எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 30, 2018

மறுபடியும் சித்தப்பா! :(

நடிகர் சூரியா ரசிகர்களையும் அவங்களோட அதீத ஆர்வத்தையும் குறித்து ஏதோ ஒரு கருத்தை "தமிழ் தி இந்து" வில் எழுதி இருக்கார் போல! அதற்குப் பதிலாக எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதி இருப்பதில் சித்தப்பாவுக்கு வீட்டில் எழுத இடமே இல்லாதமாதிரியும், சாப்பாடு கூடச் சாப்பிடாமல் வறுமையில் உழன்றதாகவும், பிள்ளைகள் தலைஎடுத்துத் தான் சாப்பிடவே முடிஞ்சது என்பது போலவும் எழுதி இருக்கார். இதில் கொஞ்சம் கூட உண்மையே இல்லை. தி.நகரில் சொந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். கூடவே அம்மா, தங்கை, தம்பி, அக்கா இருந்தனர். அதன் பின்னர் கல்யாணம் ஆனதும் சித்தி, குழந்தைகள், தம்பி, தம்பி மனைவி, அக்கா ஆகியோருடன் இருந்தார். கொல்லைப்பக்கம் ஒரு போர்ஷனில் அவர் தங்கை கணவர் குழந்தைகளுடன் இருந்தார். இன்னொரு போர்ஷனையும், அவுட் ஹவுஸ் எனப்படும் சிறிய ஓட்டு வீட்டையும் வாடகைக்கு விட்டிருந்தார்கள். இவங்க இருந்தது நல்ல கெட்டிக் கட்டிடம். வறுமையில் உழன்றவரால் எங்களைப் போல மச்சினி குழந்தைகள், மச்சினர் குழந்தைகள், அக்கா, தங்கை குழந்தைகள் என வருவோரும் போவோருமாய் இருக்கும் வீட்டை எப்படி சம்ரக்ஷனை செய்திருக்க முடியும்? அதுவும் நாங்க எல்லாம் மாசக்கணக்கில் தங்கி இருந்திருக்கோம். எங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டவருக்குச் சாப்பிட முடியாமல் வறுமையா? வாய்ப்பே இல்லை. என்னோட பத்து வயசில் இருந்து அவருடைய வாழ்க்கையை நன்கு கவனிச்சு வந்திருக்கேன். எங்க வீடுகளில் அவருடைய கருத்துக்கு எப்போதும் மதிப்பு உண்டு. அவர் தன் வீட்டில் மனைவியின் பிறந்தக உறவினர்களைப் பல காலம் தங்க வைத்து அவங்க முன்னுக்கு வரும்வரை ஆதரவு காட்டி இருக்கார். பின்னரும் எங்களோட நலன்களில் ஆழ்ந்த கவனம் வைத்து விசாரிப்பார்.

எல்லாம் சரி, அசோகமித்திரன் போன்ற பிரபலங்கள் கவனிக்கப்படவில்லை என்பது குறித்தச்சாரு நிவேதிதா வருத்தப்படுவதாகவே   ஒத்துக்கொள்ளலாம்.எதில் இதைக் குறித்துச் சித்தப்பா சொல்லி இருக்கார்? அவர் அப்படி எல்லாம் சொல்லுபவரே இல்லை.     மற்றவை எப்படியோ பரவி இருக்கிறது. இதை யார் ஆரம்பிச்சு வைச்சாங்க என்பது தெரியவில்லை. ஆனால் சித்தப்பா வறுமையில் உழன்றார். வீட்டில் எழுத இடம் இல்லை என்பதெல்லாம் சரியாய்த் தெரியலை. இதைச் சித்தப்பா எங்கே எப்போது யாரிடம் சொன்னார் அல்லது எழுதினார் என்பது தெரியவில்லை. ஏனெனில் தி.நகர் தாமோதர ரெட்டித் தெருவில் அவங்க வீடு ஓர் ஆலமரம். எங்களைப் போல் பலர் அங்கே தங்கிச் சாப்பிட்டுக் கொண்டு எங்கள் எதிர்காலங்களை நிச்சயித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளும் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டதில்லை. ஆஸ்த்மா தொந்திரவு உண்டு தான்! அதனால் தான் சாப்பிட முடியாமல் போயிருக்குமே தவிர்த்து வறுமையினால் அல்ல. அவர் வீடு சொந்த வீடு! கீழேயும் மேலேயும் ஒரே மாதிரியான அமைப்புடன் கட்டிய அந்தக் கால மெட்ராஸ் டெரஸ் என்பது போடப்பட்ட வீடு. கொல்லைப்பக்கம் ஓடு வேய்ந்து இரு போர்ஷன்கள். அவங்க வீட்டுப் பிரபலமான மாமரத்துக்கு அருகில் அவுட்ஹவுஸ் எனப்படும் சின்ன ஓட்டு வீடு! சுமார் ஒன்றரை கிரவுண்டுக்குக் குறையாது. வீட்டில் அவருடன் மனைவி குழந்தைகள் தவிர்த்துத் தம்பி, அக்கா ஆகியோரும் இருந்திருக்கின்றனர். தம்பி மனைவி எனக்குச் சொந்த நாத்தனார். யாரும் எப்போதும் வறுமையில் உழன்று சாப்பாடு கூடச் சாப்பிட முடியாமல் இருந்தது இல்லை. சித்தப்பா வீட்டுக்கு எதிரே எருமைமாடு கறந்து அந்தப் பால் தான் வாங்கிக் காஃபி போடுவார். காப்பிக்கொட்டையை வறுத்து அன்றன்று மிஷினில் அரைத்து டிகாக்ஷன் போட்டுத் தான் காஃபி. அந்தக் காஃபி ஒன்றே சொல்லும் அவர் வறுமையில் உழன்றாரா இல்லையா என்பதை! பட்டினி கிடந்தார் என்பதும் பிள்ளைகள் தலையெடுத்துத் தான் சாப்பிட முடிந்தது என்பதெல்லாம் அவர் நிழலில் எங்கள் எதிர்காலத்தை நிச்சயித்துக் கொண்ட எங்களுக்கெல்லாம் ஏற்க முடியாத ஒன்று.

விஷயம் என்னவென்று புரியாதவர்களுக்காக என் பழைய பதிவின் சுட்டியை இங்கே இணைத்துள்ளேன். எழுத்தாளர் அசோகமித்திரன் என் சித்தப்பா. அவர் வாழ்க்கையில் நடக்காதவைகளை எல்லாம் நடந்ததாகச் சொல்லுகின்றனர் சில சக எழுத்தாளர்கள். அதில் ஜெயமோகன் முன்னிலையில் இருந்தார். இப்போது சாரு நிவேதிதா! :(  எனக்கு அடுத்தடுத்து இவை வரவே நானும் தமிழ் தி இந்துவில் தான் சாரு நிவேதிதா பதில் கொடுத்திருக்காரோ என நினைத்து அங்கேயே பதில் கொடுக்கலாம் என எண்ணியபோது மின் தமிழ்க் குழுமத்தில் சிநேகிதி இது சாரு நிவேதிதா தன் தளத்திலும் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டது என்பதைச் சொன்னார். அங்கேயே போய் பதில் கொடுக்க நினைத்தாலும் அது பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பதிலோ கருத்தோ சொல்லலாம் என்னும் அமைப்பில் உள்ளது. ஆகவே  இங்கே பதிவாகவும் முகநூலில் இதன் சுட்டியும் கொடுத்துள்ளேன்.

ஜெயமோகன் சொன்னது

Wednesday, November 28, 2018

சாமியே சரணம் ஐயப்பா! முடிவுப் பகுதி!

ஐயப்பன் க்கான பட முடிவு

முந்தைய பதிவு

இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.

நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.
ஐயப்பன் க்கான பட முடிவு
சபரிமலைக்குச் செல்லக் கடுமையான விரதம் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி விரதம் இருப்பதற்கான மாலை அணிய வேண்டும். அதுவும் குருசாமி மூலமே அணிவிக்கப்பட வேண்டும். விரத காலம் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலம் ஆகும். இந்த நாட்களில் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு அதையும் சரணம் சொல்லி ஐயப்பனுக்குப் படைத்த பின்னர் உண்ண வேண்டும்.  காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுச் சுத்தமான ஆடை அணிந்து நெற்றியில் விபூதி தரித்துக் கொண்டு ஐயப்பன் படத்துக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு 108 சரண கோஷம் இட வேண்டும். திருமணம் ஆனவர்கள் கடுமையான பிரமசரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களும் மனதில் ஐயப்பன் குறித்த சிந்தனையே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதில் தடுமாற்றம் கூடாது.  உருத்திராக்ஷ மாலையோ துளசிமணி மாலையோ ஐயப்பன் பதக்கத்தோடு அணியலாம். துணை மாலையும் ஒன்று இருத்தல் நலம்.

ஐயப்பன் கோயிலுக்கு முதல் முறை செல்பவர்களைக் "கன்னிச்சாமி" என அழைப்பார்கள்.  கன்னிச்சாமியாக இருந்தால் கறுப்பு வண்ண உடையே உடுத்த வேண்டும். மற்றவர்கள் நீலம், கறுப்பு, பச்சை வண்ண உடை உடுத்தலாம்.  விரத காலத்தில் ஆண்கள் முடிவெட்டிக் கொள்வதோ, முக சவரம் செய்வதோ கூடாது. கூடியவரையில் தரையில் பாய் விரித்துப் படுக்கலாம் என்றாலும் மேல்நாடுகளிலோ குளிர் பிரதேசங்களிலோ இருப்பவர்கள் அதைத் தவிர்த்தல் நலம். உடல் நலம் கெடும்.  கோபம் கொள்வதோ, பொய் பேசுவதோ அடுத்தவரை நிந்தனை செய்வதோ கூடாது. மது, மாமிசம், சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களைச் சாப்பிடக் கூடாது.  யாருடன் பேசினாலும் "சரணம் ஐயப்பா!" என்று தொடங்கி, "சரணம் ஐயப்பா!" வில் முடிக்க வேண்டும். விரதம் முடியும்வரை எக்காரணத்தைக் கொண்டு மாலையைக் கழட்டக் கூடாது. ஆனால் இறப்புத்தீட்டு வந்துவிட்டால் மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டுவிட வேண்டும். பின்னர் அடுத்த வருடம் தான் மாலை அணியலாம் என்கின்றனர்.

விரத காலத்தில் சந்திக்கும் ஆண்களை "ஐயப்பா!" என்றும் பெண்களை "மாளிகைப்புரம்" எனவும் அழைக்க வேண்டும். ஆண் குழந்தைகளை "மணிகண்டன்" எனவும், பெண் குழந்தைகளை, "கொச்சி" எனவும் அழைக்கவேண்டும்.  இப்போத் தான் முக்கியமான சர்ச்சைக்குரிய விஷயம். மாதவிலக்காகும் பெண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது! பொதுவாகப் பெண்களே இத்தகைய மாலை அணிந்தவர்களைக் கண்டால் "அந்த நாட்களில்" விலகி இருப்பார்கள்.  அறியாமல் பார்க்க நேர்ந்து பின்னர் அறிய நேர்ந்தால் உடனே வீட்டுக்கு வரமுடிந்தால் வந்து குளித்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும். அல்லது வீட்டுக்கு வந்தபின்னர் குளித்து முடித்துச் சரணம் சொன்னபின்னர் சாப்பிடலாம். இருமுடி கட்டும் முன்னர் ஒவ்வொரு ஐயப்பன்மாரும் அவரவர் வீட்டில் பஜனை அல்லது பூஜை வைத்துக் கொண்டு அன்னதானம் வழங்கலாம். இருமுடியை குருசாமி வீட்டிலோ அல்லது கோயில் ஏதேனும் ஒன்றிலோ வைத்துக் கொள்ளலாம். குருசாமி தான் இருமுடியைத் தலையில் ஏற்றுவார். ஒவ்வொரு முறையும் அவர் தான் இறக்கவும் செய்வார். அவர் அனுமதி இல்லாமல் நாமாக இருமுடியை ஏற்றவோ இறக்கவோ கூடாது.  இருமுடி கட்டிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பும்போது போய் வருகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது, வீட்டின் தலைவாயில் படிக்கட்டில் தேங்காயை உடைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் சிறிது தூரம் அவர்களுடன் செல்லலாம். ஆனால் வழி அனுப்பும் விதமாகவோ, பத்திரமாகப்போய்வாருங்கள் என்றோ கூறக்கூடாது. யாத்திரை முடிந்ததும் பிரசாதங்களோடு வீட்டுக்கு வந்து நுழையும்போது மறுபடியும் தேங்காய் உடைத்து நுழைந்து பூஜையறையில் சரணம் சொல்லி வணங்கி கற்பூர ஆரத்தி காட்டி இருமுடி அரிசியைச் சமைத்து உண்ண வேண்டும்.

படங்களுக்கு நன்றி கூகிளார். 

Monday, November 26, 2018

எல்லாம் சகவாச தோஷம் தான்!

நம்ம நெல்லைத் தமிழர் வந்தப்போ அவருக்கு இலுப்பச்சட்டி தோசை (ரெட்டை விளிம்பு தோசைனு காமாக்ஷி அம்மா சொல்வாங்களே அது) வார்த்துக் கொடுத்தேன். அன்னிக்குப் பேச்சு மும்முரத்தில் அவங்களையே படம் எடுக்க மறந்துட்டேன். இதை எப்படி எடுத்திருப்பேன். மறந்தே போச்சு. இப்போ இரண்டு நாட்கள் முந்தி ராத்திரிக்கு நம்ம ரங்க்ஸுக்கும் எனக்கும் இதே இலுப்பச்சட்டி தோசை வார்த்தேனா! அப்போ திடீர்னு நினைப்பு வந்து  படம் எடுத்தேன். ஏற்கெனவே இரண்டு, மூணு முறை போட்டிருக்கேன். இது எத்தனாவது தரம்னு தெரியலை! பரவாயில்லை. பார்த்து ரசிக்காதவங்க ரசிக்கலாமே!



சட்டியில் தோசை மாவு ஊற்றியவுடன் மேலே இப்படி உப்பிக் கொண்டு வரணும். தோசை ஓரங்களில் மெலிதாக மொறு மொறுவென்றும் நடுவில் கனமாக உள்ளே ஸ்பாஞ்ச் போலவும் வரும். 


உள்ளேயும் வேக வேண்டும் என்பதற்காக மாவை ஊற்றிய உடனே  கரண்டியை ஒரு 2 செகண்ட் மாவின் நடுவில் வைச்சுட்டு உடனே எடுக்கணும். அதிக நேரம் இருந்தால் கரண்டியில் ஒட்டி இருக்கும் மாவும் சேர்ந்து வேகும். அப்படி எடுத்ததைத் திருப்பிப் போட்டுக் கொஞ்சம் கூட நேரம் வேக விட்டால் ஓட்டை போட்டுக் கொண்டு தோசை நன்றாக இருக்கும். ஓரத்து விளிம்பைத் தவிர்த்து தோசையின் நடுபாகத்திலும் ஓர் விளிம்பு உருவாகும்.   இதுக்குத் தொட்டுக்க மி.பொ. நன்றாக இருக்கும் என்றாலும் எனக்கு வெங்காயச் சட்னி தான் பிடிக்கும். இப்போத் தக்காளித் தொக்குப் பண்ணி வைச்சிருப்பதால் அதையே தொட்டுண்டோம். கூடக் கொத்துமல்லி மி.பொ. 



இந்தப் பதிவு எழுதக் காரணமே நம்ம ரங்க்ஸ்தான். எனக்குத் தான் திப்பிசம் தெரியும்னு நினைச்சால், ஹிஹி அவருக்கும் வந்திருக்கு. கார்த்திகை தீபத்தன்று காலை வடை தட்டினேனா! நம்ம வீட்டில் முப்பருப்பு வடை தான்! அந்த வடை மாவு மிஞ்சிப் போச்சு! அதை சனிக்கிழமை தட்டலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போ நம்ம ரங்க்ஸுக்கு திடீர்னு ஏதோ பொறி தட்டி இருக்கு. பீன்ஸ் மிச்சம் இருக்கு இல்லையா? இந்த மாவை வைச்சுப் பருப்பு உசிலி பண்ணலாமா, சரியா வருமானு கேட்டார். பருப்பு உசிலிக்கே எதிரியா இருந்தவர் திடீர்னு இப்போ நண்பராயிட்ட சந்தோஷத்தில் நான் மாவைத் தூக்கி உடனேயே மறுபடி குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டேன். அதோட என்ன நினைச்சேன்னா, நாம தான் திப்பிசமெல்லாம் செய்வோம், ஏகபோக உரிமையாளர்னு நினைச்சது எல்லாம் ஒரு செகண்டில் காணாத அடிச்சுட்டாரேனு தோணித்து. கூடவே சமாதானமும் செய்து கொண்டேன். இது சகவாச தோஷம் அப்படினு! என்ன நான் சொல்றது சரி தானே! அந்தப் படங்களைத் தான் கீழே பார்க்கறீங்க! 


வடை மாவை அலுமினியம் சட்டியில் போட்டதும் தான் நினைவு வந்தது இதை வைச்சு ஒரு "திங்க"ற பதிவு ஸ்ரீராமுக்குப் போட்டியா போடலாமேனு! ஆகவே கிளறிக் கொடுப்பதற்கு முன்னாடி தாளிதத்தில் மாவைச் சேர்த்ததும் படம் எடுத்தேன். பீன்ஸையும் ஏற்கெனவே வேக வைச்சதால் வெந்த பீன்ஸை வடிகட்டி வைச்சிருக்கும் படம். 





பருப்பு உசிலி அதிகமாயிருக்குமோனு நினைச்சதாலே கொஞ்சத்தைத் தனியா எடுத்து வைச்சேன். மற்றதில் பீன்ஸைப் போட்டுக் கிளறியாச்சு. தனியா எடுத்து வைச்சதை சாதத்தோடு சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.

இந்தத் திப்பிசம் முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்! நான் இல்லை; இல்லை; இல்லவே இல்லை! :))))

Sunday, November 25, 2018

என் மேனி அழகின் ரகசியம் குப்பைமேனியே! :)))))

குப்பை மேனி க்கான பட முடிவு


ஒரு வாரமா கடுமையான ஜலதோஷம், மூச்சு விட முடியலை! இருமல்! அதோட நவராத்திரிக்குப் பத்து நாட்கள் முன்னாடி வந்திருந்த அக்கியின் தொந்திரவும் குறையவில்லை. அக்கி உதிர்ந்து விட்டது அப்போவே. ஏழு நாட்கள் தொடர்ந்து மாத்திரைகள். ஒரு நாளைக்கு ஐந்து முறை. அரிப்புக்குத் தனி மாத்திரை! எல்லாம் தான் சாப்பிட்டேன். புண்கள் ஆறினாலும்  வலியும் குறுகுறுப்பும், சில சமயங்களில் அரிப்பும் குறையவில்லை. வலிக்குத் தனியா மறுபடியும் மருந்து சாப்பிட்டேன். என்றாலும் இன்னமும் அவ்வப்போது வலி இருக்கு! ஒரு முறை அக்கி வந்தால் அப்புறமா வராதுனு சொல்வாங்க. சொல்றாங்க! ஆனால் நாமதான் அதிசயம் ஆச்சே. நம்ம வழி எந்த வழியிலேயும் சேராதது! போன முறை அக்கி வந்தப்போ (சுமார் 30 வருஷம் முன்னர்) 1987 ஆம் ஆண்டு முதுகு முழுவதும் அக்கி தான்! மல்லாந்தும் படுக்கமுடியாது. ஒருக்களிச்சும் படுக்க முடியாது! ஒரே அவஸ்தை. குப்புறத் தான் படுத்துப்பேன். தூங்க முடியாது! தூக்கமும் வராது. வலி பொறுக்க முடியாமல் இருக்கும். கடுமையான அக்னி நக்ஷத்திரக்காலம்.  அதோடு தான் சுமார் 15 நபர்களுக்குச் சமைச்சு, காஃபி, டிஃபன் என எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் சமாளிச்சிருக்கேன். புண்கள் உதிரவே ஒரு மாசம் ஆனது.  ஒரு மாசமும் விருந்தாளிகள் இருந்தாங்க! என்றாலும் சமாளிச்சேன். எப்படியோ  சமாளிச்சிருக்கேன்! எப்பூடி?ஆனால் இப்போ என்னமோ ரொம்பத் தாங்கலை. இரண்டு நாட்கள் சாதம் மட்டும் வைச்சுட்டு, வெளியே சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கினோம். இரண்டு பேருக்கும் ஒத்துக்கலை! அப்புறம் சமைக்க ஆரம்பிச்சாச்சு!  அதனாலே கடந்த இரண்டு மாசமாகப் பாத்திரங்கள் கழுவ மட்டும் ஒரு பெண்மணியை உதவிக்கு வைச்சிருக்கேன். இல்லைனா இப்போ இருக்கும் ஜலதோஷம், விடாத இருமலுக்கு இன்னமும் அதிகம் ஆகும்!  ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும். நேத்திக்குக் கூட சாயங்காலமா நான் விளக்கு வைக்கையில் எதிரே உள்ள குடியிருப்பில் உள்ள இளம்பெண், "மாமி! ஃப்ரெஷா இருக்கீங்க!" என்று பாராட்டினாள்! இஃகி, இஃகி. என் இந்த மேனி அழகுக்குக் காரணம் குப்பை மேனி! குப்பை மேனின்னா தெரியுமா? தெருக்கள், சாலைகள் ஓரத்தில் கும்பலாக முளைச்சுக் கிடக்கும். அந்தக் குப்பை மேனியோட பவர் சொல்லி முடியாது! எனக்கு எப்போ ஃபோட்டோ அலர்ஜி வந்தாலும், அல்லது துணிகள் ஒத்துக்காமல் அலர்ஜி வந்தாலும் இது தான் கைகண்ட மருந்து. ஆகவே இப்போவும் அக்கித் தழும்புகள் சரியாக வேண்டியும் அரிப்புக் குறையவும் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு நம்ம ரங்க்ஸ் குப்பைமேனியும், வேப்பிலையும் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்தார்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (நீண்ட பெருமூச்சு) அம்பத்தூர் வீட்டில் தோட்டத்திலேயே குப்பைமேனி கிடைக்கும். சிறியா, பெரியா நங்கையிலிருந்து துளசி, தூதுவளை வரை எல்லாமும் கிடைக்கும்.  இப்போ எங்கே போறது! பொறுக்கித் தான் கொண்டு வரார். :( அதைத் தான் பச்சை மஞ்சளோடு சேர்த்து நன்கு நைசாக அரைச்சுத் தடவிக் கொண்டு குளிக்கிறேன். இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))

இந்த அக்கிக்கும் எனக்கும் என்னமோ தெரியலை! அப்படி ஒரு ராசி! இதோட 3 ஆம் முறையாவோ நாலாம் முறையாவோ வந்திருக்கு! சின்னக் குழந்தையா இருந்தப்போ மதுரையில் சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு சாயபு கிட்டே மந்திரிச்சு எழுதிக் கொண்டு வருவோம். 30 வருஷம் முன்னர் 87-இல் வந்தப்போவும் குயவனிடம் எழுதினது தான். ஆனால் இங்கே இம்முறையில் எழுதிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க! ஆகவே ஆங்கில மருந்துகள் தான்! எழுதற பாரம்பரியத்தில் பிறந்தவங்களுக்குத் தான் அதன் சூக்ஷுமம் தெரியுமாம். பூங்காவிப் பொடியை மஸ்லின் மாதிரியான துணியில் சலிச்சு அதில் என்னவோ சேர்த்து எழுதணும்னாங்க! சரி, இதிலே போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு எடுக்கலை! இப்போவும் மல்லாந்து படுக்கையில் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுது! நாளாக ஆகச் சரியாகும்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே பழைய குருடி, கதவைத் திறடி னு சொல்லிட்டு வீசிங் வந்தாச்சு! எப்படியோ இத்தகைய ரசனையான விஷயங்களுக்கிடையே  பொழுது போயிட்டு இருக்கு! ஒரு நாளாவது உடம்பு நல்லா இருக்குனு சொல்ல ஆசை! பார்ப்போம்! :))))

அக்கினு வெளியே யாரிடமும் சொல்லிக்கலை. மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும். எப்போப் பார்த்தாலும் புலம்பறோமேனு தான் எதுவும் சொல்லறதில்லை! ஆனால் இன்னிக்கு மேனி அழகைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் கொட்டிட்டேன். :)))) நாளை ஒரு ஜாலியான பதிவுடன் பார்க்கலாம்! அதிலே ஒரு ஆச்சரியமும் இருக்கே!

Saturday, November 24, 2018

கார்த்திகை தீபம்








மண் அகல் விளக்குகள். கீழே உட்கார்ந்து எல்லாம் செய்யும் அளவுக்கு இடவசதியும் இல்லை. உட்காரவும் முடியாது. ஆகவே ஒரு டேபிளின் மேல் கோலம் போட்டு வைச்சாச்சு. பெரிய குத்துவிளக்குகள் கீழே பலகையின் மேலே.

மற்றப் பித்தளை, வெண்கல விளக்குகள் இந்தப்பக்கம் வேறொரு ஸ்டூலில். இரண்டுக்கும் நடுவே அவல் பொரி, நெல் பொரி, அப்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூக்கள். 

எங்க வீட்டு வாசலில் நான் போட்ட கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள். காலையிலிருந்து பெரு மழையாகத் தூறிக்கொண்டே இருந்தது. வெளித் தாழ்வாரத்தில் ஜன்னல் வழியே சாரல் வேறே இருந்தது. கோலத்தைச் சீக்கிரமாய்ப் போட்டால் தான் காயும்னு பனிரண்டரை மணிக்கே போட்டேன். அப்புறமாக் கவலை வந்து விட்டது. மழைத்தண்ணீர் பட்டு அழிஞ்சுடுமோனு! நல்ல வேளையா நான் கோலம் போட்ட சிறிது நேரத்தில் சின்னத் தூறலாக மாறி விட்டது. இப்போக் காலையிலிருந்து எட்டிப் பார்க்காமல் இருந்த சூரியன் பளிச்சென்று முகமெல்லாம் கழுவிக் கொண்டு சுடச் சுட வந்துட்டார். 


எங்க வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வாசல் கோலத்தில் விளக்குகள். கிட்டேப் போய் எடுக்கணும்னா விளக்குகளைத் தாண்டணும். இரண்டு பக்கமும் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் காலை வைத்தால் வழுக்கும் என்பதோடு கோலத்தில் பட்டு இன்னமும் வழுக்கும். விளக்குகளுக்கும் ஆபத்து! அதான் வெளியேயே போகலை! 

Thursday, November 22, 2018

யாரைத் தான் நொந்து கொள்வது!

கஜா புயல் பாதிப்பு க்கான பட முடிவு

சென்னையில் வெள்ளம்னா எல்லோருமே உதவியது போல் இப்போது டெல்டா மாவட்டங்களில் உதவவில்லை என்று ஒரு பொதுவான எண்ணம்/கருத்துப் பரவி உள்ளது. சென்னை தலைநகரம். எல்லா வசதிகளும் பொருந்திய ஓர் இடம். அதோடு ஆளுநர் முதல் முதல்வரில் இருந்து அனைத்துஅமைச்சர்கள் அதிகாரிகள் இருக்கின்றனர். ஆகவே ஒருவரைக் கலந்தாலோசிப்பது எளிது. உடனுக்குடன் முடிவுகள் எடுக்கலாம். ஆனால் இங்கே பாதிப்புக்கு உள்ளானது சுமார் ஐந்து முதல் ஏழு மாவட்டங்கள். இதில் டெல்டாப் பகுதியில் மட்டும் ஐந்து மாவட்டங்கள். ஏகப்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. மின் கம்பங்கள் சரிந்திருக்கின்றன. புயலின் வேகம் வானிலை ஆய்வு மையம் சொன்னதை விட அதிகமாக இருந்திருக்கிறது. ஆனாலும் மெதுவாக வந்தாலும் புயல் தரையைத் தாக்கும்போது வேகம் அதிகரிக்கும் என்று சொல்லி இருந்தனர்.

இப்போது மீட்புப் பணிகளில் தொய்வு என்கிறார்கள். முதலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திச் சாலையைச் சீரமைத்தால் தான் மீட்புப் பணியாளர்கள் ஒரு நகருக்குள்ளேயோ கிராமங்களுக்கு உள்ளேயோ போகவே முடியும். அதற்கே இரண்டு நாட்கள் ஆகி இருக்கிறது. உள்ளே உள்ள சீர்கேடுகளையும் சரி செய்யணும். முக்கியமாய் மின் கம்பங்கள்! எத்தனை மறுபடி பயன்படும், எத்தனை பயன்படாது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.குற்றம் சொல்வது எளிது. ஆனால் சென்னை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே பகுதியாக இருந்ததால் மீட்புப் பணிகள் எளிதானது. அதோடு தேவையான சாதனங்கள் ஆள்க் கட்டு அனைத்தும் கிடைத்தன. ஆனால் இங்கே எத்தனை மாவட்டங்கள்!

அதோடு அவற்றுக்கான நிவாரணங்களை அனுப்புவதற்கே வழி சரியாக இல்லாமல் போய்ச் சேர முடியவில்லை. மேலும் ஆட்கள் எல்லோருமே வெளியில் இருந்து வரணும். உபகரணங்கள் அனைத்தும் வெளியே இருந்து வரணும். இத்தகையதொரு அழிவைப் புயல் வருவதற்கு முன்னால் தான் கொஞ்சமானும் புரிஞ்சுக்கவே முடியும். அப்போதும் கூட மரங்கள் விழுவதை நம்மால் தடுக்க முடியுமா? இயற்கையை எதிர்கொள்ள முடியுமா? பல தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள் அழிந்திருக்கின்றன. வாழையாவது ஐந்து வருடங்களுக்குள்ளாகச் சரி செய்து விடலாம். ஆனால் தென்னை மரங்கள்? இதிலிருந்து மீண்டு வர வேண்டியதற்கு ஆவன செய்ய முயலவேண்டும்.  ஆகவே தேவையான உபகரணங்கள் ஆள்க் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்னரே பெற முடியும். தற்காப்பு நடவடிக்கைகள் தான் உடனே செய்யக் கூடியது! மற்றபடி மரங்கள் விழுந்ததுக்கு எல்லாம் அரசு பொறுப்பாகுமா? நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. அது ஒழுங்கா போய்ச் சேருபவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்கள் முன்னர் பட்டுக்கோட்டைப்பகுதிக்குப் போனவர்கள் மூலம் அந்தப் பகுதி கிராமங்கள் மோசமான நிலையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தென்னை மரங்கள் வேரோடிப் போயிருப்பதால் அந்தத் தோப்புகளில் முதலில் மணலுக்குள் வேரோடி இருக்கும் வேர்களை அகற்றி மண்ணுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதன் பின்னரே மறு பயிராக்குதல் பற்றி நினைக்கலாம். வாழைத் தோட்டங்களும் அவ்வாறே என்றாலும் அவற்றைக் குறைந்த பட்சமாக 3 மாதங்களுக்குள் சரி செய்துவிடலாம். வாழைத் தோட்டம் விரைவில் பலனும் அளித்துவிடும். அதற்கான ஆவன செய்யவேண்டியவற்றைப் பற்றி மட்டுமே இப்போது சிந்திக்கவேண்டும்.  ஒரேயடியாக அனைவரும் எல்லா ஊர்களுக்கும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. முதல்வராகவே இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பகுதிக்குத் தான் செல்ல முடியும். எதை முதலில் எடுத்துக்கொள்வது! எதை விடுவது! எல்லோருக்குமே பாதிப்பு! ஆகவே முடிந்தவரை அரசாங்கம் அனுப்பி வைக்கும் நிவாரணத் தொகை மற்றும் மக்களால் அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் சரியான முறையில் பங்கீடு செய்யப்படுகிறதா என்பதைத் தான் நாம் கண்காணிக்கலாம்.

கஜா புயல் பாதிப்பு க்கான பட முடிவு

தேங்காய் விலை ஏறும்போது புரியும்; வாழைப்பழம், காய் கிடைக்கலைனா தெரியும் என்றெல்லாம் மீட்புப் பணிகளுக்காகவும் விவசாயிகள் சார்பிலும்  சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். இங்கே யாரும் வேண்டுமென்று தென்னை மரங்களையோ, வாழை மரங்களையோ வெட்டிச் சாய்க்கவில்லை. பலரும் கடன் வாங்கியே பயிர்த்தொழில் செய்திருப்பார்கள் தான். அவங்களுக்கான நிவாரணத் தொகையை எல்லாம் முறைப்படி தான் கேட்டுப் பெறும்படி இருக்கும்.  உடனடி நிவாரணமாகச் சாப்பாட்டுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், துணி வகைகள் போன்றவை ஆங்காங்கே திரட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றது.  எல்லாம் உடனே நடக்கவேண்டும். பிரதமர் முதல் அனைவரும் உடனே வந்து பார்க்கணும் என்றால் அது இயலாத ஒன்று. மத்திய அரசு ஏற்கெனவே தேவையான உதவிகள் செய்வதாக அறிவித்தாயிற்று. நேற்று முதல்வரும் போய்ப் பிரதமரைச் சந்தித்துப் பேசியாகி விட்டது.  இயற்கையின் கோர தாண்டவம்! அதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தான் பார்க்கணும். எல்லாம் சரியாகக் குறைந்தது ஒரு வருஷம் ஆகலாம். மின்சாரம் முழுவதும் கொடுக்கப்படவும் ஆறு மாசம் ஆகும் என்கின்றனர்.  இதற்கு நாம் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக்கொண்டிருக்காமல் அரசோடு சேர்ந்து உதவிக்கரங்கள் மூலம் எப்படியேனும் இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்தால் போதும். 

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைத்து நிலைமை சீராகப்பிரார்த்தனைகள் செய்வோம்.