எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 30, 2006

52. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்(தொடர்ச்சி)

"கிக்கா" என்று சொல்லப்படும் ரிஷ்யசிருங்கர் மலையில் இருந்து கிளம்பி நாங்கள் வந்து மடத்தின் அறையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம். பிறகு மறுபடி சாயந்திரம் துங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள சில நதிகள் இத்தனை சுத்தமாக இருக்குமா என்று எண்ணம் தோன்றியது. ஒரு காலத்தில் மிகச் சுத்தமான நதியாக இருந்த கூவம் நதி இப்போது சாக்கடையாக மாறி விட்டது. அது போலப் பெரிய நகரங்களில். எனக்குத் தெரிந்து மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது. அதனால் தான் நமக்கு இறைவன் தண்ணீருக்குக் கை ஏந்தும்படி வைத்திருக்கறான் போலும். எஙகு சென்றாலும் இந்த எண்ணம் தவிர்க்க முடிவது இல்லை. மறு நாள் காலை சிருங்கேரிக்குக் கிழக்கே உள்ள அன்னபூரணி கோயில் இருக்கும் ஹொரநாடு என்ற ஊர் போகக் கிளமபினோம். கார் வைத்துக் கொண்டு போகும்படி சிலர் சொன்னாலும் பஸ்சில் போக ஆசைப்பட்டு பஸ்சில் போனோம். அதிகம் மலைப் பிரதேசங்களில் போக வேண்டி இருப்பதால் நம்ம ஊர் மினி பஸ்ஸை விடச் சிறியதுதான் அந்த பஸ். ஆனால் பஸ்ஸின் நடத்துனர் எங்களுக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த மனிதாபிமான் செய்கை அங்கே எல்லா ஊர்களிலும் காணப்பட்டது. ஊருக்குப் புதியவர் என்றால் முதல் மரியாதை கொடுக்கிறார்கள். பஸ் முழுக்க முழுக்க மலை மேலேயே போகிறது. நல்ல உயரம் 8,000/ அடியில் இருந்து 10,000/அடி வரை இருக்கும்.கொண்டை ஊசி வளைவுகள் 15-க்கும் மேலே. 10 அல்லது 20 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போக முடியாது. அநேகமாக மலைவாழ் மக்களுக்கு இது ரொம்ப வசதியாக இருப்பதால் எல்லா ஊர்களிலும் நின்று ஏற்றிக் கொண்டே போகிறது. மலைவாழ்மக்கள் என்றால் பழங்குடியினர் என்று நினைக்க வேண்டாம். எல்லா ஊர்களிலும் "நவோதயா" பள்ளிகள் காணப்பட்டன. நாம் எதை இழந்தோம் என்று நமக்கு இன்னும் புரியவில்லை. மத்தியானம் 12 மணி அளவில் ஊர் வந்தது. மிகவும் கஷ்டமான பிரயாணம்.கோவில் மூடி இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் திறந்து இருந்தது.வாயிலில் இருந்தே அம்மனைப் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் ஊழியர்கள் கிட்டே போய்ப் பார்க்கச் சொல்லக் கிட்டே போனோம். தங்க அன்னபூரணி நின்றகோ்லத்தில் கையில் அன்னக் கரண்டியுடன் உலகுக்கே உணவு அளிக்கத் தயாராக இருக்கிறாள். அவளின் அந்தக் கோலத்தைப் பார்த்ததும் நம் பசியே போய் விடுகிறது.நிதானமாக ஒரு 10 நிமிஷம் அம்மன் தரிசன்ம் நடை பெற்றதும் பிரசாதம் வாங்கிக்கொண்டோம். பின் கோவில் ஊழியரிடம் கேட்டதில் சாப்பாடு வெளியில் சரியான ஹோட்டல்கள் இல்லை என்றும் கோயிலில் போடுவார்கள் என்றும் சொல்லவே, அங்கே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தோம். திரும்ப நாங்கள் வந்த அதே மாதிரி பஸ் தயாராக இருக்கவே அதிலேயே போக முடிவு செய்தோம். அஙகே ஒரு கடையில் ஏலக்காய், கிராம்பு, காபிப்பவுடர், டீத்தூள் போன்றவை வாங்கிக் கொண்டோம்.பிறகு பஸ்ஸில் ஏறித் திரும்ப சிருங்கேரி வந்தோம். சிருங்கேரியில் நண்பர் ஒருவர் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் நிர்மால்ய தரிசனத்தைப் பற்றிச் சொல்ல மீண்டும் உடுப்பி போக ஆசை வந்தது. ஆகவே மறுபடி உடுப்பி போக நினத்தோம். அதற்குள் ஒரு முறை மறுபடி மஹாஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. மறுநாள் காலை வேளையில் போக முடிவு செய்தோம்.

Monday, May 29, 2006

51. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்

நேற்று ஜனனியின் கவிதையைப் பற்றி எழுதிய பதிவில் திருத்தம் செய்ய நினத்துக் கணினியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஒரே சொதப்பல் பண்ணி விட்டது. புதிதாகப் படிப்பவர்கள் என்னை மன்னிக்கவும். முதலில் நன்றாகத் தான் வந்திருந்தது. அதில் சில வார்த்தைகளை நீக்க நினைத்து மாட்டிக் கொண்டேன். ஒரு நாளே விரயம். ஏற்கெனவே வெளியில் வேறே போக வேண்டி இருந்தது. இது வேறே பழி வாங்கி விட்டது.
******************
துங்கா நதியில் நாங்கள் போன சமயம் அதிகம் தண்ணீர் இல்லை. மீன்கள் மிகப் பெரியவை. மேற்கில் இருந்து கிழக்கே பாயும் துங்கா நதி சரியாகத் தமிழ் நாட்டை வந்து அடைந்திருக்க வேண்டும். அந்த அளவு அதிர்ஷ்டம் நமக்கு ஏது? ஆனால் சற்று தூரம் கிழக்கே போய்ப் பின் வடக்கே போகும் துங்கா ஷிமோகாவிற்குப் பின் பத்ராவைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. ஆகவே சிருங்கேரியில் துங்கா மட்டும் தான். படிக்கட்டுகளில் இறங்கிக் கீழே போனோம். குளிர்ந்த காற்று வீசியது. படித்துறையில் கடவுளை ஆராதிப்போர் மற்றும் மீன்களுக்கு உணவு அளிப்போர் கூட்டம் நிரம்பி இருந்தது. சற்று நேரம் அங்கே செலவிட்டு விட்டுப் பின் மேலே ஏறி "நரசிம்மவனம்" என்னும் ஸ்ரீமஹாஸ்வாமிகள் இருக்கும் இடம் நோக்கிப் போனோம். மிகவும் அதி அற்புதமான இயற்கைச் சூழ்நிலை. அமைதி கோலோச்சி இருந்தது.வேதம் படிக்கும் பையன்கள் மடத்து நந்தவனத்தில் அவர் அவர்களுக்கு இஷ்டமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பாடம் கேட்டுக் கொண்டும் விவாதம் செய்து கொண்டும் இருந்தார்கள். உள்ளே மடத்தின் கூடத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் போனோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் வருபவர் எல்லாரையும் அவர் தம் பேர், ஊர் முதலியன கேட்டுக் கொள்கிறார். யாரையும் விடுவது இல்லை. பக்தர்கள் கூறும் விண்ணப்பங்களையும் செவி மடுக்கிறார். தரிசனம் முடிந்து அறைக்குத் திரும்புகிறோம். மறுநாள் காலை சிருங்கேரியைச் சுற்றி ஆதி சங்கரர் ஸ்தாபித்து இருக்கிற 4 திசைக்கும் காவல் ஆக உள்ள தெய்வங்களை தரிசிக்கக் கிளம்புகிறோம். முதலில் புராதனமான ஒரு சிவன் கோயில். மஞ்சுநாத ஸ்வாமி தான் இங்கேயும். கோயில் மிக உயரத்தில் இருக்கிறது. கூட்டம் குறைவு என்றாலும் பராமரிப்புப் பிரமாதம். அங்கிருந்து காலபைரவர் கோயில்,(ஆதி சங்கரர் நியமித்தது,)கெர்ரெ ஆஞ்சனேயர் கோயில், காளி கோயில், துர்கா பரமேஸ்வரி கோயில் (இங்கு துர்கையின் வலது பக்கம் லிங்க ரூபத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார். எல்லாக் கோயில்களும் மடத்து நிர்வாகம். அவர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவு எல்லாம் மடத்தைச் சேர்ந்தது. யாருமே வெளியில் போய் வேலை பார்க்கப் பிரியப் படவில்லை. மடத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கிறது. எல்&டியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரால் மடம் நிர்வகிக்கப் படுகிறது. ஆதி ஆச்சாரியரின் வழிமுறைகளை மாற்றுவது இல்லை. எல்லாரும் முழுமனத்துடன், செய்வதால் ஒரு புனிதம் நிரம்பி இருப்பது உணரப்படுகிறது.
பிறகு அங்கிருந்து "கிக்கா" எனும் மலைப் பிராந்தியத்தில் உள்ள ரிஷ்யசிருங்கரின் ஆலயத்திற்குப் போகிறோம்.
காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த "ரோமபாத மன்னன்" தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான "சாந்தை"யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக "புத்திர காமேஷ்டி யாகம்" செய்ய அயோத்தி செல்கிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வில்லை. ஆனால் அவர் ஈசனுடன் ஐக்கியம் ஆனதாகச் சொல்லப் படுகிறது.
மேற்குறிப்பிட்ட கோவிலில் லிங்க வடிவில் இருக்கும் ஈசனின் லிங்க பாகத்தில் மான் கொம்புகள் காணப் படுகிறது. அதுதான் ரிஷ்யசிருங்கர் என்றும் அவர் தன் மனைவியையும் மடியில் வைத்துக் கொண்டுள்ளார் என்றும் (ஒரு பெண் உருவம் தெரிகிறது) சொன்னார்கள். ரிஷ்ய சிருங்கருக்கு மான் கொம்புகள் உண்டு. அவர் மனைவி சாந்தைக்குத் தனியாக சன்னிதி இருக்கிறது. நாங்கள் போகும்போது ஈசனுக்கு 11 மணி அளவில் தினம் செய்யும் அபிஷேஹ வேளை என்பதால் சாந்தை சன்னிதியில் மிக நன்றாக அர்ச்சனை செய்து கொடுத்தார் அந்தக் கோயிலின் குருக்களான விஸ்வநாத பட் என்பவர். கோயில் கர்நாடக அரசின் அறநிலையத் துறையின் கீழ் வருகிறது. என்றாலும் அதன் புனிதம் கெடாமல் பாது காக்கப் பட்டு வருகிறது. விஸ்வநாத பட்டும் இன்னோர் குருக்களும் முறை போட்டுக் கொண்டு கோயிலின் பூஜைகள் செய்து வருகிறார்கள்.
திரு விஸ்வநாத பட் சொன்ன கதை இது.
"சாந்தை" தசரதன் மகள் என்றும், தசரதன் தான் ரிஷ்யசிருங்கருக்கு சாந்தையைத் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறுகிறார். ஆனால் சாந்தையின் தாய் கெளசல்யா தேவி இல்லை என்றும் சொன்னார். அவர் என்னிடம் கேட்ட கேள்வி இது தான்'சாந்தையின் தாய் யார்? எனக்குத் தெரியவில்லை. குமரனோ, சிவமுருகனோ, இன்று புதிதாகக் "கடி மன்னன்" பட்டம் வாங்கி உள்ள செல்வனோ தான் வர வேண்டும். ஆராய்ச்சி செய்து சொல்ல. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இன்றும்சிருங்கேரியில் மழை பூரணமாகப் பெய்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து மழை வேண்டி நிறையப் பிரார்த்தனைகள் ரிஷ்ய சிருங்கர் கோயிலுக்கு வருகிறதாம். கோயிலில் சொல்கிறார்கள்.My thoughts

Saturday, May 27, 2006

50. மதுமிதா, எனக்கும் இடம் உண்டா?

என்னுடைய வலைப்பூ அதிகம் அறிமுகம் ஆனது இல்லை. எனக்கு அவ்வளவாக விஷயமும் தெரியாது. அதுவே ஒரு தகுதியாக நினத்துக் கொண்டு கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிவிக்கிறேன். இதைச் சேர்த்தால் 50 பதிவுகள். இது என்னுடைய 50வது பதிவு.

பெயர்:கீதா சாம்பசிவம். ஏற்கெனவே கீதா என்ற பெயரில் ஒருத்தர் இருக்கிறார். பெயர்க்குழப்பம் வராமல் இருப்பதற்காக கணவர் பெயரை இணைத்துள்ளேன்.

வலைப்பூ பெயர்:My thoughts. தமிழ்ப்படுத்த வேண்டும். ப்ளாக்கர் சொதப்பலாலும், இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதாலும் ஒன்றுமே தொடர்ந்து செய்ய முடியவில்லை.

சுட்டி: sivamgss.blogspot.com

ஊர்: தருமமிகு சென்னை


நாடு: பாரதத்திருநாடு

அறிமுகம்:ப்ளாக் பற்றி ஏற்கெனவே பல புத்தகங்களில் படித்ததுண்டு. இருந்தாலும் போன வருடம் கணினி வாங்கிய பிறகு ஒருநாள் தினமலரில் துளசியின் பதிவு பற்றிப் படித்தேன். அதுதான் தொடக்கம்.

முதல் பதிவு: தமிழில் ஏப்ரல் முதல் தேதியா? சரியாக நினைவில் இல்லை. பார்க்கிறேன்.

எத்தனை பதிவு: இதைச் சேர்த்தால் 50 பதிவு வரும்.

இதன் சுட்டி: தெரியாது

ஏன் ஆரம்பம்: புலம்பத்தான். பின் பாதை மாறினேன். புலம்பல்கள்னு பேர் வச்சிருக்கணும்.

அனுபவம்: எல்லாருடைய பதிவிலும் போய்ப் பின்னூட்டம் இட்டது. ஆன்மீகப் பதிவுகளைத் தவிர. ஆன்மீகம் எழுதறவங்களைப் பார்த்தால் அவங்க எழுதற மாதிரி நம்மளால் முடியலியேங்கற பொறாமைதான், வேறே என்ன?

நண்பர்கள்; எதிரிகளே கிடையாது. எல்லாருமே நண்பர்கள் தான். அந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலி நான்.

கற்றவை: இ-கலப்பையால் தமிழ் எழுதப் பழகினது. இது ஒரு புது அனுபவம். ஆனால் இன்னும் வெட்டி ஒட்டும் வேலைதான் செய்கிறேன். யாராவது நிபுணி, அல்லது நிபுணன் கிடைத்தால் முதலில் பதிவில் நேரேயே எழுத வழி கேட்கணும்.

எழுத்தில் சுதந்திரம்: இப்போ நான் எழுதுவது எல்லாம் நீங்க படிக்கிறீங்களே. இது தான். உங்க தலை எழுத்து. என் அதிர்ஷ்டம் மற்றும் சுதந்திரம்.

இனி செய்ய நினைப்பது: சிருங்கேரி பத்தின பதிவு பாதிலே விட்டிருக்கேன் முடிக்கணும். ரெயில் பத்தி இன்னும் முழுசா எழுதலை. அதையும் சீக்கிரம் முடிக்கணும். எங்கே, நாளைக்கு எழுதவே முடியாது. இன்றே இரண்டு ஆகி விட்டது.

இனி செய்ய நினைப்பது.: இன்னும் வேகமாக இ.கலப்பையை உபயோகப் படுத்தினால், முத்தமிழ்க் குழுமத்திலும் தினம் கலந்து கொள்ள முடியும். இப்போ ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் முடியுது.

முழுமையான குறிப்பு: சொல்ல ஒன்றுமே இல்லை. சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை. சாதனை
மனுஷி இல்லை.

இன்னும் சொல்ல நினைப்பது: எதுவுமே இல்லைங்க. உங்களுக்குத் தெரியாததா?

49. ஜனனியின் கவிதை

%uஒரு மாறுதலுக்கு என் அண்ணாவின் பெண் ஜனனி எழுதிய கவிதை.+2 முடித்திருக்கிறாள். பத்திரிகைத்துறையில் சாதிக்க எண்ணம். பள்ளியில் படிக்கும்போது மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். மேடையில் தலைப்புக் கொடுத்தால் உடனே கவிதை எழுதும் ஆற்றல் உண்டு. இதில் இருந்தே தெரியுமே என்னைப் போல இல்லைனு. இந்தக் கவிதை சமீபத்தில் ல்கணவனை இழந்த என் கடைசி நாத்தனாரை நினைத்து எழுதப் பட்டது. அவளையும் அத்தை என்றேகூப்பிடும் ஜனனி எழுதிய கவிதை இது.
கண்ணீர்ப்பூக்கள்
கண்களில் கண்ணீரின் தேக்கங்கள்மனதில் உணர்ச்சிகளின் தேக்கங்கள்என் கணவன் இறந்ததை நினைத்துஅணைத்துக் கொள்ளப் பிள்ளைகள் இல்லைஆறுதல் சொல்லக் கணவனும் இல்லைபூவும் பறி போனது என்னவர் தம்பரிவும் பறி போனதுயாரைதேடி நான் போவதுகுந்திக்குப் பஞ்ச பாண்டவர்கள் இருந்தார்கள்ஆள ஒரு ராஜ்ஜியம் இல்லை.எனக்கோ ராஜ்ஜியம் இருந்தும் ஆளஅவர் இல்லையேபாலைவனமானது என் வாழ்க்கை ஆறுதல் சொல்ல உறவுகள் வரலாம் ஆனால்ஆதாரமான அவர் இல்லையேஇருவரும் ஒன்றெனக் கலந்து வாழ்ந்தோம்ஓருயிர் இங்கே ஒருயிர் அங்கே என்றானதுசாலையோர மரம் கேட்டால் என்ன சொல்வேன்நம் வீட்டு ரோஜா கேட்டால் என்ன சொல்வேன்?தூக்கமும் வரவில்ல என் துக்கமும் குறையவில்லைஎன் திலகம் அழிந்து விட்டது என் தலையும் சாயாதோ என்கிறது மனம்வருகிறேன் நானும் வருகிறேன் நீங்கள் இல்லாத மலர்ச்சோலை எனக்குப் பாலைவனம்தான்நீங்கள் இல்லாத விடியல்கள் எனக்குஇருள்கள் தான்நீங்கள் இல்லாத உலகம் எனக்கு நரகம்தான்நீங்கள் இல்லாத வாழ்க்கை எனக்குஇறப்புத் தான்இதோ என் உயிரும் உங்களைச் சேரட்டும்

Thursday, May 25, 2006

48. அனுபவம் புதுமை.-2

My thoughtsஒரு வழியாகத் தலைதீபாவளி முடிந்து நாங்கள் இரண்டு பேரும் சென்னைக்குப் போனோமா, அதன் பிறகு ஒரு வருடத்திற்குப் பின்னால் என் பெண் பிறந்தாள். நான் அதற்காக மதுரை வந்து விட்டேன். அப்போது எல்லாம் பிரசவ விடுமுறை என்பது வெறும் 2 மாதம் தான். இப்போ போல 6 மாதம் எல்லாம் கிடையாது. ஆகவே நான் 2மாதம் முடிந்ததும் உடனே சென்னை திரும்பி வேலையில் சேரவேண்டும். 61-வது நாள் வேலையில் இருக்க வேண்டும். ஆகவே என் கணவர் என்னை வரச்சொல்லவும் ஆரம்பித்தது பிரச்னை. என் மாமனார் ஒரு நாள் பார்க்க, என் அப்பா ஒரு நாள் பார்க்கக் கடைசியில் என் கணவர் வேறு ஒரு நாள் முன்னதாகப் பார்த்து நேரே சென்னைக்கு வரும்படியும், கிராமத்தில் அபோது என் மாமியார் இல்லாத காரணத்தாலும், தற்சமயம் அவசரம் என்பதாலும் சென்னைக்கு நேரே வரச் சொன்னார். நாங்களும் சரி என்று அதே கொல்லம் எக்ஸ்பிரஸில் சென்னை செல்ல டிக்கெட் எடுத்தோம். பகல் நேரம் என்பதால் இரவு 7 மணிக்குள் சென்னை போய் விடலாம் என்று நினைப்பு. அப்போது ரெயில் காலை 6 மணிக்குக் கிளம்ப வேண்டும். ஆனால் கிளம்பவே இல்லை. அது மனதுக்குள் ஹா, ஹா, ஹா, என்று சிரித்திருக்கிறது. என் பெண்ணும் அப்போது சிரிக்க ஆரம்பித்திருந்தாள். ஆகவே நாங்கள் எல்லாரும் மெய்ம் மறந்திருந்தோம். வீட்டிற்கே முதல் பெண் குழந்தை. எனக்குப் பிறகு எங்கள் அப்பா வழியில் பெண்களே கிடையாது. என் பெரியப்பா(சித்தப்பாவே இல்லை அப்பா வழியில்) பெண்கள் இருவருக்கும் பையன்கள் தான். ஆகவே அவள் அழுதால் கூட எல்லாரும் சேர்ந்து அழுவோம். அந்த அமர்க்களத்தில் வண்டி கிளம்பவில்லை என்றே கவனிக்கவில்லை. வழி அனுப்ப என் தம்பி வந்திருந்தான். அவன் விளையாட்டாக இஞ்சின் போடவில்லை, சித்தரஞ்சன் போயிருக்கிறார்கள் என்றான். அப்போது திடீரென்று வண்டி கிளம்பிப் பின்னாலே போனது. சரி, பின்னாலே போய்ப் போகலாம் என்றாலும் மதுரை ஸ்டேஷனில் வழியே இல்லையே. குழம்பினோம். கடைசியில் சில அதிகப்படியான பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு வழியாக ஒரு மணி நேரம் தாமதமாக வண்டி கிளம்பியது. அப்போதே என் பெண் நினைத்து விட்டாள். நாம் எழும்பூரில் எல்லாம் போய் இறங்கக் கூடாது. நம் அப்பா இந்திய அரசின் பாதுகாப்புக் கணக்குத்துறை அதிகாரி. நாம் இறங்கினால் செண்ட்ரல் மாதிரி பெரிய ஸ்டேஷன்தான் போக வேண்டும் என்று. அது தெரியாமல் நாங்கள் பாட்டுக்கு ஜாலியாகப் பேசிக்கொண்டு வந்தோம். ஒரு மணி நேரம் தாமதத்தையும் ஈடு செய்து வண்டி சரியான சமயம் விழுப்புரம் வந்தது.
அப்பாடா, இன்னும் சற்று நேரம் தான், சென்னை வந்து விடும். நாளை ஞாயிறு, வீட்டில் இருந்து விட்டுத் திங்கள் அன்று வேலையில் சேரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். மறுபடி வண்டி கிளம்பவில்லை. இம்முறை என்ன ஆயிற்று? பெட்டி ஏதானும் பெரம்பூரில் இருந்து வர வேண்டுமா என்று கேலி பேசிக் கொண்டு அங்கே நடைமேடையில் நின்றிருந்தவரைப் பார்த்துக் கேட்டோம். ஏன் வண்டி கிளம்பவில்லை என்று? அவர் சொன்னார் "வண்டி இப்போது கிளம்பாது" என்று. ஏன் என்றோம். அதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர், வண்டியின் டிரைவர், கார்டு மூன்று பேரும் பேசிக் கொண்டு வருவது கண்ணில் பட்டது. உடனே அம்மா கத்தக்கத்த கீழே குதித்தேன். அவர்களிடம் போய் விவரம் கேட்டேன். அது டிசம்பர் மாதம். தமிழில் கார்த்திகை. நல்ல மழை நாள்.
டிரைவர் சொன்னார் "வெட்டாறு உடைத்துக் கொண்டது" அதனால் தண்டவாளம் எல்லாம் தண்ணீர். மெயின் லைனில் போன வண்டி எல்லாம் திரும்பித் திருச்சி போகிறது. ஆகவே இந்த வண்டி போக வழியும் இல்லை, வெள்ளமும் அதிகரிக்கிறது" என்றார். உடனே அப்பாவிடம் சொல்ல ஒரு நிமிஷம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மறுபடி நானே போய் மாற்று ஏற்பாடு ஏதாவது உண்டா என்று கேட்க அவர்கள் எங்கள் வண்டி திருச்சிக்குத் திரும்பப் போவதாகவும், அங்கே போய்த் தான் கேட்க வேண்டும் என்றும் சொன்னார். இதற்குள் மற்றொரு உடைப்பின் மூலம் விழுப்புரம்-திருச்சி கார்டு லைனிலும் தண்ணீர் என்று தகவல் வந்து விட்டது. அறிவிப்புப் பலகையில் கொட்டை எழுத்தில் இஷ்டம் உள்ளவர்கள் திருச்சி போகலாம் என்றும், அங்கே போய் மாற்று ஏற்பாடுகள் செய்யத் தகவல் கொடுப்பதாகவும் அறிவிப்புச் செய்தார்கள். மைக் மூலமும் அறிவிப்பு வந்தது. எங்கள் வண்டி திரும்பத் தயாராக இருந்தது. வழியில் எல்லாம் தண்ணீர் என்பதால் முன்னால் பைலட் வண்டி,, பின்னால் முதலுதவி வண்டி எனப் பின் தொடர எங்கள் ஊர்வலம் ஆரம்பித்தது. (அப்போதே பாருங்கள், எனக்கு எவ்வளவு ராஜ மரியாதை, பின்னாளில் நான் வ.வா.சங்க நிரந்தரத் தலைவலி ஆகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டார்கள்.)வழியெல்லாம் மக்கள் கூட்டம், நிஜமாகவே. சிலர், நாளை தினத்தந்தியில் 3,000/- பேர் சாவு என்று வரப் போகிறது பார் என்றும் கத்தினார்கள். அஞ்சா நெஞ்சங்களான அந்த வண்டியில் இருந்த நாங்கள் யாரும் கவலையே படவில்லை. என் பெண்ணிற்கோ அப்போத்தான் விளையாட நல்ல மனசும் வந்தது. தொந்திரவு கொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தாள். சாயந்திரம் 5 மணிக்கு விழுப்புரத்தில் லிருந்து கிளம்பிய வண்டி இரவு 12 மணிக்குத் திருச்சி போய்ச் சேர்ந்தது. திருச்சியில் கால் வைக்க இடம் இல்லாமல் கூட்டம். மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் திரும்பிய எல்லா வண்டிக் கூட்டமும் இருந்தது. அந்தக்கூட்டத்தில் எங்களை நாங்கள் தொலைக்காமல் இருந்ததே பெரிய விஷயம். மாற்று வண்டி பற்றி விசாரித்தோம். இரண்டு வண்டிகள் பிராட்கேஜில் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் முதலில் பதிவு செய்யப்பட்டவர்கள் எழுதி வாங்கலாம் எனவும் சொல்லவே, நானும் அப்பாவும் போய் எழுதி வாங்கி வந்தோம். அப்பா என்னுடன் ஒரு போர்ட்டர் வைத்து, அம்மா குழந்தையுடன் போய் ஏறும்படியும் தான் ஏதாவது சாப்பிட வாங்கி வருவதாகவும் சொன்னார். சரி என்று நாங்களும் போனோம். என்னுடைய சூட்கேஸ், மற்ற சாமான்களைப் போர்ட்டர் எடுத்துக் கொள்ள நான் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டேன். போர்ட்டரின் பின்னால் வேகமாகப் போனேன். எங்கள் வண்டி இருக்கும் நடைமேடைக்கு அருகில் வந்து பார்த்தால் திடீரென்று போர்ட்டரைக் காணவில்லை. அம்மா அபோது தான் மெதுவாக வந்தார். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும் பதறி விட்டார். ஏனென்றால், என்னுடைய நகை, வெ.பா, மற்றும் குழந்தை நகை, பட்டுப்புடவைகள் எல்லாம் ஒரே சூட்கேஸில் இருந்தன. நல்ல காலம் சூட்கேஸில் என் கணவர் பெயர் இருக்கும். அப்பா வருவதற்குள் இடத்தைக் கண்டு பிடித்து மிகுதி சாமான்களுடன் அம்மாவை உட்கார வைத்து விட்டு அங்கே என்கொயரியில் இருந்தவரிடம் விஷயத்தைச் சொன்னதும் முதல் நடை மேடைக்குத் தகவல் சொல்லி ரெயில்வே போலீஸை வரவழைத்தார். அவரிடம் போர்ட்டரின் அடையாள எண், மற்றும் அவரின் அடையாளம் எல்லாம் சொன்னேன். உடனே அப்போது வழக்கத்தில் இருந்த வாக்கி-டாக்கியில் விஷயம் போய் வெளியில் ஒரு வண்டியில் சாமானைப் போர்ட்டர் ஏற்றும்போது கண்டுபிடித்துவிட்டார்கள். அவன் வெளியில்தான் வரச் சொன்னார்கள் என்று சாதிக்க அவனை அழைத்துக் கொண்டு நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். இதற்குள் அப்பாவும் விஷயம் தெரிந்து வரவே எங்கள் இருவரையும் பார்த்த போர்ட்டர் பதில் சொல்ல முடியாமல் நின்றான். பிறகு பெட்டியை உள்ளே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் கொண்டு போய்ப் பெட்டியில் உள்ள சாமான் லிஸ்ட் கேட்டார்கள். நான் சொல்லவே பெட்டிச் சாவியைக் கொண்டு என்னையே திறக்கச் செய்து சரி பார்த்து அனுப்பினார்கள். ஒரு வழியாகத் திருச்சியை விட்டுக் காலை மூன்று மணிக்குக் கிளம்பின வண்டி சாயந்திரம் 6 மணிக்கு சென்னை செண்ட்ரல் வந்தது. அதற்குள் என் கணவரும், என் அண்ணாவும் யார் மதுரை போய்ப் பார்ப்பது என்று குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது எல்லாம் தொலைபேசி வசதி நடுத்தரக்குடும்பங்களில் அபூர்வம். அதற்குள் 10-வது முறையாக எழும்பூரைத் தொடர்பு கொண்ட என் தாய் மாமா இந்த மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் பார்த்து விட்டு வரவில்லை என்றால் இரவு என் அண்ணா மதுரை போய்ப் பார்க்கட்டும் என்று சொல்லி இருக்கிறார். பெரியவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இருவரும் எதற்கும் பார்க்கலாம் என்று செண்ட்ரல் வந்திருந்தனர். வண்டியில் இருந்து இறங்கியதும் என் கணவரின் அசாதாரண உயரத்தில் இருந்தே அவர் வந்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன். அப்போது எழுந்த எங்கள் உணர்ச்சிகளுக்கு என்ன சொல்வது? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது தான் பொருந்தும். இன்னும் இருக்கிறது. எங்கள் டிரான்ஸ்பரில் நாங்கள் ஊர், ஊராகப் போனது எல்லாம். கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். அப்போது தான் பதிவு எண்ணும் கூடும். என்ன சொல்றீங்க? இல்லாவிட்டால் பதிவு தமிழில் எழுத ஆரம்பித்து 2 மாதம் கூட இல்லை. 48 பதிவு போட்டு விட்டேனே? இப்படியாகத்தானே என் பெண் தான் முதலில் வரும்போதே பெரிய ஸ்டேஷனில் தான் இறங்கி வருவேன் என்று பிடிவாதம் பிடித்து ரெயிலிடம் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறாள்.

Wednesday, May 24, 2006

47. அனுபவம் புதுமை

இன்றைய செய்தித் தாளில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதைப் பற்றிப் பார்க்க நேர்ந்தது. எனக்கு உடனேயே எங்கள் ரயில் பிரயாணங்கள் நினைவுக்கு வந்தது. ரயில் பிரயாணத்தில் என்ன புதுமை என்று கேட்பவர்களுக்கு அதை விவரித்துச் சொன்னால் தான் புரியும்.

முதன் முதலில் நான் சென்னை வந்து பாங்க் வேலைக்கு அனுமதித் தேர்வு எழுதி விட்டு, நேர்முகத் தேர்வும் பங்கு பெற்று விட்டு மதுரை திரும்ப வேண்டும். அப்போது எனக்கு அதிகம் வயதும் ஆகவில்லை. இருந்தாலும் சூழ்நிலையை யோசித்து என்னுடைய பெரியப்பா (அப்பாவின் அண்ணா) என்னைத் தனியாக அனுப்ப உத்தேசித்தார். பெரியப்பா திருமணம் செய்து கொள்ள வில்லை என்பதால் நான் என் அம்மாவின் தங்கையுடனே தியாகராய நகரில் தான் தங்கி இருந்தேன். சித்திக்கு மூன்று பையன்களும் பள்ளிக்குச் செல்பவர்கள். ஆதலால் துணைக்கு யாரும் வரமுடியவில்லை. காலை எழும்பூரில் இருந்து கிளம்பும் கொல்லம் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுத்துப் பெரியப்பா ஸ்டேஷனுக்கு வந்து என்னை அனுப்பி வைத்தார். இரவு நேரம் கடந்து போனாலும் அதிக பக்ஷமாக 9 மணிக்குள் போய் விடும். அப்பா வந்து கூட்டிப் போய் விடுவார். இல்லையென்றாலும் பயம் இல்லை. திருச்சி வரும் வரை ஒழுங்காக வந்த வண்டி திருச்சி டவுன் ஸ்டேஷனில் இருந்து வெகு நேரம் கிளம்பவே இல்லை. நான் இருந்தது பெண்கள் பெட்டி. ஒரு வயதான அம்மாவைத் தவிர யாருமே இல்லை. நேரம் செல்லச் செல்ல என்ன செய்வது என்று புரியவில்லை. சீக்கிரம் வீடு போகலாம் என்று ஒரு வேளைக்கு மட்டும் சாப்பாடு எடுத்து வந்தது. பக்கத்தில் உள்ள கார்டு வானில் இருந்த கார்டிடம் போய்க் கேட்டதில் முன்னால் சென்ற கூட்ஸ் வண்டி தடம் புரண்டதாகவும் அது முழுக்கச் சரியாகி வழி கிடைத்ததும் தான் வண்டி கிளம்பும் என்று சொன்னார். மேற்கொண்டு விபரம் கேட்டு விட்டு அவரே எனக்குச் சாப்பாடு வரவழைத்துக் கொடுத்தார். துணைக்கு யாரு ம் இல்லாமல் தனியாக உட்கார வேண்டாம் என்று பொதுப் பெட்டியில் போய் உட்காரவும் வைத்தார். அப்போதே இந்த ரெயில் என்னிடம் "இரு, இரு, உனக்கு வச்சுக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறது. எனக்குப் புரியவில்லை. என்ன இருந்தாலும் அப்போது நான் குழந்தை தானே!!!!!!!!!!!!! அதற்குப் பிறகு வண்டி எடுத்து மதுரை போய்ச் சேரும் போது மறுநாள் காலை 4 மணி.இப்படி ஆரம்பித்த அனுபவம் தொடர்ந்தது.

திருமணம் ஆகி முதன்முதல் தனிக்குடித்தனம் வைக்கச் சென்னை வந்த போது கிராமத்தில் இருந்து (புக்ககம்) கும்பகோணம் வந்து ரெயில் பிடிக்க வேண்டும். ஊர் முழுக்கக் கூடி எங்களை வழி அனுப்ப மூட்டை, முடிச்சுக்கள் மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டது.அரிசில் ஆற்றைக் கடந்து தென்கரைக்குப் போய் மெயின் ரோட்டில் கும்பகோணம் செல்லும் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். மாட்டு வண்டி மட்டும் ஆற்றில் அப்போது கொஞ்சமாகத் தண்ணீர் போனதால் (அப்போதெல்லாம் காவிரிப் பிரச்னை இந்த அளவு முற்றவில்லை. ஆரம்பித்துக் கொண்டிருந்தது.) ஆற்றில் இறங்கி அக்கரை போய்விடும். ஆற்றில் வண்டியைக் கரையில் இறக்கவும் ஏற்றவும் கூடவே ஆட்கள் வருவார்கள். நாம் மட்டும் நம்மால் முடிந்த சிறிய சாமான்களை எடுத்துக் கொண்டு மூங்கில் பாலம் வழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டும். எதிர்க் கரையில் இருந்து யாரும் வருவதற்குள் பாலத்தைக் கடக்க வேண்டும். எதிரே இருந்து யாராவது வந்தால் யார் குறைந்த தூரம் வந்திருக்கிறார்களோ அவர்கள் பின்னால் போக வேண்டும். ஒருத்தர் முன்னால் போகலாம். மற்றவர் பின்னால். என் கணவர் எனக்கு ஊரும் மூங்கில் பாலமும் புதிது என்ற எண்ணமே இல்லாமல் போய்க் கொண்டே இருப்பார். தொட்டில் மாதிரி ஆடும் பாலத்தில் ஒரு மாதிரியாக நானும் போய்ச் சேர்ந்தேன். பின்னாட்களில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போகும் அளவு தேர்ச்சி பெற்று விட்டேனாக்கும். இப்படியாகத் தானே நாங்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் கும்பகோணம் போய்ச்சேர்ந்தோம். ரெயிலையும் பிடித்தோம். ஆனால் எங்கள் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் எங்களால் ஏற முடியவில்லை. அப்போதெல்லாம் "ஜனதா" என்றொரு வண்டி உண்டு. முழுதும் 2-ம் வகுப்பிலேயே இருக்கும். அதில் தான் பதிவு செய்யப் பட்டிருந்தது. அது பகல் நேரத்தில் மதுரையில் இருந்து கிளம்புவதால் மதுரையில் இருந்து வருபவர்கள் கூட்டம் வழிந்தது. யாரும் எங்கள் இடத்தை நாங்கள் அடைய இடம் விடவில்லை. TTR வந்து விவரம் கேட்டு எங்கள் சீட்டை வாங்கிக் கொடுத்தார். அவர் போனதும் மறுபடி ஆக்கிரமிப்பு. "நாங்கள் மதுரையில் இருந்தே வருகிறோம். நீங்கள் இப்போ ஏறிவிட்டு சீட் கேட்பதா?" என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டார்கள். எங்கள் பெட்டி படுக்கையின் மேலேயே உட்கார்ந்து பிரயாணம் செய்தோம். அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தலை தீபாவளிக்கு மதுரை போக வேண்டும். நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்து நேரே எழும்பூர் போய் இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. ஆனால் ரெயில் தான் எங்களை ஒரு வழி பார்ப்பது என்று நினைத்து இருந்ததே. வீட்டுக்கு வந்து விட்டு மறுபடி இரண்டு பேரும் பஸ்ஸில் எழும்பூர் போனோம். ரெயிலில் போயிருக்கலாம். ஆனால் அப்போது புறநகர் வண்டிகளுக்கு என்று தனி ஸ்டேஷனோ, நடை மேடையோ கிடையாது. 11 அல்லது 12-ம் நடை மேடைகள் காலியாக இருந்தால் மட்டும் வண்டிகளை உடனே விடுவார்கள். இல்லாவிட்டால் பேசின் பிரிட்ஜ் தாண்டி எல்லாரும் "மங்கம்மா" என்று அன்புடன் அழைக்கும் இடத்தில் போட்டு விடுவார்கள். புற நகர் வண்டிகளுக்கு அந்த இடம் ஒரு சாபக்கேடு. எப்போது கிளம்பும் என்று சொல்ல முடியாது. நாங்கள் அதனால் பஸ்ஸில் போனதால் தினத்தந்தி ஆஃபீஸில் இறங்கிப் போக வேண்டும். அன்றைக்கு என்று பஸ் எல்லா ஸ்டாப்பிலும் பிடிவாதமாக நின்று நின்று போய் தினத்தந்தி ஆஃபீஸ் ஸ்டாப் நெருங்கும்போது மணி 7-15. ஓட்டமாக ஓடினோம். அப்போது தான் திருவனந்தபுரம் மெயில் நடைமேடையை விட்டுக் கிளம்புகிறது. மேல் பாலத்தில் ஏறி இறங்கி முதலாம் நடைமேடையை நாங்கள் நெருங்கவும் கடைசி கார்டு வண்டி மறையவும் சரியாக இருந்தது. தலைவிதியே என்று நொந்து கொண்டு டிக்கெட் கான்செல் செய்ய வந்தால் திருச்சிக்கு அனுப்பு என்று சொல்லி விட்டார்கள். அதற்குப்பின் வரிசையில் நின்றால் அது ஸ்டேஷன் வெளியே வரை வந்து விட்டது. தீபாவளி கோவிந்தா தான் என்று நினைத்துக் கொண்டு வருத்தமாக உட்கார்ந்திருந்தோம். அப்போது யாரோ ஒருத்தர் தன் மனைவி டிக்கெட் வாங்கியாச்சா என்று பார்க்க வந்தார். எங்களைப் பார்த்து விட்டு விவரம் கேட்டார். சொன்னதும் எங்களிடம் பணம் கூட வாங்காமல் நேரே தன் மனைவியிடம் போனார். அந்த அம்மா அப்போது டிக்கெட் கவுண்டரை நெருங்கி இருந்தார். எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் போக வேண்டும். அதன் உள்ளே ஏறினது ஒரு தனிக்கதை. அங்கே மதுரையில் எங்களைத் திருவனந்தபுரம் மெயிலில் தேடி விட்டு வராமல் போனது பற்றிக் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். நாங்கள் ஒருவழியாகப் பாண்டியனில் மூச்சு மட்டும் விட இடம் கிடைத்துப் போய்ச் சேர்ந்தோம்.
(தொடரும்.)

Monday, May 22, 2006

46. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம்

சாயந்திரம் ஒரு 5-30 போல நாங்கள் ஸ்ரீசாரதா மடத்திற்குச் செல்லத் தயார் ஆனோம். துங்கா நதிக்கரையில் தென்கிழக்குத் திசையில் நரசிம்ம வனம் என்ற பகுதியில் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் மடம் அமைந்துள்ளது. தென் மேற்குப் பகுதியில் மடத்தின் தங்குமிடங்கள், சாப்பாட்டுக்கூடம், காரியாலயம், ஸ்ரீசாரதையின் கோயில், மற்றும் அதைச் சார்ந்த துணைக்கோயில்கள் இருக்கின்றன. ஸ்ரீசாரதா பீடம் என்ற வளைவு உள்ள பெரிய நுழைவு வாயில். மடத்தைச் சேர்ந்த வாகனங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி. மிதியடிகளை இட்டுச் செல்ல மடமே ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவர்கள் பணம் கொடுக்கலாம். சாரிசாரியாக மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிகம் ஆந்திரா, மற்றும் கர்நாடகாவில் இருந்து. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட முதல் நான்கு மடங்களுள் ஒன்று இது. வடக்கே பத்ரிநாத்திற்கு முன்னால் "ஜ்யோதிஷ்"மடம், கிழக்கே ஜகன்னாத்தில் "கமலா" மடமும், மேற்கே துவாரகையில் "காளிகா" மடம், தெற்கே சிருங்கேரியில் "சாரதா" மடமும் ஸ்தாபிக்கப்பட்டன.யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து "காமகோடி" பீடத்தை ஸ்தாபித்ததாகச் சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோக்ஷலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்திலும், போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.
பெரிய நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே போனால் வலது பக்கம் காரியாலயத்தை சேர்ந்த அறைகள், மற்றும் சாப்பாடு சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் முதலியன தாண்டி ஸ்ரீசாரதையின் கோயில் வருகிறது. இடது பக்கம் மடத்தின் தங்குமிடங்கள், அதைச் சேர்ந்த கூடங்கள் முதலியன. சாரதையின் கோயிலுக்கு எதிரே மடத்தைச் சேர்ந்த 2 குட்டி யானைகள் நின்று கொண்டு இருந்தன. ஒன்று ரொம்பக்குட்டி மற்றும் குறும்பாக இருந்தது. அதை நாம் கவனிக்கவில்லை என்றால் கூடவே வந்து துதிக்கையால் கூப்பிடுகிறது. கூப்பிட்டால் வீட்டிற்கே வந்தாலும் வரும் என்று நினைத்தேன். கட்டுபடி ஆகாது என்பதால் விட்டு விட்டேன். சாரதை கோயில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர். சதா நேரமும் அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை. நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் 40ரூபாய் சஹஸ்ரநாம அர்ச்சனைக்குப் பணம் கட்டினால் பிரசாதம் என்று செங்கல் அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள். சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டது. 4,5 கட்டிகள் இருக்கிறது. சாப்பிட வயிறு மட்டும் ஒன்றுதான் நம்மிடம் உள்ளது. அதுவும் சொன்னபடி கேட்காது. பிரஹாரத்தில் வேத பாடசாலைப் பையன்கள் வேத கோஷம் செய்யப் பிள்ளையாருக்குப் பூஜை நடக்கிறது. சக்தி கணபதி என்று பெயர். பிள்ளையாரைப் போல ஒரு நட்பான கடவுள் யாருமே இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கேட்டுக் கொள்வார். மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சேரும் இடத்தில் உள்ள நேரு பிள்ளையார் எனக்கு ஒரு காலத்தில் ரொம்ப நெருங்கிய சிநேகிதர். இப்போது ரொம்ப வருடம் ஆச்சு அவரைப் பார்த்து. இருக்கிறாரோ என்னமோ தெரியாது.
சாரதை கோயிலுக்குப் பக்கத்திலேயே மற்ற ஸ்வாமிகளுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கின்றன. சற்றுத் தூரத்தில் துங்கா நதிப் படித்துறைப் பக்கத்தில் ஒரு பழமை வாய்ந்த கோயில் தென்பட்டது. கிட்டப் போய் விசாரித்தால் வித்யாரண்யர் கோயில் என்றார்கள். உள்ளே இருள் அடைந்து கிடக்கிறது. 4 அடுக்குகள் கொண்ட கோயிலின் 4 பக்கமும் முறையே சைவம், வைணவம், ஜைனம் மற்றும் புத்தம் மதங்களைச் சேர்ந்த முக்கியமான விக்ரஹங்கள் சுதை வேலைப்பாடு என்று நினைக்கிறேன், காணப்பட்டது. படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 1 அடிக்கு மேல் உயரம். மேலே ஏறிப் போனால் உள்ளே வித்யாரண்யர் சந்நிதி வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு விளக்குடன் காணப்பட்டது. வெளியே வந்து கண்ணில் பட்ட ஒருவரிடம் விவரம் கேட்ட போது மடத்தின் காரியாலயத்திற்கு எதிரே அறிவிப்பு வைத்திருக்கும் என்றார்கள்.

உடனே அங்கே போய்ப் பார்த்தோம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஹரிஹர புக்கர்களின் குரு இந்த வித்யாரண்யர் தான் என்றும், சாம்ராஜ்ஜியத்தைத் தன் குருவிற்கு அர்ப்பணம் செய்ததாகவும், அவருக்கு எழுப்பிய கோயில் தான் இது என்றும், தற்சமயம் தொல்பொருள்த் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எழுதி இருந்தது. கோயில் வழிபாட்டிற்கும், மற்றபடி புனர் உத்தாரணத்திற்கும் தொல் பொருள் துறை ஏற்பாடு செய்யலாமே என்று நினைக்கத் தோன்றியது. இவரும் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த குரு பரம்பரையில் தான் வருகிறார்.

Sunday, May 21, 2006

45. கோபாலகிருஷ்ணன் -2

கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மலைப் பாதை. சில இடங்களில் உயரம் 6,000 அடி இருக்குமென்று நினைக்கிறேன். கூடவே வேண்டுமானாலும் இருக்குமே தவிரக் குறையாது. காபிச் செடிகள் தவிர மிளகுக் கொடிகள், முந்திரிச் செடிகள், பலா மரங்கள், பாக்கு மரங்கள் எனப் பலவகைப்பட்ட மரங்களும் செடிகளும் நிறைந்து காட்டுக்கே உரித்தான ஒரு தனி மணத்தோடு திகழ்ந்தது. மிளகுக்கொடிகள் பாக்கு மரங்களில் ஏற்றி விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கிராமங்களில் சிறுவர்கள் வண்டி வரும் சப்தத்தை வைத்து முந்திரிப்பழம், பலாச்சுளை என்று எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். ஒரு பையனிடம் பலாச்சுளைகள் வாங்கிக் கொண்டோம். நம் மூதாதையர் நடமாட்டமும் இருந்தது. இனம் தெரியாத பறவைகளின் கூச்சல் சப்தம். பறவைகள் நகரத்தில் வாழும் பறவைகள் என்றால் அவைகள் கூச்சலில் நான் இன்னதென்று கண்டு பிடிப்பேன். காட்டுப் பறவைகளின் வித்தியாசமான கத்தலில் கூர்ந்து கவனித்து இது இந்தப் பறவை என்று கண்டுகொள்ளவேண்டும். அதுவும் ஒரு புது முயற்சிதான்.

சில இடங்களில் பெரிய புலியின் படத்தைப் போட்டுக் காட்டுக்குள் நுழையத் தடை விதித்திருந்தார்கள். ஊட்டியிலும் சரி, இங்கும் சரி அப்படிப் பயப் படுத்தும்படிப் புலி, யானை நடமாட்டம் எதுவும் பார்க்கவில்லை. சாதாரணமாகக் கல்லாறு பகுதியிலும், பஃறுளியாறு பகுதியிலும் யானைகள் வந்து ரெயிலையோ அல்லது பேருந்து மற்றும் மேலே செல்லும் வண்டிகளையோ வழி மறிப்பதாகச் சொல்வார்கள். என் அதிர்ஷ்டம் நான் போன போது எல்லாம் அவை முதல் நாளே வந்து விட்டுப் போயிருக்கும்.கோத்தகிரியில் இருந்துக் கோடநாடு செல்லும்போது ஒருமுறைக் குட்டி யானை ஒன்றைப் பழக்குவதற்குப்பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். குட்டி யானையைச் சங்கிலியால் கட்டிச் சுற்றிலும் 4 பெரிய பழகிய யானைகள் வழி நடத்தின. கூட மூன்று அல்லது நான்கு பாகர்கள் அல்லது காட்டிலாகா ஆட்கள். குட்டி யானை உடம்பெல்லாம் செம்மண்ணால் அப்பியிருந்தது. குழியில் இருந்து வெளியில் வரப் போராடி இருக்க வேண்டும். அது துதிக்கையைத் தூக்கித் தன் தாயை நினத்தோ என்னவோ ஓலமிட்டதும் கூடவே வந்த யானைகள் தங்கள் துதிக்கையால் அதை தொட்டு சமாதானம் செய்யும் முறையில் தொட்டதும் பார்த்த போது பாவமாக இருந்தது. நமக்கு மிருகங்களைப் பார்த்தால் வேடிக்கை. ஆனால் அவற்றுக்கு எப்படி? புரியவில்லை.

மலைப்பாதை முடிந்ததும் சற்று ஏற்ற இறக்கமான வெளியில் சற்று தூரத்தில் சிருங்கேரி வரும் என்று அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது. பகல் 2 மணி இருக்கும் சிருங்கேரி வந்த போது. ஊர் சின்னதுதான். மடத்தின் காரியாலய வாயிலில் எங்களை இறக்கிவிட்டு விட்டு டிரைவர் மங்களூர் திரும்பினார். மடத்தின் காரியாலயத்தில் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். தங்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அறை தருகிறார்கள். நாங்கள் இரண்டு பேர்தான் என்பதால் ஒரு பெரிய அறையில் 2 கட்டில் போட்டுக் கூட யாராவது இருந்தால் படுக்கப் பாய், தலையணை என்று வசதிகளோடு இருந்தது. கழிப்பறை வசதியும் சேர்ந்தே இருந்தது. குளிக்க வெந்நீர் கேட்பவர்களுக்கு மடத்தில் இலவசமாகத் தருகிறார்கள். காபி, டீ, காலை ஆகாரம் போன்றவை அறையிலேயே நாம் கேட்டால் கொண்டு தரும்படிப் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நாமாக ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கின்றனர். வற்புறுத்திக் கேட்பது இல்லை. அறை வாடகை ஒரு நாளைக்கு 60 ரூபாய் தான். 2 அல்லது 3 நாளைக்கு மேல் யாரையும் தங்க அனுமதிப்பது இல்லை. அனேகமாக எல்லாருக்கும் அறை கிடைத்து விடுகிறது. தனியார் விடுதிகள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் மடத்தின் அறைகளையே விரும்புகிறார்கள். சுத்தமாகவும் உள்ளது. எங்கள் அறை நல்ல வேளையாக கீழ்த் தளத்திலேயே இருந்தது. அதற்குள் மணி 2-30 ஆகி விட்டது. மடத்தில் 2-15-க்குள் சாப்பாடு முடிந்து விடும். ஆகையால் வெளியே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் தரிசனம் மாலை 5 மணியில் இருந்து ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள்.ஆகவே அதற்குத் தயார் ஆனோம்.

Friday, May 19, 2006

My thoughtsஎல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்

My thoughtsகணினி மறுபடியும் தகராறு

செய்கிறது. எதுவுமே சரியாக

வரவில்லை. Tata Indicaom

Broadband Account Check செய்யப்

போனால் அதுவும் தகராறு. முகப்புப்

பக்கமே திறக்க வில்லை. கூகிள்

ஆண்டவரிடம் போய் முட்டிக்

கொண்டதில் முகப்பு வந்தது. ஆனால்

My Account திறக்க முடியவில்லை.

என்ன செய்வது புரியவில்லை.

இணைய இணைப்பும் தொடர்ந்து

வருவதில்லை. நேற்று ஒரு பதிவு

போட்டு விட்டுப் பார்த்தால் கணினி

"என்னுடைய database சேமிக்காது.

நீ என்ன வேண்டுமோ செய்து கொள்"

என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி

விட்டது. அதனுடன் சண்டை

போட்டால் வேலைக்கு ஆகாது என்று

அதைச் சேமிப்பில் போட்டு விட்டுப்

பின் மறுபடி முயற்சி செய்தால் அது

சரியாக வந்தது. சோதனையும்

பண்ணிப் பார்த்தேன். பதிவு வந்து

விட்டது இதே தலைப்பில். ஆனால்

மாலை நடைப் பயிற்சி முடிந்து வந்து

மீண்டும் பார்த்தால் பதிவைக்

காணவில்லை. "தேடு" பகுதிக்குள்

போய்ப் பார்த்தால் அங்கே இருந்தது.

சரி, என்று அதைக் கெஞ்சிக்

கொஞ்சி மெதுவாக வெளியே

கொண்டு வரலாம் என்றால்

பிடிவாதமாக அது "இங்கே இல்லை,

நான் வர மாட்டேன்" என்கிறது.

என்னத்தைச் சொல்ல? ஒரே

வயித்தெரிச்சலாக இருந்தது. மறு

வெளியீடு செய்ய நேற்று முதல் எல்லா

முயற்சியும் செய்ததில் பலன் இல்லை.

பிடிவாதமாக சொன்னதையே

திருப்பித் திருப்பிச்

சொல்லிக்கொண்டிருக்கிறது.

என்னுடைய நினவில் இருந்து

முடிந்ததை மறுபடி தர முயற்சி

செய்கிறேன்.

யாராவது என்னைத் தப்பாகப் புரிந்து

கொண்டால் எனக்கு ரொம்ப

வருத்தமாக இருக்கும். ஆனால்

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அது

மாதிரி சில சமயம் அமைந்து

விடுகிறது. நம்மேல் தப்பு இல்லை

என்று நிரூபிக்கத் தோன்றும். அது

வேண்டாம் என்று என் கணவர்

சொன்னாலும் என்னால் நிம்மதியாக

இருக்க முடிவதில்லை. தப்போ

சரியோ என் சூழ்நிலையை விளக்கிப்

பார்ப்பேன். புரிந்து கொள்பவர்கள்

புரிந்து கொள்ளட்டும் என்று. புரிந்து

கொள்ளவில்லை என்றால் வருத்தம்

தான் மிஞ்சும். கூட்டுக் குடும்பச்

சூழ்நிலையில் அம்மாதிரிச்

சந்தர்ப்பங்கள் நிறைய

ஏற்பட்டதுண்டு. செய்யாத ஒன்றுக்குப்

பொறுப்பு ஏற்றதும் உண்டு.

வேலையை விட்டுவிட்டு 10 வருடங்கள்

ராஜஸ்தான், ஹைதராபாத் என்று

இருந்து விட்டு மறுபடியும்

கூட்டுக்குடும்பச் சூழ்நிலையில்

புகுந்த போது திணறித்தான்

போனேன். எல்லாவற்றுக்கும் மேலே

பணப்பிரச்னை. அதைச் சமாளிக்க

நான் எத்தனையோ அவதாரங்கள்

எடுக்க நேர்ந்தது. ஒரு Insurance

Agent ஆக, Postal Deposits

Agent,புடவை வியாபாரம், அதைத்

தவிரக் குழந்தைகளுக்கு ஹிந்தி,

மற்றும் பள்ளிப் பாடங்கள் ட்யூஷன்

எடுப்பது என்று ஒரே நேரத்தில் பல

அவதாரங்கள் எடுத்து இருக்கிறேன்.

இதற்கு நடுவில் தான் என்

குழந்தைகள் படிப்பு. நல்ல

வேளையாக அவர்கள் எங்கள் ஊர்

ஊராக மாற்றல் ஆகும்

உத்தியோகத்தால் கேந்திரிய

வித்யாலயாவில் படித்தார்கள். பாடம்

எதுவும் நாம் சொல்லிக் கொடுக்க

வேண்டாம் என்றாலும் எப்படிப்

படிக்கிறார்கள் என்று கண்காணிக்க

வேண்டும். மற்றும் அவர்கள்

சின்னச்சின்ன ஆசைகளை

நிறைவேற்ற வேண்டும். இது தான்

கொஞ்சம் கஷ்டமான ஒன்று.

சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில்

படித்தேன். "கூட்டுக் குடும்ப

வாழ்க்கையால் அம்மாவிற்கு வேலை

அதிகம். அது அப்போது

புரியவில்லை. யு.எஸ். வந்ததும் தான்

புரிகிறது." என்று. அது போல ஒரு

தாயாக அவர்களுக்குச் செய்ய

வேண்டியது விட்டும் போயிருக்கலாம்.

முடிந்ததைச் செய்தும் இருக்கலாம்.

ஆனால் அவ்வளவு கஷ்டமான

நேரத்திலும் நான் அவர்களுக்குக்

கதை சொல்லி அவர்கள் மனதை

மாற்றி விடுவேன். அதுவும் எழுத்தாளர்

தேவனின் கதைகள் என்றால் போதும்.

ஒரே சிரிப்பும், கும்மாளமும்தான்.

இத்தனைக்கும் நடுவில் நான் ஹிந்தி

பி.ஜி.டிப்ளொமோ கோர்ஸ் படித்தேன்.

டீச்சர் ட்ரைனிங் போக ஆசை.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்

கழகத்திலும் சரி, மைசூர்ப்

பல்கலைக் கழகத்திலும் சரி

குறைந்தது ஒரு 6 மாதங்களாவது

தங்க வேண்டும். அது முடியாத

காரணத்தால் அந்த ஆசையை

விட்டுவிட்டேன். ஒரு கட்டத்திற்குப்

பின் பறவைகள் சிறகு முளைத்துப்

பறந்து விட எங்கள் தேவையும்

எங்கள் குடும்பத்திற்கு மட்டும் என்று

ஆகவே மறுபடியும் வேலைக்குப்

போகும் எண்ணமும் கைவிடப்பட்டது.

பல திருப்பங்கள், பலவிதமான

ஊர்கள், பலவிதமான மனிதர்கள்

எல்லாவற்றையும் பார்த்தும் கூட

எனக்கு என் அடிப்படைக் குணம்

சற்றும் மாறாமல் அப்படியே

இருக்கிறது. நம்மை விடக்

கஷ்டத்தில் எத்தனையோ பேர்

இருக்கிறார்கள். என்றாலும் மனமும்

உடலும் சோர்ந்து போய்த் தனிமை

வாட்டி எடுத்துக் கொண்டிருந்த

போதுதான் துளசியின் வலைப்பூவைப்

பற்றிய குறிப்பு "தினமலர்"

பத்திரிகையில் பார்த்தேன். அந்தப்

பேரால் கவரப்பட்டு கணினியில்

தேடினேன். கிடைத்தது ஒரு

அற்புதமான உலகம்.இங்கே தான்

எத்தனை மனிதர்கள், எத்தனை

எண்ணங்கள்? வேடந்தாங்கலில்

கூடும் பறவைகளைப் போல

ஒவ்வொருத்தரும்

தனித்தன்மையானவர்கள். அன்புடன்

ஓடி வரும் துளசி, நட்புக்கரம் நீட்டி

ஆறுதல் சொல்லும் உஷா, என்னை

உடன்பிறந்த சகோதரியாகவே

அங்கீகரித்த மனு, நான்

எட்டமுடியாத உயரத்தில் இருக்கும்

ஜெயஸ்ரீ, நிலாராஜ், அக்கா என்று

அன்புடன் அழைத்தாலும் என்னை

அடிக்கடி மறந்து விடும் பொன்ஸ்,

நான் அழையாமலே வரும் லதா,

வேதா, அம்பி, கைப்புள்ள,

எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிபி,

தேவ், என் பதிவில் முதலில்

பின்னூட்டம் இட்ட டோண்டு சார்,

என்னுடைய முதல் பதிவில்

(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது) வந்து

பின்னூட்டம் போட்டு என் பதிவின்

போக்கையே மாற்றிய சூப்பர் சுப்ரா.

(இபோது அந்தப் பதிவையே எடுத்து

விட்டேன்.) அவர் எழுதியது

இதுதான்."View it this way.

Sometime we shoulder the baggage

of our child or spouse to give ease

to them. Like that you are

shouldering the abuses on others

which if directed towards them

they can't handle it and so by

absorbing them you are giving relief

to them." இதைப் படித்த பின்தான்

என் பதிவின் போக்கு சற்று மாறியது.

முதலில் டோண்டு சாரின் பதிவில்

என் கருத்தை எழுதிய நான் அதற்குப்

பிறகு சற்று தைரியம் வந்து

எல்லாருடைய பதிவிலும் முடிந்தவரை

என்னுடைய கருத்துக்களை நான்

போட்டேன். இதற்கு நடுவில்

எனக்குத் தமிழ் எழுதச் சொல்லிக்

கொடுக்கத் தானாகவே முன்வந்த

வெ.வ.வா. ஜீவ்ஸ் (தற்சமயம் ஆளையே

காணோம்),தமிழ் font கொடுத்து

உதவிய சூப்பர் சுப்ரா, வின் ஜிப்

இல்லாமல் திறக்கத் தவித்துக்

கொண்டிருந்தபோது உதவிய மஞ்சூர்

ராஜா(இவர் உதவியால் தான்

முத்தமிழ்க் குழுமத்திலும் சேர

முடிந்தது), இவர்களை என்னால்

மறக்கமுடியாது. திரு குமரன், திரு

ராகவன், திரு சிவமுருகன்,

பரஞ்சோதி, திரு ஞானவெட்டியான்

அவர்கள் இவர்கள் பதிவைப்

பார்த்தாலே பின்னூட்டம் இடப்

பயமாக இருக்கும். படித்து விட்டுச்

சத்தம் போடாமல் வந்து விடுவேன்.

நான் தைரியமாகப் பின்னூட்டம்

இட்ட பதிவுகள் என்றால் திரு தருமி

அவர்களின் பதிவுகள்,

பெனாத்தலாரின் பதிவுகள்,

பிதற்றல்கள் சிபியின் பதிவு,

கைபுள்ளயின் பதிவு. அதிலும்

கைபுள்ள வந்ததும், தேவ், சிபி,

பொன்ஸ், பார்த்திபன், சரளாக்கா

என்று அவர்கள் அடித்த

கொட்டத்தில் என்னை அறியாமல்

சேர்ந்து கொள்ள அவர்களும் என்

மனம் நோகாமல் இருக்க என்னைச்

சேர்த்துக் கொண்டார்கள். யார் என்ன

நினைப்பார்களோ என்ற எண்ணம்

இல்லாமல் என் வயதை மற்றும்

என்னை மறந்து சிரித்து அவர்களைப்

போல வம்புக்கு இழுத்து என்று என்

போக்கே மாறி இருக்கிறது. மழலை

பேசும் குழந்தைகளிடம் நாம்

செந்தமிழிலா பேசுகிறோம்? அதே

மழலையில் தானே? அது போலத்

தான். ஆகக்கூடிக் கடைசியில்

பார்த்தால் எல்லாரும் நலம் வாழ நான்

பாடினால் எனக்கு, நான் நலம் வாழ

இன்று இத்தனை பேர் பாடுகிறார்கள்.

இது நான் "நன்றி" என்று ஒற்றை

வார்த்தையில் சொன்னால் மறந்து

போய் விடும். ஆகவே சொல்ல

மாட்டேன். அபோது தான் நினைவு

இருக்கும்.

Tuesday, May 16, 2006

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே-2

என்னுடைய முதல் திருமண நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. முதல் திருமண நாளுக்கு எனக்கு ஏதாவது பரிசு தர என் கணவர் நினைத்தார். என்னிடம் நிறையப் புடவை இருந்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. தங்க நகை எதாவது தரலாம் என்றால் கைவசம் இருந்தது வெறும் 50/-ரூபாய் தான். இத்தனைக்கும் இரண்டு பேரும் அப்போது வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தோம். சென்னை மின்வாரியத்தில் சில மாதங்கள் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்கு முன் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்வாகி போஸ்டிங்கை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சமயம் திடீரென்று திருமணம் ஆகிவிட்டது. திருமணத்தன்று பாங்க் ஆஃப் இந்தியாவில் நேர்முகத் தேர்வு இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் கிடைக்கும் என்று.
தங்க நகை வாங்கப் பணம் இல்லாததோடு அப்படி ஏதாவது இருந்தால் அது திருமணம் ஆகாமல் இருந்த என்னுடைய மூன்றாவது நாத்தனாருக்காகச் சேமிக்க வேண்டிய தேவை இருந்தது. என்னை விட இரண்டு வயதே சிறியவள். எங்கள் வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வேலைக்குச் செல்பவர்கள் இல்லை. அவருடைய தம்பிகள் இருவரும் பள்ளி மாணவர்கள். இந்த நிலையில் வந்த என்னுடைய முதல் திருமண நாள் எங்களால் மிகவும் எதிர்பார்க்கப் பட்டது . அப்போது என் பெண் வயிற்றில் 4 மாதம். இதுவும் சேர்ந்து கொண்டது.
திருமணத்திற்குப் பின் பரமக்குடிக்கு வந்த போஸ்டிங்கைச் சென்னைக்கு மிகப் பிரயத்தனத்துடன் மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதே மின்வாரியச் சேர்மன் என்னிடம் "உன் கணவர் வேலை அகில இந்தியப் பணியைச் சேர்ந்தது. உன்னால் வேலையை விடாமல் பார்க்க முடியுமா?" என்று கேட்டிருந்தார். நல்ல வேளையாக நான் வேலையை விடுவதற்குள் அவர் பணி ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.
திருமண நாள் அன்று இருவரும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விட்டுச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுப் பின் வெளியில் எங்காவது போய் வரலாம் என்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தோம். அங்கிருந்து ஜார்ஜ் டவுனில் உள்ள ஏதாவது கோவிலுக்குப் போக முடிவு செய்து NSC BOSE ROAD வந்தோம். அங்கே சுற்றிக் கொண்டிருந்த சமயம் ஒரு கடிகாரக் கடையில் அப்போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்த BENTEX STRAP என் கண்ணில் பட்டது. உடனே என் முகத்தைப் பார்த்த என் கணவர் அதன் விலை கேட்டார். அப்போது அது ரூ.15/-. அதை எனக்கு வாங்கிக் கொடுத்தார். எனக்கு ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. அதை வாங்கி என்னுடைய "கேமி" கைக் கடிகாரத்தில் உடனே அதை இணைத்துப் போட்டுக் கொண்டேன். பின் இருவரும் கந்தகோட்டம் வந்து கந்தஸ்வாமியைப் (கடவுள்ங்க) பார்த்து விட்டுத் திரும்பி வீட்டிற்குச் செல்வதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தோம். பக்கத்தில் இருந்த மூர் மார்க்கெட் புத்தகக் கடைக்கு வர விரும்பியதால் அங்கே வந்தோம். மூர்மார்க்கெட் பக்கத்தில் HOTEL PICNIC GARDEN RESTAURENT என்று கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்தோம். மேலே ரூஃப் கார்டன் போய்ப் பட்டாணி பாத்தும், பீச் மெல்பாவும் சாப்பிட்டோம். கையில் உள்ள காசு உணவு உபசரிப்பவருக்குக் கொடுக்க வேண்டிய இனாமிற்கும் சேர்த்து வருமா என்ற கவலை. ஒருவழியாக இருந்தது எல்லாம் திரட்டிக் கொடுத்தோம். நான் தினமும் பஸ் சார்ஜ் கொண்டு போவதில் மிச்சம் இருப்பதுவும் சேர்ந்து கைப்பையில் இருந்ததால் ஒருவாறு சரிக்கட்டிவிட்டோம். திரும்பிப் போவதற்கு நல்லவேளையாக இருவரிட மும் ரெயில்வே பாஸ் இருந்தது. மனதை நிறைத்த சந்தோஷத்துடன் வீட்டிற்குப் போனோம். அதற்குப் பின் எத்தனையோ திருமண நாள் வந்துவிட்டது. சில திருமண நாட்கள் குழந்தைகளுடன் தனியாக அவர்கள் விருப்பத்துடனும், சில கூட்டுக் குடும்பத்தில் இருந்த காரணத்தால் எங்கள் இருவருக்கும் இடையே மட்டும் கொண்டாடப்பட்டது. இப்போது சில வருடங்களாக நாங்கள் இருவர் மட்டும் கொண்டாடிக் கொள்கிறோம். பெண்ணும், பையனும் தொலைபேசி மூலமோ அல்லது இணையம் மூலமோ வாழ்த்துச் சொல்கிறார்கள். எத்தனை வந்தாலும் அந்த முதல் திருமண நாளுக்கு ஈடு இல்லை என்பது என் எண்ணம். என்னிடம் அந்தக் கைக்கடிகாரம் அதே ஸ்ட்ராப்புடன் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

Monday, May 15, 2006

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே

எனக்குத் திருமணம் ஆகும்போது 19 வயது முடியவில்லை. நான் 15 வயது ஆகும் முன்னே பள்ளி இறுதி முடித்து விட்டேன். எல்லாம் பொய்ச் சான்றிதழ் கொடுத்துத் தான். அப்போது உண்மையான சான்றிதழ் இத்தனை அவசியப் படவில்லை. ஆகவே படிப்பு முடித்து வெகு நாளாக நான் வீட்டில் இருப்பது போல அப்பாவிற்கு ஒரு பிரமை. நடுவில் நான் பாங்க் பரீக்ஷை மற்றும் ஏஜீஸ் ஆஃபீஸ், மற்றும் வருமான வரித் துறை முதலியவற்றிற்கு விண்ணப்பங்கள் செய்து வந்தேன். எல்லாம் அந்த்ப் பொய் வயசை certificate-ல் கொடுத்துத் தான். பாங்க் பரீக்ஷை எழுத சில சமயம் சென்னை வருவதுண்டு. {அப்போதே எனக்குச் சென்னை பிடிக்காது.) அது தனி விஷயம். நான் சென்னை வரும் போதெல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். அம்மாவின் இரண்டாவது தங்கை. சித்தப்பா அப்போது கணையாழியில் பொறுப்பாசிரியராக இருந்து வந்தார். கனையாழியைத் தபால் மூலம் சித்தப்பா சொல்பவர்களுக்கு அனுப்புவது என் வேலை. மிக மகிழ்ச்சியாகச் செய்வேன். அதனால் பல எழுத்தாளர்களின் படைப்பை உடனுக்குடனே படிக்கவும் முடிந்தது. என் படிப்பார்வத்தைப் பார்த்தோ அல்லது அவர் வேலையில் நான் உதவி செய்து வந்த திறமை(வேணுங்கிறவங்க ஸ்மைலி போட்டுக்கங்க) பார்த்தோ சித்தப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை வலிந்து ஏற்றுக் கொண்டார்.

அவர் பார்த்த சில மாப்பிள்ளைகள் என் அப்பாவால் நிராகரிக்கப் பட்டது. அதனால் சற்றும் மனம் தளராத என் சித்தியும், சித்தப்பாவும் இம்முறை எப்படியும் வெற்றி என்ற நினைப்புடன் என் கணவர் ஜாதகம் அனுப்பினார்கள். ஆனால் பாதுகாப்புக் கணக்குத் துறை என்பதைச் சித்தி சரியாகப் புரிந்து கொள்ளாமல் மிலிட்டரி வேலை என்று சொல்ல அப்பா ஜாதகத்தையே எடுக்கவில்லை.அவர்கள் வீட்டில் பொருத்தம் பார்த்துச் சரியாக இருப்பதாக என் சித்திக்குச் சொன்னார்கள். பையன் வீட்டில் இருந்து பெண் ஜாதகம் பொருந்தி இருப்பதாகச் சொல்வது அந்த நாளில் கெளரவக் குறைச்சல். ஆகவே சித்தப்பா தன் தம்பியை எங்கள் வீட்டிற்குத் தூது அனுப்பினார். சித்தப்பாவின் தம்பி மனைவி தான் என் இரண்டாவது நாத்தனார். இப்படியாகத் தன் தம்பி கல்யாணத்தில் சித்தப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார். பின் அப்பா விபரம் தெரிந்து ஜாதகம் பார்த்துப் பின் அவர்கள் வந்து என் கல்யாணம் 15 நாளில் முடிக்கப்பட்டது.
நாங்கள் இருவரும் எல்லாவிதத்திலும் நேர் எதிர்.
அவர் உயரம், நான் சராசரி உயரம்.
நிறமும் அப்படியே. நான் நல்ல நிறம். அவர் நேர் மாறாக இருப்பார்.
என்ன வந்தாலும் யார் என்ன சொன்னாலும் அவர் முகத்தில் மாற்றம் ஏற்படாது. "சித்திரத்தில் அனைய தாமரை போல்" என்ற கம்பர் வாக்கு இவருக்குப் பொருந்தும் என்று நான் நினைப்பது உண்டு.
என் முகம் அடுத்தது காட்டும் பளிங்கு.
சாப்பாடு எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு சாம்பாரே பிடிக்காது.
அவர் நேர் எதிர்.
நான் எல்லாவற்றிலும் வேகம். தற்சமயம் உடல்நிலை காரணமாகக் குறைந்து விட்டது. இருந்தாலும் இப்போவும் எனக்கு வேகம் ஜாஸ்தி.சட்டென்று கோபம் வரும். முகத்தில் தெரியும்.
அவருக்குக் கோபம் வராது. வந்தாலும் முகத்தில் தெரியாது.
நான் வியாதிகளின் மொத்த உருவம்.இப்போ உங்க ப்ளாகில் இருந்து நீங்க தும்மினால் எனக்கு உடனே ஜலதோஷம் பிடிக்கும்.
அவருக்கு இந்தத் தொல்லை எதுவும் கிடையாது.
குழந்தைகளின் பாடத்தில் எதுவும் அவருக்குத் தெரியாது.
நான் அத்துபடி.
இப்போது இந்த வயதிலும் கூட என் பெண்ணும் பையனும் என்னிடம் கதை கேட்கும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
அவரிடம் அப்படி நெருங்குவது இல்லை.
அவருடைய ஊர் ஒரு குக்கிராமம். 77 வரை மின்சாரம் கிடையாது. கழிப்பறை வசதி கிடையாது.
நான் மதுரையில் பிறந்து வளர்ந்து கான்வெண்ட்டில் படித்து, இத்யாதி, இத்யாதி.
என்னுடைய சொல்லும் செயலும் அப்போது மிகவும் புரட்சிகரமாகத் தெரியும். என் கணவர் சொல்வது "நீ 20 வருடம் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவள். எல்லாத்துக்கும் அவசரம் மாதிரி இதுக்கும் உனக்கு அவசரம்" என்பது தான். இப்படி எல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பவர்களுக்கு. "மே மாதம் 17-ம் தேதி எங்கள் திருமண நாள்" என்பது தான்.

எல்லாவற்றிலும் ஒத்துப் போகாத நாங்கள் குடும்ப விஷயம் என்று வரும்போது பெரிய விஷயங்களில் நானும், அதாவது,
யாருக்கு வோட்டுப் போட வேண்டும்?தமிழ்நாட்டிற்கு யார் முதல் மந்திரியாக வந்தால் நல்லது?
இந்த பட்ஜெட் எப்படி?
அப்துல் கலாமிற்குப் பின் யார் குடியரசுத் தலைவராக வரலாம் என்பது போன்ற விஷயங்களில் நான் முடிவு எடுப்பேன்.

மற்ற விஷயங்கள் அவர் தம்பி, தங்கைபடிப்பு, கல்யாணம், எங்கள் குழந்தைகளின் எதிர் காலம் எல்லாம் முடிவு எடுப்பது அவர் கையில். வீட்டிலும் எல்லாரும் இந்த விஷயங்களை அவரிடம் மட்டும் விவாதிக்குமாறு ஏற்படுத்தி விட்டோம்.ஆகவே பிரச்னை எதுவும் எங்களுக்குள் இல்லை. யாராவது எங்கள் வீட்டில், மதுரையா, சிதம்பரமா? என்று கேட்டால் நான் "திருச்செங்கோடு" என்பேன். எத்தனாவது வருஷம் என்று கேட்பவர்களுக்கு "அது மட்டும் ரகசியம்". கண்டு பிடிப்பவர்கள் வலைப்பூவில் என் சார்பில் ஒரு பின்னூட்டம் இலவசம். ஸ்பெஷல் ஆஃபர் கொசுறு ஒரு பின்னூட்டம்.

கோபாலகிருஷ்ணன்

நாங்கள் தரிசனம் செய்யும்போது பசு மாட்டின் மேல் சாய்ந்த கோலத்தில் ஒரு கையில் புல்லாங்குழலுடனும், மறு கையில் மாடு கட்டும் கயிறுடனும் கிருஷ்ணனை அலங்கரித்து இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலங்கரிக்கப் படும் கண்ணனின் நிர்மால்ய தரிசனம் (தினம் காலை 5மணியில் இருந்து 5-30-க்குள்} மிகவும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அன்று உடனே மூகாம்பிகை கோவிலுக்குச் செல்லும் திட்டம் இருந்தமையால் நாங்கள் உடுப்பியில் தங்கவில்லை.

சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள ஜன்னல் தான் வெளியில் இருந்து பகவான் தரிசனம் கிடைக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள ஆஞ்சனேயரைத் தரிசனம் செய்து கொண்டு வந்தால் திரும்பியதும் மத்வரின் சிலை அலங்கரிக்கப் பட்டுக் காட்சி அளிக்கிறது. எதிரே ஸ்ரீமடத்தின் பூஜை அறை. அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டும் போகலாம். அதன் பக்கத்தில் உள்ள வாசல் வழியே போனால் வலது பக்கம் வெளியே போகும் வாசல். இடது பக்கம் நவக்ரஹ சன்னதி மற்றும் சாப்பாடு போடும் இடம் எல்லாம் உள்ளது. நாங்கள் நவக்ரஹ தரிசனம் முடித்து வெளியே வந்து அங்கே எல்லாராலும் சிபாரிசு செய்யப் பட்ட "மித்ர சமாஜம்" என்னும் ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டோம். உண்மையிலேயே காலை உணவு நன்றாக இருந்தது. பின் அங்கிருந்து கொல்லூர் நோக்கிச் சென்றோம்.

மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலை. அலுக்காத பயணம். வழியெங்கும் காபித் தோட்டங்கள் மற்றும் காபியின் ஊடு பயிராக ஆரஞ்சுச் செடிகள், அங்கங்கே பலா மரங்கள் காய்த்துத் தொங்கின. நல்ல அற்புதமான சுகமான பயணம்.மேலே போகப் போக மழையும் கூட வருகிறது. ஒரு மலையில் பெய்தால் இன்னோர் மலையில் பெய்வது இல்லை. மலையில் உயரத்தில் கூட தண்ணீர் கொண்டு போவதற்கான இணைப்புக்கள். எல்லாக் குழாயிலும் தண்ணீர் கொட்டுவதால் குழாய்களில் கூட்டமே இல்லை. வழியில் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் பேருந்துக்குக் காத்திருக்கிறதிப் பார்க்க முடிகிறது. நம் வண்டியைப் பார்த்ததும் கை காட்டிக் கூப்பிட்டவர்கள் அனேகம்.

எனக்கு எங்கே போனாலும் தண்ணீரைப் பார்த்தால் தமிழ் நாட்டின் தீராத தண்ணீர் தாகம் தான் நினைவு வரும். பத்ரிநாத் செல்லும்போதும் இப்படித்தான் எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர். மேலே தண்ணீரை ஏற்றுவதற்கு எந்த மோட்டாரின் உதவியும் இன்றி அங்கெல்லாம் தண்ணீரின் அதிவேக அழுத்தம் காரணமாக மேலே உள்ள தொட்டிகள், மற்றும் மலை மேல் உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஏறிவிடும். நமக்கெல்லாம் வண்டியில் வரும் தண்ணீரோ அல்லது மாநகராட்சி கொடுக்கும் தண்ணீரோ நிரந்தரமாகக் கிடைத்தால் அதுவே பெரிது. இப்படியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

மலைகள் ஏறி இறங்கியதும் கோவிலுக்குச் செல்லும் வழி வந்தது.வண்டிகள் உள்ளே போக முடியாது என்பதால் கோவிலுக்குப் போகும் வழியிலேயே நசீர் எங்களை இறக்கி விட்டு விட்டுத் தான் கார்கள் நிற்குமிடத்தில் காத்திருப்பதாகச் சொன்னார். பொதுவாக இந்த மாதிரிக் கோவிலுக்குப் போகும்போது நாங்கள் அர்ச்சனையோ, பூவோ அல்லது பழம், தேங்காயோ வாங்கிப் போவது இல்லை. எங்களால் முடிந்ததைக் கோவில் உண்டியலில் போட்டு விடுவோம். சில கசப்பான சம்பவங்களால் இந்த மாதிரி முடிவு.
கோவிலில் வரிசையில் காத்திருக்க நேரிட்டாலும் 10 நிமிடங்களில் அம்பாள் தரிசனம் கிடைத்தது. மத்தியான நேரம். ஆதலால் அம்பாள் சரஸ்வதி அலங்காரம். காலை மஹாலக்ஷ்மி, மத்தியானம் சரஸ்வதி, மாலை மஹாசக்தி என்று நினக்கிறேன். மத்தியானம் சரஸ்வதி என்பது மட்டும் நிச்சயம். நமது முன்னாள் முதல்வர் திரு M.G.R. அவர்கள் கொடுத்த வாள் அம்பாளின் வலது கரத்தில் மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்தது. நல்ல கூட்டம். ஆனாலும் நல்ல நிர்வாகத் திறமை இருப்பதால் நன்கு நிர்வகிக்கிறார்கள். சிலர் புத்தகங்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து அம்மன் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து எடுத்துப் போகிறார்கள். இதில் மலையாளிகள் தான் அதிகம். இந்தக் கோவிலின் அம்மனின் மூலசக்தி ஆதி சங்கரரால் தனியாகப் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளது. (தாய் மூகாம்பிகை படத்தில் திருடனாக வரும் ஜெய்சங்கர் இந்த இடத்திற்குப் போனதும் தான் ஞானஸ்தனாக மாறி வருவார்.) பிரசாதம் வாங்கும் சமயம் அது பற்றிக் கேட்டதும் அதற்குத் தனிச் சீட்டு வாங்க வேண்டும் என்றும் 25ரூ/- என்றும் சொன்னார்கள். உடனே போய்ச் சீட்டு வாங்கி வந்தோம். வெளிப் பிரஹாரத்திலேயே அம்மன் சந்நதிக்குப் பின் புறம் ஒரு தனி அறை இருக்கிறது. பூட்டி வைத்திருக்கிறார்கள். சீட்டு வாங்கி வருபவர்களுக்குத் திறந்து காட்டுகிறார்கள். இது பற்றிப் பலருக்கும் தெரியவில்லை. கோவிலில் எல்லா மொழிகளிலும் இது பற்றி அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
உள்ளே ஏறிப் போய் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் அவருக்கு முன்னால் ஸ்ரீசக்கரத்தையும் பார்த்தோம். ஒரு 5 நிமிஷம் அங்கே செலவிட்டோம். வெளியில் வந்தால் ஒரு கூட்டம் காத்திருந்தது. வெளியில் வந்ததும் தரிசனம் செய்யும் கூட்டம் சற்றுக் குறைவாக இருந்தபடியால் மறுபடி மறுபடி என்று ஒரு மூன்றுதரம் அம்மன் தரிசனம் செய்தோம். அங்கிருந்த ஒரு கோயில் ஊழியர் சிரித்துக் கொண்டே" ஏனும்மா இதி"என்று கன்னடத்தில் கேட்க முதல் முறையாக வந்திருப்பது பற்றிச் சொன்னோம். பிறகும் சிறிது நேரம் தரிசனம் முடித்து விட்டுப் பின் அரைமனதாக வெளியில் வந்தோம். கொல்லூரில் இருந்து "ஹொரநாடு" என்ற ஊர் போய் அங்கு உள்ளத் தங்க அன்னபூரணியைப் பார்ப்பதாக முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் ஹொரநாடு கொல்லூரில் இருந்து சிருங்கேரி செல்லும் வழியில் இல்லை. சற்றுக் கிழக்கே இருக்கிறது. கொல்லூரில் இருந்து குறைந்த பக்ஷம் 3 மணி நேரம் ஆகும் என்றார்கள். அப்போதே மதியம் 12-க்கு மேல் ஆகிவிட்டது. ஆகவே நாங்கள் சிருங்கேரி தான் பக்கத்தில் என்று டிரைவரை சிருங்கேரியில் விட்டு விட்டுத் திரும்பும்படிச் சொல்லிவிட்டுக் காரில் ஏறினோம். வண்டி மலை ஏற ஆரம்பித்தது. போகிறோம், போகிறோம், போய்க் கொண்டே இருக்கிறோம்.

Sunday, May 14, 2006

வெற்றிகரமாக முடிந்த பயணம்

கோபிச்சந்தனத்தைப் பெற்றுக்கொண்ட மத்வர் ஒரு உள்ளுணர்ச்சியுடன் அதை உடைக்க அதில் இருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு கையில் மத்துடனும் மறு கையில் கயிறுடனும்.ஒரு அடி உயரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது அந்தக் கிருஷ்ணன். கொள்ளை அழகுடன் இருக்கும் அவனைப் பார்த்தால் இரு கைகளாலும் வாரி அணைத்துக் கொஞ்சத் தோன்றுகி
றது. நமக்கே இப்படி என்றால் கிருஷ்ண பக்தியில் திளைத்த மத்வரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஸ்ரீகிருஷ்ணனின் புகழைப் பாடிக் கொண்டே 4 மைல் தூரம் அந்த விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு உடுப்பிக்கு வர்கிறார் மத்வர். அவரால் பாடப் பட்ட அந்த ஸ்லோகங்கள் "த்வாதஸ ஸ்தோத்ரா" என்று அழைக்கப் படுகிறது. அந்த விக்ரஹத்தைப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் குளிப்பாட்டிப் பிரதிஷ்டை செய்கிறார். அந்தக் குளம் தற்சமயம் "மத்வ சரோவர்" என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. கோவிலின் உள்ளிருந்தும் குளத்திற்கு வரப் பாதை இருக்கிறது. பூஜை முறைகள் ஸ்ரீமத்வரால் ஏற்படுத்தப் பட்டு இன்றளவும் பின்பற்றப் படுகின்றன.பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் மத்வரால் ஏற்படுத்தப்பட்ட 8 மடங்களைச் சேர்ந்த "பால சன்யாசிகள்" என்றழைக்கப் படும் மடங்களைச் சேர்ந்த துறவிகளால்தான். இவர்களைத் தவிர வேறு எவருக்கும் பூஜை செய்யவோ இக்ரஹத்தை தொடவோ அனுமதி இல்லை.

கோவில் கேரளப் பாணி தான். ஸ்ரீகிருஷ்ண மடம் என்று அழைக்கப் படும் கோவிலில் முன் வாசலே கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் மேற்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேற்குப் பார்த்த வாசலில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதன் வழியாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணரைத் தரிசனம் செய்யலாம் என்பதற்காக வைத்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமாகப் பார்க்க முடியவில்லை. உள்ளே இருப்பவர்கள் கொஞ்சம் விலகினால் ஏதோ கொஞ்சம் தெரியும். அந்த ஜன்னலுக்கு முன் ஒரு சிறிய கோபுரம் உள்ளது.
போது ஜனங்கள் தெற்கு வாசல் வழியாக உள்ளே செல்ல வழி வைத்திருக்கிறார்கள். மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போனால் வாசலில் வலது பக்கம் இருக்கும் மத்வ சரோவரைப் பார்க்கலாம். இது கிருத யுகத்தில் "வ்ரஜ தீர்த்தம்" என்றும், "அனந்த சரோவர்" என்று முறையே த்ரேதா மற்றும் துவாபர யுகத்திலும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒரு முறை கங்கை இந்த தீர்த்தத்தில் பிரவாஹம் எடுப்பதாகவும் சொகிறார்கள். இந்தக் குளத்து நீரால் தான் தினமும் அபிஷேஹம் செய்யப் படுகிறான் கண்ணன்.
மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போகும் நான் போகும் போதே பிரஹாரம் சுற்றி ஸ்ரீகிருஷ்ணனின் சன்னிதியை அடைகிறோம். பகவான் மிகவும் சாந்நித்தியம் உள்ளவர் என்று சொல்லப் படுகிறார். ஜீவன் இன்னும் இருப்பதாகவும் நம்பப் படுமிறது. ஆதலால் கண்ணனை நாம் நேருக்கு நேர் பார்க்க முடியாது. கண்ணனின் தரிசனம் 9 ஓட்டைகளைக் கொண்ட ஒரு ஜன்னல் வழியாகத் தான் நடைபெறுகிறது. வெள்ளித் தகடால் மூடப்பட்ட அந்த ஜன்னல் நவகிரஹ ஜன்னல் என்று அழைக்கப் படுகிறது. வெள்ளித் தகட்டில் மஹாவிஷ்ணுவின் 24 உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளது.
நாங்கள் பார்க்கும்போது கண்ணன் மாடு மேய்க்கும் கோலத்தில் இருந்தான். அவன் நடையும், சடையும், எனக்கு "ஆடாது அசங்காது வா" என்ற ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யரின் பாடல் தான் நினைவு வந்தது.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது,
பறவையின் கணங்கள் வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிக் கால் பரப்பிட்டுச் செவியாட்டகில்லாவே

என்று ஆழ்வார்களும் பாடியது கண்ணனை நேரில் பார்த்துத் தான் என்று புரிந்தது. என் கண்ணில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்தக் கள்வனைத் தூக்கி கொஞ்சி வேண்டுவன எல்லாம் செய்ததற்கு யசோதை செய்த தவம் மாபெரும் தவம். அது பெற்ற தாய் தேவகிக்குக் கூடக் கிடைக்கவில்லையே. பார்த்தால் நாம் கையில் தூக்கிக் கொஞ்சலாம்போல் கண்ணன். சென்னப் பட்டினம் அருகில் (இதுவும் கர்நாடகா தான். மைசூரில் இருந்து பங்களூர் வரும் வழியில் உள்ளது) தொட்டமளூர் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீராம அப்ரமேயர் கோயிலில் குடி கொண்டிருக்கும் குழந்தைக் கண்ணன் தவழ்ந்த கோலத்தில் இருக்கிறான். அவன் மூன்று முதல் ஆறு மாதத்திற்கு உட்பட்டவன் என்றால் இவன் நடக்க ஆரம்பித்து உள்ள குழந்தை. நாமும் கைப் பிடித்துக் கூடப் போகவேண்டும் என்ற ஆவல் எழுவது தவிர்க்க முடியாதது. பார்த்துக் கொண்டே இருந்தோம். கோவில் பணியாளர்கள் அப்படி ஒன்றும் அவசரப் படுத்துவது இல்லை. குறைந்தது 2 நிமிடமாவது பார்க்க அனுமதிக்கிறார்கள்.

அதிர்ச்சித் தகவல், திடுக்கிடும் உண்மைகள்

வ.வா.சங்கத் தலைவர் திரு கைப்புள்ளயின் புகழ் திக்கெட்டும் பரவியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வாரம் கல்கி பத்திரிகையில் கூட சங்கப் புகழ் பாடி வந்துள்ளது. 21-5-06 தேதியிட்ட கல்கியில் 35வது பக்கத்தைப் பார்க்கவும். கைப்பு என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் தலைவரின் புகழும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சங்கப் புகழும் பாரெங்கும் புகழ் மணம் பரப்பி வருவது நாமறிந்ததே.இந்தப் புகழ் பற்றியும் அவர் தம் ஆற்றல் பற்றியும் பொறாமை கொண்ட சில துன்மதியாளர்கள் நம் கைப்புள்ள மற்றும் கைப்பொண்ணு இருவரையும் மறைத்து வைத்து சரியாக வெள்ளி அன்று காவலில் வைத்து உள்ளதாகச் சில நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அவர்களுக்கு முன் ஜாமீன் எடுக்கக்கூட வகை செய்யப் படாமல் இருக்கவே இந்த முறை பின்பற்றப்படுத்தப் பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது ப.ம.க உடன் இணைந்து செயல்பட்ட சில வ.வா.சங்க நிர்வாகிகளின் துரோகம் என்றும், அதைக் கண்டு பிடித்த மகளிர் அணித் தலைவியைச் சரிக்கட்டத்தான் அவருக்குப் பட்டமளிப்பு விழா நடத்தப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன.
மகளிர் அணித்தலைவி ஏற்கெனெவே சங்கப் பிரசாரத்திற்காகச் சுற்றுப் பயணம் செய்து வந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. தலைவர் இல்லாத நேரத்தில் கட்சியின் கட்டுக்கோப்பைக் காப்பாற்ற வேண்டித் தான் மெளனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் தற்சமயம் உள்ள நிலைமையை உத்தேசித்துப் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்றும் அவர் யோசிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ராக்கம்மா என்ற புதிய நபரைக் கொண்டு வந்தது கூடத் தலைவரின் பெயரைக் கெடுக்க ஏற்பட்ட சூழ்ச்சி என்று தெரிகிறது. நம் கொ.ப.செ. செல்வி. பொன்ஸ் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பார்த்ததுவும் அவருக்கு வேர்க்கடலை கொடுத்ததுவும் இந்த ராக்கம்மா தான் என்பதும் தெளிவாகி உள்ளது. இதில் யார், யார் கூட்டு என்பது போகப்போகத் தெரியும் என்று சவால் விடுகிறார் மகளிர் அணித் தலைவி. தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டு வாடும் தலைவர் கைப்புள்ள மற்றும் கைப்பொண்ணு இருவரும் இருக்குமிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரை எப்படியும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும். அதுவரை சங்கத் தொண்டர்கள் அமைதி காக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Saturday, May 13, 2006

சாம்பாரில் உப்புப் போடவில்லை.

இதைப் படித்து விட்டு என் வலைப்பூவிற்கு தவறாமல் வருகை தரும் அம்பி, மற்றும் மனுவிற்கும், போனால் போகிறது என்று எப்போவாவது தலை காட்டும் பின்னூட்ட நாயகி,எங்கள் தானைத் தலைவி திருமதி துளசி மற்றும் ஓடி வந்து ஆறுதல் சொல்லி சமாதானம் செய்யும் எங்கள் நல்லிணக்கத் தலைவி, திருமதி உஷா அவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், இந்தத் தலைப்புக்கும் நான் எழுதும் விஷயத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பதே.

எங்கள் பின்னூட்ட இளவரசி தன் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் (வேறு என்ன பின்னூட்டம் வளர்ப்புக்கலை கற்றுத் தேர்ந்து வருவதால்) அவர் பின்னூட்டத்திற்கு நாம் பதில் சொன்னால் வருவதற்கு அன்பு கூர்ந்து இசைந்திருக்கிறபடியால் (எல்லாம் நேரம் பாருங்க, பின்னூட்டம் வாங்க எப்படியெல்லாம் எழுத வேண்டி இருக்கு, இதெல்லாம் ஒரு எழுத்தா என்று தமிழ் மணம் நிர்வாகிகள் தலையில் அடித்துக் கொள்வதும் தெரிகிறது.) என்ன சொன்னேன், ம், பின்னூட்ட இளவரசி (அம்மா, பொன்ஸ், திருப்பிதிருப்பிப் போட்டு உன் பட்டத்திற்கு அங்கீகாரம் வாங்க முயற்சி செய்கிறேன் பார், நிரந்தரத் தலைவியான எனக்கே இந்தக் கதி) இசைந்திருக்கிறபடியால், நாம் எழுதப் போகும் அதிர்ச்சியான தகவல் இது தான்.

நேற்று மதியம் (இந்திய நேரம்) 3 மணியில் இருந்து என்னுடைய கணினியில் updaate failure ஆனதைத் தொடர்ந்து என்னுடைய வலைப்பூவில் புதிய பதிவு பதிக்கவோ அல்லது என்னுடைய பின்னூட்டங்களைப் பார்க்கவோ என்னால் முடிய வில்லை. இது இம்முறை தேர்தலில் நாங்கள் பெற்ற ஆதரவைப் (வ.வா.ச) பார்த்த எதிர் அணியின் சதியோ என்று தோன்றுகிறது. எதிர் அணியில் இருப்பது பமக வும் அ.உ.கு.மு.கவும் (இப்படி ஒரு கட்சி இருப்பதே நேற்றுப் பகலில் தான் தெரியும்) இதில் அ.உ.கு.மு.க நம் உற்ற நண்பர்கள். தலைவர் குமரன் நம்ம ஊருங்க. ஆகவே சதிவேலை பமகவினுடையது தான் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றித் திரிகிறது. இது தேர்தலுக்கு முன்னால் பெனாத்தலார் பெனாத்தி வந்த முறையிலேயே கண்கூடாக அறிய முடிகிறது.

வாழ்க எங்கள் தலைமை மற்றும் கட்சி.
தலைவர் இல்லாத இந்த நேரத்தில், நம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நம் கட்சியைப் பாதுகாப்பதில் இருக்க வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.
இப்படிக்கு நிரந்தரத் தலைவலி
கீதா(கானா). விவசாயி அவர்களே, தாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டுத் தேடித் தந்த இந்தப் பட்டத்தை அங்கீகரிப்பதன்மூலம் உங்களை மறக்காமல் பெருமைப் படுத்தி உள்ளேன். (மத்தவங்க நீங்க சங்கத்துக்கு ஆற்றிய அரும்பணிகளை மறந்துட்டாங்க) இப்படியெல்லாம் எழுதினால் தான் தமிழ் மணத்திலும் வரும் பின்னூட்டமும் வரும். எல்லாம் நேரம்.

உஷா, உங்களுக்கும் துளசிக்கும் கூடத் தலைவிப் பட்டம்தான் தந்திருக்கிறேன், பார்த்துக்கங்க. நம்ம காங்கிரஸ் மாதிரி எல்லாருமே தலைமைப் பதவியில இருப்போம்.

Thursday, May 11, 2006

ஒண்ணுமே புரியலே உலகத்திலே

என்னோட தினசரி அலுவல்களைப் பட்டியல் போட்டா இப்படி வரும். அது எதுக்கு எங்களுக்குனு கேட்கிறவங்களுக்குப் பொறுமை, பொறுமை.
தினம் காலை 5 மணிக்கு எழுந்தால் பல் தேய்த்துக் காபி சாப்பிடுவதில் இருந்து(துபாய்வாசிக்குக் கவலையில்லை. வாரம் ஒரு நாள் வெள்ளி அன்று மட்டும் பல் தேய்ப்பதாக declare செய்து விட்டார்.) என்னுடைய நித்தியப்படி வேலையான யோகா, தியானம் செய்வது எல்லாம் முடிக்க 7-30 ஆகி விடும். சில நாள் 8 மணி கூட ஆகும். அதற்குப்பின் எங்கள் இருவருக்கான காலை உணவு தயாரிப்பு, குளியல், மதியம் சமையல், சாப்பாடு, வீட்டு வேலை செய்யும் அம்மாவிற்குத் தேவையானதைக் கொடுப்பது என்று மதியம் 1 மணி ஆகி விடும். இடையே வரும் போன் கால்கள், தேடி வரும் நண்பர், உறவினர், வாசலில் வரும் சோப்பு, சீப்பு முதல் வாஷிங் மெஷின், வாக்குவம் க்ளீனர் வரை விற்பவர் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டும். அக்கம்பக்கம் யாராவது ஊரில் இல்லை என்றால் அவர்களுக்கு வரும் தபால், கூரியர் காரனுக்கு பதில் சொல்வது எல்லாம் அடங்கும். இந்த 1 மணியில் இருந்து சாயந்திரம் 4, 4-30 வரை கணவர் ஓய்வு எடுப்பதால் அந்த நேரம்தான் என்னுடைய தமிழ்மணம், முத்தமிழ்க்குழுமம் கருத்துப் பரிமாற்றம் எல்லாம். 4-30க்குப் பிறகு 5-30க்கு நடைப் பயிற்சிக்குப் போனால் இரவு 7 மணிக்கு வந்து 7-30, 8மணிக்குள் சாப்பிட்டு விட்டு சமையல் அறை சுத்தம் செய்து விட்டு 9 மணிக்கு வந்தால் என் பெண்ணுடன் 10 மணி வரை chatting. அதற்குப் பின் படுப்பேன். என் பெண் வராத நாளில் எப்போதாவது தமிழ் மணம் பார்ப்பேன். அப்போது நான் தெரிந்து கொண்ட அதிசயங்களைத் தான் இப்போது கூறப் போகிறேன்.

1. இலவசக் கொத்தனார் எப்போது தூங்குவார்? எனக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் இது முதன்மையானது.

2. பெனாத்தலார் பின்னுட்டாங்களைக்கூட மெயிலில் கொடுக்கிறாரே? இலவசம் ப்ளாகில் கூட இப்படித்தான் கொடுத்தார்.கணினியை விட்டு எப்போது எழுந்திருப்பார்?

3.மேற்குறிப்பிட்ட சந்தேகம் சிபி, மற்றும் பொன்ஸிடமும் உண்டு. சிபியாவது ஆபீஸ் வேலை என்று நடுவில் லீவ் போட்டார். பொன்ஸ் மடிக் கணினியைக் கீழேயே வைக்க மாட்டாரா?

4.ஒரு ரூபாய், ஒரே இந்தியா என்ற திட்டத்தில் தயாநிதி மக்களைக் கவர்ந்த மாதிரி இந்த பொன்ஸ் "ஒரு வெண்பா, நூற்றுக் கணக்கான பின்னூட்டம் "என்று ஆனது எப்படி?வெண்பாவில் அது என்னமோ தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் என்கிறார்கள். ஏன் ஆவக்காயைச் சேர்க்கவில்லை? எனக்குப் பிடிக்கும் என்பதாலா?

5. அப்புறம் என்னமோ தளை தட்டுகிறது. சீர் வேண்டும் என்கிறார்கள். அந்தத் தளை எந்தத் தளை? சீர் எனக்கு மட்டும் இல்லையா? தளைகளை உடைத்தெறிந்து எனக்கும் சீர் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

6.இந்த மருத்துவர், அதாங்க, ரஷ்யாக்காரர், இலவசம் கூட என்னை மருந்து வாங்கிச் சாப்பிட சிபாரிசு பண்ணினாரே அவர் எனக்குத் தெரிந்து பின்னூட்டம் இடுவதைப் பற்றிக் கோனார் நோட்ஸ் தான் போட்டார். இலவசத்தின் பதிவில் படித்தேன். ஆனால் பொன்ஸுக்கு மற்றும் சிலருக்குத் தனியாகப் பாடம் எடுத்திருக்கிறார் போலத் தெரிகிறது. அது எப்படி?

வலைப் பதிவாளர்கள் அனைவரையும் வாழ்க, வளர்க என்று சொல்லி வாழ்த்தும் "பின்னூட்ட நாயகி" முன் தூங்கி முன் எழும் திருமதி துளசி கோபால் அவர்களின் கண்ணில் இவை எல்லாம் உடனுக்கு உடனே படுவது எப்படி?
நான் கொஞ்ச நேரம் வேறு வேலை எதாவது கவனித்து விட்டு வந்தால் உடனே பின்னூட்டங்கள் நூற்றுக் கணக்கில் எகிறி விடுகிறது.

அதாங்க ஒண்ணுமே புரியலே உலகத்திலே, ஒருத்தொருத்தர் ஒரு பின்னூட்டத்திற்கே பிள்ளையாருக்குத் தேங்காய் எல்லாம் உடைக்கிறோம். எல்லாம் மச்சம், மச்சம் என்பாங்களே, அது இது தானா? இதுக்கு யாரு பின்னூட்டம் விடப்போறாங்க? வழக்கம் போலத்தான். பெருமூமூமூமூச்ச்ச்ச்ச்சுசுசுசுசுசுசுசு

முக்கியமாக அமெரிக்காவில் இருக்கும் இலவசம் இங்கு இந்தியாவில் எப்போதும் பின்னூட்டங்களோடு குடி இருப்பது எப்படி? தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்.

Tuesday, May 09, 2006

சாதம் வைக்க மறந்து விட்டேன்

ரைஸ் குக்கரில் 1மணிநேரம் ஊற வைத்த அரிசியைப் போட்டு வெந்நீரையும் ஊற்றி மூடிவிட்டேன். 20 நிமிஷம் கழித்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கம் இன்னும் இருப்பதால் குக்கரைத் திறந்து பார்த்தேன். நான் வைத்தபடியே அரிசியும், தண்ணீருமாக இருக்கிறது. என்ன செய்தேன் புரியவில்லை. மண்டை குழம்ப யோசித்ததில் ஸ்விட்ச் ஆன் செய்ய மறந்து விட்டேன் என்று புரிந்தது. நல்லவேளையாக சாப்பிட இன்னும் 1/2 மணி நேரம் இருப்பதை நினைத்துக் கொண்டு ஸ்விட்ச் ஆன் செய்து சாதம் வைத்தேன். அந்த அளவிற்கு மன உளைச்சலா என்று தோன்றுகிறாது. ஆம் என்பதே விடை. எழில்முதல்வனின் இந்தக் கவிதை மட்டும் இன்று போடுகிறேன்.(உடுப்பி பிரயாணம் மிச்சம் பிறகு வரும். அதைப் படிக்கிறவர்களுக்கு இந்தச் செய்தி)

தனியே விடு, என்னைத் தனியேவிடு
அழவேண்டும் நான் என்னைத் தனியே விடு

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது-ஒருபிரளயம் என்னுள் நடக்கிறது
நெருஞ்சியின் மேலே நடப்பது போல-என் நினைவுகள் என்னை வதைக்கிறது.

உடம்பே வாயாய் அழவேண்டும்-நான் 'ஓ' வென்றலறி விழ வேண்டும்
வடிகால் தேவை-இலையென்றால் இவ்வாரிதி எனை விழுங்கி விடும்.

ஊற்று மணற்கரை போல்-மனம்
உருகி நெகிழ்ந்திட வேண்டும்
நீற்றுத் துகளெனத் துன்பம் நீங்கிப்
பொடிந்திட வேண்டும்
வெந்த பசும்புண் போலே-இதயம்
இந்த அழுகையின்றி-மருத்துவத்தால்
ஏதும் பயனுண்டோ-தனியே விடு என்னை

ஒற்றைச் சிறிய கிளை -
முற்றி உடைந்த பலாப்பழத்தைப்
பற்றியே தாங்கிடுமோ?
இற்று முறிந்திடுமோ?
தளைகளை விட்டு நான் விடுபட வேண்டும்
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்

திரு எழில் முதல்வனின் இந்தக் கவிதை 67 அல்லது 68-ம் வருடத்தில் எப்போதோ 'கணையாழி' பத்திரிகையில் வந்தது. என்னுடைய 15, 16 வயதில் படித்துக் குறித்து வைத்தது இன்றும் எனக்குப் பொருத்தமாக இருப்பது வேடிக்கைதான்.

Monday, May 08, 2006

வெற்றிகரமாக முடிந்த பயணம்-2ன் முதல் பாகம்

My thoughtsநேற்று எழுதும்போது என்ன தவறு செய்தேன் தெரியவில்லை. நான் எழுதிய பதிவின் முதல் பாகம் வரவில்லை. துவாரகா பதிவில் எலிக்குட்டியை வைத்தால் கீழே task barக்கு மேலே எல்லாமே வருகிறது. எலிக்குட்டியைக் கிளிக்கினால் தேடுதலில் போய்ப் பார்க்கச் சொல்லுகிறது. தேடு பட்டனை அழுத்தினால் this page cannot be found என்று வழக்கம்போல் வருகிறது.

போகட்டும். முதல் நாள் சுப்ரமண்யாவில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் மங்களூர் கோயில்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது டிரைவரிடம் மறுநாள் சீக்கிரம் வரும்படிக் கேட்டுக் கொண்டோம். அதன்படி திரு நசீரும் காலை 5-30 மணிக்கு வந்தார். நல்ல அருமையான காலை நேரம். சுகமான காற்று.பயணம் இனிமையாக இருந்தது. வழியில் நேத்ராவதி ஆற்றைக் கார் கடந்தது. கர்நாடகாவிற்கு எவ்வளவு இயற்கை வளங்களை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தண்ணீருக்குக் கூடப் பிறரிடம் கை ஏந்தும் நிலையில் இருக்கும் நாம் இருக்கும் கொஞ்ச வளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறோம். தாமிரபருணி நதியை விட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் நதி எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நேத்ராவதி ஆற்றுக்குப்பின் 2,3 இடங்களில் back water எனப்படும் இடங்களை வண்டி கடந்து "கட்டீல்" என்னும் க்ஷேத்திரத்தை நோக்கிப் போனது.மங்களூரில் இருந்து கட்டீல் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர்.
ஜாபாலி முனிவரின் யாகத்திற்காக அவர் காமதேனுவின் உதவியை நாட அது தன் மகளான நந்தினியின் உதவியுடன் யாகத்தை முடிக்கச் சொல்கிறது. நந்தினியோ முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபிக்கிறார். மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போதுதேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர். தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.
கோயில் கேரள பாணியில் தான் உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கோயில்களும் கேரள பாணியில் தான் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் ஊழியர்களையும் சில உள்ளூர் பக்தர்களையும் தவிர யாரும் இல்லை. ஆகவே தரிசனம் நன்றாக இருந்தது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். அங்கேயே ஒரு ஹோட்டலில் காபி என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு திரவத்தைக் குடித்துவிட்டு அங்கிருந்து உடுப்பி நோக்கிப் புறப்பட்டோம். இதற்குப் பின் தான் உடுப்பி பற்றி எழுதினேன். இது என்ன தொழில் நுட்பகோளாறினாலோ பிரசுரம் ஆகவில்லை. இதைப் படித்து விட்டு உடுப்பி பற்றிப் படிக்குமாறு படிப்பவர்களை ( யாரும் இருந்தால்) கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, May 07, 2006

வெற்றிகரமாக முடிந்த பயணம்-2

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் முழுக்க முழுக்க சாளிகிராமத்தால் ஆனவர்.பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணையின் பெயரில் விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் இதைச் செய்து முடிக்கிறான்.
துவாபரயுக முடிவில் தேவகிக்குத் தான் தன் குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாள். தன்னைப் பெற்ற தாயின் வருத்தம் தீரக் கிருஷ்ணர் தன் தாயான தேவகிக்கு மீண்டும் பாலலீலைகளை நிகழ்த்திக்காட்டுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் ருக்மிணி அந்த பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வெண்ணை திருடி உண்ணும் பாலகன், யசோதையிடம் திருவாய் திறந்து உலகம் காட்டிய கண்ணனின் பாலலீலைகளில் மெய்ம்மறந்து அந்த பாலரூபம் தனக்கு தினமும் தான் பூஜை செய்து வழிபட ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கண்ணனிடமே கண்ணனைத் தருமாறு கேட்கிறாள். கண்ணனும் இசைந்து விஸ்வகர்மாவிடம் சொல்லிச் செய்து தரச் சொன்ன அந்த பாலகிருஷ்ணன் ஒரு கையில் மத்தோடும், மறு கையில் கயிறோடும் இருக்கிறான். ருக்மிணி பூஜை செய்து வந்த அந்த விக்ரஹம், அர்ஜுனன் கையில் கிடைக்க அவன் அதை ருக்மிணியின் தோட்டத்தில் மறைத்து வைக்கிறான். காலப்போக்கில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப் படுகிறது. துவாரகாவிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சிறிய கப்பலில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு மேற்குக்கடற்கரைப் பகுதிக்கு வியாபாரத்திற்கு வருகிறது. உடுப்பிக்கு அருகில் "வடபண்டேஸ்வர்" என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு அருகில் வரும்போது புயற்காற்று அடிக்கிறது. பகவான் ஸ்ரீமத்வருக்கு ஞானதிருஷ்டியில் கப்பலும் அதற்குள் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட கிருஷ்ணரும் தெரிகிறார்கள். உடனே அவர் கடற்கரை நோக்கி போய்த் தன் மேல்வஸ்திரத்தை வீசிக் காற்றை நிறுத்துகிறார். கப்பல் தலைவன் அவரின் புனிதம் உணர்ந்து தன் கப்பலையே அவருக்குக் காணிக்கையாக்குகிறான். ஆனால் மத்வரோ அந்த கோபிச்சந்தனத்தோடு திருப்தி அடைகிறார். gspot.com/">My thoughts

Friday, May 05, 2006

My thoughts

My thoughts சிக்னல் இல்லை.
என்ன காரணம் என்று புரியவில்லை. இன்று modem signal கிடைக்கவில்லை. 10 நிமிஷமாகக் காத்திருக்கிறேன். இப்படித்தான் ஆகிறது. ஒன்று லிங்க் சரியாக இருப்பது இல்லை அல்லது மோடம் தகராறு. இத்தனை நிபுணத்துவம் பெற்றவர்களால் ஒரு internet connection ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை. என்ன நாடு இது என்று ஆற்றாமையில் கோபம் தான் வருகிறது. 2,3 நாட்களாக இது தகராறு ரொம்ப.எழுதும் எண்ணமே போய் விடுகிறது.
இன்று எழுதி சேமிப்பில் போட்டு விட்டுப் பின்னர் தான் பதிவில் போட வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள ரோடு வசதியைப் பார்த்தால் அரசாங்கம் ஜனங்களுக்கு இவ்வளவு வசதி கூடச் செய்து தருமா என்று பொறாமையாக இருக்கிறது. குஜராத்தில் இருந்த போதும், ராஜஸ்தானில் இருந்தபோதும் தண்ணீர் வசதிக்கு அரசு செய்யும் ஏற்பாடுகளைப் பார்த்தாலும் இந்த எண்ணம் தோன்றியது உண்டு. மாறி மாறி வந்த அரசுகள் எதுவும் இப்படி ஓர் அடிப்படை வசதியை நமக்குக் கொடுக்கவில்லை.கழிப்பறை வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் எல்லாவற்றையும் பார்த்தால் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்று புரியும். அதுவும் தர்மஸ்தலாவில் வரிசையில் நின்ற 3 மணி நேரத்தில் எத்தனை இடங்களில் பெரிய அண்டாக்களை வைத்துத் தண்ணீர் நிரப்பி 2 பெண்களைப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் இலவசம் தான். மக்களுக்கு எது அடிப்படைத்தேவையோ அதை இலவசமாகக் கொடுப்பது தான் உண்மையான அரசு.இங்கே காசு கொடுத்துப் போனால் கூட சுகாதாரம் இல்லாமல் தான் இருக்கிறது. அங்கே தண்ணீரும் இருக்கிறது. உபயோகிக்கவும் தெரிகிறது. வரிசையிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது. உண்மையில் நாம் தமிழ், இனம், மானம் என்று சொல்லிக்கொண்டு எதுவும் சாதிக்கவில்லை.மலை மேலே உயரத்தில் எல்லாம் தண்ணீர் வசதி கொண்டு போயிருக்கிறார்கள்.அதே போல மங்களூரில் போர்ட்டருக்குக் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகள் தெரிந்திருப்பதால் வசதியாக உள்ளது. கோவில்களிலும் அநேகமாக எல்லாருக்கும் தமிழ் தெரிகிறது.நாம் சொல்லுவதைப் புரிந்து கொண்டு நமக்கும் எப்படியோ புரியவைத்து விடுகிறார்கள்.உள்ளூர் மக்கள் தமிழ் புரிந்து கொள்கிறார்கள். கொஞ்சம் படித்தவர்கள் என்றால்ஆங்கிலம் தெரிகிறது.மக்கள் வெகு தூரம் போய் வேலை பார்ப்பது அவ்வளவாக விரும்புவது இல்லை. அவர் அவர் ஊரிலேயே கிடைத்தால் நல்லது. அதிகம் போனால் கர்நாடகாவிற்குள்ளேயே பங்களூர், மங்களூர், மைசூர் போன்ற பெரிய ஊரில் கிடைத்தால் போதும்.வெளியில் போனால் இந்த மாதிரி ஒரு கிளைமேட்டோ, தண்ணீர் வசதியோ கிடைப்பதில் சந்தேகம் தான்.மேலும் பால் நல்ல பசுவின் பாலாக இருக்கிறது. பசும்பால் பழகியவர்களுக்கு மற்றப் பால் கொஞ்சம் கஷ்டம்தான்.நான்மதுரையில் இருக்கும்போது பசும்பாலில் பழகிவிட்டுப் பின் எருமைப்பாலுக்கு மாறும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.இப்போதும் மதுரையில் காபி, டீ, தயிர், மோர் என்றால் tasteஆக இருப்பது போல் தான் இருக்கிறது.எதுவோ எழுத ஆரம்பித்து எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன்.இன்னும் modem connection வரவில்லை. Tata Indicom Customer Careடன் இத்தனை சண்டை யாராவது போட்டிருப்பார்களா என்று ஆச்சரியம்தான். ஆனாலும் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள்.நாம் என்ன கத்தினாலும் அவர்கள் அதைக்கேட்டுக்கொண்டு புகார் எண் தான் தர முடியும். Technical Department எப்போ முடியுமோ அப்போ தான் சரி செய்யும்.24 மணி நேரம் கொடுத்துவிட்டார்கள். எப்போது வருமோ தெரியாது.

Wednesday, May 03, 2006

வேலையில் சுணக்கம்
இரண்டு நாளாக வேலை கொஞ்சம் அதிகம் இருந்ததாலும் நேற்றுப்பூரா internet connection கிடைக்காததாலும் ஒன்றும் எழுத முடியவில்லை. அடிக்கடி இப்படி ஆகிறது. Broadband connection வந்த பிறகு தொந்திரவு இருக்காது என்று நினைத்தால் அடிக்கடி link போய் விடுகிறது. அல்லது server problemவந்து விடுகிறது.நடுவே ப்ளாக்கர் சொதப்பல் வேறு. இன்னும் ஊர் போய் விட்டு வந்த மிச்சம் நாளை எழுத வேண்டும். அதற்குள் பதில் போட வேண்டியவர்களுக்கு பதில் கொடுத்து விடவேண்டும்.இது ஒரு பதிவா என்று அம்பி கேட்பது காதில் விழுகிறது. என்ன செய்ய? கேசரி பற்றி எழுதினால் அம்பிக்குப் பிடிக்கும். அது அம்பியின் பதிவு என்று தெரியாமலே நிறைய முறை படித்திருக்கிறேன். சாப்பாடு பற்றி எழுதுவது என்றால் தனியாக ஒரு ப்ளாக் வேண்டும். என்னுடைய நாலு பதிவில் நான் எனக்குப் பிடித்த சாப்பாடு பற்றிக் கூறவில்லை. தனியாக எழுதிக் கொள்ளலாம் என்றுதான்.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பார்கள். நிஜமாக சாப்பாட்டில் நாங்கள் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ருசித்திருக்கிறோம்.பஞ்சாபின் பைங்கன் பர்த்தா, ருமாலி ரோட்டி, காஷ்மீரின் பாசுமதி அரிசியுடன் சேர்ந்த ராஜ்மா, உத்தராஞ்சலில் சாப்பிட்ட தவா ரோட்டி, பத்ரியில் சாப்பிட்ட இட்லி, சாம்பார், உத்தரப் பிரதேசக் காசியில் சாப்பிட்டத் தென்னிந்தியப் பாரம்பரிய உணவு, ராஜஸ்தானின் சூர்மா மற்றும் தால் பாட்டி, ராஜஸ்தான், நசிராபாத்தின் special உணவான கச்சோடா மற்றும் ஜிலேபி(இது உளுத்தம்பருப்பினால் செய்யப்படும் ஜாங்கிரி அல்ல), அங்கு கிடைக்கும் சாக்லேட் எனப்படும் மில்க் ஸ்வீட், அஜ்மேர் மதார்கேட்டில் கிடக்கும் ஆலு சாப்ஸ் மற்றும் தயிர் வடை, மஹாராஷ்டிராவின் பாசந்தி மற்றும் சாபுதானா கிச்சடி, கத்திரிக்காய் சாதம், பிஹாரில் சாப்பிட்டது, கல்கத்தாவின் மாவா லட்டு, அஜ்மேர் புஷ்கரில் மட்டும் கிடைக்கும் மால்புவா எனப்படும் மில்க் ஸ்வீட், கர்நாடக உணவு தித்திக்கும் சாம்பார், கொத்துமல்லிச் சட்டினி,ஆந்திராவின் ஊறுகாய் மற்றும் வடை,கேரளாவின் குழாய்ப்புட்டு, கடலக்கறி, அதைத் தவிர இருக்கவே இருக்கிறது நம் தமிழ் நாட்டு உணவு. இந்த்தனையும் நான் ஒருத்தி மட்டும் சாப்பிட்டேன் என்று நினைக்காதீர்கள். போதாக்குறைக்கு குஜராத்தின் டோக்ளாவை விட்டு விட்டேன். அங்கிருந்து சண்டை போடுகிறார்கள். 5,6 வருடம் எங்கள் ஊரில் இருந்து விட்டு நன்றி மறந்தாயே என்று. இன்னும் இருக்கிறது. எழுத.கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். என்ன ஒரு கஷ்டம் என்றால் இப்படி வித விதமாகச் சாப்பிட்டதால் ஒரிஜினல் டேஸ்ட்டே மறந்து விட்டது. போதாக்குறைக்கு போன வருஷம் யு.எஸ்ஸில் சாப்பிட்ட Starbucks Latte எனப்படும் காபி, Mac-Donaldன் Chocklate drink என்று எத்தனையோ இருக்கிறது. அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்.காயோ, கனியோ, பூவோ, பழமோ இந்தியாவின் சுவையை மிஞ்ச எதுவும் இல்லை.

My thoughts

My thoughts கடவுளுக்குக் கண்ணில்லை

ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இன்று g-mail பார்க்கும்போது இந்த மாதிரி ஒரு செய்தியைப் படிக்கும்படி நேரும் என்று நினைக்கவில்லை. திரு மஞ்சூர் ராஜாவின் செய்தி. அவர் நண்பர் தன் பெண்ணையும், பையனையும் காரில் கூட்டிச் செல்லும் வழியில் signalக்காக வண்டி நிற்க cellphoneல் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். எதிர் பக்கமிருந்து வந்த வண்டி மோதி பையன் உடனேயே போய் விட்டானாம். பெண்ணும் திங்கள் அன்று போய் விட்டாள்.முறையே 10லிருந்து 6 வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள். இப்போதெல்லாம் இந்த மாதிரி சாவுகள் அதிகரித்து உள்ளன. பாதிக்காரணம் கைதொலைபேசி. அதை வைத்துக்கொண்டு இளைஞர்கள் எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். பெரியவர்களும் கூட. வண்டி ஓட்டும்போது பேச வேண்டாம் என்றால் யார் கேட்கிறார்கள்? போன வருடம் குரோம்பேட்டையில் இளம் பெண்கள் கூட இதனால் ரயிலுக்குப் பலியானார்கள். அதிகம் இளைஞர்கள் சாவது இதன் காரணத்தால் தான். ஒரு வகையில் அண்ணா யுனிவர்சிட்டித் துணை வேந்தரின் உத்தரவு சரியென்று தோன்றுகிறது. அந்தக் குழந்தைகள் கைத் தொலைபேசியில் பேசவில்லை என்றாலும் அவர்கள் தந்தையின் அஜாக்கிரதை தான் இதற்குக் காரணம் என்பது மறுக்க முடியாது. பாவம், தன் குழந்தைகளின் சாவுக்குத்தான் காரணமாக அமைந்தத் பற்றி அவர் எவ்வளவு துடிப்பார்? அந்தத் தாய் எத்தனை வேதனைப் படுவாள்?கடவுள் ஏன் சிலருக்கு இம்மாதிரித் தண்டனை கொடுக்கிறார் புரியவில்லை. நாம் காய்கறி வாங்கும்போது பிஞ்சுக் காய்களாகப் பொறுக்குவது பார்த்துவிட்டு அவரும் இம்மாதிரி மாறிவிட்டாரோ?கடவுள் அந்தத் தாய் தந்தையருக்கு மன ஆறுதல் கொடுக்கப் பிரார்த்திப்போம்.