எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 30, 2018

கொஞ்சம் நிம்மதி!

நல்ல செய்தி! கணினிப் பிரச்னையைச் சரி பண்ணியாச்சு. டெல் கம்பெனியுடைய மெகானிக்கையே கூப்பிட்டேன். அவரும் வீட்டிலே வந்து தான் செய்வேன், பரவாயில்லையா என்று கேட்டார். நமக்கு அதானே வேணும்! சரினு சொல்லி நேத்திக்கு வந்து செய்து கொடுத்திருக்கார். ஓ.எஸ். மாத்த வேண்டாம், பிரச்னை அதில் இல்லைனு சொல்லிட்டு இணையம் இணைப்புக் கொடுத்த "நெட் வொர்க் செட்டிங்க்ஸ்" பொதுவான செட்டிங்க்ஸ் எல்லாவற்றையும் பார்த்துப் பலதை நீக்கி சிலதைச் சேர்த்துப் பின்னர் மீண்டும் இணைய இணைப்புக் கொடுத்து அது சரியா இருக்கானும்  சோதிச்சுப் பார்த்து, கணினியே எல்லாத் தேர்வுகளிலும் பாஸ்னு சொன்னதும் என்னை இயக்கிப் பார்க்கச் சொன்னார். சரியாக இருந்தது. அவரும் இயக்கிக்காட்டினார். ஒரு வாரம் பார்த்து விட்டுப் பின்னர் மீண்டும் பிரச்னை வந்தால் சொல்லும்படியும் அப்போது உள்ளேயும் பிரிச்சுப் பார்த்துடலாம்னும் சொல்லி இருக்கார். இன்னைக்குக் கணினி வேலை முழுவதும் இந்தப் புதிய கணினியில் தான். பழசையும் சரி பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கார்.

ஆனால் இந்த இ கலப்பை தான் மறுபடி மறுபடி தகராறு. பார்க்கலாம். ஒரு வாரம். சரியா வரலைனா மருத்துவர் அடுத்து வரச்சே என்னனு கேட்டுக்கணும். இணையம் தானே பிரச்னை பண்ணிட்டு இருந்தது. அது சரியாகி விட்டது! கொஞ்சம் நிம்மதி!   முன்னால் வந்த மருத்துவர் ஓ.எஸ். மாத்தணும்னு சொன்னதோடு இல்லாமல் இணைய இணைப்புக்கு பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். இரண்டும் சேர்ந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்  அதுவும் எனக்காக என்றார். வின்டோஸ் 7 போட்டுக் கொடுக்க சாதாரணமாக ஆயிரம் வரை வாங்குவாங்களாம். எனக்காகக் குறைச்சுண்டேன் என்றார்.  ஆனால் இப்போது 300 ரூ சர்வீஸ் சார்ஜ் கொடுத்ததிலேயே சரியாகி இருக்கு. பார்ப்போம். ஓ.எஸ். அவர் போடுவதாகச் சொன்னது வின்டோஸ் 7 பிரிமியம்! அது பைரேடட் வெர்ஷன் வேறே! முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம்! :)))) 

Friday, May 25, 2018

என்னென்னமோ நடக்குதுங்க!

நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா? சொல்றேன் கேளுங்க! கிளம்பறச்சே எங்கிட்டே என்னென்ன வேணும்னு கேட்டுப்பார். நானும் அப்பாவியாய்ச் சொல்வேன்! எதெது வேண்டாம், இருக்குனும் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லி இருப்பேன். சரினு அவரும் மார்க்கெட்டுக்குப் போயிட்டுக் காய்கறி எல்லாம் வாங்கி வருவார். வந்ததும் காய்களைப் பிரித்துக் கொட்டினால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எது வேண்டாம்னு அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னேனோ அது கட்டாயமாய் இருக்கும்! அது மட்டுமா? பச்சை மிளகாயில் மூன்று வகை! கேட்டால் ஒண்ணு நாட்டு மிளகாயாம். அதனால் வாங்கினாராம்! அத்தோடு விட்டாரா! இல்லையே! இன்னொரு இடத்தில் அதே மிளகாய் விலை குறைச்சுக் கொடுத்தாங்களாம்! விலை குறைச்சலாய் இருந்தால் வாங்கிப் போட வேண்டியது தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிட்டார். போனால் போறதுனு பார்த்தால் நீளம் நீளமாய் வெள்ளரிக்காய் போலச் சில, பல பச்சை மிளகாய்கள் கண்ணில் படும். இது என்னனு கேட்டால்  ஹெஹெஹெஹெஹெ னு சிரிச்சுட்டே இதை முதலில் வாங்கிட்டேனா! அப்புறமாப் பார்த்தால் மார்க்கெட் உள்ளே அந்த மிளகாய் இருந்தது! அதான் என்பார். என்னத்தைச் செய்யறது! அரைச்சுப் பூசிக் கொண்டு குளிக்கவா முடியும்?

காரட் இருக்குனு சொல்லி இருப்பேன். இவர் அரைக்கிலோ காரட் வாங்கி இருப்பார். நான் தான் வேண்டாம்னு சொன்னேனேனு கேட்டால் எனக்குச் சந்தேகமா இருந்தது! வேணும்னு சொன்னியா, வேண்டாம்னு சொன்னியானு தெரியலை! சரி எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கிட்டேன் என்பார். இதை என்ன செய்யறதுன்னா சப்பாத்திக் கூட்டில் போடலாம், சாலட் பண்ணலாம் என அடுக்குவார். சப்பாத்திக் கூட்டில் எங்க ரெண்டு பேருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு காரட் போடலாம். அதுவே மற்றக் காய்களோடு சேர்ந்து கூட்டு நிறைய ஆயிடும். ராத்திரி வேளைக்கு எவ்வளவு சாப்பிட முடியும்? ஒரு உ.கி ஒரு காரட், ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் ஆகியவற்றுக்கே ஒரு பெரிய கிண்ணம் நிறையக் கூட்டு வரும். ரங்க்ஸ் போட்டுக்கறது அரைக் கரண்டி தான். எனக்கே எல்லாத்தையும் போடாதேனு வேறே சொல்லுவார்! சாலட் பண்ணினாலும் இரண்டு காரட்டே அதிகம். ஏன்னா அவருக்கு நறுக்கணும். எனக்கோ துருவணும். துருவினால் காரட் கூட ஆகும். ஆனால் அவருக்குப் பிடிக்காது! ஆகவே நறுக்குவேன். இரண்டே அதிகம்! :))))

அப்புறமா அந்தக் கூட்டைக் குளிர்சாதனப் பெட்டியில் எல்லாம் வைச்சுச் சாப்பிடுவதில்லை. ஆகவே மாவு இருந்தால் இரண்டு ரொட்டியைப் பண்ணி அந்தக் கூட்டோடு குடியிருப்பின் பாதுகாவலர் இருந்தால் கூப்பிட்டுக் கொடுக்கலாம். அவ்வளவு தான். இதே தான் காய்கள் விஷயத்திலும்! வெள்ளைக் கத்திரிக்காய் தனியா வங்கி இருந்தால் வயலெட் கத்திரிக்காய் வேறே இருக்கும். குண்டுக் கத்திரி இருந்தால் நீளக் கத்திரி வேறே இருக்கும். இது ஒரு நாளைக்கு, அது ஒரு நாளைக்குனு வைச்சுக்கோ! என்னால் சும்மாச் சும்மா மார்க்கெட் போக முடியுமா என்பார். வெள்ளைக் கத்திரிக்காயே இரண்டு நாட்களுக்கு வரும்!  என்றாலும் நானும் கத்திரிக்காய் வாரம் எல்லாம் கொண்டாடிப் பார்ப்பேன். ஒரு நாளைக்குக் கத்திரிக்காய் வதக்கல், சப்பாத்திக்குத் தொட்டுக்க ஸ்டஃப் கத்திரிக்காய், கத்திரிக்காய்க் கூட்டு+மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் பொரித்த கூட்டு,கத்திரிக்காய்த் துவையல், பச்சடி, புளி கொத்சு  சின்னக் கத்திரிக்காய் எனில் ரசவாங்கினு பண்ணிட்டு உப்புமா, பொங்கலுக்கு கொத்சுவும் பண்ணுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்க பைங்கன் பர்த்தாவும் செய்துடுவேன்.  அப்படியும்   தீரலைனா  என்ன செய்யறது? இன்னைக்குக்கூடச் சப்பாத்திக்குக் கத்திரிக்காய் ஸ்டஃப் தான். குஜராத்தி பாணி!

அதோடு இதெல்லாம் பண்ணும்போது சப்பாத்திக்குனு வாங்கற காய்கள் மிஞ்சிப் போகும்! முள்ளங்கி ரொட்டிக்குத் தொட்டுக்க சப்ஜி பண்ண வாங்கி இருப்பார். நான் கத்திரிக்காயிலே மூழ்கி முத்தெடுக்கையில் முள்ளங்கி எங்கே நினைவுக்கு வரது? அதே மாதிரி அதிசயமாக் குடை மிளகாய் வாங்கி இருப்பார். குடை மிளகாய்க் கறி செய்யலாம் என்றால் ம்ஹூம், வேண்டாம் எனக்குப் பிடிக்காது தான்!   வர வரச் சொப்பு வைச்சுத் தான் சமைக்க வேண்டி இருக்கு! இது மட்டுமில்லை! இட்லி, தோசை மாவும் அப்படியே! இன்னிக்கு அரைச்சால் நாளையோட தீர்க்கணும்னு சொல்லுவார்! குறைந்த பட்சம் இரண்டு ஆழாக்காவது அரிசி போட்டால் தான் கிரைண்டரில் அரைக்கலாம். சரினு இவர் சொல்லிட்டே இருக்காரேனு போன முறை மிக்சியில் அரைச்சேன். தோசை சாப்பிடவே முடியலை! அம்பேரிக்காவிலே கொடுக்கிற தோசை மாதிரி தூள் தூளாய் உதிருது.   இட்லி நம்ம ஏடிஎம்  செய்யற இட்லியை விட மோசம்! ஏடிஎம் பார்த்தால் அதை வைச்சே என்னை அடிச்சிருப்பாங்க! :)

வர வர என்ன சமைப்பது, எப்படிச் சமைப்பதுனு எதுவும் புரியலை!  நாளைக்கு மார்க்கெட்டுக்குப் போகணும். என்ன செய்யப் போறாரோ தெரியலை! :)))) அடி வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்! :)))))) 

இதெல்லாம் போக இந்தக் கணினி படுத்தும் பாடு! சொல்ல முடியலை! பொதுவாச் சாயந்திரம் ஆறு மணிக்கு அப்புறமாக் கணினியைத் திறக்கறதில்லை. அதனாலோ என்னமோ தெரியலை இன்னிக்குத் திறந்து உட்கார்ந்து மெயிலைத் திறக்கும்போது  "your connection is not private! Attackers are using your account to hack your mail password, bank account details, credit card details" அப்படினு முழ நீளம் ஒரு செய்தி! மறுபடி ரீலோட் செய்யுனு சொன்னதால் செய்தால் சுத்தம்!  இணைய இணைப்பே இல்லைனு சத்தியம் பண்ணுது! சரினு ப்ரவுசரை மூடிட்டு  மறுபடி க்ரோமைத் திறந்து மெயிலைத் திறந்தால் ஏற்கெனவே பாஸ்வேர்ட் போட்டிருந்த மெயில் இன்பாக்ஸ் வந்தது. சரினு இன்னொரு ஐடியையும் சோதிச்சேன். அங்கேயும் முதல்லே இப்படி வந்தது. அப்புறமா க்ரோமை மூடிட்டு மறுபடி திறந்து மெயில் க்ளிக் செய்தால் அந்த ஐடியோட இன் பாக்ஸ் வருது! இது என்னங்க மாஜிக் வேலை!

அதோட இல்லாமல் நாங்க எந்தக் கணக்கும் கணினி மூலமாச் செய்யறதில்லை என்பதோடு க்ரெடிட் கார்டெல்லாம் வைச்சுக்கவும் இல்லை. என்னவோ போங்க! வர வர இந்த டெக்னாலஜி படுத்தும் பாடு! :)))) அந்தச் செய்தியை இங்கே காப்பி, பேஸ்ட் செய்து போடலாம்னு பார்த்தால் ம்ஹூம், காப்பி, பேஸ்டே பண்ண முடியலை! :( 

Wednesday, May 23, 2018

குறை ஒன்றுமில்லை கோவிந்தா!

இன்னிக்கு என்னோட பிறந்த நாளைத் தொண்டர்களும், குண்டர்களும் அமோகமாக் கொண்டாடுவதை முகநூல் வழியாகவும், வாட்சப், மற்றும் இணைய வழிச் செய்திகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி! பிறந்த நாள் என்பதே கொண்டாடி அறியாத என் போன்றோர் குழந்தைகளாலும் மற்றும் இணையத்தின் வாயிலாகவும் பிறந்த நாள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் எனக்கு மூணு பிறந்த நாள். இந்த மாசம் என்னோட கல்யாண நாளையும் பிறந்த நாள்னு நினைச்சுட்டுப் பலர் அன்னிக்கே கொண்டாடிட்டாங்க! அதைச் சேர்த்தால் நாலு பிறந்த நாள். நால் பெரும் விழா எடுக்க வேண்டியது தான்! :))))

அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் பிறந்த நாள் பரிசா எது கொடுத்தாலும் வாங்கிக்கறேன். முத்து, பவளம், வைரம், வைடூரியம், கோமேதகம், பச்சை, சிவப்பு என்னும் கெம்பு, நீலம், புஷ்பராகம் என எதானாலும் ஓகே! அதே போல் வஸ்த்ரகலா எடுத்துக் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஆரெம்கேவியின் புதிய திருமணப்பட்டுத் தான் எடுத்துத் தருவேனு வாங்கித் தரவங்க கிட்டேயும் வாங்கிப்பேன். எதானாலும் பரவாயில்லைங்க! தங்கக்காசு, தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், காசுகள் (இது வரைக்கும் வெள்ளியைச் சேர்த்ததில்லை; அதை மட்டும் ஏன் விடணும்) எதானாலும் உங்க சக்திக்கு ஏற்றாற்போல் கொடுத்திடுங்க.

எனக்குக் குறை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் இந்தக் கணினி படுத்தும் பாட்டில் பதிவுகளே போட முடியறதில்லை! எல்லாம் இந்தப் புதுக்கணினி படுத்தற பாடு தான்! ஏற்கெனவே போன வருஷம் அம்பேரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் சாமான்களை ட்ராலியில் வைச்சுத் தள்ளும்போது back pack பாக் பாக்கில் வைச்சிருந்த மடிக்கணினி அப்படியே கீழே விழுந்துடுச்சு. வெளிப்படையாக் காயம் ஒண்ணும் இல்லைனாலும் உள்ளே வேறே ஏதானும் பிரச்னையா என்னனு தெரியலை! எப்போப் பார்த்தாலும் இணைய இணைப்பில் பிரச்னை! வந்து வந்து போயிட்டு இருக்கும். சரி போகட்டும்னு எப்படியோ அதோடயே சமாளிச்சுட்டு வந்தால் திடீர்னு ஒரு நாள்  அதோட மவுஸ் வேலை செய்யாமல் போய் அப்புறமாப் பழைய லாப்டாப்பின் ரிசீவரையும் மவுஸையும் வைச்சுப் பயன்படுத்தினேன். இப்போ ஒரு வாரமா ஒரே தொந்திரவு!இணையமே சரியா வரலை!  திறந்து உடனே வந்தால் உள்ளே போனதும் இணைப்பு இல்லைனு எரர் காட்டும். இல்லைனா பாதி தட்டச்சும்போது, பாதிக் கருத்துச் சொல்லும்போது எனப் படுத்தல் தாங்கலை!

அதோட இல்லாமல் இங்கே என்னமோ தினம் தினம் மழை கொட்டறாப்போல மேகங்கள் உருண்டு திரண்டு வந்து பயமுறுத்திப் பெரிய பெரிய இடிகளைப் போட வைக்கும். காற்று வேறே! லேசாக் காத்தடிச்சாலே இங்கே மின்சாரத்தை நிறுத்துவாங்க! இதுக்குக் கேட்கணுமா! மின்சாரம் வேறே 2,3 மணி நேரங்கள் இருக்காது. எல்லாம் கிடக்க இ கலப்பைப் பிரச்னை. ஒரு வழியா அதைப் புது மடிக்கணினியில் இன்ஸ்டால் பண்ணினா இந்த "ண்" அப்புறமா "ணா"னு வராது. ணாஆ என்று வரும். இல்லைனா ணா௶ இப்படி வரும். இருக்கிறேன் என அடிக்க முயன்றால் இருக்கிறேண் என்றோ அல்லது இருக்கிறே௶ஃப் என்றோ வரும்.   சரினு சுரதா மூலம் தட்டச்சிச் சில மாற்றங்களை மட்டும் இ கலப்பையைத் திறந்து சரி செய்து! ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா! இப்படி ஒரு மாசமாப் போயிட்டு இருக்கையில் திடீரென இன்று காலையில் இருந்து மடிக்கணினி புதுசில் இணைய இணைப்பே வரலை! ஏன்னு தெரியலை.

ஆனால் அதே சமயம் மொபைலில் வாட்சப், முகநூல் எல்லாம் திறக்குது. ஐ பாடிலும் திறக்குது. கணினி மருத்துவரிடம் சொன்னால் சிக்னல் சரியா வந்திருக்காதுனு சொன்னார். சரினு மோடம் இருக்கும் அறைக்கேக் கணினியை எடுத்துப் போய்ப் பார்த்து சோதனை செய்தாச்சு! ம்ஹூம், சுத்தம்! அசைந்தே கொடுக்கலை. இணைப்புக் கொடுப்பவர்களிடம் சொன்னால் உங்க கணினியில் தான் பிரச்னை! எல்லோருக்கும் நல்லா வருது என்கிறார்கள். அதுவும் உண்மை தானே! மொபைலில் நல்லாத் தானே வருது! சரினு இப்போப் பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுச் சோதிச்சுப் பார்த்தால் அதிலே இணைய இணைப்பு ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்று வருது! வேகமாயும் இருக்கு! இது என்ன குழப்பம்னு புரியலை! அதோடு அதிலே இ கலப்பையும் நல்லா இருப்பதாலே தட்டச்சுவதும் நேரடியாகத் தட்டச்சலாம்!

இந்தப் பெரிய குறையைத் தவிர வேறே குறை ஒன்றுமில்லை கோவிந்தா! நல்லபடியாக எல்லாம் நடக்கணும். உலக க்ஷேமத்துக்காகப் பிரார்த்தனைகள். நானே சமைச்சுக்கறேனே எனச் சில, பல சமயங்கள் நினைச்சாலும் அந்த அளவுக்கான உடல், மனம் தெம்பை இறைவன் கொடுத்திருக்கானே என அவனுக்கு நன்றியும் செலுத்துகிறேன்.

குறை ஒன்றுமில்லை கோவிந்தா! 

Thursday, May 17, 2018

எச்சரிக்கை! முப்பெரும் விழா விரைவில்!

என்னடா காணோமேனு நினைச்சீங்களா? எங்கேயும் போகலை! இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (?) வைத்தேன். சில, பல புத்தகங்களைப் பார்க்கையில் அதில் உட்கார்ந்து விட்டேன். பயப்படாதீங்க! நாவலோ, பயணக்கட்டுரைகளோ, ஆன்மிகப் புத்தகங்களோ இல்லை. எல்லாம் சமையல் புத்தகங்கள். அதிலே ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சதிலே இணையத்துக்கு வந்தால் முகநூலை மட்டும் ஒரு பார்வை/ஒரு பார்வைன்னா ஒரே பார்வை தான் பார்த்துட்டுப் போயிடுவேன்.அதிலே இருந்து ஏதானும் பார்த்துச் சமைச்சுட்டு உங்களுக்கும் காட்டுவேன்னு நினைச்சுப் பயப்படாதீங்க! இப்போதைக்கு உங்களை எல்லாம் பயமுறுத்தறதா இல்லை.  எது படிச்சாலும் அதிலே என் பாணியில் ஒரு சில மாற்றங்கள் செய்துடுவேன்.:)

ஹிஹிஹிஹி, எங்க பொண்ணு அன்னையர் தினத்துக்குத் தாமதமா வாழ்த்துத் தெரிவிச்சதைப் பார்த்துட்டு எல்லோரும் இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்னு தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. நான் இன்னும் பிறக்கவே இல்லைங்க!      இன்னிக்கு எல்லோரும் எனக்குப் பிறந்த நாள்னு நினைச்சு வாழ்த்துத் தெரிவிச்சிருக்காங்களா! ஹெஹெஹெஹெஹெ இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை, இல்லைனு பலதரம் சொல்லிட்டேன். ஆனாலும் தம்பிங்கள் எல்லாம் இத்தனை உஷாரா நம்ம பிறந்த நாளைக் கொண்டாடுவது பார்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!  ஆனால் வசூலைத் தான்காணோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லோரும் ஒழுங்கா அனுப்பி வைங்கப்பா! சீக்கிரத்தில் முப்பெரும் விழா அரம்பிக்கும்!

இன்னிக்கு நம்ம ரங்குவைப் பார்க்கப் போனோம். பெரிய ரங்குவைப் பார்த்து சுமார் 4 மாசம் ஆகி விட்டதே! ஜனவரியில் போனது தான்! அப்புறமாச் சின்ன ரங்கு இங்கே வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போனார். ஆனாலும் பெரிய ரங்குவைப் பார்க்கணுமே! கிளம்பும்போதே நாலு மணி ஆகிவிட்டதே! ஆகவே மூத்த குடிமக்கள் தரிசன நேரம் வந்துடுமேனு நினைச்சுட்டேப் போனேன். அதே மாதிரி ஆயிடுச்சு! என்றாலும் அந்த வரிசையில் முன்னால் சுமார் ஐம்பது பேர்தான் நின்னுட்டு இருந்ததால் அங்கேயே நின்னோம். நாலே காலுக்கெல்லாம் வரிசை நகர ஆரம்பிச்சது. உள்ளே போகும் இடத்தில் இடது பக்கமாக இலவச சேவையில் வருபவர்களும் வலது பக்கமா ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கினவங்களும் நுழையும் இடத்தில் வந்து கலந்ததில் கொஞ்சம் சலசலப்பு வழக்கம் போல். முன்னால் அவசரமாப் போக விரும்பியவர்களை விட்டுட்டோம். மெதுவா உள்ளே போறச்சேயே நம்பெருமாளைப் பார்த்துண்டாச்சு. எப்போவும் போல் புன்சிரிப்புடன் வரவேற்றார். பட்டாசாரியார்கள் அதிகம் விரட்டவில்லை. பெரிய ரங்குவின் முகதரிசனம், பாத தரிசனம் நல்லாக் கிடைச்சது. முடிச்சுட்டு வெளியே வந்து தீர்த்தம் வாங்கிக் கொண்டு துளசி கொடுப்பவரைக் காணோம். ஆகவே வெளியே வந்தோம்.

எப்போவும் போல் தொண்டைமான் மேட்டில் ஏறணும்னு நினைச்சுப் போனால் அந்த வழியை மூடிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பக்கத்தில் விஷ்வக்சேனர் சந்நிதிக்கு அருகே குறுகலான படிக்கட்டுகள். ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையே இரண்டு அடி உயரம். மொத்தம் மூன்றே படிக்கட்டுகள். ஆனால் ஒவ்வொன்றும் ஏற முடியவில்லை. கடைசிப் படிக்கட்டில் இருந்து மேலே தரையில் கால் வைக்க நம்ம ரங்க்ஸே திணறிட்டார். எப்படியோ ஏறிட்டு என்னையும் ஏத்தி விட்டார். இது என்ன அநியாயம், கோயிலுக்கு வயசானவங்க எத்தனை பேர் வருவாங்கனு நினச்சோம். பேசாமல் வந்த வழியிலேயே போகச் சொல்லலாம். முன்னால் எல்லாம் அப்படித் தான் போயிருக்கோம். அப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி! இப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி மாத்தறாங்க. முன்னால் எல்லாம் சீட்டு வாங்குவதற்கே கிளி மண்டபத்தில் வாங்கினால் போதும். சீக்கிரம் உள்ளே போயிடலாம். இப்போல்லாம் கொடி மரம் அருகே சீட்டு வாங்க நிக்கணும்.
அப்புறமா அங்கிருந்து பாட்டரி காரில் தாயார் சந்நிதிக்குப் போய் அங்கே சீட்டு வாங்கி தரிசனம் செய்தோம். பெருமாளை தரிசிக்கக் கூட்டம் இருந்ததால் 250 ரூ சீட்டில் தான் போகணும்னு நினைச்சது. ஆனால் அப்படி இல்லாமல் பெருமாள் மூத்த குடிமக்களுக்கான வரிசையில் இலவச சேவை செய்துட்டுப் போனு சொல்லிட்டார். ஆனால் தாயார் இன்னிக்கு 50 ரூ கட்டிப் பார்க்கும்படி செய்துட்டா! :) என்றாலும் அவள் மேனியில் அலங்கரித்த மல்லிகைப் பூப் பிரசாதம் கிடைத்தது. மஞ்சள், சடாரி சாதித்ததும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயில் வடக்கு வாசல் வழியே வெளியே வந்து குடும்ப ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். 

Sunday, May 13, 2018

அன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்!

 இன்று அகில உலக அன்னையர் தினம் என கூகிள் சொல்கிறது.  எங்கு பார்த்தாலும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்புச் செய்திகள்.  எல்லா தினங்களையும் போலவே இன்றைய தினமும் இப்படியான செய்திகளில் ஆரம்பித்து முடிந்து நாளை மற்றொரு நாளாய்ப் பிறந்துவிடும்.  பின்னர் அடுத்த அன்னையர் தினத்தில் தான் இந்த தினத்தை நினைப்போம். இல்லையா? எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை.  ஆனால் தாய் என்பதை மறக்க இயலுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்புத் தான். அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ?  தெரியலை!  போகட்டும்.  பிரசவம் அவங்க சொந்த விஷயம் என்பதால் நாம் அவங்க விருப்பத்திலே தலையிட முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு?  அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே!  இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. ஏனெனில் சுற்றுச் சூழல் மாசு என்பது இயற்கையில் மட்டுமில்லாமல் மனித மனங்களில் கூட மாசு அடைந்திருக்கிறது.  பெண்கள் எங்கே பார்த்தாலும் தவறான உறவுகளில் ஈடுபடுதல், திருமணம் ஆனாலும் வேறு ஆண்களின் வசப்படுதல், பெண்களைத் துன்புறுத்தி இவற்றில் இன்பம் காணும் ஆண்கள், கட்டாயப்படுத்தப்படும் இளம் சிறுமிகள், உயிர் இழப்புகள், பலரால் பாலியல் உறவில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என தினசரிகளில் தினம் ஒன்றாகச் செய்திகள் வருகின்றன.  இதற்கெல்லாம் என்ன காரணம்?

அடிப்படைக் கலாசாரமே விரிசல் கண்டு அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது தான்.  நேற்றைய தினசரியில் ஒரு செய்தி படித்தேன்.  ஒரு எஃப்.எம். ரேடியோவின் ரேடியோ ஜாக்கி ஒருவர்.  35 இல் இருந்து 40 வயதுக்குள்ளாக.  திருமணம் ஆகிக் குழந்தையும் பெற்றவர்.  இவர் ரேடியோவில் பேசும்போது இவர் குரலில் தெரிந்த கவர்ச்சியான இனிமையில் மயங்கிய ஒரு சிறுமி (16 வயதுக்கு உட்பட்டவள்) பள்ளி மாணவி, தொடர்ந்து இவரிடம் பேசி வந்திருக்கிறாள்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெண் பின்னர் திடீரென ஒரு நாள் அந்த அலுவலகத்துக்கே வந்துவிட்டாள்.  வந்தவள் அந்த ரேடியோ ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறாள்.  அந்தப் பெண்ணோ 16 வயதுக்கு உட்பட்டவள்.  அதோடு ரேடியோ ஜாக்கியோ திருமணம் ஆனவர்.  அவர் தொழிலை அவர் செய்திருக்கிறார்.  நிலைமை விபரீதம் ஆகத் தன் மனைவியையும், குழந்தையையும் வீட்டிலிருந்து வரவழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டி தான் திருமணம் ஆனவன் என்றும் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பெண் அதற்கும் அசையாமல் போகவே அந்த அலுவலகத்தினர் மனநல மருத்துவர் ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் பேசியதில் வீட்டில் தாய் இல்லாமல் வளர்ந்த அந்தப் பெண்ணுக்குத் தந்தையின் போக்குப் பிடிக்காமல் இப்படி ஆறுதல் தேடிக் கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது.  பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுக்குப் புரிய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.  இதனால் ரேடியோ ஜாக்கியின் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை என்றாலும் அடிப்படை சரியில்லை என்பது தெரிகிறதல்லவா?  உணவுப் பழக்கத்திலிருந்து எல்லாவற்றிலும் இப்போது மாறி வருகிறது.  மெல்ல, மெல்லப் பாரம்பரிய உணவுகள் மாறி வருகின்றன.  கிராமங்களில் கூட கலாசாரம் மாறித் தான் வருகிறது.  மேல்நாட்டுக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தான்  நாகரிகம் என்னும் போக்கும், எண்ணமும் பரவி வருகிறது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தவறான உறவை நியாயப்படுத்துதல், பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, பல்வேறு வகையான முரண்பாடுகள் உள்ள சமூகம் என இருப்பதால் பெண்கள் தங்களுக்குத் தோன்றியதைத் தாங்கள் செய்யலாம் எனநினைக்கின்றனரோ!  அதோடு பொருளாதார சுதந்திரம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.  விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம்.  ஆனாலும் பெண்கள் தங்களுக்குத் தோன்றியபடி எல்லாம் நடந்து கொண்டால் அது நிச்சயம் சமூகத்தைப் பாதிக்கும்.

ஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே!  உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள்.  உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள்.  மேல்நாட்டு உணவு முறை தேவை இல்லை என்றே சொல்வேன்.  ஆனால் வேறு வழி இல்லை எனில் குழந்தைக்கு அது செய்யும் நற்செயல்களுக்கு ஒரு பரிசாக என்றோ ஓர் நாள் வாங்கிக் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும்.  அதிகமான சீஸ் நிறைந்த பிட்சாவை இந்த சீதோஷ்ணத்தில் நம் குழந்தைகளாலோ, நம்மாலோ செரிக்க இயலாது.  உடல் நலத்திற்கும் கேடு.  சிறு வயதிலேயே குண்டாகிவிடுவார்கள்.  உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் செல்லமே அவர்களுக்கு முக்கிய எதிரி என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டு உணவு முறை, உடைமுறை, நடைமுறை ஆகியவற்றைப் பழக்கப்படுத்துங்கள். நல்லதொரு குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை வளர வாழ்த்துகள்.எல்லாவற்றிலும் இந்தியனாகவே இருப்போம்.  மறைந்து வரும் கலாசாரத்தை மீட்டெடுப்போம்.

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.


மீள் பதிவு. 2014 ஆம் வருஷம் பகிர்ந்தது!

Thursday, May 10, 2018

ஆடு பாம்பே!

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் நாங்களும் சுப்புக்குட்டிகளோடு குடித்தனம் நடத்தினோம். (நாங்க வைச்சச் செல்லப் பெயர் சுப்புக்குட்டி)  முருகனுக்குப் பிடித்தவராச்சே! அதான் சுப்புக்குட்டி!  எங்க குழந்தைங்களுக்கு விளையாட பொம்மையே வாங்கிக் கொடுத்தது இல்லை. இவங்க தான் விளையாட்டுக் காட்டுவாங்க. போதாதுக்கு எலிகள்!

பழகிப் போச்சு! சென்னையில் அம்பத்தூர் வீட்டிலும் வித விதமாய் வரும். வாழை இலை நறுக்கப் போனால் பச்சைக்கலரில் தொங்கும். வாழை இலை சுருட்டிட்டு இருக்குனு தொடப் போனால் தலையைத் தூக்கும். அப்பாடா! நீயானு ஓட்டமா ஓடி வருவேன். தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் ட்யூப் மாதிரிப் பழுப்பு நிறத்திலே சுருட்டிக் கொண்டு கிடக்கும்ங்க! ஒரு தரம் கவனமில்லாமல் தூக்கப் போயிட்டேன். வேலை செய்யும் பெண் அலறவே என்னடா இதுனு முழித்துக் கொண்டேன். இம்மாதிரி நிறைய இருக்கு. இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது! :)''


ம்ம்ம்ம்ம், அம்பத்தூரில் இருந்தோம். அங்கே! இப்போவும் உண்டு. எங்க வீட்டுக் கொல்லைப் பக்கம் பெரிய புற்றே இருந்தது. பின்னால் வீடு கட்டினவங்க அதை இடிச்சுட்டாங்க! அதுங்க அப்புறமா எங்கே போகும்?   வாழ்வாதாரம் இல்லையே! போராட்டமா பண்ணுங்க? பாவம், இல்லையோ! சமையலறைகுக் கூடச் சில, பல சமயம் வரும். மழை நீரோடு கலந்து வீட்டுக்குள்ளே வந்திருக்கு. அதெல்லாம் நம்ம ஹீரோ, போடா, கண்ணு, முத்துனு சொல்லிச் செல்லமா வெளியே அனுப்புவார். \  தோட்டம் இருந்தால் நிச்சயம் இருக்கும். சட்டை உரித்துப் போட்டிருப்பதைப் பார்த்தால் டிசைன் டிசைனாக அழகாய் இருக்கும். ஆனால் இவர் தொடக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லுவார். சட்டையிலும் விஷம் இருக்குமாம்.

கட்டுவிரியனும் அழகாய் இருக்கும். ஆனால் கடிச்சால் தான் உடலில் கட்டுக் கட்டாக ஏற்படும் என்றார்கள். கொம்பேறி மூக்கன் என்றொரு ரகம். அவர் கடிச்சுட்டுக் குதிச்சு மரத்தின் மேலே ஏறிடுவார். அவரைக் கொன்றால் உடனே எரிக்கணும். இல்லைனா அவர் யாரைக் கடிச்சாரோ அவர் இறந்துவிட்டால் அவர் உடல் எரியும் வரை இங்கே கொம்பேறி மூக்கனார் உயிரை விட மாட்டாராம். ஆகவே அவரைக் கண்டால் யாரையானும்  ,  கடிக்கும் முன்னே அடிச்சுக் கையோடு எரிச்சுடுவாங்க. ஒரு முறை எங்க வீட்டுப் பவளமல்லி மரத்தில் இருந்து பின்னர் பக்கத்துவீட்டுப் பையர்கள் பாம்பாட்டியை அழைத்து வந்து அதை அடிக்கவோ அல்லது பிடித்துப் போகவோ செய்தார்கள்.

இவங்களைப் பத்திப் படிச்சதோடு அல்லாமல் பெரியவங்க சொல்றதும் தான் நான் பகிர்ந்திருக்கேன்

 பின்னே இல்லையோ? என்னிக்கோ ஒண்ணைப் பார்த்தாத் தான் பயப்படணும். அவங்களும் எங்க கூடவே வந்து படுப்பாங்க ஜாம்நகர் வீட்டிலே! அப்போ என்ன பண்ணறது? :) ராத்திரி படுக்கைக்குப் பக்கத்திலே கந்தசஷ்டி கவசமும், கம்பும் தயாரா இருக்கும்.

ஜாம்நகரில் இருந்தப்போ ராத்திரி சாப்பாடு நேரம். பொண்ணு தொலைக்காட்சி பார்த்துட்டே துணியை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தாள். பெண் சாப்பிட்டு நம்ம ரங்க்ஸும் சாப்பிட்டுட்டார். பையரை அழைத்தேன். அவர் பள்ளிப் பாடங்களில் பிசி. வரேன் என்றாரா சரினு தட்டைப் போட்டுத் தண்ணீர் எடுத்து வைக்கலாம்னு பானையிலே இருந்து தண்ணீரை எடுக்கப் போனேன். பானைக்கு அடியில் வயர் மாதிரிச் சுருளாய் இருக்கவே பெண் தான் அயர்ன் பண்ணிவிட்டு அயர்ன் பாக்ஸிலிருந்த கறுப்பு+வெள்ளை வயர் இணைப்பை எடுத்திருக்கானு நினைச்சுட்டு ஏண்டி இதை எடுத்தே? எனக்கேட்டுக் கொண்டே கையை நீட்டினேனோ இல்லையோ! புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நான் அலறிய அலறலில் அது பயந்துடுச்சு போல! எங்கேயோ போய் ஒளிஞ்சுக்கப் பார்த்தது! நல்ல வேளையா ரங்க்ஸ் வீட்டில் இருந்தாரா, பெரிய கம்பை எடுத்து அதை மெல்ல மெல்லத் தள்ளிக் கொண்டு வாசல் வரை போய்க் கொண்டு விட்டார். எனக்கு இருந்த பயத்தில் இருந்த இடத்திலிருந்து நகரக் கூடத் தோன்றவில்லை. பின்னர் சொன்னார் அது மட்டும் கடிச்சிருந்தால் கட்டுக்கட்டாக உடம்பில் தடங்கள் வரும் என்றும் உடனே இறந்து விடுவார்கள் என்றும் சொன்னார். ஏதோ அந்த பெரிய சுப்புக்குட்டியை எப்போவுமே சஷ்டி கவசம் மூலமா நினைச்சுக்கறதாலே இந்தச் சின்ன சுப்புக்குட்டியிடமிருந்து நம்மைக் காப்பாத்திட்டார் போல!

ஹிஹி, எல்லாமே பதிவாப் போட்டிருப்பதால் நினைவில் இருக்கு! அதோடு இவங்க இல்லாமல் இப்போக் கொஞ்சம் ரசிக்க ஏதும் இல்லாமல் இருக்கே!

ஜிஎம்பி சார் பாம்புகளோடான அனுபவம் பத்திக் கேட்டிருந்தார் ஒரு முறை நினைவில் இருந்தவரை சொல்லி இருக்கேன். இப்போல்லாம் பார்க்கிறதே இல்லை! :)))) திகிலூட்டும் அனுபவங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் சரியா நினைப்பில் வரலை!. 

Wednesday, May 02, 2018

மீனாக்ஷி கல்யாணம்! இப்படியும் ஒரு கோணம்!

சமீபத்தில் நடந்த மீனாட்சி கல்யாணத்தைப் பற்றிக் குழுமத்தில் யாரோ போட்டிருந்ததைப் படித்த இன்னொரு நண்பர் அவர் கோணத்தில் கீழ்க்கண்ட கருத்தைச் சொல்லி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் முன்னர் எழுதிய மதுரை பற்றிய பதிவைக் கொடுத்துவிட்டு என் கருத்தையும் பகிர்ந்திருந்தேன். இங்கே பகிரலாமா வேண்டாமா என நினைத்தபோது பகிர்ந்தால் புரியாதவங்களும் புரிஞ்சுக்கலாமே எனத் தோன்றியதால் இங்கேயும் பகிர்ந்தேன். சில விஷயங்கள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதில் இதுவும் ஒன்று. சாதாரணப் பாமர மக்கள் (என் போன்றவர்கள்) இவற்றை ஏற்றுக் கொண்டு கடந்தாலும் பலரால் முடிவதில்லை. அவர்களில் ஓரிருவருக்காவது இதன் தத்துவம் புரிந்தால் நல்லது. நன்றி.

மீனாக்ஷி திருக்கல்யாணம் க்கான பட முடிவு

 இது குழுமத்தில் சிநேகிதி ஒருவர் பகிர்ந்த கருத்து!

//தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர்.
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.//

எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு.

நானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள்.


இது ஒரு தத்துவரீதியான காட்சி! அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான்! ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.

மீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.

http://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html   பிரியாவிடை அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம்

நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது. விபரமாக எழுதினால் பாலாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எழுத எழுத முடியாத ஒரு விஷயமும் கூட!