எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 31, 2015

இறைவன் இருக்கின்றான்!

கடவுள் தன்னோட இருப்பை மீண்டும் மீண்டும் காட்டி வருகிறார். பலமுறை உணர்ந்து அனுபவித்தாலும் முதல் முதல் மும்பை சென்றபோது அந்த அதிசயத்தை எங்கள் குடும்பமே உணர்ந்தது.

 இங்கே
 இங்கே
 இங்கே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். திக்குத் தெரியாத காட்டில் இருந்த எங்களை, வழி தெரியாமல் தொலைந்து போக இருந்த எங்களை அப்படியே சற்றும் அலுங்காமல், குலுங்காமல் குடும்பத்திடம் ஒப்படைத்தார் கடவுள்!  அதன் பின்னர் எங்கள் மகள் திருமணத்தின் போது பையருக்கு அடிபட்டுப் பிழைத்தது இன்னொரு அதிசயம்.
 இங்கே
இங்கே
இங்கே
மேற்கண்டசுட்டிகளில் பார்க்கலாம்.  அது போன்றதொரு நிகழ்வு இந்த வார ஆரம்பத்திலும் நடந்தது.   யு.எஸ்ஸில் இருக்கும் பையருக்குப் பக்கத்து மாநிலத்தின் நியூ ஆர்லியன்ஸில் ஒரு திட்ட நிறைவுக்காக வாராவாரம் நான்கு நாட்கள் போக வேண்டும். முதல்நாள் இரவிலிருந்தே மழை கொட்டிக் கொண்டு இருந்திருக்கிறது. மழை என்றால் அப்படி ஒரு மழை! என்றாலும் பையர்  எப்போதும் போல் இந்த வாரமும் செவ்வாய்க்கிழமை அதிகாலை கிளம்பி இருக்கிறார். வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள ஃப்ரீவே எனப்படும் நெடுஞ்சாலையை அடைகையில் ஒரு திருப்பத்தில் திரும்புகையில் அங்கே தேங்கி இருந்த தண்ணீரின் காரணத்தால் சறுக்கி இருக்கிறது. நெடுஞ்சாலையில் போக வேண்டிய குறைந்த பட்ச வேகத்தில் போய்க் கொண்டிருந்தவரால் வண்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. வண்டி சக்கரம் போலச் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. மிகவும் முயற்சி செய்து கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது அது கொஞ்சம் பின்னால் போய் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி இருக்கிறது.

மோதிய வேகத்தில் பின்பக்கம் முழுதும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. நல்லவேளையாக முன் பக்கமாய் ஏதும் ஆகவில்லை.  அப்படி ஆகி இருந்தால் பையர் பிழைத்திருப்பதே கஷ்டம்! அதோடு அந்த நேரம் அந்த வழியில் வேறு வண்டிகளும் ஏதும் வரவில்லை. வேறு வண்டி ஏதானும் அதே வேகத்தில் வந்திருந்தால் பெரிய மோதல் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக அப்போது வண்டி ஏதும் வரவில்லை.  இதுவும் இறை அருளே!  இது இன்னொரு அதிர்ஷ்டம். வண்டி சுக்கு நூறானதோடு போச்சேனு கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். பணம் போனால் சம்பாதிக்கலாம். உயிருக்கு ஹானி ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய முடியும்! கண்ணுக்குத் தெரியாத கடவுள் அங்கே பிரத்தியட்சமாக ஆகிப் பையரைக் காப்பாற்றி இருக்கிறார். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த எத்தனையோ அதிசயங்களில் மிகப் பெரிய அதிசயம் இது தான். தன் இருப்பை ஒவ்வொரு கணமும் இறைவன் நிரூபித்து வருகிறான். இறைவனுக்கு நன்றி.  எந்த உருவிலாவது வருவான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. 

Wednesday, May 27, 2015

நான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத்தேன்!

 பள்ளிக்குப் போகும் நாட்களிலே திடீர்னு அம்மா தன்னோட பிறந்த வீட்டுக்குத் தங்கை பிரசவத்துக்கு உதவிக்குப் போக நமக்குச் சமையல் வேலை பிடித்துக் கொண்டது. முதல்நாள் சமைக்கிறச்சே அப்பா வெண்கலப்பானைக்குப் போட வேண்டிய அரிசித் திட்டத்தைச் சொல்லிட்டு, வத்தல் குழம்பு வைத்துக் குட்(கொட்டு) ரசம் வைக்கச் சொன்னார்.  எங்க அப்பா வீட்டில் கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் ஆயிடுச்சு.  மாத்திக்க முடியலை, விட்டுடுங்க!

அந்த வருஷத்திலே இருந்து தான் ஸ்கூல் பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகப் பணமும் கட்டி இருந்தது. ஏழரைக்கு, பாம், பாம், பாம் னு பஸ் வந்து குரல் கொடுக்கும்.  அதுக்குள்ளே சமைச்சுட்டுக் கிளம்பணும்.  என்ன?  வயசா? வயசெல்லாம் கேட்காதீங்க!  சின்ன வயசு என்பதால் திருஷ்டிப் பட்டுடும். ஆனால் நான் சமைக்க ஆரம்பிச்சு கோல்டன் ஜூபிளி கொண்டாடிட்டு இருக்கேன் இப்போ.  ஸ்கூலுக்கு லேட்டாவும் போக முடியாது. கிரவுண்டைச் சுத்தி ஓடணும்.  கிரவுண்ட் சும்மா ஒரு 2,3 மைலுக்குள் தான் இருக்கும்.

ஆகவே காலம்பர சீக்கிரமே எழுந்து, {ம்ஹூம், அதெல்லாம் எழுப்பி விடற வேலையெல்லாம் கிடையாது, நாமே தான் எழுந்துக்கணும், இப்போ அதே பழக்கத்தில் தானே முழிச்சுக்க வந்தாச்சு என்றாலும் ஒரு ஆறு மாசமாக் காலம்பர எழுந்துக்க முடியலை.  ஐந்தரை ஆயிடுது பல நாட்கள்! :(} அதை விடுங்க.  சீக்கிரமா எழுந்து பள்ளிப் பாடங்களை முடிச்சுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு,உலர்த்திட்டு வந்து சமைக்கணும்.  குளியலறை ஒன்றே ஒன்று.  நாலு குடித்தனங்கள்.  ஒரு வீட்டில் குறைந்தது நான்கு நபர்கள்.  எல்லோருக்கும் காலை அவசரம். அதிலே தான் குளிச்சுத் துவைச்சாகணும்.

எல்லாம் முடிச்சுச் சமைக்க வந்தாச்சு.  சாதம் வடிச்சாச்சு ஒரு குமுட்டியிலே. இன்னொரு குமுட்டியிலே ரசமும் வைச்சேன்.  புளி போடுவாங்களானு சந்தேகம்! எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.  அவங்களோட வழிகாட்டுதலின் பேரில் ரசத்துக்கும் புளி உண்டுனு தெரிஞ்சது.  குழம்புக்கும் புளி கரைக்கணுமாமே!  அதையும் கரைச்சு வைச்சாச்சு! ரசம்  சின்னக் குமுட்டியில் ஆகி விட்டது.  அதிலேயே கல்சட்டியைப் போட்டுக் குழம்பு வைக்கணும்.  பெரிய குமுட்டியில் காய் பண்ணியாகணும்.  அதுக்குள்ளே ஸ்கூல் பஸ் பாம் பாமெனக் கத்த, இப்போ வரலை, அடுத்த ட்ரிப்புக்கு வாங்கனு டிரைவர் கிட்டே கூடத்தில் குடி இருந்த மாமியை விட்டுச் சொல்லச் சொல்லிட்டுக் காயைப் பெரிய குமுட்டியில் போட்டுவிட்டு, சின்னக் குமுட்டியில் போட்டிருந்த கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்க ஆரம்பித்தேன்.

என்னென்ன தாளிப்பாங்க?  சரியாத் தெரியலை.  எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் தாளிப்போம்னுட்டுப் பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கேட்காமலேயே கடுகு, உபருப்பு, கபருப்புனு எல்லாத்தையும் போட்டு சுண்டைக்காய் வத்தலையும் போட்டு நிறைய மிளகாய் வத்தலையும் போட்டுத் தாளிச்சுட்டேன்.  புளிக்கரைசலையும் ஊத்தியாச்சு.  உப்பும் போட்டாச்சு.  ஆனாலும் குழம்பில் நிறம் வரலை.  ஹிஹிஹி, பொடி போடணும்னு தெரியலை.  எங்க வீட்டிலே ரசப்பொடினு தான் பண்ணுவாங்களா.  அது ரசத்துக்கு மட்டும்னு நினைச்சுட்டேன். நிறத்துக்காக மஞ்சள் பொடியைப் போட்டுட்டேன்.  குழம்பும்கொதிச்சது.  கீழே இறக்கிட்டு அவசரம் அவசரமாச் சாப்பிட்டுட்டுப் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க நேரு பிள்ளையார் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

பள்ளியிலே குழம்பே நினைவில் இருந்தது.  எப்படி இருந்ததோ என்னமோனு!  சாயந்திரமா வந்தால் ஒரே பாராட்டு மழை.  புளிக்காய்ச்சல் மாதிரி இருந்ததுனு. அப்ப்பாடா!   பெருமூச்சு விட்டுட்டுத் தப்பிச்சுண்டேன். மெதுவாப் பக்கத்துப் போர்ஷன் மாமியிடம் மாமி அம்மா வைக்கிறாப்போல் குழம்பு இல்லையே என்ன காரணம்னு கேட்டால் அவங்க எப்படி வைச்சேனு கேட்டுட்டு அப்புறமாச் சொல்றாங்க பொடி போடணும்னு.  மி,வத்தல் ஒண்ணோ, ரெண்டோ தாளிச்சால் போதுமாம்!  ஹிஹிஹி, அதுக்கப்புறமா என்னதான்குழம்பு வைச்சாலும் அந்த முதல் குழம்பு மாதிரி இல்லைனே அப்பா சொல்லுவார்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. அல்லது போனால் போகட்டும்னு விட்டாரோ தெரியலை!  :)))))))

இந்தப் புராணம் இப்போ எதுக்குனு கேட்கிறீங்களா?  நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன்.  நிறைய மிவத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது.  பொடியும் போட்டேன்.  கொஞ்சமாக.



நேத்திக்குக் குழம்பே வைக்கலை. கடைசிப் பத்தி இந்தப் பதிவை எழுதினப்போ போட்டது. நேத்திக்கு வெஜிடபுள் சாதம் பண்ணிட்டேன். குழம்பு வைச்சால் மிஞ்சிப் போகுது! :( அதனால் குழம்பே வைக்கலை. மசாலா சாமான்களில் வெறும் ஏலக்காயும், கிராம்பும் மட்டும் போட்டே வெஜிடபுள் சாதம் பண்ணலாம். வெங்காயம் கூடச் சேர்க்கணும்னு இல்லை. :))))

இது ஒரு மீள் பதிவு! சிநேகிதி ஷோபாவுக்காக!

Sunday, May 24, 2015

ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம் வாங்கறீங்களா? கொஞ்சம் யோசிங்க.

ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை னு சொல்வாங்க. ஆனால் இது வெறும் வழக்குமொழியாக மட்டுமே இருக்குமோனு சந்தேகமா இருக்கு.  சில நாட்கள் முன்னர் சீனாச் சட்டி வாங்க ஶ்ரீரங்கம், கும்பகோணம் என அலைந்தேன். ஶ்ரீரங்கத்திலாவது கோயில் கடைகளில் கிடைக்கும். புரிஞ்சுக்கவும் புரிஞ்சுக்கறாங்க. அந்தச் சட்டி ரொம்பச் சின்னது என்பதால் நான் வாங்கலை. ஆனால் கும்பகோணத்தில் சீனாச்சட்டினா என்னனு கேட்டாங்க! தலையிலே அடிச்சுக்காத குறையாய் திரும்ப வந்துட்டோம். வீட்டிலே இருக்கிறது ரொம்பப் பெரிசா இருக்கு! தூக்கவே முடியலை. சரி, இப்போச் சீனாச் சட்டிப் புராணம் எதுக்குனு கேட்கிறீங்களா?

வீட்டிலே தினம் ரசம் வைச்சுட்டு இருந்த ஈயச் செம்பு/கிண்ணம் பல வருஷங்கள் ஆனதாலே தேய்ந்து போச்சு. அதைப் போட்டுட்டுப் புதுசு வாங்கலாம்னா ரங்க்ஸுக்குக் கும்பகோணத்தில் தான் வாங்கணும்னு. தினம் தினம் ரசம் சரியா இல்லாமல் வாழ்க்கையே ரசமின்றிக் காணப்படவே பொறுக்க முடியாமல் நேத்திக்குத் திருச்சிக்குப் போய் ஈயச் செம்பு வாங்கலாம்னு போனோம். அங்கே பல பாத்திரக் கடைகளிலும் ஈயப் பாத்திரம் இருக்கானு கேட்டதும், உடனே ஆஹா! இருக்கேனு பதில் வந்தது. சரினு போனால் அவங்க காட்டினது அலுமினியப் பாத்திரங்களை. இது தான் ஈயம்னு சத்தியம் வேறே செய்யறாங்க. அவங்களுக்குப் புரியறதுக்காக ரசம் வைக்கிற செம்புனு கூடச் சொல்லிப் பார்த்தோம். இதிலேயும் ரசம் வைக்கலாமேனு பதில் வருது. இன்னும் கொஞ்ச நாட்களிலே இதை எல்லாம் பொருட்காட்சியில் கூடப் பார்க்க முடியாதுனு நினைக்கிறேன். :( மக்கள் நாகரிகத்தில் மிதமிஞ்சி விட்டார்கள் போல! :)

கோட்டையில் உள்ள பிரபலமான எல்லாக் கடைகளுக்கும் போனோம். எல்லோருக்கும் ஈயம்னா அலுமினியம் என்று தான் புரிதல் இருக்கு. ஒரு கடையிலே ஈயப்பாத்திரங்களே இல்லைனு ஒரு வழியாச் சொல்ல இன்னொரு கடையிலே  நான் கொண்டு போயிருந்த பழைய ஈயக் கிண்ணத்தைக் காட்டிக் கேட்டதும், அங்கே நுழையும் இடத்திலேயே இருக்குனு சொன்னாங்க. அப்பாடினு ஒருவழியா வந்து பார்த்தால் ஈயச் செம்பு//கிண்ணங்கள் இருந்தன! ஆனால் ரொம்பப் பெரிதாக இருந்தது. அவ்வளவு பெரிசை வைச்சுட்டு என்ன செய்யறதுனு புரியாமல் வாங்காமல் வந்துட்டோம். அப்புறமா வேறே ஒரு கடைக்குப் போய்ப் பார்த்தோம். அங்கே நாங்க கேட்ட அளவுக்குக் கிடைத்தது. எங்களோடதைப் போட்டுட்டுப் புதுசு வாங்கினோம் முதலில் பார்த்த கடையில் எங்களோடதைக் குறைந்த விலைக்குத் தான் எடுத்துக்கறதாச் சொன்னாங்க.  அதோட அவங்க கொடுக்கும் செம்பு விலையும் அதிகம். நாங்க இங்கே வாங்கினதை விட 300 ரூ அதிகம். எடை என்னமோ அங்கேயும் இங்கேயும் ஒரே எடை தான். அளவு தான் பிரபலமான கடையில் பெரிசாக இருந்தது. இங்கே அளவு சின்னது ஆனால் அதே எடையில் கனமான கிண்ணம்.


எதுக்கு இத்தனை விலாவரியாகச் சொல்றேன் என்றால் பெரிய கடைகள் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று வாங்குகின்றனர். அவங்க இம்மாதிரி ஒரு பாத்திரத்திலேயே 200 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்கிறாங்க. அதோடு பழைய சாமான்களை எடுத்துக்கறதில் வேறே எங்களோட கிண்ணம் பிர்பலமான கடையில் 180 கிராமே காட்ட அரை மணி நேரத்துக்கெல்லாம் இன்னொரு சின்னக்  கடையில் 210 கிராம் காட்டுது. நிஜம்மாவே ஆச்சரியமா இருந்தது. இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்காமல்  நாமளும் கேள்வி கேட்காமல் வாங்கிட்டு வரோம். நம்ம முகத்திலே தான் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கே! பிரபலமான கடைகளுக்குக்கூடிய வரை போகாமல் இருப்பதே நல்லது! ஆனால் யார் கேட்கப்போகிறாங்க! யாரும் இல்லை. :)

இதே போல் தான் தங்கத்திலும் இருக்கும்! :) அதிலும் இந்த சேதாரம்னு ஒண்ணு போடறாங்களே! அதை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிடறாங்க. விபரம் தெரிந்து  நாம் தட்டிக் கேட்டாலும் ஒத்துக்கிறது இல்லை.

*************************************************************************************

இன்றைய தினசரியில் முன்னாள் டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீக்ஷித்தின் பேட்டி வெளி வந்திருக்கிறது. அவங்க முதலமைச்சரா இருந்த காலத்தில் நான்கு துணை நிலை ஆளுநர்களைப் பார்த்திருக்காங்க. யாருடனும் இப்படி மோதல் இல்லையாம். துணை நிலை ஆளுநர் தனக்கு உட்பட்ட அதிகார எல்லையில் தான் செயல்பட்டிருக்கிறார் என்றும் அதிகாரிகளோடு முதலமைச்சர்கள் தான் ஒத்துச் செயல்பட வேண்டும் என்றும் அனுபவம் வாய்ந்த ஷீலா தீக்ஷித் சொல்கிறார். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும் எண்ணம் கெஜ்ரிவாலுக்கு இருப்பதாகத் தெரிகிறது. பார்க்கலாம்!

கெஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறமை போதாமல் இருக்கணும்; அல்லது அவர் அடிப்படையான சட்டங்களே தெரியாதவராக இருக்கணும். இவ்வளவு மோசமாக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை. அல்லது அவர் தன்னைப் பற்றிக் குற்றம் சுமத்தாமல் இருக்க வேண்டி மத்திய அரசின் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்க வேண்டும். கடைசியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

**************************************************************************************

ஹிஹிஹி, கடைசியா கொஞ்சம் வம்போடு முடிக்கலாமா? இந்த வருஷம் நம்ம பிறந்த நாளை முகநூல் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அட்டகாசமாக் கொண்டாடிட்டாங்க! எல்லோரும் திக்கித் திணறிப் போகும்படி வாழ்த்துகளை அனுப்பி இருக்காங்க. உண்மையில் நான் பிறந்த நாள்னு கொண்டாடுவதே இந்தப் பத்து வருஷங்களாக இணையத்தில் எழுத ஆரம்பிச்சப்புறமாத் தான். அதுக்கு முன்னால் எல்லாம் கிடையாது. இந்த வருஷம் முப்பெரும் விழா, காவடி, கரகம், அலகு குத்துதல், மண் சோறு சாப்பிடுதல், தீச்சட்டி ஏந்துதல் எல்லாம் வெயில் அதிகம் என்பதால் வேண்டாம்னு தாயுள்ளத்தோடு மன்னிச்சு விட்டுட்டேன். ஆனால் திடீர்னு முப்பெரும் விழா கொண்டாடப்படும். எச்சரிக்கை!  அதனால் நேத்திலேருந்து தொடர்ந்து ஒருவாரத்துக்கு என்னோட பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருக்கும். நக்ஷத்திரப் பிறந்த நாள் வேறே இருக்கே! அன்னிக்கு முடியும். அதனாலே பரிசுகளைத் தொடர்ந்து அனுப்பலாம். அப்புறமாப் பட்டு அனுப்பறவங்க பட்டே அனுப்புங்க. எல்லா ஊர்ப் பட்டும் அனுப்பி வைக்கவும். தங்கம் அனுப்பறவங்க காசாகவோ, ஆபரணங்களாவோ அனுப்பி வைக்கலாம். எல்லா ரகமான கற்கள், ஆபரணங்கள், முத்துக்கள், பவளங்கள்னு உங்க ஆசைப்படி அனுப்பி வைங்க. ஏத்துக்கறேன்.

Friday, May 22, 2015

எண்ணங்களோடு சமைச்ச மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி!

ஹிஹிஹி இன்னிக்கும் ஒரு சமையல் குறிப்புத் தான் போடப் போறேன். ஆனால் அதைப்போடும் முன்னர் சில எண்ணங்கள்.

தில்லி மாநில அரசில் முதலமைச்சர் என்பவர் மேயர் பதவியில் உள்ள மேயருக்கு ஒப்பானவர். துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக நிர்வாக முடிவுகள் எடுக்கலாம். அவருக்கு அதற்கு அதிகாரம் உண்டு. கெஜ்ரிவால் தன்னுடைய பெயர் தினமும் ஊடகங்களில் வரணும் என்பதற்காக இப்படிப் பண்ணுகிறாரா அல்லது அவருக்கு உள்ளபடியே இதைக் குறித்துத் தெரியாதா என்பது தான் புரியவில்லை. முதலமைச்சராகப் பதவி ஏற்கும் முன்னரே இதைக் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் கவர்னர் செய்வதைத் தப்பென்று சொல்லலாம். ஆனால் டெல்லி மாநிலத்தைப் பொறுத்தவரை கவர்னர் முதலமைச்சரிடம் எதுவும் கேட்காமல் முடிவு எடுக்கலாம். முதலமைச்சர் துணை நிலை ஆளுநரைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது. இது தான் உள்ள நிலைமை!

ஆனால் கெஜ்ரிவால் புரிஞ்சுக்கற டைப் இல்லை. உடனே மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார். போகப் போகப்பார்க்கலாம் இது எப்படிப் போய் முடிகிறது என்று.

தமிழ்நாட்டில் +2, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதிலே முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலெல்லாம் வந்திருக்கிறது. இவ்வளவு மதிப்பெண்கள் எப்படிப் பெற முடிகிறது? அதுவும் மொழிப்பாடத்திலும், சோஷியல் சைன்ஸ் என்னும் பாடத்திலும் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியுமா? இத்தனை மதிப்பெண்கள் பெற்று நான் மருத்துவச் சேவை செய்யப் போகிறேன்; என்றோ அல்லது இஞ்சினியராகப் போகிறேன் என்றோ, அல்லது சி.ஏ. படிக்கப் போகிறேன் என்றோ சொல்லும்/சொன்ன மாணவ, மாணவிகள் அதை நிறைவேற்றினார்களா? தெரியலை. இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து என்ன பலன்? இதன் மூலம் அவர்கள் சுய கண்டுபிடிப்பாக எதையேனும் கண்டு பிடிக்க முடிந்ததா? அல்லது வேறு வழியில் அவர்கள் படிப்பு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ பலன் கொடுத்ததா? பின் இந்தப் படிப்பினாலும், மதிப்பெண்களினாலும் என்ன பலன்? வருடா வருடம் வெளிநாட்டு விஞ்ஞானிகளே புதிய கண்டுபிடிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து இன்னமும் ஏன் ஓர் விஞ்ஞானி கூட வரவில்லை?

ஹிஹிஹி, எல்லோரும் பாலபிஷேஹம் பண்ணுவாங்க, தயிர், சந்தனம், தேன் அப்படினு அபிஷேஹம் பண்ணுவாங்க. நாம காஃபி அபிஷேஹம் இல்ல பண்ணினோம். அதுவும் நம்ம மடிக்கணினிக்கு! இந்த மாதிரி யாரானும் செய்திருப்பீங்க? வாய்ப்பே இல்லை! :)))) இப்போ சமையல் குறிப்புக்குப் போகலாமா?


இந்த வெங்கடேஷ் பட் (விஜய் தொலைக்காட்சியில் தாங்க) சும்மா இருக்காமல் நாம வீட்டில் செய்து பார்க்கும்படியான பதார்த்தங்களையே செய்யறார். அந்த முறையில் நேற்று நான் செய்தது மங்களூர் பன் எனப்படும் வாழைப்பழ பூரி. செய்முறை பார்க்கலாமா?

நாங்க ரெண்டு பேர் தானே! அதனால் இரண்டே இரண்டு ஏலக்கி வாழைப்பழம், நன்கு கனிந்தது.

நான்கு அல்லது ஆறு  டீஸ்பூன் சர்க்கரை

அதில் கொள்ளும் அளவுக்குக் கோதுமை மாவு

ரவை ஒரு சின்னக் கரண்டி(அவர் சொல்லலை, ஆனால் நான் சேர்த்தேன்)

உப்பு,

தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஒரு சிட்டிகை சமையல் சோடா

முதலில் வாழைப்பழத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்தேன்.




பின்னர் அதில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தேன்.
மீண்டும் நன்கு கலக்கினேன். தயிர் பதம் வந்தது.


இப்போது அதில் ரவையையும் தேவையான கோதுமை மாவையும் சேர்த்தேன். வாழைப்பழக் கலவையின் ஈரப்பதத்தைப் பொறுத்து கோதுமை மாவைச் சேர்க்கணும்.


உப்பு, சமையல் சோடா, தயிர் சேர்த்து நன்கு பிசைந்தேன்.

 ஒரு மணி நேரம் ஊற வைத்தேன். இதுக்குத் தொட்டுக்கக் காரமான தேங்காய்ச் சட்னி பண்ணச் சொல்லி இருந்தார். ஆனால் நான் மத்தியானம் தான் காரமாகக் கொத்துமல்லி+சிவப்பு மிளகாய்ச் சட்னி அரைச்சிருந்தேன். ஆகையால் அதையே வைச்சுட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயை அடுப்பில் சூடாக்கிக் கொண்டு பின்னர் அடுப்பைத் தணித்துக் கொண்டு நிதானமான சூட்டில் பூரிகளைக் கொஞ்சம் கனமாகவே  இட்டுப் போட்டு எடுக்க வேண்டும்.




பூரிகளை எண்ணெய் காயாமல் போட்டால் எண்ணெய் குடிக்கும். எண்ணெய் காய்ந்ததுமே போட வேண்டும். எண்ணெய் குடிப்பதில்லை. நான் குறைந்த அளவு எண்ணெயே வைத்துப் பொரித்து எடுக்கும் வழக்கம். ஏனெனில் சுட்ட எண்ணெய் மிஞ்சினால் பயன்படுத்துவதில்லை. நேற்றைய சுட்ட எண்ணெயை இன்றே காலியாக்கும்படியாக சமையல் திட்டம் போட்டுக் கொண்டு விடுவேன்.  அதற்கேற்பவே சமைப்பேன். ஆகவே நேற்று மிஞ்சிய சுட்ட எண்ணெய் இன்றைய கத்திரிக்காய்க் கறியில் தீர்ந்து விடும். வெகு நாட்கள் சுட்ட எண்ணெயை வைத்துக் கொண்டு மறுபடி மறுபடி சுட வைத்துப் பயன்படுத்துவது இல்லை.  சர்க்கரை சேர்ப்பதால் ரொம்ப இனிப்பாக இருக்குமோ என்றே நினைத்தேன். அப்படி இல்லை. பூரியைப் பிய்த்தால் உள்ளே வெற்றிடத்தோடு இரு பக்கமும் உப்பலாக வரும். வரவேண்டும். அதுதான் சரியான பதம். 



Sunday, May 17, 2015

தோசையம்மா தோசை! மங்களூரூ நீர் தோசை!

தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஐந்து
அம்மாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
அக்காவுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
திங்கத் திங்க ஆசை
திருப்பிக்கேட்டால் பூசை!

அது ஏன் பாப்பாவுக்கு மட்டும் ஒண்ணு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரணும் போல இருக்கும் குழந்தையா இருக்கையிலே. (இப்போவும் மீ த குழந்தை ஒன்லி)

ஹிஹிஹி, தோசை பிடிக்காதவங்களே இருக்கமாட்டாங்க! சாதாரணமாக தோசைகளில் மேலே சொன்ன அரிசிமாவு, உளுந்து மாவு அரைச்சுப் பண்ணும் தோசையைத் தவிர, வெந்தய தோசை. கேழ்வரகு தோசை, கோதுமை தோசை, ரவை தோசை, மைதா தோசை, அவல் போட்ட தோசை, ஓட்ஸ் போட்டு தோசை, கோதுமை ரவையில் தோசை, முழுக்கோதுமையை ஊற வைச்சு அரைச்சுப் பால் எடுத்த தோசைனு விதம் விதமா இருக்கு. இதைத் தவிரவும் தேங்காய்ப் பால் ஊற்றிய ஆப்பமும் ஒரு தோசை வகை தான்.

கொஞ்ச நாட்கள் முன்னர் நம்ம துளசி கர்நாடகா போனதைப் பத்திய பதிவு எழுதினப்போ ஒரு பதிவிலே எல்லோரும் மங்களூரில் நீர் தோசை சாப்பிட்டீங்களானு கேட்டாங்க. அது என்ன நீர் தோசைனு நினைச்சுட்டு இருந்தேன். அப்போப் போன வாரம் சனிக்கிழமை பொழுது போகாமல் தொலைக்காட்சிச் சானல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் விஜய் தொலைக்காட்சியில் வெங்கடேஷ் பட் என்பவர் நீர் தோசை செய்முறை பத்திச் சொல்லிட்டு இருந்தார். சரினு ரங்க்ஸ் கிட்டே இருந்த ரிமோட்டைப் பிடுங்கிக் கொண்டு என்னதான் இருக்கு அதிலேனு பார்த்தேன். கடைசியிலே பார்த்தால் (முதலில் இருந்தே) நம்ம ஆப்பம் வகை தான் இது! கொஞ்சம் சப்புனு போனாலும் ரங்க்ஸுக்கு மேற்சொன்ன தோசை வகைகள் அலுத்துப் போச்சுனு இதைப் பண்ணுனு சொல்ல ஆரம்பிச்சார். சரினு போன வாரம் ஒருநாள் அவசரம் அவசரமாப் பண்ணினேன்.

காலை ஆகாரத்துக்குப் பண்ணினதாலே அப்போ ராத்திரியே அரிசியை ஊற வைச்சுட்டுக் காலம்பர அரைச்சு தோசை வார்த்தேன். அதுக்குத் தொட்டுக்க அங்கே தக்காளி, வெங்காயச் சட்னி னு அதையும் பண்ணிக் காட்டினார். அதுவும் சட்னினு சொல்ல முடியாது. நாம் தக்காளி சான்ட்விச்சுக்கு வைக்க மாட்டோமா அந்தக் கலவை தான். ஒண்ணும் புதுசா இல்லை. :) இருந்தாலும் அன்னிக்கு அதையே பண்ணினேன். ஆனால் அன்னிக்குப் படம் எல்லாம் எடுக்கற மனோநிலையில் இல்லை. ரங்க்ஸ் கூடக் கேட்டார் பதிவு போட்டாச்சானு! படமே எடுக்கலைனு சொல்லிட்டு விட்டுட்டேன். இன்னிக்குத் திரும்பவும் ராத்திரிக்கு அந்த தோசை தான் வேணும்னு ரங்க்ஸ் அடம் பிடிக்கச் சரினு காலம்பரயே அரிசியை ஊற வைச்சுட்டேன். ஆறரை மணிக்கு மேல் அரைச்சு வைச்சுட்டு ஏழரை மணிக்கு தோசை வார்த்தேன். சாம்பார் போதும்னு ரங்க்ஸ் சொன்னார். ஆனாலும் எனக்கு என்னமோ இந்த தோசைக்கு சாம்பார் சரியாக இருக்காதுனு தோணினதாலே எப்போவும் அரைக்கும் தக்காளிச் சட்னி, கொத்துமல்லித் தழை வைத்து அரைச்சேன். அன்னிக்குப் பண்ணினப்போ தோசை மாவு பத்தலை, எனக்கு வரலை. இன்னிக்கு முன் கூட்டித்திட்டமிட்டுப் பண்ணினதாலே இரண்டு பேருக்கும் சரியாக இருந்தது. இப்போ செய்முறை:

நான் இரண்டு பேருக்கான அளவு மட்டுமே சொல்லி இருக்கேன். ஆகவே நீங்க கூட்டிக் கழிச்சு விடை கண்டு பிடிச்சுக்குங்க! :)

அரிசி ஒரு ஆழாக்கு (பச்சரிசி, இட்லி அரிசியோ, புழுங்கல் அரிசியோ கூடாது.) நன்கு கழுவி எட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்னத் தேங்காய் என்றால் ஒரு மூடித் துருவல் சரியாக இருக்கும். பெரிய தேங்காய் எனில் 3 டேபிள் ஸ்பூன் அளவுக்குத்துருவல் இருக்கட்டும். இரண்டையும் போட்டு நன்கு நைசாக பெயின்ட் மாதிரி, கவனிக்கவும், பெயின்ட் மாதிரி வழுவழுப்பாக இருக்கணும். அரைக்கவும். அரைச்ச மாவில் தேவையான உப்புப் போட்டு ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். இந்தச் சர்க்கரை சேர்ப்பது தோசையில் பொன் நிறம் வரவும் முறுகலாக வருவதற்காகவும் தான். வேண்டாம் என்பவர்கள் சர்க்கரை சேர்க்க வேண்டாம். மாவை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். நீர்க்க என்றால் நீர்க்க இருக்கணும்.




அரைத்த மாவு

இப்போது தோசைக்கல்லை நன்கு சூடு பண்ணிக்கொள்ளவும். எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு கரண்டியால் மாவை எடுத்து ரவா தோசைக்கு ஊற்றுவது போல் ஊற்றவும். இடைவெளிகளை மீண்டும் மாவை எடுத்துக் கொண்டு நிரப்பவும்.




தோசைக்கல்லில் மாவை ஊற்றி இருக்கேன். பாதி வெந்து விட்டது.

 எண்ணெயைச் சுற்றிலும் விட்டு விட்டு ஒரு தட்டு அல்லது இட்லிக் கொப்பரை மூடியைப் போட்டு தோசையை மூடவும். தோசை வெந்து விட்டதெனில் வாசனையும் வரும். தட்டின் இடைவெளி வழியாக ஆவியும் வரும்.





மூடி போட்டு மூடி இருக்கேன். 

தட்டை எடுக்கும்போது கவனமாகச் சுட்டுக் கொள்ளவும். சே,சே, சுட்டுக்காமல் இடுக்கியால் எடுக்கவும்.தோசை அப்படியே அலாக்காக எடுக்க வரும் இன்னொரு பக்கம் இந்த தோசையை வேக விட வேண்டாம். அப்படியே மடித்துச் சூடாகப் பரிமாறவும். நான் ஆறித்தான் சாப்பிட்டேன். நல்லாவே இருந்தது. இருந்தாலும் சூடு தனி ருசி தான் இல்லையா?
 


வெந்து எடுத்த தோசை!

இப்போ வெங்கடேஷ் பட் சொன்ன தக்காளி, வெங்காயச் சட்னி செய்முறை:

கால் கிலோ தக்காளி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளிச் சாறோடு இருக்கட்டும்

வெங்காயம் பெரிது இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்

தாளிக்க எண்ணெய்

கடுகு, உ.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயப் பொடி, கருகப்பிலை

பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கவும்

மஞ்சள் பொடி

மிளகாய்ப் பொடி,

உப்பு தேவையான அளவு,

சர்க்கரை ஒரு டீஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி அலங்கரிக்கப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

(தேவையானால் பூண்டுப் பற்கள் பத்து வெங்காயம் வதக்குகையில் சேர்க்கலாம்)

அடுப்பில் கடாயை ஏற்றி (இரும்புக் கடாய் முக்கியம்) எண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு தாளித்துப் பெருங்காயம், கருகப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கும் சமயம் தேவையான மிளகாய்ப் பொடியைச் சேர்க்கவும். மி.பொடி சேர்ப்பது அவரவர் காரத்துக்கு ஏற்றபடி சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். சர்க்கரையையும் சேர்க்கவும். பின்னர் கொஞ்ச நேரம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். சேர்ந்து தக்காளி உருத்தெரியாமல் ஆகும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். மேற்சொன்ன தோசையோடு பரிமாறவும். இது தான் இதற்கு ஏற்ற துணை என்று வெங்கடேஷ் பட் சொன்னார்  அன்னிக்கு அதைப் பண்ணினேன். ஆனால் இன்று அமாவாசை வெங்காயம் சேர்க்க முடியாது. ஆகையால் இன்று செய்தது:


தக்காளி நிதானமான அளவில் நான்கு

கொத்துமல்லித் தழை இரண்டு டேபிள் ஸ்பூன்

மி, வத்தல் 5 அல்லது 6 காரத்துக்கு ஏற்றபடி

பெருங்காயம், உப்பு

வதக்கத் தேவையான எண்ணெய்

எண்ணெய் ஊற்றிய கடாயில் மிவத்தல் வறுத்துக் கொண்டு பெருங்காயம் பொரித்துக் கொண்டு தக்காளியைப்போட்டு வதக்க வேண்டும். தக்காளி நிறம் மாறிச் சுருண்டு வருகையில் அடுப்பை அணைத்து ஆற விட்டுக் கொத்துமல்லித் தழை, உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். தேவையானால் கடுகு தாளிக்கவும். இதுவும் மேற்சொன்ன தோசைக்கு நல்லாவே இருக்கு.  கிட்டத்தட்ட ஆப்பமும் இப்படித் தான். அது இரும்புச் சட்டியில் ஊற்றிக் கொண்டு சட்டியை எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றணும். சட்டியைத் திரும்ப அடுப்பில் வைக்க முடியாமல் காலில் போட்டுக்கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகத் தெரிந்ததால் அதை முயலவில்லை. :)

Saturday, May 16, 2015

அவசரமாய்ச் சில எண்ணங்கள்!



இப்போல்லாம் தற்கொலை செய்துக்கறவங்க அதிகமாகிக் கொண்டு இருக்காங்க. முன்னால் எல்லாம் தற்கொலை கோழைத்தனம்னு சொல்லிட்டு இருந்தோம்.இப்போ அப்படிச் சொல்லக் கூடாது என்பதோடு விருது கொடுக்காத குறையாகத் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஆதரவுகளும் பெருகிக் கொண்டு வருகிறது. இப்படியே போனால் அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியர்கள் வேலையே செய்யாமல் உட்கார்ந்திருந்தால் கூட மேலதிகாரிகள் அதைத் தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்படும். அதுவும் ஒரு நாள் நியாயப்படுத்தப்படும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.


இப்போல்லாம் ராமாயணத்தையும், ராமனையும் கிண்டல் செய்வது தான் அனைவருக்கும் முக்கியமான விஷயமாகவும் எளிதானதாகவும் இருக்கு. இப்போதைய அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தையும், சுற்றத்தார்களையும், மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். ஆனால் ராமர் வாழ்ந்த கால கட்டத்தில் மக்களின் பிரச்னைகளுக்கும், எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப அரசன் நாட்டை ஆண்டு வந்திருக்கிறான். இப்போது அது கேலிக் கூத்தாகத் தென்படுகிறது. மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் தானே மனைவியையே துறந்தான் ராமன்! அதனால் அவன் சந்தோஷமா அடைந்தான்? அல்லது இன்னொரு கல்யாணம் தான் பண்ணிக் கொண்டானா? அஸ்வமேத யாகம் செய்கையில் கூட சீதையைப் போன்ற பிரதிமையைத் தான் தன் பக்கம் வைத்துக் கொண்டான். மனைவி இருக்கையிலேயே துணைவியைத் தேடும் இந்தக்கால ஆண்களுக்கு இது புரிவது கஷ்டம் தான்.

இது இப்படி இருக்க ராமன் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்ட குகன், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரைக் குறித்தும் சென்னைப் பித்தன் என்பவர் முகநூலில் பகிர்ந்திருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குகன் வேடன் என்பதற்காகவோ, சுக்ரீவன் வாநரன் என்பதற்காகவோ, விபீஷணன் அரக்கனாக இருந்தான் என்பதற்காகவோ அவர்களைத் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொள்ளவில்லையாம். நிஷாத அரசன் குகன் என்பதற்காகவும், வாநர அரசனாகப் போகிறவன் சுக்ரீவன் என்பதற்காகவும், இலங்கை அரசனாகப் போகிறான் விபீஷணன் என்பதற்காகவும் ராமன் அவர்களைத் தன் சிநேகிதர்கள் ஆக்கிக் கொண்டானாம். அப்படியே இருந்தாலும் ராமனிடம் வரும்போது அவர்கள் வெற்று நபர்களாக அனைத்தும் இருந்தும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். மரவுரியையும், வில், அம்புகளையும் தவிர ராமனிடமும் எதுவும் இல்லை.  வந்து சேர்ந்த நபர்களும் அப்படியே! அப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் ஒருவரை நண்பராக ஏற்க எவ்வளவு யோசிப்போம் என்பதை நினைத்தால் இது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது புரியும்.

ஆனால் இப்போதெல்லாம் இப்படிப் பார்ப்பது தான், பார்ப்பது கூடச் சொல்லக் கூடாது, இல்லையா?  அவதானிப்பது தான் மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது. இதற்குத் தான் எக்கச்சக்கப் பாராட்டுகள்.

மோதி வெளிநாடு செல்வதையும், அவர் உடையணிவதையும் அனைவரும் கேலி செய்து வருகின்றனர்.  வெளிநாடுகள் செல்வதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு எவ்வளவு உயர்ந்து வருகிறது என்பதை அன்றாடம் தினசரிப் பத்திரிகை படிக்கிறவர்கள் புரிந்து கொள்ளலாம். மேலும் இப்போதெல்லாம் ரயிலில் பொதுப் பெட்டியில் கூடக் கழிப்பறை சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. சென்ற மாதம் திருக்கடையூருக்குச் செல்ல சோழன் விரைவு வண்டியில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை வரை பயணித்தோம். குறைந்த தூரமே என்பதால் குளிர்சாதனப் பெட்டிக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கலை. பொதுப் பெட்டியில் தான் பயணித்தோம். சுத்தமான கழிப்பறை, சுத்தமான கிழியாத இருக்கைகள். ஆனால் நம் ஜனங்கள் தான் வண்டியில் வந்து உட்கார்ந்ததும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், ரொட்டி சாப்பிட்ட பேப்பர்கள் எனப் போடுகின்றனர். அதற்கென உள்ள குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. தப்பு நம் மேலும் இருக்கிறது.

இந்த ஐஆர்சிடிசியில்  பயணச் சீட்டு வாங்குவதற்குப் போனால்  அங்கே கேட்குது பாருங்க captcha திரும்பத் திரும்பத்திரும்பத்திரும்பக் கேட்டுட்டே இருக்குது. வெறுத்துப் போயிட்டேன். அப்புறமா முன்னெல்லாம் பணம் செலுத்துவது மிகவும் எளிதாக இருந்து வந்தது.  எல்லா வங்கி பெயர்கள் க்ரெடிட் கார்டா, டெபிட் கார்டா என்னும் கேள்வி மட்டும் இருந்தது. எங்களோடது டெபிட் கார்டு. அதன் மூலம் தான் வாங்குவோம். டெபிட் கார்டுனு க்ளிக் செய்ததும் எந்த வங்கி டெபிட் கார்டு வசதி வைச்சிருக்கோ அதன் பெயரெல்லாம் வந்துட்டு இருந்தது. எங்களோட வங்கிக்கு நேரே க்ளிக் செய்தால் பயனாளர் பெயர் கடவுச் சொல் கொடுக்கச் சொல்லிக் கார்டு எண்ணையும், கணக்கு ஆரம்பித்த வருஷம், மாதமும் கேட்கும். எலலாம் கொடுத்தால் உடனே வங்கியிலிருந்து பணம் செலுத்தப்பட்டுப் பயணச் சீட்டு வந்து விடும். இப்போ முதலிலேயே எந்த வங்கினு கேட்குது. அந்த வங்கியின் தளத்துக்குப் போய்ப் பயனாளர் பெயர், கடவுச் சொல் கொடுத்துக் கணக்கைத் திறக்கிறதுக்குள்ளே போதும்டா சாமினு ஆயிடுது.

ஒரு வாரமாய் இடி, மின்னல், மழை, மோகினி என்பதால் கணினியிலேயே உட்கார முடியவில்லை. எதுவும் எழுதவும் முடியவில்லை. அதோடு குடியிருப்பு வளாகத்தில்  வேலை வேறே நடக்குது. அது முடிஞ்சதும் வீடு சுத்தம் செய்வதே பெரிய விஷயமாகி விடுகிறது.   ஏதோ நொ.சா. சொல்றேன். :)

Thursday, May 14, 2015

வேறே என்ன பண்ணறதுனு தெரியலை! கொஞ்ச நாளைக்கு இதான்! :P

ரொம்ப நாட்கள்/மாதங்கள் முன்னர் ஶ்ரீராம் கத்திரிக்காய் சாதம் பத்திக் கேட்டிருந்தார். இங்கே அதுக்குத் தடா இருந்ததாலே பண்ணவே இல்லை. இன்னிக்கு என்னமோ சட்டத்தை மீறணும்னு ஆசை. அதனால் கத்திரிக்காய் சாதம் தான் பண்ணினேன். அதற்குத் தேவையான பொருட்கள்:--

கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் பெரிது 2
இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.
பச்சை மிளகாய்  2  குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு
 நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய்

ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, ஜீரகம், வேர்க்கடலை தோல் நீக்கியது இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையானால் (நான் போட்டேன்)
பச்சைக் கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

மி.வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு, உபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

கொப்பரைத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் இரண்டு டீஸ்பூன்

வேர்க்கடலை வறுத்துத் தோல் உரித்தது  ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

சோம்பு ஒரு  டீஸ்பூன்

ஏலக்காய் பெரியது ஒன்று,

கிராம்பு ஒன்று.




வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆற வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

உதிரி உதிரியாக சாதம் வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதிலே கறிவேப்பிலை, பச்சைமிளகாயப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காயைச் சற்று நேரம் எண்ணெயிலே வதக்கவும். பாதி வெந்திருக்கும் நேரம் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். சற்று வதக்கவும். இப்போது வறுத்துப் பொடித்துள்ள பொடியை அளவாகச் சேர்க்கவும். பொடியைச் சேர்க்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். சற்று நேரம் கிளறவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டுக் கலக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பு சாதத்திற்கு மட்டும் தேவைப்படும்படி சேர்க்கவும். நன்கு கிளறவும். இன்னொரு வாணலியை அடுப்பில் ஏற்றி ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையை அந்த நெய்யில் போட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவும். இவற்றை அந்த சாதத்தின் மேலே போட்டுக் கொத்துமல்லியும் தூவிவிட்டுக் கிளறவும்.  இதற்குக் காரட் துருவல், வெங்காயத் துருவல் போட்ட தயிர்ப்பச்சடி தொட்டுக்கொளள நன்றாக இருக்கும்.

இதை முந்தாநாள் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணின அன்னிக்கே பண்ணிட்டேன். ஆனால் இப்போத் தான் போடறேன்.




Tuesday, May 12, 2015

ரொம்ப முக்கியம் போங்க! தலை போகிற செய்தி! :)

சாம்பாரை மராட்டியர் தான் அறிமுகம் செய்தார்னு நினைச்சவங்களை அப்படி இல்லைனு விக்கி விக்கிக் கொண்டே சொல்லுது. சம்பாரம், அல்லது சாம்பரம் என்று அழைக்கப்பட்ட உணவு வகை இந்த சாம்பார்தான் என்பது விக்கியின் கூற்று. 16 ஆம் நூற்றாண்டிலேயே சாம்பாரைக் குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் விக்கி சொல்கிறது. மிளகு, நெய் சேர்த்துப் பண்ணினதாகவும் தெரிய வருகிறது. பின்னர் காலப் போக்கில் இப்போதைய சாம்பார் பழக்கத்துக்கு வந்திருக்கணும்.

எனக்கு சாம்பாரோ, சாம்பார் சாதமோ பிடிக்காது. சாப்பிட மாட்டேன்! அரைக்கரண்டி சாம்பார் விட்டுக் கொண்டால் அதிகம். ஆனால் அதுவே இட்லிக்கு மட்டும் சாம்பார் தான் பிடிக்கும். சட்னி, மி.பொடி எல்லாம் அடுத்த பட்சம் தான். இப்போதெல்லாம் என்னோடு சேர்ந்து தானோ என்னமோ நம்ம ரங்க்ஸுகும் சாம்பாரே பிடிக்கிறதில்லை! :) இட்லி சாம்பார் மட்டும் விதிவிலக்கு. இதிலே வகை, வகையாக சாம்பார்கள் இருக்கின்றன. பயத்தம்பருப்புப் போட்டுத் தக்காளி, வெங்காயம் சேர்த்துப் பண்ணினால் அது ஒரு ருசி. துவரம்பருப்புப் போட்டுப் பண்ணும் சாம்பாருக்கு ஈடு, இணை இல்லை. அதிலே காய்களாக முருங்கை, பூஷணி, பறங்கி, கத்தரிக்காய், முள்ளங்கி, சின்ன வெங்காயம் போன்றவை முக்கியமான காய்கள் என்றாலும் பலர் இப்போதெல்லாம் குடைமிளகாய், தக்காளி, காரட், காலிஃப்ளவர் போன்றவை போட்டும் சாம்பார் செய்கின்றனர். கொண்டைக்கடலை, கொத்தவரை, அவரைக்காய், போன்றவையும் சாம்பாரில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சாம்பாருக்கென இருக்கும் தனிக்காய்களில் சாம்பார் வைத்தால் அதன் ருசியே தனி. அதிலும் வெண்டைக்காய்ப் பிஞ்சில் சாம்பார் வைத்தால் அதன் மணமே தனி. :)




இது ஶ்ரீராம் சொன்ன சரவணபவன் சாம்பார்! :)


இங்கே

நான் புளி போட்டுப் பருப்பில்லாமல் சாம்பார் வைப்பேன். இப்போ ஶ்ரீராம் பதிவு போட்டபின்னர் பருப்புப் போட்டுப் புளி இல்லாமல் சாம்பார் வைக்கிறேன். புளி இல்லை என்பதாலோ என்னமோ அதிகம் இது தான் பிடிக்கிறது.  இதற்கு மி.பொடி, தனியாப் பொடினு சேர்க்கச் சொல்லி இருந்தாலும் நான் சாம்பார்ப் பொடி தான் சேர்க்கிறேன். பொதுவாகவே சாம்பார் பண்ண சாம்பார் பொடி என ஒன்று தயார் செய்து குறைந்தது 3 மாதங்களுக்காவது வரும்படி வைத்துக்கொள்வார்கள். ஆனால் முன்னெல்லாம் அன்றன்று வறுத்து அதை இயந்திரத்தில் அரைத்தே சாம்பார்ப் பொடி தயார் செய்திருக்கின்றனர். இதிலே வெறும் வறுத்த பொடி மட்டும் போட்டுப் பருப்பு, புளி, காய்கள் சேர்த்துப் பண்ணும் சாம்பார் ஒரு ருசி. அதிலேயே தேங்காய் சேர்த்துப் பொடி செய்து போடுவது ஒரு வகை. எல்லாமாக வறுத்து அரைத்துச் செய்வது ஒரு வகை. கொஞ்சம் பொடி போட்டு, கொஞ்சம் வறுத்து அரைத்தும் சிலர் செய்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சாம்பார் என்றால் முழுக்க முழுக்க வறுத்து அரைத்தால் தான் அது சாம்பார். :) சில சமயம் அடியில்தாளித்துக் கொஞ்சமாகப் பருப்புப் போட்டு வத்தப்பருப்புக் குழம்பு மாதிரி செய்வதும் உண்டு. பொடி போட்டு சாம்பார் செய்தால் அதற்கு மேல் சாமான் வறுத்து அரைக்காமல் வெறும் கொத்துமல்லி விதையும் தேங்காய் துருவலும் மட்டும் போட்டு வறுக்காமல் பச்சையாக அரைத்து விடலாம். இது ஒரு ருசி. ஆக விதம் விதமாய் சாம்பார் பண்ணினாலும் எனக்கு என்னமோ மொத்தமாய் ஒரு கரண்டி சாம்பாருக்கு மேல் தேவைப்படறதில்லை. :)

அடுத்து சேப்பங்கிழங்கு முறுகல். கவனிக்கவும், முறுகல் தான். நோ கறு(ரு)கல். >))) சில நாட்கள்/மாதங்கள் (?) முன்னர் தம்பி வா.தி. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பத்தி சந்தேகம் எழுப்பி இருந்தார். அதிலே பதில் சொன்னவங்க எல்லாருமே கடலைமாவு, மி.பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து அதிலே தான் சேப்பங்கிழங்கைப் புரட்டிக் கொள்ளச் சொன்னார்கள். அல்லது முறுகும் சமயம் கடலைமாவைத் தூவச் சொல்லி இருந்தார்கள் சிலர்/ இரண்டுமே சரியாக வராது என்பது என்னோட தாழ்மையான கருத்து. என்னோட மாமியார் கடலைமாவை பஜ்ஜி மாவு மாதிரிக் கரைச்சு எடுத்துக் கொண்டு அதிலே சேப்பங்கிழங்கை முக்கிப் போட்டுப் பொரித்து எடுப்பார்கள். அது பரவாயில்லை மேலே சொன்னதை எல்லாம் பார்க்கும்போது.  ஏனெனில் மாவைத் தூவும் போது மாவு மட்டும் அந்தக் காரப் பொடியோடு சேர்த்து கொண்டு தனியாகத் தூளாக நிற்கும்.  சேப்பங்கிழங்கில் காரம் சேர்ந்து இருக்காது. எல்லாமும் கடலைமாவோடு சேர்ந்து கொண்டு சட்டியில் தூளாக நிற்கும்.

போனமாதம் திருக்கடையூருக்கு என் தம்பி சஷ்டிஅப்தபூர்த்திக்குப் போனப்போ அங்கே சமையல்காரர்கள் போட்ட வெண்டைக்காய்க் கறியிலும் இப்படித் தான் வெண்டைக்காய் தனியாகவும், கடலைமாவுக் கலவை தனியாகவும் இருந்தது. இம்மாதிரி வறுக்கும் காய்களுக்குக் கடலைமாவே போடாதீங்க. அது சேப்பங்கிழங்காக இருந்தாலும் சரி, சின்ன உருளைக்கிழங்காக இருந்தாலும் சரி, வெண்டைக்காயாக இருந்தாலும் சரி. ஒண்ணு பஜ்ஜி மாதிரி மாவைக் கரைத்துக் கொண்டு முக்கிப் போட்டுப் பொரிச்சு எடுங்க. இல்லைனா எண்ணெயிலே வதக்குங்க. இன்னிக்கு சேப்பங்கிழங்குக் கறி பண்ணும்போது நினைவா (ஹிஹிஹி, அதிசயமா இருக்கில்ல?) படம் எடுத்தேன். அதைப் பார்க்கவும். முக்கியமாக இரும்புச் சட்டி அல்லது சீனாச் சட்டி தேவை. சீனாச்சட்டினா ரொம்ப நல்லது. எண்ணெய் அதிகம் செலவாகாது. என்னிடம் சீனாச்சட்டி இருந்தாலும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரிசா இருக்கிறதாலே கால் கிலோ சேப்பங்கிழங்குக்கு அதி அதிகம் என்பதால் அதிலே செய்யாமல் இரும்புச் சட்டியில் செய்தேன். கீழே படங்கள்.




முதலில் சேப்பங்கிழங்கை நன்கு ஊற வைத்து மண்போகக் கழுவிக் கொண்டு நீரை வடிகட்டி விட்டுக் குக்கரில் வேக வைக்கவும். கவனிக்கவும்;குக்கரில் வேக வைக்கும்போது குக்கரில் விசில் சப்தம் வரும்படி அதற்கு குண்டு போடக் கூடாது. குக்கரில் நன்கு ஆவி வெளி வரும்வரை வைத்துவிட்டு குண்டைப் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும். பத்து நிமிஷம் கழிச்சுக் குக்கரைத் திறந்து சேப்பங்கிழங்கை வெளியே எடுத்து வடிகட்டிவிட்டுப் பார்த்தால் தோல் நன்கு உரிந்து வரும். சேப்பங்கிழங்கு அமுக்கினால் அமுங்கும் அளவு வெந்திருக்கும். அது போதும். ரொம்பக் குழைந்து விட்டால் கறி சேர்ந்து கொண்டு துவையல் மாதிரி ஆயிடும். சேப்பங்கிழங்கைத் தோல் உரித்துப் பெரிதாக இருந்தால் ஒரே மாதிரியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

நான் பண்ணும் செய்முறையில் ஒரு அகல பேசினில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதிலேயே மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காய்த் தூள், உப்புப் போட்டு எண்ணெயில் நன்கு கலக்கி விடுவேன். பின்னர் வெட்டி வைத்த சேப்பங்கிழங்குத் துண்டங்களைப் போட்டு நன்கு கலந்து விடுவேன். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிஷம் அப்படியே வைத்திருக்கணும். இடைவெளியில் அடுப்பில் குழம்பு, ரசம் கொதிக்க வைத்து, சாதம் வைத்து இறக்கிக் கொள்ளலாம். பின்னர் இரும்புச் சட்டியை எடுத்துக் கொண்டு அதிலே ஒரே ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய வைக்கவும். கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு பொரியும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
கடுகு பொரிந்ததும் எண்ணெயில் ஊறிக்கொண்டிருக்கும் சேப்பங்கிழங்கை அதிலிருக்கும் எண்ணெயோடு அப்படியே இரும்புச் சட்டியில் போடவும். ஒரு அகப்பையால் நன்கு கலக்கவும். அடுப்பைத் தணித்து வைத்து நன்கு வறுபட விடவும். எங்களுக்குக் காரம் அதிகம் வேண்டாம் என்பதால் நான் கால் டீஸ்பூன் தனி மி.பொடியோடு கால் டீஸ்பூன் சாம்பார் பொடியும் சேர்த்துப் போட்டிருக்கேன். அரை டீஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள். அவ்வப்போது நன்கு திருப்பி விடவும். சேப்பங்கிழங்கு எண்ணெய் முழுதையும் உள்வாங்கிக் கொண்டு தனித்தனியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.



தனித்தனியாக வந்திருக்கும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட்!

Wednesday, May 06, 2015

வாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும்/மீள் பதிவு தான்!

 வாலியை ராமர் மறைந்திருந்து கொன்றதாய்ச் சொல்லப் படுவது முதன்முதலில் கம்பராமாயணத்திலே தீர்மானிக்கப் பட்டதாகவே நினைக்கின்றேன். துளசிதாசர், ராமனை ஒரு கடவுளாகவே சித்திரிக்கின்றபடியால், ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய் அவர் சித்திரிந்திருந்தாலும், வாலியோ ராமனை ஒரு அவதாரம் எனவும், கடவுள் எனவும் உணர்ந்ததாயும், எத்தனை பிறவி எடுத்தாலும் ராமன் பாதங்களை மறவாத வரம் வேண்டும் என்று கேட்பதாயும் வரும். ஆனால் கம்பரோ, சுக்ரீவன் இறுதி முறையாக அடையாளம் காணக் கூடிய மாலை அணிந்து போருக்குச் செல்லும்போதே, ராமனும், சுக்ரீவனும் திட்டம் போட்டுக் கொண்டதாய்க் காட்டுகின்றார். வாலியோடு சுக்ரீவன் சண்டை போடும்போது ராமன், மற்றொரு இடத்தில் இருந்து அம்பு தொடுப்பதாய் சுக்ரீவனிடம் சொல்லுவது போல் வருகின்றது. அம்பானது வாலியின் மார்பில் தைத்து, அதில் ராமனின் பெயரைப் பார்த்துவிட்டே வாலி கண்டு பிடிப்பதாயும் வரும். அதில் ராமனைப் பற்றி வாலி நினைப்பதாய்க் கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:
"இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான்."

மனைவியோடு சந்தோஷமாய் அனுபவிக்க வேண்டிய இல்வாழ்வைத் துறந்து காட்டுக்கு வந்த ஆண்மகன் ஆகியவனும், தங்கள் குலப் பரம்பரையில் வந்த விற்போர் முறையை, எம் போன்ற வானரங்களைக் கொல்வதற்காகக் கைவிட்ட வீரனும் ஆன இந்த ராமன் தோன்றியதால், வேதங்களின் அறங்களையும் அவற்றில் சொல்லப் பட்ட தர்மங்களையும் கடைப்பிடிக்கும் அவன் பிறந்த சூரியகுலம் தன் அறத்தை இழந்து பாழ்பட்டது என எண்ணி ஏளனத்துடன் வாலி நகைத்தானாம். பின்னர் வாலி ராமனைக் கேட்கும் கேள்விகளும் அதற்கான வால்மீகியின் பதில்களை ஒட்டிய கம்பரின் பதில்களும் வருகின்றன. ஆனால் மேலே கடைசியில் வாலி ராமனை நீ ஒரு வேடன் போல் என்னை மறைந்திருந்து ஏன் கொன்றாய் எனக் கேட்டதாயும், அதற்கு லட்சுமணன், சொல்வதாய் இவ்வாறு கம்பர் கூறுகின்றார்:
"உன் தம்பியாகிய சுக்ரீவன் என் அண்ணனை முதலில் சரணடைந்து "அபயம்" எனக் கேட்டுவிட்டான். நீயும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என உறுதியாய்த் தெரிந்ததால் அண்ணனும் அபயம் அளித்தார். இப்போது சண்டையில் ஒரு வேளை உன்னைக் காத்துக்கொள்ள நீயும் அபயம் என வந்துவிட்டால் என்ன செய்வது என்பதாலேயே மறைந்திருந்து கொல்ல நேரிட்டது." என்று லட்சுமணன் கூறுவதாய்க் கம்பர் சொல்கின்றார். வாதம் செய்வதற்கும், செய்ததை நியாயப் படுத்துவதற்கும் வேண்டுமானால் மேற்கண்ட மேற்கோளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடந்ததை, நடந்தபடியே வால்மீகி விவரிக்கின்றாரே?
இது இப்படியே இருக்கட்டும். ஆனால் முதல் தோன்றியது வால்மீகியின் ராமாயணமே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அதில் இவ்வாறு சொல்லப் படவில்லை. ஏன் எனில் நடந்ததை நடந்தபடிக்கே எழுதி இருக்கின்றார் வால்மீகி.

ஒரு அரசன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தில் இருந்து ராமன் சற்றும் பிறழ்ந்ததாய் எங்கும் சொல்லவில்லை. சுக்ரீவன், அனுமன், ராமன், லட்சுமணன் உட்பட அனைவரும் கூட்டமாகவே கிஷ்கிந்தைக்குச் சென்று, காட்டில் மறைந்து நிற்கின்றனர். பின்னர் வாலிக்கு சுக்ரீவன் அறைகூவல் விடுத்துக் கூப்பிட்டுச் சண்டை நடக்கின்றது. சண்டையின் போது ராமர் மறைந்து இருந்ததாய் வால்மீகி எங்கும் குறிப்பிடவில்லை. சண்டையின்போது சுக்ரீவன் தனக்கு உதவிக்கு யாரும் வருகின்றார்களா எனச் சுற்றும் முற்றும் பார்த்ததாயும் அதை ராமன் பார்த்ததாயும் குறிப்பிடுகின்றார். இதோ கீழே:
// Raghava has then seen the lord of monkeys Sugreeva who is repeatedly eyeing all sides for help and who is even deteriorating in his enterprise. [4-16-31]//

அதன் பின்னரே ராமன் சுக்ரீவன் உதவிக்குப் போகின்றார். ராமர் நேரிடையாக வாலியுடன் சண்டை போட்டதாய் எங்கும் சொல்லவில்லைதான். அதே சமயம் மறைந்திருந்து சண்டை போட்டதாயும் எங்கும் சொல்லவில்லையே?
//"When you have not appeared before me when I confronted Sugreeva my concept was, 'it will be inapt of Rama to hurt me while I am combating with another combatant, besides, when I will be unvigilant in that fight…' [4-17-21]// நான் உன்னுடன் சண்டை போடாமல், உன்னைக் கவனிக்கக் கூட இல்லாமல் சுக்ரீவனுடன் போரிடுவதிலேயே கவனமாய் இருந்தபோது என்னை நீ வீழ்த்தி விட்டாய். உன்னுடன் நேருக்கு நேர் மோதாத என்னை நீ எப்படி வீழ்த்தலாம் என்றே வாலி கேட்கின்றான் ராமனை. மேலும் பலவகையிலும் ராமனை இகழ்ந்து வாலி பேசியபின்னரே, ராமர் தனது கடமையையும், குல தர்மத்தையும், ஒரு அரசனானவன், வானரங்களைக் கொல்வது தவறில்லை எனவும் சொல்கின்றார். அதிலும் தம்பி மனைவியை அவள் இஷ்டம் இல்லாமல் வலுக்கட்டாயமாய் அபகரித்ததே அவனைக் கொல்ல முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றார். மேலும் ராமர் வில்லை எடுக்கும்போதும், அம்பைப் பொருத்தும் போதும், அம்பை விடுவிக்கும்போதும் ஏற்பட்ட சப்தத்தைக் கம்பரும் விவரித்திருக்கின்றார். வால்மீகியும் சொல்கின்றார். பறவைகளும், மான்களும், காட்டு மிருகங்களும் சிதறிப் பதறி ஓடி இருக்கும்போது வாலிக்குத் தெரியாமல் ராமன் வாலியக் கொன்றது எப்படி? சிந்திப்போம் இனியாவது!
//Then on tautening a venomous serpent like arrow in the bow, Rama started to draw out bowstring, whereby that bow attained a similitude with the Time-disc of the Terminator. [4-16-33]

At the blast of bowstring the lordly birds and animals are panicked, like those that will be startled by the approach of ear ending, and they all fled. [4-16-34]

The arrow released by Raghava that has the boom of thunderbolt's thunderclap and the flashes of a lightning fell on the chest of Vali. [4-16-35]//

மேலும் சுக்ரீவனோ, மற்ற வானரங்களோ கூட ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய்க் கூறவில்லை. வாலியின் ஆயுதங்கள் ஆன மரங்களையும், பாறைகளையும் ராமன் பொடிப்பொடியாக்கிவிட்டதாகவே கூறுகின்றனர். மேலும் ஒரு மனித தர்மத்திற்கு உட்பட்டே ராமன் நடந்து கொண்டார் எனவும் கொள்ளவேண்டும். ராமன் வாலியின் எதிரே வந்து சண்டை போட்டிருந்தார் எனில், ஒன்று வாலி சரணடைந்திருக்கலாம், அப்போது சுக்ரீவனுக்கு ராமன் கொடுத்த வாக்கைக்காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்கைக் காப்பது அரசனுக்கு முக்கியக் கடமை. அதிலும் அபயம் என்று வரும் அரசர்கள், சிற்றரசர்களுக்கு உதவி செய்வதும் அரச தர்மம். அல்லது ராமன் நேரில் சண்டைக்கு வருகின்றான் என்ற காரணத்தினால் ஏற்கெனவே ராவணனை வென்றிருக்கும் வாலி, அவனுக்குத் துணைக்கும் போயிருக்கலாம், அல்லது வாலியினிடம் இருந்த சுக்ரீவன் மனைவி ருமைக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம். இவை அனைத்தையும் யோசித்தே, அரச தர்மம் இது என உணர்ந்து ராமன் செயல்பட்டிருக்கின்றான் என்றே நாம் கொள்ளவேண்டும்.

நாம் ராமனை அவதாரமாகவே நினைப்பதால் வரும் தவறான கருத்தே இது. ராமனுக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை. அவன் தான் மனிதனா? அவதாரமா? என்ற கேள்விகளுக்குள் போகவே இல்லை. அவனுக்குச் சிலமுறை சுட்டிக் காட்டப் பட்டும் அவன் தான் யார் எனத் தெரியாமலேயே சாதாரண மனித தர்மத்திற்கும், மனித குணங்களுக்கும் உட்பட்டே அநேக காரியங்களைப் புரிந்து வந்திருக்கின்றான். இன்னும் சொல்லப் போனால் இவை இரண்டுக்கும் நடுவில் இருந்து கொண்டு தன் விதியானது தன்னை எங்கே கொண்டு சேர்க்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவனாயும் இருக்கின்றான். அதன் வழியில் அது இழுத்த இழுப்பின் போகவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றான். ஒரு அவதாரம் என்றால் அவனால் முடியாது என்ன? சற்றே யோசிக்கலாம். அப்படி அவனுக்குத் தான் ஒரு அவதாரம் என்பதும், தன்னால் முடிக்கவேண்டிய காரியம் ராவண வதம் என்றும், அதை நோக்கியே விதி தன்னை இழுத்துச் செல்கின்றது என்பதும் முன்பே தெரிந்து கொண்டிருந்தானால், கதை எப்படி இருந்திருக்கும்? கதையின் போக்கே மாறி இருக்கும் அல்லவா?

Monday, May 04, 2015

பவனி வரார், நம் பெருமாள் பவனி வரார்!


சித்திராபௌர்ணமி அன்று ஶ்ரீரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம். ஆகவே நம்பெருமாள் ஒவ்வொரு வருடமும் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து அன்று பகல் முழுவதும் தங்கி மாலை ஐந்து மணிக்கு மேல் கஜேந்திர மோக்ஷம் முடித்துக் கொண்டு ஆஸ்தானம் திரும்புவார். கோயிலிலிருந்து கிளம்பி வரும் வழியெல்லாம் மண்டகப்படி கண்டருளும் நம்பெருமாளுக்கு எங்கள் குடியிருப்பு வளாகத்தின் பக்கத்தில் உள்ள வீட்டிலும் மண்டகப்படி உண்டு. இந்தப் படங்கள் அங்கே எடுத்தவை. மேல் படத்தில் மண்டகப்படிக்குள் நுழையும் பெருமாள்.



வெயில் காலம் என்பதால் பட்டுத் துணியால் திரை போட்டு மறைத்த வண்ணம் வருகிறார். கூடவே விசிறி போட்டுக் கொண்டும் ஒருவர்.  மண்டகப்படிக்கு உள்ளே பெருமாள் பல்லக்கைக் கீழே வைக்காமல் தாங்கிப் பிடித்தவண்ணம் ஶ்ரீபாதம் தாங்கிகள் நிற்கின்றனர்.





இதோ பெருமாளின் இடப்பக்கம் தெரிகிறதா விசிறி போடுவது? 



இப்போது இன்னமும் நன்றாகப் பார்க்கலாம். மேலே தூக்கி விசிறியால் விசுறுகிறார்.




மண்டகப்படியை விட்டுக் கிளம்பும் நம்பெருமாள். இன்னைக்குப் பல்லக்குக்கு அருகே இருந்து தரிசனம். நம்பெருமாளின் முகத்தில் உள்ள காயங்கள் கூடத் தெரிகின்றன. அந்நியப்படையெடுப்பில் அங்கே, இங்கே ஓடி ஓடி ஒளிந்து கொண்டதில் ஏற்பட்டிருக்கும். பாவம்! நம்ம ரங்க்ஸுக்கு தீர்த்தப் பிரசாதம் கூடக் கிடைச்சது. உபயதாரர்களுடன் நின்னுட்டு இருந்தார். இனிமே அடுத்து நம்பெருமாள்  அம்மாமண்டபம் படித்துறைக்கு வருகை ஆடிப் பதினெட்டில் தான் இருக்கும். :)

Sunday, May 03, 2015

ராமா நீ சமானமெவரு!

//ராமன் மானுட தர்மங்களை உயர் லட்சியங்களைக் காட்டி நடந்தான் என்பதும் கேள்விக்குறி தான். ராமாயணம் முழுக்க உதாரணங்கள். வாலிவதம் முகத்தில் அடிக்கிறது. சூர்ப்பனகை அவமானம் அதன் பின்னலேயே. சீதையை நடத்திய விதம் அதைத் தொடர்ந்து. லவகுச உதாசீனம் அதைத் தொடர்ந்து. ஒரு வேளை இது எதுவும் ராமன் செய்யாதிருந்திருக்கலாம். அல்லது வாலி வதம் பற்றிய சப்பை கட்டுகளையும் ஏற்று ஆகா ராமன் உன்னத பிறவி எனலாம்.. அல்லது மனுஷ்ய அல்பத்தனத்தோடு நடந்து கொண்டான் ராமன் என்று மானுடனாகவும் ஏற்கலாம். லவகுச ராமாயணத்திலேயே இல்லை என்றும் சொல்லலாம்.
ராமாயணம் வெறும் கதை - சாத்திய உண்மைச் சம்பவங்களைக் கொண்டு திறமையாக எடுத்தாளப்பட்ட கதை. இதில் மானுடருக்கெல்லாம் எந்த உயர் லட்சியத்தையும் ராமன் சொல்லவில்லை; நடந்துகொள்ளவுமில்லை. அப்படி யாராவது நடந்து கொண்டதாகச் சொல்வதானால் குகன், பரதன், லட்சுமணனைச் சொல்லலாம்.//

இது மோகன் ஜியின் "அங்கிங்கெங்கினாதபடி" கதையில் பின்னூட்டத்தில் அப்பாதுரை சொன்னது.



//Amrita Gupta
A pregnant mother asked her daughter, “What do u want- A brother or a sister?“
Daughter:- Brother
Mother:- Like whom?
Daughter:- Like RAVAN
Mother:- What the hell are you saying? Are you out of your mind?
Daughter:- Why not Mom? He left all his Royalship &
Kingdom, all because his sister was disrespected.
Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would I do with a brother like Ram who left his pregnant wife after listening to a “Dhobi” though his wife always stood by his side like a shadow? After giving “Agni Pareeksha” & suffering 14 years of exile.
Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for a “RAM” as your son???
Mother was in tears…

Moral:- No one in the world is good or bad. It's just everyone's interpretation about someone. Change Ur perception..//


இது என் உறவினர் ஒருத்தர் முகநூலில் பகிர்ந்தது. இப்போதெல்லாம் பெண்ணீஈஈய வாதிகள் சொல்வது மேலே உள்ளது போல் தான். அநேகமாக இது பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் இதில் உள்ள உண்மைகளை யாராவது நினைத்துப் பார்த்தது உண்டா?

ராவணன் குபேரனிடமிருந்து லங்காபுரியைப் பறித்ததோ, அவனை விரட்டி விட்டு லங்காபுரியை ஆட்சி செய்ததோ, அவன் பெண்கள் மேல் கொண்டிருந்த மோகமோ, அந்த மோகத்தில் அனைத்துப் பெண்களையும் தன் அந்தப்புரத்தில் அடைத்து வைத்துப் பெண்டாள நினைத்ததோ, அப்படிப் பெண்டாள முடியாமல் போனதற்குக் காரணம் அவனுக்குக் கிடத்த சாபம் என்பதோ! அந்த சாபத்தை அவன்  அண்ணன் குபேரன் மகனான நளகூபரன் மனைவி ரம்பையை அடைய நினைத்தபோது அவள் கொடுத்த சாபம் என்பதோ யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை.  கண்ணை மூடிக் கொண்டு ராவணன் மேல் புகழ்மாரியும், ஶ்ரீராமன் மேல் மண்மாரியும் பொழிகின்றனர்.

சூர்ப்பநகையை அவமானம் செய்தார்கள் என்பதற்காக ராவணன் தன்னுடைய அரசாட்சி உரிமையையோ, மற்ற எந்த உரிமைகளையோ இழக்கவில்லை. பார்க்கப் போனால் சூர்ப்பநகையின் தூண்டுதல் தான் இந்தப் போருக்கே அடிப்படை!  சூர்ப்பனகைக்கும் ராவணன் மேல் பழிவாங்கும் உணர்ச்சி உண்டென்பதோ, அதற்காகவே அவள் திட்டமிட்டு சீதையைத் தூக்கிவரச் செய்தாள் என்பதோ எத்தனை பேருக்குத் தெரியும்? சூர்ப்பனகையின் கணவன் ராவணனால் கொல்லப்பட்டு, மகனும் இருப்பது தெரியாமல் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டு, இருவரையும் இழந்த சூர்ப்பநகை இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ள வேண்டிச் செய்வதே சீதையை ராவணன் தூக்கி வருவது. தூண்டி விடுவது சூர்ப்பநகை தான். அதன் பின் அவள் ராமாயணத்தில் எங்கும் வர மாட்டாள்.  ஆகவே ராவணன் பிறன் மனைவியைத் தூக்கி வந்த குற்றத்துக்காகவே தண்டிக்கப்படுகிறான். பத்துத் தலை என்றால் நிஜம்மாவே பத்துத் தலைகள் இரண்டு பக்கமும் இருக்குனு அர்த்தம் இல்லை. அதை எல்லாம் விரிவாகச் சொல்லணும். சொன்னாலும் ஏத்துக்கறவங்க தான் ஏத்துப்பாங்க. மத்தவங்க ஏத்துக்கறது சந்தேகமே! என்றாலும் சொல்லுவோமுல்ல! :))))

மற்றதுக்கும்  பதில் விரைவில்!

Friday, May 01, 2015

சில எண்ணங்களும் பகிர்வுகளும்!

இன்னிக்கு ஒரு உபநயனத்துக்குப் போனதில் அங்கே தற்செயலாகத் திருப்பூர் கிருஷ்ணனைப் பார்க்க நேர்ந்தது. அதோடு இன்னொரு முக்கியஸ்தரையும் பார்த்தேன். இருவரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் மிக அன்பாகப் பேசினார். சென்னை வந்தால் அவரை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். அமுதசுரபியில் என்னைக் குறித்த அறிமுகம் கொடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார். எவ்வளவு பெரிய மனசு என வியந்து கொண்டேன்.

************************************************************************************

ராகுல் காந்தி புயல்வேகச் சுற்றுப் பிரயாணம் செய்து பஞ்சாப், மஹாராஷ்டிராவின் கிராமங்களையும் விவசாயிகளையும் சந்திக்கிறார். ஒரு வருஷம் முன்னர் அவருடைய கட்சியின் ஆட்சியில் தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருந்தது.  அதற்குப் பத்து வருடங்கள் முன்னாலிருந்து மத்தியில் காங்கிரஸ் கட்சிதான். அப்போதும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்போதெல்லாம் எங்கே போனார்னு புரியலை!  அதை எல்லாம் யாருமே கேட்க மாட்டாங்களா? ஊடகங்கள் கூட மோதி காரியத்தோடு வெளிநாடு செல்வதை விமரிசிக்கிறது. இப்போக் கிட்டத்தட்ட 2 மாசம் விடுமுறையில் போனாப்போல் அப்போவும் விடுமுறையில் போயிருப்பாரோ? இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் போன இடம் எதுவெனத் தெரியாமல் விடுமுறையில் செல்கிறவர் பிரதமராக வரணும்னு ஆசைப்படுகிறார். ஆனால் மோதி காரண, காரியங்களோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைக் கேலி செய்கிறாரே? இது என்ன நியாயம்னு புரியலை! ஊடகங்களும் ராகுல் காந்தி தும்மினால் கூடப்பெரிதாக சந்தோஷப் படுகிறது. மோதிக்கு இப்படித் தும்மத் தெரியலை; ராகுல் காந்தி விடுமுறையிலிருந்து வந்ததும் வராததுமா இப்படி ஆவேசத்தோடு தும்மிட்டாரேனு குதிக்கிறாங்க! :P :P :P :P
**************************************************************************************

பஞ்சாபில்  தனியார் பேருந்தில் சென்ற பெண்மணிக்குப் பாலியல் தொல்லை; இதைத் தொடர்ந்து நடத்தும் நடத்திக் கொண்டிருக்கும் ஆண்கள் ஏன் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள்?  பேருந்துப் பயணிகளுக்கெல்லாம் பாலியல் தொந்திரவு கொடுத்தால் சாமானிய மனுஷி என்னதான் பண்ணுவாள்? டெல்லியில் தான் நிர்பயா என்னும் அந்தப் பெண் தன் ஆண் நண்பனோடு இரவில் வந்தாள்னு காரணம் சொன்னாங்க. இப்போ ஒரு குடும்பமே தொந்திரவுக்கு ஆளாகி இருக்கு. அதிலே 13 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே இறந்து விட்டாள். பத்து வயதுப்பையரும், அவர் தாயும் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
*************************************************************************************
எங்கு பார்த்தாலும் வீடு புகுந்து திருட்டு, கொலை, கொள்ளை இத்யாதி, இத்யாதி! யாரும் எங்கேயும் எந்த விசேஷங்களுக்கும் அவங்க வீட்டைப் பூட்டிக் கொண்டு போக முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது! ஏன் இப்படினு தெரியவில்லை. ஒரு கணக்கெடுப்பில் மக்களுக்கு ஆடம்பர வாழ்க்கையின் மேல் ஆசை பெருகி விட்டதால் செலவுக்குச் சம்பாதிக்கும் பணம் போதாமல் இப்படிச் செய்வதாக முடிவு வந்திருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் ஆடம்பர வாழ்க்கையின் மேல் அனைவருக்கும் மோகம் இருக்கத் தான் செய்கிறது. சக்திக்கு மீறிக் கடன் வாங்கிப் பலரும் செலவழிக்கின்றனர்.  எது ஆடம்பரம், எது தேவை என்பதை முடிவு செய்வது நம் கைகளில் தான் இருக்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கு; எதிர்த்த வீட்டில் இருக்குனு ஒரு பொருளைத் தேவையோ இல்லையோ போட்டிக்கு வாங்கக் கூடாது. இதை நினைவில் வைத்துக் கொண்டாலே போதும்/
**************************************************************************************
வக்கிரமான காதல்கள் அரங்கேறுகின்றன. அதை அந்தக் காதலர்களின் படங்களோடு வெளியிட்டுப் பத்திரிகைகளும் மகிழ்கின்றன. முகநூல் போன்ற தளங்களிலும் வெளியிடுகின்றனர். கலியுகத்தில் இப்படி இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தாலும் இதன் மூலம் சமூகம் மிகவும் மோசமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவதற்கு யார் காரணம் என ஆராய்ந்தால் டாஸ்மாக் தான் காரணம் என்பது தெரியவருகிறது. பள்ளி மாணவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கின்றனர். இப்போது எல்லாம் பெண்களும் ஆரம்பித்து விட்டார்கள். சென்னையில் சர்வ சகஜமாகத் தெருக்களில் விழுந்து கிடக்கும் பெண்களைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் இலவசத்தை நிறுத்திவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடி மக்களை உழைக்கத் தயார் செய்வது தான் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்.
**************************************************************************************
தற்கொலையே கோழைத்தனமாகத் தான் நம் நாட்டில் கருதப்பட்டு வந்தது. பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துவிட்டுத் தன் குடும்பத்து மற்ற அங்கத்தினரைப் பொறுப்பைச் சுமக்கச் செய்து தற்கொலை செய்து கொள்பவர் மட்டும்  மரணத்தின் மூலம் தப்பிப்பதை ஒரு காலத்தில் அவமானமாகவே கருதி வந்தோம். இப்போது தற்கொலைக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுத்திருப்பதாலோ என்னமோ தற்கொலைகள் பெருகி விட்டன. இதற்காக 5 லக்ஷத்திலிருந்து பத்து லக்ஷம் வரை அரசாங்கம் தன் வரிப்பணத்தையும் செலவழிக்கிறது.  நாட்டில் அனைவரும் இப்படித் தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் தற்கொலைக்கு எனத் தனித் துறையைத் திறந்து வரப் போகும் வரவு செலவுக் கணக்கில் அதற்காகவும் நிதி ஒதுக்க வேண்டியது தான் பாக்கி!
************************************************************************************

இதை மறந்துட்டேனே! இன்று கமலஹாசனின் "உத்தமவில்லன்" திரையிடப் பட இருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் திரையிடப் படவில்லை.  அதைக் குறித்துத் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் விளம்பரங்கள், செய்திகள். திரும்பத் திரும்ப ரசிகர்களின் பேட்டிகள். அதிலே ஒரு ரசிகர் காலை 5 மணிக்கே சினிமாத் தியேட்டருக்கு வந்துவிட்டதாகவும், இன்னும் தலைவரைப் பார்க்க முடியலை; பார்த்து ரெண்டு வருஷமாச்சு: இன்னிக்கும் பார்க்க முடியலைனா தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான் என்கிறார். சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா எனத் தோன்றியது. இவங்களுக்கெல்லாம் வேறே வேலை இல்லையா? குடும்பம், குழந்தை, குட்டினு இல்லையா? ஒரு சினிமாப் படத்துக்கு நூற்றுக் கணக்கில் செலவு செய்பவர்கள் அந்தச் செலவை வீட்டில் காய்கறிகள் வாங்கிப் போடுவதில் செய்வார்களா? அப்படியானும் படம் வந்த அன்னிக்கே பார்த்தால் என்ன அவார்டா கொடுக்கப் போறாங்க? வெட்கமாக இருக்கிறது. :(