எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 31, 2014

சீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு!

இன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது.  ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில் சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல.  நான் போட நினைச்சது.  ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம்.  ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம்.  சான்ஸ் போச்சு!  நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க.  ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன்.  இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு!  யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே! :))))


இங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி.  சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன்.  அங்கே போய்ப் பார்த்துக்குங்க.   வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம்.  சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு  சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும்.  எண்ணெயும் அதிகம் தேவைப்படாது.  இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும்.  சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.

பழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.

வெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி

Thursday, January 30, 2014

நைமிசாரண்யம் படப்பதிவு--தொடர்ச்சி

சக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம்.


இங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும்,  பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர்.  இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர்.   ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்திலும் இதே கதையைச் சொல்கின்றனர்.  இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு.  பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர்.  அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும்.  அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது.  ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள். வியாசருக்கு உதவின பிள்ளையார். 


தன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
சுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது.  மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.ஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.

உலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.
 ஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.


Saturday, January 25, 2014

நாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல!


சில மாதங்களாக ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் கணினியைக் கட்டாயமாய் மூடிடுவதால் (அந்த நேரம் இரவுச் சாப்பாடு தயார் செய்து சாப்பிடும் நேரம் வேறே) வேறே வழியில்லாமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறேன்.  எட்டரைக்கு அப்புறமா அவசியம் இருந்தால் தான் கணினியைத் திறப்பதுனு வைச்சிருக்கேன்.  ஆகையால் சாப்பாடு முடிஞ்சதும் உடனே படுத்துக்கக் கூடாது என்பதால் இதிலே உட்காரும்படி ஆயிருக்கு.  :))))

எட்டு மணிக்கு "தெய்வமகள்" என்ற பெயரிலே ஒரு தொடர் வருது.  அதிலே கதாநாயகியாக நடிக்கும் பெண்  சத்யப்ரியா என்ற பெயரில் வருகிறார். அவரைத் தான் தெய்வமகள்னு ஏகத்துக்கு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்காங்க.  ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் தான் உண்மையில் வெளுத்துக்கட்டுகிறார். இந்த சத்யப்ரியா ஆரம்பத்தில் கதாநாயகனை எதிர்ப்பதற்காக ஏதோ கொஞ்சம் சாமர்த்தியத்தைக் காட்டறாப்போல் இருந்ததோடு சரி.  அவ்வளவு தான்.  அதுக்கப்புறமா எப்போப் பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வித விதமான உடையில் வந்து போகிறார்.

முரட்டுத் தனம் நிறைந்தவனாகச் சொல்லப்படும் கதாநாயகனைத் திருத்த ஒண்ணும் செய்யலை (இனிமேல் வருமோ?) என்பதோடு மாமனார், மாமியாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யறமாதிரித் தெரியலை.  ஒரே ஒருநாள் அவங்க படுக்கை அறையைச் சுத்தம் செய்து கொடுத்ததோடு சரி. கணவனின் அண்ணியின் சுயரூபம் தெரிஞ்சே தங்கையைக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்ன சத்யப்ரியாவுக்கு இப்போ தானே அந்த இடத்துக்கு வந்தப்புறமும் அந்த அண்ணி காரக்டரின் சுயரூபம் பத்திப் புரியாமல் போனது ஏன்?

அதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு முயற்சியும் எடுக்கலை என்பதோடு சிறிதளவு சந்தேகமும் படாமல் மண்ணாந்தையாக இருப்பதோடு அந்த அண்ணியிடமே போய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதே அந்த அண்ணியின் குறிக்கோள் என்பது தெரிந்தும் அதை எல்லாம் புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சத்தமாகக் கணவனோடு வாக்குவாதம் பண்ணுவதும், வெளியே கேட்பாங்களோ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததும், வீட்டில் நடப்பது குறித்த கவனமே இல்லாததும் ஹிஹிஹிஹி! சகிக்கலை! :)))))))))  இப்படி ஒரு அசடான காரக்டரைக் கதாநாயகியாப் போட்டிருக்காங்களேனு நினைச்சு சிப்புச் சிப்பா வருது.

அதே அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் ஒவ்வொரு முறையும் மாமியாரை சாமர்த்தியமாக மடக்குவதோடு இல்லாமல் அக்கா பட்ட கடனையும் தீர்த்து விடுகிறார்.  தங்கைக்குப் பள்ளிக்குக் கட்டணம் கட்டுகிறார். உண்மையில் குடும்பத்துக்காகப் பாடுபடுவது லூஸு காரக்டராக இருந்த இவர் தான்.   இவர் தான் தெய்வ மகள். அம்மா, அக்கா, தங்கை ஒதுக்கியும் தன் பிறந்த வீட்டுக்காகச் செய்வது இவர் தான். சத்யப்ரியா இல்லை. சத்யப்ரியாவுக்குச்  சம்பளமும் இல்லையே; அம்மாவும் தங்கையும் என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அதைக் குறித்து நினைக்கக் கூட இல்லாமல் அவர் பாட்டுக்குக் கணவன் வீட்டில் தன் ஓரகத்தியிடம் தன்மானத்தை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இவரா தெய்வ மகள்? ஒண்ணு தொடரின் தலைப்பை மாத்தணும், இல்லையானா கதாநாயகி தாரிணியாக நடிக்கும் பெண் தான்னு மாத்தணும்.  இவர் எப்போ எல்லாத்தையும் கவனிச்சுக் கணவனைத் திருத்தி, குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, கணவனின் அண்ணியையும் ஜெயிச்சு............

கடவுளே, இருக்கிற இருப்பைப் பார்த்தால் இந்த சீரியல் இன்னும் மூணு வருஷமாவது வரும் போலிருக்கே!!!  என்னத்தைச் சொல்றது! மறந்துட்டேனே.  டிஆர்பியிலே இது ஹிட் லிஸ்டிலே இருக்கிறதாச் சொன்ன ஹரன் பிரசன்னாவுக்குத் தான் இது பிடிக்கும்னு நினைக்கிறேன்! :P :P :P  :))))))))))))

Thursday, January 23, 2014

நைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு


சக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள்.  மஹா காளர் சந்நிதி

கெளரி அம்மன் சந்நிதிசிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர்.  நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம். கீழே   முந்தைய பதிவின் சுட்டியைக் கொடுத்துள்ளேன்.  படங்களும் விபரங்களும் தொடரும். :))))


முந்தைய பதிவு

Wednesday, January 22, 2014

சோதனையா, சாதனையா? டெஸ்ட்!!!!!!!!

சோதனைப்பதிவு.  முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க நினைச்சால் அவை திறக்கவே இல்லை.  ஆகவே இந்த சோதனை எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான்! ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா!  இப்போத் தான் கவனிச்சேன்.  இது 1,700 ஆவது (மொக்கை) சேச்சே மொத்தத்தில் என்பது மொக்கைனு வந்திருக்கு. :) வெளியீடு.

1,700ஆவது பதிவு

கடவுளே, காப்பாத்து! தொடர்ச்சி!

டெல்லியில் மாநிலத்திற்கெனத் தனியான காவல் துறை இல்லை.  ஏனெனில் அது நாட்டின் தலைநகர்.  பல பெரிய தலைவர்கள், உலகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் வந்து போகும் இடம்; வசிக்கும் இடம். முக்கியமானவர்கள் வசிக்கும் ஊர்.  அங்கே மாநிலத்தின் கீழ் காவல் துறை இருந்தால் சரியா வராது என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது.  ஏற்கெனவே ஷீலா தீக்ஷித் முன்னாள் முதல்மந்திரி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தாலும் டெல்லி போலீஸின் மீது குறைகள் தான் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆகவே இது புதுசா இப்போ கெஜ்ரிவால் மட்டும் வந்து சொல்லலை.  அவரும்,அவர் கட்சி ஆட்களும் விதிமுறைகளை மீறிச் சட்டத்தை மீறிச் செயல்படுவதையும் டெல்லி போலீஸ் இவங்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்குக்குப் பயந்து கொண்டு வேடிக்கை தான் பார்க்கிறது.  அப்போ மட்டும் கெஜ்ரிவால் என்ன செய்தார்?

ஊழல் எதிர்ப்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த இந்தக் கட்சி நேர்மையான கட்சியாகத் தோற்றம் அளிக்கிறது.  அவ்வளவே. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கக் கூட இல்லை;  அது குறித்துப் பேசக் கூட இல்லை.  போராட்டங்களினால் ஊழல் ஒழியுமா?  செயல் முறை என்ன? டெல்லியின் முக்கியச் சாக்கடையான யமுனையைச் சீர் செய்ய இவர்கள் செய்யப் போவது என்ன?  சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன?  தங்கள் கொள்கைகை எவ்விதம் நிறைவேற்றப் போகிறார்கள்?

உண்மையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்.  Governance எனப்படும் ஆட்சி முறைக்கட்டுப்பாடு இல்லாமல் இவர் சாதிக்கப் போவது தான் என்ன?  டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா?  குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும்.  அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும்.  இவர்  இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.  சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும்.  நிஜத்தில் அல்ல.  முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன? முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

தெருக்கூட்டம் போட்டுப் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதும், பொதுமக்களையும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்னும் எண்ணற்ற ஊழியர்களை அவரவர் பணியைச் செய்யவிடாமல் இரண்டு நாட்களாகத் தடுத்து வருகிறார்.  மெட்ரோ ரயில் நிலையங்களே மூடப்பட்டு விட்டன. அவசரத்திற்குக் கூட மக்கள் எங்கேயும் அணுக முடியாத அவலம். டெல்லியில் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை நிலைமை புரியும்.  இந்த தர்ணா ஆரம்பிக்கும் முன்னர் அங்கே சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி இது.

நான் ஜோக்கெல்லாம் செய்யவில்லை. யாரிடமும் நியாயமாப் பேசித் தீர்க்க முடியாத ஒரு நிலை தான் இப்போது; இல்லை என்னவில்லை.  ஆனால் இவர் கைகளில் அதிகாரம் இருக்கிறது. வெளிநாட்டுக்காரங்களோட நினைப்பும் இந்தியாவுக்கு முக்கியம் தான்.  அப்போத் தான் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.  ஏற்கெனவே ஊழல்களில் இந்தியா மிகத் தலை குனிந்து தான் நிற்கிறது.  இப்போ இந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் வேறே.  அப்படி என்ன அந்த கெஜ்ரிவால் சாதித்துவிட்டார்? அவர் என்ன ஒழுங்கானவரா? இல்லையே! வருமானவரித்துறையில் இருந்தபோது தண்டனைக் கட்டணத்துடன் திரும்பச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவர் சொல்லாத சால்ஜாப்புகள் இல்லை. அப்புறமா சட்டரீதியான நடவடிக்கைனு துறையில் ஆரம்பிக்கவுமே மன்மோகன் சிங் பெயரில் செக் கொடுத்தார். துறையின் பெயரால் கொடுக்க வேண்டிய செக்கை இப்படிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்!

பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கையிலேயே மின் கட்டணக்குறைப்பு. மான்யத்தை எங்கிருந்து கொடுப்பார்?  ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை.  மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார்.  இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா?  முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது!  டெல்லியில் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொலைக்காட்சியில் சொல்றாங்க.  கேளுங்க.

இவை அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவைகளே!  இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :(  அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே! நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே! பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே! ஆனால் பின் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது நேற்றே எழுதியது.  ஆனால் என்ன காரணமோ வெளியாகலை. இப்போ வெளியிட்டுப் பார்க்கிறேன். :))))

Monday, January 20, 2014

கடவுளே காப்பாத்து! :(

ஒண்ணும் சொல்லத் தோணலை;  எங்கேயோ போயிட்டிருக்கு.  இதெல்லாம் மட்டமான முறையில் பிரபலம் ஆகணும்னு நினைக்கிறாரோனு நம்மை எண்ண வைக்குது! ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா? தெரியலை!  டெல்லியே ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு!  இதெல்லாம் சரியா? அதோட மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தைக் கொண்டாடக் கூடாதுனு வேறே கட்டாயப் படுத்திட்டு இருக்கார்.  இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை சுதந்திரப் போராட்டத்தின் போது கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். வெட்கமாக இருக்கிறது.  எதுவாக இருந்தாலும் முறைப்படி பேசித் தீர்த்துக்கத் தான் முயல வேண்டுமே தவிர இது சரியான வழிமுறை அல்ல. உலக அளவில் டெல்லி முதல் மந்திரியின் பெயர் பிரசித்தி அடையலாம் என்பதைத் தவிர நாட்டுக்கு எவ்வளவு தீமையை கெட்ட பெயரை விளைவிக்கும் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை. 


கடவுளே காப்பாத்து!

Sunday, January 19, 2014

என் கேள்விக்கு என்ன பதில்?? கேள்விகள் முடிவடைந்தன! :)

"இ" சாருக்காகவும் கேள்விப் பதிவுகளைப் படிக்காத மற்ற நண்பர்களுக்காகவும்

பதிவு 1

பதிவு 2

பதிவு 3

16. உங்கள் கணவரை/மனைவியை முதன் முதல் எப்போது சந்தீத்தீர்கள்?  பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும்! :)

17. உங்கள் பதின்ம வயதில் டேட்டிங் எனப்படும் பழக்கம் உண்டா?  அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது?? திருமணம் என்பது எப்படி மதிக்கப்பட்டது?

18. உங்கள் பள்ளி நாட்களில் ஏற்பட்ட மிகுந்த நகைச்சுவையான சம்பவம் என்ன?

19. உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு எப்படி? நட்பாகவா?  மிகவும் மதிப்பாகவா?  ஒரு தோழனைப் போல் அல்லது தோழியைப் போல்??? அவர்கள் பீடத்திலிருந்து இறங்காமல் இருந்தார்களா?

20. குழந்தைப் பருவத்தில் சந்தோஷமாகவே இருந்தீர்களா?  இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக எளிதாக மாறி உள்ளது.  இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா?

கேள்விகள் முடிவடைந்தன.  இது எதுக்குனு கேட்பவர்களுக்கு பதில்
இல்லை, போங்க! :)))))

Friday, January 17, 2014

என் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்றிலிருந்து பதினைந்து வரை

11. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது? எதுவாகவும் இருக்கலாம்.  உங்கள் கல்யாணம், முதல் காதல், தேர்வில் முதல் தகுதினு எதுவாகவும் இருக்கலாம்.

12. உங்கள் சிறு வயதிலேயே போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததா?  உங்களுக்குப் போட்டிருக்கார்களா? இது குறித்த விழிப்புணர்வு 1950 களில் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர்.  பின்னர் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது?

13. உங்களை மிகவும் கவர்ந்த இசைக்கலைஞர் யார்?  எந்த மொழிக்கலைஞர்?  அவரின் இசையை/பாடல்களை எப்போதும் கேட்பீர்களா?

14. ஏர் இந்தியா விமான சேவை குறித்து முதன் முதல் எப்போது அறிந்தீர்கள்? அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது?  உங்கள் குடும்பத்தில் முதல் விமானப்பயணம், அதுவும் ஏர் இந்தியாவில் செய்தவர் யார்?

15. நம் நாட்டில் அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா? அது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வகையில் பாதிக்கிறது?


அடுத்த ஐந்து கேள்விகளில் முடிஞ்சுடும்.  :)))))

Thursday, January 16, 2014

கேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன "கலகலப்பான" இடைவேளை!

அப்பாடா, ஒரு வழியா கடைசியிலே ஒரு படம் புதுசு அதுவும் 2012 ஆம் ஆண்டிலேயே வந்ததைப் பார்த்துட்டேனே.  பொங்கல் அன்னிக்கு மதியம் தொலைக்காட்சியிலே (எந்தத்தொலைக்காட்சி??) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது.  வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன்.  படம் பெயர் கலகலப்பு.  படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை.  தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தாவணி அல்லது சல்வார், குர்த்தா போட்டிருக்கலாம்.  இதான் கவர்ச்சினு விட்டுட்டாங்க போல. தொலையட்டும்.  அஞ்சலி ஒரே மாதிரியான நடிப்பை இந்தப் படத்திலும் காட்டுகிறார் அல்லது அவங்களுக்கு இப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்களானு தெரியலை.

'எங்கேயும் எப்போதும்' படத்திலே நடிச்ச மாதிரி அதே விறைப்பு, காதலனை ஓட ஓட விரட்டுவதுனு அஞ்சலி இந்தப் படத்திலும் நடிச்சு இருக்கார்.  மத்தபடி அவருக்கு வேலை ஏதும் இல்லை.  கதாநாயகனாக நடிக்கும் நபர் இயல்பாகவே அசமஞ்சமாத் தான் இருப்பார் போல!  அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும் பேர் தெரியலை)  ஜெயில்லேருந்து வராராமே! எதுக்கு ஜெயிலுக்குப் போனார்??  அவரோட அண்ணன்,  சீனுவாக நடிக்கும் நடிகர் பாரம்பரிய ஓட்டல் ஒண்ணை மிகுந்த நஷ்டத்தோடு நடத்தி வரார்.  அந்த ஓட்டலை அது இருக்கும் முக்கியமான கடைத்தெரு இடத்துக்காக ஒரு தொழிலதிபர் குறி வைக்கிறார்.  என்ன கஷ்டம்னாலும் விற்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் சீனு, அவர் தம்பியான ஜெயில் ரிடர்ன் குண்டர், குண்டரைக் காதலிக்கும் தாத்தாவின் பேத்தி, ஒரு வழியாய் விறைப்பைக் குறைத்துக் கொண்டு சீனுவைக் காதலிக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன அஞ்சலி இவங்க ஒருத்தருக்கொருத்தர் கல்யாணம் செய்துண்டாங்களானு தான் படமே.

கதையா?? அதெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை.  வெறும் சிரிப்புத் தான்.  நல்லவேளையா இரட்டை அர்த்த வசனங்களை சந்தானம் கூடப் பேசலை. அதுக்கு பதிலா நடிகைகளை ஓவராக் கவர்ச்சியாக் காட்டிட்டுத் திருப்தி அடைஞ்சுட்டாங்க போல! அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க?? இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும்.  தலை எழுத்து!  இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார்.  இடுப்புப் பிடித்துக் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு!  அட, இதைச் சொல்லலையா?  ஹோட்டலை நல்லா நடத்தத் தாத்தாவின் ஆலோசனையின் பெயரில் இயற்கை உணவுத் திட்டத்துக்கு மாற அது சூடு பிடிக்கிறது.

படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருப்பது அந்த நாய் தான். அழகா வைர பாக்கெட்டை,    இதுக்குள்ளே வில்லன் ஒருத்தன் (காமெடியாகவா? தேவையா இந்த வில்லன்?) அசட்டு வில்லன், அசட்டுத் தனமாக ஐந்து கோடிக்கு மேல் மதிப்புள்ள வைரத்தை அடியாள் கிட்டேக் கொடுக்க அது எப்படியோ நம்ம அசமஞ்சம் ஹீரோவிடம் வர, காமெடி சைட் ட்ராக்கில் கொஞ்ச நேரம் பயணிக்கிறது.  இதுக்குள்ளே ஊருக்குப் போன அஞ்சலிக்கு முறை மாப்பிள்ளை சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆகக் காதலனோடு ஓடிப் போறதுக்காக அவனை ஊருக்கு வரவழைக்கிறார் அஞ்சலி.  சந்தானத்தை வாத்தியார்னு சொல்ல, வாத்தியார்னா ஸ்கூல் வாத்தியாரா?? சந்தானத்தை ஸ்கூல் வாத்தியார்னு நினைச்சுப் போனால் சிலம்பாட்ட வாத்தியார்னு தெரிஞ்சதும், அசமஞ்சம் அதிர்ச்சி அடைகிறார்.

பாதிக்கதையில் சந்தானம் வந்தாலும் எடுபடலை. அந்த குண்டுத் தம்பி நடிகர் தான் வெளுத்துக் கட்டுறார்.  ஆனாலும் குண்டுத் தம்பி சீட்டாட்டத்தில் தோற்போம்னு தெரிஞ்சே தோத்துட்டு ஹோட்டலை அடமானம் வைச்சு அண்ணனுக்கு துரோகம் பண்ணுவது கொஞ்சம் உருக்கிங்ஸ் ஆஃப் இந்தியா. முட்டாள்த் தனமாக ஹோட்டலை வைத்துச் சீட்டாடித் தோற்கிறார்.  ஆனால் வைரத்தைக் கொடுத்துட்டு அண்ணன் அதை மீட்டுவிடுகிறார் என்றாலும் மறுபடியும் குண்டுத் தம்பியின் காதலியைக் காப்பாற்ற வேண்டி இன்னொரு பத்து வைரத்தையும் கொடுத்துட்டு, கடைசியில் அமைச்சர் ஷண்முக சுந்தரத்தைக்கைது செய்யப் போய் அங்கே நடக்கும் காமெடியைப் பல தரம் பார்த்தாச்சு. அதுக்கப்புறமா ஹோட்டலில் மறுபடி கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் குழப்பம், கலாட்டா அவ்வளவு நேரம் நீடிக்கணுமா என்ன? வைரம் அங்கே இங்கேனு மாறிக் கடைசியில் முற்றத்தின் கம்பிகளில் மாட்டிக்கொள்ள, அதை எடுக்கப்போட்டா போட்டி.  இங்கேயும் சந்தானம் எப்படியோ வரார்.  சந்தானம் பெருமையா விட்டுக் கொடுக்கறதாச் சொல்றார். அப்புறமாக் கொஞ்ச நேரம் அவரும் காமெடி பண்ணறார். வைரம் அங்கே இங்கே போய்க் கடைசியில் எப்போதும் போல் தாமதமாகப் போலீஸார் வராங்க.  வைரத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள். எல்லாம் சுபம்.

எங்கேப்பா அந்த ஹெர்குலின்??? வாங்க, ஓடி வாங்க, அறிவுஜீவித்தனம் இல்லாமல் இந்தப் படம் பரவாயில்லைனு சொல்லி இருக்கேனே! :)))))

Wednesday, January 15, 2014

சீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்!

அண்ணன்மார்களே,

தம்பிமார்களே,

எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டிக் கொண்டு கனுப்பொடி வைச்சாச்சு.  சீர் கொடுக்க வரிசையிலே வாங்கப்பா!  ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை.  தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி.  நகையாக் கொடுத்தால் தனி வரிசை.  முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு.  முந்துங்க, முந்துங்க!  :))))))

Tuesday, January 14, 2014

என் கேள்விக்கு என்ன பதில்?? தொடர்ச்சி -- (அடுத்த ஐந்து கேள்விகள்)

6. இப்போதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை கேட்டுப் பழகுகின்றனர்.  அதிலும் பள்ளிப் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடம் செய்கையிலேயோ, படிக்கையிலேயோ இசையை, அது சினிமா இசையாய் இருந்தாலும் கேட்டுக் கொண்டே செய்கின்றனர்.  உங்கள் காலத்தில், அல்லது உங்களுக்கு இசை கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் வழக்கம் உண்டா?

7. நாடகங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றை ரசித்திருக்கிறீர்களா?  திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் உண்டா?  நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது?  விரும்பிய/விரும்பும் நடிகர் யார்?  பார்க்க முடியாமல் ஆசைப்பட்ட படம் எது?

8. குழந்தைப் பருவத்தில் உங்களைக் கவர்ந்த இசைக்கும், பதின்ம வயதில் கவர்ந்த இசைக்கும், இப்போது உங்களைக் கவரும் இசைக்கும் வேறுபாடுகள் உண்டா?  இருந்தால் அவை என்ன?  அவற்றால் உங்கள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதாய் நினைக்கிறீர்களா?


9. பதின்ம வயதில் உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?  விளையாட்டு எது? பாரம்பரிய இசை கற்றுக்கொள்ளப் பிடித்ததா?  வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா? அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா?  கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா?  அவை இப்போதும் தொடர்கிறதா?


10. உங்கள் பதின்ம வயதில் நாட்டில் ஏதேனும் முக்கியமான யுத்தங்கள் ஏற்பட்டனவா?  அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது?  நீங்கள் குடியிருந்த நகரத்தையும், உங்கள் நாட்டையும் எவ்விதத்தில் பாதித்தது?

Monday, January 13, 2014

என் கேள்விக்கு என்ன பதில்???

ஹாஹாஹா, ஹிஹிஹிஹி,ஹுஹுஹுஹு, ஹெஹெஹெஹெ, எல்லாரும் பொங்கல் லீவை ஜாலியாக் கொண்டாடிட்டிருப்பீங்க.  இன்னிக்கு போளி, வடை பண்ணறவங்க வீட்டில் போளி, வடையும், நாளைக்குப் பொங்கல், வடையும் சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர்களும், நடிகைகளும் பொங்கல் கொண்டாடுவது பற்றிச் சொல்லிக் கொடுப்பதை ரசித்துக் கொண்டிருப்பீங்க.  இணையத்துக்கு வெகு சிலர் தான் வருவாங்க.  நாம எப்படியும் ஒரு தரமாவது வந்துடுவோமுல்ல .  அதை விடுங்க.

இப்போ எல்லாருக்கும் வீட்டுப் பாடம் தரப் போறேனே.  அதை ஒழுங்காச் செய்யணும்.  பின்னூட்டத்திலே பதிலளிச்சாலும் சரி, அவங்க அவங்க பதிவாப்போட்டாலும் சரி.  பதிவு போடறவங்க சுட்டியை எனக்கு அனுப்புங்க.  இதுக்கு வயசு ஒண்ணும் கிடையாது.  வயசு வரையறை சொல்லலாமோனு முதல்லே நினைச்சேன்.  அப்புறமா வேணாம்னு விட்டுட்டேன்.  அவங்க அவங்க அனுபவத்தைச் சொல்லணும்.   ஐந்து, ஐந்து கேள்விகளாக  நாலு நாளைக்கு (விடமாட்டோமுல்ல) வரும். :)))


கேள்விகள்:

1. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது?

2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து  ஒரு வழி பண்ணிட்டாங்களா?  இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க?

3. இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது.  சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது.  ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா? இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா?

4. உங்க பள்ளியிலே சீருடை உண்டா?  அப்படின்னா என்ன மாதிரி சீருடை?  உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா! (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)

5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்? அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம்.  நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார்?  என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்?

Saturday, January 11, 2014

"பொடி" விஷயம், தொடர்கிறது! அமெரிக்காக் காரங்க எல்லாம் வந்து படிங்கப்பா! :)

நம்ம சகோதர(ரி)ப் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அமெரிக்காவிலே போய் எப்படி சாம்பார்ப் பொடிக்கு அரைச்சீங்க, பகிர்ந்துக்குங்கனு (தெரியாத்தனமா?) கேட்டிருக்காங்க.  சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா? இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம்! மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை.  ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை! நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன?  அங்கேயும் போய் அதையே தானே சாப்பிடுவோம்.   ஏதோ ஒரு தரம், இரண்டு தரம் இந்தியா வரச்சே சாம்பார்ப் பொடி கொண்டு போகலாம்.  அங்கேயே இருக்கிறவங்க என்ன செய்யறதாம்??

அமெரிக்காவிலே பொடி அரைக்க முதல்லே மிக்சி வேணும்.  ஹிஹிஹி, அந்த மிக்சியும் அமெரிக்க, சீனத் தயாரிப்பாய் இல்லாமல் இந்தியத் தயாரிப்பாக அங்கே உள்ள 120வோல்டுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யும்படியான தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கணும்.  இப்போத் தான் ப்ரீத்தி, "நான் காரண்டி"னு சொல்லிட்டு இருக்காளே!  அதை நம்பலாம்.  ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை.  சமர்த்துக்குட்டி!  பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார்.  ஆனால் மருமகள் நம்ம கட்சி.  ப்ரீத்தியே சிநேகிதி!  என்னதான் ப்ரீத்தி நான் காரன்டினு சொன்னாலும், தும்மலுக்கும், இருமலுக்கும் நான்(அதாவது கீதா சாம்பசிவமாகிய நான்) காரன்டி இல்லை. தும்மல், இருமல் வந்தால் உங்க பாடு!


பொண்ணுட்டயும் ப்ரீத்தி தான்.  ஆகவே தோழர்களே, தோழிகளே, முதல்லே நல்லதொரு மிக்சியைத் தேர்ந்தெடுங்கள். அப்புறமா நீங்க அரைக்கப் போறது சாம்பார் பொடியா, ரசப் பொடியானு முடிவு பண்ணிக்குங்க.  ரெண்டும் ஒண்ணுதானேங்கறவங்க எதுக்கும் கவலைப்படவே வேண்டாம்.  உங்க ஊரிலே இருக்கும் இந்தியன் ஸ்டோரில் கிடைக்கும் ரக, ரகமான மிளகாய்ப் பொடியை வாங்கி எதில் காரம் ஜாஸ்தினு கண்டு பிடிச்சுக்குங்க.  ஏன்னா அதுக்குத் தகுந்த தனியாப் பொடி வேணுமே!

இப்போ முதல்லே கொஞ்சம் போல சோதனைக்கு அரைச்சுப் பாருங்க.  ஒரு சின்னக் கிண்ணம் அதாவது நூறு கிராம் மிளகாய்ப் பொடி என்றால்

அதுக்கு தனியாப் பொடி 300 கிராம்

மஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்

மேலே சொன்ன மூணையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.  தனியே வைக்கவும்.

இப்போ இதுக்கு மேல் சாமான்கள்

து பருப்பு  ஒரு சின்ன குழிக்கரண்டி

க.பருப்பு அரைக்கரண்டி

மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்

இந்த சாமான்களை நன்கு வெயில்(ஹிஹி வெயில் அடிச்சால் உங்க அதிர்ஷ்டம்) காய வைங்க.  சரி, வெயிலே இல்லைனா என்ன செய்யறதா? ஒண்ணும் செய்ய வேண்டாம்.  ஒரு வாணலியை எடுங்க.  அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க.  வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க.  ஆறிடுச்சா?  இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது.  நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை.    ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க.  மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க.   அரைக் கிலோ பொடி தேறும்.  இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும்.  இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம்.  இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம்.  செரியா? :)))

Friday, January 10, 2014

"பொடி"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்!

எத்தனை பேர் காப்பிக்கொட்டை மெஷினைப் பார்த்திருப்பீங்கனு தெரியலை. என்னோட காப்பிக்கொட்டை மெஷின், பொடி அரைக்கும் மெஷின் இரண்டையும்,  ஶ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் எடைக்குப் போட்டேன். :( அப்போ இருந்த மனநிலையிலே ஃபோட்டோ எடுக்கணும்னு தோணலை. காப்பிக்கொட்டை மெஷினில் அரைச்சுப் பழகி இருந்ததால் இதிலே சிக்கினதுமே அதன் வாயைத் திறந்து அதிகப்படியாக இருந்த பொருளை எடுத்துவிட்டு மறுபடிபோட்டு அரைத்தேன்.  ஹிஹி, தொழில் நுட்பம் எல்லாம் கத்துக்கிட்டு இருந்தோமுல்ல!  அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம்! :)))) இப்படியாகத் தானே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு செலவிட்டு ஒரு வாரத்தில் அரைத்து முடித்தேன்.  மிக்சியில் அரைக்கக் கூடாதானு கேட்கலாம்.  அப்போ மிக்சி அவ்வளவா பிரபலம் ஆகலை.  எங்கேயோ ஒன்றிரண்டு பேர் வைச்சிருந்தாங்க. அதுவும் சுமீத் மிக்சி தான் கிடைக்கும். முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அப்போவே ஆயிரம் ரூபாய் விலை. அப்போத் தங்கம் மிக்சியை விடக்குறைவாகவே விற்றது.  மிக்சி வாங்கற பணம் இருந்தால் கல்யாணத்துக்கு இருந்த நாத்தனாருக்குப் பவுன் வாங்கலாம்.  ஆகவே நோ மிக்சி. :))))

நசிராபாதில் இப்படியாகத் தானே கிட்டத்தட்ட நாலு வருஷம் கை மெஷினிலே அரைச்சே பொடி விஷயம் கடந்து சென்றது.  இதுக்கு நடுவிலே பையர் பிறந்து அம்மா மடியை விட்டு இறங்காத ரகமான அவரை மடியில் போட்டுக் கொண்டே ஆட்டுக்கல், அம்மி, கை கிரைண்டரில் அரைத்த கதை எல்லாம் தனியா வைச்சுப்போம். அதுக்கப்புறமா சிகந்திராபாத் வந்தப்போ அங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம்.  ஒரே ஒரு மெஷினில் அரைச்சுக் கொடுப்பாங்க.   நல்ல நாள், நக்ஷத்திரம், யோகம் பார்த்துப் போய் அரைச்சு வாங்கி வரணும்.  கால் கிலோ மி.வத்தல் போட்டு அரைக்கிற பொடியையே ஒரு மாசத்துக்கெல்லாம் பழசாயிடுச்சு சொல்லும் குழுவைச் சேர்ந்த நான் அங்கே அரைகிலோ மி.வத்தல் போட்டு அரைச்சு வாங்கி வைச்சுக்க வேண்டியதாப் போச்சு!  இதிலெல்லாம் நம்ம தமிழ்நாட்டை அடிச்சுக்க வேறே மாநிலம் கிடையாது.  சகலவிதமான செளகரியங்களும், அசெளகரியங்களும் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு மட்டுமே!


பின்னர் மறுபடி சென்னை வந்து மறுபடி நசிராபாத் போனப்போ மிக்சி வாங்கியாச்சு.  சுமீத் தான்.  முன் பதிவு செய்து வாங்கிக் கொடுத்தது என் தம்பி.  என்றாலும் அதிலே மஞ்சளை எல்லாம் போட்டு அரைக்கக் கொஞ்சம் யோசனையாக இருக்கும். இப்போ மாதிரி பல அளவுகளில் ஜார்கள் இல்லை.  ஒரே அளவு தான். பெரிய ஜார் மட்டுமே. அப்புறமா ரொம்பக் காலம் கழிச்சு சின்ன ஜார் கிடைக்க ஆரம்பிச்சது. அந்தச் சின்ன ஜாரிலே சாம்பாருக்கு அரைச்சு விடறதெல்லாம் கஷ்டம்.  ஆகவே அதில் கொஞ்சம் போலக் காப்பிக் கொட்டை போட்டு காப்பிப் பொடி மட்டும் அரைக்கனு வைச்சிருந்தேன்.  ஆகக் கூடி மிக்சி இருந்தும் சாம்பாருக்கு அரைக்கிறதெல்லாம் அம்மியில் தான். :))))  பின்னர் அங்கிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தப்போ கொஞ்சம் அப்பாடானு இருந்தது.  அங்கே உள்ள ஒரு மாவு மில்லில் மி.பொடி, ம.பொடி, த.பொடினு வகை வகையாப் பொடி இருக்க, அவங்க கிட்டே அரைச்சுத் தரச் சொல்லிக் கேட்டால்!!!!!


ம்ஹூம், மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டார்.  வேணும்னா மி.பொடி, த.பொடி, ம.பொடினு வாங்கிப் போய்க் கலந்துக்குங்கனு சொல்லவே, கடும் ஆய்வுகள் எல்லாம் செய்து அரை கிலோ மி.பொடிக்குத் தேவையான த.பொடி, ம.பொடி வாங்கி மூன்றையும் கலந்து கொண்டு.  மேல் சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து அவற்றோடு கலந்து கொண்டு மறுபடி மிக்சியில் போட்டு அரைத்துக் கலந்து கொண்டேன். அதிலே குழம்பு வைத்தாலோ, ரசம் வைத்தாலோ, வாசனை ஊரைத் தூக்கியது!  ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது.  அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா?? இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம்.  சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான்.  பின்னே?  அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும்! :))))

நேத்துத் தான் ரசப்பொடிக்கு சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்து அரைத்து வாங்கி வந்திருக்கிறோம். ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. :) சரியாக அரைக்கலைனு நான் நொட்டுச் சொல்லவும், ரங்க்ஸுக்குக் கோபம். ஹிஹிஹி, என் மேல் இல்லை(அப்படித் தானே நினைச்சுக்கணும்) அரைச்சுக் கொடுத்த தாத்தா மேல். பொதுவா இந்த மெஷின்காரங்க கிட்டே ரொம்ப நைசா வேண்டாம்னா சாமான்கள் எல்லாம் தெரியும்படியாக் கொரகொரனு அரைக்கிறாங்க.  அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை.  அதுவே நான் அரைச்சு வைச்சிருக்கேன் பாருங்க, சூப்பரா இருக்கு. கோதுமை அரைக்கையில் நைசா வேண்டாம்னு சொன்னதுக்கு ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலே இனி பேசாமல் இப்படியே அரைச்சுடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))) அதுக்குத் தான் இந்தப் பதிவே.  ஆனால் கோதுமையை மெஷினில் தான் அரைச்சாகணும்! மாவெல்லாம் வாங்கினால் சரிப்பட்டு வரலை.  என்ன செய்யலாம்????

இப்படியாகத் தானே பொடி மஹாத்மியம் இப்போதைக்கு நிறைவு பெற்றது.

Thursday, January 09, 2014

"பொடி" விஷயம்!

ஹெஹெஹெ, பொடி விஷயம்னா என்னனு நினைச்சீங்க? தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா??  ஒரு சிலர் மூக்குப் பொடியை நினைச்சிருக்கலாம். ஒரு சிலர் ஏதோ அல்ப விஷயம்னு நினைக்கலாம்.  ஒரு சிலர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்புக்கு வைச்சதுனு நினைக்கலாம்.  ஆனால் உண்மையில் இது பொடியைப் பத்தின விஷயமே.  பொடினா சாம்பார்ப் பொடி, ரசப்பொடி விஷயம்.

எங்க அம்மா வீட்டில் சாம்பார் பொடினு தனியா எல்லாம் அரைக்கிறதில்லை/திரிக்கிறதில்லை.  ரசப்பொடினு தான் பண்ணுவோம்.  சாம்பார்னா சாம்பார் பண்ணுகிற அன்னிக்கு எல்லா சாமானும் எண்ணெயில் வறுத்து அரைத்துத் தேங்காய் சேர்த்துத் தான் செய்வது வழக்கம்.   பொடி போட்டு சாம்பார்னா நாங்கல்லாம் ஒரு காலத்தில் சிரிச்சிருக்கோம்.  ஆனால் அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான்.  இங்கே வந்தப்புறம் தினம் தினம் சாம்பார்னு ஆனதுக்கப்புறமாத் தான்பொடி போட்டும் சாம்பார் பண்ணுவாங்கனு தெரியவே வந்தது! :))) ஆனாப் பாருங்க இன்னி வரைக்கும் இந்த பொடி போட்ட சாம்பாருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். தொலையட்டும்னு விட்டுட்டேன்னு வைச்சுக்குங்க.  ரங்க்ஸும் தலை எழுத்தேனு சகிச்சுக்கப் பழகிட்டார்.  இப்போ நாம பார்க்க வேண்டியது அதெல்லாம் இல்லை.  இந்தப் பொடியைத் திரிக்க அல்லது அரைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்னிக்கு flash back லே வந்தது.

கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்தப்போ எல்லாம் சென்னை வாசம் என்பதால் கருவிலியில் மாமியார் கிட்டே இருந்தோ, பெரும்பாலும் மதுரையில் அம்மா கிட்டே இருந்தோ பொடி அரைச்சு வந்துடும்.  பிரச்னை இல்லாமல் இருந்தது.  கல்யாணம் ஆகி நாலு வருஷத்திலே முதல் முறையா ராஜஸ்தான் போனப்போ தான் இந்தப் பொடி விஷயம் உண்மையில் எத்தனை பெரிய விஷயம்னு புரிஞ்சது.  கையிலே ஒண்ணரை வயசுக் குழந்தை!  புது இடம்;  நாங்க இருந்த குடியிருப்பிலே ஹிந்தி, ஆங்கிலம் செல்லுபடி ஆனாலும் உள்ளூர் மக்கள் பேசிய ராஜஸ்தானி கலந்த ஹிந்தி சட்டுனு புரியாது.

போய் இரண்டு மாசத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. பொடி எல்லாம் இருந்தது.  அதெல்லாம் ஆனப்புறம் தான் பிரச்னையே ஆரம்பம். மிளகாய் அரைக்க எனத் தனி மெஷினே அங்கே கிடையாது.  இருக்கிற மிஷினெல்லாம் கோதுமை மட்டுமே அரைக்கும்.  எப்போவோ கடைகளுக்காகக் கடலைப்பருப்பு.  அதுவும் குறிப்பிட்ட நாளில் மூட்டையாகக் கொடுப்பாங்க. நசிராபாத் முழுவதும் அலசி ஆராய்ந்தும் மிளகாய் அரைக்கும் மெஷினைக் கண்டே பிடிக்க முடியலை.   ஹோலி சமயத்தில் ஒரு சில ஊர்களில் மொத்தமாக மிளகாய் வத்தல், தனியா அரைச்சுத் தருவாங்களாம். நாம் கொடுக்கும் கால்கிலோ மி.வத்தல் சாமான்களை அரைப்பாங்களா?  தெரியலை.  அதோடு ஹோலி மார்ச்-ஏப்ரலில் வரும்.  இதுவோ ஆகஸ்ட் மாசம். அது வரைக்கும் என்ன செய்யறது?

அக்கம்பக்கம் விசாரித்ததில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடினு இயந்திரத்தில் அரைச்சுக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டு கால் கிலோ மிளகாய் வத்தல், தனியா ஒரு கிலோ, அதற்கான சாமான்கள் என அனைத்தும் கொடுத்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ சாமான்கள். ஆனால் எங்களுக்குக் கிடைச்சதோ  கால் கிலோ பொடி கூடக் கிடையாது. கேட்டால் அரைச்சால் அப்படித் தான் கம்மியா ஆகும்னு சொல்றாங்க.  "ஙே" னு முழிச்சோம்.

அடுத்து  இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறதுனு யோசிச்சதிலே பக்கத்திலே அஜ்மேரிலே கையால் அரைக்கிற மெஷின் கிடைக்குதுனு சொன்னாங்க.  ஏற்கெனவே காப்பிப் பொடி கிடைக்காது என்பதால் கொட்டையை மொத்தமா வாங்கி (ஹிஹி, மொத்தமான்னா, மொத்தமா, ஐந்து ஆறுகிலோ வரைக்கும்) எடுத்துட்டுப் போயிடுவோம்.  வீட்டிலேயே கொட்டையை வறுத்து, காப்பிக்கொட்டை மெஷினிலே போட்டு( கல்யாணச் சீரிலே அம்மா கொடுத்தது;  காரைக்குடி மெஷின்னு சொல்வாங்க அதை!  இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம்!) அரைச்சுத் தான் காஃபி.  குழந்தை அப்போத் தான் அம்மா கிட்டே பாசம் அதிகம் வந்து அம்மா தூக்கணும்னு அடம் பண்ணுவா.  அவளையும் தூக்கிக் கொண்டு அரைப்பேன். இப்போ சாம்பார் பொடிக்குமா?

அஜ்மேர் போய் மெஷினைப் பார்த்தோம்.  ஒரே சமயத்தில் கால்கிலோ பொருட்களைப் போடும் அளவுக்குப் பெரிய வாய் கொண்ட மெஷின்.  அப்போ அதோட விலை நூறு ரூபாய்க்குள் தான்.  வாங்கியாச்சு.  மிளகாய் வற்றலை நல்லா வெயிலில் காய வைச்சு மெஷினில் போட்டு அரைக்கணும்.  ஒரே தும்மல்!  குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம்.  விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன்.  மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது.  சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன்.  மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு!!! பிள்ளையாரே!  இப்போ என்ன பண்ணறது???

Monday, January 06, 2014

கிருஷ்ணா வந்தாச்சே! நிலா வந்தாச்சே!நேத்திக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வத்திருமகள் படம் போட்டிருந்தாங்க.  அந்தப் படத்தின் முக்கியமான மறுபாதியை ஏற்கெனவே ஹிந்தியில் பார்த்துட்டேன்.  சுஷ்மிதாசென் தான் அதில் வக்கீலா வருவாங்க. படம் பெயர் மறந்துட்டேன். ஆனாலும் ஹிந்தி தான் மூலம் னு நினைச்சுட்டு இருந்தா, க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆங்கில மூலம்.  I am Sam  என்ற படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஹிந்தியிலும், தமிழிலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்காங்க.  ஆங்கிலத்தில் போட்டாலும் பார்க்கணும். பின்னே? மும்மொழித் திட்டத்தை ஆதரிக்க வேணாம்?


இப்போ தெய்வத் திருமகளுக்கு வருவோம்.  மனநிலை சரியில்லாத விக்ரமுக்கும், ஒரு பணக்கார முதலாளியின் முதல் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை நிலா.  பணக்காரப் பெண் எந்தச் சூழ்நிலையில் விக்ரமைத் திருமணம் செய்து கொண்டாள்? ஹிஹிஹி, நான் படம் பார்க்கையிலே விக்ரமுக்குக் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரிக்குப் பார்க்க வரார்.  அதெல்லாம் வழி நல்லா நினைப்பிலே இருக்கு.  போக்குவரத்து விதிகளைச் சுத்தமாக் கடைப்பிடிக்கிறார்.  ஆனால் குழந்தை அழுதால் பால் கொடுக்கணும்னு தெரியலை.  அதோடு வக்கீல் பாஷ்யமாக வரும் நாசரின் குழந்தைக்கு ஜுரம் வந்தப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு தெரிஞ்சு, டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவர் தன்னை அடைத்து வைத்த பாஷ்யத்தின் வீட்டிலிருந்து தப்பிச்சுப் போய் அந்த மருந்தை வாங்கி வந்து கொடுக்கிறாராம்.  டாக்டருக்கே ஆச்சரியமா இருக்காம்.  எனக்கும்!

எங்க டாக்டர் மட்டும் இருந்திருந்தா அந்த இடத்திலேயே எங்களை உதைச்சிருப்பார். ஹூம்! சினிமா டாக்டருக்குத் தெரியலை! :P தொலையட்டும்.  நிலாவாக நடிக்கும் குட்டிப் பொண்ணு அசப்பில் எங்க அப்பு போல இருந்தாள்.  படு சுட்டி!  கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு.  ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்!  ஹிஹிஹி, யாருக்கு வேணும் இரண்டு வருஷம் கழிச்சுனு ஒளிப்பதிவாளர் சொல்லுறது காதிலே விழுந்தது.  அதே போல் இசையும் ஓகே.

விக்ரம் ரொம்பக் கடுமையான முயற்சிகள் செய்து தன்னை மனநிலை பிறழ்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறார். என்றாலும் கடைசியில் பாஷ்யம் பயமுறுத்தலைக் கேட்டுக் கொண்டு, குழந்தையைத் திரும்பத் தன் மைத்துனியிடமே ஒப்படைப்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்.  இந்த அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்சவரை மனநிலை பிறழ்ந்தவர்னு எப்படி ஒத்துக்க முடியும்?  கஷ்டகாலம்! அதோடு இல்லாமல் அவர் கேஸை எடுத்து நடத்தும் அநுஷ்கா(?) படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்து தான் போங்க!  நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லாம் காட்டலை;  பிழைச்சோம்.  அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது.  அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும்?  மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே!  கேட்குமா என்ன?

இப்படி நம்ப முடியாத சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே இருந்தாலும் ஓகே சொல்லலாம். ஆனால் இப்போ என்னோட தலையாய சந்தேகம்! விராட் நடிக்கும்  விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா? இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா?  ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா!  இதிலே அநுஷ்காவும் ஒய்.ஜி.யும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இருந்தவங்க விக்ரமால் மனம் மாறி ஒருத்தர் மேலே இன்னொருத்தர் பாசத்தைப் பொழிய ஆரம்பிச்சுடறாங்க.

என்றாலும் கோர்ட் சீனில் சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் மறந்து அந்தக் குழந்தை நிலாவும், விக்ரமும் கைகளாலேயே பேசிக் கொள்வதும்,  விக்ரம் குழந்தை தன்னை விட்டுட்டுப் போய்விட்டாள்னு கோவிப்பதும், குழந்தை சமாதானம் செய்வதும் கண்ணையும், மனதையும் நிறைத்த காட்சி.  போனால் போகுதுனு தொலைக்காட்சியிலே போடறச்சே பார்த்து வைக்கலாம். ஆனால் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதுனு  கேள்விப் பட்டேன். நிஜம்ம்ம்ம்ம்மாவா?

அதோடயா?  இந்தப் படத்தை ஆறரைக்கு ஆரம்பிச்சாங்களா?  இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் முடியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன்!  பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம்! :(  சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாவே இருந்திருக்கு!

Sunday, January 05, 2014

சட்டி சுடாது, தைரியமாப் பாருங்க! :)

மவுன்ட்பேட்டன் குறித்த எங்கள் ப்ளாக் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் சீனாச்சட்டியும், இரும்புச் சட்டியும் குறித்துச் சொல்லி இருந்தேன்.  கீழே காண்பது சீனாச்சட்டி.  இது இட்லி வார்க்கவேண்டி வைத்தது.  இதிலும் எண்ணெய் விட்டோ விடாமலோ  வறுக்கலாம். காய்கள் வதக்கலாம். எல்லாம் செய்யலாம். 
இங்கே கீழே பார்ப்பது இரும்புச் சட்டி.  இதிலேயே காது வைத்த சட்டியும் உண்டு.  அதையும் ஒரு நாள் படம் எடுத்துப் போடறேன்.  இப்போவும் அந்த இரும்புச் சட்டியிலும் கீழே காணப்படும் இந்தச் சின்ன இரும்புச் சட்டியிலும் தான் சமையலுக்கு முக்கியமானவைகள் வறுப்பது, கறி வதக்குவது போன்றவை எல்லாம். உடல் நலத்திற்கு நன்மை தரும்.   அதோடு இரும்பு வாணலியில் ஒட்டாமலும் வரும்.  Friday, January 03, 2014

நைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு!


சக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம்.  மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும்.  அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. :)இது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன்.
நம்ம ஆஞ்சி தான். கதையைத் தூக்கிக் கொண்டு காட்சி அளிக்கிறார். வலக்கரத்தில் மலைனு நினைக்கிறேன்.


பார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். :)பைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி

மொக்கையோ மொக்கை!

மொக்கை போஸ்டுக்கெல்லாம் ஹிட் லிஸ்ட் எகிறுது!  :P :P :P இதுக்கு எப்படினு பார்க்கலாம்.

அப்பாடா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, January 01, 2014

வருக, வருக புத்தாண்டே வருக! எல்லாரும் சாப்பிட்டதை வந்து பாருங்க!

இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இப்போல்லாம் ரொம்பவே அமர்க்களமா இருக்கு.  சின்ன வயசிலே ஆங்கிலப் புத்தாண்டுனு அப்படி விசேஷமாக் கொண்டாடாவிட்டாலும், ஒரு விதத்தில் முக்கியமாகவே இருந்தது.  ஏன்னா அன்னிக்குத் தான் அப்பா எங்களை ஏதானும் ஒரு ஹோட்டலுக்கு டிஃபன் சாப்பிட அழைத்துச் செல்லுவார். அன்னிக்கு டிஃபன் சாப்பிடற செலவுக்குக் கணக்கும் பார்க்க மாட்டார்.  ஹிஹிஹி, ஒரு வாரம் கழிச்சுப் பார்த்துட்டுப் புலம்பிப்பார்ங்கறது தனியா வைச்சுக்கலாம்.  ஆனால் அன்னிக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்.


இதுக்காக நாங்க ஒரு மாசம் முன்னாடியே தயார் பண்ணிப்போம்.  எப்படினு கேட்கறீங்களா? ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது? மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா?  அல்லது அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆர்டர் கொடுக்கிறதானு பேசிப்போம்  ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஆர்டர் கொடுத்தால் அப்புறமா அப்பா என்ன சொல்லுவாரோ, விலை எல்லாம் ஜாஸ்தி இருக்குமோனு யோசிச்சுப்போம்.  அப்புறமா ஒரு வழியா முடிவு பண்ணி எல்லாருமா ஒரே ஸ்வீட் ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவு செய்துப்போம்.

அது ஜிலேபியா, மைசூர்பாகா, அல்வாவானு அடுத்த விவாதம்.  இதெல்லாம் வீட்டிலே பண்ணறது தானே.  வீட்டிலே பண்ணாத ஸ்வீட்டா வாங்கிக்கணும்னு நான் சொல்லுவேன்.  எப்போவுமே ஹோட்டலுக்குப் போனால் வீட்டிலே பண்ணற இட்லி சாம்பார் வாங்கிச் சாப்பிடறது எனக்குப்பிடிக்காது! :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன்.  அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும்.  அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது.  வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க.  கம்பி, கம்பியாக இருக்கும்.  அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம்.  அதிலே என்ன ருசி இருக்கும்?  ஆகவே ரசிச்சுச் சாப்பிடறாப்போல யோசிச்சுக் கடைசியில் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு முடிவு பண்ணுவோம்.

இது எதுவும் இல்லைனா ஏதேனும் பாலில் செய்த இனிப்பு வாங்கலாம்னு நினைப்போம்.  ஹோட்டலுக்குப் போனதும் அங்கே முதல்லே ஒரு நோட்டம் விடுவோம்.  எது புதுசாச் செய்திருப்பாங்க?  அநேகமா அல்வா தான் தினம் தினம் புதுசாப் பண்ணுவாங்க.  அப்பாவோட ஓட் எப்போவுமே அல்வாவுக்குத் தான்.  அப்பா அல்வா ஆர்டர் கொடுக்க, நாங்க மூணு பேரும் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு சொல்லுவோம்.  குலாப்ஜாமூன் சாப்பிடத் தெரியுமானு அப்பா கேட்பார்.  அப்போல்லாம் குலாப் ஜாமூனை ஜீராவில் ஊற வைச்ச மாதிரியே அப்படியே ஜீராவோடு கொடுப்பாங்க.  ஆகவே அதைச் சாப்பிடறது அப்போ ஒரு புதுமை!


(அப்போக் கொடுக்கும் ஜாமூனை ஜீராவோடு சேர்த்து  உதிர்த்துக் கலந்துக்கணும். அதுக்கப்புறமாச் சாப்பிடணும்.  இந்த குலாப்ஜாமூன் செய்யும் வித்தையெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதல்லே ராஜஸ்தான் போனப்புறம் தான் நல்லாவே புரிஞ்சது.   ஜீராவில் ஊறிய ஜாமூன்களைத் தனியே வைக்கலாம் என்பதே அப்போப் புதுமையா இருந்தது.  அதோடு ஸ்டஃப் பண்ணின ஜாமூன் வேறே பண்ணுவாங்க. அப்போ குழந்தையிலே ஜாமூன் சாப்பிட்டதை நினைச்சுப் பார்த்துச் சிப்பு, சிப்பா வரும்.  அது தனியா ஒரு நாள் பார்த்துப்போம். ) அல்வா சூடா இருக்கு, அதைச் சாப்பிடாமல் என்னனு அப்பா முறைப்பார்.  உடனே நான் இன்னிக்கு எங்க இஷ்டத்துக்குச் சாப்பிடலாம்னு சொல்லிட்டு, இப்போ மாத்தறீங்களானு கேட்டுடுவேன்.  முறைப்போடு இருக்கும் அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாது.  கடைசியில் ஜாமூன் வரும்.


நானும், தம்பியும் அதை ஜீராவோடு கலக்க, அண்ணாவோ அதைத் துண்டாக்கித் தனியாகச் சாப்பிட்டுவிட்டு, ஜீராவைத் தனியாகக் குடிக்க முயல்வார்.  துண்டாக்க முடியாமல் வழுக்கிக் கொண்டு போகும் ஜாமூன். பின்னே?  இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க?  ஜாமூன் பவுடர் தானே!  இதெல்லாமும் அப்புறமாத் தான் புரிய வந்தது. :)))) ஒரு வழியா ஜாமூனைப் பிடித்து வெட்டிச் சாப்பிட்டுவிட்டு அடுத்து மசால் தோசை அல்லது சாம்பார் வடை அல்லது ஸ்பெஷல் வடை ஆர்டர் கொடுப்போம்.  ஸ்பெஷல் வடை கிட்டத்தட்ட ஒரு தோசை அளவுக்கு இருக்கும் என்பதோடு முந்திரிப்பருப்பெல்லாம் போட்டிருப்பாங்க.  அந்த மாதிரி வடை இப்போல்லாம் எங்கேயுமே பண்ணறதில்லை.

{அப்போல்லாம் ஹோட்டலில் அடை, அவியல் எல்லாம் கிடையாது.  முதல் முதல்லே ஹோட்டலில் அடை அவியல் கொடுத்து நான் பார்த்தது எங்க மாமா கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் இருந்து திரும்புகையில் கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் தான்.  அட, ஹோட்டலில் அடை அவியலானு ஆச்சரியமா இருந்தது அப்போ. } இப்படியாகத் தானே எங்க ஹோட்டல் மகாத்மியம் நடைபெறும்.  சில சமயம் அப்பாவுக்கு முடியலைனா ஹோட்டலில் இருந்து டிஃபன் வரவழைப்பார்.

அப்போ பின்னாடி மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி முடுக்கில் இருக்கும் கோபு ஐயங்கார் கடையிலிருந்து தூள் பஜ்ஜியும் , சட்னியும் கட்டாயம் இடம் பெறும்.  அதைத் தவிர நாகப்பட்டினம் அம்பி கடை அல்வாவும், உருளைக்கிழங்கு மசாலாவும் இடம் பெறும்.  இந்த அல்வாவும் , உருளைக்கிழங்கு மசாலாவும் மதியம் ஒரு மணிக்குள்ளாக வாங்கிடணும். கோபு ஐயங்கார் கடை பஜ்ஜியோ மதியம் ஒரு மணியிலிருந்து மூணு மணிக்குள்ளாக வாங்கிடணும்.  கொஞ்சம் லேட் ஆனாலும் தீர்ந்து போயிடும்.

ஆக மொத்தம் புத்தாண்டை நாங்க வரவேற்பதே இந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே.  இப்போல்லாம் புத்தாண்டு என்பது எல்லா நாட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. :)))))


வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.