எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 28, 2011

உல்லாசம் பொங்கும் இன்ப/இந்த தீபாவளி

_____________________
எல்லாரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க . இங்கே நாங்க மட்டும் காலை எழுந்து குளித்து தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டோம். சப்தமில்லா தீபாவளி. கோலாகலமில்லா தீபாவளி. இங்கே மீனாக்ஷி கோயிலில் தீபாவளி போன சனிக்கிழமையே அதாவது 22-ஆம் தேதியே கொண்டாடி முடிச்சாச்சு. அன்னிக்கு தீபாவளி பஜார்னு கடைகள் இருந்தன. துணிக்கடை, நகைக்கடைனு தான்! தீபாவளிக்கு வேறென்ன? முதல்முறை யு.எஸ்.வந்தப்போ தீபாவளி பஜாரில் துணிகளின் விலையைப் பார்த்துவிட்டு மயக்கமே போட்டு விழுந்தேன். சாப்பாடும் இருந்தது. மாலை நேரம் சாப்பாட்டுக்கடைகள் தான் இருந்தன. கொசுக்கள் தூக்கிட்டுப் போயிடும்போல தொல்லை தாங்கலை. சாப்பாடுக் கடைகளில் வழக்கமான ரொட்டி, சப்ஜி, தோசை, இட்லி, வடை, சாம்பார் இத்யாதி. அவங்க கொடுக்கிறதை விட நாம வீட்டிலே செய்யறதே இன்னும் நல்லா இருக்கும்னு ஏகோபித்த கருத்தோடு சாப்பாட்டை ஒதுக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். அதோட அங்கே சாப்பிட்டால் ஒவ்வொரு வாய்க்கும் ஒரு ஆயிரம் கொசுக்களும் உள்ளே போகும்போல் பயம்! அமெரிக்கக் கொசு; தமிழிலே திட்டினால் புரியுமா தெரியலை. நாமோ இங்கிலீஷ் இழுவை; தமிழ் தகராறு; ஹிந்தி இம்சை; சைன்ஸ் சங்கடம் ரகத்திலே படிச்சிருக்கோம். அதனால் கொசுவோட அநாவசியமாத் தகராறு வேண்டாம்னு கிளம்பிட்டோம்.

இந்தத் தரம் காலை போகலை. சாயந்திரமாப் போனோம். மீனாக்ஷி சர்வ அலங்காரத்துடன், இருந்தாள். உற்சவ மீனாக்ஷியையும் அலங்கரித்து வைத்திருந்தார்கள். எல்லாம் படம் பிடித்திருக்கேன். இன்னும் வலை ஏற்றலை. பிகாசாவில் போட்டால் எனக்கு வசதி. பையரைக் கேட்டுக்கணும். ஏன்னா கணினியின் செட்டப் மாறிடுது. அதோட இங்கே வயர்லெஸ் என்பதாலோ, அல்லது தொலைபேசி, தொலைக்காட்சி இணைப்பு எல்லாமும் இணைய இணைப்பு என்பதாலோ இணையம் வேகமே இல்லை. அடிக்கடி சொதப்பல். சில சமயம் நகரவே நகராது. அதனால் படத்தைப் போடும்போதும் எந்தக் கமென்டுக்கு நேரே போட நினைக்கிறோமோ அங்கே வராமல் மொத்தமாய் ஒரே இடத்தில் போய் உட்காருது. அவங்க எப்படி வலை ஏத்துவாங்கனு கேட்டுட்டு பிகாசாவிலே போட்டதும் இங்கே கொடுக்கிறேன்.

மீனாக்ஷிக்கு வெள்ளித் தேர் கூட இழுக்கிறதுக்குத் தயாராக இருந்தது. நேரம் ஆகும்போல் இருந்ததால் நாங்க தேரை மட்டும் படம் எடுத்துட்டு(தேர், கூட்டம் எல்லாம் ரங்க்ஸ் எடுத்தார்) வந்துட்டோம். என்ன இருந்தாலும் இந்தியாவில் இல்லையேங்கற நினைப்பு மட்டும் போகலை. இங்கே அவங்க அவங்க அலுவலகம் போயிட்டாங்க. எல்லாக் கொண்டாட்டங்களும் சனி, ஞாயிறுதான். பையர் எங்களுக்காக லீவ் போட்டிருந்தார்.
ஏழாவது அறிவு படத்துக்குப் போனோம். அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. சூர்யா போதிதருமர் கெட்டப்பிலே நல்லா கம்பீரமா இருக்கார். அவரோட யோகாசனப் பயிற்சி நல்லாக் கைகொடுத்திருக்கு அவருக்கு. படமும் அந்த முதல் அரை மணிநேரம் மட்டுமே ரசிக்கும்படியா இருக்கு. மற்றபடி முழம்முழமாப் பூச்சுத்திட்டாங்க. போதிதருமர் குறித்த விஷயங்கள் தவிர மற்றவை எல்லாம் பூச்சுற்றல். பெரிய சரமா எடுத்து நல்லாச் சுத்தி இருக்காங்க. அதிலும் அந்த வில்லன் நடு ரோடில் ட்ராபிக்கை ஜாம் செய்வதும், மக்கள் எல்லாரையும் சகட்டுமேனிக்கு மைன்ட் கன்ட்ரோல் பண்ணி சூர்யாவுக்கு எதிராய்த் திருப்புவதும் ஓவரோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓவர்! மற்றபடி நம்ம கலாசாரம், அறிவு, வித்தைகள்னு நாம எதை எல்லாம் இழந்துட்டு இருக்கோம்னு எடுத்துச் சொல்லி இருப்பதே கதையின் முக்கியக் கரு. அந்த விஷயத்துக்காகவாவது அனைவரும் பார்க்கணும். மற்றபடி எல்லாரும் ஓஹோஹோனு சொல்றாப்போல் எதுவும் இல்லை. காதல் காட்சிகள் குறைவு என்பதோடு கடைசியில் கதாநாயகன், கதாநாயகி கல்யாணம் பண்ணிக்கிறாங்கங்கறப் போல் அபத்தம் எல்லாம் இல்லை. . ஸ்ருதி ஹாசன் தமிழ் உச்சரிப்பு ஹிந்தியில் செய்கிறார் என்பதோடு காமிராவுக்கு ஏற்ற உடலமைப்போ, முகமோ இல்லை. நடிப்பும் சுமார் ரகமே. நேரில் நன்றாய் இருப்பாரோ என்னவோ, காமிராவுக்கு எடுக்கவில்லை. படம் முடிவில் ஸ்ருதி ஹாசன் பாட்டுக்குத் தன் ஆய்வைத் தொடர்கிறார் சூர்யா பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். பிழைச்சோம்.

இ.கொ.வுக்கு நன்னி.


யார் கவனிக்கப் போறாங்கனு நினைச்சால் உடனடியா இரண்டு பேர் இதோனு கொடுத்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றது?

அனுப்பி வைக்கிறேன் என்று உடனடியாக ஆறுதல் சொன்ன தோழிக்கும் நன்றி.

வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!

வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!by கீதா சாம்பசிவம்
வயோதிகம் என்ற தலைப்பிலே எழுத இன்னம்புரார் அனைவரையும் அழைத்திருக்கிறார். இதிலே வயோதிகர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்றால் நான் அந்த லிஸ்டில் இல்லை. என்னைப் பொறுத்த அளவில் வயோதிகம் என்பது மனதிலும் ஏற்பட்டாலே வயோதிகர் ஆகலாம். வெறும் உடல்மாற்றம் அல்ல. வயோதிகத்திலும் அழகாய் இருந்த எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, கம்பீரம் குறையாத இந்திரா காந்தி, அன்னை தெரசா, போன்ற எத்தனையோ பேர் உதாரணம் காட்டலாம். வயோதிகம் என்பது முதுமை, வயது ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகப் போக உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் சுருக்கம், கண்பார்வையில் குறைபாடு, நடக்கையில் தள்ளாட்டம், உடல்நலக்கேடு அதிகமாதல் என்று சொல்லலாம். . வயதும் அதிகமாகி தனிமையாகவும் இருந்தால் மனத்தளர்ச்சியும் உண்டாகிறது. கவனிக்க யாருமில்லையே; நம்மை யாரும் லக்ஷியம் செய்யவில்லையே என்றெல்லாம் தோன்றுகிறது. இப்போது இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் முதியோர் இல்லங்கள் வந்துவிட்டன. சில இல்லங்கள் கவனிப்பு நன்றாக இருப்பதாய்க் கூறினாலும் பெரும்பாலான இல்லங்களின் கவனிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. இதற்கு ராஜம் கிருஷ்ணன் அவர்களைச் சேர்த்திருக்கும் முதியோர் இல்லமே ஒரு சாட்சி. வயதான ராஜம் கிருஷ்ணன் அம்மையார் உறவினரால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்து இன்று முதியோர் இல்லத்தில் திலகவதி ஐபிஎஸ் அவர்களால் சேர்க்கப்பட்டு தனிமை வாழ்க்கை நடத்தி வருகிறார். அங்கேயும் அவருக்கு மன அமைதி கிட்டவில்லை என ஒரு பேட்டியில் படிக்க நேர்ந்தது. வருந்தத்தக்க விஷயமே இதுதான்.


வயதானவர்களுக்குப் பெரும் சவால் கவனிக்க யாருமே இல்லாமல் போவதுதான். ஆகவே தனிமையைத் தவிர்க்க வேண்டும். கூடியவரையிலும் மனதை இளமையாக வைத்திருக்க வேண்டும். உடல்நலக்கேடு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். என் கணவரின் பாட்டி வயது முதிர்ந்த காலத்தில் கூடத் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். இதற்கு மனோபலம் வேண்டும். ஆகவே ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருத்தல் நலம் பயக்கும். இது ஓரளவு மன வலிமையைக் கொடுக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. கோயில்களின் வரலாறு, பல நகரங்களின் வரலாறு போன்றவையும், மூளைக்கு வேலை கொடுக்கும் அறிவியல் புதிர்கள், தமிழ்ப் பழமொழி விளையாட்டு, இயன்றவரை எளிய தமிழில் பேசுவது; கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வு என எத்தனையோ பயனுள்ள நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவற்றில் கலந்து கொள்ள வேண்டும். தினம் தினம் புதிது புதிதாய்க்கற்க வேண்டும். இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு நம் இன்னம்புராரே தான். அவர் தினமும் புதிது புதிதாய் விஷயங்களைத் தேடி எடுத்துப் போட்டு நம்மை எல்லாம் படிக்க வைக்கிறார். அதற்கு எத்தனை உழைப்பு வேண்டும்! தளராத மனம் இருந்தாலே இது சாத்தியம்.

வயதால் பெரியவரே தவிர மனதால் அவர் என்றும் இளைஞரே. இத்தகைய நினப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். மனத்தளர்ச்சி இல்லாமல் இருக்க தீனமும் யோக ஆசனப் பயிற்சி மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சென்னையைப் பொறுத்தவரை சாலைகள் நடைப்பயிற்சிக்கு ஏற்றவை அல்ல. வேறு வழியில்லை. உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடலுக்கு ஏற்ற உணவுதான் உட்கொள்ள வேண்டும் . மேலும் நம் மனதும் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவே செயல்படும் என்கின்றனர். ஆகையால் வயோதிகம் என்பது வயதில் மட்டுமே இருக்க வேண்டும். அது எந்நாளும் மனதைத் தாக்கக் கூடாது. நண்பர்களோடு கலந்து பழகுதல், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரோடும் அவர்களைப் போலவே கலந்து பழகுதல் நல்லது. நாம் பெரியவர்கள் என்றவிதத்தில் ஒதுங்கி இராமல் அவர்களின் எண்ண ஓட்டங்களில் கலந்து கொண்டு சிந்தனைப் பகிர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வயதான கணவன், மனைவியாக இருந்தால் பிரிந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர மற்ற நேரம் ஒருவருக்கொருவர் துணையாக இருத்தலே நலம். சிறு சிறு உதவிகளைச் செய்து கொள்ளலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள், நண்பர்கள் வீடுகள், கலை நிகழ்ச்சிகள், தல யாத்திரை செய்தல் எனச் சென்று வரலாம். அவை பற்றிய நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். எங்கே சென்றாலும் கூடியவரை இருவரும் சேர்ந்து செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இளமையில் விட முதுமையிலேயே ஒருவருக்கொருவர் துணை தேவை.

சமூகசேவைகள் செய்யலாம். நாம் இருக்கும் பகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரியவர்களை அணுகுதல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அல்லது இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டிலேயே குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களுக்கு ஸ்லோக வகுப்புகள், பாட்டு வகுப்பு, ஆசனப்பயிற்சி கற்றுக்கொடுத்தல் என எந்நேரமும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம். நாம் இளைஞராக இருந்தபோது எவ்வாறு நம் பெற்றோர் நம்மை ஒரு புரட்சியாளராக, புரட்சிகரச் சிந்தனைகள் உள்ளவராக நினைத்தார்களோ அவ்வாறே இப்போது நம் குழந்தைகள் நமக்குத் தோன்றலாம்; தோன்றுவார்கள். அதை அவர்கள் நிலையில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் மாமனாராக இருந்தால் உங்கள் மாப்பிள்ளையை நீங்கள் மாப்பிள்ளையாக இருந்த நிலையில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மகனை நீங்கள் மகனாக இருந்தபோது எவ்வாறு இருந்தீர்கள் என எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மாற்றங்கள் இருக்கலாம். நாம் நம் பெற்றோர் சொல்லை மீறாமல் இருந்திருப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது பெரும்பாலும் சாத்தியம் அல்ல. அதை அவர்கள் கோணத்தில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.


மாமியாரானால் மருமகளை நீங்கள் உங்கள் கணவரோடு எவ்வாறு வாழ விரும்பினீர்களோ அவ்வாறே வாழ விட வேண்டும். உங்கள் மகளுக்கு நீங்கள் உங்கள் கணவரை எவ்வாறு மதித்து மகிழ்வித்தீர்களோ அவ்வாறு இருக்கக் கற்றுக்கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்களைக் குழந்தைகளோடு கூடிய வரையில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களாகத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். உங்கள் மூலம் செல்ல வேண்டாம். மகன், மருமகளுக்கிடையிலேயோ, மகள், மருமகனுக்கிடையிலேயோ சண்டைகள் நடக்கலாம்; நடக்கும். அப்போது நீங்கள் உங்கள் கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றை மூடிக்கொண்டு காந்தியின் மூன்று குரங்குகளைப் போல் இருத்தல் நலம். உங்களுக்கு அப்போது கண் தெரியாது; காது கேட்காது; வாய் பேசாது. பின்னரும் இது குறித்துத் தனியாக யாரிடமும் விமரிசிக்க வேண்டாம். அது இன்னமும் ஆபத்தானது. அப்படி ஒரு நிகழ்ச்சியையே மறந்துவிடுங்கள்.


ஒரு சிலர் பேரன், பேத்தியைக் கவனிக்கிறதை ஒரு சுமையாகக் கருதுகின்றனர். உடல்நலம் மிக மோசமாக இருந்தால் தவிர பேரன், பேத்தி கொடுக்கும் இன்பத்தை நழுவ விடவேண்டாம். புற்றுநோயாளியான என் அம்மா கீமோதெரபி எடுத்துக்கொண்ட நிலையிலும் நாங்க எவ்வளவோ தடுத்தும் என் மகளின் பூப்புநீராட்டலுக்குக் கிட்டத்தட்டப் பத்துப்படி அரிசியைப் புட்டுச் சமைத்தார். இது அன்பின் வெளிப்பாடு. பேரக் குழந்தைகளிடம் அன்பு இருந்தால் தவிர இது இயலாது. அப்பாவும், அம்மாவும் மகன்கள் , மருமகள்கள் ஆகியோரோடு கூட்டுக்குடும்பமாக இருந்தபோது காலைச் சமையலை அவரே சமைத்துக்கொண்டிருந்தார். தலைமுடி உதிர்ந்த நிலையிலும் வீட்டு விசேஷங்களில் ஆர்வமாய்க் கலந்து கொண்டு அனைவருக்கும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்லுவார். பேரக்குழந்தைகளை இறைவன் உங்களுக்கு அளித்த மாபெரும் பரிசு என நினைத்து அன்பு பாராட்டுங்கள். அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள். அவர்களுக்காக நீங்கள் உங்கள் உடல்நலம் கருதாமல் உழைத்தால் அதன் மூலம் உங்கள் மனம் பிரகாசிக்கும். மனதில் தோன்றும் மகிழ்ச்சி கலந்த பிரகாசம் உடலையும் நன்றாக வைத்திருக்கும்.

பதிவைக் காணவில்லை!

வயோதிகம் பதிவையும் தீபாவளி குறித்த நினைவலைகள் பதிவையும் எடிட் செய்துட்டு பப்ளிஷ் கொடுத்தால் பதிவு போகவில்லை. எங்கே போச்சுனு தெரியலை. தேடிப் பார்க்கிறேன். இதை பப்ளிஷ் கொடுக்கிறேன். வருதா பார்க்கணும்.

Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துகள்

அனைவர் வாழ்விலும் தீபஒளி பிரகாசிக்கட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இந்த நாள் இனிய நாள்.

சாம்பசிவம்&கீதா.

Tuesday, October 18, 2011

கண்ணனைக் காண வாருங்கள்!

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம். சொந்த வீட்டை விட்டுட்டு வந்ததில் ஏகப்பட்ட மனக்கஷ்டங்கள், உடல் கஷ்டங்கள், பல்வேறு பிரச்னைகள் எதிர்கொள்ள நேர்ந்தது. தனியொரு குடும்பத்திற்கே சொந்த இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்குப் போவதில் இவ்வளவு சிரமங்கள் இருந்தால், ஒரு நாடும், அதன் மனிதர்களுமே முற்றிலும் புதியதொரு நாட்டிற்குக்குடி பெயர்ந்தால்?? அப்படித் தான் நம் கண்ணனும், யாதவர்களும் குடிபெயரப் போகின்றனர். நாட்டின் ஒவ்வொரு மனிதரும், சின்னஞ்சிறு குழந்தை, ஆடு, மாடு,குதிரைகள் கால்நடைகள் உட்பட மொத்தமும் காலி செய்து கொண்டு போக வேண்டும். நீர் நிரந்தரமாய்க் கிடைக்கும் யமுனை தீரத்தை விட்டுவிட்டு, பாலைவனத்தைக் கடந்து, பாதி பாலைவனம், கொஞ்சம் சுமாரான நிலம் என்றொரு பகுதிக்குப் போகவேண்டும். இந்த முடிவுக்கு அனைவரையும் கொண்டு வருவதற்குள்ளாக கண்ணன் பட்ட கஷ்டம்! அப்பப்பா! சொல்லி முடியாது. எத்தனை பேச்சுக்கள்! எத்தனை இகழ்ச்சிகள்! அவமானங்கள்! ஆனால் கண்ணன் அனைத்தையும் எதிர்கொண்டான். தன் மக்களின் நலம் ஒன்றே நினைத்தான். அதை நினைக்கையில் நானெல்லாம் எந்த மூலைக்கு என்று தோன்றுகிறது.


கொஞ்ச நாட்கள் முன்னர் கூடப் பதிவுலகை விட்டுட்டுப்போயிடலாமானு ஒரு யோசனை. சும்மா இணையத்தில் உட்கார்ந்து ஒரு சில குழுக்களின் மடல் பார்ப்பேன். ஒண்ணும் எழுதத் தோணாது. மனசே பாரமா இருக்கும். கண்ணன் கதை வேறே எழுதிட்டு இருக்கேன். இன்னும் முடியவில்லை. ஆனால் அதையும் பாதியிலே நிறுத்திடலாம்னு தான் இருந்தேன். அப்போத் தான் கண்ணன் கதையில் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. படிச்சதும் என் மேலேயே எனக்கு வெட்கம் வந்தது. மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அவமானம் ஏற்படத் தான் செய்யும், தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நமக்கெல்லாம் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படுகிற அவமானங்கள் ஒன்றுமே இல்லை. கண்ணன் பிறந்ததில் இருந்து அத்தனை அவமானப் பட்டிருக்கிறான். கண்ணனோ பிறந்தது சிறைச்சாலை எனில் இரவுக்கிரவே தாயைவிட்டுவிட்டு வேறு இடத்தில் வளர நேர்ந்தது. அங்கேயும் அவனைக் கொல்ல ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். இடைக்குலத்தில் வளர்ந்தான். மாமனைக்கொன்ற பின்னர் ஜராசந்தன் அவனை ஓட ஓட விரட்டினான். இதற்கு நடுவில் கண்ணனை அனைவரும் இடையன் என்கின்றனர். இடைக்குலத்தில் பிறந்தவன் எனக் கேலி செய்வதோடு அவன் யமுனைக்குக் குளிக்க வருகையில் அவனோடு யாரும் பேசக் கூட அஞ்சினார்கள். பொது இடங்களில் அவனோடு சேர்ந்து காணப்படுவதற்கும் கூசினார்கள். அறவே கண்ணனைத் தவிர்த்தார்கள். அவன் சொந்த மக்களே இதைச் செய்தனர். ஆனாலும் கண்ணன் அவர்களை வெறுக்கவில்லை.

நேசித்தான். கண்ணன் நேசத்துக்கும், பாசத்துக்கும், அன்புக்கும், நேர்மைக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும் உறைவிடம். தர்மத்தின் வடிவானவன். தர்மத்தை நிலைநாட்டவெனத் தனக்கு நேர்ந்த இகழ்ச்சிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டான். ஆட்சிக்கட்டிலில் ஏறாமலேயே அரசன் ஆனான். துவாரகாதீஷ் என்றே அழைக்கிறோம். ஆனால் கண்ணன் ஒருநாளும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசாட்சி புரியவில்லை. ஒரு தொண்டனாகவே தன்னைக் காட்டிக் கொண்டான். சேவகனாய்க் காட்டிக் கொண்டான். ஊழியம் செய்தான். ஊழியம் செய்ய அஞ்சவில்லை; அதைத் தன் கடமை என நினைத்ததோடு ஈடுபாட்டுடன் செய்தான். கண்ணன் கதையைப் படிக்கப் படிக்க எத்தனை உண்மைகள் புரிகின்றன.

முதல்முறை தான் மதுராவில் இருந்தால் மக்களுக்கும், மற்றவர்களுக்கும், மதுராவுக்கும் ஆபத்து எனத் தெரிந்து கொண்டு வேறு இடம் போனான். இரண்டாம் முறையும் தன்னாலே ஏற்படப் போகும் ஆபத்து எனப் புரிந்து கொண்டு ஒட்டு மொத்தமாக யாதவக் குடிகளையே இடம் மாற்றினான். எவ்வளவு பெரிய பொறுப்பு இது! சகல வசதிகளும் நிறைந்திருக்கும் இந்தக் காலத்திலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போகக் கஷ்டமாக இருக்கையில் அந்தக் காலத்தில் ஒரு நாட்டையே இடம் மாற்றுவது என்ன லேசா? கண்ணன் இட்ம் மாறப்போகிறான். வாருங்கள், கண்ணனைக் காண வாருங்கள்.

Monday, October 17, 2011

ஏமாற்றம் கொடுத்த நூலகம்

இன்னிக்கு மீனாக்ஷி கோயிலுக்குப் போனோம். நாலு வருஷங்கள் கழிச்சுப் போறோம். முதல்முதலா 2004-ல் போனப்போ கோயிலின் நூலகம் ஆனந்தத்தைக் கொடுத்தது. இரண்டாம் முறையாக 2007-ல் போனப்போ முதல் தரம் மாதிரி இல்லாட்டியும் ஓரளவுக்குப் புத்தகங்கள் இருந்தன. இந்தத் தரம் போகும் முன்னரே மருமகள் புத்தகங்கள் மிகவும் குறைச்சலாய் இருக்கும் எனச் சொல்லி இருந்தாள். சரி, என்ன இருந்தாலும் ஓரளவுக்கானும் பார்க்கலாம்னு போனால் அதிர்ச்சி! ஏமாற்றம்! மிக மிகக்குறைவான புத்தகங்களே இருக்கின்றன. பல புத்தகங்களும் விலைக்குனு வாங்கி வைச்சிருக்காங்க. முன்னைப் போல் புத்தகங்கள் எடுத்துப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் அளவுக்கு இல்லை; ஒருவேளை நிர்வாகம் மாறிவிட்டதோ என்னமோ! தெரியலை. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை. கோயில் வேறே இப்போ ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தூரத்தில் இருக்கிறது. முன்னைப் போல் அடிக்கடி போக முடியாது. கோயிலில் அதே பட்டர்; அதே குருக்கள்; புதுசா ஒருத்தர் பாலக்காட்டில் இருந்து வ்ந்திருக்காராம். பெருமாள் கோயிலில் பட்டாசாரியார்கள் புதுசு மாதிரித் தெரியறாங்க. அவங்களே தானா என்னனு தெரியலை.

கோயில் அடுத்த வாரம் தீபாவளி பஜாருக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. எல்லா இடங்களும் சுத்தம் செய்து கொண்டு இருக்காங்க. உடம்பு சரியில்லை; ரொம்பவே சரியில்லை. ஆகையால் சும்மா மெயில் மட்டும் பார்க்கிறேன். யு.எஸ். வந்து இப்படி உடல்நலம் சரியில்லாமல் போனது இதுவே முதல் தரம். போன இருமுறைகளும் இப்படி இல்லை. காட்டன் துணியை வாஷிங் மெஷினில் போட்டால் வழக்கம் போல் ரிப்பன் வருது; இரண்டு நல்ல புடைவை போச்சு! ஒண்ணு கோட்டா! இன்னொண்ணு செட்டிநாடு காட்டன். அவரோட எட்டு முழம் வேட்டியும் பூணூல் மாதிரி வந்திருக்கு. இங்கே வந்தால் வலுக்கட்டாயமா சிந்தடிக் கட்ட வேண்டி இருக்கு. எப்படிச் சமாளிக்கிறாங்க எல்லாரும்னு புரியலை!

Thursday, October 13, 2011

எண்ணங்களோடு நான்!

நேத்திக்குத் தான் ஒரு குழுமத்திலும் தொலைபேசியில் பேசுகையில் ஒருத்தரிடமும் இந்த முறை ஜெட்லாகே இல்லைனு பெருமை அடிச்சுண்டேன். திருஷ்டிப்பட்டிருக்கு. நேத்து மத்தியானத்தில் இருந்து, (இந்தியாவில் ராத்திரியாச்சே) உட்காரவே முடியலை. கணினியில் உட்கார்ந்தாலும் மனம் பதியவில்லை. சாயந்திரம் ஆறரை வரைக்கும் எப்படியோ தாக்குப் பிடிச்சேன். ஏழு, ஏழரை ஆச்சு; போய்ப் படுத்துவிட்டேன். தூங்கும் குழந்தையை எழுப்பிச் சாப்பாடு போடறாப்போல் சாப்பாடு போட்டாள் மருமகள். சாப்பிட்டுட்டு உடனே தூங்கியாச்சு. சரியாப் பனிரண்டரை மணிக்கு முழிச்சாச்சு. அப்போலே இருந்து கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருந்தேன். கணினியில் உட்காரலாமானு யோசிச்சேன். இங்கே விளக்கு எரியறதைப் பார்த்துட்டு எல்லாரும் முழிச்சுக்கப் போறாங்கனு வரலை. அதோட ஏதேதோ சிந்தனைகள் வேறே ஆக்கிரமிப்பு.

சிந்தனைகளே இல்லைனு யாரும் சொல்ல முடியாதுனு நம்பறேன். நமக்கு இப்போதைய தலைபோற சிந்தனை திரும்பிச் சென்னை போனதும் வீட்டை என்ன செய்யப் போறோம்னு தான். அதோடு அடுத்து எழுத வேண்டியவை என்ன என்ன என்று ஒரு சின்னப் பட்டியல்; செளந்தர்ய லஹரியைத் தொடரணும். ஆன்மீகப் பயணத்தில் சிவ வடிவங்கள் பாதியோடு நின்னிருக்கு. பக்தியிலே அனுமான் காத்துட்டு இருக்கார். பல பதிவுகளுக்குப் போய்ப் படிக்க முடியலை. இங்கே கொஞ்சம் நேரம் கிடைக்கும்னு நினைச்சேன்; இப்போதைக்கு நேரம் அட்ஜஸ்ட் பண்ண முடியலை; போகப் போகப் பார்க்கணும்.

தோழி வல்லி வரும் வாரத்தில் இருந்து/அல்லது இந்த வாரமா??? தமிழ்மணம் நக்ஷத்திரமாக இருக்காங்களாம். தமிழ் மணம் பக்கம் போயேப் பல மாசங்கள் ஆகின்றன. அங்கே அப்டேட்டும் செய்வதில்லை. வல்லிக்காகப் போய்ப்பார்க்கணும். இங்கே குளிர் ஆரம்பிச்சிருக்கு. பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். ஆறு மாசமும் ஆறு நாளா ஓடிடும்னு நினைக்கிறேன்.சென்னையில் இருந்து வரும்போதும் தூங்கி வழிஞ்சேன். துபாயில் விமானம் மாறுகையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்பட்டோம். பின்னர் விமானம் மாறி யு.எஸ்.விமானத்தில் ஏறினால் எங்க ஜோனில் மட்டுமில்லாமல் விமானம் முழுதுமே காலி. எங்களுக்கு இரட்டை சீட் கிடைச்சிருந்தது. அங்கிருந்து பக்கத்தில் உள்ள நாலு சீட்டரில் போய் நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே! பதினாறு மணி நேரம் போகணுமே.

யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே? நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும், ரொம்பக் கஷ்டமாப் போச்சு. மன்னிப்புக் கேட்டுட்டுப் பேசாமல் இருந்துட்டேன். அப்புறமா என்ன நினைச்சாங்களோ, திரும்பிப் போக டிக்கெட் வாங்கியாச்சானு கேட்டுட்டு, கடைசியா எப்போ வந்தேனு கேட்டுட்டு, நாலு வருஷம் ஆச்சுனதும் ஆறு மாசம் அனுமதி கொடுத்துட்டாங்க.



Love Lasts As Long As Life Exists
The Rest Is Only Memories Of Happy Times..!

Saturday, October 08, 2011

சதாபிஷேஹம், (அசோகமித்திரன்) சித்தப்பாவுக்கு!

 நேற்று சித்தப்பாவின் சதாபிஷேஹம். எங்களால் நேற்றுச் செல்ல முடியவில்லை; வேறு வேலைகள் இருந்தன. முந்தா நாள் ருத்ர ஏகாதசிக்குச் சென்று வந்தோம். அப்போது எடுத்த படங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். செல்லில் எடுத்தவை.
 ருத்ர ஏகாதசிப் படங்களும் காமிராவில் இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியலை காமிராவில் இருந்து பிகாசாவுக்கு அப்லோட் பண்ணினா காமிராவில் உள்ள எல்லாமும் தானே டெலீட் ஆகிறது. ரிக்வெஸ்ட் விண்டோ வருது. கான்சல் கொடுக்கிறேன். அதை கான்சல் கொடுத்தும் கான்சல் ஆவதில்லை. அதை என்னனு அப்புறமாத் தான் பார்க்கணும். நேரம் இல்லை.
 
Posted by Picasa
இவங்க மூன்று பேரும் தம்பிகள். மூன்று பையர்கள் தான் சித்தப்பாவுக்கு. கடைசியிலே நிற்கிறவரை அடிக்கடி தொலைக்காட்சியில் காணலாம். விவிஐபிக்களிடம் ஹிந்துவுக்காகப் பேட்டிகள் எடுக்க வருவார். மீட்டிங்குகளில் காணப்படுவார்.

ஆச்சு, நாளை ஒரு நாள் தான். பாக்கிங் வேலை மும்முரம். அதோட இங்கே முடிக்க வேண்டிய வேலைகள்னு ஒரு மாசமா ஒரே அலைச்சல். கடந்த மூன்று நாட்களாக இன்னும் அலைச்சல்; நாளைக்குப் பறக்கப் போகிறோம். அப்புறமா அங்கே போனதும் ஜெட்லாக் எல்லாம் சரியாகிக் கணினிக்கு வரணும்; நடுராத்திரி தூக்கம் வரலைன்னா கணினிலே உட்காருவேன். அப்போ யார் மாட்டறீங்கனு பார்க்கணும்! எல்லாருக்கும் போயிட்டு வரேன். யு.எஸ்ஸில் இருந்து பார்க்கலாம்.

Thursday, October 06, 2011

நலம்தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 12

அம்பிகை மஹிஷனை வதம் பண்ணி விட்டாள். அவள் வந்த வேலை முடிந்தது. இனி ஈசனோடு ஐக்கியம் ஆகவேண்டும். சிவசக்தியாகக் காட்சி தரவேண்டும். ஒரு சிலர் சிவனை வழிபடும் அன்னையாக சிவபூஜைக் கோலத்தில் அன்னையை அலங்கரிப்பார்கள். ஒரு சிலர் சரஸ்வதியாக வெள்ளைப் பட்டுடுத்தி வீணையைக் கையில் தாங்கி, அக்ஷமாலை, கமண்டலு, சுவடிகளோடு வெண்தாமரையில் அமர வைத்தும் அலங்கரிப்பார்கள். இவர்களில் யாராகவே இருந்தாலும் அன்னை கலைகளை ஆதரிக்கிறவள். லலிதா சஹஸ்ரநாமாவளியில் இரண்டு இடங்களில் அம்பிகையின் கலாஞானம் குறித்து வரும்."கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீ-ப்ரியா" என்றும், "கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப - விநோதினீ" எனவும் அழைக்கப்படுகிறாள் அம்பிகை. அறுபத்து நான்கு கலைகளுக்கும் அவளே தலைவி. ஆகையால் நாம் கற்ற கலைகளை மறவாமல் நினைவுகொள்ளத் தக்க நாள் இன்றைய நாள் என்பதை நினைவில் கூரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் தேர்ந்தவர்களாக இருப்போம். அந்தக் குறிப்பிட்ட கலையை மறவாமல் இன்றைய தினம் நினைவூட்டிக்கொண்டு குருவுக்கு வந்தனமும் செய்ய வேண்டும். சிறு குழந்தைகளை முதன் முதல் படிப்பிக்கும் நாளும் இதுவே. சில குழந்தைகளுக்கு சங்கீதம், நடனம் போன்ற லளித கலைகளையும் சொல்லிக் கொடுக்க ஏற்ற நாளாகும். இன்றைய தினம் அக்ஷராப்பியாசம் செய்தால் நல்லது எனச் சொல்லப் படும்.

இன்றைய நிவேதம் தயிர் சாதம். சாதத்தைப்பால் விட்டுக் குழைய வடித்து வைத்துக்கொள்ளவும். அதிலே உப்புச் சேர்த்துக்கொண்டு, ஒரு டேபிள்ஸ்பூன் தயிரும், ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயும் சேர்த்துப் பிசையவும். நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை தாளிக்கலாம், பிடித்தமிருந்தால் காரட், வெள்ளரிக்காய், மாங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

உலகம் தோன்றிய நாள் தொட்டு சக்தி தான் அனைத்துக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. அந்த சக்தியை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றும் இந்த நவராத்திரி தினங்களைச் சொல்லலாம். பழைய நண்பர்களைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்து நவராத்திரிக்கு அழைப்பது, கொலு வைப்பது, அதிலேயும் சிருஷ்டி எப்படி ஆரம்பித்தது என்பதற்கேற்ப கொலு பொம்மைகளை வைப்பது, நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளில் இருந்து மூலக்கருவைத் தேர்ந்தெடுத்துப் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது, நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது; வெற்றிலை, பாக்கு, பரிசுப் பொருள் அளித்து கெளரவிப்பது எனப் பல வகையிலும் நாம் நம்முடைய உறவைப் புதுப்பித்துக்கொள்கிறோம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமோ குணத்தைக் குறிக்கும் எனில் அடுத்த மூன்று நாட்கள் ரஜோ குணத்தைக் குறிக்கும். கடைசி மூன்று நாட்களோ நம் அறியாமை அகன்று, மூடத்தனம் ஓடிப் போய் ஞானம் பெறும் நாட்களாகின்றன. இது சத்வ குணத்தைக் குறிக்கும். ஒவ்வொருவருக்கும் அனைத்து குணங்களும் குறைவற இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், நம்முடைய நடவடிக்கைகளாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குணம் மேம்பட்டு நிற்கிறது. நம்முடைய உணர்வு அல்லது பிரக்ஞை (எது சரியா வரும்?) தமோ குணத்தில் இருந்து ரஜோகுணத்தை ஊடுருவிச் சென்று கடைசியில் சத்வகுணத்தை அடைகிறது. சத்வகுணமே இருந்துவிட்டால் நன்றாகத் தான் இருக்கும். வாழ்க்கையில் வெற்றியும் பெற்றவர்களாவோம். ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பதே உண்மை. ஆனாலும் நாம் ஒரு வகையில் வெற்றி அடைந்துவிட்டோம் என்ற உண்மையை உணர்த்துவதற்காகவும் விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.

புராணங்களின்படியும் விஜயதசமி நன்னாளில் ராவண வதம் முடிந்து ஸ்ரீராமர் அயோத்தி வந்து முடிசூட்டிக்கொண்ட நாளாய்க் கருதப்படுகிறது. அர்ஜுனன் அன்றே தன் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபாடுகள் செய்து போருக்கு ஆயத்தமானான் எனச் சொல்லப் படுகிறது. அன்னை மஹிஷனை வதைத்து ஈசனோடு ஐக்கியமான நாள் எனவும் சொல்லப் படும். ஆக மொத்தம் விஜயதசமி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். மேலே சொல்லப்பட்ட மூன்று குணங்களையும் நமக்கேற்றவாறு வளைத்துக்கொண்டு சத்வகுணமே மேலோங்கி இருக்கிறாப்போல் செய்வதே விஜயதசமியின் உள்கருத்தாகும். நல்லவற்றுக்கும், கெட்டவற்றுக்கும் இடையே நடக்கும் இடைவிடாப் போரின் முடிவையே விஜயதசமி குறிக்கும். முழு உண்மை, சத்தியம், இங்கே பிரம்மம் என்று சொல்வது தகுமா தெரியலை; அது வெளிப்படையான இருமைத் தத்துவத்திலிருந்து ஒன்றாக ஆவதே ஆகும். இதற்குத் தான் அம்பிகை வழிபாடு. இங்கே நம் உள்ளத்தில் இடைவிடாது நடக்கும் போரையே உதாரணமாகச் சுட்டுகிறோம். ஆகவே நம்முடைய மனசாட்சியையே அம்பிகையாக நினைத்துக் கொண்டால், போதுமானது. என்ன பெயரில் இருந்தால் என்ன! இருப்பது ஒரே பரம்பொருளே; எந்தப் பெயரிட்டு அழைத்தும், அம்பிகையை வணங்கி அவள் அருளைப் பெறலாம்.

அந்த தேவி இருக்குமிடமோ சிந்தாமணி க்ருஹம் ஆகும். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹம் அனைத்துக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் ரத்தினத் தீவில் அமைந்துள்ளது.

ஸுதா-ஸிந்த்தோர்-மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம்

ஆரமுதின் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவூடே
பாரகடம்பு அடர் கானில் அரும் கொடை
பாய் மணி மண்டப வீடுளே
கோரசிவன் பரமேசன் உன் மஞ்சம் ஓர்
கூர் பர்யங்கமெனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

லலிதா சஹஸ்ரநாமாவளியில் அம்பிகையின் இருப்பிடம் ஆன ஸ்ரீ நகரம் குறித்த வர்ணனையில் “ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா” என்று வரும். ஈசனுக்குக்கைலையும், விஷ்ணுவுக்கு வைகுண்டமும் போல ஸ்ரீலலிதைக்கு ஸ்ரீநகரம். ஆனாலும் இன்னொரு வாசஸ்தலமும் உண்டு அம்பிகைக்கு. அது தான் மேலே சொன்ன மேருவில் செய்யும் வாசம். பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவற்றுக்கு நடுநாயகமாக பிரதானமாய் இருக்கும் சிகரத்திலே அம்பிகையின் வாசஸ்தலமான மேரு எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதைத் தவிரவும் ஸ்ரீநகரம் எனப்படும் ஸ்ரீநகர வாசியாவாள் அம்பிகை. அந்த ஸ்ரீநகரத்தின் வர்ணனையைத் தான் இப்போது பார்க்கிறோம். மேருவில் இருக்கும் ஸ்ரீநகரம் அம்பாளின் ஆக்ஞையின் பேரில் விஸ்வகர்மா நிர்மாணித்தான் எனில் இது அம்பிகையே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது. இது அமிருத சாகரத்தின் மத்தியில் ஒரு தீவில் உள்ளது.

இந்த ஸ்ரீநகரத்தில் இருபத்தைந்து கோட்டைகள்,ஆவரணங்கள் எனப்படும் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. இவற்றில் இரும்பு, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவற்றாலும், பின்னர் மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றாலும்சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியவர்களின் தேஜஸால் ஆன கோட்டை என உண்டு. இங்கே உள்ள கடம்ப வனத்தைத் தாண்டிச் சென்றால் பத்மங்கள் எனப்படும் தாமரை பூத்த தடாகத்திலே சிந்தாமணிக்கற்களைப் படியாகக் கொண்ட அரண்மனையிலே பஞ்ச பிரம்மங்களை (பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன்) நான்கு கால்களாகவும், சதாசிவனை மேல் பலகையாகவும் கொண்ட சிம்ஹாசனத்தில் காமேச்வரன் மடியில் அமர்ந்து கொண்டு லலிதாம்பிகை தர்பார் நடத்துகிறாள். இதுவே ஓங்கார மஞ்சம் அர்த்தம், மாத்திரை, பிந்து அ+உ+ம.

இந்தச் சிந்தாமணி க்ருஹம் என்பது என்ன?? சிந்தா என்பதெல்லாம் நம்முடைய சிந்தைகளே ஆகும். மணி நம்முடைய சிந்தை துர் சிந்தையாக இல்லாமல் பொறுக்கி எடுத்த முத்துக்களைப் போல மணியாக அமையப்பெற்று எப்போதும் அவள் நாமத்தையே ஓங்கார ஸ்வரூபத்தையே நம் சிந்தைக்குள்ளே குடி கொள்ளுமாறு பண்ணுவதே ஆகும். இதை யோக முறையில் சிந்தித்தால் நன்கு புரியும். வெளியே இருந்து இப்படிப் பட்டகிருஹத்திலா அம்பிகை வாசம் செய்கிறாள் எனக் கேள்வி கேட்பது சரியில்லை. இதை உள்ளார்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் உடலை, நம்முள்ளே உறையும் சிந்தனைகளை, நம் உள்முக வழிபாட்டையே குறிக்கும். அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் நம்முள்ளே உறையும் அம்பாளை நாம் காணவேண்டும். இதைத் தான் அபிராமி பட்டர் கூறுகிறார்.


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

ஆதிசக்தி ஏகப் பரம்பொருள். இந்த ஏகப்பரம்பொருளானது, முதலில் ஒரே பொருளாகிய பராசக்தியாகத் தோன்றிப் பின்னர் பல்வேறு சக்திகளாய் விரிந்து இவ்வுலகத்தின் அனைத்திலும் நிறைந்து, பின்னர் அவற்றினின்றும் நீங்கியும் நிற்பாள். ஆனாலும் சக்தியானவள் ஒன்றே தான். இந்த ஒரே சக்தி என் நெஞ்சில் நீங்காது நிலை பெற்று நின்றிருக்கிறாளே, என் அம்மே, இது என்ன அதிசயமானதாய் இருக்கிறதே. இந்தப்பேருண்மையை உணர்ந்தவர்கள் வேறுயாரென்றால் இவ்வுலகம் அழியுங்கால் ஆலிலையில் துயின்றானே அந்தத் திருமாலும், உன் அருமைக்கணவன் ஆன என் ஐயன் ஈசனும் தான். இவர்கள் இருவருமே அறிவார்கள்.

Wednesday, October 05, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 11


இன்று அஷ்டமி தினம். பொதுவாக அஷ்டமி, நவமி என்றாலே நாம் சுபகாரியங்கள் செய்வதைத் தள்ளிப் போடுவோம். ஆனால் இந்த அஷ்டமியில்தான் நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் ஆன ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன், அம்பாள் ஆகியோருக்கு உகந்த நாளாக உள்ளன. புரட்டாசி மாதம் மூல நக்ஷத்திரத்தில் தான் சரஸ்வதி ஆவாஹனம் செய்யப் படுவாள். அதைத் தொடர்ந்த நான்கு நாட்களும் சிறப்பாக வழிபாடுகள் செய்யப் படும். இன்றைய அலங்காரத்தில் அம்பிகையைச் சிலர் சரஸ்வதியாகவும், சிலர் சண்டிகையாகவும் அலங்கரிப்பார்கள். சண்டிகை தான் சண்டனையும், முண்டனையும் அழித்து ஒழித்தாள். இவளை சரஸ்வதியாக அலங்கரித்தால், அன்ன வாகனத்தில் தர்ப்பைப் புல் பரப்பி வெண்தாமரை மேடையில் அமர வைக்கலாம். சண்டிகை எனில் சூலம், கத்தி, வஜ்ராயுதம் போன்றவற்றோடு சிங்க வாகனத்தில் அமர வைக்கலாம். இன்றைய நிவேதனம், பால் பாயசம், அல்லது புளியோதரை.

மாலை நிவேதனம் பாசிப்பருப்புச் சுண்டல். பச்சைப் பயறு இல்லை. அதன் தோலை நீக்கிய பாசிப்பருப்பு ஊற வைத்து உப்புச் சேர்த்து வேக வைத்துப் பின்னர் எண்ணெய் ஊற்றிக் கடுகு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு, பாசிப்பருப்பைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு தேவையானால் சாம்பார் பொடி சேர்த்துத் தேங்காய் துருவலோடு, பொடிப்பொடியாக நறுக்கிய மாங்காய், வெள்ளரிக்காய் சேர்க்கவும்.

இங்கே சண்டனையும் முண்டனையும் குறிப்பிட்டதன் காரணம் இருவரும் ஏறுக்கு மாறாகப் பேசுவார்கள்; நடந்து கொள்வார்கள். சண்டன் ஏறுக்கு மாறாகப்பேசுவதோடு நினைக்கவும் செய்வான். முண்டனோ தலையே இல்லாதவன் என்ற பொருளில் வருவதால் யோசிக்க எதுவுமே இல்லை என்றே இருப்பான். அவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்கே செய்வார்கள். இதைத் தான் மானுட வாழ்வில் பிடிவாதம் என்கிறோம். எத்தனை படித்து புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயங்களில் இந்த அசட்டுப் பிடிவாதம் நம்மை விடாது. தேவையே இல்லாமல் பிடிவாதம் பிடிப்போம். அப்போது நமக்கு யார் என்ன நன்மையாகச் சொன்னாலும் ஏற்க முடியாது. சொன்னதையே சொல்வோம். அல்லது அவர்கள் நம்மோடு பேசவே இல்லை என்னும்படி நடப்போம். இதைத் தான் தேவியின் கடைக்கண் கடாக்ஷத்தின் மூலம் மாற்றலாம். அவளுடைய நினைவால், அவள் கண்ணசைவால், நம்முடைய மூடத்தனமான பிடிவாதங்கள் விலகி நமக்கு வேண்டியவர்கள் வேண்டியபோது சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டு மன முதிர்ச்சியைப்பெறுவோம்.

அடுத்து வருபவன் தூம்ரலோசனன். தூம்ரம் என்பது புகை வருவதையும் லோசனம் என்பது கண்களையும் குறிக்கின்றன. தூம்ரலோசனன் என்றால் புகை படிந்த கண்களை உடையவன். அந்தகாசுரனுக்கு அண்ணனோ?? கண்கள் இருந்தாலே நல்லவற்றைப் பார்க்க யோசிக்கும்; அப்படி இருக்கையில் புகை படிந்த கண்களோடு தூம்ரலோசனன் நல்லவற்றை எங்கே பார்ப்பான்! பார்வை மறைக்கும். நல்லதே தெரியாது. இதன் காரணமும் சக்தி இல்லாமையே. சக்தியைப் பற்றாமையே. சக்தி வேண்டும் என முழுமனதோடு அவள் தாள்களைப் பணியாமல் இருப்பதே ஆகும். நம் உடலில் பரிபூரணமாய் சக்தி ஊடுருவி இருந்தால் மேற்சொன்ன ராக்ஷஸர்கள் எவரும் நம்மை ஆக்கிரமிக்க மாட்டார்கள். நமக்கு சக்தி தேவை எனில் அதற்கு நாம் அம்பிகையைச் சரண் அடைவதே நன்மை தரும்.

தேவி மஹாத்மியத்தின் மேற்சொன்ன அசுரர்களை நம் உடலோடு சம்பந்தப் படுத்தி விளக்கங்கள் கொடுத்துச் சொற்பொழிவு ஆற்றியவர் பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆவார். தூம்ரலோசனன், சண்டன், முண்டன் ஆகியோர் முன்னால் உள்ள அத்தியாயங்களிலேயே வந்துவிடுவார்கள். இங்கே என்னுடைய நினைவாற்றலைப் பொறுத்து முன்பின்னாகச் சொல்லி இருப்பதற்கு மன்னிக்கவும். இப்படி சர்வ வல்லமையுள்ள சக்தியை வழிபடுபவன் சகல செளபாக்கியங்களையும் பெறுவான்.

சிவசக்தி என இரண்டு பேரைச் சொன்னாலும் அம்பாளே ஈசனுக்கு சக்தியை அளிப்பதால் அவனுக்கெனத் தனியாக எந்தத் தொழிலும் இல்லை என்றே ஏற்படும். ஆனால் அவளோ சாக்ஷாத் காமேஸ்வரனுடைய ஜீவநாடியாகவே விளங்கி வருகிறாள். அவள் இந்நிலையில் இருப்பது மணிபூரக சக்கரத்தில். இங்கு தான் அஹம் என்னும் தன்னுணர்வு தோன்றுகிறது. இதுவே அம்பிகையின் ஸ்வரூபம் என்கிறார் ஆசாரியார். அவனுக்கும் உள்ள முக்கியத்துவத்தை நினைந்தே முதலில் ஈசனைச் சொல்லி வந்த ஆசாரியர் பின்னர் அம்பிகையின் தனித்துவத்தை மட்டும் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் ஸ்வரூபம் வர்ணிக்கப் படுகிறது. அம்பிகை எப்படி விளங்குகிறாள் எனில்,


“க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா

மேகலை பொங்க மதாசல கும்பம் எனா
முலை கண்டு இடை சோரா நீர்
மாக வளங்கெழு நாள் இறை அம்புலி
வாண்முகம் அம்பு வில் ஏடார் போது
ஏகநெடுங்கழை பாசம் ஓடு அங்குசம்
மேர்பற வந்தருள் காபாலி
நீ கமலம் திகழ் தாள் வருடு என்று அரன்
நீணர்மையின் விஞ்சிய கோ மாதே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே அம்பிகையின் ஆபரணங்கள் மட்டுமில்லாமல் ஆயுதங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. காஞ்சீ என்றால் ஒட்டியாணம். அந்த ஒட்டியாணத்தின் கீழே தங்கத்தால் சலங்கைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அந்தச் சலங்கைகள் அம்பிகை அசையும்போதெல்லாம், “கிணுகிணு” எனச் சப்திக்கின்றனவாம். அத்தகைய ஒட்டியாணம் பூண்ட அம்பிகையின் மார்பகமானது யானையின் மத்தகம் போன்று காணப்படுகின்றனவாம். அதான் அம்பிகை சற்றே உடல் வளைந்து கொள்வதை வணங்கிய உடல் என்கிறார் இங்கே ஆசாரியர். சரத் காலத்துச் சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தை உடைய அம்பிகையின் இடையானது மிகவும் மெலிந்து காணப்படுகிறதாம். ஆனால் இவள் கைகளோ கரும்பால் ஆன வில்லையும், புஷ்ப பாணங்களையும் ஏந்திக்கொண்டிருப்பதோடு கூடவே பாசம், அங்குசம் போன்றவற்றையும் ஏந்திக்கொண்டிருக்கிறாள். திரிபுரங்களையும் தன் அட்டஹாசச் சிரிப்பால் எரித்த அந்த ஈசனின் “அஹம்” எனப்படும் ஸ்வரூபவடிவான இந்த அம்பிகை இங்கே நமக்காக எழுந்தருளட்டும்.

மன்மதனின் புஷ்பபாணங்களால் காமவசப்பட்டு அதிலேயே மூழ்கிக் கிடக்கும் சாமானிய மனிதர்களைக் கரையேற்ற வேண்டியே அம்பிகை அந்தப் புஷ்ப பாணங்களைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் மனதையும் கட்டுப்படுத்துகிறாள். ஆனால் ஈசனிடமோ மோஹத்தை உண்டு பண்ணுகிறாள். அம்பாளின் வடிவங்கள் பல இடங்களிலும் பல்வேறு மாறுபட்ட மாதிரிகளில் இருந்தாலும் அனைத்துமே லலிதா திரிபுரசுந்தரியாகவே ஸ்ரீ வித்யா தந்திரத்தில் சொல்கின்றனர். அத்தகைய அங்க லக்ஷணங்களோடு காணப்படுபவள் காஞ்சி காமாக்ஷி தான் என்கிறார் பரமாசாரியார்.

காஞ்சி மாநகரே அம்பிகையின் நாபிஸ்தானமாகச் சொல்லுவதுண்டு. அந்த நாபிஸ்தானத்தில் கட்டப்படும் ஒட்டியாணத்தின் சிறப்பைத் தான் மேலே பார்த்தோம். இங்கே அம்பிகை வைத்திருக்கும் ஆயுதங்கள் லலிதா திரிபுரசுந்தரியின் அடையாளங்கள் ஆகும். நாலு ஹஸ்தங்களுடைய அவளுக்கு மேலிரண்டு கைகளில் பாசமும், அங்குசமும், கீழிரண்டு கைகளில் கரும்பால் ஆன வில்லும், புஷ்பபாணங்களும் காணப்படும்.

நமக்கு விருப்பும் உண்டு, வெறுப்பும் உண்டு. நம்முடைய விருப்பையும், வெறுப்பையுமே காமக்ரோதம் என்று சொல்கிறோம். காமமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். க்ரோதமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இங்கே அம்பிகையின் கையில் உள்ள பாசத்தை காமத்துக்கு உவமையாகச் சொல்லப் படுகிறது. பொதுவாகப் பாசம் என்று பற்றுக்குச் சொல்கிறோம் அல்லவா? அந்த ஆசை, பற்று தான் காமம். இது நம்மைக் கட்டுப்படுத்துகிறது. அங்குசம் யானையைக் குத்தி உசுப்பி விடப்பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இங்கே க்ரோதம் என்னும் அங்குசம் நம்மையே குத்துகிறது. பிறரைக் குத்துவதை விட நம்மைத் தான் அதிகமாய்க் குத்துகிறது. இரு விதத்திலும் நம் சக்தி வீணாகச் செலவாகிறது.

இங்கே நம் மனமாகிய யானையைப் பாசம் என்னும் சங்கிலியில் போட்டுக் கட்டி வைக்கவேண்டும். அதோடு போதாது. அங்குசத்தாலும் அந்த யானையை அடக்கியாக வேண்டும். மனதை அடக்குவதற்காகவே பாசமும், அங்குசமும் இங்கே அம்பிகையின் ஆயுதங்களாகக் காட்டப்பட்டுள்ளது.


துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

அம்பிகையைத் திரிபுரசுந்தரி என உணர்ந்து கொண்டதாய் பட்டர் தெரிவிக்கிறார். திருக்கடையூரில் அபிராமி அம்மன் வரத ஹஸ்தம், அக்ஷ மாலையோடு காணப்பட்டாலும் பட்டர் கண்களுக்கோ அம்பிகை திரிபுரையாகக் காட்சி அளித்திருக்கிறாள். நாங்கள் அனைவரும் இவளே துணை என நம்பித் தொழும் தெய்வம் ஆன இவள் எங்களைப் பெற்ற தாய். வேதமென்னும் விருக்ஷமும் இவளே. அதன் கிளைகளும் இவளே, அடியிலுள்ள வேரும் இவளே, கொழுந்துகளும் இவளே. அப்படிப் பட்ட இவள் கைகளில் ஏந்தி இருக்கும் பூங்கணைகளாலும் கரும்பு வில்லாலும், பாசாங்குச ஆயுதங்களின் மூலமும் இவளே சாக்ஷாத் திரிபுரசுந்தரி என அறிந்தோம். ஆயிற்று, அம்பிகையை எழுந்தருளப் பண்ணியாயிற்று.


சிவம் வெறுமனே சிவமாகவே உட்கார்ந்திருந்தால் இவ்வுலகம் நடப்பது எப்படி? ஆகையால் அவனின் லீலைகள் நடக்கவேண்டி அம்பிகை காமன் தோற்றுப் போனாலும் விடாமல் தன் வசீக்ரத்தால் தானே அந்தக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் எடுத்துக்கொண்டு அவனிடம் சேர்ந்தாள். சிவனைக் காமேஸ்வரனாக்கித் தானும் காமேஸ்வரியானாள். அதன் பின்னர் தன் கருணைப் பார்வையால் கருணா கடாக்ஷத்தால் காமன் எனப்படும் அநங்கனையும் உயிர்ப்பித்து சிருஷ்டி தத்துவம் நிறைவேற வேண்டி சாமானியமக்களிடம் காமத்தை உண்டாகும் அதிகாரத்தைத் திரும்ப அவனிடமே கொடுக்கிறாள். ஆனாலும் மீண்டும் சிவன் யோகத்தில் ஆழ்ந்துவிடாமல் இருக்க வேண்டி, தானே அந்தக் கரும்பு வில்லையும், பஞ்ச பாணங்களையும் விடாமல் வைத்துக்கொண்டாள். இந்த சிவசக்தி ஐக்கியமே இதன் முக்கிய தத்துவம்.

செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

Tuesday, October 04, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு, செளந்தர்ய லஹரி 10


ஏழாம் நாளான இன்று அம்பிகையை பிராம்ஹி அல்லது பிரம்மாணியாகக் காட்சி தரும்படி அலங்கரிக்கலாம். இவளை வித்யா லக்ஷ்மி என்றும் கூறலாம். கமண்டலம், ஜபமாலை, கோடரி, கதாயுதம், வில், அம்பு, சூலம், அமுதகலசம் போன்றவற்றுடன் வெண் தாமரையில் அமர்ந்த வண்ணம் அருளாட்சி செய்யும் இவளை வணங்கினால் அடுத்தவரைப் பார்த்து அவரோடு நம்மை ஒப்பிடாத வண்ணம் நம் வாழ்க்கையை நாம் ரசித்தும் அதன் ருசியை உணர்ந்தும் வாழலாம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று எனப் பிறவியிலேயே விதித்திருக்கிறது. நாம் எடுத்து வந்த கர்ம மூட்டைகளுக்கு ஏற்பவே நமக்கு எதுவும் கிடைக்கும்; அல்லது கிடைக்காமல் போகும். ஆகவே இன்னொருத்தரைப் பார்த்துப் பேராசை கொள்ளாமல் நம்மிடம் இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இவளுக்கான நிவேதனம் பால் சாதம் அல்லது பால் பாயசம். பால் சாதம் சாதத்தைக் குழைய வடித்துப் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் சர்க்கரை, ஏலம் சேர்த்துச் செய்யலாம். பால் பாயாசம் எனில் அரிசி ஒரு கரண்டியை எடுத்துச் சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்துக் கொண்டு அரை லிட்டர் பாலில்குழைய வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் கரண்டியால் மசித்துக்கொண்டு மேலும் கொஞ்சம் பாலைச் சேர்க்கவும். பின்னர் கல்கண்டு சேர்த்துச் சேர்ந்து கொதித்ததும் தேவை எனில் பால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். ஏலம், குங்குமப்பூ போடவும்.

மாலை நிவேதனம் மொச்சைச் சுண்டல்: மொச்சையை முன் கூட்டியே ஊற வைத்துக்குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்துப் பட்டாணிச் சுண்டலுக்குச் செய்த மாதிரியே செய்யவும்.

ஆசைகள் அதிகம் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகம். புத்தி மந்தமாக மாறும். ஒருவரை ஒருவர் சந்தேகம் கொள்வார்கள். சிலருக்குத் தன் மேலேயே சந்தேகம் வரும். தன்னம்பிக்கை இருக்காது. மந்தமான புத்தி இருப்பதைத் தான் மஹிஷத்திற்கு உதாரணமாகக் காட்டுவார்கள். அந்த மந்தமான மஹிஷத்தை அன்னை அழிப்பதே மந்த புத்தியை அடியோடு ஒழித்து சுறுசுறுப்பும், ஆற்றலும் மிகுந்த சக்தியை வரவழைத்துக்கொள்வதாகும். உண்மையில் இந்தப்போராட்டங்கள் நமக்குத் தினம் தினம் நம்முள்ளே நடந்து கொண்டே இருக்கிறது. இந்த அசுரர்கள் எல்லாம் நமக்குள்ளேயே இருக்கின்றனர். சந்தேக புத்தியை சும்பனுக்கும், நிசும்பனுக்கும் உதாரணம் காட்டலாம். இரண்டு பேரும் எல்லாவற்றிற்கும், எல்லாரையும், எப்போதும் சந்தேகம் கொள்வார்கள். அதனால் புத்தி மஹிஷத்தைப் போல் மந்தமாகிவிடுகிறது. ஆற்றல் குறைகிறது. அதுவும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் இன்றைய சூழலில் இது மிகவும் சகஜமான ஒன்று. நம்முள்ளே போராடித் தான் நாம் மீண்டு வரவேண்டும். அதைத் தான் இழந்த சக்தியை மீட்டெடுப்பது என்கிறோம். அந்த சக்திதான் அன்னை வடிவில் நாம் வணங்கும் தாயாக உருவகம் செய்யப் படுகிறது.

அந்த சக்தி தான் அநங்கன் எனப்படும் மன்மதனையும் வீறு கொண்டெழுந்து ரிஷி, முனிவர்களைக் கூட விடாமல் ஜயிக்க வைக்கிறது. சென்ற பதிவிலேயே பார்த்தோம். அநங்கன் உயிர் பிழைத்ததும் உயிரினங்கள் எல்லாம் காம வயப்படுவதும் சிருஷ்டிக்குத் தேவை எனப்பார்த்தோம். இங்கே அடுத்து வரும் ஸ்லோகமும் அதையே சொல்லும்.

தநு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக:ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே



மாயன் வணங்கி உன் மால் வடிவங்கொள
வாடும் அரன் துயர் போதாதோ
தூய மதன் தொழ ஆண்வடிவம் புணர்
தோகை கண் வண்டயில் தேனே போல்
மேய வழங்கும் உரூபமது என்சொல
மேலிது கண்டவர் வாழ்வாரோ
நீ அத-ரஞ்சகி மோகன வஞ்சகி
நீ செய்வது ஒன்றல மாதாவே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

மன்மதனும் போர் தொடுக்கிறான். அனைவர் மேலும் இந்தப் போர் தொடுக்கிறான். ஆனால் அவன் ஆயுதங்களோ, கத்தி, வில், அம்பு, சூலம், வாள் போன்ற எதுவும் இல்லை. தநு: பெளஷ்பம்= புஷ்பத்தால் ஆன வில். சாதாரணமாகக் கரும்பு வில்லைத் தான் மன்மதன் வைத்திருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கோம். அந்தக்கரும்பு வில்லைத் தான் காமாட்சியும் வைத்துக்கொண்டு காமங்களை ஆட்சி செய்து வருகிறாள். இங்கே ஆசாரியர் மலர்களால் ஆன வில்லை மன்மதனின் ஆயுதமாய்க் குறிப்பிட்டிருக்கிறார். பாணங்களொ எனில் தாமரை, அசோகமலர், மாம்பூக்கள், நவமல்லிகை, நீலோத்பலம். எல்லாமே வாசனைப்பூக்கள். மனதை மயக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலனைக் கட்டி இழுக்கும் திறமை கொண்டவை. அப்போது தானே காமவசப்படுத்த முடியும். இப்படி அனைவரையும் கட்டி இழுக்கும் ஆசையைத் தூண்டுமாறு மன்மதனுக்கு இத்தகையதொரு அதிகாரத்தைக் கொடுத்ததே அம்பிகை தான். அவளாலேயே அவன் உயிர் பெற்று எழுந்ததோடு அல்லாமல் அவள் ஆணைப்படியே சிருஷ்டிக்குத் துணையும் செய்து வருகிறான். கண்களுக்குத் தெரியாமலேயே வலிமையற்ற ஆயுதங்கள் துணையுடன் அவன் செய்யும் போரில் அவனே ஜெயிக்கவும் செய்கிறான். இது அவனுக்கு அம்பிகையின் கடாக்ஷத்தாலேயே ஏற்பட்டதாகும். இப்படி ஸ்ருஷ்டிக்கு அனுகிரஹம் பண்ணி அனைவரையும் ஜெயிக்கும் மன்மதனை நாம் ஜெயிக்க வேண்டும். ஈசனால் எரிக்கப்பட்டவன் அம்பிகையின் அருளினால் அநங்கனாய்த் தன் காரியத்தை அம்பாளிடமும், ஈசனிடமும் நிறைவேற்றிக்கொண்டான். அப்படி மன்மதன் அநங்கனாக மாறி அம்பிகையும் ஈசனும் திருக்கல்யாணம் செய்து கொண்டதைத் தான் காமாக்ஷி புராணம் என்றும் கூறுகின்றனர். இத்தனை பெரியதொரு நிகழ்வை நிகழ்த்திய அநங்கன் முன்போலிருந்தான் எனில் நான் என்ற ஆணவம் ஏற்பட்டிருக்கும். அன்னையை வணங்கி அவள் அருள் பெற்ற காரணத்தால் மன்மதனுக்கு இப்போது தான், தன்னால் தான் எல்லாரையும் வீழ்த்த முடியும் என்ற அஹங்காரம், தான் என்ற உணர்வு அற்றுப் போய் விட்டது. இது அம்பிகையின் அருளே என்பதைப் புரிந்து கொண்டான். தன்னால் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

மேற்கண்ட பொருளுக்கேற்ற பாடல் கிடைக்கவில்லை என்றாலும் இதிலே அம்பிகையின் பஞ்ச பாணங்கள் குறித்துப் பாடியுள்ளார் பட்டர். பஞ்சபாணி என அம்பிகையைக் கூப்பிடுகிறார். மன்மதனுக்கு அடுத்து அம்பிகையிடமே பஞ்ச பாணங்களும், கரும்பு வில்லும் உள்ளது. அத்தகைய பஞ்சபாணியான அம்பிகை ஈசனை ஜெயித்து அவன் உடலில் இடப்பாகத்தையும் பெற்றுக் கொண்டாள் எனில் அவள் சக்தியை என்னவென்று சொல்ல முடியும். இவ்விதம் ஈசனை வென்றாலும் தேவி அவனுள் ஐக்கியமாகி சிவசக்தியாக ஆனதன் மூலம் கணவன், மனைவி இருவரின் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறாள். இங்கே சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற கேள்வியே இல்லை. இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்தது. அசையாமல் இருந்த சிவத்தைத் தன் சக்தியின் மூலம் அசைத்து சிருஷ்டி தத்துவத்தையும், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தையும் ஏற்படுத்துகிறாள் தேவி. இது ஒரு சக்கரம். சுழன்று கொண்டே இருக்கும். அதனாலேயே நமக்குப் பிறப்பும், இறப்பும் அதன் விளைவான கர்ம பலன்களும் ஏற்படுகின்றன.


இங்கே அனைவரும் தேவியின் பார்வைகளுக்கு முன்னர் சமம் என்றாலும் பெளதிக உலகில் ஒவ்வொருவரின் கர்ம பலனுக்கேற்றவாறே நற்பலன்கள் கிட்டும். அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள். சுற்றுச் சூழலின் சமநிலைக்கு எவ்வாறு காடுகள், மலைகள், நதிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் இருப்பு முக்கியமானதாக இருக்கிறதோ அவ்வாறே பிரபஞ்சத்தின் சமநிலைக்கு இந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாக உள்ளது. அனைவரையும் சமமாக வைக்காத கடவுள் எனக்குத் தேவையே இல்லை எனச் சிலர் நினைக்கலாம். இந்த ஏற்றத் தாழ்வுகள் நாம் கொண்டு வந்ததே எனப் புரிந்து கொண்டோமானால் கடவுளிடம் கோபம் வராது. அதற்குத் தான் பக்தி செய்யுமாறு கூறுகின்றனர். முதலில் சாதாரணமான பக்தியில் ஆரம்பித்தால் நாளடைவில் ஆன்ம முன்னேற்றத்தை நாடிச் செல்ல வழி வகுக்கும். தேவியின் வழிபாடும், அவள் பாதார விந்தங்களே சரணம் எனவும் இறுகப் பற்றிக்கொண்டவர்களுக்கு வேறு உபாயமே தேவை இல்லை.

தேவியின் கருணாபாத்திரமானவன் எந்தவிதமான வலிவான சாதனங்களின் உதவியின்றியும் இவ்வுலகை வென்றவன் ஆவான். இதற்கு உதாரணமாக நெஞ்சில் தீமையைத் தவிர வேறொன்றை நினையாமல் தேவாதி தேவர்களுக்குக் கொடுமைகள் புரிந்த அசுரர்களைக் கொன்று அழிக்கும் வல்லமையுடைய ஈசனையே வென்று அவன் உடலின் இடப்பாகத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாயே அம்மா! அத்தகைய சக்தி படைத்த நீ எனக்கும் கருணை காட்டு என்கிறார் பட்டர்.


செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

நாளைக்கு வரும். இதைப் போடாமலேயே தினம் எழுதறேன். அதான் இன்னிக்குப் போட்டேன்.

Monday, October 03, 2011

இந்த மரம் இல்லைனா இன்னொரு மரம்!

அணிலாக இருந்தால் மரத்துக்கு மரம் தாண்டிக் கொண்டு சந்தோஷமாய் இருந்திருக்கலாம். எந்த மரத்தில் பொந்து இருக்கோ அங்கே இருக்கலாம். பறவைகளாய் இருந்தா விண்ணில் பறந்திருக்கலாம். இஷ்டத்துக்கு யார் இருக்காங்க இல்லைனு இல்லாமல் கத்திக்கூப்பாடு போடலாம். மத்தியான வேளையில் இங்கே வந்து பார்க்கணும், கூச்சலை! கூடு கட்டிக்கொள்வதும், குஞ்சு பொரிப்பதுமாக சந்தோஷமாய் நாட்களைக் கடத்தலாம். மழையோ, வெய்யிலோ எதானாலும் பாதிப்பு ஏற்படாது. மழையும், வெய்யிலும் பழகி இருக்கும். ஃபான் வேண்டாம்; ஏசி வேண்டாம்; லைட்கள் தேவை இல்லை; பாதி சமையலில் கரண்ட் போகாது. சமைக்கவே வேண்டாம். பவர் கட் பாதிப்பு இல்லை. தண்ணீருக்கு அலைய வேண்டாம். வீட்டைக் கட்டறதா; இடிக்கிறதானு குழம்ப வேண்டாம். நிச்சயமில்லாத வாழ்க்கை இல்லை. இந்த மரம் இல்லைனா இன்னொரு மரம்! இல்லைனா காட்டுக்குப் போயிடலாமோ! காட்டு மிருகங்களாக இருந்திருக்கலாமோ என்னமோ! நம்மை விட அதுங்க வாழ்க்கை பரவாயில்லைனு தோணுது.

ரோடு தேவையில்லை; ரோடு போடலையேனு சண்டை போட வேண்டாம். பக்கத்து குகை மிருகம் குப்பையைக் கொட்டாது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாம் பாட்டுக்கு இருக்கலாம். மனிதராய்ப் பிறந்தால் தான் பிரச்னையே! எவ்வளவு தேவைகள்! எதைக்குறைக்கிறது! எதை வைச்சுக்கிறது! மூளையே குழம்பிப்போகிறது.

நலம் தரும் நவராத்திரி வழிபாடு, செளந்தர்ய லஹரி 9

ஆறாம் நாளான இன்று அம்பிகை கெளமாரியாகக் காட்சி அளிக்கிறாள். சேவல் கொடியோடு, அந்தக் குமாரனைப்போலவே அவன் சக்தியும் மயில் வாகனத்தில் காணப்படுவாள். குமாரன் எவ்வாறு அசுர குணங்களை மட்டுமே நசுக்குவானோ அவ்வாறே இவளும் நம் பாவமாகிய அசுர குணங்களைப் போக்குவாள். இவளை லலிதா சஹஸ்ரநாமாவளியில் “குமார-கணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்-மதிர்-த்ருதி: “என்று அழைக்கிறோம். இவளுக்கான நிவேதனம் சித்ரான்னம். எது வேண்டுமானாலும் செய்யலாம். தேங்காய் சாதம், எள் சாதம், புளியோதரை என எதுவாக வேண்டுமானாலும் செய்யலாம்.

மாலை நிவேதனம் பட்டாணிச் சுண்டல்: பட்டாணியை முதல் நாளே ஊற வைத்தால் சில சமயம் ஒரு மாதிரியாக வாசனை வந்துவிடும். ஆகவே காலையிலேயே ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்து நீரை வடிகட்டிவிட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, தேங்காய், மாங்காய் சேர்த்துக் கிளறிப் பட்டாணியையும் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடியையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதற்குத் தேங்காய் துருவல் போடாமல் சின்னச் சின்னதாய்க் கீறிப் போட்டால் நன்றாக இருக்கும்.
************************************************************************************
தேவி மஹாத்மியத்தில் "ரக்தபிந்துர்-யதா பூமெள பதத்யஸ்ய சரீரத:" என்று வரும். ரக்தபீஜன் என்னும் அரக்கனைக் குறித்தது இது. அவனுடைய சரீரத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் அவனைப்போன்றே இன்னொரு அசுரன் தோன்றுவான். ரத்தம் தான் ரக்தம் எனவும், பீஜன் என்றால்= இங்கே பீஜம்=விதை என்ற பொருளிலும் வரும். அசுரன் தன் ரத்தத்தில் இருந்து விதையை விதைத்து இன்னொரு அசுரனை உண்டாக்குகிறான். இது எப்படி எனில் நம்முடைய ஜீன் என்றும் கூறலாம். நாம் நம்முடைய மூதாதையரின் ஜீன்களைக்கொண்டிருப்பதால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களின் நிறம், சுபாவம், கோபம், தாபம், விருப்பு, வெறுப்பு நம்மையும் தொடர்ந்து வந்திருக்கும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருக்க மாட்டோம். நம்முடைய சுயக் கட்டுப்பாட்டை இதுவே நிர்ணயிக்கிறது என்றும் சொல்லலாம். ஆகவே தான் சிறு வயது முதலே நம் மனதைத் திசை திருப்பி பக்தி மார்க்கத்தில்கொண்டு சென்றால் நாளடைவில்நம்மிடம் மாபெரும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மனம் அமைதி அடையும். ஆகவே மற்ற நாட்கள் வழிபடவில்லை எனினும் இந்தப்பத்து நாட்களாவது அம்பிகையின் நினைவோடு இருந்து நம் எண்ணங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம் அவள் கருணையைப் பெறுவோம்.

அம்பிகையை ஆராதித்து அவளின் கடைக்கண்களின் கருணா கடாக்ஷத்தால் நமக்கு வேண்டும், வேண்டாம் என்ற நிலையே இல்லாமல் ஆகி பற்றற்ற நிலையை அடைவது குறித்துச் சென்ற பதிவில் பார்த்தோம். இங்கே அம்பிகையை உபாசித்தவர்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அம்பிகையை ஆராதித்தவர்களில் முக்கிய இடம் பெறுகின்றவர்கள் பனிரண்டு பேர். அவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாஸர் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் மஹாவிஷ்ணுவும் ஹயக்ரீவ அவதாரத்தில் அம்பிகையை ஆராதித்ததாய்ச் சொல்லப் படுவது உண்டு. இங்கே சொல்லப்போவதும் விஷ்ணு எடுத்த மோகினி அவதாரம் குறித்தே. அம்பிகையை ஆராதித்த விஷ்ணு தானே மனதை மயக்கும் பெண் வடிவு கொண்டு ஈசனின் மனமும் சலிக்கும்படிச் செய்தார் எனவும் அப்போது சாஸ்தா பிறந்தார் எனவும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதே போல் மன்மதனும் அம்பிகையை ஆராதித்ததால் சூக்ஷ்மமான உருவை அடைகின்றான்.

தாக்ஷாயணி அக்னிப்ரவேசம் செய்த பின்னர் யோகத்தில் ஆழ்ந்த ஈசனை எழுப்பவில்லை எனில் உலகில் சிருஷ்டித் தத்துவமே நிறைவேறாது எனக் கவலைப்பட்ட தேவாதிதேவர்கள் பிரம்மாவை நாட, அவரும், விஷ்ணுவும் மன்மதனை ஏவ, மன்மதனும் தன் மலர்க்கணைகளை ஈசன் மேல் தொடுக்கக் கண் திறந்த ஈசனின் கோபாக்னியில் மன்மதன் எரிந்து சாம்பலாகிறான். இதையே லலிதா சஹஸ்ரநாமத்தின் மந்த்ர ரூப நாமாவளியில் ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவநெளஷதி: என்று கூறுகிறது. ஈசன் காமனை எரித்த பின்னர் ரதிதேவியின் துக்கத்தைப் பார்த்த அன்னை மனம் கசிந்து காமனை உயிர்ப்பிக்கிறாள். அதுவும் எப்படி எனில் மற்றவர் கண்களுக்குப்புலனாகாமல் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி தோன்றுகிறான் மன்மதன். சூக்ஷ்மமான சரீரத்தைப் பெறுகிறான். உடலே இல்லாமல், தேவியின் கருணைக்குப் பாத்திரமாகி உயிர் பெற்று சூக்ஷ்மமாக சஞ்சரிக்கும் மன்மதன் எவ்வாறு இவ்வுலகத்து அனைத்து உயிரினங்களையும் வேற்றார் உதவியில்லாமல் தன்னந்தனியாக ஜயிக்கிறானோ அவ்வாறே தேவியின் அருள் பெற்றவர்கள் அனைவரையும் மனம் கவரும் சக்தி படைத்தவர்களாய் இருப்பதோடல்லாமல், உலகையே வென்றவர்களும் ஆவார்கள்.



ஐந்தாவது ஸ்லோகம் இதைத் தான் விளக்குகிறது.

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய-ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா
முனீனா-மப்-யந்த:ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்


தொடு-கரச்-சிலை தொடப்-பொறா மலர்
கருப்பு நாண் இடுவது ஐந்து கோல்
அடுபடைஆத்தலைவனார் வந்தமலை
தென்றல் தேர் உருவ மருவமா
முடுகு கொற்ற மதன் ஒருவன் இப்புவனம்
முற்றும் வெற்றி கொள் முடிவிலா
நெடு-மலர்க்-கண் அருள் சிறிது அளித்தநனையோ
நணலியே கர-கபாலியே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே ஒரு விசித்திரம் என்னவெனில் காமத்தை வெல்ல வேண்டும்; காமம் இருக்கக் கூடாது; என்பதே நாம் பக்தி வழியில் இருந்து ஆன்மீக முன்னேற்றம் காணும் படியாகும். இங்கே காமம் எனக் குறிப்பிடுவது சிற்றின்பமான பாலுறவை மட்டுமே. அதைத் தான் முக்கியமாகவெல்ல வேண்டும் என்போம். அதை வென்றால் மற்ற ஆசைகளும் தானாகவே அற்றுப் போம். காமம் என்பது பொதுவாக ஆசைகளை அனைத்துவித ஆசைகளையும் குறிப்பிடும் சொல்லாகும். அதற்கே அம்பிகையின் வழிபாடுகளின் மூலம், அவள் அங்க வர்ணனைகள் மூலம் அந்தக் காமனை வெல்லலாம் என்பதே குறிக்கோள். ஆனால் பாருங்கள்! விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து ஈசனையே மயக்குவதோடு அல்லாமல், ஒரு குழந்தை வேறு பிறக்கிறது. காமத்தை ஏற்படுத்தியதற்காக மன்மதனை எரிக்கிறார் ஈசன். அவரே பின்னர் காமவசப் படுகிறார். இது சரியா? எல்லாருக்கும் இந்தக்கேள்வி எழும் இல்லையா! அது போக ஈசனால் எரிக்கப்பட்ட மன்மதனோ எனில், அனைவரையும் எவர் உதவியுமின்றித் தன் மலர் பாணங்களால் ஜெயிக்கிறான். தேவாதி தேவர்களுமே காமவசப்படுகின்றனர்.

ப்ரபஞ்சம் வளர்வதற்குக் காமம் தேவை; ஆனால் அதுவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாக இருத்தல் வேண்டும். அசுர சக்தியோடு போராடினால் தான் நல்ல சக்தி ஜெயிக்கும் என்பதைப் புரிந்து கொள்கிறோம் இல்லையா? ஆகவே காமம் என்பது இருந்தாலே அதை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிருஷ்டி தத்துவம் தடைபெறாமல் நடைபெறவேண்டியே தேவைக்கே காமம் என்பதை உணர வேண்டும். எல்லாமும் சரியாக நடந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையின் ருசியும் குறைந்தே காணப்படும் அல்லவா? எப்படிக் குந்தியானவள் கண்ணனிடம் , "அப்பா, கண்ணா, எனக்குக் கஷ்டத்தை நிறையக் கொடு; கொடுத்துக்கொண்டே இரு. அப்போது தான் நான் உன்னை மறக்காமல் இருப்பேன்." என்று சொன்னாளோ அதே போல் நமக்கும் கஷ்டம், நஷ்டம், காமம், க்ரோதம் போன்றவற்றால் பிரச்னைகள் ஏற்பட்டாலே பகவான் நினைப்பே நமக்கு வருகிறது. ஆகவே தான் இவை எல்லாமும் அவரவர் கர்மவினைக்கு ஏற்பக் கூடவோ, குறைச்சலாகவோ ஒரு சிலருக்கு எதுவும் இல்லாமலோ கிடைக்கிறது. எதுவும் இல்லை எனில் அவருக்குக் கர்ம மூட்டை இல்லை; பிறவி இல்லை; நேரடியாக மோக்ஷம் தான். ஆனால் அதை அனுபவத்தாலேயே உணர முடியும். ஒருவருக்கு இந்தப்பிறவியில் பணக் கஷ்டம் இல்லை என்றாலோ, அல்லது பதவி, அதிகாரங்களில் உச்சத்தில் இருந்தாலோ அவர்களுக்குக் கர்ம மூட்டைகள் சுமக்க இல்லை என அர்த்தம் இல்லை. அவர்கள் முந்தைய பிறவியின் நல்ல கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கின்றனர். கெட்ட கர்மாக்களின் பலனும் கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

இனி பட்டர் சொல்வதைப் பார்ப்போமா!


அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!

Sunday, October 02, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு செளந்தர்ய லஹரி 8

ஐந்தாம் நாளான இன்று அம்பிகையை மாஹேஸ்வரியாகக் காணலாம். மஹதீ என்றும் அழைக்கப்படும் இவளை, லலிதா சஹஸ்ரநாமாவளியில், ‘மாஹேச்’வரீ மஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மாஹேச்’வரியான இவள் உழைப்பின் தேவதை! திரிசூலம் ஏந்தியவண்ணம், பிறைச்சந்திரனைச் சூடி, ஈசனின் ரிஷபவாஹனத்தில் எழுந்தருளுவாள். இவளும் அம்பிகையின் சேனைகளில் ஒருத்தியே ஆவாள். கடும் உழைப்பைச் செய்பவர்கள் இவளைப் பிரார்த்தித்து வழிபட்டால் நன்மை பயக்கும். இவளுக்கான நிவேதனம், கல்கண்டு சாதம்.

ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் என்றாலும், மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். ஆழாக்கு அரிசி, 50 கிராம் பாசிப்பருப்பு, கட்டிக்கல்கண்டு, பால் அரை லிட்டர், குங்குமப் பூ, ஏலக்காய், கேசரிப்பவுடர்(தேவையானால்). நெய் 50 கிராம்,முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம்.

பாசிப்பருப்பையும், அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். அரைலிட்டர் பாலைக் கொதிக்க விட்டு அதில் பாசிப்பருப்பை முதலில் போட்டுக் குழைய விடவும். பின்னரே அரிசியைச் சேர்த்தல் நலம். அரிசி சீக்கிரம் வெந்துவிடும். தேவை எனில் இன்னும் சிறிது பால் சேர்க்கலாம். அரிசியும் பருப்பும் குழைந்ததும், கல்கண்டைச் சேர்க்கவும். கல்கண்டுப் பாகு விட்டுக்கொண்டு வரும். அனைத்தும் சேர்ந்து உருட்டும் பதம் வரவேண்டும். நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துப்போட்டுவிட்டு ஏலக்காய், குங்குமப்பூ சேர்க்கவும்.

மாலை வேர்க்கடலைச் சுண்டல்; பச்சை வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் அதை குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நீரை வடிகட்டிவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுக் கொண்டு வெந்த கடலையையும் போட்டுவிட்டுக் கிளறவும். ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்த்து பொடிவாசனை போகக் கிளறிவிட்டுத் தேங்காய் துருவல் சேர்க்கவும். இதில் காரட் துருவியும் சேர்க்கலாம்.

*************************************************************************************
அம்பிகையின் பாத கமலங்களின் சக்தி எப்படிப்பட்டதெனில், மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டி அபய வரத முத்திரை காட்டுகையில் அம்பிகையோ அதெல்லாம் இல்லாமலேயே தன்னிரு பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டவர்களை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. நேரே தன்னில் அவர்களை ஐக்கியப்படுத்தி மோக்ஷத்தை அளிக்கிறாள். இந்த உலகம், ஈரேழு பதினாலு லோகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் சக்திகள் போன்ற எல்லா சக்தியும் அம்பிகையிடமிருந்தே வந்திருக்கையில் அவளுக்கெனத் தனியாக அபய வர ஹஸ்தங்கள் எதுக்கு என்கிறார் ஆசாரியார். அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களே மற்ற தெய்வங்கள் எல்லாம் என்றாலும், இங்கே அனைத்தும் அடங்கிய லலிதா திரிபுர சுந்தரியாக அம்பிகையைக் காண்கிறார் ஆசாரியார். அத்தகைய லலிதா திரிபுர சுந்தரி இவ்வுலகத்து மாந்தரெல்லாம் அடைக்கலம் புகும் புகலிடமாகவும் இருக்கிறாள். அவள் என்னைச் சரணடையுங்கள்; நான் உங்களை ரக்ஷிப்பேன்; என்றெல்லாம் அபயவர ஹஸ்தம் காட்டவேண்டும் என்பதே இல்லை. அவளை மனதில் தியானித்தாலே போதும். தன்னோடு சேர்த்துக் கொண்டு கேட்டதை வாரி வாரி வழங்குகிறாள்.

த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள

தேவெனப் புகழ அதில் நிமிர்ந்து நிகர்
செப்புவார் அபய வரதமாம்
பாவகத்து அபினயத்தோடு உற்ற கை
பரப்பி என் பயம் ஒறுக்குமே
யாவருக்கும் அஃதரிது நின் பதம்
இரப்ப யாவையும் அளிக்கு மான்
மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என்
மூலமே தழையு ஞாலமே.

கவிராஜப் பண்டிதரின் தமிழாக்கம்

ஸம்சார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையைக் காட்டும் பிற தெய்வங்களைப் போலன்றித் தன் காலடியில் வந்து வணங்கினாலே மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவள் அம்பிகை. நாம் கேட்பதற்கும் அதிகமாகப் பலனைத் தருவாள். லலிதா திரிபுரசுந்தரிக்குக் கரங்களில் பாசாங்குசங்கள், புஷ்பபாணங்கள், கரும்பு வில் போன்றவற்றோடு காட்சி அளிப்பதால் அம்பாளுடைய கைகளால் தன்னைச் சரணடை என இடக்கை பாதங்களைச் சுட்டாமலும், வலக்கை மேல்நோக்கிக்காட்டாமலும் அவளுடைய பாதங்களே சரணம் செய்யத் தக்கவை என்பது இங்கே சூசகமாய்ச் சொல்லப் படுகிறது. பொதுவாகவே பெரியவர்களை நமஸ்கரிப்பது வழக்கம். யார் வீட்டிற்கானும் போனாலும் அங்கே வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை எனினும் இன்னமும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். வீட்டுப் பெரியவர்களை வணங்கினாலே ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கிறது. கீழே விழுந்து வணங்குவதன் மூலம், நாம் அனைத்திலும் சிறியோன் என்ற எண்ணம் தோன்றி விநயம் பிறக்கும். வீட்டின் பெரியவர்களை விழுந்து வணங்கிப் பழகினோமானால் நாளாவட்டத்தில் அம்பிகையின் பாதங்களைப் பூரணமாய்ப் பற்றிக்கொள்ளலாம். நாம், நம்முடைய, என்ற நமது ஆணவம் விலகவேண்டுமானால் பரிபூரண சரணாகதி தான் சிறந்தது.

ஆனால் அம்பிகையோ மூத்தோர்களுக்கெல்லாம் மூத்தவள்! அபிராமி பட்டரும் கூட அம்பிகையை "மூத்தவளே" என ஒரு பாடலில் அழைக்கிறார். ஆதிமூலமான பராசக்தியை அனைத்தையும் இயக்கும் சக்தியை வணங்கினால் கிடைக்கும் பெறர்கரிய பேற்றைப் பற்றி எண்ணுகையிலேயே, அவள் நாமத்தைச் சொல்கையிலேயே மனம் ஆனந்த சாகரத்தில் மூழ்குகிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையையே லலிதா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம். அப்போதாவது நம் ஆணவத்தை எல்லாம் விட்டு விட்டு அம்மா, தாயே, நீயே சரணம், உன் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு நான் நல்வழிக்குத் திரும்பச்செய்வாய்! உன்னை என்றும் மறவாமல் இருக்கும்படி பண்ணுவாய்! என்று நம்மை மறந்து தேவியின் பாதங்களையே நினைத்துக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

இதையே அபிராமி பட்டர் கூறுகையில் சிந்தூரத்தை ஒத்த செந்நிறப்பெண்ணே! அம்பிகையை உதிக்கின்ற செங்கதிருக்கும் ஒப்பிட்டிருக்கிறார் பட்டர். இங்கேயோ சிந்தூரத்தைக் கூறுகிறார். அவ்வளவு செக்கச் சிவந்த மேனியை உடைய பெண்ணரசியே, நான் என்றும் வணங்கி தாள் பணிவது உன் பொன்னிறத் திருவடித் தாமரையில் தானே! தாமரை மலர்களை ஒத்த அந்தத் திருவடியில் விழுந்து வணங்குவதோடு அந்தத் திருவடியைத் தம் சிரசின் மேலும் தாங்குகிறார் பட்டர். அம்பிகையின் திருவடியைத் தம் சிரசின் மேல் தாங்கிக்கொண்டு, தன் மனதினுள்ளே அம்பிகையின் திருமந்திரமான சக்திப் பிரணவத்தை நினைத்த வண்ணம் துதிக்கிறார். அம்பிகையும் தானும் ஒன்றாகி தானே அம்பிகை என்னும் வண்ணம் இரண்டறக் கலந்து விடுகிறார் பட்டர். இவ்வளவும் போதாது என்று, அம்பிகையைத் துதிப்பதே தங்கள் வாழ்நாளின் பெரிய கடமை, பெரும்பேறு என எண்ணும் அடியார் கூட்டத்தோடும் சேர்ந்து அவர்கள் அம்பிகை குறித்த நூல்களைப் பாராயணம் செய்து வாழ்த்திப் பாடுகையில் தாமும் சேர்ந்து கொண்டு அம்பிகையை வாழ்த்திப் பாடுகிறார். இப்படிச் சொல், செயல், நினைவு என எல்லாமும் அம்பிகையாகவே இருக்கத் தான் செய்த புண்ணியம் தான் என்ன என வியந்து மகிழ்கிறார் பட்டர். அவரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அமாவாசை அன்று தாம் பெளர்ணமி என அம்பிகையின் முகதரிசனத்தைக் குறித்துச் சொன்னதை மன்னன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும், மன்னன் கட்டளை இட்டுவிட்டான். பெளர்ணமி பூரணச் சந்திரனைக் காட்டு என! என்ன செய்ய முடியும் அவரால்! அம்பிகையைச் சரணடைந்தார். உன் பக்தன் ஆன நான் சொல்வதும் பொய்யாகுமா அம்மா! என நம்பிக்கையோடு பாடுகிறார். அம்பிகையைப் பூரண நிலவை வரச் செய்தாகவேண்டிய கட்டாயமான சூழ்நிலை; அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!

Saturday, October 01, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 7

நான்காம் நாளான இன்று அம்பிகை வைஷ்ணவியாகக் காட்சி அளிக்கிறாள். “விச்’வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமாவளியில் சொல்வது போல, அவள் விஷ்ணுவின் ரூபமாகவே காட்சி அளிப்பாள். கண்டார் மனதை மயக்கும் சங்கு, சக்ர, கதாதாரியாகக் காட்சி அளிப்பாள். வைஷ்ணவி அனைவரையும் காத்து, பொன், பொருள் குறைவறக் கொடுத்து அனுகிரஹம் செய்வாள். இம்முறை நான்காம் நாள் சனிக்கிழமையாக வந்திருப்பதால் எள் சாதம் நிவேதனம் செய்யலாம். ஒரு சிலர் புளியோதரையும் செய்வார்கள்.
***********************************************************************************

எள் சாதம் செய்முறை: கறுப்பு எள் ஐம்பது கிராம் சுத்தம் செய்ய வேண்டும், உப்பு தேவையான அளவு, மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து. மூன்றையும் வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். நன்கு ஆறியதும் மிக்சியில்போட்டுப் பொடி செய்யவும். சூடான சாதத்தில் அரை டீஸ்பூன் உப்புப் பொடியோடு ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையும் விட்டு எள்ளுப் பொடியைப் போட்டு நன்கு கலக்கவும்.

புளியோதரை: புளிக்காய்ச்சல் செய்யணும் முதலில்.
நல்ல பழைய கறுப்புப் புளி 50கிராம் எனில் அதில் பாதி அளவுக்குப் புதுப்புளி. இரண்டையும் சேர்த்து ஊற வைத்துக் கெட்டியாகப்புளி கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தனியாக வைக்கவும்.

வறுக்கத் தேவையான பொருட்கள்: எள் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், மி.வத்தல் பத்து. எள்ளையும், கடுகையும் வெறும் வாணலியில் வறுக்கவும். அதைத் தனியாக எடுத்துக்கொண்டு அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு மி.வத்தல், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும். இப்போது புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்க வேண்டும்.

புளிக்காய்ச்சல் செய்முறை: மி.வத்தல், பத்து அல்லது பனிரண்டு(காரம் தேவைக்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ போடலாம்.) கடுகு, கடலைப்பருப்பு அல்லது ஊற வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் தூள் செய்தது. தாளிக்க நல்லெண்ணை.

வாணலி அல்லது கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணை ஊற்றிக்கொண்டு எண்ணெயைக் காய வைத்து முதலில் மி.வத்தலைப் போடவும். கவனிக்கவும், மி.வத்தல் முதலிலேயே போட்டால் தான் புளிக்காய்ச்சல் வாசனை தனித்து வரும். மி.வத்தல் நன்கு கறுப்பாக ஆகும் வரை எண்ணெயில் வறுக்கவும். கறுப்பாய் ஆனதும் கடுகு, கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலையைப்போட்டு வறுக்கவும், மஞ்சள் தூள், கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றித் தேவையான உப்பைச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து எண்ணெய் பிரியும் நேரம் செய்து வைத்த பொடியில் பாதியை முதலில் போட்டுத் தேவை எனில் வெல்லமும் சேர்த்து ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கவும். சூடான சாதத்தில் இந்தப் புளிக்காய்ச்சலைத் தேவையான அளவு விட்டுக் கலக்கவும். நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து விட்டு மேலே வேர்க்கடலையை வறுத்து அலங்கரிக்கலாம். நிவேதனம் செய்துவிட்டு சாப்பிட்டுப் பார்த்துத் தேவையானால் புளிக்காய்ச்சலில் மீதம் பொடியையும் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளலாம். இம்முறைப் புளிக்காய்ச்சல் ஒரு மாதமானாலும் குளிர்சாதனப் பெட்டியின் உதவியின்றி வெளியே வைத்தாலும் கெடாது.

மாலை நிவேதனம்: கடலைப்பருப்புச் சுண்டல்: கடலைப்பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அப்படியே குக்கரில் எல்லாம் வைக்க வேண்டாம். ஊறிய பருப்பை வாணலியில் அல்லது உருளியில்போட்டு வேக வைத்தாலே குழைய வேகும். உப்புச் சேர்த்து வேக வைத்ததும், நீரை வடிகட்டிவிட்டுக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை,பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு கடலைப்பருப்பைக் கொட்டிக்கிளறவும். ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு இறக்கும்போது தேங்காய் துருவலோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பச்சைக்கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
***********************************************************************************
அம்பிகையின் பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்துப்பார்த்தோம். அவள் பாத தூளியால் சிருஷ்டிகளும், வையத்தைக் காப்பதும் , அழிப்பதும் என அனைத்துத் தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் பார்த்தோம். அந்தப் பாததூளி எத்தகைய மஹிமை வாய்ந்தது எனில் அனைவருக்கும் முக்தியைக் கொடுக்க வல்லது. நம் மனத்தின் இருளைப் போக்கி நம்பிக்கையாகிய சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகூரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள்
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வரஹஸ்ய பவதி

அறிவிலர்க்ககு இதய திமிரம் மீரும்
அளவற்ற ஆதவர் அளப்பிலா
எறி-கதி-ப்ரபை குழைத்து இழைத்தனைய
தீ இயாமளை நினைப்பிலார்
செறி மதிக்-கிணரின் ஒழுகு தேன் அருவி
தெறுகலிக்கு அருள் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஒரு
பெருவராக-வெண் மருப்பு அரோ.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

அவித்யா என்பது அக்ஞானம் எனப்படும் மூடத்தனம், மடமை என்றும் சொல்லலாம். நம்முள்ளே நாம் தான் அனைத்தும் செய்கிறோம் என்றதொரு எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த “நான்” என்பது நம்முள்ளே உறைந்து எப்போதும் கோயில் கொண்டிருக்கும் ஜோதிரூபமான ஆன்மாவை நம்மால் உணரமுடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. மனமென்னும் காட்டிலே நினைவுகளென்னும் விருக்ஷங்கள், எண்ணற்றவை முளைத்துப் படர்ந்து மனம் முழுதையும் இருட்டாக்கி ஞான சூரியனின் கிரணங்கள் சிறிதளவு கூட உள்ளே வராமல் செய்து இருட்டாக்கி விடுகிறது. அந்தக் காட்டின் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ஒரு சின்ன அகலை ஏற்றுவது போல் அம்பாளின் பாத கமலங்களை இறுகப் பற்ற வேண்டும் என்றொரு எண்ணமாகிய அகலை ஏற்றிக்கொண்டு இருந்தால், நாளடைவில் அந்த அகலின் வெளிச்சம் கோடி சூரியப் பிரகாசமாகி நமக்கு ஜோதிமயமான ஆன்மாவுடன் ஒன்றிப் போகச் செய்யும். இந்த அக்ஞானம் சாமானிய மனிதருக்கு மட்டுமல்லாமல், புத்திமான்கள், வித்தை தெரிந்த அதிமேதாவிகள், கெட்டிக்காரர்கள் என அனைவரையுமே பீடித்திருக்கும். இவர்களைப் பீடித்திருக்கும் அக்ஞானம் அகந்தையாகும். இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் தெரியாது; தானாயும் தெரிந்து கொள்ள மாட்டார்கள்; சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை ஜடம் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியின் தேஜஸ் அதிகரிக்கவும் அம்பாளின் பாத தூளி பயன்படும். அடுத்தது தரித்திரம் பிடிப்பது; யாருக்குத் தான் செல்வம் சேர்க்க ஆசையில்லை. செல்வம் சேர்ப்பதில் அடங்கா ஆசையும் உண்டு; அதே சமயம் செல்வந்தர்களைக் கண்டாலே வெறுப்பவர்களும் உண்டு. ஆனாலும் நினைத்ததை நடத்தித் தரும் சிந்தாமணி என்னும் மணியானது தெய்வாம்சமுள்ள மணியானது கிடைத்தால் எப்படி இருக்கும்?? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தந்துவிடுமே சிந்தாமணி. அப்படிப் பட்ட சிந்தாமணி தரும் செல்வத்தை எல்லாம் அம்பிகையின் பாததூளி தந்துவிடும்.

கவனிக்க; இங்கே அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிடும் என்று வருவதால் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் எனப் பொருள் கொள்வதை விட, இம்மாதிரி அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். இதைக் கடைசி வரி விளக்குகிறது. ஹிரண்யாக்ஷன் அபகரித்துக்கொண்ட பூமிதேவியை மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் செய்து தன் கோரைப்பற்களில் தூக்கிக்கொண்டு வருவார். பாதாளத்துள்ளே இருந்த பூமிதேவியை எவ்வாறு விஷ்ணு அவ்விதம் மேலே தூக்கி வந்து கொண்டுசேர்த்தாரோ அவ்வாறே அம்பிகையின் பாததூளியானது இந்த சம்சார சாகரத்தில அழுந்தி மூழ்கி, மூச்சுத் திணறும் நம்மையும் தன் கருணா சாகரத்தில் கொண்டு சேர்த்து நம்மை ஆனந்தக் கடலில் வாசம் செய்யும்படி செய்யும்.

தேவி மஹாத்மியத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களை மஹாவிஷ்ணு வதம் செய்வார். இந்த இரு அரக்கர்களும் அடங்கா ஆசைக்கும், அடங்கா வெறுப்புக்கும் உதாரணமாவார்கள். இவற்றை வெல்வதையே மது, கைடபர்களின் அழிவு சுட்டுகிறது. நம் மனதில் உள்ள ஆசையையும், வெறுப்பையும் மற்ற எதிர்மறைச் சிந்தனைகளையும் அழித்து ஒழிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. நம்மை நாமே பூரணமாக அறிந்து கொண்டு, நம்மிடம் உள்ள “நான்” என்னும் சுயப் பெருமையை ஒழித்து நம்மை முழுதும் கடவுளின் பாதத்தில் ஐக்கியமடைய வைப்பதே நவராத்திரியின் முக்கியத் தத்துவம் ஆகும். நம்மில் பலரும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம்; இன்று சந்தோஷமாக இருந்தால் நாளை எழுந்திருக்கும்போதே வருத்தம் தாங்காது. இன்னொரு நாள் கோபம், எரிச்சல் வரும். ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்கட்டும். ஏனென்றே சொல்லமுடியாத கோபமும் வரும். இதற்குக் காரணம் நம் முன்னோர்கள் ஒருபக்கம் எனில் இன்னொரு பக்கம் நம் முன் ஜென்மவினையும் ஆகும். இது குறித்து நாளை பார்ப்போமா!

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளிலேயே அபிராமி பட்டர் கூறி இருப்பது என்னவென்றால்,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.