எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 31, 2015

ஆனைமலை யோக நரசிம்மரை ஒரு வழியாப் பார்த்தோம்!

முதலில் நாங்கள் சென்றது யோக நரசிம்மரைப் பார்க்கவே. இந்தக் கோயில் மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கு முன்னாலேயே வருகிறது. மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் வடக்கே அழகர் கோயிலும், கிழக்கே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.  இவை இரண்டிற்கும் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது. இது மதுரைப் பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனின் அமைச்சர் மதுரகவி என்ற மாறன் காரியால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் குடவரைக் கோயில் ஆகும்.  இந்தக் கோயிலின் முக மண்டபம் அமைச்சர் மாறன்காரியின் தம்பி மாறன் எயினனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  சுமார் 2,000 வருடங்கள் பழமையானது என்று இந்தக் கோயில் சொல்லப்படுகிறது.

ஆனைமலையை ஒட்டியே இந்தக் கோயில் அமைந்திருப்பதாலும் இது மலையின் கீழ்ப்பாகத்தைக் குடைந்தே கட்டி இருப்பதாலும் இந்தக் கோயிலில் கொடிமரம் கிடையாது. அதோடு விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்தே கொடிமரம் அமைக்கப்படும் என்றும் இங்கே கருவறைக்கு மேல் ஆனைமலை உயர்ந்து காணப்படுவதாலும் கொடிமரம் இல்லை என்கின்றனர்.  நரசிம்மர் தலங்களிலேயே மிகப் பெரிய நரசிம்மர் உருவம் இந்தக் கோயிலில் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  இந்தக் கோயிலை ஒட்டியுள்ள ஆனைமலையில் சமணர் படுகைகள் பல உள்ளன. அவற்றுக்கு எல்லாம் ஏறிப் போவது எங்களால் இயலாத ஒன்று என்பதால் போகவில்லை.:(

நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது தேய்பிறைச் சதுர்த்திப் பிரதோஷ காலத்தில் என்பதால் இங்கே ஒவ்வொரு பிரதோஷமும் மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புத்திர பாக்கியம் வேண்டித் தவம் இருந்த ரோமச முனிவர் இங்கு வந்து இங்கு உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகம் செய்தார். அப்போது நரசிம்மரை அவதார காலத்தில் இருந்தபடியே தரிசிக்க விரும்பிப் பிரார்த்தனை செய்ய உக்கிர நரசிம்மர் ரோமச முனிவர் முன் தோன்றுகிறார்.  அவ்வளவு தான்! சுற்று வட்டாரமே அந்த உக்கிரம் தாங்காமல் தத்தளித்துத் தடுமாறித் தவிக்க, தேவாதி தேவர்களும் முனிவர்களும் பிரஹலாதனைப் போய் வேண்டுகின்றனர்.  பிரஹலாதனும் இந்தத் தலம் வருகிறான்.  ஆனாலும் உக்கிர நரசிம்மரின் உக்கிரம் குறையாமல் இருக்கவே லோகமாதாவிடம் சரண் அடைகின்றனர் அனைவரும்.  மகாலக்ஷ்மியும் சாந்த சொரூபியாக இங்கே வந்து தன் கடைக்கண்களால் நரசிம்மரைப் பார்க்க உக்கிர நரசிம்மரின் உக்கிரம் குறைகிறது. மகாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொள்கிறார் நரசிம்மர். அது முதல் யோக நரசிம்மராகக் காட்சி கொடுத்து பக்தகோடிகளுக்கு அருள் பாலிக்கிறார்.
யோக நரசிம்மர் கோயில் க்கான பட முடிவு


தாயார் நரசிங்கவல்லித் தெற்கு நோக்கி அமர்ந்து  தனியாக சந்நிதி கொண்டிருக்கிறாள்.  கோயிலின் முகப்பில் ஒரு குளம் உள்ளது. உள்ளே சென்றால் ஏகப்பட்ட முன்னோர்கள்.  படம் எடுக்கணும்னு ஆசையோட காமிராவை எடுத்தால் நம்ம கையிலிருந்து பிடுங்குவாங்க போல இருந்தது. முறைச்சு முறைச்சு நம்மையே பார்க்கிறாங்க. சரினு உள்ளே வைச்சுட்டேன்.  வெளியே எடுத்த படம் மட்டும் பகிர்கிறேன். யோக நரசிம்மர் படம் கூகிளார் கொடுத்தது.







கர்பகிரஹத்தின் மேல் கூரையில் ஒரு ஓட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது அது பெருமாளின் கோபாக்னியால் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அழகர் கோயில் கோட்டைச் சுற்றுச் சுவரை இரணியன் கோட்டை என்பார்கள். அங்கேயும் ஒரு யோக நரசிம்மர் நுழைவாயிலில் காணப்படுவார். 

Saturday, March 28, 2015

ஶ்ரீராமன் பிறந்தான்!








ஶ்ரீராமநவமி மிக எளிமையான முறையில் கொண்டாடப் பட்டது.  பாயசம், வடை, பாசிப்பருப்புச் சுண்டல், (மாமியார் வீட்டில் வடைப்பருப்பு வழக்கம் இல்லை)பானகம், நீர் மோர், சாதம், பருப்பு, சாம்பார், ரசம். எல்லாமும் நிவேதனம் செய்து சாப்பிட்டும் ஆகி விட்டது. எல்லா நிவேதனங்களுடனும் படம் எடுக்கலை.  முதலில் படமே வேண்டாம்னு நினைச்சுட்டு எடுக்கலை. அப்புறமாத் தான் ராமரை மட்டுமாவது எடுக்கலாம்னு நினைச்சு எடுத்தேன்.  அப்போப் பானகம் நீர் மோர், வெற்றிலை, பாக்கு, பழம் கீழே இருந்தது.  அதை மட்டும் எடுத்திருக்கேன். இந்த வருஷம் உங்களுக்கெல்லாம் பானகமும், நீர்மோரும் தான். :)))) வடை, சுண்டல் எல்லாம் நாங்களே சாப்பிட்டாச்சு!

ராமருக்குக் கதம்ப மாலை நான் கட்டினேன்.  துளசி மாலையும் கட்ட வாங்கி வைச்சுட்டுக் கட்ட முடியலை.  ரொம்ப நேரம் உட்காரவும் முடியலை. நிற்கவும் முடியலை. வலி வந்துடுது. :(

Thursday, March 26, 2015

மதுரைக்குப் போகாதேடி! அந்த மல்லிப்பூ கண்ணு வைக்கும்?

மதுரைக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கி மீனாக்ஷியை முடிஞ்சபோது பார்த்துட்டு அப்படியே திருப்பரங்குன்றம், அழகர்கோயில், திருவேடகம், திருமோகூர், ஆனைமலை யோகநரசிம்மர் ஆகியோரையும் பார்க்கணும்னு எண்ணம். திருவாதவூரும் அந்த வழியில் தான் இருக்கு என்றாலும் இப்போ அது பட்டியலில் சேர்க்கலை.அதிலும் டிசம்பரில் மீனாக்ஷியைப் பார்க்காமல் திரும்பி வந்ததில் இருந்து மனசிலே ஒரே வேதனை.  மீனாக்ஷியைப் பார்க்கணும்னு ஆவல்.

ஆகவே  இந்த மாசம் போகலாம்னு முடிவெடுத்தோம்.  தங்குவதற்கான ஹோட்டல்களை இணையத்தில் அலசிப் பார்த்து தானப்ப முதலித் தெருவில் ஹோட்டல் கதிர் பாலஸைத் தேர்ந்தெடுத்தேன்.  நல்ல ரேட்டிங் கொடுத்திருந்ததோடு அங்கு தங்கிச் சென்றவர்களின் கருத்துக்களும் நல்லவிதமாக இருந்தது.  இந்த மாதம் பள்ளிக்குழந்தைகளுக்குப் பரிக்ஷை நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் இருக்காது என்பதால் ஹோட்டலில் அறையும் எளிதாகக் கிடைக்கும்.  ஏப்ரலில் பள்ளி விடுமுறை ஆரம்பிப்பதோடு சித்திரைத் திருநாளும் ஆரம்பிக்கும். கூட்டம் தாங்காது.  எல்லாவற்றையும் யோசித்து இந்த மாதமே போய்விட்டு வர முடிவெடுத்தோம்.  அதோட ரங்க்ஸுக்கு மதுரை மாவடு வாங்கணும்னு ஆசை.  இப்போதைய தினத்தை விட்டு விட்டு ஒரு பத்து நாள் தள்ளிப் போனாலும் மாவடு கிடைக்காது.  பத்து நாள் முந்திப் போயிருந்தாலும் கிடைச்சிருக்காது.  திங்களன்று கிளம்பிப் போனால் வார முதல்நாள் என்பதால் அறை கிடைப்பதிலும் கஷ்டம் இருக்காது என்பதோடு கோயிலிலும் கூட்டம் இருக்காது.  ஆகவே திங்களன்று கிளம்பிப் போய் அன்றும், மறுநாளும் மீனாக்ஷியைப் பார்க்கத் திட்டம்.  புதன் காலை கிளம்பி யானைக்கல் மார்க்கெட்டில் மாவடு, பாக்கு இன்னும் வேறே ஏதும் கண்ணில் பட்டால் வாங்கிக் கொண்டு அன்று மதியம் ஶ்ரீரங்கம் திரும்பவேண்டும். இது தான் எங்கள் திட்டம். போறதை யார் கிட்டேயும் சொல்லலை.  அமெரிக்காவில் இருக்கும் எங்க குழந்தைங்களுக்கு மட்டும் தெரியும். உள்ளூரில் நாத்தனார் வந்து தேடப் போகிறாரேனு அவருக்குச் சொன்னோம்.  இணையத்தில் ரேவதிக்கு மட்டும் சொல்லி இருந்தேன்.  இன்னொருத்தருக்குச் சொன்னேன்; அவர் புரிஞ்சுக்கலை.  சரினு விட்டுட்டேன். :) நடக்கப் போவது யாருக்குத் தெரியும்?


ரொம்பவே சந்தோஷத்தோடு  23-ந்தேதி திங்கட்கிழமை காலை திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் எங்குமே நிற்காத திருச்சி--மதுரை பேருந்தில் கிளம்பினோம்.  பேருந்துவில் உட்காரும் இடங்களெல்லாம் கிழிந்து போய்ப் பேருந்தே மிக மோசமான நிலையில் பராமரிப்புக்குக் காத்திருந்தது.  இதிலா போகணும்னு மனசு கேட்டாலும், மற்றப் பேருந்துகளெல்லாம் ஊரைச் சுற்றிக் கொண்டு போகும்.  இது ஒண்ணு தான் பைபாஸில் செல்லும் விரைவு வண்டி.  கிளம்பத் தயாராகவும் இருந்தது. சரி, பார்த்துக்கலாம்னு ஏறிட்டோம்.  ஓட்டுநரும் வண்டியை நல்லாவே ஓட்டினார்.  நாங்க போகையிலேயே ஒத்தக்கடையில் இறங்கி ஆனைமலை யோகநரசிம்மரைப் பார்த்துடணும்னு முடிவு செய்து அதுக்கேத்தாப்போல் கண்டக்டரிடம் சொல்லிப் பயணச் சீட்டும் வாங்கினோம்.

ஒத்தக்கடையில் நாங்க இறங்கின இடத்தருகேயே திருமோகூர் செல்லும் ரஸ்தாவும் இருக்க, அங்கேயும் முடித்துக் கொண்டே மதுரைக்குப் போகலாம்னு முடிவு செய்தோம்.  ஒத்தக்கடையில் காலை உணவு உண்ணும்படியான ஹோட்டல்கள் எதுவும் இல்லை.  ஆகையால் ஒரு  பேக்கரிக்குப் போய்  பிஸ்கட்டுகளும், காஃபியும் வாங்கிக் குடித்துவிட்டு அங்கேயே ஓர் ஆட்டோ பேசிக் கொண்டு யோக நரசிம்மரைத் தரிசிக்க முதலில் சென்றோம். ஆட்டோக்காரர்  இரண்டு கோயில்களும் போயிட்டுக் காத்திருந்து கூட்டி வர 200 ரூ. கேட்டார். சரினு ஒத்துக் கொண்டோம். அதிகம் தூரம் இல்லை என்றாலும் நடக்கவும் முடியாது.  இந்த வழியாவும் அழகர் கோயிலுக்கும் போகலாம் என்றாலும்  இங்கே முடித்துக் கொண்டு அங்கே போவதற்குள்ளாக மதியம் ஆயிடும். அப்புறமா நடை சாத்திட்டா மாலை நான்கு மணி வரை காத்திருக்கணும். ஆகையால் அழகர் கோயிலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலை.

Sunday, March 22, 2015

யாமிருக்க பயமே! :)

ரொம்ப நாள் ஆனதாலே இன்னிக்குக் கணினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். முக்கியமான மடல்களை மட்டும் பார்த்துட்டுச் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை முடிச்சுட்டுச் சும்மாத்தானே உட்கார்ந்திருக்கப் போறோம்னு தொலைக்காட்சியைத் தோண்டிக் கொண்டிருந்தேன். "ஜி" தொலைக்காட்சியில் (ஜி சினிமா இல்லை, அதிலே ஹாப்பி நியூ இயர் படம்) ஜுடாயி ஹிந்திப் படம் ஓடிட்டு இருந்தது.

judaai க்கான பட முடிவு

 ஏற்கெனவே தமிழில், ஹிந்தியில் பார்த்திருந்தாலும் மற்றத் தொலைக்காட்சிகளில் இதை விட அறுவைப் படங்கள்!  சரினு பார்த்துட்டு இருந்தேன்.  அப்புறமாப் படம் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டு வேலை முடிச்சுட்டு மறுபடி தொலைக்காட்சியைப் பார்த்தால் இம்முறை ஜிதமிழ் என்னும் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒரு படம் ஓடிட்டு இருந்தது.  பார்த்தால் நம்மளை மாதிரிப் பேய், பிசாசு எல்லாம் வரும் போல இருந்தது.


சரினு உட்கார்ந்து இவ்வளவு நேரம் பார்த்தேன்.  பேய்னா, பேய்! அப்படிப் பேய்! ஒண்ணில்லை, ரெண்டில்லை, பேய்க்கூட்டமே இருக்கு படத்தில். தங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும் ஊரை விட்டுத் தள்ளி இருக்கும் பங்களாவை வாங்கி ஹோட்டல் நடத்தும் கிரணும், அவன் மனைவியும் அமானுஷ்யமான நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஆட்கள் எனப் பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சந்தேகிக்க, கிரணைப் பிடித்துச் செல்லும் போலீஸ்காரரோ அங்கே புதையல் இருப்பதாகச் சந்தேகப் படுகிறார்.

கிரணின் நண்பனும் ஹோட்டலுக்கு மானேஜருமாக இருக்கும் வாலிபன், அந்த பங்களாவில் பல வருஷங்களாகக் குடி இருக்கும் ஒரு நபரை முதலில் பார்த்துப் பேய் என நினைத்துப் பயந்தாலும் பின்னால் அந்த நபர் பக்கத்தில் படுக்காமல் தூக்கம் வரவில்லைனு தேடிப் பிடிச்சு இழுத்து வந்து படுக்க வைப்பது அத்தனை திகிலுக்கும் நடுவில் நல்ல நகைச்சுவை. அதே போல் கழிவறையில் தலைகீழாகக் க்ளோசெட்டில் கிடக்கும் நபர். பார்த்தாலே திகில். பங்களாவில் பல வருஷங்களாகக் குடி இருக்கும் நபரின் உதவியைக் கொண்டே அந்தப் பேய் அங்கே வரும் அனைவரையும் கொல்லுகிறது என்பதை அந்த நபர் விவரித்த விதம் நல்ல திகிலோடு படமாக்கப் பட்டிருந்தது.

மழையில் நனைந்த அந்த இளைஞனை(பங்களாவில் நெடுநாட்களாய்த் தங்கி இருந்தவர் இளைஞனாக இருந்தப்போ நடந்த சம்பவம்)தலையைத் துடைத்து விடுவதாகச் சொல்லி ஆரம்பத்தில் இதமாகச் செய்து கொண்டிருந்த பேய் பின்னர் சுய உருவம் பெற்று மோத ஆரம்பிப்பதும், "பன்னிக்குட்டி,மூஞ்சி, வெளியே வா, வாடா,வாடானு ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டுப் பார்த்துப் பேயிடம் மாட்டிக் கொள்ளுவதும் மயிர்க்கூச்செறிய வைத்தது என்றால் பொய்யில்லை. இப்போப் பேய் வரும்னு தெரிஞ்சாலும் அதைக் கொண்டு வந்திருக்கும் விதமும், பின்னணி இசையும் திகிலை அதிகப் படுத்தியது.  முடிவில் தான் சொதப்பல். கிரணை  ஏற்கெனவே யாருக்குப் பயந்து ஓடி வந்தாரோ அந்த ரௌடி வந்து மிரட்டுகிறார்.  கிரண்  விற்ற லேகியத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த ரௌடிக்குக் கிரணே பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதலில் கட்டளை போட்டிருந்த அவர் இப்போது இந்த பங்களாவைப் பார்த்ததும், கோடிக்கணக்கில் கிடைக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கிரணிடம் வற்புறுத்தி அதை எழுதி வாங்கிக் கொள்கிறார்.

கிரணையும் அவர் காதலி ஸ்மிதா, ஹோட்டல் மானேஜர் சரத், அவர் தங்கை சரண்யா ஆகியோரை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். அப்புறமாத் தான் கதை முடிவு. அதான் சொதப்பல். சட்டுனு முடிவதால் முடிவைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். என்றாலும் நல்லா வாய் விட்டுச் சிரிக்கவும், திகில் கொள்ளவும் வைத்த படம் இது. மற்றக் காமா, சோமா படங்களுக்கு இது பரவாயில்லை. :) சொல்ல மறந்துட்டேனே, நடிகர்கள் யாரையும் அடையாளம் தெரியலை. மயில்சாமியையும் கிரணை மிரட்டும் ரௌடியாக வருபவரையும் தவிர. :)

Thursday, March 19, 2015

பயணங்கள் முடிவதில்லை! 14

கோவிலுக்கு நாங்கள் சென்றதைப் பற்றிச் சொல்லும் முன்னர் கோயிலைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.  முக்கியமாக இந்தக் கோயிலின் அறநிலையத் துறை ஊழியர் மிகவும் உதவிகரமாக இருந்தார். தேவையான தகவல்களை அளித்ததோடு கூடியவரையும் அதிகப் பணம் செலவு செய்யாமல் இருக்கும்படியான தங்குமிடங்கள், கோயிலின் வழிபாட்டு நியதிகள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறினார். முதலில் அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். இப்போது கோயிலின் வரலாறும் மற்றத் தகவல்களும் பின்வருமாறு::

108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்யதேசம் என்கின்றனர். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். பல நூற்றாண்டுகளாகப் பெருமாள் இங்கே ஆதி ஜகந்நாதர் வடிவில் காட்சி அளிக்கிறார் என்றும் தசரதச் சக்கரவர்த்தி இந்தப் பெருமாளைத் தரிசித்துப் பின்னரே புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பாயசம் கிடைக்கப் பெற்று ஶ்ரீராமரும், லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்கள் பிறந்தார்கள் என்றும் சொல்கின்றனர்.  ஆகவே இந்தக் கோயிலில் தினமும் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அறநிலையத் துறை அலுவலகத்தில் பாயசப் பிரசாதத்துக்கு 50 ரூ கட்ட வேண்டுமோ என நினைத்தோம்.  ஆனால் அறநிலையத் துறை ஊழியர் மடைப்பள்ளியில் பணத்தை நேரிலே கொடுத்து பாயசம் வேண்டும் என முன்பதிவு செய்யச் சொன்னார். மற்றபடி குங்கும அர்ச்சனை செய்கின்றனர். அதற்கு அர்ச்சனை டிக்கெட் வாங்கிக் கொண்டு செய்து கொள்ளலாம்.


இப்போது தலபுராணம்: ஆதியில் படைப்புத் தொழிலைப் பரம்பொருளே செய்து வந்ததாகவும் பின்னரே பிரம்மாவை சிருஷ்டித்ததாகவும் ஐதீகம். அதன்படி பிரம்மா நவபிரஜாபதிகள், இந்திரன் ஆகியோர் பரம்பொருளால் தோற்றுவிக்கப்பட்டனர். பிரம்மனிடம் சிருஷ்டித் தொழில் ஒப்படைக்கப்பட, அதற்காகத்  தெற்கு நோக்கி வந்த பிரம்மாவுக்கு ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது.  ஜோதி மறைந்த இடத்துக்கு வந்து ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்து அறிந்தார் பிரம்மா. அதுவே போத ஸ்வரூபமான போதிமரம் எனப்படும் அரசமரத்தடியில் தங்கிய ஆதிஜகந்நாதன் ஆகும்.

72 சதுர் யுகங்களுக்கு முன்னர் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் இங்கே தவம் செய்ய வந்தபோது இது தர்ப்பாரண்யம் என அழைக்கப்பட்டிருக்கிறது.  தர்ப்பைப் புற்கள் நிரம்பிய திருப்புல்லாணிக் காட்டில் ஆதிப் பரம்பொருளை வேண்டி கடும் தவம் இருந்தனர் முனிவர்கள்.  பெருமான் அவர்களுக்கு அரசமர ரூபத்தில் காட்சி அளித்தார். அதைக் கண்டு மகிழ்ந்தாலும் பெருமாளின் சுயரூபத்தையும் தரிசிக்க ஆசைப்பட்ட ரிஷிகளுக்கு ஆதிஜகந்நாதராகப் பெருமாள் காட்சி அளித்தார். ஆரம்பத்தில் மூலவர் மட்டுமே ஆதிஜகந்நாதராக இருந்த இந்தக் கோயிலில் பின்னாட்களிலேயே தாயாருக்கு சந்நிதி ஏற்பட்டது.  பத்மாசனித் தாயார் என்னும் பெயரில் தாயார் காட்சி அளிக்கிறாள். தசரதன் இங்கே தான் பெருமாளின் அனுகிரஹத்தால் புத்திர பாக்கிய மூல மந்திர உபதேசம் பெற்று ஶ்ரீராமர் உட்பட நான்கு மகன்களைப் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

விமானம் கல்யாண விமானம். உற்சவர் ஶ்ரீகல்யாண ஜகந்நாதர், தாயார் கல்யாணவல்லி. இதைத் தவிரவும் இந்த ஊர் பெருமை பெற்றதன் காரணம் ஶ்ரீராமன் சீதையைத் தேடிக் கொண்டு தெற்கே வந்தபோது இலங்கையை அடைய வேண்டி சமுத்திரத்தைத் தாண்ட வேண்டும்.  அதன் பொருட்டுக் கடலரசனை இங்கே தான் ஶ்ரீராமர் வேண்டினார். அவர் தர்ப்பைப்புற்களால் ஆன படுக்கையில் படுத்து தர்ப்பசயனம் மேற்கொண்டு மூன்று நாட்கள் கடலரசனின் உத்தரவுக்குக் காத்திருந்தார். இலங்கை செல்லப் பாலம் இங்கிருந்தே அமைத்ததால் இந்தத் தலம் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலம். இங்குள்ள சேது பாலம் குறித்து ஆண்டாள், திருமழிசையாழ்வார் மற்றும் குலசேகராழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஒரிசாவிலுள்ள புரி ஜகந்நாதர் பாதி அளவே காட்சி தருவாராம்.  ஆனால் இங்கேயோ ஆதி ஜகந்நாதர் முழுமையாகக் காட்சி தருவதால் இதை தக்ஷிண ஜகந்நாதம் என்றும் அழைக்கின்றனர். இங்கே ஆதி ஜகந்நாதர் அமர்ந்த கோலத்திலும்,  தர்ப்ப சயன ராமர் கிடந்த கோலத்திலும், பட்டாபி ராமர் நின்ற கோலத்திலும்.காட்சி தருவதோடு தொன்மையான அரசமரப்பெருமாளும் காட்சி அளிக்கிறார். இங்குள்ள நாகலிங்கத்தை தசரதன் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லுகின்றனர். குழந்தைப் பேறு வேண்டி வரும் தம்பதியர் இந்த நாகராஜாவுக்கு வழிபாடுகள் செய்கின்றனர்.  சேதுவில் நீராடிய பின்னர் இங்கு வந்து நாகர் சிலைக்கு வழிபாடு செய்து உபவாசம் இருந்து கோயிலில் ஓர் இரவு தங்கி மறுநாள் மீண்டும் சேதுவில் குளித்து நாகப் பிரதிஷ்டை, மற்றும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அதன் பிரசாதமாகப் பால் பாயசம் அருந்த வேண்டும் என்பது நியதி.

ஆனால் இப்போதெல்லாம் கோயிலில் யாரும் தங்குவதை அனுமதிப்பதில்லை என எண்ணுகிறேன். காலையிலேயே மூலஸ்தானத்தில் சந்தான கிருஷ்ணனுக்குக் குங்கும அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர். அதன் பின்னர் சுமார் பத்தே கால் பத்தரை மணி அளவில் மடைப்பள்ளியில் அளிக்கப்படும் பிரசாதமான பால் பாயசத்தை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.  குழுவாக எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தின் விலை 50 ரூபாய் தான்.  அதை ஒருவரே வேண்டுமானாலும் குடிக்கலாம். அல்லது பகிர்ந்தும் உண்ணலாம். 

Sunday, March 15, 2015

பயணங்கள் முடிவதில்லை! 13

இங்கே

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதினதைப் பார்த்தோம். சேது சமுத்திரத்தில் சங்கல்ப ஸ்நானம் நல்லபடியாக பட்டாசாரியார் செய்து வைத்தார். கூடவே அருமையான விளக்கங்களும் கொடுக்கவே பையரும், மருமகளும் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தனர். அதுக்கு அப்புறமா திருப்புல்லாணி ஆதி ஜகந்நாதர் கோயிலுக்குப் போனோம்.  சேதுவிலிருந்து திருப்புல்லாணி போகும் வழியிலேயே இன்னொரு கோவிலும் இருக்கிறது.  காட்டுக்குள்ளே இருக்கு அந்தக் கோவில்.  திருப்புல்லாணியிலிருந்து சேதுக்கரை செல்லும் வழியில் 3வது கிலோ மீட்டரில் உள்ள அந்தக் கோயிலின் பெயர் ஏகாந்த சீனிவாசப் பெருமாள் கோயில் ஆகும்.  இதைக் குறித்த தகவலே இப்போது தான் தெரிய வந்தது.  ஆகவே அந்தக் கோயிலைப் பற்றி பட்டாசாரியார் கூடச் சொல்லவில்லை. :(

சேது ஹிமாசலா என இந்த இடம் அழைக்கப்படுவதாகவும், இங்கிருந்து தான் இலங்கைக்குப் பாலம் அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.  பெரியதொரு ஆலமரத்தின் எதிரே சுற்றிலும் கருவேல மரங்களால் சூழப்பட்டுக் கண்பார்வையில் படாவண்ணம் மறைந்துள்ளது இந்தக் கோயில்.


படம் நன்றி தினமலர் பக்கம்.

தாயார் சந்நிதி கிடையாது இங்கே. சந்நிதிக்கு வெளியே காணப்படும் வெண்பளிங்கினால் ஆன விஷ்ணு சிலையில் சங்கும், சக்கரமும் இடம் மாறிக்  காணப்படுவதாகவும், இந்தச் சிலை சுமார் 80 முதல் 100 ஆண்டுகள் முன்னர் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிலையைச் சுற்றிலும் திருவாசி போல உள்ள இடத்தில் தசாவதாரங்கள் செதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே தான் ஶ்ரீராமனுக்கு அகத்திய முனிவர் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் செய்ததாகவும் சொல்கின்றனர். ஆதித்த்ய ஹ்ருதயத்தை உச்சரித்து வழங்கப்படும் இந்தக் கோயில் தீர்த்தம், துளசிப் பிரசாதம் ஆகியவை சக்தி வாய்ந்தவையாகவும் எப்பேர்ப்பட்ட கடுமையான காய்ச்சலையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டதாகவும் சொல்கின்றனர்.

தற்சமயம் இந்தக் கோயிலைக் கண்டு பிடித்து பாலாலயம் எழுப்பிக் கும்பாபிஷேஹம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்கின்றனர். இயற்கைச் சீற்றங்களிலிருந்து இந்தக் கோயில் தப்பிப் பிழைத்திருப்பதையே ஓர் அதிசயமாகச் சொல்கின்றனர்.

இப்பேர்ப்பட்ட அற்புதக் கோயிலைத் தரிசிக்காமல் வந்தது குறித்து வருத்தமாகத் தான் உள்ளது.  இனி செல்லும் நண்பர்களாவது சேதுவுக்கும் திருப்புல்லாணிக்கும் இடையிலுள்ள இந்தக் கோயிலுக்கும் சென்று வரும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

Tuesday, March 10, 2015

"நிர்பயா" குறித்த ஆவணப்படத்தின் எதிரொலி! :(

கீழே ஜெர்மனியில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவனுக்கு இன்டெர்ன்ஷிப் மறுக்கப்பட்டதைக் குறித்த செய்தியைக் காணலாம்.  சமீபத்தில் கிடைத்த செய்தியின்படி ஜெர்மன் தூதர் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். என்றாலும் இதன் தாக்கம் இதோடு நிற்கப் போவதில்லை.  சுற்றுலாவை முதலில் பாதிக்கும்.  சுற்றுலாப் பயணிகளில் முக்கியமாகப் பெண்கள் நம் நாட்டுக்குச் சுற்றுலா வருவதற்கு யோசிப்பார்கள். அதன் மூலம் கிடைத்து வரும் வருமானம், சுற்றுலாவைச் சார்ந்திருக்கும் தொழில்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.  அந்நிய நாட்டு முதலீடு குறைய வாய்ப்புண்டு.  பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகலாம்.  பொதுவில் உலக அரங்கில் இந்தியாவுக்கு இருந்து வரும் மரியாதை இனிமேலும் இருக்குமா என்பது சந்தேகமே!  இந்தியர்களே இந்தியாவைக் குறித்துக் கேவலமாகப் பேசவும், எழுதவும் இது ஆவன செய்து வருகிறது. முதலில் அனைவரும் அதை நிறுத்த வேண்டும். ஒத்த குரல் கொடுத்து இதை எதிர்க்க அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அது ஒன்றே ஒரே வழி!   இனி கீழுள்ளவற்றைப் படியுங்கள்.



//பிபிசி எடுத்த இனவாத நிர்ப்பயா டாக்குமெண்டரியின் விளைவு வெளிநாடுகளில் எதிரொலிக்க துவங்கியுள்ளது

ஜெர்மானிய பல்கலைகழகம் ஒன்று சம்பந்தமே இல்லாமல் இந்திய மாணவன் ஒருவனுகு இன்டர்ன்ஷிப்பை மறுத்துள்ளது. காரணம் அவன் கற்பழிப்பாளர்களின் தேசத்தில் இருந்து வருவதால்..

"இந்தியா ரேபிஸ்டுகளின் நாடு, இந்திய ஆண்கள் வெறிபிடித்தவர்கள், ஆணாதிக்க பாசிஸ்டுகள்" என தொடர்ந்து பிரசாரம் செய்யபட்டு வருவதன் பலன் இந்த மாணவன் தலையில் விடிந்துள்ளது. ஆனாதிக்க பாசிஸ்டுக்கு யார் தான் இன்டர்ன்ஷிப் கொடுப்பார்கள்?





திரு ஜிஎம்பி அவர்கள்  "நிர்பயா"வைக் கற்பழித்துக் கொன்ற குற்றவாளியைப் பேட்டி கண்டதோ, அதை ஆவணமாக எடுத்ததோ சிறிதும் தவறில்லை என்னும் கருத்தை என் பதிவில் போட்டிருக்கிறார்.  அந்த ஆவணப் படத்தின்  தாக்கம்ஏற்படுத்திய ஒரு சிறு விளைவு குறித்து மேலே பகிர்ந்துள்ளேன்.  இனி வரும் நாட்களில் இன்னும் கேவலமாகவே நடத்தப்படுவோம். இப்போதெல்லாம் குற்றவாளியின் மனோநிலை தான் பாதிக்கப்பட்டவர்களின் மனோநிலையை விட அதிகம் பேசப்படுகிறது.  மனித உரிமை என்றெல்லாம் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு நியாயம் எனப் புரியவில்லை. 

நன்றி செல்வன்.


மின் தமிழ்க் குழுமத்தில் மேற்கண்ட பகிர்வைப் பகிர்ந்தது திரு செல்வன்  K Selvan
K Selvan's profile photo























holyape@gmail.com

Sunday, March 08, 2015

மாதர் "தம்"மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

அகில உலகப் பெண்கள் தினமாம் இன்று. பெண்களுக்கு என ஒரே ஒரு தினம் மட்டுமா? அல்லது இன்றைய தினம் மட்டும் பெண்களுக்கு ஏதேனும் சிறப்புச் செய்யப் போகிறார்களா? ஊடகங்கள் மூலம் பிரபலமான பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நாளும் எல்லா நாளையும் போல் ஓர் நாளாகவே போகப் போகிறது. ஆனாலும் எங்கே பார்த்தாலும் பெண்கள் தினத்துக்கான வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.  இன்று ஒரு நாள் பெண்ணை மதித்தால் போதுமா?  பெண்களை நினைத்தால் போதுமா? பெண் என்பவள் ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, மகளாக எனப் பல அவதாரங்கள் எடுக்கிறாள். இதில் எந்தப் பெண்ணை நாம் போற்றுகிறோம்?  எந்தப் பெண்ணை இழிவு செய்கிறோம்? ஒட்டுமொத்தமாகப் பெண் குலத்தையே தானே.

அதிலும் பெண்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்.   பெண்ணை சக்தி வடிவமாகக் கண்ட பாரதி, பொதுவாக,
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்." என்று கூறிப் போய்விட்டான்.  ஆனால் அவன் கண்டானா என்ன? இன்றைய நவநாகரிக மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்ளும் கேவலங்களில் இறங்குவார்கள் என! அந்தக் காலப் பெண்களைக் கட்டுப்பெட்டியாக இருந்திருக்கிறார்கள் என்றும் தனித்து நிற்கவில்லை என்றும், அவர்களின் சுயம் அழிக்கப்பட்டது என்றும் சொல்லும் இக்காலப் பெண்கள் தாங்களும் அந்தத் தவறையே வேறு முறையில் செய்வதை நினைத்தாவது பார்ப்பார்களா?

உண்மையான பெண் சுதந்திரம் பெண் தன் மதிப்பை இழக்காமல் இருப்பதிலே தான் இருக்கிறது.  ஆனால் இப்போதைய பெண்கள் கொடுமைக்கு எல்லை இல்லை என்பதை நிரூபிப்பவர்களாக ஆகிவிட்டார்கள்.  பல தினசரிகளிலும் பெண்கள் செய்த கொடுமைகள் வெளி வருகின்றன.  ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை திரும்பத் திரும்பச் சொல்வது போல் தொலைக்காட்சித் தொடர்கள். எந்தத் தொடரை எடுத்துக் கொண்டாலும் ஒரு பெண் ஒற்றுமையாக இருக்கும் கணவன், மனைவியைப் பிரிப்பதில் தீவிரமாக இருக்கிறாள்.  கர்ப்பிணியான பெண்ணை மாடிப்படிகளில் இறங்குகையில் சோப்பு நீரை ஊற்றிக் கீழே விழ வைத்து அவள் கர்ப்பம் கலங்கும்படி செய்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் சொத்துக்காகத் தன் கணவனின் கூடப் பிறந்தவர்களையே திட்டம் போட்டு அழிக்கவும் நினைக்கிறாள்.  அதில் வெற்றியும் காண்கிறாள்.  என்னதான் பின்னால் நல்ல முடிவே வந்தாலும் இப்படி எல்லாம் பெண்கள் கீழிறங்கிச் செல்வார்கள் என்று காட்டுவதும், அதில் நடிக்கப் பெண்கள் சம்மதிப்பதும் நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

எல்லாம் பணத்துக்காக.  பணம் வந்தால் போதும்; சுகமான வாழ்க்கை நடத்தினால் போதும்.  அதற்காக எவ்வளவு கீழிறங்கினாலும் பரவாயில்லை  என்று நடக்கும் இந்தப் பெண்கள் தம்மைத் தாமே இழிவு படுத்திக் கொள்வதோடு அல்லாமல் பெண் குலத்துக்கே இழிவு தேடித் தருகின்றனர்.

இது போதாது என்று டெல்லியில் குழுவாகக் கற்பழிக்கப்பட்டு இறந்து போன நிர்பயா என்னும் பெயர் வைக்கப்பட்ட பெண்ணை எவ்வளவு இழிவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இழிவாக பிபிசி சானலில் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் குற்றவாளியின் தரப்பிலும் நியாயம் இருக்கிறதாம்.  என்ன நியாயம்? நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்! பெண்கள் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டும். பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் சண்டை போட்டிருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்கிறான்.  இதுவா நியாயம்? இம்மாதிரி ஒரு கொடுமை இங்கிலாந்தில் நடந்து, அங்கே இந்தியப் படத் தயாரிப்பாளர்கள் சென்று சிறையில் அனுமதி பெற்று ஆவணப்படம் எடுத்திருக்க முடியுமா?

மத்திய அரசு வெளியிடக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பித்தும் வெளியிட்டதோடு அல்லாமல், இன்னமும் பல நாடுகளில் வெளியிடவும் ஆவன செய்கிறார்களாம்.  திட்டம் போட்டு நாட்டின் இறையாண்மையைக் கேவலப்படுத்தும் மனிதர்களா பெண்களை மதிக்கிறார்கள்?  அப்பாவியான ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கற்பிக்கும் உலகத்தோர் இருக்கையில் பெண்கள் தினம் ஒரு கேடா? வெட்கக்கேடு!  இதை விட மோசமானதொரு பரிசு பெண்கள் தினத்துக்கு எவராலும் கொடுத்திருக்க முடியாது! இதை, இந்த அவமானத்தை   இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணும் எதிர்த்து நிற்கவேண்டும்.  அதுவே உண்மையான பெண்கள் சுதந்திரம். பெண்கள் விடுதலை! பெண்ணுக்கு மதிப்பு. 

Saturday, March 07, 2015

பயணங்கள் முடிவதில்லை! 12

இங்கேகடைசியாய் மேற்கண்ட சுட்டியில் படிச்சோம். இரவு நான் படுத்துத் தூங்கினப்புறமா விடுதியின் காப்பாளர் முத்துக்கிருஷ்ண பட்டாசாரியார் அங்கே வந்து பையரையும், ரங்க்ஸையும் பார்த்துப் பேசி இருக்கார்.  மறுநாள் காலை சேதுக்கரை ஸ்நானமும், அங்கே செய்ய வேண்டிய சங்கல்பம் குறித்தும் அவரிடம் விவாதித்து அவரே பண்ணி வைப்பதாகவும், காலை ஏழரைக்குள்ளாக சேதுக்கரைக்கு வந்துவிடும்படியும் கூறி இருக்கிறார்.  காலை ஆகாரம் கிடைக்காது என்றும் காஃபி கூடத் தாமதம் ஆகும் என்றும் சொல்ல, காஃபி இல்லாமல் உயிர்வாழ முடியாதே எனக் கருதிய ரங்க்ஸ் வேறு வகையில் அந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என யோசித்திருக்கிறார்.  அதுக்குள்ளே அந்த பட்டாசாரியாரே கோயிலுக்கு எதிரிலுள்ள இரண்டு கடைகளில் காலை ஐந்து மணிக்கே காஃபி கிடைக்கும் என்று சொல்லி ரங்க்ஸின் வாய், வயிறு இரண்டிலும் காஃபியை வார்த்தார்.

நல்லாத் தூங்கினதாலே என்னமோ எனக்கு சீக்கிரமே விழிப்பு வர ரங்க்ஸ் ஏற்கெனவே எழுந்து கொண்டு காஃபிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.  இவ்வளவு சீக்கிரமாவா, மணி மூன்றரை தானே ஆகிறதுனு நான் சொல்ல, அது இரண்டு மணி நேரம் மெதுவாய்ப் போகுது என்றும் அவர் கைபேசியின்படி அப்போது மணி ஐந்தாகிவிட்டது என்றும் சொல்லிவிட்டு என்னை எழுந்து தயாராகும்படிக் கூறிச் சென்றார்.  நானும் எழுந்து காஃபி குடிக்கத் தயார் ஆனேன்.  ஹிஹிஹி. பையரையும், மருமகளையும் எழுப்பி அவங்களையும் சங்கல்ப ஸ்நானத்துக்குத் தயாராகக் கிளம்பவேண்டி ஏற்பாடுகள் செய்தோம்.  அங்கேயே இருக்கும் இன்னொரு பட்டாசாரியார் வீட்டில் மதியம் சாப்பாடு கிடைக்கும் என்றும் காலை ஆகாரம் கிடைக்காது என்றும் சொன்னார்கள். ஒரேயடியாக ப்ர ஞ்ச் வைத்துக்கொள்ளலாம்னு முடிவு செய்து கொண்டு எல்லோருமே குளித்து சேதுக்கரைக்குப் போகத் தயார் ஆனோம்.

பலரும் தநுஷ்கோடியில் காசியாத்திரை முடிக்கணும்னு நினைக்க, உண்மையில் இங்கே சேதுக்கரையில் தான் முடிக்கணும்னு எல்லோரும் சொல்றாங்க.  எங்களுக்கு அது பற்றி யாருமே கூறாததால் நாங்க தநுஷ்கோடி போய்த் தான் காசியாத்திரையைப் பூர்த்தி செய்தோம்.  திருப்புல்லாணிக்கு 2,3 முறை போயும் சேதுவுக்குப் போகவே இல்லை.  இப்போத் தான் முதல் முதல் சேதுவுக்குப் போகப் போறோம்.  ராமர் சேது பாலம் இருப்பதும் சேதுக்கரையில் இருந்து நாலு மைலுக்குள்ளாக என்றார்கள்.  நாங்கள் சென்ற வண்டியிலேயே சேதுவுக்குச் சென்றோம். கீழக்கரை என அழைக்கப்படுவதும் இதுதான் என எண்ணுகிறேன்.  சேதுவைக் காவல் காத்ததாலேயே ராமநாதபுரம் அரசகுலத்திற்கு சேதுபதி என்னும் அடைமொழி ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தர்பாரண்யம் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஆரம்பத்தில் திருப்புல்லாணி ஆதி ஜகந்நாதப் பெருமாள் கோயிலும், அதை விட்டால் உத்தரகோசமங்கைக் கோயிலும் தான் இருந்திருக்கிறது.  ஶ்ரீராமர் வழிபட்ட பின்னரே ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் தோன்றியதாகச் சொல்கிறார்கள். மிகத் தொன்மை வாய்ந்த ஆதி ஜகந்நாதர் இருப்பது திருப்புல்லாணியில். இருந்து 4 கிமீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. இங்கிருந்து தான் ஶ்ரீராமர் இலங்கை செல்லப் பாலம் அமைத்திருக்கிறார்.

சேதுக்கரையில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.  கடலைப் பார்த்த வண்ணம்  காட்சி அளிக்கும் ஆஞ்சிக்குக் கோயில் சமீபத்தில் தான் எழுப்பப்பட்டிருக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது. அதோடு கரை முழுவதும் ஆங்காங்கே உடைந்த சிலைகள் கிடக்கின்றன. இவை யாரேனும் கொண்டு வந்து போட்டவையா என்ன என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கின்றனர். மிகத் தொன்மையான மஹாவீரரின் சிலை கூடக்கடலுக்குள் கிடப்பதாகச் சொல்கின்றனர். சிலைகள் முழு வடிவம் பெறாததால் அவற்றை வழிபடக்கூடாது என்னும் விதிப்படி நீரில் விடவேண்டும் என்பதற்காகக் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம். அவை காலப் போக்கில் கரையில் ஒதுங்கி இருக்கலாம்.

சேது சமுத்திரம் அமைதியாக இருக்கிறது. அதிகம் ஆழம் இல்லை. அதே போல் எல்லோரும் தநுஷ்கோடிக்கே போவதால் இங்கே கூட்டமும் அதிகம் இல்லை.  நாங்கள் பதினைந்து வருடங்கள் முன்னர் பார்த்த மாதிரியே திருப்புல்லாணி ஊர் இருந்தது.  சேதுவும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.


கடற்கரையில் காணப்பட்ட சில சிற்பங்கள்.










சேதுவில் ஸ்நானம் செய்யக் கடலில் இறங்கும் பக்தர்கள். கூட்டமே இல்லை.




கடலைப் பார்த்த வண்ணம் இருக்கும் ஆஞ்சி கோயில் 


Thursday, March 05, 2015

விருந்து வந்திருக்கு!


நம்ம பால்கனிக்கு வந்த விருந்தாளிங்க. திடீர்னு பார்த்தால் கீச் கீச் சப்தம். திரும்பினேன்.  பால்கனியில் இவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்திருக்காங்க.  பால்கனிக் கதவு உள்பக்கமாச் சார்த்தி இருக்கோம்.  கதவைத் திறந்தால் இவங்க ஓடிடுவாங்க. ஆகவே உள்ளே உள்ள கண்ணாடிக் கதவின் வழியாகவே அப்போக் கிட்டத்தில் கிடைத்த அலைபேசி மூலம் படம் எடுத்தேன்.  எப்படித் தான் தெரிஞ்சுதோ, உடனே ஒவ்வொருத்தரா என்னமோ பேசிட்டுக் கிளம்பிட்டாங்க. அங்கே சாப்பாடு போட்டுப் பார்க்கணும்.



இவங்க தான் வந்தது.  படத்தில் தெளிவாய்த் தெரிய வாய்ப்பில்லை.  தள்ளி நின்று எடுத்தது ஒரு காரணம். இரட்டைக் கண்ணாடிக்குப் பின்னர் நின்று எடுத்தது இன்னொரு காரணம்.  கொஞ்சம் நெருங்கினாலும் பறந்துடுமோனு கவலை.   வரேன் இப்போ. வேலை இருக்கு. மாடியிலே வெங்காய வடாம் காயுது.  போய்ப் பார்க்கணும்.  போன வருஷம் திருட்டுப் போனமாதிரி இந்த வருஷம் போகாமல் இருக்கணும். :)))))

கீழுள்ள குருவிப் படம் கூகிளார் தயவு

Tuesday, March 03, 2015

ரங்குவைப் பார்க்கப் போனேன்!




இரண்டு நாட்கள் முன்னர் தான் மாசித் தெப்பம் முடிந்தது.  நம்பெருமாளும் தன் ஊர் சுற்றலை முடித்துக் கொண்டுக் கருவறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கறார். கிட்டத்தட்ட 2 மாசமாகப் பெரிய ரங்குவைப் போய்ப் பார்க்கணும்னு ஆசை.  ஆனால் வீட்டை விட்டுக் கிளம்புவதே பெரிய விஷயமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அம்மா மண்டபம் ஆஞ்சியைப் பார்க்கப் போகையில் அம்மா மண்டபத்தின் கூட்டத்தை வைத்து ரங்குவைப் பார்க்கப் போகலாமா வேண்டாமா என முடிவு செய்வேன்.  அது மாதிரி ஒவ்வொரு நாளும் இன்னிக்குக் கூட்டம் இல்லை, கிளம்பலாம்னு நினைச்சு முடியாமலே போயிட்டு இருந்தது.

நேற்றும் அம்மாமண்டபத்தில் கூட்டம் இல்லை.  ஆனால் காலம்பர சமையலறையைச் சுத்தம் செய்யும் வேலை வைத்துக் கொண்டதால் குளிக்கும்போதே பதினோரு மணி.  அதுக்கப்புறமா சமையல், சாப்பாடு, ஓய்வுனு முடியலை.  ஆஞ்சியைக் கூடச் சாயந்திரமாத் தான் போய்ப் பார்த்துட்டு ஹெலோ சொல்லிட்டு வந்தேன். சாயந்திரம் போனால் ஆஞ்சி தன்னந்தனியாக இருப்பார். இன்னிக்குக் காலம்பரயே ஆஞ்சியைப்பார்க்கக் கிளம்பினேன்.  வாசலிலே பார்த்தால் சுற்றுலா வண்டிகள் எதுவுமே இல்லை. இரண்டே இரண்டு வான்கள் இருந்தன.  அவையும் கல்யாண மண்டபத்துக்கு வந்தவை போல! அம்மா மண்டபம் உள்ளேயும் கூட்டம் இல்லை.  ஆஞ்சியைச் சுத்தறதுக்கு இடம் இருந்தது.

வந்து நம்ம ரங்க்ஸ் கிட்டே சொன்னேன். சரி, மத்தியானமா கோயிலுக்குப் போகலாம்னு சொன்னாரே தவிர சுத்தமா மறந்துட்டார். சாப்பிடும்போது நான் மறுபடி நினைவூட்டினேன். அதுக்கப்புறமாக் கொஞ்சம் படுத்து எழுந்து சரியா இரண்டரைக்கு எல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிட்டோம்.  மூணரைக்கோ, நாலுக்கோ கிளம்பினால் மூத்த குடிமகன்களுக்கான நேரம் என்பதால் கூட்டம் நிறைய வந்துடும்.  அதோட நாம இளைய குடிமக்கள் ஆச்சே! :) அதுவும் ஒரு காரணம். :)))) கோயிலுக்குப் போகும்போதே பள்ளிக் குழந்தைகள் எங்கோ வெகு தூரத்திலிருந்து சுற்றுலாவாக வந்து கொண்டிருந்தனர். அ வங்களுக்கு முன்னே செல்ல இடம் விட்டு விட்டு நாங்கள் பின்னே சென்றோம். எங்கு பார்த்தாலும் திருப்பணி வேலை மும்முரம்.  ஆங்காங்கே சிமென்ட் கரைசல் ஆறாக ஓட,  அதிலே நடக்க வேண்டி இருந்தது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வெயில் சூடு தாக்காமல் இருக்கப் போட்டிருக்கும் சாக்குத் தரை விரிப்பை எடுத்து விட்டிருந்தார்கள்.

கல் தரைக்கும் சூரியனோட உஷ்ணத்துக்கும் தீ மிதியாகவே இருந்தது.  தீ மிதி மிதிச்சு உள் ஆண்டாள் சந்நிதிக்குப் போனால் அங்கே திறக்கவே இல்லை.  திரும்பி வரச்சே பார்க்கலாம்னு நேரே உள்ளே போனோம். என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்! இலவச சேவையில் கூடக் கூட்டம் இல்லை.  ஆனாலும் நம்ம ரங்க்ஸ் 50 ரூ டிக்கெட் எடுத்தார். எங்களை நேரே குலசேகரன் படி வரை அது கொண்டு விட்டு விட்டது. எங்கேயும் நிற்கலை.  நேரே கருவறை தான். இந்தத் தரம் போகும்போதே யாகபேரரைப் பார்க்கணும்னு ஒரு முடிவோடத் தான் போனேன்.  ரங்க்ஸிடமும் சொல்லி நினைவூட்டினேன். பெரிய ரங்குவின் பாதத்தருகில் அவர் இருப்பாராம். அதையும் கேட்டு வைச்சிருந்தோம்.  உள்ளே போறச்சேயே நம்பெருமாள் நமுட்டுச் சிரிப்போட இன்னிக்கு எனக்கு முக்கியத்துவம் இல்லை போலிருக்கேனு கேட்க, முதல்லே கண்ணிலே பட்டதே நீங்க தானே! னு சொல்லி அவரைச் சமாதானம் செய்துட்டுப் பெரிய ரங்குவின் முகத்தைப் பார்த்தேன்.  குழந்தைகள் எல்லாம் கோவிந்தாப் போட அங்கிருந்த காவல்துறைப் பெண்மணி, "பெருமாள் தூங்கறார். எழுப்பிடாதீங்க"னு செல்லமாக மிரட்டினார். குழந்தைகளுக்கு பட்டாசாரியார்கள் அனைவரும் நிதானமாக தரிசனம் பண்ணி வைத்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

போகும்போது கை நிறைய துளசி பிரசாதமும் கொடுத்து அனுப்பினார்கள். அதுக்கப்புறமா நாங்க உள்ளே போனோம்.  பெரிய ரங்குவின் காலருகே யாகபேரர் நின்று கொண்டிருந்தார்.  அவரைக் குறித்துத் தகவல்கள் அறிய  செல்லுங்கள்.இங்கே. நிதானமாகவே தரிசிக்க முடிந்தது.  திருவிழாக் காலத்தில் போயிருந்தால் நிச்சயம் இப்படி ஒரு தரிசனம் கிடைக்காது. வெளியே வந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டு தாயாரைப் பார்க்கப் போனோம்.  தாயார் சந்நிதிக்கு அழைத்துச் செல்லும் பாட்டரியில் இயங்கும் வண்டியை நிறுத்தி விட்டிருந்தனர்.  பிரகாரங்களில் வேலை மும்முரம்.  அந்த சிமென்ட், ஜல்லி, கற்கள் வேறு காலைக் குத்த, சூடு வேறு தாக்க ஒரு வழியாத் தாயார் சந்நிதிக்குப் போயிட்டோம்.   அவள் எப்போவுமே கருணாமூர்த்தி. நிற்கவோ, காக்கவோ வைச்சதில்லை.  இன்னிக்கும் நேரே உள்ளே போயாச்சு. நிதானமாகவே தரிசனம் இங்கேயும், மஞ்சள், ரோஜாப் பூப் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு சடாரி வைத்துக் கொண்டு வெளியே வந்தோம்.  மற்ற சந்நிதிகள் நாலு மணிக்கு மேல் தான் திறப்பாங்களாம்.

வெளியே வந்தால் உள் ஆண்டாள் சந்நிதியும் திறக்கலை.  நாலரை ஆகும்னு சொன்னாங்க.  நாளைக் காலைப் போய் ஆண்டாளம்மாவைப் பார்த்து என்னம்மா ரொம்ப பிகு பண்ணிக்கிறேனு கேட்டுக்கலாம்னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுக்கு வரச்சே மணி நாலு ஐந்து. கோயிலுக்குப்போயிட்டு வந்ததன் அறிகுறியே அங்கே பிரகாரங்களில் நடந்த நடையினால் ஏற்பட்ட அயர்வு ஒன்றினால் தான் தெரிந்ததே தவிர மற்றபடி மனம் புத்துணர்ச்சியுடனேயே இருக்கிறது.


அருஞ்சொற்பொருள்: 

 ரங்கு= ரங்கநாதர்

பெரிய ரங்கு= பெரிய பெருமாள்

ரங்க்ஸ்= வலை உலகில் குறிப்பாய்ப் பதிவர் உலகில் ரங்கமணி என்றால் கணவனையும், தங்கமணி என்றால் மனைவியையும் குறிக்கும்.  அந்த மாறாச் சட்டத்தின் படி நான் பதிவு எழுதுவதால் எனக்கு என் கணவர் ரங்கமணி என அழைக்க வேண்டும்.  இதே ஆண் பதிவர்கள் எனில் அவங்க மனைவியைக் குறிக்கையில் தங்கமணி என்பார்கள்.  இதையே சுருக்கி ரங்க்ஸ், ரங்கு, தங்க்ஸ், தங்கு, த.ம. என்றெல்லாம் அன்புடன் சொல்லப்படும்.  ஆகவே இங்கே ரங்க்ஸ் என வரும் இடத்திலெல்லாம் என் கணவரையும் ரங்கு, பெரிய ரங்கு என்னும் இடத்தில் எல்லாம் பெருமாளையும் குறிக்கும் என்று அறிக. :)))))