எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 29, 2006

123. தலைவியின் வடமாநிலத் திக்விஜயம்

சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, மற்றும் உள்ள பெருமக்களே, எல்லாருக்கும் தலைவியின் பேரன்பு கலந்த வாழ்த்துக்கள். இப்போது தலைவி தன் சுற்றுப் பயணத்திட்டத்தை அறிவிப்பார்.
தலைவியை ஏற்கெனவே,
அப்துல் கலாம் அவங்க கூப்பிட்டாஹ!
மன்மோகன்சிங் அவங்க கூப்பிட்டாஹ!
சோனியா காந்தி அவங்க கூப்பிட்டாஹ!
வாஜ்பாய் அவங்க கூப்பிட்டாஹ!
சோம்நாத் சாட்டர்ஜி அவங்க கூப்பிட்டாஹ!

ஹி,ஹி,ஹி, இத்தனை பேர் கூப்பிட்டிருக்கறப்போ போகாமல் எப்படி? அதான் போறாங்க! அங்கேயும் போய்க் களப்பணி ஆற்றி வெற்றிக் கொடி நாட்டி விட்டு வருவாங்க. அதுவரை சங்கத்தின் பொறுப்புக்களையும், எல்லாருக்கும் ஆப்பு வைக்கும் சிறப்புக்களையும் யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பம்! ஏற்கெனவே அம்பிக்கு ஆப்பு வைத்த மகோத்ஸவத்தில் கலந்து கொண்டவர்களில் யாரையாவது போடலாம்னு பார்த்தா இந்தக் கைப்புள்ள ஏற்கெனவே அம்பி காட்டிய பஞ்சாபிக் குதிரையைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போயிருக்கார். அவர் சரியா வராது. தானா வலுவிலே வந்து மாட்டிக்கும் தேவ் சரியானு பார்த்தா, பாவம் அப்பாவி, இப்போ தான் குழந்தை பிறந்திருக்கு. கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்னு பார்க்கறாங்க.

விவசாயி நேத்திக்கு வந்து இரண்டு முறை தலையிலே அடிச்சுக்கிட்டதிலே தலையிலே ஏதாவது இருக்கானு சந்தேகம்! :D வேதாள வேதாவை நம்பவே முடியாது. எப்போ நம்ம பக்கம், எப்போ அம்பி பக்கம், எப்போ ச்யாம் பக்கம்னு மாறி மாறி இருப்பாங்கனு புரியாது. லதா புதுசு. இப்போ தான் விண்ணப்பம் வந்திருக்கு. அது தவிர ஆப்பு வக்கிற லிஸ்டே நிறைய இருக்கே அதுக்கு என்ன செய்யறது? இன்னும் வேதா, சிவா, ச்யாம் எல்லாரும் முதல் நிலையில் ஆப்பு வாங்கக் காத்திருப்புப் பட்டியலில் இருக்காங்க! அது தவிர கைப்புள்ள சங்கத்திலே வாங்கறது போதாதா? இங்கே வேறயானு பயப்படறார். இந்த தேவ் பாவம் ஆப்புனு தெரியாம வந்து மாட்டிக்கிறதாலே அவருக்கு வைக்க மனசு வரலை. விவசாயிதான் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. மின்னல், கார்த்திக் இவங்க கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருக்காங்க. இதிலே மின்னல் என்னவோ புள்ளி விவரம் எல்லாம் சொல்றதினாலே ஆப்புப் புள்ளி விவரமும் கொடுத்தால் என்ன செய்யறதுனு புரியலை! கார்த்திக் ஏதோ சொன்னதாலே இன்னிக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போயிருக்கார். ஆப்பு வச்சா அப்புறம் வருவாரா? சந்தேகம் தான்,. ஒரே குழப்பமா இருக்கு தலைவிக்கு!

தவிர, இம்முறை பிரிவுபசார விழா வேறே தொங்கல்லே இருக்கு. போனமுறை கார்த்திக் போஸ்டர் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திட்டார். இம்முறை செய்வாரா? சந்தேகம் தான். இந்த சிவா வேறே அவர் தலையில் பொறுப்பைக் கொடுத்தால் ஒரே அழுகை! அவருக்கு லாலிபாப் வாங்கவே நேரம் போதலை. அதனால் தலைவி ஆப்பு வைக்கும் தங்கமான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார். யாருக்கும் விடவில்லை. பிரிவுபசார விழாவுக்கும் தலைவி "நமக்கு நாமே" திட்டத்தின் படி அவருக்கு அவரே விழா எடுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.
சங்கத்தின் தங்கத் தலைவி, புரட்சித் தலைவி, யானைத் தலைவி, (சீச்சீ) தானைத் தலைவி, வடமாநில திக் விஜயம்!!!!!!!!!!!!!!!!!!!
அங்கே பொறுப்பில் உள்ளவர்கள் வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து தலைவி தங்கவும், தலைவர்களைக் கலந்து ஆலோசிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு தலைமைக் கழகம் உத்திரவிடுகிறது. (தலைமைக் கழகம்னா என்ன, எல்லாம் நானே தான்) வேறு வழி? எல்லாம் தலை எழுத்து! ஒரு புகழ் பெற்ற தலைவியா இருந்துட்டு நானே எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. :D

122. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!

ஆப்பு அம்பிக்கும், வேதாள வேதாவுக்கும் ஆனந்தம்!
நாகை எலி(சீச்சீ) எல்லாம் இந்த வேதாவாலே வந்தது.
சூடான் புலிக்கும் ஆனந்தம்.
தி.ரா.ச. சார் ஏற்கெனவே அலுத்துப் போய் வரதை நிறுத்திட்டார். அதுவும் அந்த முறுக்கு சாப்பிட்டதில் இருந்து வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டார் போல் இருக்கு. அம்பியும், நானும் போடற சண்டை அவங்க வீடு வரை போய்க் கேட்டால் பின்னே என்ன சும்மாவா? இனிமேல் ஆனந்தம் தான் சார் உங்களுக்கும்.
மின்னல், வந்து ஆஜர் கொடுக்க வேண்டாம்
.ச்யாம், வந்து பார்த்துட்டு ஏதாவது சொல்லணுமேனு சொல்ல வேண்டாம்.
கார்த்திக் இனிமேல் தைரியமா இங்கே வராமல் அவர் வால்மார்ட், அல்லது டார்கெட் அல்லது க்ரோக்கர் போகலாம். அங்கே தமிழ்க்காரர்களைப் பார்த்து அரட்டை அடிக்கலாம்.
கைப்புள்ள இனிமேல் அம்பி காட்டும் ஆஸ்திரேலிய கங்காருவையோ, வங்காளப் புலியையோ, திபேத் எருமையையோ, ஆப்ரிக்கா யானையையோ பார்த்து ரசிக்கலாம்.
அம்பி ஏற்கெனவே எழுதும் பில்டப் பதிவுகளை இன்னும் விரிவு படுத்தி எழுதலாம்.
புதுசா வரும் kn own stranger கொஞ்சம் பொழுது போகாது, பொறுத்துக்குங்க.
இப்போ க்ளப்லே சேர அப்ளை பண்ணி இருக்கும் லதா கொஞ்சம் பொறுங்க. தொடர்ந்து வந்திருந்தா பிரச்னை இல்லை.
சின்னக்குட்டி உங்க பதிவிலே இருந்துக்கிட்டே ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டாம். ஒரே ஆனந்தக் கண்ணீர்தான் இனிமேல்.
**********************
மேலே சொன்ன நிகழ்வுகளுக்கு எல்லாம் காரணம் நான் நாளை டெல்லி போகிறேன். வரக் கொஞ்ச நாள் ஆகும். வழக்கம்போல் திரும்பி வர டிக்கெட் confirm ஆகவில்லை. அதுவரை தைரியமாக இருக்கலாம். என்னோட torture இருக்காது. ஆகவே தோழர்களே, தோழியர்களே எல்லாரும் ஜோரா ஒருமுறை கையைத் தட்டிட்டு சந்தோஷமா இருங்க, பார்க்கலாம்.

Sunday, August 27, 2006

நாகை சிவாவிற்கு நன்றி

தன்னுடைய வேலை மும்முரத்திலும், விடுமுறையிலும் கூட எனக்காகத் தனியாக வேலை செய்து, நடுவில் நான் குறுக்கிட்டதையும் பொறுத்துக் கொண்டு எனக்கு மிரட்டல் விடுத்து என்னை தொந்திரவு கொடுப்பதில் இருந்து தடுத்துத் தன் வேலையைத் திறம்படவும், வெற்றிகரமாயும் முடித்துத் தந்த திரு நாகை சிவாவிற்கு நன்றி எதுவும் கிடையாது. தமிழ் மணத்தில் போய்ப் பதிவு செய்வது வரை செய்து விட்டு வந்திருக்கிறார் மனுஷன். அவருக்குப் போய் நன்றியாவது, ஒண்ணாவது. ஒண்ணும் இல்லை. தினம் எழுதும்போது நினைத்துக் கொள்வேன், இது அவரால் வந்தது, அதான் எழுதறோம்னு. சும்மாத் தட்டச்சுப் பண்ணிட்டு நான் பேர் வாங்கறதே பெரிசுன்னா இதெல்லாம் என்ன?
எல்லாரும் எல்லாமும் வசதியாப் பண்ணிக் கொடுத்துப் பின் நான் அதிலே எழுதறதுக்குப் பாராட்டோ, பின்னூட்டமோ வாங்கறது கூடத் தப்புன்னு என் மனசாட்சி சொல்கிறது. ஆனால் ஆசை யாரை விட்டது? அது பாட்டுக்குப் பின்னூட்டம் வந்திருக்கானு எதிர்பார்க்கும். நம் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம், நம்ம "ego" விற்கு ஒரு திருப்தி. நல்லாத் தெரியும். இருந்தாலும் அதை நிறுத்த முடியாது. பின்னூட்டம் வரலைன்னா ஏன் வரலைனு மனசு கேட்கும். உடனே போய் ரொம்ப நெருங்கியவர்கள்னா ஏன் வரலியானு கேட்போம். உண்மையா எழுதிப் பின்னூட்டம் வாங்கறவங்களுக்கு இல்லை இது. என் மாதிரி விஷயமே இல்லாமல் எழுதறதுக்குக் கூடப் பின்னூட்டம் எதிர்பார்க்கிறது அதிகம் இல்லையா? அதுக்காக யாரும் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுக்காமல் இருக்க வேண்டாம். வழக்கம் போல வந்து தலையிலே அடிச்சிக்கிட்டுப் போயிடுங்க! :-)

Saturday, August 26, 2006

120. எனக்கு நானே வைத்த ஆப்பு!

போன போஸ்ட் எழுதினதிலே இருந்து மனசே சரியில்லை. வழக்கமா அம்பிக்கு அல்லது வேதாவுக்கு ஆப்பு வைப்போம். இந்த முறை மாறி "நமக்கு நாமே" திட்டம் படி ஆப்பையுமா நமக்கு நாமே வச்சுக்கறது எடுத்துடலாம் போஸ்ட்டையேனு திரும்ப வந்தேன். அதுக்குள்ளே இந்த அம்பிக்கு ஒரே அவசரம். கமெண்ட் கொடுத்தாச்சு, என்னனு பார்க்க எனக்கு ஒரே அவசரம், பப்ளிஷ் பண்ணிப் பதிலும் கொடுத்தாச்சு, இருந்தாலும் எடுத்தால் தான் நிம்மதி, திரும்ப அம்பிக்கே ஆப்பு வச்சு எழுதினாத் தான் சாப்பாடு ஜீரணம் ஆகும் போல் இருந்தது. அம்பி வேறே மெயிலில் என்னைத் தானே வாரப் போறீங்க வழக்கம் போல எனக் கேட்டிருந்தாரா? அவரோட ஆசையையும் நிறைவேத்தணும் இல்லையா? இப்போ பாருங்க சரளமா எழுத வருது, போன பதிவு எழுதவே முடியலை.
சரினு திரும்பப் போஸ்ட்டை எடிட்டுக் கொண்டு வந்தா ஒரே டான்ஸ் ஆட ஆரம்பிச்சது. இது என்ன இது எல்லாம் கூட ப்ளாக்கில் நடக்குமா என்ற ஆச்சரியத்துடன் எதையோ க்ளிக் செய்தேன். பக்கமே போய் விட்டது. திரும்பக் கொண்டு வரலாமா வேண்டாமா என நினைப்பதற்குள் மூளையில் ஒரு "பளிச்". உடனே போனேன் ஜி-மெயிலுக்கு. அங்கே போனால் சூடானில் இருந்து புலி உறுமிக் கொண்டிருந்தது. கையைக் காலை வச்சுக் கொண்டு பேசாமல் இருக்கீங்களா இல்லையா? என்று ஒரே உறுமல். நிஜமாவே பயமாப் போச்சு. அப்புறம் புலியைக் கூப்பிட்டு சமாதானப் படுத்தி (என்ன வழக்கம் போல லாலிபாப் இல்லை, சிறப்புப் பரிசாகக் கடலை மிட்டாய்ப் பாக்கெட்) வாங்கிக் கொடுத்து விட்டு, நான் நிஜமாவே ஜகா வாங்கினேன். அப்புறம் இப்போ வந்து பார்த்தால் என்னோட ப்ளாக் என்று என்னால் நம்பவே முடியலை. தவிர, மேலும் சில பின்னூட்டங்களும் வந்துட்டது. காணாமல் போன பதிவும் சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. சரி, இது இப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். ஆனாலும் அம்பி, வேதா இவங்களை ஒரு வழி பண்ணலைன்னா நமக்குத் தூக்கம் ஏது? அதுவும் இந்த வேதாவை நான் உ.பி.ச.வா அங்கீகரித்திருக்கிறேன். அப்பக்கூட அவங்க அம்பி கூட சேர்ந்துக்கிட்டு "சரவணா,ன்னா என்னனு தெரியலை, உங்களுக்கு வயசு ஆயிடுச்சு" னு கேலி செய்யறாங்க. நான் பாட்டுக்கு சமத்தா என் ப்ளாக் உண்டு, நான் உண்டுனு இருக்கிறப்போ எங்கேங்க சினிமா அதுவும் ரஜினி படம் பார்க்கிறது. நல்லவேளை ரொம்ப நாள் கழித்து வந்தாலும் இந்த லதா புண்ணியம் கட்டிக் கொண்டார். ரொம்ப தாங்ஸ் லதா. நாளை அம்பியையும், வேதாவையும் ஒரு வழி பண்ணிடறேன். ம்ம்ம்ம், நாளை பார்க்கலாம்.

**********************
முந்தாநாள் இந்த மாதிரித் தான் ஒரு பதிவை மீள்பதிவாக முத்தமிழ்க்குழுமத்தில் போட முயற்சி செய்யும் போது என்ன செய்தேன்னு தெரியலை. Bold வர வேண்டிய இடத்தில் கரெக்டா வருது. font எப்படி மாறிச்சுனு தெரியலை, இந்த மாதிரி எப்படி வந்ததுனு திருப்பிப் பார்த்தால் எப்படின்னும் புரியலை.
இப்போவே பாருங்க, சிவா இல்லாட்டி இந்த மாதிரி வந்திருக்காது. மறுபடி எல்லாப் பதிவும் காணாமல் போயிருக்கும். எல்லாம் அந்த வேதாளம் செய்யற வேலை. ஆனால் மற்ற யார் செய்தாலும் அவங்களுக்குச் சரியா வருது. எனக்கு மட்டும் தான் வேதாளம் வந்துடுது. ம்ம்ம்ம், சிவா, எனக்குச் சொல்லிக் கொடுக்கிறதை விடத் தானே செய்யறது சுலபம்னு கண்டு பிடிச்சுட்டார். எப்படியோ இனிமேல் ஆன்மீகப் பதிவுகள் தனியாகவும், ஆப்புப் பதிவுகள் இந்தப் பக்கத்திலேயும் வரும். சிவாவுக்கு நன்றி.

119. நான் பெற்ற விழுப்புண்கள்

இது நான் "ஆப்பு அம்பி"யோடயோ அல்லது "வேதாள வேதா" (நன்றி:நாகை சிவா) வோடயோ போட்ட சண்டையினால் வந்தது இல்லை. அன்றாடம் நான் செய்யும் திருவிளையாடலினால் ஏற்படும் விழுப்புண்கள். இதற்கு முழுக் காரணம் நான் தான். எப்படின்னு கேட்கறீங்களா? இறைவனுக்கு 64 திருவிளையாடல் தான் என்றால் எனக்குத் தினம் தினம் திருவிளையாடல்தான். அதுவும் சின்ன வயசிலே இருந்தே ஆரம்பிச்சது.
நான் ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்தபோது ஹி,ஹி,ஹி, நிஜமான சின்னப்பொண்ணு, இப்போ இருக்கிற சின்னப்பொண்ணு இல்லை தோசைக்கல் எங்க அம்மா அப்போதான் அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருக்கிறார். உடனேயே நான் போய் "தோசை அம்மா தோசை" பாட்டுப் பாடிக் கொண்டே போய் உள்ளங்கையால் தடவி விட்டேன். அப்புறம் நடந்தது நான் சொல்ல வேண்டாம். அது மாதிரிதான் ஒருமுறை வெந்நீர் கொட்டி வலது கை இன்னும் நிறம் மாறித் தெரியும். இந்தத் திருவிளையாடல் அப்புறமும் தொடர்ந்தது. ஒரு முறை சின்னமனூரில் எங்க சித்தி வீட்டுக்குப் போயிருக்கும்போது (இது வேறே சித்தி, இவங்களும் என் அம்மாவின் தங்கை தான்) அங்கே சித்தி என்னை,"பாய்லரில் நெருப்புப் போட்டிருக்கிறேன், பிடித்து விட்டதா பார்" என்று சொல்ல நானும் போய்ப் பார்த்தேன். உள்ளே நெருப்பு கனிந்து கொண்டிருந்தது. சரி, என்று சற்று உள்ளே குனிந்து பார்த்தால் என்ன ஆச்சுனு தெரியலை முகமெல்லாம் ஒரே சூடு, உடனேயே உள்ளே சித்தி கிட்டே வந்து விவரம் கேட்க, சித்தி தலையில் அடித்துக் கொண்டார். "உன்னை யார் குனிந்து பார்க்கச் சொன்னது? அப்படியே குனிந்தாலும் இந்த மாதிரியா குனியறது? முன் தலை முடியெல்லாம் பொசுங்கிப் போச்சு, நல்லவேளை, ஒண்ணும் ஆகலை," என்றாள்.
அதுக்கு அப்புறம் எங்க வீட்டில் stove அடுப்புக் கூட வைத்துக் கொள்ளவில்லை. கரி அடுப்புத்தான். அதுவும் நான் வேலை செய்தால் சுற்றி ஒரு கூட்டமே கூட இருக்கும். கல்யாணம் ஆகி வந்த போது இந்த விஷயம் தெரியாத புக்ககத்தார் என்னை விறகு அடுப்பிலேயே சமைக்கச் சொல்ல, உடலில் எங்கே எங்கே சுட்டுக் கொண்டேன் என்ற கணக்கே இல்லை. அது தான் போதாது என்று காய் நறுக்குகிறேன் பேர்வழி என்று கையை வெட்டிக் கொண்டு நிற்பேன். நான் இந்த மாதிரிக் கையை வெட்டிக் கொண்டதில் என் கணவர் தன் சம்பளம் போதுமா band aid வாங்க என்று கவலைப் பட ஆரம்பித்து விட்டார்.
அப்புறம் எங்க வீட்டிலே அரிவாள்மணைக்குத் தடா, கத்தி எல்லாம் சாணை பிடிக்கிறது என்றால் என்னனு கேட்கும். அப்போ அப்போ என் கணவர் தீட்டி வைப்பார். தீட்டி வைத்த சில நாட்களுக்கு எனக்குக் காய் நறுக்கவும் தடா. ஆனாலும் அதையும் மீறி வெட்டுப் பட்டுக் கொண்டு வந்து நிற்பேன். எங்கள் வீட்டுப் பக்கம் இருக்கும் மருந்துக் கடைக்காரர் என் கணவரைப் பார்த்தாலே band aid எடுத்துக் கொடுக்கும் அளவு தேர்ந்து விட்டார்.
எல்லாத்தையும் மீறி நான் சுட்டுக் கொள்வது அளவே இல்லாமல் எப்போ எங்கே சுட்டுக் கொள்வேன் என்று எனக்கே ஒரு திகில் கலந்த ஆச்சர்யமாகி விட்டது. ஒரு நாள் கையில் என்றால் அடுத்த நாள் முகத்தில் எப்படி வந்தது என்றே தெரியாது சுட்டிருக்கும், யாராவது பார்த்துக் கேட்பார்கள். அப்படித்தான் ஒரு நாள் குக்கர் இறக்கும்போது சுட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கே தெரியலை, எங்க பொண்ணு பார்த்துவிட்டு அலறினாள். அது சற்றுப் பெரிதாக இருந்ததால் உடனே ATS Injection போடணும்னு டாக்டர் கிட்டேப் போனோம். டாக்டருக்கே ஆச்சரியம். நிஜமாவே குக்கர் சுட்டதா என்று. எப்படிங்க இது? என்று ஆச்சரியத்துடன் கேட்க, நான் உடனேயே, "வேணும்னா ஒரு action replay வச்சுக்கலாமா?" என்று கேட்க டாக்டர் திகைத்துப் போய் விட்டார். நல்ல வேளை குடும்ப டாக்டர். அதனால் பதில் ஒண்ணும் சொல்லலை.

அதுதான் போச்சுன்னா இந்த சாமான் இருக்கே அதை எல்லாம் ஜாக்கிரதையாத் தான் வைப்பேன் ஆனால் பாருங்க தோசைத் திருப்பியோ அல்லது இரும்புக் கரண்டியோ மேடையில் வைக்கும்போது கரெக்டா சினிமாவில் வில்லன் வந்து அம்மன் சூலாயுதத்தில் மாட்டிக் கொள்வானே அந்தப் பொசிஷனில் இருக்கும். குத்தும். அல்லது கையில் இப்படி சமைக்கும்போது எனக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகத்திலே யாருக்காவது நடக்குமா தெரியவில்லை. சமையல் என்னவோ அரை மணியில் ஆகி விடும். இந்த மாதிரிக் கஷ்டங்களால் நேரம் ஆகிறது. நேத்திக்கு இப்படித்தான் என் கணவர் கத்தியைத் தீட்டி வைத்ததைச் சொல்லவே இல்லை, கையில் அதுவும் வலது கையில் கீறிவிட்டது. அதோட தான் இப்போ தட்டச்சு செய்யறேன். நாட்டுக்காக எப்படி எல்லாம் உழைக்க வேண்டி இருக்கு, பாருங்க!
என்னோட தினம் தினம் விபத்துக்களால் சலிப்படைந்த என் கணவர் சொல்வது: உன் கையும், காலும் கட்டி விட்டு இனிமேல் நானே சமைக்கிறேன்.நான் பயத்துடன்: வேண்டாம், வேண்டாம், இனிமேல் ஜாக்கிரதையா இருக்கேன், நீங்க சமைச்சா யார் சாப்பிடுறது? அதுக்கு இதுவே பரவாயில்லை.
இப்போ குக்கர் எல்லாம் கிடையாது. எல்லாத்தையும் உள்ளே தூக்கிப் போட்டாச்சு. பின்னே எப்படி சாதம் வடிக்கிறேன்னு கேட்கறீங்களா? அது மட்டும் ரகசியம்.

Thursday, August 24, 2006

118.வேங்கடநாதனின் துயரம்

கருவிலியில் இருந்து பரவாக்கரை நுழையும் போது முதலில் பெருமாள் கோவில் வரும் என்று என்னுடைய 115-ம் பதிவில் மாணிக்கேஸ்வரர் கோவிலைப் பற்றிக் கூறும்போது எழுதி இருந்தேன் அல்லவா? அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,
"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறியாதவர்
தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.

எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை.

Wednesday, August 23, 2006

117. சபாஷ் வேதா!

முந்தா நாள் தற்செயலா வேதாவுக்கு மெயில் கொடுத்தேனா, அன்னிக்கு அவங்க பிறந்த நாள். எனக்கு அது தெரியாமலே கொடுத்தேன். அப்போ அவங்க கொடுத்த ஒரு பதிலில் அம்பியைப் பத்தி ஒரு certificate கொடுத்திருக்காங்க, பாருங்க. சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறே புண்ணாயிடுச்சு. தலைவிக்குப் பிடித்த அந்த வார்த்தையைப் print out எடுத்து, "தக தக தங்க வேட்டை" மாதிரி தக தக தங்க எழுத்துக்களிலே பொறிச்சு ஒரு பட்டயம் மாதிரி செய்து, அல்லது lamination செய்து அம்பிக்குப் பரிசளிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு எல்லாரும் ஏகபோக ஆதரவு தெரிவித்தனர்.

ஆகவே தோழர்களே, தோழியர்களே, அம்பிக்குப் பரிசளிப்பு விழா நம்ம கைப்புள்ள தலை மேலே, தேவ் கையாலே (தேவ், இப்போ கொஞ்சமாவது திருப்தியா? அடுத்த பதிவிலே நிறைய எழுதறேன்.) அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கு நேரம், இடம் முடிவு செய்தார், தலைவி. அதாவது நல்ல கொட்டும் மழையில் சென்னையில் எல்லாத் தெருக்களும் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கும் காலத்தில் இது நடைபெறும். (அப்போதான் யாருமே வர மாட்டாங்க.) பாராட்டு விழாவிற்கு லாரிகளிலும், வேன்களிலும் தொண்டர் படை மற்றும் குண்டர் படை அழைத்து வரப்படும். செலவு? வேறே யாரு? நம்ம விவசாயிதான். பட்டயத்திற்கு ஆகும் செலவு அல்லது lamination பண்ண ஆகும் செலவு எல்லாம் நம்ம நாகை சிவாவைச் சேர்ந்தது. இம்முறை அவர் தப்பிக்க முடியாது. அப்படி அவர் அழுது, அடம் பிடித்தால் அவருக்கு "லாலிபாப்" வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்யும் பொறுப்பு அம்பி, கைப்புள்ள ஆகியோர் ஏற்க வேண்டும். பாசமலர்களான வேதாவும், ச்யாமும் மின்சார விநியோகம் மற்றும் ஸ்பீக்கர் செட் செலவை ஏற்க வேண்டும். போன முறை தலைவியின் பிரிவுபசார விழாவிலும், வெற்றி விழாவிலும் ஏற்பட்ட முணுமுணுப்பைச் சமாளிக்கவே இம்முறை எல்லாம் பகிர்ந்து அளிக்கப் படுகிறது.

தலைவிக்குப் பாராட்டு விழாவுக்கு வர A/C Volvo Bus ஏற்பாடு செய்யும் பொறுப்பு அம்பியைச் சேர்ந்தது. பங்களூரில் இருந்து வரும்போதே அவர் அதைக் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார். தலைவியுடன் அவர் குடும்பத்தினர் ஒரு 50 அல்லது 60 பேர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்பதால் தான் பஸ்ஸே போதும் என்று பெரிய மனதுடன் தலைவி கூறிவிட்டார்.கார்த்திக் இப்போதுதான் புதரகம் போயிருப்பதாலும், அவர் ஊருக்குப் புதிசு என்பதாலும் அவர் விழாவில் கலந்து கொண்டால் போதும் எனத் தலைவி பெரிய மனதுடன் கூறி விட்டார். தலைவிக்குப் பிரிவுபசார விழாவில் போன முறை போஸ்டர் அடித்ததைத் தலைவி "தன் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்" என்றும் கூறினார்.

அம்பி அப்படி என்ன certificate வாங்கினார் என்று எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வேதா சொன்னது: "As usual Aappu Ambi is always wrong." ஆகவே தோழர்களே, தோழியர்களே, தலைவியின் வயதைப் பற்றி அம்பி கூறுவது தவறு என்று வேதாவே ஒத்துக் கொண்டு விட்டார். வெற்றி நமக்கே! வெற்றி வேல், வீர வேல்!

Tuesday, August 22, 2006

116.கைப்புள்ள போட்ட ஒப்பந்தம்

தோழர்களே, தோழியர்களே, பாருங்க எப்படி அன்பாக் கூப்பிடறேன்னு, என்னப் போய்

வயசாச்சு அது இதுனு இந்த மொக்கை ஸ்பெஷலிஸ்ட் அம்பி பேச்சைக் கேட்டுக்கிட்டு

கைப்புள்ள மாதிரி மனசை மாத்திக்காதீங்க! அது என்னன்னு கேட்கறீங்களா? சொல்றேன்
கேளுங்க.

நான் களப்பணி ஆற்றப் போனதும் அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்ததும் அனைவரும் அறிவீர்கள். ஆனால் இந்தக் கைப்புள்ள மட்டும் பிரிவுபசார விழாவுக்கோ, அல்லது

வெற்றி விழாவுக்கோ வரவே இல்லை. அப்போவே தலைவி நினைச்சார், ஏதோ சூது

இருக்குது இதிலேன்னு.ஆரம்பத்தில் இருந்து தலைவியை ஆதரித்த அவர் கடைசிலே

பார்த்தால் அம்பி கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறார். (இல்லைமுதலில் இருந்தே தான்)

வந்துடுச்சுங்க இந்த மன சாட்சி கூடக்கூடப் பேசறதுக்கு. சும்மா இரு. நான் தான் சொல்றேன்

இல்ல? இந்த அம்பி ஏதோ விஷமம் செய்து கைப்புள்ளயிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

தலைவி பாவம் ஒண்ணும் தெரியாத அப்பாவியாக "மாற்றான் வலைப்பூ பதிவும் நல்லது" என்று

அம்பியோட பதிவு, கைப்புள்ளயோட பதிவு, வேதாவோட பதிவு, சிவாவோட பதிவு, இங்கே வரவே வராத ச்யாமோட பதிவு, கார்த்திக்கோட பதிவு, மின்னல் தாத்தாவோட பதிவு, சின்னக்குட்டியோட பதிவு, தி.ரா.ச.வோட பதிவு (அவர் எங்கே எழுதறார், பாவம் 60 வயசு

ஆயிடுச்சா, எழுத முடியலை.என்ன, என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களாலே முடிஞ்சது

அவராலே முடியாது. விட்டுடுவோம்.) னு எல்லார் பதிவுக்கும் போய்ப் பின்னூட்டம்

இட்டுட்டு வந்தா இந்தக் கைப்புள்ள அம்பி கிட்டே அவரோட பதிவிலே நாம போட்ட

ஒப்பந்தம் நினைவிருக்கானு கேட்கிறார்.

கைப்புள்ள,

கோப்பெருஞ்சோழனும்,பிசிராந்தையாரும் போலவும், அவ்வையும், அதியமானும் போலவும் இருந்த நம் நட்பை இப்படி முறிச்சிட்டீங்களே இந்த அம்பியோட போட்ட

ஒப்பந்தத்தாலே, இது நியாயமா? தர்மமா? (ம..சா.:- இங்கே ஒரு விஷயம், இவங்க அவ்வைன்னதும், அவ்வையோட ஃபோட்டோ போட்டு இவங்க இப்படித்தான்னு சொல்லுங்க)

grrrrrrrrrrrrrr ஏ மனசாட்சி, உண்மையிலே சொல்லு, நான் என்ன அவ்வை K.B.சுந்தராம்பாள் போலவா இருக்கேன்? நீ ஏதாவது சொல்லி வைக்காதே. அந்த இளா காதிலே

விழுந்துடப் போகுது. அப்புறம் சுந்தராம்பாள் ஃபோட்டோவைத் தூசி தட்டி எடுத்துட்டு

வந்துடுவார். உன்னை முதல்லேஒழிச்சுக் கட்டணும்.

சரி, சரி, விஷயம் என்னன்னா கைப்புள்ள கட்சி மாறிட்டார்.அப்படி இருந்தாலும் தலைவி இது

காலத்தின் கட்டாயம் என்று பெருந்தன்மையுடன் அவரைக் குற்றம் சொல்லவில்லை.

பின்னூட்டம் மட்டும் போட்டால்போதும் என்று விட்டு விட்டார். அம்பி செய்த துரோகத்துக்கு

அவர் பங்களூர் மஹா நாட்டைப் பற்றி எப்பவுமே எழுதக்கூடாது என்றும் கட்டளை

பிறப்பித்திருக்கிறார். இதைக் கேட்ட "நாகை சிவா" மீண்டும் விம்மி விம்மி அழ ஆரம்பித்து

விட்டார். ச்யாமும், வேதாவும் "மலர்ந்தும் மலராத" பாட்டைப் பாடி அவரைத் தூங்க

வைத்தார்கள். ஆனால் அவர் தூங்காமல் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணீரை

நிறுத்தி விட்டு "இனிமேல் சூடானை விட்டுட்டு வரவே மாட்டேன். எனக்கு நல்லா வேணும்." என்று கத்திக் கொண்டே ஓடி விட்டார். இப்போ தலைவிக்கு எதிரிகளே இல்லை.

ஏன் என்றால் அவர் மட்டும் தானே இருக்கிறார். வேறே யாரும் வரவே மாட்டேங்கறாங்களே. பயந்து கொண்டு ஓடறாங்களே! இப்போ தலைவி அவங்க தனக்குத் தானே பாராட்டு விழாவும் எடுத்துக்கப் போறாங்க. அது பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில்.

அம்பி,
இந்த மொக்கை எப்படி?

கைப்புள்ள

உங்களைச் சேர்த்துக்கலைன்னு வருத்தப்பட்டீங்களே? ஒரு தனிப்பதிவாவே போட்டுட்டேன்.

இருந்தாலும் கொஞ்சம் திருப்தியா வரலை. அடுத்ததிலே பார்த்துக்கலாம். தயாரா இருங்க.

இந்தப்பதிவு இரண்டு முறை வந்தால் நான் பொறுப்பு இல்லை. வேதாளத்தோட வேலை. மறுபடி முருங்கை மரம் ஏறி விட்டது.

Monday, August 21, 2006

115. மரகத மாணிக்கேஸ்வரர்

கருவிலிக்கு வடக்கே முட்டையாற்றைக் கடந்தால் ஒரு மைல் தூரத்தில் "பரவாக்கரை" என்னும்ஊர் வருகிறது. இதுதான் என் கணவரின் முன்னோர்களின் பூர்வீக ஊர். என் மாமனாரின் அப்பா அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றப் புல்லாங்குழல் வித்வான். கும்பகோணத்தில் தங்கி இருந்து சங்கீதம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார். தற்சமயம் உள்ள புல்லாங்குழல் வித்வாம்சினியான "திருமதி நவநீதம்" இவருடைய சிஷ்யை. இப்போ இருக்காரா என்னனு தெரியாது. என் மாமனாரின் அப்பாவைப் பற்றிய குறிப்பு பழைய தினமணி கதிர் சங்கீத மலரிலே பார்க்கலாம். அந்தக் காலத்தில் கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவது குறைவாகவும், அது சரியில்லை என்றும் கருதப் பட்டதால் இவரின் பாடங்கள் பதிவில் இல்லை எனக் குறிப்பிடும் இவர், தன் குருநாதர் ஆன என் மாமனாரின் அப்பா அகில இந்திய வானொலிக்காகக் கச்சேரி செய்ய நாள் குறித்திருந்த சமயம் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். என் மாமனாரின் அண்ணா சில காலம் வாசித்து விட்டுப் பின் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் விட்டு விட்டார். இப்போது ஊருக்குள் போவோம்.

ஊருக்குள் நுழையும் போதே முதலில் வருவது பெருமாள் கோவில். கருவேலியில் இருந்து வந்தால் வரும்.ஆனால் வடமட்டத்தில் இருந்து வந்தால் முதலில் "பொய்யாப் பிள்ளையார்" கோயில் வரும். அது தாண்டிய உடனேயே சற்றுத் தூரத்தில் வருகிறது, மரகத மாணிக்கேஸ்வரர் கோயில்.. நான் கல்யாணம் ஆகி வந்த சமயம் சிவன் கோயில் இடிபாடுகளைத் தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் அதிகம் கருவேலி வழி வந்து விடுவதாலும், என் மாமனார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெருமாள் கோவிலுக்கும், மாரி அம்மன் கோவிலுக்கும் மட்டும் போய்விட்டுப் போய் விடுவோம். சிவன் கோயிலுக்கு என்று போனது கூட இல்லை. அம்மன் விக்ரஹம் களவாடப் பட்டு மாணிக்கேஸ்வரர் மட்டும் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பார். பார்த்திருக்கிறேன். கடைசியில் எங்கள் சொந்தக்காரரும், தாயாதியுமான திரு மத்யார்ஜுனன் (Retd. KCUB.) அவர்களின் பெரு முயற்சியாலும்,அவருடைய சொந்தக்காரர் திரு செளந்திர ராஜன், (Retd. Professor, Indian Institute of Science) , முயற்சியாலும், காஞ்சிப் பெரியவர்கள் ஆசியினாலும் கோவிலை மறுபடி கட்டி, அம்பாள் சிலையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்து 2003, ஜூன் மாதம் கும்பாபிஷேஹம் செய்தார்கள்.

திரு செளந்திரராஜன் அவர்கள் தமிழில் ஈடுபாட்டுடன் வரலாறில் ஆராய்ச்சியும் செய்வதில் வல்லவர். அவர் தம் ஆராய்ச்சியின் மூலமும், அவருடைய தாத்தா கூறியதின் பேரிலும் இந்தக் கோயில் திருமூலரால் பாடப்பட்ட தலம் என்று தெளிவாக்கி இருக்கிறார். மரகத மாடம் என்று கூறப்படும் இந்தக் கோயில் திருமூலரால் கட்டுவிக்கப் பட்டது என்றும் கூறுகிறார். அகத்தியர் காலத்தவரான திருமூலர், நந்தி எம்பெருமானிடம் நேரிலே உபதேசம் பெற்றவர். சிவயோகம் பயின்று நந்தி எம்பெருமானால் "நாதன்" என்ற பெயரை அடைந்தவர். சைவ ஆகம சம்பிரதாயத்தில் நந்தி பெருமான் முதன்மை குரு. அவருக்கு நேர்சீடர்கள் 4 பேர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர். இது தவிர சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் நால்வர். எட்டுப் பேரும் சித்தர்கள். நந்தியின் மூலம் சிவ ஆகமத் தத்துவங்களையும்,,சிவ யோகத்தையும், சிவ சித்தாந்த ஞான போதத்தையும் கற்ற திருமூலர் தில்லையை அடைந்து யோக நிஷ்டையில் சில காலம் இருந்து பின் தெற்கே வந்த போது திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையனின் உயிரற்ற உடலில் புகுந்து பின் பரவாக்கரை, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்திருக்கிறார். பரவாக்கரையில் நிஷ்டையில் அமர்ந்து, "ஆணிப்பொன் மன்றினில்" "செவ்வனிற்செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமாய்" அந்த "மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்" "மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்" ஆடும் திருக்கூத்தைத் தொழுது மாணிக்கேஸ்வரரையும், மரகதவல்லியையும் பாடி தொழுது இருக்கிறார். சிவபஹியான பரவாக்கரையில் நவாக்கர் சக்ர, பஞ்சாக்கர விதி மூலம் மரகதவல்லி சமேத மாணிக்கேஸ்வரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்.

இந்தக் கோயிலானது தற்சமயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேஹம் முடிந்ததும் நித்தியப்படி பூஜை முதலிய பொறுப்பை ஊர்க்காரர்கள் ஏற்றுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மரகதவல்லி அம்மை தெற்கு நோக்கி யோக சக்தியாக நவாக்கரி சக்கரத்தில் அருள் பாலிக்கிறாள். மாணிக்கேஸ்வரரோ செஞ்சுடர் மாணிக்க, பிந்து-நாத சக்தி சிவ லிங்கம் என்று போற்றப்பட்டு திருச்சிற்றம்பல முக்தியை அருளுகிறார். மற்றும் நவக்ரஹம், பைரவர், தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை போன்ற சன்னதிகள் எல்லாம் இருக்கின்றன. பரவாக்கரை என்ற பெயருக்கு ஆண்டவனின் பிரகாச பிந்துவினால் முக்தி கிடைக்கும் என்று அர்த்தம் திருமந்திரம் மூலம் தெளிவாகத் தெரிவதாக திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறுகிறார். இந்த ஊர் சிவன் கோயில் பற்றி என் மாமனார், மாமியார் அதிகம் கூறியது இல்லை என்பதால் நான் திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறியதையே எழுதி இருக்கிறேன்.

Sunday, August 20, 2006

114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்

இந்த முறை ஊருக்குப் போன போது மனதைப் பாதித்த பல விஷயங்கள் இருந்தன. இந்த 30, மடத்துத் தெரு, கும்பகோணம் என்ற விலாசம் "தேவன்" கதைகளைப் படித்தவர்களுக்குப் புரியும். இது "துப்பறியும் சாம்பு" வின் மனைவி "வேம்பு"வின் வீடு இருந்ததாகக் கதையில் குறிப்பிடுவார் திரு தேவன் அவர்கள். இந்த விலாசம் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. தமிழே தெரியாத என் பெண்ணுக்கும், பையனுக்கும் தமிழ்க்கதைகள் அறிமுகமானது நான் அவர்களுக்குத் தேவன் அவர்களின் கதைகளைப் படித்துச் சொன்னதில் தான். உயிரோட்டத்துடன் இருக்கும் அவர் கதைகளில் என் குழந்தைகளுக்குப் பிடித்தது "துப்பறியும் சாம்பு"வும் "கல்யாணியும்" தான். அதிலே கல்யாணியின் காதலன் சுந்தரம் போலீஸில் மாட்டிக் கொண்டு முழிக்கும் இடம் எத்தனை முறை படித்தாலும் அவர்களுக்கு அலுக்காது. அதே போல் அக்கா, தம்பி இருவருக்கும் உலகச்சண்டை முற்றும் போல் இருந்தால் நான் கையில் எடுக்கும் ஆயுதமும் இதுதான். "சாம்பு படிக்கப் போறேன். யார் வராங்க?" என்பேன். ஹிஹிஹி, என் மாமனாரில் இருந்து வந்து விடுவார்கள் கதை கேட்க. அதிலே அடிக்கடி சாம்பு சொல்லும் கும்பகோணம் பற்றிய விவரங்களிலே ஒரு முறை மாதுளம்பழக் கூடையைத் தன் மனைவியின் விலாசம் சொல்லி சாம்பு அனுப்பச் சொல்லுவான். அப்போ எல்லாம் அது ஏதோ கற்பனை என்று நினைத்திருந்த என் குழந்தைகள் இரண்டு பேரும் அவங்க அப்பாவும், தாத்தாவும், அப்படி ஒரு விலாசம் உண்மையிலே உண்டு என்று சொன்னதும், சாம்பு வீட்டைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்கள்.

தற்செயலாக என் கணவரின் அத்தை அந்த வீட்டிற்குக் குடித்தனம் வர, விடுமுறைக்குக் குழந்தைகளுடன் குஜராத்தில் இருந்து வந்திருந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குக் கூட்டிச் சென்றேன். இருவருக்கும் சாம்புவை நேரில் பார்த்த சந்தோஷம். இத்தனைக்கும் கதை சொல்லிக் கேட்டதுதான். ஒவ்வொரு இடமாகப் போய்ப் பார்த்து, இந்த இடத்தில் சாம்பு இது பேசி இருப்பான், இந்த இடத்தில் தான், "அடி, வேம்பு," என்று கூப்பிட்டிருப்பான், இந்த இடத்தில் தான் தன் பையனைக் கண்டித்துக் கிளியைக் கையில் வாங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தார்கள். சாம்புவிற்குக் கெளரவம் கொடுத்த கும்பகோணம் டவுன்ஹாலுக்கும் போக ஆசைப் பட்டார்கள். போக நேரம் இல்லாமல் போய் விட்டது. இவரோட அத்தை, அத்தை பையன், அவங்களோட பொண்ணு எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இவங்க இரண்டு பேரோட ஈடுபாட்டைப் பார்த்துட்டு. அதுக்கப்புறம் அவங்க பேச்சிலே எல்லாம் இந்த வீடு பற்றி வரும். அதுக்கு அப்புறம் என் கணவரோட அத்தை டபீர் தெருவிற்குப் போய் விட்டார்கள். இருந்தாலும் மடத்துத் தெரு வீட்டை மறக்க முடியவில்லை. என் பையன் போன முறை வந்த போது சாம்பு வீட்டைக் காட்டணும் என்று நினைத்தேன். ஆனால் கும்பகோணத்தில் தங்க வில்லை. இப்போது வந்தால் காட்ட முடியாது. வீடு முற்றிலும் இடித்து விட்டார்கள். சாம்பு வீடு ஒரு கனவாகி போய் விட்டது.

Saturday, August 19, 2006

113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி

கும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் "கருவிலி" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து "பரவாக்கரை" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் "கருவிலி". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் "பரவாக்கரை" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.

முன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.

சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.

திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பது. அப்பர் தன் பாடலிலே,
"உய்யுமாறிது கேண்மினுலகத்தீர்
பைகொள் பரம்பரையான் படையார் மழுக்
கையினானுரை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே!" என்றும்,

"நில்லா வாழ்வு நிலைபெறுமென்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாது நீர்
கல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்
கொலேறூர்பவன் கொட்டிட்டை சேர்மினே! " என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.

சற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் "என்ன, இதோ வந்துட்டேன்," என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

கோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் "கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இன்னும் ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. "கொடு கொட்டி"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் "சிவனே" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.

வடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே!" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் காட்சி அளித்தாள்.

கோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.

திரு வைத்தியநாதன், திரு கிருஷ்ணமூர்த்தி இருவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். அக்காவைப் பரவக்கரையிலும், ஒரு மைல் தள்ளித் தங்கையைக் கருவிலியிலும் கொடுத்தாராம் அவர்கள் தந்தை. அக்கா, தங்கையின் பூர்வீகம் நாச்சியார் கோவில். தற்சமயம் கோவிலில் நித்தியப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோவிலைப் பற்றிக் கல்கி பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் ஜெயா டி.வியிலும் அடிக்கடி வரும்.

Friday, August 18, 2006

112. நடந்தாய் வாழி, காவேரி!

காவேரி நதியைப் பத்தி நான் சொல்லி யாரும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை. ஆனால் நான் முதலில் பார்த்த காவேரிக்கும், இப்போது பார்க்கிற காவேரிக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்கிறேன். நாங்க பங்களூரில் இருந்து மைசூர் போனது பஸ்ஸில் தான். கர்நாடக அரசு பஸ் என்றாலும் VOLVO பஸ் என்பதாலும் முற்றிலும் குளிரூட்டப் பட்டது என்பதாலும் பஸ்ஸில் போவது போலவே இல்லை. நல்ல தரமான ரோடும் கூட. பஸ்ஸில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு டிரைவர் பக்கத்தில் பொத்தான் உள்ளது. நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் ஒருவரே. நல்ல திறமையான நிர்வாகம். கட்டாயம் பாராட்டுக்குரியது.

போகும் வழியில் சன்னப்பட்டினம் தாண்டியதுமே காவேரியின் சிறப்புக்கள் தெரிய ஆரம்பித்தன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவேரியைக் கடக்கும்போது பார்த்தேன். தலைக்காவேரியிலிருந்து தவழ்ந்து வரும் காவேரி, நடக்க ஆரம்பித்த குழந்தை போல வேகமாக வருகிறாள். செல்லும் வழி எங்கும் பசுமை, குளிர்ச்சி. மைசூரில் இருந்து கிளம்பி திருச்சி வரும் வழியில் இரவாகி விட்டதால் நடுவில் கடந்த காவேரியைப் பார்க்க முடியவில்லை. திருச்சியில் காலை எழுந்து குணசீலம் போகும் வழியில் முக்கொம்பில் ஆட்டோ பாதை மாறியது. ஆகவே முக்கொம்பை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டே போனோம். அகண்டு விரிந்த தன் கரங்களால் ஊருக்குள் வர முடியுமா என்பது போல வேகம் எடுத்துப் போக வேண்டியவள், இப்போது அடக்க ஒடுக்கமாக இரு கரையும் தொட்டுக் கொண்டு நிதானமாக ஓடுகிறாள்.முக்கொம்பிலேதான் கொள்ளிடம் பிரிகிறது. அங்கே தன் ஆற்றலில் ஒரு சிறிய பங்கு தான் கொடுத்திருக்கிறாள். முதன் முதல் திருமணம் ஆகிக் கணவன் வீடு வரும் மனைவி போல் இல்லாமல் வெகு நாட்கள் கணவனைப் பிரிந்திருந்து விட்டு இப்போது பயமும், தயக்கமுமாகக் கணவன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்ணைப் போல மிக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் செல்லும் வழியெங்கும் தன் வளத்தைக் காட்டத் தவறவில்லை. கடமையில் சிறிதும் தவறாத மனைவியைப் போல அங்கங்கே பாசனம் செய்திருந்த நிலங்களைச் செழிப்புறச் செய்திருந்தாள்.

பச்சையில் தான் எத்தனை வகை? நிலத்தில் விதை விதைத்தவுடன் முளை கிளம்பியதும் தெரிகிற மஞ்சள் கலந்த பச்சை, நாற்று சிறிது வளர்ந்ததும் தெரிகிற கிளிப்பச்சை, நாற்று பிடுங்கி நடுகிற பக்குவத்திற்கு வந்தது தெரிகிற கரும்பச்சை, நட்ட நாற்றுக்கள் பயிராக வளர்ந்த இடங்களில் தெரிகிற இலைப்பச்சை என்றும் எங்கும் எதிலும் பச்சை மயம். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாகக் ,காற்றும் குளிர்ந்து வீசியது. நாற்றுக்கள் பிடுங்கி அங்கங்கே மாலை போலக் கட்டப்பட்டிருகின்றன. பார்க்கவே கண்ணுக்கு ரம்மியமான காட்சி. முன்பெல்லாம் என் புக்ககமான கிராமத்திற்குப் போகும் வழியில் இம்மாதிரி நிறைய நாற்று மாலையைக் காணலாம். சிலர் வாய்க்காலில் கூட விடுவார்கள். நாற்று மிதந்து போகும் காட்சி கண்ணுக்கு அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும். இப்போது என்னதான் தண்ணீர் இருந்தாலும் இம்மாதிரி அதிகம் பார்க்க முடியவில்லை. சில நிலங்கள் தரிசாகவும் கிடக்கின்றன. உழுது போட்டிருக்கும் நிலங்களின் பழுப்பு நிறமும், தண்ணீர் கட்டி வைத்துள்ள நிலங்களின் நிறமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம் அளிக்கிறது.தன் புகுந்த வீட்டுக்கு எவ்விதக் குறையும் அளிக்க விரும்பாத ஒரு பெண்தான் அவள் என்று புரிகிறது. ஆனால் நாம்? அவள் வரும் வழியை எப்படி வைத்திருக்கிறோம்?


திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓரளவு நல்ல மாதிரியாகப் பார்க்க முடிகிறது. ஆனால் கும்பகோணத்திலும், மாயவரத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பாசனம் நடைபெறுகிறது. அதுவும் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமிமலை போகும் வழி எங்கும் முன்னர் பார்த்த வயல்கள் எங்கே? தெரியவில்லை. எல்லாம் வீடு மயம். மடத்துத் தெரு காவேரிப் படித்துறையில் காவேரி சற்று வேகமாகப் போகிறாள். திருவலஞ்சுழியில் அவளில் இருந்து பிரிந்து வந்த அரசலாறோ பார்த்தாலே கண்ணீர் வரும் நிலைமையில் இருக்கிறது. அரசலாறு ஒரு அமைதியான நதி. காவேரியைப் போல ஆரவாரம் இருக்காது.

கும்பகோணத்தில் இருந்து எங்கள் ஊர் செல்லும் சாலையில் சாக்கோட்டையில் ஆரம்பித்து சாலையை விரிவாக்கம் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு பழைய மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப் படுகிறது. அந்தப் பக்கம் போனாலே குளிர்ச்சியாக இருக்கும். இப்போது அரசலாறு இரு கையும் இழந்த பெண்ணைப் போல ஒரு மெளன சாட்சியாக வாயைத் திறக்காமல் தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் மேனி எல்லாம் ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமும். தன் உடலில் இத்தனை வியாதி எப்படி வந்தது என்பதே புரியாமல் திகைப்புடன் தனக்கு என்ன ஆச்சு என்று பார்த்துக் கொண்டே போகிறாள். இத்தனை நாள் ஊர்ப்பக்கம் போகும் போது எல்லாம் தண்ணீர் வரவில்லை அதான் இப்படி என்று சொன்னார்கள். இப்போது நாட்டான் வாய்க்காலில் இருந்து ஆரம்பித்துக் காவேரியில் இருந்து பிரியும் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் போய்க் கொண்டிருந்தும் அரசலாற்றின் துயரம் தீரவே இல்லை. ரொம்ப மன வருத்தத்துடன் ஓடுகிறாள். இங்கே எல்லாம் பாசனமும் அவ்வளவாக நடைபெறவில்லை. எல்லாரும் பணப்பயிரான பாமாயில் கன்றுகள், கரும்பு என்று ஏதேதோ போடுகிறார்கள். மொத்தத்தில் இத்தனை நாளாக வறண்ட ஊரைப் பார்த்து வந்த எங்களுக்கு இப்போது தண்ணீர் வந்தும் ஏமாற்றமாக இருந்தது.

நடந்தாய் வாழி காவேரி!
"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி! "

111. அசராமல் போட்ட பதிவு.

9-ம் தேதி ஊரில் இருந்து வந்ததும் வராததுமா VSNL கிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு. நிரந்தரமாய் வேலை முடிந்திருக்கிறதாயும் இனிமேல் தடை இல்லா சேவை என்றும் சொன்னார்கள். ஆஹா, ஊருக்குப் போய்விட்டு வந்ததுக்கு உடனேயே பலன், அதுவும் வேதாளம் நேரில் செய்ய முடியாது என்று சொல்லி இருந்தாலும் வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டேன்.

சந்தோஷம் ஒரு 4 நாள் கூட நீடிக்கவில்லை. அடிக்கடி இணைப்புப் போய்விட்டுப் போய்விட்டு வர ஆரம்பித்தது. ஆனால் உடனே வந்து விடும். சரி நாம் ஏதோ தப்புப் பண்ணி இருப்போம் என நினைத்தால், எக்ஸ்ப்ளோரர் தகராறு. This programme is not responding. Send error report. என்று செய்தி வர ஆரம்பித்தது. சரி, என்று அதையும் பண்ணி விட்டு மறுபடி இணைப்பு வாங்கி மீண்டும் உலாவப் போனால் 2 ஜன்னல் திறந்ததுமே நகரவே மாட்டேன் என அடம். அன்னிக்கு இப்படித்தான் மனுவின் "நாச்சியார்" வலைப்பக்கம் பார்க்கும்போது பெருச்சாளிக்குட்டியால் எத்தனை முறை scroll செய்தாலும் நகரவே இல்லை. அப்புறம் கணினியை மூடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இப்படியே தொந்திரவு ஜாஸ்தியாப் போய் முந்தா நாளில் இருந்து இணைப்புப் போய்விட்டது.

பார்த்தால் வேதா "வேதாளத்தை" இங்கே அனுப்பி இருக்கிறார். அது என்னிடம் பயந்து கொண்டு சத்தம் போடாமல் இணைப்பைத் துண்டித்து விட்டுப்போயே போய் விட்டது. அப்புறம் தொலைபேசி மூலம் Tata Indicon Broadband service centre-ஐக் கூப்பிட்டுக் கத்தினால், அவங்க அசைந்தே கொடுக்கவில்லை. O.K. Madam, Sorry Madam, Sorry for the inconvenience Madam இதுக்கு மேலே அவங்களுக்குப் பேசவே தெரியலை. புகாருக்கான நம்பரைத் தந்தாங்க. என் அண்ணன் வீட்டுக்குப் போயிட்டேன் அங்கே போய் இணைப்பைப் பார்க்கலாம்னு.

போன உடனே ஃபோன், இவர்தான். VSNL ஆளுங்க வந்திருக்காங்கனு. பாதிலே எப்படி வரமுடியும்? நீங்களே பார்த்துக்குங்க, வரேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தப்புறம் இணைப்பு வந்திருந்தது. சரினு அம்பியோட பதிவைப் போய் ஏதாவது "ஆப்பு" "ஆப்பு" ங்கிறாரே அதுக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டுட்டு வரலாம்னு போனேனா? மனுஷன், ஒரு நல்லபொண்ணு வேதாவைத் தூண்டி விட்டிருக்கிறார் எனக்கு எதிரா1 :D "பொறுத்தது போதும், பொங்கி எழு" னு என் மனசாட்சியே என்னைத் தூண்ட அங்கிருந்து வேதாவின் பதிவுக்குப் போனால் தான் விஷயம் வருது மெள்ள. வேதா "வேதாளத்தை" அனுப்பியது எல்லாம்.

உடனேயே என் பதிவுக்கு வந்து ஒரு பதில் கொடுத்தேனே இல்லையோ, கணினி நகரவே இல்லை, மறுபடி இணைப்புப் போயிடுச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு மூடி வச்சுட்டு உட்கார்ந்தேன். இன்னிக்குத்தான் ஒரு நல்ல வேதாளம் மூலம் என் இணைப்பு மறுபடி வந்துட்டது. (எத்தனை நாளுக்குனு தெரியலை). இப்போ ஓடுது, பார்க்கலாம். ஆப்பு அம்பி, பார்த்தீங்களா? யார் என்ன செஞ்சாலும் அசராமல் பதிவு போடுவேன். உங்களை எல்லாம் விடறதா இல்லை.:D

Thursday, August 17, 2006

110. "தாதா" வேதாவின் சதி அம்பலம்

தோழர்களே, தோழியர்களே, இன்று பூரா என் இணைய இணைப்பு வேலைசெய்யவில்லை.கடைசியில் பார்த்தால் வேதாவின் சதி இது என்று அவர் தன் வாயாலேயே ஒப்புக் கொண்டு இருக்கிறார். பார்க்க:வேதாவின் இன்றைய பதிவு. அதில் வேதா தானே தன்னைத் தாதா என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

எத்தனை வேதாளங்கள் வந்தாலும் தலைவி அஞ்சா நெஞ்சுடன் அதனை எதிர்ப்பார். அம்பிக்கு நேரடியாகத் தலைவியுடன் மோதத் தெரியவில்லை. அதனால் நாரதர் வேலை பார்த்து அருமை நண்பர் ச்யாம், சிவா, கைப்புள்ள, பித்தானந்தா, திரு தி.ரா.ச. எல்லாரையும் தலைவிக்கு எதிராகத் தூண்டி விட்டிருக்கிறார். இப்படித் தூண்டிய குற்றத்திற்காக அவர் "தலைவியின் பதிவைப் போல் வேறு பதிவு இல்லை" என்று ஒரு பதிவு பூராவும் எழுத வேண்டும் என்றும், தலைவியின் பதிவுக்கு வந்து நூறு பின்னூட்டம் இட ஆட்களைத் தயார் செய்து கொண்டு வர வேண்டும் என்று கட்டளை தலைமை நிலையம் பிறப்பித்துள்ளது. மேலும் அவர் வேதாவைத் தூண்டி விட்ட குற்றத்திற்காகவும், வேதா வேதாளத்தைத் தூண்டி விட்டு தலைவியின் இணைப்பைத் துண்டித்த காரணத்துக்காகவும் தலைவியின் மூக்கைக் குத்தக் கோணி ஊசி தயார் செய்த குற்றத்திற்காகவும் இன்று முதல் தினமும் தலைவியின் பதிவில் இது நல்ல பதிவு என்று எழுதி விட்டே பின்னூட்டம் இட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப் படுகிறது. இதை நாகை சிவா மேற்பார்வையில் கைப்புள்ள சிரமேற்கொண்டு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். நாகை சிவா தன் அழுகையை நிறுத்தத் தலைவி மேற்கொண்ட முயற்சியால் அவர் அழுகை நிறுத்தப் பட்டதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இது பதிவு உலகின் உடனடி அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப் படுகிறது. ச்யாம் தலைவியை வேண்டுகோள் விடுத்துக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் விஷயம் பரிசீலனையில் இருக்கிறது. முடிவு பின்னர் தெரிவிக்கப் படும்.

"வேதாளத்தை வெற்றி கொண்ட தலைவி வாழ்க "என்ற கோஷம் வலுக்கிறது. தலைவி நேரம் ஆகிவிட்டபடியால் வேலையாகச் சென்று விட்டார். பின்னூட்டங்களுக்குப் பதில் நாளை (இணைப்பு இருந்தால்) அளிக்கப்படும்.

Wednesday, August 16, 2006

109. ஒரு அவசரமான பதிவு

திக்கெட்டும் பரவிக்கிடக்கும் தலைவியின் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சில நெஞ்சங்கள், அவர் தம் புகழைக் கெடுக்கும் வகையிலே, சம்பந்தமே இல்லாமல் அவரின் வயதைப் பற்றிக் கேள்வி கேட்டு அவரை மிகவும் நோக அடித்துள்ளனர். இப்போது வலை உலகில் மிக அவசியமான விஷயங்கள் எத்தனையோ இருக்கத் தலைவியின் வயதா முக்கியம்? அவர் என்றும் பதினாறு என்பதுதான் எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம். அதற்குச் சாட்சி அவர் தாசில்தார் கிட்டே சான்றிதழ் வாங்கும்போது துணை செய்த திரு பித்தானந்தா அவர்கள். மேலும் தலைவருக்கெல்லாம் தலைவரான திரு கைப்புள்ள அவர்கள் தலைவியை ஏதாவது கேள்வி கேட்கிறாரா? தலைவியின் பேச்சு "கா" என்பதோடு அவர் விட்டு விடுகிறார். நாகை சிவாவோ அணுக்கத் தொண்டராக மாறி இன்னும் விம்மி, விம்மி அழுது கொண்டிருக்கிறார். அவர் அழுகையை அடக்கத் தனிப்படை புறப்பட்டுப் போயிருக்கிறது.

இது இங்ஙனம் இருக்க நம்ம அம்பி என்ன செய்கிறார்? தலைவி பங்களூர் வந்த போது குண்டர் படைத் தலைவர் வந்ததையும் பொறுத்துக் கொண்டு அவரை நல்வழிப் படுத்தி அவருக்கு உப்புப் பொட்டலம் பரிசளித்து அவரைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த அம்பிக்கு இதெல்லாம் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் தலைவியைச் சாடுகிறார். அதுவும் யார் துணையில்? இத்தனை நாள் தலைவிக்குத் துணை இருப்பேன் என்று சொன்ன புதரகத் தூதர் ச்யாமின் துணையுடனும், அவர் தம் பாச மலர் வேதாவின் துணையுடனும். தலைவி புதரகத் தூதர் பொறுப்பில் இருந்து ச்யாமை விடுவிக்க மிகுந்த மன வேதனையுடன் பரிசீலித்து வருகிறார். சரி. அது தான் போச்சு என்றால் தம்பி என்பவர் தலைவிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிட முயல இந்த அம்பி அங்கே போய் அவரையும் ஊக்குவிக்கிறார். ஊக்கு விற்க வேண்டாம், ஊசி அல்லது பின் போதும் என்று தலைவி சொன்னாலும் கேட்கவில்லை. தன் பதிவிலே எழுதுகிறார்: உங்களுக்கு இருக்கு ஆப்பு, உங்களுக்கு இருக்கு ஆப்பு என்று என்னத்தை இவர் ஆப்பு வச்சு என்னத்தப் பண்ணறது. இவரால் முடியாததை ஏன் சொல்றார். அதான் இன்னிலேருந்து அம்பி பேர் "ஆப்பு அம்பி" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

108. ஐயனை ஆரத் தழுவிய அன்னை

பொதுவாகவே நான் கோவில்களுக்கோ அல்லது சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களுக்கோ சென்றால் அதன் பூரா வரலாற்றையும் தெரிந்து கொள்ள கூடியவரை முயற்சி செய்வேன். இப்போது வலை பதிய ஆரம்பித்ததும் அது ஜாஸ்தி ஆகி விட்டது. இப்போ நாம் போகப் போற கோயில் கும்பகோணத்தில் இருந்து கிட்டேதான் இருக்கிறது. அன்று காலை நவக்கிரஹக் கோயில், மற்றக் கோயில் என்று ஏறி இறங்கியதில் மிகக் களைத்துப் போயிருந்த நான் சாயங்காலம் எங்கேயும் போக வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன், ஆனால் எங்கள் ஆட்டோ டிரைவர் விடவில்லை. இவ்வளவு தூரம் வந்து விட்டுப் பட்டீஸ்வரம் துர்கையைப் பார்க்காமல் போவதா என்று சற்று நேரம் கழித்து வருகிறேன் என்று 5-30-க்கு வந்து எங்களை அழைத்துச் சென்று விட்டார். போனதும் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய விஷயத்தை நழுவ விட இருந்தேன் என்று.

கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே "பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச் சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.

உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.

வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.

இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.

வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இங்கிருந்து வரும் வழியில் தான் தாராபுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் "சோழன் மாளிகை" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.

Tuesday, August 15, 2006

107. ஸ்ரீசக்ர ராஜ தனயே

அனைத்துக்கும் ஆதாரமான சக்தி வடிவானவள் "ஆதி பராசக்தி" என்று அழைக்கப் படுகிறாள்.எல்லாவற்றிற்கும் ஆதாரமான சக்தியைத் தாய் வடிவில் வழிபடுகிறோம். அந்த சக்தியின் வடிவே ஸ்ரீ லலிதா ஆகும். இவ்வுலகை ஆளும் பரம்பொருளின் சக்திகள் எல்லாம் இணைந்த வடிவே ஆயிரம் நாமங்களால் போற்றித் துதிக்கப் படும் ஸ்ரீ லலிதாம்பிகை. ஆதி பராசக்தியான ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத, ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வரும் இடம் "திருமீயச்சூர்" என்னும் ஊராகும். இது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

இந்தத் "திருமீயச்சூர்" தலத்தில் தான் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த என் பெரியப்பா மாப்பிள்ளை திரு சந்திரசேகரன் அவர்கள் இறை வழிக்குத் திரும்பினார். அந்த விதத்திலும் இது எங்களுக்கு ஒரு முக்கியமான க்ஷேத்திரம் ஆகும். தற்சமயம் "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி" யில் மாவட்டம், மாவட்டமாகக் கோயில்களுக்குப் போய் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. தற்சமயம் நிறைவேறியது. கும்பகோணத்தில் இருந்து திரு நள்ளாறு போகும் வழியில் சற்று மேற்கே திரும்பி இந்த ஊருக்குப் போனோம்.

உள்ளே போனால் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதஸ்வாமி கோயில், (மெயின் கோயில்), மற்றது மின்னும் மேகலை என்னும் அம்பாளுடன் கூடிய ஸகல புவனேஸ்வரரின் இளங்கோயில் ஆகும். சோழர் காலக் கட்டடக் கலையின் சிறப்புக்கள் கொண்ட இந்தக் கோயிலின் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். செம்பியன் மாதேவி, மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியவர்களால் திருப்பணி நடத்தப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களிலும் ஒன்று. கணவன், மனைவி ஒற்றுமைக்குச் சிறந்த சான்று இந்தக் கோயில். ஒருவர் சினம் கொண்டால் மற்றவர் மெளனத்தால் அச்சினத்தை வெல்வதே சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இன்றைக்கும் மனவேற்றுமைப் பட்ட கணவன், மனைவியர் இங்கே வந்து வேண்டிக் கொண்டு சேர்ந்து வாழ்வது பற்றிச் சொல்கிறார்கள்.

காசியபரின் மனைவிகளான கர்த்துரு, வினதை இருவரும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட இறைவன் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுக்கிறார். இருவரும் அதைப் பாதுகாத்துப் பூஜை செய்து வர வினதையின் முட்டையில் இருந்து ஒரு பக்ஷி வெளி வருகிறது. "இதென்ன" என்று வியந்த வினதையிடம் இறைவன், "இந்தப் புத்திரன் மஹாவிஷ்ணுவிற்கு வாஹனமாய் உலகு எங்கும் பிரகாசிப்பான், கருடன் என்ற பெயரில்." என ஆசீர்வதிக்கிறார். கர்த்துரு ஏக்கத்தில் தன் முட்டையை அவசரப்பட்டு உடைக்க தலை முதல் இடுப்பு வரை மட்டும் வளர்ந்த ஒரு அங்கஹீனக் குழந்தை பிறக்கிறது.

வருந்திய கர்த்துரு இறைவனை வேண்ட அவர் அக்குழந்தை "சூரியனுக்குச் சாரதியாக உலகு எங்கும் பிரகாசிப்பான்." என்று வரம் கொடுக்கிறார். அங்கஹீனன் ஆன அவனால் இறைவனைத் தரிசனம் செய்ய முடியாது என்று சூரியன் அவனைக் கேலி செய்கிறான். தொல்லைகள் கொடுக்கிறான். மனம் வருந்திய அருணன் இறைவனை வேண்ட இறைவன் சூரியனை "உன் மேனி கிருஷ்ண வர்ணமாகப் போகக் கடவது" என சபிக்கிறார். உலகம் இருண்டு போனதைப் பார்த்த ஜெகன்மாதா அவன் சாபம் விமோசனம் அடைய இறைவனை வேண்ட அவர் கூறுகிறார்."அருணனின் தவ பலத்தாலும், சூரியன் ஏழு மாத காலம் பூஜை செய்தாலும் பழைய நிலை அடையலாம்" என்கிறார். தன் சாப விமோசனத்திற்காக இத்தலம் வந்து சூரியன் வழிபட, தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, "ஹே மிகுரா" எனக் கதறத் தங்கள் ஏகாந்தத்தைக் கலைத்த சூரியனை அம்பாள் சபிக்க முற்படுகிறாள். இறைவன் தடுத்து "நீ சாபம் இட்டால் உலகம் மறுபடி இருண்டு போகும். உலகத்தின் நன்மைக்காக நீ பரம சாந்தையாகத் தவம் இருப்பாயாக." என்று கூறுகிறார். சூரியனுக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. சாந்த தேவதையான அம்பிகையின் திருவாயில் இருந்து "வசினீ" என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் மூலம் மலர்ந்ததுவே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்று கூறுகிறார்கள்.

அம்பாளே அருளியதால் அவர்தம் பெயர் கொண்டு "லலிதா சஹஸ்ரநாமம்" என்னும் பெயர் கொண்டு விளங்கியதாகச் சொல்கிறார்கள். அம்பாளிடம் இருந்து நேரே ஸ்ரீஹயகிரீவ முனியும் அவரிடம் இருந்து அகத்தியரும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றதும் இவ்வூரில் தான். அம்பிகையை வழிபடச் சிறந்த இடம் என அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபடும் சமயம் அம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அளிக்கிறாள். அப்போது அந்தக் காணற்கரிய காட்சியை அகத்தியர் தன் "லலிதா நவரத்தின மாலை"யின் மூலம் பதிவு செய்திருக்கிறார். சூரியன், அருணன், கர்த்துரு, வினதை, அகத்தியர் தவிர யமனும் ஸ்ரீலலிதையையும், மேகநாத ஸ்வாமியையும், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் சங்குகள் 1008-ஐக் கொண்டு சங்காபிஷேஹம் செய்து வழிபட்டிருக்கிறான். இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீலலிதையின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதற்குச் சாட்சியாக 1999-ல் பங்களூரில் உள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்மணியிடம் அம்பாள் கனவில் வந்து தனக்குக் கொலுசு செய்து அணிவிக்குமாறு கட்டளையிடக் கோவிலைத் தேடிக் கண்டுபிடித்து அப்பெண்மணி கொலுசு செய்து அணிவித்திருக்கிறார்.

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜயஓம் லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே!

Sunday, August 13, 2006

106. எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்

எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்.
தமிழ் பேசும் வலை உலகின் ஒரே சிறந்த வலைப் பதிவு, எண்ணங்கள்.
உங்கள் அபிமான எழுத்தாளி "திருமதி கீதா சாம்பசிவம்" எழுதும் "எண்ணங்கள்."
வலை உலகிலே ஒரு எடுத்துக்காட்டு "எண்ணங்கள்"
இன்றே படியுங்கள் "எண்ணங்கள்'
நவரசத்தையும் சேர்த்துத் தரும் ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்'

இந்தப் பதிவைப் படிப்பதின் மூலம் நீங்கள் பெறும் நலன்கள் எண்ணற்றவை. நீங்கள் தமிழ்மணத்தைச் சேர்ந்தவரா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு பின்னூட்டம் கியாரண்டி. உங்கள் அபிமான எழுத்தாளரே வந்து பின்னூட்டம் இடுவார். தேன்கூட்டைச் சேர்ந்தவரா? கவலை வேண்டாம். நிச்சயம் அவருடைய வாக்கு உங்கள் எழுத்துக்கே. முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்தவரா? உங்களைப் பற்றி ஒரு சிறப்புக் குறிப்புக் கொடுக்கப் படும். இத்தனை சலுகைகளை அறிவிக்கும் ஒரே பதிவு "எண்ணங்கள்." உங்கள் ஆதரவு பெற்ற ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்."

தயாரிப்பு வடிவமைப்பு" : திரு மஞ்சூர் ராஜா, ராஜா, ராஜா.

தலைப்பு, மற்றும் பெயர் எழுத்துரு மாற்றம்: திரு நாகை சிவா, சிவா, சிவா, சிவா, (மேலும் சிறப்புத் தகுதி கொசுவையும், குருவியையும் பதிவு போடுவது. தற்சமயம் காக்கைப் பதிவு எதிர்பார்க்கப் படுகிறது.)

கெளரவப் பின்னுட்டாளர்கள்: திரு அசின் அம்பி. (மொக்கைப் பதிவுச் சிறப்பாளர். அசினைத் தியாகம் செய்த பண்பாளர். அசினுக்குத் தம்பியாகி சிறந்த சகோதரப் பாசத்தைக் காட்டியவர்.அப்போ அப்போ தலைவியை உங்களுக்கு இருக்கு என்னோட பதிவிலே என்று மிரட்டி விட்டு ஒன்றுமே எழுதாமல் ஊருக்குப் போய்விடும் நல்லவர், வல்லவர்.)
திரு கார்த்திக் முத்துராஜன்: தலைவியின் சுற்றுப் பயணத்திற்காக அலுவல் வேலையை விட்டு விட்டுப் போஸ்டர் அடித்தவர். அலுவல் வேலையா, தலைவியின் சேவையா என்ற கேள்வி வந்த போது தலைவியின் சேவையே பெரிது என்ற முடிவில் போஸ்டர் வெளியிட்டார். ஆஃபீஸில் நிஜமாகவே வேலை வரும் என்று கனவு கூடக் காணாதவர், இப்போ யு.எஸ். போய் என்ன செய்யப் போகிறாரோ?

நிரந்தரப் பின்னூட்டாளர்கள்:பாசமலர்களான செல்வி வேதா, மற்றும் புதரகத் தூதுவர் திரு ச்யாம் அவர்கள்.
இரண்டு பேருக்கும் பாசத்துக்காக உருகவே மற்றவர் வலைப் பதிவை உபயோகிப்பார்கள். :D வலை உலகின் பாச மலர்களான இவர்கள் இருவரும் தலைவி என்ன எழுதினாலும் மறுத்து எழுதுவதிலும் தலைவியை கால் வாருவதிலும் புகழ் பெற்றவர்கள். :D
அடிக்கடி வருபவர்கள்; திரு தி.ரா.ச. அவர்கள். இவர் செய்த ஒரு தப்பினால் தான் தலைவி இந்த அளவு ரம்பம் போட ஆரம்பித்து விட்டார் என்று எல்லாப் பின்னூட்டாளர்களும் இவர் மேல் கோபத்தில் இருப்பதாகக் கேள்வி. தலைவியைப் புகழ்ந்து வேதாளத்தைக் கட்டவிழ்த்து விட்டு விட்டோம் என்று இவர் நொந்து கொள்ளாத நாள் இல்லை.

விவசாயி திரு இளா: ஏண்டா இவங்க பதிவுக்கு வரோம்னு நொந்து போன இன்னொரு ஆள். விவசாய அணித் தலைமையே வேண்டாம் என்று விட்டு விட்டுப் போகிற அளவு நொந்து போய் விட்டாராம்.
மற்றும் அடிக்கடி வருபவர்கள் பட்டியலில் திரு மனசு, (ஆளே காணோம், கொஞ்ச நாளா, 9தாராவை விட்டுட்டு வேறே யாரையோ பத்தி எழுதப் போறார்னு கேள்வி.)
திரு நன்மனம், (உண்மையிலேயே நன்மனமான இவருக்கு என்ன எழுதுவது என்று தெரியாததால் இவர் பதிவில் ஒண்ணுமே இல்லை, புதுசாக. முழிக்கிறார்.)
மின்னல் தாத்தா: வேண்டாத வேலை எல்லாம் செய்யறார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போ எதுக்கு? ஆனால் இவர் வயசைப் பார்க்கறச்சே பொறுமையாக் கணக்கு எடுத்திருக்கிறாரேனு வியப்பு வருது.

எப்போதாவது எட்டிப் பார்க்கும் மனு, மற்றும் படித்து விட்டுப் பின்னூட்டம் இடாமல் செல்லும் துளசி போன்றவர்கள் வருவது இந்த ஒரே பதிவுதான்.

மேலும் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டாளர்கள் பயன்பெறும் வகையில் இன்னொரு தகவல்: "குமாரகாவியம்" என்ன ஆச்சுனு கேள்வி கேட்டே திரு சிபி அவர்கள் பித்தானந்தா ஆகி இருப்பதும் இவர்தம் தனிச் சிறப்பு. பித்தானந்தாவின் "பின்" நவீனத்துவமும், "பின்" மொழிகளும், தத்துப் பித்துவமான கவிதையுமே தலைவியின் இந்தப் பதிவின் பெருமைக்குச் சிறந்த சாட்சி. "பின்" நவீனத்துவம் என்றால் ஹேர்பின்னா? ஸேஃப்டி பின்னா என்பதை வாசகர்கள் ஊகத்துக்கே விடுகிறேன். இந்த வசதி வேறே எந்தப் பதிவிலும் கிடைக்காது. யோசியுங்கள். முத்தமிழ்க் குழுமத்தில் இருந்து வந்தவர்கள் கூடத் தலைவியின் திறமையையும், அறிவுச் சுடர் விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு வியந்து போற்றிப் பாராட்டி இருப்பதைக் கண்டு களிக்கலாம்.

ஆகவே வலை உலகத் தோழர்களே, தோழியரே, உங்கள் வருகையால் நீங்கள் நிச்சயம் பயன் பெறுவீர்கள். எல்லாம் இலவசம். இலவசம், இலவசம்.
பின்னூட்டம், பின் மொழிகள், தத்துப்பித்துவம் எல்லாம் கிடைக்கும் ஒரே வலைப் பதிவு இதுதான்.

Saturday, August 12, 2006

105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்

ஹி,ஹி,ஹி, எல்லாரும் படிச்சிருப்பீங்களே, நான் விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவிலுக்குப் போனதும், அங்கே வேதாளத்தைப் பார்த்ததும், அப்போ என்ன நடந்ததுன்னா? (ம.சா: ஹி,ஹி,ஹி, எனக்குத் தெரியும், எல்லாரும் இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க.) நீ, சும்மா இரு. கூடக்கூடப் பேசாதே, இது நான்.
அங்கே வேதாளத்தைப் பார்த்தேனா, அப்போ நான் அதனிடம் சில கேள்விகள் கேட்கலாம்னு நினைச்சேன். என்னோட முதல் கேள்வி :வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி பட்டத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்றுதான். (ம.சா: தக்க வச்சுக்கறது என்ன நீதான் யாருக்கும் விட்டே கொடுக்கலியே, திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கியே, அவங்க வேணாம்னாலும் நீ விட மாட்டியே!)

மனசாட்சியை அலட்சியம் செய்து விட்டு இரண்டாவது கேள்வி: அதிகப் பின்னூட்டம் வாங்க என்ன செய்யறது? (ம.சா: நீ எழுதற விஷயத்தையும் ஒருத்தர் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கறதே பெரிசு. இதிலே அதிகம் வேறே வேணுமா? நீ என்ன நாகை சிவா மாதிரி குருவி, கொசு இதைப் பத்தியா பதிவு போடறே, பின்னூட்டம் வேணுமாம், பின்னூட்டம்) ஷ்ஷ்ஷ்ஷ், என்னோடயே இருந்துட்டு எனக்கு எதிரா வேலை செய்யற உன்னை என்ன செய்யறது? இந்த அம்பி தங்கிலீஷ் எழுதிட்டு, அதிலே முடி வெட்டறதையும், தன்னோட டிசம்பர் மாதப் பிறந்த நாள் வாழ்த்துக்கு இப்போவே அச்சாரம் போட்டும் எழுதறார். இதிலே என்னை வேறே மிரட்டல், உங்களுக்கு இருக்கு, உங்களுக்கு இருக்குன்னு, கடைசிலே பார்த்தால் மனுஷனுக்குப் பயம் வந்துட்டது போலிருக்கு. ஹி.ஹி.ஹி. ஊரை விட்டுப் போயிட்டார். சொல்லவே இல்லை. (ம.சா: ஆமாம், உன்னோட பதிவில் பின்னூட்டம் கொடுக்க யாருமே இல்லை. இதிலே தெனாவட்டா?)

அம்பி ஊருக்குப் போயாச்சு. கார்த்திக் ஆஃபீஸ் பிரச்னை. வேதாவும் வரதில்லை. நாகை சிவா காக்காய் அனுப்பிச்ச கோவத்தில் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மின்னல் தாத்தா, சின்னக்குட்டி,தி.ரா.ச. இவங்களையும் காணோம். மனசு, நன்மனம் இவங்க எல்லாம் உளவுப் படை வேலையிலே ரொம்ப பிசி. இல்லாட்டி வருவாங்க. (ம.சா: ஆமாம் வருவாங்க, காத்துக்கிட்டிரு, மனு என்ன ஆச்சு? அவங்க இப்போ வராங்களா? எல்லாரும் உன் பதிவைக் கண்டாலே ஓடறாங்க, புரிஞ்சுக்கோ.) Grrrrrrrrrrrrr. இந்தா மனசாட்சி, நீ தமிழ் சினிமா மாதிரி எனக்குப் புத்தி எல்லாம் சொல்ல வேணாம்.(ம.சா. ஆமாம், என்னை அடக்கு, கைப்புள்ள வராரா? அதுக்கு என்ன சொல்றே? உன்னோட பிடுங்கல் தாங்காமல் தான் ஒருத்தர் பித்தானந்தாவா மாறிட்டார்.மறைக்காதே என் கிட்டே) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சும்மா இருக்க மாட்டே? கைப்புள்ள தலைவர், தலைவர் எல்லாம் அடிக்கடி வர மாட்டாங்க, நான் இப்போ எப்போவாவது தானே சங்கப் பக்கம் தலை காட்டறேன். அது மாதிரிதான். சிபிக்குத் தமிழ் எழுத முடியலை. மறந்து போச்சோ என்னமோ? நான் "குமார காவியம்" னு கேட்டாலே ஒரு மாதிரி பார்க்கிறார். என்னோட மூணாவது கேள்வி வேதாளத்துக் கிட்டே: என்னோட ப்ளாக்கர் பிரச்னை அடிக்கடி பண்ணுதே, அது எப்போ சரியாகும்?

மேற்கண்ட மூன்று கேள்விகளையும் வேதாளத்திடம் கேட்க நினைத்து வேதாளத்தின் சன்னதிக்குப் போய் வேதாளத்திடம் முறையிட்டேன். "வேதாளத் தலைவரே, என்னோட ப்ளாக் என்னும் வேதாளம் எனக்குக் கொடுக்கும் தொந்திரவு போனாலே போதும். அதுக்கு ஏதாவது செய்ய மாட்டியா?" என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். வேதாளம் என் கண் முன் தெரிந்தது. உடனே அதனிடம் என் கோரிக்கையை வைத்தேன். வேதாளம்," எனக்குக் கேள்வி கேட்டுத்தான் பழக்கம். பதில் சொல்லிப் பழக்கம் இல்லை." என்றது. ஒரு மாறுதலுக்காக இம்முறை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு வேதாளத்திடம் கோரிக்கை வைத்தேன். என்னோட எல்லாக் கேள்விகளையும் கேட்ட வேதாளம் திரு திரு திரு என விழித்தது. "என்ன, வேதாளம் பதிலே சொல்லலியே?" என்று நான் கேட்க அது பயத்துடன் என்னைப் பார்த்து,"ஆமாம், நீ யார்? " என்றது. "ஏன் கேட்கிறாய்? நான் கீதா சாம்பசிவம்கிற பேரிலே எழுதறேனே, நீ பதில் சொன்னால் உன்னைப் பற்றியும் எழுதுவேன்," என்றதும், வேதாளம் "ஆளை விடு, நீ சங்கத் தலைவியோ, அல்லது தலைவலியோ, உனக்குப் பின்னூட்டம் வருமோ வராதோ, அது கூடப் பரவாயில்லை.உன்னாலே இத்தனை பேர் ஊரை விட்டுப் போயிட்டாங்க. அதுவும் ஒருத்தர் பித்தானந்தாவாகிட்டார். தவிர, இந்த ப்ளாக்கர் வேதாளம்னு சொல்றியே, அதைப் பார்த்தால் பயமாயிருக்கு. நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு. விக்கிரமாதித்தா, இவங்க கிட்டே இருந்து என்னைக் காப்பாத்து." என்று கதறிக் கொண்டு போய்விட்டது.

Friday, August 11, 2006

104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்

நாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து திருச்சி போய்ப் பின் தஞ்சாவூர், கும்பகோணம் போய்ப் பின் சென்னை வந்தோம். ஆனால் இதில் பார்த்த வரிசைகள்படி நான் எழுதவில்லை. முக்கியமான கோவில்கள் பற்றி மட்டும் எழுதுகிறேன். ஆகையால் முன்னே பின்னே தான் வரும். வரிசையாக வராது. இப்போ திருவையாறு பற்றி. எல்லாருக்கும் இங்கே நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றித் தெரிந்திருக்கும். திருவையாறு என்ற பெயரில் திரு+ஐயாறு கலந்து வந்துள்ளது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் திரு+ஐயாறு ஆகும். அவைகாவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை ஆகும்.
கி.மு.முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகால் சோழ மன்னன் காட்டைத் திருத்தி நாடாக்கி வந்த காலத்தில், ஒருமுறை வடநாடு சென்று திரும்பும் வழியில் அவன் தேர் ஒரு இடத்தில் அழுந்தவே, தேரை எடுக்க முயற்சி செய்தான் மன்னன். அப்போது கிடைத்த லிங்கத்தை ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு உத்தரவு வர, அப்படியே செய்து ஐயனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். கோயிலின் வெளிப் பிரஹாரத்தில் "செம்பியன் மண்டபம்' என்ற பெயரில் ஒரு மண்டபம் கட்டி அங்கே தன் உருவச்சிலையையும், தன் மனைவிமார் சிலையையும் பிரதிஷ்டை செய்கிறான். கோவில் கட்டப் பணம் தேவைப்படவே அரசன் திகைக்கிறான். அப்போது அகப்பேய்ச்சித்தர் வந்து அரசனுக்கு நான்கு பெரிய குளம்படிகளைக் காட்டி அது நந்திஎம்பெருமானின் குளம்படிகள் எனவும், அவற்றுக்குக் கீழே தோண்டினால் நவரத்தினப் புதையல் கிடைக்கும் எனவும் சொல்ல மன்னன் அதே மாதிரி செய்து கோவிலைப் பூர்த்தி செய்கிறான். தற்சமயம் ஒரு தியான மண்டபம் ஆகியிருக்கும் இந்த மண்டபத்தில் அரசு மேற்குறிப்பிட்ட தகவலை எழுதி இருக்கும் பலகை பழுதடைந்து போயிருப்பதால் மிச்சம் உள்ள வார்த்தகளின் மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. சற்று மாறுபாடு இருந்தால் யாராவது தெரிவிக்கவும். ஸ்ரீதியாகராஜர் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கு ஏற்றச் சொல்லி வருவோர் போவோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10ரூ கொடுத்தால் 5 விளக்கு. ஒரு வியாபாரம்.

அப்பர் பெருமான் பதிகம் பாடிய தலமும் இது. கைலாயம் செல்ல விரும்பிய அப்பர் இறைவனால் தடுத்தாட்கொண்டு ஒரு பொய்கையில் மூழ்கி எழுந்தபோது திருவையாறில் எழுந்ததாக வரலாறு கூறுகிறது. அப்பருக்குக் கைலையைக் காட்டிய இடம் "தெ கைலாயம்" என்று அழைக்கப் படுகிறது. கோயிலுக்குத் தென்புறம் உள்ள இந்த சன்னதி "பஞ்சவன் மாதேவீச்சுரம்" என்றும் சொல்லப் படுகிறது. இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டதாக ஒரு ஐதீகமும் இந்தக் கோயிலில் உண்டு. அதன் வரலாறு: சிவாசாரியார் ஒருவர் காசிக்குச் சென்றிருந்த சமயம் அவர் ஐயனுக்குப் பூஜை செய்யும் முறை வந்தது. அவரால் உடனே ஊர் திரும்ப முடியவில்லை. அப்போது இறைவனே சிவாசாரியார் வேடத்தில் வந்து தன்னைத்தானே பூஜித்து வந்தார். சிவாசாரியார் வந்து பார்த்து "என்னைப் போல் இருக்கும் நீ யார்" எனக்கேட்க இறைவன் "வா, காட்டுகிறேன்." என்று சொல்லிக் கருவறையினுள் மறைகிறார். இந்த ஐதீகத்தைப் பின்பற்றி இப்போதுமொரு இரும்புப் பேழையில் இரு லிங்கங்களும், ஒரு அம்பாளும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.

மூலவர் கருவறை அகழி போன்று இருக்கிறது. மூலவரின் முடி வளர்ந்து வருவதாகவும் அதனால் ஜடாபாரம் கருவறைக்கு வெளியேயும் பரவியுள்ளதால் இந்தக் கோயிலில் மூலவரின் உள்பிரஹாரத்தைச் சுற்றி வரக்கூடாது என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி பிரஹாரம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தியைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். மூலவர்முன் கவசம் இட்டு அதில் பசு, சூலம் பொறிக்கப் பட்டுள்ளது.அம்மன் கோயில் தனியாக உள்ளது. ரொம்ப தூஊஊஊஊஊரம் போய்ப் பார்க்க வேண்டும். அன்னையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி ஆகும். இங்கே ஐயனுக்குத் தான் விசேஷம்.

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்குமாம். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்குமாம். ஏழு ஊர்ப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் காண திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) பெறுகிறது. நாங்கள் திருவையாறு செல்லும்போது திருவேதிக்குடி வழிதான் சென்றோம். உள்ளே போகவில்லை.

Thursday, August 10, 2006

103. உலகத்து நாயகி

"உலகத்து நாயகியே-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி"
**********************
நாங்கள் திருச்சி போனதும் சமயபுரம் போய் மாரியம்மனைப் பார்க்க முடிவு செய்தோம். பலமுறை போனதுதான். என்றாலும் பார்க்காமல் முடியாது. இதற்கு முன்னர் எங்களுக்கு நேர்ந்த ஒரு அனுபவம் அம்மனின் அருளையும், கருணையையும், நாங்கள் தவறாமல் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொன்னதையும் நினைவு கூர்ந்தோம்.
**********************
2005 மார்ச் மாதம் எங்கள் பையன் 3 வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு வந்ததால் குலதெய்வம் கோவிலுக்குப் போக முடிவு செய்து கிளம்பிப் போய்விட்டுப் பின் திருச்சியில் சொந்தக்காரரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பினோம். வழியிலேயே சமயபுரம் மாரியம்மன் கோவில் வருவதால் அங்கே போகலாம் என நானும், என் கணவரும் நினைக்க எங்கள் பையனும், டிரைவரும் அங்கே போனால் நேரம் ஆகிவிடும், பின் சென்னை போகும்போது நடுராத்திரி ஆகும் என்று சொன்னார்கள். நான் கோவில் மெயின் ரோட்டில் வழியிலேயே இருப்பதால் நேரம் ஆகாது என்று சமாதானம் செய்தேன். திருச்சி தாண்டியதும் கோவில் அடையாளத்தைக் காட்டும் வளைவு வருவதை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே வந்தோம். சாதாரணமாகச் சமயபுரம் போகும் பேருந்துகள் நிறையக் கண்ணில் படும். அன்று ஒரு பேருந்து கூடக் கண்ணில் படவில்லை. அதனால் என்ன நமக்கு இடம் தெரியுமே என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அரை மணி நேரத்தில் வரவேண்டியது ஒரு மணி நேரம் ஆகியும் கண்ணிலேயே படவில்லை. நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், எனக்குச் சரியாகப் புரியவில்லை, என்றும் இனிமேல்தான் சமயபுரம் வரும் என்றும் கூறவே வண்டி மேலே போனது. சற்று நேரத்தில் பெரம்பலூரும் வந்து அங்கே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வளைவும் வரவே நான் நிச்சயமாகச் சமயபுரம் தாண்டி விட்டோம் எனக்கூறவே உடனே அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டோம். அங்கெ இருந்த ஒருத்தர், "அது என்ன ஒரு பத்து கிலோ மீட்டர் தான் இருக்கும். திரும்பிப் போய்ப் பார்த்துவிட்டே போங்க," என்று கூறினார். சரி பத்து கிலோமீட்டர் தானே என்று திரும்பினோம். போனால் போய்க் கொண்டே இருக்கிறது. சமயபுரம் கோவில் வளைவு கண்ணில் படவே இல்லை. மறுபடி சந்தேகம், மறுபடி கேட்டு, மறுபடி இன்னும் ஒரு பத்து கிலோமீட்டர் என்று இப்படியே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வந்ததும் அன்னை தன் கோவிலைக் காட்டினாள். இத்தனை பெரிய வளைவு எப்படி ஒருத்தர் கண்ணிலும் படாமல் 50 கிலோமீட்டர் போனோம்? இன்று வரை புரியாத புதிர். அப்புறம் உள்ளே போய் அம்மனைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்பினோம். மாரியம்மன் எல்லாரும் ஒன்றுதானே, ஊரில் நம் குலதெய்வக்கோவிலில் பார்த்ததும் அவளைத் தானே என்ற எங்கள் பையன் வாயே திறக்கவில்லை.

இம்முறையும் அவளைப் பார்த்துவிட்டுப் பின் அவள் பிறந்த இடமான ஆதி சமயபுரம், மாகாளிக்குடி போன்றவையும் பார்க்க நினைத்துப் போனோம். சமயபுரம் கோவிலில் கூட்டம் இருந்தாலும் சிறப்புத் தரிசனம் இல்லாமலேயே அன்னை தரிசனம் நன்கு கிடைத்தது. பிரசாதமும் கிடைத்தது. வளையல், குங்குமம், மஞ்சள் போன்றவை தருகிறார்கள்.இந்த அன்னை வருடத்தில் பத்து நாள் வைகாசி மாதத்தில் நாச்சியார் கோவிலில் ஆகாய மார்க்கமாக வந்து தங்குவதாக ஐதீகம். பத்து நாளும் நாச்சியார் கோவிலில் உற்சவம் நடக்கும். அன்னைக்கு அங்கே ஆகாச மாரியம்மன் என்றே பெயர். நாச்சியார் கோவிலில் இருந்து எங்கள் கிராமத்திற்குப் போகும் வழிதான். . மற்ற நாட்களில் ஒரு முக்கோணவடிவிலான கல்லில் இருக்கும் அன்னை, பத்து நாளும் அலங்கார ஸ்வரூபிணியாகக் காட்சி தருவாள். நாங்கள் நாச்சியார் கோவில் வழி போனாலோ அல்லது திரும்பி வந்தாலோ போகாமல் வருவது இல்லை.
பிறகு அங்கிருந்து அன்னை பிறந்த இடமான ஆதி சமயபுரம் அல்லது இனாம் சமயபுரம் போனோம். வழி இந்தத் தற்போதைய சமயபுரத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் இருக்கிறது. நுழைவு வாயிலில் ஆதி சமயபுரம் போகும் வழி என்று வளைவு இருக்கிறது. அங்கே போய் அம்மன் தரிசனம் செய்து விட்டுச் சன்னதிக்கு அருகேயே இடது பக்கம் சிறு ஓட்டு வீடு போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்குள் அம்மன் பிரதிஷ்டை செய்திருக்கும். அதுதான் அம்மனின் உண்மையான பிறந்த இடம் என்கிறார்கள். அங்கிருந்து தற்சமயம் இருக்கும் இடம் வந்ததாகச் சொல்கிறார்கள். யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. கோவிலில் புத்தகமும் வாங்க முடியவில்லை. அன்னை அருளால் அடுத்த முறை போகும்போதாவது வாங்கிப் போடலாம் என்று நம்புகிறேன்.

இதற்குப் பிறகு நாங்கள் பக்கத்தில் இருக்கும் "மாகாளிக்குடி" என்ற ஊருக்குப் போனோம். இதுவும் சமயபுரத்திலிருந்து 2 கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. நான் ஒரு சில வருடங்களுக்கு முன் என் தம்பியுடன் போனேன். அப்போதில் இருந்து என் கணவருக்கு இந்தக் கோவிலைக் காட்ட எண்ணி இப்போதுதான் முடிந்தது. கோவிலின் விசேஷம்: இது விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவில். அதைத் தவிர உஜ்ஜையினியில் இருந்து அவன் கொண்டு வந்த முழுத் தங்கத்தால் ஆன காளி சிலை இங்கே இருக்கிறது. விக்கிரமாதித்தன் காடாறு மாசம், நாடாறு மாசம் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை காடாறு மாசத்தில் இங்கு வந்து தங்கி இருந்ததாகவும், அப்போது இந்தக் கோவிலைக் கண்டுத் தான் வழிபடும் காளியே இவள் என்று அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே தான் கையோடு கொண்டு வந்த காளி சிலையையும் அங்கேயே வைத்துப் பூஜித்ததாகவும் சொல்கிறார்கள்.விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் மாட்டிக் கொண்டு விழித்ததும் இங்கே தான். அன்னையின் அருளால் வேதாளத்தின் கேள்விகளுக்குப்பதில் கிடைத்ததும் இங்கேதான் என்கிறார்கள். முன்னே போயிருந்தபோது வேதாளம் இருந்த மரம் என்று ஒரு பழைய மரத்தைப் பார்த்த ஞாபகம். இப்போது வேதாளத்திற்குத் தனி சன்னதி இருக்கிறது. அம்மனின் சன்னதிக்கு இடப்பக்கம் பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கிறது.

அன்னை இங்கே "ஆனந்த செளபாக்கிய சுந்தரி"யாகத் தாண்டவ ஸ்வரூபத்தில், வாசி யோகத்தில் அருள் பாலிப்பதாக அங்கே இருந்த காளி உபாசகர் கூறினார். கோவிலில் கூட்டம் இல்லாத காரணத்தால் எல்லாம் கேட்டு அறிய நேரமும் இருந்தது. சொன்னவரும் ஸ்ரீவித்யா உபாசகர் என்று அவர் பேச்சிலேயே தெரிந்து கொண்டோம். விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மஹாகாளி இந்த அன்னையின் உற்சவ விக்ரஹத்திற்கு வலப்பக்கம் இருக்கிறது. அந்த அன்னைக்கும் தனியாகக் கற்பூர ஆரத்தி காட்டிச் சொல்கிறார்கள். சுமார் ஒரு அடி உயரம் இருக்கும் அந்த சொர்ணத்தினால் ஆன விக்ரஹம் அந்தக் கோவிலுக்கு வந்துப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். இதே மாதிரிதான் உஜ்ஜைனியில் காளி அம்மன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
**********************
"பூதமைந்தும் ஆனாய்-காளி!
பொறிகளைந்தும் ஆனாய்!
போதமாகி நின்றாய்-காளி!
பொறியை விஞ்சி நின்றாய்!

இன்பமாகி விட்டாய்-காளி!
என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால்-
பிறிது நானுமுண்டோ?

அன்பு தந்து விட்டாய்- காளி, காளி!
ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்-காளி!
துயரழித்து விட்டாய்!"

Wednesday, August 09, 2006

102. நான் செய்த தவம்

உண்மையிலேயே நான் ரொம்பத் தவம் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னோட இந்த உடல் நிலையில் இத்தனை கோவில்களுக்குச் சென்று வரமுடியாது. அதற்கு உரிய மனோதைரியத்தையும் எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி என்று சொல்வதை விட அவனையும், அவன் அருளையும் எந்நாளும் நான் மறவாமல் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் செயலே!

இம்முறைத் திட்டம் இட்டது ஒன்று. நடுவில் பங்களூர் பயணம் குறிக்கிடவே சற்று மாறுதல் செய்ய வேண்டி வந்தது. ஆகவே மதுரை போக முடியவில்லை. நிறையக் கோயில்கள் சென்று வந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான சில கோவில்களைப் பற்றி எழுத எண்ணம். எல்லாம் எல்லாப் புத்தகங்களிலும் வருகிறது. என்றாலும் நான் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டி எழுதுகிறேன். முதலில் என் அருமை நண்பர், என் எல்லாக் காரியங்களிலும் கை கொடுப்பவர், விக்னங்களைத் தடுத்து ஆட்கொள்பவர், ஒரு சிறு அருகம்புல்லிற்கே மனம் மகிழ்பவர் ஆன அந்த ஆனைமுகத்தோனுக்கு வணக்கம் சொல்லி அவன் திருக்கோயிலைப் பற்றி எழுதுவதுடன் ஆரம்பிக்கிறேன். இது போனது என்னமோ அப்புறம்தான். ஆனால் முதலில் ஆனைமுகத்தோன் புகழ்தான் வர வேண்டும் என்பதால் அவன் தாள் பணிந்து ஆரம்பிக்கிறேன்.
**********************
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு-துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற்சார்வர் தமக்கு.
**********************
திருவலங்சுழி
காவிரி அன்னை வலமாகச் சுழித்துக் கொண்டு போனதால் இந்த க்ஷேத்திரம் "திருவலஞ்சுழி" எனப் பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கட்டிக் கடையும் வேளையில் அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட தேவேந்திரன், என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் "விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்ல அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான். விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது. அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என அங்கேப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் "ஸ்வேத விநாயகர்" என்றும் "வெள்ளைப் பிள்ளையார்" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார். இவருக்கு அபிஷேஹம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப் படுகிறது. இவரை வழிபட்டுவிட்டுத் தான் இவரின் தம்பியான "ஸ்வாமிநாதனை" வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதைத் தவிர இந்தக் கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது.
வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் (பிலத்துவாரம்) ஏற்படவே காவிரி அதனுள் சென்று மறைகிறாள். சோழன் செய்வது அறியாது தவிக்க அசரீரி கூறுகிறது. "தன்னலம் கருதாது அரசன் ஒருவனோ அல்லது மாமுனிவர் ஒருவரோ அந்தப் பாதாளத்தில் தங்களைப் பலியிட்டுக் கொண்டால் பள்ளம் மூடிக் கொண்டு காவிரி வெளிப்படுவாள்" எனக்கூறுகிறது. இதைக் கேட்ட ஹேரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். ஹேரண்ட முனிவரின் சிலை கோவிலில் இருக்கிறது. மஹா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வெளிவந்து வழிபட்டதாக ஐதீகம். அன்னை பராசக்தி சடைமுடி நாதனையே மணம் புரிவேன் என்று தவம் இருந்த காரணத்தால் "சக்திவனம்" என்ற பெயரும் உண்டு. ஸ்வாமிமலை கோயிலுக்கு நுழைவு வாயில். கோயில் ரொம்பப் பெரிது. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலம். கோவில் ரொம்பப் பெரிது. ஆனால் இன்று திருப்பணி வேலைகள் ஆரம்பித்து நடுவில் நின்று விட்டது போல் தெரிகிறது. ஸ்வாமிநாதன் தன் அண்ணனின் வீடு கவனிப்பாரின்றி இருப்பதைக் காணவில்லையா தெரியவில்லை. இத்தனை பெரிய கோவிலைப் பராமரிக்க ஆட்களும் குறைவு. சன்னதிகளில் தனியாகப் போய்த் தரிசித்து விட்டு வரவேண்டி உள்ளது. பக்கத்தில் ஸ்வாமிமலை அத்தனை கோலாகலத்துடன் இருக்க அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயில் இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. கணபதி எளிமையானவர் என்பதால் இது போதும் என்று இருக்கிறார் போலும். கோவிலுக்கு மன்னர்கள் அளித்த மானியங்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேஹம் நடைபெறும் என நம்புவோம்.

Tuesday, August 08, 2006

101. குண்டர் படைத் தலைவர்

ஹி,ஹி,ஹி, குண்டர் படைத் தலைவருக்குத் தனிப் பதிவு போட்டுடலாம்னு ஒரு எண்ணம். அதான்.
*********************

திரு தி.ரா.ச. அவர்களின் ஆலோசனைப்படிக் குண்டர்படைத் தலைவரைக் கூட்டிக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட நினைத்த அம்பி ஏமாந்தார். தலைவி குண்டர் படைத் தலைவரைச் சரியாகக் கண்டு கொண்டதில் சந்தோஷம் அடைந்த அவர், "தலைவி சொல்லே வேத வாக்கு" என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்.
முன்னதாக அம்பியுடன் சேர்ந்து தலைவியை மிரட்ட வந்த குண்டர் படைத் தலைவர், தலைவியின் அறிவாற்றலையும், பிரச்னைகளைச் சமாளிக்கும் முறையையும், முக்கியமாக உண்மையிலேயே சின்னப் பொண்ணாகத் தலைவி இருந்ததைப் பார்த்து (!!!!!!!) வியந்தும், அம்பியிடம் இருந்து வந்த தன் நட்பை முறித்துக் கொண்டார். தலைவியின் மின்னல் வேகச் செயலாற்றும் திறமைக்குத் தலை வணங்கித் தான் தலைவியுடன் சேர்ந்து கொள்ளும் ஆசையில் தான் அம்பியுடன் வந்ததாகத் தெரிவித்தார். அவர் தம் முடிவில் மனம் மகிழ்ந்த தலைவி அவருக்கு உப்புப் பொட்டலம் பரிசளித்தார். அவரும் மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பதற்கேற்பத் தான் தலைவியிடம் மிக்க மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் அவருக்கு எனத் தனிப் பதிவு இல்லாத காரணத்தால் தலைவி அவரைச் சீக்கிரம் வலைப்பக்கம் ஆரம்பிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தலைவி அவரையும் ஒண்டிக்கு ஒண்டி என்று ஒரு கை பார்க்க வசதியாக இருக்கும் என்பது தலைவியின் எண்ணம். குண்டர் படைத் தலைவர், தான் மிக்க ஒல்லியாக இருப்பதால் இந்தப் பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளத் தலைவி ஒல்லியாக இருப்பவர்கள் குண்டர் படைத் தலைமையாக இருப்பது தான் நியாயம் என்று அவரைத் தேற்றினார்.
**********************

(ஹி,ஹி,ஹி, அம்பி, எப்படி இருக்கு? உங்க கூட வந்தவர் இந்த ஒரு பதிவில் மட்டும் இல்லை, இனி வரப் போகும் எல்லாப் பதிவிலும் குண்டர் படைத் தலைவர் தான். இது தான் இந்தப் பதிவுலகின் சாபக்கேடு, தமிழ் சினிமா மாதிரி.)

100. 100. 100. 100. 100. முப்பெரும் விழா,

ஹி,ஹி,ஹி, ஹி,ஹி, 100 அடிச்சுட்டேன். 100 பதிவுங்க வேறே ஒண்ணும் இல்லை. என்ன கேட்கறீங்க? படிக்கும்போது 100 வாங்கினேனா என்றா? அதான் இப்போ 100 வாங்கறேன் இல்லை. பழசை எல்லாம் கிளறக்கூடாது. இப்போ நம்ம முப்பெரும் விழா பற்றி ஒரு அறிக்கை.
*************

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியும், இத்தனை நாள் வெளியே போய் எல்லாருக்கும் நிம்மதியைக்கொடுத்தவருமான நம் தலைவி தன் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தலைமையகம் திரும்பினார். அவர் அம்பியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டதற்கும், தமிழ் நாட்டின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்ததற்கும், 100 பதிவுகள் போட்டதற்கும் சேர்த்து அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. நேரமும், விழாக் காணும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். இப்போது தலைவியின் வெற்றிப் பயணத்தின் விவரங்கள் வருமாறு:

முன்னதாகத் தலைவி கடந்த 30-ம் தேதி பங்களூரில் அம்பியுடன் ஒரு சந்த்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனது அனைவரும் அறிந்ததே! தலைவி பங்களூர் வந்து அடைந்ததும், திரு அம்பி அவர்கள், தன் குண்டர் படைத் தலைவருடன் தலைவியைத் தேடி அலைந்தார். அம்பி எதிர்பார்த்ததோ ஒரு குடுகுடு கிழவியை. பல் எல்லாம் போய்த் தலை நரைத்துக் கையில் ஒரு தடியுடன் ஒளவையார் ரேஞ்சுக்குக் கற்பனை செய்து வைத்திருந்த அம்பி தலைவியைக் காண முடியாமல் திணறினார். ஆனால் தலைவி அம்பியை இனம் கண்டு கொண்டார். தலைவியைத் திணற அடிப்பதற்காக அம்பி மாறு வேஷத்தில் வந்திருந்தாலும், அவர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில் இருந்த கறுப்பு நிறத்தை வைத்து அவர் மறைமுகமாகத் தலைவிக்குக் கறுப்புக்கொடி காட்ட முயல்வதைத் தலைவி புரிந்து கொண்டார். எனினும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். தலைவியைக் குழப்ப நினைத்த அம்பியும், குண்டர் படைத் தலைவரும் தங்கள் பெயரை மாற்றிச் சொன்ன போதிலும் தலைவி சரியாக அவர்களை இனம் கண்டார். தலைவியின் அறிவு இப்படி பட்டொளி வீசிப் பிரகாசிப்பதைக் காணச் சகியாத அம்பி தலைவியிடம் தான் smart ஆக இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்ள, தலைவி அவரை முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாகத் தான் கற்பனை செய்து வைத்திருந்ததை கூறுவதற்கு rough and tough என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்யவே அம்பியின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் வழிந்து ஓடிக் கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகரம், கபினி போன்ற அணைகளில் நீர் நிரம்பி வழிவதால் கர்நாடகாவின் பொதுப்பணித்துறைக்கு அந்தத் தண்ணீரைத் தமிழ் நாட்டிற்குத் திருப்பி விடக் கட்டளை இட்டார். தமிழ் நாட்டில் காவிரியின் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாய அணித் தலைவர் திரு இளா அவர்கள் தலைவிக்குக் "காவிரி கொண்டாள்" என்ற பட்டம் அளிக்கத் தீர்மானித்துள்ளார்.

அம்பியுடன் தலைவி போட்ட ஒப்பந்தம் சுமுகமாகக் கையெழுத்திடப்பட்டது. அம்பி ரேஞ்சுக்கு "சோபியா லாரன்", "எலிசபெத் டெய்லர்" போன்ற நடிகைகள் போதும் என்று தலைவி முடிவு செய்ய அம்பி இன்னும் கொஞ்சம் அவர்கள் இருவருக்கும் முன்னால் நடிக்க வந்தவர்களாகப் பாருங்கள் என்று தலைவியிடம் விண்ணப்பம் செய்து கொண்டார். தலைமையகம் திரும்பியதும் அதைப் பற்றிப் பரிசீலிப்பதாகத் தலைவி வாக்குறுதி அளித்தார். இதன் பின் தலைவி தமிழ் நாட்டின் காவிரி பாயும் மாவட்டங்களின் நீர் வரத்தையும், மற்ற விவரங்களையும் கண்டு களிக்கத் தமிழ்நாடு திரும்பினார்.

தலைவியின் இந்தத் திக்விஜயம் வெற்றிகரமாக முடிந்தது கண்டு சங்கப் பெருமக்கள் களிப்பு அடைந்திருக்கிறார்கள். தலைவி சுற்றுப் பயணம் செல்லும்போது நடந்த பிரிவு உபசார விழாவில் தாமதமாகக் கலந்து கொண்ட "நாகை சிவா" விற்குத் தலைவி முன்னம் அளிப்பதாக ஒப்புக் கொண்ட பரிசுகளை ரத்து செய்து விட்டுத் தற்சமயம் ஒரு பழைய சினிமா போஸ்டரும், சில பல காக்கைகளும் அனுப்பி வைத்தார். (சிவா, வந்ததும் ஒரு பதிவு போடுங்க, பராசக்தி படத்துக் "கா, கா" பாட்டைப் போட்டு, புரிஞ்சுப்பேன், காக்கை வந்ததை.)
***********
சங்கக் கண்மணிகளும், முத்தமிழ்க்குழும உடன்பிறப்புகளும், தமிழ்மகள்க் குழுமச் செல்வங்களும், மற்றும் உள்ள எல்லாச் சங்கப் பிள்ளைகளும் பெருமளவில் திரண்டு வந்து விழாவைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.