எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஜராசந்தனின் சாமர்த்தியமும், தாமகோஷனின் கலக்கமும்!


ஜராசந்தனின் கூற்றை ஒப்புக்கொள்ளும் நோக்கு பிருஹத்பாலனின் முகத்தில் தோன்றியது. அதைக் கண்ட ஜராசந்தன் அவனிடம், “பிருஹத்பாலா, இதோ பார், நீ கேட்டபடி நான் ஒத்துக்கொண்டது உன் சொந்த நன்மைக்காகவே. ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் நீ தான் யுவராஜாவாக ஆகி உன் பாட்டனுக்குப் பின்னர் அரசாளப் போகிறாய் என்பதாலேயே. அதை நினைவில் கொள்.” என்றான். பிருஹத்பாலன் பணிவோடு மெளனம் காத்தான். தனக்குள்ளே பேசிக்கொள்வது போல் ஜராசந்தன் மீண்டும் தொடர்ந்தான். “யார் கண்டது? உன் பெரியப்பன் வசுதேவனும், இந்த அக்ரூரனும் சும்மா இருக்க மாட்டார்கள். உன் வழியில் குறுக்கிட்டாலும் குறுக்கிடுவார்கள். நீ எதற்கும் கவனமாய் இருந்து கொள். அவ்வப்போது எனக்குத் தகவல் கொடுத்து வந்தாயானால் உனக்கு உதவி தேவைப்படும்போது நான் உதவுவேன்.” என்றான். ஜராசந்தன் இவை அனைத்தையும் ஒரு பேரரசன் பேசுவது போன்ற ஆணையிடும் தொனியில் பேசாமல் ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறும் பாணியிலேயே மிகவும் மென்மையாகவும், குழைவாகவும், குரலில் பாசத்தைக் கூட்டியும் கூறிவந்தான். ஆகவே பிருஹத்பாலனால் அவனுடைய உண்மையான கருத்தை அறிந்து கொள்ள இயலவில்லை.

மறுநாள் தன் மந்திராலோசனை சபையைக் கூட்டிய ஜராசந்தன் அதில் பங்குபெறுமாறு அக்ரூரர், பிருஹத்பாலன், கடன் ஆகியோரையும் அழைத்திருந்தான். தன் படைத் தளபதிகளிடம் அவன் கண்ணனும், பலராமனும் நாட்டை விட்டே ஓடிவிட்ட நிலையில் மதுராவின் தாக்குதல் நடத்துவது அபத்தமாய் இருக்கும் என்று தனக்குப் புரிந்துவிட்டதாயும், அதனால் தாக்குதல் வேண்டாம் என்றும் கூறினான். அவனுடைய படைத் தளபதிகளும், அமைச்சர்களும் ஆச்சரியமும், திகைப்பும் அடைந்தார்கள். மன்னனின் இந்தப் பெருந்தன்மையான மனமாற்றம் அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. எனினும் சேதி நாட்டு அரசன் ஆன தாமகோஷன் இதில் ஏதோ உள் விஷயம் இருக்கவேண்டும். அவ்வளவு எளிதில் ஜராசந்தன் விட்டுவிடமாட்டான். ஆகவே இன்னும் வேறே ஏதோ திட்டம் போட்டிருக்கவேண்டும் என்று பரிபூர்ணமாய் நம்பினான். ஜராசந்தன் அவ்வளவு எளிதில் தன் எதிரிகளை மன்னிக்கும் குணம் கொண்டவன் அல்ல என்பதையும் தாமகோஷன் நன்கு அறிந்திருந்தான். ஆகவே அவனுக்கு இந்த முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை. வேறு ஏதோ பெரியதாக நடக்கப் போவதை எதிர்பார்த்தான் அவன்.

ஜராசந்தனோ அறிவிப்போடு நிறுத்தாமல் அக்ரூரையும், பிருஹத்பாலனையும் பார்த்து, “மதுராவின் யாதவர்களோடு நான் நட்பாகவே இருக்க விரும்புகிறேன். அவர்கள் அனைவரையும் நன்கு மதிக்கிறேன். குறிப்பாக உக்ரசேனரையும் அவருடைய பதவியையும் மதித்து வணங்குகிறேன். அக்ரூரா, உன்னைப் போன்றதொரு அருமையான ஆலோசனைகள் சொல்லும் அமைச்சரையும், பிருஹத்பாலனைப் போன்றதொரு வீரனைப் பேரனாய்ப் பெற்றதிலேயும் உக்ரசேனர் பாக்கியசாலி. உங்கள் இருவராலும் மதுரா நகரம் வருங்காலத்தில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் நட்புக் கிடைக்கப் பெற்றதில் நானும் அதிர்ஷ்டம் செய்தவன் ஆவேன்.” என்றான். பின்னர் சற்று நிறுத்தி விட்டு ஆலோசனை செய்பவன் போல் காணப்பட்டன். தாமகோஷனுக்கு இனிதான் முக்கிய விஷயமே பேசப் போகிறான் என்று தோன்றியது. அவன் வரையிலும் அதை எதிர்பார்த்தான். ஜராசந்தன் மேலே பேசத் தொடங்கினான். “அக்ரூரா, மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவுக்குக் கப்பமாவது எதிர்பார்க்கிறேன் நான். மிகப் பெரும் சுமையை ஏற்றவில்லை உங்களுக்கு. நல்ல தரமான நூறு ரதங்களும், இருபத்தைந்து யானைகளும், அதற்குரிய வீரர்களோடு வேண்டும். பலவான்களான இரு மனிதர்களின் எடைக்கு எடை பொன்னும் வேண்டும். இவை எனக்குப் பூர்ணிமைக்குள்ளாக, ஏன் அதற்கு முன்னராக,ம்ம்ம்ம்ம் பூர்ணிமைக்கு இன்றிலிருந்து பத்து நாட்கள் இருக்கின்றனவா? ஓ, அப்போ தேவையான நேரம் இருக்கிறது உங்களுக்கு. அதற்குள்ளாக என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.” சற்றே யோசித்த வண்ணம், “அக்ரூரா, கண்ணனும் பலராமனும் எப்போது வந்தாலும் என்னிடம் ஒப்படைக்கப் படவேண்டியவர்களே. அவர்கள் உயிர் என் கையில். அதை மறவாதே!” என்றான்.

“பேரரசே, நீங்கள் கேட்டிருக்கும் கப்பத்தைக் கொடுக்க முயல்கிறோம். அதுவும் நீங்கள் கேட்டிருப்பதாலேயே கொடுக்கவேண்டும்.” என்றார் அக்ரூரர். “நான் கேட்டால் தான் கொடுப்பீர்களோ? சாமர்த்தியமாய்ப் பேசாதே அக்ரூரா, இப்போது நீ செல்லலாம். எங்கே சால்வன்? சால்வா, நீ இவர்களோடு மதுராவுக்குச் சென்று உக்ரசேனரிடம் இவர்கள் நான் சொன்னதை அப்படியே சொல்கிறார்களா என்பதையும் கவனித்துவிட்டு, அதற்கு உக்ரசேனர் சொல்லும் பதிலையும் பெற்றுக்கொண்டு வா. “ தன் கை அசைப்பால் அந்த மூவரையும் போகச் சொன்னான் ஜராசந்தன். அவர்கள் சென்றதுமே தாமகோஷனைப் பார்த்து, “சேதிநாட்டு மன்னா! நாம் இப்போது அந்த இடைச்சிறுவர்களைத் தேடிச் செல்லவேண்டும். எப்பாடு பட்டாவது அவர்களைப் பிடித்து அவர்கள் தலையை வாங்க வேண்டும். அவர்களைத் தலை வேறு, உடல் வேறாக ஆக்கும் என்னுடைய சபதம் முற்றுப் பெறவில்லை. அதை நான் திரும்ப வாங்கவும் இல்லை. அது அப்படியே இருக்கிறது. எங்கே சென்றுவிடுவார்கள் அவர்கள்? நாம் இப்போது அவர்களை வேட்டையாடச் செல்வோம்.” என்று ஆவேசமாய்க் கூறினான்.

அங்கே இருந்த விதர்ப்ப இளவரசன் ஆன ருக்மி உடனே தயாரானான். “ஆம், அரசே, அந்த இடைச்சிறுவனை உடல் வேறு, தலைவேறாக்கிவிட்டுத் தான் மறு வேலை. உடனே கிளம்புவோம் நாம்.” என்று உடனுக்குடனே தயாரானான். ஆனால் தாமகோஷனோ? வேறு வழியில்லாமல் ஜராசந்தனோடு கூட்டுச் சேர்ந்த அவனுக்கு ஜராசந்தனின் வேண்டுகோளைத் தான் மறுத்த அடுத்த கணமே தனக்கு முடிவு நேரிடும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தான். எனினும் இந்த விபரீத விளையாட்டைத் தொடரும் எண்ணமும் இல்லை. தள்ளிப் போடும் எண்ணத்தோடு, சற்றே யோசனையோடு அவன் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டான். கப்பமாய் வரும் நூறு ரதங்களிலிருந்து பொறுக்கி எடுத்த இருபத்தைந்து ரதங்களோடும் ஐம்பது வீரர்களோடும் செல்லலாம் என ஜராசந்தன் திட்டம் தீட்டினான். மேலும் தாமகோஷனுக்கு வர முடியவில்லை எனில் அவன் மகனும் சேதிநாட்டு இளவரசனும் ஆன சிசுபாலனை அனுப்புமாறும் கூறினான். கப்பம் வந்த்தும் இங்கிருந்து செல்லலாமே என தாமகோஷன் கூறியதற்குத் தான் ஏற்கெனவே கரவீரபுரத்திற்குத் தன் நம்பிக்கைக்கு உகந்த தன் வீரத் தளபதிகளில் ஒருவனை அனுப்பி இருப்பதாயும், அவன் ஸ்ரீகாலவ வாசுதேவனோடு பேசிக் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பான் என்றும் கூறினான். தாமகோஷன் தன் மைத்துனனும், கண்ணனின் சித்தப்பனும் ஆன தேவபாகனின் குமாரன் ஆன பிருஹத்பாலன் முட்டாள் தனமாக ஜராசந்தனிடம் உளறி இருக்கிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்து கொண்டான். மேலும் ஜராசந்தன் தன்னை இந்தத் திட்டத்திலிருந்து ஒதுக்கப் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். என்னதான் சேதிநாடு சுதந்திர நாடாக, மகதத்தின் ஆளுமைக்கு உட்படவில்லை எனினும், அவன் படைகள் ஜராசந்தனுக்கு ஊழியம் செய்யத் தான் உடன்படவில்லை எனில் தன் கதி அதோகதிதான் என்பதும் புரிந்தது. சேதிநாடும் மகதம் போல் ஆகவேண்டும் என தாமகோஷன் உள்ளூர விரும்பினாலும் கண்ணனோ, பலராமனோ தலை எடுத்துத் தலைமை தாங்குவதில் அவனுக்கு எந்த ஆக்ஷேபணையும் கிடையாது. சொல்லப் போனால் அம்மாதிரியான ஒரு தலைமை தனக்கு உதவியாகவே இருக்கும் என்றும் நம்பினான்.

ஜராசந்தனைக் கொடூரமான பழிவாங்கும் செயலில் இருந்து தன்னால் ஓரளவாவது தடுக்க முடியும் என்று எண்ணியதாலேயே இந்தப் படை எடுப்பில் அவன் தன் படைகளையும் இணைத்துக்கொண்டான். எவ்விதமேனும் ஜராசந்தனின் மனப்போக்கையும், படைகளின் தாக்குதலையும் தடுத்து மதுராவையும், அதன் தலைவர்களையும், அங்கே இருக்கும் தன் உறவினர்களையும், தன் மனைவியின் உறவினர்களையும் காக்கவே எண்ணினான். ஆனால்?? அவன் எண்ணம் வீணாகிவிட்டது. முடியாது, முடியாது. மதுரா அழிந்து போகும்படியாக தாமகோஷனால் நினைக்கவே முடியாது. அவன் மைத்துனன் ஆன வசுதேவனின் இரு குமாரர்களும் அழிந்து போகவேண்டும் என்றும் தாமகோஷனால் நினைக்கக் கூட முடியாது. நடு நிலையைக் காக்கவும், நடுநிலையாக நடக்கவும் வேண்டியே அவன் மகத நாட்டு அரசனை மாற்றும் எண்ணத்தோடு இந்தப் படையில் சேர்ந்து கொண்டான். எவ்விதத்திலும் மகதத்திற்குச் சேதி நாடு கட்டுப்படவில்லை. ஆனால்?? சிசுபாலன்? இதை ஏற்பானா? அவன் மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் பெயருக்கும், புகழுக்கும், வீரத்துக்கும் அவன் திறமைக்கும், திட்டமிடும் போக்கிற்கும் மயங்கிக் கிடக்கிறானே? என்ன செய்யலாம்???

Monday, June 28, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

பிருஹத்பாலனின் ஆசை!

பிருஹத்பாலனின் மனம் ஜராசந்தனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் அளவுக்குக் கசிந்து உருக ஆரம்பித்திருந்த்து. ஜராசந்தனின் கேள்விக்குப் பதிலாய் அவன் தன் பாட்டனுடன் இருந்து வந்ததாய்த் தெரிவித்தான். தன் தாயும் கூட இருந்து பாட்டனைக் கவனித்துக் கொண்டதாயும் தெரிவித்தான். பிருஹத் பாலனின் இளக்கமான மன நிலையை நன்கு கவனித்துக்கொண்ட ஜராசந்தன் அவனிடம்,”நீ உன் பாட்டனுக்கு மிகவும் பிரியமான பேரன் என்று கேள்விப் பட்டேனே? மகதத் தலைநகரம் கிரிவிரஜத்துக்கு ஒரு முறை நீ விஜயம் செய். மதுராவுக்கும், எங்கள் மகதத்துக்கும் உள்ள உறவுகள் பலமடையும்.” என்று மிக மிக மென்மையான குரலில் கூறினான். பிருஹத்பாலனுக்கு இந்த முகஸ்துதி மிகவும் பிடித்திருந்தது. கண்ணன் வரும் முன்வரையிலும் அனைவரும் அவனையே பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணன் வந்தான், ஓரிரவில் அனைத்தும் மாறிவிட்டதே! கடைசியில் நம்மைப் புரிந்து கொண்டவன் ஒருவனாவது இருக்கிறானே? ம்ம்ம்ம்ம் இதுதான் சமயம், நம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள. எங்கிருந்தோ வந்த கண்ணனை மதுராவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்டு ஆட்சி புரிந்து வா எனக் கேட்ட யாதவத் தலைவர்கள் என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லையே!

உண்மையில் நானல்லவோ இந்த ஆட்சிக்கு உரிமை பெற்றவன். தாத்தா அவர்கள் என்னையல்லவோ அழைத்திருக்கவேண்டும்? போகட்டும், இப்போது அந்தப் பொல்லாத வாசுதேவ கிருஷ்ணன் ஊரை விட்டு, நகரை விட்டு, நாட்டை விட்டே ஓடிவிட்டான். அதுவும் நன்மைக்கே. நம் எண்ணத்தை இப்போது இதோ, இந்த ஜராசந்தன் மூலம் நிறைவேற்றிக் கொள்வோம். இதுதான் சரியான சமயம் நம் எண்ணத்தைச் சொல்வதற்கு, இந்த ஜராசந்தனோ நம்மிடம்மிக மிக நட்போடு பழகுகிறான். யார் கண்டது? நம் தலைமையில் மதுரா நகரும், அதன் மக்களும் பெரும் புகழையும், செல்வத்தையும் செல்வாக்கையும் அடையப் போகிறார்களோ என்னமோ? நம் மூலம் இவை எல்லாம் நிறைவேறவேண்டுமோ என்னமோ? மாமன் கம்சனைப் போல, இல்லை, இல்லை, அவனையும் விடச் சிறந்ததொரு அரசனாக ஆட்சி புரியலாம். ஆஹா, பிருஹத்பாலனின் கனவுகள் விரிந்தன. ஜராசந்தனைப் பார்த்துப் பணிவோடும், வணக்கத்தோடும் பேச ஆரம்பித்தான்.

“பேரரசே! மதுராவும், அதன் யாதவத் தலைவர்களும், மக்களும் அனைவரும் உங்களுக்குப் பூரண விசுவாசத்தைக் காட்டுகிறோம். அதில் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்.” பின்னர் மெதுவாக, மிக மிக மெதுவாக அவன் கூறிய சில வார்த்தைகள், அக்ரூரரைப் பொய்யர் என்று சொல்லும்படியாக அமைந்தன. தனக்குள் சிரித்துக்கொண்ட ஜராசந்தன், “ ஆம், ஆம், குழந்தாய், அந்தக் கோழைகள் இருவரும் தான் ஓடிவிட்டனரே!” ஜராசந்தன் பிருஹத்பாலனின் கண்களில் தெரிந்த பேராசையைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டான். பிருஹத்பாலனோ, ஜராசந்தன் தன்னை நம்பிவிட்டதாய் நினைத்துக்கொண்டான். ஆஹா, இப்போது மட்டும் ஜராசந்தனின் தாக்குதலை நாம் நிறுத்திவிடவேண்டும். நட்பாகப் போய் நாம் ஜராசந்தனின் தாக்குதலை நிறுத்தினால் இரட்டை ஆதாயம். ஜராசந்தனின் நட்பும்கிடைக்கும். யாதவத் தலைவர்களும் வாசுதேவக் கிருஷ்ணனால் கூட முடியாத ஒன்றை பிருஹத்பாலன் சாதித்து வந்துவிட்டான் எனப் பெருமையாகப் பேசுவார்கள். அருமையான சந்தர்ப்பம். அனைவர் மத்தியிலும் தான் ஒரு முக்கியமான வீரனாக மதிக்கப் பட்டுப் புகழப் படுவோம் என நினைத்தான் பிருஹத்பாலன்.

ஜராசந்தனைப் பார்த்து, “அந்த இடைச்சிறுவர்கள் இருவரும் தான் கோழைகளாய் ஓடிவிட்டனரே? தாங்கள் தயவு கூர்ந்து, கருணை காட்டி, மதுராவின் மேல் தாக்குதல் நடத்தாமல் இருந்தால்………………..” தயங்கிக்கொண்டே இழுத்தான் பிருஹத்பாலன். ஜராசந்தனோ,” ஆம், ஆம், நான் முதலில் மதுராவை நாசம் செய்துவிடலாம் என்றே எண்ணினேன். ஆனால் உன் போன்றதொரு வீரனை, இளைஞனைப் பார்த்ததும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆஹா, இந்த மதுரா நகருக்கு நீ மட்டும் அரசனாக இருந்தால்??? ஆஹா, எவ்வளவு பொருத்தமாய் இருக்கும்? ஆம், ஆம், நீதான் மதுராவுக்கு ஏற்ற தலைவன்.” கிராமங்களில் விவசாயிகள் வானத்தின் மேகங்களின் நகர்வைக் கொண்டே மழை வருமா, வராதா என அநுமானிப்பதைப் போல் தெள்ளத் தெளிவாக பிருஹத்பாலன் மனதைப் படித்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் சட்டெனத் தன் ஆசனத்திலிருந்து எழுந்து ஜராசந்தனை வணங்கினான்.

“பெருமதிப்பு வாய்ந்த சக்கரவர்த்தியே! ஆஹா, நீங்கள் மட்டும் மதுரா நகரை விட்டு வைத்தால், உங்களிடம் மதுராவை விட்டுவிடுமாறு பிச்சை கேட்கிறேன். ஆம், என் மாமன் ஆன அக்ரூரர் சொன்னதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எங்கள் அனைவரின் வேண்டுகோளையும் அனைவர் சார்பாகவும் அவர் இங்கே அறிவித்திருப்பாரே? நீங்கள் மட்டும் இதற்குச் சம்மதித்தால் அளவற்ற நன்றி கொண்டு இருப்பேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி பூண்டவனாக இருப்பேன். நான் இன்னும் அரச பதவியில் அமரவில்லைதான். ஆனால் என் பெரியப்பா வசுதேவர் ஷூரர்களின் தலைவராக இருக்கிறார். அவரின் இரு குமாரர்களும் ஓடிவிட்டனர். என் பாட்டனுக்கு என்னை விட்டால் வேறு பேரன் எவரும் இல்லை. மேலும் என்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என் பாட்டன்.” அவசரம், அவசரமாக பிருஹத்பாலன் பேசியது தனக்குத் தானோ என்னும்படி தோன்றினாலும் எவ்வாறேனும் மகதச் சக்கரவர்த்தியைத் திருப்தி செய்ய எண்ணுவதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

கெட்டிக்காரனான ஜராசந்தன் பிருஹத்பாலனை நன்கு புரிந்து கொண்டான். அவன் மனம் யாதவர்களின் நலனுக்கும், தன் சுய லாபத்துக்கும் இடையில் ஊசலாடுகிறது என்பதைக் கண்டான். அவன் சுயலாபத்தைத் தூண்டிவிடும் வகையில் மேற்கொண்டு பேசினான் ஜராசந்தன். “பிருஹத்பாலா, நீ மட்டும் மதுராவின் பட்டத்து இளவரசனாக இருந்தால்???? ஆஹா, நாம் நினைப்பது எல்லாமேவா நடக்கிறது? பார்க்கலாம், ஆனால், யாருக்குத் தெரியும்? ம்ம்ம்ம்? நீ பட்டத்து இளவரசனாக ஆகிவிடலாம்.” யோசிப்பவன் போல் பேசினான் ஜராசந்தன். பிருஹத்பாலனோ தன் நோக்கத்தைக் கூறி அதற்கேற்றாற்போல் பேரம் பேசிக்கொள்ளும் சமயம் வந்துவிட்டது என்றே நினைத்தான். தன்னுடைய ராஜதந்திரத்தை நினைத்து தானே மெச்சிக்கொண்டான் அவன். ஒரு கை தேர்ந்த அரசியல் சாணக்கியனால் கூட முடியாத ஒன்றை நாம் நடத்திக் காட்டப் போகிறோம் என்று எண்ணினான் அவன். “அரசர்க்கரசே, மதுராவை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். பிறகு பாருங்களேன், தாங்கள் நினைத்தது கை கூடும்.” ஜராசந்தனோ பிருஹத்பாலனின் முட்டாள் தனத்தை நினைத்து உள்ளூரச் சிரித்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியே தான் மிகவும் நட்போடு இருப்பதாய்க் காட்டிக்கொண்டான். யோசிப்பவன் போல, “ம்ம்ம்ம்ம்??? அது நல்ல யோசனைதான், ஆனால் அந்தக் கிருஷ்ணன் வந்துவிட்டானென்றால்???” என்று கேட்டான்.

“கிருஷ்ணனா? அவன் ஒரு போதும் வர மாட்டான் அரசே! அவனால் வர முடியாது” திட்டவட்டமாய்த் தெரிவித்தான் பிருஹத்பாலன். “ஏன் வரமாட்டான்? அவனால் எவ்வளவு தூரம் சென்றிருக்க முடியும்?? இங்கே தான் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று பீஷ்மரின் உதவியைக் கேட்டிருப்பான்.” என்றான் ஜராசந்தன். அவசரம், அவசரமாக மறுத்தான் பிருஹத்பாலன். “இல்லை, இல்லை, கிருஷ்ணனால் வரவே முடியாது. அவன் தெற்கே வெகு தூரம் சென்றுவிட்டான்.”

“ம்ம்ம்ம்?? அங்கே???”

“எங்கேயோ தூரத்தில்!”

“நர்மதை நதிக்கரையின் காடுகளில் ஒன்றில் புகுந்துவிட்டானோ?”

“இல்லை, இல்லை, ம்ம்ம்ம்ம்?? கோமந்தகம் தாண்டி…..” இழுத்தான் பிருஹத்பாலன். நம்மை நம்பி,ஒரு பொருட்டாய் மதித்து இவ்வளவு தூரம் பேசும் ஒரு மஹா சக்கரவர்த்தியிடம் எப்படி பொய் சொல்வது? உண்மையும், சொல்லாமல், பொய்யும் சொல்லாமல் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டான். ஆனால் ஜராசந்தன் அதை லக்ஷியம் செய்து கேட்காதவன் போலவே காட்டிக்கொண்டான். “ஓஹோ, அங்கே கரவீரபுரம் சென்றிருக்கிறானோ?” என்று ரொம்பவும் அலட்சியமாய்க் கேட்பது போல் கேட்டான். அவன் கேட்ட தொனியில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது போல் காட்டிக்கொண்டான். பிருஹத்பாலன் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் குழம்பினான்.

Sunday, June 27, 2010

தேர் நிலைக்கு வந்தாச்சு, இனிமே எப்போவோ!

என்னவோ பிரார்த்தனை மாதிரி ஒரு மாசமா சனி, ஞாயிறுகளில் வெளியே கிளம்பறாப்போல் ஆயிடுது. முதல்லே கண் ஆஸ்பத்திரி விஜயம். அங்கே நடந்த ஆச்சரியங்களினால் வாய் அடைச்சுப் போய் வந்தால் வழியிலே இந்த சூப்பர் சிங்கர் விளம்பரங்கள். அட ஒரு இரண்டு மாசம், மூணு மாசம் வெளியே வரலைனா உலகம் இவ்வளவா மாறும்?? ஆச்சரியமா இருந்தது. இப்படிக்கூட தொலைக்காட்சி வெறி பிடிச்சு அலைவாங்களானு. அன்னிக்குத் தான் முதல்லே ஏ.சி. பஸ் பிரயாணம். இல்லை, இல்லை, ஏ.சி. பஸ் போயிருக்கேன் தான், ஆனால் எல்லாம் தொலைதூரப் பயணம். அன்னிக்குப் போனது நரகப் சீச்சீ, நகரப் பேருந்திலே ஏ.சி. பேருந்து. வேளச்சேரியிலே இருந்து அம்பத்தூர் தொழில்பேட்டைக்கு வந்துட்டு இருந்தது. வடபழநி சிக்னலில் நின்னுட்டு இருந்தது பேருந்து. சரினு ஏறிட்டோம். மற்றபடி ஸ்டாப்பிங்கிலே நின்னுட்டு இருந்தால் என்னாலே நிச்சயமா ஏற முடியாது. ஏறும்போதே விசில் கொடுத்துடுவாங்களே! அட விசிலை எனக்குக் கொடுக்க மாட்டாங்க, பேருந்து கிளம்பக் கொடுத்துடுவாங்கனு சொன்னேன். பிரயாணம் அன்னிக்கு வெகு சுகம். போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை. அங்கே இருந்து அம்பத்தூருக்கும் செளகரியமா சொகுசுப் பேருந்து கிடைச்சதா? அலுப்பே தெரியலை. அதான் போலிருக்கு திருஷ்டி, பயங்கர திருஷ்டி.

போனவாரம் வேறே ஒரு விஷயத்துக்காகத் தரமணி போனோமா? தரமணிக்கு ரயிலில் போகணும்னு முடிவு பண்ணியாச்சு. தரமணிக்குப் போக சென்னைக் கடற்கரை போயிட்டு அங்கே இருந்து வேளச்சேரிக்குப் போகும் ரயிலில் போகணும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் செல்லும் தொடர் வண்டிகள் அவை. நான் அந்த வண்டிகளிலே போனதே இல்லை. அன்னிக்குத் தான் முதல் முறையாகப் பிரயாணம். பாலத்தில் மேஏஏஏஏஏஏஏஏஏலே ரயில் வண்டிகள் செல்கின்றன. ஸ்டேஷனும் நல்ல உயரத்தில் இருக்கா? கீழே பார்க்கவே கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாத் தான் இருந்தது. ஆனாலும் ஒரு த்ரில். முதல்முறைங்கறதாலே பட்டிக்காட்டான் ஆனையைப் பார்த்தாப்போலனு வச்சுப்போமே. இப்போவும் ஆனையைப் பார்க்கிறது அப்படித் தான்கிறது வேறே விஷயம். சென்னை மெரினா கடற்கரை அங்கே இருந்து நல்லாத் தெரிஞ்சது. அப்படியே அருகே இருந்த குடி இருப்புகள். அதைப் பார்த்தால் தான் வயித்தெரிச்சல். எப்படி எப்படி எல்லாமோ வீடுகள் கட்டிக்கொண்டு எந்த எந்தச் சந்து பொந்துகளில் எல்லாம் மக்கள் இருக்காங்க?? ஆஹா, நாம் சொர்க்கத்தில் இருந்துண்டு இதைக் குறை சொல்றோமேனு எனக்கே வெட்கமாப் போச்சு. அதைப் பார்த்தால் நிஜம்மாவே கண்ணில் நீர் வந்துடுச்சு. வழி நெடுக இப்படியே பார்க்க நேர்ந்தது.

ஆனால் பிரயாணத்தில் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. ஏனெனில் கூட்டம் அவ்வளவாய் இல்லை. குறைந்த கூட்டமே. திருமயிலையில் கொஞ்சம் ஏறினாங்க. திருவான்மியூரில் இறங்கிட்டாங்க. என்றாலும் விரல் விட்டு எண்ணறாப்போல் தான் மக்கள். பெண்கள் தனியா இந்த வண்டிகளில் பிரயாணம் செய்வது பாதுகாப்பா என்ற கேள்வி தோன்றியது. ஸ்டேஷன்களும் பிரம்மாஆஆஆஆஆஆண்டம் என்றால் அப்படி ஒரு பிரம்மாண்டம். பிரமாதமான வசதிகள். கழிப்பறைகளும் கட்டிட்டு அதை எல்லாம் நல்ல பெரிய திண்டுக்கல் பூட்டு, அலிகர் பூட்டு, அதைத் தவிர கோத்ரெஜ் பூட்டு எல்லாம் போட்டுப் பூட்டி வச்சிருக்காங்க. ஆண்களுக்கான கழிப்பறைதான் திறந்திருக்கு. அதுவும் உள்ளே எட்டிப் பார்க்க முடியும் நிலையில் இல்லைனு சொன்னாங்க. ஏன் பெண்களுக்கு இயற்கை உபாதை வராதா? அவங்களுக்குத் தேவை இல்லையா? அதோட கீழே இறங்க அந்த நடைமேடைகளிலே எந்தப் பக்கம்னு பார்த்து அதிலே வழி கண்டு பிடிச்சு இறங்கணும். எஸ்கலேட்டர் வேறே வச்சு இருந்திருக்காங்க. நல்லவேளையா அது இப்போ வேலை செய்யலை. படிகளோ கலங்கரை விளக்கப் படிகள் போல சுத்திச் சுத்திப் போறது. நம்ம ரங்க்ஸ் கீழே இறங்கிட்டுத் திரும்ப எப்படிப் போகறதுனு சில இடங்களில் முழிச்சார். அந்தப் படிகளில் இறங்கிக் கீழே வந்து வெளியே வந்தால் அத்துவானம்! முக்கியச் சாலைக்கு வரப் பத்து நிமிடங்களாவது நடக்கணும். நல்லவேளையா நம்ம ரங்க்ஸ் கூட வந்தாரோ, பிழைச்சேனோ.

நேத்திக்குப் பாருங்க வெளியே கிளம்பினா, கிளம்பறச்சேயே ரெண்டு பேரும் கத்தியை எடுக்கலாமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டோம். எங்களுக்குள்ளே இடி இடிச்சு, மழை பெய்யறதுக்குள்ளே மானம் இடிக்க ஆரம்பிச்சதா? சரினு புத்திசாலித் தனமா நெட்டை டிஸ்கனெக்ட் பண்ணி வச்சேன். சும்மா இருக்காம ரங்க்ஸ் கிட்டே அதைப் பத்திச் சொல்ல, அவருக்கு என்னமோ மூட் அவுட்டா? ரொம்ப சந்தோஷம்னு எரிந்து விழுந்தார். சரி, இப்போப் பேசக் கூடாதுனு வாயை மூடிண்டேன். போகாமல் இருந்துடலாமானு ஒரு சின்ன சபலம். ஆனால் வரேன்னு தொலைபேசிச் சொல்லியாச்சு. கட்டாயம் போகவேண்டிய உறவினர்கள் வீடு. சரினு பேசாம நடையைக் கட்டினேன். பூட்டை வீட்டிட்டு, ச்சீச்சீ,(இந்த மாது டிராமா தாக்கம் திடீர்னு) வீட்டைப் பூட்டிட்டு அவர் வண்டியை எடுத்துண்டு வந்தாரா? வண்டியிலே அம்பத்தூர் பேருந்து நிலையம் போனோமா? போக வேண்டிய இடத்துக்குப் பேருந்தில் தான் போயாகணும். அவர் வண்டியை வைக்கப் போனாரா? பூ வாங்கணும்னு நான் பூக்கடை கிட்டே நின்னேனா? அப்போ ஒரு வண்டி வந்திருக்கு. நான் பார்க்கலை.

அவர் வண்டியை வைச்சுட்டு வரும்போதே கையைக் காட்ட, நான் பூக்கடையைக் காட்டக் கடைசியில் பூக்கடைக்கு அவர் வரவேண்டியதாப் போச்சு. நின்னு, நிதானமாப் பூ வாங்கற வரைக்கும் பேருந்து நிக்காதே? அது போய் இன்னொண்ணும் வந்தாச்சு. அது வெஸ்டிப்யூல் வண்டி. முன்னாலே ஏறப் போனவளை ஏறாதேனு சொல்லிட்டுப் பின்னாடி போய், ''ஏம்பா? உட்கார இடம் இருக்கா? வயசானவங்க, நிக்க முடியாது!" னு சொன்னாரோ இல்லையோ? தூக்கிவாரிப் போட்டுடுத்து எனக்கு. யாரைச் சொல்றார் வயசானவங்கனு?? தன்னைத் தானே? ஆனால் கை என்னமோ என்னை இல்லை காட்டுது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும். இந்த வண்டியே ஏறக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். நல்லவேளையாக் கண்டக்டர் காதிலேயே வாங்காமல் விசில் கொடுக்கவே வண்டியும் கிளம்பிடுச்சு. அவர் ஏறப் போனவர் நான் ஏறலைனு தெரிஞ்சு திரும்பி வந்தார். என்ன? அவர் ஏறி இருந்தா நான் பேசாம வீட்டிற்குப் போயிருக்கலாம்தான். ஆனால் சாவி அவர் கிட்டே இருந்தது. வழக்கம்போல் நான் ஹாண்ட்பாக் கொண்டு வர பயங்கர எதிர்ப்பைத் தெரிவிக்க கையிலே பைசாக் கூட இல்லை. திரும்பிப் போனாலும் அக்கம்பக்கம் எங்கேயாவது தான் அவர் வர வரைக்கும் உட்காரணும். அண்ணா கூட ஊரில் இல்லை. அடுத்த பஸ்ஸுக்கு வந்து நின்னோமோ, இல்லையோ, ஆரம்பிச்சது ரெண்டு பேருக்கும்.

உன்னாலே தான்.

இல்லை உங்களாலே தான்.

நான் தான் ஏறுனு சொன்னேனே? நீ தான் பூ வாங்கப் போயிட்டே? நெசப்பாக்கத்தில் பூவே கிடைக்காதா என்ன?

இங்கே நல்லா இருக்கும் பூ. நெருக்கமாத் தொடுத்து இருப்பாங்க. அங்கே தள்ளித் தள்ளித் தொடுத்திருக்கும்.

உனக்கு இன்னும் மதுரையிலே இருக்கற நினைப்புப் போகலை. மதுரையிலே வாங்கினாப்போல் இங்கெல்லாம் கிடைக்காது.

இப்போ எதுக்கு மதுரையை இழுக்கறீங்க? நீங்க சொல்ல வேண்டியது தானே? பூ வாங்காதேனு. நான் வந்திருப்பேனே?

எங்கே? நீ நடந்து வரதுக்குள்ளே அந்த பஸ் போயிடுத்து. அதிலே கூட்டமே இல்லை.

மனசுக்குள்ளே நல்லவேளையா அந்த பஸ்ஸிலே நாம ஏறலை, கையிலே ஒரு பைசாக் கூடக் கிடையாதுனு தோணிச்சு. ஹோட்டல்னாலும் மாவாட்டிட்டு வந்துடலாம். பஸ்ஸிலே என்ன பண்ணறது? அதுக்குள்ளே அங்கே ஷேர் ஆட்டோக்காரங்க மொய்க்க ஆரம்பிச்சாங்க. அதிலே உட்கார முடியாதுனு தெரியும், அதனால் பேசாமல் இருந்துட்டார். ஆனால் அடுத்து வந்தது பாருங்க டாட்டாவோட புது டாக்சி. அது வரவும் அதிலேயும் அவங்க பில்லர் போறோம்னு சொன்னதும் ஏறுனு ஆனை, சீச்சீ, ஆணை! எங்கே ஏறறது? அது என்னமோ கைலை யாத்திரைக்குப் பரிக்ரமா போன குதிரையை விட உயரம். படியெல்லாம் இல்லை. குதிரையிலே தாவி ஏறுகிறாப்போல் ஏறணும். உள்ளே இருந்த முசல்மான் பெண்ணுக்கு எனக்கு உதவணும்னு எண்ணம் ஆனால், அவங்களையும் சேர்த்துக் கீழே நான் இழுத்துடுவேனோனு ஒரு எண்ணம். அப்புறமா அவங்க திரும்ப ஏறணுமே? பயந்துட்டாங்க. ஒரு மாதிரி, ஒரு மாதிரி தான் என் காலை வச்சுண்டு ஏறிட்டேன். இடது காலைக் காணோமே? அப்புறம் பார்த்தா ஒரு காலைத் தான் வச்சு ஏறி இருக்கேன் போல. மெல்ல இடது காலை மேலே கொண்டு வந்தேன். அது சண்டித் தனம் ஜாஸ்தி பண்ணும். மெல்ல சமாதானப் படுத்தி மேலே வந்து உட்கார்ந்தாச்சு.

போனாங்க, போனாங்க, போனாங்க, மெதுவாஆஆஆஆஆஆஆஆப்போனாங்க. ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிறுத்தி நிதானமாக் கூப்பிட்டு, தேர் கூடச் சீக்கிரமாய்ப் போயிடும். அண்ணா நகர் வரச்சே லேசாத் தூறல். திருமங்கலம் தாண்டும்போது பயங்கரக் காற்று. வண்டியே தூக்கிடுமோனு தோணிச்சு. நல்ல வேளையா காத்திரமா நாங்க உட்கார்ந்திருந்ததாலே வண்டிக்கு ஒண்ணும் ஆகலை. திருமங்கலம் தாண்டினதும் மழை கொட்ட ஆரம்பிச்சது. கொட்டறதுனா நிஜம்மாவே வானம் பொத்துக்கொண்டு கொட்டுது. காற்று ஒரு பக்கம். மழை இன்னொரு பக்கம். முதல்லே சாரல் அடிக்கலை. அப்புறமாச் சாரல் ஜாஸ்தியாச்சு. இந்த வண்டியிலே ஜன்னல் மாதிரித் தான் இருக்கு. அதுக்கு மூட ஒரு கித்தான் தான் ஜிப் வைச்சு. அதை இழுத்தால் மழையிலே ஒண்ணும் பண்ண முடியலை. கொண்டு போன புதுத் துணிகள் நனையாமல் இருக்க ரங்க்ஸ் கிட்டேக் கொடுத்து வச்சேன். இறங்க வேண்டியவங்களுக்கு எங்கே இருக்கோம்னு புரியலை. அதுக்குள்ளே சாலைகளிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே அந்த நூறடி சாலையிலே வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பிச்சது. எல்லாரும் இறங்கியாச்சு, நாங்க ரெண்டு பேர்தான் பில்லர்லே இறங்கணும். டிரைவர் கிட்டே அவருக்கு உதவியாக வந்த ஆள் இவங்க நெசப்பாக்கத்திலே இறங்கணுமாம். அங்கே கொண்டு விடுனு கேட்டுப் பார்த்தார். டிரைவர் ஒத்துக்கலை. உதயம் தியேட்டர் கிட்டே இறக்கிவிட்டுட்டார். மழை கொட்டிட்டு இருக்கு. அங்கே இருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழல் குடையில் ஒரு நூறு பேர் இருந்தாங்க. நூற்றி இரண்டாவதாக நாங்க போயும் ஒண்ணும் முடியலை. அங்கே நின்னுட்டு இருந்த ஆட்டோவைப் பிடிக்கலாம்னா ஆட்டோக்காரரைக் காணோம்.

மெல்ல மெல்ல விசாரித்துப் பக்கத்து டீக்கடையிலே டீ குடிச்சுட்டு இருந்த ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு வீட்டு விலாசம் சொல்லிக் கொண்டுவிடச் சொன்னோம்.அப்போவும் மழை. வீட்டுக்குள்ளே போய் அவங்க வீட்டு ஹாலை எல்லாம் ஈரமாக்கிட்டு உட்கார்ந்தோமா! மழை சொல்லி வச்சாப்பல நின்னது. இப்போ வெள்ளம் வீட்டுக்குள்ளே எங்க உடைகளிலே இருந்து ஓட ஆரம்பிக்க, தாங்காதுனு வேறே துணி கொடுத்து மாத்திக்கச் சொன்னாங்க. அப்புறமாப் பேசி முடிச்சுட்டுக் கிளம்பினோம். மறுபடி பில்லர். அங்கே மீண்டும் அதே டாட்டாவின் டாக்சி வர, நான் மறுக்க, ஒரு கோயம்பேடு வண்டி வர, அதிலே ரங்கு ஏறக் கையிலே பைசா இல்லாத நானும் அலறிப் புடைச்சுண்டு கூடவே ஏறினேன். வண்டியிலே நல்லவேளையா ஒரு பையர் எங்க முகத்தைப் பார்த்துட்டு என்ன நினைச்சாரோ எழுந்து இடம் கொடுத்துட்டார். ரெண்டு பேருக்கு, இரட்டை சீட்டாய்க் கிடைக்கவே குஷியில் ஆழ்ந்து போனேன். ஆனால் பாருங்க, அங்கே தான் விதி சிரித்தது. பலமாய்ச் சிரித்தது.

வண்டி ஊர்வலம் ஆரம்பிச்சது. ஹிஹிஹி, நிஜம்மா ஊர்வலம்தான் எங்க கல்யாணத்திலே ஊர்வலத்திலே நானும் உட்காரலைனு எங்க மாமியாருக்கு வருத்தம். அதைப் போக்கவோ என்னமோ தெரியலை, ஏழு மணிக்கு உட்கார்ந்தோம் அந்த வண்டியிலே பில்லர் தாண்டி நூறடி சாலைக்கு வர எட்டு மணியாச்சு. அப்புறமா அங்கே இருந்து வடபழநி வர ஒன்பது மணியாச்சு. எங்களுக்கு முன்னாடி இருந்த அம்மா தாம்பரத்தில் ஐந்தரை மணிக்கு ஏறினாங்களாம். எல்லாருக்கும் நல்ல பசி வேறே! டிரான்ஸ்போர்ட்டிலேயே டிபன் கூட ஏற்பாடு செய்திருக்கலாமோ என்னமோ. ஒரு வழியாக் கோயம்பேடு வர ஒன்பதே கால் மணி. சீக்கிரம் இல்லை இது? வண்டி ஓடினதே வடபழநி தாண்டி "ஓம் உலகநாதன்" வீடு தாண்டினதும் தான். அதான் சீக்கிரமா ஒன்பதேகாலுக்கு வந்துடுச்சு. அங்கே நல்லவேளையா அம்பத்தூர் பஸ் நின்னுட்டு இருக்க இடமும் கிடைக்க அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டே ஏறிக்கொண்டோம். அதைவிட அதிர்ஷ்டமா அம்பத்தூரில் ராக்கி தியேட்டர் கிட்டே இறங்கி எதிர்ப்பக்கமா நடந்து வரணுமேனு அலுப்புத் தட்ட யோசிக்கும்போது ரவுண்டாணாவிலேயே வண்டியை நிறுத்தி இறக்கி விட்டுட்டாங்க. அப்பாடானு வாழ்த்திட்டு அங்கே வச்சிருந்த எங்க வண்டியை எடுத்துட்டு வீட்டுக்கு வந்து சேரும்போது பத்தே முக்கால். ரங்க்ஸ் மட்டும் பசி தாங்க முடியாமல் சாப்பிட நான் பால்,பழம் சாப்பிட்டுட்டுப் படுத்தேன்.

போறுண்டா சாமி! தேர் நிலைக்கு வந்தாச்சு. இனிமே எப்போவோ! அது சரி, ஒரு நாளைக்கு என்னிக்கோ போகவே எனக்கு இவ்வளவு அலுப்பும், சலிப்புமா இருக்கே? தினம் தினம் அந்த வண்டியிலேயே தங்கள் பிழைப்பை நடத்தும் டிரைவரும், கண்டக்டரும் என்ன செய்வாங்க? அதிலும் அன்னிக்கு கண்டக்டர் ரொம்பவே சோர்ந்து போயிட்டார். அந்த பஸ்ஸிலே தினம் தினம் பயணிக்கும் அன்றாடப் பயணிகள் நிலைமை?? நினைக்கவே முடியலை! வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பேருந்திலேயே கழிக்கறாங்களே? ஏன் இப்படி? போக்குவரத்து கொஞ்சம் கவனம் கொடுத்துப் பார்த்தால் ஒழுங்கு செய்ய முடியும்கிற நிலைமை, ஆனாலும் யாருக்கும் அக்கறை யில்லை. யாருக்கும் வெட்கமில்லை. எப்போ மாறும்?? என்னிக்கு? எந்த வருஷம்?

Saturday, June 26, 2010

மழலைகளுக்காக ஒரு தளம்! ஒரு விண்ணப்பம்!

மழலைகள்.காம்


சும்மா மொக்கை போஸ்ட், மற்றப் பிரயாணங்கள் பத்தின போஸ்டெல்லாம் எழுதறாப்போல் கண்ணன் கதையை எழுத முடியாது. பல புத்தகங்களையும் பார்த்துக்க வேண்டி இருக்கு. சில சமயம் புத்தகங்கள் கிடைக்கலைனாலும் கஷ்டம் தான். (எல்லாமேவா வாங்க முடியும்?) அதோடு முன் கூட்டியே ஒரு நாலைந்து போஸ்டுக்காவது எழுதியும் வச்சுக்கணும். ஆனால் இப்போக் கொஞ்ச நாட்களா அது முடியாமல் போயிடுச்சு. அதனால் வாரம் ஒரு போஸ்ட் கூடச் சரியாப் போடமுடியலை. வரும் வாரத்தில் இருந்து அதைச் சரி செய்துடணும்னு முயற்சிகள் எடுத்துக்கறேன். எதிர்பாராமல் வரும் வேலைகள் தவிர மற்றபடி ஒரு மாதிரி சமாளிச்சுடுவேன்னு நம்பறேன். இப்போ இங்கே ஒரு முக்கியமான தளம் பற்றிய அறிமுகம். ஏற்கெனவே நான் வலைச்சரம் எழுதினப்போக் குறிப்பிட்டிருக்கேன். என்னோட நக்ஷத்திரப் பதிவுகளிலேயும் குறிப்பிட்டிருக்கேன். ஆனாலும் மீண்டும் இப்போக் குறிப்பிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னால் திரு ஆகிரா என்னும் ராஜகோபாலன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தப்போ மழலைகள்.காம் தளத்திற்கு ஏற்கெனவே எழுதின சிலர் கூடத் தொடர்பு கொண்டு மீண்டும் எழுதச் சொல்லுங்கனு கேட்டுக் கொண்டார். அவங்களோட தனித் தொடர்பு கொள்வதற்குப் பதிலாய் ஒரு பதிவாய்ப் போட்டால் தெரிஞ்சுக்காத இன்னும் பலரும் தெரிஞ்சுக்கலாம். அவங்க படைப்புகளையும் தரலாமே? பலருக்கும் பயன்படுமேனு தோன்றியதால் இந்தப் பதிவு.

மழலைகள்.காம். இந்தத் தளம் அநேகமாய் யாருக்கும் தெரிஞ்சிருக்காது. நண்பர் ஆகிரா என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இவர் ஒரு மெகானிகல் எஞ்சினியர், சில காலம் வேலையில் இருந்துவிட்டு, பின்னர் காஞ்சிபுரத்தில் வந்து முழுநேர வெப் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். பல பிரபலமான தளங்களையும் இவரே பராமரிப்புச் செய்து வருகிறார்.Akira மழலைகள்.காம் தளத்தை எப்போ ஆரம்பிச்சார்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் 2006-ல் தமிழில் எழுத ஆரம்பிச்சதிலே இருந்து மழலைகள்.காம் தளத்தில் எழுதிட்டு இருக்கேன். இதிலே குழந்தைகளுக்குப் பிடிக்கும் எதையும் நாமும் எழுதலாம். குழந்தைகளையும் எழுத வைக்கலாம். வரைய வைக்கலாம். பாட வைக்கலாம். உங்க குழந்தை செய்யும் முதல் விளையாட்டிலே இருந்து குழந்தையோடு பேச ஆரம்பிச்ச முதல் பேச்சு வரையிலும் அனைத்தையும் பகிர்ந்துக்கலாம். உங்க சின்ன வயசு அநுபவங்கள், பள்ளி அநுபவங்கள்னு எல்லாத்தையும் சொல்லலாம். குழந்தைகளுடைய தனிப்பட்ட சில திறமைகளை இதன் மூலம் வெளிக்கொணரலாம். வெளிநாட்டு வாழ் குழந்தைகள் தமிழ் தெரியலையேனு நினைக்கவேண்டாம். ஆங்கிலத்தில் எழுதி அனுப்பலாம். Mazalais.comஇதோ இங்கே போய்ப் பாருங்க, நம்ம பூஜா எழுதி இருக்கிறதெல்லாம் போட்டிருக்காங்க. அது மாதிரி உங்க குழந்தைகளோட படைப்புக்களும் வரும்.

இப்போ முக்கியமா இதை இங்கே குறிப்பிடறதுக்குக் காரணமே, கொஞ்சம் பிரபலமானவங்களும் இதிலே பங்கெடுத்துக்கணும்னு திரு ஆகிரா ஆசைப்படுவதைச் சொல்லத் தான். ஆசிரியர் குழுனு நாங்க ஒரு பத்துப் பதினைந்து பேர் இருக்கோம் தான். ஆனாலும் கொஞ்சம் பிரபலம் ஆனவங்களும் எழுதினா இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும் வாய்ப்பு இருக்கே. அதனால் ஏற்கெனவே இந்த ஆசிரியர் குழுவிலே இருக்கிற ஷைலஜா மறுபடியும் இதிலே பங்களிக்க ஆரம்பிக்கணும்னு கேட்டுக்கிறேன். முன்னாலே ஷைலஜா ஓரிரு படைப்புகள் அளித்திருக்கிறார். இனியும் தொடர்ந்து அளிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்றப் படைப்பாளிகள் யாராக இருந்தாலும் அவங்களும் தொடர்ந்து அளிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை இங்கே போடறதுக்குக் காரணமே பல தரப்புக்களுக்கும் போய்ச் சேரணும் என்ற நோக்கத்திலேயே. தளத்தைச் சென்று பாருங்கள். தமிழ் தெரியாத குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தலில் இருந்து அனைத்தும் கற்பிக்கும் ஒரு முன் மாதிரியான தளம் இது.

சேவை நோக்கத்தில் இதில் அனைத்து ஆசிரியர்களும் எழுதி வருகின்றனர். திரு ஆகிரா அவர்களும் சேவை நோக்கத்திலேயே இந்தத் தளத்தை நடத்தி வருகின்றார். ஆகவே அனைவரின் ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலக் குழந்தைகளின் மன வளத்திற்கு ஒரு உத்தரவாதம் அளிக்கும் தளத்தை அனைவரும் சேர்ந்து முன்னேற்றுவோம். நன்றி.

Wednesday, June 23, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ஜராசந்தனின் தந்திரம்!

அக்ரூரரின் இந்தத் துணிச்சலான பேச்சால் ஜராசந்தனுக்குக் கோபம் அதிகமானது. தன்னெதிரே தன்னை ஒருவன் இப்படி கேட்பதா என்ற எண்ணத்தில், அக்ரூரரைப் பார்த்து, “அக்ரூரா, என்ன துணிச்சல் உனக்கு, என்னைப் போன்றதொரு மஹா சக்கரவர்த்தியிடம் இவ்வாறு பேச உனக்கு எவ்விதம் தைரியம் வந்தது? இதைச் சொல்லத் தான் இங்கே வந்தாயா? உன் நாக்கை நான் அறுத்துவிடுவேன் என்பது நினைவிருக்கட்டும்!” என்றான் ஜராசந்தன். ஜராசந்தன் எவ்வளவுக்கெவ்வளவு நிதானத்தை இழந்தானோ, அவ்வளவுக்கு அக்ரூரர் நிதானத்தை இழக்கவில்லை. “ஐயா, நான் ஏற்கெனவே சொன்னேனே, உங்களால் எந்த எல்லைக்கும் சென்று எவரையும் தண்டிக்கமுடியும் என்று. இப்போதும் நான் அதையே சொல்கிறேன். நீங்கள் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதாலேயே என்னை உங்களிடம் நேரில் சென்று தனியே பேச அனுப்பினார்கள். நானும் வந்துள்ளேன். உங்களைப் போன்ற சக்தி பெற்ற அரசர்களால் தான் மன்னிக்கவும் முடியும், தண்டிக்கவும் முடியும். பலவீனமானவர்களை மன்னிப்பது என்பது உங்களைப் போன்ற வல்லமை படைத்தவர்களுக்குச் சற்றுச் சிரமமான ஒன்றுதான். ஆனால் அதை நிறைவேற்றுவதிலேயே உங்கள் பெருமையும் உள்ளது. இதனால் உங்கள் புகழ் மங்காது அரசே, மாறாக இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.” என்று நிதானமாகவே கூறினார் அக்ரூரர்.

“இனிமை, இனிமை, இனிமை! அக்ரூரா, உன் குரலில் இனிமையைத் தோய்த்து, எனக்குச் சற்றும் விருப்பம் இல்லாத விஷயங்களைக் கூறுகிறாய். உன் குரலினிமையில் நான் மயங்கி இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தமாட்டேன் என எண்ணுகிறாயா? சரி, சரி, அந்த இரு இடைப்பயல்களும் எங்கே சென்று இருக்கிறார்கள் என்பதைச் சரியாகச் சொல்லிவிடு. உன்னை நான் விட்டு விடுகிறேன். மூடி மறைக்காதே! அதன் பின்னர் நீ கூறியபடி செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக்கொள்கிறேன்.” என்றான் ஜராசந்தன்.

“ஐயா, அவர்கள் இருவரும் உங்கள் கண்களில் படாமல் தப்பி அல்லவோ ஓடி இருக்கின்றனர்? அப்படி இருக்கையில் எனக்கு எவ்வாறு தெரியும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடம்? உங்களால் சென்று அடைய முடியததோர் இடத்திற்குச் சென்றிருப்பார்கள் என நம்பலாம்.” என்றார் அக்ரூரர்.

அக்ரூரரையே வைத்தகண் வாங்காமல் பார்த்த ஜராசந்தன், “ நீ மிகவும் சாமர்த்தியசாலி அக்ரூரா, சரி, நீ இப்போது இங்கிருந்து செல். நாளைக்காலை என்ன சொல்வது என்பதைப் பற்றி ஒரு முடிவெடுக்கிறேன். நீ சென்று பிருஹத்பாலன், அவன் தானே வசுதேவனின் தம்பி தேவபாகனின் மகன்? கண்ணனின் சித்தப்பா குமாரன்?? அவனை வரச் சொல் இங்கே. நான் அவனிடம் பேசவேண்டும்.”

“உத்தரவு, சக்கரவர்த்தி!” அக்ரூரர் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார். அக்ரூரர் எதிரில் கோபத்தைக் காட்டிய ஜராசந்தனுக்கு மனதிற்குள் அக்ரூரர் சொன்னது எல்லாம் சரியே என்ற எண்ணமே தோன்றியது. அவன் அப்போது மதுராவைத் தாக்குவது என்பது சரியல்ல தான். காலியான மதுராவைத் தாக்குவது குழந்தைதனமாக இருக்கும். அவனுடைய அரசகுலத்து நண்பர்கள் மத்தியிலும், மற்ற ஆரிய வர்த்தத்து அரசர்கள் மத்தியிலும் கேலிக்குரியவனாக மாறிவிடுவான். கம்சனின் மரணத்துக்குப் பழிவாங்குவது என்பது எவராலும் மறக்கமுடியாத ஒன்றாக, என்றென்றும் நினைவு கூரும் ஒன்றாக இருக்கவேண்டுமே ஒழிய கேலிக்குரியதாக இருத்தல் கூடாது. மேலும் இந்த யாதவர்கள் குரு வம்சத்தினரின் உதவியையும், பாஞ்சால மன்னன் துருபதனின் உதவியையும் நாடுவார்கள் போல் தெரிகிறது. ஆகவே அவசரம் கூடாது. சட்டென ஒரு யோசனை அவன் மனதில் உதிக்க, பிருஹத்பாலன் வருவதற்குள் தன்னுடைய அந்தரங்க ஆலோசகனும், கம்சன் உயிருடன் இருந்த வரையில் மதுராவில் இருந்து கம்சனுக்கும், அவனிரு மனைவியருக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் தேவைப்படும்போது வழங்கிக்கொண்டிருந்தவனும் ஆன தன் அந்தரங்க மெய்க்காப்பாளனை அங்கே வரவழைத்து பிருஹத்பாலன் பற்றிக் கேட்டறிந்தான். மேலும் மதுராவில் நடந்த அனைத்து விஷயங்களையும் அவன் வாய் மூலமும் கேட்டு அறிந்தான்.

தேவபாகன் வசுதேவரின் இளைய சகோதரன் மட்டுமின்றி உக்ரசேனனின் மகளும், கம்சனின் சொந்த சகோதரியுமான கம்சாவை மணந்து கொண்டிருக்கிறான். இந்தக் கம்சா என்பவள் உக்ரசேனனின் பிரியத்துக்கு உகந்த மகள். பிருஹத்பாலன் மூத்த மகன். இவன் தம்பியான உத்தவன் என்பவனே, கோகுலத்தில் கண்ணனுக்கும், பலராமனுக்கும் துணையாக அங்கே வளர்ந்தவன். இப்போதும் கண்ணனின் பிரியத்துக்கும், பாசத்துக்கும், அன்புக்கும், நம்பிக்கைக்கும் உகந்ததொரு நண்பன், சகோதரன். தன் மெய்க்காப்பாளனை அனுப்பிவிட்டு பிருஹத்பாலன் காத்திருப்பது தெரிந்து அவனை அழைத்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வந்தவன் சற்றுத்தூரத்திலேயே நின்றுவிட்டான். அவனுடைய உள்ளார்ந்த பயம் அவன் கண்களிலேயே தெரிந்தது. உண்மையிலேயே நடுக்கத்துடன் இருந்த பிருஹத்பாலன், ஜராசந்தனின் பெயரைக் கேட்கும்போதெல்லாம் நடுங்குபவனே. தன் சொந்த மாமன் ஆன கம்சன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டபோது மதுராவுக்குக் கேடு விளைந்துவிட்டது என்றும், மதுரா நகரம் அழியப் போகிறது என்றும் முழுமனதோடு நம்பினான். நகரை விட்டு ஓடவும் தயாராகத் தான் இருந்தான். ஆனால் சிறையில் வாடிக்கொண்டிருந்த கம்சனின் தகப்பனும், பிருஹத்பாலனின் தாய்வழிப்பாட்டனும் ஆன உக்ரசேனனின் அன்புக்குகந்த மகள் அவன் தாய் கம்சா. ஆகவே ஓடிச் செல்வது என்ற தன் எண்ணத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியவர்கள் அப்போது தான் சிறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருகை உற்சாகமாய்க் கொண்டாடப்படும் சமயம் அவன் மதுராவை விட்டு ஓடினால், அவனைக் குலப்பகைவன் என எண்ணிவிட்டால்? இந்த எண்ணமே அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது.

இப்போது இங்கு வரும்போதும் நடுங்கிய வண்ணமே வந்தான் பிருஹத்பாலன். கண்ணனும், பலராமனும் ஓடிவிட்டார்கள் என்ற செய்தி ஜராசந்தனின் கோபத்தைத் தூண்டிவிடும், என்ன செய்வானோ, என்ன சொல்வானோ? என்ன தண்டனை கிடைக்குமோ? தூக்குமேடைக்குச் செல்லும் கைதியைப் போன்றதொரு நிலைமையில் அங்கே வந்தான் பிருஹத்பாலன். ஆனால்??? இது என்ன ஆச்சரியம்? சக்கரவர்த்தி ஜராசந்தன் அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்கிறானே? இது கனவா? அல்லது நனவா? மேலும் பிருஹத்பாலன் ஆச்சரியப்படும் வகையில், தன் புன்னகை மாறாமலேயே ஜராசந்தன் அவனை அருகே வரும்படி அழைத்தான். பிருஹத்பாலனும் அருகே சென்று சக்கரவர்த்திக்குத் தன் அறிமுகத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தான். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஜராசந்தன் அவனை எழுப்பி அணைத்தவண்ணம் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவன் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினான். ஆஹா, இத்தனை நல்ல மனிதனா ஜராசந்தன்? உண்மையில் இவன் நல்லவனே! இந்த மதுராபுரி மக்களுக்கும் சரி, மற்ற யாதவத் தலைவர்களுக்கும் சரி இவனுடைய நல்ல மனம் புரியவே இல்லை. சீச்ச்சீ, முட்டாள் ஜனங்கள், அதை விட முட்டாள் யாதவத் தலைவர்கள் அனைவரும். பிருஹத்பாலனின் எண்ணம் குதிரையை விட வேகமாய் ஓடியது.

“பிருஹத், என் ஆசிகள் உனக்கு. “ இனிமையைப் பொழிந்த அன்பான குரலில் கூறிய ஜராசந்தன், “எப்படி அப்பா இருக்கிறாய்? உன் பாட்டனாரும் என் மறுமகனின் தந்தையுமான அரசர் உக்ரசேனர் எப்படி இருக்கிறார்? உன் தாய், அந்தப் புண்ணியவதி எப்படி இருக்கிறாள்? ஆஹா, எப்பேர்ப்பட்ட உத்தமி அவள்? இத்தனை வருடங்களாகச் சிறையில் இருந்த தன் தந்தைக்குப் பணிவிடை செய்து வந்தாள் உன் தாய் எனக் கேள்விப் பட்டேன். நீயும் அப்போது சிறையிலேயே இருந்தாயா? எங்கே இருந்தாய் நீ? உன் தாயுடனா, அல்லது உன் தகப்பனுடனா?” அன்பும், பாசமும், நேசமும் வழிந்தன ஜராசந்தன் குரலில். பிருஹத்பாலன் மயக்கம் அடைந்து விழாத குறைதான். ஆஹா, இவ்வளவு நல்லவரா இந்த மகதச் சக்கரவர்த்தி? அனைவருமே இவரைத் தவறாய்ப் புரிந்து கொண்டனரே?

Friday, June 18, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்!

குழப்பத்தில் ஜராசந்தன்!

அக்ரூரர் கொண்டு வந்திருக்கும் விஷயம் எதுவானாலும் அது தன் படைவீரர்களுக்குப் பரவி அதைப் பற்றிய அவர்களின் விமரிசனத்தை ஜராசந்தன் சற்றும் விரும்பவில்லை. ஆகவே தனிமையிலேயே அது பற்றிப் பேச விரும்பினான். அதோடு தன் வீரர்களுக்குத் தன் குழம்பிய மனநிலைமையும் தெரிந்துவிடாமல் இருக்கவேண்டும், என்றும் தன் உறுதியான முடிவுகள் மட்டுமேஅவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் ஜராசந்தன் விரும்பினான். சேதிநாட்டரசன் தாமகோஷன் செல்லும்போது அவனுடன் பிருஹத்பாலனையும் அழைத்துச் செல்லும்படி ஜராசந்தன் கூறினான். அனைவரும் சென்றபிறகு, அக்ரூரரைப் பார்த்து, ‘விருஷ்ணி வம்சத்தவர்களின் வணக்கத்துக்கு உரியவரே, நீர் ஓர் துறவி என்பதை நான் நன்கறிவேன். ஆனால் என்னிடம் பொய் மட்டும் கூறினீர்கள் என்பது தெரியவந்தால்,மதுரா நகரைத் தீக்கிரையாக்கிவிடுவேன். நினைவிருக்கட்டும்!” என்று கடுமையான குரலில் கூறினான்.

“பேரரசே, நினைத்ததை நினைத்த வண்ணம் செய்யும் ஆற்றல் படைத்தவர் நீர் என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் என் வாயிலிருந்து ஒரு போதும் பொய்யான வார்த்தைகள் வராது.” என்றார் அக்ரூரர். “எனில், அக்ரூரரே, அந்தக் கோழை இளைஞர்கள் உண்மையில் ஊரை விட்டு ஓடிவிட்டனரா? ஏன் ஓடினார்கள்?” ஜராசந்தன் குரலிலேயே ஏளனம் தொனித்த்து. “ஐயா, அவர்கள் கோழைத்தனமாகவெல்லாம் ஓடவில்லை. தங்கள் இருவரின் பொருட்டு மதுராநகரில் யுத்தம் ஏற்படுவதையும், அதன் அப்பாவியும், ஏதுமறியா மக்களும் கொல்லப் படுவதையும் அதன் அழகும், எழிலும் அழிவதையும் அவர்கள் விரும்பவில்லை. மேலும் யாதவகுலமே அவர்கள் இருவரின் பாதுகாப்புக்குஎனப் போரிட வருமென்பதால் குலத்துக்கும் மிகவும் ஆபத்து ஏற்படும். அதையும் அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் அவர்கள் வீரர்களே ஆவார்கள். கோழைத்தனத்தை எதிர்த்துப் போராடும் வீரர்கள்.” என்றார் அக்ரூரர்.

“ஹாஹாஹாஹா, எனில் யாதவர்கள் எவரும் அவர்கள் இருவரின் பாதுகாப்புக்கு என முன்வரவில்லை?? அவர்கள் பக்கம் எவரும் நிற்கவில்லை?” ஜராசந்தனின் குரலில் அவனையுமறியாக் குதூகலம். ஆனால் அக்ரூரரோ, “இல்லை அரசே, அவர்கள் இருவருக்காகவும் உயிரைக் கொடுக்கக் கூட பலர் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர்.” என்றார் அக்ரூரர். “என்னால் இதை நம்ப முடியவில்லை. அவர்கள் இருவரையும் நாட்டை விட்டு அனுப்பியதற்காக உங்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறேன்.”

“பேரரசே, இதுவும் நாங்கள் எதிர்பார்த்தது தான். ஒரு மகத்தான அரசன் வேறு என்ன செய்யமுடியும்? அதுவும் அவன் எதிரிகள் இருவர் தப்பிவிட்டனர் என்றால் எவ்வகையில் தன் கோபத்தை வெளிக்காட்ட முடியும்?” அக்ரூரரின் குரல் சாந்தமாகவே தொனித்தது. எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. “என்ன? கோபமா? எனக்கா? ம்ம்ம்ம்?? அக்ரூரனே! நீ உன்னை ஒரு பெரிய மஹான் எனச் சொல்லிக்கொள்கிறாயே? நான் எவ்விதம் என் மறுமகனை ஒரு சிறுவன் கொன்றதைப் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டாயா? அவர்களுக்கு நான் பாவமன்னிப்பா கொடுக்க வேண்டும்? அதுவும் கம்சன் உங்கள் பட்டத்து இளவரசனும் கூட.”” ஜராசந்தன் சீறினான். அக்ரூரரோ மேலும் அதே சாந்தம் தொனிக்கும் குரலில், “என்னை மன்னியுங்கள் பேரரசே, நான் என்னை ஒரு போதும் ஒரு துறவி என்றோ மஹான் என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை, அப்படி அழைத்துக்கொண்ட்தும் இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் தர்ம நியாயங்களை நான் கடைப்பிடிக்கிறேன். அது என் கடமை என்றும் உணர்ந்திருக்கிறேன். மேலும் அரசே, வசுதேவனின் குமாரர்கள் செய்த தவறுக்காக மதுரா நகரை அழிப்பதோ, மதுராவின் மக்களைத் துன்புறுத்துவதோ தர்மம் அல்ல என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.” அக்ரூரரின் குரலில் ஜராசந்தனின் தவறான செயலைச் சுட்டிக்காட்டுவது போல் அமைந்த தொனி அவனை இன்னும் எரிச்சலூட்டியது.

அக்ரூர்ரை வெட்டிவிடுவான் போல் பார்த்தான். ஆனால் அவரோ மலையே நிலை பெயர்ந்து விழுந்தாலும் கலங்காதவர் போல் அதே நிதானத்தோடும், தீர்க்கமான பார்வையில் கருணை தென்படவும், புன்னகை மாறாத முகத்தோடும் காட்சி அளித்தார். “அரசே, நான் இங்கே வசுதேவன் மகன் வாசுதேவகிருஷ்ணனின் செயல்களை நியாயப் படுத்த விரும்பவில்லை. அதற்காகவும் நான் வரவில்லை. ஆனால் கம்சன் எத்தனை எத்தனை யாதவர்களைக் கொன்றிருக்கிறான்? எத்தனை எத்தனை பச்சிளம் குழந்தைகள்? எத்தனை பெண்கள் அவனால் பலவந்தப் படுத்தப் பட்டிருக்கின்றனர்? அதன் மூலம் வாழ்க்கையையே இழந்து தவித்திருக்கின்றனர்? எவ்வளவு மனிதர்களைத் தன் அடாத செயல்களால் பைத்தியக்காரர்கள் போல் திரிய விட்டிருக்கின்றான்? “ சற்றே நிறுத்திய அக்ரூரர், “ ஏன்? வசுதேவனின் குழந்தைகளே அவனால் கொல்லப் பட்டனவே? எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் பிறந்த உடனே கொல்லப் பட்டன? “ அக்ரூரர் மேலும் தொடர்ந்தார்.
“ஐயா, இவ்வளவையும் கம்சன் செய்யும் போது தாங்கள் அவனுக்குப் பாவமன்னிப்புக் கொடுத்து அவனை மன்னித்தன்றோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?”

மிகுந்த பிரயத்தனத்தோடு ஜராசந்தன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். அக்ரூரரைப் போன்ற பலராலும் போற்றப் படும், தவ வாழ்க்கை வாழும் ஒருவரைத் தண்டிப்பது மிகப் பெரிய பேராபத்தில் போய் முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அவனால் அப்போது எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. ஆகவே அக்ரூரரைப் பார்த்து, “ மிகக் கெட்டிக்காரத்தனமாய்ப் பேசிவிட்டாய் என எண்ணாதே. மதுராவை அழிக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை நான் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ள விரும்பவும் இல்லை.”

“ஏற்கெனவே நாங்கள் எதிர்பார்த்த்தே தான் அரசே.மாட்சிமை பொருந்திய மன்னா! ஏற்கெனவே பல யாதவர்கள் மதுராவை விட்டுச் சென்றுவிட்டார்கள். இப்போது நாங்கள் வெறும் கையோடு மதுராவுக்குச் சென்றதும் மீதம் உள்ளவர்களும் ஊரை விட்டுச் சென்றுவிடுவார்கள். மதுரா நகர் உங்களுடையது. அதை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நாங்கள் சென்று விடுகிறோம்.” அக்ரூரர் தீர்மானமாய்ச் சொன்னார்.

“ம்ம்ம்ம்ம்?? எங்கே போய்விடமுடியும் உங்களால்? நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களை விடாமல் துரத்துவேன். ஹாஹாஹாஹாஹாஹா!’ கெக்கலி கொட்டிச் சிரித்தான் ஜராசந்தன்.

“உண்மை அரசே, அது உங்களால் முடியும். ஆனால் மதிப்புக்குரிய ஹஸ்தினாபுரத்து பீஷ்ம பிதாமஹரும், பாஞ்சால நாட்டு துருபதனும் எங்களுக்கு அடைக்கலம் தர ஒப்புக்கொண்டிருக்கின்றனர். தேவை எனில் அவர்கள் படையும் எங்கள் உதவிக்கு வரத் தயாராகக் காத்திருக்கிறது.”

தூக்கிவாரிப் போட்டாற்போல் ஜராசந்தன் யோசிக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே துருபதன் தன் நாட்டின் வழியாகச் செல்ல ஜராசந்தனுக்குத் தடை விதித்து விட்டான். இப்போதென்னவென்றால் இது வேறேயா? அக்ரூரர் ஜராசந்தனின் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். அதே சாந்தமான குரலில், “ மேன்மை பொருந்திய சக்கரவர்த்தி, நான் சொல்ல வந்ததும் அதுவே தான். நீங்கள் தேடும் இளைஞர்களோ ஓடிவிட்டனர். நாட்டின் மற்றத் தலைவர்களும் நாட்டை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாட்டின் மக்களும் அவர்களைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது நீங்கள் போய் மதுராவைத் தாக்கினாலும், அங்கே எதிர்க்க யாரும் இருக்கமாட்டார்கள். எப்படியும் மதுராநகர் காலியாகத் தான் இருக்கப் போகிறது. காலியான நகரத்தில் எவருடன் யுத்தம் புரிவீர்கள் அரசே? இது உங்களைப் போன்றதொரு வீராதி வீரருக்கு இழுக்கன்றோ? மகத்த்தின் புகழ் பெற்ற சக்கரவர்த்தி ஜராசந்தன் காலியான மதுரா நகரைத் தீக்கிரையாக்கினான் என்றல்லவோ அனைவரும் பேசுவார்கள்? உலகத்தார் இதைக் கேட்டு உங்களைக் கண்டு எள்ளி நகையாடமாட்டார்களா? யோசியுங்கள் அரசே!” அக்ரூரர் சற்றும் மாறாத குரலில் பேசினார்.

Wednesday, June 16, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்.

ஜராசந்தன் யோசிக்கிறான்!“ம்ம்ம்ம்ம்ம், துருபதன் தன்னுடைய அகம்பாவத்துக்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். அவனைத் தனியாக கவனிக்கலாம். இப்போது அந்த வசுதேவனின் இரு மகன்களையும் அழிக்கவேண்டிய காரியத்தை மட்டுமே இப்போது கவனிக்க வேண்டும். அதை நினைத்ததுமே அவன் முகத்தில் ஒரு கொடூரமான சிரிப்பு வந்தது. அந்த இரு மாட்டிடையச் சிறுவர்களும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியான ஜராசந்தனின் ஈடு இணையற்ற மறுமகன் கம்சனை அன்றோ கொன்றுவிட்டனர். இதற்குப் பழி வாங்கியே தீரவேண்டும். அதுவும்கம்சனுக்கு எந்த இடத்தில் சாவு நேரிட்டதோ அங்கேயே இரு இடைச்சிறுவர்களும் கை, கால்கள் வெட்டப்பட்டுத் துண்டு துண்டாய்க் கொல்லப்படவேண்டும். அதில் சந்தேகமே இல்லை.’ சற்றுத்தூரத்தில் மதிய உணவு தயாரிக்கப் பட்டுப் பரிமாறப்பட்டிருந்த்து. பெரிய பெரிய வாழை இலைகளும், தாமரை இலைகளும் உணவு பரிமாறுவதற்காக்க் கொண்டுவரப்பட்டிருந்தன. பெரிய வாழை இலையில் ஜராசந்தனுக்கான உணவு தயாராக இருந்தது. அவனுடன் உணவு உட்கொள்ளும் அதிகாரிகளும், படைத்தளபதிகளும், அமைச்சர் பெருமக்களும் அவன் வரவுக்காய்க் காத்திருந்தனர். அதோடு அவனுடன் நட்புப் பூண்டு அவன் உதவிக்கு வந்திருந்த மற்ற அரசர்களும் உணவு உட்கொள்ள அவனுக்காக்க் காத்திருந்தனர். ஆனால் இது என்ன?? சேதி நாட்டு அரசன் தாமகோஷனைக் காணவில்லையே? சாதாரணமாக அவன் ஜராசந்தன் வருவதற்கு அரை நாழிகை முன்னாலேயே வந்துவிடுவானே?ம்ம்ம்ம்??? ஏதோ எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாய்த் தோன்றியது ஜராசந்தனுக்கு.

யோசனையுடன் எழுந்த ஜராசந்தன், தன்னிரு மெய்க்காப்பாளர்கள் பின் தொடர உணவு உண்ணும் இடத்துக்குச் சென்றான். அங்கே சுற்றிலும் வட்டமாய்ப் போடப் பட்டிருந்த இருக்கைகளில் மத்தியில் உள்ள இருக்கே சற்றே உயரமாய் ஜராசந்தன் அமருவதற்கெனக் காத்திருந்த்து. ஜராசந்தன் தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான். அனைவரும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று, அவனை வணங்கினார்கள். ஒரு தலையசைப்பில் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜராசந்தன் சால்வனைப் பார்த்து, “தாமகோஷன் இன்னும் வரவில்லையா?” என்று வினவினான். “அல்லது இந்த விருந்தைச் சாப்பிட்டதில் உடல்நிலை சரியில்லையா?”” தன் ஹாஸ்யத்தை ரசித்துத் தானே சிரித்துக்கொண்டான் ஜராசந்தன். சால்வன் அது எதையும் கவனிக்காதவனைப் போல, “சக்கரவர்த்தி, தாமகோஷர் சற்று நேரம் கழித்து வருவதாய்ச் செய்தி அனுப்பி உள்ளார்.” என்று சொன்னான். சால்வன் ஜராசந்தனின் நம்பிக்கைக்கு உகந்ததொரு வீரன், என்பதோடு அல்லாமல் ஜராசந்தன் நினைப்பதைச் செய்து முடிப்பவனும் கூட. அதற்குள், மகதத் தளபதிகளில் ஒருவர், தன்னிருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் கூப்பிய வண்ணம், “மதுராவில் இருந்து சமாதானத்திற்கான தூதுவர்கள் வந்திருக்கின்றனர்.” என்று தெரிவித்தான்.

“என்ன? சமாதானமா? மதுராவில் இருந்தா? “ஜராசந்தன் ஆச்சரியமும், கோபமும் அடைந்தான். “என்ன பைத்தியக்காரத் தனம் இது? எனக்கு அவ்விரு இளைஞர்களின் துண்டாக்கப்பட்ட தலைகளே வேண்டும். சமாதானமாம், சமாதானம்! எவர் கேட்டனர்?” யாரும் வாயையே திறக்கவில்லை. மெளனமாய் இருந்தனர். தன்னுடைய கோபமும், அவநம்பிக்கையும் அகலாமலேயே ஜராசந்தன் உணவு உண்ண ஆரம்பித்தான். தாமகோஷனின் தாமதமான வருகையை அவன் ரசிக்கவில்லை. என்னதான் வெளிப்படையாக தாமகோஷன் தன் பக்கம் இருந்தாலும், அவனுடைய முழு ஆதரவும் உள்ளூர யாதவர்களுக்கு மட்டுமே, குறிப்பாக கிருஷ்ண வாசுதேவனுக்கே என்று ஒரு சந்தேகம் ஜராசந்தன் மனதில் உண்டு. அதோடு இல்லாமல் தாமகோஷனின் மனைவி வசுதேவனின் தங்கையும் ஆவாள். அவளுடைய அதிகாரமும், செல்வாக்கும் ஜராசந்தன் அறிவான். உள்ளூர இந்த தாமகோஷன் வேறே என்ன ரகசியத்திட்டங்கள் தீட்டுகிறானோ?

அதற்குள் தன் தாமதத்துக்கான காரணத்தைக் கூறிக்கொண்டே தாமகோஷன் அங்கே வருகை புரிந்துவிட்டான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தான் ஜராசந்தன். மெதுவாகவும், அதே சமயம் நிதானமும், உறுதியும் கலந்த குரலில் பேசினான் தாமகோஷன். சமாதானத்துக்கான தூதுவர்கள் தாமகோஷனிடன் வந்தனரா என ஜராசந்தன் வினவ, அவர்கள் ஜராசந்தனுக்கே செய்தி கொண்டு வந்திருப்பதாய் தாமகோஷன் தெரிவித்தான். “ஆஹா, அதுவும் அப்படியா? அப்போ அந்த இரு இடைச்சிறுவர்களின் தலைகளையும் வெட்டிக் கொண்டு வந்துவிட்டனரா?” ஜராசந்தனின் குரலில் எல்லையற்ற குதூஹலம் தாண்டவமாடியது.

“இல்லை அரசே, இரு இளைஞர்களும், இரவோடிரவாக மதுராவை விட்டே ஓடிவிட்டனராம்.” தாமகோஷன் சொன்னான். அவன் குரலில் இருந்து அவன் உணர்வு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஜராசந்தன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

“ஓடிவிட்டனரா? என்ன நிஜமாகவா?” என்று உரத்த குரலில் கேட்டான் ஜராசந்தன்.

“அக்ரூரர், பிருஹத்பாலனோடும், கடனோடும் வந்துள்ளார் அரசே, பிருஹத்பாலன் அரசனின் பேரன் ஆவார். மேலும் அக்ரூரரைப் போன்ற ஒரு தபஸ்வி பொய் பேசமாட்டார் என நீங்கள் நம்பலாம்.” முதலில் ஜராசந்தன் வியப்பினால் மெளனத்தில் ஆழ்ந்தான் எனினும், அவன் ஏமாந்துவிட்டான் என நினைப்பார்களோ என்ற எண்ணம் ஏற்படவே, தாமகோஷனைப் பார்த்து, “உணவு முடியட்டும். நான் நேரிலே பார்த்துப் பேசித் தெரிந்து கொள்கிறேன்.” என்று முடித்துக்கொண்டான். சாப்பிடும்போதே சால்வனிடம் படைகளின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பின்னர் தன் கூடாரத்திற்குத் திரும்பிய ஜராசந்தன் சால்வனையும், தாமகோஷனையும் மட்டும் தன்னுடனே வரச் சொல்லி உத்தரவிட்டான். கூடாரத்தில் ஒரு அழகிய ஆசனத்தில் சாய்ந்த வண்ணம் படுத்த ஜராசந்தன் மதுராவின் தூதுவர்களை அழைத்து வரச் செய்தான்.

ம்ம்ம், நாம் என்ன நினைத்தோம்? நம் மறுமகனின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டி அவ்விரு இளஞர்களின் தலைகளைக் கேட்டால், இருவரும் நாட்டை விட்டே ஓடிவிட்டனராமே? தன் எண்ண ஓட்டம் தடைபடுவது போல் அப்போது அங்கே வந்து நின்ற அக்ரூரரையும், அவரோடு வந்த பிருஹத்பாலனையும் பார்த்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வசுதேவரின் சகோதரன் ஆன தேவபாகனின் மகன். அவர்களோடு வந்திருந்த கடனும், ஜராசந்தனை நமஸ்கரித்தான். சற்று நேரம் அவர்களையே பார்த்திருந்த ஜராசந்தன் சடாரென எழுந்து அமர்ந்தான். “ என்ன இது, முட்டாள்தனமான செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளீர்கள்? இதை எவ்வாறு நம்புவது?” அலக்ஷியமான தொனியில் அவநம்பிக்கை தொனிக்க்க் கேட்டான் ஜராசந்தன்.

அதற்கு அக்ரூரர் தன்னுடைய உறுதியும், நம்பிக்கையும் தொனிக்கும் குரலில், கிருஷ்ணனும், பலராமனும் மதுராவை விட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆகிறதென்று கூறினார். எனினும் ஜராசந்தனுக்கு நம்பிக்கை வரவில்லை. எங்கேயோ அவர்களை ஒளித்திருக்கிறார்கள் என்றே எண்ணினான். தன் எண்ணத்தை வாய்விட்டு வெளியிலும் கூறினான். அக்ரூரரைப் பயப்படுத்தும் தொனியில் கடுமையும், கோபமும் தொனிக்க, "எங்கே ஒளித்துள்ளீர்கள்? அதைச் சொல்லவில்லை எனில் உங்கள் உயிர் உங்களுடையதல்ல!" என்று கத்தினான். ஆனால் அக்ரூரர் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. வழக்கம்போல் தன்னிரு கைகளையும் கூப்பியவண்ணம், "இல்லை, அரசே, அவர்கள் மதுராவில் இல்லை!" என்றே கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஜராசந்தனுக்கு அக்ரூரரின் இந்த நிதானமான போக்கு உள்ளூர ஆச்சரியத்தைக் கொடுததது. அதே சமயம் அருகே நின்றிருந்த பிருஹத்பாலனுக்குப் பயம் ஏற்பட்டது என்பதையும் புரிந்துகொண்டான். அருகே இருந்த தாமகோஷனையும், சால்வனையும் சற்று அப்பால் போய் இருக்கும்படி கூறினான் ஜராசந்தன். விருஷ்ணி குலத்தின் மாபெரும் அறிஞரும், தபஸ்வியும், ஞாநியும் ஆன அக்ரூரரிடம் தான் தனியாகப் பேச விரும்புவதாகவும் கூறினான்.

*

Tuesday, June 15, 2010

என்ன கொடுமைடா சரவணா இது?? :(

விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டிக்கு முதலிடத்திற்குப் போட்டியிடும் பையனை ஆதரிக்குமாறு தினசரி செய்தித்தாளோடு வந்த விளம்பர நோட்டீஸ் இது. பையனைப் பாருங்க, எவ்வளவு பணிவா, குனிந்து கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு இருக்கான்?? இது என்ன கொடுமைனு மனசுக்கே பாரமா இருக்கு! இதோடயா? சென்னை பூராவும் போஸ்டர் ஒட்டி இருக்காங்க.

சனிக்கிழமை என் உறவினர் ஒருவருக்குக் கண் ஆபரேஷன் என்று போனப்போ வடபழநி வரை நூறடி சாலை முழுதும் இந்த போஸ்டர் காணக்கிடைக்குது. போறாததுக்கு அம்பத்தூரில் பேருந்தில் இருந்து இறங்கும் இடத்தில் பெரிய டிஜிடல் பானர். குழந்தைகளை இம்மாதிரியானதொரு மன நிலைக்குத் தயார்ப்படுத்தும் பெற்றோரைச் சொல்வதா? இவற்றை ஊக்குவித்துப் போட்டிக்கு மேல் போட்டி நடத்தும் தொலைக்காட்சிச் சானல்களைச் சொல்றதா? ஏற்கெனவே இம்மாதிரியான போட்டி ஒன்றில் தோற்ற ஓர் இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறர் என்பதும் விரிவான செய்திகளாக வந்தன. அப்படி இருந்தும் பெற்றோரின் இந்தத் தொலைக்காட்சிப் போட்டிகள் வெறியும், சானல்களின் மயக்கும் பேச்சும் எப்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்? இதன் பின் விளைவுகளை யாரேனும் யோசித்துப் பார்த்தார்களா? எங்கே போகிறோம் நாம்??? இந்தத் தொலைக்காட்சிகள் மோகம் எப்போ ஒழியும்???

அது மட்டுமா? சனிக்கிழமை கண் அறுவை சிகிச்சைக்குப் போனதும், தொலைக்காட்சி மூலம் பிரபலம் அடைந்து வரும் ஒரு மருத்துவமனையே. உள்ளே நுழைந்தால் வரவேற்பில் போட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகளும் வழிகின்றன. மேலே முதல் தளத்தில் அறுவை சிகிச்சை என்றனர். அங்கே போனால் கிட்டத்தட்ட 20 பேருக்கு மேலே அறுவைசிகிச்சைக்குக் காத்திருக்க, உள்ளே ஒரு முறைக்கு 3,4 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குச் செல்கின்றனர். கண்டிப்பாகக் கட்டணம் முழுதும் செலுத்தினால் தான் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப் படும். உபசாரம் என்னமோ பலமா இருந்தது. காபி, டீ, பால், சாப்பாடு என நோயாளிக்கு மட்டுமின்றிக் கூட வந்தவர்களையும் கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னால் நோயாளியின் பில்லில் அதற்கு வசூலிப்பார்களோ என்னமோ தெரியவில்லை. நல்லவேளையா, அன்னிக்கு வெளியிலே சாப்பிடமுடியாத நாளாக அமைந்துவிட்டதால் நாங்க தப்பிச்சோம். காலை 11-00 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொன்ன அறுவை சிகிச்சை மதியம் 2 மணி வரை ஆரம்பிக்கவில்லை. இதிலும் டூர் பாக்கேஜ் மாதிரி பாக்கேஜ் உண்டாம். லென்ஸ் இல்லாமல்னு ஆரம்பிக்குதோ? தெரியலை எப்படினு. ஆனால் குறைந்த செலவு தான் செய்யமுடியும்னு இருக்கும் நபர்களுக்கு தரமற்ற லென்ஸ் பொருத்தப்படும்னு சொன்னாங்க. இது எப்படி இருக்கு? Lens Clarity இருக்கணும்னா அதிகப் பணம்னும் சொல்றாங்க. இது பத்தி எனக்குப் புரியலை. அப்படியானு கேட்டுக்கொண்டேன். அங்கே கவுண்டரில் இருந்த பெண்ணுக்குக் கை வலித்திருக்கும், பணக்கட்டை எண்ணி, எண்ணிப் போட்டு. அது மட்டும் நல்லாப் புரிஞ்சது. எங்கே போகிறோம்?? மறுபடியும் மனசு வலிக்குது. இங்கே கவுன்சிலர்னு சிலரை வேலைக்கு வச்சிருக்காங்க. அவங்க தான் கண்ணைப் பரிசோதனை செய்யறாங்களோனு நினைக்கிறேன். அது தவிரவும் எக்கச்சக்கமான ஊழியர்கள். சிலருக்கு யூனிபார்ம், சிலருக்கு யூனிபார்ம் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வழியோனும் தோணுது.

மூன்று நாட்களாய் எழுத நினைச்சுக் கணினிப் பிரச்னை, கீ போர்ட் சரியில்லைனு எழுதவே முடியலை. ஆனால் எத்தனை நாட்கள் ஆனாலும் இவை எல்லாம் கவனிக்கப் படவேண்டிய பிரச்னைகளே.

Sunday, June 13, 2010

என்னவோ போங்க ஒண்ணுமே பிடிக்கலை!

அப்பாடானு இருக்கு, கிட்டத்தட்ட ஒரு மாசமாவே சரியாயில்லை. இப்போ லைலா புயல் வந்ததுக்கப்புறம் ஜாஸ்தியாயிடுத்து. வைரஸ் அட்டாக்னு புரியலை. மின் வெட்டு இருந்ததால் திடீர் திடீர்னு மின் அழுத்தம் ஏறி இறங்கும் அதனாலேனு நினைச்சேன். அதுவும் இல்லைனு தெரிஞ்சு ஒரு வழியா திரும்ப ஆபரேட்டிங் சிஸ்டம் போட்டிருக்கு. எல்லாமே மாறி இருக்கா, கொஞ்சம் பழகணும். ஆகவே பதிவுகள் மெதுவாத் தான் வரும். கீ போர்டு வேறே பழசு ரொம்ப மோசமாப் போயிடுச்சுனு மாத்தியாச்சு. புது கீ போர்டு, இதிலும் கொஞ்சம் அதிகமாவே நேரம் எடுக்குது. ஸ்பேஸ் தட்டும்போதெல்லாம் 'க்ளிக்" "க்ளிக" னு சத்தம் வருது. ரொம்பத் தொந்திரவா இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு கத்தணும்போல வருது. ஆனால் யார் கிட்டக் கத்தறதுனு தான் புரியலை. கொஞ்சம் பொறுங்க. மெதுவா வரேன். எழுத்து வேறே இதிலே கொஞ்சம் அழிஞ்சாப்பல தெரியுது. பேசாம அந்த கீபோர்டையே மாத்திடலாமானு யோசிக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநற.

இந்த விண்டோ வேறே ஒரே குதி குதியாக் குதிக்குது! என்னோட பிரச்னையைப் பார்த்து அவ்வளவு சந்தோஷமா? விண்டோ மட்டும் குதிக்கலை, டாஸ்க் பாரே குதிக்குதே! என்ன செய்ய??? நறநறநறநறநற சின்னக் குழந்தைங்க எல்லாம் பழகின பொம்மை எத்தனை அழுக்காய்ப் போய்க் கிழிஞ்சிருந்தாலும், அதையே வேணும்னு சொல்லுமே, அது மாதிரி எனக்கு என்னோட கீ போர்டு தான் வேணும் இப்போ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்(மீ டூ குழந்தை) அதான்! :(

Friday, June 11, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கண்ணன் பதுங்கினான், ஜராசந்தன் வெளிப்பட்டான்!


மேலே நாம் தொடரும் முன்னர் இந்த கோமந்தக மலையில் கண்ணன் அடைக்கலம் தேடியதைப் பற்றியும், கோமந்தகத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு:
ஸ்ரீமத் பாகவதமோ அல்லது விஷ்ணு புராணமோ கண்ணன் மதுராவில் இருந்து தப்பி வந்ததை மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, கண்ணன் முதல் அடைக்கலத்திற்கு கோமந்தக மலைப்பகுதியை நாடிச் சென்றது பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஹரிவம்சத்தையே திரு முன்ஷி பெரும்பாலும் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே ஹரிவம்சத்தில் குறிப்பிட்டிருப்பதாய்க் கூறுகின்றார். ஹரிவம்சத்தில் குறிப்பிடப் படும் கோமந்தகப் பகுதி தற்போதைய கோவா மாநிலமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். அல்லது மேற்குக் கடற்கரை ஓரம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான சஹ்யாத்திரி மலையின் ஒரு சிகரமான மகேந்திரமலைப்பகுதியின் ஏதானும் ஓர் இடமாகவும் இருந்திருக்கலாம். மேற்கே வந்திருக்கிறான் கண்ணன் அடைக்கலம் தேடி. மேலும் இந்த கோமந்தகப் பகுதியில் கண்ணன் வசித்தபோதே கருடனின் நட்பும் அவனுக்குக் கிடைக்கிறது. புராணங்களின்படியும், பாகவதத்தின் படியும் கருடனை ஒரு பறக்கும் பறவையாகச் சித்தரித்திருந்தாலும், ஹரி வம்சத்தின் அத்தியாயங்களில் கருடனை ஒரு கழுகைப் போன்ற பறக்கும் சக்தி கொண்ட மனிதனாகவே காட்டப் பட்டுள்ளது.

மேலும் இருவரும் தங்களுக்கான சிறப்பு ஆயுதங்களையும் இங்கேயே பெறுகின்றனர். மேலும் பலராமனுடைய மது குடிக்கும் வழக்கத்தைப் பல புராணங்கள் சித்திரித்திருந்தாலும் ஹரி வம்சத்தின் கோமந்தக மலைப்பகுதி வாசத்தைப் பற்றிய அத்தியாயங்களிலேயே அவன் எவ்வாறு மதுவின் அடிமையாக மாறினான் என்பதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கோமந்தக மலைப்பகுதியிலிருந்த மனதை மயக்கும் கடம்ப மரங்களின் பூக்களின் நறுமணத்தால் கவரப்பட்ட பலராமன் அவற்றிலிருந்து எடுக்கப் பட்ட மதுவின் இனிமையாலும் கவரப்பட்டான் என்கிறது ஹரிவம்சம். மதுவை “காதம்பரி” என்றும் கூறுகிறது ஹரிவம்சம். இனி இங்கே அடைக்கலம் புகுந்த இளைஞர்கள் இருவரையும் கோமந்தக மலையும், அதன் குடிமக்களும் காப்பாற்றினார்களா இல்லையா என்பதைப் பார்க்கலாமா?
************************************************************************************

பரசுராமர் வந்திருக்கும் செய்தியைக் கேட்ட கருட இனத்து மக்கள் அனைவரும் அவர் வரவைக் குறித்து தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் நிமித்தம் அனைவரும் கருடனைப் போன்ற நீண்ட மூக்குக் கொண்ட முகமூடிகளை அணிந்து வந்து பரசுராமரை வணங்கினார்கள். அவர்களின் தலைவனும் தன்னுடைய மகன்களுடன் வந்தான். பழங்களும், தேங்காய்ப்பாலும் உணவாக அளிக்கப் பட்டது. பரசுராமர் அதன் பின்னர் கண்ணனையும், பலராமனையும் பற்றி கருடர்கள் தலைவனுக்கு எடுத்துக் கூறிவிட்டு விடைபெற்றார். அப்போது கண்ணனிடம் அவர் கூறினார்:

“வாசுதேவ கிருஷ்ணா, நீ யார் என்பதையும், உன் கடமைகள் என்னவென்பதையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். இதை மட்டும் மறக்காதே! நீ இவ்வுலகிற்கு ஆற்றவேண்டிய முக்கியக் கடமை ஒன்றிருக்கிறது. அதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். தர்மம், நியாயம். அதை நீ நிலைநாட்டவேண்டும். மறந்தும் அதர்மத்தின் பின்னால் சென்றுவிடாதே. உன் யாதவ குல மக்கள் உன்னைக் கடவுள் எனக் கொண்டாடுவதில் தவறே காணமுடியாது. அவர்கள் உன்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொல்வது சரியே. ஆனால் நீ உன்னிடமே நம்பிக்கை வைக்க மறக்காதே. உன்னிடம் நீ நம்பிக்கை வைத்து, நீயே உண்மையின் சொரூபமாக மாறினால் ஒழிய நீ கடவுளாக ஆக முடியாது என்பதையும் நினைவில் வை. இனி நான் உன்னைப் பார்ப்பேனா என்பது சந்தேகமே. ஆனால் என் ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு. ஒருவேளை உனக்கு என் உதவி தேவைப்பட்டால் இந்த கருடர்களில் ஒருவனை அனுப்பு. நான் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. “

இரு கைகளையும் தூக்கி இருவரையும் ஆசீர்வதித்த பரசுராமர் தன்னுடைய இணை பிரியா ஆயுதமான கோடரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் உருவம் மறையும் வரையில் கண்ணனும், பலராமனும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
**************************************************************************************

அதற்குள் மதுராவில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போமா?? சக்கரவர்த்தி ஜராசந்தனின் படைகள் யமுனைக்கரையில் தண்டு இறங்கினர். தேர்ப்படையிலேயே குறைந்தது ஐநூறு தேர்களும் அவற்றை ஓட்டிப் போர் புரிய அதிரதிகளும், மஹாரதிகளுமாக இரண்டாயிரம் பேர்களும் இருந்ததாய்ப் பேசிக்கொண்டனர். இதைத் தவிர யானைப்படைகளும், குதிரைப்படைகளும் காலாட்படைகளுமாக நிறைந்து காணப்பட்டு யமுனைக்கரையே அல்லோலகல்லோலப் பட்டது. யானைகளுக்குத் தண்ணீர் காட்டுவோரும், குதிரைகளைக் குளிப்பாட்டுவோரும், தாங்களும் அமிழ்ந்து குளிப்பவர்களுமாக ஒரே களேபரமாய் இருந்தது. இன்னொரு பக்கம் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன. வாள்களும், வேல்களும், கோடரிகளும், சூலங்களும், குத்தீட்டிகளும் அந்த மத்தியான வெயில் பட்டு பளீர் பளீர் என மின்னலைப் போல் ஒளி வீசியதானது, கோடைக்காலங்களில் திடீர், திடீர் என ஏற்படும் மேல்வானத்து மின்னல்களை நினைவூட்டியது.

அங்கே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தன் கூடாரத்தை நியமிக்கச் சொல்லி இருந்த ஜராசந்தன் கூடாரத்துக்கு வெளியே ஆலமரத்தடியிலேயே தன் மதிய உணவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் உயரம் பிரமிக்க வைத்தது எனினும், அவன் உடலும் அதற்கேற்றவாறு அமைந்திருந்ததால் உயரத்தைக் குறைத்தே காட்டியது. ஒரு காலத்தில் தேர்ந்த மல்யுத்த வீரனாய் இருந்தவன் என்பதைக் காட்டும் வண்ணம் இறுகிய தசைநார்கள் காணப்பட்டாலும், வயதின் காரணமாய் ஏற்பட்டிருந்த சிறு தொந்தியானது அதெல்லாம் பழங்கால நிகழ்வு எனச் சொல்லாமல் சொல்லியது. அவன் முகமோ இறுகிக்கிடந்தது. அவனுக்குத் தேவைப்படும்போது உணர்ச்சிகளை வெளிக்காட்டியும், தேவையில்லாச் சமயம் உணர்வுகளைத் துளிக்கூடக் காட்டாமலும் அவனோடு பூரண ஒத்துழைப்புச் செய்தது. தற்சமயம் அவன் குரோதத்தின் உச்சத்தில் இருந்தான். அவன் முகமும், தீ போல் ஜொலித்த இருகண்களும் அதை நன்றாகவே சுட்டிக் காட்டின.

ஹா! ஹா! பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன் நாட்டின் வழியே ஜராசந்தனும், அவன் படைகளும் செல்ல அநுமதி தர மறுத்துவிட்டான். ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் மகிமைக்கு நேர்ந்த இழுக்கு! அவமதிப்பு. இதுவே வேறொரு சமயமாக இருந்தால் பாஞ்சாலத்தினுள் புகுந்து அந்த துருபதனின் தலைநகரான காம்பில்யத்தையே எரித்துச் சுட்டுப் பொசுக்கி இருக்கலாம். ஆனால், ஆனால்! ஹா! ஹா! என்ன ஒரு தர்மசங்கடமான நிலை! இருக்கட்டும், ஆனாலும் சமாளிக்கலாம். நான் யார்? ஜராசந்தன்!

*

Tuesday, June 08, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்!

பரசுராமரின் கதை!

பரசுராமரின் ஆலோசனைப்படியே கண்ணனும், பலராமனும் அவருடனேயே கோமந்தக மலைப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் ஓர் அடர்ந்த காட்டைக் கடந்ததும் எதிரே தோன்றியது ஒர் உயர்ந்த அழகான எளிதில் ஏறமுடியாத ஒரு மலைத் தொடர். மலையின் பெரிய பெரிய மரங்களும் அதில் வசிக்கும் பட்சிகளின் வர்ணஜாலமானக் கூச்சல்களும் மனதை நிறைத்தன. நேராகவும், செங்குத்தாகவும் நின்ற அந்த மலையில் ஏறுவது கடினமான ஒன்று. எனினும் பரசுராமர் முன்னே செல்ல கண்ணனும், பலராமனும் பின் தொடர்ந்தனர். பலராமனுக்கு ஆவலை அடக்க முடியாமல், பரசுராமரிடம், “எங்கள் தெய்வமே, அத்தனை மன்னர்களையும் வென்று இந்த பூமியையே உங்கள் காலடிக்குக் கீழ் கொண்டு வந்தும் ஏன் நீங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள்?” என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, “ஆஹா, உங்கள் போர் ஆசையை நீங்கள் தணித்துக்கொள்ளாமல் தொடர்ந்திருந்தீர்களானால்?? இந்த பூமியில் இவ்வளவு தைரியமாக எந்த அரசனும் நடமாட முடியுமா?? அனைவரும் சாம்ராஜ்யப் பேராசை பிடித்து அலைவார்களா? ஆஹா, இந்த ஜராசந்தன்!! அவனுக்குத் தான் இத்தனை துணிவு வந்திருக்குமா?”

“உண்மைதான் பலராமா! அனைவருக்கும் இது ஏதோ புதிராகவே இருந்து வருகிறது. உண்மைதான், நான் க்ஷத்திரியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வென்றேன் தான். ஆனால் எதற்காக?? கார்த்தவீர்யார்ஜுனனை நான் கொன்றதுக்கு ஒரு காரணம் உண்டல்லவா? என் தந்தையைக் கொன்றதோடு அல்ல. அவன் அழிக்க முடியாத சூரிய, சந்திரர்களின் வான் பயணத்துக்கு ஒரு சவாலாக இருந்தான். அனைத்து தேவர்களையும் தூசு போல் கருதினான். அவனுடைய ஆயிரம் கைகளினாலும் மிகவும் பலம் பொருந்தியவனாக இருந்ததோடு அல்லாமல், நம் சநாதன தர்மத்தின் கோட்பாடுகளைப் பரிகசித்தான். அவற்றைச் சற்றும் மதிக்கவில்லை. இவை எதுவும் புனிதமானதாக அவன் கருதவில்லை. அவனைத் தவிர மற்ற யாரையும் உயர்வாக அவன் எண்ணவில்லை. அனைத்தும் அவனுக்கு அடங்கியவையாக எண்ணினான். “

“மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய வசிஷ்டரின் ஆசிரமத்தை அழித்தான். அதை முற்றிலும் எரித்தான். என் தந்தையும், தவங்கள் செய்து சிறந்த நிலையை அடைந்தவருமான ஜமதக்னி முனிவரைக் கொன்றான். எங்கள் ஆசிரமத்தையும் அழித்தான். நம்மை உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி அஞ்சி ஓடச் செய்தான். அவன் அழிக்கப் படவேண்டியவன். அதுவே முறை. அதனாலேயே அழிக்கப் பட்டான்.” தீர்மானமாய்ச் சொன்னார் பரசுராமர். “ஆஹா, அப்படியா? இது எங்கனம் நடந்தது? அப்போது நம் அரசர்களும், அவர்களின் வீரர்களும் என்னதான் செய்துகொண்டிருந்தனர்??” கண்ணன் ஆவலுடன் கேட்டான்.

“நம் அரசர்கள் ஒருவருக்கொருவர் தங்களில் எவர் பெரியவர் எனச் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லையே? இந்தக் கார்த்த வீர்யார்ஜுனன் வீரன் மட்டுமல்ல. அவன் நேர்மையற்ற முறையில் அரசாளவும் செய்தான். சூதிலும், வஞ்சனையிலும் சிறந்து விளங்கினான். வன்முறையிலும், தான் தான் பெரியவன் என்று எண்ணுவதிலும் சிறந்து விளங்கினான். தவங்கள் புரிவதிலும், யாகங்கள் செய்தும், வாழ்க்கையை மேம்படுத்த வேண்டியவர்களை இகழத்தக்க ஒரு புழுவாக மாற்ற எண்ணினான். அனைவரும் அவன் புகழைப் பாடுவதற்கே பிறந்திருக்கிறார்கள் என எண்ணும்படி நடந்து கொண்டான்.””

“ம்ம்ம்? அனைத்தையும் ஒரு வாறு சமாளித்துக் கடந்து வந்திருக்கிறீர்கள் அன்றோ?”

“ஆம், இந்த உலகம் அமைதியாக இருக்கவே விரும்புகிறது. இதன் ரீதியில் செல்லவே நினைக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் ஜப, தபங்களைச் செய்து கொண்டு, சத்தியத்தை நோக்கி இயற்கையின் வழியில் செல்லவே விரும்புகிறார்கள். ஆகவே இத்தகைய அசுரர்கள் அழிக்கப் படவேண்டியவர்களே. இப்படித் தான் ஹைஹையர்கள் தொந்திரவு கொடுக்கவே நான் அவர்களையும் அழிக்க வேண்டியதாயிற்று. இந்தப் பரந்த பூவுலகில் அமைதியாகவு, நிம்மதியாகவும் வாழ விரும்புகிறவர்களுக்காக அத்தகையதொரு அமைதியையும், நிம்மதியையுமே நான் கொடுக்க விரும்பினேன். எனக்கு அரச பதவியோ, சக்கரவர்த்தி என்ற பெயரோ தேவையில்லை. அரசபோகத்தில் ஆழ்ந்திருக்கவும் நான் விரும்பவில்லை. அரசாட்சி புரியவும் எண்ணவில்லை. என் கடமை இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. அதற்காகவே நான் பிறந்ததாக உணர்ந்தேன். ஆகவே அதைச் செய்து தர்மத்தை நிலை நாட்டினேன்.”

“ஆஹா, குருவே, எத்தகையதொரு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறீர்கள்? அனைத்து ராஜ்யங்களும் உங்கள் கையில். இருந்தும் அவற்றைத் திருப்பிக் கொடுப்பதென்றால் எவ்வளவு நெஞ்சுறுதி வேண்டும்? ஆனால் நீங்கள் வெகு சுலபமாக அதைச் செய்து காட்டிவிட்டீர்கள். அற்புதமான விஷயம் இது.” என்றான் கண்ணன்.

“ஒரு அதிசயமும் இல்லை. நான் ஆயுதங்களைத் தரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தரித்தேன். யுத்தம் செய்தேன். க்ஷத்திரிய தேஜஸ் மங்கிப் போய் இருந்தது. அது மங்கலாம் எப்போதேனும் ஒரு சில முறைகள். அது சில சமயங்களில் தேவையும் கூட. எனினும் மற்றொரு நல் அரசனால் அது திரும்ப ஜொலிக்க ஆரம்பிக்கும். ஆனால் பிரம்ம தேஜஸ் மட்டும் எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கவேண்டும். சற்றேனும் மங்கக் கூடாது. இந்த ஞான தீபம் எப்போதுமே ஒளிரவேண்டும். அப்போது தான் இந்த பூமி சரியான பாதையில் செல்லும். இவ்வுலகில் தர்மமும் நிலைநாட்டப் படும். “ என்றார் பரசுராமர். அதற்குள்ளாக அவர்கள் மலையின் ஒரு பாகத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே ஒரு சமவெளி காணப்பட்டது. சற்றுத் தூரத்தில் மக்கள் குடியிருப்புகளும் தெரிந்தன. பரசுராமரின் உருவத்தைத் தூரத்திலேயே கண்ட சில குடி மக்கள் கோஷங்கள் எழுப்ப உடனேயே அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

Friday, June 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

பரசுராமரின் ஆலோசனை!

பரசுராமர் இருவரும் மதுராவை விட்டுக் கிளம்பியதை முழு மனதோடு வரவேற்றார். “மரணம் என்பது தர்மம் பிறழும்போது மட்டுமே வரவேண்டிய ஒன்று. தர்மத்தின் பாதையில் செல்லும்போது பிடிவாதமாய் மரணத்தைத் தழுவுவேன் என்பது தர்மத்திலிருந்து பறந்து வருவதை ஒத்தது. அது வீரமும் அன்று. தற்பெருமை என்றே சொல்லலாம். கோழைத்தனம் என்று சொல்கிறவர்கள் சொல்லட்டும். தர்மத்தை நிலைநாட்டும் யுத்தத்தில் எப்போது யுத்த களத்தில் தோன்றவேண்டும், எப்போது மறையவேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றே.” என்று சொல்லி இருவரையும் ஆசீர்வதித்தார். “ஆசாரியரே, இந்த உலகம் எங்களை யுத்த பூமியை விட்டுத் தப்பி ஓடிய கோழைகள் என்றே சொல்லும், சொல்கிறது.” என்றான் கண்ணன்.

“கண்ணா, உலகம் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அது முக்கியமல்ல. யுத்தபூமியில் நின்று போராட எவ்வளவு மன உறுதியும், தைரியமும், வீரமும் வேண்டுமோ அத்தனையும் அதை விட்டு வெளியே வரவும் இருக்கவேண்டும். நீ செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றே வாசுதேவ கிருஷ்ணா!” என்றார் பரசுராமர். அவ்வளவில் கண்ணன் தாங்கள் இருவரும் கரவீரபுரம் சென்று ஸ்ரீகாலவ வாசுதேவனிடம் அடைக்கலம் கேட்கப் போவதாய்ச் சொன்னான். மேலும் அவர்கள் யாதவகுலத்தின் ஒரு கிளை அவன் என்பதாலும் உதவுவான் என நம்புவதாயும் கூறினான். பரசுராமரோ, “ஸ்ரீகாலவனால் உங்களுக்கு உதவி எதுவும் கிட்டாது. அவன் சுயநலமே உருவெடுத்தவன். திமிர் அதிகம். இந்த உலகிலேயே அவனை விட்டால் வேறு யாரும் உயர்வு என ஒப்புக்கொள்ளாதவன். தன்னைத் தானே அந்தப் பரமாத்மா என்றும் அவனே கடவுள் எனவும் நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னையே அந்தப் பர வாசுதேவன் என அறிவித்துக்கொள்கின்றான். அவன் நாட்டில் உள்ள அத்தனை படித்த மனிதர்களையும், வேத சாஸ்திரங்கள் அறிந்த பிராமணர்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டான். அவனைக் கடவுள் என்றும் பர வாசுதேவன் என்றும் சாக்ஷாத் அந்த மஹாதேவனே அவன் தான் எனவும் ஒப்புக்கொண்டால் ஒரு வேளை உனக்கு அடைக்கலம் கொடுக்கலாம். ஆனால் அதற்கும் அவன் ஒரு விலையோ அல்லது காரணமோ வைத்திருப்பான். அந்த விலை ஜராசந்தனிடம் உன்னை ஒப்படைப்பதாய்க் கூட இருக்கலாம். “ என்றார் பரசுராமர். “மேலும் வாசுதேவ கிருஷ்ணா, அவன் ஒரு சிறந்த வில்லாளி என்பதை மறவாதே!”

“ஆசாரியரே, கரவீரபுரத்தில் எங்களுக்கு அடைக்கலம் கிடைக்காதெனில் நாங்கள் எங்கே செல்வது?” கண்ணன் பரசுராமரை ஆலோசனை கேட்டான். பரசுராமர் சற்றே நிதானித்தார். பின்னர், “கண்ணா, ஜராசந்தன் நீங்கள் இருவரும் தப்பிவிட்டதைப் பற்றி எப்படி எதிர்கொள்வான் என நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“நிச்சயமாய் அவனுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் இதற்காக மதுராவின் மற்ற யாதவர்களைக் கொடுமை செய்வான் எனத் தோன்றவில்லை. எங்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டித் தானே அவன் கோரிக்கை? ஆகவே அவன் எங்களை விட்டுவிடுவான் என எனக்குத் தோன்றவில்லை. நாங்கள் எங்கே செல்கிறோம், எங்கே அடைக்கலம் கேட்கிறோம் என்பதை எல்லாம் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டு எங்களைப் பழிவாங்கவே நினைப்பான். ஓட ஓட எங்களை விரட்டுவான் என்றே நினைக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“கண்ணா, இவ்வளவு தூரம் நாட்டின் மேற்குக் கோடியில் உங்களை அவன் தேடிக்கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அதை அவனும் அறிந்திருப்பான் அல்லவா?” என்றார் பரசுராமர்.

“இருக்கலாம் ஆசாரியரே! ஆனால் என் மாமாவான கம்சனை நான் கொன்றதனால் ஜராசந்தனின் கெளரவமே பாழ்பட்டு விட்டதாய் அவன் நினைக்கிறான். கம்சன் அவனுடைய படைகளுக்குத் தளபதி மட்டுமல்ல, அவன் நம்பிக்கைக்கு உகந்தவன், மேலும் அவன் இரு பெண்களின் கணவன். ஜராசந்தனின் மதிப்புக்கும், மரியாதைக்கும், பாசத்துக்கும் உகந்த மாப்பிள்ளை. கம்சன் மூலமே மற்ற அரசர்களிடம் தன் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தான் ஜராசந்தன். இப்போதோ? கம்சன் இறந்ததும், மற்ற அரசர்களிடம் தன் பிடி தளர்ந்துவிட்டதாயும் அவனுக்கு ஓர் எண்ணம். கம்சனின் மரணம் அவனை உலுக்கிவிட்டது. மேலும் எங்கள் தலைமையின் கீழ் மதுரா நகரம் இருந்தால் அவனுடைய மகத சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர ஆபத்து என்ற எண்ணமும் அவனுக்கு இருக்கலாம்.”

“நீ சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன் வாசுதேவ கிருஷ்ணா. ஆனால் நான் உன்னிடத்தில் இருந்தால் இப்போதைய இந்த நிலைமையில் எந்த அரசனிடமோ, இளவரசனிடமோ அடைக்கலம் தேடிப் போகமாட்டேன். நீ சென்றாயானால் அவர்களின் சுயலாபத்திற்கு உன்னைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் எவரையும் நம்ப முடியாது. நீ உன்னை நீயே பலப்படுத்திக்கொள்ளவேண்டும். உன் சொந்த முயற்சியால் நீ பலப்படுத்திக்கொண்டு அனைவரையும் வெல்வாயாக. “ என்றார்.

“அதுவே என் விருப்பமும்” என்றான் கண்ணன். பரசுராமர் கண்ணனையும் , பலராமனையும் கடற்கரையில் இருந்த கோமந்தக மலைக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறார். அந்த இடமும், அந்த மலையின் சமவெளிகளும் கண்ணனுக்குப் பாதுகாப்பை அளிக்கவல்லது என்றும் கூறினார். அது முற்றுகையைத் தாங்கும் வல்லமை கொண்டதா எனக் கண்ணன் கேட்கப் பரசுராமர் கூறுகிறார்: கிருஷ்ணா, அவ்வளவு எளிதில் அதை அடைய முடியாது. குதிரைகளோ, யானைகளோ, அல்லது ரதங்கள் மூலமோ அதன் மீது ஏறுவது என்பது இயலாத ஒன்று. மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த அதன் மீது ஏறுவதும் கஷ்டம். செங்குத்தாகவும் குறுகலுமான மலைப்பாதை." தொடர்ந்தார் பரசுராமர். "ஆனால் மிக அழகான இயற்கையின் எழில் கொஞ்சும் இடம். அங்கே வாழும் மக்களும் மிகவும் அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். எவருக்கும் தீங்கு நினையாதவர்கள். அவர்களைக் "கருடர்கள்" என அழைப்பார்கள். ஏனெனில் அவர்கள் யுத்தம் செய்ய நேரிட்டால் அப்போது கழுகுகளைப் போலவும், கருடனைப் போலவும் முகமூடி அணிந்து கொண்டு செல்வார்கள். ஒரு முறை அவர்களுக்கு நான் ஒரு நன்மை செய்தேன், ஆகையால் என்னிடம் மிகவும் பக்தி கொண்டவர்கள். என் சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர்களின் தலைவன் மிகவும் நல்லவன், அவன் உன்னை ஒரு பொழுதும் காட்டிக்கொடுக்க மாட்டான். உனக்கு உதவியே செய்வான்." என்றார்.

Wednesday, June 02, 2010

இறைவனிடம் ஒரு சிறுவனின் வேண்டுகோள்!


Subject: FW: Try not to become a TV !!!!!!!! Eye Opener for all parents > A teacher from Primary School asks her students to write an essay about what they would like God to do for them... > At the end of the day while marking the essays, she read one that made her very emotional. > Her husband, that had just walked in saw her crying and asked her: - What happened? > She answered - Read this. It's one of my student’s essays… > “Oh God, tonight I ask you something very special: Make me into a television. I want to take its place. Live like the TV in my house. > Have my own special place, and have my family around ME. To be taken seriously when I talk... > I want to be the centre of attention and be heard without interruptions or questions. I want to receive the same special care that the TV receives when it is not working. Have the company of my dad when he arrives home from work, even when he is tired. > And I want my mom to want me when she is sad and upset, instead of ignoring me... And... > I want my brothers to fight to be with me... I want to feel that family just leaves everything aside, every now and then, just to spend some time with me. And last but not least make it that I can make them all happy and entertain them... > Lord I don't ask you for much... I just want to live like every TV “ At that moment the husband said: - 'My God, poor kid. What horrible parents! > She looked up at him and said: - 'That essay is our son's!!!


நான் இருக்கும் குழுமம் ஒன்றில் நண்பர் முத்துமணி என்பவர் இந்த மடலை அனுப்பி இருந்தார். படிச்சதும் மனசைத் தொட்டது. அனைவரும் படிப்பதற்காக இங்கே போட்டிருக்கேன். கண்ணீர் வர வைச்சது.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம் பாகம்

பரசுராமரின் ஆசிரமத்தில் கண்ணன்!


“அண்ணா, நாம் நம்முடைய வீரத்தையும், சூரத்தனத்தையும் காட்டுவதற்கு இது சரியான நேரம் அல்ல. நாம் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம் என ஒன்று உள்ளது. அதைத்தான் முதலில் நாம் காக்கவேண்டும். தர்மத்தை நிலை நிறுத்தப் பாடுபடவேண்டும். ஒரு அநாவசியமான எதிரியோடு, அநாவசியமான யுத்தம் செய்து ஜெயிப்பதில் நம் வீரம் இல்லை. அதில் நாம் திருப்தி அடையவும் கூடாது. இப்போது நாம் யுத்தகளத்தை விட்டுத் தப்பிய கோழைகள் போல ஒரு சாதாரண மனிதனுக்குக் கூடத்தோன்றலாம். தோன்றும். ஆனால் யுத்தம் செய்யாமல் விலகி நிற்பதற்கும் மிகுந்த மனோ தைரியம் தேவை. இதை நான் விகத்ரு, அக்ரூரர், நம் தந்தை, பாட்டனார் உக்ரசேனர் ஆகியோருடன் பேசி விவாதிக்கும் முன்னரே முடிவு செய்துவிட்டேன். என்னுடைய முடிவு அவர்களுக்கும் உகந்ததாக அமைந்தது.” என்றான் கண்ணன்.

மலையின் சரிவுகளில் கண்ணனும், பலராமனும் அழகும், அமைதியும் நிறைந்த ஒரு ஆசிரமத்தைக் கண்டார்கள். அங்கே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இடையனைக் கேட்டபோது, சாக்ஷாத் அந்த ஈசனைப் போலவே தோற்றமளித்த ரிஷி பரசுராமர், ஒரு காலத்தில் தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்தவர் சில நாட்கள் தங்கி இருப்பதற்காக வந்திருக்கிறார் என்னும் செய்தி கிடைத்தது. கிருஷ்ணனும், பலராமனும் அங்கே வரப்போவது பற்றியும் பரசுராமருக்கு கர்காசாரியார் அறிவிப்புச் செய்திருந்தார். கிருஷ்ணனுக்கு பரசுராமரை நேரில் சந்திக்கப் போகும் ஆவல் மேலிட்டது. அவருடைய சக்தியும், அவர் சீடர்களிடம் தன் அத்தனை வித்தைகளையும் கற்பித்து வந்தது பற்றியும் பலரும் பல்வேறுவிதமாகச் சொல்லிக் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அதோடு பழமையின் பரம்பரையான கலாசாரங்களை எடுத்துக் காட்டும் ஒரு மொத்த வடிவாகவும் அவர் திகழ்ந்தார். அனைத்து ரிஷிகளும், மன்னர்களும், சக்கரவர்த்திகளும் அவர் பெயரையே மிகுந்த மரியாதையுடன் உச்சரித்தனர். அவர் வாழும் இந்தக் காலகட்டத்தில் தாங்களும் வாழ்வதை ஒரு பெருமையாகக் கொண்டனர். அவரை பார்கவன் என அழைப்பதன்மூலம் அவரே அந்த ஆதியும் அந்தமுமில்லா பகவான் என நினைத்தனர்.

பரசுராமரின் முன்னாள் கதையைப் பற்றி நினைத்தான் கிருஷ்ணன். ஆஹா, அவர் வாழ்ந்த காலம் எத்தகையதொரு காலம்? வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற பல ரிஷிகள் அப்போது இருந்தனரே? புனிதமான சரஸ்வதி நதிக் கரையில் அன்றோ அவர் தகப்பனான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் வேதங்களையும், அஸ்திர, சஸ்திர வித்தைகளையும் கற்றிருப்பார்? அயோத்தியின் ஸ்ரீராமனுக்கும் முந்தைய காலம் அது. ஆயிரம் கைகள் உண்டு என்று அனைவராலும் பேசப்படும் காத்தவீர்யார்ஜுனனையே அழித்தவர் அன்றோ? அனைத்து க்ஷத்திரியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார் அல்லவா? இந்த உலகே அவர் காலடியில் வந்துவிட்டது. வடக்கே பனி பொழியும் இமயத்திலிருந்து தெற்கே பிரவாஹித்து ஓடும் நர்மதையையும் தாண்டிய பிரதேசம் அவர் பேரைக் கேட்டாலே நடுங்கி விதிர் விதிர்த்தது. ம்ம்ம்ம்ம்ம் வெற்றியின் உச்ச கட்டத்தில் காச்யப முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் ஜெயித்த அனைத்து நாடுகளையும் அவரிடம் திரும்பக் கொடுத்து, தர்மமும், நீதியும் பிறழாமல் ஆட்சி புரியச் சொன்னார்.

பின்னர் அவர் இந்த மேற்குக் கடற்கரைக்கு வந்து, கடலரசனிடம் தனக்கென ஒரு பூமியைக் கேட்டு வாங்கினார். அவர் கேட்டதும் கடலரசனும் உள்வாங்கிச் சென்றுவிட்டானாமே? அந்த பூமியைத் தான் அவர் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் இப்போது. அங்கே தான் நாம் வந்திருக்கிறோம். இத்தனையும் எழுதும் ஒரு மணித்துளிக்கும் குறைவான் நேரத்தில் கண்ணனின் நினைவலைகளில் வந்துவிட்டன. இங்கேதான் அந்தப் பிரபலமான துறைமுகம் ஷூர்பரகா உள்ளது. அங்கே தினமும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து செல்கின்றனவாம். இன்னமும் அவர் ஒரு வாழும் வழிகாட்டியாக அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் தீபமாக ஒளிர்கின்றார். அவர் காலம் இன்னும் முடியவில்லை. இப்படிப்பட்ட ரிஷி, முனிவர்கள் வேண்டும்போது காலத்தைத் தானே முடித்துக்கொள்வார்கள். அவரிடம் வந்து தரிசித்துச் செல்கின்றவர்களும் சரி, சீடர்களும் சரி அவர் ஒரு வாழும் கடவுள் எனச் சொல்கின்றனர். மனம் நிறையப் பணிவும் விநயமும் கொண்டு கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரின் ஆசிரமத்தை அடைந்தனர். சீடன் ஒருவன் வழிகாட்ட, யாககுண்டத்தின் எதிரே அமர்ந்திருக்கும் பரசுராமரைச் சென்றடைந்தனர்.

மிக மிக உயரமாகவும், நல்ல பலம் பொருந்தியவராகவும் காட்சி அளித்தார் பரசுராமர். அவர் தவத்தினால் மட்டுமின்றி அஸ்திர, சாஸ்திரப் பிரயோகங்களின் பலமும் அவர் பலத்தைக் கூட்டிக் காட்டியது. அரையில் அணிந்திருந்த புலித்தோல் அவரை ஈசனைப் போலவே காட்டியது. நீண்ட வெண் தாடி பாதி மார்பை மறைத்திருக்க, அருகே அனைத்து க்ஷத்திரியர்களையும் பயமுறுத்திய கோடரி, மிகவும் சாதுவைப் போல் கீழே கிடந்தது. ஒரு கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் இருந்தன. சற்றுத் தொலைவில் சில சீடர்கள் வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். சில சீடர்கள் பசுக்களுக்கு ஆகாரம் அளிக்க, சில சீடர்கள் சற்றுத் தொலைவில் காணப்பட்ட ஆசிரமக்குடிசைகளின் வாயிலில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து கொண்டிருந்தனர். பலராமனும், கண்ணனும், பரசுராமரைக் கண்டதும் பணிவோடு நமஸ்கரித்தனர். பரசுராமரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

“வாசுதேவக் கிருஷ்ணா, பலராமா, நீங்கள் இருவரும் இங்கே வரப் போகும் செய்தி எனக்குக் கிடைத்தே உங்களை வரவேற்க நான் இங்கே காத்திருக்கிறேன்” என்ற பரசுராமர் சிரிப்பு ஒரு குழந்தையினுடையதைப் போல் இருந்தது. ஒரு காலத்தில் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும், அவர்களின் இளவரசர்களையும் கண்டாலே ஈசனின் மூன்றாவது கண்ணோ என்று சொல்லத் தக்க அளவு நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்த கண்களில் இப்போது சாந்தமும், அமைதியும், அன்பும், பாசமும் காண முடிந்தது. இருவரையும் பார்த்து, “உங்கள் இருவரின் சாகசங்களைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது பயணக்களைப்பில் இருக்கும் நீங்கள் இருவரும் குளித்து, உண்டு, உறங்கிவிட்டு வாருங்கள். நிறையப் பேசவேண்டும்.” என்றார் பரசுராமர். ஒரு மூத்த சீடர் வந்து இருவரையும் அழைத்துச் சென்றார். இருவரும் குளித்து தங்கள் அநுஷ்டானங்களை முடித்து, உணவு அருந்தியதும், உறங்காமல் பரசுராமரைக் காண வந்தனர். தாங்கள் ஏன், எப்படி மதுராவை விட்டு வர நேர்ந்தது என்பதை விவரித்தனர்.