாம் இல்லை. உன்னோடு எனக்குத் தீர்க்கவேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது. அதற்குத் தான் இப்படி எல்லாம் செய்கிறேன்."

"பகையா? நான் உன்னைப் பார்த்தது கூடக் கிடையாதே?" பரிதாபமாய் ரமேஷ் சொல்ல, "அதனால் என்ன? நான் உன்னைப் பார்த்திருக்கேன். உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உன் ஒவ்வொரு நாளின் டைம்டேபிளும் எனக்குத் தெரியும்!" என்றான். வண்டி அதற்குள் லாக்கர் இருக்கும் தெருவுக்கு வந்துவிட்டது. வித்யா மட்டும் போனால் போதும் என்று சொன்ன அவன், கீழே இறங்கிக் கொண்டு, ரமேஷையும் இறங்கச் சொன்னான். வித்யா தயங்கிக் கொண்டே ரமேஷ் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். "போ!" என்று அதட்டினான் வித்யாவை. "லாக்கரில் என்ன எல்லாம் இருக்கிறதோ எல்லாம் இங்கே வரவேண்டும். இதோ, இந்தப் பையில் போட்டு எடுத்து வா!" பையை வித்யாவின் கையில் கொடுத்தான். எல்லாத்துக்கும் தயாராக வந்திருக்கிறானே? ரமேஷ் ஆத்திரம் அடங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா உள்ளே போனாள். அவள் வர எப்படியும் இருபது நிமிடம் ஆகும்.

ரமேஷ் சுற்றுமுற்றும் பார்த்தான். சத்தம் போட்டோ, அல்லது எங்காவது போலீஸ் இருந்தாலோ கூப்பிடலாமா என யோசித்த வண்ணம் தேடிக் கொண்டிருந்தான். எதிர் ப்ளாட்பார்மில் ஒரு பையன் கையில் புத்தகங்கள், தேகப் பயிற்சிச் சாதனங்களோடு போய்க் கொண்டிருந்தவன் திடீரென இந்தப் பக்கம் திரும்ப, ஆச்சரியத்துடன், "ஹை! அப்பா! இங்கே என்ன செய்யறீங்க?" என்று கத்தினான். ரமேஷ் திரும்பிப் பார்க்க அவன் அந்த வில்லனின் மகன் எனப் புரிந்தது. பதினைந்து வயதிருக்கலாமோ என்னமோ! அந்தப் பையனைப் பார்த்த அவனும் தன் கைகளை ஆட்டினான்.ஆஹா, இவனுக்கும் குடும்பம், மனைவி, மகன் என உள்ளனரா? அப்போ இவன் பையனிடமே உண்மை விஷயத்தைச் சொல்லிவிடவேண்டும் என்று தோன்றியது. உன் அப்பா செய்வது நியாயமானு கேட்டுடலாம். ரமேஷின் கண்கள் மின்னின. இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு சாதாரணமாக இருக்க முயன்றான்.

அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வர ஆரம்பித்தான். அவன் முதுகில் பிஸ்டல் அழுந்தியது. மெல்ல அவனைச் சாலையோர மரத்தருகே அந்தப் பிஸ்டலால் தள்ளிக் கொண்டு போனவன், அவனிடம் அடிக்குரலில், "என் பையன் வந்து பார்த்துப் பேசிட்டுத் திரும்பிப் போகிறவரைக்கும் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டக் கூடாது. குரலைக் காட்டினால் பிஸ்டலின் குண்டுகள் உன் பின்பக்கம் பாய்ந்து முன்பக்கமாய் வெளிவரும். " என்றான். இருந்த ஒரே நம்பிக்கையும் தூளாக ரமேஷ் மனம் வெறுத்துப் போனான். தப்பிக்க வழியே இல்லையா என அவன் மனம் ஏங்கியது. அந்தப் பையன் வந்து தன் அபபாவிடம் பேசிக் கொண்டிருந்தான். வித்யா லாக்கரின் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

ஓரக் கண்ணால் அதைக் கவனித்த வில்லன், தன் பையனிடம், "சரி, ரவி, நீ வீட்டுக்குப் போ. நான் காலைக்குள் வருவேன்." என்றான். பையனோ, "இல்லை அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன். இன்றைக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து படிக்கப் போகிறோம். காலையிலே பத்து மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ். அதிலே ஒரு சின்னத் தேர்வு. அதுக்காகத் தயாராகிறோம். அம்மாவும் சரினு சொல்லிட்டாங்க." என்றான். தந்தையும் சிரித்துக்கொண்டே ரவிக்கு அநுமதி வழங்க, அப்பாவுக்குக் கை அசைத்துக் கொண்டே அவன் விடை பெற்றான். வித்யாவும் அதற்குள் அருகே வந்துவிட்டாள். "என்ன, போன காரியம் வெற்றியா?" என்று கேட்டுவிட்டு அவள் கையில் இருந்த பையைக் கிட்டத் தட்டப் பிடுங்கிக் கொண்டான்.

மூவரும் காரில் ஏறி அமர வழக்கம் போல் ரமேஷே ஓட்டினான். எங்கே போகச் சொல்லப் போகிறானோ என நினைக்க, அப்போது அடையார் பாலம் வந்துவிட்டது. காரை மெல்லச் செலுத்திக் கொண்டிருந்தான். பின்னால் ஏதோ பொசுங்கும் நாற்றம். என்ன இது? திரும்பிப் பார்த்தால்??? அடக் கடவுளே, கஷ்டப் பட்டு வங்கியில் வைக்கணும்னு கட்டாயமாய் இருக்க வேண்டிய சிறு தொகையை மட்டும் வைத்துவிட்டு, மற்றதை எல்லாம் வாங்கிக் கொண்டு இந்தக் கடன்காரனிடம் கொடுத்திருக்க, அவன் அதற்கு நெருப்பு வைக்கிறானே? ரமேஷ் ஆத்திரத்துடன் அவன் கையிலிருந்து பெட்டியைப் பிடுங்க முயல, வித்யாவும் நிலைமையைப் புரிந்து கொண்டு கத்த ஆரம்பிக்க, வந்தவனோ எதற்கும் அசையாமல் ரமேஷ் பிடுங்க முயன்ற பெட்டியைப் பூட்டிக் காரின் ஜன்னல் வழியாகத் தூக்கி வெளியே எறிய, வெளியே அடையார் ஆற்றின் சமீபத்திய மழையினால் வந்த வெள்ளத்தில் அந்தப் பெட்டி மூழ்கியது. கூடவே நகைகள், சேமிப்புப் பத்திரங்கள் அடங்கிய பையும் துணைக்குச் சென்றது.

அதிர்ச்சியில் மூழ்கின ரமேஷ் வண்டியை நிறுத்திவிட்டுத் தன் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். பின்னாலிருந்து குரல், "வித்யா மேடம், வண்டியை இனி நீங்கள் ஓட்டுங்கள். உங்கள் கணவர் வண்டி ஓட்டும் நிலையில் இல்லை." சாவதானமாக நிதானமாகப் பேசினான். கையில் ரமேஷுக்காகக் கொண்டு வந்திருந்த குளிர்பானம். அதை ஒவ்வொரு சொட்டாக ரசித்துப் பருகிக் கொண்டிருந்தான். வித்யா அவனை அடித்துவிடுவது போல் பாய்ந்தாள். "பளார்" தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு வித்யா சீட்டில் அமர்ந்தாள். அவள் கன்னம் சிவந்திருந்தது. அவனை அடிக்கப் பாய்ந்த வித்யா அவளே அடி வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்.

அணிலே அணிலே ஓடி வா!

நெஸ்லே கிட்காட் விளம்பரம் இரண்டு, மூன்று நாட்களாய்ப் பார்க்கிறவங்க அதில் உள்ள கவிதைத்தனமான ரசனையையும், நகைச்சுவையையும் கண்டிருப்பார்கள். இரண்டு இளைஞர்கள் ஒரு பூங்காவில் அமர்ந்து கிட் காட்டைப் பிரிக்கும்போது ஒரு துண்டு கீழே விழ அதை ஒரு அணில் ஓடி வந்து பொறுக்கும். (கவிதாவோட அணில் குட்டி இல்லை, இது பெரிய அணில் :P) இதுதான் சமயம்னு பொறுக்கும் அணிலை(பெண் அணிலோ) மற்றொரு (ஆண் அணில்?)அணில் வந்து சீண்டும். அது கண்டுக்காமல் இருக்க உடனே டூயட் பாடி ஆடறது பாருங்க. என்ன ஒரு கற்பனா வளம் மிகுந்த அனிமேஷன். ரெட் ரோஸ் தான் கொடுக்கலை. நல்ல பாடலும் கூட. இளைஞன் ஆச்சரியமாய்ப் பார்த்துட்டு இருப்பான்.
ஆனாலும் அதுக்கெல்லாம் மசியாமல் அந்த அணில் மரத்தை நோக்கி ஓட, பின் தொடரும் அணில் இளைஞனைப் பார்த்துக் கண்ணடிக்கும் பாருங்க ஹையோ!! இவ்வளவு ரசனையான விளம்பரத்தைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. இதுக்காகவே டிவி முன்னாடி உட்காருகிறேன்னா பாருங்களேன்!

Wednesday, August 18, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 3

ஒரு நிமிஷம் யோசித்த ரமேஷுக்குப் பின்னர் மனம் கொஞ்சம் தெளிந்தது. ஏடிஎம்மில் அதிகம் பணம் எடுக்க முடியாது. குறிப்பிட்ட அளவு தான் எடுக்க முடியும். இவன் நோக்கம் பணத்திலேதான் என்றால் கையிலே இருக்கும் பணத்தோடு ஏடிஎம்மிலும் கிடைக்கும் பணத்தைக் கொடுத்தால் தீர்ந்தது விஷயம்! கொஞ்சம் உற்சாகம் வர, மெல்லச் சீட்டியடிக்கவேண்டும் போல் ஓர் உணர்வு. கடைக்கண்ணால் வித்யாவைப் பார்க்க அவள் என்னமோ அதே கலக்கத்தில் தான் இருக்கிறாள் போல் தெரிந்தது. என்ன இருந்தாலும் பெண்ணல்லவா? வெளியே தைரியமாய்க் காட்டிக்கொண்டாலும் உள்ளூரப் பெற்ற குழந்தையை ஒருத்தன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டினால் அவள் என்னதான் செய்வாள்? மெல்லத் தன் கையால் அவள் கையைப் பிடித்து அழுத்தினான். அந்தத் தொடுகை பல விஷயங்களை வித்யாவிடம் சொல்ல அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து காரை ஓட்டிக் கொண்டிருந்த ரமேஷை எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அவன் லேசாக ஒரு கண்ணை மூடித் திறப்பதைப் பார்த்ததும், ஏதோ திட்டம் வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. என்றாலும் பயம் அவளுக்கு.

பின்னாலிருந்து அதற்குள் துப்பாக்கி மீண்டும் அழுத்தப்பட்டது. "என்ன? திரு ரமேஷ்?? இன்னிக்கு உங்க ப்ரமோஷன் பற்றிய பேச்சு நடந்து முடிஞ்சு நாளையில் இருந்து நீங்க முக்கியமான பொறுப்பை வகிக்கப் போறீங்க இல்லையா? ம்ம்ம்ம்ம்??? அது சரி, வாழ்த்துகள். ஆனால் இப்போப் போட்டீங்களே திட்டம், ஏடிஎம்மில் என்னை மாட்டி விடறதுனு. அதுவும் நடக்காது, வேறே எதுவும் உங்களால் பண்ணவும் முடியாது. நான் சொன்னதைச் செய்யலைனா உங்க பொண்ணை நீங்கத் திரும்பப் பார்க்கவும் முடியாது. ஏடிஎம்மில் குறிப்பிட்ட அளவு பணம் தான் எடுக்க முடியும்னு எனக்குத் தெரியாதா? நான் அந்தக் குறிப்பிட்ட ஏடிஎம்முக்கு ஏன் போகச் சொன்னேன் தெரியுமா? இப்போ மணி என்ன பாருங்க மிஸ்டர்! மணி பார்க்கத் தெரியும் இல்லையா?" அவன் குரலின் எகத்தாளத்தில் சுருங்கிப் போனான் ரமேஷ். வித்யாவுக்கும் மறுபடி ஆயாசம் மிகுந்தது. அந்த ஏடிஎம்மின் அருகே உள்ள கிளையில் தான் வித்யாவும், ரமேஷும் சேமிப்பைப் போட்டு வைக்கும் கிளையும் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் அது மாலை நேரத்தில் இயங்கும். இவங்க மாதிரி அலுவலகம் செல்லும் கணவன், மனைவியரின் வசதிக்காகவே மாலை நேரத்தில் செயல்படும்படி அமைக்கப் பட்டது. இரவு எட்டு மணி வரையிலும் அங்கே பணம் எடுக்கலாம்.

அது சரி, அங்கே தான் இரண்டு பேரின் கணக்கும் இருப்பதை இவன் எப்படி அறிந்து கொண்டான்? நன்கு விஷயம் தெரிந்து கொண்டவனாய் இருக்கிறானே? இவனை என்ன செய்யறது?? "ம்ஹும், ஒண்ணும் பண்ண முடியாது திருவாளர் ரமேஷ் அவர்களே! எனக்கு எல்லா விஷயமும் தெரியும். பேசாமல் நான் சொல்வதைச் செய்யுங்கள். அப்போத் தான் உங்க பொண்ணு உயிரோட இருப்பா. உங்க மனைவியைப் பாருங்க, எப்படி அமைதியாய் இருக்காங்க!" துப்பாக்கியின் நுனி இப்போது வித்யாவின் கழுத்தருகே. வித்யா வியர்த்து விறுவிறுத்தாள். கண்களில் கலவரம் எட்டிப் பார்த்தது. சுட்டு விடுவானோ? "இப்போதைக்குச் சுட மாட்டேன். அவ்வளவு சீக்கிரமாயும் சுடமாட்டேன். " அவன் பதில். எண்ண ஓட்டத்தை அறிந்து வைத்திருக்கிறானே. பேசாமல் அந்தக் கிளைக்கு வண்டியை ஓட்டினான் ரமேஷ்.

"இரண்டு பேர் கிட்டேயும் சேர்ந்து எவ்வளவு பணம் இருக்கோ, மொத்தத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லு உன் மனைவியை. நீ காரை விட்டு எங்கேயும் போகவேண்டாம். " கண்டிப்பான கட்டளை பிறந்தது..

"அப்படி முடியாது. அதிகப் பணம் எடுக்கிறதுன்னா இரண்டு பேரும் சேர்ந்து போய்க் கையெழுத்துப் போடணும்." கெஞ்சுதலாய் ரமேஷ் சொல்ல, வந்தவன் யோசித்தான். "இருபதே நிமிடம் தான் உனக்கு. அதற்குள் வேண்டிய ஏற்பாடுகளை முடித்துக் கொடுத்துவிட்டு உன் மனைவியைப் பணம் வாங்கச் சொல்லிட்டு நீ திரும்ப வந்துடணும். வரலைனா இதோ உன் பெண் இருக்குமிடத்திற்கு ஒரே ஒரு அழைப்பு, ஒரெ ஒரு தலை அசைவு. போதும். உன் பெண் க்ளோஸ்!" சத்தம் போட்டுச் சிரித்தான். ரமேஷ் பல்லைக் கடித்துக் கொண்டே, "இருபது நிமிடத்திற்குள் ஆகலைனா என்ன செய்யறது? " என்று கவலைப்பட, "அது உன் பிரச்னை!" என்று கவலையே படாமல் பதில் சொன்னான் வந்தவன்.

இன்று மதியம் சீக்கிரம் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி வந்தவரைக்கும் தான் இருந்த இருப்பென்ன? தன் தகுதி என்ன? இப்போது நிலைகுலைந்து போய் இப்படியா ஆகிவிட்டது?? ரமேஷின் தொண்டையைத் துக்கம் அடைத்துக் கொள்ள வங்கியின் வாசலில் இருந்த காவலாளி தெரிந்தவன் ஆதலால் வணக்கம் தெரிவித்து உள்ளே அநுமதித்தான். ஒரு நிமிடத் தயக்கத்திற்குப் பின்னர் அவனை ஜாடை காட்டி அழைத்தான் ரமேஷ். "இதோ பார், சிவா," என ஆரம்பிக்க, அவன் கையைப் பிடித்து இழுத்தாள் வித்யா. அவன் கோபமாய் வித்யாவிடம், "நீ சும்மா இரு, இது நம் வாழ்க்கைப் பிரச்னை!" என ஆரம்பிக்க, கண்ணால் ஜாடை காட்டினாள் வித்யா. சற்றுத் தூரத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளே நகர, கூடவே வந்த வித்யா, "இது நம் குழந்தையின் வாழ்வா, சாவா என்ற போராட்டம் என்பதை நினைவில் வைச்சுக்குங்க ரமேஷ், நம்மால் நம் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால்?" என்று பதட்டத்தோடு மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய்ச் சொல்ல, ரமேஷின் ஆத்திரம் மிகுந்தது.

"என்ன நினைத்துக் கொண்டான் அவன்?? அவனை யாரும் ஒன்றுமே கேட்க முடியாதா? இதோ, பார், இப்போப் பார், என்ன நடக்கப்போகிறது என!" என்று ஆரம்பித்துச் சத்தமாய்ப் பேசிய ரமேஷை இழுத்து வந்தாள் வித்யா. "ரமேஷ், அவன் சொன்ன இருபது நிமிடம் முடியப் போகிறது. அதோ, வெளியே காருக்குள்ளிருந்தே கேலியாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்க போங்க சீக்கிரமாய். நான் பணத்தை வாங்கிட்டு வந்துடறேன்."என்று சொல்லியவண்ணம் ரமேஷின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு, அவனைத் தள்ளாத குறையாகக் காருக்கு அனுப்பினாள். வெறுப்போடு வந்த ரமேஷ், ஒரு நிமிஷம் எங்காவது ஓடிவிடலாமா என யோசித்தான். ஐயோ, வித்யா, வித்யா அவனிடம் தனியாக மாட்டிக் கொள்வாளே. எரிச்சல் மீதூரக் காருக்கே வந்தான். அவன் முன்னே குளிர்பானம் நீட்டப் பட்டது. எரித்துவிடுவது போல் பார்த்தான் ரமேஷ். அவனோ மிகவும் நிதானமாக, "சாந்தி, சாந்தி ரமேஷ், அமைதியாக இரு. இப்போது உனக்கு மிகவும் தேவை இதுதான் அல்லவா? எனக்குத் தெரியும் நீ இதை விரும்புவாய் என!" என்று நீட்டினான்.

அவன் கையிலிருந்து அதை வாங்கிய ரமேஷ் கண் மூடித் திறப்பதற்குள்ளாக அவன் முகத்தில் அதை வீசிக் கொட்டினான். வங்கியிலிருந்து பெட்டியோடு வந்த வித்யா அதைப் பார்த்துவிட்டுத் தன்னையுமறியாமல் கத்தினாள். பெட்டி ஏது??? ரமேஷுக்கு யோசனைவர அதைக் கவனித்த அவன், வித்யாவின் கைகளிலிருந்து கிட்டத் தட்டப் பெட்டியைப் பிடுங்கிக் கொண்டே "பெட்டி என்னுடையது தான். நீ முன்னாலே போகும்போது உன் மனைவியிடம் இந்தப் பெட்டியைக் கொடுத்துப் பணத்தை அதில் வைத்து வாங்கி வரச் சொன்னேன். திடீர்னு இத்தனை பணத்தையும் வைக்கப் பெட்டி வேணும்னா நீ எங்கே போவே?" என்று சிரித்தான். ரமேஷ் அவன் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்தான். உடனே தொலைபேசியை எடுத்தான் அவன்.

அவன் குரல் கேட்டது. "ஹெல்லோ, 327, இப்போ என்ன நிலைமை??"

Tuesday, August 17, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 2

கைகள் நடுங்கின வித்யாவுக்கு. ஆயினும் விடாமல் தைரியத்தை வெளியே காட்டிக்கொண்டாள். "அந்த ஜூசை என் கணவருக்குக் கொடுத்துடறேனே!" என்றாள். பின்னால் திரும்பி ஜூஸ் வைத்திருக்கும் கூடையை எடுக்கவும் முயன்றாள். அவள் கைகளைத் தன் ஒரு கையால் இறுகப் பற்றின அந்தப் புதிய விருந்தாளி, மற்றொரு கைக்குப் பிஸ்டலை இதற்குள் மாற்றி விட்டிருந்தான். அந்தப் பிஸ்டலை ரமேஷின் நெற்றிப் பொட்டில் அழுத்திக் கொண்டே இன்னொரு கையால் வித்யாவின் கைகளை முறுக்கினான். அம்மா! எவ்வளவு பலம்! கைகளை விடுவித்துக்கொள்ள வித்யா போராடினாள். பக்கத்திலேயே இருந்த ரமேஷுக்கு வித்யாவின் கஷ்டம் காணச் சகிக்கவில்லை. தன் மனைவியை, அருமை மனைவியை விடுவிக்கவேண்டும் என நினைத்துக் காரை ஓரமாய் நிறுத்த எண்ணினான்.

அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல் வந்தவன், "திரு ரமேஷ், அப்படித்தானே உன்னை அழைக்கவேண்டும்?? வண்டியை நடுவில் எங்காவது நிறுத்தி விட்டு உதவிக்கு யாரையானும் கூப்பிட எண்ணினாயெனில்! என்று ஆரம்பிக்க, ரமேஷ் வண்டியை நிறுத்தியே விட்டான். என்னனு பார்த்தால் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையினர் வண்டியை நிறுத்தி இருந்தார்கள். அந்த வழியாக ஊர்வலம் ஏதோ போவதால் செல்லும் வழியை மாற்றச் சொல்லி அறிவுறுத்தினார்கள். ரமேஷின் மனதில் ஓர் ஓரத்தில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. வண்டியை அவர்கள் எடுக்கச் சொல்லும்போது எடுக்காமல் இருந்தால் வந்து என்னனு கேட்பார்கள் அல்லவா? அப்போச் சொல்லிடலாம். தனக்குள் முடிவு கட்டிக் கொண்டான். அவன் செல்லவேண்டிய இடத்தைக் கேட்டுக் கொண்டு வண்டியைப் போக அனுமதிக்க, ரமேஷ் வண்டியை எடுக்கவில்லை. பின்னால் இருந்து பிஸ்டல் முதுகில் அழுந்தியது. ஆனாலும் ரமேஷ் பேசாமல் இருக்க வித்யாவோ பதறினாள். "ரமேஷ், ரமேஷ், வண்டியை எடுங்க, சீக்கிரம், அதுக்குள்ளே அவன் சுட்டுடப் போறான்." என்று பதற, பின்னால் இருந்தவனோ பெரிதாய்ச் சிரித்தான். திரு ரமேஷ், உன் மனைவி சொல்வதைக் கேள். இல்லை எனில் உன்னைச் சுட்டுவிட்டு, உன் மனைவியையும் சுட்டுவிட்டு நான் ஜெயிலுக்குப் போகத் தயார். இரண்டு குற்றங்களுக்கும் ஒரே தண்டனைதானே? எனக்கு ஒன்றுமில்லை. நான் தயார்! ஆனால் உன் அருமைக்குழந்தை! நினைத்துப் பார்த்துக்கொள்! அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல், யார் ஆதரவிலோ வளரும், பரவாயில்லையா??"
**************************************************************************************

குழந்தை பிறந்ததில் இருந்து அன்று வரையிலும் நடந்த சம்பவங்கள் அவன் கண் முன்னே வந்து போயின. அவனும் வித்யாவும் போட்டி வைத்துக்கொண்டார்கள். பையனா, பெண்ணா? என. வித்யா பெண்தான் என்று சொல்ல, அவனுக்கும் உள்ளூறப் பெண் குழந்தைதான் வேண்டும் என இருந்தாலும் வித்யாவைச் சீண்டுவதற்காகப் பையன் என்பான்.

"உங்களை மாதிரி அசடாவா?"

"இல்லை உன்னைப் போல் புத்திசாலியா!"

"ஐயே, பையன் எல்லாருமே அசடு வழிவாங்க!"

"பொண்ணுங்க எதிரேதான்!"
"அது சரி வித்யா, பையன் பிறந்துட்டா?? என்ன செய்வே?"

"பிறந்தால் என்ன?? நல்ல புத்திசாலியா வளர்ப்பேன்." கலகலவெனச் சிரிப்பாள். அவனுக்கும் சிரிப்பு வரும்.
**************************************************************************************

இப்படி இரண்டு பேரும் பேசிக்கொள்ள, கடைசியில் இருவரின் விருப்பப் படியும் பெண் குழந்தையே பிறந்தது. குழந்தைக்குப் பாலூட்டுவதிலிருந்து, அதை எப்படி எல்லாம் வளர்க்கணும், எந்த வயசில் என்ன சொல்லிக் கொடுக்கணும், என்ன படிக்க வைக்கணும், குழந்தையின் விருப்பத்தை எப்படித் தெரிஞ்சுக்கறதுனும், அதை நிறைவேற்றுவது பற்றியும் ஒரு பெரிய திட்டமே போட்டு வைச்சிருக்காங்க. ரமேஷின் தொண்டையை அடைத்துக்கொண்டது. இது எல்லாமும் அவன் நினைவில் வந்து மோத, வேறு வழியில்லாமல் காரைக்கிளப்ப, அருகே வந்த போலீஸ் அதிகாரி, "என்ன பிரச்னை?" என்று கேட்க அவசரம், அவசரமாக, "ஒன்றுமில்லை, கொஞ்சம் ஸ்டார்டிங் பிரச்னை!"என்று சமாளித்தாள் வித்யா.

ரமேஷ் தன்னையுமறியாமல் அவன் போகவேண்டிய பாதையில் போகாமல் எங்கேயோ போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்தவனோ சிரித்த வண்ணம்,"என்ன ரமேஷ், உன் பாஸ் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாரே? அங்கே போகவேண்டாமா?" என்றான். அதற்குள் அவன் தொலைபேசி அழைத்தது. பிஸ்டலால் ரமேஷின் நெற்றிப் பொட்டை அழுத்திக்கொண்டே கைபேசியை எடுத்துப் பார்த்தான் வந்தவன்.
"ஹா,ஹா,ஹா,ஹா,ஹா!" பலமாகச் சிரித்தான்.

வித்யா பயத்தோடு அவனையே பார்க்க, அவன் சிரித்தான் மீண்டும். உன் குழந்தையைப்பார்த்துக்க வந்தாளே, அவள் என்னோட ஆள். அவள் தான் இப்போப் பேசறாள். உன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு ஒரு இடத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். அங்கே போய்க் கொண்டிருக்கிறாளாம்." என்றான்.

யூ,யூ,யூ," எனத் தடுமாறினான் ரமேஷ். "என்னபபா, ஆங்கிலம் தடுமாறுதா? பரவாயில்லை, தமிழிலேயே திட்டேன். எனக்குத் தமிழ் நன்றாய்ப் புரியும்." என்ற வண்ணம் கைபேசியில் சிறிது நேரம் பேசினான் அவன். "ஹெல்லோ, 327!" என அழைப்பது கேட்டது. சற்று நேரம் வரை அவன், "சரி, சரி, நல்லது, அப்படியே செய்" என்று கூறியது மட்டுமே கேட்டது. பின்னர் அவன் கைபேசியை மூடப் போனபோது வித்யா கத்தினாள். "என்னிடம் கொடு, என் குழந்தை கிட்டே நான் பேசணும்!" என்றாள். ரமேஷுக்கே ஒரு நிமிஷம் ஆச்சரியம் தான். எங்கேருந்து இவ்வளவு தைரியம் இவளுக்கு வந்தது??

வந்தவனும், "ஓ, அம்மா செண்டிமெண்ட்?? சரி, சரி, உன் பெண் பேசினால் நீயும் பேசு!" என்றான். கைபேசி வித்யாவிடம் கொடுக்கப் பட அவள் பேசினாள். "சுமிக்கண்ணு, சுமிக்கண்ணு, எங்கேம்மா இருக்கே?" என்று அழுதுகொண்டே கேட்க, ரமேஷ் அவளை விட ஆத்திரமாய், "ஸ்பீக்கரை ஆன் செய்!" என்று அவளிடம் கிசு கிசுக்குரலில் சொல்லப் பின்னால் இருந்தவன் வித்யாவின் கைகளில் இருந்த தொலைபேசியைப் பிடுங்கினான்.
"போதும், பேசினது. உங்க பொண்ணு இப்போ தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துட்டு இருப்பா. அடுத்து நீங்க இரண்டு பேரும் நான் சொல்லப் போகும் ஒரு காரியத்தைச் செய்யணும், அதைச் செய்தால் அப்புறமா உங்க பொண்ணை என்ன பண்ணலாம்னு நான் யோசிப்பேன்."

எங்க பொண்ணை எங்க கிட்டேக் கொடுத்துடு1 அவளை ஒன்றும் செய்யாதே!" ரமேஷ் கெஞ்ச, வித்யாவும் அழுகையோடு ஆமோதித்தாள். வந்தவனுக்கு அவர்களின் இந்த நிலைமை மிகவும் சிரிப்புக்கிடமாய் இருந்தது. ரசித்துச் சிரித்தான். "நான் இப்போது சொல்லப் போவதை முதலில் இருவரும் கேளுங்கள். அதை ஒழுங்காய்ப் பண்ணுங்கள். அதுக்கப்புறமாய்ப் பார்க்கலாம்." என்றான்.

சொல்லித் தொலை!" ரமேஷ் குரலில் இருந்த வெறுப்பைக் கவனித்தவன் மீண்டும் சிரித்தான். "உன் பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கு?"

"அப்பாடா, பணத்துக்கா இவ்வளவு?? இந்தா எடுத்துக்கோ, ஐம்பதினாயிரம் வரை இருக்கும்."

"ஹாஹா,ஹா, உன் பெண்ணின் உயிருக்கு வெறும் ஐம்பதாயிரம் தானா?"

பின்னே? இப்போ என் கிட்டே இவ்வளவு தான். வித்யா உன் கிட்டே எவ்வளவு இருக்கு? "

நான் கொஞ்சம் தான் கொண்டு வந்தேன். ஒரு ஐந்தாயிரம் இருக்கும். செக் புத்தகம் கூட இல்லையே?"

அதனால் என்ன? இரண்டு பேருக்கும் எந்த வங்கியில் கணக்கு இருக்கு?"

வங்கியின் பெயரைக் கேட்டுக் கொண்டவன், அவர்கள் செல்லும் வழியிலேயேஅந்த வங்கியின் ஏடி எம் எனப்படும் பணம் எடுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்துக்குப் போகச் சொன்னான். ரமேஷ், "இவன் என்ன கேட்கப் போகிறான்?" என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.


தொடரும்.

Monday, August 16, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு!

ரமேஷ் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் ஒரு கம்பனியில் வேலை செய்கிறாள். ஒரே மகள். அவளைப் பார்த்துக்கொள்ளும் பெண் இன்னும் வரவில்லை. அவள் வந்ததும் கிளம்பவேண்டும். வீடு சொந்த வீடு. இருவருக்கும் தனித் தனியாகக் கார் இருக்கிறது. நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. அழகான மனைவி. ரமேஷ் கொடுத்து வைத்தவன் என அனைவரும் சொல்வார்கள். மேலும் அனைவரும் பொறாமை கொள்ளும்படி இன்றைக்கு அலுவலகத்தில் அவனுடைய ப்ரமோஷன் பற்றிய முடிவு சொல்லப் படும். அவன் பரபரத்துக்கொண்டிருந்தான். ஆயிற்று, இதோ, வித்யாவும் வந்துவிட்டாள். மகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவும் வந்துவிட்டாள்.இருவரும் மகளைக் கொஞ்சி முத்தமிட்டுவிட்டு அவரவர் காரில் அவரவர் அலுவலகத்துக்குப் பயணித்தனர்.

அலுவலகம்: ஒரு முக்கியமான மீட்டிங். நடுவில் அவனுடைய மேலதிகாரி அழைப்பு. அவர் தொலைபேசியில் கூறிய செய்தியைக் கேட்ட ரமேஷின் முகம் மலர்கிறது. அதற்குள்ளாக அவனுடைய சொந்தக் கைத் தொலைபேசி அழைப்பு. அழைத்தது அவன் மனைவி. அன்று மாலை அவளுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊருக்குச் செல்லவேண்டுமாம். அவள் இருப்பது HRD என அனைவராலும் சொல்லப் படும் மக்கள் நலத்துறை. அது சம்பந்தமாய் அடிக்கடி கிராமங்களுக்குச் சென்று அங்கே சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துவது வழக்கம் தான். ஆகவே அவன் சரியென்று சொல்லிவிட்டு அவனுக்கும் அன்று இரவு அவன் மேலதிகாரியின் வீட்டில் ஒரு பெரிய விருந்து இருப்பதாயும், விருந்து முடிந்து உடனே அவனும் இரவு விமானத்தில் பங்களூர் வரை செல்லவேண்டும் எனவும் கூறினான். திரும்பி வர இரு தினங்கள் ஆகும் என்றும் கூறினான்.

வித்யா உடனே, "ஐயோ, அப்போ குழந்தை? குழந்தையை இரு நாட்கள் நானும் தூக்கிப் போக முடியாதே? நான் போகப் போவது ஒரு அத்துவானக் காடு. அங்கே எந்தவித வசதியும் இல்லையே, ரமேஷ், நீங்க இருப்பீங்கனு நம்பினேனே!" என்றாள். அவனுக்கும் மனதில் கவலை தொற்றிக்கொண்டது. ஆனாலும் தவிர்க்கவும் முடியவில்லை. வித்யா உடனேயே வீட்டுக்குத் தொலைபேசி ஆயாவிடம் பேசுவதாய்க் கூறவும் கொஞ்சம் நிம்மதி அடைந்தான். மாலை நேரம். வீட்டுக்கு வந்த ரமேஷும், வித்யாவும் கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தனர். இருவரும் கொஞ்ச தூரம் வரை ஒரே திசையில் பயணிக்கப் போவதையும் புரிந்து கொண்டதால் ரமேஷை வழியில் இறக்கிவிட்டுவிட்டு வித்யா பயணத்தைத் தொடருவதாய்ச் சொன்னாள். பின்னர் அங்கிருந்து மேலதிகாரியின் காரிலேயே ரமேஷ் பயணத்திற்கு விமான நிலையம் செல்வதாய்த் திட்டம். ஆயா இவர்கள் வந்ததுமே குழந்தையை விட்டுட்டுப் போனவள் இன்னும் வரலையே? வாசலை வாசலைப் பார்த்தாள் வித்யா.

கொஞ்ச நேரத்தில் ஒரு வயதான பெண்மணி வந்து கதவைத் தட்ட, வித்யா திறந்து பார்த்தாள். அவளைப் பார்த்துக் கேள்விக்குறியோடு நின்ற வித்யாவிடம், "விஜயாவிடம் சொன்னீங்களாமே? குழந்தையை பார்த்துக்கணும்னு! அதான் வந்திருக்கேன்!" என்றாள்.

"ஏன், விஜயாவிற்கு என்ன ஆச்சு?" ரமேஷ் சத்தம் போட்டான். அவன் வரையில் இந்த ஆயா வைத்துக்கொள்வதே பிடிக்கவில்லை. ஆனால் வித்யாவின் வேலையில் அடிக்கடி வெளி ஊர்கள் செல்லவேண்டி இருப்பதால் அவன் அம்மாவோ, வித்யாவின் அம்மாவோ வந்தாலும் அவங்களுக்கு இந்தச் சூழ்நிலை ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே அவங்க யாரையும் வைத்துக்கொள்ள முடியலை. "விஜயாதான் அனுப்பி இருக்கா. நம்பிக்கையான மனுஷியாம்." என்று சொல்லிக் கொண்டே அவளை உள்ளே அழைத்தாள் வித்யா. "குழந்தையோட பெயர் என்ன?" என்று கேட்டாள் வந்தவள். "அவள் பெயர் சுமி!" என்றாள் வித்யா. "என்ன வயசு? என்ன உணவு சாப்பிடுவா?" வந்தவள் கேட்ட அனைத்துக்கும் பதில் சொன்னாள் வித்யா.

குழந்தை அவள் அறையில் விளையாடிக் கொண்டிருந்தாள் பொம்மைகளோடு. அவளைக் காட்டினாள். சுமி திரும்பிப் பார்த்தாள். "அம்மா!" ஓடி வந்து கட்டிக் கொண்டாள். குழந்தையைத் தூக்கி முத்தமிட்ட வித்யா, "மூணு வயசு ஆகிறது இவளுக்கு. பேசுவா. புரிஞ்சுக்க முடியுது இல்லையா?" என்று வந்தவளைக் கேட்டாள். அவள் பெயர் வினுவாம். வினயாவா? விநோதினியா? யோசித்தவண்ணமே வித்யா குழந்தையிடம், தானும், ரமேஷும் வெளி ஊர் செல்லப் போவதையும், குழந்தை சமர்த்தாய் இருக்கவேண்டும் என்பதையும், வந்திருக்கும் வினு ஆண்டி தான் சுமியோடு விளையாடுவாள், அவளுக்குச் சாப்பாடு கொடுப்பாள் என்றும் சொல்கிறாள். குழந்தையும் சமர்த்தாய்த் தலையை ஆட்டினாள். ஒருவாறு நிம்மதி அடைந்த இருவரும், (அப்படியும் ரமேஷுக்கு என்னவோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.)காரை அடைந்தனர். ரமேஷ் தான் இறங்கும்வரை காரைத் தான் ஓட்டுவதாய்ச் சொன்னான்.

வழியில் வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு. அவள் சிநேகிதி சுபாவிடமிருந்து அழைப்பு. அவளும் வித்யாவோடு வருவதாய் இருந்தது. அவசரமாய் சொந்த வேலை வந்துவிட்டதால் வரவில்லையாம். அவளைத் தன் வண்டியிலேயே அழைத்துப் போக இருந்த வித்யா நேரே போய்க்கொள்ளலாம் என்றாள். சரி என்று சொல்லிவிட்டுக் கைபேசியை வைத்தாள் வித்யா. ரமேஷ் அவளைப் பார்த்து, "என்ன சிநேகிதி வரலைனதும் உனக்கு அப்செட் ஆயிடுச்சு போல?" என்று சீண்டினான். சற்றே யோசித்த வித்யா, "அப்படி இல்லை, இரண்டு பேரும்னால் கொஞ்சம் வசதி. என்றாலும் பரவாயில்லை, ரேவதி மேடம் அங்கே வராங்க!" என்று முடித்துக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். காரின் பின்னால் இருந்த கூடையில் இருந்து தனக்குக் குடிக்க ஜூஸ் எடுத்துக் கொடுக்கும்படி ரமேஷ் கேட்க வித்யா பின்னால் திரும்பி ஜூஸை எடுக்கப் போனாள். அப்போது திடீரென அவள் கண்ணெதிரே ஒரு துப்பாக்கி. சைலன்சர் பொருத்தப் பட்டது.

ஒரு ஆண் குரல், "திரும்பாதே!" என்று கண்டிப்பாக அவளிடம் சொன்னது. அப்படியும் அவள் சற்றுச் சமாளித்துக்கொண்டு திரும்ப யத்தனித்தாள். துப்பாக்கி ரமேஷின் நெற்றிப்பொட்டில் பதிந்திருந்தது. மீண்டும் அதே குரல். "திரும்பாதே, திருமதி ரமேஷ், வித்யா, வித்யா தானே உன் பெயர். ஆனாலும் நான் மரியாதையாய் திருமதி ரமேஷ்னே கூப்பிடறேன். திரும்பினாயென்றால் இதில் உள்ள தோட்டாக்கள் உன் கணவன் நெற்றியின் இந்தப் பக்கம் பாய்ந்து அந்தப் பக்கம் வெளிவரும். எப்படி வசதி?" என்றான்.


தொடரும்.

Sunday, August 15, 2010

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே!

ஆநந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று. ஆடுவோம், ஆடுவோம், ஆடுவோம்.

நினைவு தெரிஞ்சதில் இருந்து பல சுதந்திர தினங்களைப் பார்த்தாச்சு. நாட்டில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் பல விஷயங்களில் மாற்றமும் இல்லை என்பதும் உண்மை. இப்போ அதை எல்லாம் பத்திப் பேசாமல் என்னோட சுதந்திர தின அநுபவங்கள் பற்றி மட்டும் சொல்லப் போறேன். எல்லாரும் அவங்க அவங்க சுதந்திர தின நினைவுகளைச் சொல்லும்போது நாம மட்டும், தானைத்(ஆனை)தலைவியா இருந்துட்டு ஒண்ணுமே சொல்லாட்டி எப்படி??


காலம்பர நாங்க படிக்கும் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிஞ்சு அங்கே லட்டுவும், மிக்சரும் கொடுப்பாங்க. அதுக்காகவே போவோம்னும் சொல்லலாம். அப்பாவின் பள்ளியிலும் கொஞ்சம் தாமதமாய் நடக்கும். அண்ணா மட்டும் சில சமயம் போவார். நானும், தம்பியும் சின்னக் குழந்தைகள்னு எங்களை விட்டுட்டுப் போவாங்க. அதுக்காக அழுது, அடம் பிடிச்சும் ஒண்ணும் நடந்ததில்லை. ஒரே ஒரு சமயம் தமுக்கம் மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது அப்பா எங்களையும் அழைத்துச் சென்றார். அதுக்குச் சிறு குழந்தைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அநுமதி இல்லைனு சொன்னாங்களாம். ஆனாலும் அப்பா தன் பள்ளியின் சார்பில் போனப்போ அங்கே நடந்த மயிலாட்டம், ஒயிலாட்டம் பார்க்கவேண்டி என்னையும் அழைத்துச் சென்றார். அந்த ஆட்டங்கள் எதுவும் என் நினைவில் இல்லை. ஆனால் அப்பாவின் நண்பர் கொடுத்த உள்ளே பருப்பு ஏதோ வைத்த மிட்டாய் மட்டும் இன்னும் நாவில் சுவையோடு இருக்கிறது. முக்கியமான விஷயமே சுதந்திர தினத்தின் மாலைகளில் நடக்கும் ஊர்வலங்கள் தான்.

முதல் முதல்லே சுதந்திர தினம்னு நினைவிலே வர விஷயம் மதுரையிலே அப்போ வை. சங்கரன் தலைமையிலே நடந்த பேரணிகள் தான். ரொம்பப் பிரமாதமான பேரணியாய் இருக்கும். சாயந்திரம் ஆறு மணிக்கு வடக்கு மாசி வீதி, மேல மாசிவீதியைக் கடக்கும்னு சொல்லுவாங்க. நாலு மணிக்கே அப்பாவின் நண்பர் வீட்டு மொட்டை மாடியில் போய் இடம் போட்டுப்போம். அப்பா பேரணியிலே கலந்துக்கப் போயிடுவார். அண்ணா தான் அப்போ கொஞ்சம் பெரியவர் என்பதால் கொஞ்ச தூரம் அண்ணாவும் கலந்துண்டு அப்புறம் நாங்க இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைச்சுடுவார். நானும், தம்பியும் அம்மாவோடு ஊர்வலம் பார்க்க உட்கார்ந்திருப்போம். வித, விதமான அலங்காரங்கள், அருமையான கருத்துக்களோடு கூடிய அலங்கார அணிவகுப்புக்கள் என்று வரும்.தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு சம்பவத்தின் சில காட்சிகள், அருணா அசப் அலி மாதிரி ஒரு பெண் வேடம் போட்டுக் கொடி ஏற்றும் காட்சி, திருப்பூர் கொடி காத்த குமரன், வாஞ்சிநாதனின் வீரங்கள், சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ. சார்புள்ள சில காட்சிகள், அவர் சொன்ன டெல்லி சலோ என்னும் மந்திரச் சொல்லை ஏற்று அதில் கலந்து கொண்ட சில வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள், என்று பல காட்சிகள் வரும். அதிலே மஹாத்மா காந்தி தன் கடைசிப் பிரார்த்தனைக்குச் செல்லும் காட்சிகள் உயிருள்ள மனிதர்களால் சித்தரிக்கப் பட்டுக் கடைசியிலே வரும். அம்மாவெல்லாம் அதைப் பார்த்துட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். சுதந்திர நாளிலா? குடியரசு நாளிலா?? ஹிஹிஹி, மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்! ஆனாலும் இதைப் பார்த்திருக்கேன். அப்போல்லாம் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருமே பாரதியின் பாடல்களை வீராவேசமாய்ப் பாடுவாங்க. ஆரம்பப் பள்ளி நாட்களில் பாரதியின் பேரில் இவங்க ஏற்படுத்திய பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்து இந்த ஊர்வலம் முடிஞ்சதும் ஒளி அலங்காரங்கள் நடைபெறும் இடங்களைக் காணச் செல்லுவோம். முக்கியமாய்ப் போறது மதுரை ரயில் நிலையம். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு மிக மிக அழகாய்க் காட்சி தரும். தமுக்கம் மைதானத்திலும் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் போக முடிந்ததில்லை. அதுக்கப்புறம் கொஞ்சம் விபரம் தெரிந்து பள்ளியிலும் மேல் வகுப்புக்களுக்கு வந்தப்புறம் சுதந்திரக் கொண்டாட்டங்களின் ஊர்வலங்கள் பார்ப்பதின் மோகம் குறைந்தே போனது. அரசியலின் தன்மை புரிய ஆரம்பிச்சதாலோ என்னமோ எட்டு, ஒன்பது வகுப்புகளில் படிக்கும்போது சுதந்திர நாளில் பள்ளிக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்காக மட்டுமே சென்று கொண்டிருந்தேன். ஒரு முறை இப்போவும் அது சுதந்திர நாளா, குடியரசா என நினைவில் இல்லை. என் தாத்தா வீட்டுக்கு ஏதோ விசேஷத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது வந்த இந்த நாளில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. முன் அநுமதி பெற்றிருந்தேன்னு நினைக்கிறேன்.

தாத்தாவின் தம்பி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சங்கு நாராயணன் என்ற பெயரில் அழைப்பார்கள். அவரைக் காண பசுமலை ஆசிரமத்தில் இருந்து சுத்தாநந்த பாரதியார் வந்தார். காவி உடையும், காவி ஜிப்பாவும், பெரிய துளசி மாலை(???) சரியாய்த் தெரியலை, ஆனால் ஏதோ மாலைனு மட்டும் நினைவு இருக்கு. வேக வேகமாய் உற்சாகம் குன்றாமல் நடந்தே வந்தார்னு நினைக்கிறேன். சின்னத் தாத்தாவின் அறைக்குப் போய்ச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பாரதியாரின் குரல் உரத்துக் கேட்டது. வீராவேசமாய் தேசபக்திப் பாடல்களைப் பாடியதும் கேட்டது. நாங்க குழந்தைகள் எல்லாரும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் கேட்டும், பார்த்தும் கொண்டிருந்தோம். அப்புறம் வெளியே வந்தவர் தன் ஜிப்பாப் பைக்குள் கைவிட்டு ஆரஞ்சு மிட்டாய்களைக் கொடுத்தார். சுதேசி மிட்டாய்களைத் தான் சாப்பிடணும்னும் சொன்ன நினைவு. இது பற்றி என் பெரியம்மா பெண், பையர்கள், சித்திகள்னு கேட்டேன். எல்லாருக்குமே என்னைப் போல் அரைகுறை நினைவுதான்.

ஆனால் பசுமலை ஆசிரமத்தில் அவர் இருந்தப்போ நம்ம வல்லி சிம்ஹனும் பார்த்திருக்காங்க. இதை இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் கேட்டு உறுதி செய்து கொண்டோம். அதே சமயம் அப்போ இருந்த வயசுக்கு இது எல்லாம் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சு வைச்சுக்கத் தோணலையேனு இரண்டு பேரும் பேசிக் கொண்டோம். உண்மையில் எவ்வளவு பெரிய மனிதரை எவ்வளவு சாதாரணமாய்ப் பார்த்து இருக்கோம்? அதைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே வச்சுக்கலை. எங்க தாத்தா வீட்டில் இருந்திருக்கும். ஆனால் எல்லாருமே மதுரையை விட்டுட்டும், சொந்த வீடுகள், அங்கே இருந்த பழைய புத்தகங்கள்னு எல்லாத்தையும் அங்கேயே தானம் பண்ணிட்டும் வந்ததாலே பல நல்ல விஷயங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. நினைவு மட்டுமே மிச்சம். ஒவ்வொரு சுதந்திரநாளன்றும் நினைவில் மோதும் விஷயங்கள் இவை. அம்மா அடிக்கடி பாடும் சுத்தாநந்தரின் பாடல் அருள் புரிவாய் கருணைக் கடலே! இதை எங்கே கேட்டாலும் அம்மாவின் நினைவும், சுத்தாநந்தரின் நினைவும் வரும். அது போலவே எப்படிப் பாடினரோ பாடலும். அதிலே வரும் இந்தக் குறிப்பிட்ட வரிகள் அம்மாவுக்கு மிகவும் பிடித்தது.

கருணைக்கடல் பெருகி,
காதலினால் உருகி" அம்மா கண்களில் இருந்து கண்ணீர் கொட்டும்.

இப்போ எனக்கும்!

Saturday, August 07, 2010

பிள்ளையார் தான் காப்பாத்தினார்!

அப்பாவி தங்கமணி என்ற, என்னால் ஏடிஎம்னு செல்லமா :P அழைக்கப் படும் ஏடிஎம் அவர்கள், கடவுளும், நானும் என்ற தலைப்பில் எழுதச் சொல்லி இருக்காங்க. ஏற்கெனவே சாமியைப் பத்தி மட்டும் தான் எழுதிட்டிருக்கேன். ஆசாமிகளைப் பத்தி எழுதறதில்லை. இதிலே இன்னும் சாமியைப் பத்தி என்ன எழுதறதுனு யோசிச்சுட்டே அவங்க பதிவைப் பார்த்தேனா?சின்ன வயசிலே இருந்து ஆரம்பிச்சு எழுதி இருக்காங்க. அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது. நாம இருக்கோமே! அதை எல்லாம் கவர் பண்ண. வேறே என்ன வேலை?

எப்போனு தெரியாது, நினைவு தெரிஞ்சதிலே இருந்து பிள்ளையார் தான் பிரண்டை எனக்கு. அவரோட சண்டையெல்லாம் போடுவேன். இப்போக் கூட முந்தாநாள் கூகிள் தடை போட்டப்போ, பிள்ளையாரே நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. என்னாலே முடிஞ்ச வரைக்கும் பார்த்துட்டேன், இனிமேலே நீதான் எனக்கு எல்லாத்தையும் திரும்பத் தரணும்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டேன். நிஜம்மாவே பொறுப்பைப் பிள்ளையாரிட்டக் கொடுத்ததாலோ என்னமோ அன்னிக்கு ரொம்பவே சீக்கிரமாயும், நல்லாவும் தூங்கினேன். மனசிலே இருந்த கலக்கம் தெளிந்து போயிருந்தது. சுபாஷிணி கிட்டேயும் அதைச் சொன்னேன். கவலையாயே இல்லை எனக்கு, எல்லாம் சரியாயிடும்னு தோணுதுனு சொன்னேன். காலையிலேயும் உடனே செக் பண்ண முடியலை. வீட்டில் வேலை இருந்தது. எல்லாம் முடிச்சுட்டு பதினோரு மணிக்குத்தான் பார்த்தேன். ஒன்பதரை மணிக்கே சுபாஷிணி(அம்பியோட சிநேகிதி)யும், தமிழ்ப்பயணியும் எல்லாம் சரியாயிடுத்துனு மெயில் போட்டிருந்தாங்க.அது வரைக்கும் நான் பாட்டுக்கு வேலையைப் பார்த்துட்டு இருந்தேன். பிள்ளையார் கைவிட மாட்டார்னு உறுதியாத் தெரியும்.


அம்மா எப்போவும் சொல்றது ஈஸ்வரி என்ற வார்த்தைதான். அப்பாவோ வெங்கடாசலதி, நீ தான்ப்பா னு சொல்லுவார். அண்ணாவுக்கும், தம்பிக்கும் அப்போ எந்த சாமி பிரியம்னு சரியாத் தெரியலை. ஆனால் மூணு பேரும் சேர்ந்தே வடக்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு பிள்ளையார் கோயிலுக்குப் போவோம். நாங்கல்லாம் போன காலகட்டத்திலே பிள்ளையார் இப்போ இருக்காப்போல் ஜெயில் சிறையில் இல்லை. தன்னந்தனியா காத்து வாங்கிட்டு இருப்பார். ஆல மரம் அப்போ இருந்தது. இப்போ தெரியலை. வேம்பும், அரசும் கூட இருந்தது. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மரம் எல்லாமும். மர நிழல் வெகு தூரத்துக்கு வெகு தூரம் இருக்கும். அந்த நிழலில் பிள்ளையாரைச் சுத்தறதே ஒரு சுகம். நாங்க யாரானும் சாப்பிடலைன்னா, உடனே அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு நெய் ஊத்தி, பிள்ளையார் கோயில் பூசாரிகிட்டே மந்திரிச்சுண்டு வரச் சொல்லுவா. நாங்களும் மந்திரிச்சுக் கொண்டு வருவோம். பிள்ளையார் மகிமையா, மந்திர மகிமையா தெரியாது, அப்புறமாச் சாப்பிட ஆரம்பிப்போம்.

சரியா விபரம் புரியாத அந்த வயசிலே பிள்ளையார் கொழுக்கட்டையை நிறையச் சாப்பிட்டுத் தான் தொந்தி பெரிசா இருக்குனு நினைச்சுப்பேன். நாமளும் பிள்ளையார் மாதிரிக் கொழுக்கட்டை சாப்பிட்டால்னு தோணும்? எங்கே? அதெல்லாம் கணக்காய்த் தானே கொடுப்பாங்க! :P ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்மா அரிசி மாவில் வெல்லம் சேர்த்துக் கிளறிச் சின்னச் சின்ன உருண்டைக் கொழுக்கட்டை பண்ணிப் பிள்ளையாருக்கு நிவேதனம் பண்ணிட்டு அங்கேயே விநியோகம் பண்ணிட்டு வரச் சொல்லுவா. வடக்கு மாசி வீதியிலேயே இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும் போவோம். அது ஒரு மாடக் கோயில்னு அப்போத் தெரியாது. அதனோட படிகளில் ஏறிப் போறச்சேயே நடுவில் செதுக்கி இருக்கும் கல் யானையின் மீது உட்கார்ந்து விளையாடறது ஒரு ஆநந்தம். காலை வேளையிலேயே அங்கே நடக்கும் கோஷ்டியில் சுடச் சுடக் கிடைக்கும் பிரசாதத்தின் ருசியோ ருசி!

அது தவிரப் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரியப்பாவும், அவரோட வக்கீல் நண்பர்களும் சேர்ந்து நடத்தும் பஜனைகள், ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் ஒவ்வொருத்தர் வீடு என முறை வைத்துக்கொண்டு அப்பா, பெரியப்பா வீடுகளில் நடத்தும் வெங்கடாசலபதி சமாராதனைகள், சமாராதனை என்றால் தெருவே வந்து சாப்பிடுவாங்க. மிகப் பெரிய அளவில் நடக்கும். கார்த்திகை மாதம் லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரத்தில் பெரியம்மா/பெரியப்பா குடி இருந்த ஸ்டோரில் நடக்கும் வைக்கத்து மஹாதேவ அஷ்டமி சமாராதனை, (பெரிய அண்டாக்களின் சாதம், சாம்பார், பாயாசம் ஒரே ஆள் ஒரு அண்டாவைத் தூக்கிட்டு வருவார், ஆச்சரியமா இருக்கும். இலைகளும் முதல் பந்தியில் எண்ணிப் போடுவாங்க, ஆனால் ஒண்ணு கூடுதலா வரும்னு சொல்வாங்க) , இந்த வைக்கத்தஷ்டமியிலே மஹாதேவருக்கு மாவிளக்குப் போடும் வழக்கமும் உண்டு. அந்த மாவிளக்கை வீட்டில் சுவாமி அலமாரியிலேயே வைச்சு யாருக்கானும் வயிற்றுத் தொந்திரவுன்னா எடுத்து வாயிலே போடுவாங்க. மாவிளக்கைச் சாப்பிடறதுக்குன்னே வயிற்று வலினு சொன்னதும் உண்டு!

நடு நடுவே ஆடிவீதிகளில் நவராத்திரிக் கச்சேரிகள், சிருங்கேரி ஸ்வாமிகளின் சொற்பொழிவுகள், கிருபாநந்த வாரியார், புலவர் கீரன், சேங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர், சந்தான கோபாலாசாரியார் போன்றவர்களின் உபந்நியாசங்கள், வாஞ்சியம் ஸ்ரீராமச்சந்திர பாகவதரின் அஷ்டபதி நிகழ்ச்சிகள், கிரிதாரி பிரசாத் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருப்புகழ் மணி அவர்களின் திருப்புகழ் பஜனை நிகழ்ச்சிகள்,ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் பஜனைகள், சொற்பொழிவுகள் என ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? அதோடு கூட மார்கழி மாதங்களில் பெண் குழந்தைகளுக்கு என்றே திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனால் தானப்ப முதலி அக்ரஹாரம் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்பட்ட மங்கள நிவாஸில் நடக்கும் திருப்பாவை வகுப்புகள், அதிலே நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சி எனப்படும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள், வீதிகளில் உலா வந்து அதிகாலையில் செய்யப் படும் பஜனைகள், வக்கீல் ஐயாசாமி அவர்களும், வக்கீல் ராமாராவ் அவர்களும் மார்கழி மாதங்களில் நடத்தும் ஐயப்பன் பஜனைகள், சமாராதனைகள், (அப்போல்லாம் மலைக்குப் போறதுக்கு முந்தி அன்னதானம்னு பண்ணிட்டுப் போவாங்க. போயிட்டு வந்து சமாராதனை பெரிய அளவில் நடக்கும்)

இது தவிர இருக்கவே இருக்கு மதுரைக்கே உரிய சித்திரைத் திருநாள், வைகாசி வசந்தோற்சவம், ஆவணி மூலத் திருவிழா, நவராத்திரி வைபவம், அழகர் ஆற்றில் இறங்குவது, தை, ஆடி மாதங்களில் காலம்பர சீக்கிரமாய் எழுந்து சமைச்சு வைச்சுட்டு, வண்டியூருக்கு நடந்தே போய் அம்மா மாவிளக்குப் போட நாங்களும் கூடவே போயிட்டு வருவோம். அங்கே தெப்பக்குளத்துக்கு எதிரே இருந்த தியாகராஜா கல்லூரியின் அடர்ந்த மரங்கள், முக்கியமாய் நாகலிங்க மரமும், அதன் பூக்களும், பொறுக்கவே போவேன். இதை விட வேறே என்ன வேண்டும்?? அந்த மாதிரியான நாட்களை என் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. இப்படி அங்கே இருந்த ஒவ்வொரு நாளும் இப்படியே பக்திபூர்வமாயும், வேறே அநாவசியமான நினைப்புகளுக்கு இடம் கொடுக்காமலும் போயிட்டு இருந்ததுனு சொல்லலாம்.

இப்போவும் கூடிய வரைக்கும் பாரம்பரியப் பண்டிகைகள், விரதங்கள் என்று விடாமல் செய்யறோம். இதைக் குடும்பத்தினர் அனைவருமே அவங்களால் இயன்ற அளவுக்குச் செய்து வருகிறோம். காலம்பர எழுந்து முதல் அடி எடுத்து வைக்கும்போது சொல்ல ஆரம்பிக்கும் ஸ்ரீராமஜயம் அப்போ அப்போ மனசிலே ஓடிட்டே இருக்கும். நழுவ ஆரம்பிக்கும்போது தூக்கிவாரிப் போட்டு முழிச்சுட்டு அதைப் பிடிப்பேன். இவ்வளவே என் ஆன்மீகம்/பக்தி எல்லாம். கடந்த பத்து வருஷங்களாக யோகாசனப் பயிற்சி தினமும் உண்டு. இரவு தூங்க நேரம் ஆனால், அல்லது இரவுத் தூக்கம் சரியில்லைனால், முதல்நாள் பிரயாணம் செய்திருந்தால் மறுநாள் யோகாசனப் பயிற்சி வைச்சுக்கறதில்லை.

Wednesday, August 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கண்ணன் தப்பினானா???

தாமகோஷனின் திட்டத்தில் ஏதாவது உள்நோக்கம் இருக்கலாமோ என ஜராசந்தனுக்குக் கொஞ்சம் யோசனை. ஆனால் மற்ற அரசர்களுக்கு இந்த யோசனை உவப்பாகவே இருந்தது. இந்தப் பிரச்னையில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுபடவே நினைத்தனர் அனைவரும். ஆகவே இதை அனைவருமே ஒரு குரலில் ஆமோதித்தனர். ஆதரவையும் தெரிவித்தனர். ஜராசந்தனுக்கு இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
மலைமேல் கருடர் குடியிருப்பு. அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனும், பலராமனும் தங்கள் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென, “க்றீச்ச்ச்ச்” என்ற ஒரு குரல் கேட்கக் கண்ணன் தூக்கிவாரிப் போட்டு விழித்தெழுகிறான். “என்ன ஆயிற்று?” கண்ணன் வினவ, ஒரு இளம் கருடன் ஓடோடியும் வந்தான். “தெய்வமே! மோசம் போனோம்! தீ வைத்துவிட்டனர். கீழே எதிரிகள் காய்ந்த புற்களில் தீ வைத்திருக்கின்றனர். அது மேலேயும் பரவிக்கொண்டு வருகிறது. இன்னும் சிறிது நாழிகைக்குள்ளாக நாம் அனைவரும் உயிரோடு எரிக்கப் படுவோம்! “ பயந்து போயிருந்தான் அந்த இளைஞன். கண்ணன், பலராமனையும், அழைக்க வந்திருந்த அந்தக் கருட இளைஞனையும் கூட்டிக் கொண்டு அந்த மலைப் பள்ளத்தாக்கில் இருந்த சிகரங்களின் மீது ஏறி அவற்றின் ஓரத்தில் நின்றுகொண்டு கீழே பார்த்தனர். அவர்களோடு கருடர்களின் தலைவனும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டான். காற்று மிகவும் வேகமாகவும், வலுவாகவும் வீசிக் கொண்டிருந்தது. அதன் மர்மர சப்தம் கடல் அலைகளில் இருந்து எழும் பேரோசை போல் கேட்டுக் கொண்டிருந்தது. அதிலிருந்து மிகவும் வலுவான காற்று வீசுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்குள் திடீரெனக் கிளம்பிய ஜகஜ்ஜோதியான வெளிச்சத்திலும், கடும் வெப்பத்திலும் தூங்கிக் கொண்டிருந்த கருட இன மக்கள் அனைவரும் விழித்தெழுந்தனர். அனைவரும் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும் தங்கள் குடும்பங்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முனைந்தனர். கருடர்களின் அரசன் கிருஷ்ணனின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். அவனுக்குக் கிருஷ்ணன் அற்புதம் ஏதானும் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியே கண்ணனிடம் வேண்டிக் கொள்ளவும் செய்தான். எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பாய் என வேண்டினான். உன்னைச் சரண் அடைந்துவிட்டோம், இனி நீயே கதி எங்களுக்கு என்று கண்ணனைத் தொழுதான்.

கண்ணன் அனைவரையும் பார்த்து, “என்னுடன் வாருங்கள், அனைவருமே வாருங்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. உங்கள் கைகளில் கிடைக்கும் ஆயுதங்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள். கருட மன்னா, தாங்களும் வாருங்கள். அண்ணா, பலராமரே, நம்முடைய கவசங்களைப் பூட்டிக் கொண்டு ஆயுதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நெருப்பை அணைக்கும் விதத்தைச் சொல்கிறேன். “ கண்ணன் குரலில் நிதானமும், உறுதியும் தொனித்தது. தலைமைப் பொறுப்பை ஏற்று அனைவருக்கும் கட்டளை இட்டுக் கொண்டிருந்தாலும், அது வெளியே தெரியாதவாறு கண்ணன் குரலில் மென்மையும், வசீகரமும் இருந்தது. “விநதேயா, நேற்று நாம் கடலுக்குச் சென்றோமல்லவா? அந்தப் பாதை வழியாக அனைவரையும் அழைத்துச் செல்!” கண்ணன் கட்டளை இட்டான். மலையின் மற்றொரு பக்கம் வளைந்து வளைந்து ஒழுங்கற்றுச் சென்ற ஒரு பாதையில் விநதேயன் அனைவரையும் அழைத்துச் சென்றான். அவர்களுக்குக் கீழே சமுத்திரத்தில் அலைகள் தன் முழு பலத்தோடும் “ஓ”வென்று கூச்சலிட்டுக் கொண்டு கரையில் மோதிக் கொண்டிருந்தது. கீழே கூக்குரலிட்டுக் கொண்டிருந்த அலைகளை லட்சியம் செய்யாமல் மேலே நடந்தனர். சற்று நேரத்தில் மலையின் இரு முகடுகள் ஒரு கணவாய் போல் இரண்டாகப் பிரிந்திருந்த ஓர் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். உண்மையில் அது வெகு காலத்துக்கு முன்னால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அணைபோல் தெரிந்தது. நன்கு செதுக்கப் படாத பல கற்கள் ஆங்காங்கே தெரிய அவற்றைப் பெயர்த்து எடுப்பதன் மூலம் அங்கே ஒரு பெரிய பிளவை உண்டாக்க முயற்சித்தனர். அனைவரும் கண்ணன் சொல்லாமலேயே அவன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருந்தனர்.

கடும் முயற்சிக்குப் பின்னர். சிறிது நேரத்தில் அங்கே ஒரு பெரிய பிளவு உண்டாக, கடலரசன் யார் இது இங்கே பிளவை ஏற்படுத்தியது என்று பார்க்க விரும்பினவனைப் போல் அங்கே சீற்றத்தோடு நுழைந்தான். அனைவரும் மறுபக்கத்துக்கு ஓடோடிப் போய் அங்கேயும் இப்படியே ஒரு பிளவை உண்டாக்க நீர் அங்கேயும் நுழைந்து அந்த மலையின் அடிவாரத்துக்குச் சற்று மேலே ஒரு பெரிய அகழியைப் போல் சுற்றிச் சூழ்ந்து கொண்டது. மேலும், மேலும் தடையில்லாமல் கடல் நீர் உள்புக நீரின் வேகமும் அதிகமானது. அங்கே கட்டப் பட்டிருந்த அந்த அணையானது அந்த நீரின் வேகத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் விழ ஆரம்பிக்க அதைப் பார்த்த வண்ணமே கருடன் விநதேயனோடு கண்ணனும், பலராமனும் மலையின் மேலே ஏறினார்கள்.


ஜராசந்தன் குதூகலத்தின் உச்சியில் இருந்தான். கண்ணனால் இம்முறை தப்பவே முடியாது என்பது சர்வ நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டது. நெருப்பு பல அடிகள் மேலே மேலே கொழுந்து விட்டெரிய, நெருப்பின் வெம்மையிலும், இருக்கும் இடங்கள் அழிக்கப் பட்டதாலும், முயல்கள், மான்கள், கரடிகள், சிங்கங்கள், புலிகள் போன்ற காட்டு மிருகங்கள் தங்கள் பதுங்குமிடத்திலிருந்து வெளியே ஓடோடி வந்தன. ஒரு சில மிருகங்கள் தவறுதலாய் நெருப்பில் விழ ஜராசந்தனுக்கும் அவனின் வீரர்களுக்கும் ஒரு மாபெரும் விருந்து கிடைத்த்தில் பரிபூரண திருப்தி உண்டாயிற்று. இந்த நெருப்பினால் ஒரு பக்கம் எதிரியும் ஒழிந்தான் அதோடு, நமக்கு உண்ண உணவும் பக்குவமான நிலையில் கிடைக்கிறது. அன்று இரவு ஒரு மாபெரும் ராஜா அளிக்கும் விருந்தாக அமைய, அனைவரும் உண்டு களித்து மனக் களிப்போடு உறங்கினர். நாளைப் பொழுது விடிந்தால் எதிரி மாண்டான் என்ற நற்செய்தியோடு திரும்பலாம். அனைவருக்கும் உறக்கம் சீக்கிரமே வந்தது. நடு இரவில், அது என்ன சப்தம்?? மழை பெய்கிறதா? அல்லது ஏதேனும் அருவி நீரா? அலை ஓசை போல் அல்லவா உள்ளது? இது என்ன ஆச்சரியம். இந்த மலையின் அப்புறமாய் ஏறிப் போய்க் கடந்தாலே மேலை சமுத்திரக்கரைக்கு இறங்க முடியும்! இது என்ன கனவா? இல்லை நனவா? தண்ணீர் வேகமாய் வந்து கொண்டிருந்தது.

Monday, August 02, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

தாமகோஷனின் எண்ணமும், ஜராசந்தன் தந்திரமும்!

அனைவரிலும் அமைதி காத்தது சேதிநாட்டரசன் தாமகோஷன் ஒருவனே. அங்கிருந்த மற்ற மன்னர்களிலிருந்தும், அரசகுமாரர்களிலிருந்தும் அவன் வேறுபட்டிருந்தான். அவனுடைய நோக்கமும் அவர்கள் நோக்கத்தில் இருந்து வேறுபட்டே இருந்தது. ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்டு அவனுக்குக் கீழுள்ள மன்னர்களில் ஒருவனாகத் தான் ஆக்கப் பட்டதை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தாமகோஷனுக்கு. என்றாலும் ஜராசந்தனோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட பின்னர் ஜராசந்தனின் உதவியும் அவனுக்குக் கிடைத்ததை மறுக்கவும், மறக்கவும் முடியாதுதான். ஆனால், அதற்காக ஜராசந்தனின் ஆற்றலும், அவன் பலமும் பெருகிக் கொண்டே போவது சேதி நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஆர்யவர்த்தத்தின் மற்ற நாடுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியதே. பெருகிக் கொண்டு வரும் ஜராசந்தனின் பலம் ஒரு அபாயகரமான சக்தி என்பதை தாமகோஷன் நன்கு உணர்ந்திருந்தான். ஜராசந்தனின் நாடு பிடிக்கும் ஆசையில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் அதை உடனே முறியடிக்கும் அவன் தந்திரத்தைக் கண்டு தாமகோஷனுக்கு உள்ளூரக் கிலி ஏற்பட்டிருந்தது.

அதிர்ஷ்டக் காற்று இப்படியே ஜராசந்தன் பக்கமே வீசிக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், எவர்க்கும் தலை வணங்காத பாஞ்சாலத்தையும், அஸ்தினாபுரத்தையுமே ஜராசந்தன் தன் வழிக்குக் கொண்டு வந்து தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் போல் மாற்றிவிடுவானோ என்றும் அஞ்சினான். ஆஹா! அப்படி மட்டும் நடந்துவிட்டால்??? என்ன துரதிருஷ்டம் ஆர்யவர்த்த்த்துக்கு நேரிட்டுவிடும்! இறைவா! ஜராசந்தனை அடக்க ஒரு ஆள் கூட இல்லாமல், ஒரு அரசகுமாரன் கூட இல்லாமல் ஆர்யவர்த்தமே அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் கட்டளையை எதிர்பார்த்து, அவன் நினைப்பதை நடத்தி வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் படுமே! இதை எப்போதும் தனக்குள்ளேயே சிந்தித்துக்கொண்டிருந்த தாமகோஷன் இதை எவ்விதம் சமானம் ஆக்குவது? ஜராசந்தனுக்குச் சமானமாக எவர் தலை எடுப்பார்கள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் கம்சனின் சாவு ஒரு அபாய எச்சரிக்கை மணிபோல் ஜராசந்தனுக்கு அளிக்கப் பட்டது. தாமகோஷனுக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் ஜராசந்தனுக்கு ஒரு எதிரி தோன்றியதில் உள்ளூர சந்தோஷமே! தடையற்றுப் பெருகிக் கொண்டிருந்த அவன் பலத்தையும், கர்வத்தையும் அடக்கி, ஒடுக்க அந்த இரு இடைச்சிறுவர்களாலும் இயலும் என்று பூரணமாக நம்பினான், எதிர்பார்த்தான். அதிலும் கிருஷ்ணனை யாதவர்களுக்குத் தலைமைதாங்கச் சொன்னபோது ஜராசந்தனுக்குச் சரி சமமான ஒரு எதிரி தோன்றிவிட்டான் என உள்ளூர மகிழ்ந்தான்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த இரு இளைஞர்களும் ஜராசந்தனிடமிருந்து தப்பி நாட்டை விட்டே ஓடவேண்டி வந்துவிட்டதோடு அல்லாமல் அவர்களைத் தேடும் மனிதவேட்டைக்குழுவில் தானும் கலந்து கொள்ளும்படியும் ஆகி விட்டது. அரை மனதாக இதில் கலந்து கொண்டிருந்தாலும் தாமகோஷன் இதில் கலந்து கொள்ளும்படி நேர்ந்த ஒரே காரணம் மஹா சக்ரவர்த்தி ஜராசந்தனின் மனம் கோணாத வண்ணம் எப்படியேனும் இந்த இரு இளைஞர்களின் உயிரையும் காப்பாற்றவேண்டும் என்பதே. அதற்கான சரியான தருணத்திற்காகக் காத்திருந்தான் தாமகோஷன். இப்போது அந்தத் தருணம் வந்துவிட்டதாய் உணர்ந்தான். என்ன செய்யறது எனப் புரியாமல் குழப்பத்தில் இருந்த மற்ற மன்னர்களிடம் வந்தான். “ மன்னர்களே, அரசிளங்குமரர்களே, நாம் நமது நம்பிக்கையை இழக்கவேண்டாம். கடைசிவரை முயலுவோம். அதுதான் மாட்சிமை தாங்கிய நம் சக்கரவர்த்தியின் பெருமைக்குப் பங்கம் விளைவிக்காது. இந்தத் தடைகளிலிருந்து வெளிவர ஒரு வழியைக் கண்டு பிடிப்போம்!” என்றான்.
ஆனாலும் ஜராசந்தனும் சாமானியமானவன் அல்லவே! அவனுக்கும் உள்ளூர தாமகோஷனிடம் நம்பிக்கை இல்லைதான். எப்போதும் அவன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். என்னதான் சேதிநாட்டு மன்ன்னின் கஷ்டங்களில் இருந்து வெளிவரத் தான் உதவி இருந்தாலும், அவன் விசுவாசம் தன்னிடம் பூரணமாய் உள்ளதென்று நம்ப ஜராசந்தன் சிறிதும் தயாராய் இல்லை. சேதிநாட்டரசன் எப்போதுமே நடுநிலைவாதி! நியாயம், அநியாயம் தெரிந்தவன், புரிந்தவன். தர்ம்ம் எதுவென நன்றாய்த் தெரியும் அவனுக்கு! மேலும் ஆழம்காணமுடியாத அளவுக்குத் திறமை வாய்ந்த புத்திசாலியும் கூட. அவன் மூளை எப்போது, எவ்விதம், எந்தப்பக்கம் வேலை செய்யும் என்பதை எளிதில் இனம் காணமுடியாது. அனைத்துக்கும் மேலே அவன் ஷூரர்களின் இணையற்ற தலைவன் ஆன வசுதேவனின் சகோதரியின் கணவன். வீட்டு மாப்பிள்ளை ஆவான். ஆகவே அவனுடைய இரக்கமோ, ஆதரவோ நிச்சயமாய் வசுதேவனின் இரு பிள்ளைகளின் பக்கமே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

ஆனால் தாமகோஷனின் மகன் சிசுபாலன் அப்படி இல்லை. வசுதேவனையோ, கண்ணனையோ, பலராமனையோ அவனுக்குச் சிறிதும் பிடிக்காது. அவன் இந்தக் கூட்டுக் குழுவில் சேர்ந்திருந்தால்???? ம்ம்ம்ம்ம்ம்! ஆனால் தாமகோஷன் முந்திக் கொண்டு தான் வருவதாய்த் தெரிவித்துவிட்டான். வெளிப்படையாய் அவன் வருவதற்கு மறுப்புத் தெரிவித்தால் குழுவில் பிளவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாய் ஜராசந்தனும் ஒப்புக் கொண்டுவிட்டான். வேறு வழியே இருக்கவில்லை அப்போது. மேலும் சேதி நாட்டு அரசன் தன் நன்னடத்தைகளாலும், பழகும் விதத்தாலும் அனைவரையும் கவர்ந்திருந்தான். அனைவராலும் மதிக்கப் பட்டான். அவனை ஒதுக்குவது அவ்வளவு நன்மை அல்ல என்பது தெரிந்தே ஜராசந்தன் அவனைச் சேர்த்துக் கொண்டிருந்தான். மேலும் தன்னுடைய புகழும், வலிமையும், பெருமையும், சாம்ராஜ்யமும் மங்குகின்றதோ? என்று தோன்றும்படியாகச் செய்துவிட்டிருந்தது அவன் மறுமகன் கம்சனின் மரணம். ஆகவே இப்போது தாமகோஷன் வந்து தானே வலுவில் வேறொரு வழியைக் கண்டு பிடிக்கலாம் என்று சொன்னதும் மற்ற மன்னர்கள் மட்டுமின்றி ஜராசந்தனும் ஆவலுடன் அவனைப் பார்த்தான்.

கேட்கவும் கேட்டான்! “என்ன அது மாற்று வழி?”

மெல்ல ஆரம்பித்தான் தாமகோஷன். “ நம்மால் நேரடித் தாக்குதல் மூலம் மலையின் உயரத்தையோ, மலையின் சுற்றளவையோ குறைக்கவோ, அதில் ஏறுவதோ இயலாது. மேலே ஏற முடியாமல் எவ்வளவு நாட்கள் காட்டுமிருகங்கள் நிறைந்த இந்த அடர்ந்த காட்டில் நாம் காத்துக்கொண்டிருப்பது? மலைமேல் உள்ளவர்கள் கீழிறங்குவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. அதே சமயம் நம்மால் திரும்பிப் போகவும் முடியாது. திரும்பிப் போனோமென்றால், ஒரு சிறுவனை எதிர்க்கமுடியாமல் இவ்வளவு பெரிய படை திரும்பி வந்துவிட்டது என அனைவரும் நம்மை எள்ளி நகையாடுவார்கள். இந்தப் பரந்து விரிந்த ஆர்யவர்த்த்த்தின் மற்ற மன்னர்களின் கண்களுக்கும், கருத்துக்கும் சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக அது மாறிவிடும். மேலும், நம் சக்கரவர்த்தி, மாட்சிமை தாங்கிய நம் சக்கரவர்த்தி இவ்வளவு வருடங்களாக ஈட்டிய புகழும், வலிமையும் கேலிக்குள்ளாகும். அனைவரும் அவரைக் கண்டாலே கேலியாகச் சிரிப்பார்கள்.”

“பின் என்னதான் செய்யவேண்டுமென்கிறீர், சேதி நாட்டு மன்னரே?” இடி முழக்கம் போன்ற குரலில் கேட்டான் ஜராசந்தன். அதற்கு தாமகோஷன், “இந்த மலைச் சரிவுகளில் புற்கள் முளைத்துக் காய்ந்து கிடக்கின்றன. மேலும் இப்போது கோடைக்காலம் வேறு நடக்கிறது. அதனாலும் புற்கள் காய்ந்துவிட்டன. மலையின் உச்சி முகடு வரையிலும் காய்ந்து கிடக்கும் இந்தப் புற்களில் தீ வைக்கவேண்டும். கீழே இங்கே தென்படும் சரிவுகளில் தீ வைத்தாலே போதும். அது மலை உச்சி வரை தானே சென்றுவிடும். வாயுபகவான் அதற்கு உதவி செய்வார். நாளைக்குள் அந்தத் தீ மலை உச்சிக்குச் சென்று அங்கே குடியிருப்புகளையும் நாசமாக்கி அங்கே இருப்பவர்களையும் அழித்துவிடும். அந்த வாசுதேவன் இந்த்த் தீயில் இருந்து தப்பிவிடுவது அரிது என்றே தோன்றுகிறது. ஒருவேளை அப்படி அவன் தப்பினாலும், அவன் தன் முகத்தை வெளியே காட்டுவதற்கு வெட்கப் படுவான். நாமும் நாம் வந்த வேலை முடிந்தது என சந்தோஷமாய்த் திரும்பிப் போகலாம்.” என்று முடித்தான் தாமகோஷன்.