எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 29, 2016

வெள்ளிக்கிழமை மாவிளக்குப் போடுதல் குறித்த ஓர் பகிர்வு!


மின் தமிழில் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்துக்காக முன்னர் எழுதியது கீழே பகிர்கிறேன். இன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதாலும் பலரும் மாவிளக்குப் போடுவதாலும் இது குறித்து எழுத நேர்ந்தது.  இப்போதெல்லாம் மாவிளக்குத் திரி என்றே தனியாகக் கிடைக்கிறது. அடியில் பருமனாக நுனியில் திரி ஏற்றும் இடம் மெலிதாக வருகிறது. ஆனால் நான் பஞ்சைத் திரித்துக் கொண்டு திரி செய்தே பல ஆண்டுகள் மாவிளக்கு ஏற்றி வந்திருக்கிறேன். இப்போது பஞ்சே கிடைப்பதில்லை. பஞ்சு என்றால் கடைகளில் விற்கும் பஞ்சு அல்ல. நல்ல பருத்திப் பஞ்சு. உள்ளே கொட்டை(விதை) இருக்கும் அதை எடுத்துவிட்டுப் பஞ்சைக் கைகளால் திரித்துத் திரி செய்து கொண்டு  மாவிளக்கில் போட்டு நெய் ஊற்றி ஏற்றி இருக்கிறேன். என் அம்மா வீட்டில் நல்ல வெள்ளைத் துணியை அலசி உலர்த்திக் கொண்டு அதில் உள்ளே அரிசியும் பருப்பும் வைத்துக் கட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு அதை நெய்யில் நனைத்து மாவிளக்கு ஏற்றுவார்கள். அதே போல் அங்கே மாவிளக்கு மாவு உதிரி உதிரியாக இருக்கும். ஆனால் அதுவே என் அம்மா மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடுவதெனில் அன்றே அரிசியை நனைத்து ஊற வைத்து இடித்துக் கெட்டியாக எடுத்துக் கொண்டு மாவிளக்குப் போடுவார். என் மாமியார் வீட்டில் மாவிளக்குப் போடுவதே மாரியம்மனுக்கு மட்டுமே என்பதால் எப்போதுமே கெட்டியாகத் தான் இருக்கும் மாவிளக்கு. 

சிலர் வீட்டில் இரண்டு தீபம் ஏற்றுவார்கள். சிலர் வீட்டில் ஒரே தீபம் தான். அதற்குத் தகுந்தாற்போல் மாவை வெல்லம் சேர்த்து உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் நடுவில் குழி செய்து அதில் நெய்யை ஊற்றிக் கொண்டு இலை, அல்லது பித்தளைத் தாம்பாளம், (அவரவர் வீட்டு வழக்கப்படி) போட்டு அதில் மாவை வைத்துத் திரியைப் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.கட்டாயமாய் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய் வைக்கவேண்டும். மாவிளக்குக்குப் பூச் சுற்றிப் போட வேண்டும். இனி கீழே நான் சில ஆண்டுகள் முன்னர் எழுதியவை!மாவிளக்கு
திருமதி.கீதா சாம்பசிவம்
 
 

மாரியம்மன் என்றாலே ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. மாவிளக்குப் போடாத தமிழ்ப் பெண்களைத் தேடித்தான் பிடிக்கணும்.  அம்மன் என்றாலே மாவிளக்கும், பானகமும், துள்ளு மாவும், காப்பரிசியும் கூடவே வரும். எங்க அம்மா வீட்டிலேயும் அந்த வழக்கம் இருந்து வந்தது.  அம்மா வீட்டிலேயே மீனாக்ஷி படத்திற்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி வைப்பார். யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால் நேர்ந்து கொண்டு கோயிலுக்குப் போய்ப் போடுவதும் உண்டு.  என் மாமனார் குடும்பத்தில் குலதெய்வமே மாரியம்மன் தான்.  ஆகவே ஒவ்வொரு ஆடி, தை மாதம் தவிரவும் நேர்ந்து கொண்டு, புதுக்கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளைப் போட வைப்பது என்று வழக்கம் உண்டு.  இந்த வகையில் எங்கள் மகனுக்கு 2005 டிசம்பரில் 11-ம்தேதி திருமணம் நடந்தது.
 
 
 
இது குறித்துப் பகிரப் பல சுவையான தகவல்கள் இருந்தாலும் இந்தப் படங்கள் குறித்த நிகழ்வுகளை மட்டுமே கூறப் போகிறேன். திருமணம் முடிந்ததுமே குடும்பத்தோடு அனைவருமே குலதெய்வம் கோயிலுக்குப் போய் அபிஷேஹ, ஆராதனைகளோடு மாவிளக்கையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பவேண்டும் என்ற முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த வருஷம் கொட்டித் தீர்த்த மழையில் திருமணத்திற்கு நான் எழுந்து நடமாடியதே பெரியவிஷயமாய்ப் போச்சு.  என்றாலும் அதன் பின்னரும் விடாமல் கோயிலுக்குக் கிளம்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்.  கோயிலுக்குப் போவதற்கு முதல்நாள் மருமகளுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வு.  கல்லூரித் தேர்வுகளில் எல்லாம் நன்கு செய்திருந்த என் மருமகளும் சரி, தன் மனைவி தன்னோடு வரமுடியுமா, முடியாதா என்ன நடக்குமோ என்ற கவலையிலிருந்த எங்க பையரும் சரி காலையிலே கவலையோடு கிளம்பிப் போனாங்க. ஒருவழியாய்த் தேர்வு முடிந்து மருமகளுக்கு விசாவும் கிடைத்தது என்ற நல்லசெய்தியை அன்று மதியம் 2 மணி அளவில் சொன்னார்கள்.
 
அதே சமயம் மறுநாள் ஊருக்குப் போகமுடியாது என்ற செய்தியை நாங்கள் அவங்களிடம் சொல்லவேண்டி வந்துவிட்டது. அன்று காலைதான்  என் கணவரின் வயதான அத்தை இறந்துவிட்டதால் நாங்கள் குறைந்த பக்ஷம் ஒரு மாதத்துக்காவது கோயிலுக்குப் போய் அபிஷேஹ ஆராதனைகளோ, மாவிளக்கு நேர்த்திக்கடனோ செய்யமுடியாது என்று ஆகிவிட்டது.  பையர் ஜனவரி மாசம் தான் மனைவியோடு ஊருக்குப் போகப் போகிறார் என்பதால் நானும் பொங்கல் கழிச்சுக் கிளம்பினால் தைமாதம் கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம் என்று கூறினேன்.  ஆனால் பையரின் வேலைத் தொந்திரவால் அவரால் இருக்கமுடியவில்லை.  குறித்த தேதியில் கிளம்பிட்டாங்க.  அதுக்கப்புறமா 2007-ல் வரப்போறோம்னு சொன்னாங்க. அப்போவும் நவம்பர், டிசம்பர் தான்.  ஆனால் கார்த்திகை மாதம் இல்லை.  மாவிளக்குப் போன்ற நேர்த்திக்கடன்களை மார்கழி மாதம் செய்வதில்லை என்பதால் நான் கொஞ்சம் முன்னாலோ, அல்லது பின்னால் தை மாதமாக இருக்கும்படியோ வரச் சொல்லியும் அவங்களால் முடியலை.  மருமகள் எம்.எஸ். முடிக்கும் நேரம். கட்டாயம் இருந்தே ஆகணும் ஜனவரியில். வேறே வழியே இல்லை.
 
போனவருஷம் தான் அவங்க எங்க விருப்பப்படி கார்த்திகையில் வந்து கார்த்திகை தீபத்துக்கும் இருந்துவிட்டு, கோயிலுக்கும் அழைத்துப் போய் மாவிளக்கு நேர்த்திக்கடனையும் பூர்த்தி செய்துவிட்டு வந்தோம்.  என்னை பொறுத்தவரை ஆடிமாதம் ஒரு வெள்ளிக்கிழமையும், தை மாதம் ஒரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டுவிட்டு வந்துவிடுவேன்.  அவங்க யு.எஸ்ஸிலிருந்து வரதாலே கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும், என்றாலும் அம்மா கோவிச்சுக்கவா போறா?? நம் அம்மா தானே??

மாவிளக்கு செய்முறை
 
பச்சரிசி கால் கிலோ,
வெல்லம் பாகு கால்கிலோ தூள் செய்யவும்.
ஏலக்காய் நாலு, ஐந்து,
50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)தேங்காய்
 
நிவேதனம் செய்ய வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, பூ
 
பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.  சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.  மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  எங்க வீட்டில் சலிப்பதில்லை. நன்கு அரைத்துவிடுவோம்.  மாவாகிவிடும். வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.  பந்து போல் உருட்டவேண்டும்,  அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். எங்க வீட்டில் இரண்டு உருண்டை. உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்
 
அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.  குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் முன்னாலேயே ஊற வைக்கவும்.  இல்லாட்டி மாவிளக்கை ஏற்றும்போது உடனே எரியாமல் அணைந்து போய் பலருக்கும் மனசு கஷ்டப் படும். பஞ்சுத் திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.  இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.  பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தையும் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.  திரி நன்கு எரியும்.  நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், (இதை அம்மன் மலை ஏறிவிட்டாள் என்று கூறுவார்கள்) அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.  பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
 
துள்ளு மாவு: முன் மாவிளக்குக்குச் சொன்ன அதே அளவு பச்சரிசி வெல்லம் மற்றப் பொருட்களை  எடுத்துக்கொள்ளவேண்டும்.  மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு நன்கு காய வைத்து வெல்லத் தூளைச் சேர்த்துத் தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.  இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.
 
காப்பரிசி: வெறும் பச்சரியை ஊற வைத்து நீரை வடிகட்டிவிட்டுத், தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு, வெல்லம், ஏலக்காய்  சேர்க்கவேண்டும். இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.  குழந்தை பிறந்து காப்புப் போடும்போது செய்யும் காப்பரிசியின் பக்குவம் வேறு.
 
பானகம்: வெல்லம், நீர், சுக்கு ஏலக்காய். வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு வேண்டிய அளவு நீர் விட்டு சுக்கும் ஏலக்காயும் கலந்து கொள்ளவேண்டும்.
 

Thursday, July 28, 2016

இன்னிக்குப் பொழுதுக்கு ஒரு மொக்கை!

முகநூலில் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் என்பவர் அடிக்கடி டாக்டர் வைகுண்டம் என்பவரைப் பற்றி எழுதுகிறார். அதைப் படிக்கையில் எல்லாம் என்னோட சின்னமனூர் சித்தப்பாவின் நினைவு வருது! அவரும் இப்படித் தான் ஏழைப்பங்காளர்! இவரைப் பற்றி ஒவ்வொரு வருடமும் அவரோட நினைவு நாளன்று நந்தன் ஶ்ரீதரன் என்பவர் எழுதிக் கொண்டு இருக்கிறார். அவரும் சின்னமனூர் போலிருக்கு. எனக்குப் பல வருடங்கள் வரை அதாவது ஏழு, எட்டு வயசு வரைக்கும் ஆயுர்வேத வைத்தியம் தான்! மேலமாசி வீதியில் மேலக் கோபுர வாசலில் இருந்து திரும்பியதும் வரும் அவர் இருந்த அந்த வீடு. பக்கத்திலேயே ஒரு சீன பல் மருத்துவரும் இருந்தார். அவர் பையர் எங்க அப்பா வேலை பார்த்த சேதுபதி பள்ளியில் தான் படித்தார். சீனப் போர் வந்த சமயம் அவங்க வீட்டு வாசலில் சின்னச் சின்னப் பசங்க ஒரே கூட்டமாகக் கூடிக் கொண்டு சீனாக்காரன் ஒழிக என்பார்கள். அந்தப் பையருக்கும் அந்த மருத்துவருக்கும் சிரிப்பு வரும். ஆனாலும் யாரையும் கடிந்து எதுவும் சொன்னது இல்லை. எங்கேயோ போயிட்டேனே! எனக்கு உடம்பு சரியில்லைனா  அந்த மலையாளி மருத்துவர் சூரணம், பொடி, லேகியம், கஷாயம் எனக் கொடுப்பார். சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லுவார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். மறுப்பே இல்லாமல் சாப்பிட்டுடுவேன்.

அந்தச் சூரணம் சாப்பிடவென்று எங்க வீட்டில் ஓர் வெண்கலப் பாலாடை உண்டு. ராசியான பாலாடை! கஷாயமும் அதில் ஊற்றித் தான் குடிப்போம். சூரணங்களையும் அதில் போட்டுத் தான் தேன் ஊற்றிக் குழைத்துக் கொண்டு சாப்பிடுவோம். இதை எல்லாம் நக்கிச் சாப்பிட வேண்டும் என்பார்கள். கடைசியில் பாலாடையில் கொஞ்சம் மருந்து இருக்குனு  பெயர் பண்ணிக் கொண்டு மேலும் தேன் ஊற்றிக் கொண்டு தேனை நக்குவதும் உண்டு. உடம்பு சரியில்லைனால் அப்போத் தான் பன் வாங்கித் தருவாங்க. இந்த ப்ரெட் எல்லாம் அப்போத் தெரியாது. பன் தான் தெரியும். பன்னை வாங்கிக் கொண்டு பாலில் தோய்த்துக் கொண்டு சாப்பிடுவோம். உடம்பு சரியானதும் மலையாளி மருத்துவர் ரெண்டு இட்லி! என்பார். கோபமாக வரும். ரெண்டு இட்லியெல்லாம் எப்படிப் போதும்! தயிர் சேர்க்கலாமா என்று கேட்டுப்பேன். ம்ஹூம், சர்க்கரையோடு சாப்பிடணும் என்பார். எங்க வீட்டில் சர்க்கரை எல்லாம் கட்டுப்பாடுடன் பயன்படுத்தி வந்ததால் இட்லிக்குச் சர்க்கரை என்றதும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பாதி இட்லிக்கே போட்ட சர்க்கரை போதலைனு திரும்பவும் கேட்கலாமே!

அதுக்கப்புறமா எனக்கு ஒரு முறை ஜன்னி வந்து ஆட்டம், பாட்டம், ஓட்டம்னு இருந்தப்போ மலையாளி மருத்துவர் வீட்டுக்கே வந்து பார்த்துட்டுக் கை விரிச்சுட்டுப் போயிட்டாராம். அப்போத் தான் எங்க பெரியப்பா பையர் அவங்க வீட்டு மருத்துவரைச் சின்னச் சொக்கிகுளம் சென்று அழைத்து வந்தார். அப்போதிருந்து எனக்கும் ஆங்கில மருத்துவம் அறிமுகம் ஆனது. அடிக்கடி உடம்பு வருமா! அந்த மருத்துவர் மாத்திரை சாப்பிடச் சாக்லேட் கொடுப்பார். சாக்லேட் என்றால் அப்போல்லாம் முக்கால்வாசி ஆரஞ்சு மிட்டாய் தான். எப்போவானும் பேப்பரில் சுற்றிய சாக்லேட் கிடைக்கும். அதுவே பெரிய பரிசை வென்று விட்டாற்போல் இருக்கும். இப்படியாகத் தானே என்னுடைய உடல் மெல்ல மெல்ல ஆங்கில மருத்துவத்தை ஏற்கத் தொடங்கியது.

 இரண்டு மூன்று நாட்களாக இணையம் பக்கமே வர முடியலை. நேத்திக்கு மாமனாரின் சிராத்தம். முந்தாநாள் அதற்கான பூர்வாங்க வேலைகளும், நேற்று சிராத்த வேலைகளும் இருந்தன. இன்று உறவினர் வருகை. இப்போத் தான் நான்கு மணிக்குப் போனாங்க. இதுக்கு நடுவில் ஒரு கதை ஒண்ணு மனசில் முகிழ்த்திருக்கிறது. ஒரு நிஜ சம்பவம்! அந்த சம்பவத்தின் நிகழ்வைக் குறித்த ஒரு உறவினரின் விமரிசனம்!  அதை ஒட்டித் தோன்றியது! யார் கண்டா! உங்களை எல்லாம் பயமுறுத்தினாலும் பயமுறுத்தலாம். நான் மூணு நாளா வரலைனாலும் இந்த வலைப்பக்கம் பார்வையாளர்கள் நிறையவே வந்துட்டுப் போயிருக்காங்க. புது மொக்கை இருக்கானு பார்த்திருப்பாங்க போல!  அப்புறமா சாவகாசமா வரேன். :)

Friday, July 22, 2016

யாரு எப்படிப் போனா எனக்கென்னங்க? கபாலி பார்க்கணும்!எல்லோரும் கபாலியைப் பத்தி எழுதியாச்சு! நாம மட்டும் விதிவிலக்கா என்ன? ஊரோடு ஒத்து வாழணும் இல்ல! அதான் இந்தப் பதிவு! ஒரே அமர்க்களம், ஆர்ப்பாட்டம்! சென்னையிலே இன்னிக்குப் பால் கிடைக்குமானு தாய்மார்கள் தவிப்பு! ஹோட்டல்காரங்க எல்லாம் அச்சம்! ஏன்னா எல்லாப் பாலையும் தலைவர் கட் அவுட்டுக்கு அபிஷேஹம் பண்ண வாங்கிடுவாங்களாம்.டிக்கெட் மூணு நாள் முன்னாடியே புக் ஆயாச்சாம். வெளிநாடுகளில் எல்லாம் நேத்திக்கே பார்த்துட்டு விமரிசனமும் போட்டாச்சாம். அவங்களுக்கு மட்டும் ஏன் ஒரு நாள் முன்னாடி? தெரியலை! ஒரே பட்டாசு சத்தம் காதைத் துளைக்குது! தினசரிகளிலே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு டிக்கெட் வாங்கக் காத்திருப்பது பத்திப் படங்கள் வந்திருக்கின்றன. இது கடலூரின் நிலவரமாம். மத்த இடங்களைப் பத்திக் கேட்கவே வேண்டாம்!

முண்டி அடிச்சுட்டுப் போய் டிக்கெட் வாங்கினவங்க முகம் ஏதோ அவார்டு வாங்கிட்டாப்போல் ஜொலிப்பு! டிக்கெட் விலை ஒரு உதாரணத்துக்கு மேலே போட்டிருக்கும் படத்தைப்  பாருங்க! நம்மால் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத விலை ஏற்றம். ஆனாலும் நம்ம மக்கள் இதுக்கெல்லாம் கவலைப்படலை! அலுவலகத்துக்கே விடுமுறை விட வைச்சுட்டாங்க இல்ல! நாங்க யாரு! தமிழர்களாச்சே! இதுக்கெல்லாம் கவலைப்படாம டிக்கெட் வாங்கி அதோடு கூடக் கொடுக்கும் இலவசங்களை ஏதோ நிஜம்மாவே இலவசம் கொடுத்துட்டாப்போல் சந்தோஷமா அனுபவிச்சுட்டுத் தலைவர் படத்தையும் பார்த்துடுவோமுல்ல! விடுவோமா? ஜென்மம் அப்போத் தானே சாபல்யம் அடையும்!

ஆனால் பால் தொழிலாளர்கள் அதே விலைக்குப் பால் கொள்முதல் பண்ணாதீங்கனு விலை ஏத்திக் கொடுக்கச் சொல்லிக் கேட்டு அரசும் விலை ஏத்திக் கொடுத்துட்டு அந்த வித்தியாசத்தைச் சமன் செய்யப் பால் விலையை ஏற்றினால் மறியல் செய்வோம். அந்த விலை வித்தியாசத்தை அரசே ஏற்கணும்னு கட்டாயப்படுத்துவோம். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் கொடி பிடிப்போம். இலவச மின்சாரம் வேணும்னு கேட்போம்.  அல்லது விலையைக் குறையுங்க அப்போத் தான் வாக்களிப்போம்னு சொல்லுவோம். இதெல்லாம் விலை ஏத்தினால் அந்தப் பணம் மின் வாரிய ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மின்வாரியத்தின் பராமரிப்பு உட்பட அந்தச் செலவுக்குத் தானே போகும் என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். எல்லாச் செலவையும் அரசே ஏற்கணும்.

பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது! உயர்த்தினால் நாங்க எப்படிச் சமாளிப்போம்! ஏற்கெனவே பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வுனு இருக்கிறச்சே பேருந்துக் கட்டணம் மட்டும் உயரணுமா? கூடாது! கூடவே கூடாது! பேருந்துகளைப் பராமரிக்கப் பணம் இல்லையா? அரசு கடன் வாங்கிப் பராமரிக்கட்டும். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியலையா? அரசு கடன் வாங்கட்டும்! நமக்கு என்ன அதனால்?  நம்மால் எல்லாம் பேருந்துக் கட்டண உயர்வைத் தாங்க முடியாது! நமக்குத் தேவை என்றென்றும் இலவசம் மட்டுமே!

இலவச அரிசி, இலவசப் பருப்பு, இலவச எண்ணெய், இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மிக்சி, கிரைண்டர்னு எது கொடுத்தாலும் அரசு இலவசமாகக் கொடுக்கட்டும். நாங்க எங்க பணத்திலே கபாலி மாதிரிப் படங்கள் பார்க்கச் செலவு செய்யணுமே! இந்த அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் மடையன் மாதிரி நாங்க காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடவா முடியும்? அதெல்லாம் நடக்காது! ஹஹஹஹா, எங்களை என்னனு நினைச்சீங்க! வேணும்னா மூடின டாஸ்மாக் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள்னு சொன்னாலும் சொல்வோமே தவிர நாங்க எங்களோட கடமைகளை எங்களால் சமாளித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கவே மாட்டோம். அரசே எல்லாம் பார்த்துக்கணும். எங்க கிராமத்தில் உள்ள குளம், நீர் நிலைகள் தூர் வாருவதென்றால் கூட அரசு தான் வரணும். நாங்க எதுவும் செய்ய மாட்டோம்! எங்களுக்கு என்ன வந்தது? இது கூடச் செய்யலைனா அது என்ன அரசு? அப்புறமா எதுக்கு ஓட்டுப் போட்டிருக்கோம்!

எங்களுக்குத் திரைப்படம் முக்கியம். அதுவும் தலைவர் படம் முக்கியம். இப்போப் பாருங்க உலகமே அதிருதுல்ல தலைவர் படத்தாலே!  எல்லா நாடுகளிலும் வெளியிடறாங்க இல்ல! அந்தப் படத்தை முதல் காட்சி முதல்நாள் பார்ப்பதே எங்கள் தலையாய கடமை! அதுக்காக நாங்க வேலைக்குக் கூடப்போக மாட்டோம். அலுவலகத்துக்கு விடுமுறை கொடுத்துவிட்டு நாங்க படத்தைப் பார்க்கப்போவோம்! யார் கேட்பது? நம்ம ரசிகர்கள் இப்படினு தெரிஞ்சா தலைவருக்கு ஏற்படக் கூடிய சந்தோஷம் பெரிசா? நம்ம வேலை பெரிசா?   லீவு எடுத்துட்டாவது பார்த்துட்டுத் தான் மறுவேலை. அதனால் எந்த வேலை எக்கேடு கெட்டால் நமக்கென்ன?

ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஏத்தினால் குறை சொல்வோம். அந்த விலை ஏற்றத்தை நம்மால் பொறுக்க முடியாது.  பெட்ரோல், டீசல் எல்லாம் விலை எப்போவுமே குறைந்திருக்கணும் என்பதே நம் எண்ணம். அதனால் ஏற்படும் நஷ்டத்தை அரசு தான் தாங்கிக்கணும். வரி எல்லாம் போட்டால் எப்பூடி? மத்த நாடுகளிலே போட்டாங்கன்னா நாமளுமா போடறது! நல்ல தரமான சாலையை அமைக்க வேண்டியது மட்டுமே அரசின் கடமை! அதுக்காகச் சுங்க வரியெல்லாம் வசூலிச்சா எப்படி? அரசுக்கு வருமானம் வந்தா வரட்டும்; வராட்டாப் போகட்டும்! நமக்கு வரி விதிக்காமல் இருந்தால் போதும்! விலைவாசியை ஏத்தாமல் இருந்தால் போதும். அடுத்த தலைவர் படம் எப்போனு சொல்லுங்க! இப்போவே முன் பதிவு பண்ணிடுவோம்!

Wednesday, July 20, 2016

எங்கும் குழப்பம், எதிலும் குழப்பம்! அமைதி நிலவட்டும்!

வீட்டில் தான் குழப்பமான மனோநிலைன்னா நாட்டிலும் அப்படியே! என்னத்தைச் சொல்றது? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வெளியே செல்பவர்கள் பத்திரமாக வீட்டுக்கு வரணுமேனு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது பெற்றோருக்கு. வேலைக்குச் செல்ல வேண்டி ரயிலுக்குக் காத்திருந்த இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்கிறார்கள்.  தற்காப்புக்கு அந்தப் பெண் ஸ்ப்ரே வைச்சிருக்கணும்னு சிலர் கருத்து! அதை தாராளமாகக் கடைகளில் விற்கணும்னு இன்னொருத்தர் கருத்து. தாராளமாக் கடைகளில் விற்கப்பட்டால்கொலையாளிகள்/வில்லன்கள் அதைப் பயன்படுத்துவாங்களேனு ஒருத்தருக்கும் தோணலை போல! என்னவோ போங்க! இப்போதெல்லாம் சிறு வயது மரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் கொலைகள் அதிகமாக இருக்கின்றன. காய்கறிகளை வெட்டுகிறாற்போல் மனிதர்கள் வெட்டப்படுகின்றனர். ஏன் இப்படி?

 பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்வதால் சின்ன வயசுக்காரங்க பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசாதது கூட இதுக்குக் காரணமாக இருக்கலாம். அநேகமாய் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு ஆட்படுகின்றார்கள். அவற்றை எல்லாம் பகிர ஆளில்லை. பெற்றோர் பயந்துக்கப் போறாங்கனு நினைச்சே பலர் சொல்வதில்லை. இன்னும் சிலருக்குப் பெற்றோருக்கு என்ன தெரியும்ங்கற நினைப்பும் இருக்கலாம். எதுவானாலும் பெற்றோருக்குத் தெரியாமல் நடக்க வேண்டாம். அவங்களை  விடவும் உங்கள் நலம் விரும்பிகள் வேறே யாரும் இல்லை. நம்பிக்கையான ஓரிரு சிநேகிதிகள், சிநேகிதர்கள் இருந்தால் போதும். அவங்களிடமும் பகிர்ந்துக்கலாம்.  இப்போதெல்லாம் சிறுவயதுக்காரர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தாங்கள் நிறையப் படித்திருப்பதாலும், வேலை பார்ப்பதாலும் பெற்றோரை விடத் தாங்கள் அதிகம் அறிந்தவர்கள் என்னும் நினைப்புடன் பெற்றோருக்குப் புத்திமதி சொல்லுகின்றனர். சிறு வயதிலிருந்து உங்களை வளர்த்து வரும் பெற்றோர் ஒன்றும் தெரியாதவர்களா?  உங்கள் உண்மையான நலம் விரும்பிகள் முதலில் உங்கள் பெற்றோர் தான்!

அவர்கள் அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதை மறவாதீர்கள். உங்கள் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சிநேகித, சிநேகிதியும் உங்கள் பெற்றோருக்கும் வீட்டுக்கும் தெரிய வேண்டும். பெற்றோரிடம் அலுவலகத்தில் நடந்த, நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு யார் மீதென்பதை அவர்களுடன் பேசித் தெளிவு பெறுங்கள். முக்கியமாய் ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் மகனைக் கூடப் படிக்கும் பெண்ணை சகோதரியாய், தோழியாய் மதிக்கும்படி நடந்து கொள்ளச் சொல்லிக் கொடுங்கள். பெண் எப்படி உடை உடுத்தினாலும் அது அந்த ஆண் மகனின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் திடமாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். ஆடையையும் மீறி ஒரு பெண்ணின் உணர்வு புனிதமானது என்பதை எடுத்துச் சொல்லி அதை மதிக்கக் கற்றுக் கொடுங்கள். நாகரிகமாக உடை உடுத்திய ஒரு பெண் நடத்தை கெட்டவள் என்று சொல்ல முடியாது. அப்படி உடை உடுத்துவது அவள் சொந்த விருப்பம். இதற்கும் அவள் நடத்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளைக் கண் கவரும்படி உடை உடுத்தி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்.  மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். நம்பிக்கைக்கு உரிய சிநேகித, சிநேகிதிகளை மட்டுமே அவளோடு பழக அனுமதியுங்கள். அதையும் உங்கள் கண்காணிப்பிலேயே வையுங்கள். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோருக்குக் கட்டாயமாய்த் தெரிந்திருக்க வேண்டும்.  அவள் அலைபேசியில் வெகுநேரமாக யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் அதைப் பற்றித் தயக்கமில்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் குழந்தைகள் உங்களிடம் எதையும் மறைக்காமல் இருக்கும்படி பழக்குங்கள். கணினியில் வெகு நேரம் உங்கள் குழந்தைகள் நேரம் செலவு செய்தால் அதைப் பற்றி என்னவென்று தெரிந்து கொள்ள எப்படியானும் முயலுங்கள். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் ஒரு பெற்றோராக இது உங்கள் முக்கியக் கடமை!

இறந்து போன பெண்ணைப் பற்றிப் பலவிதமான அவதூறுகள், கருத்துகள், விவாதங்கள். இதெல்லாம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும், உற்றோருக்கும் மன வேதனை அளிக்கும் பேச்சுகள்.  தொலைக்காட்சியில் அந்தப் பெண்ணின் சித்தப்பா மனமுருகி வேண்டிக் கொண்டார். இறந்த பெண்ணின் மேல் யாரும் அவதூறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம்.  இது தான் இப்படி என்றால் சேலம் அருகே இளம்பிள்ளை என்னும் கிராமத்தில் தன்னைப்  பற்றி ஆபாசமாகப் படம் போட்டதால் இன்னொரு இளம்பெண்  தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். வர வர மனிதாபிமானம் என்பதே அற்றுப் போய்விட்டதோ என நினைக்க வைக்கும் சம்பவங்கள் இவை எல்லாம். இன்று ஒரு பெண் பதினோராம் வகுப்புப் படிக்கும் பெண் விஷம் குடித்து இறக்க முற்பட்டிருக்கிறாள். காரணம் என்னவெனில் ஓர் பையர் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்திருக்கிறார். பெண் மறுத்திருக்கிறாள். தொல்லை தாங்க முடியாமல் பெண் விஷத்தைக் குடித்திருக்கிறாள். படிக்கிற வயசிலே காதல் எப்படி வரும்?

இதுக்கெல்லாம் திரைப்படங்களும் நெடுந்தொடர்களுமே காரணம். அதில் தான் பள்ளிக் காதலை ஆதரித்துப் படம் எடுக்கின்றனர். நெடுந்தொடர்களிலும் பார்ப்பதை உண்மையில் வாழ்க்கையில் நடக்கும் என்று நம்புகிறார்கள். என்னதான் கற்பனை என்று போட்டாலும் ரசிகர்கள் அதை ஏற்பதில்லை. இதை எல்லாம்   படிக்கவே மனம் வெதும்புகிறது. இப்படி இவர்கள் எல்லாம் கொலையுண்டு சாகவும், தற்கொலை செய்து கொண்டு சாகவும் காரணம் ஆண்களே! பெண்ணைப் பெண்ணாக நினைக்காமல் போகப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் கண்ணில் ஒரு பெண் பட்டுவிட்டால் போதும்! அந்தப் பெண்ணை அவர்கள் தங்கள் சொத்தாகவே நினைக்கின்றனர். இதில் அந்தப் பெண்ணின் விருப்பம், மனம் எதுவும் பார்க்கப்படுவதில்லை.

திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மிகவும் கெட்டவனாக இருக்கும் கதாநாயகன் கதாநாயகியான பணக்காரப் பெண்ணை மிரட்டி மிரட்டி துரத்தித் துரத்திக் காதலிப்பான். அந்தப் பெண்ணை ஒத்துக்க வைக்கிறேன்னு சவாலெல்லாம் விடுவான். அதில் ஜெயித்தும் காட்டுவான். சினிமாவில் பணத்துக்காக நடிக, நடிகைகள் இப்படிப் பொருந்தாத வேடங்களில் நடிக்கின்றனர். அதை நிஜம் என்று நம்பலாமா?  இதைப் பார்க்கும் இளைஞர்கள் தங்களையும் அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். நிஜ வாழ்க்கைக்கும் திரை வாழ்க்கையும் வித்தியாசம் தெரியாமல் செயல்படும் இவர்களைப் போன்றவர்களைத் திருத்தும்படியான திரைப்படங்கள் வந்தால் தான் உண்டு! பெண்ணையும் அவள் விருப்பத்தையும் மதிக்கிறாப்போல் கதாநாயகன் வரணும். அதைப் பார்த்தாவது இந்த முட்டாள் மக்கள் திருந்தணும்!

அதோடு இப்போதெல்லாம் பள்ளிகளில் நீதி போதனையோ நல்லொழுக்கங்களோ கற்றுக்கொடுப்பதில்லை. இவை எல்லாம் என்று நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து குழந்தைகளின் பால் போன்ற மனது கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விட்டது.  குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே நம் கலாசாரங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நம்முடைய மரபுகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். படிக்கும் வயதிலோ அல்லது அதன் பின்னரோ அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்தால் முதலில் உடல் ரீதியான எண்ணங்கள் மனதில் தோன்றாமல் அவளும் நம்மைப் போன்ற ஒரு மனுஷி என்னும் எண்ணத்தைச் சிறு வயதிலிருந்தே ஆண்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.  ஒரு பெண் இன்னொரு ஆணோடு தாராளமாகப் பேசினால் அதைக் காதல் என்று நினைக்கக் கூடாது!  பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்காமல் மனுஷியாகப் பார்க்கக் கற்றுத் தர வேண்டும். ஒரு பெண்ணை நாம் விரும்பினால் அந்தப் பெண்ணும் நம்மை விரும்புவாள் என்று எதிர்பார்க்கக் கூடாது!

முன்னெல்லாம் அக்கா, தங்கை இல்லையா என்று சம்பந்தப்பட்ட ஆண்மகனைக் கேட்பார்கள்! இப்போதெல்லாம் உண்மையிலேயே அக்கா, தங்கை இருப்பதில்லை. ஒரே குழந்தையாகப் போய் விடுகிறார்கள். அதனாலும் அதிகச் செல்லம் கொடுத்துக் கெடுக்கின்றனர் பெற்றோர்.  கேட்டதை எல்லாம் அடைபவனுக்கு ஒரு பெண் தன்னை மறுத்தால் அதைப் பொறுக்க முடியாமல் போகிறது. அந்தப் பெண்ணைப் பழி வாங்கி விடுகிறான். அன்றாடம் தொலைக்காட்சிகளில் இதைத் தானே பார்க்கின்றனர்!  சினிமா மோகம் வேறு பிடித்து ஆட்டுகிறது. கபாலி படத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கறாங்களாம். தலை சுத்துது  எனக்கு!  இதெல்லாம் மாறும் காலமும் வருமா? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, July 19, 2016

குரு பூர்ணிமா பற்றிய சில தகவல்கள்!

இன்றைய தினம் குரு பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி தினம். இது வருடா வருடம் குருமாரை ஆராதித்துக் கொண்டாடப் படுகிறது.  இது முதன் முதல் வியாசரின் புதல்வரான சுகப்பிரம்ம ரிஷியால் செய்யப்பட்டுப் பின்னர் அவர் சீடர் ஶ்ரீசூத முனிவரால் செய்யப்பட்டுப் பின்னர் வழி வழியாக வருவதாகும்.  என்றாலும் ஆதிகுருவாக ஶ்ரீதக்ஷிணாமூர்த்தியும், ஶ்ரீமந்நாராயணனுமே (இருவருமே ஒருவர் தான் :) கருதப்படுவார்கள். இந்த குரு பூர்ணிமா ஒவ்வொரு வருடமும் ஆடி மாசப் பௌர்ணமியில் கொண்டாடப் படும். ஆஷாடப் பௌர்ணமி அன்றே குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.  இதை ஒட்டி சந்நியாசிகள், பரிவ்ராஜகர்கள், பஹூதகர்கள் எனப்படும் துறவிகள் ஆகியோர் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டிக்கத் தொடங்குவார்கள்.

சந்நியாசிகள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருப்பார்கள். குடிசைகளில் தங்கி இருந்து சந்நியாச ஆசிரமத்தைக் கடைப்பிடிப்பவர்களைக் குடீசர்கள் என அழைப்பார்கள். நீர் அதிகம் உள்ள நதிக்கரைகளில் வாழும் துறவிகளை பஹூதகர்கள் என அழைப்பார்கள். இவர்கள் பிக்ஷை  எடுத்தே உண்ணுவார்கள். அடிப்படையில் சந்நியாச ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் ஒன்றே என்றாலும் நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு.  அடுத்துப் பரிவ்ராஜகர்கள்! இவர்கள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் பரிபூரணப் பக்குவ ஞானம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரே ஊரில் தங்குவதும் அங்குள்ள மக்களுக்குப் போதிப்பதும் இவர்கள் வரை சரியானது அல்ல.  ஒரே இடத்தில் தங்கினால் அந்த மக்களிடம் பற்றோ, பாசமோ ஏற்பட்டு விடும் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் குரு, சிஷ்ய பரம்பரையில் தான் வந்திருப்பார்கள்.

பொதுவாக சந்நியாசிகள் மூன்று நாட்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்கக் கூடாது என்பார்கள். என்றாலும் இந்தச் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்தால் மட்டும் ஒரே இடத்தில் தங்குவார்கள். ஏனெனில்இவர்கள் மழைக்காலங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது.  மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதிய செடிகள், துளிர்கள் முளைத்துவரும். புழுக்கள், பூச்சிகள் நிறையக் காணப்படும்.  இவற்றை மிதிக்காமல் நடக்க வேண்டி இருக்கும். சாலைகளின் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கூடப் புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவை மறைந்திருக்கலாம். எவ்வுயிர்க்கும் இல்லல் விளைவிக்காவண்ணம் அஹிம்சை என்பதைப் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பதே சந்நியாச யோகத்தில் முக்கியமானது. ஆகவே சந்நியாசிகளும், துறவிகளும், பரிவ்ராஜகர்களும் இந்த நான்கு மாதங்களில் ஒரே இடத்தில் தங்கித் தங்கள் விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

நான்கு மாதங்கள் என்பது ஆடி மாதப் பௌர்ணமியில் தொடங்கிக் கார்த்திகை மாதப் பௌர்ணமி வரை அனுஷ்டிப்பார்கள். தக்ஷிணாயனம் என்பது தேவர்களின் இரவுக்காலம் என்பதால் இந்த ஆஷாட மாதத்தில் வரும் சுக்லபக்ஷ ஏகாதசியை சயன ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசி அன்று தான் எம்பெருமான் அறிதுயில் கொள்கிறாராம். ஆகவே இந்த ஏகாதசியை ஒட்டியும் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்துச் செய்வது உண்டு. முன்னெல்லாம் நான்கு மாதங்கள் இருந்த இந்த விரதம் இப்போது நான்கு பக்ஷங்கள் ஆகி விட்டது. ஆகவே ஆஷாடப் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கும் சாதுர்மாஸ்ய விரதம் புரட்டாசிப் பௌர்ணமி அன்று முடிவடையும். ஒவ்வொரு பக்ஷத்துக்கும் பதினைந்து நாட்கள் கணக்கு என்பதால் இது இரண்டு மாதம். இதற்கு இன்னொரு காரணமும் கூறுகின்றனர்.

சந்நியாசிகளையும், துறவிகளையும், பரிவ்ராஜகர்களையும் அவர்களுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்து நித்திய கர்மானுஷ்டானங்கள், வழிபாடுகள், பிக்ஷை ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை எந்த ஊரில் தங்கப் போகிறார்களோ அந்த ஊர்க்காரர்கள் தான் செய்வார்கள்.  முதலில் குறிப்பிட்ட துறவியானவர் தான் சாதுர்மாஸ்யத்தை இந்த ஊரில் தான் அனுசரிக்கப் போகிறேன் என அறிவித்ததும் சீடர்கள் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்று வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பார்கள். ஆதலால் தொடர்ந்து நான்கு மாதங்கள் துறவிகள் தங்குவதில் ஒரு சில இடைஞ்சல்கள், இடையூறுகள் இல்லறத்தாருக்கோ, துறவிகளுக்கோ ஏற்பட்டு விடலாம் என்பதால் இதை இரண்டு மாதமாகக் குறைத்ததாகவும் ஒரு கூற்று.

இந்த விரதம் இருக்கும்போது முதல் பக்ஷத்தில் காய்கள், பழங்கள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை உணவில் மட்டுமல்லாமல் நிவேதனமும் செய்யாமல் தவிர்த்து அதற்கேற்ப உணவு சமைத்து உண்ண வேண்டும்.  இந்தச் சமயம் தானியங்கள், எண்ணெய், நெய், பால், தயிர், சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்க்கலாம். அடுத்த மாதத்தில் தயிர், தயிர் சார்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முதல் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம் சாக விரதம் என்றும் இரண்டாவது மாதம் ததி விரதம் என்றும் சொல்வார்கள். மூன்றாவது மாதம் க்ஷீர விரதம். பால், பால் பொருட்கள் தவிர்ப்பார்கள். நான்காவது மாதம் த்விதள விரதம். உதாரணமாகக் கொண்டைக்கடலை, நிலக்கடலை போன்றவை இரண்டு பக்கமும் பருப்பு உள்ள பொருட்கள். அப்படிப் பட்ட பருப்பு வகைகளைத் தவிர்த்தலே த்விதள விரதம். பலரும் மொத்தப் பருப்பு வகைகளையுமே தவிர்ப்பார்கள்.
தக்ஷிணாமூர்த்தி க்கான பட முடிவு


இந்த விரதம் இல்லறத்தாரும் ஏற்பது உண்டு. குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் இந்த விரதம் இருப்போர் பலரைப் பார்த்திருக்கிறேன்.  நம்மால் எல்லாம் முடியாது என்பதால் இந்த விரதம் எல்லாம் இருந்ததில்லை. ஆனால் குரு பூர்ணிமா என்பது மிகவும் சிறப்பான தினம். அனைவரும் அவரவர் குருமாரை வழிபட வேண்டும்.

நாராயணன் க்கான பட முடிவு

ஆதி குருவான தக்ஷிணாமூர்த்திக்கும், ஶ்ரீமந்நாராயணனுக்கும் பின்னர் வியாசரையே முதல் குருவாகக் கொண்டு துறவிகள், சந்நியாசிகள் ஆராதிக்கின்றனர். எல்லா மடங்களிலும் இன்று வியாச பூஜை நடைபெறும். வியாசர் ஆஷாடப் பூர்ணிமா அன்று தான் பிறந்தார். ஆகவே இன்றைய தினம் வியாசருக்கு மகத்துவம் அதிகம். வியாசர் என்ற பெயரில் பலர் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் நமக்கெல்லாம் வேதங்களைத் தொகுத்தளித்த க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரே முக்கியமானவர். அவரே நம் குரு!

வேத வியாசர் க்கான பட முடிவு


கீழே காணப்படும் குரு பரம்பரை ஸ்லோகங்களைச் சொல்லி நம் குருமார்களை வழிபடுவோம். கீழுள்ளவற்றில் முதல் இரண்டும் அத்வைதிகளால் சொல்லப்படுவது! கடைசியில் உள்ளது ஶ்ரீவைஷ்ணவர்களால் சொல்லப்படுவது!

நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்ரம் அதாஸ்ய சிஷ்யம்
ச்ரி சங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திககாரமன்யான் அஸ்மத் குரூன் சந்ததமானதோஸ்மி

முதலில் நாராயணன், பின்னர் அவர் பிள்ளையான பிரம்மா, பின் பிரம்மாவின் பிள்ளையான வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், சுகருக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் அவர் சீடரில் போய் விடுகிறது. கௌடபாதர், கோவிந்த பாதர் என்று போகிறது குருபரம்பரை. அதன் பின்னர் ஆதிசங்கரர் அவர் சீடர்கள் என்று வருகிறது.


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"

இதுவும் அத்வைதிகளால் சொல்லப்படுவதே! சதாசிவ பெருமான் முதற்கொண்டு ஆதி - சங்கராச்சார்யர்  வரை நடுவில் வர வழி வழியாக வந்த
அத்தனை ஆசார்யர்களுக்கும் நமஸ்காரங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"

இங்கே லக்ஷ்மிநாதன் என்றும் ஆரம்பிக்கலாம். அல்லது லக்ஷ்மியும் அவள் நாதனுமான திருமால் என்றும் சொல்லலாம். அதன் பின்னர் நாதமுனிகள்,  ஆளவந்தார் என்று இடையில் வந்து வழி வழியாக வந்த அனைத்து குருமார்களுக்கும் ஆசாரியர்களுக்கும் நமஸ்காரங்கள்.

எங்களுக்கும் ஒரு மானசிக குரு உண்டு. ஏன் மானசிகம் என்று சொல்கிறேன் என்றால் நாங்கள் தான் அவரை குருவாக எண்ணிக் கொண்டு வருகிறோம். ஆனால் அவர் எங்களை விடச் சிறியவர் என்பதால் எங்கள் வயதை முன்னிட்டு எங்களைக் கீழே விழுந்து வணங்குவார். ரொம்பக் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் தவிர்க்க முடியலை! என்றாலும் அவரைத் தான் நாங்கள் குருவாக நினைத்து வருகிறோம். கடைசியாகப் போன வருடம் பெப்ரவரி மாதம் வந்தது. அதன் பின்னர் இருமுறை தொலைபேசியில் அழைத்தார். இரு சமயங்களிலும் நான் பயணத்தில் இருந்தேன். அப்புறம் இன்று வரை தகவல் இல்லை. நண்பர் ஒருவருக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். குரு பூர்ணிமாவில் அவருக்குக் கிடைத்த பரிசும், ஆசிகளும் இந்த அழைப்புத் தான் என எண்ணிக் கொண்டோம்.

பி.கு. குரு பூர்ணிமா குறித்த தகவல்கள் எல்லாம் பல்வேறு புத்தகங்களைப் படித்து எழுதிய தொகுப்பு!Monday, July 18, 2016

ஜெயஶ்ரீக்காக மிளகாய்த் தொக்கு!

முன்னெல்லாம் ஞாயிற்றுக் கிழமை எங்கள் ப்ளாக் படங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு போட்டு வந்தேன். அப்புறமா அது மெல்ல மெல்ல விட்டுப் போச்சு. இப்போ இந்த வாரம் அவங்களுக்குப் போட்டியா "திங்கற" கிழமைக்குப் பதிவு போடலாம்னு ஒரு எண்ணம். அதுவும் இது நேயர் விருப்பம். நம்ம சிநேகிதி நியூசியில் வசிக்கும் ஜெயஶ்ரீ நீலகண்டன் அவங்க மிளகாய்த் தொக்கு செய்முறை பத்தி கேட்டிருக்காங்க! எங்க பொண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அப்புறமா அவளால் அது சாப்பிட முடியாமல் போச்சு! ஆகவே வீட்டில் செய்யறதில்லை. எனக்குக் காரமே ஒத்துக்காது. ரங்க்ஸுக்குப் பிடிக்கவே பிடிக்காது! ஆதலால் மிளகாய்த் தொக்கே பண்ணி வருஷங்கள் பல ஆகி விட்டன. இதுக்குத் தேவையான பொருட்கள் முதலில் பார்ப்போம்.

பச்சை மிளகாய் கால் கிலோ

புளி ஒரு எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கேற்ப

வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது (வெல்லம் கட்டாயம் தேவை)

நல்லெண்ணெய் ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம் இருக்கலாம்.

தாளிக்க 

கடுகு, உ,பருப்பு, பெருங்காயம்

முதலில் பச்சை மிளகாயை நன்கு கழுவி நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் நல்லெண்ணெயில் இருந்து அரைக் கரண்டி நல்லெண்ணெயை அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு சுருள வதக்கவும். மிளகாய் நன்கு வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும். புளியைக் கொஞ்சம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். வதக்கிய மிளகாயோடு உப்பையும் ஊற வைத்த புளியையும் சேர்த்து அரைக்கவும். ஒரு கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டு நன்கு அரைக்கவும். பின்னர் கரண்டியாலேயே அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். (கை எரியும் கையால் தொட்டால்)

பின்னர் மிளகாய் வதக்கிய அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் ஒரு கரண்டி ஊற்றலாம். நன்கு எண்ணெயில் வதங்கணும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும் உளுத்தம்பருப்புச் சேர்க்கவும். பெருங்காயத் தூள் அல்லது கட்டிப் பெருங்காயம் ஊற வைத்தது சேர்க்கவும். மிளகாய் வதக்கும்போதே கூடப் பெருங்காயத்தையும் பொரித்துச் சேர்த்துக் கொண்டு வதக்கிய மிளகாயோடு அரைக்கலாம். கடுகு, உ.பருப்பு தாளித்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். மிக்சி ஜாரில் நீர் விட்டுக் கரைத்திருந்தால் அதையும் ஊற்றலாம். நன்கு கிளறும்போது கெட்டியாகி விடும். நன்கு கெட்டிப் பட்டு வரும் சமயம் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்த்துக் கிளறியதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்போது கீழே எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். தோசை, சப்பாத்தி, மோர் சாதம் போன்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வெல்லம் போடாவிட்டால் காரம் அதிகமாகத் தெரியும். 

Thursday, July 14, 2016

நாரத்தங்காய் சாதமும், பச்சடியும் செய்முறை!

நேயர் விருப்பத்துக்கு ஏற்ப நாரத்தங்காய்ப் பச்சடி மற்றும் நாரத்தங்காய்ச் சாதம் குறித்த குறிப்புகள் கீழே!

நார்த்தங்காய் க்கான பட முடிவு

நாரத்தங்காய்ப் படம் தினகரன் பத்திரிகை கூகிளார் வாயிலாக நன்றி.

நான்கு நபர்களுக்கான நாரத்தங்காய்ச் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்

நாரத்தங்காய் 2 (சாறு நிறைய இருந்தால் ஒன்றே போதும்.)

தாளிக்க நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு இரண்டு டீஸ்பூன்
உ.பருப்பு இரண்டு டீஸ்பூன்
க.பருப்பு இரண்டு டீஸ்பூன்
வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் நான்கு (பொடியாக நறுக்கவும்)
கருகப்பிலை
பெருங்காயம் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சமைத்த சாதம் மூன்று கிண்ணம் அல்லது ஒரு கிண்ணம் அரிசியைக் களைந்து பொலபொலவென்று சாதமாக வடித்துக் கொள்ளவும்.

சமைத்த சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும். நாரத்தங்காயை இரண்டாக நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். விதைகளை நீக்கிவிட்டுச் சாறை மட்டும் சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு எண்ணெயைச் சூடு பண்ணவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும், பருப்பு வகைகளைச் சேர்த்து வேர்க்கடலையையும் சேர்க்கவும். எல்லாம் நன்கு பொரிந்ததும் பச்சைமிளகாய், கருகப்பிலையைச் சேர்க்கவும். இந்தத் தாளிதத்தைக் கலந்து வைத்திருக்கும் சாதக் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். ஒரு பத்து நிமிஷம் வைத்திருந்து விட்டுப் பின்னர் பரிமாறவும்.

நாரத்தங்காய் பித்தமான வயிற்றுக்கும், வாய்க்கும் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். எப்படிப் பட்ட விருந்து சாப்பிட்டாலும் கடைசியில் ஒரு துண்டு நாரத்தங்காயை வாயில் போட்டுக் கொண்டால் ஜீரணம் ஆகி விடும். இனி நாரத்தங்காய்ப் பச்சடி.

இதைக் குறைந்த பட்சமாகப் பத்து நாட்களாவது வைத்திருக்கலாம் என்பதால் உங்கள் தேவைக்கேற்பக் காய்களையும், புளி போன்ற பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு சாறுள்ள நாரத்தங்காய் பொடியாக நறுக்கவும். சாறு இருக்க வேண்டும். விதைகளை மட்டும் நீக்கவும். தனியாக வைக்கவும்.
புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து ஊற வைக்கவும். புளியைக் கரைத்துப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

தாளிக்க நல்லெண்ணெய் (இதுக்கெல்லாம் நல்லெண்ணெய் தான் நன்றாக இருக்கும்.) ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் எட்டிலிருந்து பத்து வரை (அவரவர் காரத்துக்கு ஏற்ப) பொடியாக நறுக்கலாம் அல்லது இரண்டாகக் கிள்ளிப் போடலாம். இரண்டாகக் கிள்ளிப் போட்டால் நாரத்தங்காய்ச் சாறிலும், புளியிலும் ஊறிக்கொண்டு மோர் சாதத்துடன் நன்றாக சுவையாக இருக்கும்.
பெருங்காயம் பொடி எனில் ஒரு டீஸ்பூன் கட்டி எனில் ஒரு சின்னத் துண்டு
மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு

கல்சட்டி அல்லது வாணலியைக் காய வைத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் பச்சை மிளகாய் சேர்க்கவும். பெருங்காயம் போடவும். மஞ்சள் பொடி போட்டுக் கொண்டு நாரத்தங்காய்த் துண்டங்களைப்போட்டு நன்கு வதக்கவும். நாரத்தங்காய் நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி ஜலத்தைச் சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.  நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது கீழே இறக்கி வைக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை, சப்பாத்தி, மோர் சாதம் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். துவையல் சாதம், மோர்க்குழம்பு போன்றவற்றோடும் சாப்பிடலாம்.

நேத்தே பண்ணினதாலே படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுக்கலை. இனி செய்தால் படம் எடுத்துப் போடறேன். :)