எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 24, 2021

என்ன செய்யலாம்?

 நாம தான் வியர்டுனு நினைச்சால், நம்ம கணினிகளும் கூட அப்படித்தான் இருக்கு. டெல் மடிக்கணினியில் அது கீழே விழுந்ததில் இருந்தே பிரச்னைகள் இருந்தாலும் ஒரு மாதிரியா ஓடிட்டு இருந்தது. இப்போ அதுக்கு பாட்டரி மாத்தணும்னு சொன்னதாலே அதையும் மாத்திட்டோம். அதுக்கப்புறமாத் திடீர்னு ஒரு நாள் மவுஸ் வேலை செய்யலை. மவுஸின் பாட்டரியையும் மாற்றினால் அப்படியும் வேலை செய்யலை. மவுஸ் தான் வீணாயிடுச்சோனு நினைச்சால் கணினியில் >>>>>>>>>>>>>>>>>>> இப்படியே தொடர்ந்து வந்து எல்லா இடங்களையும் தானாக நிரப்பிக்கொண்டு ஓட ஆரம்பிச்சுடுத்து. சரினு வேறே மவுஸ் வாங்கி வந்து அதை ஒருவழியாக வேலை செய்யறது எப்படினு கண்டுபிடிச்சுக் கொஞ்ச நாட்கள் ஓட்டினால் அது ஓடியது. போன வாரம் வரைக்கும். மறுபடி மவுஸ் வேலை செய்யவில்லையேனு நினைச்சால் அதே பழைய பிரச்னை. கணினியில் தானாகவே எல்லா இடங்களிலும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே வந்து நிரப்பிக் கொள்கிறது. சரினு கணினியை மூட நினைச்சால் ஷட் டவுன் பண்ணும் ஐகானிலும் ஏதோ ஒரு பக்கம் திறந்து ஷட் டவுன் பண்ணவே முடியாமல் இப்படியே >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> வர என்னென்னவோ செய்து ஒரு வழியாக் கணினியை மூடினேன்.

இன்னொரு கணினி தோஷிபா சுமாராக வேலை செய்தாலும் பதினோரு வருடங்கள் ஆனதாலே என்னமோ அப்பப்போ கொஞ்சம் தகராறு பண்ணிக்கும். இரண்டு மடிக்கணினிகளுமே ஜிமெயில் திறப்பது என்றால் பிடிவாதமாக மறுத்துவிடும்.  cannot sync. error 105 என்றே வரும். திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்ப முயற்சி செய்ததும் ஒரு முறை போனால் போகுது இணைந்து தொலைக்கும். இது இரு கணினிகளிலுமே இருக்கு. தினம் தினம் போராட்டம் தான். ஒவ்வொரு முறையும் ஜிமெயில் திறப்பதற்குள்ளாக என்பாடு உன்பாடு என்றாகி விடுகிறது. இந்த அழகில் தான் இதோடு குடித்தனம் பண்ணிண்டு இருக்கேன். என்னத்தைச் சொல்லுவது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன? யாரானும் தொ.நு.நி. இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா! எப்படியும் இன்னிக்குக் கணினி மருத்துவரைக் கூப்பிடப் போறேன். டெல் மடிக்கணினியை ஒரு வாரமா எடுக்கவே இல்லையே. அதை எப்படியானும் சரி பண்ணணும். என்ன செய்யலாம்? 

Monday, February 22, 2021

உன்னோடு வாழ்தல் அரிது! :(

 ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் -ஒரு நாளும்

என் நோவறியா இடும்பை கூர் என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது!

என்னவோ தெரியலை. ஒண்ணு மாத்தி ஒண்ணு பிரச்னையா வந்துட்டே இருக்கு. போன வாரம் கைவலி வந்து இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டேன். அதுக்கு மாத்திரை சாப்பிடும்போதே வயிறு கொஞ்சம் தகராறு செய்து கொண்டிருந்தது. மாத்திரையின் தாக்கம்னு நினைச்சுட்டு இருந்தேன். அதன் பிறகு இரண்டு நாட்களுக்கும் மேல் நான் தான் சமைச்சேன். இட்லி மாவெல்லாம் தயார் செய்து வைச்சேன். சனிக்கிழமையும் நான் தான் சமைச்சேன். மத்தியானம் சாப்பிடும்போதெல்லாம் ஒண்ணும் தெரியலை. சாப்பிட்டு முடிச்சதும் வயிறு ஒரு மாதிரியா இருந்தது. அதை அலட்சியம் செய்யலாம்னு செய்துட்டு நான் பாட்டுக்கு என் வேலைகளைப் பார்த்தேன். தெரிந்த மாமி ஒருத்தர் வீட்டில் செய்த காராசேவு வாங்கி வைச்சிருந்தார் நம்மவர். எனக்கூ அது ஆரம்பத்திலிருந்தே ஒத்துக்கலை. ஆகவே கிட்டேயே போகாமல் இருந்தேன். அன்னிக்குனு பார்த்து விதி அழைக்கவே அந்தக் காராசேவ் கொஞ்சமாகவும் இருந்ததால் அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தேநீரையும் குடிச்சேன். அப்போக் கூட வயிறு முணுக் முணுக் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. அதன் பிறகு இரவுக்கு இட்லி வார்த்துச் சட்னி அரைச்சுச் சாப்பிட்டது தான்!

அதன் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கே ஒரு ஆச்சரியம். இட்லி சாப்பிட்டதில் இருந்தே வயிறு வலி அதிகம் ஆக வெந்நீரில் அஷ்ட சூரணம்போட்டுச் சாப்பிட்டேன். ஏலக்காய்களை வாயில் போட்டுப் பச்சைக்கற்பூரத்துடன் மென்றேன். வறுத்த சோம்பை வாயில் போட்டு மென்றேன். எதுக்கும் அசையாமல் குமட்ட  அதிகம் ஆகவே சுமார் ஒன்பது மணி அளவில் வாந்தி தாங்க முடியாது என்ற நிலைமையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தால் மறுநாள் காலை நான்கு மணி வரைக்கும் இடைவிடாத வாந்தி. இதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் ஒன்பதரை மணிக்கே மருத்துவரிடம் போய்ச் சொல்லி (அவருக்கு அடிக்கடி எனக்கு இப்படி வருவதால் நல்ல பழக்கம்) மாத்திரைகளும் ஓஆர் எஸ் ரீஹைட்ரேஷன் சால்ட் டெட்ரா பாக்கும் வாங்கி வந்தார். அந்த மாத்திரைகளை வாயில் போட்டுத் தண்ணீரோடு உள்ளே இறக்க முடியலை. எல்லாம் வெளியே வந்து விட்டது. காலை நான்கு மணிக்கு வயிற்றில் ஏதும் இல்லைனதும் வாந்தி, குமட்டல் நின்றது. எழுந்திருக்கவே முடியலை. காஃபி குடிக்கவும் பிடிக்கலை. அவரே எழுந்து காஃபி போட்டுக் குடிச்சுட்டு எனக்கும் வைச்சிருந்தார். பிடிக்காமல் குடிச்சு வைச்சேன். மறுபடி படுத்துட்டேன்.

எப்போ எழுந்தேன்னு தெரியாது. ஒரே மயக்க நிலை. ஒண்ணும் சாப்பிடத் தோணலை. சாப்பாடு வாங்கி வைச்சிருந்தார். ஆனால் நான் சாப்பிடலை. நல்லவேளையாக முதல் நாள் கரைச்சு வைச்சிருந்த மோர் நிறையவே இருந்ததால் அதைப் போகவரக் குடிச்சு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். மறுபடி மாலை நான்கு மணிக்குப் படுத்தால் ஆறு மணிக்கு விளக்கு வைக்கையில் தான் விழித்தேன். இரவுக்கு ஒரே ஒரு தோசையைக் கஷ்டப்பட்டு விழுங்கி விட்டுப் படுத்தது தான் தெரியும். காலை இரண்டரைக்குத் தான் விழிச்சேன். அப்புறமாச் சரியாத் தூக்கம் வரலை. ஆறரை மணிக்கு எழுந்து வெந்நீர் போட்டுவிட்டுக் காஃபி என்னும் திரவத்தை வேண்டாவெறுப்பாய் விழுங்கிட்டுக் குளித்துப் படுக்கை எல்லாம் சுத்தம் செய்து போர்வை, தலையணை உறைஆகியவற்றைத் தோய்க்கப் போட்டுவிட்டுக் கஞ்சியைக் கஷ்டப்பட்டுக் குடிச்சேன்.கஞ்சி போட்டு வைச்சிருந்தார். கஞ்சி குடிச்சதும் மறுபடி ஒரு மயக்கம். படபடப்பு. போய்ப் படுத்துட்டேன். ஒன்பது மணிக்குக் குஞ்சுலு வந்ததும் தான் எழுந்து வந்தேன். இப்போக் கூட இணையத்துக்கு வரலாமா வேண்டாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துட்டு (நல்லவேளையா யாரும் தேடலை)

அது என்னமோ என் வயிறு இப்படித் தான் அடிக்கடி திடீரெனத் தொந்திரவு செய்யும் என்பதால் உணவு விஷயத்தில் ஏகக்கட்டுப்பாடுகள். ஆனால் எல்லோருக்கும் இது புரிவதில்லை. நான் சும்மாவானும் உபசாரம் பண்ணிக்கிறேன்னு நினைப்பாங்க/நினைக்கிறாங்க! என்ன செய்ய முடியும்! நம்ம வயிறு தான். ஆனால் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எங்கே இருக்கு! வெளியே எங்காவது போனால் கூட ஆயிரம் ஜாக்கிரதை. கூடியவரை பயணங்களில் சாப்பிடாமல் பழச்சாறு, லஸ்ஸி எனப் பொழுதைக் கழிப்பேன். அப்படியே சாப்பிட்டாலும் ஏதானும் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துப்பேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் வயிற்றில் முணுக் முணுக் இன்னும் குறையலை. சாப்பாடு பிடிக்கலை. மெல்ல மெல்லச் சரியாகும். பிள்ளையார் துணை!

Friday, February 19, 2021

தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள்!

 


தாத்தாவின் கல்யாணம் பற்றி அவரே எழுதியது!

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன


காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.

நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்


எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

Wednesday, February 17, 2021

பல்சுவைக் கதம்பம்!


அம்மா, அப்பா யார் கல்யாணமோ, நினைவில் இல்லை, என் கல்யாணத்தில் இந்த ஃபோட்டோ எடுக்கலை, அப்புறமா ஐந்து வருஷம் கழிச்சு அண்ணா கல்யாணமோ பத்து வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணமோ நினைவில் இல்லை. எங்க குடும்ப வாட்சப் குழுமத்தின் லோகோ!  ரேவதி அவங்க அம்மா, அப்பா ஃபோட்டோவைப்  போடும்போதெல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் பதிவுகள் எழுதும்போது நினைவில் வராது. இன்னிக்கு என்னமோ அதிசயமா காலரியில் இந்தப்படம் தானாகவே சேமிப்பில் இருந்தது. உடனே டவுன்லோட் பண்ணிட்டேன். 






 இது ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு எதிரே! தெருக்கள் நான்கு சந்திக்கும் இடம். இங்கே வலப்பக்கத்துத் தெருவும் எதிரே உள்ள தெருவும் மட்டும் இருக்கிறது. மரங்கள் ஆரம்பிப்பதில் இருந்து கீழே கொஞ்சம் வரைகோடாகத் தெரியும் எல்லையிலிருந்து பையர் வீட்டுப் பகுதி ஆரம்பம். அங்கிருந்து உள்ளே தெரியும் முக்கியக் கதவு வரை பனி விழுந்திருக்கிறது. போன வருஷம் ஃபெப்ரவரியில் அங்கே தான் இருந்தோம். உறைநிலைக்குச் சென்றாலும் இப்படி மைனஸில் எல்லாம் போகலை. தண்ணீர் வராது எனக் குழாயை மட்டும் சொட்டுச் சொட்டாக விழும்படி பண்ணி வைப்பாங்க. மற்றபடி தண்ணீர் எல்லாம் வந்தது. இப்போத் தண்ணீர், மின்சாரம், இணையம் எதுவும் இல்லை. எப்படியோ டாட்டா சேமிப்பில் பையர் கூப்பிட்டு 2 நிமிஷங்கள் பேசுவார். பெண் வாட்சப்பில் செய்தி கொடுப்பாள். அவ்வளவே! குட்டிக் குஞ்சுலு என்ன செய்யறதுனு புரியலை. பையரிடம் கேட்டோம். அவருக்குச் சரியாப் புரியலை போல! ஒண்ணும் சொல்லலை. நாங்க மெம்பிஸில் இருந்தப்போ 2,3 தரம் இந்த மாதிரிப் பனி மழை பார்த்திருக்கோம். இங்கே விட மெம்பிஸில் அதிகமாக இருக்கும். 

***********************************************************************************

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரே வேலை, வேலை, வேலை மும்முரம். திங்களன்று அண்ணா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் வந்தாங்க. தம்பி வற்புறுத்திச் சொன்னதால் காடரிங் சாப்பாடு ஏற்பாடு செய்தோம். மதுரைக்காரங்களாம். ஆனால் எங்களுக்குத் தெரியலை யார் என்பது. சமையல் உண்மையாகவே நன்றாக இருந்தது. இரவு இட்லி, சட்னி, சாம்பார் கேட்டிருந்தோம். அதுவும் நம்மைப் போலவே துணி போட்டு வார்த்திருந்தாங்க. மிருதுவாக நன்றாக இருந்தது. சாம்பாரும் ஓட்டலில் வைக்கும் சாம்பார் மாதிரி வைச்சிருந்தாங்க. ஆனால் இரண்டு பேருக்குக் கொடுக்க மாட்டாங்களாம். குறைந்தது பத்துப்பேராவது இருந்தால் நல்லது. அக்கம்பக்கம் வீடுகளில் வாங்கிப்பாங்கன்னாக் கொடுக்கிறோம் என்றார்கள். நாம தான் அலையறோம்னா எல்லோருமா? இஃகி,இஃகி,இஃகி! அதிர்ஷ்டம் அம்புடுதேன்னு விட்டுட்டோம்.

***********************************************************************************

நெல்லைத் தமிழர் தக்காளிக் கூட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணும் செய்முறை கேட்டிருந்தாராம். எங்கே/எப்போ/எதிலேனு நினைவில் இல்லை.  குழுமத்தின் வாட்சப்பில் கேட்டிருந்தார் ஏன் எழுதலைனு! இப்போக் கொடுக்கிறேன்.

சாப்பாட்டுக்குத் தொட்டுக்கப் பண்ணுவதெனில் கால் கிலோ தக்காளிக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளிகளை நன்கு அலம்பித்துண்டங்களாக நறுக்கி ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது கல்சட்டி அல்லது வாணலியில் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். தக்காளி சீக்கிரமே குழைந்து விடும். அப்போது வெந்த பருப்பைச் சேர்க்கவும். பருப்பு அதிகமாய்த் தெரிந்தால் தனியாய் எடுத்து வைக்கவும். கூட்டின் சுவையைக் கெடுத்து விடும். ஒரு மிளகாய் வற்றலோடு தேங்காய்த் துருவலும் ஜீரகமும் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கூட்டில் கலக்கவும். தேவையானால் கொஞ்சமாக அரிசி மாவு கரைத்து விடவும். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தோடு தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்த கூட்டுக்கு வெங்காயத்தை முதலில் வதக்கிக் கொண்டு அதில் தக்காளியைச் சேர்த்து வேகவிடவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்துக்கொண்டு  வெந்த பருப்பைக் கலந்து அரைத்து விட்டதையும் கலந்து ஒரு கொதி விட்டுப்பின்னர் தாளிக்கவும்.

இரண்டு நாட்களாக உள்ளங்கையிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வலி! தலை பின்னிக்கவோ, சாதம் பிசைந்து சாப்பிடவோ முடியலை. வலி நிவாரண மாத்திரைகள் போட்டுக் கொண்டு இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் உள்ளங்கை வலி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாமல் வயிறு தொந்திரவு வேறே! அதனால் அதிகம் இணையத்துக்கு வர முடியலை. 

Friday, February 12, 2021

சில ஊறுகாய் வகைகள்!

 எலுமிச்சை இனிப்பு ஊறுகாய். இதை இரண்டு , மூன்று விதங்களில் போடலாம். பாரம்பரிய முறைப்படி சர்க்கரை சேர்த்தோ அல்லது வெல்லம் சேர்த்தோ போடலாம். முதலில் சர்க்கரை சேர்த்த எலுமிச்சை ஊறுகாய்.




பத்து எலுமிச்சம்பழங்கள் பெரிதாக நல்ல சாறுள்ளவை எடுத்துக்கொண்டு கழுவி விட்டுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ரொம்பச் சின்னத்துண்டங்களாக இல்லாமல் நிதானமாக இருக்கட்டும். இதற்குத் தேவையான உப்பையும் எடுத்துக்கொள்ளவும். கல் உப்பாக இருந்தால் நல்லது. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் சுமார் அரை லிட்டர் நீரை விட்டுக் கொதிக்கவிடவும். கல் உப்பைச் சேர்க்கவும். உப்புக் கரைந்து வந்ததும் துண்டங்களாக்கிய எலுமிச்சைகளைச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  தண்ணீர் வற்றி எலுமிச்சைச்சாறும் நீரும் சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆற விடவும். இந்த அளவு எலுமிச்சம்பழத்துக்கு 200 கிராம் சர்க்கரை தேவையாக இருக்கும். ஒரு பாட்டிலில் அல்லது ஜாடியில் எலுமிச்சையைப் போட்டுக் கூடவே சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறவும். மூடி வைக்கவும். தினம் ஒரு தரம் கிளறி விடவேண்டும். புளிப்பும், உப்பும், இனிப்புமாகச் சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள (பிடித்தவர்களுக்கு) நன்றாக இருக்கும். சீக்கிரம் வீணாகாது.

எலுமிச்சையைத் துண்டங்களாக ஊறுகாய்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொண்டு அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்க்கவும்.இரண்டு நாட்கள் ஊற விடவும். வெல்லத்தூளை நீரில் கரைத்துக் கொண்டு வடிகட்டிப் பாகாக (ரொம்ப முற்றிய பதம் வேண்டாம்.) எடுத்துக்கொண்டு ஆற விடவும். ஊறிய எலுமிச்சையில் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துவிட்டு ஆற வைத்த வெல்லப்பாகையும் சேர்த்துக் கிளறவும். தேவையானால் கொஞ்சமாக நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். ஜீரகம், சோம்பு வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து இதில் சேர்க்கலாம். இதே போல் மாங்காயையும் போடலாம்.

இதில் வெல்லத்தைப் பாகாகச் சேர்க்காமல் தூளாகவே சேர்த்து வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கலாம். எலுமிச்சைத்துண்டங்களோடு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற வைத்து வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம், மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்துப் பொடித்துக் கொண்டு அந்தப் பொடியையும் போட்டு கூடவே மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொண்டு வெல்லத்தூளையும் சேர்க்கவும். இதற்குப் பச்சை நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் விடலாம். 


இந்த முறையில் பொடி மிக்சியில் பண்ணிக் கொண்டு பச்சை மஞ்சள், மாங்காய் இஞ்சி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நறுக்கிக் கொண்டு அதில்  எலுமிச்சைச் சாறை சுமார் நான்கு, ஐந்து பழங்களின் சாறைச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கலந்து கொண்டு எண்ணெய் காய்ச்சி ஊற்றியும் பண்ணலாம். இப்போது ஊறுகாய்ப் பருவம் என்பதாலும் பச்சை மஞ்சள் நிறையக் கிடைப்பதாலும் பச்சை மஞ்சள் ஊறுகாய், பச்சை மஞ்சள் தொக்கு, பச்சை மஞ்சள்+ மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கி அரைத்துத் தொக்கு எனப் பண்ணலாம். எங்க வீட்டில் பச்சை மஞ்சள் தொக்குப்போட்டு வைச்சிருக்கேன். பச்சை மஞ்சள் நறுக்கி ஊறுகாய் போடணும். இப்போச் செலவு ஆகாது என்பதால் போடவில்லை.

Monday, February 08, 2021

என்ன நினைச்சீங்க எங்களை!

 ஆயிற்று! இன்னும் ஒரே மாதம் தான். அப்புறமாக் குட்டிக் குஞ்சுலு அவ அப்பா, அம்மாவுடன் நைஜீரியாவுக்குப் போய்விடும். அதன் பின்னர் இப்போ வரமாதிரி வரமுடியுமானு தெரியலை. நேரம் எப்படினு முதல்லே தெரிஞ்சுக்கணும். இப்போ அம்பேரிக்காவுக்கும் நைஜீரியாவுக்கும் கிட்டத்தட்டப் பத்துமணி நேரம் என்பதால் பையர் தினம் அதிகாலை/நடு இரவு(?) இரண்டு, இரண்டரைக்கு எழுந்து அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கார் கடந்த நாலைந்து மாதங்களாக. நைஜீரியாவுக்கே செல்லும்படி அலுவலகத்திலிருந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாச்சு. இவங்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக்கிளம்பணும். கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம். எங்களை விட எங்க பெண்ணுக்கு! அவள் கல்யாணம் ஆனதுமே அம்பேரிக்கா போய்விட்டாள். பின்னாலேயே இரண்டு/மூன்று வருஷங்களில் பையரும் போய்விட்டார். பெண் அப்போதெல்லாம் பாஸ்டன் பின்னர் மெம்பிஸ் என இருந்தாலும் ஒரே நாடு என்று கொஞ்சம் ஆறுதல் இருந்தது. பையர் போனதில் இருந்து ஹூஸ்டன் தான். அவர் எண்ணெய் சம்பந்தப்பட்டப் படிப்பு/வேலையும் அது குறித்து. ஆகவே ஹூஸ்டனை விட்டு வெளியே போகவில்லை. இப்போத் தான் வேறே நாடு.  அதுவும் ஆப்ரிக்கா. இங்கே அம்பேரிக்காவில் உள்ள வசதிகள் எதுவும் அங்கே கிடைக்காது. இந்தியர்களும் குறைவாகவே இருப்பார்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது என்னும்போது வருந்துவதைத் தவிர்த்து வேறே வழி இல்லை. அங்கே நல்லபடியாகப் போய் சௌகரியமாக இருந்தால் போதும். அதற்காகப் பிரார்த்தித்துக் கொள்ளுவது ஒன்றே நம்மால் முடிந்தது. 

***********************************************************************************

"காதலர் தினம்" நெருங்குகிறது. அதற்கான பரிசுகள் பற்றிய விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் என வந்து கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் பொருந்தாக் காதல்கள்/ஏமாற்றுதல்/அதைப் பழிவாங்கும் கொலைகள் எனச் செய்திகள்! இப்போதெல்லாம் யாரும் யாரையும் தாக்க அஞ்சுவதில்லை. பொது இடத்தில் ஒரு பெண்ணைக் கோடரி கொண்டு தாக்க ஒருத்தர் யத்தனிக்கிறார். யாரும் அவரைத் தடுக்கவில்லை. அதை வீடியோவாக எடுத்துப் போடுகின்றனர். காதலி வேறு எவரையோ திருமணம் செய்யப் போவதால் அவளையும் அவள் தாயையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டுத் தன்னையும் எரித்துக்கொள்ளும் காதலன். இதனால் காதலுக்குப் பெருமை சேர்ந்து விட்டதா என்ன? இதெல்லாம் "காதல்" என்பதோடு சேர்த்தி இல்லை. இது முழுக்க முழுக்கக் "காமம்" பொருந்தாக் "காமம்".  காதல் என்பது எதன் மீதும் யார் மீதும் வரலாம். படிப்பைக் காதலிக்கலாம். சங்கீதத்தைக் காதலிக்கலாம். நடனத்தைக் காதலிக்கலாம். இறைவனைக் காதலிக்கலாம். உருகலாம். கண்ணீர் மல்கி அந்த அனுபவத்தை ரசிக்கலாம். மனிதர்களையும் காதலிக்கலாம். தப்பே இல்லை. ஆனால் அந்தக் காதல் ஒருத்தரை அழிப்பதிலா போய் முடியணும்? காதல் என்றால் வாழ வைக்கணும். தான் காதலித்த பெண்ணோ/பையரோ எங்கேயானும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்னும் பெருந்தன்மையான  நினைப்பு வரணும். 

உண்மையான காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது. ஒருவர் இதயத்தில் நினைப்பது மற்றவர் இதயத்தில்/மனதில்(?) எதிரொலிக்கும். இரு மனங்களும் இணைந்து செயல்படும். உடலும் அதன் தேவைகளும் அங்கே முக்கியத்துவம் பெறாது. இப்போதெல்லாம் பெரும்பாலான காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதற்குக் காரணமே அங்கே மனங்கள் இணையாமல் வெறும் உடல்ரீதியான ஆவலை/பற்றைக் காதல் என்று நினைப்பது தான். 

**********************************************************************************

ஆஹா! நாங்க சுத்தத் தமிழர்கள்! எங்களோட மொ"லி" தமி"ல்". நாங்கள் பின்பற்றுவது தமிலரின் தனிப்பட்ட பாரம்பரியங்களான "செண்டை மேளம்" சாப்பாட்டில் வடநாட்டு உணவுகள், கல்யாணத்தில் வடமாநிலத்தின் ஆடை வகைகள், சம்பிரதாயங்கள், இப்போல்லாம் எங்க கல்யாணங்களில் "மெஹந்தி" இல்லாமல் நடத்தமாட்டோம் தெரியுமா? நாங்க அணிவதும் வடமாநில உடைகள் தான்! ஆடுவதும் பஞ்சாபி பாங்க்ரா! "பல்லே! பல்லே!" என்று ஆடிப்பாடுவோம். இல்லைனா குஜராத்தி "டான்டியா" ஆடுவோம்! அழிந்து வரும் பாரம்பரியத் தமிழ்நாட்டுக் கலையான நாதஸ்வரத்தை மறந்து கூட ஆதரிக்க மாட்டோம். எங்களை என்னனு நினைச்சீங்க? சுத்தத் தமிழர்களாக்கும் நாங்க!  எங்களுக்கு ஹிந்தி மொழியும் "வட"மொழியும் தேவை இல்லை. வடமொழின்னா வடக்கே இருந்து வந்ததுனு சொல்லுவோம். வட விருக்ஷத்தின் கீழ் போதிக்கப்பட்டதால் வடமொழி என்னும் பெயர் வந்தது என்பதைச் சுத்தமா மறப்போம் அல்லது மறைப்போம். (வட வ்ருக்ஷம்=அரசமரம்) வடக்கே இருந்து வரும் மொழி எங்களுக்குத் தேவை இல்லை. ஆனால் அவங்களைப் போல் நாங்க ஒருத்தருக்கொருத்தர் "ஜி" போட்டுத் தான் பேசிப்போம். இது எங்கள் தனி உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஹிந்தியா கற்றுக்கொள்ளச் சொல்றீங்க? நாங்க வடக்கே இருந்து வரும் தொழிலாளர்களை வேலை செய்யச் சொல்லுவோம். நாங்க படுத்துக்கொண்டு சுகம் காண்போம். எங்களுக்கு டாஸ்மாக்கும் இலவச அரிசியும் நூறுநாள் சம்பளமும் போதும். அதற்கு மேல் தேவை இல்லை. பேராசைப்பட மாட்டோம். டாஸ்மாக்கை மட்டும் அரசு மூடிவிடாமல் பார்த்துப்போம். மற்ற எங்கள் உரிமைகளை வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுப்போம். அவங்க உணவு, உடை, கல்யாண சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்துத் தமிழனின் தனித்தன்மையைப் பாதுகாப்போம். நாங்க சுத்தத் தமிழர்கள்!

**********************************************************************************

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆரம்பத்தில் இருந்தே ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுத்து வந்திருக்கின்றன. இது இப்போதைய எதிர்க்கட்சி மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தப்போவும் நடந்தவை தான். ஆனால் அவங்கல்லாம் இப்போ என்னமோ புதுசாக் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தி, சம்ஸ்கிருதம் திணிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். எங்க குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து +2 வரை கேந்திரியவித்யாலயா பள்ளி தான். ஒரே பாடத்திட்டம். ஒரே மாதிரியான விடுமுறைகள் இந்தியாமுழுவதும் இப்படி இருப்பதால் கல்வி ஆண்டில் வருடத்தின் எந்தமாதமும் எந்த நாளும் மாற்றல் கிடைத்தவர்கள் தங்கள் குழந்தைகளைக் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க முடியும். எங்கள் பெண்ணை சிகந்திராபாதில் செப்டெம்பர் மாதமும், சென்னை பட்டாபிராம் கேந்திரிய வித்யாலயாவில் ஜனவரி மாதமும் சேர்த்திருக்கோம். இந்த வசதி அடிக்கடி மாற்றல் ஆகிறவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பதோடு ராணுவ வீரர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஏற்படுத்தப்பட்டது. ஆகவே அந்த அந்த மாநில மொழிகளைக் கற்கக் குறைந்த பட்சமாக 20 பேர் இருந்தால் தொகுப்பூதியம் கொடுத்து ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களை நியமிப்பார்கள். இது புதுசும் இல்லை. சுமார் அறுபது ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்றே. இப்போ இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இதைக் குறித்தத் தெளிவான அறிவு இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது.  மோதியை எப்படியானும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. இந்த அரசின் வெளிப்படைத் தன்மையால் இவை எல்லாம் வெளியே வருகின்றன. இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியவில்லை.