எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 27, 2015

அப் "பு" டேட்ஸ்!

அப்பு வருது டோய்! பார்த்து நாலு வருஷம் ஆச்சு. அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது தான். மற்றபடி எவ்வளவு மாறி இருக்குனு நேரே பார்த்தால் தான் தெரியும். விமானம் வந்தாச்சாம். வந்துட்டு இருக்காங்க. அப்பு வரதாலே இன்னிக்கு லேட் படுக்கை.   ஒரு பதினைந்து நாட்களுக்கு வீடு ஜீவனுடன், உயிர்த்துடிப்புடன் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டி சப்தம் தவிர குழந்தைக் குரல்கள் கேட்கும். தொலைக்காட்சியில் போகோ சானல் மட்டும் ஓடும்.  வரேன், இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவாங்க. 

Sunday, July 26, 2015

நாகர்கோயிலில் !

இங்கே

முதல்நடைமேடையில் நின்று கொண்டிருந்த வண்டி திருவனந்தபுரம்--நாகர்கோயில் இடையே மட்டும் செல்லும் வண்டி. கூட்டமெல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட் எடுக்காததாலும், சாமான்களை எடுக்க வேண்டும் என்பதாலும் எங்களால் அதில் ஏற முடியவில்லை. அடுத்து எப்போ வண்டினு விசாரணையில் கேட்டதற்குப் பனிரண்டே முக்காலுக்கு பெங்களூரில் இருந்து வரும் என்றார்கள். சரினு டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு, சாமான்களையும் க்ளோக் ரூமில் இருந்து எடுத்துக் கொண்டு முதலாம் நடைமேடையிலேயே உட்கார்ந்தோம். வடமாநிலங்களில் இம்மாதிரிப் பெரிய பெரிய ஸ்டேஷன்களாக இருந்தாலும் கூட அங்கே அமரும் வசதியோடு கூடிய இடங்களே காணப்படாது. நின்று கொண்டு தான் இருக்க வேண்டும். உட்கார வேண்டும் எனில் பயணிகள் தங்கும் அறைக்குச் சென்று அமர வேண்டும். ஆனால் நம் தென் மாநிலங்களில் உட்காருவதற்கு வசதிகள் இருக்கின்றன.

ரயில்வே அறிவிப்புச் செய்பவர்கள் அப்போது 5 ஆம் நடைமேடைக்கு பெங்களூர் செல்லும் வண்டி வருவதாக அறிவித்திருக்கிறார். சரியாகக் கவனிக்காமல் நாங்கள் செல்ல வேண்டிய வண்டி அதுதான் என நினைத்துவிட்டோம்.  ஒரு கூலியாளை அழைத்து சாமான்களை எடுத்துக் கொண்டு அங்கே கொண்டு விடும்படி சொல்ல, அவர் எந்தப் பெட்டி என்று கேட்க, நாங்கள் நாகர்கோயில் போகணும்னு சொல்ல, அவர் அந்த வண்டி நாகர்கோயிலில் இருந்து பெண்களூர் செல்வதாகவும், நாங்கள் செல்ல வேண்டிய வண்டி முதலாம் நடைமேடைக்கே வரும் என்றும் சொன்னவர், எதற்கும் தான் போய்ப் பார்த்து வருவதாகவும், அப்படி ஐந்தாம் நடைமேடை தான் என்றால் சாமான்களைத் தூக்கி வருவதாகவும் சொல்லிச் சென்றார். பத்து , இருபது நிமிடத்தில் திரும்பி வந்தவர் எங்களை அங்கேயே அமரச் சொல்லிவிட்டு வண்டி இங்கே தான் வரும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். சந்தேகத்துக்கு அங்கே பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்திலேயும் கேட்டுக் கொண்டோம். பின்னர் வண்டி வந்ததும் ஏறிக் கொண்டோம். வண்டியே காலி தான். நாகர்கோயில் செல்லும் பயணிகள், கன்யாகுமரி செல்லும் பயணிகள் எனக் கொஞ்சம் பேரே இருந்தனர்.

வண்டி செல்லும் வழியெங்கும் அழகான இயற்கைக் காட்சிகள். பெட்டியைப் பூட்டிக் காமிராவை உள்ளே வைத்திருந்ததால் எடுக்க முடியலை.  ஒரு சில காட்சிகளை மட்டும் எடுக்க முடிந்தது.


மேகங்கள் மூடிக் கிடக்கும்  காட்சி


நாகர்கோயிலுக்கு ஒன்றரை மணி நேரத்தில் வந்து விட்டோம். எங்களுக்குத் திருவனந்தபுரம் செல்லும்போது பழக்கம் ஆயிருந்த ரயில்வே ஊழியர் நாகர் கோயிலில் மீனாக்ஷிபுரத்தில் தங்கும்படி அறிவுறுத்தி இருந்தார். பேருந்து நிலையமும் அருகில் என்றும், சாப்பாடு வசதிகளும் அங்கே அதிகம் என்றும் சொல்லிச் சில ஹோட்டல்கள் பெயரையும் கொடுத்திருந்தார். நாகர்கோயில் ரயில்வே நிலையத்தில் நாங்கள் பார்த்த ஆட்டோக்காரர் எங்களை மீனாக்ஷிபுரம் அழைத்துச் செல்ல 50 ரூ கேட்டார். எவ்வளவுனு தெரியலை. ஆகவே சரினு சொல்லிட்டு உட்கார்ந்தோம். ரயில்வே ஸ்டேஷன் அருகேயே இருக்கும் லாட்ஜில் தங்கறீங்களானு கேட்டார். அந்த இடமே சரியாக இல்லை என்பதால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். கடைசியில் வடிவீச்சுவரம் என்னும் பகுதி வழியாக மீனாக்ஷிபுரம் சென்றார் ஆட்டோக்காரர். தெருவெல்லாம் மேடு, பள்ளம், ஒரே குப்பை மயம். சுத்தம் என்பதே மருந்துக்கும் இல்லை.  நான் கற்பனையிலொ கண்டிருந்த நாகர்கோயில் இது அல்ல!  நாங்கள் சென்ற வழியெங்கும் பித்தளைப் பாத்திரக் கடைகள். முதல் முறை நாகர்கோயிலுக்கு எண்பதுகளில் வந்தப்போ இங்கிருந்து விளக்கு வாங்கிச் சென்றோம். அந்த நினைவு வந்து பின்னர் ஒரு முறை வந்து பார்க்கணும்னு நினத்துக் கொண்டு சென்றேன். 

அதற்குள் மீனாக்ஷிபுரத்தில் தளவாய் தெரு என்னும் தெருவில் உள்ள ஓர் லாட்ஜில் கொண்டு விட்டார். ஆட்டோக்காரர். வண்டிகள் நிறுத்தக் கீழே இடமும், கீழேயே ஒரு பக்கமாகச் சில அறைகளும் காணப்பட்டன. மேலே நாலு மாடி இருப்பதாகவும் தெரிந்தது. கீழேயே வரவேற்பு அறை. அங்கே விசாரித்தோம். டபுள் பெட்ரூம் ஏசி வசதியோடு ஆயிரத்து நூறு ரூபாய் என்றார். இதைத் தவிர சூட்(ஸ்வீட்?) இருப்பதாகவும் அது ஆயிரத்து ஐநூறில் இருந்து இருப்பதாகவும் சொன்னார். இரண்டையும் பாருங்க எனச் சொல்லி என்னை மேலே அனுப்பினார். நானும் அங்கே பார்த்துட்டு அறை பிடித்திருந்தால் அங்கேயே இருந்துவிடுவதாகவும், சாமான்களைத் தூக்கிக் கொண்டு பணம் கட்டிட்டு ரங்க்ஸ் மேலே வரட்டும்னு சொல்லிட்டு நல்லவேளையா அங்கே இருந்த லிஃப்டில் ஏறி மேலே சென்றோம். ஊழியர் ஒருத்தர் கூட வந்து அறைகளைக் காட்டினார். ஆயிரத்து நூறு ரூபாய் அறையே விசாலமாகவும், நல்ல காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் காணப்பட்டது. அறையின் ஓடிஎஸ் பக்கம் ஒரு ஜன்னலும் அது கீழே உள்ள கார்பார்க்கிங் பக்கமாக இருக்கு என்பதால் நல்ல காற்றும் வரும். அதைத் தவிர வராந்தாவைப் பார்த்தபடி ஒரு ஜன்னலும் இரண்டு இருந்தது.

மற்ற வசதிகளும் திருப்தி தர நான் சரினு சொல்லிட்டு அங்கே இருந்தேன். இருபது நிமிடத்தில் ரங்க்ஸ் சாமான்களோடு மேலே வந்தார். ஓட்டல் ஊழியர் சாமான்களைத் தூக்கி வந்து வைத்துவிட்டு ஏதேனும் வேண்டுமா, சாப்பாடு வாங்கி வரவானு கேட்டார். சாப்பிட்டாச்சுனு சொல்லி அப்போ  மணி மூன்று  ஆகிவிட்டதால், காஃபி, டீ கிடைக்குமானு கேட்டோம்.  நாலு மணிக்குத் தான் கிடைக்கும் என்றும் நாலு மணிக்கு வாங்கி வருவதாகவும் சொன்னார். எங்களிடம் ஃப்ளாஸ்க் இருப்பதைச் சொல்லி வந்து வாங்கிப் போகச் சொன்னோம். தொலைக்காட்சியைப் பார்த்தபடி ஓய்வு எடுத்துக் கொண்டோம்.  

Friday, July 24, 2015

ஒழுங்காப்பல் தேய்க்கிறீங்களா?


colgate paste with charcoal க்கான பட முடிவு
colgate paste with neem க்கான பட முடிவு
colgate paste with lemon க்கான பட முடிவு


ஒழுங்கா நான் பாட்டுக்கு உமிக்கரியிலே பல் தேய்ச்சுட்டு இருந்தேன். கெடுத்தாங்கப்பா! அதெல்லாம் கூடாது, பேஸ்ட், பிரஷ் தான்னு! எலுமிச்சம்பழ மூடியிலே உப்புத் தோய்த்தும் பல்லைச் சுத்தம் பண்ணி இருக்கேன். அதெல்லாம் எனாமலைக் கெடுத்துடும்னு சொல்லிட்டு இருந்துட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்போ மரத்துமேலேருந்து குதிச்சுட்டு, "உன் பேஸ்ட்லே உப்பு இருக்கா? எலுமிச்சை இருக்கா? இருந்தால் ரசம் வைக்கலாம்."னு சொல்றதோடு. சார்க்கோல் இருக்கானும் கேட்கிறாங்களே! என்னப்பா அநியாயம் இது! ஒழுங்கா நம்ம வழக்கப்படியே இருக்க விட்டிருந்தால் இப்போ உப்பு, எலுமிச்சை, உமிக்கரி னு தேட வேண்டாமுல்ல! சுத்தமா நம்ம வழக்கத்தையே மறக்கடிச்சுட்டு இப்போப் புதுசா அவங்க கண்டு பிடிப்பு மாதிரிச் சொல்றாங்களே! என்ன அநியாயம் இது! இதையும் பார்த்து ரசிக்கிறோமே! :(

கீழே உமிக்கரி செய்யும் விதம் கொடுத்திருக்கேன்.

உமிக்கரி செய்யும் விதம். நெல்லை அரிசியாக்கும்போது சுத்தம் செய்து தவிட்டைத் தனியாக எடுத்து விட்ட பின்னர் (தவிடு மாட்டுக்கு உணவாகும்.) கிடைக்கும் உமியைக் குவித்துவிட்டு அதன் நடுவே ஆழமான குழி தோண்டிக் கொண்டு அதில் நிறைய நெருப்புக் கனன்று கொண்டிருக்கும் கரியைப் போட்டு பின்னர் மேலே மூடிவிடுவார்கள். அது பாட்டுக்கு நாள் முழுவதும் உள்ளே கனன்று கனன்று பின்னர் மேலே வரை வந்து மெல்ல மெல்லக் கறுப்பு நிறம் பெற்று விடும். மறு நாள் அதை ஆறவிட்டுச் சலித்துப் பல் தேய்க்கக் கொடுப்பார்கள். ஒரு சிலர் இதில் வாசனைக்காக ஏலக்காய், கிராம்பு போன்றவை சேர்ப்பதுண்டு. (இரண்டுமே பல்லுக்கு நன்மை தரும்.)


இன்னொரு விதம்! நெல்லிலேயே பதராக இருக்கும். அதைக் கருக்கு என்பார்கள். அந்தக் கருக்கையும் சேகரித்துக் குவித்து மேற்சொன்ன முறையிலே கருக்குவார்கள். இதிலும் பல் தேய்க்கலாம். இதெல்லாம் எங்க வீடுகளில் அறுபதுகளின் கடைசி வரை செய்யப்பட்டு வந்தது. விபூதியும் வீட்டிலே தான் செய்வார்கள். தக்ளியில் நூல் நூற்றுச் சிட்டம் போட்டு அதைக் கதர்க்கடையில் கொடுத்து அதில் தான் அப்பா வேஷ்டிகள், துண்டுகள் வாங்குவார். எழுபதுகளுக்குப் பின்னர் எல்லாம் நாகரிக மயம்!  


ஹிஹிஹி, என்ன திடீர்னு பார்க்கிறவங்களுக்காக ஒரு டிஸ்கி:

சில மாதங்களாகப் பார்த்து வரும் பற்பசை விளம்பரத்தோட தாக்கம் தான் இது. எல்லாம் நம்ம நாட்டிலே ஒரு காலத்தில் கடைப்பிடித்து வந்தவையே! ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சியில் பல் தேய்த்தால் நல்லது என்பதற்காக ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி எனப் பழமொழியே இருக்கு. ஆனால் பாருங்க! இதை எல்லாம் இப்போப் பற்பசை தயாரிக்கிறவங்க வந்து சொல்ல வேண்டி இருக்கு! ஆகவே நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இது மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

Thursday, July 23, 2015

பதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்!

ஹிஹிஹி, "மொள"காய பிரச்னை, நம்ம எண்ணங்கள் பதிவிலே ஓடிட்டு இருக்கு! எரிசேரி பத்தி எழுதினால், ஶ்ரீராம் அதுவும் மொளகூட்டலும் ஒண்ணானு கேட்டு வைக்க. மொளகூட்டலை விவரித்த துளசிதரன்/கீதா, பாலக்காடு பக்கம் வேறே மாதிரிப் பண்ணுவாங்கனு சொல்ல, ஷோபா அதை மறுக்க சுவையான  ஒரு சமையல் விவாதமே நடைபெறுகிறது. எல்லாம் கிடக்க, நாம தான் மொளகூட்டல் பற்றிய ஒரு தெளிவைத் தருவோமேனு நான் உள்ளே புகுந்துட்டேன்! பின்னே! சான்ஸ் கிடைச்சால் விடுவோமா?

ஆனாப் பாருங்க! பின்னூட்டங்களின் தாக்கம் இப்போது தான் ஏற்பட்டதால் இன்று செய்த புடலை மொளகூட்டலுடைய படம் எடுக்க முடியவில்லை. விரைவில் கீரை அல்லது வேறு ஏதாவது காயில் பண்ணிட்டுப் படம் எடுத்துடறேன். இப்போதைக்கு மொளகூட்டல் சமையல் குறிப்பு மட்டும்.


இதுக்குப் புடலை, அவரை, கீரை, கீரைத்தண்டு, பூஷணிக்காய், பறங்கிக்காய் ஆகிய காய்களே அருமையாக இருக்கும். இப்போல்லாம் முட்டைக்கோஸில், சௌசௌவில் போன்றவற்றிலெல்லாம் பண்ணுகின்றனர். ஆனால் எங்க வீட்டில் இன்னும் மாற்றவில்லை. நாம் தான் லேசில் மாற மாட்டோமே! பிடிச்சா ஒரே பிடி! :)

மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ,

கீரை எனில் ஒரு கட்டுக் கீரை (இப்போல்லாம் கீரைக் கட்டுப் பெரிதாக இருப்பதால் ஒரு கட்டுனு சொன்னேன். 4 பேருக்கு தாராளமா வரும். சின்னக் கட்டு என்றால் இரண்டு கட்டு)

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு

பாசிப்பருப்பு( தேவையானால்) ஒரு சின்னக் கரண்டி குழைய வேக வைத்தது.

அரைக்க

மிளகாய் வற்றல், 2

தேங்காய் ஒரு சின்ன மூடி முழுவதும் துருவிக் கொள்ளவும். தேங்காயின் மணம் தான் இதில் முக்கியம்.

சீரகம் இரண்டு டீஸ்பூன்

தாளிக்க

தே.எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, ஒரு டீஸ்பூன் உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் சின்னதாக ஒன்று, கருகப்பிலை.  சீரகம் சேர்ப்பதால் பெருங்காயம் கூடாது.

கீரை எனில் கல்சட்டியில் வேகப்போடவும். அல்லது அடி கனமான ஏதேனும் ஒரு பாத்திரத்தில் பொட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கீரையை உப்புச் சேர்த்து மசிக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைத்து வெந்த கீரையில் சேர்த்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வந்து விடும். பாசிப்பருப்புக் கீரைக்கு நான் சேர்ப்பதில்லை. இதுவே சப்பாத்திக்கு சைட் டிஷாகப் பண்ணினால் பாசிப்பருப்பும், ஒரு உ.கி.யும் சேர்ப்பது உண்டு. ஆனால் மொளகூட்டல் பண்ணும்போது சேர்ப்பதில்லை.

பின்னர் தே.எண்ணெயில் தாளிக்கவேண்டும்.

புடலை க்கான பட முடிவு

படம் நன்றி கூகிளார்


காய்கள் எனில்

காய்களை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு (சீக்கிரம் வேகும், நிறம் மாறாது.) நீர்  விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் உப்பு (கட்டாயம்), பாசிப்பருப்பு (தேவையானால்) சேர்க்கவும்.   நான் பாசிப்பருப்புச் சேர்ப்பேன். பின்னர் மி.வத்தல், தேங்காய், சீரகம் அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும், அதுவே சேர்ந்து விடும். அப்படிச் சேர்ந்து கொள்ளவில்லை எனில் கொஞ்சம் போல் அரிசி மாவு கரைத்து விடலாம். பொதுவாக சமையலில் இந்த மாவு கரைப்பதும், அதைச் சேர்ப்பதும் எனக்குப் பிடிக்காத ஒன்று. சாம்பாரில் மாவு வாசனை வரும்னு தோணும். அதே போல் மொளகூட்டலிலும் மாவு வாசனை வரும்னு தோணுது. ஆகையால் போடுவதில்லை. அதுவே சேர்ந்து கொள்கிறது. பின்னர் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். சாம்பாரை விட வற்றல் குழம்போடு நன்றாக இருக்கும். பொதுவாக நான் சமையலில் சாம்பார் பண்ணவில்லை எனில் வற்றல் குழம்பு அல்லது பருப்புப் போடாத வெறும் குழம்பு பண்ணும்போதே இம்மாதிரிப் பருப்புப் போட்ட கூட்டு வகைகள் செய்வது வழக்கம். ஏதேனும் ஒன்றில் பருப்பு இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்வேன்.  நீங்கள் உங்கள் வழக்கப்படி செய்து கொள்ளுங்கள்.
அவரைக்காயில் செய்தால் அந்த மணமே தனி! :)

Wednesday, July 22, 2015

பிள்ளையாரையும் பார்த்தேனே!

என் அருமைச் சிநேகிதரான நம்ம பிள்ளையார் இல்லாத ஊர்களே இல்லை. அது போல இங்கேயும் வந்து ஒரு கலக்குக் கலக்கிட்டு இருக்கார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரசர்கள் அனைவரும் முதலில்  கன்யாகுமரி மாவட்டத்தின் திருவிதாங்கோட்டிலும், பின்னர் கல்குளத்திலும் இருந்தவர்கள் ஆவார்கள். அப்போதெல்லாம் இதை வேணாடு என அழைத்திருக்கின்றனர். இந்த வேணாடு இப்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்கள், மற்றும் கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்ததாகத் தெரிகிறது.  இதைத் தவிர குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளைச் சேர்த்து வடக்கில் திருவல்லா வரை இருந்த பகுதியை ஆய் நாடு என அழைத்தனர். இரு நாடுகளும் தன்னாட்சி கண்டிருந்தாலும் பாண்டியர்களுக்கு உட்பட்டே ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். பாண்டியர்களின் பிரதிநிதிகள் இங்கே ஆட்சியை மேற்பார்வை செய்தும் வந்திருக்கின்றனர்.

இந்த வேணாட்டின் கடைசி மன்னன் ஆன பால மார்த்தாண்ட வர்மா கிபி 1758 ஆம்  ஆண்டில் மர்மமான முறையில் இறந்தான். அப்போது கொச்சி போன்ற மலபார் பகுதியை ஆண்டு வந்த மலையாளம் பேசும் நம்பூதிரிகள்-நாயர்கள் கூட்டணி திருவிதாங்கூரைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தது. திருவிதாங்கூரும் கொச்சியும் இணைக்கப்பட்டு அதுவும் மலபார் என்றே பெயரில் அழைக்கப்பட்டது. இதன் முதல் மன்னன் ஆன கார்த்திகைத் திருநாள்  ராமவர்மா ஆவான். அவனுக்கு முன்னர் மரணம் அடைந்த பாலமார்த்தாண்ட வர்மா தன் தலைநகரைக் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றி இருந்தான். அதை மாற்றாமல் ராமவர்மாவும் திருவனந்தபுரத்தையே தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்தான். இவ்விதம் தலைநகர் மாற்றப்பட்ட சமயத்தில் தான் மன்னன் தான் வழிபட்டு வந்த விநாயகரையும் உடன் கொண்டு வந்து திருவனந்தபுரம்  கோட்டை அருகே பிரதிஷ்டை செய்திருக்கிறான்.

இந்த விநாயகர் போர்க்களங்களுக்கெல்லாம் சென்றவர் என்கின்றனர். அரண்மனைக் காவலுக்கு இருந்த ராணுவ வீரர்களால் பராமரிக்கப்பட்டதோடு அல்லாமல் அவர்கள் எங்கு சென்றாலும் இவரை வணங்காமல் சென்றதில்லை. இதனால் போரில் வெற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட ராணுவ வீரர்கள் விடாமல் இவரைத் தொழுது வந்திருக்கின்றனர். பின்னர் இந்தப்- பிள்ளையாரை நிரந்தரமாக இங்கேயே பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டி இன்றளவும் ராணுவத்தாலேயே பராமரிக்கப்படுவதாய்க் கூறுகின்றனர்.  ஆகவே இவரை, 'மிலிட்டரி கணபதி' என்றே அழைக்கின்றனர். ராணுவத்தின் ஒழுங்கு, நேரம் தவறாமை, சுத்தம், கட்டுப்பாடு ஆகியன இந்தக் கோயிலிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரை வேண்டிக் கொண்டு  சிதறு காய் போடுகின்றனர். போடும் சிதறுகாய்களை  பெரிய பெரிய இரும்புக் கரண்டிகளால் அள்ளிச் சாக்குகளில் மூட்டைகளாகக் கட்டுகின்றனர். நிற்காமல் சிதறுகாய் போடப்படுகிறது.

நாங்களும் சிதறுகாய் போட்டோம். பின்னர் உள்ளே போய்ப் பிள்ளையாரைப் பார்த்து விட்டுக் கிளம்பினோம். இது கிழக்குக் கோட்டைப் பேருந்து நிலையத்துக்கு அருகே, ரயில்வே ஸ்டேஷனுக்கும் அருகே  இருக்கிறது. இங்கேயும் படம் எடுக்க விடவில்லை. கீழே உள்ள படம் தினமலர் பக்கத்திலிருந்து எடுத்தது!

பின்னர் மீண்டும் கல்யாண மண்டபம் திரும்பினோம். சாப்பாடு தயாராக இருந்தது. எரிசேரி அருமைன்னா அருமை! சேனை எரிசேரிக்கு நறுக்கி இருந்ததே மிக அழகாக இருந்தது. வெந்தும், குழைந்தும் அதே சமயம் துண்டங்களாகவும் சேனையை எடுப்பதற்கு நிறையப் பக்குவம் இருக்கணும். உண்மையிலேயே நல்ல சமையல். சேனை வறுவலும் மிளகு போட்டு சூப்பராக இருந்தது. சேமியா பாயசத்திற்குப் பால் விடாமல் மில்க் மெயிட் சேர்த்திருந்தார்கள். கத்தரிக்காய்க் கூட்டு/பிட்லை சாப்பிடும்போது என்னையும் அறியாமல் என் அம்மா நினைவு வந்து மோதியது. அப்படியே அம்மாவின் கைமணமாக இருந்தது. நான் பொதுவாகக் கல்யாணங்கள், சஷ்டி அப்தபூர்த்தி, மற்றும் சில விசேஷங்களுக்குப் போனால் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டால் மதியம் சாப்பிட மாட்டேன். சாப்பாடைத் தவிர்ப்பேன். ஆனால் இங்கே மீண்டும் நாகர் கோயில் செல்ல வேண்டும் என்பதாலும், அங்கே சுற்ற வேண்டி இருக்குமோ என்பதாலும், ஒரு முறை கேரளச் சமையல் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்பதாலும் சாப்பிட்டேன். சாப்பிடவில்லை எனில் இவை எல்லாம் ருசி பார்க்காமல் ஏமாந்திருப்பேன் என அப்புறமாய்த் தோன்றியது.

சாப்பாடு முடிந்த பின்னர் தாம்பூலம் வாங்கிக் கொண்டு திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம். மண்டப வாசலிலேயே ஆட்டோ கிடைத்தது. மீட்டர் உள்ள ஆட்டோ! மீட்டர் வேலையும் செய்தது. மினிமம் 20 ரூபாயில் வைத்திருந்தார். ஸ்டேஷன் வரும்வரை அதே பணம் தான் காட்டியது. வெறும் இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு எங்களை ஸ்டேஷனில் இறக்கி விட்டுச் சென்றார் அந்த ஆட்டோக்காரர். பின்னர் நாகர் கோயிலுக்கு ரயில் எத்தனை மணிக்கு எனக் கேட்டதற்கு பனிரண்டே முக்காலுக்கு ஒன்று இருப்பதாகச் சொன்னார். இப்போ முதல் நடைமேடையில் ஒன்று தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் எங்களிடம் டிக்கெட் இல்லை. அதோடு சாமான்கள் வைக்கும் அறையிலிருந்து சாமான்களை வேறே எடுக்கணுமே!

Tuesday, July 21, 2015

அனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்!

அனந்துவுக்குப் பொதுவாகச் சிறப்பு நிவேதனமாக உப்புச் சேர்ந்த மாங்காய் என்று சொன்னாலும் மற்ற நிவேதனங்களையும் ஏற்கிறார். அரிசியாலும் நிவேதனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு வகைப் பாயாசத்தை நவரத்தினங்களால் இழைத்த தங்கப் பாத்திரத்தில் நிவேதனம் செய்வார்கள் என்பதால் நவரத்தினப் பாயாசம் என்றே அது அழைக்கப்படுகிறது. மேனி துலா பாயசம் எனப்படும் சர்க்கரைப் பொங்கல், ஒற்றைத் துலா பாயசம், உண்ணி அப்பம், மோதகம் போன்றவையும் படைக்கப்படுகின்றன. கேரளக் கோயில்கள் அனைத்திலுமே பாயசம் விசேஷமான நிவேதனமாக இருந்து வருகிறது. 

திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. சில திருவிழாக்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப் படுகிறது. அவற்றில் நவராத்திரி விழா, ஐப்பசித் திருவிழா, பங்குனித் திருவிழா ஆகியவை மிக முக்கியமானது ஆகும். விழா முடிந்து உற்சவர்களை தீர்த்தவாரி செய்து திரும்பக் கோயிலில் கொண்டு சேர்ப்பதை இங்கே ஆறாட்டு விழா என்கின்றனர். இதைத் தவிரவும் லக்ஷ தீபமும் உண்டு. இதற்கெனத் தனியான தீபஸ்தம்பமும் உள்ளது. மொத்தம் லக்ஷம் தீபங்கள் ஏற்றப்படுவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கின்றனர். ஆனால் இது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் என்றும் கடைசியாகப் போன வருஷம் அதாவது 2014 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடந்ததாகவும் தெரிய வருகிறது.

அடுத்து இந்தக் கோயிலின் முக்கிய விஷயம் இங்குள்ள பாதாள அறைகள். ஆறு பாதாள அறைகள் இங்கு உள்ளன. சுந்தரராஜன் என்பவர் நீதிமன்றத்தில் இந்தப் பாதாள அறைகளைத் திறந்து பார்க்க வேண்டும் என வழக்குத் தொடுக்க அதன் மேல் இந்தக் கோயிலின் பாதாள அறைகள் இரு நீதிபதிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினால் திறக்கப்பட்டன. அவற்றில் வில மதிக்க முடியாத செல்வங்கள் காணப்பட்டன.  தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை, வைர, வைடூரியங்கள்,  ஒரு கிலோ எடை கொண்ட தங்க நகைகள், ஆபரணங்கள், முத்துக்கள் என ஒரு லட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள புதையலே கிடைத்திருக்கிறது.

அன்னியப் படையெடுப்பின் போது பாண்டிய நாட்டில்  சுல்தான்களின் ஆட்சி மதுரையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்த  பாண்டியர்களின் கடைசி வாரிசு விலை மதிக்க முடியாப் பாண்டிய நாட்டுச் செல்வத்தை எல்லாம் அன்னியர் கைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிச் சேர நாட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும்,  அது திருவனந்தபுரம் கோயிலிலேயே பதுக்கப்பட்டதாகவும் அவையே திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியாக இருக்கலாமென்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. இந்தப் புதையலை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது சிலர் கருத்து. இன்னும் சிலர் மன்னருக்கே சொந்தம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் பத்மநாபரின் இந்த அளப்பரிய செல்வத்தை இத்தனை வருடங்களாக நேர்மையும் பாதுகாத்துக் கொண்டுத் தங்களை பத்மநாப தாசர் என அழைத்துக் கொண்டு வரும் மன்னர் தரப்பிலே இவை பத்மநாபருக்கே உரியதாகும். ஆகவே கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சொத்துக்கள் முறையாக பண்டாரக் கல்லறையிலேயே கிடைத்ததால் கோயிலுக்கும் பத்மநாபருக்கும் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மன்னர் தரப்பிலும், கேரள அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்தைப்பாதுகாக்கவெனச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாங்கள் தரிசனம் முடிந்து மீண்டும் தெக்கே நட வாயில் வழியாகக் கல்யாண மண்டபம் போய் அடைந்தோம். காலை உணவு தயாராக இருந்தது. அது முடிந்து, சஷ்டி அப்த பூர்த்தியும் சிறப்பாக நடைபெற்றதும் நாங்கள் அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த பழவங்காடிப் பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பினோம். ஏற்கெனவே என் தம்பி இந்தக் கோயில் பற்றிச் சொல்லி இருந்தார். மிலிட்டரி பிள்ளையார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இங்கே பழைய கடைத்தெரு இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இங்கே ராணுவத்தால் ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு அவர்களாலேயே நிர்வாகமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்தப் பிள்ளையாரைப் பார்க்கப் போனோம். 

(தொடரும்)


ஓர் முக்கிய அறிவிப்பு!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவெனில் "ஆடிக்காற்று"ப் பதிவுக்கு எக்கச்சக்கமான வருகை தந்து ஆதரித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு இங்கே ஶ்ரீரங்கம், சமயபுரம் பகுதிகளில் மின் வெட்டுக் கடுமையாக இருப்பதாலும் நேற்றுக் கிட்டத்தட்டப் பத்து மணி நேரம் மின்சாரம் (பகலில்) இல்லாததாலும் என்னால் இணையத்துக்கு வர முடியவில்லை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் இல்லாததால் வீட்டில் கொஞ்சம் வேலைகள் நடந்தது. ஹிஹிஹி, இல்லைனா தள்ளிப் போட்டிருப்பேன்.  சில, பல புத்தகங்கள் படித்தேன். நீங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் நான் பார்க்கும்போது தான் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே தாமதமானால் பின்னூட்டங்களைக் காக்காய் தூக்கிப் போச்சோனு  நினைச்சு வருந்த வேண்டாம்.  காக்காயை விரட்டிட்டு நாங்க தூக்கி வந்துடுவோமுல்ல!


ஶ்ரீராம் செய்த வெண்டைக்காய் சப்ஜியைக் கூட இன்னிக்குத் தான் பார்த்தேன். நேத்துச் செய்தது என்பதால் சாப்பிடவில்லை. :) இன்னிக்கு மத்தியானம் மின்சாரம் இருந்தால் வழக்கம் போல் ரம்பம் போடுவேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ! :))))

Sunday, July 19, 2015

ஆடிக்காற்றில் என்ன பறக்கும்?

காற்று மிகக் கடுமையான வேகத்தில் வீசுகிறது. வாயு பகவானின் கோபத்துக்கு ஈடு கொடுத்துப் பக்கத்துத் தோப்பு மரங்கள் காற்றின் வேகத்துக்கு  அப்படியும் இப்படியுமாக வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அந்த அசோகா மரம் எங்க வீட்டு அறையின் ஜன்னல் கதவையே உடைச்சுடும் போல வேகமாய் வந்து மோதுகிறது. ஒரு சில படங்கள் அசையும் படங்களாகவே (ஹிஹிஹி, அவ்வளவு மேதை எல்லாம் இல்லை, தானாகவே வந்துடுச்சு) வந்திருக்கின்றன. அவற்றை இங்கே பகிர்கிறேன்.தென்னை மரம் ஆடும் ஆட்டம். அதில் அமர்ந்திருக்கும் கிளிகள் கவலையே இல்லாமல் ஊஞ்சலாடுகின்றன. கிளிகளை ஜூம் பண்ணி எடுக்க நினைச்சால் முடியலை. கிட்டே வரும் கிளையில் இருந்த கிளி பறந்துடுச்சு. :)
அசோகா மரம் வேகமாய் ஓடி வருது தென்னை மரத்தோடு போட்டி போல! காற்றின் சப்தம் காரணமாகவோ என்னமோ தெரியலை, பறவைக் கூச்சலே இல்லை. ஒரே அமைதியாக இருக்கின்றன எல்லாமும். 

ஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது?

இந்தத் திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றளவும் ஶ்ரீபத்மநாபரே இருந்து வருகிறார். மூலவர் வீற்றிருக்கும் விமானத்தை ஹேமகூட விமானம் என்கின்றனர். தென்புறமாக யோகநரசிம்மரும் இருக்கார். இவருக்கு எதிரே இருக்கும் ஆஞ்சிக்குச் சார்த்தும் வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்கின்றனர். நாங்க கிழக்கே போய் முக்கிய கோபுரத்தைப் பார்க்க ஆசை தான். ஆனால் கோயிலில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய்ப் போக முடியவில்லை. பிரகாரத்தை அப்பிரதக்ஷிணமாகவே சுற்றிக் கொண்டு மீண்டும் "தெக்கே நட" வாயிலுக்கே வந்து சேர்ந்தோம்.

ஆனால்  தூரத்தில் இருந்து பார்த்தவரை  கிழக்கு வாயிலில்  கோபுரம் திராவிடக் கட்டிடக் கலை மரபில் ஏழு அடுக்குக் கோபுரமாகக் காணப்பட்டாலும் கேரள, கர்நாடக பாணியில் அகலமாகவும் காணப்படுகிறது. தமிழ்நாட்டுக் கோயில் கோபுரங்களைப் போல் கீழே அகலமாகவும் மெல்ல மெல்ல அதற்கேற்ற அகல நீளத்திலும் இல்லாமல் அகலவாட்டத்தில் சட்டெனப் பாதியில் முடிந்தாற்போல் இருக்கிறது.

அனந்த பத்மநாபர் கோயில் க்கான பட முடிவு

படம் நன்றி: விக்கி காமன்ஸ்

இங்கு இறைவனுக்கு வலம்புரிச் சங்கு முத்திரையாக இருந்ததால் மகாராஜா நாட்டை சாசனம் பண்ணியதில் இருந்து வலம்புரிச் சங்கே அரச முத்திரையாகவும் இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் சில வருடங்கள் கேரள அரசின் முத்திரையாகவும் இருந்திருக்கிறது. இந்தக் கிழக்கு வாயிலி இருந்து நீண்டதொரு தாழ்வாரம் கருங்கல்லில் செதுக்கிய தூண்களோடும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளோடும் காணப்படுகிறது. ஆனால் படங்கள் எடுக்க முடியாது என்பது தான் வருத்தம். :(  தாழ்வாரம்/பிரகாரம்  நேரே கருவறைக்கு வந்து முடிகிறது . கோயிலின் கொடிமரமும் அங்கே தான் காண முடிகிறது.

உண்மையில் ஶ்ரீபத்மநாப சுவாமி முழுதும் தங்கத்தால் ஆனவர் என்கின்றனர். முகலாயப் படையெடுப்பின் போது விக்ரஹம் களவு போகாமல் தடுக்கவே கடு சர்க்கரை யோகம் என்னும் வெளிப்பூச்சுப் பூசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் இறைவனின் கிரீடம், குண்டலங்கள், சாளக்கிராம மாலை மற்றும் பூணூல் ஆகியவை தங்கத்தால் ஆனதே என்கின்றனர். நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் சுத்தமான தங்கம் என்கின்றனர். முதல் பாகத்தில் ஆதிசேஷன் மேல்  பள்ளி கொண்டிருக்கும் இறைவனின் இடக்கையில் தாமரைப்பூ ஒன்று காணப்படுகிறது. அதை முகர்ந்து வாசம் பிடிப்பது போல் ஆதிசேஷன் முகம் காணப்படுகிறது. வலக்கரத்தால் சிவலிங்கத்தைப் பாதுகாப்பது போல் வைத்திருக்கிறார்.  இங்கே நாம் பரமசிவனைப் பார்ப்பதாக ஐதீகம். அடுத்த வாயிலில் இரு பக்கமும் ஶ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க நாபிக்கமலத்திலிருந்து பிரமன் வெளிப்படுகிறான்.  இங்கே நமக்கு பிரமனைப் பார்ப்பதாக ஐதீகம். இந்த நடு பாகத்தில் தான் உற்சவ மூர்த்தியும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காணப்படுகின்றனர். பின்னர் அடுத்த கடைசி பாகத்தில் திருவடி சேவை. இறைவனின் திருவடி சேவைக்கு முக்கியத்துவம் உண்டு. நாம் கடைசியில் சரணாகதி அடைவது பகவானின் திருவடியில் என்பதால் இந்தத் திருவடிகளே மகாவிஷ்ணுவாக, நாம் சாக்ஷாத் விஷ்ணுவையே பார்ப்பதாக ஐதிகம் என்பதோடு திருவடி சேவை முக்தியைக் கொடுக்கும் என்றும் சொல்கின்றனர்.

சுவாமியின் கருவறை அமைந்திருக்கும் இடத்தையே ஒற்றைக்கல் மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தில் தான் பக்தர்கள் யாரும் கீழே விழுந்து நமஸ்கரிக்கக் கூடாது. நாங்கள் சென்ற நேரம் அறிவிப்பெல்லாம் செய்யலை என்றாலும் சீக்கிரம் பார்க்கணும் என்ற அவசரத்தில் அது மனதில் தோன்றவே இல்லை; ஆகவே ஒத்தக்கல் மண்டபம்னு ஒண்ணு தனியா இருக்குனு நினைச்சிருந்தேன்.  வெளியே வந்ததும் தான் நினைவுக்கு வந்தது என்பதே உண்மை. அதன் பின்னர் தான் அறிவிப்புப் பலகை மூலம் கருவறை இருக்கும் மண்டபமே ஒத்தக்கல் மண்டபம் என்பது புரிந்தது.  நாங்கள் மேலே ஏறித்தான் பார்த்தோம்.  இங்கே விழுந்து நமஸ்கரிகும் அதிகாரம், உரிமை யாவும் திருவாங்கூர் மகாராஜாவுக்கே உரியது. அவர் ஒருவரே அங்கே விழுந்து நமஸ்கரிக்கலாம். அப்படி யாரானும் தெரிந்தோ, தெரியாமலோ நமஸ்கரித்தாலோ,அவர்கள் கோயிலுக்குச் சொந்தமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அங்கே வைக்கும் எந்தப் பொருளும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம் ஆகிவிடும். திருவாங்கூர் மகாராஜாவும் தன்னை ஒரு ராஜாவாக நினைத்துக்கொள்ளாமல் பத்மநாப தாசராகவே நினைத்துக் கொள்ளப்படுகிறார். இறைவனுக்கு அபிஷேஹங்கள் கிடையாது. மலர்களால் அர்ச்சிக்கின்றனர். அபிஷேஹம் செய்வதற்கு எல்லாம் வேறுபட்ட விக்ரஹங்களே பயன்படுத்தப்படுகின்றன. நிர்மால்யமான மலர்களையும் மறுநாள் களையும்போது மென்மையான மயில் இறகை வைத்தே களைகின்றனர்.

(தொடரும்)

Saturday, July 18, 2015

தேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து!

பத்தாம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதற்கும் முன்னிருந்தே  இந்தக் கோயில் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் சேரமான் பெருமாள் காலத்தில் தான் முதன் முதலில் கோயிலை எழுப்பப் பட்டதோடு அல்லாமல் பூஜை முறைகள், திருவிழாக்கள் போன்றவற்றை முறைப்படுத்தி ஆலய நிர்வாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்ததாக பழைய ஓலைச்சுவடிகள் கூறுவதாகச் சொல்கின்றனர். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னரே கோயில் புதுப்பிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். 1686 ஆம் வருடம் தீப்பிடித்ததில் கோயில் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் மறுபடியும் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனின் முயற்சியால் 1729 ஆம் வருஷம் புதுப்பிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது தான் மரத்தால் ஆன மூர்த்தம் அகற்றப்பட்டு கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையால் 12,000 சாளக்கிராமத்தால் ஆன புது அனந்தசயன மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அனந்த பத்மநாபர் கோயில் க்கான பட முடிவு

படம்: கூகிளாருக்கு நன்றி.

இதன் பின்னரே 1750 ஆண்டில் மகாராஜா மார்த்தாண்ட வர்மா முற்றிலும் அனந்தபத்மநாபரின் தாசனாக மாறி தனது அரசை இக்கோயிலின் இறைவன் ஆன பத்மநாப சுவாமிக்கு தானமாக அளித்துப் பட்டயமும் ஶ்ரீ அனந்தபத்மநாப சுவாமி பெயரில் எழுதித் தந்தார். அதோடு தன் உடைவாளையும் அவர் திருப்பாதங்களில் சமர்ப்பித்து பூரண சரணாகதி அடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினருக்கு "பத்மநாப தாசர்கள்" என்ற அடைமொழி அளிக்கப்பட்டு அவ்விதமே அழைத்து வந்தனர். குடியேற்ற வாத ஆட்சிக் காலத்துப் படைகளின் மரபுப்படி பிரிட்டிஷார் ஆட்சி புரிந்தபோது பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் மரியாதை செய்து வரப்பட்டது. இது சுதந்திரம் வந்த பின்னரும் சில காலம் நீடித்து இந்திய ராணுவமும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது. மன்னராட்சி நீக்கப்படும் வரை இம்முறை தொடர்ந்து கொண்டிருந்தது. தற்சமயம் முழுதும் நீக்கப்பட்டு விட்டது.

இதிகாச புராணங்களில் கூறி இருக்கும்படி இந்த இடம் பரசுராம க்ஷேத்திரங்கள் ஏழில் ஒன்று. கேரளத்தில் ஆரம்பித்துக் கர்நாடகாவின் திருக்கோகர்ணம் வரை பரசுராம க்ஷேத்திரம் என்கின்றனர்.  பொதுவாகப் பரசுராம க்ஷேத்திரங்களில் அது சிவன் கோயிலாக இருந்தாலும் சரி, விஷ்ணு கோயிலாக இருந்தாலும் சரி தனியாக அம்மன்/தாயார் சந்நிதி என இருக்காது. ஒரு சில கோயில்களில் ஒரே கர்ப்பகிரஹத்தில் கிழக்குப் பார்த்து சுவாமியும், மேற்குப் பார்த்து அம்மன்/தாயாரும் காணப்படலாம் என்றாலும் இது மிக அரிதாகவே காணப்படும். சக்தி வழிபாடு இங்கே அதிகம் என்பதாலும் இந்த ஆராதனைகள் மிக விசேஷமாகவும் நடத்தப்படுவதாலும் அம்பிகைக்குத் தனிக் கோயில்கள் நிறையக் காணப்படுகின்றன.  அம்பிகை பகவதி என்ற பொதுப்பெயராலேயே அழைக்கப்பட்டுக் கடுமையான ஆசாரங்களோடும், அனுஷ்டானங்களோடும்  ஆராதிக்கப்படுகிறாள். கேரளத்திலேயே இம்முறை அதிகம் காணப்படுகிறது. ஒரு சில கர்நாடகக் கோயில்களும் இந்தப் பரசுராம க்ஷேத்திரங்களாகவே அறியப்படுகின்றன. அது போல் தான் இங்கே திருவனந்தபுரத்திலேயும் பட்டாசாரியார்/நம்பூதிரி/போத்திகள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதிகாசபுராணங்களின்படி பார்க்கப் போனால் பத்மபுராணத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி புலையத் தம்பதிகள் மகாவிஷ்ணுவைக் குழந்தையாகப்பார்க்க ஆசைப்பட அவ்வண்ணமே மகாவிஷ்ணு காட்சி அளித்ததாகவும், அவர்கள் கொடுத்த அன்ன ஆகாரத்தையும் இறைவன் உண்டு களித்ததாகவும் சொல்கின்றனர். மேலும் சில குறிப்புகளின்படி திவாகர முனிவருக்கு முதன்முதல் காட்சி அளித்த இறைவனுக்கு அவர் என்ன கொடுப்பது எனப் புரியாமல் அப்போது கையில் இருந்த பச்சை மாங்காயை ஒரு சிரட்டையில் வைத்து இறைவனுக்குப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே இன்றளவும் கோயிலின் நிவேதனம் தேங்காய்ச் சிரட்டையில் வைத்தே இறைவனுக்குப் படைக்கப்பட்டு வருகிறது. உப்பு சேர்த்த மாங்காய் தான் இங்கே சிறப்பான நிவேதனம் என்றும் அதை வைத்து நிவேதனம் செய்யும் தேங்காய் ஓட்டின் மேல் தங்கத்தால் பூசப்பட்டிருப்பதாகவும் கிட்டத்தட்ட 1200 வருஷங்களுக்கும் மேல் பழமையானது இந்தத் தேங்காய்ச் சிரட்டை என்றும் சொல்கின்றனர். இந்தத் தேங்காய்ச் சிரட்டையில் தான் வில்வமங்கலத்து சாமியாரான திவாகர ஆசாரியார் பழுக்காத மாங்காயை உப்புச் சேர்த்து அளித்ததாகவும், அந்தச் சிரட்டையின் மேலேயே தடித்த தங்கத் தகடுகளைப் பதித்திருப்பதாகவும் சொல்கின்றனர்.


(தொடரும்)