எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 28, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?-- 16

ஆயிற்று. எல்லாம் முடிந்து விட்டது. ரவி எவ்வளவோ கவனமாக இருந்தும் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.  நேற்று தோட்டத்தில் அமர்ந்திருந்தான் ரவி  குழந்தைகள் விளையாடும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தன் அருமை மகளை அழைத்து வந்துவிடுவோமா என நினைத்தான்.  ஆனால் சாந்தியின் மேற்பார்வையில் விளையாடினார்கள் எனில்?  பின்னர் சாந்தி அவனைத் தவறாய்ப் புரிந்து கொள்வாள். ஆனால் குரல்கள் தேய்ந்தும், பின்னர் திடீரென வெளிப்பட்டும் மாறி மாறிக் கேட்டன.  ரவியால் புரிந்து கொள்ள முடியவில்லை.  எங்கே போய் விளையாடுகிறார்கள்? ஒரு கணம் கூர்ந்து கவனித்தான்.  ஓ, கண்ணாமூச்சியா?  இதுவும் அவன் அருமை மகளுக்குப் பிடித்த விளையாட்டு தான். அந்தப் பிசாசு தான் ஒளிந்து கொண்டிருக்கிறது போல.  அவன் மகள் அவளைத் தேடிச் செல்கின்றாள்.  அது வரையிலும் நல்லது தான்.  ஆனால் எங்கே ஒளிந்திருக்கிறது? குரல் வந்த திசையை மீண்டும் கவனித்துக் கேட்டபோது அவன் வேலை செய்யும் ஸ்டுடியோவில் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் பரண் ஒன்று உண்டு.  அங்கிருந்து தான் வருகிறது குரல்கள்.

ஆனால் எப்படி ஏறினார்கள்?  சற்று நேரத்திலேயே புரிந்தது அவனுக்கு. குழந்தைகள் படுக்கும் அறை ஃப்ரெஞ்ச் வின்டோ எனப்படும் மாதிரியில் படிகள் வைத்துக் கட்டப்பட்டது. அந்த்ப் படிகளில் இறங்கிக் குழந்தைகள் இங்கே வந்து ஏறி இருக்கின்றனர். அது அந்தப் பிசாசு முதலில் ஏறிப் போய் இருக்கு போல.  இப்போ அவன் மகள் ஏறிப் போகிறாள்.  ஐயோ இது என்ன?  ஜன்னல் கதவை யார் சாத்துவது?  அப்புறமாக் குழந்தைக்கு மூச்சு விடக் கூட முடியாதே!  திணறலில் பயந்து போய்க் கீழே விழுந்து விடப் போகிறாளே!  பயத்தில் மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது ரவிக்கு.  வேகமாய் வீட்டுக்குள்ளே ஓடினான்.  போகிற அவசரத்திலும் அந்தப் பிசாசின் உண்மையான சொரூபத்தைக் காட்டியாக வேண்டும் எனத் தன் காமிராவை அவசரமாக எடுத்துக் கோண்டான்.

மேலே நிமிர்ந்து பார்த்தான்.  பரணின் நுனியில் அந்தக் குட்டிப் பிசாசின் முகம் தெரிந்தது.  அவனைப் பார்த்ததோ இல்லையோ சட்டென முகம் மறைந்தது.  பின்னர் ஒரே கணம் அவன் மகள் அருமை மகள் சுஜாவின் முகம் பீதியில் உறைந்த முகம் தென்பட்டது.  சுஜா! என்று கத்தினான் ரவி. ஆஹா, இப்போப் பார்த்து சாந்தி என்ன செய்கிறாள்.  அவள் வந்தால்தான் இந்தப் பிசாசைக் கூப்பிட முடியும். வேகமாய் ஜன்னலில் ஏறிப் பரணின் நுனியில் இருந்த பிடிமானத்தைப் பிடித்துக் கொண்டு மேலே தாவி ஏறப் பார்த்தான் ரவி.  அதற்குள்ளாக அங்கே ஜன்னல் கதவு திறக்கப்பட்டிருந்தது. அந்தக்  குட்டிப் பிசாசு  மிகப்பலமாகவும் வேகமாயும் சுஜாவை ஜன்னல் பக்கம் வெளியே தள்ளியது.  விடு, என்னை விட்டு விடு என்று அலறிய சுஜாவின் குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைந்தே போனது. பரணில் ஏறிய ரவி அந்தப் பிசாசின் மேல் பாய்ந்தான். அதுவோ ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவனைப் பார்த்துவிட்டு அந்தப் படிகளில் இறங்கித் தங்கள் அறைக்குள் ஓட்டமாய் ஓடி விட்டது.

ரவி கீழே பார்த்தான் தள்ளப்பட்ட சுஜா கட்டிடத்தின் கீழே ரத்தம் பெருகி ஓடக் கிடந்தாள்.  மீண்டும் வெளியே ஓடி வந்தான் ரவி.  அப்போது தான் சாந்தியும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள்.  ரவி ஓடுவதைப் பார்த்துவிட்டு அவளும் என்னவோ ஏதோ என ஓடி வந்தாள்.

முடிந்துவிட்டது.  ரவிக்கு அவன் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் ஆகிவிட்டது. அவன் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோடாய் இருந்த சுஜாவும் போய்விட்டாள்.  இனி அந்தச் சாத்தானின் சாம்ராஜ்யம் தான்.  அதில் அவனுக்கு இடம் உண்டா?  சாந்தி துணைக்கு வருவாளா?  விரைவில் அதற்கு முடிவும் தெரிந்து விட்டது அவனுக்கு.  எல்லாம் முடிந்த மறுநாள் காலையில் சாந்தி அவனிடம் ஒரு பேப்பரைத் தூக்கிப் போட்டாள். அது என்னவெனப் பார்த்தவனுக்கு  அதிர்ச்சியில் மேலும் தூக்கி வாரிப் போட்டது.  விவாகரத்து நோட்டீஸ்.  அவன் கையெழுத்துக்காகக் கொடுத்திருந்தாள்.  மனப்பூர்வமாக இருவரும் மனம் ஒப்பிப் பிரிவதாக அதில் எழுதி இருந்தது.  சாந்தியை நிமிர்ந்து பார்த்தான்.

"ரவி, என் மனமும் வேதனையில் தான் ஆழ்ந்திருக்கிறது.  மிகவும் கஷ்டப்பட்டு வேதனைப் பட்டே இம்முடிவை எடுத்திருக்கிறேன்.  இப்போது இருக்கும் இந்த ஒன்றாவது எனக்கு மிஞ்சட்டும். நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொள்வதைக் குறித்து எனக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை.  ஆனால் அவளுக்குக் குழந்தைகள் இருந்தால் அவற்றையாவது ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு வாழ்ந்த இந்தப் பத்து வருஷங்களின் இனிமையான நினைவுகளிலேயே நான் என் வாழ்நாளைக் கழித்துவிடுவேன்.  எனக்கு இவளை வளர்த்து ஆளாக்குவதே இப்போது முக்கியம். மறு விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை. உங்கள் வசதிக்காகவே விவாகரத்துக் கோரியுள்ளேன்."  சொல்லிவிட்டு சாந்தி உடனே அங்கிருந்து அகன்றாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் தனக்கும் குழந்தைக்கும் வேண்டியவற்றை இரு சிறிய பைகளில் அடைத்துக்கொண்டு, தன்னுடைய கல்வித் தகுதிகள் மற்றும் தன் தனிக்கணக்கில் இருந்த பணம் மட்டும் எடுத்துக் கொண்டு தான் கிளம்புவதாகவும், தன்னை எங்கிருக்கிறாள் எனத் தேட வேண்டாம் எனவும், தான் ஒரு வேலை பார்த்துக் கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினாள் சாந்தி.

அடிப் பாவி பிரியும்படியாகவா வாழ்ந்தோம்!  உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும், ஒவ்வொரு விநாடியையும்  பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேனே!  என்னை மறக்க உன்னால் முடியுமா?  உன்னை மறக்க என்னால் தான் முடியுமா?


உன்னை முதல் முதல் பார்த்தபோது என்ன உடை அணிந்திருந்தாய் என்பதை இப்போது கேட்டால் கூடச் சொல்லுவேனே! எப்படியடி என்னை நீ பிரிந்து வாழ்வாய்! அரற்றினான் ரவி.  இப்போதாவது இந்தப் பிசாசைத் தூக்கிப் போட்டுவிட்டு வா,  நாம் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளாக இருப்போம் ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் நம்மால் ஆனதைச் செய்வோம், என்று வாதாடினான். ஆனால் சாந்தியின் காதுகள் அடைத்துவிட்டன போலும். ஆனாலும் வண்டி ஏறும் முன்னர் அவனருகே வந்து அவர்கள் தனிமையில் இருக்கையில் அவனை அழைக்கும் செல்லப்பெயரான "ப்ரின்ஸ் சார்மிங்" என அழைத்தாள்.  ரவி உடைந்தே போனான்.  அப்படியே அவளைக் கட்டி அணைக்கப் போனவனைத் தடுத்தாள் அவள்.  அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். "அன்பு! மாசற்ற அன்பு!  நான் அதைத் தான் உனக்குக் கொடுத்தேன், என் அருமை ப்ரின்ஸ் சார்மிங். பதிலுக்கு  நீ எனக்குக் கொடுத்ததோ?  நான்கு அருமையான உயிர்கள்!  உயிரை உறிஞ்சும் வேதாளமாக ஆகிவிட்டாய் நீ!  என் வழி வேறு.  உன் வழி வேறு.  இந்த வீட்டில் நீயே இனி வசித்துக் கொள்.  நான் போகிறேன்."

ஒரு கையில் பையையும் இன்னொரு கையில் அந்தக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு சாந்தி நடந்தாள்.  "அம்மா" வென்று அழைத்துக் கொண்டு அந்தக் குழந்தை அவள் தோளில் முகம் புதைத்தவண்ணம் அவனைப் பார்த்துச் சிரித்தது.  வெற்றிச் சிரிப்பாகவே தெரிந்தது அவனுக்கு.

என்றேனும் ஓர் நாள் சாந்திக்கு உண்மை புரியும்.  அவள் வருவாள்; அவளால் என்னை மறக்க இயலாது.  காத்திருப்பேன். இப்படிச் சொன்ன ரவி விவாகரத்துப் பேப்பரை சுக்குச்சுக்காகக் கிழித்துப் போட்டான்.

சாந்திக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

***************************************************************************************

பல வருஷங்களுக்கும் முன்பு படித்த கதை இது. நாவல் என்றே சொல்லலாம். கதைக் கருவை மாற்றவில்லை. சம்பவங்கள் முன்பின்னாக இருந்திருக்கலாம். கதையின் பெயரோ, எழுதிய ஆசிரியரோ நினைவில் இல்லை. நான்காவது குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறப்பதும், அவனுடைய ஒரே பெண் லூசி(?)யை அந்தப் பிசாசுக் குழந்தை அவன் கண்ணெதிரே கொல்லுவதையும் படித்த நினைவு இருக்கிறது. மற்றவை முன்பின்னாக இருக்கலாம். ஒரிஜினல் படிச்சவங்களும் சரி, இனி தேடிப் பிடிச்சுப் படிக்கப் போறவங்களும் சரி, என்னை மன்னிக்கணும். என்னை மிகவும் பாதித்த மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு தமிழில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளும், ஆங்கிலத்தில் A Stone for Danny Fisher நாவலும். இந்தக் கதை ரொம்பவே ஆழமாய் மனசில் பதிந்துள்ளது. 


பிகாபூ

இந்தச் சுட்டியில் இந்தக் கதையை ஓரளவுக்குச் சுருக்கமாக பத்து அல்லது பனிரண்டு பதிவுகளில் 2009 ஆம் ஆண்டே கொடுத்திருந்தேன்.  அதைப் படித்தவர்களும் இருக்கலாம். நினைவூட்டலுக்காகக் கொடுத்துள்ளேன். அப்போதும் சரி இப்போதும் சரி கதையை நினைவில் இருந்தே கொடுக்க முயன்றிருக்கிறேன்.  ஆரம்பமும் சரி, முடிவும் சரி இது தான் என்பது நன்றாக நினைவில் இருக்கிறது.  நடுவில் வரும் சம்பவங்களிலும் பேச்சுகளிலும் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏற்பட்ட தவறாக இதை எடுத்துக் கொண்டு பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். :)))))

Tuesday, May 27, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? 15

இங்கே

எல்லாமே இயந்திரத்தனமாய் நடந்து வந்தது.  சாந்திக்கும் அதிர்ச்சி தான்.  கணவன் இப்படி எல்லாம் பேசுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எதுக்கெடுத்தாலும் இந்தக் குழந்தையைக் குற்றம் சாட்டுகிறானே என மனம் வேதனைப்பட்டாள். அவனுக்கு ஸ்டெரிலைசேஷன் யாரானும் பண்ணி இருப்பார்களோ என்றும் சந்தேகப்பட்டாள்.  தன்னை பயமுறுத்த வேண்டி ஏன் அவன் இப்படிச் செய்திருக்கக் கூடாது?  கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைக் குறைத்தாள் சாந்தி.  ரவிக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.  சாந்தியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். குயில் குஞ்சுகள் இப்படித் தான் மற்றப் பறவைக்குஞ்சுகளைத் தள்ளிவிட்டுக் கொல்லும் என்பதைப் படமாக எடுத்து வைத்திருந்ததைத் தன் ஒரே பெணுக்குப் போட்டுக் காட்டுவதுபோல் சாந்தி இருக்கும் நேரம் பார்த்துப் போட்டுக் காட்டினான். வர வர சாந்தி அவனுக்கு உணவு பரிமாறக் கூட வருவதில்லை.

சாந்திக்கோ இனி தங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காது என்பதால் இருக்கும் இந்த இரு குழந்தைகளையாவது நன்கு கவனிக்க வேண்டும் என்று இருந்தாள்.  எக்காரணத்தாலோ அவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்கவில்லை. இது என்ன செய்தது? தன் கணவனுக்கு ஏதேனும் மனநோய் வந்துவிட்டதோ என்று கூட சந்தேகித்தாள். மிஞ்சி இருக்கும் ஒரே பெண் குழந்தையைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்பதையும் உணர்ந்திருந்தாள். காலம் எதற்கும் காத்திருக்காமல் ஓட்டமாய் ஓடியது.  அன்று இனம் தெரியாத மன வேதனையில் ஆழ்ந்திருந்த ரவி தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.  வெளியே தோட்டத்தில் கட்டி இருந்த ஊஞ்சலில் குழந்தைகள் இருவரும் விளையாடும் சந்தோஷக் கூச்சல் கேட்டது. சற்று நேரம் வரை அது மனதில் பதியாமல் ஏதேதோ யோசித்த ரவி, சட்டென்று நினவு வந்தவனாய் அறை ஜன்னலில் இருந்து தோட்டத்திற்குள் பார்த்தான்.

அவன் அருமைப் பெண் சுஜா! ஒரு தேவதையைப் போல வெண்ணிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.  வேகமான ஆட்டத்தில் வந்த காற்றில் தலைமயிர் பறந்து கொண்டிருந்தது.  மாறிமாறி இருகைகளையும் ஊஞ்சல் சங்கிலியில் பதித்துப் பிடித்த வண்ணம் ஆடினாள் சுஜா. ரவிக்குப் பார்க்கையில் சாந்தி கூடக் குழந்தையாய் இருக்கையில் இப்படித் தான் இருந்திருப்பாள் எனத் தோன்றியது.  தன்னையும் அறியாமல் இதைசாந்தியிடம் சொல்ல வேண்டும் என எண்ணிப் புன்னகைத்துக்கொண்ட ரவி ஊஞ்சல் இன்னும் வேகமாய் ஆட்டப்படுவதைக் கண்டான். யாரோ ஆட்டுகின்றனரே.  சாந்தியோ? இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை! கடவுளே!  அந்தக் குட்டிப் பிசாசு ஆட்டுகின்றதே!  வேகமாக வெளியே பாய்ந்தான் ரவி.

இப்போது சுஜாவுக்கே பயம் வந்து அலற ஆரம்பித்திருந்தாள்.  ரவி இன்னும் வேகமாய் ஓடினான்.  ஆனால்...... அதற்குள்....அதற்குள்,,,,,, அந்தக் குட்டிப் பிசாசு ஊஞ்சல் பலகையை அப்படியே மேலே தூக்கி வீச, சுஜா வேகமாய்த் தூக்கி வீசப்பட்டு தூரத்தில் போய் விழுந்தாள்.  நல்லவேளையாக ரவி அவளை அப்படியே ஓடிப் போய்த் தன் கைகளில் பிடித்துவிட்டான்.  அடிபடவில்லை என்றாலும் சுஜாவின் பயம் குறையவில்லை.  பயத்தில் ஜுரமே வந்துவிட்டது அவளுக்கு. அந்தப் பிசாசுக் குழந்தை அங்கேயே நின்ற வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் இருந்த வெறுப்பும் கோபமும் அவனை உறைய வைத்தது. சுஜாவைத் தோளில் போட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டே தன்னறைக்குச் சென்றான் அவன்.  சுஜாவை எவ்வாறேனும் காப்பாற்றியே ஆகவேண்டும்.  எப்படி? தன்னுடனேயே வைத்துக்கொள்ளலாம் அவளை.

ஆனால் தாயிடம் போகாதேனு சொல்ல முடியாதே!  மேலும் சாந்தி தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையே தவிர அவனுக்கு சாந்தியைப் புரிந்திருந்தது.  ஆகவே சாந்தியிடம் சுஜா செல்வதைத் தடுக்கவில்லை அவன். சாந்திக்கு எதிரே அது சுஜாவை எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தான்.  எனினும் அது தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தான்.  சாந்தி அவனோடு பேசாமல் அவனிடம் வராமல் அவனுக்கு உணவு பரிமாறாமல் யாரோ மூன்றாம் நபர் போல் நடப்பதையே அவனால் தாங்க முடியவில்லை.  இந்தப் பத்துவருஷ வாழ்க்கையில் அப்படியா வாழ்ந்தனர்? ஓரிரவில் அனைத்தும் மாறி விட்டதே!  குழந்தை வந்தால் சந்தோஷம் வருவதற்கு பதிலாக இங்கே பிரிவினை அல்லவோ வந்திருக்கிறது!

அடுத்த பதிவில் முடியும்.

Sunday, May 25, 2014

பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய வேண்டாம்! பித்ரு கடன் செய்யுங்கள்!

இன்றைய நாட்களில் சிராத்தம், திதி போன்றவற்றை நினைவில் கொள்வது கூடச் சரியில்லை; அதனால் என்ன பலன்? என்பது பெரும்பாலோர் கருத்தாக இருந்து வருகிறது.  ஆனால் பகுத்தறிவு வாதிகளில் இருந்து யாராக இருந்தாலும் சரி அவரவர் தலைவர்கள் நினைவு தினத்தை அனுசரிக்க மறப்பதில்லை.  குறைந்த பக்ஷமாகப் பூக்களையானும் தூவி படங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.  இதை நாத்திகம் பேசும் அனைவருமே செய்கின்றனர்.  இப்போ மட்டும் அவங்களுக்குத் தெரியவா போகிறது?  ஏன் செய்ய வேண்டும்?

உண்மையில் நீத்தார் கடன் என்பது நாம் இருக்கையில் நமக்கு வேண்டுமானால் தொந்திரவு கொடுத்திருக்காது.  ஆனால் அது நமக்குப் பின்னர் தொடரும் சந்ததிகளுக்குக் கட்டாயமாய்ப் பிரச்னைகளை உண்டு பண்ணும்.  ஏனெனில் இது நம்முடைய கடன்.  கடனை அடைக்காமல் நாம் இருந்தால் அது வட்டியோடு சேர்ந்து நம் சந்ததிகளிடம் தானே வசூலிக்க முடியும்? எப்படி என்பதைப் பின்வரும் பத்திகளில் இருந்து படிக்கவும்.  இது திருமதி ஜெயஶ்ரீ சாரநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதியது.  கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன் முழுப்பதிவையும் படிக்க.  இங்கே தேவையானதை மட்டும் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன்.

ஜெயஶ்ரீ சாரநாதனுக்கு நன்றி.

பித்ரு கடன்

உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

pithru-karmaதாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.

நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…


இது குறித்துப் பரமாசாரியார்கள் சொல்லி இருப்பது கீழே:  தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம்.


ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை;இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை;இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை (Cerberus) சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். என்று Viaticum கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பதரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls' Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான் இருக்க வேண்டும்.


நன்றி: காமகோடி தளம்

அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுப்பதோ, அல்லது ஏழைகளின் படிப்பு, கல்யாணங்களுக்கு உதவுவதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.  அதை இங்கே யாரும் தடுக்கவில்லை.   அதையும் செய்யுங்கள்; இதையும் செய்யுங்கள்.  அநாதை ஆசிரமத்திற்குக் கொடுப்பது உங்கள் சொந்தப் புண்ணியம் எனில் பித்ரு காரியம் செய்வது சந்ததிகளுக்குச் சேர்த்து வைக்கும் சொத்து. பித்ரு காரியம் செய்வது வேறு, இது வேறு.  பித்ரு காரியங்களைச் செய்யாமல் இம்மாதிரி செய்வதில் இப்போதைக்கு நாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்ததாக நினைக்கலாம். எங்கேயோ இருக்கும் போஸ்ட் ஆஃபீஸில் நாம் வேறொருவர் பெயரில் அனுப்பும் அனுப்பும் பணம் குறிப்பிட்ட நபருக்குப் போய்ச் சேருவது போல் நாம் இங்கே நம் பெற்றோருக்குச் செய்யும் திதி, தர்ப்பணங்கள், பிண்டங்கள் அவர்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குக் கட்டாயமாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்.  நமக்குத் தெரியலை என்பதால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைக்க வேண்டாம். வெளிநாட்டினரில் இருந்து எல்லோருமே நீத்தார் கடனைக் கைக்கொள்வதை வழக்கமாய் வைத்திருக்கின்றனர்.  யூதர்கள் வருடா வருடம் நீத்தோர் தினத்தில் அவர்கள் கல்லறையில் கல் வைப்பதை வழக்கமாய்க் கொண்டிருப்பதாய் எப்போவோ படிச்சிருக்கேன்.  

இன்றைய அவசர உலகில் பலருக்கும் இதை நினைக்க நேரம் இல்லை னு சொல்வாங்க.  ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.  இதிலே சிலருக்கு இருக்கும்போது தாய், தந்தையரைச் சரியாப் பார்த்துக்காதவங்க பித்ரு காரியம் மட்டும் செய்தால் சரியாப் போயிடுமானு கேட்கின்றனர்.  இருக்கும்போது அவர்களை மனக் கஷ்டம் வரவழைத்ததற்கு நமக்கு நாம் இருக்கையிலேயே அதற்கான தண்டனை கிடைத்துவிடும்.  ஆனால் பித்ரு காரியம் என்பது நாம் விட்டுச் செல்லும் கடன்.  தாய், தந்தையரை உயிருடன் இருக்கையில் எப்படி வைச்சிருந்தாலும் அவர்கள் இறந்ததும் முறைப்படி கர்மாக்களைச் செய்வது தான் நம் சந்ததிகளுக்கு நன்மை பயக்கும்.  அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.  உயிருடன் இருக்கும்போதும் செய்யாமல், செத்தப்புறமும் விரோதம் பாராட்டுவது அழகில்லை. 

நண்பர் ஒருவருடன் ஆன மடலாடலில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலாகவே இதை அளித்திருக்கிறேன். அதோடு ஜிஎம்பி சாரின் பதிவிலும் அவரும் இன்னும் சிலரும் பித்ரு காரியம் என்பது தேவையற்றது என்ற கருத்தைக் கூறி இருந்தார்கள்.  அதன் பேரிலும் இதை எழுதலாம் எனத் தோன்றியதால் எழுதி உள்ளேன்.  வெளிநாட்டு வாழ் மக்கள் இப்படி எதுவும் செய்யறதில்லையேனும் சிலர் கேள்வி. உண்மை அவங்களுக்கு இப்படிக் கிடையாது.  இந்த நாடு தான் கர்ம பூமி. ஞான பூமி.  நாமே வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் அங்கே எந்த கர்மாவும் செய்யக் கூடாது.  செய்தாலும் அதனால் பலன் இல்லை. இந்தியா வந்து தான் செய்யணும்.   இங்கே மட்டும் தான் அதற்கான பலன்கள் கிட்டும்.  இது தான் கர்மம் செய்து அதன் மூலம் ஞானம் விளையும் பூமி.   இந்தியாவில் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய வேண்டும்; செய்ய முடியும்.

Friday, May 23, 2014

முக்கியமான செய்தி ஒண்ணு சொல்றேன்! :)

birthday song

https://www.youtube.com/watch?v=EKZvq0dUk50&feature=youtube_gdata_player

லிங்க் நல்லாவே வேலை செய்யுது.  இருந்தாலும் கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன்.  இன்னிக்கு என்னோட பிறந்த நாளை இணைய உலகே கொண்டாடுதா, கூகிள் காலங்கார்த்தாலே கணினியைத் திறந்ததுமே கேக்கோடும், மற்றப் பரிசுகளோடும் வந்துடுச்சு.  அதுக்கப்புறமா முகநூல் வந்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போச்சு.  அதுக்கப்புறமா முகநூலில் எல்லா நண்பர்களும் வாழ்த்துச் சொல்லி இருக்காங்க.  அதுக்கு பதில் சொல்லிட்டு வரேன்.  குழுமத்திலும் நண்பர்கள் வாழ்த்து.

அதிலே பாருங்க நம்ம பார்வதி ராமச்சந்திரன் அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க.  மேலே உள்ள யூ ட்யூப் சுட்டி அவங்க கொடுத்தது தான்.  அதிலே வருது பாருங்க பிறந்த நாள் பாட்டு.  இன்னிக்கு வரை கேட்டதில்லை.  உங்க வீட்டுக் குழந்தைகளுக்கும் அனுப்பலாம் என்பதால் அந்தச் சுட்டியை இங்கே பகிர்ந்திருக்கேன்.  போய்ப் பாருங்க.  ரொம்ப நல்லா இருக்கு.  நான் ரசிச்சேன்.

இதைத் தவிர சுகி சிவத்தோட கீதைச் சொற்பொழிவும், "அன்பே, சங்கீதா" என்ற பாடல் காட்சியும் அனுப்பி இருந்தாங்க.  அன்பே சங்கீதானு பாட்டு இருக்குன்னே இன்னிக்குத் தான் தெரியும். :))))  நானும் சினிமா அறிவை வளர்த்துக்கணும்னு தான் பார்க்கிறேன்.  அது என்னமோ வளரவே மாட்டேங்குது. இனிமே எங்கே! வரேன், இன்னிக்கு இதிலேயும் மின் வெட்டிலேயும் பொழுது போயிடுச்சு. 

Tuesday, May 20, 2014

தி. ஜானகிராமனின் "உயிர்த்தேன்!"

சமீபத்தில் நிறையவே புத்தகங்கள் இணையத்தின் தயவில் படிக்க முடிந்தது. ஆனால் அதை விட அதிசயமாக தி.ஜானகிராமனின் "உயிர்த்தேன்" கதையை இப்போது படிக்க நேர்ந்தது தான் அதிசயத்திலும் அதிசயம். ஆனந்த விகடன் பைன்டிங்கில், அந்தக் காலத்து கோபுலுவின் படங்களோடு படித்தேன். ஜானகிராமன் அவர்களின்  "அன்பே, ஆரமுதே," தான் முதல் அறிமுகம். அப்புறமாச் சித்தப்பா  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது  தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை முதல் முதல் படிக்கையில் அதிர்ச்சி வந்தது.  அதுக்கும் முன்னால் அவரோட "அன்பே, ஆரமுதே!" கதை கல்கியில் தொடராக வந்தப்போ அம்மா படிச்சுச் சொல்லுவாங்க.  பின்னர் நானும் படிச்சேன். என் மனசுக்கு ரொம்பப் பிடிச்சதா இருந்த கதை அது.  அதன் பின்னர் தான் விகடனில் இந்தக் கதையும், "செம்பருத்தி"யும் வந்தது. செம்பருத்தி அரைகுறையா நினைவில் இருக்கு. கிடைச்சாப் படிக்கணும். இப்போ உயிர்த்தேன் கதையைப் பார்க்கலாமா?

கதை முழுக்க முழுக்க ஆறு கட்டி கிராமத்தைச் சுற்றியே வருகிறது.  சென்னையில் தொழில் செய்து நிறைய பணம், காசு பார்த்துவிட்ட பூவராகன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து அங்கேயே நிரந்தரமாய்த் தங்க ஏற்பாடு செய்கிறார்.  சொந்த ஊரிலேயே நிலம், நீச்சு, வீடு, வாசல் எல்லாமும் வாங்குகிறார். அவருக்கான வீட்டுக்கு ஏற்பாடுகள் செய்து நிறைவடைவதில் கதை ஆரம்பிக்கிறது.  பூவராகனின் மாமா மகன் சிங்கு என்னும் நரசிம்மன் தான் இந்த உதவியை எல்லாம் கார்வார் கணேச பிள்ளையையும், அவர் மனைவி செங்கம்மாவையும் வைத்துக் கொண்டு செய்து முடிக்கிறார். இந்த செங்கம்மா தான் கதாநாயகி.  முதன் முதல் தன் வீட்டுக்குக் கிரஹப்ரவேசம் செய்யும் பூவராகன் உதவிக்காக வரும் செங்கம்மாவைப் பார்த்து அதிசயிக்கிறான்.  ஏனெனில் செங்கம்மா அழகென்றால் அப்படி ஓர் அழகு! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியைப் போன்ற அழகல்ல.  வற்றாமல் பெருகிக் கொண்டே இருக்கும் ஊற்றுக் கண்ணைப் போன்ற அமைதியான அழகு.  நுங்கும், நுரையுமாக ஆரவாரத்தோடு செக்கச் சிவந்த முகத்தோடு காதலனைக் காணவேண்டி ஓடோடி வரும் புது வெள்ளத்துக்கு அப்புறம் கொஞ்சம் நிதானம் வந்து புக்ககம் வந்துவிட்டோம், இனி ஆட்டம் பாட்டம் எல்லாம் இல்லை என நினைத்துக் கடலரசனைக் காண வேண்டி அமைதியாகவும், நாணத்தோடும், அடக்க ஒடுக்கத்தோடும் செல்லும் நதியின் அழகு.  இப்படிப் பட்ட அழகு இந்த ஊரிலா என மலைத்துப்போகிறார் பூவராகன்.  ஆனால் அவளிடம் அவருக்குத் தப்பான எண்ணமே தோன்றவில்லை. இது ஏதோ தெய்வாம்சம் எனத் தோன்றுகிறது.  செங்கம்மாவைப் பார்த்தாலே விழுந்து வணங்கத் தோன்றுகிறது.

சிவகங்கைச் சீமையில் வயிற்றுக்கு இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செங்கம்மாவை அவள் தந்தை மூலம் தூரத்துச் சொந்தமான கார்வார் கணேச பிள்ளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டு வருகிறார்.  இந்தச் செங்கம்மாவுக்கு ஊரின் இரண்டு பட்ட நிலையைக் கண்டு மனதுக்குள் வருத்தம்.  அதோடு இயல்பாகவே அவள் உடலில் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக அன்பு தான் ஓடுகிறது.  அனைவரையும் தன் அன்பால் ஆண், பெண் பாகுபாடே இல்லாமல் அரவணைத்துக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறாள்.  ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.   அவள் இயல்பு இது தான் என அவளுக்கே பூவராகன் வரும் வரை புரியவும் இல்லை அவளுக்கு. ஆறுகட்டி ஊரில் உள்ள பெருமாள் கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.  சிவன் கோயில் புல், பூண்டு முளைத்துப் பாழடைந்து போய் விட்டது.  இது எல்லாமும் சரி பண்ணணும்.  அதோடு ஊரில் நிலத்தில் பாசனம் செய்யாமல் சோம்பிக் கொண்டு வம்பு பேசிக் கொண்டு கிடக்கும் ஊராரை மாற்ற வேண்டும்.  

ஆனால் இதை எல்லாம் எடுத்துப் பண்ணுவது யார்?  வெளியூரிலிருந்து எக்கச்சக்கமாய்க் காசு, பணத்தோடு வந்திருக்கும் பூவராகன் முதலில்  பெருமாள் கோயில் திருப்பணியை மேற்கொள்ளுகிறான். இத்தனை நாள் சும்மா இருந்த கோயிலில் திருப்பணி ஆரம்பித்தாலும் ஊர்க்காரர்கள் உதவி என்னமோ கிடைக்கவில்லை.  ஒதுங்கியே நிற்கின்றனர். கிடைக்க விடாமல் தடுப்பதும் அந்த ஊர்க்காரனே.  வேலு என்பவன்.  பூவராகன் இப்போது விலைக்கு வாங்கிக் குடி இருக்கும் வீட்டை முழுக்க முழுக்க அனுபவித்துக்  கொண்டிருந்தவன்.  வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை பூவராகனுக்கு விற்றதில் இருந்து அவனுக்கு மனம் கொதிக்கிறது.  அது மட்டுமில்லாமல் செங்கம்மா வேறு பூவராகன் வீட்டுக்கு உதவியாக வருவதும், போவதுமாக இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.  ஏனெனில் அவன் செங்கம்மாவைக் காதலிக்கிறான்.  பூவராகன் கிரஹப்பிரவேசம் செய்த போது சண்டைக்கு வந்துவிட்டுப் பின்னர் பூவராகனின் அமைதியான போக்கினால் ஏதும் பேச முடியாமல் சென்று விடுகிறான்.  ஆனால் அவன் மனம் இதைத் தனக்குக் கிடைத்த தோல்வியாகவே நினைக்கிறது. இந்த வேலு தான் செங்கம்மாவைக் காதலிக்கிறான். ஆனால் அவனுக்கு மனைவி இருக்கிறாள்.

 இருவருக்குமே திருமணம் ஆகி விட்டது.  வேலுவுக்கு மனைவி இருக்கிறாள். அது போல் செங்கம்மாவுக்கும் கணேச பிள்ளை கணவர்.  அவர் அவளை அருமையாக நடத்தி வருகிறார். அவளும் அவரை முழு மனதோடு நேசிக்கிறாள்.  அன்பு செலுத்துகிறாள்.  கணவன் தனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துகிறாள்.  ஆகவே திருப்தியுடன் அவர் சம்மதத்தோடு பூவராகவன் வீட்டில் வேலை செய்யும் செங்கம்மா பூவராகவனுக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்தபோது கூட அவனுக்குத் தைலம் எல்லாம் தேய்த்துவிடுகிறாள்.  கணேசபிள்ளைக்குத் தன் மனைவி மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக இதைக் கண்டு கோபப்படவில்லை.  எனில் பூவராகவன் மனைவி அதற்கும் மேல்.  செங்கம்மாவைக் குல தெய்வமாகவே கொண்டாடுகிறாள். அவளுக்கும் இதெல்லாம் தவறாகப் படவே இல்லை. இப்போது தான் செங்கம்மாவிடம் இருக்கும் திறமைகளைக் கண்டு கொள்ளும் பூவராகன் அவள் தான் இந்த ஊரின் தலைமையை ஏற்கத் தகுந்தவள் என அவளிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான்.

இதற்கு நடுவில் ஊரின் விவசாயம் முழுமைக்கும் பூவராகனே பொறுப்பேற்றுக் கொண்டு நடத்திக் காட்டுகிறான்.  அமோக விளைச்சலால் ஊரே மகிழ்ந்திருக்க, வேலு மட்டும் பூவராகனோடு சேராததால் மனம் கொதித்திருக்கிறான்.  ஊர் மக்கள் அனைவருமே இப்போது பூவராகன் பக்கம் வந்துவிட.  கோயில் திருப்பணியும் பூர்த்தி அடைந்து கும்பாபிஷேஹம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இப்போது நடத்தி முடிக்க ஆவன செய்கின்றனர்.  வேலுவோ தன்னிடம் இருக்கும் ஊர்ப்பணத்தை செங்கம்மாவிடம் ஒப்படைக்க மறுக்கிறான்.  செங்கம்மாவுக்குப் பெண்களுக்கே உரிய நுட்பமான அறிவால் வேலுவின் எண்ணம் புரிகிறது. ஆகவே அவனிடம் நேரில் போய்ப் பேசி அந்தப் பணத்தை அவனிடம் இருந்து வாங்கச் சென்ற செங்கம்மாவை அவன் கட்டி அணைத்து முத்தமிட்டுத் தன் காதலைத் தெரிவிக்கிறான்.  அதன் பின்னர் ஊர்ப்பணத்தை அவளிடம் கொடுக்கிறான்.  ஆனால் கோவில் கும்பாபிஷேஹத்தில் கலந்து கொள்ளாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுகிறான்.  திரும்ப வருகிறானா?

கதையில் முக்கிய பாத்திரங்கள் செங்கம்மா, கார்வார் கணேச பிள்ளை, பூவராகன், அவன் மனைவி, பெண்கள், வரதன், ஆமருவி, பூவராகனின் சிநேகிதி அனு, வேலு போன்றோர் தான்.

இதில் அனுவைப் பற்றி முதலில் படிக்கையில் மனம் ஒரு மாதிரித் தான் ஆகிறது.  ஆனால் அவள் வாழ்க்கை அவளுடையது, அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை வாழ அவளுக்கு உரிமை உண்டு என்பதைப் பார்த்தால் அனுவின் பக்கத்து நியாயமும் புரிகிறது.  முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட அனுவும், செங்கம்மாவும் அன்பினால் இணைகிறார்கள்.  அனுவை செங்கம்மா புரிந்து கொள்கிறாள்.  செங்கம்மாவையும், கணேசபிள்ளையையும் அனுவும் புரிந்து கொள்கிறாள் வெளியூர் சென்ற வேலு கார்வார் கணேச பிள்ளைக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறான்.  அதை செங்கம்மாவும், கணேசபிள்ளையும் சேர்ந்து படிக்கின்றனர்.  வேலு என்ன ஆனான் என்பது அதிலிருந்து தெரிகிறது.

மற்றபடி சென்னையில் வளர்ந்திருந்தாலும் பூவராகனின் பெண்கள் குடும்பக் கலாசாரத்தை ஒட்டி வளர்ந்திருப்பது குறித்துப்பல இடங்களில் வருகிறது. அதோடு பூவராகனும் செங்கம்மாவைப் பற்றி அவன் மாமன் மகனோடு பேசும் இடம் அருமை.  துளிக்கூட விரச பாவமே இல்லாமல் தன் மனதை வெளிப்படுத்தும் பூவராகன். அதைப் புரிந்து கொள்ளும் நரசிம்மன்.  இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்னும் எண்ணமே தோன்றுகிறது!

படித்தால் பற்பல சிந்தனைகளை ஏற்படுத்தும் புத்தகம். அன்பினாலேயே அனைவரையும் கட்டலாம் என்பதை தி.ஜானகிராமன் அழகாகச் சொல்லி இருக்கிறார்.  நடைமுறை சாத்தியங்கள் இப்போதும் அப்படித் தான் இருந்தும் வருகிறது. செங்கம்மாவே அழகாய்ப் பிறக்காமல் வேறு மாதிரி பிறந்திருந்து இப்படி எல்லாம் நடந்திருந்தால்?  அந்த ஒரு எண்ணம் அவளையும் தாக்கவே அவள் தனக்குக் கிடைத்த கெளரவத்தை  எல்லாம் பெரிசு பண்ணவே இல்லை.  இயல்பாகவே இருக்கிறாள்.  ஆனால் கடைசியில் அவளுடைய அன்பெனும் வேள்விக்குக் கொடுக்கப்பட்ட ஆஹுதி தான் கதையின் முக்கியமான அம்சம். உயிராகிய தேனை மாந்தி மாந்திக் குடித்த ஓர் உயிர், செங்கம்மாவை அடைய முடியாமல் தவித்த ஓர் உயிர். கதை படியுங்கள் புரியும்.

புத்தகமாக வெளி வந்திருக்கலாம்.  அது பற்றித் தெரியவில்லை.  என்றாலும் ஜானகிராமனின் கதைகள் அனைத்துமே புத்தகமாக வெளி வந்திருக்கின்றன. ஆகவே இதுவும் வந்திருக்கலாம். 

Saturday, May 17, 2014

மோதி அலை இங்கேயும்! :)

ஹிஹிஹி, மோதி அலை இங்கேயும் அடிச்சிருக்கு!  சும்மாவே நம்ம ரங்க்ஸுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம்.  அவர் கிழக்குனா நான் மேற்கு. அவர் தொலைக்காட்சினா நான் கணினி. அவர் சாம்பார் சாதம் சாப்பிட்டால் நான் சாம்பாரை ஸ்பூனிலே விட்டுக்கும் டைப்!  அவர் உயரம்; நான் எதிர்மறை! எனக்கு வம்பிழுக்க, கலகலவெனப் பேசப் பிடிக்கும்;  அவர் நேர்மாறாக இருப்பார்.  இப்போல்லாம் நானே அப்படி மாறிட்டதா அக்கம்பக்கம், உற்றம் சுற்றங்களிலே சொல்லிட்டு இருக்காங்க.

தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்கள் வாங்க எனக்குப் பிடிக்காதுன்னா அவர் வாங்கித் தான் பார்க்கலாமேங்கற டைப்.  பயங்கர ஷாப்பர்; நான் ஷாப்பிங் என்றாலே அலறும் டைப்!  ரொம்ப ஆசையா எனக்குப் பயன்படுமா; பயன்படாதானு கூடத் தெரிஞ்சுக்காம, கேட்டுக்காம வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கிக் குவிக்க ஆசை;  வாங்கவும் செய்வார். அவ்வப்போது நான் போடும் கத்தலால் கொஞ்சம் ஆசைகளை மட்டுப்படுத்திக்கிறார்.  

அதே மாதிரித் தான் காய்கள் வாங்கறச்சேயும்.   நான் திட்டம் போட்டு இன்றைய சமையலில் இருந்து நாளை, நாளன்னிக்கு வரை யோசிச்சுட்டு அதுக்கு ஏற்றாற்போல் வாங்கணும்னு சொல்வேன்.   அதோடு வத்தக்குழம்பு என்றால் பொரிச்ச கூட்டு அல்லது மோர்க்கூட்டு, சாம்பார் எனில் தேங்காய் போட்ட கறி அல்லது வதக்கல் கறி அல்லது பொரிச்ச கூட்டு. மோர்க்குழம்பு என்றால் புளிக்கீரை அல்லது புளி விட்ட கூட்டு, துவையல்னா பச்சடி அல்லது டாங்கர் என யோசித்து அதற்கேற்ப காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பேன்.  ஆனால் அவர் பொரிச்ச குழம்பு பண்ணிட்டு வாழைத்தண்டு மோர்க்கூட்டும் பண்ணுனு சொல்வார்.  என்னோட பிபி எகிற ஆரம்பிக்கும்.

அவர் மார்க்கெட்டுக்குப் போனால் ஒரே நாளில் வெண்டைக்காய், பூஷணிக்காய், சேனைக்கிழங்கு, வாழைத்தண்டு, வாழைப்பூனு வாங்கிக் குவிப்பார்.  இது எல்லாத்தையுமே உடனே சமைச்சாகணும்.  இல்லைனா ருசியும் குன்றும், காய்களும் வீணாகிவிடும். வெண்டைக்காயை என்னதான் குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சாலும் கொஞ்சம் முத்தத் தான் செய்யும். பூஷணிக்காயை இன்று வாங்கி இன்றே சமைக்கணும்.  அதே போல் வாழைத்தண்டு, வாழைப்பூவும்.  ஒரு வாழைப்பூவே எங்களுக்கு 2 நாட்களுக்கு வரும்.  அதே போல் வாழைத் தண்டும். இந்த அழகில் எல்லாத்தையும் ஒண்ணா வாங்கிட்டு வந்துட்டு என் கிட்டேயும் வாங்கிக் கட்டிப்பார்.

பச்சை மிளகாய் வீட்டிலே இருக்குனு சொன்னால் கூட அங்கே நல்லா இருந்தது.  சின்னச் சின்ன மிளகாயா, விலையும் கம்மினு சொல்லிட்டு வாங்கி இருப்பார்.  அதை என்ன உடம்பிலேயே அரைச்சுப் பூசிக்கிறதுனு கோவிப்பேன். ஆனாலும் அடுத்த முறையும் அப்படியே!  இந்த அழகில் தான் நாங்க குடித்தனம் பண்ணிட்டு இருக்கோம். ஆனால் பாருங்க இத்தனை இருந்தும் இன்றைய நாளை மறந்தது இல்லை.  முதல் நாளே நினைவூட்டுவார்; நினைவூட்டிப்பார்.  இந்த வருஷம் சுத்தமா நினைவில் இல்லை.  

என்னனு கேட்டால் எல்லாம் மோதி அலையாம்!  மோதி அலை வந்து எல்லாத்தையும் சுத்தமா மறக்கடிச்சுட்டுப் போயிடுச்சு! இன்னிக்குக்காலம்பர பொண்ணு கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னப்போத் தான் நினைவிலேயே வந்திருக்கு.  இதுக்கு ஒரு கத்து கத்தலாமா?  சும்மா விட்டுடலாமா?  என்ன சொல்றீங்க?

Friday, May 16, 2014

தங்கத் தாமரை மகளே வா அருகே!மேலும் மேலும் உயரட்டும்.

வந்தேமாதரம்!  ஜெய்ஹிந்த்!

Wednesday, May 14, 2014

திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்!

செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்து ஆள்
  செய்ம்மின்! திருமாலிருஞ்சோலை
வஞ்சக்கள்வன் மாமாயன்
  மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
  நின்றார்; ஆர் அறியா வண்ணம் என்
 நெஞ்சும் உயிரும் அவைகண்டு
 தானே ஆகி நிறைந்தானே!

வஞ்சக்கள்வன் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்.  முன்னெல்லாம் முதல் நாள் மூணு மாவடியில் எதிர்சேவை பார்த்துட்டு அழகரோடயே வந்து அப்பாவின் நண்பரின் மண்டகப்படியிலும் கிட்ட இருந்து பார்த்துட்டு, அங்கே இருந்து ஓலைப் பெட்டியில் புளியஞ்சாதம், சர்க்கரைப் பொங்கல் கட்டி எடுத்துக் கொண்டு கீழ்ப்பாலத்தோடு பொடி நடையாய் வீட்டுக்குப் போவோம்.  நடப்பது அப்போதெல்லாம்  பெரிய விஷயமாய்த் தெரியலை. பல நாட்கள் மேலாவணி மூல வீதியில் இருந்து எங்க பள்ளிக்குக் கீழ்ப்பாலம் வழியாக நடந்தே போயிருக்கேன்.  ஆகவே பழகின வழி தான்.


அழகர் ஆற்றில் இறங்கற அன்னிக்குக் காலம்பர எல்லோர் வீட்டிலேயும் சீக்கிரமாவே எழுந்துடுவாங்க.  அம்மாக்கள் எல்லாம் குளிச்சு முடிச்சு அநேகமாப் பாதி சமையலும் பண்ணி வைச்சுடுவாங்க.  எல்லோருமாய் ஒரு குழுவாய் அழகரைக் காணக் கிளம்புவோம்.  ஆறு, ஆறரைக்குக் கிளம்பினால் ஏழரைக்குள்ளாக சரியா அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்கு நாமளும் போயிடலாம்.  கூட்டம் எல்லாம் முதல் நாளில் இருந்தே வைகையிலும், கரையிலும், மண்டகப்படிகளிலும் தங்குமாகையால் தெருக்களில் கூட்டம் அவ்வளவா இருக்காது.  கீழ்ப்பாலம் (கல்பாலம்) கிட்டேத் தான் கூட்டமே ஆரம்பிக்கும்.

வஞ்சக்கள்வன், மாமாயனின் அழகு மக்கள் மனதைக் கொள்ளை கொண்டதால் கள்ளழகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.  மூலவர் பெயர் பரமசாமி. உற்சவர் தான் சுந்தரராஜப்பெருமாள் என்னும் அழகர். கள்ளழகர் கோலத்தில் கையில் கன்னக்கோலுடன் கறுப்புச் சல்லடம் கட்டிக் கொண்டு கொண்டை போட்டுக் கொண்டு வரும் அழகரைப் பார்த்தால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள்.முகத்தின் அந்தப்புன்சிரிப்பு, குறும்பு கொப்பளிக்கும். நானும் உங்களில் ஒருவன் என்று சொல்லாமல் சொல்கிறார் அழகர்.  இன்னிக்கு இத்தனை நேரம் ஆத்தில் இறங்கி இருப்பார்.  என்ன உடை உடுத்தி வந்தார்னு இனிமேல் தான்பார்க்கணும்.உண்மையில் மண்டூக ரிஷிக்கு சாபவிமோசனம் தருவது தான் அழகர் மதுரைக்கு வருவதன் முக்கிய கட்டம்.  ஆனால் காலப்போக்கில் அழகர் ஆத்தில் இறங்குவதை மீனாக்ஷி கல்யாணத்தோடு தொடர்பு கொண்டு கதைகள் கிளம்பி இருக்கின்றன.  இதே மண்டூக ரிஷியின் சாப விமோசனம் நிகழ்ச்சி ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள இன்னொரு மலைக்கோயிலிலும் நடைபெறுகிறது.  அங்கே தான் ஆரம்பத்தில் நடைபெற்றதாகவும், பின்னர் அழகரோடு இதை இணைத்ததாகவும் அந்த ஊர்க்காரங்க கூறுகிறார்கள்.  அந்த மலையின் பெயர் மறந்துவிட்டது.  ஆனால் பெருமாள் அங்கேயும் சுந்தரராஜப் பெருமாள் தான்.  மலை உச்சிக்குப் போவது இன்னமும் கொஞ்சம் கடினமாய்த் தான் இருக்கிறது என்று தெரியவருகிறது. அங்கேயும் நூபுர கங்கை இருக்கிறாள்.  நானே இந்த ஊரைப்பத்தி ஒரு பதிவில் எழுதினேன்.  ஊர்ப் பெயர் மறந்துவிட்டதால் பதிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்கு நம்பெருமாள் வந்துட்டு இருக்கார். காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் இன்னிக்கு நடைபெறும்.  ஆண்டாள் இப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.  இன்னிக்கு வருமானு தெரியலை.  ஹிஹி, இதை எழுதும்போதே ரங்க்ஸ் பெருமாள் எதிரிலுள்ள மண்டகப்படிக்கு வந்துட்டதாக அழைப்பு விடுத்தார். கீழே போனேன்.  ஆண்டாளைக் காணோம். :(   பெருமாள் மட்டும் இன்னிக்கு ஶ்ரீபாதம் தாங்கிகளால் தாங்கப்பட்டு வெயிலுக்குத் திரை போட்டு அழைத்து வரப் பட்டார்.  சுடச் சுடப் படம் கீழே!


வழக்கமா வர பல்லக்கு தோளுக்கு இனியான் என எண்ணுகிறேன்.  அதிலே வரலை.  கிட்டப்போக முடியாமல் விரட்டி விடறாங்க.  ஓரளவு தொலைவில் இருந்து தான் எடுக்க முடிந்தது.  இன்னிக்கு ரொம்ப சிம்பிள் அலங்காரம்.  பெருமாளுக்கு அருகிலிருக்கும் திரை வெண்பட்டுத் திரை தான் வெயில் படாமல் பாதுகாக்க.  கிழக்கே பிடித்திருக்கின்றனர். 

Monday, May 12, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா ---14

ரவி மன உளைச்சலோடு இருந்தான்.  அவன் முகமே சரியில்லை.  நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்றே நினைத்தான்.  அன்று, அந்தப் பிசாசுக்குப் பொன்னுக்கு வீங்கி வந்தபோது தொலைபேசியில் பேசிய மருத்துவர் சொன்னது அவன் மனதில் அலை மோதியது. "ரவி, இந்தப்பொன்னுக்கு வீங்கி பெண்களுக்கு வந்தால் பரவாயில்லை.  ஆண்களுக்கு வரக் கூடாது.  ஆகவே உன் மகனை குழந்தையின் பக்கம் நெருங்க விடாதே.  என்னைக் கேட்டால் நீ கூட அந்தக் குழந்தையிடமிருந்து விலகியே இரு.  இந்தப்பொன்னுக்கு வீங்கி குழந்தை பிறக்க வைக்கும் விந்துகளை அழித்துவிடும்.  பின்னர் குடும்பக்கட்டுப்பாடே தேவையில்லை.  என்ன செய்தாலும் மீண்டும் சரி செய்ய இயலாது.  ஆகவே உன் சந்ததி வளரவேண்டுமானால் கவனமாக இரு!" என்றல்லவோ சொன்னார்.  ஆனால் அந்தப் பிசாசு அவனை அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு இரு நாட்கள் விடவே இல்லையே!

சாந்தியிடம் சொன்னதுக்குக் கூட, "அதான் நூற்றில் ஒருவருக்கு ஒண்ணும் நேராது என்றிருக்கிறார்.  நல்லதையே நினையுங்கள்.  ஒண்ணும் ஆகாது."  என்று சொல்லி விட்டாளே!  இப்போது நினைத்துப் பார்த்தால் அந்தப் பிசாசு திட்டமிட்டே இதைச் செய்திருக்கிறது.  அதன் பின்னர் பெரிய பையனையும் கொன்றிருக்கிறது.  ரவிக்கு எல்லாமும் புரிந்துவிட்டது.  ஆனால்??? ஆனால்??? மருத்துவரின் பரிசோதனை குறித்த அறிக்கை நல்லவிதமாக வந்துவிட்டால்?? இரவு முழுதும் கழிவதற்குள் ரவி தவித்துப் போனான். இரவோ நீண்டு கொண்டு போவதாகத் தெரிந்தது.  காலை எப்போது வரும் எனக் காத்திருந்து அவசரம், அவசரமாக மருத்துவருக்குத் தொலைபேசித் தெரிவித்துவிட்டுக் கிளம்பினான்.  காலை உணவு கூட எடுத்துக்கொள்ள மனம் வரவில்லை.  இது பற்றி  நிச்சயமாக ஏதேனும் தெரிந்தால் தான் அவனால் தண்ணீரே குடிக்க முடியும் போல் இருந்தது.


மருத்துவர் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.  எதுவுமே பேசாமல் ரவியிடம் அறிக்கையைக் கொடுத்தார்.  அதைப் படித்த ரவி திகைத்துப் போனான்.  He is sterilised! அது தான் அங்கு கண்டது.  மருத்துவரைக் கெஞ்சுவது போல் பார்த்தான் ரவி.  "நான் எதுவும் செய்யவோ, சொல்லவோ முடியாத நிலையில் இருக்கிறேன். ரவி.  உன் நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும்.  ஆனால் இது மிக மோசமாக உன்னைத் தாக்கி இருக்கிறது. இனி உன்னால் சாந்திக்குக் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்க முடியாது.  சாந்தியிடம் இதை நானே பக்குவமாக எடுத்துச் சொல்கிறேன்."  என்றார்.  பேசக் கூட முடியாமல் தலையை ஆட்டினான் ரவி.  அன்று அலுவலகம் செல்லக் கூட மனமில்லாமல் வீடு வந்து சேர்ந்தான்.  வீட்டில் தன் அறைக்குப்போய்க் கதவைச் சாத்திக் கொண்டு வாய் விட்டு அழுதான்.  கடவுளே, என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? என்றுபுலம்பினான்.  கதவு தட்டப்பட்டது.  கதவைத் திறந்தான் சாந்தி தான்.

அவள் முகமும் வெளுத்துக் களை இழந்து போயிருந்தது.  அவன் முகத்தைப் பார்த்தாள்.  எதுவும் பேசவே இல்லை.  அவனைத் தடவிக் கொடுத்தாள்.  அவள் மடியில் தலை வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான் ரவி. எதுவுமே பேசாமல் இருவரும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.  அப்போது அந்தக் குழந்தை அழும் சப்தம் கேட்க சாந்தி எழுந்தாள்.  அவளைப் போகவிடாமல் பிடித்து அமர்த்தினான் ரவி.  "போகாதே, சாந்தி! போகாதே.  இப்போது உன் அருகாமை எனக்கு மிகவும் தேவை.  அந்தப் பிசாசிடம் போனால் நீ என் சாந்தி மாதிரித் தெரியவில்லை. யாரோ வேற்று மனுஷியாகத் தெரிகிறாய்.  உன்னிடம் பேசினாலோ நீ என்னிடம் இப்போது காட்டும் இந்தப் பாசத்தையும் அன்பையும் எங்கோ கொண்டு ஒளித்து விடுகிறாய்.  அதைத் தூக்காதே.  அது வேண்டாம் நமக்கு!  நம் குடும்பத்தின் சாபம் அது!  நம் ஒவ்வொரு குழந்தையையும் அது தான் கொல்கிறது.  இனி இருக்கும் சுஜாவையாவது பத்திரமாய்ப் பாதுகாப்போம்."

"அரசு வேண்டும்; இருக்கும் என நினைத்தேன்.  எல்லாம் மொத்தமாய்ப் போய்விட்டன.  இப்போது இந்த ஆலாவது இருக்கட்டும் சாந்தி.  விழுது விட்டுப் படர்ந்து நம் வம்சத்தை ஒளிர வைக்கும்.  தயவு செய்! போகாதே, சாந்தி, போகாதே!" என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் ரவி.  குழந்தை வீறிட்டு அழுதது.  அது நடந்து வரும் சப்தமும் கேட்டது.  இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.  யாரோ அடித்தது போல் அழுது கொண்டிருந்த குழந்தை சாந்தியைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டது.  அதற்கு மேல் சாந்தியால் தாங்க முடியவில்லை.  குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டு கொஞ்சினாள்.  "என் செல்லம், அம்மாவைக் காணோம்னு அழுதியா!" என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள்.  சுஜாவும் அப்போது அங்கே வந்தாள்.  "அம்மா, பசிக்குது!" என்றவள், ரவியை அப்போது தான் பார்த்தவளாக, "ஹை, அப்பா!" என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.  சுஜாவை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்ட ரவி, அவள் தலையில், கண்களில், முகத்தில், உடலில் என முத்தமிட்டு விட்டு மீண்டும் அணைத்துக் கொண்டான்.

அப்போது ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்த ரவிக்கு, அந்தக் குழந்தை தன்னையும் சுஜாவையும் வெறுப்போடு பார்ப்பது புலப்பட்டது.  "சாந்தி, சாந்தி, நான் சொல்லும்போது நம்பவில்லை, இல்லையா?  இதோ, பார்! இது என்னையும், சுஜாவையும் எப்படிப் பார்க்கிறது பார்!  எங்கள் இருவரையும் உன்னிடமிருந்து பிரிக்கவே இது திட்டம் போடுகிறது." என்று பற்களைக் கடித்தான்.  அவனைக் கோபமாகப் பார்த்த சாந்தி, "இந்தப் பச்சைக் குழந்தையிடம் இவ்வளவு வன்மமா?  அதுக்குத் தான் யார் இருக்காங்க? தகப்பன் பெயரே தெரியாது.  தாயாரோ பெற்றுப்போட்டுவிட்டுக் கடமை முடிஞ்சதுனு போயிட்டா.  இங்கே நம்மிடம், நம் தயவில் இருக்கிறது.  இதால் என்ன செய்ய முடியும்?  நீங்க சொல்லும் பொய்யை எல்லாம் நம்பும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை." என்றாள்.

"மருத்துவர் சொன்னதைக் கேட்டாய் தானே!  இது என்னை அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டதில் தானே எனக்கும் பொன்னுக்கு வீங்கி வந்து இப்போது இந்த மாதிரியான துர்ப்பாக்கியசாலி ஆயிருக்கேன்.  அதை நினைச்சுப் பார். அப்போதாவது உனக்கு உண்மை புரியும்." என்றான்.  சாந்தி தலையை ஆட்டினாள்.  "அது ஏதோ தற்செயல்.  தற்செயலாக நடந்ததை எல்லாம் விபரீத அர்த்தத்தில் புரிந்து கொண்டால் எப்படி?" என்று கோபமாய்க் கேட்டாள்.  ரவி சாந்தியின் கையிலிருக்கும் குழந்தையைப் பிடுங்கிக் கீழே இறக்க முயற்சித்தான்.  அப்போது அது அவனைப் பார்த்த பார்வை.   ரவி அதிர்ந்தே போனான்.

அவனையும், சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தது.  அது மனதில் சுஜாவுக்குச் சீக்கிரம் முடிவு கட்டணும் என நினைப்பது ரவிக்குப் புரிந்தது.  ரவி புரிந்து கொண்டான் என்பதை அதுவும் புரிந்து கொண்டது.  அவனைப் பார்த்த அந்தப் பார்வை அது சட்டென மறுபக்கம் திரும்பியதும் மின்வெட்டுப் போல் மாறி மீண்டும் அந்த அப்பாவித் தனமான குழந்தைப்பார்வைக்கு மாறியது.  ரவி சுஜாவை அணைத்துக் கொண்டு அப்படியே படுத்தான். 

Sunday, May 11, 2014

அன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்!

இன்று அகில உலக அன்னையர் தினம் என கூகிள் சொல்கிறது.  எங்கு பார்த்தாலும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்புச் செய்திகள்.  எல்லா தினங்களையும் போலவே இன்றைய தினமும் இப்படியான செய்திகளில் ஆரம்பித்து முடிந்து நாளை மற்றொரு நாளாய்ப் பிறந்துவிடும்.  பின்னர் அடுத்த அன்னையர் தினத்தில் தான் இந்த தினத்தை நினைப்போம். இல்லையா? எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை.  ஆனால் தாய் என்பதை மறக்க இயலுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்புத் தான். அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ?  தெரியலை!  போகட்டும்.  பிரசவம் அவங்க சொந்த விஷயம் என்பதால் நாம் அவங்க விருப்பத்திலே தலையிட முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு?  அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே!  இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. ஏனெனில் சுற்றுச் சூழல் மாசு என்பது இயற்கையில் மட்டுமில்லாமல் மனித மனங்களில் கூட மாசு அடைந்திருக்கிறது.  பெண்கள் எங்கே பார்த்தாலும் தவறான உறவுகளில் ஈடுபடுதல், திருமணம் ஆனாலும் வேறு ஆண்களின் வசப்படுதல், பெண்களைத் துன்புறுத்தி இவற்றில் இன்பம் காணும் ஆண்கள், கட்டாயப்படுத்தப்படும் இளம் சிறுமிகள், உயிர் இழப்புகள், பலரால் பாலியல் உறவில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என தினசரிகளில் தினம் ஒன்றாகச் செய்திகள் வருகின்றன.  இதற்கெல்லாம் என்ன காரணம்?

அடிப்படைக் கலாசாரமே விரிசல் கண்டு அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது தான்.  நேற்றைய தினசரியில் ஒரு செய்தி படித்தேன்.  ஒரு எஃப்.எம். ரேடியோவின் ரேடியோ ஜாக்கி ஒருவர்.  35 இல் இருந்து 40 வயதுக்குள்ளாக.  திருமணம் ஆகிக் குழந்தையும் பெற்றவர்.  இவர் ரேடியோவில் பேசும்போது இவர் குரலில் தெரிந்த கவர்ச்சியான இனிமையில் மயங்கிய ஒரு சிறுமி (16 வயதுக்கு உட்பட்டவள்) பள்ளி மாணவி, தொடர்ந்து இவரிடம் பேசி வந்திருக்கிறாள்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெண் பின்னர் திடீரென ஒரு நாள் அந்த அலுவலகத்துக்கே வந்துவிட்டாள்.  வந்தவள் அந்த ரேடியோ ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறாள்.  அந்தப் பெண்ணோ 16 வயதுக்கு உட்பட்டவள்.  அதோடு ரேடியோ ஜாக்கியோ திருமணம் ஆனவர்.  அவர் தொழிலை அவர் செய்திருக்கிறார்.  நிலைமை விபரீதம் ஆகத் தன் மனைவியையும், குழந்தையையும் வீட்டிலிருந்து வரவழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டி தான் திருமணம் ஆனவன் என்றும் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பெண் அதற்கும் அசையாமல் போகவே அந்த அலுவலகத்தினர் மனநல மருத்துவர் ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் பேசியதில் வீட்டில் தாய் இல்லாமல் வளர்ந்த அந்தப் பெண்ணுக்குத் தந்தையின் போக்குப் பிடிக்காமல் இப்படி ஆறுதல் தேடிக் கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது.  பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுக்குப் புரிய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.  இதனால் ரேடியோ ஜாக்கியின் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை என்றாலும் அடிப்படை சரியில்லை என்பது தெரிகிறதல்லவா?  உணவுப் பழக்கத்திலிருந்து எல்லாவற்றிலும் இப்போது மாறி வருகிறது.  மெல்ல, மெல்லப் பாரம்பரிய உணவுகள் மாறி வருகின்றன.  கிராமங்களில் கூட கலாசாரம் மாறித் தான் வருகிறது.  மேல்நாட்டுக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தான்  நாகரிகம் என்னும் போக்கும், எண்ணமும் பரவி வருகிறது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தவறான உறவை நியாயப்படுத்துதல், பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, பல்வேறு வகையான முரண்பாடுகள் உள்ள சமூகம் என இருப்பதால் பெண்கள் தங்களுக்குத் தோன்றியதைத் தாங்கள் செய்யலாம் என நீனைக்கின்றனரோ!  அதோடு பொருளாதார சுதந்திரம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.  விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம்.  ஆனாலும் பெண்கள் தங்களுக்குத் தோன்றியபடி எல்லாம் நடந்து கொண்டால் அது நிச்சயம் சமூகத்தைப் பாதிக்கும்.

ஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே!  உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள்.  உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள்.  மேல்நாட்டு உணவு முறை தேவை இல்லை என்றே சொல்வேன்.  ஆனால் வேறு வழி இல்லை எனில் குழந்தைக்கு அது செய்யும் நற்செயல்களுக்கு ஒரு பரிசாக என்றோ ஓர் நாள் வாங்கிக் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  நம் நாட்டி சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும்.  அதிகமான சீஸ் நிறைந்த பிட்சாவை இந்த சீதோஷ்ணத்தில் நம் குழந்தைகளாலோ, நம்மாலோ செரிக்க இயலாது.  உடல் நலத்திற்கும் கேடு.  சிறு வயதிலேயே குண்டாகிவிடுவார்கள்.  உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் செல்லமே அவர்களுக்கு முக்கிய எதிரி என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டு உணவு முறை, உடைமுறை, நடைமுறை ஆகியவற்றைப் பழக்கப்படுத்துங்கள். நல்லதொரு குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை வளர வாழ்த்துகள்.


எல்லாவற்றிலும் இந்தியனாகவே இருப்போம்.  மறைந்து வரும் கலாசாரத்தை மீட்டெடுப்போம்.

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.


படத்துக்கு நன்றி: கூகிளார்

Friday, May 09, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா -- 13

இங்கே

கடைசியா இங்கே விட்டிருந்தேன்.


நாட்கள் சென்றன. ரவி தன் மூன்று குழந்தைகளையே திரும்பத் திரும்ப வரைந்து வந்தான்.  அவன் மனத் தவிப்பு சாந்திக்கும் புரிந்தது.  என்றாலும் இந்த மரணங்களுக்கான காரணம் அவளுக்குப் புரியத் தான் இல்லை.  ரவிக்கோ நன்றாகப் புரிந்தது.  அந்தக் குழந்தை, பிசாசுக் குழந்தை தான் மட்டுமே தன்னந்தனியாக சாந்தியின் அன்பை அனுபவிக்க விரும்புகிறது. அதற்காகத் தான் திட்டம் போட்டு இந்தச் சதியை நடத்துகிறது.  ஆனால் ஒரு விஷயம் கவனித்தான் ரவி.  இறந்தது மூன்றுமே ஆண் குழந்தைகள் தான். அந்தப் பேய்க் குழந்தைக்கு ஒரு வேளை ஆண்கள் என்றால் பிடிக்காதோ?  அப்போ நம் ஒரே பெண் குழந்தையையாவது விட்டு வைக்குமா?  நல்லவேளையாகக் கடைசிச் சாவு முடிந்து மூன்று மாதத்துக்கும் மேல் ஆகி விட்டது.  அந்தப் பிசாசுக்கும் ஒரு வயசு முடிந்து விட்டது.  நடக்கவும் ஆரம்பித்து விட்டது.  ஆனால் சாந்தி இல்லாத சமயங்களிலே அவனைப் பார்க்கும் பார்வை அப்படியே தான் இருக்கிறது.  மாற்றமே இல்லை.  சாந்தி இருந்தால் கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்புத் தான்.

அவன் பெண் சுஜா இந்தக் குழந்தையோடு விளையாடுவாள்.  ஆனால் ரவிக்கு திக் திக்கென்றிருக்கும்.  ஊஞ்சல் ஆடுவதில் பிரியம் சுஜாவுக்கு.  ரவி வீட்டிற்குள்ளேயே ஊஞ்சல் கட்டிக் கொடுத்திருந்தான்.  இப்போது வாசலில் உள்ள பெரிய வராந்தாவில் கட்டிக் கொடுக்கும்படி நச்சரிக்கிறாள்.  அப்படியே கட்டிக் கொடுத்தான் ரவி.  அங்கே இடமும் தாராளமாக இருந்தது.  குழந்தை கலகலவெனச் சிரித்துக் கொண்டு ரசித்து விளையாடினாள்.  முதுகுக்குப் பின்னே குறுகுறுவென இருந்தது ரவிக்கு.  சட்டென்று திரும்பிப்பார்த்தான். நிலைப்படியருகே அந்தக் குழந்தை நின்று கொண்டு சுஜாவையே பார்த்துக் கொண்டிருந்தது.  அதன் கண்களில் தெரிந்த கோபமும், வெறுப்பும் ஆளையே பொசுக்கிவிடும் போல இருந்தது.  ரவிக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது.  கைகள் நடுங்க ஊஞ்சல் சங்கிலி எல்லாம் நன்றாகப் பொருந்தி உள்ளதா என்று மீண்டும் மீண்டும் பார்த்தான்.

சுஜா வெண்ணிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தேவதையைப் போல் காட்சி அளித்தாள்.  அதில் பறந்து, பறந்து அவள் ஊஞ்சலாடுகையில் தலை மயிரும் சேர்ந்து பறக்க, உடையும் பறக்க அவள் கைகளை விரித்துச் சிரித்தவண்ணம் ஊஞ்சல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆடியது ரவிக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  கூந்தல் அலைபாய்ந்தது.  அவனிடம் சில சமயம் ஒரு தாயைப் போல் நடந்து கொள்வாள் சுஜா. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க அந்தக் குழந்தை மெல்ல மெல்ல ஊஞ்சல் அருகே வந்து நின்றிருந்தது.   ஊஞ்சலில் ஏற முயன்றது.  ரவிக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது. கொஞ்சம் கடுமையாகவே அதைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.  அதுவோ உலகத்து வெறுப்பை எல்லாம் அதன் கண் வழியே காட்டிய வண்ணம் அவனைப் பார்த்தது.  அது என்ன நினைக்கிறது என்பது ரவிக்குப் புரிந்து விட்டது.  ரவி புரிந்து கொண்டான் என்பதை அதுவும் தெரிந்து கொண்டு விட்டது.  அதன் இதழ்களில் ஏளனச் சிரிப்பு.

"என் எதிரி, முக்கிய எதிரி நீதாண்டா!  ஆனால் உன்னைக் கொல்லப் போவதில்லை.  கொன்றால் நீ செத்து ஒழிந்துவிடுவாய்.  அணுஅணுவாக நீ சித்திரவதைப்பட வேண்டும்.  இரு, இரு அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்."

இப்படித்தான் அது நினைத்திருக்கும் என ரவி புரிந்து கொள்ள அதுவும் அதைப் புரிந்து கொண்டாற்போல் தலையை ஆட்டிக் கொண்டது.  அப்போது சாந்தி அங்கே இரு குழந்தைகளையும் தேடிக் கொண்டு வர அந்தக் குழந்தையிடம் சட்டென ஒரு மாற்றம். குழந்தைத் தன்மை.  அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கள்ளமில்லாச் சிரிப்பைச் சிந்தியது.  சாந்தியைப் பார்த்த ரவிக்குச் சட்டென ஒரு எண்ணம் நினைவில் வந்தது.  அவர்கள் இருவரும் அன்றிரவுக்குப் பின்னர் கடந்த மூன்று, நான்கு மாதமாகப் பல முறை இணைந்துவிட்டனர்.  சாந்தி எவ்விதமான ஆக்ஷேபமும் தெரிவிக்கவில்லை.  முழு மனதோடு ஒத்துழைத்தாள்.  ஆனால் சாந்தி கருவுற்றதாகத் தெரியவே இல்லையே!  சாந்தியிடமே கேட்போம்.

"சாந்தி, விசேஷம் ஒன்றும் இல்லையா?" என்று குறும்புடன் சிரித்த வண்ணம் கேட்டான்.  "விசேஷமா?" என்று யோசித்த சாந்தி சட்டென அவன் கேட்பதுபுரிந்தவளாய், "ஒண்ணும் இல்லையே!" என்றாள்.  ரவிக்கு முகம் கறுத்தது.  "ஏதேனும் தடுப்புகள் செய்து கொள்கிறாயா?" என்று வெளிப்படையாக சாந்தியிடம் கேட்க, அவளுக்குக் கோபம் வந்தது.  அவனை முறைத்துப் பார்த்துவிட்டு  உள்ளே சென்றுவிட்டாள்.  ரவியின் மனதில் கலக்கம் சூழ்ந்தது.  இது எப்படி?  இன்னும் ஓரிரு மாதம் பொறுத்திருக்கலாமா? என யோசித்தான்.  ஆனால் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.  சாந்தி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்வதை கவனித்தான்.  அவனிடம் போய் வருவதாகக் கூடச் சொல்லவில்லை.  கோபம் தணியவில்லை. சாந்தி செல்லும் வரை காத்திருந்துவிட்டு வீட்டை உள்பக்கமாய்த் தாளிட்டவன், சாந்தியின் அறையில் குடைந்தான்.  ஏதேனும்
மாத்திரைகள் அல்லது வேறு கட்டுப்பாட்டு சாதனங்கள் உள்ளனவா என ஆராய்ந்தான்.  எதுவும் இல்லை.  ரவிக்குத் தான் உடனே மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும் என மனதில் பட்டது.

அவனுக்குப் பொன்னுக்கு வீங்கி வந்தபோது மருத்துவர் சொன்ன வார்த்தைகள்:  ரவிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  சாந்தியிடம் இதைச் சொன்னால் நம்புவாளா?  மருத்துவர் சொன்னால் நம்பித்தானே ஆகவேண்டும்.  பார்க்கலாம்.  மருத்துவரிடம் முதலில் போய்ப் பார்ப்போம். அன்றிரவை உறக்கமின்றிக் கழித்தான் ரவி.  அவன் தவிப்பைப் பார்த்து வியந்தாள் சாந்தி.  மறுநாள் காலை எழுந்ததுமே மருத்துவரிடம் தான் வந்து பார்க்க வேண்டிய நேரத்தைக் குறித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான் ரவி.  குறித்த நேரமும் வந்தது.  ரவியும் மருத்துவரிடம் சென்றான்.  அவனுக்கு
ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறினான்.  மருத்துவர் ஒரு நொடி அவனைப் பார்த்த வண்ணம் இருந்தார்.  பின்னர் சிரித்த வண்ணம் இரண்டுபேருக்கும் ஏதேனும் சண்டையா என்றெல்லாம் விசாரித்தார்.  அதெல்லாம் இல்லை;  மூணு ஆண் குழந்தைகளைப் பறி கொடுத்தாச்சு.  ஒண்ணே ஒண்ணாவது பெத்துக்க ஆசை என்றான் ரவி.  சரி, பார்த்துடுவோம்.  என்று ரவிக்கு எல்லாப் பரிசோதனைகளையும் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.  ரவியும் எல்லாப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டான்.  மறுநாள் வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டார் மருத்துவர்.

தவிக்கும் மனதோடு வீட்டுக்கு வந்தான் ரவி.

Tuesday, May 06, 2014

ஆஸ்த்மா நோயாளிகள் மற்றும் அனைத்து நோயாளிகளும் குணமடையப் பிரார்த்தனைகள்!

இன்று உலக ஆஸ்த்மா தினமாம்.  தினசரிகளில் பார்த்தேன்.  ஆஸ்த்மாவைப் பத்தி எழுத என்னைவிடத் தகுதி வாய்ந்தவர் இருக்க முடியாது.  ஏனெனில் சின்ன வயசிலே இருந்தே ஆஸ்த்மா என்னோடயே இருந்திருக்கு.  ஆனால் அப்போ அதைப் பெரிசா நினைக்கலை;   இரண்டு, மூன்று வருஷத்துக்கு ஒரு முறை வரும், போகும். ஆறுமாசம் இருமல், மூச்சிரைப்பில் கஷ்டப்பட்டுட்டே எல்லாமும் செய்வேன்.  ஆஸ்த்மானும் தெரியலை.  கிட்டத்தட்ட 40 வயசுக்குத் தான் அடிக்கடி தொந்திரவு கொடுக்கவே ஜாம்நகரிலே இருந்து சென்னைக்கு வந்த அந்த 95 ஆம் வருடம் இதன் தாக்கம் மிக அதிகமாகிப் படுத்த படுக்கையாகவே போட்டது. குடும்ப மருத்துவரிடம் போனப்போ முதலில் பிராங்கிடிஸ் என்று தான் வைத்தியம் செய்தார்.  ஆனால் ஜூரமும் நிற்காமல், இருமலும் நிற்காமல்,இருமற இருமலில் அடுத்த தெருவில் இருக்கும் எங்க பிறந்த வீட்டு ஆட்களெல்லாம் வந்து என்னனு கேட்க ஆரம்பிச்சாங்க.  அக்கம்பக்கம் வேறே இருமல் சப்தத்தினால் திருடன் வரது குறைஞ்சிருக்குனு நன்றி அறிவிப்பு.  ஆகவே குடும்ப மருத்துவரை விடுத்து வேறொரு மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனைக்குப் போனால் அவர் என்னைப் பார்த்ததுமே நேரே எமர்ஜென்சிக்குப் போகச் சொல்லிட்டார்.  ஆக்சிஜன், நெபுலைசர் மாறி மாறிக் கொடுத்ததோடு பஃப் (pulmanory function test)சோதனை பண்ணிப் பார்த்துட்டுக் காற்றை வெளியேற்றப் பத்து வினாடிகளுக்கும் மேல் ஆகிறதைக் கண்டு பிடித்து இரண்டு வகை இன்ஹேலர் கொடுத்தார்.ஆனாலும் அதுக்கு எப்போ இஷ்டமோ அப்போத் தான் சரியாச்சு.  இரண்டு  வருடத்துக்கு ஒரு முறை வந்த அவஸ்தை எப்போ வேணா, என்னிக்கு வேணா, எந்த நிமிடமும் என மாற ஆரம்பிக்க, நடுவே பெண் கல்யாணம், குழந்தை பிறப்பு, மைத்துனன் கல்யாணம், அது, இதுனு குடும்பத்தினருக்கான அன்புத் தொல்லைகள் வேறே.

இத்தனைக்கும் நடுவிலே எங்க பையருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆக, அந்த வருடத்து ஆஸ்த்மா, உன்னை விட்டேனா பார் என ஆகஸ்ட் மாதமே ஆரம்பிச்சது.  டிசம்பரில் கல்யாணம்,  அதுக்குள்ளே சரியாயிடும்னு நினைச்சா, அந்த வருஷத்து மழை மாதிரி எந்த வருஷமும் பெய்தது இல்லைனு கடுமையான மழை. தமிழ்நாடே வெள்ளக்காடாக மிதந்த 2005 ஆம் வருடம்.  சும்மாவே நாம படுத்துப்போம்.  இந்த மழைக்குக் கேட்கணுமா!  அது என்னமோ, என்னோட ஆஸ்த்மாவுக்குக் கடும் வெயிலும், மழையும் மட்டும் ஒத்துக்காது.  குளிர்காலத்தில் ரொம்பச் சமத்தாக அடங்கிடும்.


இந்த அதீத மழைக்கு  ஆஸ்த்மா மட்டுமில்லாமல் தொண்டையில் டான்சில்ஸும் வீங்க, சைனஸ் தொந்திரவினால் மூக்கடைப்பு வர. உட்கார முடியாமல், படுக்க முடியாமல் வீட்டில் விருந்தினர்களோடும், ஆறு வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணத்துக்காக வந்த பெண்ணைக் கவனிக்கக் கூட முடியாமலும் நான் பட்ட அவஸ்தை இருக்கே.  மருத்துவரானா எப்போவும் படுக்கையில் இருங்கறார்.  முடிகிற காரியமா!  அந்த உடம்போடயே எல்லா வேலைகளும் நடந்தன.  அதோடயே  கல்யாணத்துக்கு அழைக்கவும் போக வேண்டி இருந்தது.  கல்யாணத்திலே தாலி கட்டறவரைக்கும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  தாலி கட்டியானதும் போய்ப் படுத்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் கூட பொண்ணு, மாப்பிள்ளை, பிள்ளை, மாட்டுப் பெண் எல்லாரும் அமெரிக்கா கிளம்பும் வரையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துவிட்டு(தினம் தினம் குடும்ப மருத்துவரிடம் போய் இரண்டு வேளையும்  நரம்பில் டெரிஃபிலின் ஊசி ஏற்றிக் கொண்டு வருவேன். மூணு மணி நேரம் ஓடும்.)

இவங்கல்லாம் ஊருக்குப் போன அன்னிக்கு மறுநாள் காலை மருத்துவரை வழக்கம் போல் பார்க்கப் போனப்போ எக்ஸ்ரே புதிதாக எடுக்கச் சொன்னார்.  அவருக்கு என்னவோ சந்தேகம் வந்திருக்கு.  சரினு எக்ஸ்ரே எடுத்தது.  அதைப்பார்த்துட்டு, இனிமேல் நீங்க பார்க்க வேண்டியது கார்டியாலஜிஸ்ட் தான் எனச் சொல்லிட்டு அங்கே அம்பத்தூருக்கே வந்து கொண்டிருந்த ஒருவருக்கு ரெஃபர் பண்ணி அனுப்பிட்டார்.  அவரும் முதலில் மருந்துகளைக் குறைத்து உணவுக் கட்டுப்பாடுகளைச் சொல்லிட்டு, எகோ கார்டியாகிராமில் இருந்து எல்லா சோதனைகளும் பண்ணிட்டு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்.  அந்த வைத்தியரின் தயவிலேயே அடுத்த நான்கு மாதங்களில் கைலை யாத்திரை செல்ல முடிந்தது. அதுக்கப்புறம் இப்படி ஒருமுறை, இரு முறை வருஷத்தில் நான் இருக்கேன்னு சொல்லிட்டு எட்டிப் பார்க்கும்.  அவரும் அதை மண்டையில் தட்டி அடக்குவார்.  அதுக்கப்புறமாத் தான் எங்க வீட்டில் தண்ணீர் நுழைந்து, நாங்க வீடு மாறிப் பின்னர் ஊர் மாறி இங்கே வந்து சேர்ந்தோம்.  இந்த இரு வருடங்களில் உ.பி.கோயில் போயிட்டு முடியாமல் படுத்தது ஒண்ணு தான் பெரிய அளவில் படுக்கை.  மற்றபடி அவ்வப்போது வந்து போகும் காஸ்ட்ரோ என்ட்ரிடீஸ் தொல்லையோடு நிற்குது.  அதற்குக் காரணம் இங்கே காற்று சுத்தமாக இருப்பது தான்.

ஆஸ்த்மா அலர்ஜி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பொருளில் வரும்.  இதுதான் என நிச்சயமாய்ச் சொல்ல முடியாது.  இப்போவும் எனக்கு வத்தக்குழம்பு தாளித்தாலோ, மி.பொடிக்கு வறுத்தாலோ இருமல், தும்மல் வரும்.  கொஞ்ச நேரம் கஷ்டமாய் இருக்கும். அதே போல் உணவுப் பதார்த்தமும்.  பொதுவாகவே வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது என்றால் ஆஸ்த்மா நோயாளிகள் கட்டாயம் அரை வயிறு தான் சாப்பிடணும்.  இரவு ஏழரைக்குள்ளாக அல்லது எட்டுக்குள்ளாக உணவை முடிச்சுக்கணும்.  அப்படி நேரம் ஆனால் இரவு உணவைத் தவிர்த்துவிட்டுப்பால், கஞ்சி போன்ற நீராகாரம் எடுத்துக்கலாம். அல்லது வெறும் பழங்கள் மட்டும் ஒத்துக்கொள்ளக் கூடியனவாக எடுத்துக்கலாம்.  முக்கியமாய்ப் புளி சேர்ந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்கலாம்.


 அல்லது கொஞ்சம் போல் சாப்பிட்டுக்கலாம்.  நான் சாம்பார், வத்தக்குழம்பு என்றால் அரைக்கரண்டி, ரசம் புளி சேர்த்தால் ஒரு கரண்டி, எலுமிச்சை ரசம் எனில் கொஞ்சம் விட்டுப்பேன்.  (சாப்பிடும்போது பார்த்தால் தெரிஞ்சுப்பீங்க). மோர் சாப்பிடக்கூடாது சிலர் சொல்றாங்க.  என்னோட மருத்துவர் ஒரு வாரம் சாப்பிட்டுப் பார்.  உனக்குத் தொந்திரவுனா விட்டுடு என்றார்.  நானும் ஒரு வாரம்போல் தொடர்ந்து மோர் சாதம் சாப்பிட்டதில் எதுவும் செய்யவில்லை. நமக்கு எது ஒத்துக்கும், எது ஒத்துக்காது நாமே தான் தெரிஞ்சுக்கணும்.  இப்படி அளவாக இருக்க வேண்டும்.  ஊறுகாய்களைத் தவிர்க்கணும். எப்போவானும் மாங்காய் நறுக்கி உப்புக் காரம் சேர்த்தது போட்டுப்பேன்.  மற்றபடி தினசரி நோ ஊறுகாய்.  நெஞ்சைக் கரித்துக் கொண்டு வரும். இதனால் அசிடிடி அதிகம் ஆகி வயிற்றுப் பிரச்னை வந்து பின்னர் ஆஸ்த்மாவில் போய் முடிகிறது.  இதையும் கவனித்து வைத்திருக்கிறேன்.  ஆகவே வெளியே போனால் கூட சாப்பாட்டில் கட்டுப்பாடு நிறைய உண்டு.  இதன் மூலம் சொந்தக்காரங்களோட கோபங்கள், கேலிகள், கிண்டல்கள் எல்லாமும் இன்றளவும் உண்டு.  ஆனால் அதை எல்லாம் கண்டுக்கறதே இல்லை.  இவை பொதுவாக எல்லா ஆஸ்த்மா நோயாளிகளுக்கும் பொருந்தும் ஒன்று. அதோட இப்போ இன்ஹேலர் இல்லை.

ரோடாஹேலர் எனப்படும் சின்ன இன்ஹேலர் தான்.  ஆனால் விலை உயர்ந்த அதிக சக்தி வாய்ந்த காப்சூல்கள் அதில் போடத் தரப்படுகிறது. ஒரே இழுப்பிலேயே நிச்சயமாய் மாற்றம் தெரியும். இம்மாதிரிப் பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னமும் ஆஸ்த்மா நோயாளிகளின் கஷ்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அகில உலக ஆஸ்த்மா நோயாளிகளுக்காகப்பிரார்த்திப்போம்