எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 29, 2011

பெண் எழுத்தும் நானும்! 2

அடுத்தது அநுத்தமா: இவரை எனக்குப் பிடிக்குமா என ஜெயஸ்ரீ கேட்டிருந்தார். ரொம்பப் பிடிக்கும். அபிமான எழுத்தாளர் என்றே சொல்லலாம். இவரின் நைந்த உள்ளம் நாவலை எத்தனை முறை படித்திருப்பேன் எனக் கூற முடியாது. அவ்வளவு அருமையான நாவல். பெரும்பாலும் குடும்பத்தின் கஷ்ட, நஷ்டங்களையும், குடும்பப் பிரச்னைகளையும், மையமாக வைத்தே இவர் எழுதும் நாவல்கள் அமையும். அவற்றிலிருந்து குடும்பம் என்பது எத்தனை அருமையானதொரு கட்டமைப்பு என்பதும், உண்மையாகவே நல்லதொரு குடும்பமானது சிறந்ததொரு பல்கலைக் கழகமாகத் திகழும் என்பதும் புரிய வருகின்றன. திருமணம் ஆன பெண் குடும்பத்தில் எப்படிப் பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்த ஆசான் என்றே இவரைக் கூறலாம். கிட்டத்தட்ட நைந்த உள்ளம் மைத்ரேயி போல் விளையாட்டுத்தனமாக இருந்த என்னைப் பொறுப்பும், கடமையும் நிறைந்ததொரு குடும்பத்தின் மூத்த மருமகளாகப் போனதும் அவற்றை நிறைவேற்றி வைக்கும் ஆன்மீக பலத்தை இவரின் கதைகள் எனக்குக் கொடுத்தன என்றால் சற்றும் மிகையில்லை. பெண் தான் குடும்பத்திற்கு வேர் என்பதும், அந்த வேரில் அசூயை, கோபம், பொறாமை, துர் ஆங்காரம் போன்ற ரசாயன எருக்களால் ஏற்படும் அரிப்பையும், வேரே அரித்தால் குடும்பம் என்னும் விருக்ஷம் பட்டுப் போய்விடும் என்பதையும் வெகு அழகாக எடுத்துரைத்திருப்பார்.

இவரின் எல்லாக் கதாநாயகிகளும் சரியான சமயத்தில் சரியான முடிவுகளை நன்கு, ஆழ்ந்து யோசித்து எடுப்பார்கள், என்று கூற முடியாது. உதாரணம் லக்ஷ்மி நாவலின் லக்ஷ்மி சரியானதொரு முடிவை எடுப்பாள். அதே நைந்த உள்ளத்தின் மைத்ரேயி பல விஷயங்களிலும் அறியாமை என்னும் இருட்டால் தடுமாறிப் பின்னரே தெளிவாள். என்றாலும் இயல்பாக பெண்களுக்கே அமைந்து இருக்கும் எச்சரிக்கை உணர்ச்சியால் பல சமயங்களிலும் தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டாலும், தன் மனம் யாரை விரும்புகிறது என்பதை அறியாத குழந்தைப் பெண்ணாகவே இருப்பாள். மேல் பார்வைக்கு அவள் திருமணம் பெரியோரால் நிச்சயிக்கப்பட்டதெனத் தெரிந்தாலும், கடைசியில் மைத்ரேயி உண்மையை உணரும்போது அவளோடு சேர்ந்து நம் மனமும் அமைதியும், சந்தோஷமும் அடைகிறது. ஒரே ஒரு வார்த்தையோ உளவியல் ரீதியாகப் பேசப்பட்ட கதைகளில் முக்கியமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் தமிழில் வெளிவந்த முதல் மனோதத்துவ நாவல் என்றும் கூறப் படுகிறது. இதைத் தவிரக் கேட்டவரம் என்னும் நாவல் கேட்டவரம்பாளையம் என்னும் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு ஊரில் நடக்கும் ஸ்ரீராமநவமி விழாவைப் பற்றி விவரித்து அதனூடே குடும்பங்களில் நடக்கும் இயல்பான சம்பவங்களையும் புகுத்தி எழுதப் பட்டது. இந்த நாவலைக் காஞ்சி ஸ்ரீஸ்ரீ பரமாசாரியார் அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார் என்பதே இந்த நாவலின் உயர்தரத்துக்கு ஒரு சான்று என்றால் மிகையாகாது.

இப்படிப்பட்டவர் கொஞ்சமானும் நாகரீகமாக இருக்கவேண்டாமோ? அதுதான் இல்லை. ஒன்பது கஜம் மடிசார் வைத்துக்கட்டிய புடைவையோடும் , அதற்கேற்ற அலங்காரங்களோடும் காட்சி அளித்த ஸ்ரீமதி அநுத்தமா, பனிரண்டு வயதில் பத்மநாபன் என்பவரைக் கைப்பிடித்தார். இயற்பெயர் ராஜேஸ்வரி. இவருக்கு வாய்த்த புக்ககம் அருமையானது என்பதோடு இவரின் மாமனார் இவரைத் தம் பெண்ணாகவே பார்த்தார் என்பது இவரின் ஆற்றலைத் தெரிந்து கொண்ட மாமனார் இவரை எழுதத் தூண்டியதும், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவான அநுத்தமா என்னும் புனைப்பெயரை மருமகளுக்குச் சூட்டி எழுத ஊக்குவித்ததும் போற்றத் தக்கவை ஆகும். அபாரமான ஆங்கிலப் புலமை படைத்த இவர் தன் சுய முயற்சியில் இந்தி, ப்ரெஞ்ச், தெலுங்கு போன்ற மொழிகளையும் கற்றுத் தேறினார். இவரின் ஆங்கிலப் புலமைக்கு உறுதுணையாக இருந்தவர் இவரின் அருமைக் கணவர் ஸ்ரீபத்மநாபன் ஆவார். இவரின் நாவல்கள் கலைமகளில் வெளிவந்தன. திரு கி.வா. ஜகந்நாதன் அவர்களின் அருமைத் தங்கை என்று அவராலேயே பாராட்டப் பெற்ற இவரைக் கிவா.ஜ. அவர்கள் அப்படியே அறிமுகமும் செய்து வைப்பாராம். இரவெல்லாம் இவர் நாவல்களை எழுதிக் குவிக்க, இவர் கணவர் அவற்றைத் திருத்திச் சரிபார்த்துப் பிரதிகள் எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பாராம்.

முழுக்க முழுக்க சம்பிரதாயங்களையும், சாஸ்திரங்களையும், பின்பற்றி வாழ்வதையே ஆதரிசமாய்க் கொண்ட இவரின் நாவல்களும் அப்படியே அமைந்தன. அவற்றையே மென்மையாக வலியுறுத்தின. ஆர்.சூடாமணியின் நெருங்கிய தோழியான இவருக்குத் தனக்கு முன்னால் சூடாமணி இறந்ததும், மனம் தளர்ந்தார் என்கின்றார்கள். அதன் பின்னர் இவர் வெகுநாட்கள் இருக்கவில்லை. தோழியைத் தேடிச் சென்றுவிட்டார். இவரின் நாவல்களில் குறிப்பிடத் தக்கவை

நைந்த உள்ளம்,
கேட்டவரம்,
மணல் வீடு,
ஆல மண்டபம்
ஒரே ஒரு வார்த்தை
லக்ஷ்மி
தவம்,
வேப்பமரத்து பங்களா
அங்கயற்கண்ணி
ஜயந்திபுரத் திருவிழா
பூமா
சுருதிபேதம்
கெளரி,
முத்துச்சிப்பி,
சேவைக்கு ஒரு சகோதரி(சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு)
பல விருதுகளையும், கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசுகள் போன்ற பல பரிசுகளையும் பெற்ற இவர் கதைக்குத் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நாம் காணும் நம்மைப் போன்ற சராசரி மக்களே. அடுக்களை என்பது சமைக்கும் பாத்திரங்கள் மட்டும் வைக்கும் இடம் இல்லை, கதாபாத்திரங்களும் கிடைக்கும் இடம் என்பதை நிரூபித்துக்காட்டியவர் இவர்.டிஸ்கி: கல்யாணமாம் கல்யாணம் தொடரும். கரையான்களோடும், மற்றப் பணிகளுமாகக் கொஞ்சம் வேலை, கொஞ்சம் பிசி, விருந்தினர் வருகை, ஊருக்குப் போனது, மீண்டும் விருந்தினர் வருகைனு சேர்ந்துகொண்டது. இன்னும் எழுதவே இல்லை! :)))))))))))

Thursday, April 28, 2011

ஐயரவர்களுக்கு அஞ்சலி!

இன்று திரு உ.வே.சா. அவர்களின் நினைவு நாள். அவருக்கு அஞ்சலி. வறுமையிலும் செம்மையாகத் தமிழுக்குத் தொண்டாற்றினார். அவர் இல்லை எனில் இன்று நமக்குப் பல அரிய தமிழ் இலக்கியங்கள் அறியாமல் போயிருக்கும். எந்த விதமான வசதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்திலே நடைப் பயணமாகவும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், மொட்டை மாடியில் ஓலைக்கீற்றுக்கொட்டகையில் அமர்ந்தும் தன் அரிய கண்டுபிடிப்புகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டார். அன்னாரை மறவாமல் இருப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலி.

Wednesday, April 27, 2011

ஜெய் சாயிராம்!

இரண்டு, மூன்று நாட்களாக ஊரில் இல்லை. நாங்க கும்பகோணத்தில் இருக்கையில் புட்டபர்த்தி பாபாவின் மரணச் செய்தி கிடைத்தது. அப்படி ஒண்ணும் பெரிய அளவில் பாபாவின் தொண்டர்கள் இல்லை நாங்க என்றாலும் என் அண்ணா வீட்டில் நடக்கும் பாபா பஜனைகளில் தவறாமல் கலந்து கொள்வோம். எங்க பெண்ணின் மாமியார் சாய் பக்தை. அவங்க கொடுக்கும் பஜனைகளைப் பாடுவோம். சாய்பக்தர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறோம், அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றிருக்கிறோம். என் அண்ணா பையரே படிச்சது முழுக்க முழுக்க புட்டபர்த்தியில் தான். எம்.எஸ்சி. மாத்ஸ் வரை படிச்சுட்டுப் பின்னர் எம்.டெக்.கும் அங்கேயே படிச்சார். இப்படி எத்தனையோ மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். வேதபாடசாலையில் இருந்து அனைத்தும் ஏற்படுத்தி உள்ளார். ஏழை மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் புட்டபர்த்தி பாபா. அங்கே மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கட்டணமின்றிக் கொடுக்கப் படுகிறது. இவை எல்லாம் செய்ய எவ்வளவு உயர்ந்ததொரு மனம் வேண்டும்?


அரசாங்கங்கள் செய்யத் தவறியவற்றைத் தனி ஒரு மனிதராக பாபா செய்திருக்கிறார். அப்படிப்பட்ட பாபா இறந்துவிட்டது நம் போன்ற சாமானியர்களுக்கு மாபெரும் நஷ்டமே.
என்றாலும் ஒரு நல்ல ஆன்மாவுக்கு முக்தி கிடைச்சது என்பது சந்தோஷமே என்றாலும் தனி ஒரு மனிதனாக இவர் செய்த பணிகளை நினைத்துப் பார்க்கையில் மலைப்பாய் உள்ளது. மகத்தானதொரு மக்கள் தொண்டைச் செய்து வந்துள்ளார். ஆந்திராவுக்கு மட்டுமே எனக் குறுகிய மனப்பான்மையோடு இல்லாமல் தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிற்கு, இன்னும் மஹாராஷ்டிராவிலே, எனப் பல இடங்களில் சாய் டிரஸ்ட் செய்து வரும் சேவைகள் எண்ணிலடங்காதது. யாரும் வற்புறுத்தி சாய் சேவார்த்திகள் இவற்றைச் செய்யவில்லை. தாங்களாக விரும்பியே செய்கின்றனர். செய்தனர். இன்னமும் செய்து வருவார்கள்.

உலகத் தரத்தில் மருத்துவ சிகிச்சை, கல்வி, இசைக்கென சர்வதேசத் தரத்தில் கல்லூரி என ஏற்படுத்தி உள்ளார். தன் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், தன்னை நாடி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் மதம், மொழி, ஜாதி, இன வேறுபாடில்லாமல் உணவு, உடை, இருக்குமிடம், கல்வி, மருத்துவம், ஆன்மீகம், கலை, விளையாட்டு, அறிவியல் என யாருக்கு எது தேவையோ அவற்றைக் குறைவின்றி அளித்திருக்கிறார். இத்தகைய ஒரு மஹா மனிதர் இறந்தது நமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் என வரும் நாட்களில் உணரப் போகிறோம். உலகெங்கும் அவருக்கென உள்ள கோடி, கோடி பக்தர்கள் அவரின் வழியைப் பின்பற்றி சாய்பாபா விட்டுச் சென்ற சேவைகளை இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என எதிர்பார்ப்போம். இன்று சகல அரச மரியாதைகளுடனும் அவர் உடலை அடக்கம் செய்கின்றனர். ஆன்மீக உலகில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றிருந்த அவரின் மறைவை எண்ணி உளமார வருந்துவோம். அஞ்சலி செலுத்துவோம்.

என்னடா இது இவருக்குக் கூடவா சாவு? என்று சிலர் கேட்கின்றனர். சிலர் தனி மடல்களிலும் கேட்டிருக்கின்றனர். மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம். தேவர்களும் ஒரு காலகட்டத்தில் அழிந்து போவார்கள். சநாதன தர்ம சாஸ்திரங்களின் கூற்றின்படி மஹா ப்ரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணுவும் அழிந்துபோகின்றவர்களே. ஈசனிடம் இவர்கள் ஒடுங்குவார்கள் எனக் கூறப்படும். அனைத்தும் அழிந்து போய் மிச்சம் இருப்பது அந்த ஆதி மஹா சக்தியே. அந்த மஹா சக்தி தான் நம்மைத் திரும்பத் தோற்றுவிக்கும். கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனுக்கு வேட்டுவனால் சாவு வந்தது. ராமாவதாரத்தில் ஸ்ரீராமரும் சரயூ நதியில் மூழ்கி உயிரைப் பிரித்துக்கொண்டார். லக்‌ஷ்மணனும் மூச்சை அடக்கித் தவம் இருந்து உயிரைப் போக்கிக் கொண்டான். இன்றும் பல சாதுக்கள், அவ்வளவு ஏன்? சமீப காலத்தில் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்கள் சரஸ்வதி நதி தோன்றுமிடத்தில் ஜலசமாதியை வலிந்து ஏற்றுக்கொண்டார். இப்படியான மஹாத்மாக்கள் சாவது என்பது நமக்காகவே தான். நமக்குப் புரிய வைக்கத் தான். மஹாத்மாக்களுக்கே இவ்வாறு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்??? அதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு உன்னதமான மனிதன் இறந்ததற்காகக் கண்ணீர் விட்டு அழமுடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒதுங்கி இருப்போம். அவருக்கு மெளன அஞ்சலியானும் செலுத்தலாம். ஒரு சிலரின் கருத்துக்களும் ஒரு சில மடல்களும் மிக மிக வருந்த வைத்தன. அதனாலேயே இந்தப் பதிவு. அவ்வளவு மனிதத் தன்மையைக் கூட நாம் பெறவில்லையா என நினைக்கையில் பாபா இறந்ததை விட அதிகம் துக்கமாய் வருகிறது. :(((((((((

Saturday, April 23, 2011

பெண் எழுத்தும் நானும் ! 1

எல்கே, பெண் எழுத்து குறித்த தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் சொன்னது தற்கால கட்டங்களில் வலைப்பூக்கள் வைத்திருக்கும் பெண்கள் என நினைக்கிறேன். ஆனால் நான் எழுதுவது பெண் எழுத்தாளர்கள் குறித்து. ஏற்கெனவே ஜீவி அவர்கள் எல்லா எழுத்தாளர்களையும் அவருக்கே உரித்தான பாணியில் அறிமுகம் செய்திருந்தாலும் இது என்னுடைய பார்வை. எனக்கு முதலில் அறிமுகம் ஆன புத்தகம் ஆனந்த விகடனும், கலைமகளும் தான். அதிலும் கலைமகள் புத்தகத்திற்கு அப்போது திரு கி.வா. ஜகந்நாதன் அவர்கள் ஆசிரியராக இருந்தார். கலைமகளும், மஞ்சரியும் விடாமல் பல வருடங்கள் படித்து வந்தேன். கலைமகளில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய பரிசு பெற்ற நாவலின் பைன்டிங் ஒன்று தான் நான் முதலில் படித்த ராஜம் கிருஷ்ணன் நாவல். அந்தக் காலகட்டத்தில் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்களும் கலைமகளில் எழுதினார்கள் என நினைக்கிறேன். வெற்றிலைச் சுருள் என்னும் ஒரு நாவல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொன்டிருந்தது. அது நான் படித்ததில்லை. என்றாலும் அதில் வரும் படங்கள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் ஆழ்ந்து போய்ப் படிக்கும் அம்மாவையும் நினைத்தால் யாரோ பிரபல எழுத்தாளரால் எழுதப் பட்டிருக்க வேண்டும். திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் எழுத்து எனக்கு முதலில் அறிமுகம் ஆனது டாக்டர் ரங்காச்சாரி புத்தகத்தால். மூன்றாம் வகுப்புப் படிக்கையில் உடல்நலக்குறைவோடு மாதக்கணக்காய்ப் படுக்கையில் இருக்க நேர்ந்தபோது அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. அப்போவே அதைப் படித்திருக்கிறேன். அதன் பின்னரே அவருடைய மற்ற நாவல்களைப் படிக்க நேர்ந்தது. டாக்டர் ரங்காச்சாரியை எழுதும் முன்னர் அவர் மருத்துவம் செய்த அப்போது இருந்த எல்லா நபர்களையும் சந்தித்து விஷயங்கள் சேகரித்ததாய்ச் சொல்லுவார்கள். இப்படி எழுத்துக்காகப்பாடுபட்ட முதல் பெண் எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களே.


பதினைந்து வயதில் திருமணம் ஆன திருமதி ராஜம் கிருஷ்ணன் பள்ளிப்படிப்பைக் கூடப் பூரணமாக முடிக்காதவர். முசிறியைச் சேர்ந்த இவர் தன் கணவர் கிருஷ்ணன் என்னும் பொறியாளரின் உதவியோடு எழுத ஆரம்பித்தார். எழுத ஆரம்பித்த சில காலத்திலேயே இவர் பெண்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தார். சாதாரணமாகப்பொழுது போக்குக்காக நாவல்கள் எழுதும் வகையான எழுத்தாளர் அல்ல இவர். எழுத ஆரம்பித்த புதிதில் பெண்களின் குடும்ப வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்தே அதிகம் எழுதினார். உதாரணம் பெண் என்னும் நாவல் கலைமகள் பத்திரிகையில் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது. அடுத்த நாவல் மலர்கள் உளவியல் ரீதியாக ஒரு பருவப் பெண்ணின் மனோநிலை குறித்த ஆய்வு எனச் சொல்லலாம். பதினைந்தில் இருந்து இருபது வயதுக்குள்ளாக தாய் இல்லாத அந்தப் பெண் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், அதிலிருந்து எவ்வாறு அவள் மீண்டு வருகிறாள் என்பதையும் சொல்லும் நாவல். ஆனந்த விகடன் வெள்ளிவிழாப் பரிசு பெற்ற நாவல். அதன் பின்னர் இவர் எழுதிய நாவல்களில் அப்போதைய அணைகட்டும் திட்டங்கள் பொறியாளர்களால் எவ்வாறு மிகுந்த சிரமத்துடன் நிறைவேற்றப் படுகிறது என்பதைச் சுட்டும் வண்ணம் அமைந்தது. அமுதமாகி வருக என்னும் அந்த நாவல் ஊட்டியின் மேலே பைகாரா என்னும் நீர் மின் திட்டம் செயல்படுத்தப் பட்டது குறித்தது.

அங்கே தன் கணவரோடு வாசம் செய்த இவர் அங்கேயும் சும்மா இருக்கவில்லை. மலைவாழ் மக்களின் வாழ்வைப் பற்றிக் கேட்டறிந்தார். மாடுகள் அதுவும் எருமை மாடுகள் அவர்களின் வாழ்வாதாரம் என்பதையும், அதைத் தொடர்ந்த அவர்களின் பழக்க வழக்கங்கள், திருமண நடைமுறைகள், அதைத் தொடர்ந்த நட்பு, பகை, மனச்சிக்கல்கள், உறவின் முறை போன்றவற்றைக் குறித்து நன்கு கேட்டு ஆய்ந்து குறிஞ்சித் தேன் என்னும் நாவலில் அவற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார். கோவா விடுதலைப் போராட்டம் குறித்து கோவாவுக்கே சென்று பலரையும் சந்தித்துப் பேட்டிகள் எடுத்து செய்திக்குறிப்புகளைத் தொகுத்து வளைக்கரத்தில் அறிமுகம் செய்தார். இதே போல் இவர் மீனவர்கள் பற்றி எழுதுகையிலும் தூத்துக்குடி சென்று அங்கிருந்த மீனவர்களின் நிலைமையை நேரில் ஆய்ந்து அறிந்தே எழுதினார். சம்பல் கொள்ளைக்காரன் மான்சிங் பற்றி எழுத இவர் சம்பல் பள்ளத்தாக்கு சென்றபோது இவர் கணவர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இவருடன் சென்றார். அங்கே மான்சிங்கின் மகனைச்சிரமத்துடன் பேட்டி கண்டு நான்கு மணி நேரம் அவனைப் பேசவிட்டுப்பின்னர் அதன் அடிப்படையில் முள்ளும் மலர்ந்தது நாவலை எழுதினார். இப்படி ஒவ்வொரு கருவை எடுத்துக்கொள்ளும்போதும் அதற்கெனப் பாடுபட்ட இவருக்கு உரிய அங்கீகாரம் இன்று வரை கிடைக்கவே இல்லை எனலாம். குழந்தைகள் இல்லாத இவருக்கு இவரின் அருமைத் துணையாக இருந்து வந்த நோய்வாய்ப்பட்ட கணவர் இறந்ததும் இவரின் உடன் பிறந்த சொந்தங்களே இவரை ஏமாற்றிச் சொத்தைப் பிடுங்கிக் கொன்டு இவரை நடுத்தெருவில் நிறுத்தினார்கள். ஒரே சகோதரர் கடும் முயற்சி செய்து இவரை விச்ராந்தி என்னும் முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.

திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் கடும் முயற்சியினால் தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடமையாக்கி இவருக்கு உதவித் தொகையாக மூன்று லக்ஷம் கிடைக்க வழி செய்தது. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கு மூன்று லக்ஷம் என்பது சிறிய தொகைதான். ராஜம் கிருஷ்ணன் தனது இந்தத் தள்ளாத இந்த வயதிலும் பிறரின் இரக்கத்தையும், அவர்கள் இலவசமாய்த் தனக்குக் கொடுப்பதையும் விரும்பாததால் எதையும் இலவசமாகப்பெற விரும்பாமல் இந்தத் தன்மான எழுத்தாளர் இப்போதும் பெண்களுக்காக வேண்டி பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். உயிர் விளையும் நிலங்கள் என்னும் பெயரில் பெண்களின் குழந்தை பிறப்பு முதல் குடும்பக் கட்டுப்பாடு வரை எழுதிய இந்தப் புத்தகமே இவரின் கடைசி புத்தகம் எனப்படுகிறது.


அவ்வப்போது வந்து பயமுறுத்துவேன்.

Thursday, April 21, 2011

கல்யாணமாம், கல்யாணம் - தொடர்ச்சி!

நான் குளிச்சுட்டு வரச்சேயே கழுத்திலே நகைகள் இல்லைனு என்னோட பாட்டி பார்த்திருக்காங்க. அம்மாவோட அம்மா. ஹிஹிஹி, என் கல்யாணத்தின் போது அவங்களுக்கு 62 வயசுக்குள்ளேதான். என் அம்மாவுக்கு 40 ஆகலை. அப்பாவுக்கு 50 ஆகலை. )))) இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள். இதை எல்லாம் யோசிச்சுத்தான் அந்தக் காலங்களிலே அப்படிப் பண்ணினாங்களோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. ஹிஹிஹி, இந்த அரசியலில் புகுந்தால் அப்புறமா நாட்டுமக்களைக் கவனிக்கணுமேனு கவலைதான் முன்னுக்கு வருது! கொஞ்ச நேரம் அரசியலை ஒதுக்கி வச்சுடலாம். பாட்டி பார்த்துட்டு என்னைக் கேட்கணும்னு இருக்கிறதுக்குள்ளே எனக்கு அடுத்துக் குளிக்கப் போன என் பெரியம்மா பெண் நகைகளைப்பார்த்துட்டா. இப்போவும் இங்கே அம்பத்தூரிலே தான் இருக்கா அவளும்! அவ அதை எடுத்துட்டு வந்து என்கிட்டே கொடுக்க வரச்சே கடைசி மாமா பார்த்துட்டு அதை வாங்கி ஒளிச்சு வைச்சுட்டார். பாட்டியையும், என்னோட அக்கா(பெரியம்மா பெண்)வையும் வாயைத் திறக்கக் கூடாது, அவளா கவனிக்கிறாளா பார்ப்போம்னு சொல்லி இருந்திருக்கார். ஹிஹிஹி, என்னோட கல்யாணம்னு நினைப்பு இல்லைனா கவனிச்சிருப்பேனா? சந்தேகமே. ஆனால் வெளி வீட்டுக்கல்யாணங்களுக்கு எல்லாம் நகைகள் போட்டுட்டுப் போறதில்லை என்பதால் அந்த எண்ணமே வந்திருக்காது.  கடைசியில் எப்படியோ கண்டு பிடிச்சுட்டுக் கவலையாப் போச்சு. பாட்டிட்ட கேட்கும்போது பாட்டி என்கிட்டே, “அப்படி என்ன மறதி? இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாகிப் புக்ககம் போகப் போறே! கழுத்திலிருந்து நகையைக் கழட்டினாக் கையோடு பெட்டியில் வைச்சுப் பூட்டணும்னு நினைவு வராதா? தோணாதா? போய் உன் மாமாவைக் கேள்!” னு சொல்லிட்டாங்க.

மாமா முதலில் ஒத்துக்கவே இல்லை. தெரியவே தெரியாதுனு சாதிச்சுட்டார். அப்புறமா ராத்திரி சாப்பாடும் வேண்டாம்னு நான் ரொம்பவே வருத்தமா இருக்கிறதைப் பார்த்துட்டு, ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன். (யாரானும் சிரிச்சா பார்த்துக்குங்க!) அதுக்கப்புறமா கடுமையான கண்டிப்புடனும், நிபந்தனைகளுடனும் நகைகளை மாமா கொடுத்தார். ஆனால் என்னோட தாத்தா மட்டும் இருந்திருந்தா என்னை இப்படியெல்லாம் அழ விட்டிருக்க மாட்டார். குழந்தையை ஏன்ப்பா தொந்திரவு செய்யறீங்கனு மாமாக்களைக் கண்டிச்சிருப்பார். நான் ரொம்பவே செல்லம் தாத்தாவுக்கு. மறுநாள் அதிகாலையிலேயே பந்தக் கால்முஹூர்த்தம் நடந்து முடிந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை நல்ல நாளாய் இருந்ததால் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை, அதற்கடுத்த சனிக்கிழமை வெங்கடாசலபதி சமாராதனை. ஆகையால் அன்று மாலையே என்னைப் பெரியப்பா வீட்டில் கொண்டுவிடும்படி சொல்லிட்டு அப்பா போயிட்டார். நகை விஷயம் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. அப்பாவிடம் யாரும் மூச்சுக் காட்டவில்லை. அம்மாவுக்கு மட்டும் தெரியும். இதற்குள்ளாக ஹோசூரிலிருந்து என்னோட அண்ணா என் கல்யாணத்துக்காக லீவு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அண்ணா அங்கே இருந்தப்போ நாங்களும் அடிக்கடி ஹோசூர் போவோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர்களிலே ஹோசூரும் ஒண்ணு. அங்கிருந்த மலைக்கோயிலுக்கு சாயந்திரம் மூணு மணிக்கு மெதுவா ஏற ஆரம்பிச்சு மேலே போய் தரிசனம் பண்ணிண்டுக் கீழே இறங்கி வரச்சே ஏழு மணிஆகும். ஆனாலும் அலுப்பே தெரியாது. அண்ணாவையும் பார்க்கணும், எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கார்னு பார்க்கணும்னு ஆசை. ஆனால் எங்க வீட்டுக்கு இப்போ வரவேண்டாம், நல்ல நாள், நல்ல வேளை பார்த்துப் போயாச்சு, இனிமேலே திரும்பி வரச்சே கல்யாணம் முடிஞ்சு பால், பழம் சாப்பிடத் தான் வரணும்னு அப்பா சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றம் தான்! 

மறுநாள் பெரியப்பா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை முடிந்தது. அன்று மாலையே எல்லாருக்கும் புடைவை வைச்சுக் கொடுக்க எல்லாருமே புதுசு கட்டிக்கொண்டோம். அதற்கடுத்த மறுநாள் சமாராதனை. முன்பெல்லாம் சமையலுக்கு நேரம் ஆச்சுனா என்ன சமாராதனைக்கா சமைக்கிறே எனக் கேலி செய்வாங்க. உண்மையில் அப்போல்லாம் சமாராதனை என்றால் அவ்வளவு விமரிசையாக நடக்கும். எங்க தெருவே அன்னிக்கு எங்க வீட்டில் சமாராதனையில் கலந்து கொள்வதோடு எல்லாருக்குமே சாப்பாடும் இருக்கும். சமைக்கிறதுக்கு வெளி ஆட்கள் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் நபர்கள் தான். வீட்டுக்கார மாமி ஒரு வேலையை எடுத்துப்பாங்க. என்னோட அம்மா, பெரியம்மாக்கள் சமையலில் ஈடுபடுவாங்க. பெரிய பெரிய வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல், சாதம் வடிச்சு, ஈயம் பூசிய அண்டாக்களில் ரசம், சாம்பார், மோர்க்குழம்பு, வடை எனத் தயாராகும். குறைந்த பட்சமாக புரட்டாசி மாச சமாராதனைக்கே நூறு பேர் சாப்பிடுவாங்க. இது கல்யாண சமாராதனை. கேட்க வேண்டுமா? அதிலும் எங்க அப்பா வீட்டில் பெரியப்பா பெண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்தாலும் அப்பா தலை எடுத்துச் செய்யும் முதல் கல்யாணம். அம்மா வீட்டிலோ அம்மாவின் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம் இன்னும் நிச்சயம் ஆகவில்லை. ஆகவே திருமணம் நடக்கப் போகும் முதல் பேத்தி நான் தான். மாமாக்களில் முதல் மாமாவுக்குத் தான் பெண். அவள் என்னைவிட நாலைந்து வயசு சின்னவள்.

அதனால் கூட்டம் சமாராதனையிலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது புரிய வந்தது. சுற்றம், சூழ என்பது அந்தக் காலங்களில் நிஜமாகவே பின்பற்றப்பட்டதோடுவருபவர்கள் உதவியாகவும் இருப்பார்கள். சமாராதனை முடிந்து நாங்க திரும்ப ராத்திரி ஆச்சு. கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கும் மேல் எல்லாரும் படுத்துக்கொண்டிருந்தோம். அப்போ வெளியே கல்யாணப்பந்தல் அலங்காரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மூணாவது மாமாவும், கடைசி மாமாவும் உள்ளே வந்து பாட்டியை எழுப்பினார்கள். அம்மா, அப்பா மறுநாள் காலை தான் வரப்போறாங்க. ஞாயிற்றுக்கிழமை தான் நாந்தி, விரதம் எல்லாம். அதனால் விடிகாலையில் கிளம்பி வருவாங்க. பாட்டியை எழுப்பின மாமாக்கள் , “அம்மா, சம்பந்தி வீட்டிலே எல்லாரும் வந்துட்டாங்க. அதிலும் மாப்பிள்ளையும், அவங்க அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க. “ என அறிவித்தனர். பாட்டிக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்லை. சனிக்கிழமை இரவு வண்டியில் கிளம்பி ஞாயிறு காலை மதுரையை வந்தடையும் வண்டியில் அல்லவோ வரதாகச் சொன்னார்கள்? இப்போ எந்த ரயில் வந்தது?? ரயிலில் வரலையாம். பஸ்ஸிலே வந்திருக்காங்க. மிச்சம் பேரும் அடுத்தடுத்த பஸ்ஸில் வந்துட்டு இருக்காங்களாம்.” கடைசிமாமாவின் நியூஸ். மாப்பிள்ளை வீட்டார் தங்க மாமா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த வீட்டு மனுஷங்க கதவைப் பூட்டிக்கொண்டு தூங்கிட்டாங்களே. காலையிலே ஒழிச்சுத் தரேனு சொல்லி இருந்தாங்களே! இப்போ அவங்களை எப்படி எழுப்பறது?

Wednesday, April 20, 2011

கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி

ஹும், என்னோட அப்பா கிட்டே எல்லாம் என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நடக்காது. புத்தகங்களை எடுத்துச் செல்ல அப்பாவின் அநுமதி கிடைக்கவில்லை. (திவா, சந்தோஷமா இருக்குமே) புடைவையோ, நகையோ எத்தனை வேண்டுமானாலும் வாங்குவார். செலவு பண்ணமாட்டார்னு இல்லை. ஆனால் அவரோட எண்ணமே பெண்கள் என்றாலே புடைவை, நகை, பாத்திரம், பண்டங்கள் என்று தான் ஆசைப்படுவார்கள், படணும் என்று. அப்போப் பல பெண்களும் இப்படி ஒரு ஆசைக்கு அடிமையாகத் தான் இருந்தார்கள் என்பதும் உண்மையே. நாங்க குடி இருந்த வீட்டிலே கூடவே குடித்தனம் இருந்த மாமி எல்லாம் மாசம் ஒரு புதுப்புடைவையாவது வாங்குவாங்க. இல்லைனா வீட்டில் ரகளை நடக்கும், பார்த்திருக்கேன். ஹிஹி, நாம தான் அநியாயத்துக்கு விசித்திரப் பிறவியாய்ப்போயிட்டோமா! தீபாவளிப் பட்டாசில் இருந்து அண்ணா, தம்பியோட போட்டி போடுவோமில்ல! அதே போல் படிப்பிலும் போட்டிதான். ஆனால் எனக்குப் புத்தகங்கள் கிடைக்காது. மகளே உன் சமர்த்து! எப்படிப் புத்தகம் வாங்கிப்பியோ, எப்படிப் படிப்பியோ உன் பாடுனுடுவார் அப்பா. புத்தகங்கள் வாங்கித் தந்ததே இல்லைனு தான் சொல்லணும், பெரியப்பா வீட்டிலும், மாமா வீட்டிலும் உதவுவாங்க. என்றாலும் அக்கவுண்டன்சி புத்தகம் யாரிடமும் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன். அப்பா படிச்சது சுப்ரமணிய ஐயர் என்பவர் போட்ட அக்கவுண்டன்சி புத்தகம். அதைத் தேடி எடுத்துக்கொடுத்துட்டு இதுவே ஜாஸ்தினு சொல்லிட்டார் அப்பா. அப்புறமா அப்பாவின் நண்பர் ஒருத்தர் தன்னுடைய பாட்லிபாய் புத்தகத்தைக் கொடுத்து உதவினார். படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நிபந்தனையோட. இப்போ நான் படிக்கிறதே நின்னு போச்சே! இன்னும் அழுகை வந்தது. பாட்லிபாய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்னொருத்தரோடது. அதோட அங்கே போய்ப் படிக்க முடியாதே. அழுகையுடன் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்பா ஒரு சத்தம் போட்டார். “அங்கே போய் மாமியார், மாமனாருக்கு ஒத்தாசையா இருக்காமப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிச்சுண்டா உட்காரப் போறே? இங்கே மாதிரி புத்தகமும் கையுமா அங்கே எல்லாம் இருக்க முடியாது. அதை நினைவில் வச்சுக்கோ!” என ஒரு அதட்டுப் போட்டார். அம்மா சமாதானத்துக்கு வந்து, “உன்னோட அலமாரியிலேயே வச்சுட்டுப் பூட்டிடு, நாங்க யாரும் எடுக்க மாட்டோம். நீ அப்புறமா வரும்போது, போகும்போதுகொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கொண்டு போகலாம்.” என்று சொல்ல அரை மனசாப் புத்தகங்களை விட்டுவிட்டு, என்னோட எம்ப்ராய்டரி நோட்டுப் புத்தகம், ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம்னு எல்லாத்தையும் எடுத்து வைச்சேன். ஆட்டோகிராஃபிலே டிடிகேயிடம் கையெழுத்துவாங்கியதில் இருந்து பல முக்கியமானவங்க கிட்டே வாங்கின கையெழுத்தெல்லாம் இருந்தது.

ஒரு மாதிரியா பாக்கிங் முடிச்சுட்டு ரிக்க்ஷா வந்ததும் அம்மா சாமி படத்துக்கு எதிரே உட்கார வைச்சு விபூதி, குங்குமம் இட்டுவிட்டு, வேப்பிலை சொருகி, வாசலில் சூரைத் தேங்காய் விட்டுவிட்டுத் தம்பியோட என்னை அனுப்பி வைச்சாங்க. மாமா வீட்டுக்கு வந்தாச்சு. மறுநாள் காலையிலே பந்தக்கால் முஹூர்த்தம். அப்பா, அம்மா காலையிலே வருவாங்க. அன்று மாலை வழக்கம் போல் குளிக்கப் போனேன். கல்யாணத்திற்கு என நகைகள் போட்டிருந்தேன். காதிலே தோடு வேறே புதுசா கனம், தாங்கலை. எல்லாத்தையும் கழட்டி விட்டு இருக்கணும் போல் ஒரு ஆசை. குளிக்கையில் நகைகளைக் கழட்டிட்டு அங்கேயே பாத்ரூமில் ஒரு பக்கமாய் சோப்புப் பெட்டியில் வைச்சேன். எப்போதுமே சோப்புப் பெட்டியைக் கையோடு எடுத்து வரது வழக்கம். குளிச்சுட்டும் கையோடு எடுத்துக்கொண்டு போவேன். அன்னிக்கு என்னமோ மறந்துட்டு வெளியே வந்துட்டேன். சுத்தமா நகைகள் நினைவே இல்லை. வெளியே வந்து மாமாக்களோட சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். எங்க அப்பா இல்லைனாத் தான் எங்க வீட்டிலே நாங்க எல்லாம் குதியாட்டம் போடுவோம். அப்பாவுக்கு பயம். ஆனால் இங்கே மாமா வீட்டில் கொஞ்சம் கூட பயமோ, வெட்கமோ, தயக்கமோ இருக்காது. ஒரே சிரிப்பும், விளையாட்டுமாய்த் தான் இருப்போம். அதுவும் எல்லாருக்கும் பள்ளி விடுமுறை. கல்யாணத்துக்கு என என் சித்தி குழந்தைகள் எல்லாரும் வந்திருந்தாங்க. மாமா வீட்டில் தாத்தா, பாட்டி, மூன்று மாமாக்கள், மாமிகள், குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பமாய்த் தான் இருந்தாங்க. அதனால் அவங்க வேறே. எல்லாருமாய் விளையாடினோம். ட்ரேட் விளையாட்டு, சீட்டுக்கட்டில் செட் சேர்க்கிறது, ஆஸ் விளையாட்டு, பரமபத சோபானம் என எல்லாரும் தனித்தனியாகவும், குழுவாகவும் விளையாடுவோம்.

கடைசி மாமாவும் என் பெரியம்மா பிள்ளை(அண்ணா)யுமாகக் காரம் போர்ட் விளையாடினாங்க. மாமா வேணும்னே சீண்டுவார். அப்படி ஒருமுறை சீண்டும்போது காரம்போர்டின் காய்களை என் முகத்திலே வந்து விழ வைச்சார். வேணும்னு தான் பண்ணினார் என்பது புரிந்தது. கோபத்தோடு கையாலே அதை எடுக்கும்போது தான் கவனித்தேன், கைகளில் ஏதோ வெறுமை. ம்ம்ம்ம்?? என்ன ஆச்சு?? கல்யாணத்துக்கு எனப் போட்டுக்கொண்ட கண்ணாடி வளையல்கள் தங்க நிறம் கொண்டவை. அவை இருந்தன. ஆனால் தங்க வளையல்கள்?? அவசரம் அவசரமாய் இரண்டு கைகளையும் பார்த்தால் வளையல்களே இல்லை. என்னையும் அறியாமல் கழுத்தைத் தடவிப் பார்த்தேன். கழுத்திலும் எவையும் இல்லை. காது?? நல்லவேளை, வைரத்தோடு! கழட்டவில்லை. இருக்கு. மூக்கு?? ம்ம்ம்ம் மூக்குத்தியும் இருக்கு. அப்போ வளையல்கள், சங்கிலி, நெக்லஸ் போன்றவைதான் காணோமா? எங்கே வைச்சேன்?? ஆஹா, குளிக்கப் போனப்போக் கழட்டினோமே. சட்டுனு குளியலறைக்குப் போய்ப் பார்த்தேன். அங்கே என்னோட சோப்புப் பெட்டி மட்டுமே வைச்ச இடத்தில் இருந்தது. எனக்கப்புறம் யாரு குளிக்கப் போனாங்க?? ஒவ்வொருத்தரா விசாரிச்சேன். யாருமே நாங்க பார்க்கவே இல்லைனுட்டாங்க. அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது??

Saturday, April 16, 2011

கல்யாணமாம், கல்யாணம் தொடர்ச்சி

என்னோட மாமனார் என்னை மருமகளாக ஏற்கத் தயங்கினாலும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களில் குறை எதுவும் வைக்கவில்லை. திருமணம் ஆனதும், பெரிய அளவில் கிரஹப் பிரவேசத்துக்கு ஏற்பாடுகள் பண்ணப் போவதாய்த் தகவல் கிடைத்தது. என் மாமனாரின் கூட ஒரே அண்ணன் தான். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே என் கணவர் தான் மூத்தவர் என்பதால் குடும்பத்திற்கே முதல் மருமகள். அது அங்கே ஒரு புறம் இருக்க, இங்கே எல்லா பட்சணங்களும் செய்து கொண்டிருந்தார்கள். வீடு தனி வீடெல்லாம் இல்லை. ஒரு வீட்டின் போர்ஷன் தான். தேங்காய் எண்ணெயும், நெய்யுமாகக் கலவையாக வாசனை அடிக்க அங்கேயே உட்கார்ந்து ஒரு பக்கம் நான் தையல் மிஷினை ஓட்டித் தைக்க என்று பரபரப்பாக இருந்தன நாட்கள். இதற்கு நடுவில் பந்தக்கால் முஹூர்த்தம் பார்த்தாயிற்று. என்னோட இரண்டு பெரியப்பா பெண்களில் ஒருத்தருக்கு நாங்க குடி இருந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து வீட்டையும் சேர்த்து வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். கொஞ்சம் தள்ளி இருந்த ஓர் உறவினர் வீட்டில் பிள்ளை வீட்டுக்காரங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எதிரே இருந்த என் பெரியப்பா வீட்டில் கல்யாணத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், பூ, பழங்கள் என அனைத்தையும் இறக்கிவிட்டுக் காவலுக்கு என்னோட பெரிய அண்ணா(பெரியப்பா பிள்ளை) இருந்தார். சமையல், சாப்பாடு அங்கேயே இன்னொருத்தர் வீட்டில்.

இன்னொரு பெரியப்பா பெண்ணிற்கு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த மங்கள நிவாஸ் என்னும் கண் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தில் கல்யாணம். அது எல்லா விசேஷங்களுக்கும் குறைவான வாடகை வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. பெரியப்பா அந்த அறக்கட்டளையில் உறுப்பினர்தான். அவர் சொன்னால் கிடைச்சுடும். பெரியப்பாவும் சொல்லத் தயாராய் இருந்தார். ஆனால் கூட்டம் நிறைய வந்தால் சமாளிக்க முடியாது என நினைத்த அப்பா, நகரத்தை விட்டுத் தள்ளி என் மாமா வீடு கட்டி இருந்த டிவிஎஸ் நகரில் திருமணம் நடத்தத் தீர்மானித்துவிட்டுப்பத்திரிகையிலும் அந்த விலாசத்தையே கொடுத்துவிட்டார். இது கொஞ்சம் பெரியப்பாவிற்கும், மற்ற உறவினர்களுக்கும் அதிருப்தியைக் கொடுத்தாலும் என் அப்பாவை மீறி எதுவும் யாரும் பேச முடியாது என்பதால் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஆகவே பந்தக் கால் முஹூர்த்தத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஒரு முடிவு எடுக்கவே, அப்படியே அங்கேயே நான் தங்கிவிடவேண்டும், திரும்ப நாங்க இருக்கும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க வேண்டாம் என அப்பா சொல்லி, என்னைப் பெட்டியைத் தயார் பண்ணச் சொன்னார். சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றை நடத்த நாங்க இருந்த வீட்டில் இடம் போதாது என்பதால் பெரியப்பா வீட்டில் நடத்தத் தீர்மானித்திருந்தார்கள். அங்கே மாமிகள் அந்த விசேஷத்தில் பங்கெடுக்க வருகையில் என்னை அழைத்து வரலாம் எனவும், அல்லது முதல்நாளே என் தம்பி போய் அழைத்து வந்துகொள்ளலாம் எனவும் முடிவு செய்தாயிற்று. நாளைப் பந்தக்கால் முஹூர்த்தம். முதல் நாளே நான் மாமா வீட்டுக்குச் செல்ல நல்ல நேரம் குறித்தாயிற்று. நாங்க இருந்த மேலாவணி மூல வீதியில் இருந்து மாமா வீடு இருந்த டிவிஎஸ் நகருக்கு நடந்தே பலமுறை போயிருக்கேன். ரயில் பாதையோடு நடந்தால் குறுக்கு வழி. பேருந்திலும் போயிருக்கேன். அப்போ திருப்பரங்குன்றம் செல்லும் 19-ம் எண் பேருந்து அங்கே பழங்காநத்தத்தில் நிற்கும். பழங்காநத்தத்தில் இறங்கிக் கோவலன் பொட்டலைக் கடந்து தான் டிவிஎஸ் நகருக்குள் போகணும். கோவலன் பொட்டலைத் தாண்டுவதைச் சிலர் எதிர்த்தாலும், டிவிஎஸ் நகரும், அதன் எதிரே சத்யசாயி நகரும் வந்ததும், கோவலன் பொட்டல் பற்றிய ஒரு மூட நம்பிக்கை அறவே ஒழிந்தது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் இப்போ நான் போவது அப்படி எல்லாம் இல்லை. நானும், என் தம்பியுமாக டிவிஎஸ் நகர் வீட்டுக்குச் செல்ல ரிக்ஷாவுக்கும் சொல்லியாச்சு. நடந்தே போன எனக்கு வந்த வாழ்வு! ))) ஆனால் இம்முறை போனால் திரும்ப வீட்டுக்கு வர மாட்டேன். அங்கே இருந்து நேரே கும்பகோணம், அப்புறம் கிராமம். அதுக்கப்புறமா அவங்க அநுமதிச்சாத் தான். பெட்டியைத் திறந்து எல்லாவத்தையும் ஒரு முறை பார்த்தேன். இறை அருளால் எனக்கு உடைகளுக்கு எப்போவுமே குறை இருந்ததில்லை. கல்யாணத்துக்கு எடுத்த பட்டுப்புடைவையைத் தவிரவும் என்னிடம் ஐந்து பட்டுப்புடைவைகள் இருந்தன. உடை விஷயத்தில் எதை எடுத்துக்கிறது, எதை வைக்கிறது என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்கள்?? அப்போவே என்னிடம் சின்ன அளவில் புத்தக சேமிப்பு உண்டு. உ.வே.சா. நினைவு மஞ்சரி, கூடக் குடி இருந்த திருநெல்வேலி மாமா கொடுத்த அன்பளிப்பு, பாரதியார் பற்றிய புத்தகங்கள், தனிப்பாடல் திரட்டு 1 பொன்னியின் செல்வன் அப்போ இரண்டாம் முறையாகக் கல்கியில் வெளி வந்த நேரம். அதன் பைண்டிங் புத்தகங்கள். சாண்டில்யனின் நாவல்கள். கணையாழியின் தொகுப்புகள், (சித்தப்பா அப்போக் கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்ததால் ஒவ்வொரு இதழ்க் கணையாழியும் எங்களுக்கு வரும்) நா.பார்த்தசாரதியின் புத்தகங்கள் என ஒரு சின்ன நூலகமே இருந்தது. அதோடு நான் தையலுக்குப் பயன்படுத்தும் நூல்கண்டுகள், எம்ப்ராய்டரிக்குப் பயனாகும் நூல்கண்டுகள், (கடைகளுக்குத் தைச்சுக் கொடுப்பேன்) ஊசி வகைகள், தைக்கக் கொடுத்த துணிகள், தையல் மிஷின் என எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டா போகணும்?? தையல் மிஷினையும், புத்தகங்களையும் மட்டும் கையோடு எடுத்துண்டு போயிடலாமா?? யோசனை, யோசனை, யோசனை. அம்மா அதை எல்லாம் இப்போ தூக்கிண்டு போக முடியாது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா தனிக்குடித்தனம் வைச்சா அப்போ நாங்க தூக்கிண்டு வந்து உன் கிட்டேயே கொடுப்போம். எங்கேயும் போகாது உன் சாமான்கள் எல்லாம் என்றாள். என் கணவர் கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரத்திலே புனா கிளம்புவதால் என்னையும் அழைத்துப் போகப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் நல்ல நாளும் குடித்தனம் வைக்கனு பார்த்துக்கொண்டிருந்தாங்க. அடக்கடவுளே!இப்போ என்ன பண்ணறது?? வெளியே போன அப்பா திரும்ப வந்து கிளம்ப நேரமாச்சு, இன்னுமா கிளம்பலை என அவசரப்படுத்த என்னோட கவலையை அம்மா சொல்ல, அப்பாவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர எனக்கு இனம் புரியா அழுகை வந்தது. சும்மாவே தம்பிக்கும் எனக்கும் இந்தப் புத்தக விஷயத்தில் சண்டை வரும். இப்போ எல்லாத்தையும் அவன் எடுத்துக் கொண்டு விடுவானோ? கஷ்டப் பட்டு சேர்த்தது. பைண்டிங் செய்து கொண்டு வரது தம்பிதான். ஆனாலும்........ எப்போ வேணாலும் எடுத்துப் படிக்க முடியாதே. அழ ஆரம்பித்தேன்.

என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன்.

Friday, April 15, 2011

கடும் ஆக்கிரமிப்பு.

ஒரு வாரமாக் கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டது. அதோட ஓ.எஸ். வேறே மாத்தினதும் சேர்ந்துண்டாச்சு. அதிலே ஒரு மூணு மணி நேரம் போயிடுச்சு. அதுக்கு அப்புறமா கணினி கிடைக்கவே இல்லை. :P நேத்திக்குத் தான் கணினியிலே உட்காரவே முடிஞ்சது. இதிலே எங்கே போஸ்ட் போடறது?? ஏற்கெனவே எழுதி வைச்சதை ஆன்மீகப் பயணம் பக்கத்திலே போட்டாச்சு, இனி எழுதிட்டுத் தான் வரணும். கல்யாண நிகழ்ச்சி வரலையேனு எலலாரும் கேட்டுட்டு இருக்காங்க. வரும், வரும் பக்ஷணமெல்லாம் பண்ணி முடிக்கவேண்டாமா?? கல்யாணத்துக்கு என்னோட ப்ளவுஸெல்லாம் நானே தான் தைச்சேன். அதெல்லாம் முடியணும் இல்லை??

அப்புறம் சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை எல்லாம் முடியணும். அதுக்கு முன்னாடி பந்தக்கால் நடணும். அதுக்கு முஹூர்த்தம் கிடைக்கணும், எவ்வளவு வேலை இருக்கு! கல்யாணம் என்னமோ பதினைந்தே நாட்களில் செய்யணும்னு நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் வேலை நடக்கவேண்டாமோ? முறுக்கு, தேன்குழல், அதிரசம், மிக்சர், மைசூர்பாகு, பருப்புத் தேங்காய்கள்னு எவ்வளவு இருக்கு! கல்யாண வேலைனா சும்மாவா? பத்திரிகைகளைக் கொடுக்கணும், நேரமே இல்லையே, வெளியூர்க்காரங்களுக்குப் போய்ச் சேரணும். எல்லா விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். அதோட ஸ்ரீராமநவமி கொண்டாட்டம், புத்தாண்டுக் கொண்டாட்டம்னு எல்லாம் முடிஞ்சு இன்னிக்குத் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு.

Wednesday, April 13, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதியையும், மகிழ்வையும் தரப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்

ராம ஜயம், ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்!


காட்டிலே பதினான்கு ஆண்டுகள் கழிந்த பின்
காலம் சில கழிந்த பின்
கடிதினில் ஏகு எனப் பரதனை அனுப்பவே
காலம் சில கழிந்தபின்
கன்னி என இராவணன் தங்கையாம் சூர்ப்பநகை
கபடங்கள் பல செய்திட
காதோடு தனத்தையும் மூக்கையும் அறுக்கவே
கர தூடணாதி கேட்டு
வேர் கொண்டு எழுந்த தம் சேனை முழுதும் சென்று விண்ணுலகடைந்த பின்னர்
விசை கொண்ட தசமுகன் அறிந்து மாரீசனை
வேடமானாக்கிவிடவே
விளையாடி அந்த மான் நின்றதைக் கண்டுமே
மெல்லியல் சீதை அதை வேண்ட
வீர ராகவ முனிவர் கோதண்டம் வாங்கியே
வெகு தொலை தூரத்தில் எய்ய,
விழும்போது இலக்குவா, என்றவன் கூவவே
வீர இலக்குவனும் ஏக
வீற்றிருந்த பர்ணசாலையோடு சீதை
வேரோடு எடுத்து அரக்கன்
விமானமதிலே வைத்து இலங்கை நகர் செல்கையில்
விடேன் என்ற சடாயு தன்னை
வெட்டித் துணிந்தேகி அசோகவன மீதினில்
தேவியைச் சிறை வைத்திட,
வெந்துயர் கொள் இராகவன் இளைய பெருமாளோடும்
வெங்கானெல்லாம் திரிந்து,
விரைவுடன் தேடி உயிர் விட்ட சடாயுவெனும்
வீரன் கடன் முடித்து
விராதனை வதைத்து சவுரியைப் புட்பக

விமானத்தில் ஏற்றி விட்டு
வீர அனுமானுடன் சுக்கிரீவனைக் கண்டு
வெய்ய வாலியை மடித்து
வித்தக மாருதி தனைத் தூது அனுப்பியே
வெற்றி அடையாளம் வாங்கி வெள்ளம் எழுபது கொண்டு கடலில் அணை கட்டியே
மேருமுடி இலங்கை மேவி,
வீடணன் சரணடைய அபயம் அவனுக்கு ஈந்து
தம்பி என அவனை ஏற்று,
வெளியாக இராவணன் வராமையால் தேவி
மெல்லியலின் விடுதல் நாடி
பார் கொண்ட அங்கதன் தனைத் தூது அனுப்பியே
பத்துமுடியோனிடத்தில்
பச்சை இள மயில் தனை விட்டு விடு
இல்லை எனில் படை பொருத வருக என்ன
பரமனுறை மாமலையை எடுத்த தோள் ஆண்மையால்
பத்து வாயால் நகைத்து
ப்ராக்கிரமமோடு வந்து மோதிப் பல்சேனையோடு
படை வீரரான சூரர்
பாலரோடு கும்பகனாதியர் இறக்கவே
பார்த்தன் நிகர் மேகநாதன்
படையுடன் எதிர்க்கவே இளைய பெருமாளுடைய
பாணத்தினால் மடித்துப்
பாரெலாம் அஞ்சுறும் மூலபல சேனையைப் பசை அற ஒழித்துப் பத்து முடியோனைத் துணித்து வீடணற்குப் பட்டமும் கட்டி வைத்து,
பருவரதி மாதின் உயர் மமையாம் சீதையாள்
பட்ட சிறை மீட்டி,
இந்திரபதி விட்ட புட்பக விமானத்திலேறியே
படை வீரர் சூழ்ந்து போதப்
பரதனுக்கு அனுமனை முந்தூது போக்கியே
பரதன் உயிர் பாதுகாத்து
பரத்துவாசன் விருந்து உண்டபின் அயோத்தி நகர்
பாங்காக வந்து சேர்ந்து,
பட்டாபிஷேஹமும் பண்ணிஒரு
குடையினால் பார் முழுதும் ஆண்ட,
சக்கரபதி ஆன ரகுராம சந்திரன் மருகனே!

பரம சிவனார் பாலனே,
பச்சை மயில் ஏறியே பக்தர்கள் தமைக்காக்கப் பாரினில் தேவ சபையாம்
பழநி மலை மேல் வந்து விளையாடி நிற்கின்ற பரமகுருவான குகனே


பழநி மலைக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாடும் பாடல் இது எனக் கேள்விப் பட்டேன். எழுதியவர் பெயர் தெரியாது. தெரிந்தவர்கள் கூறவும். நன்றி.

Tuesday, April 12, 2011

ராமஜயம் ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்!


ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
ராம ஜெயம் நம் தேகபலம்
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ராம ஜெயம் நம் ஜீவரசம்-ஸ்ரீ
ராம ஜெயம் நம் ஜீவ ரசம்

சரணங்கள்:-

ஓதிய நாவில் உணர்ந்தவர் நெஞ்சில்
உலாவிடும் ராமஜெயம்
உள்ளம் நினைத்ததை அள்ளி வழங்கி
உயர்த்திடும் ராம ஜெயம்
சீத இலக்குவன் மாருதி வீடணன்
சீர் பெற்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய
சீதா ராம ஜெயம்

ஆழ நெடுங்கடல் சேதுவிலே அணை ஆக்கிய ராம ஜெயம்
ஆங்கொரு கல்லிடைப்பூங்கொடி தோன்ற
அருள் தரும் ராம ஜெயம்
தேடி அடைந்தவன் வாலி நெருப்பும்
சிலீரென்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய ச்
சீதா ராம ஜெயம்

இப்போ சுருக்கமா ராமாயணப்பாடல்கள்:

சீர் கொண்ட செந்தமிழ் மதுரமொழி அமரர் பதி
செல்வி இந்திராணி மன்னன்
தேவரோடு வாசவன், எமதர்ம ராசனும்
திக்குப் பாலகனரனந்தர்
சென்று சீர்ச்சிவன் மலர் திருவடிகள்
போற்றியே
தீய ராவணன் இடுக்கண்
செப்பவட மேருகிரி தன்னிலே, ஒரு பால்
சென்று ரகசியம் முடித்து,
திருக்கொலு கலைந்தபின் அவரவர்
இருப்பிடம்
சென்றபின் நாரதர்க்கு
திரு உடல் வியர்த்து அவர் வயிறது வெடிக்குமுன்
செப்பினார் புற்றினுள்ளே:
செய்தவ வான் வான்மீகி உள்ளிருந்தோர் காதி
சென்று அந்த உரைகள் வீழ
சிவ சிவா என்றுமே கீர்வாண சுலோகமாய்ச்
செப்பினார் இராம காதை:


சென்று முதல் மூவரில் வைகுந்த வாசனும்
திருவளர் அயோத்தி நகரில்
தெசரதன் தேவி நல் கோசலை வயிற்றினில்
சீராமர் ஆக வந்தார்
சேயிழை சுமித்திரை கைகேயி
இருவர் பால்
சேடனோடு ஆழி சங்கு
சென்று இலக்குவன் பரதன் சத்துருக்கனனெனச்
சேயவர்கள் நால்வர் ஆகச்
சேர்ந்து விளையாடையில் கூனி
உடல் நிமிரவே சிற்று வில்
உண்டை எய்து,
சீலராகவனுடன் தம்பியும் சென்று விசு
வாமித்திரன் செய்த வேள்வியைச்
சீரழித்திட்டோர் தாடகை தனைக் கொன்று
சிறுமகள் தன்னை ஓட்டி,
செல்வி எனும் அகலிகை கல்லுருத் தீர்ந்திடத்
திருவடிச் செல்வம் நல்கி
கார் கொண்ட மிதிலையில் சனகன்
இடுசிலையினைக்
கையால் எடுத்து ஒடித்துக்

கலியாணம் செய்திடத் தாய் தந்தை முதலான
கணமெல்லாம் வரவழைத்துக்
கன்னியாம் சானகி தன்னை மணம் செய்து
கடுகி வரும் வேளை தன்னில்
கறுத்த முனியாம் பரசு இராமன் எதிர்த்திடக்
கனத்த கோதண்டம் வாங்கி,
கெளசலை தயரதன் முதலான பெரியோர்கள்
களித்திட அயோத்தி வந்து,
கனகமணி முடிசூட முன்னின்ற காலையில்
காய்ந்த பகையால் கூனியும்
கைகேயி இடம் வந்து சூழ்வினை உரைக்க
அவள் கணவனிடம் வரங்கள் வாங்க
காட்டினில் ஏழிரண்டு ஆண்டுகள் கழிந்திடக்
காகுத்தன் மனைவியோடும்
கணமும் பிரிந்திடாத தம்பி இலக்குவனோடும்
கங்கையின் கரையை நண்ணிக்
காட்டுவன் குகனெனும் வேடனைத் துணை கொண்டு
கங்கை நதியைக் கடந்து,
களிப்புடன் பஞ்சவடித் தீர்த்தத் திருக்கையிங்
கனசேனையோடு பரதனும்
கால் நடையதாய் வந்து சேவித்து நிற்கவே

கமலபாதுகமளித்து

Monday, April 11, 2011

ஸ்ரீராம நவமிக்கு என்ன செய்யவேண்டும்?

நாளை ஸ்ரீராம நவமி. ஸ்ரீராம நவமி மர்யாதா புருஷோத்தம் எனப்படும் ஸ்ரீராமரின் அவதார தினத்தை ஒட்டிக் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை. ஸ்ரீராமர் அவதரித்த இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களும் உண்டு. அல்லது பங்குனி மாதம் அமாவாசையில் இருந்து ஆரம்பித்து ராம நவமி முடிய ஒன்பது நாட்கள் விரதம் இருப்போர்களும் உண்டு. வட இந்தியாவில் இந்த ஒன்பது நாட்களும் ராமாயணம் படிப்பார்கள். இங்கேயும் சிலர் சுந்தர காண்டம் படிப்பதுண்டு. சுந்தரகாண்டத்தில் ஒன்பது நாட்கள் பாராயணம் செய்கிறாப்போல் ஸர்க்கங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்கள். அவற்றை அமாவாசையன்று ஆரம்பித்துப்படிக்கலாம். எது ஆரம்பித்தாலும் முதலில் விநாயகர் பூஜை ஆரம்பித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். பின்னர் முதல் நாளைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிவேதனமும் புத்தகத்திலேயே குறிக்கப் பட்டிருக்கும். சுந்தரகாண்டத்தை நாமே பாராயணம் செய்வதே உகந்தது. இயலாதவர்கள் வேறு எவரையாவது அழைத்துப் பாராயணம் சொல்லச் சொல்லிக் கேட்கலாம். ஒவ்வொரு நாளுக்கும் உரிய நிவேதனங்களைச் செய்து வைத்துக்கொண்டு பாராயணம் முடிந்ததும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவற்றோடு நிவேதனம் செய்ய வேண்டும். இதைத் தவிரவும் மஹா நைவேத்தியம் என்னும் சாதம் நிவேதனம் செய்யவேண்டும். கடைசி நாள் பாராயணம் முடியும் அன்று ஸ்ரீராம நவமியாக இருக்கும். அன்று சுந்தரகாண்டப் பாராயணம் முடிந்தாலும், கட்டாயமாக பட்டாபிஷேஹ ஸர்க்கத்தையும் பாராயணம் செய்யவேண்டும்.

அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, சுண்டல், வடைப்பருப்பு என்னும் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்தது, பானகம், நீர்மோர் போன்றவை கட்டாயம் இருக்கவேண்டும். காட்டில் ஸ்ரீராமர் இருந்தபோது அங்கே கிடைத்த பயறு, உளுந்து போன்ற பொருட்களையும், நீரையும் குடித்தேத் தவ வாழ்க்கை வாழ்ந்ததால் பச்சைப் பயறும் நீர் மோரும் கட்டாயமாக வைக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து. இது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. மேலும் வெயில்காலம் என்பதாலும் பானகம், நீர்மோர் போன்றவை கொடுத்திருக்கலாம். அன்றைய தினம் பாராயணத்தை நாமே முடித்திருந்தாலும், அல்லது வேறு யார் மூலமாவது பண்ணி இருந்தாலும் தக்ஷணை கொடுத்து விசிறி, குடை போன்றவை தானம் கொடுக்கவேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப விசிறி, குடை போன்றவை. இப்போதெல்லாம் மின் விசிறி இல்லாத வீடே இல்லை என்பதால் இவை எல்லாம் கொடுப்பதில்லை. குறைந்த பக்ஷமாக அன்று நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அல்லது அக்கம்பக்கம் இருப்போருக்குப் பானகம், நீர்மோர் கொடுத்தால் நல்லது. விரைவில் வடுவூர் ராமர் பத்தி எழுதறேன்.

இதைத் தவிர வேறு ஏதேனும் இருந்தால் எழுதுங்கப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்.

Saturday, April 09, 2011

பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய சிநேகிதி வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். அவங்க இப்போ ஸ்விட்சர்லாண்டில் இருக்காங்க. அனைவரும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்துகள் வல்லி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும்,நீங்களும் சிங்கமும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகள், மருமகன், மகன்கள், மருமகள், மற்றும் பேரன், பேத்திகளோடும், ஆனந்தமாயும், ஆரோக்கியமாயும், மகிழ்வாயும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்.

Friday, April 08, 2011

ஜெயிக்கப் போறது யாரு?? கடும் போட்டி!

தினம் தினம் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் இதே பிரச்னை! இதே பேச்சுக்கள்! இதே மாதிரியான பாடல்கள்! காட்சிகள்! அதிலும் எல்லாத் தொலைக்காட்சியும் சேர்ந்து இப்படிப் பாடாய்ப் படுத்துகின்றன. என்ன ஒரே தொந்திரவாப் போச்சு! ஒண்ணுமே புரியலையே! சன்னில் ஒண்ணு, ஜெயாவில் ஒண்ணு, விஜயில் இன்னொண்ணு, ராஜில் வேறொன்றுனு வெவ்வேறு நிகழ்ச்சிகளையும் மாற்றி மாற்றிப்போட்டுப் பார்த்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. எல்லாத்திலேயும் ஒரே மாதிரிதான் வருது. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

சச்சின் வந்து பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி னு சொல்றார். இன்னொரு விளம்பரத்தில் காம்ப்ளான் பையன் வந்து காம்ப்ளான் சாப்பிட்டால் தான் உயரமே வரும்னு சத்தியம் பண்ணறான். ஹார்லிக்ஸோ வெறும் உயரமும், எனர்ஜியும் என்ன பண்ணும்? நாங்க எல்லாத்தையும் சேர்த்துக் கொடுக்கிறோமே, சுறுசுறுப்பா இருப்பாங்க, அத்லெட்டா ஆகலாம்னு பி.டி.உஷா, ஷைனி வில்ஸன்னு எல்லாருமே வந்து சத்தியம் பண்ணறாங்க. அதோட ஹார்லிக்ஸ் குடிச்சாத் தான் படிச்சதெல்லாம் நினைவில் இருக்குமாம். கணக்கெல்லாம் நல்லாப் போடலாம். முதல்லேயே சொல்லி இருந்தால் சாப்பாடு சாப்பிடாம ஹார்லிக்ஸே குடிச்சுட்டு ராமாநுஜத்துக்கும் சகுந்தலா தேவிக்கும் போட்டியா வந்திருக்கலாம். இதெல்லாம் பத்தாதுனு சிம்ரன் வேறே வந்து கம்ப்யூட்டரைப் போட்டுப் போட்டுப் பார்த்துட்டுக் கடைசியிலே ந்யூட்ரி ஸ்மார்ட் குடிக்கிற அவங்க பிள்ளைக்குத் தான் இதெல்லாம் வரும்னு சொல்லிடறாங்க. என்னடா இதுனு பார்த்தா போர்ன்விடாகாரங்க, லிட்டில் சாம்ப்ஸ் ஆகணும்னா போர்ன்விடா குடிக்கணும்னு சொல்றாங்க. பேசாம(பேசிண்டே தான்) எல்லாத்தையும் வகைக்கு ஒண்ணா வாங்கி வச்சுட்டு எல்லாத்திலேயும் ஒரு ஒரு ஸ்பூன் போட்டுக் கலந்து இந்த விளம்பரப் படம் எடுக்கிறாங்களே அவங்களை எல்லாம் கூப்பிட்டுக் குடிக்க வைக்கணும்னு ஒரு அல்ப ஆசை!

சரி இதெல்லாம் போகட்டும், சோப்புப் போட்டுத் துணியைத் துவைக்கிற காலமெல்லாம் மலையேறியாச்சு. பவுடர் வந்தாச்சு. நாம மட்டுமா பவுடர் போட்டுக்கணும். துணியும் போட்டுக்கட்டுமே. அதிலே வேறே போட்டி. ஒரு குட்டிப் பையர் கீழே வேணும்னே விழுந்து புரண்டுட்டுப் போறார் வீட்டுக்கு. அவங்க அம்மாவோ பையனை ஒரு சாத்துச் சாத்தாம கறை நல்லதுனு சொல்லிட்டுச் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அப்ப்ப்படி சர்ப் எக்ஸெலில் ஒரு முக்கு முக்கி எடுக்கிறாங்க. துணி வெண்மையோ வெண்மை. ம்ஹும், இது சரியா வராது. நானும் முயற்சி பண்ணினேன். தோட்டத்து வாழைக்காயின் கறையும், மாங்காய்ப் பாலும் பட்டு வீணான புடைவையை சர்ப் எக்ஸெலில் முக்கிட்டுத் தோய்ச்சா, ஹிஹிஹி, வெளுத்தது. எது தெரியுமா?? புடைவையின் கலர்! கறை அப்படியே இருந்தது. இது என்ன கறைனு கேட்டவங்களை எல்லாம் இது ஒரு டிசைன், நானே கையால் போட்டேன்னு சொல்லிச் சமாளிச்சுக்கறேன். வேறே வழி??

இப்போ ஒரு வாரமாக் கறை கெட்டதுனு கண்டு பிடிச்சிருக்காங்க. ஒரு காலேஜ் பொண்ணு மழையிலே நனைஞ்சு கீழே விழுந்து சேத்திலே புரண்டுட்டு வீட்டுக்குப் போறா. சேச்சே இல்லைங்க, மெளனராகம் ரேவதியெல்லாம் இல்லை. இது வேறே. வீட்டுக்குப் போனா அங்கே அவளைப் பெண் பார்க்க வந்திருந்த ஒரு பெண்மணி, "ம்ஹும், இந்தப்பொண்ணு எங்களுக்கு வேண்டாம். கறை பட்ட பெண்" அப்படினு சொல்றாங்களாம். விளம்பரமே நல்லா இல்லையேனு நினைச்சேன்.
உடனே பவர் டிடர்ஜெண்டாலே அந்தப் பெண்ணின் தாத்தாவோ, அப்பாவோ தோய்ச்சுடும்மா, கறை கெட்டதுனு புரிஞ்சுக்கோ, யாரானும் கறை நல்லதுனு சொன்னா நம்பாதேனு சொல்றாங்க. அந்தப் பொண்ணும் ஒருவாரமா வந்து கறை கெட்டதுனு சத்தியம் பண்ணிட்டு இருக்கு. இப்போ என்னோட தலையாய சந்தேகம்: இரண்டிலேயும் கறை போகவே இல்லையே! அப்போ ரெண்டையும் தூக்கிக் கடாசிடலாமானு யோசிக்கிறேன். உங்க கருத்து என்ன?? ஒரே தலை சுத்தல்! :P

Sunday, April 03, 2011

கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி!

எனக்கு இருப்பது ஒரே பொண்ணு. அவளுக்கு இப்படியா நிச்சயம் பண்ணிண்டு வரணும்? இன்னொரு பெண்ணா இருக்கா? அவளுக்கு நன்னாச் செய்து பார்க்கலாம்னு சொல்றதுக்கு? "அம்மாவின் புலம்பலோடு ஆரம்பித்தன கல்யாண வேலைகள். அன்றைய நாளே நன்றாக இருந்ததாலும், திங்கட்கிழமை என்னோட நக்ஷத்திரத்துக்கு ஏற்றதென ஏற்கெனவே ஜோசியர் சொல்லி இருந்ததாலும் அன்றே கல்யாணவேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. தம்பியை அனுப்பிப் பத்திரிகை அடிக்க மாதிரிகள் கொடுத்தார் அப்பா. அண்ணாவுக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலிகளும், தகவல் தெரிந்து, என்னோட பெரியம்மாவும் வந்து சேர, மஞ்சள் இடித்து அன்றைய வேலையைத் தொடங்கினார்கள். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பப் பட்டது. பக்ஷணங்களுக்குத் தேவையான சாமான்களின் லிஸ்ட் போடப் பட்டது. வாடிக்கை நெய்க்காரப் பாட்டியை எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுண்டு வர என் தம்பிக்கும், அவன் நண்பனுக்கும் உத்தரவிடப் பட்டது. இரண்டு நாளைக்குள்ளாக ஒரு நல்ல நாளில் புடைவை வாங்க முடிவு செய்யப் பட்டது. ரவிக்கைகளைத் தைக்க டெய்லர் இருந்தாலும் எனக்கும் தையல், எம்ப்ராய்டரி தெரியும் என்பதால் அவசரமாய் வேண்டுபனவற்றை நானே தைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது. புடைவை வாங்க என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று என் மாமிகள், அம்மா போன்றோர் சொல்ல அப்பா திட்டமாக மறுத்துவிட்டார். கடைசியில் என் பெரியம்மா, அம்மா, அப்பா, மாமிகள் போய்த் தான் புடைவை வாங்கி வந்தனர். மஸ்டர்ட் கலரில் ஊசிவாணம் புடைவை நிச்சயதார்த்தத்துக்கும், ஊஞ்சல் புடைவை பச்சைக்கலரிலும், இன்னொரு புடைவை இங்க்லீஷ் பச்சை என்று சொல்வார்கள் அந்தக் கலரிலும், சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ப்ரவுன் கலரிலும் புடைவைகள் வாங்கப் பட்டிருந்தன. எங்க ஊர்ப்பக்கம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவை உண்டு. ஏனென்றால் குழந்தையாகவோ திருமணம் ஆகாமலோ கன்னிப் பெண்கள் இறந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகக் கொடுப்பார்கள். சிலசமயங்களில் மற்ற அந்நியரின் வீடுகளின் பெண்களை அழைத்தும் கொடுப்போம். நவராத்திரியில் இதைக் கட்டாயமாய்ச் செய்து வருகிறோம். இப்போ என் கல்யாணம் என்பதால் பெரியம்மா எனக்குத் தான் கொடுக்கணும், அது தான் குடும்ப வழக்கம் என்று சொல்லிவிட்டார்.

மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் மாப்பிள்ளை வீட்டிலேயே கல்யாணப் பெண்ணுக்கு நாலு புடைவைகள் எடுப்பாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணக்கூரை, கிரஹப் பிரவேசம், நலுங்கு விளையாடல் என நாலு புடைவைகள் எடுப்பாங்க. என்னோட இரு பெரியப்பா பெண்களுக்கும் அப்படித் தான் நடந்தது. ஒருத்தர் என் அம்மாவழிச் சொந்தம், இன்னொருத்தர் எங்க பக்கத்துவீட்டிலே இருந்தவங்க தம்பி. ஆகவே பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணாய் இருந்தது. ஆனால் இங்கே மாப்பிள்ளை வீட்டில் நாங்க எதுவும் எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறமா அப்பா வற்புறுத்திக் கூரைப்புடைவை மட்டுமாவது எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருந்தார். அரை மனசாய் ஒத்துண்டாங்கனு சொல்லிண்டிருந்தார். இப்படிச் சின்னச் சின்னதாய் சில கசமுசாக்கள் இருந்தாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடந்தன. அவங்க வீட்டிலே போடும் திருமாங்கல்யத்தையும் இங்கேயே செய்யச் சொல்லி இருப்பதால் மாங்கல்யத்துக்குப் பொன் உருக்க நாள் பார்க்க வேண்டி ஜோசியருக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. நாள் பார்த்துப் பொன் உருக்கித் தான் அப்போல்லாம் மாங்கல்யம் செய்வாங்க. ஆசாரி வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்து, பொன்னை வாங்கி ஸ்வாமி காலடியில் வைத்து வேண்டிக்கொண்டு, கையோடு கொண்டு வரும் பொன் உருக்கும் உலையில் போட்டு உருக்கி மாங்கல்ய அச்சில் அதை ஊற்றி மீண்டும் ஸ்வாமி காலடியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்வார். அதன் பின்னர் மாங்கல்யம் செய்யப் பட்டு பாலிஷ் எல்லாம் போடப் பட்டு நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமத்துடன் அவரே கொண்டு வந்து கொடுப்பார். இப்போல்லாம் பொன் உருக்கறதில்லை என்றாலும் கூடியவரையிலும் நல்ல நாளைப்பார்த்து ஆர்டர் கொடுப்போம். அதுவும் எங்க குடும்பத்துக்கு ராசியான கடைனு திநகரில் ராமநாதன் கடை மட்டுமே. அங்கே தான் திருமாங்கல்யம் செய்வோம். நல்லி கடையில் கூரைப்புடைவை. (இப்போது)

அதற்குள்ளாக அங்கே பத்திரிகை அடிச்சுப் பத்திரிகைகளை எங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுக்கவேண்டி ஒரு பார்சலில் அனுப்பி இருந்தாங்க. மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன். இப்போ இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் அப்பா சொன்னாப்போல் மாமனாருக்கு நான் உயரம் குறைவு என்பதால் கொஞ்சம் அரை மனசாய் இருந்திருக்கிறது. ஆகவே என் கணவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். அவர் என்னோட அப்பா எதிரே ஒண்ணும் சொல்லவில்லை. ஆனால் ஊருக்குப் போனதும் பேச்சு வார்த்தை நடந்ததில், என் கணவரோட அத்தை பெண் கல்யாணத்துக்கு இருப்பதால் அவங்களையே பார்க்கலாம் என மாமனார் முடிவாய்ச் சொல்லி இருக்கிறார். வரப் போகும் பெரியப்பா பெண் கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்க என்பதால் அன்னிக்குப் பேசி முடிவு பண்ணிப் பாக்கு வெற்றிலை மாற்றிடலாம்னு சொல்லி இருந்திருக்கிறார். என் கணவர் மறுத்திருக்கிறார். சொந்தமே வேண்டாம்னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.

இது இப்படியே இருக்க என் கணவர் அவரோட பெரியப்பா கூப்பிட்டதாலும், பெரியப்பாவிடம் இது குறித்துப் பேசவும் பக்கத்து ஊரான பரவாக்கரைக்குப் போயிருக்கார். அங்கே விஷயத்தைச் சொல்லி இருக்கார். தன்னோட அப்பா அத்தை பெண்ணைத் தான் பண்ணிக்கணும்னு சொல்லுவதையும் தனக்கு இஷ்டமில்லை என்றும் மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார். அப்போ பெரியப்பா அவரிடம் அவரை நானும் பார்த்தேன். நல்லவங்களாத் தான் தெரியுது. ஒரு கடிதம் எழுதிப் போட்டு வரவழை. பேசலாம்னு சொல்லவே, என் மாமனார் நிபந்தனைகள் போட்டுக் கடிதம் எழுதச் சொன்னதை என் கணவர் கூறவே, அவர் யோசித்துவிட்டு, அந்தப் பெண்ணின் அப்பாவை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். வந்தாலும் வருவார். நீ எதுக்கும் இன்னொரு பத்திரிகையை அனுப்பிக் கட்டாயம் வரச் சொல்லு. அப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்னு உன் அப்பா எழுதறாப்போலவே எழுதிடு. என்று சொல்லி இருக்கிறார். இவர் யோசிக்க, உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன். என்று அவர் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆகவே அப்படியே எழுதி அனுப்பிட்டார்.

ஆனால் கல்யாணத்துக்கு முதல்நாளான சனிக்கிழமையே போன அப்பா மறுநாள் காலை முஹூர்த்தத்துக்கும் போகலை. அன்று மாலை தான் போயிருக்கிறார். அதுக்குள்ளே இங்கே அத்தை வீட்டுக்காரருக்கும், என் மாமனாருக்கும் பேச்சு வார்த்தை மும்முரமாய் ஆகிவிட்டிருக்கிறது. அத்தையும் தன் அண்ணா பிள்ளைக்குப் பிடிக்கலை என்பதாலும் உறவு வேண்டாம் என்பதாலும் மறுத்திருக்கிறார். ஆனாலும் அவங்க இரண்டு பேரும் விடலை. விடாமல் பேசி எல்லாரையும் ஒத்துக்க வைக்கப் பார்த்திருக்காங்க. என் கணவருக்கோ காலம்பரவே வரேன்னு சொன்ன மனுஷன் சாயந்திரம் வரைக்கும் வரலையேனு ஒரே டென்ஷனா இருந்திருக்கு. அதுக்குள்ளே வேறு வழியில்லாமல் அத்தை சம்மதிக்க ராகு காலம் முடிஞ்சு பாக்கு வெற்றிலை மாத்தலாம்னு சொல்லி இருக்காங்க.

அப்போத் தான் போயிருக்கார் என்னோட அப்பா. கூடவே ஸ்வாமிமலையில் அவரின் சிநேகிதர் வீட்டு மனுஷர்கள். கையிலே பழம், பாக்கு, வெற்றிலை, பருப்புத் தேங்காய், திரட்டுப் பால் சகிதம், மாப்பிள்ளைக்கு வேஷ்டிகள் என ஏற்பாடாய்ப் போய்விட்டார். அப்பாவுக்குக் கும்பகோணம் வந்ததுமே தகவல் தெரிந்து விட்டது, இன்னொரு அத்தையின் மூலம். மாப்பிள்ளைக்கு நம்ம பெண்ணைத் தான் பிடிச்சிருக்கு என்பதும், அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப் படறார் என்பதும் கும்பகோணத்திலேயே இருந்த அத்தை சொல்லி இருக்காங்க. உடனேயே அப்பா அத்தையிடம் சொல்லிட்டு ஸ்வாமி மலைக்குப் போய் அவரோட சிநேகிதர்கள் வீட்டிலே சொல்லி, எல்லாம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறார். என்னதான் சீக்கிரம் பண்ணினாலும் அப்போல்லாம் ரெடிமேடாக எதையும் வச்சுக்க மாட்டாங்க இல்லையா? ஆகவே வீட்டிலே எல்லாத்தையும் பண்ணி எடுத்துண்டு வரதுக்குச் சாயந்திரம் ஆகி இருக்கு.

ஆனால் இந்த ஏற்பாடை என் கணவரும் அவரோட பெரியப்பாவும் சேர்ந்து செய்தாங்க என்பது எனக்கு ஒரு வருஷம் முன்னாடித் தான் தெரியும். அது வரைக்கும் என் மாமனார் வீட்டிலே சொன்னது:
ஒரே பெண்ணைத் தான் பார்ப்பேன்னு என் கணவர் சொல்லிட்டிருப்பாராம். நாலைந்து பெண்கள் பார்க்கமாட்டேன் பார்க்கும் முதல் பெண்ணைத் திருமணம் செய்துப்பேன், எப்படி இருந்தாலும், அவங்க வீட்டிலே என்ன செய்தாலும், செய்யாட்டியே கூட. என்று சொல்லுவாராம். அதனால்தான் உன்னை விடலைனு சொல்லுவாங்க. பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் பின்னணிக்கதை எனக்குத் தெரிய வந்தது. அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.

எங்கே போகிறோம்????

//இதை தனி பதிலாக போடுகிறேன். விருப்பம் இருந்தால் வெளி இடுங்கள் controversial ஆகத் தோன்றினால் தயவு செய்து moderate/delete செய்து விடுங்கள்.

நீங்கள் பெண் பார்க்கும் போது உங்களுக்கு எதுவும் எதிர்பார்ப்புகள் இல்லை, மாமாவிடம் தனியாக பேசவில்லை. உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்காமலே திடீரென கல்யாணம் நிச்சயம் ஆனது என்று கூறினீர்கள். பொதுவாகவே உங்கள் தலைமுறையும் அதற்கு முன்பும் அப்படி தான் இல்லையா? ஆனால் இப்பொழுதோ பெண் பார்க்கும் போதும் சரி, திருமணம் வரையும் சரி பேசிக் கொள்கிறார்கள். இவ்ளோ செய்தும் கல்யாணத்திற்கு பிறகு compatibility problems. இப்போதைய பெண் தரப்பில் இருந்து அதிக எதிர்பார்ப்புகள், புக்ககத்து காராளை மதிக்காமை, verbally even physically abusive என்று இருக்கிறதே.
அந்த அளவிற்கு எது இந்த தலைமுறையை மாற்றியது? அகமுடையான் கெட்ட பழக்கத்துடன் இருந்தால் கூட பரவா இல்லை ஆனால் தன் பிடியில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போல உள்ளதே? மன்னிக்கவும் நான் generalise செய்யவில்லை. ஆனால் இந்த மாற்றத்தை போன தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் இடையில் நன்கு தெரிகின்றது. போக போக கல்யாணம் என்ற institution என்னாகுமோ?

தவறாக இருந்தால் மன்னிக்கவும். மீண்டும் விருப்பம் இருந்தால் வெளி இடுங்கள் controversial ஆகத் தோன்றினால் தயவு செய்து moderate/delete செய்து விடுங்கள். //


மேலே காண்பது இனிய இளைய நண்பர் ஒருவரின் சந்தேகம். வெளிநாட்டு வாசிதான். என்றாலும் இவரின் இந்த சந்தேகத்தைப் போலவே உள்நாட்டில் இருந்தும் சில இளம் நண்பர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சிலருடைய கேள்விகளையும், அவங்களோட பிரச்னைகளையும் படிச்சால் மனம் வேதனையில் ஆழ்கிறது. இதற்கு என்ன காரணம் என்றும் கேட்கின்றனர். பொதுவாகப் பெண்ணை அடக்கி வைத்து வளர்த்தது போல் ஒரு மனப்பான்மை உருவாக்கப் பட்டுவிட்டது. உருவாக்கியதும் ஆண்களில் பெரும்பான்மையினரே. இது ஒரு விதத்தில் அவர்களுக்கு செளகரியம் என்று நினைக்கிறார்களோ என்னமோ! என்றாலும் இப்போதைய ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. ஒரு செய்தி என்ன சொல்கிறது என்றால்:

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கணவன் மனைவி ஜோடிகளில் ஒரு ஜோடியில் அந்தப் பெண்மணி தன் கணவனுடன் பார்களுக்குச் செல்வதாகவும், காக்டெயில் எனப்படும் மதுபானத்தையும் ருசிப்பதாகவும், இப்போதெல்லாம் நண்பர்களை வீட்டுக்கே வரவழைத்து காக்டெயிலைக் கலந்து கொடுக்கும் அளவுக்கு இதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாயும் சொல்லி இருக்கிறார். இதைச் சொல்லும்போது அவர் மிகவும் பெருமையுடனும் சந்தோஷமுடனும் இருந்திருக்கிறார். ஏதோ மகத்தான காரியத்தைச் சாதித்துவிட்ட பெருமையாம் அவருக்கு. இதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ஒருவரும் என்னிடம் கூறினார். அதோடு ஒரு பத்திரிகையிலும் இது குறித்து வருந்தி இன்னொரு பெண் எழுதி இருந்ததையும் படித்தேன். ஆண்கள் குடித்தாலே அது உடல் நலக்கேடு, பின்னால் பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும் என்னும்போது அந்தக் கருவைத் தாங்கும் பெண்ணுக்கு பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்பதை நாமே யோசிக்க வேண்டியது தான். ஆனால் இதெல்லாம் தான் சுதந்திரம், நாகரீகம் என்று ஆகி இருக்கையில் நான் இதைக் குறித்துச் சொல்லுவதே பலருக்கும் பிடிக்காது. உணர்ந்து திருந்தினால் தான் உண்டு.

இன்னொன்று இந்த மாதம் மங்கையர் மலர் மாதப் பத்திரிகையில் படித்தது. அதில் ஹைதராபாத்தில் ஒரு பேக்கரியில் விவாகரத்து கேக் மிகவும் பிரபலமாம்.அதிர்ச்சி அடைந்து படித்தபோது, பெண்கள் எந்த அளவுக்கு விகாரமான மனநிலை படைத்துவிட்டார்கள் எனப் புரிந்ததில் இருந்து வேதனை உச்சத்துக்குப் போய்விட்டது. முதன் முதலில் ஒரு பெண் விவாகரத்து ஆனதைக் கொண்டாட கேக் ஆர்டர் செய்து சிநேகிதர்களையும், சிநேகிதிகளையும் வரவழைத்து காக்டெயில் பார்ட்டியோடு(?) கொண்டாடி இருக்கிறார். அதன் பின்னர் இதற்கெனவே அவருக்குத் தனி ஆர்டர்கள் வருகின்றனவாம். எல்லாப் பெண்களும் சுற்றி நின்று, கேக்கின் தலையில் விவாகரத்து செய்த கணவனின் தலையை வெட்டிப் போட்டிருப்பதாய்க்கற்பனை செய்து சிவப்பு நிற பெர்ரி சாஸோ என்னமோ ஊற்றி வழிய விடுவது போல் அலங்கரிக்கச் சொல்கின்றனராம். இது தான் பெண்கள் விரும்பும் கேக் டிசைனாம். இந்தப் பெண்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எப்படி வளருவார்கள்??? ஒரு சந்தோஷமான, ஆரோக்கியமான, நாட்டுக்குப் பயனளிக்கக் கூடிய குழந்தைகளைப் பெற்று நல்லதொரு குடிமகனை உருவாக்க முடியுமா இவர்களால்???


எங்கே போகிறோம்?? புரியவில்லை. இப்போதைக்கு இருண்டே கிடக்கிறது. நம்பிக்கையின் கீற்றுக் கூடத் தெரியவில்லை. :(((((((((((((

Friday, April 01, 2011

கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி

பிள்ளை வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கும் விஷயம் தெரிந்து என் மாமாக்கள், பெரியப்பா, அண்ணாக்கள் எல்லாரும் வந்துவிட்டனர். வீடே ஒரே பரபரப்பு. ஒருபக்கம் வேண்டாம், விட்டுடலாம் என்ற கட்சி, இன்னொரு பக்கம் அதெல்லாம் வேண்டாம், நேரிலே போய்ப் பார்த்தால் சரியாகும் என்ற கட்சி. என்ன செய்யறதுனு அப்பாவுக்குப் புரியலை. ஏற்கெனவே என் கணவரோட பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி அந்தக் கல்யாணத்திற்குத் தான் அவர் புனாவிலிருந்தே வந்திருந்தார். அந்தக் கல்யாணத்திற்கு வரச் சொல்லி அந்தப் பெரியப்பாவும் பத்திரிகை அனுப்பி இருந்தார். ஆனால் போவதா, வேண்டாமானு அப்பாவுக்குப் புரியலை. அந்தக் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கையில் மீண்டும் ஒரு பத்திரிகை வந்தது. தப்பாய் அனுப்பிட்டாங்களோனு பார்த்தால் விலாசம் எல்லாம் சரியா இருந்தது. ஆனால் முன்னால் விலாசம் எழுதின கையெழுத்து இல்லை. அதோட இந்தக் கவர் நன்கு ஒட்டி இருந்தது. கல்யாணப்பத்திரிகைக் கவரை ஒட்ட மாட்டாங்களே! அதை நான் தான் வாங்கினேன். ஏதோ விஷயம் இருக்குனு உள் மனதுக்குப் புரிய அப்பா ஸ்கூலில் இருந்து வரும் வரைக்கும் காத்திருந்தோம். எங்க வீட்டில் ஒரு பழக்கம். கடிதம் யாருக்கு வந்ததோ அவங்க தான் பிரிச்சுப் படிச்சுட்டு அப்புறமா மத்தவங்களோட பகிர்ந்துக்கறது எல்லாம். என் சிநேகிதிகளின் கடிதம் என்றாலும் கூட அப்பாவோ, அம்மாவோ பிரிக்க மாட்டாங்க. நான் வர வரைக்கும் காத்திருக்கும்.

அப்பா ஸ்கூலில் இருந்து வந்ததும், கடிதம் வந்திருப்பது அறிந்து பிரித்துப் பார்த்தார். அதிலே ஒரு இணைப்புக் கடிதத்தில் கல்யாணத்துக்குக் கட்டாயமாய் வருமாறும், வந்து பேசிக்கொண்டு நிச்சயத்தையும் செய்து கொண்டு போகலாம் என்றும் எழுதி இருந்தது. அதுவரையிலும் என் மாமனார் பேரில் வந்த கடிதங்களில் எல்லாம் எழுதப் பட்ட எழுத்து இல்லை என்பது அப்பாவுக்கும் புரிந்தது. ஒருவேளை மாப்பிள்ளையே எழுதி இருப்பாரோ? என்றால் அவங்க அப்பா, அம்மா சொல்லாமல் நாம் எப்படிப் போறது? மறுபடி குழப்பம். உள்ளூரிலேயே இருந்த பாட்டி, மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா போன்றோருடன் மீண்டும் வட்டமேஜை மாநாடு நடந்தது. பெருவாரியான விருப்பம் போகும்படியே சொல்ல அப்பாவும் சரினு சம்மதிச்சுப் போகறதுக்கு ஆயத்தம் செய்தார்.

கல்யாணத்துக்கு முதல்நாளே போய்விடுவதாயும், அன்றே பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு, எல்லாமும் கூடி வந்தால் கல்யாணத்தன்று சம்பிரதாயத்துக்குப் பாக்கு,வெற்றிலை மாற்றிக்கொண்டு பின்னர் ஒரு நல்லநாள் பார்த்து லக்னப்பத்திரிகை வாசிக்க ஏற்பாடு செய்யலாம் என்று பெரியப்பா கூற அப்பாவும் அரை மனசாக் கிளம்பினார். ஏனெனில் லக்னப்பத்திரிகை வாசிக்கும் விழா நிகழ்வைப்பெரிய அளவில் செய்ய அப்பா திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இப்போ இந்தப் பேச்சு வார்த்தை எப்படி முடியும் என்று கூற முடியாத நிலையில் எல்லாருமே போகவும் முடியாது. எல்லாரும் போயிட்டு அங்கே ஒண்ணும் சரிப்பட்டு வரலைனா அவமானமும், வருத்தமும் மிஞ்சும். அப்பா மட்டும் போயிட்டுப் பாக்கு, வெத்திலை மாத்திண்டு வந்ததும், திரும்ப லக்னப்பத்திரிகை விழாவுக்குப் பிள்ளை வீட்டில் சம்மதிக்கணும். அது அவங்க வீட்டில் அவங்க பொறுப்பில் செய்யவேண்டியது. இதான் அப்பாவுக்கு யோசனை. மேலும் தஞ்சைப் பக்கம் பாக்கு,வெற்றிலை மாற்றுவதோடு சரினும், ரொம்பப் பெரிசா எல்லாம் பண்ணறது இல்லை என்றும் என்னோட மாமனார், மாமியார் சொல்லி இருந்தாங்க. ஆண்கள் மட்டுமே கூடிப் பேசிப் பாக்கு,வெற்றிலை மாத்திப்பாங்க என்றும், பெண்கள் அந்த விசேஷத்துக்கு அதிகமாய்க் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் சொல்லி இருந்தாங்க.

அப்பா கல்யாணத்துக்கு முதல் நாளே காலையிலே கிளம்பிட்டார். சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பின் போது சத்திரத்துக்குப் போயிடுவேன்னு சொல்லி இருந்தார். ஆகவே அன்னிக்குப் பேசி முடிச்சுண்டு, பாக்கு,வெற்றிலை மாற்றவும், கல்யாண முஹூத்தத்துக்கும் நாள் குறித்துக்கொண்டு வருவதாயும் மாப்பிள்ளையின் பெரியப்பா பெண்ணின் கல்யாணம் முடியும் வரை தங்கப் போறதில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆகவே நாங்க அப்பாவை மறுநாளே மதியம் சாப்பாட்டுக்கே எதிர்பார்த்தோம். ஆனால் அப்பா அன்று வரவில்லை. என்னனு புரியலையே என்று யோசித்தோம். வந்தால் தான் தெரியும் விஷயம்,. இப்போ மாதிரி தொலைபேசியா? செல்பேசியா? ஆகவே கட்டாயமாய்க் காத்திருக்கணும். மறுநாள் காலையில் தான் வந்தார். வந்தவர் உடனே எதுவும் பேசவில்லை. வந்து, எப்போதும் போல் கொண்டு போன பையை ஸ்வாமி அலமாரிக்குக் கீழே வைத்துவிட்டுக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மெதுவாய்ச் சொன்னார். இன்னியிலே இருந்து பதினைந்தாம் நாள் கல்யாணம். நிச்சயம் பண்ணியாச்சு என்று.

அம்மாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே பெண்ணின் நிச்சயத்தின் போது தான் உடனிருக்கவில்லை என்ற வருத்தமும். என்றாலும் கேட்டாள்: என்னிக்கு லக்னப் பத்திரிகை வாசிக்கிறாங்களாம்?

அதெல்லாம் நேத்தே வாசிச்சாச்சு. நேத்துச் சாயங்காலம் முடிச்சுட்டாங்க. மாப்பிள்ளைக்கு லீவு கிடையாதாம். கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்திலே திரும்பப் புனா போகணுமாம், அவங்க பெரிய பொண்ணு கூட பிலாயிலே இருந்து வந்திருக்காங்க. அவங்களும் சீக்கிரம் திரும்பிடுவாங்களாம். எங்க பெரிய பொண்ணு இருக்கிறச்சேயே கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிட்டாங்க.

ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க?" அம்மா.

பின்னே? என்னை என்ன பண்ணச் சொல்றே? அவங்க இது போதும்னு சொல்லிட்டாங்க. சரி, சரி ஆகட்டும், இன்னிக்கு நல்லநாள்னா ஆகவேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம். பக்ஷணம் எல்லாம் நிறைய வைக்கணும், பெரிய குடும்பம். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பணும், முன்னாடி நீ மன்னியைக் கூப்பிட்டு என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? தோழிப்பொங்கல் என்னிக்குனு எல்லாம் முடிவு பண்ணிக்கோ.

கல்யாண வேலை ஆரம்பம் ஆனது. அது சரி, திடீர்னு எப்படிக் கல்யாணத்துக்கு ஒத்துண்டாங்க? இதன் பின்னணியில் நடந்தவைக்குக் காத்திருங்கள். இந்தியா- இலங்கை மாட்ச் முடியட்டும். சொல்றேன். வேடிக்கை என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும். அதுவரைக்கும் ஆங்காங்கே ஒருத்தரொருத்தர் சொன்னதும், கேட்டதும் தான். மாட்சி முடிஞ்சதும், எல்லாமும் எழுதறேன். நாளைக்கு மாட்சுக்கு இன்னிலேருந்தே தயாராயிட்டு இருக்காங்க எல்லாரும். சும்மாவே சனி, ஞாயிறுன்னா ஈ ஓடும் வலை உலகிலே. இப்போக் கேட்கவே வேண்டாம். யாருமே வரமாட்டாங்க!