எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 30, 2006

My thoughts

My thoughts வெற்றிகரமாக முடிந்த பயணம்

கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த எங்கள் பயணம் இன்று காலை வெற்றிகரமாக முடிந்தது.மீண்டும் ஒரு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணம். எனக்குத் தெரிந்த வரை கடவுள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உலகத்து அழகை எல்லாம் அடக்கப் பார்த்து இருக்கிறான் என நினைக்கிறேன். எத்தனை முறை போனாலும் அலுக்காத பயணம். இந்த முறை கர்நாடகாவில் மங்களூரில் தொடங்கினோம். மங்களூர் வரை ரயில் பயணம். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கிக்கொண்டு அங்கிருந்து ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்று வட்டாரக் கோவில்களுக்குப் போய் வருவது திட்டம். திட்டப்படி போய் அறை எடுத்து அங்கிருந்து ஒரு வண்டியில் வெள்ளி காலை கிளம்பினோம். எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த டிரைவர் நசீர் அந்தப் பகுதியைப் பூகோள முறையில் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதே போல் மங்களூரில் நல்ல சாப்பாடு கிடைக்கும் இடமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதுவும் சைவ உணவு கிடைக்கும் இடம். அதே போல முதலில் அவர் அழைத்துச் சென்ற "Janatha Deluxe" என்ற ஹோட்டலில் காலை உணவு முடித்துக் கொண்டோம். அது மங்களூரின் முக்கியப் பகுதியான ஹாப்பன்காட்{ என்று நினைக்கிறேன்.} டில் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம்தான்.நாங்கள் இருந்த "Shamoons Palace" ஹோட்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்னால்.அங்கிருந்தும் நடந்து போகலாம். ஜனதா டீலக்ஸ் ஹோட்டலில் காபி மிகவும் அருமை.ரொம்ப சாப்பாடு பற்றி எழுதினால் சாப்பாடு பற்றிய பதிவாக மாறிவிடும். மங்களூரில் இருந்து முதலில் தர்மஸ்தலா போனோம். அதுவும் கொஞ்சம் மலைவழிப் பயணம் தான். காடுகள் செழிப்பாக இருக்கின்றன. நல்லவேளை முக்கால் பாகம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் கேரளாவிலும், கர்நாடகாவிலும் போய் விட்டன. நாம் இத்தனை நாட்கள் பொட்டலாக்கி இருப்போம். பின் மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று சொல்லிக்கொண்டுப் பக்கத்து மாநிலங்களிடம் கை ஏந்துவோம். அல்லது அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிர்பார்ப்போம். இரண்டு பக்கமும் அடர்த்த்த்த்த்த்தியான காடுகள். பார்க்கவே மனதுக்கு மிக ரம்மியமாக சந்தோஷமாக இருக்கிறது. தர்மஸ்தலா நாங்கள் போய்ச் சேர்ந்த போது 10-45(காலை) மணி இருக்கும். கர்நாடகாவில் உள்ள எல்லாக் கோவில்களும் கழிப்ப
றை வசதியோடு இருப்பது மிகச்சிறப்பு. எல்லா இடத்திலும் இலவசக்கழிப்பறை தான். மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. மக்களும் கண்ட இடத்தில் அசுத்தம் செய்யப் பழகவில்லை. ஸ்ரீமஞ்சுநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்ய நாங்கள் வரிசையில் போய் நின்றபோது மணி 11 ஆகி இருந்தது.ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தோம். ஆனால் தரிசனம் கிடைக்கும் போது 2-15 ஆகி விட்டது. திருப்பதி மாதிரி கூண்டுகள் கடந்து கோவில் கிட்ட வரும்போது 1 மணி ஆகிவிட்டது. அப்போது பூஜைக்காகக் கோவில் நடை 1/2 மணி நேரம் மூடிவிட்டு 1-45 போலத்திறந்து மறுபடி உள்ளே விடுகிறார்கள். இந்த மாதிரி கோவில் நடைமுறையில் உள்ள பூஜை செய்யும் நேரங்களில் மூடிவிட்டுப் பின் 1/2 மணிக்கெல்லாம் திறக்கிறார்கள்.தீபாராதனை சமயம் 3 யானைகள் வந்து மஞ்சுநாத ஸ்வாமிக்கு மிக அழகாக நமஸ்காரம் செய்கின்றன. கோவில் பிராகாரம் என்பதால் படம் எடுக்க முடியவில்லை. யானைப் பிரியையான எனக்கு அதுவே கடவுள் தரிசனம் போல இருந்தது.{ உண்மையில் நான் மிகவும் யானை நேசிப்பாளி. வலைப்பதிய வந்த கொஞ்சநாளிலேயே திருமதி துளசி அதற்கு PATENT வாங்கிவிட்டது தெரிந்ததாலும் தன் வாரிசாக பொன்ஸை நியமித்து விட்டதாலும் அடக்கி வாசிக்கிறேன்.} கடவுள் தரிசனம் செய்ய தினமும் 25,000 பேரிலிருந்து 50,000 பேர் வரை வருவதாகச் சொன்னார்கள். கர்நாடகாவிலேயே " திருப்பதி" மாதிரி அது ஒரு முக்கிய ஸ்தலம் ஆக இருந்து வருகிறது. எல்லாக் கோவில்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடுகிறார்கள். சாப்பாடு என்றால் சாதம், சாம்பார், ரசம் மற்றும் மோர் மட்டும்தான். கர்நாடக வழக்கப்படி முதலில் ரசம், பின் சாம்பார் அதற்குப்பின் மோர். சாதம் நிறையப் போடுகிறார்கள்.ஊறுகாய்ப்பிரியர்கள் ஊறுகாய் என்று எழுதிப்பார்த்துக்கொள்ளலாம். இந்தச்சாப்பாடு சாப்பிடக் கூட்டம் நிறைய இருந்தாலும் கூடங்கள் 2,000லிருந்து 5,000 பேர் வரை சாப்பிடுகிற மாதிரி மிகப் பெரியனவாய் உள்ளது. அத்தனை பேருக்கும் எவர்சில்வர் தட்டு, தம்ளர் எல்லாம் மிகச்சுத்தம், சுத்தம். சுத்தம்.தண்ணீரும் நிறைய இருக்கிறது. அதை உபயோகம் செய்வதும் முறையாக இருக்கிறது. தர்மஸ்தலாவில் நேரம் ஆகிவிட்டபடியால் நாங்கள் கோவிலில் சாப்பிடவில்லை. வெளியில் சிம்பிளாக ஆகாரம் (என் கணவர் மட்டும்) சாப்பிட்டார். நான் ஜூஸ் மட்டும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சுப்ரமண்யா போனோம். அதற்குள் மாலை 4 மணி ஆகிவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்த்து விட்டுக் களைத்து வந்த எங்களை ஸ்ரீ சுப்ரமண்யர் கூட்டம் அதிகம் இல்லாதபடிக்குப் பார்த்துக் கொண்டார். ஆகவே மிகவும் நல்ல முறையில் தரிசனம் முடிந்தது. அதற்குப்பின் அங்கேயே காபி மட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்ப மங்களூர் கிளம்பினோம். எல்லா இடங்களிலும் காபி அநேகமாகத் தரமாக இருக்கிறது. மலைப்பிரதேசங்களில் நிறைய காபி, ஏலம் செடிகள்தான் தென்படுகிறது. எல்லாவீடுகளும் கேரள முறையில் கட்டப்பட்டு தோப்புக்கள் சூழ்ந்து உள்ளன. வீடுகளில் பலா மரங்கள் காய்த்துத் தொங்குகின்றன. ரோடோரங்களில் இருந்தாலும் யாரும் வெட்டி எடுத்துப் போவது இல்லை. அதே போல மாமரங்களும் மற்றப் பயன் தரும் மரங்களும் இருக்கின்றன. யாரும் யாரோடதையும் எடுப்பது கிடையாது. அவரவர்கள் தங்களுக்கு உள்ளதை வைத்துத் திருப்தியாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. கோவில் கள் போடும் இலவசச் சாப்பாடு தவிர அரசாங்கம் எதுவும் இலவசமாகத் தருவதாகத் தெரியவில்லை.கோவில்களும் கேரளப்பாணி தான். பூஜை முறைகளும் அப்படித்தான். எல்லாக் கோவில்களிலும் தரிசனம் முடிந்து வந்ததும் கொஞ்சதூரத்திலேயே ஒரு அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டு தீர்த்தம், சந்தனம் மற்றும் அர்ச்சனை செய்த உதிரிப்பூ முதலியன தருகிறார்கள்.எல்லாருமே வரிசையில் வருவதால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. கடவுள் சன்னதியில் நாம் நிறைய நேரம் தரிசனம் செய்து கொண்டு நின்றால் கோபிப்பதும் இல்லை. முடிந்த வரை 5 நிமிஷமாவது நேரம் தருகிறார்கள். அதற்குப்பின்னாலும் போகச்சொல்லி வேண்டுகோள்தான் விடுக்கிறார்களே தவிர விரட்டுவது கிடையாது. சுப்ரமண்யவிலிருந்து மங்களூர் போய் அங்கே அரபிக்கடலைப் பார்த்து விட்டுப் பின் மங்களாதேவி கோவில் போனோம். கூட்டம் நிறைய இருந்தாலும் கட்டுப்படுத்துவதால் சீக்கரம் தரிசன்ம் கிடைத்தி விடுகிறது. விதிவிலக்கு தர்மஸ்தலா மட்டும்தான். வரிசையிலேயே ஆயிரக்கணக்காகக்காத்து இருக்கின்றனர். மங்களாதேவி கோவிலில் இருந்துப் பக்கத்தில் உள்ள கத்ரி (நம்ம கோபால்நாத் ஊரு தாங்க)போனோம். அங்கே பல படிகள் மேலே ஏறிப்போனால் பாண்டவர் குகை, சீதாதேவியின் கிணறு முதலியனவும் மற்றும் சிலப்புராணகாலச்சின்னங்களும் இருக்கிறாதாகச் சொன்னார்கள். அதற்குள் மணி 8 ஆகி இருந்தது. நாங்கள் ஒரு 30 படி ஏறினோம். ஒவ்வொரு படியும் 2 அடிக்கு மேல் உயரம். அதற்கு மேல் என்னால் முடியவில்லை. ஆகவே என்னைத் தனியாக விடமுடியாமல் (எல்லாம் ஒரு சமாளிப்புத்தான். ஊன்மையில் அவருக்கும் முடியவில்லை) திரும்பிவிட்டோம்.மற்றவை நாளை.

Wednesday, April 19, 2006

My thoughts

My thoughts ஒரு முக்கிய அறிவிப்பு

இதனால் வ.வா. சங்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சங்கத்தின் நிரந்தர உறுப்பினரும், மகளிர் அணியின் ஒப்பற்ற தலைவியும் ஆகிய நான்( எவ்வளவு தன்னடக்கம் பார்த்தீங்களா) 10 நாட்கள் சுற்றுலா செல்லவிருப்பதால் சங்கத்தின் முக்கிய பருப்பு சீச்சீ, (இந்த பார்த்திபன் எழுதியதைப் படித்த விளைவு) பொறுப்பு செல்வி.பொன்ஸ் அவர்களிடம் ஒப்படைக்க அருள் கூர்ந்து இசைந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(அப்பாடா) யாருங்க அங்கே நிம்மதிப் பெருமூச்சு விடுவது? தேவும், சிபியுமா?இனிமேல் குமார காவியம் தடையின்றித் தொடரும் என்று சிபியும், சங்க வேலைகளுக்கு இடையூறு இல்லை எனப் பார்த்திபன்களும், கட்ட துரைகளும், சரளாக்காவும் விடும் பட்டாசுச்சத்தமும் கேட்கிறது. எல்லாம் ஒரு 10 நாளுக்குத்தான் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி பிரிக்கும் வேலைக்குத் தடை நீங்கியது என்று தேவ் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கத் தொடங்கிவிட்டதாக அறிகிறேன்.

Monday, April 17, 2006

My thoughts

My thoughts எனக்குப் பிடித்தநாலு

எல்லாரும் நாலு நாலு என்று பதிவு போட்டார்கள். அந்த மாதிரி நானும் போட வேண்டாமா? அதற்குத் தான் இந்தப் பதிவு. ஆனால் ஒரு வித்தியாசம், என்னை யாரும் அழைக்கவில்லை. என் பதிவிற்கு வரும் அம்பி, மனு மற்றும் பொன்ஸ் போன்றோருக்கு இந்த விஷயம் புதியது.அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? எல்லாவற்றுக்கும் தான் இது.

முதலில் எனக்குப் பிடித்த ஊர் என்றால் நான் சிறு வயதிலே அதிகம் மதுரையை விட்டுப் போனதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் சுப்பிரமணிய புரத்திலோ அல்லது ஜெய்ஹிந்த் புரத்திலோ அப்போது இருந்த தாத்தா (அம்மாவின் அப்பா) வீடுதான் லீவுக்கு எல்லாம். அதையே மிகப் பெருமையாகத் தோழிகளிடம் ஊருக்குப் போவதாகச் சொல்லிக் கொள்வேன். தாத்தா வீட்டுக்கும் போவது என்பது மீனாக்ஷி கல்யாணம் முடிந்து அழகர் ஆற்றில் இறங்கிப்பின் வண்டியூர் போன பிறகு தான். அது வரை நாங்கள் இருந்த வீட்டு வாசம் தான். முதலில் நாங்கள் எனக்கு நினைவு தெரிந்தபோது இருந்த வீடு கழுதை அக்ரஹாரம் என்று அழைக்கப்பட்ட மேலப் பாண்டியன் அகழி வீதி தான். அங்கிருந்து திண்டுக்கல் ரோடு கொஞ்சம் தாண்டி ராஜா பார்லி (முன்னால் இருந்தது) பக்கத்தில் உள்ள மேல அல்லது கீழ அனுமந்தராயன் கோவில் தெரு வழியாக மேல ஆவணிமூலவீதி வந்துப் பின் வடக்காவணி மூல வீதியில் இருந்த ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். என்னுடைய கனவு எல்லாம் அந்த வயதில் மேல ஆவணி மூல வீதியில் இருப்பதுதான். அதற்குப் பின்னால் வடுகக் காவல் கூடத்தெரு (தானப்பமுதலி அக்ரஹாரம் ஜெமினி நாயுடு வீடு எதிரில்) வந்தோம். அதற்குப் பின்னாலே தான் மேல ஆவணி மூல வீதி வந்தோம். என் கனவுகளில் ஒன்றான மேல ஆவணி மூலவீதி வாசம் இது மாதிரி எதிர்பாராமல் கிடைத்தது. அந்த வீடும் அதன் மாடியும் அங்கிருந்த எங்கள் அறையும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.என் வீட்டில் உள்ள எல்லாருக்கும் அந்த அறை பொது என்றாலும் பெரும்பாலும் நான் மட்டுமே அங்கே இருப்பேன். அந்த மாடிக்குப் பின்னால் உள்ள வீட்டு மாடிகளும் தெரியும். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் மொட்டை கோபுரம், மேலக் கோபுரம் இரண்டும் தெரியும்.வீட்டிற்குப் பின்னால் தான் மதுரை சோமு வீடு இருந்தது. என் வீட்டிலிருந்து 6 வீடுகள் தள்ளி. இப்போது பிரபலமாக இருக்கும் ஜி.எஸ். மணி வீடு. கொஞ்சம் தள்ளி வடக்குக் கிருஷ்ணன் கோவிலில் இருந்து சங்கீத விநாயகர் கோவில் தெரு வந்தால் சேதுராமன், பொன்னுச்சாமி வீடு. போதாத குறைக்குக் கோவிலில் இருந்து வரும் கோடி அர்ச்சனை மற்ற வழிபாடுகள் காதில் கேட்டுக் கொண்டிருக்கும்.வீட்டில் நாலு போர்ஷன்கள் இருந்தாலும் நான் படிக்க மாடி அறை மிக உதவியாக இருந்தது. போதாக் குறைக்குக்கூடக் குடி இருந்தவர் வீட்டில் வாங்கும் பேப்பர், புத்தகம் முதலியன அங்கு தாராளமாகக் கிடைத்தது.ஆகவே என் மனதுக்குப் பிடித்தது அந்த வீடுதான். ஆகவே பிடித்த ஊர் என்றாலும் முதலில் மதுரை தான்.
மதுரை
நசிராபாத் (ராஜஸ்தான்)
சிக்கந்திராபாத்
அருவங்காடு (ஊட்டி)
ஊட்டியில் இருக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத ஆசை இன்னமும் உண்டு. பொதுவாக நம் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழகும் அந்த மலை அடிவாரங்களும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. என் அப்பாவின் பூர்வீகமான மேல் மங்கலம் ஊரும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஊர் மிகவும் நன்றாக இருக்கும். வராகநதிக் கரையோரம் அமைந்த அக்ரஹாரமும் அதன் நேர்த்தியும் என்னைக் கவர்ந்தது. பின் சின்னமனூர். என் அம்மாவின் தங்கை ஒருத்தர் இங்கே இருந்தார். சித்தப்பா பிரசித்தி பெற்ற டாக்டர். அங்கிருந்து திண்டுக்கல் போகும் வழியில் உள்ள தேவதானப்பட்டியில் இறங்கிக் கொஞ்ச தூரம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போனால் காமாட்சி அம்மன் கோவிலும் மஞ்சளாறும் அதன் கரையும் நேரில் சென்று பார்த்தால் தான் புரியும். அந்த மஞ்சளாற்றுத் தண்ணீர் குடித்தால் நாம் குடிக்கும் மினரல் வாட்டர் எல்லாம் ஒன்றுமே இல்லை. தண்ணீரின் அருமை அங்கு நன்றாகத் தெரியும்.
வெளிநாடு என்று பார்த்தால் நாங்கள் போனது U.S. மட்டும்தான். சாப்பாடுப் பிரச்னையால் முக்கியமாக வெளிநாட்டுப் பிரயாணங்கள் சரியாக வருவது இல்லை.
ஹூஸ்டன் மீனாக்ஷி கோவிலும் அதன் புத்தக சாலையும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.அதிலும் அந்தப்புத்தக சாலையில் இல்லாத புத்தகங்களே இல்லை.
டென்னிஸியில் Nashvelle பிள்ளையார் கோவிலும் Roobi Faalsம் பிடித்தது.
இந்தியாவில் பிடித்த இடங்கள் என்றால்
கோவாவில் பிரயாணம் செய்த ferry,
ஹரித்துவாரில் சண்டி மாதா கோவிலும், மானஸா மந்திரும்,
பத்ரிநாத் மற்றும்
கன்யாகுமரி விவேகானந்தா பாறை.
பிடித்த புத்தகங்கள்
தேவனின் எல்லாப் புத்தகங்கள்(அநேகமாக எல்லாம் படித்து இருப்பதாக நினைக்கிறேன்)
கல்கியின் அமரதாரா(கல்கி உயிருடன் இருந்து எழுதி முடித்திருந்தால் இன்னும் பேர் வாங்கி இருக்கும். ரொம்பப் பேருக்கு இது பற்றித் தெரியவில்லை.
நீல. பத்மநாபனின் தலைமுறைகள் (படித்து விட்டு ரொம்ப நாள் தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன்)
ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக. (இவர் கதையைப் படித்து விட்டுத் தான் எனக்கு ஊட்டி மேல் காணாமலே காதல் வந்து விட்டது).ஆனால் இவருடைய மலர்கள் தொடர் ராஜ் டி.வி.யில் வந்தபோது கதை அம்சமே கெட்டுப் போய்விட்டது. இவர் எப்படி சமரசம் செய்து கொண்டார் என்று இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான்.
ஆங்கிலத்தில்
sidney sheldon,
jeffrrey Archur,
Irwing Wallace,
Alistair Macleans என்று நிறைய எழுதுவேன் என்று பார்த்தீர்களா? அதுதான் இல்லை. நம் தமிழ்க் கதைகளும், மொழி பெயர்க்கப்பட்ட அதுவும் த.நா. குமாரசாமி. த.நா. சேனாபதி போன்றவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட வங்கக் கதைகளும் காண்டேகரின் கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் Archie comics & Agatha Christie இருவரும் விதிவிலக்கு. எத்தனை முறை வெண்டுமானாலும் படிப்பேன். Irwing Wallaceன் The Man என்ற நாவலும் பிடிக்கும்.
சினிமாவெல்லாம் ஜாஸ்தி பார்த்தது கிடையாது.வீட்டுக்கு எதிரே சித்ராலயா மூவீஸ் இருந்ததால் ஸ்ரீதரின் எல்லாப் படங்களுக்கும் பாஸ் கிடைக்கும். ஸ்ரீதர் படங்கள் மிகவும் பிடிக்கும் காரணமும் அதில் ஒன்று. மேலும் தங்கம் தியேட்டர் அதிபர் திரு. கண்ணாயிரம் அப்பாவிடம் தனிப்பட்ட முறையில் ஹிந்தி கற்றுக் கொண்டதால் தங்கம் தியேட்டரில் ரிலீசாகும் படங்களும் பட்டியலில் உண்டு.
பிடித்த நடிகர் என்றால்.
ஜெமினி கணேசன்
முத்துராமன்
சிவக்குமார்
சூர்யா

பிடித்த இயக்குனர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்

பிடித்த தலைவர்கள்
லால்பஹதூர் சாஸ்திரி&வல்லபாய் படேல்
மொரார்ஜி தேசாய்
பி.வி.நரசிம்ம ராவ்
அடல் பிஹாரி வாஜ்பேயி
தமிழ்நாட்டில் காமராஜர் தவிர யாருமே இன்னும் மக்கள் தலைவர் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் இன்றைய கஷ்டங்களுக்குக் காரணமான ராஜாஜி என்றால் அலர்ஜி.(திரு.டோண்டு மன்னிக்கவும்).
திரு எம்.ஜி.ஆர் இந்த வரிசையில் வரவில்லை. ஏனென்றால் அவர் நினைத்தது பாதி முடியும் முன்னே இறந்து விட்டார்.
பிடித்த நிதி மந்திரி என்றால் திரு ஹெச்.எம்.படேல் மட்டும் தான். அது போல மது தண்டவதே.மொரார்ஜி தேசாயின் மந்திரி சபையில் இவர்கள் ஆற்றிய பணி மறக்கமுடியாதது.
பிடித்த பாட்டு
மஹாராஜபுரம் சந்தானம் பாடிய"போ சம்போ" "சிவ சம்போ" மற்றும்
"ஆடாது அசங்காது வா"
மதுரை மணி அய்யரின் இங்கிலீஷ் நோட் மற்றும் "தாயே யசோதா"
ஜான் ஹிக்கின்ஸின் "கந்தா வா வா"
எம்.எஸ்ஸின் பாரதியார் பாட்டுக்கள்
பிடித்த சினிமாப் பாட்டுத் தமிழில் பழைய பாடல்கள் எல்லாமே பிடிக்கும். மற்றபடி "என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்" பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை சிட்டி ஆயி ஹை" எப்போது கேட்டாலும் என்னால் கண்ணீரை அடக்க முடியாது.மற்றபடி நான் குறிப்பாக நாலு பேரை மட்டும் அழைக்க விரும்பவில்லை. எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு உதவுகிறார்கள். யாரை வேண்டாம் என்பது?எல்லாரும் வருக. ஆதரவு தருக. (ஒரு செலவில்லாத விளம்பரம் தான்) அப்படியாவது போணி ஆகாதா என்று தான்)எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.

Saturday, April 15, 2006

சிபிக்குச் சில குறிப்புகள்

திருவிளையாடல் புராணம் மூலநூல் "ஆலாசிய மகாத்மியம்" என்னும் வடமொழி நூல் ஆகும். திருவிளையடல் புராணம் பரஞ்சோதி முனிவரைத் தவிரப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவாரால் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என்ற பெயரிலும் மற்றும் உள்ள கடம்பவன புராணம், சுந்தர பாண்டியம் என்ற நூல்களிலும் உண்டு. கடைசி இரண்டும் எழுதியவர் பெயர் தெரியவில்லை. வரகுண் பாண்டியனின் மகனான ராஜராஜ பாண்டியனுக்குப் பிறகு வந்த அரசர்கள் முறையே
சித்திர விரதன்,
சித்திர பூடணன்
சித்டிரத்துவசன்
சித்திரவருமன்
சித்திரசேனன்
சித்திரவிக்கிரமன்
ராஜமார்த்தாண்டன்
ராஜசூடாமணி
ராஜசார்த்தூலன்
துவிராஜகுலோத்துமன்
ஆயோதனப்பிரவீணன்
ராஜகுஞ்சரன்
பரவிராஜ பயங்கரன்
உக்கிரசேனன்
சத்துருஞ்சயன் வீமரதன்
வீம பராக்கிரமன்
பிரதாப மார்த்தாண்டன்
விக்கிரம் கஞ்சனன்
சமர கோலாகலன்
அதுல கீர்த்தி
மாறவர்மன் சுந்தர பாண்டியன் (மாமல்ல பல்லவர் காலத்தில் இருந்தான்) தங்கை தான் பல்லவ மன்னன் பட்டத்து ராணி. இந்த சுந்தர பாண்டியன் தான் சோழ ராஜ குமாரியான மங்கையர்க்கரசி. இவன் தான் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டுத் திருஞானசம்பந்தரால் வெப்ப நோய் நீங்கப்பெற்றான். தகவல்கள் உதவுமா எனத் தெரியவில்லை. யாருக்காவது தேவைப்பட்டால் உதவும் என்று நம்புகிறேன்.வரகுண பாண்டியனுக்குச்சிவலோகம் காட்டியதோடு அல்லாமல் அவன் காலத்தில் தான் விறகுவெட்டி யாக வந்து பாணபத்திரனுக்குச் சீடனாகவும் திருவிளையாடல் புரிந்து மேலும் அவனுக்கு உதவியாகப் பாண்டியன் கருவறையிலிருந்தே பொருட்களைக் கொடுத்து வந்து பின் சேரமான் பெருமாள் நாயனாருக்கு ஓலை அனுப்பிப் பாணனுக்கு உதவினார்.தற்சமயம் குழப்பினது போதும் என்று நினைக்கிறேன். முடிந்தபோது குழப்புவது தொடரும்.

Thursday, April 13, 2006

நண்பர்களுக்கு நன்றி

என்னுடைய பதிவில் வந்து பின்னூட்டம் இட்ட எல்லா நண்பர்களுக்கும் முதலில் என் நன்றி. நான் இரண்டு மூன்று நாளாக ஒன்றும் எழுத முடியாமல் போனதற்கு என் கையில் நான் பட்டுக்கொண்ட வெட்டுக்காயம் மிகவும் ஆழமாகப் பட்டுக் கொண்டதால் type செய்யமுடியவில்லை. மற்றபடி நான் அவன் பின்னூட்டங்களுக்குப் பயந்து நிறுத்தவில்லை. அவன் என் வீட்டுச் சூழ்நிலை சரியாக இல்லாமல் இருந்தபோது கொடுத்த தொந்திரவில் கூட அதை அழிக்க உட்கார நேரம் கிடைக்காமலும் அழிக்கும்போது blogger சொதப்பிலும் தான் கஷ்டப்பட்டேன். மற்றபடி மட்டுறுத்தல் செய்து உள்ளேன்.நான் அவ்வளவு பிரபலம் இல்லாத போதே அவன் இப்படி என்றால் மற்றவர்களை என்ன பாடு படுத்தி வருவான் என்று புரிகிறது. விட்டுத் தள்ளுங்கள்.வேறு விஷயம் பார்ப்போம். மறுபடியும் நண்பர்களுக்கு நன்றி.

Sunday, April 09, 2006

போலி டோண்டுவும் என்னுடைய வலைப் பதிவும்

நான் வலைப் பதிய ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலே ஆங்கிலத்தில் தான் எழுதி வந்தேன். அதுவும் தொடர்ந்து எழுத முடியாமல் வீட்டில் சூழ்நிலை சரியாக இல்லை. அந்தச் சமயம் திரு டோண்டுவின் பதிவில் ராஜாஜி அவர்களைப் பற்றியும் திரு டோண்டுவின் தகப்பனாரின் சிக்கன நடவடிக்கை பற்றியும் எழுதி வந்தார். ராஜாஜி பற்றி மாறுபட்டக் கருத்து எனக்கு இருந்ததால் அதைக் குறிப்பட விரும்பினேன். ஆங்கிலத்தில் எழுதுவதை விடத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த காரணத்தால் அதைப் பற்றிக் குறிப்பிடவும், அவர் எனக்கு உதவியாக ஒரு உரல் அனுப்பி வைத்தார்.ஆனால் என் வீட்டில் அதற்குள் என்னுடைய நாத்தனாரின் கணவர் இறந்து வீட்டில் இருந்த துக்கமான சூழ்நிலையில் என்னால் கணினி பக்கம் மாதக் கணக்காக வர முடியவில்லை. அத்ற்குள் திருவாளர் என் பதிவிற்கு வந்து விஷம் விதைத்து விட்டுப் போயிருக்கிறார்.நான் பார்க்கவே ரொம்ப நாள் ஆகி விட்டது. தற்செயலாக என் மைத்துனன் தன்னுடைய மெயில் பார்த்துக் கொள்ளத் திறக்கவே நானும் என்னுடைய மெயிலையும் பார்த்து விட்டு வலைப் பதிவையும் ஒரு நோட்டம் விடலாம் எனத் திறந்தால் அதிர்ச்சி. அதை அழிக்க அழிக்க ப்ளாக்கர் சொதப்பல் காரணமா என்னவென்று புரியாமல் திரும்பத் திரும்ப வந்து கொண்டு இருந்தது. மிகவும் சிரமப்பட்டு அவற்றை நிரந்தரமாக அழித்து விட்டு பின்னூட்டம் மட்டுறுத்தல் மட்டும் இன்றி பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தேன். 10 நாட்கள் முன்பு தான் திரு சிபி பின்னூட்டம் இட முடியவில்லை என்று கேட்டுக் கொண்டதாலும். இந்தத் தொந்திரவு எனக்கு மட்டும் இல்லை என்று புரிந்து கொண்டதாலும் திறந்து வைத்துள்ளேன். திரு டோண்டுவின் அறுபதாம் கலியாணத்திற்கு வாழ்த்துச் சொல்லி விட்டுப் பார்த்தால் மறுபடி வந்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் செந்தமிழ் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். நேற்று திரு டோண்டுவின் பதிவில் குமுதம் ரிப்போர்ட்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது அறிந்து கொஞ்சம் நிம்மதி கிடைத்து உள்ளது. தன் கண்ணால் பார்க்காத் ஒருவர் மேல் இவ்வளவு வெறுப்பைக் ஒருத்தரால் காட்ட முடியுமா என்று யோசித்தால் அவர் மனநிலை தான் காரணம் என்று புரிகிறது. என்றாலும் அவருக்கும் ஒரு அம்மா, அக்கா அல்லது தங்கை மற்றும் மனைவி மக்கள் இருப்பார்களே. கண்டிப்பாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்து தான் இருக்க வேண்டும். அவர்கள் நடுவில் இவருடைய இந்த முகம் தெரிந்தால் எவ்வளவு தலைக்குனிவு அந்த மனிதருக்கு? அவரையும் அவர் நிலையையும் யோசித்தால் பாவமாகத் தான் உள்ளது. இது யாரும் படிப்பார்கள் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. தினமும் என் வலைப்பதிவிற்கு வந்து ஏதாவது எழுதிச் செல்லும் அம்பி கூட இரண்டு நாளாக வரவில்லை. நான் தமிழ் மணத்தில் எல்லாம் எழுதும் அளவு தேர்ச்சியும் பெறவில்லை. அதில் அறிமுகம் ஆகும் அளவு எந்தப் பின் புலமும் கிடையாது. யாராவது ஒருத்தர் படித்துப் புரிந்து கொண்டால் அது போதும். அந்த முகம் தெரியாத் மனிதருக்காக ஏற்கெனவே ஒருத்தர் பிரார்த்தனை செய்துள்ளார். அவருடன் எல்லாரும் சேர்ந்து கொள்ளலாம்.

Saturday, April 08, 2006

My thoughts

My thoughts எனக்குப் பிடித்த புத்தகம்

நான் படித்த புத்தகங்கள் என்று பார்த்தால் எதை விடுவது எதைச் சொல்வது என்று புரியவில்லை. அநேகமாக முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் எல்லாருடைய எழுத்தும் படித்து இருக்கிறேன். சின்ன வயதில் தாத்தா வீட்டிற்க்குப் போகும்போது எப்போது பொவோம் என ஆர்வமாக இருக்கும். அங்கே போனால் குமுதம் படிக்கலாம். அந்தக் காலங்களில் குமுதம் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. ஆனால் தாத்தா வீட்டில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. மேலும் என் தாத்தா(அம்மாவின் அப்பா) தன் சேமிப்பான அந்தக் கால வினோத ரஸ மஞ்சரியில் இருந்து, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர் வரை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் செய்வார்.

Friday, April 07, 2006

எனக்குப் பிடித்த எழுத்து

நான் முதல் முதல் புத்தகம் படிக்க ஆரம்பித்தது என்னுடைய 5வது வயதில் என்று நினைக்கிறேன். அப்போது எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் அப்போது டாக்டர் கீதா என்ற பெயரில் ஒரு சித்திரத் தொடர் வந்து கொண்டு இருந்தது. அன்றைய நாட்களில் என்னுடைய ஆசையும் கனவும் ஒரு டாக்டர் ஆவதாகவே இருந்தது. மேலும் என் அம்மாவின் அடுத்த தங்கை கணவர் ஒரு டாக்டராக இருந்து வந்தார்.அந்தக் கதையும் நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தைப் பற்றி இருந்ததாக ஞாபகம்.கதா நாயகியும் என் பெயரில் இருந்தாள். அதற்குப் பிறகு தான்"துப்பறியும் சாம்பு" சித்திரத் தொடராக வந்தது.அந்த நாட்களில் ஆனந்த விகடன் படிப்பது ஒரு கெளரவமாகவே இருந்தது. இன்றைய விகடனைப் பார்க்கும்போது இன்றைய வாசகர்கள் தரம் குறைந்து விட்டதா? அல்லது விகடன் வாசிக்கும் எனக்கு ஏற்றுக் கொள்ள முடிய வில்லையா தெரியவில்லை.அந்தச் சமயம் தான் விகடனில் "தில்லானா மோகனாம்பாள்" ஆரம்பித்தது என்றும் நினைக்கிறேன். என் தமிழை வளர்த்தது விகடன் தான் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஒவ்வொரு வார விகடனிலும் "சிறுவர் வண்ண மலர்" என்ற பகுதி தனிப்பக்கங்களாக வெளி வந்தது. அதை முதலில் படிக்க எனக்கும் அண்ணாவிற்கும் போட்டி வரும். ஆனால் அண்ணா கடையில் போய்ப் புத்தகம் வாங்கி வருவார். ஆதலால் முதலில் வரும் வழியில் படித்து விடுவார். வீட்டிற்கு வந்து அந்த வாரக் கதையை என்னிடம் சொல்லி வெறுப்பு ஏற்றுவார். இரண்டு பேரும் சண்டை ஆரம்பிப்போம். இது எல்லாம் நடக்கும்போது அப்பா வீட்டில் இருக்க மாட்டார்.

Thursday, April 06, 2006

My thoughts

My thoughtsஇன்று அரக்கோணம் சென்றது என் மகளின் தோழி மெம்பிஸிலிருந்து வந்திருக்கிறாள்.அவள் திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கொள்ளுப்பேத்தி ஆவாள். நேற்று திரு விடாது கருப்புவின் பதிவில் கள்ளர்கள் அரச பரம்பரை என்று எழுதி இருந்ததைப்படித்ததுமே நினைத்தேன். அது போலவே இவர்கள் முன்னோர்கள் புதுக்கோட்டையில் இருந்து பிரிந்து போன் மூன்று சகோதரர்கள் பரம்பரை என்று எழுதி உள்ளார்கள். இன்னும் முழு புத்தகமும் படிக்கவில்லை. புத்தகம் வாங்கி வந்துள்ளேன். படித்ததில் பிடித்தது பிறகு.எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்றால் திரு தேவன் அவர்கள்தான். துப்பறியும் சாம்பு ஒன்று போதுமே.அதை பீட் அடிக்க இன்று வரை வேறு எதுவும் என் அபிப்பிராயத்தில் இல்லை.
என்னுடைய மூன்றாவது பதிவு
இன்று காலையிலேயே அரக்கோணம் போய் அங்கிருந்து திருவாலங்காடு கோவிலுக்குப் போனோம்.பல வருடங்களாகப் பார்க்க நினைத்திருந்த கோவில். தற்சமயம் பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்.கோவிலைச் சுற்றி வர முடியவில்லை வெயில் காரணம். பிரஹாரங்களில் மிகவும் அழகாக திருமுறைப் பாடல்கள் எழுதப் பட்டிருந்தது.காரைக்கால் அம்மையார் நடராஜர் பக்கத்தில் பேய்க் கோலத்தில் வீற்றிருந்தார்.எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடராஜர் உருவம் மிக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.அய்யன் காலைத் தூக்கி நின்றாடும் கோலம் பார்க்க மிக ஆனந்தமாக இருக்கிறது.இது வரை பல கோவில்களுக்குப் போயிருந்தாலும் நம் தமிழ் நாட்டுக் கோவில் களில் உள்ள சிலைகளும் சிற்பங்களும் போல் வட இந்தியக் கோவில்களில் இருப்பது இல்லை.துவாரகா மற்றும் சோம்நாத் கோவில்கள், காசி விஸ்வநாதர் கோயில் கொஞ்சம் பரவாயில்லை.ஆனால் பக்தி விஷயத்தில் வட இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை.இப்போது உள்ள இளைஞர்கள் எல்லாம் மிகவும் பக்தியுடன் இருப்பதைப் பார்த்தால் மிக சந்தோஷமாக இருக்கிறது.இன்னும் எழுத நிறைய இருக்கிறது.இன்று முடியவில்லை.

Wednesday, April 05, 2006

My thoughts

My thoughtsவணக்கம்.பலருடைய உதவியாலும் நான் ஒரு வழியாகத் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். தமிழ் தட்டச்சு தெரிந்த எனக்கு இது புது மாதிரியாக உள்ளது. என் பிளாகிற்கு முதலில் வருகை தந்து உதவிய திரு டோண்டு, ஜீவ்ஸ்,சூப்பர் சுப்ரா, ஜிசாயி மற்றும் முத்தமிழ் குழுமத்தில் என்னைச் சேர்த்தும் தமிழ் எழுதவும் ஜி மெயில் மற்றும் சாட் மூலமும் உதவிய திரு மஞ்ஜூர் ராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வேகம் வந்ததும் நிறைய எழுதி உங்களை எல்லாம் பயமுறுத்த எண்ணம். இப்போதைக்கு இது போதும்.

Tuesday, April 04, 2006

My thoughts

நான் இன்னும் கொஞ்ச நாள் ஆக வேண்டும். பார்த்தால் தெரியாது.
வார்த்தை மாறி வருகிறது.
ஒவ்வொரு முறையும் தப்புத்தப்பாக
வருகிறது,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.