எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 22, 2022

எல்லாம் "திங்க'ற விஷயம் தான்!

இல்லைனா நான் என்ன உபயோகமா ஏதேனும் எழுதப் போறேனா என்ன? ஹிஹிஹி, அதெல்லாம் மறந்து போய் ஒரு வருஷத்துக்கும் மேலே ஆச்சு! பல நாட்கள் பதிவே போடுவதில்லை என்பதோடு போடும் பதிவுகளும் திங்கற விஷயம் தானே! ஆகவே இன்னிக்கும் அதான்.

நம்மவருக்கு இந்த சமையல் யூ ட்யூபெல்லாம் பார்க்கச் சொல்லி யார் சொன்னாங்களோ தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதைப் பார்த்துட்டு ஏதானும் அதே மாதிரிப் பண்ணுனு சொல்லிடுவார். அப்படித் தான் இந்தத் தக்காளி தோசையும். நான் எப்போவும் அடைக்கு ஊறப்போடுகிறாப்போல் கொஞ்சம் கொஞ்சம் பருப்புக்கள் சேர்த்து அரிசி நிறையப் போட்டுத் தக்காளி, தேங்காய்த் துருவலோடு மி.வத்தல், பெருங்காயம் உப்புச் சேர்த்து அரைத்துத் தான் பண்ணுவேன். ஆனால் இந்த யூ ட்யூபில் புதுசாக ரவையில் பண்ணச் சொல்லி இருக்காங்க. அதுவும் தக்காளி, மி.வத்தல் எல்லாவற்றையும் வதக்கி அரைத்துக் கொண்டு. கூடவே மிளகு, ஜீரகமும் வறுத்துச் சேர்க்கச் சொல்லி இருக்காங்க. எனக்கென்னமோ அது அவ்வளவாப் பிடிக்கலை. ஆனாலும் அப்படியே செய்து பார்ப்போம்னு எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொண்டு செய்து பார்த்தேன். தோசை மாவு ரவா தோசை பதத்துக்குக் கரைச்சுக்கணுமாம். ரவா தோசை ஊற்றுகிறாப்போலவே வீசி ஊற்றவும் வேண்டும். மெலிதாக நன்றாகவே வந்தாலும் அந்த மிளகு ஜீரம் வாசனை கொஞ்சம் படுத்தியது. 

வெங்காயம் சேர்க்கலாம் என்றாலும் நேத்திக்கு எங்க அம்மாவின் ச்ராத்தம் என்பதால் நான் சேர்க்கவில்லை. அவருக்கு மட்டும் தனியாகப் போட்டுக் கொடுக்கணும் என்றால் எனக்கு முதலில் வார்த்து எடுத்துட்டுப் பின்னர் சேர்க்கணும். ஆகவே இரண்டு பேருமே வெங்காயம் இல்லாமல் சாப்பிட்டுக்கலாம். இன்னொரு நாள் இது சரியா வந்தால் வெங்காயம் சேர்க்கலாம்னு இருந்துட்டேன். மற்றபடி படங்கள் கீழே. போதும் போதும்னு ஆகி விட்டது. அப்போத் தான் தொலைபேசி அழைப்பு. வாசலில் கூரியர் அரிசி எடுத்துண்டுனு ஒரே தொந்திரவு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்




 மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி

மிளகு ஜீரகம், பெருங்காயத்தோடு 

 தக்காளிகள் நான்கு எடுத்துக் கொண்டேன்.

 மிளகு ஜீரகம், மி.வத்தல், பெருங்காயம், இஞ்சி எல்லாம் வதக்கியது/வறுத்தது


அதே எண்ணெயில் தக்காளித்துண்டங்களைப் போட்டு நன்கு சுருள வதக்கினேன்.

வதக்கியவற்றை மிக்சி ஜாரில் போட்டு நல்ல நைசாக வெழுமூண அரைச்சேன்.


அரைச்ச விழுது



ஒரு தம்பளர் ரவை


 ஒரு தம்பளர் அரிசி மாவு. சேர்ந்து வரதுக்காகக் கொஞ்சம் போல் கோதுமை மாவும், உளுத்த மாவும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டேன். கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.  தக்காளிக் கலவையை அரைக்கும்போதே உப்புச் சேர்ப்பது எனில் சேர்த்துடலாம். நான் கொஞ்சமாக அப்போ உப்புச் சேர்த்துவிட்டு மாவுக்கலவையை உப்புச் சரி பார்த்துக் கொண்டு தேவையானதைச் சேர்த்தேன். கீழே கலந்த மாவு தோசைக்கல்லில் ஊற்றத் தயாராக.


கலந்த மாவு


தோசைக்கல்லில் ஊற்றி இருக்கேன். ரவாதோசைக்கு ஊற்றுகிறாப்போல் ஊற்ற வேண்டும். கொஞ்சம் சின்னதாகவே ஊற்றினேன். எடுக்க வரணுமே. பின்னர் வார்த்ததெல்லாம் கொஞ்சம் பெரிதாகவே வார்த்தேன்.


தோசையைத் திருப்பிப் போட்ட பின்னர். பரவாயில்லை. மெலிதாக முறுகலாக நன்றாகவே வந்தது. ஆனால் மாவு மிஞ்சி இருக்கு. அதை என்ன செய்யலாம் என யோசிக்கிறேன். யோசனை கொடுக்கிறவங்க கொடுங்கப்பா! 


கடைசியிலே கூகிளில் தக்காளி தோசைனு தேடிப் பார்த்தால் ஹெப்பார்ஸ் கிச்சனில் இதே முறைதான் போட்டிருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதலிலேயே பார்க்க மாட்டேனோ? அவசி.

Saturday, February 19, 2022

தாத்தாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து ஜனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். ரெயில் வண்டியின் வேகம், பஸ்ஸின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.


இன்றும் அன்றும்



இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?


அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.


கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும் ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.


ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.


இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.


அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

Friday, February 11, 2022

எத்தனை பேர் அறிவார்கள்?

e shram card 

https://eshram.gov.in/  அரசின் வலைத்தளம்

மேலே உள்ள சுட்டிக்குச் சென்று பார்க்கவும். ஈ ஷ்ரம் கார்ட் எனப்படும் கார்ட் ஒன்றின் நகல் பார்க்கலாம். இது மத்திய அரசு கீழ் நடுத்தர/அல்லது வேலை செய்யும் மக்களுக்குச் செய்து தந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம்.  e-Shram என்னும் போர்ட்டலுக்குச் சென்று அங்கே பதிவு செய்யச் சொல்லி இருக்கும் விஷயங்களையும் தற்சமயம் பார்க்கும் வேலையையும், அதன் உத்தேசமான மாதாந்திர வருமானம், ஆதார் கார்ட், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றைப் பதிய வேண்டும். இவை எல்லாவற்றையும் முறையாகப் பதிந்து எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். இன்னமும் அரசு மூலம் கார்ட் வந்து சேரவில்லை. ஆகவே கார்ட் இணையத்தில் வந்ததைப் பிரின்ட் அவுட் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்திருக்கேன். சமீபத்தில் அவள் கணவரின் உடல்நலக் குறைவைப் பார்த்து விட்டும், அப்போப் பணத்துக்கு அவள் திண்டாடியதைப் பார்த்தும் இதைச் செய்து கொடுத்திருக்கேன். ஆனால் அவள் உறவினர் உதவியுடனும் மற்றும் நாங்களெல்லாம் கொடுத்த சிறு தொகை மூலமும் அதிகம் சிரமப்படவில்லை. 

இந்தக் கார்டை எப்படிப்பட்ட மக்கள் வாங்கலாம்?  எல்லோரும் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்களே! வீடு கட்டும் கொத்தனார், தையல்காரர், வீட்டு வேலை செய்யும் பெண்கள், சிறு வியாபாரிகள், எலக்ட்ரீஷியன், பெயின்டர், ப்ளம்பர் போன்ற சிறு வேலைகள் செய்து அன்றாடம் சம்பாதிக்கும் மக்கள் அனைவரும் இங்கே சென்று பதிந்து கொண்டால் அவர்கள் பெயரில் மேற்கண்ட கார்ட் கிடைக்கும். இந்தக் கார்டை வைத்து அவர்கள் தையல் மிஷின், சைகிள், கார் ரிப்பேர் செய்பவர் எனில் அதற்கான உபகரணங்கள், பெயின்டர் எனில் அதற்குத் தேவையானவை, எலக்ட்ரீஷியன் எனில் அதற்குத் தேவையானவை என வாங்கிக் கொள்ளலாம். அதைத் தவிரவும் ஐந்து லக்ஷம் ரூபாய்ச் செலவு வரைக்கும் வைத்தியப் பொறுப்புக்கும் மத்திய அரசே ஏற்கும். பிள்ளைகளின் படிப்புச் செலவு, மேற்படிப்புச் செலவு போன்றவற்றிற்கும் உதவி செய்யும் அரசு.  இரண்டு லக்ஷம் ரூபாய் வரைக்கும் மருத்துவ இன்ஷூரன்ஸும் கிடைக்கும். இது அனைவருக்கும் போய்ச் சேர்ந்தால் நல்லது என்னும் எண்ணத்தில் பதிவு போட்டிருக்கேன். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கோ அல்லது யாரானும் தெரிந்தவர்களுக்கோ இந்த வலைத்தளம் சென்று பதிவு செய்து கொள்ள உதவி செய்யலாம்.

.தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் ரேஷன் கார்டின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வது மத்திய அரசே. மத்திய அரசின் உணவுத் தொகுப்பில் இருந்து எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மக்கள் தொகை/தேவையின் படி விநியோகிக்கப்படும். இதில் எப்போவானும் அளவு குறைந்தால் "மத்திய அரசு வஞ்சித்துவிட்டது!" எனக் கூப்பாடு போடும் மாநில அரசு இந்தத் தொகுப்பு முழுமையுமே மத்திய அரசால் கொடுக்கப் படுகிறது என்பதைச் சொல்லவே சொல்லாது. எப்போவானும் ஏதேனும் பருப்பு, எண்ணெய், அரிசி எப்போதும் கொடுப்பதில் இருந்து கொஞ்சம் குறைந்தால் (இருப்புக் காரணமாக) அப்போ மத்திய அரசை, " தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி விட்டது" என்பார்கள். அதே போல் 108 ஆம்புலன்ஸும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே மத்திய அரசால் கொண்டுவரப் பட்டு மாநிலங்களில் மக்களுக்குச் சேவை புரிகின்றன. மற்ற மாநிலங்களில் ஆம்புலன்ஸிலேயே இதைப் பெரிதாக எழுதி இருப்பார்கள். ஆனால் இங்கே எழுதவில்லை.  ஆகவே எல்லோரும் நினைப்பது இது மாநில அரசின் நடவடிக்கை என்றே. 

100 நாள் வேலைத் திட்டமும் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப் பட்டது. ஆனால் இதில் நிறைய ஊழல்கள் என்பதோடு மக்களைச் சோம்பேறியும் ஆக்கி விட்டது.  இந்த மக்களை வைத்துச் சாலை போடுதல், பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் 100 நாட்கள் கணக்குக் காட்டிவிட்டு அதற்கான ரேஷனும், பணமும் பெற்றுக் கொண்டு போய்விடுகின்றனர். பெரும்பாலும் இதிலும் கமிஷன்.  ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டமும் இப்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுத் தமிழக மக்கள் பெரும்பாலோர் பயன் பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.  அதே போல் இப்போதைய அரசு சிறு தொழிலதிபர்களுக்கான முத்ரா திட்டமும் பலர் பயன் பெறும்படி உள்ளது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் இதன் மூலம் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம். குறைந்த வட்டி விகிதத்திலேயே பணம் பிடிக்கப்படும். 

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளித் தொழிலில் மேம்படவும் உள்ளாடைகள் உற்பத்தி சிறக்கவும் வேண்டி இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் தங்குமிடம் மற்றும் ஸ்டைபன்டோடு பயிற்சி நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தாலும் அதில் பெரும்பாலும் வடநாட்டாரே பயிற்சி பெறுகின்றனர். தமிழக மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. சிறு தொழில் போன்றவற்றைத் துவக்கவும் தமிழக மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று பெரும்பாலான கட்டுமானத் தொழிலில் வட இந்தியர்களே வேலை செய்கின்றனர். ஏனெனில் குறைந்த சம்பளம் என்பதோடு கடுமையாகவும் உழைக்கின்றனர்.  நம் மக்கள் அதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தையே எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கிராம மக்களும் அவங்க அவங்க கிராமத்தின் சாலைகளையும், பாலங்களையும் நீர்வழிப்பாதையையும் செம்மைப் படுத்திக் கொண்டாலே போதும். மழை நீரும் வடியும். வெள்ளம் தங்காது. கிராமங்களும் மேம்படும். ஆனால் இதெல்லாம் சொன்னால் தப்பு! விரோதம்! சங்கிகள் எனப் பட்டம் கொடுப்பாங்க. மொத்தத்தில் தமிழக நிலைமை மிக மோசமாக இருந்தாலும் ஆங்காங்கே கிடைக்கும் இலவசங்கள் மக்கள் மனதை எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது. 

இப்போ இந்தப் பதிவுக்கு வரும் கருத்துகளும் நான் என்னமோ மோதிக்கு அடி பணிந்து நடப்பதாயும், கட்சி சார்புள்ளவள் என்றும் வரும்.  அது என்னமோ தெரியலை, மற்றப் பிரதமர்களை விட அதிகம் கவனிக்கப்படுவதும், குற்றம் சொல்லுவதும் மோதியைத்தான்.  என்ன வேணா சொல்லட்டுமே!  உண்மை என்றும் உண்மைதானே! விவசாயிகள் பெரும்பாலும் பயன் அடைவதும் உண்மை.  நேரடியாக அவங்க வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படுகிறது. அப்படியும் ஆங்காங்கே கஷ்டப்படுகிறவங்க இருக்கத் தான் செய்யறாங்க. நாம் தான் அனைவருக்கும் இந்த விஷயங்களெல்லாம் போய்ச் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

Sunday, February 06, 2022

தேன்குழல் சாப்பிட வாங்க!

அன்னிக்குத் தட்டைக்குப் பிசைந்த அதே அரிசி மாவு தான். இன்னிக்குக் குஞ்சுலுவுக்குக் கொடுத்தனுப்ப என்று தேன் குழலாகப் பிழிந்தேன். அதுக்கு இந்தத் தேன்குழல் தான் பிடிக்கிறது., அருமையா வந்திருக்கு. ஒவ்வொரு முறையும் நன்றாகவே வருது. முள்ளுத் தேன்குழலும்/ரிப்பன் பகோடாவும் கூடப் பிழிஞ்சிருக்கேன். நன்றாக வருது. ஆனால் தட்டை ஏன் தட்டிப் போச்சு? தெரியலை. 
 


 தேன்குழல் சாப்பிட வாங்க எல்லோருமா!

ஹிஹிஹி, ராத்திரி பதிவு போட்டிருக்கேன்னு எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்குமே! முன்னெல்லாம் போடுவேன். 

Saturday, February 05, 2022

வெள்ளிக்கிழமை விடியும் வேளை கிளம்பினோம்!


அலங்காரம் முடிந்து அம்மன் காட்சி கொடுக்கிறாள். வெளியே மாவிளக்குப் போட்டது கீழே!


நேற்றுக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று தை மாத மாவிளக்குப் போட்டு விட்டு வந்தோம். ஏற்கெனவே மருமகள், மகன், பேத்தியோடு போன மாதம் போனோம். அப்போ மாவிளக்குப் போடவில்லை.  இந்த வருடம் ஆடி மாதம் முழுவதும் நான் படுத்துவிட்டதால் கோயிலுக்கு மாவிளக்குப் போட ஏற்பாடுகள் செய்து வைத்து விட்டுப் பின்னர் போக முடியாமல் போனது மனதில் ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விட்டது. அதன் பின்னர் செப்டெம்பரில் /புரட்டாசி மாதம் கோயிலுக்குப் போய் அபிஷேஹம் செய்து தரிசித்து விட்டு வந்தோம். அப்போவும் புரட்டாசி மாதம் என்பதால் மாவிளக்குப் போடவே இல்லை. அதன் பின்னர் போன மாதம் போனோம்.  மார்கழி மாதம் என்பதால் போடவில்லை.



பொங்கல் கழிந்ததும் எல்லோருமே போகலாம் என நினைச்சிருந்தது பல்வேறு காரணங்களால் கிளம்ப முடியலை. மருமகளையும் அவள் அப்பா வந்து குழந்தையோடு அழைத்துச் சென்று விட்டார். வரும் வாரம் அவங்க மறுபடி நைஜீரியா கிளம்ப வேண்டும் என்பதால் நாங்களும் சரினு இருந்துட்டோம். கடைசியில் மாவிளக்குப் போட நாள் பார்த்ததில் நேற்று நாலாம் வெள்ளியும் அடுத்த வாரம் கடைசி வெள்ளியும் தான் மிஞ்சியது. வெள்ளியன்று கோயிலில் கூட்டம் தாங்காது என்பதால் மாவிளக்குப் போட இடம் கிடைக்கணுமேனு கவலையாயும் இருந்தது. ஞாயிறு பரவாயில்லை என நாள் பார்த்தால் அரசு அப்போ ஞாயிறில் முழு ஊரடங்கு என அறிவித்திருந்ததோடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் தரிசனம் கூடாது என்றும் சொல்லி இருந்தார்கள். பூசாரியிடம் பேசியதில் வெள்ளிக்கிழமை வெளியூர்களில் இருந்து வருவதாகச் சொன்னார்.

சரி, பரவாயில்லை, மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று போக முடியவில்லை. நான்காம் வெள்ளியான நேற்றுப் போகலாம்னு நினைச்சுப் பூசாரிக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அதற்குள்ளாகத் தேர்தல் புண்ணியத்தில் அரசும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டது. என்றாலும் தேதியை மாற்றவில்லை.  நான்காம் வெள்ளியான நேற்றே போகலாம்னு முடிவு செய்தோம். பூசாரியிடம் மறுபடி பேசினதில் கோயிலில் குழந்தைக்கு மொட்டை போட்டுக் காது குத்துவதற்காக ஒரு குடும்பம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவங்க பெரிய இடம் எனவும் மிகப் பெரிதாகக் கொண்டாடப் போவதாகவும் தகவல் சொன்னார். அதோடு நிறைய மக்களும் வெளி ஊர்களிலிருந்தும் உள்ளூர்க்காரர்களும் அன்று அபிஷேஹ ஆராதனைகளுக்கும் மாவிளக்குக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.

கவலையாக இருந்தது. பின்னர் பூசாரியிடம் நாங்கள் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிக் கோயிலுக்கு வருவதாகவும் எங்களுக்குப் பத்தரை மணிக்குள் எல்லாமும் முடித்துக் கொடுக்க முடியுமா எனவும் கேட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார். பையரை அழைத்துப் போவதாக இருந்தது. ஆனால் அவருக்கு அலுவலகத்தில் முக்கியமான 2,3 மீட்டிங்குகள் இருந்ததால் கலந்துக்க முடியாதுனு சொல்லி  விட்டார். ஆகவே பையர் குடும்பம் இல்லாமலேயே நாங்க இருவர் மட்டும் கிளம்பிப் போனோம். நேற்றுக் காலை ஐந்தரைக்கே கிளம்பிட்டோம்.  வண்டி தான் மிக மிக மிக மெதுவாகச் சென்றது. ஓட்டுநரிடம் கொஞ்சம் வேகம் தேவைனு சொல்லியும் அவர் 35 கி.மீக்கு மேல் வண்டியை ஓட்டவில்லை. ஆகவே போகும்போது ஒன்பது மணி ஆகிவிட்டது. பூசாரி தயாராக இருந்தார்.

காதுகுத்துக் குடும்பமும் அங்கே எங்களுக்கு முன்னாடியே வந்திருந்தாங்க. அவங்க குடும்பம் எல்லாம் அங்கேயே வெளிப் பிரகாரத்தில் நாற்காலி, டேபிள் போட்டுக் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தனர். பூஜை சாமான்களுடன் நம்ம ரங்க்ஸ் பூசாரியுடன் முன்னால் செல்ல நான் கொஞ்சம் மெதுவாகச் சென்றேன். வாசலில் டேபிள் போட்டு வரவேற்றுக் கொண்டிருந்த பெண்கள் என்னையும் வரவேற்க நான் கோயிலுக்கு வந்திருப்பதைச் சொல்லப் பரவாயில்லை, குங்குமம், பூ எடுத்துக்குங்கனு சொல்லிட்டு டிஃபன் சாப்பிடவும் உபசரித்தார்கள். மாவிளக்குப் போடும் வரை எதுவும் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு உள்ளே சென்றேன், 

பூசாரி அபிஷேஹத்திற்கான ஏற்பாடு செய்ய நான் மாவைக் கலந்து தயார் செய்தேன். அபிஷேஹம் ஆகி அலங்காரம் முடிந்ததும் மாவிளக்கை ஏற்றினேன். இம்முறை உள்ளே போடவில்லை. படி ஏறணுமே. ஆகவே வெளியேயே அம்மனுக்கு நேர் எதிரே இலை போட்டு மாவிளக்கை வைத்து அலங்கரித்துக் கொண்டு விளக்கையும் ஏற்றினேன்.

மாவிளக்குப் படத்தைப் போடும்போது அதிரடி நினைவு வந்தது. ஒரு தரமாவது நீங்க படம் போட்டால் தான் நம்புவேன் என்றெல்லாம் வம்பு பண்ணுவார். எப்போதும் உள்ளே போட்டதினால் படம் எடுத்தாலும் பளிச்சென வராது. ஒரே ஒரு முறை மின் தமிழ்க் குழுமத்திற்காகப் படம் போட்டிருந்தேன். அதன் பின்னர் படங்கள் எடுத்திருந்தாலும் போட முடியாமல் இருந்தது. இம்முறை வெளியே மாவிளக்குப் போட்டதால் எடுத்துட்டேன்.

பத்தேகால் மணிக்குள்ளாக அனைத்தும் முடியப் பின்னர் நாங்களும் அங்கிருந்து கிளம்பி மற்றக் கோயில்களுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ, கருவிலிக்கோ செல்லாமல் நேரே ஶ்ரீரங்கம் கிளம்பிட்டோம். கையில் இட்லி கொண்டு போயிருந்ததை வண்டியிலேயே சாப்பிட்டோம். வழியெல்லாம் நிலங்களில் அறுவடை முடிந்து இருப்பதைக் காண முடிந்தது. என்றாலும் ஏனோ அதைப் படம் எடுக்கும் மனோநிலை இல்லை. ஓட்டுநர் ஓட்டிய விதத்தில் பத்தரைக்குக் கிளம்பி சுமார் ஒரு மணிக்குள்ளாக ஶ்ரீரங்கம் வ்ந்திருக்கணும். இரண்டே காலுக்கு வந்து சேர்ந்து பின்னர் சாப்பாடு சாப்பிட்டோம்.

Tuesday, February 01, 2022

சும்மா ஒரு ஆ(மா)றுதலுக்கு!

 அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.


அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்தையான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதமாய். இந்தக் குச்சியைத் தான் எடுத்துண்டு போகணும்.  இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!


இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.


அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங்கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.


நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.