எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 30, 2019

விட்டல, விட்டல, ஜெய ஜெய விட்டல, பண்டரிபுரம் தொடர்ச்சி!


புரந்தரதாசருக்கு அருளிய விட்டலன்  முந்தைய பதிவின் சுட்டி.

அப்பண்ணா முகத்தில் புரந்தரதாசர் வெந்நீரை ஊற்றியது வரை சென்ற பதிவில் பார்த்தோம்.  அப்பண்ணா அங்கிருந்து அகன்று விட்டான் போலும்.  அதன் பிறகு சப்தமே இல்லை. புரந்தரதாசருக்கோ தான் செய்தது தவறு எனப் புரிந்து விட்டது. பொறுக்க மாட்டாத கால்வலியால் தனக்கு இவ்வளவு கோபம் வந்தது எனப் புரிந்தாலும். அப்பண்ணாவின் மேல் வெந்நீரைக் கொட்டியது மாபாவம் என்பதை உணர்ந்தார். இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தார். விடிகாலை வேளையில் எழுந்து அப்பண்ணா படுத்து இருக்கும் இடம் சென்று அப்பண்ணாவை எழுப்பித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எழுந்து புரந்தர தாசர் சொன்னதைக் கேட்ட அப்பண்ணாவுக்கோ எதுவும் புரியவில்லை. தான் இரவு படுத்தது தான் தெரியும் என்றும், இப்போது தாசர் எழுப்பித் தான் எழுந்திருப்பதாகச் சொன்னான். தாசருக்கும் ஏதும் புரியவில்லை. அப்போ இரவில் வந்த அப்பண்ணா யார்?

பீமா நந்தியில் நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைக் காணச் சென்றார் தாசர். பாண்டுரங்கன் சந்நிதியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்ன விஷயம் என விசாரித்த தாசருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  பாண்டுரங்கன் முகம் முழுவதும் தீக்கொப்புளங்கள். தீப்பட்டாற்போலவோ அல்லது கொதிக்கும் வெந்நீரோ, எண்ணெயோ கொட்டியது போல் முகம் முழுவதும் காயங்கள்!  அதைக் கேட்ட தாசர் கதறி விட்டார்! "என்னப்பா! பாண்டுரங்கா! இரவில் நீ தான் அப்பண்ணாவாக வந்தாயா? உன்னையா நான் காயப்படுத்தினேன்! இது என்ன லீலை அப்பா!  நீ யாரென அறியாத பாபியான என் கோபத்தை அடியோடு ஒழிக்க நீ செய்த திருவிளையாடலோ? உன் அழகான முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய் விடுமோ! இந்தப் பாபியை மன்னித்துக்கொள் பாண்டுரங்கா! நான் செய்தது மாபெரும் தவறு! அது நீயானால் என்ன? அப்பண்ணாவானாலென்ன? கொதிக்கும் வெந்நீரைக் கொட்டியது நான் செய்த தவறு தானே!" எனப் புலம்ப ஆரம்பித்தார்.  "உன் அழகுத்திருமுகத்தை எங்களுக்குக் காட்டு!" எனக் கதறி அழ ஆரம்பித்தார்.

கண்ணன் முகமும் புரந்தரதாசரின் உருக்கமான வேண்டுகோளில் முன்போலானது. அந்த அழகிய முகத்தைக் கண்டு மயங்கிய புரந்தரதாசர் அந்தத்தூணருகேயே உட்கார்ந்து கொண்டு பாண்டுரங்கன் மேல் பல்வேறு கீர்த்தனைகளைப் பாடினார்.  அந்தத் தூணுக்குப் புரந்தர தாசர் தூண் என்றே பெயர் என்பதோடு வருபவர்கள் அனைவரும் அதைக் கட்டிப்பிடித்து ஆசிகளை வாங்கிக் கொண்டே செல்கின்றனர்.  மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளும் மஹாபாரதக் கதைகளில் சிலவும் இந்தத் தூணில் சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. இந்தத் தூணைத் தாண்டிச் சென்றால் சில படிகள் மேலேறிச் சென்றால் கருவறை செல்லும் சிறிய பாதையில் துவாரபாலகர்களான ஜய, விஜயர்களுக்குச் சற்று முன்னால் வேத நூலும் துகாராமின் பாதுகைகளும் கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் தான் கருவறைக்குள் நுழைய வேண்டும்.

இங்கே ஜாதி, மதம், இனம், குலம் , கோத்திரம் போன்ற எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி அனைவரும் பண்டரிநாதனைக் கிட்டே இருந்து தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகின்றனர்.  அன்று புண்டரீகன் போட்ட செங்கல்லின் மீது நின்ற பாண்டுரங்கன் அப்படியே சுயம்புவாக ஆவிர்ப்பவித்திருப்பதாக ஐதிகம். ஆனால் இப்போதுள்ள சிற்பம் மணற்கல்லால் உருவானதாகச் சொல்கின்றனர். எனக்கே நான் முன்னர் பார்த்ததற்கு இப்போ (பத்து வருஷங்கள் முன்னர் பார்த்தது) பாண்டுரங்கன் தேய்ந்து இளைத்தாற்போல் தோன்றினான்.காலின் கீழ் இருக்கும் பீடமும் மணல் கல் என்றே சொல்கின்றனர். தலையில் சிவலிங்க வடிவத்தில் கிரீடம் எனச் சொன்னார்களே எனத் தலையை உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அப்புறப்படுத்தப்பட்டேன் என்பதே உண்மை! பாதங்களில் கைகளை வைத்துத் தலையை அவன் பாதத்தில் கிடத்திவிட்டு நிமிரும் முன்னரே காவல்துறைப் பெண்மணி ஒருவர் அங்கிருந்து என்னை அப்புறப்படுத்தினார்.  என்னை மட்டுமல்ல. எல்லோரையும் அப்படித் தான் அப்புறப்படுத்துகிறார். கோலாப்பூரில் காலை வேளையில் கருவறையில் பத்து நிமிஷங்களுக்கும் மேல் நிற்க முடிந்தது. ஆனால் இங்கே நிற்க முடியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன். மெதுவாக நம்மவரும் அவனுக்குக் கொண்டு போன கார் அவலைச் சமர்ப்பித்துவிட்டு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து ருக்மாயியின் சந்நிதி சென்று அங்கே தரிசனம் செய்தோம். ருக்மாயிக்குப் பெண் அர்ச்சகர் ஒருவரே எல்லா வழிபாடுகளையும் செய்து வருகிறார். ரெகுமாயிக்குக் குங்கும அர்ச்சனை விசேஷம். குங்குமப் பிரசாதம் கேட்டோம்.  அவருக்கு என்னமோ அவர் தலையில் ஓர் பெரிய கிரீடத்தைச் சுமந்து கொண்டிருப்பதாக எண்ணம். யாரையும் லட்சியமே செய்யாமல் விரட்டிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து ராதா சந்நிதி, சத்யபாமா சந்நிதி போன்ற  கோயிலின் மற்ற பாகங்களையும் பார்த்துக் கொண்டே மறுபடி முக்கிய வாயில் வழியாக வெளியே வந்தோம். வெளியே வந்ததும் தான் ஆட்டோக்காரப் பையரை எங்கே பிடிப்பது என்னும் கவலை வந்தது! ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாகத் தான் வெளியேறி வரவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஆட்டோக்காரப் பையர் அங்கே வந்து காத்திருந்தார். இப்போ எங்க செருப்புக்களைக் கண்டு பிடிக்க வேண்டும். வழி தெரியவில்லை. ஆட்டோக்காரரிடம் கேட்டுக் கொண்டு, ஏனெனில் ஆட்டோ அங்கே வராது! நாங்களே நடந்து சென்றோம். ஒருவழியாகத் தேடிக் கண்டுபிடித்துச் செருப்புக்களோடு ஆட்டோவுக்கு வந்தோம்.

இப்போ நம்மவருக்கு வேறு ஒரு எண்ணம் உதித்திருந்தது. கோயிலில் தரிசனத்துக்கு நின்றபோது காலை எத்தனை மணிக்கு தரிசனம் ஆரம்பம் எனக் கேட்டிருந்தோம். எல்லோருமே காலை எட்டரைக்குத் தான் தரிசனம் ஆரம்பிக்கும் என்றனர். எங்களுக்கோ எட்டரைக்குக் கிளம்பவேண்டும். அப்போக் கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆகிடும்.அங்கிருந்து பதினோரு மணி இருபது நிமிடத்திற்குக் கிளம்பும் புனே வண்டியைப் பிடிப்பது கடினம். ஆகவே காலை தரிசனம் செய்யாமல் அன்றிரவே புனே கிளம்பிச் சென்று விடலாம் என்னும் எண்ணம் தான் அவருக்குத் தோன்றியது. ஆகவே வண்டியில் ஏறியதும் ஆட்டோக்காரரிடம்முதல்வேலையாக அங்கிருந்து புனே செல்லும் தனியார் பேருந்தில் இடம் இருக்கானு பார்க்கலாம்னு சொல்லவே அந்த ஆட்டோக்காரரும் சரினு அங்கே இருந்த பிரபலமான ட்ராவல்ஸ் கம்பெனிக்கு வண்டியை விட்டார். அங்கே கேட்டதுக்கு இரவு தினசரி வண்டி இருப்பதாகவும் அன்றைய வண்டி முழுவதும் நிரம்பிக் கிளம்பப் போகிறது எனவும் இனி மறுநாள் இரவு தான் தங்கள் வண்டி எனவும் சொல்லிவிட்டார்.

மறுபடி குழப்பம். அப்போ அங்கே இருந்த இன்னொரு ட்ராவல்ஸ்காரரின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதேனும் கார் கேட்கலாம் என நினைத்து நம்மவரும், அந்த ஆட்டோக்காரரும் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்றனர். அங்கே போனவங்க திரும்பி வர முக்கால்மணிக்கும் மேல் ஆகிவிட்டது! என்னனு புரியாமலேயே நின்று கொண்டே இருந்தேன். கடைசியில் ஒருவழியாகத் திரும்பி வந்து மறுநாள் விடிகாலை ஆறு மணிக்கு அந்த ட்ராவல்ஸ்காரரின் ஒரு பேருந்து புனே செல்வதாகவும் அதில் எங்கள் இருவருக்கும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து விட்டதாகவும் சொன்னார். முதலில் அங்கே அலுவலகத்தில் இருந்தவர் மறுத்து விட்டாராம். ஆனால் அந்த ட்ராவல்ஸைச் சேர்ந்த இன்னொருவர் நேரே கம்பெனிக்காரருக்கே தொலைபேசி எங்கள் நிலைமையைத் தெரிவிக்கவே அவரும் இரண்டு இடம் இருப்பதால் அதை எங்களுக்குக் கொடுக்கச் சொல்லி இருந்திருக்கார்.  இதை எல்லாம் நம்மவர் என்னிடம் விளக்கினார். என்றாலும் என் மனம் என்னமோ நிறைவாக இல்லை.

அவ்வளவில் அங்கிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தருகே அந்த ஆட்டோக்காரர் சொன்ன உணவு நிலையத்துக்குச் சென்றோம். அங்கே குஜராத்தி தாலி நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். ஆனால்! என்ன துரதிருஷ்டம்! சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது படிகள் மேலே ஏறவேண்டும் என்பதோடு ஒவ்வொரு படிக்கும் ஒன்றரை அடி உயரம்!  அதைப் பார்த்த நான் சாப்பாடே வேண்டாம். லங்கணம் பரமஔஷதம் எனச் சொல்லிவிட்டுக் கீழேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அதை அந்த ஆட்டோ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு. திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்தார்.  நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டு  நம்ம ரங்க்ஸை நீங்க போய்ச் சாப்பிட்டு வாங்கனு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன். கூட்டமான கூட்டம். பண்டரிபுரத்து மக்கள் அத்தனை பேரும் அன்று அந்த ஓட்டலுக்கு வந்து விட்டார்களோ என்னும்படிக்குக் கூட்டம். சாட், தஹி சாட்,மசாலா பூரி, சமோசா, பாவ் பாஜி, பாவ் வடா எனக் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவற்றின் நிறமே என் வயிற்றைக் கலக்கியது. கொஞ்சம் யோசித்த நம்மவர் அங்கே தோசை போட்டுக் கொண்டிருந்தவரிடம் எங்களுக்கு ஆளுக்கு ஒரு தோசை சொல்லிவிட்டு வந்தார். மருந்து எடுத்துக்கணுமே! ஆகையால் அந்த தோசை என்னும் முறுக்கை நொறுக்கிச் சாப்பிட்டுவிட்டு மன ஆறுதலுக்கு ஒரு ஃபலூடாவும் சாப்பிட்டோம். ஃபலூடா இங்கே ரொம்பவே நன்றாக இருந்தது இன்னொரு ஆறுதல். பின்னர் அங்கிருந்து கிளம்பி அறைக்கு வரப் பத்து மணிக்கும் மேல் ஆகி விட்டது. ஓட்டல் கிட்டத்தட்டப் பூட்டி இருந்தது. எல்லோரும் தூங்கி விட்டார்கள். ஏசிக்கு என்னடா செய்யறதுனு நினைக்கும்போதே உள் அறையிலிருந்து எழுந்து வந்த பார்த்த ஓர் ஓட்டல் ஊழியர் எங்க அறைக்கான ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார்.

Saturday, May 25, 2019

மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?

மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?

நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு! களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி
இப்படிக் கொண்டு வந்து வட்ட வடிவமாகச் சுவர் எழுப்பி


கொத்துவேலை தெரியும்.  அதான் நல்லாக் கொத்திக் கொத்திப் பூசறேன்.





நீங்களே பாருங்க குஞ்சுங்களுக்கு இந்த இடம் போதுமா போதாதா? என்ன, இன்னும் பெரிசா இருக்கணுமா?  ம்ம்ம்ம்ம்ம் சரி.


தனியாத் தான் செய்தாகணும்.  நம்ம வீட்டு வேலை; நான் தானே செய்யணும்.  அவர் வரட்டும், பார்த்து அசந்துடுவார்.

அடப் பாவமே, நீ ஏன்மா தனியாக் கஷ்டப்படறே, இந்த ஓரமெல்லாம் கொத்த உன் மெல்லிய அலகால் முடியுமா?  நான் சரி பண்ணிடறேன் பார்த்துட்டே இரு.


பாவம், தனியா முடியலை.  வரதுக்குள்ளே நாமே சரி செய்துடுவோம்.  பாலிஷிங் நடக்கிறது.  அடடா வந்துட்டாளா?  என்ன எப்படி இருக்கு?



அலங்கார வளைவுகள் பாக்கி இருக்கே.



இந்த அலங்காரம் எல்லாம் அவராலே முடியாது.  நான் தான் பண்ணணும்.

அப்பாடா, இது தான் சொர்க்கம்.

வெளியே போனாரே காணோமே இன்னமும், என்ன ஆச்சு?  கவலையா இருக்கு.

இவ்வளவு நேரமாச்சு, இன்னும் வரலியே? எங்கே போயிருப்பார்?


அப்பாடா, வந்துட்டார்.  போய்ப் படுத்துத் தூங்கலாம்.  குஞ்சுகளெல்லாம் நல்லபடியாப்பொரிச்சாகணும். அது வேறே கவலை. காலையிலே பார்க்கலாம். இப்போத் தூங்கப்போறேன். வீடு எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?

தெரியாதவங்க சொல்லுங்கப்பா.2013  மீள் பதிவு. இதை இப்போச் சிலர் பார்த்திருக்க மாட்டீங்க என்பதால் மறுபடி போட்டேன். 2013 என்பதைக் க்ளிக்கினால் பழைய பதிவுக்கு அழைத்துச் செல்லும்.

Friday, May 24, 2019

நன்றி நவிலல்!

நேற்றைய என் ஆங்கிலப் பிறந்த தேதிக்கு வாழ்த்துச் சொன்னவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இணையத்திலும், அவரவர் பதிவுகளிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு கண்ணீர் ததும்ப நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானெல்லாம் பிறந்த நாள்னு கொண்டாட ஆரம்பிச்சதே குழந்தைகளுக்கு விபரம் தெரிந்து தான். பள்ளி நாட்களில் அவசரச் செலவுக்கென நாங்க கொடுக்கும் அவங்களோட கைக்காசிலிருந்து எனக்கு வாழ்த்து அட்டை வாங்கிக் கொடுப்பாங்க. அதன் பின்னர் வெளிநாடு போனதிலிருந்து தொலைபேசி அழைப்புகள், வாழ்த்து மடல்கள் என வரும். நேற்றும் காலையே அழைத்துப் பேசினார்கள்.

முகநூலில் என்னோட டைம்லைனில் நானே நுழைய முடியாத அளவுக்கு ட்ராஃபிக் ஜாம்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. ஆகவே இங்கேயும் முகநூலிலும் தனிப் பதிவு போட்டு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நேற்று என்னை ஆடியோ மெசேஜ் மூலம் வாழ்த்திய ஸ்ரீராம், அவரோட பாஸ், வாட்சப் அழைப்பு மூலம் வாழ்த்திய ரேவதி நரசிம்மன், மற்றும் தொலைபேசியில் அழைத்த பானுமதி ஆகியோருக்கும் என் நன்றி. ரேவதியும், பானுமதியும் அழைத்தபோது கணினி மருத்துவர்கள் வந்திருந்தனர்.  பழைய மேஜைக் கணினியின் ஹார்ட் டிஸ்கைக் காப்பி செய்து அவற்றை எல்லாம் அழித்துவிட்டுப் புதிதாக ஃபார்மட்செய்யவேண்டி அழைத்திருந்தேன். மதியம் வந்து விட்டுச் சாப்பிடச் சென்றனர். மறுபடி மாலை ஐந்து மணிக்கு வந்து இரவு ஒன்பது மணி வரை வேலை சரியாக இருந்தது. இன்னும் சில வேலைகள் முடியவில்லை. திங்களன்று தான் செய்து தருவதாகச் சொல்லி இருக்கின்றனர்.

அதோடு நேற்று அதீதச் சூடு காரணமாக உணவு உட்கொள்ள முடியவில்லை. மதியம் வெறும் மோர் சாதம் மட்டும் ஒரு கைப்பிடி சாதத்தில் சாப்பிட்டேன். இரவு தான் நல்ல பசி எடுத்துச் சாப்பிட்டேன். சப்பாத்தியும் கத்திரிக்காய்க் கறியும். இப்போல்லாம் ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள முடிகிறது. எப்போவும் மே 22 தேதிக்கெல்லாம் காற்றுக் கூடி வர ஆரம்பிக்கும். இப்போ இந்த வருடம் 24 தேதி ஆகியும் இன்னமும் காற்று ஆரம்பிப்பதற்கான சுவடு தெரியவில்லை.  எங்க வீட்டு வடக்கு ஜன்னல் வழியே பார்த்தாலே மேல் காற்று ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த வருஷம் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. இனி காற்று ஆரம்பித்து மேகங்கள் கூடிப்பேசிக்கொண்டு மழை வர ஜூன் 10,15 தேதி ஆகும்போல! மழையானும் நல்லபடியாக எப்போதும் போல் பொழிய வேண்டும். ஆனால் நம் தமிழ்நாட்டில் மழை சனியன் என்கின்றனர். அதான் மனதுக்கு வருத்தமா இருக்கு. ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறை. சென்னையில் பிரபலமான ஐடி நிறுவனங்கள் கால வரையற்ற விடுமுறை அளிப்பதாகச் சொல்வது எவ்வளவு உண்மை எனத் தெரியாது. ஆனால் ஓட்டல்கள் பலவற்றில் தண்ணீர்ப் பற்றாக்குறை!

ஏற்கெனவே மழை நீரைச் சேமித்து வைக்கும் வழக்கம் நம்மிடம் அறவே இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொஞ்சம் சுறுசுறுப்புடன் செயல்பட்ட மழைநீர்ச் சேமிப்புத் திட்டம் இப்போது முழு மூச்சாக உறங்குகிறது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது நாம் மழை நீரைச் சேமித்தாக வேண்டும். இங்கே உள்ள நீர், நிலைகளை அழித்துவிட்டுக் கர்நாடகமும், கேரளமும், ஆந்திராவும் தரும் தண்ணீருக்காகக் கையேந்திக் கொண்டு அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு கோர்ட்டுக்கு அலைவதில் நமக்கும் பெருமை இல்லை. நம் சந்ததியினருக்கும் பெருமை இல்லை. இறைவன் அளிக்கும் மாபெரும் கொடையான மழையை வரவேற்போம். மழையே வருக!

ஆழிமழைக்கண்ணா! இதை எல்லாம் பார்த்தும் படித்தும் கேட்டும் கொண்டிருக்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்.


டிஸ்கி: இந்த மொக்கைக்குக் கூட்டம் கூடும் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P:P:P:P

Wednesday, May 22, 2019

புரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்!

பண்டரிபுரம் க்கான பட முடிவு           à®ªà®£à¯à®Ÿà®°à®¿à®ªà¯à®°à®®à¯ க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி விக்கிபீடியா

கண்ணனுக்குப் புண்டரீகனை உலகுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கியது புரிந்து விட்டது. ஆகவே ருக்மிணியைத் தவிர்த்து அவன் ராதையுடன் கூடிக் குலவக் கோபம் கொண்ட ருக்மிணி (ருக்மாபாய், தமிழ்நாட்டில் ரெகுமா பாய் என்பார்கள்) பீமா நதிக்கரையிலுள்ள வனத்துக்கு வந்து தனித்து உட்கார்ந்திருந்தாள். அவளைச் சமாதானம் செய்வதற்காகவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புண்டரீகனுக்குக் காட்சி கொடுத்து அவனுக்கு உயர்வை அளிப்பதற்காகவும் கண்ணன் வந்தான். ருக்மிணியைச் சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு வந்தான்.  வழியில் புண்டரீகன் குடிலின் வாயில் வந்தது. மாயக்கண்ணனுக்குச் சொல்லவா வேண்டும்? அவனுக்கு அப்போது பார்த்து தாகம் ஏற்பட்டது. ஆகவே குடிலின் கதவைத் தட்டிக் குடிக்க நீர் தருமாறு கேட்டான். பெற்றோர் சேவையில் ஆழ்ந்திருந்த புண்டரீகனோ சற்றுப் பொறுக்குமாறு சொல்ல, இங்கே சேறும், சகதியுமாய் இருக்கிறதே அப்பா! இந்தச் சேற்றில் எவ்வளவு நேரம் நிற்பேன் எனக் கண்ணன் கேட்க உள்ளிருந்து ஓர் செங்கல்லைத் தூக்கிப் போட்டான் புண்டரீகனிடம். கண்ணனிடம், "இதன் மேல் நிற்பீர்!" என்று சொல்லிவிட்டு மீண்டும் குடிசைக்குள் பெற்றோரின் பணிவிடைக்குச் சென்றான். விட் என்றால் மராத்தி மொழியில் செங்கல். இந்தச் செங்கல் மேல் நின்றதால் அவனுக்கு விட்டலன் என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்டரீகன் தன் பெற்றோருக்கான பணிவிடையை முடித்துக் கொண்டு அடுத்து வந்திருக்கும் அதிதிகளைக் கண்டு உபசரிக்க வந்தான். அவர்களை வரவேற்றான். என்ன வேண்டும் என்று கேட்டான். அத்தனை நேரம் சும்மா இருந்த ருக்மிணியால் இப்போது பேசாமல் இருக்க முடியவில்லை. தாங்கள் இருவரும் யார் என்பதைச் சொன்னாள். சுய ரூபத்தைக் காட்டினார்கள் இருவரும். வந்திருப்பது கண்ணனும், ருக்மிணியுமா? அவர்களையா காத்திருக்கச் செய்தேன்? புண்டரீகன் செய்வதறியாது திகைத்தான்.  கீழே விழுந்து மன்னிப்புக் கேட்டான்.கதறினான். கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது கண்ணன் புன்னகைத்தான்.  "புண்டரீகா! நீ பெற்றோருக்குச் செய்த சேவையில் மனம்  மகிழ்ந்தோம். உன் மதிப்பை உலகுக்குக் காட்டவே இத்தகையதொரு திருவிளையாடலைப் புரிந்தோம்! நீ வேண்டும் வரம் கேள்! " என்றான் கண்ணன். அதற்குப் புண்டரீகன், " கண்ணா, இப்போது நீ நின்றிருக்கும் இடத்தில் இவ்வாறே நின்ற வண்ணம் பக்தர்கள் அனைவரும் வந்து காணும் வண்ணம் விட்டலனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும். இந்த இடம் ஓர் புண்ணிய ஸ்தலமாக மாற வேண்டும். உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நீ இடர்களை நீக்கி அவர்கள் துன்பங்களைத் தீர்க்க வேண்டும்." என்றெல்லாம் கேட்டுக் கொண்டான். அவ்வாறே கண்ணனும் அங்கேயே கோயில் கொண்டான். இந்த ஊரில் பீமா நதி அர்த்த சந்திர வடிவத்தில் ஓடுவதால் சந்திரபாகா என்னும் பெயர் கொண்டு விளங்கும் என்றும் இந்த நதியில் குளித்து என்னை வந்து தரிசிப்பவர்களின் இடர்களை எல்லாம் நீக்கி அவர்களைத் துன்பத்திலிருந்து காத்தருள்வேன் "என்றும் கண்ணன் புண்டரீகனிடம் சொன்னான்.

அவ்வாறே அங்கே ஏற்படுத்தப்பட்ட கோயில் மற்றும் அதைச் சார்ந்த ஊர்கள் முதலில் புண்டரீகபுரம் என்னும் பெயரில் விளங்கி வந்து பின்னர் நாளாவட்டத்தில் பண்டரிபுரம்/பந்தர்பூர் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கேயும் கோயிலுக்கு நான்கு வாசல்கள். நாமதேவரின் பித்தளைச் சிலை கையில் தம்பூருடன் காணப்படும் வாயில் கிழக்கு வாயில். அது வழியாத் தான் நுழைந்தோம். அடுத்து தத்தாத்ரேயர், கணபதி குடி கொண்டிருக்கும்  ஒரு பெரிய மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் சுற்றிலும் மாடங்கள் நிறைந்து நடுவில் 16 அல்லது 18 கற்றூண்களுடன் காணப்படும் ஓர் மண்டபம். அந்த மாடங்களில் கிருஷ்ணன், ராதை, நரசிம்மர் போன்றவர்களோடு செந்தூரத்தில் குளிக்கும் நம்மாளும் காட்சி கொடுக்கிறார். அங்கே தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கணபதியைத் தொட்டு வணங்கிக் கொண்டோம். முன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எனத் தனியான வாயில் எனச் சிலர் சொல்ல, இன்னும் சிலரோ கூட்டம் அதிகம் இல்லை, இப்போத் திரையை எடுத்துடுவாங்க. இங்கேயே போகலாம்.இங்கே போனால் தான் பாண்டுரங்கனைத் தொட்டு வணங்க முடியும். ஆன்லைன் பதிவு செய்த வரிசையில் சென்றால் தொட்டு வணங்க முடியாது. கருவறைக்கு வெளியே இருந்து தரிசித்துவிட்டுப் போக வேண்டி இருக்கும் என்றார்கள்.

அப்போ நமக்கோ வேலை ஒண்ணும் இல்லை; ஆகவே காத்திருந்தோம். பஜனைகள் முழங்கிக் கொண்டிருந்தன. அங்கே மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சி மூலம் உள்ளே பாண்டுரங்கனுக்கும் ரெகுமாயிக்கும் நடந்த வழிபாடுகள் காணக் கிடைத்தன. அந்த மண்டபத்தில் ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிக் கவசம் போல் பூண் போட்டிருந்தார்கள். அதைப் புரந்தரதாசர் கம்பம் எனவும் கருடஸ்தம்பம் எனவும் அழைக்கின்றனர். அதற்கான ஓர் கதையும் உண்டு. அநேகமாக மஹாபக்தவிஜயம் புத்தகத்தில் (என்னிடம் இருப்பது குகப்ரியை எழுதியது) படித்திருக்கலாம். பாண்டுரங்கனைப் பார்க்க வேண்டிப் புரந்தர தாஸர் கிளம்பிப் பண்டரிபுரம் வருகிறார். சத்திரம் ஒன்றில் தங்கிக் காலையில் எழுந்ததும் கண்ணனைக் காணவேண்டும் என்னும் எண்ணத்துடன் உறங்கச் செல்கிறார். நீண்ட யாத்திரையாக வந்தவருக்குக் கால் வலி தாங்காமல் உறக்கம் வரவில்லை. தன்னுடன் வந்த சீடனை அழைத்தார். "அப்பண்ணா! அப்பண்ணா! கால் வலி தாங்க முடியவில்லை. வெந்நீருடன் வா! வந்து ஒத்தடம் கொடு!" என அழைக்கிறார்.அப்பண்ணா கேட்பதாக இல்லை. வெகு நேரம் அழைத்த பின்னரே தாமதமாக அப்பண்ணா கையில் வெந்நீர்ப்பாத்திரத்துடன் வந்து சேருகிறான். அவன் மேல் கோபம் கொண்ட புரந்தரதாசர் வெந்நீர்ப்பாத்திரத்தை வாங்கி அப்படியே அவன் முகத்தில் விசிறி அடித்து விட்டார்.


புரந்தர தாசர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்


Tuesday, May 21, 2019

பண்டரிபுரத்தில்!


இங்கே  முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் பார்க்கவும்.

பண்டரிபுரம் வரலாறு க்கான பட முடிவு

முதலில் பண்டரிநாதன் அங்கே கோயில் கொண்ட வரலாறைப் பார்ப்போமா? ஜானுதேவர், சத்யவதிக்குப் பிறந்த மகன் புண்டரிகன்.  பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தான். அவனுக்குத் திருமணப்பருவம் வந்ததால் பெற்றோர் ஓர் பெண்ணைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுக்கு மாமனார், மாமியாரைப் பிடிக்கவில்லை. தன் கணவன் அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்வது அதைவிடப்  பிடிக்கவில்லை. ஆகவே மெல்ல மெல்ல கணவன் மனதை மாற்றி விட்டாள். அதன் பின்னர் புண்டரீகன் பெற்றோரைக் கவனிப்பதே இல்லை. மனம் வருந்திய பெற்றோர் இனி இங்கு இருப்பது உகந்தது அல்ல என நினைத்துக் காசி யாத்திரைக்குக் கிளம்பி அங்கே போய் மிச்ச நாட்களைக் கழிக்கலாம் எனக் கிளம்பினார்கள். ஆனால் மருமகளுக்கு அதுவும் பிடிக்கவில்லை. அவர்கள் மட்டும் எப்படிக் கிளம்பலாம்? நாமும் போக வேண்டும் எனப் புண்டரீகனை நச்சரித்தாள்.

அதன் பேரில் புண்டரீகன் பெற்றோர் காசிக்குச் செல்லும் குழுவில் அவனும் தன் மனைவியுடன் கிளம்பினான்.எல்லோருமே நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் குதிரைகளில் பயணம் செய்தனர். புண்டரீகன் தன் மனைவியைக் குதிரை மேல் அமர்த்தித் தானும் இன்னொரு குதிரையில் அமர்ந்து பயணம் செய்தான். பெற்றோரை லட்சியமே செய்யவில்லை என்பதோடு பலர் எதிரிலும் பெற்றோரை அவமானம் செய்தான். அலட்சியம் செய்தான். ஏளனமாகப் பேசினான். பெற்றோர் மன வருத்ததில் வாயே திறக்க வில்லை.  ஒரு நாள் இரவு அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார்கள். உணவு உண்ட பின்னர் ஓய்வு எடுத்தனர். புண்டரீகன் அங்கே வெளியே படுத்துத் தூங்கி விட்டான். அதிகாலையில் ஏதோ சப்தம் கேட்டு எழுந்தவன் என்னவென்று பார்த்தால்,  நைந்து போன துணிகளை உடுத்திய வண்ணம் அழுக்கும் அருவருப்புமாகச் சில பெண்கள் ஆசிரமத்தில் நுழைந்ததைப் பார்த்தான். யார் இவர்கள்! ஏன் இப்படிக் காட்சி அளிக்கின்றனர் என அவன் எண்ணும்போதே அவர்கள் ஆசிரமத்தைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம்செய்து முனிவர் குளிக்க சுத்தமான நீர் எடுத்து வைத்து, முனிவரின் துணிகளைத் துவைத்து அவருக்கு உணவு தயாரித்து எனப் பலவிதமான பணிவிடைகளையும் செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்புகையில் அவர்களைப் பார்த்தால் பளிச்சென்று வண்ணமயமான ஆடைகளை உடுத்திக் கொண்டு ஒளி பொருந்திய உடல்களோடு சுத்தமாகவும், வணக்கத்துக்கு உரியவர்களாகவும் காட்சி அளித்தனர்.

புண்டரீகனுக்கு எதுவும் புரியவில்லை. அன்றும் அங்கேயே தங்கும்படி ஏற்பட்டது. ஆகவே அன்று அதிகாலை அவன் விழித்திருந்து அந்தப் பெண்களைப் பார்த்து இது என்ன அதிசயம் எனக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்ததுமே வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே அவர்கள் வெளியே செல்லும்போது அவர்களிடம்கேட்டு விட வேண்டும் என்று காத்திருந்தான்.  அவர்களும் வேலைகளை முடித்துவிட்டுப் பளிச்சென்ற ஆடைகளோடும், சுத்தமான ஒளி பொருந்திய உடலோடும் வந்தனர். அவர்களை வழிமறித்து அவர்கள் கால்களில் விழுந்தான் புண்டரீகன். "நீங்கள் யார்? ஏன் தினம் இங்கே வந்து முனிவருக்குப் பணிவிடை செய்கிறீர்கள்?அதோடு வரும்போது அழுக்கும், அருவருப்புமாக வரும் நீங்கள் கிளம்பும்போது தூய்மையானவர்களாக மாறுவது எப்படி?" என வினவினான்.

அதற்கு அவர்கள், அவர்கள் எல்லோருமே கங்கை, யமுனை, சரஸ்வதி, போன்ற பல புண்ணிய நதிகள் எனவும். மக்கள் அவர்கள் நதியாக ஓடும்போது நீராடித் தங்கள் பாவங்களை எல்லாம் இறக்கித் தூய்மை பெறுவதால் அந்தப் பாவங்கள் எல்லாம் சேர்ந்து அவர்கள் இப்படிக் கோர உருவைப் பெற்றுவிடுவதாகவும் சொன்னார்கள். அந்தப் பாவங்களை எல்லாம் அடியோடு தீர்த்துக் கொள்ளவே குக்குட முனிவரின் ஆசிரமத்துக்கு வருவதாயும் அவருக்குப் பணிவிடை செய்வதாகவும் சொன்னார்கள். அது என் அப்படி எனப் புண்டரீகன் கேட்க, குக்குட முனிவர் தன் பெற்றோரைத் தெய்வங்களாக எண்ணிப் பணிவிடை செய்து வருவதால் அவருக்குச் செய்யும் சேவை மூலம் தாங்கள் புனிதத்தை மீண்டும் பெறுவதாக அவர்கள் சொன்னார்கள். பின்னர்  மறைந்து விட்டனர். புண்டரீகனுக்குத் தன் தவறு அப்போது தான் உறைத்தது. மனம் திருந்திப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை மீண்டும் ஆரம்பித்தான். பெற்றோரும் மனம் மகிழ்ந்து அவன் மனைவியோடும் மகிழ்வோடு இருக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆகவே அவர்களுக்காக மனைவியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

இந்தப் புண்டரீகனை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியே அந்த விட்டலன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது.

Monday, May 20, 2019

வந்து கொண்டே இருக்கேன்!

நேற்றோடு மிக மிக முக்கியமான வேலை முடிந்தது. கொஞ்சம் ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மின்னூல்களுக்கான இரு புத்தகங்களை இன்று எடிட் செய்து அனுப்பி வைத்திருக்கிறேன். இன்று முழுவதும் அதில் போய்விட்டது. அதோடு வீட்டிலும் இரு நாட்களாகச் சுத்தம் செய்யும் வேலை. இம்முறை ஆளைக் கூப்பிடாமல் நாங்களே செய்ததால் காலை ஆரம்பித்துப் பின்னர் அது முடிஞ்சு சமைச்சுச் சாப்பிடவே ஒரு மணி ஆகி விடுகிறது. அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் உடல் ஓய்வைத் தேடுகிறது. இருந்தாலும் இன்று எப்படியானும் முடிச்சுடணும்னு இரண்டு நூல்களையும் பிழை திருத்தங்கள் சரி பார்த்து விட்டுப் போனதைப் பதிவுகளில் தேடிச் சரி பார்த்து அனுப்பி வைக்க இத்தனை நேரம் ஆகி விட்டது. வெளி வந்ததும் இங்கே சுட்டி கொடுக்கிறேன்.  இரண்டுமே  நீங்கள் அனைவரும் ஏற்கெனவே படித்து ரசித்தது தான்.

இனி நாளை முதல் பண்டரிபுரம் பதிவின் தொடர்ச்சியை எழுதி முடிக்கணும். அதிகம் இல்லை. ஒரு நாளில் முடிந்து விடும் என எண்ணுகிறேன். இன்னும் இரு புத்தகங்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் விரைவில் அனுப்பி வைக்கும்படி இருக்கும்.ஆகவே கொஞ்சம் அப்படி, இப்படி வருவேன். பொறுத்துக்கொள்ளவும். அல்லது விட்டது தொல்லை என சந்தோஷமும் அடையலாம்! :P :P:P:P:P இப்போக் கடமை ரொம்ப நேரமா அழைப்பதால் போய் வருகிறேன். டாட்டா, பை, பை! இஃகி, இஃகி, நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு நல்ல மூட். டாட்டா சொல்லி ஃப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது. :))))))

Friday, May 17, 2019

ஙே!!!!!!!!!!!!!!!!!!!

மூன்று நாட்களாக வேலை அதிகம். இணையத்துக்கு வந்தாலும் பதிவுகள் போடவோ,நண்பர்கள்பதிவுகளைப் படிக்கவோ முடியவில்லை. நல்ல வேளையாக யாரும் தேடவில்லை. நெ.த.வும், ரேவதியும் மட்டும் தனியாகச் செய்தி கொடுத்துக் கேட்டிருந்தார்கள். அதோட அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வேலைகள் முக்கியம் இல்லையா? அதிரடி எல்லாம் அம்மா வந்திருக்கும் சந்தோஷத்தில் நினைக்கக் கூட மாட்டாங்க என்பது இயல்பு. அதோடு அவங்களுக்கு என்னோட ஜனனி, ஜனனி பதிவில் கொஞ்சம் இல்லை நிறைய வருத்தம்! :) மனசு தாங்கவில்லை அவங்களுக்கு.  நேற்றைய ஸ்ரீராமின் பதிவு மட்டும் அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். கருத்துச் சொல்லவில்லை. அங்கே இருந்த ட்ராஃபிக் ஜாமில் காணாமல் போய்விடும் அபாயம் இருந்ததால் எதுவும் சொல்லவில்லை. யாருக்கானும் அந்த ருசியில் நம்ம நினைவு வந்திருந்தால்தான் ஆச்சரியப் படணும். :)

நேத்து ராத்திரி/இல்லை, இல்லை, இன்னிக்குக் காலையிலே தூக்கத்திலே  3- 30 மணி சுமாருக்குக் கத்தினேனாம். நம்ம ரங்க்ஸ் சொல்றார். எனக்கு நினைவில் இதெல்லாம் இருப்பதில்லை. எதுக்குக் கத்தினேன்னு கேட்டார். முழிச்சேன். என்ன பதில் சொல்றது? அப்போத் தான் 3 மணிக்கு ஏசியை அணைச்சுட்டுப் படுத்தேன். அரைமணிக்குள் என்னவா இருக்கும்? இஃகி,இஃகி, எனக்கே தெரியலை! ஒரு வேளை நேற்றைய அனுபவங்களோ?  நேத்துப் பூரா ஐஆர்சிடிசி தளத்தில் வெட்டியாக நாளைச் செலவழித்ததில் அதில் பயந்துட்டேனோ என்னமோ! கடைசியில் ரயில்வேயில் அங்கே இங்கேனு கேட்டும் மெயில் கொடுத்தும் வேலைக்கு ஆகலை! அது எரர் காட்டிக் கொண்டே இருக்கு. விஷயம் ஏதும் இல்லை.  ஐஆர்சிடிசி மூலம் ரயில்வேயில் அறை முன்பதிவு செய்யணும். தலை கீழா நின்னு பார்த்துட்டேன். பெப்பே என்று விட்டது. இன்னிக்கு மறுபடி உட்காரலாமா வேண்டாமானு யோசனை. அப்புறமா இந்த நாளும் வெட்டியாக ஆயிடுமோனு பயம்மா இருக்கு! அதான் துர்சொப்பனமா வந்து கத்தினேனோ? ஙே!!!!!!!!!!!!!!!!!!

Sunday, May 12, 2019

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

(ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ  (மீள் பதிவு!)





அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

கிட்டத்தட்டப் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்தாருக்கும் இதே அனுபவம். தன் தாய் இறந்ததும் பச்சை வாழைமட்டைகளை வைத்தே இவரும் தாய்க்குத் தீ மூட்டினார். அப்போது பாடிய பாடல்கள்  ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகத்தை ஒத்திருக்கும்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

மாத்ரு பஞ்சகத்தில் சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. இதுக்கு மேல் எழுதினால் கல்லெறி விழும்னு நினைக்கிறேன்.

தாயுமானவராய் இருந்து தன் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து கொடுத்துச் சிறப்பாகக் கடமை ஆற்றிய கில்லர்ஜி அவர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அவரை இவ்வளவு பொறுப்பாக வளர்த்த அவர் அன்னைக்கும் நம் நமஸ்காரங்கள்.

Saturday, May 11, 2019

ஜெய ஜெய விட்டல! பாண்டுரங்க விட்டல!

இந்தப் பண்டரிநாதன் எளியோருக்கு எளியவன். இவனை அதிகம் தரிசிக்க வருபவர்கள் அக்கம்பக்கம் ஊர்களில் உள்ள எளிய கிராம மக்களே. ஆகவே தான் அவர்கள் வந்து தங்குவதற்கு ஏற்றாற்போல் ஓட்டல் அறைகள் இருப்பதாகச் சொன்னார் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் முதலாளி. ஒரு அறையில் குறைந்த பட்சமாக நாலைந்து பேர் தங்குவார்களாம். கட்டிலில் படுத்தால் 500 ரூபாயும் கீழே படுக்கிறவர்கள் 300 ரூபாய் எனவும் பணம் வாங்குவார்களாம். கீழே நாலு பேர் படுத்தால் 1200 ரூ ஆகிவிடுகிறது. இரண்டு கட்டில்களில் படுப்பவர்கள் மூலம் ஆயிரம் ரூபாய்! ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 2,200 ரூக்குக் குறையாமல் வசூல் ஆகுமாம். அப்படிக் கொடுக்கப்படும் அறையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் தங்குவது என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இரண்டு பேருமே வயதில் பெரியவங்க என்பதால் அறையைக் கொடுத்திருக்கோம். மற்றபடி இங்கே நாங்க சேவை எதுவும் செய்ய மாட்டோம். நீங்களே பார்த்துக்க வேண்டியது தான் எனத் திட்டவட்டமாக ஓட்டல் முதலாளி கூறி இருந்தார்.

அதோடு அங்கே வெளி வாசலில் போட்டிருந்த சில நாற்காலிகள் அவங்க மட்டும் உட்காருவதற்காகப் போல! தெரியாமல் அதில் உட்கார்ந்துவிட்டு! போதும், போதும்னு ஆயிடுத்து! இதிலே நாளைக்காலை வரை இருக்கணும். அதோடு இன்னொரு முறை தரிசனமும் பண்ணணும்னு நம்ம ரங்க்ஸ் ஆவல்! எட்டரைக்குத் தான் பார்க்க முடியுமாம். எட்டரைக்கு நாங்க கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆயிடும் என்கிறார்கள். 11-20க்கு உத்யான் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புனே செல்கிறது. புனேக்கு 3-45க்குப் போயிடும். ஆனால் போய் 20 நிமிஷத்தில் ரயிலைப் பிடிக்கணும். எந்த நடைமேடைனு எல்லாம் தெரியாது. அங்கே போய்த் தான் பார்க்கணும். 2,3,4 ஆம் நடைமேடைகள் எனில் படிகள் வழியே மேலே ஏறுவது எனில் சிரமம்! மண்டையை உடைத்துக் கொண்டே ஆட்டோவில் பயணித்துக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். மிகப் பழமையான ஊர். இன்னமும் முழுக்க முழுக்க "ந"ர"க மயம் ஆகவில்லை.  ஆட்டோ ஓட்டுநர் நாங்க பேசினதைக் கேட்டுவிட்டு இந்த ஆட்டோவில் எல்லாம் நீங்க சோலாப்பூர் வரை பயணிக்க முடியாது. கஷ்டம், அதுவும் அம்மா ரொம்ப சிரமப்படுவாங்க என்றார்.

அப்போ நம்மவர் தனியார் பேருந்துகள் இருக்கானு கேட்டார். அதோடு ஏதோ ஓர் ட்ராவல்ஸ் பெயர் சொல்லி அவங்க பேருந்து புனேக்கு இருக்கானும் கேட்டார். அந்த ஓட்டுநர் தரிசனம் முடிச்சுட்டு வாங்க! நான் கூட்டிப் போகிறேன். அப்படியே சாப்பாடுக்கும் குஜராத்தி தாலி மீல்ஸுக்குக் கூட்டிச் செல்கிறேன். என்றார். சரி எனச் சம்மதித்தோம். கோயில் நெருங்கியாச்சா எனக் கேட்டதுக்கு எதிரே இருந்த சுமார் 20,25 படிகளைக் காட்டி இந்தப் படிகளில் ஏறி அந்தப்பக்கம் சென்றால் கோயில் வாசல் வரும் என்றார். ஙே!! படிகள்,எங்கே போனாலும் படிகள்! ஆனால் விட்டலனைப் பார்த்தாகணும்! ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு எங்களைப் படிகளில் ஏற்றிவிட ஆட்டோ ஓட்டுநரும் கூட வந்தார். எங்கள் தரிசனத்துக்கான முன்பதிவுச் சீட்டுக்களில் அங்கே ஓர் மடத்தில் போய் முத்திரை வைச்சுக்கணும். இருவருமாகச் சென்று அதை முடித்துக் கொண்டு வந்தனர். அது இல்லைனாலும் பார்க்கலாம். கூட்டம் எல்லாம் இப்போ அதிகம் இருக்காது என்றார் ஓட்டுநர். நாங்க போனது தான் முக்கிய வாயில் என நினைக்கிறேன். கோபுர வாயிலில் இருந்து தெருப்பூராவும் அடைத்துப் பந்தல் போட்டிருந்ததால் கோபுரம் தெரியவே இல்லை. 

இரு பக்கங்களிலும் நிறையக் கடைகள். நாங்க ஓர் கடையில் துளசி மாலைகள் மட்டும் வாங்கிக் கொண்டோம். மற்றவற்றை அப்படியே தூக்கி எறிவாங்க! அந்தக் கடையிலேயே செருப்பை விட்டுவிட்டுக் கோயில் முக்கிய வாயிலுக்குள் நுழைய முடியுமானு பார்த்தால் பக்கவாட்டில் கம்பித் தடுப்புப் போட்டு முன்னர் மேலே ஏறிப் போன மாதிரியான வாயிலில் கொண்டு விட்டது. என்னடா இது மேலே ஏறணுமோனு நினைச்சு அங்கே இருந்த பக்தர் ஒருத்தரைக் கேட்டதுக்கு ஏற வேண்டாம், நேரே போங்க, பெரிய மண்டபம் வரும் என்றார்.  சரினு நேரே உள்ளே போனோம். பெரிய மண்டபம் வந்தது. அங்கே பலரும் தரிசனத்துக்கான வரிசையில் நின்றிருந்தனர். சிலர் ஒரு கூட்டமாக நின்றிருந்தனர். இன்னொரு வரிசை வேறொரு வாயில் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அதற்குள்ளாக மாலை வழிபாட்டுக்கான நேரம் வரவே திரை போட்டார்கள். விட்டலனுக்கும் ரெகுமாயி என அழைக்கப்படும் ருக்மிணிக்கும் ஆராதனைகள் முடிந்த பின்னரே திரை திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே நுழையலாம் என்றார்கள். காத்திருந்தோம்.

பாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு 

படத்துக்கு நன்றி விக்கிபீடியா



பாண்டுரங்கன் கோயில்/பண்டரிபுரம் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி கூகிளார்.