எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 31, 2014

டெல்லி சலோ! நெஞ்சு பொறுக்குதில்லையே! :(

வருடம் 1919  மாதம் ஏப்ரல்  தேதி 13. சீக்கியர்களின் பைசாகி கொண்டாட்டங்கள் நடைபெறும் தினம்.  குரு கோவிந்த் சிங் "கால்ஸா" என்னும் சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு. அம்ருத்சரில் இந்நாள் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படும்.  இப்போதும் கொண்டாடுவார்கள். அம்ருத்சரில் உள்ள ஜாலியாவாலாபாக் என்னும் பூங்காவின் திடலில் அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்து எல்லாம் ஆண், பெண், குழந்தைகள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கொண்டாட்டத்துக்காகக் கூடினார்கள். நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்த இந்தத் திடலுக்குச் செல்ல ஒரே ஒரு குறுகிய வழி மட்டும் தான் உள்ளே செல்லவும், வெளியே வரவும் இருந்தது. இன்னொரு வாயிலும் இருந்தாலும் அது வீரர்களால் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.


நாடெங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது.  திலகர் தலைமையில் உருவான சுதேசி இயக்கம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு மார்ச் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகமாக உருவெடுத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த இயக்கத்தைத் தங்கள் ஆட்சிக்கு வந்த வினையாகக் கருதினார்கள். இதை வளரவிட்டால் நாம் ஆட்சி செய்வது கஷ்டம் என்றும், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் நினைத்தனர்.  அவர்கள் நினைப்புக்கு ஏற்ப அப்போது சிட்னி ரெளலட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளை மட்டும் கவனமாக ஆராய்ந்து ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களை எவ்வித விசாரணையுமின்றிக் கைது செய்து சிறையில் அடைத்து வைக்கவும், அனுமதியோ தக்க வாரன்டோ இல்லாமல் எவரையும் சிறையில் அடைக்கவும் காவல்துறையினருக்கு வழி வகுத்துச் சட்டம் இயற்றப்பட்டது.  இது தான் ரெளலட் சட்டம் என்னும் பெயரில் நடைமுறைக்கு வந்தது.

இதை எதிர்த்து மக்கள் பெருமளவில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினதோடு அல்லாமல் தலைவர்கள் கைதையும் எதிர்த்தே ஜலியாவாலாபாக்கில் பெரும் கூட்டமாகத் திரண்டனர். அன்று கூட்டம் கூட்டவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தும் அதையும் மீறியே இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது.  அப்போது அங்கே அருகிலுள்ள ராணுவக் கன்டோன்மென்டில் இருந்து  ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் வரவழைக்கப்பட்டான்.  அவனுக்குக் கீழ் 65 கூர்க்காப் படை வீரர்களும் 25 பலூசிஸ்தான் வீரர்களும் இருந்தனர்.  அவர்களை அழைத்து வந்த டையர் அங்கே கூடி இருந்த மக்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் செல்வதற்கு இருந்த ஒரே வழியையும் அடைத்த வண்ணம், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான்.

அதோடு இல்லாமல் மேலும் இரண்டு யுத்த வண்டிகளில் மெஷின்கன்களோடும் வந்திருந்தான்.  ஆனால் அவை வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. முக்கியமான வழிகளை ராணுவ வீரர்களை நிறுத்திச் சுட வைத்த டையர் குறுகிய வழியாக வெளியேறும் மக்களையும் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் சுடச் சொன்னான்.  கூட்டத்தைக் கலைக்கச் செய்த எச்சரிக்கையாக அவன் இதைச் செய்யவில்லை என்றும் இந்தியர்களின் கீழ்ப்படியாமைக்குக் கொடுத்த தண்டனை என்றும் கூறி இருக்கிறான்.  பத்து நிமிடங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சூடில் ஒரு ராணுவ வீரனுக்கு 33 முறை என்னும் விகிதத்தில் மொத்தம் 1650 முறைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இறந்தவர்களில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் அதிகம்.

இந்தப் படுகொலையில் அதிகாரபூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தாலும், இறந்தவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் காயமும் அடைந்தனர்.  பலர் தங்கள் உயிர் தப்பவேண்டி அங்கிருந்த கிணற்றில் போய் விழுந்தனர்.  அப்படி இறந்தவர்களும் அநேகம்.  அந்தக் கிணறு அன்று நீரால் நிரம்பாமல் மக்களின் ரத்தத்தால் நிரம்பியது. ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயமடைந்தவர்கள் வெளியே சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ளக் கூட முடியாமல் அங்கேயே இருக்கும்படியும் நேரிட்டது. அப்போது பஞ்சாபில் இருந்த துணை ஆளுநர் மைக்கேல் ஓட்வையர் தனக்கு இவை அனைத்தும் உடன்பாடானவைகளே என்ற செய்தியை இங்கிலாந்துக்கு  அனுப்பி மகிழ்ந்தார்.  இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்னும் பிரபுக்கள் சபையில் டையரைப் பாராட்டினார்கள்.  அவன் அங்கே ஒரு மாபெரும் வீரதீரக் கதாநாயகனாகச் சித்திரிக்கபப்ட்டான்.  தன் மேலதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் மக்கள் மனதிலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த எண்ணிக் கூட்டம் சிதறிப் போகும் வரை தான் சுட்டதாகவும், இது குறைவு என்றும் இன்னும் அதிகம் சுட்டிருக்கலாம் எனவும்  தான் நினைத்த அளவுக்குத் துப்பாக்கிச் சூட்டை இன்னும் அதிகம் நிகழ்த்த முடியவில்லை என்றும் கூறியதோடு இந்நிகழ்ச்சியின் மூலம் பஞ்சாப் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மனதில் ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த நினைத்ததாகவும் தான் அவசியத்துக்கு  மேல் கடுமை காட்டியதாக நினைக்கவில்லை என்றும் இன்னும் கடுமை காட்டி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

பின்னால் 1920 களில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் மக்கள் சபையில் வின்ஸ்டன் சர்ச்சிலால் டையருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

மற்றப் படங்கள் தனிப் பதிவாக வரும்.

Saturday, March 29, 2014

டெல்லி சலோ! வாகா எல்லையில் கொடிகள் இறக்கப்படுகின்றன!


கொடிகள் இரண்டும் மேலே பறக்கின்றன.  நாம் பார்க்கும் வகையில் நமக்கு இடப்பக்கமாக இந்திய தேசியக் கொடியும், வலப்பக்கமாக பாகிஸ்தான் கொடியும் தெரிகிறது. தூரத்தில் தெரிவது பாகிஸ்தான் தரப்பின் இன்னொரு நுழைவாயிலில் பறக்கும் பாகிஸ்தான் கொடி.
இரு பக்கமும் சமமாக ஒரே சமயத்தில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிகள்.முற்றிலும் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொடிகள்ஒருகாலத்தில் நாம அண்ணன் தம்பி தானேனு உரசிக் கொண்டு பேசிக் கொண்ட கொடிகள்.   கொடி தெரியும் இடத்தில் நடுவே எழுதி உள்ளேன்.  பெரிது பண்ணிப் பார்த்தால் தெரியும்.


இந்திய தேசியக் கொடியைச் சுமந்த வண்ணம் ட்ரம்பெட் முழங்க அணிவகுத்து நடைபோட்டுச் செல்லும் வீரர்கள்.


டெல்லி சலோ! வாகா எல்லையில் நாங்கள்!

டெல்லி சலோ!

இங்கே விட்டிருந்தேன்.  சரியாக ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதலில் ட்ரம்பெட் ஊத, இரண்டு பெண் அதிகாரிகள்  அணி வகுத்து வந்தனர்.
பெண் அதிகாரிகள் செல்கின்றனர்.

அவங்க இரண்டு பேரும் அந்த வாயிலுக்கு அருகே போய் நின்று கொண்டு தங்கள் வலக்காலைத் தூக்கி சல்யூட் கொடுத்தனர்.  வலக்கால் தூக்கினதுன்னால் எப்படினு நினைக்கறீங்க? நடராஜரின் ஊர்த்துவ தாண்டவம் போல வலக்கால் தலை உச்சியைப்போய்த் தொட்டது.  அதே போல் இடக்காலும். பின்னர் அவர்கள் விறைப்பாக நின்று கொள்ள, மேலும் ஆறு ஆண் அதிகாரிகள் அணிவகுப்பில் வந்து இரு பக்கமும் அதே போல் காலைத் தூக்கி மரியாதை செய்துவிட்டு நின்றனர்.


ஆண் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு


இங்கிருந்து ஒருவரும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒருவரும் இரு வாயில்களுக்கும் இடையிலிருக்கும் பொதுவான இடமான நோ மேன்ஸ் லான்ட் பக்கம் போனார்கள்.  மற்றவர்கள் அணிவகுப்பை முடித்துக் கொண்டு இருபக்கமும் நின்று கொண்டனர். பின்னர் ட்ரம்பெட் முழங்க ஆரம்பித்தது.


இரு புறமும் வரிசையாக நிற்கும் ராணுவ வீரர்கள்

இது அத்தனையும் இந்தியப் பகுதியில் நடைபெறும் அதே நேரம் அங்கே பாகிஸ்தான் பகுதியிலும் நடைபெறுகிறது.  இருபக்கமும் ஒரே சமயம் வாயில் திறக்கப்படுகிறது. இப்போது ஒலி பெருக்கியில் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் சொல்லிவிட்டு, கொடியை இறக்கப் போவதால் அனைவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.  ஆகவே அனைவரும் எழுந்து நின்றோம்.


கதவு திறக்கப்படுகிறது.


கொடி இறக்குவதற்கு உரிய முறையில் ட்ரம்பெட் இசைக்க இரண்டு பக்கத்துக் கொடியும் ஒரே சமயம் இறக்கப் படுகிறது. நாங்கள் அமர்ந்திருந்த பகுதியில் கதவின் எதிர்ப்பக்கம் இந்தியக் கொடியும் எங்கள் பக்கக் கதவின் பக்கம் பாகிஸ்தான் கொடியும் இருந்தது. இரண்டும் ஒரே சமயம் கீழே இறங்கி முழுவதும் இறக்கப்படும்போது  ஒரு நொடி உரசிக் கொள்வது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  அந்த நொடியைப் படம் பிடிக்க முடியவில்லை. எல்லாரும் எழுந்து நின்றது ஒரு காரணம் மட்டுமில்லாமல் இடத்தை விட்டு அசையக் கூடாது என்ற நிபந்தனை வேறு.  மேலும் இம்மாதிரி நடைபெறும் என்பதை எதிர்பாராததால் தயாராக இல்லை என்பதும் சேர்ந்து கொண்டது.

நடுவில் கொடிகளைத் தாங்கிச் செல்லும் ராணுவ வீரரும், அவருக்கு முன்னும், பின்னும் இரு ராணுவ வீரர்கள் அணி வகுத்துச் செல்வதும்.

பின்னர் கொடி தக்க மரியாதைகளுடன் உரிய முறையில் மடிக்கப்பட்டு ஒரு ராணுவ வீரரின் கைகளில் மிகவும் மரியாதையுடன் வைக்கப்பட்டது. பின்னர் எல்லைப்பாதுகாப்புப் படைக்கு உரிய கொடியையும் இருபக்கமும் அதே மரியாதையுடன் இறக்கினர்.  ஏற்கெனவே தேசியக் கொடியைக் கையில் வைத்திருப்பவரின் கைகளிலேயே அந்தக் கொடியும் மடித்து வைக்கப்பட்டது. கைகளை நீட்டிய வண்ணம் கொடிகளைப் பிடித்துத் தாங்கிய வண்ணம் அந்த வீரர் நடுவில் அணிவகுப்பில் வர, மற்ற வீரர்கள் முன்னும், பின்னுமாக அவரோடு அணி வகுத்துச் சென்றனர்.  அது வரை ட்ரம்பெட் முழங்கிக் கொண்டு இருந்தது.   வாயிலைத் திறந்து கொண்டு சென்ற இரு ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு முகமன் கூற பின்னாலேயே நடந்து இந்தியப் பகுதிக்கு நம் வீரரும், பாகிஸ்தான் பகுதிக்கு அந்த வீரரும் செல்ல இருபக்கத்து வாயிலும் மூடப் பட்டது.  கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என முழங்கக் கொடி அணி வகுப்பில் உரிய இடம் போய்ச் சேர்ந்தது.  கூட்டம் சந்தோஷத்தோடும், பெருமையோடும் கலைய ஆரம்பித்தது.  கூட்டத்தில் நெரிசல் இருக்குமோனு நினைச்சேன்.  ம்ஹூம், கப்சிப்.  அதெல்லாம் எதுவுமே இல்லை. ஜம்முனு தான் எங்க கார் நின்னுட்டு இருந்த இடத்துக்குப் போனோம்.


காரில் ஏறிக் கொண்டு சென்ட்ரல் வேர் ஹவுசிங் அலுவலகம் வந்து மைத்துனரின் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு எங்கள் கைப்பைகளை எடுத்துக் கொண்டு தங்கி  இருந்த இடத்துக்குச் சென்றோம். டிரைவரிடம் மறுநாள் பொற்கோயில், ஜலியாவாலா பாக் பார்க்க நேரம் ஏற்பாடு செய்துவிட்டு அங்கே போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாப்பிட்டுட்டு வந்து படுத்தோம். மறுநாள் காலை தேநீர் அறைக்கே வந்தது.  அதே போல் காலை ஆகாரமும் வேண்டுமானு கேட்டாங்க.  ரங்க்ஸ் ஆலு பரோட்டாவும், எனக்கு சாதா பரோட்டாவும் சொன்னோம்.  எட்டரைக்கெல்லாம் அதையும் கொடுத்தாங்க. சைட் டிஷ் எதுவும் இல்லை. தயிர் மட்டும் ஒரு பெரிய பாத்திரம் நிறையக் கிட்டத்தட்ட அரைலிட்டர் இருக்கும். கொடுத்தாங்க.  அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டுத் தேநீரும்வாங்கிக் குடித்துவிட்டு சாமான்களைப் பாக்கிங் செய்து கொண்டு கீழே இறங்கி அறையைக் காலி செய்து (பனிரண்டு மணி ஆகிவிட்டால் இன்னொரு 1,200 ரூ. கொடுக்கணும்) அங்கேயே ரிசப்ஷனில் உட்கார்ந்து வண்டிக்குக் காத்திருந்தோம்.  வண்டியும் வந்தது.  முதலில் ஜலியாவாலா பாக்கில் இறக்கிவிட்டார் டிரைவர்.


இன்னும் சில படங்கள் நாளை பகிர்கிறேன்.  மின்வெட்டுக் கடுமையாக இருப்பதால் இணையத்துக்கு வருவது கடினமாக இருக்கிறது. :(

Wednesday, March 26, 2014

இரண்டாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்!

 ஒரு இளைஞனின் கற்பனை அதுவும் கல்யாணம் ஆகாத இளைஞனின் கற்பனை எவ்வளவு தூரத்துக்குப் போகும் என்பது தான் கதையின் முக்கியக் கரு. ஆண், பெண்ணின் ஈர்ப்புச் சக்தி இயல்பான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர்.  பருவ வயது வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  ஆணுக்குத் தான் முற்றிலும் அறியாத ஒரு பெண் மனைவியாக வரப் போகிறாள் என நினைக்கையிலேயே மனம் ஒரு வகையான பதட்டத்தில் ஆழ்கிறது. அதோடு கற்பனையில் அந்தப் பெண்ணைக் குறித்துப் பற்பல கனவுகள் காண்பான்.  பெண்ணைக் குறித்தும், அவள் அழகைக் குறித்தும் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் இருக்கும்.  உண்மையிலேயே தான் கனவில் கண்ட அந்தப் பெண் தன் பக்கத்தில் இருந்தால் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பனையிலும் ஆழ்ந்து போவான்.  இப்படிப் பட்ட எண்ணங்களோடு கூடிய ஒரு ஆண்மகன் தான் கனவு காண்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேருந்தில் கண்டதொரு கனவே இங்கே கதையாகப் பரிமளித்துள்ளது.

அலுவலகத்தின் விடுமுறை நாளில், மின் வெட்டு தினத்தில் வீட்டில் இருக்கும் வெப்பமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க நினைக்கும் கதாநாயகன் பொழுது போக்கச் செல்ல நினைப்பது ஒரு தொடர் பேருந்தில் பயணம். .அந்தப் பேருந்தும் நகரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தொடர் பேருந்து.  ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பொழுதுபோக்கும் ஆச்சு;  தொடர் பேருந்தில் பயணம் செய்தாப்போலவும் ஆகிவிட்டது.  மனித மனத்தின் சராசரி ஆசைகள் பேருந்திலோ, ரயிலிலோ ஜன்னலோரம் அமர்வது.  இங்கே அது இவன் கேட்காமலே கிடைக்கிறது.  செல்லும் தூரம் வரை சுகமான காற்றும் வீசுகிறது. கூடவே  மல்லிகை மணமும் கமழ, மனம் பெண்களை எதிர்பார்க்கப்பக்கத்தில் வந்து அமர்கிறாள் ஓர் அழகி.  பாலக்காட்டு ராணி. அமுதா என்ற இனிமையான பெயரைச்சொல்லும் போதே நாக்கும், மனமும் இனிக்கிறது.

அவளோ உதவி நாடுகிறாள்.  செல்ல வேண்டிய பயிற்சி நிலையம் செல்ல வழி கேட்கிறாள். இங்கேயும் சாதாரணமாக எல்லா ஆண்களும் சொல்வது போலவே தானே கூட வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொள்கிறான் கதாநாயகன்.  இதோடு கற்பனை முடிந்ததா என்றால் இல்லை.  இவள் எத்தனை நாட்கள் இருப்பாள் எனக் கணக்குப் போட்டுப்பார்த்து அதற்குள் இவளையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நீண்ட காலத் திட்டம் ஒன்றும் மனதுள் தோன்றுகிறது.  உடனே மனதில் காதலும் தோன்றுகிறது. இதென்ன கண்டதும் காதலா என்றெல்லாம் கேட்காதீர்கள்.  இது எதிர்பாலினம் ஒன்றை ஒன்று ஈர்ப்பதின் விளைவு தான்.  அது மட்டுமே.  ஆனால் நம் கதாநாயகர் சொப்பன உலகில் மிதக்கிறாரே!  அது அவருக்கே தெரியவில்லை. இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டு அவளிடம் செல்போன் நம்பர் கூட வாங்கிக் கொள்கிறார் சொப்பனத்திலேயே. நல்லவேளையாக தன்னுடைய செல்போனை எடுத்துக் கீழே போட்டு உடைக்கலை.  அந்த அமுதாவுக்காக ஆட்டோவுக்குச் செலவு செய்து பயிற்சி நிலையம் கூட்டிச் செல்லவும், அவளுக்குத் தங்குமிடம் பார்த்துக் கொடுக்கவும் கூடத் தயாராகிவிடுகிறான்.  எல்லாம் திருச்சி  சுப்ரமண்யபுரம் டோல் கேட்டில் இருந்து துவாக்குடி போகும் நேரத்துக்குள்ளாக.

அப்போது தான் பேருந்து பயணம் முடிந்து நிற்கிறது போலும்.  இவருக்கு வியர்க்கிறது.  தன் காதலில் வெற்றி கிட்டுமா என்னும் கலக்கத்தில் இருப்பவரைத் தட்டி எழுப்புவது பேருந்தின் நடத்துநர்.  இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது என எழுப்புகிறார்.  அப்போது தான் நம் கதாநாயகருக்குத்தான் கண்டது இனிமையான கனவு எனப் புரிந்து நிகழ்காலத்துக்கு வருகிறார்.  ஆனால் பாருங்க, அவர் மனதில் அமுதாவின் பெயரே ஓடிக் கொண்டிருக்கிறதா!  அப்போப் பேருந்தில் போடப்படும் பாடலும், "அமுதைப் பொழியும் நிலவா"க அமைய சோகப் பெருமூச்சு விடும் கதாநாயகனின் சோகத்தை அதிகப்படும் வகையில் அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு பெண்மணி ஏறி கதாநாயகர் அருகே அமர்கிறாள்.அமர்வதோடு கதாநாயகரைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தலையையும் நீட்டுகிறாள்.ஹாஹாஹா, இங்கே தான் இருக்கு நம் எழுத்தாளரின் நகைச்சுவையான கேலி.

வந்தவள் ஒரு காய்கறி விற்கும்கிழவி. கட்டி அணைத்தாற்போல் ஜன்னல் வழி தலையை நீட்டியது வெற்றிலைச் சாறைத் துப்ப.  இது போதாதா நம் கதாநாயகரின் அசடு வழிதலுக்கு.  பத்தாக் குறையாக அந்தக் கிழவியை "அமுதாம்மா" என இன்னொரு கிழவி கூப்பிடவே. ஆஹா,நிஜமான இளம் அமுதாவுக்கு பதில் இப்படி ஒரு கிழட்டு அமுதா பக்கம் அமர்ந்து பயணம் செய்யும்படி ஆயிற்றே எனத் தன் தலைவிதியை நொந்து கொண்டு பயணம் செய்கிறான் கதாநாயகன்.

திருமணம் ஆகாத ஆணின் மனதில் தோன்றும் ஆசைகளும், சபலங்களும், இளம்பெண்ணிடம் பேசத் துடிக்கும் முனைப்பும், அவளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் தான் நல்லவன் எனக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் துடிப்பும் இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.  எப்படியேனும் இந்தப்பெண் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூற அவன் நினைப்பதெல்லாம் படிக்கையில் நமக்கு நிஜம் போலவே தோன்றுகிறது.  கடைசியில் தான் ஆசிரியர் இவை அனைத்தும் கனவு எனப் புதிரை உடைக்கிறார். அதன் பின்னர் கதாநாயகனின் ஏமாற்றமும், சராசரிப் பெண்களே பேருந்தில் ஏறும் நிலைமையும், அதிலும் ஒரு கிழவி வந்து பக்கம் அமர்வதை வேறு வழியில்லாமல் சகிக்க வேண்டி இருப்பதையும் மறைமுகமாகச் சொல்லி விடுகிறார்.

இது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு.  இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல.  நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.


தொடர்ந்து ஊக்குவித்து வரும் வைகோ சாருக்கு நன்றி. இனி வரும் போட்டிகளிலாவது எங்கள் ப்ளாக் ஶ்ரீராம், ஜீவி சார், வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட், கோமதி அரசு, வல்லி சிம்ஹன் ஆகியோர் பங்கு பெறும்படி வைகோ சார் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, March 24, 2014

காஃபி வித் கீதா! கடைசியோ கடைசி

இப்போ அமெரிக்காவில் காஃபி குடிச்ச அனுபவம் பத்தி. முதல் முதலாப் போனப்போ ஃபில்டர் எல்லாம் எடுத்துட்டுப் போனோம்.  ஆனால் பையர் நெஸ்கஃபே வாங்கி வைச்சிருந்தார்.  ஆகவே பாலில் அதைக் கலந்து குடிச்சுப் பார்த்தோம்.  அது என்னமோ காஃபி குடிச்ச திருப்தியே வரலை. சரினு பையர் அதை அவசரத்துக்கு வைச்சுக்கலாம்னு வால்மார்ட் கூட்டிட்டுக் காஃபி செக்‌ஷனுக்கு அழைச்சுட்டுப் போனார்.அசந்துட்டோம்.  உலகத்திலே உள்ள அனைத்து ரகங்களும் அங்கே இருந்தன. பவுடர், கொட்டை, என விதம், விதமாக.  வறுத்த கொட்டைகள் இருந்தன. வறுக்காத கொட்டை அதிகம் காணப்படவில்லை.  வறுத்த கொட்டையைத் தேர்வு செய்து அங்கேயே இருக்கும் கிரைண்டரில் பொடியாக அரைச்சுக்கலாம். அப்படி சுமார் கால் கிலோ கொட்டையைத் தேர்ந்தெடுத்தோம்.  அங்கேயே மெஷினில்  போட்டுப் பொடியாக அரைத்தோம்.  அப்போப் பையர் கிட்டே ஒரே ஒரு மிக்சி தான் இருந்தது. அதிலே காப்பிக்கொட்டையெல்லாம் அரைக்க முடியாது. காஃபிக் கொட்டை அரைக்கும் ஜாரோடு கூடிய மிக்சியைப் பின்னர் தான் வாங்கினோம்.  காஃபி மேக்கரும் அப்போ இல்லை. ஆகவே அங்கேயே பொடியாக அரைத்துக் கொண்டோம்.  அதை மறுநாள் சென்னையிலிருந்து கொண்டு போன ஃபில்டரில் போட்டுக் காஃபி கலந்தால்!  கடவுளே!  காஃபியா அது!  மறுபடி நெஸ்கஃபேயே பரவாயில்லைனு தோணிச்சு.

பையருக்கு இந்த விஷயம் தீராத பிரச்னையாக இருந்திருக்கு. மீனாக்ஷி கோயிலுக்கு அழைத்துப் போகையில் அங்கே அனைவருக்கும் காஃபி குடிக்கவென (இலவசமாக) காஃபி மேக்கர் வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துப்போய்க் காஃபி குடிக்க வைத்தார்.  ம்ஹூம்! அதுவும் காஃபியே அல்ல. வெறும் வெந்நீர் தான்!  பின்னர் எங்க பொண்ணு வந்து மெம்பிஸ் அழைத்துச் சென்றாள். அவங்க கிட்டே காஃபி மேக்கர் இருந்தது.  பால் ஆர்கானிக் பால் வாங்கினாங்க.  அதிலே கொஞ்சம் சுமாராகக் காஃபி இருந்தது. ஆகவே இங்கே காஃபி குடிக்கணும்னா காஃபி மேக்கர் வேண்டும்னு தெரிஞ்சுண்டோம். அங்கிருந்து அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையர்(தம்பி) வீட்டுக்குப் போக அவர் கொடுத்தார் பாருங்க ஒரு காஃபி!  ஆஹா, அதன் சுவை இன்னமும் நாக்கிலே!

அவரும் காஃபி மேக்கரில் தான் டிகாக்‌ஷன் இறக்கினார். டிகாக்‌ஷனைக் கப்பில் விட்டு ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் பாலை அதில் சேர்த்துச் சர்க்கரையும் போட்டுக் காஃபி கலந்து கொண்டு அதை மைக்ரோவேவில் ஒரு நிமிடம் சூடு பண்ணிக் கொடுத்தார். நாங்க இங்கே செய்யறாப்போல பாலைக் காய்ச்சிக் கொண்டு பின்னர் டிகாக்‌ஷன் விட்டுக் கலந்து கொண்டிருந்தோம்.  அவர் செய்ததைப் பார்த்ததும், அது மாதிரி செய்யணுமானு புரிந்தது.  அதோடு பால் வேறே ஹாஃப்&ஹாஃப் என்னும் ரகம். க்ரீம் உள்ள பால். என்னதான் ஆர்கானிக் பால் வாங்கினாலும் இத்தனை ருசி அதில் வராதுனும் ஹாஃப்&ஹாஃப் பால் வாங்கி அதிலே கலந்து கொண்டு மைக்ரோவேவில் சர்க்கரை சேர்த்து சூடு பண்ணிட்டுக் குடிக்கச் சொன்னார்.  நம்ம ஊரில் ஃப்ரெஷ் பால் அப்போப்போ கறந்தது கிடைக்கும்.  அமெரிக்காவில் அப்படி எல்லாம் கிடைக்காது.  இந்த ஹாஃப் & ஹாஃப் பால் ரகம் நம்ம ஊர் கறந்த பாலைப்போல ருசியைக் கொடுக்கக் கூடியதுனு புரிஞ்சுண்டோம்.
அதுக்கு அப்புறமா இங்கே மெம்பிஸில் பெண்ணும் எங்களுக்கு எனத் தனியா ஹாஃப் அன்ட் ஹாஃப் வாங்கினாள்.  அங்கிருந்து மறுபடி ஹூஸ்டன் போகையில் ஒரு காஃபி மேக்கரும், பொண்ணு கிட்டே இருந்தாப்போல் கொட்டையைப்போட்டு பொடி அரைக்கும் சின்ன மிக்சியும் வாங்கிக் கொண்டு போனோம்.  அங்கே போய்ப் பையர் கிட்டே காஃபி பிரச்னையைத் தீர்த்த விதம் சொன்னோம்.  அவரும் ஹாஃப் அன்ட் ஹாஃப் வாங்கிக் கொடுத்தார். 

ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு ஒரு தரம் சில விருந்தினர்கள் டாலஸில் இருந்து வந்தாங்க.  அவங்க எல்லாம் காஃபி குடிக்கிறவங்க.  ஆகையால் அவங்க நாங்களே கலந்துக்கறோம்னு சொன்னாங்க.  சரினு பேசாமல் இருந்தேன்.  அவங்கள்ளே ஒருத்தர் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு பாதிக்கு ஹாஃப் அன்ட் ஹாஃப் பாலை ஊற்றவே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  எல்லாருக்குமா கலக்கப் போறீங்கனு கேட்கவே, அவர் இல்லையே, எனக்கு மட்டும் தான் என்றார். கடவுளே, இவ்வளவு ஹாஃப் அன்ட் ஹாஃப் எடுத்துட்டால் அவ்வளவு தான் காஃபி காஃபியாக இருக்காது.  வெள்ளையா இருக்கும்னு சொல்லிட்டு அந்தக் கப்பில் இருந்த பாலை மற்றக் கப்புகளில் ஊற்றி சமன் செய்துவிட்டு டிகாக்‌ஷனை ஊற்றச் சொன்னேன்.  பின்னர் சர்க்கரை சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்துவிட்டுக் குடிச்சுட்டுக் காஃபி நல்லா இருந்ததுனு சொன்னாங்க.அமெரிக்காவில் வெளியே போனால் மக்-டொனால்ட், ஸ்டார் பக்ஸ் போன்ற இடங்களில் காஃபி கிடைத்தாலும் ஸ்டார் பக்ஸில் தான் நல்ல காஃபி கிடைக்கும். ஆனால் ஒரு கப் என்பது நாம இங்கே மூணு வேளை குடிக்கும் மொத்தக் காஃபியும் சேர்ந்தால் அதைவிட அதிகம்.  


ஆகவே நாங்க ஒரே ஒரு காஃபி வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்.  அதுவே 200 மில்லிக்குக் குறையாமல் இருக்கும். சின்ன கப்பும் கிடைக்கும்.  அது வாங்கினாலும் ஜாஸ்தி தான்.  அதோட இந்தியன் டீ என்று ஒரு தேநீர் கொடுக்கிறாங்க. மசாலா தேநீர்னு சொல்லிப் பொண்ணு வாங்கிக் கொடுத்தா.  எங்களுக்குப் பிடிக்கலை. :))))காஃபி மஹாத்மியம் முடிந்தது. அனைவரும் அவரவருக்குப் பிடித்தமான வகையில் காஃபி குடித்து மகிழ வாழ்த்துகள்.


படங்கள் உதவி: கூகிளார்.

Sunday, March 23, 2014

காஃபி வித் கீதா! நான் காஃபிக்கு அடிமை அல்ல! படங்களுடன்!

அப்போல்லாம் இந்தியன் காஃபி போர்டு தான் காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது.  காஃபி பவுடர் அரைக்கும் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே ரேஷன் கார்டுக்குக் கொட்டை கொடுப்பாங்க.  குடும்ப அங்கத்தினருக்கு ஏற்பக் கொட்டை கொடுத்ததாக நினைவு. எங்களுக்கு மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே தான் கொடுத்துட்டு இருந்தாங்க.  கடைக்காரர் தெரிஞ்சவர் என்பதால் முன் கூட்டிச் சொல்லிட்டு அம்மா மெதுவாப் போய் வாங்கி வந்து கொட்டையை வீட்டிலேயே வறுத்து நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே திரிச்சு வாங்கி வருவாங்க.  அப்படி எல்லாம் செய்தும் ரெட்டுத் துணியில் வடிகட்டியதால் காஃபியின் சுவையே சுமாரிலும் சுமாராக இருக்கும்.

முதல் முதல்   எங்க குடும்பத்திலேயே (ஹையா, ஜாலி) ஃபில்டரில் காஃபி போட்டது நான் தான். ஒரு தரம் யாரோ வீட்டுக்கு வந்தப்போ அவங்க துணியில் வடிகட்டிய காஃபி குடிக்கமாட்டாங்கனு பக்கத்திலே பெரியப்பா வீட்டில் சின்ன ஃபில்டர் வாங்கி வந்து காஃபி போட்டுக் கொடுத்தேன்.  அந்தக் காஃபியில் மயங்கியே போனாங்க அவங்க. அதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டிலே காஃபி வெள்ளமாக ஓடியதைப் பார்த்து அசந்து போயிருக்கேன். முக்கால் வாசிக் கல்யாணங்களில் காஃபியிலே தான் சம்பந்தி சண்டையே வரும்.  காஃபி நல்லா இல்லைனா கல்யாணக் காஃபி மாதிரி போட்டிருக்கேனு இப்போவும் ரங்க்ஸ் சொல்லுவார். எங்க கல்யாணத்திலேயும் காஃபியில் அதுமாதிரி சில, பல குறைகள் இருந்தது.  அதைக் கல்யாணம் ஆகிப் போய்த் தான் தெரிஞ்சுட்டேன்.
 
                              பாத்திரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் பால்


நல்ல காஃபிக்கு அடிப்படை நல்ல கொட்டை மட்டும் அல்ல.  நல்ல பாலும் கூட. அதுவே பசுவின் பாலாக இருந்தால் இன்னும் நல்லது.   எருமைப்பால் என்றால் பாலில் சரிக்குச் சரி நீர் சேர்க்கணும். முதலில் டிகாக்‌ஷன் இறங்கியதுமே காஃபி கலக்கக்  கூடாது.  மேலும் கொதிக்கும் வெந்நீர் விட்டு டிகாக்‌ஷனை முழுதும் இறக்கிக்கணும்.  டிகாக்‌ஷன் ஒத்தாற்போல் அதிகமாய் கெட்டியாய் இல்லாமலும், அதிகமாய் நீர்க்க இல்லாமலும் இருந்தால் காஃபி கலக்க சரியாய் இருக்கும்.  சர்க்கரை அவரவர் தேவைக்குப் போடணும். (எங்க மாமியார் வீட்டில் காஃபிக்குச் சர்க்கரை இப்போவும் கரண்டியில் தான்! ) நாங்க போடறதெல்லாம் அவங்களுக்குச் சிட்டிகைக் கணக்கு!  இப்படிச் சில அடிப்படைப் பாடங்களைக் கல்யாணம் ஆன  ஒரே மாசத்தில் தெரிந்து கொண்டேன். அதுக்கப்புறமாக் காஃபி கலப்பதில் நம்மளை மிஞ்ச யாருமில்லை என்னுமளவுக்கு நல்ல காஃபியாகக் கலந்து வந்தேன்.  ஆனாலும் சில, பல வருடங்களுக்கு நான் காஃபி கிட்டேயே போனதில்லை.

                   
                        காஃபிக்குக் காத்திருக்கும் டபரா, டம்ளர்,  மதுரைப்பக்கம்   
                        வட்டை, டம்ளர் என்றே சொல்வோம்.  இதிலே முன்னாடி 
                        பித்தளை டபரா செட், வெண்கல டபரா செட் இருந்தன. அதிலே
                        ஒருமுறை  குடிச்சுப்பாருங்க. அந்தச் சுவை தனியாத் தெரியும்.                           :)))))))))                         

எங்கே போனாலும் போர்ன்விடா டப்பாவைத் தூக்கிட்டுப் போவேன். பாலை வாங்கி அதிலே போர்ன்விடா போட்டுச் சாப்பிடுவேன். எங்க பையர் பிறந்தப்போ இதுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தது.  அப்போ என்ன காரணமோ போர்ன்விடா சரியாக் கிடைக்கலை.  ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் அது முழு உணவாகி விடுகிறது.  ஆகவே அரை தம்ளர் காஃபினு குடிக்க ஆரம்பிச்சுப் பின்னர் இப்போக் காலை எழுந்ததும் நல்ல காஃபி, பின்னர் கனிவு கொடுக்கும் இனிய டிஃபன் என்று பாடும் அளவுக்குக் காஃபிக்கு அடிமையாகி விட்டேன். என்றாலும் சில நாட்கள் என்னை நானே சோதனை செய்துக்கக் காஃபி குடிக்காமலோ, அல்லது நேரம் கழிச்சுக் குடிச்சோ பார்ப்பது உண்டு. இப்போல்லாம் அந்தச் சோதனையை விட்டாச்சு.  வேணும்னா குடிக்கலாம்; இல்லைனா விடலாம்  என்ற அளவுக்கு மனப்பக்குவம் வந்துவிட்டதால் காஃபிக்கு அடிமை இல்லை.

                        நுரை பொங்கும் காஃபி.  ஒரு சிலருக்குக் காஃபியில் அதிகமான
                        டிகாக்‌ஷன் வேணும். ஆனால் இது சந்தனம் கரைத்தாற்போல்
                        இருக்கும். இதான் ஒரிஜினலாக் காஃபி இருக்க வேண்டிய  
                        சுவைனு காஃபிப் பிரியர்களின் ஏகோபித்த கருத்து.

எங்க குழந்தைங்களுக்குக் காஃபி, டீ போன்றவை பதினைந்து வயது வரை கொடுத்தது இல்லை. அப்புறமும் மாலை ஒரு வேளை மட்டும் தேநீர் கொடுப்போம். இப்போ எங்க பையர் தேநீர்க் குடியர்.  பொண்ணு காஃபிக் குடியள். இந்த இந்தியன் காஃபி போர்டு ஆங்காங்கே இந்தியா காஃபி ஹவுஸ் என்னும் பெயரில் காஃபிக் கடைகளை ஒரு காலத்தில் நிறுவி இருந்தது.  குறிப்பிட்ட நேரங்களில் டிஃபனும் கிடைக்கும். தி.நகரில் பர்கிட் ரோட் முனையில் இருந்த இந்தியா  காஃபி ஹவுஸ் தோசை வெகு பிரபலமானது.  அப்போது எல்லாம் ஒரு கப் காஃபி பதின்மூன்று பைசாக்கள். கப்பும் பெரிதாகவே இருக்கும்.  ஒரு கப் தேநீர் பத்து பைசா. ஒரு கப் வாங்கி இருவர் பகிர்ந்துக்கலாம். ஹாஃப் கப்பும் உண்டு. அரைக் கப் காஃபி பத்துப் பைசா என்பதால் மூன்று பைசாவைப் பார்க்காமல் முழுக்கப்பாகவே வாங்குவது உண்டு.

அதன் பின்னரும் எண்பதுகள் வரையிலும் காஃபி போர்டே காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது.  அதன் பின்னர் காஃபி போர்டையே அரசாங்கம் கலைத்து விட்டது என எண்ணுகிறேன்.  காஃபி போர்ட் இருந்த சமயம் உயர் ரகக் கொட்டைகள் நம்மை மாதிரி சாமானியருக்கெல்லாம் கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் எங்களுக்குக் காப்பிக் கொட்டைகள் என்னோட அப்பா வாங்கி ராஜஸ்தானுக்குப் பார்சலில் அனுப்புவார்.  அல்லது யாரானும் ஊர்ப்பக்கம் போனால் அவங்க கிட்டே கொடுத்து அனுப்புவார்.  ஒருமுறை கூர்க் கார ஜவான் ஒருத்தர் சொந்த ஊருக்கு லீவில் போக அவரிடம் சொல்லி மொத்தமாக ஐந்து கிலோவுக்கு மேல் காப்பிக் கொட்டைகள் வரவழைத்து இருக்கோம். அங்கே எல்லாம்"ஏ" காஃபிக் கொட்டைகள் தான் அதிகம். பீபரி அதிகம் கிடைக்காது.  மதுரைப்பக்கம் காஃபி எஸ்டேட்டில் பீபரிக் கொட்டைகள் கிடைக்கும்.  இரண்டையும் வாங்கி சரிக்குச் சரி கலந்து வறுத்துக் கொண்டு, வீட்டிலேயே இருந்த காரைக்குடி காஃபிக் கொட்டை மிஷினில் ஒவ்வொரு வேளையும் அரைத்துப் பின்னர் அதிலே தான் காஃபி போடுவேன்.  அந்த மிஷின் எனக்கு மட்டுமே சொன்னபடி கேட்கும்.  மத்தவங்க அரைச்சால் கொட்டை அப்படியே ஒன்றிரண்டாக உடைந்து விழும். இல்லைனா ரவை மாதிரி விழும். துரோகி மிஷின்.  இப்போத் தான் 2012 ஆம் வருஷம் ஶ்ரீரங்கம் வரச்சே அந்த மிஷினை எடைக்குப் போட்டோம். :(

ஹிஹிஹி, அவசரக் குடுக்கையா பப்ளிஷ் ஆகி இருக்கு.  டிடி கமென்டும் போட்டுட்டார்.  மத்தவங்க யாரையும் எனக்கு உதவியா அரைச்சுக் கொடுக்க விடாத மிஷின் துரோகி இல்லாமல் பின்னே என்னவாம்?  நாங்கல்லாம் ரூம் போட்டு உட்கார்ந்து ஜிந்திச்சு எழுதுவோம் இல்ல! :))))

இந்தக் காஃபி குடிக்கிறதும் ஒரு கலை. ஒரேயடியா ஆத்திட்டு மடமடனு குடிக்கக் கூடாது. ஆற வைச்சும் குடிக்கக் கூடாது.  கோல்ட் காஃபியெல்லாம் இருக்கு தான்.  அதெல்லாம் இரண்டாம் பக்ஷம் தான். காஃபியைக் கலந்து அளவா சர்க்கரை போட்டு, (நினைவிருக்கட்டும், சர்க்கரை கொஞ்சம் குறைச்சலா இருந்தால் தான் காஃபிக்கு சுவை) ஒரு வாய் வாயிலே விட்டுக் கொண்டு அதை உடனே விழுங்காமல் வாயிலேயே வைத்து நாக்கால் அதன் சுவையை அறிந்துகொள்கையில் அதன் மணம் மூக்கைப் போய்த் தாக்கும். அப்போ விழுங்கணும். :))) கடைசிச் சொட்டுக் காஃபி வரை சூடு ஆறாமலும் பார்த்துக்கணும்.  கடைசிச் சொட்டுக் காஃபியிலே காஃபி சூடு ஆறிப் போயிருந்தா என்ன நல்ல காஃபி குடிச்சாலும் காஃபி குடிச்சாப்போலேயே இருக்காது! காலம்பர காஃபி குடிக்கிறச்சே படம் எடுக்க மறந்துட்டேன்.  இரண்டாம் முறை காஃபி கலக்கறச்சே கட்டாயமாப் படம் எடுத்துச் சேர்க்கிறேன்.

Saturday, March 22, 2014

காஃபி வித் கீதா!

இங்கே

மேற்கண்ட சுட்டியில் ஏற்கெனவே நான் காஃபி குடிக்க ஆரம்பிச்ச கதையை எல்லாம் எழுதிட்டேன். இந்தக் காஃபி இந்தியாவுக்கு எப்போ வந்தது?  அதைக் குறித்த ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

இந்தக் காஃபி குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில் காஃபி குடும்பம் ரொம்பவே பெரிசுனு சொல்றாங்க.  இவங்கள்ளே 611 பெருசுங்களும் 13,100 சிறிசுங்களும் இருக்காங்களாம்.  ஆனால் இந்தியாவிலே  76 பெரிசுங்களும், 274 சிறிசுங்களும் தான் இருக்காங்களாம். காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதைகள் தான் காஃபிக் கொட்டை ஆகும். உலக அளவில் மிகப் பெரிய வணிகச் சந்தையைக் கொண்டது காஃபி. இதன் முன்னோர்கள் என்று பார்க்கப் போனால் விக்கி எதியோப்பியானு சொல்லுது.  அங்கே ஆடு மேய்ப்பவன் ஒருத்தன் ஆடு மேய்க்கையில் ஆடுகள் ஒருவிதச் சிவப்பு நிறப் பழங்களைச் சாப்பிட்டு உற்சாகம் கொண்டு துள்ளிக் குதிக்க அவனும் அந்தப் பழங்களைப் பறிச்சுச் சாப்பிட்டானோ, கொட்டையை உடைச்சுத் தின்னானோ தெரியலை. அதான் காஃபினு சொல்றாங்க.

முதல் முதல் அரேபியாவில் சதுரங்கள் விளையாடும் இடங்களில், கேளிக்கை விடுதிகளில் என்று பிரபலமான இடங்களில் தான் காஃபி கேன்ஸ் எனப்படும் காஃபிக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டனவாம். மெக்கா என்றும் சிலர் சொல்கின்றனர். காஃபி குடித்தால் ஏற்படும் புத்துணர்ச்சியால் கடைகள் மட்டுமின்றி காஃபி குடிப்பவர்களும் பெருகினார்கள்.  ஐரோப்பியன் காஃபி 1683 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரில் பிரபலமான பியாசான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில் முதல் முதலாக அறிமுகம் ஆகி இன்றளவும் காஃபிக்குப் பெயர் பெற்ற இடமாக இருந்து வருகிறது.  கப்பல்களைக் காப்பீடு செய்யும் நிறுவனம் லாயிட்ஸ் ஆஃப் லண்டன் முதலில் காஃபிக் கடையாகத் தொடங்கப்பட்டதாம்.  அமெரிக்கக் கண்டம் இன்றைய நாட்களில் காஃபி உலகிலேயே அதிகம் குடிக்கும் கண்டமாக இருந்தாலும் தென் அமெரிக்காவில் 1668 ஆம் ஆண்டிலே தான் காஃபி முதல்முதலாகச் சுவைக்கப்பட்டது.  1773 ஆம் ஆண்டின் பாஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன், காஃபி ஹவுஸில் தான் திட்டமிடப்பட்டது.  வால் ஸ்ட்ரீட்டில் உள்ள காஃபிக் கடைகளில் தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பேங்க் ஆஃப் நியூயார்க் முதலியன ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் நிதி நிலைமையையே கணிக்கும் ஓர் இடமாக மாறிவிட்டிருக்கிறது.

முதல் முதலாகத் தென் அமெரிக்காவில் 1720 ஆம் ஆண்டுகளில் காஃபிப் பயிர் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. இன்று உலக அளவில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது.  காஃபி அதிகம் அருந்தும் நாடுகளில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவை முதலிடங்களைப் பெறுகின்றன.  17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாபா பூடன் என்பவர் மெக்கா, ஏமன் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது காஃபி குறித்து அறிந்து கொண்டார்.  அவர் இந்தியா வந்து அனைவருக்கும் அந்தச் செய்தியைப் பரப்பியதோடு அல்லாமல் சிக்மகளூர் மாவட்டத்தின் சந்திரகிரி மலைப் பிராந்தியத்தில் காஃபியைப் பயிராக்கினார்.  அதன் பிறகு நிகழ்ந்தது குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.  அதன் பின்னர் நம்மை ஆள வந்த பிரிட்டிஷார் வணிக ரீதியாகக் காஃபிப் பயிரைப் பயிரிட்டு அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர். காஃபியில் கப்புச்சீனோ, லாட்டே, போன்ற கலவைகளில் கலக்கப்படும் காஃபி பிரபலமானவை.  வெளிநாடுகளில் பெரும்பாலும் பால் சேர்க்காத காஃபியை மட்டுமே அருந்துகிறார்கள். இந்தியாவிலும் அதிசயமாக காஃபி வட மாநிலங்களில் பிரபலம் ஆகவில்லை.  காஃபிக்குப் பெயர் போன மாநிலங்கள் கர்நாடகாவும், தமிழ்நாடும் தான்.


எங்க பிறந்த வீட்டில் குழந்தைகளுக்குக் காஃபி கொடுப்பதில்லை.  பசும்பாலோ அல்லது கஞ்சியோ தான் கொடுப்பார்கள்.  கிட்டத்தட்டப் பத்து வயது வரை காஃபியின் சுவையே அறியாமல் வளர்ந்த நான் பின்னர் பள்ளி மாணவிகளின் கேலியினால் காஃபிதான் வேணும்னு வீட்டில் அடம் பிடித்துக் காஃபி குடிக்க ஆரம்பித்தாலும் அப்படி ஒண்ணும் காஃபி பிடிக்கலை.  அதோட எங்க அப்பா வீட்டில் மலையாளக் காஃபி தான்.   ரெட்டுத் துணி என்று சொல்லப்படும் கெட்டியான காடாத் துணியில் தான் காஃபி வடிகட்டுவார்கள்.  அடுப்பில் வெந்நீரை வைத்துக் (எத்தனை நபரோ அத்தனை தம்பளர்கள் நீர்) கொதிக்க வைத்துக் காஃபிப்பொடியைப் போட்டு அது கொஞ்சம் கொதித்ததும் ஒரு தட்டைப் போட்டு மூடிக் கீழே இறக்கி வைப்பார்கள்.  அதற்குள் பால் காய்ச்சும் படலம் ஆரம்பிக்கும்.   பால் காய்ந்ததும் இறக்கி வைத்த பாத்திரத்திலிருந்து டிகாக்‌ஷனை ரெட்டுத் துணியில் வடிகட்டுவார்கள்.  கடைசியில் சொட்டி டிகாக்‌ஷன் கூட வீணாகக் கூடாதுனு துணியைப் பிழிந்து எடுப்பார்கள். எனக்குப் பிடிக்காதது அதான்! :)  என் அம்மாவிடம் காஃபி ஃபில்டர் இருந்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை.  முதன் முதல் ஃபில்டர் காஃபி சாப்பிட்டது எங்க சித்தி வீட்டில் சின்னமனூரில்.  அங்கே ஃபில்டரில் காஃபி போடுவதே ஒரு பெரிய வித்தையாக எனக்குத் தெரிந்தது என்றாலும் சில நாட்களிலேயே கற்றுக்கொண்டு நிபுணியாகி விட்டேன்! :)))) அந்தக் காஃபியைக் குடிச்சதும் இங்கே எங்க வீட்டுக் காஃபி பிடிக்காமல் போயிடுச்சு!

காஃபி மஹாத்மியம் தொடரும்!

Wednesday, March 19, 2014

முதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அபூர்வ எண்ணங்களும் விமரிசனம்!

இதுவும் உளவியல் ரீதியான கதையே. பதின்ம வயதுப் பெண்ணின் மனமும், ஆணின் மனமும் இயங்கும் விதம் குறித்து எழுதப் பட்டுள்ளது. பெண் சகஜமாய்ப்பழகுவதாலேயே அவள் மனம் இப்படித் தான் என நிர்ணயிப்பது கடினம். அதையே இந்தக் கதையும் சுட்டிக் காட்டுகிறது. தேனை அருந்த வண்டு மலரை மொய்க்கிறது.  அருந்தவும் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆதவனைக் கண்டதும் மலர்ந்த மலரோ, ஆதவன் மறைந்ததும் கூம்பி விடுகிறது.  இதை அறியாத வண்டோ பூவுக்குள் மாட்டிக் கொள்கிறது. அது நினைப்பதோ தான் மலரின் மனதில் இடம் பெற்றிருப்பதாகவே.  ஆனால் அதுவோ மலரின் மனதுக்கு அருகே கூடச் செல்லவில்லை. மலரின் கைக்குள் சிக்கிக் கொண்டு அதன் தாங்க முடியா காதல் வெள்ளத்திற்கு ஒரு தடுப்புச் சுவராகவே பயன்படுகிறது  இதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உணராமல் தனக்காகவே மணம் வீசுவதாக நினைக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஒன்றாகப் பழகியவர்கள் ஸ்ரீநிவாசனும் ஜெயஸ்ரீயும். குழந்தை முதல் ஒன்றாகவே பழகியதால் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசனை ஒரு ஆணாகவே நினைக்கவில்லை, அல்லது நினைத்தாலும், புரிந்தாலும் அவள் மனம் பளிங்கு போல் இருப்பதால் கல்மிஷம் இல்லாமல் பழகி வருகிறாள்.  இங்கே ஜெயஸ்ரீ பழகுவது ரகசியமாகவே இல்லை,  இரு தரப்புப் பெற்றோருக்கும் தெரிந்தே என்பதில் இருந்து பெற்றோரும் தவறாகவே நினைக்கவில்லை எனப் புரிகிறது.   ஜெயஸ்ரீ தன் வழக்கப்படி டெய்லரிடம் தன் ரவிக்கையின் சின்ன சின்ன மாறுதல் செய்யக் கூட ஸ்ரீநிவாசனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.

முதலில் எல்லாம் அவள் கொழு மொழு கன்னங்களின் அழகில் மயங்கிய ஸ்ரீநிவாசனுக்கு நாளாக, ஆக, அவள் உடலின் மாற்றங்கள் கண்களை மட்டுமில்லாமல் மனதையும் ஈர்க்கிறது.  அவள் வயதுக்கு வந்திருக்கும் விஷயமே புரியாத அளவுக்கு வெகுளியான ஸ்ரீநிவாசனுக்கு அவள் உடலின் மாற்றங்கள் விளைவிக்கும் விபரம் தெரியா உணர்ச்சிகள் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஸ்ரீநிவாசன் அளவுக்கு ஜெயஸ்ரீ வெகுளி யே அல்ல என்பது டெய்லரைக் குறித்த அவள் விமரிசனத்திலும், ஸ்ரீநிவாசனை விபரம் தெரியாத முட்டாள் என்பதிலும் தெரிந்தாலும், அவள் மனதில் ஸ்ரீநிவாசன் இடம் பெறவே இல்லை என்பதும், அவள் ஒரு சகோதரன் போலவோ, அல்லது நல்லதொரு நண்பனாகவோ தான் கருதி  வருகிறாள் என்பதும் தெரிகிறது.  ஸ்ரீநிவாசனின் மனதில் தான் சலனத்தைக் கிளப்பி விட்டிருக்கிறோம் என்பதை அவள் சற்றும் உணரவே இல்லை.  அப்படி உணர்ந்திருந்தால் அவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு  எங்கும் சென்றிருக்க மாட்டாளே.

ஒரு தோழியாக, சிநேகிதியாக, எல்லாவற்றுக்கும் மேல் சகோதரியாக, தாயாக என ஜெயஸ்ரீ அவனிடம் நடந்து கொள்கிறாள்.  அது தான் அவள் அவன் பசி பார்த்து வயிறு முட்ட உணவு வாங்கிக் கொடுக்கும்படி நடந்து கொள்வது காட்டுகிறது. இதில் காதல் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை.   ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு வயது காரணமாகவும் இயல்பாகவே ஆண், பெண் மாற்றுப் பாலினத்திடம் உள்ள ஈர்ப்புக் காரணமாகவும் அவளிடம் இனம் தெரியா உணர்வு பூர்வமான பாசம் தோன்றுகிறது. இது தான் காதலோ என்றெல்லாம் யோசிக்கிறான்  ஸ்ரீநிவாசன்.  படிப்பில் சுமார் ரகமான அவன் அவள் படிப்பிற்கும், அழகுக்கும் தான் தகுதியா என்ற்ல்லாம் யோசித்து அவளை எவ்விதத்திலேனும் கவர எண்ணுகிறான்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றிருந்த ஸ்ரீநிவாசன், ஜெயஸ்ரீக்குப் படங்கள் வரைந்து உதவி செய்த ஸ்ரீநிவாசன், இப்போது ஜெயஸ்ரீயைக் கவர்வதற்காகவும் தன் முழுத் திறமையும் காட்டி அவன் மிகவும் ரசிக்கும் ஜெயஸ்ரீயின் ஆப்பிள் கன்னங்களை நன்றாகத் தெரியும்படி அவள் படத்தை மிக அழகாக வரைந்து ரசிப்பதோடு அல்லாமல் அவள் மேல் கொண்டிருக்கும் காதல் வெளிப்படும் வண்ணம் கடையில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் பழத்தோடு அவள் கன்னங்களை ஒப்பிட்டு ரசிக்கிறான்.  இது அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதலின் வெளிப்பாடு என நினைப்பு வந்தாலும், அடுத்து அவன் செய்யும் காரியம் ஒருவேளை இது வாலிப வயதில் அனைத்துப் பதின்ம வயது விடலை வாலிபருக்கும் பெண்ணின் கவர்ச்சியான உடல் மீது தோன்றும்  ஈர்ப்போ என்னும் எண்ணமும் வருகிறது.

அந்த ஆப்பிளைக் காதலின் சின்னமான இதய வடிவில் வெட்டித் தான் வரைந்த ஓவியத்தின் கன்னங்களின் மீது வைத்து அதைக் கடித்து ருசி பார்க்கிறான். இங்கே தான் கொஞ்சம் சந்தேகம் வருகிறது இது வெறும் உடல் ஈர்ப்புத் தானோ என. பொதுவாக இந்த வயதிலேயே எல்லா ஆண், பெண்ணிற்கும் ஒருவர் மீது ஒருவருக்குத் தோன்றும் ஈர்ப்புத் தான் என உறுதியாகவும் ஆகிறது.

விபரம் புரியா வயது. பெண்ணின் உடல் காட்டும் கோணங்கள், சுண்டி இழுக்கும் பார்வை, சகஜமான பேச்சு எல்லாம் சேர்ந்து அவன் மனதில் புதியதோர் உலகமே சிருஷ்டி ஆகிறது.  அந்த ஓவியத்தைத் தன் தாயிடம் மறைக்காமல் காட்டி விடுகிறான்.  இங்கே அவன் போடும் கணக்கு, தாய்க்குத் தெரியட்டும் என்பதாகவும் இருக்கலாம். தாயின் மூலம் அவளிடம் தான் கொண்டிருக்கும் காதலைத் தெரிவிக்கலாம்.  இரு தரப்புப் பெற்றோரும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் சுலபமாகத் தன் ஆசை நிறைவேறும் என்ற மனக்கோட்டையாகவும் இருக்கலாம். இத்தனைக்கும் பின்னரே அவள் தன் ரவிக்கையை ஆல்டர் செய்ய அவனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.  அவனைப்பொறுத்தவரை அவள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யும் நிலைமையில் இருந்தான். அதோடு அவள் ரவிக்கையைத் தொடுவதும் அவனுக்கு அவளையே தொடுவது போன்ற உணர்வையும் தந்திருக்கலாம்.

ஆனால் டெய்லர் தூக்கிப் போடும் குண்டில் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.  அவன் கண்ணுக்கு இனிய காதலி யாருடனோ சுத்துவதாக டெய்லர் சொல்லக் கேட்ட அவனுக்கு ஒரே திகைப்பு.  அவளிடம் காதலைத் தெரிவித்துவிட வேண்டும் என முடிவு செய்தும் ஏனோ தயங்குகிறான். அவளே ஏதேனும் சொல்லுவாளோ என்னும் எண்ணம். ஆனால் அவளோ இவனைக் குறித்தோ இவன் எண்ணங்களைக் குறித்தோ நினைக்கவே இல்லை.  அவனும் மழுப்பலாகப் பேசி விட்டு வீடு திரும்பிப் படத்தைப் பூர்த்தி செய்து தன் தாயிடம் காட்டி ஒப்புதலும் வாங்கி விட்டான். அவள் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க வேண்டும் எனத் தாய் சொல்ல அவனும்  காத்திருந்து அவள் பிறந்த நாளுக்குத் தன் தாயோடு அந்தப் படத்தையும் அழகாகப் பரிசுப் பாக் செய்து எடுத்துச் சென்றால்!

சென்றவனுக்கு ஒரே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் அத்தை பிள்ளை, முறை மாப்பிள்ளை வந்திருக்கிறான். காதலுக்கு அவன் வில்லனோ என்று பார்த்தால் கடவுளே, அவன் தான் கதாநாயகன்,  நம் ஸ்ரீநிவாசன் வெறும் தோழனே. ஜெயஸ்ரீ சுற்றியதெல்லாம் அந்த அத்தை பிள்ளையோடு தான் என்பதும், இருவருக்கும் திருமணம் ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டு விட்டது எனவும் தெரிந்து கொள்கிறான். ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளையின் கம்பீரத்தையும், அழகையும், படிப்பையும், வேலையையும் பார்த்துவிட்டு ஜெயஸ்ரீயின் அழகுக்கும், படிப்புக்கும்  இவனே ஈடு கொடுக்கக் கூடியவன் என்ற சத்தியமான உண்மை ஸ்ரீநிவாசனுக்குப் புரிகிறது.  தான் கொண்டு வந்த பரிசைக் கூடக் கொடுக்காமல் பிரமையுடன் இருக்கும் அவனிடம் இருந்து அதை வாங்கிப் பார்த்த ஜெயஸ்ரீ ஆச்சரியம் அடைவதோடு வருங்காலக் கணவனிடமும் காட்டி மகிழ்கிறாள்.


அவள் தன்னைப் பற்றி அவனிடம் கூறி இருப்பதை அந்த மாப்பிள்ளை மூலமே அறிந்து கொண்ட ஸ்ரீநிவாசன் இப்போது அவள் துளியும் கல்மிஷமில்லாமல் தான் வரைந்து வந்த படத்தைக் கூட வருங்காலக் கணவனிடம் மறைக்காமல் காட்டி மகிழ்வதைக் கண்டதும் அவள் மனதில் தான் இருக்கும் இடம் என்னவென்று புரிந்து கொள்கிறான். ஸ்ரீநிவாசன் மனதில் இத்தனை நாட்கள் மறைந்திருந்த அன்பெனும் சூரியன் இப்போது ஆசை என்னும் மேகத்திலிருந்து வெளி வந்து பளிச்செனப் பிரகாசிக்க அவன் மனதிலும் தெளிவு பிறக்கிறது.  ஆனாலும் படத்தை மாட்ட அடிக்கும் சுத்தியலில் இருந்து பறந்து வந்த ஆணி அவன் நெற்றியில் மோதியதை எவருமே கவனிக்காத மாதிரி அவன் மனதிலும் சிறு வலி ஒன்று ஏற்படுகிறது. இதையும் எவரும் அறியவே முடியாது.  கோடையில் தெரியும் மேற்கு வானின் மின்னல் போல் ஸ்ரீநிவாசன் மட்டுமே அறிவான். நாளாக ஆக அந்த வலி மறையும். ஸ்ரீநிவாசனுக்கு என ஒருத்தி வருகையில்.  அது வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும் என்றாலும் இந்த முதல் காதல் அவனால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.


வைகோ சார் திரும்பத் திரும்ப என்னைத் தொந்திரவு செய்து எழுத வைக்கலைனா எழுதி இருப்பேனானு சந்தேகமே. ஆனால் என்னுடையதை விடவும் மற்றவர்கள் விமரிசனங்கள் இன்னமும் சிறப்பாகவே அமைந்திருந்தன. அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள். இதில் என்னை விடாப்பிடியாகப் பங்கு பெற வைக்கும் வைகோ சாருக்கு என் நன்றி.

Tuesday, March 18, 2014

ஜிஎம்பி சார் கூரியர் மூலம் அனுப்பி வைத்த பரிசு!இந்த ஆலிலைக் கிருஷ்ணன் அவரே வரைந்திருக்கார்னு நினைக்கிறேன்.
இது ஜிஎம்பிசாரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  இனிமேல் தான் படிக்கணும்.  இவை இரண்டும் நேற்று மாலை கூரியரில் வந்து சேர்ந்தது.  படம் சிதையாமல் இருக்கணுமேனு மிகக் கவனம் எடுத்துக் கொண்டு அனுப்பி இருந்தார். கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.  படம் நல்லபடியாக வந்து சேர்ந்து அவருக்குத் தகவலையும் அளித்து விட்டேன்.  அனைவருக்கும் இதைப் பகிர்ந்திருக்கிறேன்.  எல்லோரும் அளித்த ஊக்கத்தினாலேயே இதில் பரிசு பெற்றிருக்கிறேன். மற்றபடி நான் எழுதியதை விட நன்றாகவே மற்றப்பேரும் எழுதி இருந்தனர். போட்டினாலே விலகிச் செல்லும் என்னையும் போட்டி போட வைச்சுட்டாங்க! :))))))

Monday, March 17, 2014

டெல்லி சலோ! வாகா எல்லையில் தினசரி நடக்கும் ஒரு சடங்கு! :)

சும்மாவே நமக்கு தேசபக்தி கொஞ்சம் தூக்கலாவே இருக்கும்.  அப்போப்பா எட்டிப் பார்த்து மிரட்டும்.  இப்போ இந்த மாதிரி ஒரு இடத்துக்குப்போறதுனா கேட்கணுமா? சென்ட்ரல் வேர்ஹவுசிங் அலுவலகத்தில் மைத்துனரின் நண்பரைப் பார்த்துப் பேசிட்டுக் கிளம்பும் வரை தவிப்பான தவிப்பு.  ஒரு வழியாக் கிளம்பினோம்.  நல்லவேளையா மைத்துனரின் நண்பர் அங்கெல்லாம் கைப்பை எடுத்துச் செல்லக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டார்.  அலுவலகத்தின் அலமாரியிலேயே எங்கள் கைப்பைகள் வைக்கப்பட்டுப் பூட்டப் பட்டன. காமிரா எடுத்துக்கலாம்னு சொன்னதன் பேரில் கையில் காமிரா மட்டுமே. மற்ற எதுவும் அனுமதி இல்லை.


விஐபி நுழைவாயிலில் 


எல்லையை நோக்கி விரைந்தோம்.  அங்கிருந்த காவலர் கூண்டில் முதலில் அநுமதிச் சீட்டு வாங்கிப் பின் அலுவலகம் சென்று விஐபி பாஸ் வாங்கி அவர்கள் அனுப்பும் ஆளோடு சென்று நிகழ்ச்சியைப் பார்க்கச் செல்ல வேண்டும். அப்படியே முதலில் காவலர் அனுமதி பெற்று வந்த எங்கள் வண்டி டிரைவர் பின்னர் அலுவலகத்திலும் பாஸ் வாங்கினார்.  காரில் எல்லை வாயில் வரை செல்ல முடியாது;  பாதியிலேயே நிறுத்திடுவாங்க.  என்றாலும் அவங்க அனுமதிக்கும் தூரம் வரை செல்லலாம்னு காரில் அழைத்துச் சென்று காவலர் தடுக்கும் தூரம் வரை கொண்டு விட்டார். அங்கிருந்த இன்னொரு வயதான நடக்க முடியாத பெண்மணியையும் எங்களுடன் காரில் அழைத்துச் சென்றோம்.  காரில் இருந்து இறங்கியதும் சுமார் அரை கிலோ மீட்டர் நடக்கத் தான் வேண்டும்.  எங்களுடன் வந்த பெண்மணியின்   கணவர் முழு தூரமும் நடந்து வந்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக  இந்த தினசரிக் கோலாகலத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.  குறிப்பிட்ட எல்லைக்கப்பால் ஒரு வாயில் கதவு இருக்கிறது.  அதை மூடி விடுகின்றனர்.  அந்த வாயில் கதவுக்கும், எல்லை வாயில் கதவுக்கும் இடையில்  கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் தோற்றம் அளித்த இளைஞர்களும், இளம்பெண்களும் மூடி இருந்த எல்லைக் கதவில் இருந்து ஓட்டமாய் ஓடி நகரின் பக்கமாய் அமைந்திருக்கும் கதவு வரை வந்தனர்.  பின்னர் திரும்ப அதே போல் ஓடி எல்லைக்கதவை அடைந்தனர்.  ஓடுகையிலேயே உற்சாகமாய் ஜெய்ஹிந்த், வந்தேமாதரம் என முழங்கிக் கொண்டே ஓட, வந்திருக்கும் அனைவரும் அதை எதிரொலித்தார்கள்.தூரத்தில் தெரிவது நகர்ப்பக்கம் உள்ள வாயில். இதைத் தாண்டி இன்னொரு வாயிலும் உண்டு. அங்கே உள்ள காவலரிடம் தான் நுழைவுச் சீட்டு பெற வேண்டும்.  கூடி இருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டும் பார்வைக்கு.

கிரிக்கெட் விளையாட ஏற்படுத்தியிருக்கும் காலரிகள் போல் படிப்படியாக அமைந்திருந்தன. அவற்றில் மக்கள் வெள்ளம். பாகிஸ்தான் தரப்பிலும் மக்கள் உட்கார்ந்திருந்தார்கள் என்றாலும் அங்கே கொஞ்சம் உற்சாகக் குறைவு தான். அவ்வப்போது அங்கிருந்தும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் குரல்கள் ஒலித்தன. இங்கே வயது வந்த பெண்கள் கூட ஆடிப்பாடிக் களித்தனர். தேசபக்திப்பாடல்கள் அங்கிருந்து எல்லைப்பாதுகாப்புப் படை அலுவலகத்தில் இருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கக் கூடவே அனைவரும் பாடிக் கொண்டிருந்தனர்.  அவ்வப்போது ஜவான்கள் மக்களை அமைதிப் படுத்தி வரிசையை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டனர்.  நாங்கள் இருவரும் எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த ஆளுடன், ஒவ்வொரு பாதுகாப்புச் சோதனையாக முடித்துக் கொண்டு விஐபி நுழைவாயில் அருகே வந்தோம்.


முன்னால் தெரியும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் தான் நாங்கள் அமர்ந்தோம்.  அதன் பின்னர் இன்னமும் முப்பது பேர் வந்துவிட்டனர். 


எங்கள் அனுமதிச் சீட்டைப் பார்த்துவிட்டு முன் வரிசையில் அமைந்திருந்த நாற்காலிகளில் சென்று அமரச் சொன்னார் அந்த ஜவான். ஆஹா, கிட்டக்க இருக்கேனு நினைச்சோம்.  ஆனால் பாருங்க , போகப் போகக் கூட்டம் ஜாஸ்தியாக முன் வரிசைக்கும் இன்னமும் முப்பது பேர் வர, எங்களுக்கு முன்னால் நாற்காலிகள் போட்டு அவங்களை அமர வைக்கும்படி ஆகிவிட்டது.  நாங்கள் கொஞ்சம் பின்னால் போய்விட்டோம்.  வாயிலுக்கு அருகே யாரும் செல்ல முடியாது.  கொஞ்சம் தூரத்தில் இருந்து தான் படங்களை எடுத்தாகணும்.  வேறு வழியில்லை.  அதற்குள்ளாக மணி ஐந்தரை ஆக நிகழ்ச்சியும் ஆரம்பித்தது.


மூலையில் கூட்டமாகத் தெரிவது நடனம் ஆடிய ஆண்களும், பெண்களும். அந்த இடத்துக்குச் சென்று படம் எடுக்க முடியவில்லை.  ஜவான் அனுமதிக்கவில்லை. அவங்க திரும்ப நாங்க உட்கார்ந்திருந்த பக்கம் வருவாங்கனு நினைச்சா அவங்க வரதுக்குள்ளே இங்கே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.


அங்கே போனதிலிருந்தே தேசபக்தி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.  அந்தச் சூழ்நிலையைப் பார்த்துட்டு எப்போவும் சும்மா இருக்கும் ரங்க்ஸ் கூட வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்னு எல்லாம் கத்திட்டே இருக்கையிலே நாம சும்மா இருப்போமா!  நம்ம பங்குக்கு நாமும் கத்தினோம். இப்போ ஜவான் ஒருத்தரே மைக் மூலம் மக்களை எல்லாம் பாரத் மாதா கி ஜய், வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் னு எல்லாம் சொல்லச் சொல்ல, அனைவருக்கும் இன்னும் உத்வேகம் ஜாஸ்தியானது.  இடிமுழக்கம் போல் அனைவருமாய்க் கத்தினார்கள்.  இவ்வளவு கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு எப்படித் திரும்பப் போவது என்னும் கவலையும் என்னைப் பீடித்தது.  ரங்க்ஸுக்குக் கோபம் வந்து, "அதை அப்போப் பார்த்துக்கலாம், இப்போ இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்!" னு சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.


எங்களுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த விஐபிக்கள்.  நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போவதால் மக்கள் குறுக்கே வரக்கூடாது என ஜவான் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.இரு வாயில்களும் தயார் நிலையில்.   பாகிஸ்தான் தரப்புக் கதவுக்கும், இந்தியத் தரப்புக் கதவுக்கும் இடையில் உள்ள இடம் பொதுவானது.

நாளை மற்றபடங்களும் நிகழ்ச்சி குறித்த சிறிய விளக்கமும்.

Sunday, March 16, 2014

டெல்லி சலோ! எல்லையை ஒரு பார்வை!

இந்திய பாகிஸ்தானின் எல்லை மற்ற மாநிலங்களில் பிரிகிறாப்போல் இங்கே பஞ்சாபில் பிரியாது.  இந்த எல்லைப் பகுதியின் ஒரே தரை வழி வாயில் இங்கே தான் உள்ளது. அடாரி என இந்தியாவிலும் வாகா என பாகிஸ்தானிலும் அழைக்கப்படும் இந்த இடம் மிக முக்கியமான ஒன்று. ராட்க்ளிஃப் ஏற்படுத்திய எல்லைக் கோடு இங்கே தான் குறுக்கே சென்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கிறது.  இதன் மூலம் ஒன்றாக இருந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிந்து கிழக்குப் பகுதி இந்தியாவுக்கும், மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கும் சென்றது. இந்த எல்லையானது பாகிஸ்தானின் லஹோரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கிறது. இந்த கிராமம் 1947 இல் பிரிந்தது.  இதன் பாகிஸ்தான் பகுதியே வாகா என அழைக்கப்படுகிறது  இந்தியப் பகுதியை அடாரி என அழைக்கின்றனர்.

இங்கே இந்தியத் தரப்பில் நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல் காத்து வருகிறார்கள்.  இந்திய பாகிஸ்தான் எல்லையின் ஒரே தரைவழியிலான எல்லை இங்கே மட்டுமே அமைந்துள்ளது.  கிராண்ட் ட்ரங்க் ரோடு எண் ஒன்று என அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையும் இங்கே அமைந்துள்ளது.  ஆசியாவின் மிகப் பெரிய நெடுஞ்சாலையாகச் சொல்லப்படுகிறது.
இந்திய பாகிஸ்தானின் வியாபார வாயிலுக்கான நுழைவிடமும் இங்கே அமைந்துள்ளது.  இந்தியப் பகுதியில் இந்தியாவின் சென்ட்ரல் வேர்ஹவுசிங்கினால் ஏற்படுத்தப்பட்ட மஹாப் பெரிய கிடங்குகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் சிமென்ட், கற்கள், ஜல்லி, பெரிய பாறைகள் போன்ற வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள், ஆஃப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியே வரும் உலர் கொட்டைகள், திராக்ஷைகள் போன்றவையும் பாகிஸ்தானின் பிரபலமான உப்பும், வெள்ளியும் இங்கே வந்து சேர்ந்து பின்னர் வியாபாரிகளுக்குப் போய்ச் சேருகின்றன.  இந்த இடங்களை எல்லாம் பார்த்தோம்.  ஆனால் இங்கே ஃபோட்டோ எடுக்க முடியாது. எடுக்கக் கூடாது. இங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் அடாரி எனப்படும் எல்லைக் கிராமம்.சம்ஜெளதா விரைவு ரயில் வண்டி இந்த அடாரியில் இருந்து தான் பாகிஸ்தானின் வாகாவுக்குச் செல்கிறது.  தற்போது இந்திய பாகிஸ்தானின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளன. ஆனால் முதல் முதலாகப் பாகிஸ்தான் பிரிந்த போது அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆனவை எல்லைப் பகுதி ரயில்வழியாக ஒரு ரயில் முழுதும் இறந்தவர்களின் பிணங்கள். அதன் பின்னரும் இரு பக்கமும் இறுக்கமான நிலைமையே நீடித்துத் தற்போது தான் 2006-க்குப் பின்னர் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது.  தொடர்ந்து சுமுகமான நிலைமை நீடிக்கப் பிரார்த்திப்போம்.


இந்த எல்லையில் தான் தினம் தினம் காலையில் இந்தியப் பகுதியில் தேசியக் கொடியும், பாகிஸ்தான் பகுதியில் அவங்க கொடியும் ஏற்றப்படுகின்றது.  அதை தினம் தினம் மாலை கொடியை ஒரே சமயம் இறக்குகின்றனர். இது கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே நடைபெறுகிறது.  தினம் தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் இங்கே வந்து இதைப் பார்த்துச் செல்கின்றனர்.  அதுவும் இந்தியத்தரப்பில் தான் அதிகமான அளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் என வருகின்றனர் என்பதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தியத் தரப்பிலேயே அதிகம் வருகின்றனர். இனி  இதைக் குறித்து படங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.மேலுள்ள இரு படங்களுக்கு நன்றி விக்கிபீடியா! கீழுள்ள படம் நான் எடுத்தது.  இந்தியத் தரப்பு வாயிலையும் அது பூட்டப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.  பின்னால் தெரிவது லஹோரின் நுழைவாயிலும் அதன் மேல் பாகிஸ்தான் கொடி பறப்பதும்.

Saturday, March 15, 2014

ஜிஎம்பி சாரின் கதைக்கு வேறொரு முடிவு! :))) பிடிச்சாப் படிங்க, இல்லைனா விடுங்க!

ஜிஎம்பி சாரின் கதைக்கு வந்த முடிவுகளில் நடுவர் என் கதையைப் பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  இதைத் தவிரவும் வேறு இரு முடிவுகள் யோசித்திருந்தேன்,  அவற்றை இங்கே பகிர்கிறேன்.

"கண்டதும் காதலா? எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் நீங்க ஏன் எனக்குக் கடிதம் கொடுத்துட்டு இதைக் கேட்கறீங்க?"

"என் கடிதத்துக்கு உங்கள் பதில் என்ன அம்மணி?"

"அம்மணி, அம்மணி என்றே கூப்பிடுகிறீர்களே, என்னோட பெயர் கூடத் தெரியாமலா காதலிக்க ஆரம்பிச்சிருக்கீங்க?  அது சரி, இப்படிக் கண்டதும் காதலில் உங்களுக்கும் உடன்பாடா? " என்று கேட்டாள் சந்தியா!

"அம்மணி நான் உங்களைக் காதலிக்கவே இல்லை.  உண்மையில் காதலித்திருந்தால் உங்கள் பெயரைத் தான் முதலில் தெரிந்து கொண்டிருப்பேன். " பாபு வசீகரமாய்ச் சிரித்தான்.

சந்தியாவின் முகம் கோபத்தால் சிவந்தது.  "என்ன காதலிக்கவில்லையா? அப்போ எதுக்கு என்னையே பின் தொடர்ந்து, முதலில் ஒரு சின்னத் துண்டுக்கடிதம் கொடுத்து சந்திக்கச் சொல்லிப் பின் நேரில் சந்தித்ததும் இந்தக் காதல் கடிதம்!  இதற்கு என்ன அர்த்தம்?  போலீசைக் கூப்பிடவா? பெண் என்றால் கிள்ளுக்கீரையாக நினைச்சீங்களா?  உங்க இஷ்டத்துக்குக் காதல் கடிதம் கொடுத்துட்டு அப்புறமாக் காதலிக்கவே இல்லைனு சொல்வீங்க, நாங்க என்ன ஏமாளிங்க, பொண்ணுங்கனா ஏமாத்தலாம்னு ஒரு எண்ணமா?  சந்தியா பொரிந்தாள்.

பாபு சிரித்தான்.  நிதானமாகவே "அம்மணி, நான் ஒரு தொலைக்காட்சி நிருபன். நிலாத் தொலைக்காட்சிக்காக நாங்கள் கொடுக்கப் போகும் சிறப்பு நிகழ்ச்சி இது. இந்தக் காலப் பெண்கள் ஒருவன் காதல் கடிதம் கொடுத்தால் உடனே அதற்கு எப்படித் தங்கள் மனதைக் காட்டுகின்றனர், அவர்களின் எதிர் விளைவுகள் என்பது குறித்து ஒரு சர்வே நடத்துகிறோம். அதற்குத் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். அகில உலகப் பெண்கள் தினத்தில் இன்றைய இளம்பெண் காதல் வசப்படுவாளா, ஒரு கடிதத்திலேயே ஆணுக்கு வசமாகிவிடுவாளா, சிந்திப்பாளா என்றெல்லாம் தெரிந்து கொண்டு பேட்டி எடுக்க எங்கள் ஆசிரியர் என்னைப் போல் இன்னும் சிலரையும் அனுப்பி இருக்கார்.  அவங்க எல்லாம் மற்றக் கல்லூரிகள், அலுவலகங்கள், ஐடி கம்பெனிகள் பக்கம் சுத்துவாங்க.  நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். சொல்லுங்க, கண்டதும் காதல் என்பதில் உங்களுக்கு உடன்பாடா?"  அவள் உடை அலங்காரத்திலோ, அவள் அழகிலோ சிறிதும் பாதிக்கபடாதவனாக பாபு மீண்டும் கேள்வி கேட்க, ஒரு நிமிஷம் அவள் மனதில் எரிச்சல் மிகுந்தது.

இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என நினைத்தாள்.  ஆனால் பாபு கை காட்ட, அங்கே அப்போது மறைவிடங்களில் இருந்து திடீரெனத் தோன்றிய காமிராக்காரர்களைப் பார்த்ததும் மனம் மாறினாள்.  ஆனால் இந்த பாபு!  அவள் அழகினால் சலனம் அடையவே இல்லையே!

அவள் பேசத் தொடங்கினாள்.  "கண்டதும் காதல் என்பது வராது தான்.  பெண்ணுக்கு முதலில் ஆணைக் குறித்து முழுதும் தெரிய வேண்டும்.  அவன் எங்கே வேலை செய்கிறான், படிக்கிறான் என்றால் படிப்பு குறித்து முழுத் தகவல்கள், அவனால் அவளை வைத்துக் குடும்பம் நடத்தும் அளவுக்குத் தகுதி உள்ளவனா என்பதெல்லாம் பார்ப்பாள்.  பொருளாதார ரீதியாகப் பாதுகாப்புக் கிடைக்குமா என யோசிப்பாள்.  அதன் பின்னர் தான் அவளுக்கு அந்த ஆணின் அழகு, படிப்பு, தகுதி, குடும்பச் சூழ்நிலை குறித்துச் சிந்திப்பாள்.  பாதிப்படிப்பில் படிப்பை விட்டுட்டுக் கல்யாணம் செய்துக்கத் தயக்கம் இருக்கும்.  அப்படி மீறிப் போனால் அது உண்மையான காதலாக இருக்காது.  வெறும் உடல் கவர்ச்சி தான். " என்றாள் சந்தியா.

"நீங்கள் யாரையானும் காதலித்திருக்கிறீர்களா?" என்று பாபு கேட்க, "இது வரை இல்லை.  இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். என் காதல் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றாள் சந்தியா.

"யார் அந்த அதிர்ஷ்டசாலி? பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா?" பாபு கேட்க அவள் சுட்டு விரல் அவனை நோக்கி நீண்டது.

"என்ன நானா? மேடம், இது லைவ் ஷோ, எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க!" என்று பாபு பதற, "பார்க்கட்டுமே, எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. முக்கியமா உங்க அணுகுமுறை.  எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த திடம், உறுதி, நிதானம் எல்லாமும் பிடிச்சிருக்கு.  இப்போதைக்கு என் காதலை மட்டும் தான் சொல்லி இருக்கேன்.  நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா இல்லையானு தெரியாது.  ஆனால் அதுக்காக வற்புறுத்த மாட்டேன்.  நீங்களே என்னிடம் வந்து சொல்லும் வரை பொறுமையாக் காத்திருப்பேன். " என்றாள் சந்தியா.

படப்பிடிப்புக் குழுவினர் உற்சாகத்துடன் கை தட்ட பாபுவின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. சந்தியாவை நோக்கிக் கை நீட்டினான்.  நீட்டிய அவன் விரல்களைப் பற்றிக் கொண்டாள் சந்தியா.

இந்தக் கதைக்கு நான் ஏற்கெனவே எழுதி இருந்த முடிவு பரிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இங்கே

Friday, March 14, 2014

டெல்லி சலோ, "வாகா"ய் ஒரு எல்லை!

76 ஆம் வருடம் முதல்முறையாக டெல்லி சென்றோம்.  அப்போது டெல்லியை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுக் குதுப்மினாரின் அருகிலுள்ள இரும்புத் தூணைப்பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதில் விக்கிரமாதித்தன் பெயர் வேறே இருந்ததில் வியந்திருக்கேன்.  அந்தத் தூண் விக்கிரமாதித்தன் நாட்டிய வெற்றித் தூண் என்றும் பாரதத்துக்கு வெளியே வாலிகர்கள் என்பவர்களை வென்று திரும்பியதற்காக விஷ்ணுபாதம் என்னும் குன்றில் இந்த வெற்றிச் சின்னம் அமைக்கப்பட்டது எனவும், பாரதத்துக்கு வெளியே சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அன்று முதல் விக்கிரமாதித்த சகாப்தம் ஆரம்பித்தது எனவும், அதன் பிறகு அவன் பேரனான சாலிவாஹனனும் அதே போல் வெளிநாடு சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அவன் பெயரில் சாலிவாஹன சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் அந்தத் தூணிலேயே குறிப்பிட்டிருந்தாலும் பின்னாட்களில்  ஒரு புத்தகத்திலும் படித்துத் தெரிந்து கொண்டேன்.  இந்த சாலிவாஹன சகாப்தம் ஆரம்பித்து ஏறக்குறைய 1950 ஆண்டுகள் இருக்கலாம்.  அதன் பின்னர் எந்த மன்னனும் இப்படி அந்நிய நாட்டை வென்றதில்லை.  ஆகையால் அதன் பின்னர் எந்த சகாப்தங்களும் ஏற்படவும் இல்லை.  


ஆனால் குதுப்மினாரில் உள்ளது விக்கிரமாதித்தனின் வெற்றித் தூணே என்பதில் ஐயமில்லை.  நம் தொல்பொருள் துறையினரும் சரி, மத்திய, மாநில அரசுகளும் சரி ஒரு இந்திய மன்னனின் இத்தகைய வெற்றிக்கும் அவன் நாட்டிய வெற்றித் தூணுக்கும் இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை. சொல்லப் போனால் படித்தேனே தவிர எனக்கும் இவற்றில் அவ்வளவாக அக்கறை இல்லாமலே இருந்தது என்பது உண்மை தான்.  இணையத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஜெயஶ்ரீ சாரநாதன் அவர்களின் பதிவுகள் அறிமுகம் ஆகத் தொடர்ந்து படித்து வந்ததில் அவரும் இதை உறுதி செய்யும் விதமாக எழுதி இருந்தார். நம்முடைய பெருமையை நாமே அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என வருத்தமாக இருக்கிறது.

போகட்டும், என்றாவது ஒரு நாள் இதற்கு முக்கியம் வராமலா போகப் போகிறது?? மற்றபடி ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரி போன்ற இடங்களெல்லாம் போயாச்சு.  குருக்ஷேத்திரமும் போய் வந்தோம்.  பஞ்சாப் பக்கம் தான் போகவே இல்லை. ஆகவே இம்முறை அமிர்தசரஸ் சென்று பொற்கோயிலையும், வாகா எல்லையையும் தரிசிக்க ஆவல் கொண்டிருந்தோம்.  சென்னையிலிருக்கையிலேயே அமிர்தசரஸ் செல்லும் ஸ்வர்ண ஷதாப்தியில் டிக்கெட் வாங்கியாச்சு.  பெப்ரவரி 26 ஆம் தேதி காலை ஏழு இருபதுக்குச் செல்லும் வண்டியில் அமிர்தசரஸ் செல்லவும், மறுநாள் மாலை டெல்லி திரும்ப அமிர்தசரஸிலிருந்து நாலு இருபதுக்குக் கிளம்பும் ஸ்வர்ண ஷதாப்தியிலும் டிக்கெட் வாங்கி இருந்தோம்.

ரங்க்ஸின் பெரிய தம்பி சென்ட்ரல் வேர்ஹவுசிங்கில் வேலையாக இருப்பதால் வாகா பார்டரில் இருக்கும் அவங்க அலுவலகத்தின் மூலம் எங்களுக்கு விஐபி பாஸுக்கும் போகவர வண்டிக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.  வண்டி ஸ்டேஷனுக்கே வந்து எங்களை அழைத்துச் செல்லும் எனக் கூறி அங்கேயே சர்க்யூட் ஹவுஸில் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தார்.  நல்ல குளிரில் காலை நாலு மணிக்கு எழுந்து காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டுக் குளித்து முடித்து நியூ டெல்லி ஸ்டேஷன் கிளம்பினோம்.  வட மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் உட்கார வசதிகளே இல்லை. அங்கே உட்காரவும் கூடாது.  ஆங்காங்கே இருக்கும் ஓய்வறைகளில் தான் இடம் இருந்தால் உட்காரலாம். நடைமேடையில் ஒரு சின்னத் தூணருகே கூட உட்கார முடியாதபடிக்குக் கட்டி இருப்பார்கள். ரயில் வரும் நேரம் தான் நாம் நடைமேடைக்கு வந்து, அங்கே ஒளிரும் அறிவிப்புப் பலகைகள் மூலம் நம் பெட்டி எந்த இடம் வரும் என்பதைத் தெரிந்து கொண்டு  அங்கே சென்று நிற்கலாம்.  ஆகையால் ரயில் வரும்வரையிலும் நாங்களும் முதல்வகுப்பு ஓய்வறைக்குச் சென்று தங்கினோம்.

இந்த ஷதாப்தி ரயில்களின் பயணம்   தென் மாநிலங்களில் செய்வதை விட வட மாநிலங்களில் செய்வது கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.  அங்கே இன்னமும் உணவு தரமாகவும், காஃபி,  தேநீர் போன்றவையும் தரமாகவும் இருப்பதோடு மெனுவில் உள்ளதைச் சரியாகவும் தருகின்றனர்.  அதுவே பெண்களூருக்குச் சென்னையிலிருந்து செல்லும் ஷதாப்தியில் அப்படித் தருவதில்லை.  சென்னையிலிருந்து புது டெல்லி செல்லும் ராஜ்தானியின் உணவுத் தரம் மிக மோசம். கவனிப்பும் இல்லை.  மெனுவில் உள்ளபடி தருவதும் இல்லை.  பத்ரிநாத் செல்கையில்  ஹரித்வார் வரை செல்ல புதுடெல்லி-டேராடூன் ஷதாப்தியில் சென்றோம்.  அருமையான உணவு. கவனிப்பும் இருந்தது. அதே போல் இங்கே ஸ்வர்ண ஷதாப்தியிலும் நல்ல உணவு, நல்ல கவனிப்பு. மதியம் ஒரு மணிக்கு அமிர்தசரஸ் போய்ச் சேர்ந்தோம். எங்களை அழைத்துச் செல்ல வந்தவரின் மொபைல் எண்ணை வைத்து அவரைக் கண்டு பிடித்து ஸ்டேஷன் அருகிலேயே இருந்த சர்க்யூட் ஹவுஸுக்குப் போனோம்.

அங்கே அறைச் சாவி கொடுத்ததும், (:))))))அதிகமில்லை வாடகை, ஒரு நாளைக்கு 1,200 ரூபாய்கள் தான்!) வாடகையைக் கேட்டு மயக்கமே வந்தது என்றாலும் எங்கேனு போய்த் தேடுவது?  அதோடு வாகா எல்லைக்கு இன்று தான் பாஸ் கொடுத்திருக்காங்க.  மூணு மணிக்கெல்லாம் அங்கே செல்லக் கிளம்ப வேண்டுமே!  சாமான்களை அறையில் வைத்துவிட்டுக் கொஞ்சமாக உணவு உண்டுவிட்டு வாகா எல்லையை நோக்கி விரைந்தோம்.வாகா செல்லும் வழி 
வாகா எல்லையில் பீட்டிங் ரிட்ரீட் காண விரையும் மக்கள்
இந்த இடத்தில் இருந்து தான் செக்யூரிடி செக் அப் முடிந்து மக்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும்.

விபரங்களும் படங்களும் தொடரும்.

டெல்லி சலோ --3

போர்ட்டர் வேகமாகச் சென்றுவிடவே போர்ட்டரைத் தேடிக் கொண்டு சென்ற ரங்க்ஸ் ஒருவழியாக அவரைக் கண்டு பிடித்துவிட்டார்.  அவர் ஒரு டாக்சிக்கு அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார்.  ரங்க்ஸும் அங்கே வந்த டாக்சிக்காரர் கிட்டே குர்காவ் செல்ல பேரம் பேசி 700 ரூபாய்க்கு (மஹா கொள்ளை, நிஜாமுதீனில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் தான்) ஒத்துக் கொண்டு விட்டார். போர்ட்டரை செட்டில் பண்ணி அனுப்பி விட்டார்.  அதன் பின்னரே என்னைத் தேடி இருக்கிறார்.  அதுக்குள்ளே டாக்சி டிரைவர் சாமான்களைத் தூக்கிச் சென்று டாக்சிக்குள் வைக்க, ரங்க்ஸுக்கு டாக்சி டிரைவரைத் தொடர்வதா, என்னைத் தேடுவதா என்ற குழப்பம் வர, நான் அப்போத் தான் நடைமேடையின் உயரமான படிகளின் கடைசிப் படியில் காலை வைத்துக் கீழே இறங்கினேன்.

உடனே என்னைக் கைகாட்டி அழைத்துவிட்டு டாக்சிக்காரரைத் தேடிச் செல்ல, எல்லா ரயில்வே ஸ்டேஷன்களிலும் போல் இங்கேயும் நடு நடுவே ஒன்றரை அடி உயர நடைமேடைகள் காணப்பட அவற்றைச் சுற்றி வந்து ரங்க்ஸ் இருக்குமிடம் போகவும் முடியாமல் ஒன்றரை அடி நடைமேடையின் மேல் ஏறவும் முடியாமல் நான் தவிக்க,  அம்மாதிரி இரு நடைமேடைகளுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்த நூற்றுக்கணக்கான டாக்சிகளுக்கு இடையில் எங்க சாமான்களைத் தூக்கிச் சென்ற டிரைவரை ஒரு கண்ணால் தேடிக் கொண்டும், மற்றொரு கண்ணால் நான் வருகிறேனா எனப் பார்த்துக் கொண்டு ரங்க்ஸ் செல்ல. அங்கே எந்த ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் பார்க்க முடியாத ஒரு அற்புதமான காட்சி அரங்கேறியது.  "நீ எங்கே, நான் அங்கே!" னு இரண்டு பேரும் பாடாத குறைதான்.

அங்கிருந்த சிலரின் உதவியோடு மெதுவாக ஒவ்வொரு நடைமேடையிலும் ஏறி நான் அந்தப்பக்கம் செல்ல அப்போது தான் டாக்சி டிரைவர் எங்களைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்பாடா!  ஒருவழியாக அவரே எங்களைக் கூப்பிட்டு விட்டாரேனு ஆறுதல் அடைந்து  ரங்க்ஸின் உதவியுடன் நானும் டாக்சி இருக்கும் பக்கம் போய்ச் சேர்ந்தேன். அதற்குள்ளாகப் பெட்டிகளைப் பின்னால் டிக்கியில் அடுக்கிவிட்டதையும் காட்டினார் டிரைவர். பின்னர் குர்காவ் பயணம் ஆனோம்.  அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே வீட்டுக்குப் போயாச்சு.  ஆனால் பாருங்க, இந்த சூரியன் மேகப் போர்வையை விட்டு வெளியே வரமாட்டேன்னு ஒரே அடம்.


பனி மூடிய தெருக்களின் ஒரு பார்வை.  வண்டிக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக எடுத்த படம்.டெல்லி செல்கையில் ரயில் பாதையின்  ஒரு காட்சி காலை ஏழு மணிக்கு.காலை எட்டு மணிக்கும் இழுத்துப் போர்த்துக் கொண்டு வெளிவராமல் அடம் பிடிக்கும் சூரியன்!

இம்முறை டெல்லி செல்லும் முன்னரே மைத்துனருக்கு மும்பை மாற்றல் ஆகிவிட்ட செய்தி கிடைத்திருந்தது.  டெல்லி பயணத்தையே ரத்து செய்ய நினைத்தோம்.  ஆனால் பின்னர் போயிட்டு வந்துடலாம்னு போனோம். அதுக்கு ஒரு முக்கியக் காரணம் இது வரை பார்க்காத இரு இடங்களை இம்முறை எப்படியானும் பார்க்கணும்னு தான்.  அவற்றைக் குறித்து இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Wednesday, March 12, 2014

டெல்லி சலோ -- 2

முதல் வகுப்பு  ஏசினு பேரு.  ஆனால் வண்டி டப்பாவா இருந்தது. போறாக்குறைக்கு ஒரு எலியை வேறே துணைக்கு வைச்சிருந்தாங்க.  அதை மெதுவா எங்க கூப்பேயிலிருந்து வெளியே அனுப்பிட்டு அட்டென்டென்டைக் கூப்பிட்டு எலியைப் பார்த்துக்கச் சொல்லிட்டு சாப்பாடு விஷயமெல்லாம் கேட்டு வைச்சுண்டோம்.  சாப்பாடு, காஃபி ஆர்டர் எடுக்க ஆள் வந்ததும் காலை காஃபி ஆறரைக்கு வேணும்னு சொன்னால் பிடிவாதமாசாடே சாத் கோ ஹி ஆயகா சாப்!  (ஏழரைக்குத் தான் சார் வரும்னு) சொல்லிட்டார்.  குறைந்த பக்ஷமாக ஏழுக்காவது கொடுப்பா, நாங்கல்லாம் நாலு மணிக்கே முழிச்சுட்டு உட்கார்ந்திருப்போம்னு சொல்லிட்டுப் படுத்தோம்.  விபரீதத்துக்கு மூணு மணிக்கே முழிப்பு வந்தாச்சு.  வீட்டிலேன்னா எழுந்து ஏதானும் வேலையானும் செய்யலாம். இங்கே என்ன செய்யறது? காலைக்கடன்களை முடித்துக் கொண்டு மறுபடியும் படுத்தேன்.  நேரம் மெல்ல நகர ஒருவழியா ஆறரை மணிக்கு ஒரு காஃபி வென்டார் காஃபி எடுத்து வர அதை வாங்கிக் குடிச்சோம். அதுக்கப்புறமாக் கொண்டு போன புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

காலை ஆகாரத்துக்கு இட்லி, வடை கிடைக்கும்னு சொல்லி இருக்கவே அது ஆர்டர் செய்திருந்தோம்.  காலை முதல் காஃபியோடு காலை ஆகாரமும் வந்து சேர்ந்தது.  ரவை இட்லி போல் இருந்த அந்த இட்லியைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினேன்.  ரங்க்ஸ் என்னமோ இட்லியையே பார்க்காத மாதிரி ரசிச்சுச் சாப்பிட எனக்கு எரிச்சல் வந்தது.  பின்னர் காஃபி குடிக்கலாம்னு ஃப்ளாஸ்கைத் திறந்து ஊற்றினால் சந்தேகமா இருந்தது.  காஃபி போல் இல்லையே?  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குடிச்சால் தேநீர்!  ஆனால் நல்லாவே இருந்தது.  சரி போகட்டும்னு குடிச்சு வைச்சோம்.  மதியம் சாப்பாடும் அவங்க கிட்டேயே ஆர்டர் கொடுத்தாச்சு.  சென்னையில் இருந்து சென்றதால் சாப்பாடு கையில் எடுத்துச் செல்ல முடியவில்லை.  ஆகவே நான் முன்னெச்சரிக்கையாக உணவு விஷயத்தில் கவனமாக இருந்தேன்.  அதிகம் வேண்டாம்னு இரு பரோட்டாவும் சப்ஜி, தயிர் போதும்னு சொல்லிட்டேன்.

பரோட்டாவா அது!  ரப்பர்!  ஆனால் சப்ஜி காரமில்லாமல் இருந்தது.  தயிர் தயிராகவே இல்லை. ஒரே தண்ணீர் மயம், புளிப்பு வேறே. சாப்பிட்டோம்னு பெயர் பண்ணினோம்.  இரவுக்கு ஒரு சாப்பாடு போதும்னு சொல்லிட்டேன். எனக்குச் சாப்பாடு வேண்டாம்னு முடிவு செய்துட்டேன்.  பழங்கள் இருந்தன. அதோடு ரயிலில் சூடாகப் பால் வேறே வரும்.  ஒன்பது மணிக்குக் கொண்டு வருவாங்க.  அதை வாங்கிக் குடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டு இரவுக்கு அப்படியே செய்தேன்.  மறுநாள் காலை அரை மணி தாமதத்தில் ஹஸ்ரத் நிஜாமுதீன் போனது.  ரயில்வே அட்டென்டன்ட் உதவி செய்ய சாமான்களை இறக்கினோம்.  நாங்க போக வேண்டியது குர்காவ்! ஆகவே லோதி ரோடு பக்கமாக வெளியேற வேண்டும்.  வண்டி நின்றதோ பனிரண்டாம் நடைமேடை. அங்கிருந்து ஒன்றாம் நடைமேடை வரை வந்து வெளியே செல்லணும்.

அதுக்குள்ளே ஒரு போர்ட்டர் வந்து 150 ரூபாய்க்கு சாமான்களை எடுத்துச் செல்வதாகக் கூற சரினு ஒப்புக் கொண்டோம்.  போர்ட்டரோடு வேகமாய் நடக்க என்னால் இயலாது என்பதால் ரங்க்ஸை போகச் சொன்னால், எங்கே!   அவராலும் வேகமாக நடக்க இயலவில்லை.  போர்ட்டர் போயே போய்விட்டான். இவர் எங்கேயோ போகிறார். நல்லவேளையாக உயரமாக இருப்பதால் எங்கே போகிறார்னு என்னால் கண்டுபிடிக்க முடிகிறது. இல்லைனா அந்தக் கூட்டத்தில் கஷ்டம் தான்.  அதோடு ஒரு குறிப்பிட்ட சந்திப்பில் இடப்பக்கம் திரும்பணுமா, வலப்பக்கம் திரும்பணுமானு வேறே குழப்பம்.  அப்புறமா ஓரிருவரிடம் கேட்டுக் கொண்டு சென்றேன்.  அப்படியும் சந்தேகம்.  கொஞ்ச தூரத்தில் ரங்க்ஸின் தலை தெரியவே அப்பாடி, சாமான் போனால் போகிறது, இவரானும் கண்ணில் தென்பட்டாரே என நினைத்துக் கொண்டு முடிந்தவரை வேகமாக நடந்தேன்.  அவரோ அப்போது படியில் இறங்க ஆரம்பிச்சிருந்தார். திடீர்னு ஆளையே காணோம்.

Tuesday, March 11, 2014

டெல்லி சலோ!

சீரியசா இருந்தது போதும்.  இப்போ நாங்க ஊருக்குப் போன விஷயத்துக்கு வருவோமா!  2012 ஆம் வருஷம் டெல்லிக்குப் போனப்போ ஒரு அவசரம், கவலை, பரபரப்பு என இருந்தது.  நல்ல வேளையாப் போன காரியம் நல்லபடியா முடிஞ்சு மைத்துனரும் சுகமாய் வீடு திரும்பினார்.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் சாவகாசமாய் ஓய்வு எடுத்துக்கும்படி வரச் சொல்லி மைத்துனர் பலமுறை அழைத்தும் எங்களால் போக முடியவில்லை.  நடுவில் மைத்துனரே இங்கு இரு முறை வரும்படி இருந்தது.  எங்களுக்கும் அடுத்தடுத்து உறவினர்கள்,நண்பர்கள்னு வருகை.  இந்த வருஷம் எப்படியானும் போகணும்னு 2013 இல் நினைச்சப்போப் போக முடியாமல் போச்சு.   அதோடு டிசம்பரில் இருந்து டெல்லிக் குளிர் வேறே பயமுறுத்தல்.  ஆனால் நான் எப்படியும் மார்ச் மாதத்துக்குள்ளாகப் போயிட்டு வரணும்னு நச்சரிக்கவே, பெப்ரவரி மாதம் 20 தேதிக்குக் கிளம்ப முடிவாயிற்று.

டிக்கெட்வாங்குதல் போன்ற இன்ன பிற சமாசாரங்களை மைத்துனரே செய்து முடித்துவிட்டு எங்களுக்குச் சுட்டியைக் கொடுக்கவே, இங்கே பிரின்ட் அவுட் மட்டும் எடுத்துக் கொண்டோம்.  தேவை இல்லை தான்.  ஆனால் செல்லில் பல சமயங்களிலும் கவனக் குறைவால் ரயில்வே அனுப்பும் செய்தியை அழித்துவிடும் வாய்ப்புகள் உண்டு.  ஆகையால் எதுக்கும் இருக்கட்டும்னு ப்ரின்ட் அவுட்டும் எடுத்தாச்சு.  20 ஆம் தேதி சென்னை பயணம். எழும்பூர் போனால் மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்க நேரிடும் என அண்ணன் வீட்டில் எச்சரிக்கவே, மாம்பலத்திலேயே இறங்கி அம்பத்தூர் சென்றோம்.  என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!  அம்பத்தூரில் ஒரு சில சிக்கலான பிரச்னைகளைக் கொண்ட தெருக்களைத் தவிர மற்றத் தெருக்கள் வழவழ வென்று இந்தக்கோடிக்கு அந்தக் கோடி நல்ல தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது.  இதிலே எங்க வீடு இருக்கும் தெருவும் ஒண்ணு.


தெருவைப் பார்க்கையிலேயே மயக்கமே வந்துடுச்சு!  அவ்வளவு சுத்தம்.  பெரும்பாலான புதுசாகப் போடப்பட்ட தெருக்களில் குடி இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சுத்தத்தைக் கடைப்பிடிப்பது உண்மையிலேயே  பாராட்டத் தக்கது.  இப்படி ஒரு சுத்தமான சாலையை நாங்க இருக்கும்போது பார்க்கவே இல்லை. சொல்லப் போனால் விளக்குமாறும் , கையுமாக நானும் ரங்க்ஸும் தெருவைக் கூட்டி இருக்கோம். :))))  சென்னையின் மற்ற இடங்கள் வழக்கமான குப்பை மலையாகக் காட்சிஅளிக்க இங்கே சுத்தமாக இருப்பது ஆச்சரியமே!  ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சா காமிராவையோ, செல்லையோ  கொண்டு போகலை.  எங்க வீட்டுக்குப் போக வேண்டாம்னு இருந்த என்னை, அங்கே குடி இருப்பவர்களின் வீட்டுப் பெண் கட்டாயமாய் வரணும்னு கட்டளை பிறப்பித்து விட்டார்.  ஆகவே தவிர்க்க முடியாமல் ரங்க்ஸோடு நானும் போனேன்.  சுற்றிலும் குடி இருப்புகளுக்கு நடுவே வீடு இருக்கும் இடமே தெரியாமல் கூனிக் குறுகிக் கிடந்தது. :(

வழக்கம் போல் வேப்பமரம் அடர்ந்து, படர்ந்து தெருவுக்கே நிழலை அளிக்க, அருகே அசோகா மரமும் காணப்பட்டது.  வேப்பமரத்துக் குயில்களையோ, குருவிகளையோ காணமுடியலை. :( காக்கைகள் ஒரு சில சோகமாக அமர்ந்து கொண்டிருந்தன.  அணில்களின்  கீச்சிடலையும் காணோம். :(  ஒரு மல்லிகைச் செடி இல்லை.  விருட்சி மரமாக வளர்ந்திருந்தது அடியோடு வெட்டப்பட்டு விட்டது.  நாரத்தை மரமும், மாமரங்களும் வெட்டப்பட்டு விட்டன.  அடுக்கு அரளி, தங்க அரளி, சந்தனமுல்லை போன்ற செடி, கொடிகளும் காண முடியவில்லை.  தோட்டத்தில் கோரைப் புற்கள் தாறுமாறாக வளர்ந்து  கிடக்க ஒரு சில சிறியா, பெரியா நங்கைச் செடிகள் மட்டும் காணப்பட்டன.  பாக்கு மரம் நாங்க இருக்கிறச்சேயே பட்டுப்போய் விட்டது.  மேலண்டைப் பகுதியில் எப்போதும் இருக்கும் நான்கு தென்னை மரங்களும், அவற்றின் அடியில் குப்பையோடும் கூளங்களோடும் காணப்பட, வடமேற்கே பலாமரம் நன்றாக வளர்ந்திருந்தது.  சப்போட்டா மரமும் பரவாயில்லை.  நெல்லி, வில்வம் போன்றவை எல்லாம் அழிந்து விட்டன போலும்.  மற்றபடி வீடே குறுகிப் போயிட்ட மாதிரி காணப்பட அதிக நேரம் அங்கே செலவழிக்க எனக்கு மனசு இல்லை.  சீக்கிரம் திரும்பணும்னு நினைச்சுக் குடித்தனக்காரங்க கிட்டே சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

மனம் முழுக்க சொல்லத் தெரியாத பாரத்தைச் சுமந்து கொண்டு திரும்பினேன். ரங்க்ஸ் எப்போதும் போல அங்கே எல்லாவற்றையும் தோண்டித் துருவிவிட்டுத் திரும்பினார்.  அன்று ஒரு சில உறவினர்களைப் பார்த்த பின்னர் மறுநாள் வங்கி வேலைகளை முடித்துக் கொண்டு அன்றிரவு தமிழ்நாடு துரித வண்டியில் டெல்லி பயணம் ஆனோம்.

Monday, March 10, 2014

மறுபடி ஒரு சீரியஸ் பதிவு! :)))))

பேராசிரியர் என்னையும் கேள்விகள் கேட்கச் சொன்னதால் வந்த வினையை எல்லாரும் அனுபவியுங்கள்.

1. இன்றைய சமூகம் ஆணாதிக்க சமூகம் தான்.  சந்தேகமே இல்லை.  ஆனால் பெண்களுக்குப் பணத்தினால் கிட்டும் வலிமையும், பேச்சுச் சுதந்திரமும் இருந்து விட்டால் ஆணாதிக்கம் ஒழிந்துவிடுமா? டவுட்ட்ட்ட்டு!!!!!!!!!!!!!!!  ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்த இது வழி வகுக்குமோ??? அப்போ செய்ய வேண்டியது என்ன?

2. பெண்கள் பலரும் நன்கு படித்து நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகளில் இருக்கின்றனர்.  தங்கள் திருமணத்தைத் தாங்களே நிச்சயம் செய்தும் கொள்ளுகின்றனர். எங்கு பார்த்தாலும் முன்னை விட அதிகமாய் அழகு நிலையங்கள். கூலித் தொழிலாளி முதல் கணினி கம்பெனியின் சி ஈ ஓ வரையும் பெண்கள் பங்கெடுப்பதைக் காண முடிகிறது.  ஆனாலும் உரிய மாற்றம் இன்னும் நிகழவே இல்லை என்றே சொல்கிறோம்.  இத்தனைக்கும் நம் நாட்டில் பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர்.  பெண் சபாநாயகர், பெண்கள் முதல் மந்திரிகளானது (மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, ஷீலா தீக்ஷித் நால்வரும்)  என்று பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. மத்திய மந்திரிகளிலும் பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இப்படி இருக்கையில் ஏன் இன்னும் குறை சொல்கிறோம்?  எல்லாராலும் முதல் இடத்துக்கு வர முடியுமா? பல்லக்கில் ஏறி உட்காரவே அனைவரும் விரும்புகின்றனர்!  பல்லக்கைத் தூக்குவது யார்?

3. பெண் குழந்தை, ஆண் குழந்தை இரண்டில் பெண்கள் அதிகம் விரும்புவது எந்தக் குழந்தையை?? ஆண் குழந்தையைப் பெற்ற பெண், பெண் குழந்தைகளைப் பெற்ற தாயை இழிவாகப் பார்ப்பது ஏன்?

4. பல பெண்களும் ஏற்கெனவே திருமணம் ஆன ஆணோடு உறவும் வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்து அவனுக்கு மனைவியாக இஷ்டப்படுவது ஏன்?

5. புதிய மருமகள் வீட்டுக்கு வந்தால் அவளைத் தன் பிள்ளையோடு சந்தோஷமாக இருக்க அனுமதிக்கும் தாய்மாரை விரல் விட்டு எண்ணலாம்!  பொறாமைப் படுபவர்களே அதிகம்!  பின் ஏன் அந்தத் தாய்மார் தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் செய்கின்றனர்?

6. மனைவி பேச்சைக் கேட்டுப் பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் மறந்துவிட்டு அவர்களைத் திண்டாட விடும் ஆண்களுக்கு என்ன பெயர்?  அப்படித் தன் கணவனை ஆட்டி வைக்கும் பெண்ணை என்ன சொல்லி அழைப்பது?

7. ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்கள் மீண்டும், மீண்டும் ஆண்களைப் பார்த்துக் காதலித்து, மனம் உருகித் திருமணம் செய்து கொண்டு வாழத் துடிப்பது ஏன்?

8. திருமணங்களில் பேரம் பேசுவது யார்?  ஆணா, பெண்ணா?  தாய்க்கு இஷ்டம் இல்லை என்பதால் தாயின் சொல்லைக் கேட்டுப் பெண்  பார்த்துப் பிடித்த பெண்ணை வேண்டாம் எனச் சொன்ன ஆண்கள் பலரை எனக்குத் தெரியும். ஏன் பெண்கள் இப்படிச் செய்கின்றனர்?

9. ஒரு பக்கம் மனைவியின் பிடிவாதம், இன்னொரு பக்கம் தாயின் அடம், இத்தனைக்கும் நடுவே சகோதரி இருந்தால் அவளுடைய ஆர்ப்பாட்டங்கள். இத்தனைக்கும் ஈடு கொடுப்பது யார்?  ஆணா, பெண்ணா?

10. இந்தக் கேள்வி ரொம்பவே நுணுக்கமானது.  நான் பொதுவாகவே கேட்கிறேன்.  யாரையும் புண்படுத்தக் கேட்கவில்லை.  இன்றைய நாட்களில் எத்தனை பெண்கள் உடல் உழைத்துக் கஷ்டப்பட்டுச் சமைக்கவோ, வலி எடுத்துப் பிள்ளை பெறவோ விரும்புகின்றனர்?  எங்கு பார்த்தாலும் திடீர் உணவு வகைகள்!  பிரசவம் என்றால் நாள், நக்ஷத்திரம் பார்த்து சிசேரியன். இது சரியானதா?


கேள்விகள் ஒருவேளை தொடரலாம். (எதிர்வினைகளைப் பொறுத்து)


இந்தக் கேள்விகள்  எல்லாம் குழுமத்தில் பெண்கள் தினச் சிறப்பு இழையில் என்னால் கேட்கப் பட்டவை.  ஆழ்ந்து சிந்தித்தால்  பதில்கள் மட்டுமின்றி எங்கே,எப்படி, ஏன், எதற்கு, எவ்வகையில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.  மற்றபடி இந்தக் கேள்விகளைப் படித்த ஒருவர் நான் பெண்களையே குற்றம் சொல்வதாகவும் கூறி இருந்தார்.  ஹிஹிஹிஹி, நல்லாப் படிச்சால், பெண்களைக் குற்றம் சொல்லவில்லை என்பதும், அவர்களின் மனமாற்றம் தான் தேவை என்பதும், பெண் சுதந்திரம், பெண் அடிமைஎன்பதெல்லாம்  ஒன்றுமே இல்லை என்பதும், பெண்ணின் மனமாற்றமே அவள் வாழ்க்கையை உயர்த்தும் என்பதும் புரிய வரும். 

இயன்றவர்கள் பதில் சொல்லலாம்.  கட்டாயம் எல்லாம் இல்லை. :)))))  இப்போதைக்கு மத்தியானம்  மறுபடி வர வரைக்கும்  மீ த எஸ்கேப்பு! :))))