நேற்றே எழுத ஆரம்பிச்சேன். உட்கார முடியலை. போய்ப் படுத்துட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வெளி உலகத்திற்கே செல்லாமல் இருந்துட்டு திடீர்னு போனதாலோ என்னமோ தெரியலை. உடல் அசதி/வலி/நடக்க/உட்கார முடியாமல் பிரச்னை! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இப்போதெல்லாம் அடிக்கடி பதிவுலகுக்கு வர முடியாமல் தான் போகிறது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக முடியலை. 2019 செப்டெம்பரில் அம்பேரிக்கா போகும் முன்னர் போனது தான்! அதன் பின்னர் அங்கே இருந்து வந்த பின்னர் போக முடியாமல் ஆகிவிட்டது. எப்போடா போவோம்னு காத்திருந்தோம். இங்கே உள்ளூரில் உள்ள ரங்குவையே போய்ப் பார்க்க முடியலை. சுமார் ஒன்றரை வருஷங்களாக எங்குமே போகாமல் இருந்துட்டு இப்போத் தான் ஞாயிறு அன்று குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கே போவதுன்னாச் சும்மாவா? பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, மாரியம்மன் மாவிளக்குக்கு மாவுனு எல்லாம் தயார் செய்துக்கணுமே! அதோட கோயிலில் அபிஷேஹம் செய்ய வேண்டிய பொருட்கள், மாலை, பூக்கள், பழங்கள், தேங்காய்கள்னு எல்லாமும் தயாராகக் கொண்டு போயிடணும். அங்கே ஒண்ணும் கிடைக்காது. கிராமம் தானே!
சனிக்கிழமையே காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டுப் பிரசாதங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டேன். மற்ற சாமான்களையும் தயார் செய்து கொண்டு வண்டிக்கும் தொலைபேசிச் சொல்லிட்டு ஞாயிறன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வீடு சுத்தம் செய்தல் போன்ற வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு மாவிளக்குப் போட்டதும் சாப்பிட இட்லி தயார் செய்து அதை அலுமினியம் ஃபாயிலில் வைத்து எடுத்துக் கொண்டு இருவருக்கும் காஃபியும் எடுத்துக் கொண்டேன். அவருக்குச் சர்க்கரை இல்லாத காஃபி எனில் எனக்கு அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தது என்பதால் இரண்டு ஃப்ளாஸ்க்! அதைத் தவிர அவருக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குடி நீர். எனக்குப் பானைக் குடி நீர். அதுவும் தனியாக! எல்லாம் தயார் ஆனதும் வண்டியும் வந்தது. ஒரு பத்து நிமிஷம் தாமதம். ஆனாலும் பரவாயில்லை. கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் கும்பகோணம் வந்தாச்சு. இறங்கலை. அப்படியே நேரே கிராமத்திற்குப் போனோம்.எட்டேகாலுக்குப் போயாச்சு கோயிலுக்கு!
சாமான்களை எல்லாம் இறக்கிவிட்டுக் கோயிலில் போய் மாவிளக்கை வெல்லம் சேர்த்துத் தயார் செய்தேன். வெயில் காரணமாகவும், பாகு வெல்லம் காரணமாகவும் கொஞ்சம் இளகினாற்போல் தான் இருந்தது. இப்போத் தான் ஏத்திடுவோமே, சரியாயிடும்னு நினைச்சால் கோயிலுக்கு திமுதிமுவெனச் சிலர் வந்தார்கள். அவங்க குழந்தை பிறந்து முதல் முதல் குழந்தையை எடுத்துக் கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்திருக்காங்க போல! அபிஷேஹம் தவிர்த்துப் பிரசாதம் எல்லாம் சொல்ல, கடையில் போய் சாமான்களை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் , சுண்டல், எலுமிச்சைச் சாதம்னு தயார் செய்ய ஆரம்பித்தார் பூசாரி. அது சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் அபிஷேஹம் ஆரம்பித்து அலங்காரங்கள் முடிந்து நான் மாவிளக்குப் போடும்போது நெய்யை விடவும் கர்பகிரஹச் சூட்டிலும் வெயில் காரணமாயும் நெய்யும் ஓட ஆரம்பிக்க ஒரு மாதிரிச் சமாளித்துக் கொண்டு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினேன். அங்கேயே நின்று கொண்டிருந்தேன். கீழே இறங்கிக் காமிராவை எல்லாம் எடுத்து வரவில்லை. அதுக்குள்ளே மாவிளக்குத் திரி முழுவதும் முடிந்து மலை ஏறி விடுமோனு பயம்.
அதோடு கர்பகிரஹத்தினுள் நுழையும் படிகளில் ஏறி ஏறி இறங்க முடியலை. யாரானும் உதவி தேவைப் படுகிறது. எல்லாவற்றையும் உத்தேசித்து அங்கேயே நின்றுவிட்டேன். இம்முறை ரொம்ப நடக்கவே முடியாமல் கஷ்டமாக வேறே இருந்தது. வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்து விட்டதால் நடப்பதே புதுமையாகவும் ஆகி விட்டது. எல்லாம் முடிந்து தீப ஆராதனை எடுத்துவிட்டுக் கீழே இறங்குவதற்குள்ளாகப் போதும், போதும்னு ஆகிவிட்டது. வெளியே நின்றிருந்த ஒரு பெண்மணி கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார். இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக மாரியம்மன் கோயிலில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அங்கேயே இட்லி சாப்பிட்டுக் காஃபியும் குடிச்சு முடிச்சு அங்கே இருந்து பெருமாள் கோயிலுக்குக் கிளம்பினோம். பெருமாள் ஊர் ஆரம்பிக்கையிலேயே இருப்பார். ஆனால் முதலில் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு பின்னர் வரணும் என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்தோம். பட்டாசாரியார் பாவம் இரண்டு மணி நேரமாகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத் தான் எங்களுக்கு மதிய உணவு கொண்டுவரச் சொல்லி இருந்தோம்.
பெருமாளுக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களை (மதியத்துக்காக) புளியோதரையும், தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு கருவிலி நோக்கிச் சென்றோம். நாங்கள் சென்ற வண்டி வேறே காலைத் தூக்கி வைத்து ஏற வேண்டி இருந்ததுனா உள்ளேயும் அரை அடிக்கும் மேல் கீழே காலை வைக்கணும். அது வேறே ஒவ்வொரு முறை வண்டியில் இருந்து இறங்கும்போதும், திரும்ப ஏறும்போதும் பிரச்னையாகவே இருந்தது. ஆகவே காமிரா கொண்டு போகாததால் மொபைலில் படங்கள் எடுக்க நினைச்சு மொபைலையும் என் பைக்குள்ளேயே வண்டியில் வைச்சுட்டுத் தான் போனேன். படம் எடுக்க முடியலையே என்று வருத்தம் தான். ஆனால் ஏறும்போதும் இறங்கும்போதும் இருவருக்குமே கஷ்டமாக இருந்ததால் வேண்டாம்னு வைச்சுட்டேன். மாரியம்மனை மட்டும் படம் எடுத்திருந்தேன். அது மட்டும் போடுகிறேன்.
கருவிலி சிவன் கோயிலை முடித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஊரில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கும் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். ஏப்ரல் 2 ஆம் தேதி தான் அந்தக் கோயிலுக்குப் பல வருஷங்கள் கழிச்சுக் கும்பாபிஷேஹம் செய்தார்கள். அந்தக் கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாம். செம்பியன் மாதேவி இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலை இப்போது புனர் நிர்மாணம் செய்தது பரவாக்கரையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்னும் காவல்துறை அலுவலர். பணி ஓய்வு பெற்று வந்ததும் சரித்திரத்திலும் பழமையான கோயில்களிலும் ஈடுபாடு கொண்ட அவர் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டுச் சொந்த ஊரான பரவாக்கரையை விட்டுப் பக்கத்து ஊரான கருவிலிக்கு அருகே உள்ள கூந்தலூரில் தங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வேலைகள் செய்து திருப்பணிகளை முடித்துக் கும்பாபிஷேஹமும் செய்து வைத்திருக்கிறார்.
இந்தக் கோயிலில் சப்தகன்னிகள் இருப்பதாலும் சப்த முனிகள் இருப்பதாலும் இது மிகப் பழமை வாய்ந்த கோயில் என்பது புரிய வந்தது. கோயிலின் படங்கள் கும்பாபிஷேஹ சமயத்தில் எடுக்கப்பட்டவை வந்துள்ளன. அவற்றை எல்லாம் பின் வரும் நாட்களில் ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன். இந்தக் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே நடுவில் பச்சையம்மனும் வலப்பக்கம் மாரியம்மனும் இடப்பக்கம் காத்தாயி அம்மனும் இருந்தார்கள். வெளியே பெரிய மைதானத்தில் (இப்போத் தளம் போட்டுவிட்டார்கள்.) எனக்கு அது தான் கொஞ்சம் வருத்தம். கர்பகிரஹத்தில் கூட கல் தளங்களை அகற்றிவிட்டு டைல்ஸ் போட்டிருக்காங்க. இதனால் அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் விபரங்கள் முற்றிலும் அழிந்து யாருக்குமே தெரியாமல் போய்விடும். இதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. எல்லோருமே அரசியல் தலைவர்கள் உள்பட தமிழன்/தமிழ் தொன்மை வாய்ந்தது. உலகின் மூத்த முதல் குடிமக்கள். தமிழ் தான் முதலில் தோன்றியது என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் தமிழனின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும் விஷயங்களை அடியோடு அழித்துவிட்டு நாகரிகம் என்னும் பெயரில் தேவையற்ற அலங்காரங்களைச் செய்து கோயிலின் புனிதத்தையும் தொன்மையையும் கெடுத்துவிடுவார்கள். பல கோயில்களிலும் திருப்பணி என்னும் பெயரில் இந்தக் கொடுமை தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தொடரும்! படங்களை வலையேற்றிவிட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.