எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 29, 2020

வந்தாச்சு புடைவை!

 sahana.com  இந்தச் சுட்டியில் இன்று ஏடிஎம் அறிவிப்புச் செய்துள்ளார்.

சஹானா இணைய இதழில் ஏடிஎம் தீபாவளிக்குப் பல போட்டிகள் வைத்திருந்தார். அதிலே தீபாவளி பக்ஷணம் செய்முறையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது என்பது எனக்கே ஆச்சரியம். தீபாவளி நினைவுகள் பற்றி எழுதியதற்குப் பரிசு ஒண்ணும் கிடைக்கலை. மற்ற போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. முதல் பரிசு கிடைத்ததற்கு என்ன தருவாங்களோனு யோசனையில் இருந்தப்போ சனிக்கிழமை புடைவை அனுப்பப் போவதாக இந்தப் போட்டிக்கு ஸ்பான்சர் பண்ணிய "மதுரா பொடிக்" காரங்ககிட்டே இருந்து மெயில் வந்தது. இன்னிக்குப் புடைவையும் வந்து சேர்ந்தது. ஏடிஎம் அவங்க சார்பிலே ஒரு ட்ராஃபியும், இ-சான்றிதழும் அனுப்பினாங்க. எல்லாவற்றையும் இங்கே படம் பிடித்துப் போட்டிருக்கேன். ஏடிஎம்முக்குத் தனியா அனுப்பிட்டேன். அவங்க கொஞ்ச நேரம் முன்னர் வரை பார்க்கலை. 

நான் போட்டினு கலந்து கொண்டதே முதல் முதலாக வைகோ சார் வைத்த விமரிசனப் போட்டியில் தான். ஒவ்வொரு போட்டியிலும் அவர் என்னைத் திரும்பத் திரும்பத் தொந்திரவு செய்து எழுத வைத்தார். அதிலும் முதல், இரண்டாம் பரிசுகள், மூன்று முதல் பரிசுகள் எனக் கிடைத்தது. அதன் பின்னர் எந்தப் போட்டியிலும் கலந்துக்காம இருந்தேன். இது நம்ம ஏடிஎம் ஆச்சேனு கலந்து கொண்டேன். முதல் பரிசே கிடைத்துவிட்டது. 

கீழே படங்கள்.


ஏடிஎம் அனுப்பி வைத்த ட்ராஃபி




புடைவைனதும் எங்கேயாவது டிசைனர் புடைவையா இருக்கப் போறதேனு ஒரே கவலை. நல்லவேளையாக் காட்டன் புடைவை.  இரு பக்கக் கரையும் கோர்த்து வாங்கினதாம். போட்டிருந்தது அதிலே. ஹிஹிஹி, கலர் தான் ஏற்கெனவே 2 இருக்கு. நம்ம ராசி அம்புடுதேன்/அப்படித்தேன்! :))))))  இந்தச் சொல்லாடல் சும்மாச் சிரிக்க மட்டும். தீவிரமாக எடுத்துக்க வேண்டாம்.


மதுரா பொடிக் காரங்க எழுதி இருந்த கடிதம்


ஏடிஎம் இரண்டு பதிவுகளுக்கும் அனுப்பி வைத்த சான்றிதழ்கள். 




முன்னாடியே ஏன் பகிர்ந்துக்கலைனு நினைப்பவர்களுக்கு எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுப் பீத்திக்கணும் என்று ஓர் அல்ப ஆசை. அது இப்போ நிறைவேறியாச்சு!


Monday, December 28, 2020

மதுரையும் மார்கழி மாசமும்!

பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ந்து பதிவுகள் வரலைனதும் சிலர் என்ன ஆச்சு என்று கேட்டனர். முக்கியமாய் ரேவதி பயந்தே விட்டார். தொலைபேசி அழைத்துக் கேட்டார். கண்கள் தான் முக்கியக் காரணம் என்றாலும் நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். கண்கள் வேறே சோர்ந்து விடும் விரைவில். அதன் பின்னர் கண்களை மூடிக் கொண்டாலே தேவலை எனத் தோன்றும். ஆகவே அதிகம் கணினியில் உட்காரலை. ஆனாலும் புத்தகங்கள் படித்தேன். திரு கௌதமன் அனுப்பி இருந்த அனுத்தமாவின் இரண்டு நாவல்கள், ஸ்ரீராம் அனுப்பியது "நைந்த உள்ளம்" (லக்ஷத்துப் பத்தாயிரமாவது தரம்) "பிரேம கீதம்" முதல் முறை படித்து முடித்தேன். புத்தகங்கள் வெளியீடு செய்யத் தொகுக்கும் வேலையை நிறுத்தி வைச்சிருக்கேன். அதையும் தொடரணும். இப்படிப் பல வேலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. வீட்டில் சுத்தம் செய்யும் வேலைக்கு ஆளைக் கூப்பிட முடியாத காரணத்தால் நாங்களே செய்துக்க வேண்டி இருக்கிறது. காலைப் பொழுதின் பெரும்பாகம் அதில் போய்விடும். அதோடு கொஞ்ச நாட்கள் எழுதாமல் இருப்போமே என்னும் எண்ணமும் தான். கீழே கொடுத்திருக்கும் பதிவு 2008 ஆம் வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியில் "மதுரை மாநகரம்" வலைப்பக்கம் பகிர்ந்தது. இங்கே மீள் பதிவாய்க் கொடுத்திருக்கேன்.

திருப்பாவை, திருவெம்பாவை எழுதியாச்சு என்பதால் அதை மீள் பதிவாய்ப் போட வேண்டாம்னு போடலை. "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்னும் பெயரில் திருப்பாவைப் பதிவுகள் மின்னூலாக வெளிவந்துள்ளது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் இங்கே காணலாம். ஆகவே திரும்பத் திருப்பாவை, திருவெம்பாவை பத்தியெல்லாம் எழுதாமல் சின்ன வயசில் மதுரையில் கழித்த நாட்களின் நினைவுகளைக் கீழுள்ள பதிவில் மறுபடியும் பகிர்ந்துள்ளேன்.  பதிவுகள் 3,000 த்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலும் நிறுத்தி வைத்துள்ளேன். 

**********************************************************************************

மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது. 



உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.



பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன். 

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம். 

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும்  ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும்.   கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும்.  காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((

Wednesday, December 16, 2020

மனம் விட்டுப் பேசுகிறேன்!

 சமீப காலமாகவே கொலை, தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மனதில் வலிமை இல்லாததே காரணம்.  வளர்க்கும்போதே மனோபலத்தை ஊட்டி வளர்ப்பது இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. முக்கியமாக நீதி போதனைகள், இது தப்பு செய்யக் கூடாது, இது செய்யலாம், என்பதை எல்லாம் பெற்றோரோ, பள்ளிகளோ சொல்லிக் கொடுப்பதில்லை, பள்ளிப் பாடங்களில் நீதி போதனைகளே இருப்பதில்லை. கடவுள் வாழ்த்திலிருந்து எல்லாவற்றையும் நீக்கிய போதனைகளே அதிகம். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலிருந்து அவற்றின் நீதிகளையும், அது சொல்லும் கருத்துக்களையும் யாரும் பார்ப்பதில்லை. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்றவை போதிக்கப்படுவதே இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் ஆண்டாள் யார் என்றே தெரிந்திருக்காது. தேவார, திருவாசகங்களை எங்கே இருந்து அறியப் போகின்றனர்1 திருப்பாவை, திருவெம்பாவையின் முக்கியமும் திருப்பள்ளி எழுச்சி பற்றிய அறிவும் நிச்சயம் இருக்காது. 

இது போதாது எனத் தொலைக்காட்சிகள் தங்கள் நெடுந்தொடர்களில் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைத்து வருகின்றன. பிரபலமான தொலைக்காட்சியில் தினம் மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் மூன்று குழந்தைகள்! இரண்டு ஆண்! ஒரு குழந்தை பெண்! அந்தப் பெண் குழந்தையை இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பிடிக்காதாம். அதற்காக அந்தப் பெண் குழந்தைக்கு எந்த எந்த வகையில் எல்லாம் துன்பம் கொடுக்க முடியும் என்பதை இந்தச் சின்ன வயதிலேயே யோசித்து யோசித்துச் செய்கிறார்களாம் இந்தச் சிறுவர்கள் இருவரும். அதில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு தினம் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறானாம். பள்ளிக்கே போக மாட்டானாம். அதற்கு அவன் பாட்டி ஆதரவாம். பேரன் மேல் மிகுந்த பாசமாம். இந்தப் பாசத்தை வைத்துக் கொண்டு அந்தச் சிறுவன் முன்னுக்கு வந்துவிட முடியுமா? இதைப் பார்க்கும் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் தாங்களும் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் வரும் காலம் என்ன ஆகும்? நாளைய இந்தியாவை இந்த மாதிரிக் குழந்தைகளா முன்னுக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? ஒண்ணும் புரியலை. நான் உட்கார்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது காதில் விழும் வசனங்கள்! நல்லவேளையா நம்ம வீட்டில் குழந்தைகளே இல்லைனு நினைத்துக் கொண்டேன்.  அந்தக் குறிப்பிட்ட தொடரைத் தடை செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என் நினைப்பெல்லாம் என்ன ஆகப் போகிறது! இந்த மாதிரித் தொடர்கள் எடுப்பவர்கள், கதை எழுதுபவர்கள் போன்றோரால் தான் கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதை அவங்களே உணர்வதில்லை. 

**********************************************************************************

சனிக்கிழமை அன்று கண் பிரச்னைக்காகக் காலையே மருத்துவரிடம் போக இருந்தேன். ஆனால் மறுநாள் தம்பி குடும்பம் வருவதால் காய்கறிகள் வாங்கப் போக வேண்டி இருந்தது. ஆகவே மாலை போனோம். நாலே முக்காலுக்கே போய்த் திரும்பி வீட்டுக்கு வரும்போது ஏழரை மணி ஆகிவிட்டது. நல்ல கூட்டம். எனக்கு முன்னாடியே 5 பேர் இருந்தனர். கண் சோதனைகள் எல்லாம் முடிந்து மருத்துவர் பார்க்கும்போதே ஏழு மணி. எல்லாச் சோதனையும் முடித்து விட்டு ஆறு மாதங்களுக்குள்ளாக இரண்டு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை செய்துடணும் என்று சொல்லி விட்டார். மூன்று மாதங்களுக்குள்ளாக ஒரு கண்ணுக்கான சிகிச்சைக்கு ஆயத்தமாகத் திட்டம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருக்கார். அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்குப் போகாது என நினைத்திருந்தேன். நம்ம ரங்க்ஸோ நீ கணினியில் உட்காருவதால் உனக்குக் கண் புரை வந்திருக்கு என்கிறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கு முன்னால் எல்லாம் உட்கார்ந்ததை விட இப்போக் குறைவு தான். ரொம்பக் குறைச்சுட்டேன். ஆனாலும் எப்படியோ வந்து விட்டது! ஆகஸ்ட் மாதம் போனப்போக் கூட ஒண்ணும் இல்லைனு சொன்னாங்க!  ஐந்து மாதங்களுக்குள்ளாக எல்லாம் மாறி விட்டது. எனக்கு அறுவை சிகிச்சையை விட அதுக்குப் போடும் ஊசி பற்றித் தான் கவலை, பயம் எல்லாம். என்னமோ போங்க, வந்தாச்சு! இனி மற்றவை நடந்து தானே தீரணும்!

***********************************************************************************

ஞாயிறன்று தம்பி குடும்பம் வந்துவிட்டுத் திங்களன்று கிளம்பி விட்டார்கள். இப்போச் சில நாட்களாகவே வீட்டில் வேலை அதிகம் ஆனாப்போல் ஒரு எண்ணம். சாப்பிடுவதற்கே பனிரண்டரை, ஒரு மணி ஆகிவிடுகிறது. அதுக்கப்புறமாக் கணினியில் ஒரு மணி நேரம் உட்கார்ந்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பின் திரும்ப நாலு மணிக்கு வருவேன். சில நாட்கள் அதுவும் முடியறதில்லை.  நாட்கள் ஓடுகின்றன. ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை போல் ஓர் எண்ணம். மழை வேறே! விட்டு விட்டுப் பெய்து கொண்டிருக்கிறது, இந்த வருஷம் மழை அதிகம் தான்!  

 

Friday, December 11, 2020

மஹாகவியின் பிறந்த நாள்!

 



துச்சா தனன்எழுந்தே -- அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

‘அச்சோ தேவர்களே!’ -- என்று

அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.

பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்

பேயனுந் துகிலினை உரிகையிலே,

உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை

உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்.   


‘ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்; -- கண்ணா!

அபய மபயமுனக் கபயமென்றாள்.

கரியினுக் கருள்புரிந்தே -- அன்று

கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,

கரியநன்னிற முடையாய், -- அன்று

காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!

பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!

பேசரும் பழமறைப் பொருளாவாய்!  


‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!

சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!

அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!

அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!

துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!

தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!

தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்

சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய்.  


‘வானத்துள் வானாவாய்; -- தீ

மண்நீர் காற்றினில் அவையாவாய்;

மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ

முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!

கானத்துப் பொய்கையிலே -- தனிக்

கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,

தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்

தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்!  


‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!

அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,

சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

மாதிக்கு வெளியினிலே -- நடு

வானத்திற் பறந்திடும் கருடன்மிசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!

சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!  


‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!

காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!

வம்புரை செய்யுமூடா” -- என்று

மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,

செம்பவிர் குழலுடையான், -- அந்தத்

தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!

நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை

நாணழியா திங்குக் காத்தருள்வாய்.  


‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்

வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,

ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்

அன்புடை எந்தை, என் னருட்கடலே,

நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு

நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,

தேக்குநல் வானமுதே! -- இங்கு

சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்!  


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!

மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!

ஐய, நின் பதமலரே -- சரண்.

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல

புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,

தையலர் கருணையைப்போல், -- கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,  


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த

பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,

கண்ணபிரா னருளால், -- தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை

வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

எண்ணத்தி லடங்காவே; -- அவை

எத்தனை எத்தனை நிறத்தனவோ!  


பொன்னிழை பட்டிழையும் -- பல

புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,

சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்

செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,

முன்னிய ஹரிநாமம் -- தன்னில்

மூளுநற் பயனுல கறிந்திடவே,

துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு

தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்.  


தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்

ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.

ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை

ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.

சாவடி மறவரெல்லாம் ‘ஓம்

சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.

காவலின் நெறிபிழைத்தான், -- கொடி

கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான்.  

என்னோட மனக்குழப்பத்திலே இன்னிக்கு பாரதியின் பிறந்த நாள் என்பதை மறந்துட்டேன். அதனால் தாமதமாகப் பதிவு! மஹாகவியின் தீர்க்கதரிசனக் கவிதைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Tuesday, December 08, 2020

மழையும் ரயிலும்!

இந்த வருஷம் சொல்லக்கூடிய அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. ஏனெனில் திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் இருக்கும் எங்களுக்கே மழைப் பொழிவு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  இந்த மழை/புயலால் பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது எனத் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், தினசரிச் செய்திகள் அலறுகின்றன. மழை பெய்யாவிட்டால்? என்ன செய்வோம்? இந்த வருஷம் தண்ணீர்க் கஷ்டம் வரப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்ததை வசதியாக எல்லோரும் மறந்தாச்சு. மழை பெய்து கெடுக்கிறது என்றே சொல்கின்றனர். தினமலர் தலைப்புச் செய்தியாகக் "கொடுத்துக் கெடுக்கும் மழை!" என்று வருகிறது. மழைத் தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதாகப் படங்கள் போடுகின்றனர். மழையில் ஊறிய நெற்பயிரைக் கைகளில் வைத்துக் கொண்டு விவசாயிகளும் தொலைக்காட்சி/செய்திப்பத்திரிகைகளுக்குச் செய்திகள் கொடுக்கின்றனர். அது சரி! மழை இப்போதெல்லாம் மட்டும் புதுசாகப் பெய்து கொண்டு இருக்கா? முன்னெல்லாம் மழையே கிடையாதா? புயலே வந்ததில்லையா? என்றால் வந்திருக்கு. மழை, புயல் எல்லாம் உண்டு. அறுபதுகளில் தனுஷ்கோடியே முழுகிப் போகும் அளவுக்கு மழை/புயல் இருந்திருக்கு.  அப்போல்லாம் மட்டும் வயல்களே இல்லையா?பயிர்கள் தண்ணீரில் முழுகவில்லையா?



இருந்திருக்கு. என் கணவர் நேற்றுக் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். மழை கொட்டும். ஐப்பசி, கார்த்திகை அடைமழை என்னும் வழக்குச் சொல்லை இப்போதெல்லாம் எல்லோருமே மறந்துட்டாங்க போல! வயலில் தண்ணீர் தேங்கும் ஒவ்வொருத்தர் வயலில் இருந்தும் வடிகாலுக்குப் போக ஒரு தனிப்பாதை உண்டு. அந்தப் பக்கத்து வரப்பை வெட்டி விட்டால் எல்லா நீரும் வடிகால் வழியாக ஆறுகளுக்குப் போய்விடும். கருவிலி, பரவாக்கரை இரண்டுக்கும் நடுவில் உள்ள முட்டையாறு எனப்படும் ஆறு அத்தகைய வடிகால் தான் என்றார். அந்தக் காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கினால் நிவாரணம் என்ற பேச்சே இல்லை என்றும் சொன்னார். இன்று? அந்த முட்டையாற்றையே காணோம். நான் கல்யாணம் ஆகிப் போன புதுசிலே மழை நாளில் பரவாக்கரை மாரியம்மனைப் பார்க்கப் போகணும்னா முட்டையாற்றில் வண்டி போகாது. நாங்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கி நடந்து குறுகலான பாலம் வழி செல்வோம். வண்டியைச் சில சமயங்களில் அங்கேயே மாடுகளை அவிழ்த்து விட்டுக் கட்டி விடுவார்கள். நாங்கள் நடந்தே போய் விட்டு வந்து மறுபடி முட்டையாற்றங்கரையில் வண்டியில் ஏறிப்போம். சில சமயம் மாடுகள் நீரில் இறங்கி அக்கரை வரும். வண்டியை ஆட்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஆற்றில் இறக்கி நகர்த்தி அக்கரை கொண்டு மேலே சேர்ப்பார்கள். இப்போக் கல் பாலம் இருக்கு. ஆனால் ஆறு இல்லை, தண்ணீர் இல்லை. வயலில் தேங்கும் நீர் முட்டையாறு வரை வருவதில்லை. ஏன்? என்ன காரணம்! யோசியுங்கள். தப்பு  யார் மேல் என உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் அப்போதெல்லாம் பரம்பரைப் பட்டாமணியம், கணக்குப் பிள்ளை, வெட்டியான்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் யார் நிலத்திற்கு முதலில் நீர் வரும் எனவும் கடைசியில் யார் நிலம் மூழ்கும் அளவுக்குப் போகும் எனவும் தெரியும். எந்த வடிகாலுக்கு நீரை மாற்ற வேண்டும் என்பதும் அறிந்து வைத்திருப்பார்கள். ஊர்ப் பொதுவில் கூட இத்தகைய நிவாரண வேலைகள் அந்த அந்தக் கிராமத்துத் தலைவர்களின் கட்டளைகளின் பேரில் நடந்து வந்திருக்கின்றன. இன்று?

அதே காரணம் தான் சென்னை வாசிகளுக்கும். அம்பத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து வரும் மழை நீரெல்லாம் ஓட்டமாக ஓடிப் பள்ளமான பிருதிவிபாக்கம் வழியாக வந்து அங்கே உள்ள வாய்க்கால் வழியாகக் கொரட்டூர் ஏரிக்குப் போய்ச் சேரும். அழகாக வழியமைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில். வாய்க்கால் சுமார் 20 அடிக்கும் மேல் அகலம், நீளம் கொரட்டூர் ஏரி வரை. நடுவே உள்ள சின்னச் சின்னக் குளங்களுக்கும் அதிலிருந்து நீர் போகும். குளங்கள் நிரம்பும். அண்டையில் உள்ள வீடுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர்ப் பிரச்னை யாருக்கும் வராது. ஆனால் இப்போது கொரட்டூர் ஏரி எங்கே? அதுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால் எங்கே? வாய்க்கால் அதை ஒட்டி வீடு கட்டி இருப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இப்போது வாய்க்கால் இந்த வழியில் இருந்தது என்று சொன்னால் நம்புபவர்கள் இல்லை. கொரட்டூர் ஏரியோ ப்ளாட் போட்டுக்கூறு கட்டி விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரிய பில்டர் ஒருத்தர் அங்கே அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுவதாகச் சொல்கின்றனர்.  சாலைகளிலும், தெருக்களிலும், வீதிகளிலும் தண்ணீர் தேங்கத் தான் செய்யும். வீடுகளுக்குள் நீர் புகத்தான் செய்யும். அதன் இடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டோம். அது வழக்கமான வழியில் வந்து எங்கே என் இடம் எனத் தேடுகிறது. இப்படித்தானே காட்டு மிருகங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கோம். அது மாதிரித் தான் நீர் நிலைகளும். மனிதர்கள் கைகளில் பட்டுப் படாத பாடு படுகின்றன. அதன் இடங்களை நாம் ஆக்கிரமித்திருப்பதால் எங்கே போக என வழி தெரியாமல் விழிக்கின்றன. மழையைப் பழிப்பதற்கு முன்னர் இதை உணர வேண்டும்.

***********************************************************************************



ஊட்டி மலை ரயில் செப்பனிடப்பட்டுப் புதுசாக மீண்டும் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இது குறித்துத் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காட்டும்போது பயணச்சீட்டு விபரங்களோ, அதன் உள் கட்டமைப்புப் பற்றியோ, வசதிகள் பற்றியோ குறிப்பிடும்படி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இது தொலைதூரப் பயணம் இல்லை. மேட்டுப் பாளையத்தில் ஏறினால் 2,3 மணி நேரத்தில் ஊட்டிக்குப் போய்விடலாம். முன்னால் எல்லாம் கழிப்பறை வசதி கூட இருந்ததில்லை. இப்போது வசதி ஏற்படுத்தி இருக்கலாம். அது பற்றித் தெரியவில்லை. தொலைக்காட்சிகளும் இதை ஓர் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டு விட்டு விட்டன. ஆனால் நம் சிநேகிதர்கள் பலரும் இந்த வண்டியை வழித்தடத்தைத் தனியார் ரயில்வேக்கு மத்திய அரசு தாரை வார்த்து விட்டதாகவும், இதில் சாப்பாடு, காஃபி, தண்ணீர் போன்ற வசதிகளைப் புதிதாக ஏற்படுத்தி இருப்பதாகவும், விமானத்தில் பயணிப்பதைப் போன்ற வசதிகள் இருப்பதாகவும் பணிப்பெண்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அனைவரும் காவி உடையுடன் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு பலத்த கண்டனங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அந்தக் குறைந்த தூரத்துக்கான சுமார் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும். இதற்கான கட்டணம் குறைந்த பட்சமாக 3000 ரூபாயும், அதிக பட்சமாக 12,000 ரூபாயும் என்று சொல்லிக் கொண்டு பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் தெற்கு ரயில்வேயின் தொடர் வண்டிச் செய்திகள் பற்றிய முகநூல் பதிவில் அதிகாரிகள் தரப்பில்  15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்கள் என்று செய்தி வந்துள்ளது. மேலும் தனியாருக்கு எல்லாம் தாரை வார்க்கவில்லை. அது அத்தனை எளிதும் அல்ல. அரசின் நடைமுறைகளோ அந்த ரயிலின் செயல்பாடுகள் குறித்தோ அறியாதவர்கள் தங்கள் இஷ்டப்படி பேத்துகின்றனர். ஆனாலும் இப்போது உயர்த்தி இருக்கும் கட்டணம் நிச்சயம் அதிகம் தான். இல்லைனு சொல்ல முடியாது. அதற்காகப் போராடலாம். எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,

Sunday, December 06, 2020

(அசோகமித்திரன்) சித்தப்பாவை விட்டு விடுங்கள்! :(

 சபாஷ் சாரு!

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார்.  உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம்.  இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் நேரம் இல்லை.  தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய்.  ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா?  வெறும் 6000 ரூ.  அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம்.  நீங்களெல்லாம் கடவுள்கள்.  எம்ஜியார் ஒரு கடவுள்.  சிவாஜி ஒரு கடவுள்.  கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம்.  ஏனென்றால் அவர் நாஸ்திகர்.  ரஜினி கடவுள்.  விஜய் கடவுள்.  அஜித் கடவுள்.  நீங்கள் கடவுள்.   உங்கள் தம்பி கார்த்தி கடவுள்.  ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான்.  அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.  நீங்கள் நினைத்தால் முதல்மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்.  ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா?  நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.  இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?

தம்பி, அசோகமித்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  அவரையெல்லாம் உங்கள் தந்தை சிவகுமார் கரைத்துக் குடித்திருப்பார்.  சிவகுமார் என்னுடைய 20 ஆண்டுக் கால நண்பர்.  என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார்.  அவருடைய சித்திரங்கள் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.  அவர் வரைந்த காந்தியின் ஓவியம் என் மேஜை மேல் இருக்கிறது.  ஏன் தெரியுமா?  சிவகுமார் இலக்கியத்தின் வாசகர்.  அதனால்தான் என் வீடு தேடி வருவார்.  ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை.  என் மகன் தலைமுறை.  அவனுக்கும் இலக்கியம் தெரியாது.  அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது.  இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது.  நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர்.  நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர்.  வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார்.  அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார்.  அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள்.  அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன்.  18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.  அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார்.   இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே?  ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா?  ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை.  எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன்.  என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன்.  அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது.  அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன்.  “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?”

அவ்வளவுதான்.  அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன்.  இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது.  சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.  எனக்கே தெரியும்.  அவருக்கு ஆஸ்துமா.  மூச்சு விட சிரமப்படுவார்.  மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர்.  ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார்.  ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார்.  பட்டினி கிடந்தார்.  அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது.  ஆனால் வயிறு சுருங்கி விட்டது.  ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.

அவர் தன் மகன் வீட்டில் இருந்தார்.  அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை.  எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன்.  என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது?  எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.

அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது.  அங்கேதான் உங்கள் இசைஞானி வாழ்கிறார்.

தம்பி சூர்யா, பாப்லோ நெரூதா என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சீலே தேசத்தின் தேசியக் கவி.  அவருக்கு சீலேவின் தலைநகர் சந்த்தியாகோவில் ஒரு மாளிகையும் அவர் பிறந்து வாழ்ந்த வால்பரய்ஸோ என்ற நகரில் ஒரு மாளிகையும் இருக்கிறது. அந்த வால்பரய்ஸோ இப்போது ஒரு டூரிஸ்ட் சொர்க்கமாக விளங்குகிறது.  உலகமெங்கிலும் இருந்து வால்பரய்ஸோவுக்குப் போய் நெரூதா வாழ்ந்த வீட்டைப் பார்த்து மகிழ்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.  அதே சீலே தேசத்தில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். 103 வயது வரை வாழ்ந்த அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு சீலே அதிபரே மாதக் கணக்கில் காத்திருப்பார்.  இன்னும் பல தென்னமெரிக்க அதிபர்களும் அவருடைய அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கிடந்தனர்.  அவர் நடிக்கும் பால் விளம்பரத்துக்கு அவர் வாங்கும் தொகை ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகை வாங்கும் தொகைக்குச் சமம்.

இதையெல்லாம் இவர் ஏன் உளறுகிறார் என்று உங்களுக்குத் தோன்றும்.  அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர்.  அதில் 15 பேர் அவரது உறவினர்.  மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள்.  இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் – அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.  கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம்.  ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது.

இன்னொரு விஷயம் தம்பி.  இன்று காலை வேந்தர் டிவி என்ற தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் போன் செய்தார்.  சாரு நிவேதிதா மேடம் இருக்காங்களா என்றது குரல்.  குரலுக்கு உரியவருக்கு 25 வயதுதான் இருக்கலாம்.  மேடம் இல்லீங்க, நான் தான் சாரு நிவேதிதா என்றேன்.  ஓ அப்டியா சார்.  சரி சார்.  நாஸ்டிரடாமஸின் predictions பற்றி ஒரு நிகழ்ச்சி பண்றோம்.  அதில் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும் என்றார்.

எல்லாமே ஓசி சூர்யா.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எங்களுக்கு ஒரு நாள் போய் விடுகிறது.  ஆனால் காசு கொடுப்பதில்லை.  கேட்டால், நடிகர் சூர்யா போன்றவர்களுக்குக் கூட காசு தருவதில்லை சார்.  அவர்களும் கேட்பதில்லை என்கிறார்கள்.  நான் எதுவும் பதில் சொல்வதில்லை.  உங்கள் சம்பளம் கோடிகளில்.  எங்கள் சம்பளம் ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய்.  தொலைக்காட்சிக்கு ஓசி.

நான் அந்தப் பெண்ணிடம் எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க ஸாரி என்று சொல்லி விட்டேன்.

சாரு நிவேதிதா மேடம்.  எப்படி இருக்கு பாருங்க.  நீங்க என்னடான்னா செல்ஃபி எடுத்து டார்ச்சர் பண்றாங்கங்க்றீங்க!!!

அன்புடன்,

சாரு நிவேதிதா


இது முகநூலில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட பகிர்வு. சாரு நிவேதிதா அவர்கள் நடிகர் சூர்யாவுக்கு எழுதின கடிதமாம். தமிழ் இந்து/ஹிந்து? அல்லது தமிழ் த ஹிந்துவில் வந்திருக்கிறது. இதற்கு அன்றே அங்கேயே பதில் சொல்லி விட்டேன். ஆனால் இன்று மீண்டும் நண்பர் ராம்ஜி யாஹூ மஹாதேவன் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கார். கீழே உள்ளது ராம்ஜி யாஹூ மஹாதேவன் சொல்லி இருப்பது. அசோகமித்திரன் வறுமையில் வாடினார் என்பதாக இவரும் சொல்லுகிறார். என்னமோ கிட்டே இருந்து பார்த்தாப்போல்! 

அசோக மித்திரன் மட்டுமல்ல,  ஜெயமோகன் , எஸ் ரா கூட சினிமா வசன வருமானம் இல்லாவிடில் 

வறுமையாகத் தான வாழ்வை நடத்திக் கொண்டு இருக்க வேண்டும். 

மனைவியர்  சம்பள வருமானம் அடிப்படை செலவுகளுக்கு மட்டுமே சரியாக இருக்கும். 

விமானப் பயணம், முதல் வகுப்பு ரயில் பயணம்  எல்லாம் சாத்தியம்  இல்லை. 

சாரு  சொல்லும் முழு நேர எழுத்தாளர் வறுமை இப்போதும்  இருக்கிறது .


இது நான் ராம்ஜி யாஹூ மஹாதேவனுக்குக் கொடுத்திருக்கும் பதில்!

சித்தப்பா வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய்யான செய்தி. ஏற்கெனவே  ஜெயமோகனுக்குப் பதில் கூறும்போது இதைச் சொல்லி இருக்கேன். அவர்  20 வயது வரைக்கும் ஹைதராபாத்-செகந்திராபாத் வாசம். அவர் தந்தை நிஜாம் ரயில்வேயில் வேலை செய்து வந்தார். இள வயதில் வறுமை சாப்பாட்டுக்கு இல்லை என்பதெல்லாம் முற்றிலும் பொய்யான செய்திகள். அவருக்கு 20 வயதில் தான் சென்னை வந்தார். அதுவும் சொந்த வீடு தி.நகர் தாமோதர ரெட்டித் தெருவில் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர் திருமணம் என் தந்தை ஏற்பாடு செய்தது தான். திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. சித்தப்பாவின் அம்மா அப்போது இருந்தார். சித்திக்கு அவர் தன்னுடைய வைரத்தோட்டைக் கொடுத்தார். திருமணம் ஆகிப் பெண்ணை அழைக்கையில் சித்திக்கு அவங்க மாமியார் டிஷ்யூ புடைவை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தக் காலத்திலேயே இது 500 ரூபாய்க்கு மேல் இருக்கும். நான் சொல்லுவது 1963 ஆம் ஆண்டில்.  இவங்க வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய் என நிரூபிக்கவே இதைச் சொல்லும்படி ஆயிற்று. சித்தப்பாவுடன், சித்தி, அவங்க 3 பிள்ளைகள், சித்தப்பாவின் மூத்த அக்கா,சித்தப்பாவின் தம்பி,  இருந்தனர். தம்பிக்குத் தான் என் நாத்தனாரைக் கொடுத்தது. அந்தத் திருமணம் 70 ஆம் ஆண்டு நடந்தது. வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் யாரும் பெண்ணைக் கொடுப்பார்களா? ஜெயமோகனில் ஆரம்பித்துச் சாரு நிவேதிதா வரை சொல்லும் ஆண்டுகளில் தான் சித்தப்பா வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள்.  சித்தப்பாவின் கல்யாணம், அவர் தங்கை கல்யாணம் (இது அம்மா இறந்த பின்னர் சித்தப்பா நடத்தி வைத்தது) அதன் பின்னர் அவர் தம்பியின் திருமணம். இதற்கு நடுவில் சித்தப்பாவிற்கு 3 பிள்ளைகள் பிறந்தனர். 

எனக்குப் பத்து வயதில் இருந்து சித்தப்பாவைத் தெரியும். நீங்கள் சொல்லும் வறுமையை அவர் அனுபவித்ததாகச் சொல்லப்படும் கால கட்டமும் அது தான். ஆனால் 20 வயது வரை ஹைதராபாதில் இருந்து விட்டுச் சென்னைக்கு வந்தவர் உடனே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார். எங்கிருந்து வந்தது வறுமை? வறுமையில் உழல்பவருக்கா அவர் அம்மா பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்? பேத்தலாக இல்லையோ?   சித்தி எந்த வேலைக்கும் போகவில்லை. வீட்டில் தான் இருந்தார். மனைவியரின் வருமானம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியல்ல. மாடியும் கீழுமாக உள்ள வீடு. பின்னால் கொல்லைப்புறத்தில் வீட்டை ஒட்டியே இரண்டு ஓடு போட்ட போர்ஷன்கள். ஒன்றில் சித்தப்பாவின் தங்கையும் இன்னொன்றில் வேறொருத்தரும் இருந்தார்கள். கிணற்றடியை ஒட்டி ஓர் ஓட்டு வீடு சின்னதாக இருக்கும். அதிலும் யாரோ குடி இருந்தனர். சித்தப்பா இருந்த வீடு அந்தக் கால மெட்ராஸ் டெரஸ். கீழே மாதிரி மேலே ஒரே மாதிரியான அமைப்பு. படியேறியதும் மேலே இருக்கும் வராந்தாவில் தான் அவர் எழுது பொருட்கள், டைப்ரைடிங் மிஷின் போன்றவை இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் கூட நடு இரவில் குத்திட்டு உட்கார்ந்து யோசித்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பதைப் பல முறை பார்த்திருக்கேன். 

மேலும் அந்த அறுபதுகளில் தான் அவர் கணையாழியின் அசோசியேடட் எடிட்டராகவும் இருந்தார். கணையாழி புத்தகம் ப்ரஸ்ஸிலிருந்து வந்ததும் அனுப்ப வேண்டியவர்களுக்கு விலாசங்களைத் தட்டச்சி அனுப்பும் வேலையைப் பல மாதங்கள் நான் செய்திருக்கேன். வண்டி வைத்துக் கொண்டதில்லை. சைகிள் தான். ஆனால் அதற்காக வறுமை என்றே இருந்ததில்லை. வாசலில் மாடு கட்டிக் கறந்து தான் பால் வாங்கி இருக்காங்க. தினம் தினம் காஃபிக் கொட்டையை வறுத்து அரைத்துத் தான் காஃபி சாப்ப்பிட்டிருக்காங்க. எனக்கு நல்ல காஃபி என அறிமுகம் ஆனதே சித்தப்பா வீட்டில் தான். நான் மட்டுமில்லாமல் என் அண்ணா, சித்தி பிள்ளைகள், பெண்கள், மாமா பெண் எனப் பலர் அந்த வீட்டில் இருந்திருக்கோம். இப்போவும் சொல்கிறேன். அந்த வீடு ஓர் ஆலமரம். விழுது விட்டுப் படர்ந்து அனைவருக்கும் நிழல் தான் கொடுத்திருக்கிறது. வறுமை எனப் பட்டுப் போகவெல்லாம் இல்லை. பிள்ளைகள் சம்பாதித்துத் தான் அவர் சாப்பிடவே ஆரம்பித்தார் என்பதை அவர் பிள்ளைகளான என் தம்பிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரவர் விருப்பப் படிப் படித்தார்கள். அவர்கள் விருப்பமான படிப்புப் படிப்பதில் சித்தப்பாவின் தலையீடு இருக்கவில்லை. மற்றபடி படிக்க வைக்க முடியலைனு எல்லாம் சொல்ல முடியாது. இதைத் திரும்பத் திரும்ப எழுத எனக்கு வெட்கமாக இருக்கிறது. இனியாவது சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டு இப்படி எல்லாம் எழுதுங்கள்! 

நடிகர்களை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். சித்தப்பாவை இதோடு விட்டு விடுங்கள். சித்தப்பாவின்  " பதினெட்டாவது அக்ஷக்கோடு"  படித்தால் உண்மை புரியும். அதில் அவர் சிகந்திராபாதில் இருந்தப்போ நடந்த விஷயங்களையும் நிஜாமின் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்த்ததும், கல்லூரி வாழ்க்கை பற்றியும் பகிர்ந்திருப்பார். அவற்றில் பலவும் உண்மைச் சம்பவங்களே

Thursday, December 03, 2020

என்னத்தைப் போற்றுவது போங்க! :(

 தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான் போல! தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் இணைய வெளியில் உள்ளவர்களும் பேசித் தீர்க்கிறார்கள். என்னவோ தெரியலை திரைப்பட நடிகர்கள் எனில் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வத்துக்கும்/அதைவிடவும் மேல் ஆனவர்கள்.

*************************************************************************************

பொதுவாகத் தமிழ்நாட்டிலே ராணுவத்திற்கு மதிப்புக்கிடையாது. அவர்களின் சேவை குறித்த புரிதலும் இல்லை. தமிழக மக்களைப் பொறுத்தவரை ராணுவம் எனில் அவசர காலத்திலும், மழை, வெள்ளக் காலத்திலும் பேரிடர்க்காலங்களிலும் வந்து உதவ வேண்டியவர்கள். அதற்கு மேல் அவர்களைக் குறித்த புரிதல் சுத்தமாக இல்லை. அதிலும் இந்தத் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள் போன்றவர்களுக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை. சமீபத்தில் ஓர் படம் "ஓடிடி" எனச் சொல்லப்படும் தளத்தில் வெளியிடப்பட்டு அதைக் குறித்த விமரிசனம் எல்லாத் தளங்கள், தனியார் வலைப்பதிவுகள், முகநூல் எனப் பகிரப்பட்டது. அந்தக் கதை உயிருடன் இருக்கும் ஒருவரின் உண்மைக்கதையாம். திரைப்படத்திற்காக அந்தக் கதாநாயகரின் ஜாதியை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். உண்மையில் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அந்த மனிதர் திருமணம் செய்திருப்பதும் தன் சொந்த சமூகத்திலே தானாம். ஆனால் திரைப்படத்தில் அப்படிக் காட்டவில்லையாம். பாரம்பரிய முறைப்படி திருமணம் எனக் காட்டாமல் புரட்சித் திருமணமாகக் காட்டப்பட்டுள்ளது என்று எழுதி இருந்தனர். 

அதெல்லாம் எப்படியோ போகட்டும். எனக்கு அந்த விமரிசனத்தில் படித்த ஒரு முக்கியமான விஷயம் தான் உறுத்தலாகவே இருக்கிறது. அந்தக் கதாநாயகர் கதைப்படி/(அல்லது உண்மையான அந்த மனிதரும் அப்படித்தானோ என்னமோ) விமானப்படை ஊழியராம். உண்மைக்கதையிலும் அந்த மனிதர் விமானப்படை ஊழியராக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே சொல்லி இருப்பது திரைப்படக் கதாநாயகர் விமானப்படையில் காப்டன் என்று. உண்மையில் தரைப்படையில் தான் "காப்டன்" அந்தஸ்து உள்ள பதவி உண்டு. விமானப்படையிலும், கடல்படையிலும் காப்டன் என்ற பதவியே கிடையாது.  இது தான் போச்சு எனில் திரைப்படத்தில் அந்தக் கதாநாயகர் தன் தந்தை இறந்துவிட்டார் என்பதால் ஊருக்கு வர விமானம் மூலம் பயணச் சீட்டு வாங்க முயற்சித்து அவருக்குப் பயணச்சீட்டே கொடுக்கலையோ அல்லது இல்லை என்று விட்டார்களோ தெரியலை. அல்லது பயணச் சீட்டின் பணம் அவரால் கொடுக்க முடியலைனு சொல்லி இருக்காங்களோ தெரியலை. அவர் பயணச் சீட்டுக் கிடைக்காமல் அழுது புரண்டு அலறுகிறாராம். கடைசியில் பயணச் சீட்டுக்காகப் பிச்சை எடுக்கிறாராம். ராணுவ வீரனுக்கு இப்படி அழுவது என்பது கேவலமான ஒன்று. கொச்சைப் படுத்தி இருக்காங்க திரைப்படத்தில்.

இதைப் படித்ததும் சீத்தலைச் சாத்தனார் எழுத்தாணியால் குத்திக் கொண்ட மாதிரி எனக்குக் கையில் ஒண்ணும் கிடைக்கலை. வெறும் கையால் தலையில் அடித்துக் கொண்டேன். உண்மையில் முதல்லே எந்த ராணுவ வீரனும் அது எந்தப் படையைச் சேர்ந்தவர்கள் ஆயினும் இப்படி எல்லாம் அழுது புரள மாட்டார்கள். அடுத்தது பிச்சை எடுக்க மாட்டார்கள். ராணுவத்தில் அதிகாரியாகச் சேராமல் சாதாரண வீரனாகச் சேர்ந்தாலே நல்ல சம்பளம், உடை, உணவு, இருப்பிடம் எல்லாம் இலவசம். ரேஷன் இலவசம், பால், வெண்ணை, காய், கனிகள் இலவசம். இம்மாதிரிச் சமயங்களில் அல்லாமல் சாதாரணமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதென்றாலே அவர்களுக்கு வாரன்ட் எனப்படும் சலுகைப் பயணச் சீட்டுக் கிடைக்கும். அரசு செலவில் தான்! அதோடு இல்லாமல் ரயில் பயணம் என்றாலும் சரி, விமானப் பயணம் என்றாலும் சரி ராணுவ வீரர்களுக்கு எனத் தனியாகப் பத்திலிருந்து இருபது இருக்கை வரை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இது எந்த வழியாகச் செல்லும் ரயில்கள், விரைவு வண்டிகள், ராஜ்தானி போன்ற சிறப்பு ரயில்கள் எல்லாவற்றிலும் உண்டு. விமானத்தில் செல்வதற்கும் அதே போல் உண்டு. தகுதிக்கு ஏற்ப எகானமி வகுப்போ, முதல் வகுப்போ கிடைக்கும்.  அழுது புரள்வது எல்லாம் எப்போவுமே இல்லை. ராணுவ வீரர்கள் யாரும் வரவில்லை என்பது தெரிந்தால் மட்டுமே அது சாதாரணப் பயணிக்குக் கொடுக்கப்படும்.  அதோடு இல்லாமல் இம்மாதிரி அவசர காலங்களுக்கு என அவங்களுக்கு ஓர் ராணுவ அதிகாரி ரயில் நிலையத்திலேயே/விமான நிலையத்திலேயே இருப்பார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னால் அவங்களுக்கு உள்ள சிறப்புச் சலுகை மூலம் பயணச் சீட்டுக் கிடைத்துவிடும். கிடைக்காது என்ற பேச்சே இல்லை.

சாதாரண ராணுவ வீரனுக்கே இத்தனை சலுகைகள் உண்டு எனில் விமானப்படை அதிகாரிக்கு விமானத்தில் செல்லப் பயணச் சீட்டுக் கிடைக்காமல் யாரும் உதவாமல் அழுது புரண்டாராம். ராணுவத்தில் இப்படி எல்லாம் நடக்காது. இம்மாதிரிச் செய்தி வந்து ஒரு வீரன் சொந்த ஊர் போக வேண்டும் எனில் அந்த யூனிட் முழுவதும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யும். பண உதவி தேவை என்றாலும் அனைவரும் கையிருப்பிலிருந்து போட்டுக் கொடுத்து உதவுவார்கள். சாப்பாடெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட வீரனை ரயில் அல்லது விமானத்தில் ஏற்றி அனுப்புவதை எல்லாம் அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் செய்வார்கள். மேல் அதிகாரிகளும் உதவுவார்கள். சாதாரண வீரனுக்கே இப்படி எனில் விமானப்படை அதிகாரிக்கு மட்டும் அந்தப் படத்தில் சொன்னாப்போலவா நடக்கும்! பேத்தல்! ராணுவத்தில் ஜாதி, மத பேதம் பார்க்காமல் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தான் இருப்பார்கள். 

நாங்க நேரடியாக சீருடை தரிக்கும் ராணுவம் இல்லை எனினும் எங்களுக்குக் கூட ராணுவ யூனிட்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். மாற்றல் ஆகிவிட்டதெனில் சாமான்களைப் பாக்கிங் செய்வதிலிருந்து ரயிலில் ஏற்று அனுப்புவது வரை ஆட்கள் மாறி மாறி வந்து உதவுவார்கள். சாப்பாடு ஒரு வேளைக்கு ஒருவர் வீட்டில் என்று போடுவார்கள். சொல்லப் போனால் மாற்றல் ஆகிப் போகும் ஊரில் ஒரு வாரத்துக்கு நாம் வீட்டில் சமைக்க வேண்டாம். அதே போல் எந்த ஊரில் இருந்தோமோஅந்த ஊரிலும் ஒரு வாரம் ஊருக்குக் கிளம்பும் நாள் வரை சமைக்க வேண்டாம். கையிலும் சாப்பிடக் கொடுத்துவிடுவார்கள்.  இது பற்றி எல்லாம் எந்தவிதமான அறிவும் இல்லாமல் ராணுவத்தையும், ராணுவ வீரனையும் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். இதை எப்படிப் படத்தணிக்கைக் குழு அனுமதித்தது என்று புரியவில்லை. விமானப்படை அதிகாரிகள் நேரடியாக இந்தச் செய்திக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் கூடாது. ஆனால் அதிகாரிகள் சிலரின் மனைவிமார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதி இருந்தார்கள். இத்தனைக்கும் தாம்பரம் விமானப்படைத் தளத்திலே இந்தப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். தமிழ்ப்படம் என்றாலே இப்படித் தான் இருக்கும் என்று ஆகிவிட்டது.  

இதைப் பற்றிக் கேள்விப் பட்ட அந்த நபர் (உண்மை நாயகர்) திரைப்படம் தானே, அதனால் இப்படி எடுத்திருக்காங்க என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டதாகவும் படித்தேன். தமிழகத்தில் ராணுவம் பற்றிய புரிதல் ஏற்படும் வரை இப்படித் தான்! என்ன செய்ய முடியும்!

Monday, November 30, 2020

வரகு தேன்குழலுக்குப் பரிசு!

போட்டி முடிவுகள்  

நம்ம ஏடிஎம்மோட சஹானா மின்னிதழ்த் தளத்திலே தீபாவளிக்கான போட்டி ஒண்ணு வைச்சிருந்தாங்க. மறக்க முடியாத தீபாவளி நினைவுகள்/சமையல் குறிப்பு, தீபாவளிக்கான பக்ஷணங்கள் செய்முறை. அப்புறமாக் குழந்தைங்களுக்கும் படம் வரையும் போட்டி எல்லாம் வைச்சிருந்தாங்க. சென்னையைச்சேர்ந்த மதுரா பொட்டிக் இதற்கான ஸ்பான்சரை ஏற்றிருந்தாங்க. அதில் தீபாவளி பக்ஷணங்கள் செய்முறையில் நான் வரகு தேன்குழல் செய்முறையும், திரிபாகம் செய்முறையும் அனுப்பி வைச்சேன். மறக்க முடியாத தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்திருந்தேன். எல்லாம் வெளிவந்தப்போ மத்தவங்களோட நினைவுகள்/செய்முறைகள் எல்லாம் இன்னும் நல்லா இருக்கேனு தோன்றியது. ஆனால் சிறு தானிய உணவு என்பதால் வரகு தேன்குழலுக்கு ஆறுதல் பரிசேனும் கிடைக்கலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் முதல் பரிசே கொடுத்திருக்காங்க. திரிபாகத்துக்குப் பரிசு எதிர்பார்த்தேன். வரலை. இரண்டாம் பரிசு நம்ம வெங்கட் மனைவிக்குக் கிடைச்சிருக்கு. அவங்களும் நன்றாகச் செய்து காட்டிப் பகிர்ந்திருந்தாங்க. 

நினைவுகள் எழுதியதற்குப் பரிசெல்லாம் கிடைக்கலை. நம்ம பரிவை குமாருக்குக் கிடைச்சிருக்கு. பொதுவா நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. வைகோ சார் விமரிசனப் போட்டி வைச்சிருந்தப்போத் தான் விடாமல் என்னைத் தொந்திரவு பண்ணிப் பங்கெடுக்க வைத்தார். குறிப்பிட்ட அளவுக்குப் பரிசுகளும் கிடைத்தன. அதுக்கப்புறமா நான் கலந்து கொண்டது இந்தப் போட்டி தான். இதில் முதல் பரிசு கிடைத்தது உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஓவியப் போட்டியில் குழந்தைகளுக்கானதில் முதல் பரிசு என் தங்கை (சித்தி பெண்) பேத்திக்குக் கிடைத்திருக்கிறது. குழந்தை உண்மையிலேயே நன்கு வரைந்திருந்தாள். மற்றக் குழந்தைகளும் சோடை போகவில்லை. என்னுடன் சேர்ந்து இரண்டாம், மூன்றாம் பரிசைப் பகிர்ந்தவர்களுக்கும் பரிவை குமாருக்கும், தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள். மேலே கொடுத்த சுட்டியில் உள்ள யூ ட்யூபில் பரிசு பெற்றோர் பற்றிய விபரங்களைக் காணலாம். 

Sunday, November 29, 2020

இரண்டாவது புத்தக வெளியீடு!

பாரம்பரியச் சமையல்கள் 

வணக்கம். என்னுடைய சமையல் குறிப்புகள், நான் சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருப்பனவற்றில் சில பாகம் ஒன்றாக இன்று அமேசான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மிகுந்த உதவி செய்தவர் வழக்கம் போல் நம் வெங்கட் தான். நேற்றே வெளியீடு காண வேண்டியது ஒரு சில பிரச்னைகளால் இன்று தான் வந்திருக்கிறது. இதை நாளை திங்கள் 30-11-2020 மதியம் 12-30 மணியில் இருந்து சனிக்கிழமை மதியம் 12-00 5-12-2020 வரை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இதற்கான சுட்டி மேலே கொடுத்துள்ளேன். அந்தச் சுட்டியை இங்கே இணைப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆகி விட்டது. மொத்தத்தில் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் கற்கிறேன். புத்தகம் விலை 50 ரூபாய் தான். அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. வாட்சப் மூலமும் இலவசத் தரவிறக்குவதற்கான சுட்டி கொடுத்துள்ளேன். 

Saturday, November 28, 2020

காணும் இடமெல்லாம் வேலன்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 11

கோமதி அரசு அவர்களின் இழப்பில் இருந்து இன்னமும் மனம் வெளிவரவில்லை. நமக்கே இப்படின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கையில் ஒண்ணும் புரியவில்லை. அந்த வேலவன் தான் அவர்கள் மனது தேறி வர அருள் புரிய வேண்டும். ஆரம்பித்த கந்த சஷ்டிப் பதிவுகளை முடிச்சுடலாம்னு இன்னிக்கு வள்ளி திருமணத்தின் அடுத்த பதிவைப் பகிர்ந்திருக்கேன். கொஞ்சமானும் மனம் ஆறுதல் அடையலாமே! *********************************************************************************************************************************************************************************** “என்ன, யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!” என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், “ வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!” என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது. “சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்”என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. “ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!” என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. “அப்படியா, வள்ளி, அதோ பார்!’ என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது. “ஆனையும் குதிக்குதல்லோ அசட்டாளம் பண்ணுதல்லோ சண்டாளப் பண்டாரா- என்னை சதி மோசம் செய்தீரே ஆனையை விலக்கி விடும் – நீர் ஆளையேக் கலக்குதல்லோ!” என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். “வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!” என்று சொல்கின்றார் கிழவர். வள்ளி மறுக்கின்றாள். “நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்” என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ, “ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே ஆனய விலக்கிவிடு நீரெனக்குப் பாட்டாவாம் நானுனக்குப் பேத்தியாம்” என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. ம்ஹூம், அழுத்தமாய் “வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்” என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள். அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும். அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் “ஆஹா, பிழைத்தோம் “ என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, “என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! “ என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான். எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது. நான் பள்ளியில் படிக்கும்போது மார்கழி மாதப் பஜனை வகுப்பில் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனின் மேற்பார்வையில் நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சியில் வள்ளி கல்யாணம் கட்டாயம் இடம் பெறும் ஒன்றாகும். பல முறைகள், பல வருடங்கள் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன். என்றாலும் அலுக்காத ஒன்று. பஜனை வகுப்பில் படிக்கும் மாணவிகளே பாத்திரங்களை ஏற்று ஆடிப் பாடி நடிப்பார்கள். ஒரு மாதத்துக்கும் மேலே ஒத்திகை நடக்கும். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் நிகழ்ச்சிகள் நடக்கும். அரையாண்டுத் தேர்வுக்கும் படித்துக் கொண்டு, இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, காலையில் சீக்கிரமாய் எழுந்து பஜனைக்கும் போய்க் கொண்டு, அம்மாதிரியான ஒரு வாழ்க்கை இப்போ நினைச்சாலும் கிடைக்குமா சந்தேகம் தான். காலையிலே 4 மணிக்கெல்லாம் மதனகோபால ஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும் பஜனை, 4 மாசி வீதிகளையும் சுற்றி ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேரும். அதுக்கப்புறமாய்ப் பள்ளிக்குப் போவோம். அதிலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலுக்கும், இந்த வள்ளி திருமணம் நடக்கும் தினத்திலும் கூட்டம் அதிகமாய் வரும். முன்னாலேயே போய் இடம் பிடிப்போம். இப்போ பொதிகையின் தயவில் சில நிகழ்ச்சிகள் பார்க்க முடியுது உட்கார்ந்த இடத்திலேயே! (((

Wednesday, November 25, 2020

திரு அரசு அவர்களுக்கு அஞ்சலி!

 அருமை சிநேகிதி திருமதி கோமதி அரசுவின் கணவர் திரு அரசு அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சி தரும் விஷயமாக ஆகிவிட்டது. நினைக்க நினைக்க மனசே ஆறலை. மென்மையான பேச்சு, சுபாவம் கொண்ட இருவரும் அருமையான தம்பதிகளாக இருந்தனர். அவங்க குடும்பவழக்கப்படி இருவருக்கும் நீண்ட ஆயுள் இருக்கும் என நினைத்திருந்தேன். இது ஓர் எதிர்பாராத அதிர்ச்சி! இந்த 2020 ஆம் ஆண்டே பல விஷயங்களிலும் மன வருத்தம் தந்து கொண்டே இருக்கும் ஒன்றாக ஆகி விட்டது. இனி வரும் மாதம் நல்லபடியாகப் போய் அனைவருக்கும் நன்மையை அளிக்கட்டும்.

திரு அரசு அவர்களின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

Tuesday, November 24, 2020

வருவாயா வேல் முருகா! கந்த சஷ்டிப் பதிவுகள்! 10

 வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ “ஆலோலம்” பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். 

அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். “ஏ! வளைச்செட்டி, “ஆருமற்ற வள்ளி 

நாம் அருந்தினையைக் காக்கப் போறேன்

வாசலிட்டுப் போறவளுக்கு வளசலு எனக்கெதுக்கு?” 

என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள். 

ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ” 

ஆலோலங்கடி சோஓஓஓஓஓ 

ஆயலோ கிளி ஆயலோ 

அன்னங்களே, வாத்துகளே 

போவென்று விரட்டினாலும் 

குந்துகெட்ட வெள்ளக்கிளி ஆனாலும்

 போவதில்லை அடி ஆலோலம், ஆலோலம்,

 ஆலோலங்கடி சோஓஓஓஓ” 

எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். 

"சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. “வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!” என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது. 

“கல்லை உரலாக்கி

 கருங்கம்பை ஒலக்கையாக்கி 

தேக்கிலையை அளவாக்கி 

தெள்ளி விடு வள்ளி 

தினைமாவை அள்ளி” என்ற கிழவரிடம்

 சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. “தண்ணீர் தவிக்குதடி வள்ளி” என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், “வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.





படங்களுக்கு நன்றி கூகிளார்

Monday, November 23, 2020

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 9

நண்பர் ஒருவர் வள்ளி திருமணத்தைத் தான் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் நான் முதலில் தெய்வானை திருமணத்தை எழுதிட்டே அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவும் இரண்டு திருமணமாமே? அப்படினு பேசிக்கிறவங்களுக்கு எல்லாம் இது இறை தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்திச் சொல்வதற்கென்றே ஏற்பட்ட ஒன்று. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இறைவன் கேட்கவில்லை. ஆனாலும் நாம் தானே செய்து வைக்கின்றோம். அவன் திருமணம் செய்து கொண்டதாய்ப் பாடி, ஆடியும் மகிழ்கின்றோம் இல்லையா? ஆன்மாக்கள் இறைவனைச் சென்றடைவது ஒன்றே வாழ்க்கைத் தத்துவம். என்றாலும் எப்போதும் இப்படித் தத்துவார்த்தமாய் அனைவராலும் சிந்திக்க முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கென இம்மாதிரி எளிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள் மூலம் இறைவனைச் சென்றடையும் வழியைக் காட்டுவதே இந்த அவசர யுகத்திற்கென ஏற்பட்டது ஆகும். 

இங்கே தெய்வானை முருகனுக்கு இடப்புறமாய் இருக்கும் இடகலைச் சக்தியாவாள். வள்ளியோ வலப்பக்கம் இருக்கும் பிங்கலை சக்தி. இந்த இரு சக்திகளும் நம் உடலில் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே தெய்வானையும், வள்ளியும் முருகனோடு இணைந்த ஐக்கியமாக நமக்கு யோகத்தையும், அருளையும் போதிக்கின்றனர். நம் உடலின் இரு சுவாசங்களே, ஆறுமுகனின் இரு மனைவியராக உணரப் படுகின்றனர். இந்த சுவாசம் இல்லையேல் நாம் எங்கே? ஓகே, ஓகே,  இதோ கதை! தத்துவத்தை நிறுத்திக்கிறேன். இப்போது இவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்ற வழிவழியாக வரும் புராணக் கதையைப் பார்ப்போமா? *********************************************************************************** தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப் பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள். 

அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற, தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும். விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது.


அடுத்து முருகன் தமிழ்க் குறத்தி ஆன வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது. வள்ளியம்மையை இச்சா சக்தி என்பார்கள். இவளை முருகன் இச்சை கொண்டானா அல்லது இவள் முருகனிடம் இச்சை கொண்டாளா என்பதை அறிதல் கடினம். ஆனால் தானே தமிழ், தமிழே தானாகிய கந்தன் ஒரு பெண்ணை மணந்தது போதாது என நினைத்து, மற்றொரு பெண்ணையும் மணக்க நினைத்தான். அதுவும் ஒரு வேடுவப் பெண்ணை. எப்படித் திருமணம் புரிந்தான்? தெய்வானைக்குத் தெரியாமல் களவு மணம் புரிகின்றான் இவளை. ஆஹா, தெய்வானை சும்மாவா இருந்தாள்??? முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போமா?? *********************************************************************************** வள்ளி திருமணம் பற்றி எழுதும்போது இயல்பாகவே காவடிச் சிந்து நினைப்பிலே வருது.அதுவும் விஜய் சிவா குரலிலே கேட்பதென்றால் தனி சுகமே. ஊனும் உருகும், உள்ளம் குழையும் வண்ணம் அற்புதமான குரலிலே பாடுவார். இந்தப் பாடல்களுக்கென்றே அவர் குரல் அத்தனை இனிமையா, அல்லது பாடல் இனிமையானு தெரியாத அளவுக்கு உணர்வுகள் ஒத்துப் போகும். வள்ளிதிருமணம் பற்றிய நாட்டுப் பாடல்கள் பலவற்றையும் அதிகம் பாடி வந்திருப்பது குமரி மாவட்டத்திலே உள்ள மக்களே ஆகும்.ஆனால் அவர்களில் பலரும் இன்று கூண்டோடு மாறி விட்டதால் அவர்களால் அரங்கேற்றப் பட்ட களியலாட்டக்கலையின் முக்கிய அம்சம் ஆன வள்ளி திருமணம், வள்ளியடவு போன்ற பாடல்களை ஆய்வாளர்கள் மிகவும் சிரமப் பட்டே கண்டெடுத்திருக்கின்றனர். 

கேரள எல்லைக் கிராமங்களில் ஒரு சில இடங்களில் குறத்திக்களி என்ற பெயரில் வழங்கும் சில பாடல்களில் மலையாளமும் கலந்து இருப்பதாகவும் சொல்கின்றனர். நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு. ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. அவங்க சொல்லுவது என்னவென்றால்.ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில். 

குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது, 

"மானே நீ போட்ட சத்தம் 

மலக்குறவன் ஓடி வந்து 

ஓடி வந்து வள்ளி தனை 

வளைத்துமே எடுத்தானே 

வளைத்துமே எடுத்தானே 

பெண்பிள்ளை பிள்ளையல்லோ 

பிள்ளையே ஆயிப்போச்சு 

ஆமணக்கு தண்டு வெட்டி 

அது நிறையத் தேனடச்சு 

தேனடச்சு அமுது பெறும் 

நேரமெல்லாம் அமுது பசி அடக்கிவிட்டு

 குச்சு போய்ச் சேர்ந்தார்கள்." 

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். 

ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்த பெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி. அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. 

ஆலோலம், ஆலோலம், ஆலோலம் 

என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??

 நாட்டுப் பாடல்கள் உதவி= கலைமகள் தீபாவளி மலர், கல்கி தீபாவளி மலர்கள்.

Sunday, November 22, 2020

கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி விடும்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 8

 சமீவனத்து மக்கள் அனைவரும் அந்தச் சிலையை வந்து கண்டனர். பிரமித்துப் போனார்கள். அதன் அழகைப் பாராட்டுவதா? உயிரோட்டத்தைப் பார்த்து வியந்து நிற்பதா? எதுவும் புரியாத மக்கள் சிற்பியைப் பார்த்து இன்னும் திகைத்தனர். என்ன?? கண்கள் தெரியாத ஒருவராலா இது வடிக்கப் பட்டது? கண்கள் இல்லாதவராலேயே இத்தனை அழகும், ஜீவனும் நிரம்பிய சிற்பத்தைச் செதுக்க முடிந்ததா?? ஆயிரம் கண்கள் கொண்டவராலே கூட இத்தனை அழகுச் சிலையை, உயிருள்ள முருகனைச் செதுக்க முடியுமா?? இதைப் பார்க்க, பார்த்து அனுபவிக்கக் கண் கோடி வேண்டும் அல்லவா?? அடடா, இத்தனை அழகு வாய்ந்த, பெரும் சக்தி வாய்ந்த முருகனை நம்ம ஊர்க் கோயிலில் அல்லவா வைக்கவேண்டும்? மக்கள் ஒரு முடிவுக்கு வந்து, சிற்பியைப் பார்த்து, "ஐயா, எங்கள் ஊர்க் கோயிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரருக்குப் புத்திரன் இல்லை. இந்த முருகனை அவருக்குப் புத்திரனாக்குங்கள் ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம். தயை செய்யுங்கள்." என்று இறைஞ்சுகின்றனர்.


படத்துக்கு நன்றி கூகிளார்!

சில்பா சிற்பிக்கு ஆனந்தம் எல்லை மீறியது. ஆஹா, இங்கேயும் ஒரு கோயில், அங்கேயும் இந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்யத் தயாராய் மக்கள். நல்லவேளை தான். என்று நினைத்துக் கொண்டு, "சீக்கிரமாய் ஒரு நல்ல நாள் பாருங்கள், சிலை பிரதிஷ்டை செய்ய, பிரதிஷ்டை செய்யும்போது கண் திறக்கின்றேன்", என்று சொல்ல மக்களும் சரி என்றனர். ஆனால் சில்பா சிற்பி சொல்லிவிட்டாரே தவிர அவருக்கு அன்று இரவு பூராத் தூக்கமே வரவில்லை. மற்ற இரண்டு சிற்பங்களையும் செய்யும்போதும் சரி, செய்து முடித்ததும் சரி கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். இந்தச் சிலையை அவ்வாறு பார்க்க முடியாது. எல்லாரும் இத்தனை புகழும் இந்தச் சிலையைப் பார்க்கவாவது ஒரு நிமிஷமாவது கண்பார்வை வந்துவிட்டுப் போகாதா? என மனதிற்குள் புழுங்கினார் சிற்பி.சிலை பிரதிஷ்டை செய்ய மக்கள் பார்த்த நாளும் நெருங்கியது. சிலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உடன் சிற்பியும் பேத்தியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றார். ஆறுமுகனின் விழிகள் திறக்கவேண்டிய வேளையும் நெருங்கிவிட்டது.


படத்துக்கு நன்றி கூகிளார்

 மக்கள் கூட்டம் கூடி இருக்க, சிற்பி உளியைக் கையில் எடுத்துக் கண் இமையைத் திறப்பதற்குப் பதில் வேகமாய் உளியால் அடிக்கப் போக, சிறுமியோ, கையை நடுவில் கொடுத்து, "தாத்தா, தாத்தா, கந்தன் கண்கள் உடைந்துவிடுமே?" எனக் கூவிய வண்ணம் தடுக்க, சிறுமியின் கையில் பட்ட உளியால் அவள் கையில் அடிபட்டு ரத்தம் தெறிக்கின்றது. வேகமாய்ப் பீறிட்ட ரத்தம் சிற்பியின் குருட்டுக் கண்களில் பட்டுத் தெறிக்கின்றது. சிறுமியின் அலறலில் நடுங்கி விதிர்விதிர்த்துப் போன சிற்பியின் கண்களில் தெறித்த ரத்தத்தை அவர் துடைக்க, என்ன ஆச்சரியம், பார்வை திரும்பிவிட்டது சிற்பிக்கு. என்றாலும் அருமைப் பேத்தியின் கைகளை எண்ணிக் கலங்க, அவரை அந்த சமீவனத்திலுள்ள வன்னிமரக் காட்டிற்கு அழைத்து வந்த பெரியவர், தம் கையால் சில பச்சிலைகளை வைத்துச் சிறுமியின் கையில் கட்ட, ரத்தப் போக்கு நின்றது. "ஐயா, பெரியவரே! தாங்கள் யார்? என் கண்களையும் திறந்து, இப்போது இச்சிறுமியின் காயத்தையும் ஆற்றிய தாங்கள் நிச்சயம் ஒரு மகானாகவே இருக்கவேண்டும்." என்று சில்பா சிற்பி அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்க, அவரோ சிரித்த வண்ணம், " என் பெயர் வேலவன், கந்தன் என்றும் சொல்கின்றனர். இரு மனைவியர் எனக்கு. ஒரு மனைவியின் பெயர் தெய்வானை. " என்று சொல்லிச் சிரித்தார்.

ஒரு கணம் திகைத்த சில்பா சிற்பி, "ஆறுமுகா, வேலவா, கார்த்திகேயா!" எனக் கூவிய வண்ணம் பெரியவர் கால்களில் விழுந்து அவர் பாதம் பற்ற, அடுத்த கணம் அங்கே தோன்றியதோர் ஒளிப்பிழம்பால் சிற்பியின் கைக்கட்டைவிரலும் சரியாக, பெரியவர் மறைந்து போனார். ஊரே ஸ்தம்பித்து நின்றது. அனைவரும் சில்பா சிற்பியின் சக்தியும், மகிமையும் பெரியது என அறிந்து அவரைக் கொண்டாட, பெருமானை நேரிலே கண்ட திருப்தியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. ஏற்கெனவே ஊருக்கு இருந்த புராணப் பெயரான அஷ்ட நேத்திரபுரம் என்னும் பெயரே, சிற்பிக்குக் கண்கள் திறந்த காரணத்தால் எண்கண் எனப் பெயரிடப் பட்டு இன்றளவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப் படுகின்றது. சில்பா சிற்பியோ தம் வாழ்நாள் பூராவும் எண்கண் கிராமத்தில் ஆறுமுகன் சந்நிதியிலேயே தவமாய் இருந்து, உயிர் விட்டதாய்க் கூறுகின்றார்கள். கோயிலில் சில்பா சிற்பியின் சமாதி வன்னிமரத்தடிப் பிள்ளையாருக்கு அருகே காணப்படுவதாயும் கூறுகின்றார்கள்.

"கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி, அனைவருக்கும் சுகமே" என்பதை இந்தக் கதை/ கதையல்ல நிஜம் என்றும் ஒரு சாரார் கூற்று. உணர்த்துகின்றதல்லவா?? முன் பதிவில் நான் பதினெட்டுக் கண்கள் கந்தனுக்கு என்று எழுதி உள்ளேன். வெகு சிலரே அதைக் கவனித்திருக்கின்றனர். ஆறுமுகங்களில் பனிரண்டு கண்களும், நெற்றிக் கண்கள் ஆறும் ஆக மொத்தம் பதினெட்டும் சேர்த்துப் பதினெட்டுக் கண்கள் என்று கூறினேன். இந்தத் தகவலைச் சமீபத்தில் ஒரு சொற்பொழிவில்/புத்தகத்தில்??? சரியாத் தெரியலை, எதிலோ படித்தேன்/கேட்டேன். ஆறுமுகனும், சிவமும் ஒன்று எனவும், சிவனுக்கு உரிய நெற்றிக்கண்கள் ஆறும் ஆறுமுகனுக்கும் உண்டெனவும் படித்தேன். ஆகையால் பதினெட்டுக் கண்கள் என எழுதினேன். 

குமாராய நம: என்ற மந்திரம் பற்றி நண்பர் ஒருத்தர் கேட்டிருக்கின்றார். இந்த ஆறெழுத்து மந்திரத்தைக் கந்த பஞ்சாட்சரம்/ குஹ பஞ்சாட்சரம் என்று சொல்கின்றனர். இந்த மந்திரத்தோடு சிற்சில பீஜாட்சரங்களையும் சேர்த்து, அல்லது சேர்க்காமல் குரு மூலம் உபதேசம் பெற்றே அவர் அருளிய வண்ணமே ஜபிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆகவே இதைப் பற்றி அதிகம் எழுத முடியாது. இதைப் பற்றிய நூல் "ஆறெழுத்து அந்தாதி" கந்தனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆன அகத்தியரால் அருளப் பட்டதாயும் தெரிய வருகின்றது. இப்படி ஒரு புத்தகம் இருப்பதே இப்போத் தான் தெரியும். ஆகவே தெரிஞ்சவங்க சொல்லலாம். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வருடத்தில் மூன்று முறைகள் சூர சம்ஹாரம் நடைபெறுகின்றது. திருத்தணிகையிலேயோ சூர சம்ஹாரமே நடைபெறுவதில்லை. சூரனை சம்ஹாரம் செய்த பின்னார் பகை தணிந்த கந்தன் அமர்ந்த இடம் என்பதால் இம்மாதிரி எனக் கூறுகின்றனர். 

திருச்செந்தூரில் ஆறுமுகன் சிவனைப் பூஜிக்கும் கோலத்திலேயே கையில் மலரோடு காணப்படுவான். சூரனைச் சம்ஹாரம் செய்து முடித்துத் தம் தந்தையாகிய ஈசனைப் பூஜிக்க எண்ணி மலர்களைக் கொண்டுவரச் செய்து, சிவலிங்கம் அமைத்து ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு மலரை இட்டு வழிபட, மெய்ம்மறந்த தேவாதிதேவர்கள், "முருகா, ஆறுமுகா, கார்த்திகேயா" எனத் தம்மை மறந்து கூவ, கையில் மலரோடு கந்தன் திரும்ப அந்தக் கோலத்திலேயே இன்றளவும் காட்சி தருகின்றார் செந்தூராண்டவர். பழநியிலோ தண்டாயுதபாணியாகச் சடைமுடியுடன் காட்சி தருவது தான் உண்மையான கோலம். போகர் வடித்த சிலை கையில் ஞான தண்டத்துடன் கூடிய சடைமுடியுடன் கூடிய ஞான தண்டாயுதபாணியே. ஆண்டிக் கோலம் எல்லாம் பின்னால் ஏற்பட்டதே. இப்போதும் பழநி மலை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும் முன்னால் பார்த்தால் மூல விக்ரஹத்தில் சடைமுடி இருப்பது தெரியவரும் என்று ஆன்றோர் பலரும் சொல்கின்றனர். நாங்கள் பார்க்கும்போது ராஜாங்கக் கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தான்.

Saturday, November 21, 2020

மைய நடம் செய்யும் மயில் வாகனனை! கந்த சஷ்டிப் பதிவுகள்! 7

முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப் பிடி என அந்தச் சிலையைப் பிடிக்கச் சொன்னதே ஊரின் பெயராக அமைந்து இன்று எட்டுக் குடி என விளங்குகின்றது எனச் சொல்கின்றனர். பறக்க ஆரம்பித்த மயிலையும், வேலவனையும் பார்த்து பக்திப் பரவசத்துடன் மக்கள் அனைவரும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே வேலா, எங்களை விட்டுப் போய்விடாதா, கந்தா, கடம்பா எனக் கூவிக் கொண்டே போக, சிற்பியோ தன் உளியை எடுத்து அவசரத்துடனும் பதற்றத்துடனும், பறக்கும் மயிலை நோக்கி வீச, உளிபட்டு பின்னமடைந்த சிலை கீழே இறங்கி நின்றது. சிற்பி கண்களில் கண்ணீருடன் அழகிய சிலையைப் பின்னப் படுத்திவிட்டேனே எனக் கதற, திடீரென சிலையின் பின்னமடைந்த இடம் நேராகி நிற்க, மன்னனும், மக்களும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் விக்கித்துப் போய் சிற்பியைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

பின்னர் சிலையைச் சந்நிதானத்துக்கு எடுத்துப் போய் முறைப்படி அனைத்து வழிபாடுகளும் செய்து கும்பாபிஷேகமும் செய்வித்தான் முத்தரசன். மக்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து சில்பா சிற்பியையும் ஒரு தெய்வமே எனக் கொண்டாட ஆரம்பித்தனர். மன்னனை விடச் சிற்பியின் புகழும், அவருக்கு மரியாதையும் கூடியது. உலகிலேயே இம்மாதிரியான சிற்பி கிடையாது என ஏகோபித்த உணர்வோடு மக்களின் புகழ் சிற்பிக்குக் கிடைக்க மன்னன் மனம் புழுங்கியது. பொறாமையால் வெந்தான். "மன்னன் நான், ஆனால் புகழ் அவனுக்கு! போயும் போயும் ஓர் அற்ப சிற்பிக்கு என் முன்னேயே இத்தனை போற்றுதல்களும், புகழும் போய்ச் சேருகின்றனவே! இது என்ன அநியாயம்?" கொதித்துப் போனான் முத்தரசன். சேவகர்களை அருகே அழைத்துக் காதில் ஏதோ மெல்லச் சொல்ல சேவகர்களே பயத்தில் நடுங்கிப் போனார்கள். 

அவர்களுக்குத் தைரியம் சொன்னதோடு அல்லாமல் இது தன் கட்டளை எனவும் அரசன் என்ற முறையில் ஆணையிட்டான் முத்தரசன். அரசன் ஆணையை மீறும் தைரியம் இல்லாத சேவகர்கள் சில்பா சிற்பியையும் அழைத்துக் கொண்டு அவரின் சிற்ப மண்டபத்துக்குச் சென்றனர். அங்கே அவர் செய்து முடித்திருந்த, செய்து கொண்டிருந்த பல சிற்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் பின்னப்படுத்தி அலங்கோலம் செய்தனர். சிற்பி பதற்றத்தோடு அவர்களைத் தடுக்க வர, சேவகர்களில் சிலர் அவர் கை, கால்களை இறுகக் கட்டிக் கீழே தள்ள, இருவர் அவர் கண்களில் காய்ச்சி வைத்திருந்த கள்ளிப்பாலை ஊற்றினார்கள். துடிதுடித்தார் சிற்பி. கண்களைத் திறக்கவே முடியவில்லை.

"முருகா, ஆறுமுகா, உனக்குப் பதினெட்டு கண்கள் இருந்தும் எனக்கு இந்தக் கொடுமையா?" என்று கதறுகின்றார் சிற்பி. "உன்னைச் சிலையாய் வடித்தது தவிர, நான் செய்த தவறு என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" எனப் புலம்பிய சிற்பி, அப்படியே மயங்கிப் போக அவருக்கு மீண்டும் குமாரன் தோன்றி, "சிற்பியே, மும்முறைகள் என்னை நீர் வடிக்கவேண்டும் எனச் சொன்னது மறந்து விட்டீரா?? எடும் உளியைக் கையில், மீண்டும் நீர் என்னைச் சிலையாக வடிக்கவேண்டும் என்பதை மறந்து, மயங்கிப் போனீரோ?" எனக் கேட்க, " கந்தனே, இது என்ன சோதனை? நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கண்ணிழந்து கிடக்கும் என்னையா உன் சிலையைச் செய்யச் சொல்கின்றாய்? இது என்னப்பா சோதனை?" என்று கதறுகின்றார். 

"உளியைக் கையில் எடும் சிற்பியே! நீர் கையில் எடுத்தால் தாமாய் வேலைகள் நடக்கும். உம் பேத்தி உமக்குத் துணை இருப்பாள்."என்று கந்தவேள் ஆணை இடுகின்றான். மறுநாள் முதல் சிற்பவேலை தொடங்குகின்றது. பேத்தியாக வந்த பெண்ணின் உதவியோடு சிற்பி சிலை வடிக்கத் தொடங்குகின்றார். அவயங்களை அந்தப் பெண் சிற்பியின் கைகளை எடுத்து வைத்து, இங்கே, இங்கே எனக் காட்டிக் கொடுக்க அவ்வாறே சிற்பியும் செதுக்க மெல்ல, மெல்ல கந்தன் உருவாகத் தொடங்கினான். ஆனால் இப்போது சிலை செய்வது முத்தரசன் காதுகளில் எட்டவே கூடாது என மிக மிக கவனமாய்ச் சிலையைச் செதுக்கி வந்தார் சில்பா சிற்பி. பார்த்தாலே தெரியும் வண்ணம் முருகனின் சிறப்பான, 

"பன்னிரு கண்ணும்,பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்" "ஈராறு செவியில் இலகு குண்டலமும்" 

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கையும், கீதம் பாடக் கிண்கிணி ஆட" 

"மைய நடம் செய்யும் மயில்வாகனனை' 

மிக அழகாகவும், அருமையாகவும், ஜீவ சக்தி ததும்பும் வண்ணமும் செதுக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. மெல்ல, மெல்ல சிலை வடிவெடுத்துக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் அங்கே சிற்ப மண்டபத்துக்குச் சிற்பியைத் தேடிக்கொண்டு வந்தார். சில்பா சிற்பியைப் பார்த்து சிக்கலிலும், எட்டுக்குடியிலும் அவர் செதுக்கி வடிவமைத்த சிற்பங்களைப் பார்த்து அதன் அழகிலும், உயிரோட்டத்திலும் மனதைப் பறி கொடுத்துவிட்டதாயும், தாம் சமீவனம்(தற்போது எண்கண், புராண காலத்தில் அஷ்டநேத்திரபுரம்) என்னும் ஊரில் இருந்து வருவதாயும், சில்பியைத் தம்மோடு சமீவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தோடு வந்திருப்பதாயும் தெரிவிக்கின்றார்."முத்தரசனுக்குப் பயந்து பயந்து வாழும் நீர் அங்கே வந்து என்னுடன் இருந்தால் எங்கள் ஊரினுள் இருக்கும் வன்னிமரக் காட்டில் இருந்த வண்ணம் உம் சிற்பப்பணியை நீர் தொடரலாம். உம்மை எவரும் தடுக்க மாட்டார்கள்." என்று அழைக்க, சிற்பி தயங்குகின்றார். ஆனால் பேத்தியாக வந்த பெண்ணோ, அவரைச் சமாதானம் செய்து இது தான் சிறந்தது எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த முருகன் சிலையையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பெரியவரோடு சமீவனம் அழைத்துச் செல்கின்றாள். 


எண்கண் முருகன் கோயில், படத்துக்கு நன்றி விக்கிபீடியா

சமீவனத்தில் சிலையை எந்தத் தொந்திரவும் இல்லாமல் செதுக்க ஆரம்பித்த சிற்பி சில மாதங்களிலேயே பேரழகன் ஆன கந்தன் சிலையை, உயிரோட்டத்துடன் மீண்டும் செதுக்கி முடித்தார். மெல்ல, மெல்ல, சமீவனத்து மக்களுக்கும் இந்தச் செய்தி பரவ, ஊரார் அனைவரும் காட்டுக்குள் வந்து கந்தனைத் தரிசிக்கின்றனர். அப்போது......




Friday, November 20, 2020

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட! கந்த சஷ்டிப் பதிவுகள்! 6

 அதிசயம் ஆனால் உண்மை. பனிரண்டு வருடங்கள் முன்னர் இதை எழுதிய மறுநாள் காலை பொதிகைத் தொலைக்காட்சியில் 6-30 மணிக்கு சிக்கல், எட்டுக்குடி, எண்கண் மூன்று கோயில்களையும் அதன் வரலாற்றையும் கூறிக் காட்டினார்கள். இத்தனை வருஷங்கள் இல்லாமல் திடீர்னு இப்போ நான் எழுத ஆரம்பிச்சதும், இன்று இந்தக் கோயில்களைக் காட்டியதும், அதுவும் சில்பா சிற்பியின் கதையை ஓவியமாய் வரைந்துள்ளதையும் காட்டியதும் பார்த்தால், நேற்று நான் தரவெல்லாம் இல்லைனு சொன்னதால், தரவை அந்த முருகனே காட்டிக் கொடுத்திருக்கின்றான் என்று என் மனதில் தோன்றுகின்றது. சில்பா சிற்பியை சில்பா முனிவர் என்றும் சித்தர் என்றும் போற்றி அவருக்குத் தனிக் கோயில் எழுப்பி வழிபாடுகள் நடப்பதாயும் தெரிய வந்தது. இது எனக்குப் புதிய செய்தி! போயே பார்க்காத கோயில்களைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்திருந்த எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதும், தொலைக்காட்சியில் பார்த்துவிடு என்று முருகன் காட்டிக் கொடுத்திருக்கின்றான். சீக்கிரமாய் நேரே போய் தரிசனம் செய்யவும் அவனருள் துணை நிற்கும். இந்த நினைப்பும், இன்றைய நிகழ்வும் அவன் செயலாலே! இனி கதை தொடரும்.! கதை தெரிந்தவர்கள் நான் செய்யும் தப்பைத் திருத்தவும். தெரியாதவர்கள் பொறுத்துக்கொள்ளவும், வேண்டுகின்றேன்.  பின்னர் நாங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றதும் எட்டுக்குடியில் நம்மவர் கீழே விழுந்ததும், பாதியில் திரும்பியதும் அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எண்கண் போனதும் தனிக்கதை! *********************************************************************************** கனவில் வந்த கந்தன் கலகலவெனச் சிரிக்கின்றான் சில்பியைப் பார்த்து. முருகா, குமரா, என் கதியைப் பார்த்தாயா எனச் சிற்பி அழுது வேண்ட வேண்டும் என நினைத்தால் கைகளோ தொழுகின்றன. குமரன் சொல்கின்றான். "சில்பா சிற்பியே! உளியைக் கையில் எடு. இன்னும் இரு சிலைகள் நீ செய்யவேண்டுமே? இப்படி உறங்கினால் என்ன அர்த்தம்? நானே வியக்கும் வண்ணம் என் சிலையை வடித்த நீ அதேபோல் இன்னும் இரண்டு செய்யவேண்டும் அல்லவா?? என்னை நினை! எடு உளியைக் கையில்! ம்ம்ம்ம்., சீக்கிரம்!, சீக்கிரம்!" என்று அவசரப் படுத்துகின்றான். சில்பிக்குத் தூக்கிவாரிப் போட விழிப்பு வந்துவிட்டது. உடலெல்லாம் வியர்வை வெள்ளம். திகைத்து அமர்ந்தார் சில்பி. கண்டது கனவா? இல்லை நனவா? கட்டை விரல் போய்விட்டது அந்த முருகவேளுக்குத் தெரியாதா? இது என்ன சோதனை! என் அப்பனே, கந்தா, குமரா, கடம்பா, கார்த்திகேயா?? இதுவும் உன் ஆணையா?? முயல்கின்றேன். என்றவாறு ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பகலில் கல்லைத் தேர்ந்தெடுத்து உளியைக் கையில் எடுக்கின்றார் சில்பி.


"தாத்தா, தாத்தா!" என்ற குரல்கேட்க திரும்பிப் பார்க்கின்றார். ஒரு சிறு பெண் ஏழு வயதிருக்கும் நின்று கொண்டிருக்கின்றாள். "நீ யாரம்மா?" எனக் கேட்க," என்ன தாத்தா? என்னைத் தெரியவில்லை? நான் உங்கள் பேத்தி!" என்று சொல்கின்றாள் அந்தச் சிறுமி. "அப்படியா? இந்தத் தாத்தாவிடம் உனக்கு என்னம்மா வேண்டும்?" என்று சிற்பி கேட்க, " நீங்கள் வேலை செய்யுங்கள் தாத்தா, நான் உதவுகின்றேன்." என்று அந்தப் பெண் சிற்பிக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பிக்கின்றாள். சிலை உருவாகத் தொடங்குகின்றது, முத்தரசனுக்குத் தெரியாமல். அவன் கட்டளையை மீறி உருவாகும் சிலை மட்டுமின்றி, சிற்பியும் உயிர் பிழைப்பாரா?? குழப்பம் மேலிடுகின்றது சிற்பிக்கு. ஆனால் அவரால் சிலை வடிப்பதை நிறுத்தவும் முடியவில்லை. அழகன் முருகன் அவர் கைகளில் மெல்ல, மெல்ல உயிர் சிற்பமாய் வடிவெடுக்கின்றான்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

 "பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணியாட" முருகனின் அழகு பார்ப்பவர் கண்களை விட்டுப் பிரிய மறுக்கின்றது. தோள் கண்டார், தோளே கண்டார் என்பது போல் இந்த முருகன் சிலையப் பார்த்தவர்கள் அதன் அழகில் மயங்கி நின்றனர். ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாய் சிலை உருப்பெற்று வந்தது. இனி நல்ல நாள் பார்த்துக் கண் திறக்கவேண்டும். கண் திறந்தால் முருகன் எதிரே வந்து பேச ஆரம்பித்து விடுவான் போல் ஜீவ களை ததும்பிற்று முகத்தில். கண் திறந்தால் அவன் கருணை அந்தக் கண்களில் சொட்டுமே, அதை நம்மால் தாங்க முடியுமா என நினைத்தார் சிற்பி. அது வரையிலும் முத்தரசனுக்குச் செய்தி போகவில்லை. அவனும் தற்சமயம் வேறொரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் இருந்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி என்னும் ஊரில் (தற்சமயம் எட்டுக்குடி என அழைக்கப் படுகின்றது) ஊர் மக்கள் அனைவரும் முத்தரசனிடம் வைத்த விண்ணப்பம் என்னவென்றால், சிக்கலில் முருகன் சந்நிதியை ஏற்படுத்தி, முருகன் விக்கிரஹத்தையும் பிரதிஷ்டை செய்த மாதிரி எங்கள் ஊரிலும், ஆனந்தவல்லி சமேத செளந்தரேஸ்வரர், இருவரும் தங்கள் மகன் ஆன குமாரன் இல்லாமல் தனியே குடி இருக்கின்றனர். அவரையும் குமாரனோடு குடி அமர்த்த வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் சில்பா சிற்பியை வரவழைக்கின்றான் முத்தரசன். அவனுக்குச் சிற்பி சிலை வடித்திருக்கும் விஷயம் தெரியாது. ஆகவே அவரிடம் உங்கள் வழிகாட்டுதலுடன் மற்ற சிற்பிகள் சிலை வடிக்கட்டும், தாங்கள் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்க, ஆவலை அடக்க முடியாத சிற்பியோ தான் ஏற்கெனவே செதுக்கிய சிற்பத்தைப் பார்வையிடுமாறும், அந்தச் சிலையைக் காஞ்சிரங்குடி என்னும் எட்டுக் குடியில் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் எனவும் கூற, மன்னனுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. "என்ன? உங்கள் கட்டை விரலை நான் எடுத்தும், சிற்பம் செதுக்கி இருக்கின்றீர்களா?" என திகைத்துப் போய்க் கேட்ட மன்னன், உடனேயே சிற்பியின் குடிலுக்குச் சென்று சிலையைப் பார்க்கின்றான். "ஆறிரு தண்புயத்தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து" நின்ற அழகிய வேலன், சிங்காரவேலனையும் தோற்கடிக்கும் அழகோடு நின்றான். கண்கள் திறக்கவேண்டியதுதான் பாக்கி. சிற்பியைப் பார்த்து, முத்தரசன், சிலைக்கு விழி திறந்து காஞ்சிரங்குடியில் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றான். சிற்பியோ கையைப் பிசைந்தார். "மன்னா, சிலையில் ஜீவ ஓட்டம் ததும்பி நிற்கின்றது. கண் திறப்பது என்பது சாமானியமான வேலை இல்லை. மயிலோடு முருகன் பறந்துவிடுவானே? எனவே நான் சிலைக்குக் கண் திறக்கும் முன்னர் தாங்கள் சிலையைச் சங்கிலி போட்டுப் பிணைத்துக் கட்டுங்கள்." என்று வேண்டுகின்றான்.

முத்தரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன சிற்பியாரே? என்ன நினைத்துக் கொண்டீர்கள்? சிலையாவது? பறப்பதாவது?? நீங்கள் என்ன உங்களை அவ்வளவு பெரிய ஆளென நினைத்துக் கொண்டீரோ?? சிற்பக்கலையில் வல்லுனர் என்றால் நீங்கள் வடித்த சிலைக்கு உயிர் வந்து ஓடிவிடும் என்று சொல்லுவதெல்லாம் அதிகம் என உங்களுக்கே தோன்றவில்லை?" என்று ஏளனம் செய்தான் முத்தரசன்.. சிற்பியும் இதற்கு மேல் மன்னன் ஆணையை மீற முடியாமல் சிலைக்குக் கண்கள் திறக்க அருகில் சென்றார். கண்களைத் திறக்கும் முன் செய்யவேண்டிய முறைப்படி, சிலையின் உடல்பாகத்தின் ஒன்பது இடங்களில் வழிபாடுகள் முறையாக நடத்தி பொன் ஊசியால் ஒளி மண்டலம், விழி மண்டலத்தை விளங்கச் செய்து, முறைப்படி கண்களைத் திறக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. முருகன் சிலை திடீரெனக் குலுங்க ஆரம்பித்தது. மயில் தன் தோகையை விரிப்பதை அனைவரும் காண முடிந்தது. உயிரோட்டம் மிகுதியாக மயிலுடன் ஆறுமுகன் விண்ணில் பறக்கத் தொடங்கினார். முத்தரசனோ செய்வதறியாது, "எட்டிப் பிடி, எட்டிப் பிடி, எட்டிப் பிடி!" எனக் கூவினான்.

Thursday, November 19, 2020

கற்றதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! கந்த சஷ்டிப்பதிவுகள்! 5

 இப்போது குறிப்பிடப் போகும் கதை தெரிந்தவர்கள் இருக்கலாம், எனக்கு இதன் ஒரு பகுதி மட்டுமே சிறிய வயதில் அறிந்திருக்கின்றேன் வாய்மொழியாக. இந்தக் கதையை நான் படிச்சது 4,5 வருஷத்துக்கு மேல் இருக்கும்.   . வடிவேலனைக் கல்லில் வடித்த ஒரு சிற்பியைப் பற்றிய கதை இது. செவிவழிச் செய்தியாகவே சொல்லப் பட்டு வருகின்றது. ஆகவே யாராவது "தரவு"னு கேட்டுட்டு வந்தால், தரவே மாட்டேன் என்பதையும் சொல்லி விடுகின்றேன். ***********************************************************************************சோழநாட்டு அரசர்கள் அனைவருமே சைவப் பற்றுடையவர்கள். ஈசனிடம் பற்றுள்ளவர்களுக்கு அவர் குமாரனிடம் பக்தி இல்லாமல் போகுமா? குறைவின்றி நிறைவாகவே இருந்து வந்த சமயம் அது. இந்தக் கதை நடந்த காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி புரிந்து வந்தது என்றும், அதன் கீழ் கப்பம் செலுத்தி வந்த சோழச் சிற்றரசன் என்றும் சொல்லுவாருண்டு. ஆன்மீகக் காவலர்கள் ஆன சோழச் சிற்றரசர்களில் ஒருவன் ஆன முத்தரசன் என்பான் அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். ஒருமுறை அவன் சிக்கலில் ஈசனைத் தரிசனம் செய்ய வந்திருக்கின்றான். அதுவரையிலும் சிக்கிலில் ஈசன் மட்டுமே கோயில் கொண்டிருந்ததாயும் சொல்கின்றனர். சிக்கிலுக்கு வந்த முத்தரசன் ஈசனின் வரலாற்றைக் கேட்டறிந்தான். வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணையை லிங்கமாய்ப் பிடித்து வைத்துப் பூஜை செய்து வந்ததையும், அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்ற பலராலும் முடியாததையும் லிங்கம் மண்ணில் சிக்கிக் கொண்டதாலேயே ஊருக்கும் சிக்கில் எனப் பெயர் வந்ததையும் கேட்டறிந்த முத்தரசன் உணர்ச்சி மேலிட்டுப் பல மானியங்களை ஒதுக்கினான் கோயிலுக்கு. 

அந்தக் கோயிலில் சிவ குமாரன் கோயிலில் இல்லை என்பதையும் அறிந்துகொண்டு சிங்காரமாய், அழகாய், நேர்த்தியாய் ஒரு வேலனை வடிக்கச் செய்து அங்கே பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டான் மன்னன். மன்னனின் ஆட்கள் சிற்பிக்காக அலைந்து, திரிந்து வெண்ணாற்றின் கரையில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தன்னந்தனியே சிலைகள் வடித்துக் கொண்டிருந்த ஒரு சிற்பியைக் கண்டார்கள். சிலைகளின் அழகோ பிரமிக்க வைத்தது. சிலையா அல்லது உயிருள்ள தெய்வமா என்று எண்ணும்படிக்கு ஜீவசக்தி ததும்பிக் கொண்டிருந்தன சிற்பங்களில். சிற்பியின் நெற்றியில் திருநீறு, மார்பில் உத்திராட்ச மாலை. பார்த்தாலே கை எடுத்துத் தொழவேண்டிய தோற்றம். சிற்பியா, இல்லை சிவனடியாரா?? முத்தரசனிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிற்பியைக் கண்டதும் ஈசனே சிற்பி வடிவில் வந்து விட்டானோ என்று முத்தரசனுக்குச் சந்தேகம். என்றாலும் அவனிடம் தன் வேண்டுகோளை வைக்கின்றான் முத்தரசன். 


சிற்பி சொல்கின்றான்:" மன்னா! நாங்கள் முருகனடிமைகள். பரம்பரைச் சிற்பிகளும் கூட. என்னைச் "சில்பா சிற்பி" என்றே சொல்லுவார்கள். பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும், முருகனின் கருணையாலுமே அவன் உருவை வடிவமைக்கும் வாய்ப்பைத் தாங்கள் எனக்களிக்கின்றீர்கள். தங்கள் சித்தம் போல் மயிலோனை அனைவரும் வியக்கும் வண்ணம் சிங்காரமாய் வடிவமைக்கின்றேன்." என்று உறுதிமொழி கொடுக்கின்றார் சில்பா சிற்பி. நாட்கள் பறக்கின்றன. அருமையான கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்ப வேலையை ஆரம்பிக்கின்றார் சிற்பி. ஒருநாள் அவர் கனவில் ஆறுமுகன் தோன்றி, " நீ என்னை இந்த ஆறுமுகக் கோலத்தில் பனிரண்டு கைகளுடனேயே உருவாக்கு!" என்று கட்டளை இட, அவ்வாறே உருவாக்கத் தொடங்கினார் சிற்பி. வலக்கைகளில் சக்திவேல், கதை, கொடி, தண்டு, அம்புடன் கூட மற்றொரு வலக்கரத்தில் அபய ஹஸ்தமும், இடக்கைகளில் வஜ்ரம், பத்மம், கடகாஸ்தம், சூலம், வில், வரத ஹஸ்தமும் கொண்டு அழகை அள்ளிச் சொரியும்படியான சுந்தர வடிவேலனை மயில் வாகனத்தில் வடித்தார் சில்பா சிற்பி. 

பார்த்தவரைப் பித்துப் பிடிக்க வைத்தான் ஆறுமுக வேலன். மயிலோடு பறந்துவிடுவானோ என நினைக்கும் வண்ணம் ஜீவன் ததும்பி நின்றது சிலையில். கண்களின் அழகைச் சொல்லுவதா? புன்முறுவலைச் சொல்லுவதா? கைகளின் வடிவைப் பாராட்டுவதா? மயில் சிற்பமா? உண்மையான மயிலா? என்னும்படிக்குச் சிற்பம் அனைவரையும் திகைக்கவும், பிரமிக்கவும் வைத்தது. மக்கள் மன்னனைப் பாராட்டுவதா? சிற்பியைப் பாராட்டுவதா எனத் தெரியாமல் மயங்கி இருவரையும் மனதாரப் பாராட்டி இத்தகையதொரு சிற்பத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்று சொன்னார்கள். ஜெயகோஷங்கள் முழங்கின. ஒரு நன்னாள் பார்த்துக் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்தான் முத்தரசன். நன்னாளில் குடமுழுக்கையும் நடத்தி ஆறுமுகனைச் சிக்கில் கோயிலில் பிரதிஷ்டையும் செய்வித்தான். ஊரெங்கும் கொண்டாட்டம், கோலாகலம், ஆனந்தத் திருவிழா! மக்கள் மனதில் மகிழ்ச்சி! ஆனால் மன்னனுக்கோ மனதில் ஏதோ குழப்பம்! வேகம், என்ன என்னவோ கணக்குகள். என்னவோ எண்ணங்கள். 

சிற்பிக்கு மன்னன் என்ன பரிசு கொடுக்கப் போகின்றானோ என்று மக்கள் பேசுவதும் அவன் காதில் விழுந்தது. சிற்பியை அரசவைக்கு வரவழைத்தான். அரசவையில் பெருங்கூட்டம். அனைவரும் மன்னன் அளிக்கப் போகும் பரிசையும், பாராட்டுச் சொற்களையும் எதிர்பார்த்துக் குழுமி இருந்தார்கள்.சிற்பி வரவழைக்கப் பட்டார். மன்னன் தரப்போகும் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சிற்பியும். மன்னனும் சிற்பியைப் புகழ்ந்தான், இது போன்ற சிற்பம், எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரழகுப் பெட்டகம் ஆன சிங்காரவேலன் சிலையைச் செதுக்கியதன் மூலம் தன் உள்ளத்தைச் சிற்பி குளிர்வித்து விட்டதாயும் கூறினான். இன்னொரு உதவியையும் செய்யவேண்டும் என்றும் கேட்டான். மற்றொரு சிற்பமோ என சிற்பி ஆவலுடன் காத்திருந்தான். முத்தரசன் கூறுகின்றான்:" சில்பா சிற்பியே! இத்தனை தத்ரூபமாய் முருகன் சிலையை வடிவமைத்த நீர் இனி எந்த மன்னனுக்கும் இதே போல் எந்தக் காலத்திலும் முருகன் சிலையை மட்டுமல்ல, எந்தச் சிலையையும் வடிக்கக் கூடாது. முத்தரச மன்னன் மட்டுமே முருகப் பெருமானைப் பேரழகுடனும், பொலிவுடனும் படைத்தான் என வரலாற்றில் என் பெயர் நிலைத்து நிற்க வேண்டும். ஆகவே" என நிறுத்தினான் மன்னன். 

அடுத்து வரப்போவதை எதிர்பார்த்துச் சிற்பி காத்திருக்கையில் மன்னன் கண்ணசைவில் சில வீரர் சிற்பியை நெருங்கினார்கள். சிற்பியை இருவர் இறுக்கிப் பிடித்துக் கொள்ள மற்றும் இருவர் அவர் வலக்கைக் கட்டை விரலை வெட்டப் போனார்கள். சிற்பி பயத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்து போய் மன்னனைக் கெஞ்சினார். " கட்டை விரலை வெட்டவேண்டாம் என. கட்டை விரல் இல்லை எனில் உளியைப் பிடிப்பது எவ்வாறு?? அதற்கு என் உயிரை எடுத்துக் கொள்." என்றும் சொல்லிப் பார்த்தார், மன்னன் மனம் இரங்கவில்லை. இந்தப் பெருமை யாவும் எனக்கே வந்து சேரவேண்டும் என்ற அவன் காவலரை நோக்கி," அஞ்சாதீர்கள் கட்டை விரலை வெட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் மன்னன் கட்டளைக்கிணங்கி சில்பா சிற்பியின் கட்டை விரலை வெட்டினார்கள். சிற்பி துடிதுடித்தார். உடல்வேதனையும், மனவேதனையும் தாள மாட்டாமல், "முருகா, உன் பேரழகைச் செதுக்கிய எனக்கு நீ கொடுத்த பரிசா இது?" என கண்ணீருடன் கலங்கி, சோகம் தாங்க முடியாமல், சோர்ந்து போய் உறங்க மீண்டும் கனவில் வந்தான் சிங்காரவேலன், முகம் கொள்ளாத புன்னகையுடன்.

Wednesday, November 18, 2020

முத்துக்குமரா என்று அழைக்கவா! கந்தசஷ்டிப் பதிவுகள்! 4

 கதை பற்றி துரை அவர்கள் ஆதாரமில்லை என்கிறார். ஆனால் இந்தக் கதையைப் பலரும் சொல்லிக்கேட்டிருக்கேன்.  அந்த அந்தக் கோயில்களிலும் இது வழங்கப்படுகிறது. ஆகவே இந்தக் கதையை நாளையிலிருந்து வழங்கப் போகிறேன். இது செவிவழிக் கதையாகவே பரவி வருகிறது. ஆகவே யாரேனும் "தரவு" எனக் கேட்டால், "இல்லை" என்பதே பதில். இப்போது இன்றைய பதிவைப் படிக்கலாம். கதைக்கு நாளை வரை பொறுத்திருக்கவும்.

***********************************************************************************


** குமாரன்= என்றால் சிவ, சக்தி ஆகியோரின் அருளால் வெளிப்பட்டவன் என்று ஒரு பொருள் ஆன்றோர் வாக்கில் சொல்கின்றனர். ஷரவணப் பொய்கையை அம்பிகையின் அம்சம் என்றும், கங்கையானவள் அந்தப் பொய்கையில் ஈசனின் வீரியத்தைக் கொண்டு சேர்த்ததால் சிவ சக்தி ஐக்கியத்தில் சர்வலோகத்துக்கும் அன்னை, தந்தை ஆனவர்களின் புத்திரன் என்பதாலும் குமாரன் என்று சொல்வதுண்டு என்று பரமாச்சாரியார் கூறுகின்றார். முதன்முதலாய்க் கந்தன் புராணத்தைக் "குமார சம்பவம்" என்று வால்மீகியே ராமாயணத்தில் பால காண்டத்தில் கூறி இருக்கின்றார். கு= என்ற சொல்லுக்கு அக்ஞானம், (ஆணவம், மலம், கன்மம்) இம்மூன்றில் உள்ள மலம் என்றும் கொள்ளலாம். மாரன்= என்றால் அழிப்பவன். நம் ஆணவத்தை அழிப்பவன். நம் கர்மாவை அழிப்பவன். நம் மலத்தை அழிப்பவன். அனைத்து உயிர்களின் மலப்பிணிகளை அழித்து ஒழிப்பவன் என்று கொள்ள வேண்டும். 

நம்மை அழிக்காமல், தன் வேலாயுதத்தால் காத்து ரட்சித்து நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழித்து ஞானத்தைப் பிறப்பிக்கின்றவனே குமாரன். இந்தக் குமாரன் என்ற பெயரை வைத்தே ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதங்களில் உள்ள கெளமாரம் பிறந்தது. வடநாட்டில் குமாரன் என்றாலே கார்த்திகேயன் ஒருவன் தான். அங்கே இவன் நைஷ்டிக பிரம்மச்சாரி. புனே நகரில் உள்ள பார்வதி மலையில் கந்தன் தவக்கோலத்தில் அன்னையிடம் வேல் வாங்கும் முன்னர் தவம் புரிவதாயும் அங்கே பெண்கள் செல்லக் கூடாது என்றும் இன்றளவும் இருக்கின்றது. பார்வதியைத் தரிசித்து விட்டு மேலே போய்க் குமாரனைத் தரிசிக்க வேண்டும். பார்வதியையும் மலை ஏறியே தரிசிக்க வேண்டும். அன்னை அங்கே குமாரனுக்கு அருள் தர ஆயத்தமாய் இருக்கின்றாள். மேலே கார்த்திகேயன் இருக்குமிடத்துக்கு ஆண்கள் மட்டுமே செல்லலாம். இந்தக் குமாரனே குமாரஸ்வாமியாகவும் ஆகின்றான். குமரனாகவும் ஆகின்றான்.

ஸ்கந்தன் எப்படித் தமிழில் கந்தன் ஆனானோ அப்படியே குமாரனும் தமிழில் குமரன் ஆகின்றான். அடுத்து ஷரவணபவ. ஷ=மங்கலம் என்ற பொருளிலும், ர= ஒளி என்ற பொருளிலும், வ= சாத்வீகம், என்ற பொருளிலும், ண= போர், யுத்தம் என்ற பொருளிலும், பவன்= என்றால் தோன்றியவன், உதித்தவன் என்ற பொருளிலும் வருகின்றது. நம் ஷண்முகன் பிறக்கும் முன்னரே தேவசேனாதிபதி அவன் தான் என்பது தீர்மானம் ஆயிற்றே. பிறக்கும் முன்னரே அவனுக்குரிய பதவியைத் தீர்மானித்தாயிற்றல்லவா. அது மட்டுமா??? எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான். ச= என்ற சொல்லுக்கு மகா லட்சுமி என்ற பொருளும் உண்டு. ர= என்றால் வாக் தேவி, சரஸ்வதி, வ= என்றால் ஆரோக்கியம், அந்த ஆரோக்கியம் தரும் வீரம் என்ற பொருளில் வரும். இந்த ஆறெழுத்து மந்திரத்தைத் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தோமானால் கந்தன் கருணையால் அவன் வேல் நம்மைக் காத்து அரணாக நிற்கும். 

கதை இல்லையேனு பார்த்துட்டுத் திரும்பப் போயிடாதீங்க, கதை ரொம்ப நீஈஈஈஈஈளம். அதான் சுருக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு பகுதியாய்ப் போடறேன், நாளையில் இருந்து.