எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 18, 2021

அஷ்வின் ஜிக்கு அஞ்சலி! :(

 நண்பர், பிரியமான சகோதரர் கிட்டத்தட்டக் குடும்ப உறவினர் போன்ற திரு அஷ்வின் ஜி காலமாகி விட்டதாக எனக்கு சிபி(நாமக்கல் சிபி என்னும் ஜகன்மோகன் செய்தி அனுப்பி இருந்தார். ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை. ஏதோ தப்பான செய்தி என்றே நினைத்தேன். உடனடியாக முகநூலிலும் போய்த் தேடினால் யாருமே எங்குமே இரங்கல் செய்தி தெரிவிக்கலை. குழப்பமாகவே இருந்தது.  பின்னர் வீட்டில் அடுத்தடுத்து நேற்று இருந்த வேலைகளில் கவனம் சென்றாலும் அடி மனதில் இதன் எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பின்னர் தற்செயலாக எங்கள் ப்ளாக் வாட்சப் பார்த்தால் அதில் கார்த்திக் (எல்கே) செய்தி கொடுத்திருந்தார். அப்போவும் செய்தி உண்மையா என்றே அவரைக் கேட்டேன். பின்னர் கார்த்திக் அதை உறுதி செய்தார். மேலும் "சஞ்சிகை" பத்திரிகையில் அஷ்வின் ஜி தன்னார்வலராக இருந்தமையில் அங்கே இரங்கல் கூட்டம் நடத்தப் போவதாயும் சொல்லி இருந்தார். நான் அதை எல்லாம் போய்ப் பார்க்கவில்லை. அதிர்ச்சி என்றால் அவ்வளவு அதிர்ச்சி.

அஷ்வின் ஜி  இந்தச் சுட்டியில் சஞ்சிகை பத்திரிகையில் இரங்கல் செய்தியைப் பார்க்கலாம். 

சர்க்கரை நோயை  உணவு மூலம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் திரு அஷ்வின் ஜி. எனக்குச் சுமார் 13 வருடங்களாகத் தெரியும். அம்பத்தூரில் எங்க வீட்டுக்கு இரு முறை வந்திருக்கார். இங்கே திருச்சி ரயில்வேக்கு மாற்றப்பட்டபோது இங்கிருந்து மறுபடி சென்னை மாற்றலாகிக் கிளம்பும் முன்னர் இங்கே ஶ்ரீரங்கம் வீட்டிற்கும் வந்திருக்கார். அவங்க குடும்ப உறுப்பினர்களைப் பழக்கம் இல்லை. என்றாலும் இரண்டு மகன்கள் என்பதும், மனைவி குடும்பத் தலைவி என்பதும், மூத்த மகன் யு.எஸ். ஸில் வேலை செய்பவர் (ஐந்து வருஷங்கள் முன்னர் தான் யு.எஸ். சென்றார்.) என்பதும் தெரியும் பணி ஓய்வு பெற்றுத் திருவள்ளூரில் சொந்த வீடு கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் மகன்களின் வசதிக்காக ரயில்வே குடியிருப்பில் இருந்து கொளத்தூருக்குக் குடியேறினார். 

நான்கைந்து வருஷங்கள் முன்னர் இதயத்தில் ஏற்பட்ட கோளாறினால் மிகவும் துர்ப்பலமாக ரயில்வே மருத்துவமனையில் டாக்டர் செரியனின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். முடியாமல் இருந்த அந்த நிலையிலும் பிள்ளையிடமிருந்து அலைபேசியை வாங்கி என்னைத் தொடர்பு கொண்டு பேசமுடியாமல் பேசினார். அவரைக் காணோமே என நினைத்துக் கொண்டிருந்த எங்கள் குழும உறுப்பினர்களுக்கு நான் தான் செய்தியைச் சொன்னேன். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். யோகாசனப் பயிற்சியையும், மூச்சுப் பயிற்சியையும் விடாமல் செய்வார். இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். அமர்நாத் குகை, வைஷ்ணவி கோயில், கேதார் நாத் போன்ற கடினமான மலைப்பிரதேசங்களுக்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார். அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  மீண்டும் அமர்நாத் செல்லவேண்டும் என்னும் ஆவலுடன் இருந்தார்.

கயிலை யாத்திரைக்கும் தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் போக முடியவில்லை. என்னை விட வயதில் சிறியவர் என்பதால் நான் அவரும் ஒரு தம்பி என்றே சொல்லி, எனக்குப் பட்டுப்புடைவை வேண்டும், நவரத்னமாலை வேண்டும் என்றெல்லாம் சொல்லி வம்பு பண்ணிக் கொண்டிருப்பேன். என் பிறந்த நாள், மண நாளுக்கு அன்றைய தினம் இல்லாமல் அவரிடமிருந்து மறுநாளே வாழ்த்துகள் வரும். ஏனெனில் ட்ராஃபிக் ஜாமாக இருந்தது எனக் கிண்டல் செய்வார்.  ஏதேனும் வம்பு வளர்ப்பது எனில் அவருக்கு என் நினைவு தான் முதலில் வரும். நான் அசரவில்லை எனில் தி.வா.விடம் போய்ச் சொல்லித் தூண்டி விடுவார். சொந்த அக்கா, தம்பி போல் சண்டையெல்லாம் போட்டிருக்கோம். இப்போது நினைவுகளில் மட்டும் அவர் என்பதை என்னால் சிறிதும் நம்பவே முடியலை. 

மே மாதம் 13 ஆம் தேதி வரை முகநூலில் இருந்திருக்கிறார். கடைசியாக சித்த மருத்துவர் வீரபாகுவைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. ஆகவே அவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்னால் என்ன செய்திருக்க முடியும்? ஆனால் வீரபாகுவைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. மே 15 ஆம் தேதி விடியற்காலை மூன்றரை மணி அளவில் இறந்திருக்கிறார். அவரை முகநூலில் காணோமே என யோசித்த நண்பர்களில் சிலர் வீட்டு நம்பருக்குத் தொலைபேசிய போது இளைய மகன் தகவலைச் சொல்லி இருக்கிறார். ஆகவே அனைவருக்கும் அவர் இறந்து 2,3 நாட்கள் கழித்தே தெரிந்திருக்கிறது. அப்போவும் உண்மையா/பொய்யா என்னும் சந்தேகம் தான். நமக்கு நெருங்கியவர்கள் எனில் மனம் லேசில் சமாதானம் அடைவதில்லை. நல்ல மனிதர். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.  அஷ்வின் ஜியின் இயற்பெயர் ஹரிஹரன். ஆனால் அஷ்வின் ஜி என்னும் பெயராலே அறியப்பட்டார்.

Friday, May 14, 2021

உப்பு வாங்கலையோ உப்பு! மீள், மீள், மீள் பதிவு!

 உப்பு வாங்கலையோ உப்பு!


அன்னக்கொடி விழா

அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?


அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!


மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.


அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.


அன்ன தானம்

எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்

ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,

பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்

வந்திருந்தனர்.


குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்

உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான

பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து

கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து

வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.


பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய

சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.

மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்

வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்

செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய

தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து

இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்

வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்

அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.


2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம்.  இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!


வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.


உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்


ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.


சொம்பில் தண்ணீர் வைத்திருந்த படம் தற்செயலாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது டெலீட் ஆகி விட்டது. :( என்ன செய்ய முடியும்? படம் இருக்கானு தேடிப் பார்க்கணும். அதுவும் எந்தக் கணினியில் இருக்கோ! :) எழுதினதை மட்டும் கீழே நீக்கவில்லை. அப்படியே கொடுத்திருக்கேன்.

சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 

இந்த வருஷம் தான் அக்ஷய திரிதியைக்கான நகைக்கடை விளம்பரங்கள் எதுவும் வரவில்லை.  இந்தப் பிரசாதங்களும் இந்த வருஷம் பண்ணலை. இந்த வருஷம் கடுமையான தொற்று பாதிப்பு இருப்பதால் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பது காலை கோலம் போட மட்டும். ஆகவே எதுவும் பண்ணவில்லை. பால் மட்டும் நிவேதனம் செய்தேன். பின்னர் சமைத்ததும் சமையல் நிவேதனம்.

Monday, May 10, 2021

என்ன என்ன யோசனைகளோ!

 மார்கழி மாசத்திலே ஏன் வீடு மாறக்கூடாது? அந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் பண்ணுவார்களா? மார்கழியில் என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகின்றன?

சாம்பார் பரிபூர்ணா, மற்றும் கறி பருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? (யாருக்குத் தெரியும்?) சாம்பாருக்கு தேசிய உணவு என்ன? ஹிஹிஹி, சாம்பார் தேசிய உணவானு கேட்க நினைச்சிருப்பாங்களோ? அடுத்த கேள்வி சில ஓட்டல்களில் கொஞ்சூண்டு, சாம்பார், கொஞ்சூண்டு ரசம் தராங்களே அதைப் பத்தி யாரிடம் புகார் செய்வது?

அடுத்து மந்திரங்கள் பற்றியாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாயைத் தானாக வீட்டை விட்டு வெளியேற்ற என்ன மந்திரம்? அடுத்து பவித்ர மந்திரா என்றொரு ஹாலிவுட் படத்தின் உண்மையான பெயராம். மந்திரங்களிலேயே ஆச்சரியமும் மந்திர சக்தி அதிகம் உள்ளவையும் அவற்றைப் பேசும் நாடுகளும்.

*********************************************************************************** 

என்ன? முழிக்கிறீங்களா? இதெல்லாம் என்னோட டாஷ்போர்டில் பதிவு எழுதக் கொடுக்கப்பட்டிருக்கும் யோசனைகள்! நல்லா இல்லையா? விடுங்க. இந்தியாவில் கொரோனா நிலைமை ரொம்ப மோசமாக ஆகிக் கொண்டிருக்கு. பலரும் சிரமப்படுகின்றனர். நோயால்/மருந்துகள் சரிவரக் கிடைக்காமல்/மருத்துவமனைகளில் இடம் இல்லாமல்! அன்புக்குரியவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் பலரும். என்ன செய்வதுனு புரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு சில மாநில அரசுகளுக்கும் இதெல்லாம் மத்திய அரசின் தவறு எனச் சொல்ல முடிகிறது. ராஜஸ்தானிலும், தில்லியிலும் ஆக்சிஜனைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஒரு ஓரமாக வைச்சிருக்காங்க என்று செய்திகள் கூறுகின்றன. இதுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ என்ன செய்ய முடியும்? வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவையும் விநியோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசு பண உதவி மட்டுமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர்கள், மருந்துகள் எனக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நோயின் தாக்கம் அதிகம். அதற்குக் காரணம் இன்னமும் மக்களின் பொறுப்பின்மை. நேற்று இங்கே திருச்சியில் மீன்/மாமிசம் விற்கும் கடைகளில் கூட்டம். டாஸ்மாக்கில் கூட்டம் அதிகாலையில் இருந்தே! சாமானிய மக்களால் இவற்றை வாங்கவெல்லாம் பணம் இருக்கு! ஆனால் அரசோ மேலும் மேலும் நிவாரணம் என்னும் பெயரில் பணத்தைக் கொடுக்கிறது. ஒரு பக்கம் பணத்தைக் கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் அரசே திரும்பப் பெற்றாலும் இலவசத்தை ஊக்குவிக்கலாமா? நம் தமிழர்கள் இதற்கு அடிமையாகி இருக்கிறாப்போல் வேறே மாநிலங்களில் பார்க்க முடியாது.

தினம் தினம் காலை எழுந்ததில் இருந்து வேலைகளை ஆரம்பித்தால் நேரம் சரியாய் இருக்கு. அதிகமாகவோ/கூடுதலாகவோ வேறே எந்த வேலையும் செய்ய முடியறதில்லை. அது ஏன்? புரியவில்லை! எனக்கு முடியலையா? புரியலை. வேலை செய்யும் வேகம் குறைந்து விட்டதோ? தெரியலை. முன்னெல்லாம் வேலைக்காரப் பெண்மணி இல்லாதப்போ நானே எல்லாவற்றையும் செய்தப்போக் காலையில் சிறிது நேரம் கணினியில் உட்கார்ந்துட்டுத் தான் வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போவேன்.  இப்போதெல்லாம் அப்படி உட்கார முடிவதில்லை. வேகம் குறைந்து விட்டதுனு நினைக்கிறேன். அதே போல் முன்னெல்லாம் மத்தியானங்களில் எப்போவானும் படுப்பேன். இப்போது தினமும் சிறிது நேரமாவது படுக்க வேண்டி இருக்கு. கண்களுக்கு ஓய்வு கொடுக்கத் தான்! அது போக மிகுந்த நேரத்தில் தான் எல்லாமும் செய்யணும். பதிவுகள் பார்ப்பது/பதில் கொடுப்பது/பதிவு எழுதுவது என! அதனாலேயே இப்போதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறைத்துவிட்டேன்.

பி.வி.ஆரின் "ஆடாத ஊஞ்சல்" கதையைப் படிச்சதில் இருந்தே அந்தக் கதாநாயகி அடுத்து என்ன முடிவு எடுப்பாள் நம் யூகத்துக்கே விட்டுவிட்டாரே ஆசிரியர் என்று தோன்றியது.  பாலக்காட்டுக் கல்பாத்தியில் வக்கீலின் பெண்ணான/ஐந்தாவது பெண்ணான துளசிக்குப் படிப்பு வரலை. அவள் அக்கா/தங்கைகள் கல்லூரிப் படிப்புப்படித்து மேல் நிலையில் இருக்க இவளோ வீட்டில் சமையல் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி ஆகிறது. வீட்டில் அப்பாவைத் தவிர்த்து அவள் நிலையைப் புரிந்து கொண்டவர் யாரும் இல்லை. அவள் அம்மாவும் தன் பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணமே தனக்கு ஓர் விடுதலை என நினைக்கும் துளசி தானாக வந்த வரன் கீர்த்தியைத் திருமணம் செய்து கொண்டு சென்னை போகிறாள். அங்கே அவளுக்கு நேர்ந்த அனுபவங்கள்! அதன் பின்னர் அவள் எடுத்த முடிவு. அதனால் ஏற்பட்ட தாக்கங்கள்! கீர்த்தியை விட்டுவிட்டு மறுபடி கல்பாத்திக்கே வரும் துளசி கடைசியில் கீர்த்தியோடு சேர்ந்தாளா? புத்தகத்தில் படியுங்கள்! ரசிக்கும்/ருசிக்கும். ஆனால் முடிவை நாம் தான் யூகிச்சுக்கணும். 

Friday, May 07, 2021

இது ஒரு கொரோனா காலம்! :(

 கொரோனா ஆட்டம் பார்க்கவும்/கேட்கவும்/படிக்கவும் கவலையும் பயமுமாக இருக்கிறது. நாட்கள் நகர்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. என்னதான் வெளியில் போகாமல் இருந்தாலும் வெளி ஆட்கள் வருவதையும் தவிர்க்க முடியாது. பால்காரர், பேப்பர்காரர், காய் கொண்டுவருபவர் என்று வரத்தான் செய்கிறார்கள். கடவுளை வேண்டிக் கொண்டு தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்த வேண்டி இருக்கு. இந்த அழகில் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது எனவும் அது குழந்தைகள் முதல் அனைவரையும் தாக்கும் என்றும் சொல்கின்றனர். வரப் போகிறது எனக் கண்டுபிடிப்பவர்களால் அதைத் தடுக்கத் தெரியாமல் இருப்பது நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. எப்போத் தான் கடவுள் நம்மை இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பாரோ? இதில் ஆக்சிஜன் கிடைக்காமல் இருப்பது இன்னமும் கொடுமை என்றாலும் அதற்கு அரசைக் காரணமாகச் சொல்லுவதும் சரியாகத் தெரியலை. திடீரென இத்தனை நோயாளிகள் பெருகக் காரணம் மக்களின் அலட்சியமே தான். அதற்காக அரசு நடவடிக்கை எடுக்காது என்றோ எடுக்கக் கூடாது என்றோ அர்த்தம் இல்லை. இதை எல்லாம் பார்த்தாவது மக்கள் இனியாவது பொறுப்பாக நடந்துக்க வேண்டாமா?

திருச்சியில் சிங்காரத்தோப்பு/சிந்தாமணிக் கடைகளில் முக்கியமாகத் துணிக்கடைகளில் பெரும் வெள்ளமாக மக்கள் குவிந்திருக்கிறார்கள். என்ன சொல்லுவது? இப்படி எல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நோய் வந்தபின்னர் அதன் கடுமையைப் பார்த்த பின்னர் அரசு உதவி செய்யலைனு சொன்னால் என்ன அர்த்தம்? நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?  நீதிமன்றங்களும் அரசைத் தான் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றன. என்னவோ போங்க! எல்லாம் அந்த ஆண்டவன் தான் பார்த்துச் சரி செய்யணும்!

2,3 நாட்களாக வீட்டில் அலமாரிகளைச் சுத்தம் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண் வரும்போது இதை எல்லாம் கவனிக்க முடியாது. அவங்க வரதுக்குள்ளே பாத்திரங்களை ஒழிச்சுப் போட்டு, வீடு சுத்தம் செய்யத் தயாராக்க வேண்டி இருக்கும். அலமாரிகளை ஒழிக்க உட்கார்ந்தால் காலை பத்து மணி வரை சரியாய் இருக்கும். மத்தியான நேரங்களில் உட்கார அலுப்பாக ஆகிவிடுகிறது. ஆகவே வேலை செய்யும் பெண்மணி வராத இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நாளைக்கு ஒரு அலமாரி என்னும் கணக்கில் சுத்தம் செய்து கொண்டிருக்கேன்.  இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதால் நோ சுத்தம் செய்யும் வேலை! நாளைக்குத் தான் மறுபடி!

இப்படிச் சுத்தம் செய்ததில் ஒரு சில/பல புத்தகங்களையும் ஒழுங்கு செய்தேனா! அதில் கண்டு பிடிச்சது ஶ்ரீராமோட எஸ்.ஏ.பி. கதைகள் அடங்கிய தொகுப்பு என்னிடம் இருக்கு. ஹிஹிஹி! ஶ்ரீராம் யாரோ "தேட்டை" போட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். இருங்க இருங்க, இருங்க! நான் தேட்டை எல்லாம் போடவில்லை. முன்னொரு காலத்தில் எப்போவோ அவர் வீட்டுக்கு அதுவும் ஶ்ரீராமே ஆட்டோ அனுப்பி வரவைச்சப்போ அங்கே இருந்த புத்தக அலமாரியையும் புத்தகக் குவியலையும் பார்த்துட்டு மயக்கம் வந்து அந்த அரைகுறை மயக்கத்தில் எதை எடுப்பதுனு தெரியாமல் எடுத்து வந்தவை இவை!  இன்னொரு புத்தகம் ரா.கி.ர.வோடது. ப்ரொஃபசர் மித்ரா இன்னும் ஏதோ ஒண்ணு! எஸ்.ஏ.பி.யின் மலர்கின்ற பருவத்தில் என்னிடம் இருக்கும் தொகுதியில் இருக்கு. மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்ன? விமரிசனமா? ம்ஹூம்! அதெல்லாம் கிடையாது. ஆன்லைன் தயவில் நிறையப் புத்தகங்கள் தரவிறக்கிப் படிச்சுட்டு இருக்கேன்! ஆனால் நோ விமரிசனம். ஓகே! வீட்டு வேலைகள் அழைப்பதால் மத்தியானமாப் பார்க்கலாம். 

Thursday, April 29, 2021

ஆண்டவனுக்குக் கண்ணில்லையா?

 இந்த முறை இரண்டாம் சுற்று கொரோனா புதிய விதத்தில் தாக்குவதோடு இல்லாமல் பலரையும் கொள்ளை கொண்டு போகிறது. எங்கள் உறவின் சுற்று வட்டங்களிலேயே இள வயதுக்காரர்கள் சிலர் இந்தப் புதிய கொரோனா தாக்கத்தில் உயிர் இழந்து விட்டனர். எங்க சுற்றத்தில் ஓர் இளைஞன் இன்று காலை கொரோனா தாக்குதலில் உயிர் இழந்து விட்டார். அதைத் தவிரவும் அம்பத்தூரில் சிநேகிதர் ஒருவரும், பெண்களூரில் தெரிந்த ஓர் பெண்மணியும் இறந்துவிட்டார்கள். அனைவருக்குமே 55 வயதுக்குக் கீழே! அதிலும் அம்பத்தூரில் இருந்த பெண்ணிற்கு லேசாகக் காய்ச்சல் வந்து அந்தப் பெண் உதவி கலெக்டர் என்பதால் தானே கிங் இன்ஸ்டிட்யூட் போய் மருத்துவமனையின் உள் நோயாளியாகச் சேர்ந்து கொரோனா சோதனைக்குக் கொடுத்து அது பாசிடிவ் என வரும் முன்னரே செத்து விட்டார். என்ன கொடுமை இது! ஒண்ணும் புரியலை. ஒரு வாரமா மனசே சரியில்லை. இத்தனை நாட்கள் வீட்டில் ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதானும் வேலை இருந்து கொண்டே இருந்தது. அது பரவாயில்லை போல இருக்கு! இப்போதைய நிலைமையை நினைத்தால் ஒண்ணும் சொல்லுவதற்கு இல்லை. மனசு நிறைய வேதனை தான் மிச்சம். 

இறந்த அந்தப் பையருக்கு 80 வயதில் வயது முதிர்ந்த தாய் இருக்கிறார். மிகவும் முடியாதவர். அழக்கூடத் தெம்பில்லாமல் உட்கார்ந்திருக்காராம். இந்த வயதில் புத்திர சோகம்!  உலகில் எத்தனையோ கொடிய நோய்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது உலகை ஆட்டிப் படைப்பது போல் வேறே ஏதும் ஆட்டிப்படைக்கவில்லை. இதிலிருந்து நமக்கு எப்போது விடிவு? மனச்சோர்வு தான் அதிகம் ஆகிறது. யாரைக் குற்றம் சொல்லுவது? பாதுகாக்கும் ஏற்பாடுகளைப் புறக்கணித்து  நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது! 

Monday, April 26, 2021

அம்மன் அருளாலே!

தீபாவளிக்கு இன்னமும் எத்தனையோ மாதங்கள் இருக்கின்றன. ஆனால் என்னோட டாஷ்போர்டில் தீபாவளி சம்பந்தப்பட்ட கேள்விகள். அதைக்குறித்து எழுது என்கிறது ப்ளாகர். முதல் வருஷம் பி.காம் படிப்பவர்களுக்கு தீபாவளி விடுமுறை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்துவிட்டனவா என்றொரு கேள்வி. இன்னொன்று உன்னோடு தீபாவளி கொண்டாட யாரையேனும் கூட அழைப்பாயா?  என்பது. தீபாவளிக்குனு பெண், மாப்பிள்ளையைத் தான் அழைப்போம். வேறே யாரை அழைப்பாங்கனு தெரியலை. அடுத்தது இன்னும் விசித்திரமானது. தீபாவளிக்கான விளக்கு அலங்காரங்களை இந்தியத் தபால் துறை மூலம் அனுப்ப முடியுமா? நான் அனுப்பி வைக்கலாமா? என்பது. இந்தக் கேள்விகளை வைத்துப் பதிவு  எழுது என்கிறது போல ப்ளாகர்! இதைத் தவிரவும் பொங்கல் பற்றிய கேள்விகள், அதற்கான பரிசுப்பொருட்கள்/அரசு என்ன கொடுத்தது, என்பதெல்லாமும் கேட்டிருக்கு. கூடவே வழக்கமான கேள்வியாகக் கம்சனின் குரு யார்? தளபதி யார்னும் கேள்விகள்! எல்லாத்தையும் விடச் சிரிப்பு வர வைச்சது என்னன்னா சபரிமலை ஐயப்பன் பற்றிய சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும் என்பதே! 

எனக்குத் தோன்றினாற்போலவே சென்னை ஹைகோர்ட்டுக்கும் தோன்றி இருக்கிறது. இந்த முறை கொரோனா பரவலுக்கு முழுக்காரணம் தேர்தல் கமிஷன் தான் என ஹைகோர்ட்டும் சொல்லுகிறது. குறைந்த பட்சம் பிரசாரங்களிலாவது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கணும். தேர்தல் கமிஷன் தான் அதைச் செய்யலைனா, நம்ம அரசியல் தலைவர்களும் எதைப் பத்தியும் கவலைப்படாமல் ஓட்டுச் சேகரிக்க மட்டுமே செய்தார்கள்.  யாருக்குமே கொரோனா பற்றிய கவலையே இல்லை.  தேர்தல் கமிஷன் தான் இம்முறை தமிழ்நாட்டில் கொரோனா பரவியதற்கான முக்கியக் காரணம் என்கிறது ஹைகோர்ட். அடுத்து வட மாநிலங்களில்/(இப்போதெல்லாம் தென் மாநிலங்களிலும் தான் !) கொண்டாடிய ஹோலிப் பண்டிகை. கோயில்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் திருவிழாக்களுக்கு ஏகக் கட்டுப்பாடு விதித்த/இன்னமும் விதிக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அப்புறமாக் கொரோனா பரவிடுச்சே என்றால் என்ன செய்ய முடியும்? எதுக்குக் கட்டுப்பாடு விதிச்சாலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்கு முதல்நாள் திறக்கும் மீன் சந்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தாகணும்.

ஒரு சிலருக்கு தில்லி, குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலங்கள் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லையே அங்கே மட்டும் கொரோனா பரவாமலா இருக்கு என்பது! அங்கேயும் கூட்டங்கள், நெருக்கடிகள், பேருந்துப் பயணங்கள், மற்ற எதையும் மக்கள் தவிர்க்கவில்லை. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக மும்பையில் வாய்ப்பே இல்லை/கொடுக்கவும் இல்லை. எங்க உறவினர் ஒருவர் இருக்கும் குடியிருப்பு வளாகத்தையே மூடி விட்டார்கள். அங்கே இருப்பவர்கள் வேறு இடங்களுக்குப் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். கொத்துக் கொத்தாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதும் நேர்ந்திருக்கிறது. எப்போது கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதோ அப்போதே ஆக்சிஜன் தேவையும் அதிகம் என்று உணர்ந்து மருத்துவமனையின் அதிகாரிகள் தேவையான ஆக்சிஜனைக் கேட்டுப் பெற்றிருக்கலாமோ? ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக் கொண்டு படுத்திருக்கும் நோயாளிக்கு திடீரென ஆக்சிஜன் வருவது நின்று விட்டதால் மரணம் நேரிட்டது/நேரிடுகிறது என்கிறார்கள். ஆக்சிஜன் சிலின்டரில் இருக்கா இல்லையா என்பது கூடத் தெரியாமலா சுகாதாரத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்! என்னவோ போங்க!

ஒரு வழியாக வெளிநாடுகளெல்லாம் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. அம்பேரிக்காவும் மருந்துக்கான மூலப்பொருள் ஏற்றுமதியைத் தடை செய்திருப்பதைக் குறித்து யோசித்து இந்தியாவுக்கு அந்தத் தடையை நீக்கலாமா என ஆலோசிப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியாவுக்கு யாரும்/இந்தியாவிலிருந்து யாரும் அம்பேரிக்காவுக்குப் போக முடியாது. பல நாடுகளும் இந்தியாவுக்கான வருகை/இந்தியாவிலிருந்து செல்தல் ஆகியவற்றை நிறுத்திவிட்டன. எங்க பையர் இந்தியா வரணும்னு துடிச்சுட்டு இருந்தார்! பாவம்! கோவிட் இல்லை எனில் 2020 டிசம்பரிலேயே வந்திருப்பார். இப்போது நைஜீரியாவில்.  அங்கிருந்து வரமுடியுமா என்பதும் தெரியவில்லை. நேர் வழி இல்லை. ஐரோப்பா வந்து தான் வரணும்னு நினைக்கிறேன். முன்னெல்லாம் விசா கிடைக்காமல் குடும்பத்தினர் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்க முடியலையேனு வருத்தமா இருக்கும். இப்போ அந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை. இந்தக் கொரோனா வந்து மனிதர்களை ஒருவர் முகத்தை ஒருவர் காணவிடாமல் தடுத்துவிட்டது. அதுவும் இந்த இரண்டாம் முறை மிக அதிகம். ஆனாலும் மக்கள் இன்னமும் உணரவே இல்லை.  இந்தப் பிரச்னைகள் எல்லாம் எப்போது தீர்ந்து நாம் பழைய மாதிரி வாழ ஆரம்பிப்போம் என்பதே தெரியலை/புரியலை.

இன்னிக்குச் சித்ரா பௌர்ணமி. இன்று தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் நடக்கும். அம்மாமண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். போன வருஷம் பார்க்கலாம்னு நினைச்சிருந்து பார்க்க முடியலை. கொரோனாவால் தடை. இந்த வருஷமும் அதே தடை நீடிக்கிறது. பெருமாளைப் பார்க்க முடியலை. கோயிலுக்கும் போக முடியலை. எங்க குலதெய்வம் கோயிலை நல்லவேளையாப் போன வாரம் பார்த்துட்டு வந்தோம். கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தால் போயிருக்க முடியாது. எல்லாம் மாரியம்மன் அருள் தான்.பக்கத்துக் கல்யாணச் சத்திரத்தில் அடுத்தடுத்துக் கல்யாணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கொரோனாவுக்கும் அவங்க நிறுத்துவது இல்லை. உணவு சமைக்கின்றனர். ஒரே சப்தம்/மிச்ச உணவைக் கொட்டுகின்றனர். யாரையானும் கூப்பிட்டுக் கொடுக்கக் கூடாதோ? அந்த உணவு அங்கேயே கிடந்து நாற ஆரம்பித்து விடுகிறது. எங்க வீட்டில் திறந்த பால்கனி வழியாக அந்த துர்நாற்றம் வந்து முன் ஹாலில் உட்காரவே முடிவதில்லை. இங்கே எங்க அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும் புகார் கொடுத்ததன் பேரில் இப்போச் செண்டை மேளம் வைக்கும் கல்யாணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். அப்படியே செண்டை மேளம் வைத்தாலும் வெளியே தெருவிலேயே அடக்கி வாசிக்கும்படி சொல்லி இருக்காங்க போல! சமீபத்திய கல்யாணங்களில் செண்டை மேளமே இல்லை. நாதஸ்வரம், தவில் தான். ஆனால் உணவு வீணாவது தான் மனதை வருத்துகிறது. பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்க வேண்டாமோ! எத்தனையோ பேர் உணவில்லாமல் தவிப்பவர்களுக்குக் கொடுக்கலாமோ? அல்லது அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாமோ? கீழே கொட்டுகின்றனர். பாத்திரம் தேய்க்கும் நீரில்/கழுவும் நீரில் அவை ஊறி நாற்றமெடுக்கின்றன. இதை எங்கே போய்ச் சொல்லுவது?  இந்தியாவில்/தமிழ்நாட்டில் தான் இவை எல்லாம் நடக்கும்! மக்களும் பொறுத்துப் போயாக வேண்டும்.

Friday, April 23, 2021

போகப் போகத் தெரியும்!

 ஒரு வழியாய் நாங்களும் ஜோதியிலே ஐக்கியம் ஆயிட்டோம். கண் அறுவை சிகிச்சை இருக்குமோனு ஒரு கவலை/யோசனை! அடுத்து மைத்துனரின் ஆப்திகக் கவலைகள். திடீர்ப் பயணம் ஒண்ணு இருக்குமோனு இன்னொரு கவலை, வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள் என ஒண்ணு மாத்தி ஒண்ணு பட்டியல் போட்டுக் கொண்டு வந்து விட்டன. கடைசியா நேற்று ப்ளம்பர் வந்து சமையலறைப்பக்கம் இருக்கும் செர்வீஸ் ஏரியாவின் குழாயைச் சரி பண்ணிட்டுப் போயிட்டார். இனி இப்போதைக்குக் கொஞ்ச நாட்கள் எந்த வேலையானாலும் போட்டு வைச்சுடலாம்னு முடிவு எடுத்து இன்னிக்கு அங்கே இங்கே விசாரித்து, அரசாங்க மருத்துவமனையில் ஒரு நாள் எடுக்கும் என்பதால் தனியார் மருத்துவமனைக்குப் போய்க் கோவி ஷீல்ட் ஊசி போட்டுக் கொண்டு வந்தாச்சு.

அங்கே போனதுமே பிபி, ஜூரம் இருக்கானு எல்லாம் சோதனைகள் செய்து ஆதார் கார்ட்/நம்பரோடு பெயரையும் எழுதிக் கொடுத்தவற்றையும் சரிபார்த்து, (அப்படியும் அவர் பெயரைப் பிடிவாதமாய் ஏ.சாம்பசிவம்னு எழுதி இருக்காங்க) பெயர் எழுதிப் பணம் கட்டியவுடன் பத்து இருபது நிமிஷங்களில் கூப்பிட்டு ஊசி போட்டார்கள். அந்த அறைக்குள்ளே ஏறணுமேனு கவலைப் பட்டுக்கொண்டே எழுந்தேன். ஹிஹிஹி, என்னைப் பார்த்ததுமே அந்தப் பெண்மணி, "நீங்க வரவேண்டாம்! அங்கே உட்காருங்க, நான் வந்து ஊசி போடறேன்!" என்று சொல்லி விட்டார். வந்து போட்டும் விட்டார். அப்புறமா அரை மணி அங்கே உட்கார்ந்து அடுத்த ஊசிக்கான தேதியைக் கேட்டுக் குறித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டோம். டோலோ 650 மாத்திரைகள் கொடுக்கலையானு என் தம்பி கேட்டார். அரசு மருத்துவமனையில் தான் அதெல்லாம் கொடுக்கிறாங்க போல! இங்கே எதுவும் தரவும் இல்லை. எந்தவிதமான நிபந்தனைகள் இருப்பதாகவும் சொல்லவில்லை. மாத்திரைகளும் கொடுக்கவில்லை. ஆகவே நாங்க அப்படித் தேவைன்னால் பக்கத்து மருந்துக்கடையிலே வாங்கிக்கலாம்னு முடிவு செய்துட்டோம். 

ஆக மொத்தத்திலே நாங்களும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டோம். எங்களுக்குப் போட்டிருப்பது கோவிஷீல்ட் என்று சொன்னார்கள். அடுத்தது மே மாதக் கடைசியிலே தான்! இப்போதைக்குக்கையிலே கொஞ்சம் கடுக்கிறது.  இனி போகப் போகத் தான் தெரியும்.  இந்த ஊசியின் தாக்கம் என்னனு புரியும்.  அதோடு அரசு மருத்துவமனையில் தேநீர், ஜூஸ் எல்லாம் கொடுப்பதாகவும் சில/பலர் எழுதி இருந்தனர். இங்கே தண்ணி வேணுமானு கூடக் கேட்கலை. அரை மணி உட்கார்ந்துட்டுப் போங்கனு சொன்னதோடு சரி! வீட்டுக்கு வந்து தான் தண்ணியே குடிச்சோம். லேசாக் கைவலிக்கிறாப்போல்/கனத்தாற்போல் இருக்கு. இனிமேப் பார்க்கணும்.

Wednesday, April 21, 2021

சீதா ராம நாமமே துதி செய்! நாளும் ஒரு தரம்!

 


எங்க வீட்டு ராமர் வெகு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வந்திருக்கார். மல்லிகைப் பூ மாலை நேற்றுக் கட்டினேன். இந்த வருஷம் கதம்பத்திற்கான பூக்கள் வாங்கலை. விலை ரொம்பக் குறைவு என்பதால் மொத்தமாய்த் தான் வாங்கணுமாம். கொஞ்சமாகக் கேட்டால் கொடுப்பதில்லை. அவ்வளவு பூக்கள் வாங்கினால் ஒரு வாரத்துக்கு வரும்! ஆகவே மல்லிகைப் பூக்களும் உதிரிப் பூக்களுமாக வாங்கினதோடு சரி! கிருஷ்ணரும்/ராமரும் எல்லாவற்றிலும் நேர்மாறாக இருப்பார்கள்! கிருஷ்ணர் நல்ல மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமியில் பிறந்தார் எனில் ராமரோ நல்ல அடிக்கிற வெயில் காலத்தில் வளர்பிறை நவமி! இங்கே ஶ்ரீரங்கத்தில் கிருஷ்ணாஷ்டமிக்கு ஆவணி மாதம் தான் கணக்கு. அதே போல் ஶ்ரீராமநவமிக்குச் சித்திரை மாதம் கணக்கு. ஒவ்வொரு வருஷமும் ஆவணியில் ஜன்மாஷ்டமியும், சித்திரையில் ராமநவமியும் வருவதில்லை. ஆனாலும் பெருமாள் கோயில்களில் முக்கியமாய் ஶ்ரீரங்கத்தில் ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமி கலந்த ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஜன்மாஷ்டமி! அதே போல் சித்திரை வளர்பிறை நவமி ஶ்ரீராம நவமி! இந்த வருஷம் பங்குனி மாதம் அமாவாசை மாசக் கடைசியில் வந்ததால் சித்திரையில் ஶ்ரீராமநவமி வந்திருக்கு. இல்லைனால் நமக்கெல்லாம் பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ நவமியிலேயே கொண்டாடிடுவோம்.சுவாமி அலமாரியின் கீழ்த்தட்டு உம்மாச்சிங்க! அறிமுகம் தேவை இல்லை. எல்லோரும் பல முறை பார்த்திருக்கீங்க! வெற்றிலை, பாக்கு, பழம் தட்டு மட்டும் இங்கே தெரியுது. மற்றப் பிரசாதங்கள் கீழே!

முன்னால் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் தெரிவது கடலைப்பருப்புச் சுண்டல். கடலைப்பருப்பை உப்புச் சேர்த்து நன்கு நசுங்கும் பதத்தில் வேக வைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் தாளிக்கையில் கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த பருப்பைக் கொட்டி ஒன்றரைத் தேக்கரண்டி சாம்பார்ப் பொடி சேர்த்துக் கூடவே ஒரு தேக்கரண்டி சர்க்கரை, தேங்காய்த் துருவல், துருவிய காரட், வெள்ளரி, மாங்காய்த் துண்டங்கள், நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி தூவிக் கிளறி இறக்கினால் சாப்பிட நன்றாக இருக்கும். விரத நாட்கள் இல்லாமலோ/அல்லது சும்மாச் சாப்பிடப் பண்ணினாலோ இவற்றோடு பெரிய வெங்காயம் பச்சையாகப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். புதினாவையும் சேர்க்கலாம். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். 

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து வேக வைத்துக் கொண்டு அரிசியும், தேங்காயும் சேர்த்து அரைத்து விட்ட பாயசம். வடை. இந்த வருஷம் உளுந்து வடை பண்ணலை. அதென்னமோ எனக்கு வடையே பண்ணத் தெரியலையாம். நம்ம சர்வாதிகாரியோட கண்டுபிடிப்பு! ஆகவே உளுந்து வடையே பண்ணாதே என ஆர்டர் போட்டாச்சு. ஆமவடைதான் பண்ணினேன். எங்க வீட்டில் இரண்டும் பண்ணுவோம் தான்! ஆனாலும் வடை பண்ணத் தெரியலைனு சொல்லிட்டுப் பண்ண வேண்டாம் என்பது என்னமோ சரியில்லை இல்லையோ? போனால் போகட்டும். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் உளுந்து வடை பண்ணி நான் மட்டுமே சாப்பிடணும்னு முடிவு எடுத்திருக்கேன். 

பானகம், நீர்மோர், சாதம், பருப்பு! வடைப்பருப்பு எனச் சொல்லப்படும் பாசிப்பருப்பை ஊற வைத்துப் பிழிந்து அதில் வெள்ளரி, மாங்காய், காரட், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை கொத்துமல்லி போட்டு உப்புச் சேர்த்து எலுமிச்சை பிழிந்தால் ஆஹா! ஓஹோ! சொர்கம் தான். ஆனால் இங்கே பண்ண முடியாது. இங்கே இவங்களுக்கெல்லாம் வடைப்பருப்புன்னாத் தெரியவும் தெரியாது. பல முறை பண்ணிக் காட்ட நினைப்பேன். ஆனால் அம்பத்தூரில் இருந்தவரை மன்னி கொடுத்தனுப்புவார் என்பதால் பண்ண மாட்டேன். இங்கே வந்து பண்ணணும்னு நினைச்சுட்டுப் பண்ணுவதே இல்லை. ஒரு நாளைக்கு சாலட் மாதிரிப் பண்ணிச் சாப்பிடணும்னு நினைச்சிருக்கேன்.

ஹிஹிஹி, ஶ்ரீராமநவமியை விட்டுட்டு கதா காலட்சேபம் பண்ணிட்டு இருக்கேன் போல! இவ்வளவு தான் ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் பண்ணியது. ரொம்ப எளிமை ராமரைப் போலவே! வடை கொஞ்சமாய்த் தட்டினேன். மிச்சம் வடை சாயந்திரமாத் தட்டணும். எல்லோரும் பிரசாதம் எடுத்துக்கோங்கப்பா! சுண்டல் அப்புறமா நல்லா இருக்காது. வாங்க, வாங்க சீக்கிரமா!

Tuesday, April 20, 2021

நீண்ட நாட்கள் கழிச்சு ஒரு பயணம்!

நேற்றே எழுத ஆரம்பிச்சேன். உட்கார முடியலை. போய்ப் படுத்துட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வெளி உலகத்திற்கே செல்லாமல் இருந்துட்டு திடீர்னு போனதாலோ என்னமோ தெரியலை. உடல் அசதி/வலி/நடக்க/உட்கார முடியாமல் பிரச்னை! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இப்போதெல்லாம் அடிக்கடி பதிவுலகுக்கு வர முடியாமல் தான் போகிறது. 

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக முடியலை. 2019 செப்டெம்பரில் அம்பேரிக்கா போகும் முன்னர் போனது தான்!  அதன் பின்னர் அங்கே இருந்து வந்த பின்னர் போக முடியாமல் ஆகிவிட்டது. எப்போடா போவோம்னு காத்திருந்தோம். இங்கே உள்ளூரில் உள்ள ரங்குவையே போய்ப் பார்க்க முடியலை. சுமார் ஒன்றரை வருஷங்களாக எங்குமே போகாமல் இருந்துட்டு இப்போத் தான் ஞாயிறு அன்று குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கே போவதுன்னாச் சும்மாவா? பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, மாரியம்மன் மாவிளக்குக்கு மாவுனு எல்லாம் தயார் செய்துக்கணுமே! அதோட கோயிலில் அபிஷேஹம் செய்ய வேண்டிய பொருட்கள், மாலை, பூக்கள், பழங்கள், தேங்காய்கள்னு எல்லாமும் தயாராகக் கொண்டு போயிடணும். அங்கே ஒண்ணும் கிடைக்காது. கிராமம் தானே!

சனிக்கிழமையே காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டுப் பிரசாதங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டேன். மற்ற சாமான்களையும் தயார் செய்து கொண்டு வண்டிக்கும் தொலைபேசிச் சொல்லிட்டு ஞாயிறன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வீடு சுத்தம் செய்தல் போன்ற வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு மாவிளக்குப் போட்டதும் சாப்பிட இட்லி தயார் செய்து அதை அலுமினியம் ஃபாயிலில் வைத்து எடுத்துக் கொண்டு இருவருக்கும் காஃபியும் எடுத்துக் கொண்டேன். அவருக்குச் சர்க்கரை இல்லாத காஃபி எனில் எனக்கு அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தது என்பதால் இரண்டு ஃப்ளாஸ்க்! அதைத் தவிர அவருக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குடி நீர். எனக்குப் பானைக் குடி நீர். அதுவும் தனியாக! எல்லாம் தயார் ஆனதும் வண்டியும் வந்தது. ஒரு பத்து நிமிஷம் தாமதம். ஆனாலும் பரவாயில்லை. கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் கும்பகோணம் வந்தாச்சு. இறங்கலை. அப்படியே நேரே கிராமத்திற்குப் போனோம்.எட்டேகாலுக்குப் போயாச்சு கோயிலுக்கு! 

சாமான்களை எல்லாம் இறக்கிவிட்டுக் கோயிலில் போய் மாவிளக்கை வெல்லம் சேர்த்துத் தயார் செய்தேன். வெயில் காரணமாகவும், பாகு வெல்லம் காரணமாகவும் கொஞ்சம் இளகினாற்போல் தான் இருந்தது. இப்போத் தான் ஏத்திடுவோமே, சரியாயிடும்னு நினைச்சால் கோயிலுக்கு திமுதிமுவெனச் சிலர் வந்தார்கள். அவங்க குழந்தை பிறந்து முதல் முதல் குழந்தையை எடுத்துக் கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்திருக்காங்க போல! அபிஷேஹம் தவிர்த்துப் பிரசாதம் எல்லாம் சொல்ல, கடையில் போய் சாமான்களை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் , சுண்டல், எலுமிச்சைச் சாதம்னு தயார் செய்ய ஆரம்பித்தார் பூசாரி. அது சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் அபிஷேஹம் ஆரம்பித்து அலங்காரங்கள் முடிந்து நான் மாவிளக்குப் போடும்போது நெய்யை விடவும் கர்பகிரஹச் சூட்டிலும் வெயில் காரணமாயும் நெய்யும் ஓட ஆரம்பிக்க ஒரு மாதிரிச் சமாளித்துக் கொண்டு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினேன். அங்கேயே நின்று கொண்டிருந்தேன். கீழே இறங்கிக் காமிராவை எல்லாம் எடுத்து வரவில்லை. அதுக்குள்ளே மாவிளக்குத் திரி முழுவதும் முடிந்து மலை ஏறி விடுமோனு பயம். 

அதோடு கர்பகிரஹத்தினுள் நுழையும் படிகளில் ஏறி ஏறி இறங்க முடியலை. யாரானும் உதவி தேவைப் படுகிறது. எல்லாவற்றையும் உத்தேசித்து அங்கேயே நின்றுவிட்டேன். இம்முறை ரொம்ப நடக்கவே முடியாமல் கஷ்டமாக வேறே இருந்தது.  வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்து விட்டதால் நடப்பதே புதுமையாகவும் ஆகி விட்டது. எல்லாம் முடிந்து தீப ஆராதனை எடுத்துவிட்டுக் கீழே இறங்குவதற்குள்ளாகப் போதும், போதும்னு ஆகிவிட்டது. வெளியே நின்றிருந்த ஒரு பெண்மணி கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார். இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக மாரியம்மன் கோயிலில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அங்கேயே இட்லி சாப்பிட்டுக் காஃபியும் குடிச்சு முடிச்சு அங்கே இருந்து பெருமாள் கோயிலுக்குக் கிளம்பினோம். பெருமாள் ஊர் ஆரம்பிக்கையிலேயே இருப்பார். ஆனால் முதலில் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு பின்னர் வரணும் என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்தோம். பட்டாசாரியார் பாவம் இரண்டு மணி நேரமாகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத் தான் எங்களுக்கு மதிய உணவு கொண்டுவரச் சொல்லி இருந்தோம்.

பெருமாளுக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களை (மதியத்துக்காக) புளியோதரையும், தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு கருவிலி நோக்கிச் சென்றோம். நாங்கள் சென்ற வண்டி வேறே காலைத் தூக்கி வைத்து ஏற வேண்டி இருந்ததுனா உள்ளேயும் அரை அடிக்கும் மேல் கீழே காலை வைக்கணும். அது வேறே ஒவ்வொரு முறை வண்டியில் இருந்து இறங்கும்போதும், திரும்ப ஏறும்போதும் பிரச்னையாகவே இருந்தது. ஆகவே காமிரா கொண்டு போகாததால் மொபைலில் படங்கள் எடுக்க நினைச்சு மொபைலையும் என் பைக்குள்ளேயே வண்டியில் வைச்சுட்டுத் தான் போனேன். படம் எடுக்க முடியலையே என்று வருத்தம் தான். ஆனால் ஏறும்போதும் இறங்கும்போதும் இருவருக்குமே கஷ்டமாக இருந்ததால் வேண்டாம்னு வைச்சுட்டேன். மாரியம்மனை மட்டும் படம் எடுத்திருந்தேன். அது மட்டும் போடுகிறேன்.

கருவிலி சிவன் கோயிலை முடித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஊரில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கும் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். ஏப்ரல் 2 ஆம் தேதி தான் அந்தக் கோயிலுக்குப் பல வருஷங்கள் கழிச்சுக் கும்பாபிஷேஹம் செய்தார்கள். அந்தக் கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாம். செம்பியன் மாதேவி இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலை இப்போது புனர் நிர்மாணம் செய்தது பரவாக்கரையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்னும் காவல்துறை அலுவலர். பணி ஓய்வு பெற்று வந்ததும் சரித்திரத்திலும் பழமையான கோயில்களிலும் ஈடுபாடு கொண்ட அவர் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டுச் சொந்த ஊரான பரவாக்கரையை விட்டுப் பக்கத்து ஊரான கருவிலிக்கு அருகே உள்ள கூந்தலூரில் தங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வேலைகள் செய்து திருப்பணிகளை முடித்துக் கும்பாபிஷேஹமும் செய்து வைத்திருக்கிறார்.

இந்தக் கோயிலில் சப்தகன்னிகள் இருப்பதாலும் சப்த முனிகள் இருப்பதாலும் இது மிகப் பழமை வாய்ந்த கோயில் என்பது புரிய வந்தது. கோயிலின் படங்கள் கும்பாபிஷேஹ சமயத்தில் எடுக்கப்பட்டவை வந்துள்ளன. அவற்றை எல்லாம் பின் வரும் நாட்களில் ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன். இந்தக் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே நடுவில் பச்சையம்மனும் வலப்பக்கம் மாரியம்மனும் இடப்பக்கம் காத்தாயி அம்மனும் இருந்தார்கள். வெளியே பெரிய மைதானத்தில் (இப்போத் தளம் போட்டுவிட்டார்கள்.) எனக்கு அது தான் கொஞ்சம் வருத்தம். கர்பகிரஹத்தில் கூட கல் தளங்களை அகற்றிவிட்டு டைல்ஸ் போட்டிருக்காங்க. இதனால் அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் விபரங்கள் முற்றிலும் அழிந்து யாருக்குமே தெரியாமல் போய்விடும். இதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. எல்லோருமே அரசியல் தலைவர்கள் உள்பட தமிழன்/தமிழ் தொன்மை வாய்ந்தது. உலகின் மூத்த முதல் குடிமக்கள். தமிழ் தான் முதலில் தோன்றியது என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் தமிழனின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும் விஷயங்களை அடியோடு அழித்துவிட்டு நாகரிகம் என்னும் பெயரில் தேவையற்ற அலங்காரங்களைச் செய்து கோயிலின் புனிதத்தையும் தொன்மையையும் கெடுத்துவிடுவார்கள். பல கோயில்களிலும் திருப்பணி என்னும் பெயரில் இந்தக் கொடுமை தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

தொடரும்! படங்களை வலையேற்றிவிட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.


Monday, April 12, 2021

அத்திவரதன் மீண்டும் வந்துவிட்டான்!

"அத்திமலைத்தேவன்" இரண்டாம் பாகத்தில் அந்த நாட்களில் கோயில்கள் பராமரிக்கப்பட்ட விதம் பற்றியும் இரவுக் காவலன் ஒருவன் கோயிலில் சுற்றி வந்து காவல் காத்ததையும் சொல்லுகிறது. அதோடு இல்லாமல் சோழ இளவரசன் கரிகாலன் ரகசியமாகக் காஞ்சிக்கு வந்து தமிழ் கற்றதையும், பல்லவ இளவரசனும், கரிகாலனும் உறவு என்பதும் நமக்கு/எனக்குப் புதிய செய்தி! அக்கா/தங்கையின் பிள்ளைகள். அந்த வழியில் உறவு. கரிகாலன் உறவைப் போற்றி வளர்க்க நினைக்க, இளந்திரையனோ ஆரம்பத்தில் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை.  பின்னர் காஞ்சியை அனைத்துத் துணை நகரங்களையும் சேர்த்து ஒரே நகரமாக இருவரும் நிர்மாணிக்கின்றார்கள்.  சரித்திர ரீதியாக மட்டுமின்றி பூகோள ரீதியாகவும் ஆறுகள் உற்பத்தி ஆகிச் சேர்ந்த இடங்களைக் குறித்தும் எழுதி இருக்கிறார் நரசிம்மா! முன்னர் பாலாறு காஞ்சியின் வடக்கே ஓடியதாகவும், காலப் போக்கில் பாலாறு காஞ்சியின் தெற்கே இப்போது இருப்பது போல் ஓடுவதையும் குறிப்பிட்டு வடக்கே ஓடி இருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் செயற்கைக்கோள்கள் மூலமும் தொல்லியல் சான்றுகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிவதாகச் சொல்லி இருக்கிறார்.

இன்றைய அடையாறும், கூவம் நதியும் பாலாறு வடக்கே ஓடியதின் மிச்சங்களே என்பதைத் தொல்லியல் அதிகாரி மூலம் உறுதிப் படுத்தி இருக்கும் நரசிம்மா குசஸ்தலை ஆறு என்பது வடமொழிச் சொல் அல்ல என்பதையும் கொசவர்கள் வாழ்ந்து வந்த கிராமத்தின் கரையில் ஓடியதால் கொசஸ்தலை என்றும் குஷஸ்தலை என்றும் அழைக்கப்படுவதாய்ச் சொல்கிறார். நாவல் முழுவதும் இம்மாதிரி முக்கியத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்தும் தர்க்கரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஏற்கப்படக் கூடியதாயும் உள்ளன.  இந்தக் கொசவர்கள் தாம் பெருமாள் கோயில்களில் மடப்பள்ளியில் சமைக்க மண் பாத்திரங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். ஒரு நாள் சமைத்த பாத்திரங்களில் மறுநாள் சமைக்க மாட்டார்கள். ஆகவே ஆற்றங்கரையிலேயே வாழ்ந்து வந்த கொசவர்கள் தினம் தினம் புத்தம்புதியதாகப் பானைகளையும், சட்டிகளையும் செய்து பெருமாள் கோயில்களில் மடப்பள்ளிக்குக் கைங்கரியம் செய்து வந்ததாயும் சொல்கிறார், இந்தக் கொசவர்களின் தலைவனே இரவு வேளைகளில் கோயிலைப் பாதுகாக்கவும் செய்வானாம்.

பொதுவாகப் பல்லவர்களிடையே அதிகம் குழந்தைகள் பிறந்ததாய்த் தெரியவில்லை. முக்கியமாய்ப் பெண் குழந்தைகள். ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகவே குழந்தைகள்! இங்கேயும் சாணக்கியர் காலத்துத் திருலோச்சன பல்லவன் குழந்தை வரம் வேண்டி அத்தியூரின் அத்திமலைத் தேவனுக்குப் பச்சை சாற்றிக் குழந்தை வரம் வேண்டுகிறான். பல்லவ அரசர்களுக்கு அத்திமலைத் தேவனே குலதெய்வம் என்றாலும் பல தேசத்து மன்னாதி மன்னர்களும் இந்த அத்திமலைத் தேவனைக் கொண்டு போய்விட எண்ணுகின்றனர். இவரை வைத்து அஸ்வமேத யாகம் செய்தால் உலகனைத்தும் அடக்கி ஆளலாம் என்னும் எண்ணமும் பல மன்னர்களின் பேராசைக்குக் காரணமாய் அமைந்தது. 

முக்கியமாய் பௌத்தர்களுக்கு இந்த தேவ உடும்பர மரத்தின் தேவை மிக அதிகம். புத்த கயாவில் இருந்த தேவ உடும்பர மரம் அசோகனின் மனைவியால் அழிக்கப்படவே அவர்கள் தெற்கே இருக்கும் மரத்தைக் கண்டு பிடித்து அந்த உடும்பர மரத்தால் புத்தர் சிலையை நிர்மாணிக்க வேண்டும் என்னும் ஆவல் கொண்டிருந்தார்கள்.  மேலும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை அவதரிக்கும் புத்த அவதாரம் சரிவர நடைபெற வேண்டுமானால் தேவ உடும்பர மரம் இல்லாமல் முடியாது. ஆகவே அவர்கள் பங்குக்கு பௌத்த சந்நியாசிகளும், சந்நியாசினிகளும் (இவர்களில் அசோகனின் பிள்ளை மஹிந்தா, பெண் சங்க மித்தா ஆகியோரும் அடங்குவார்கள்.)  வந்து காஞ்சிக் கடிகையில் படிக்க வந்திருப்பவர்கள் போல் நடித்து எப்படியேனும் அத்திமலைத் தேவனைக்கொண்டு போய்விடக் காத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை.  இப்போது தான் ஆம்ரபாலி உள்ளே நுழைகிறாள். ஆம்ரபாலி பற்றி ஹிந்தி படிக்கையில் நிறையப் படித்திருந்தாலும் இதில் படித்தது தனி அனுபவம். 

நாம் படித்த ஆம்ரபாலி மகத தேசத்து மன்னன் பிம்பிசாரனை மணந்து புத்த பிக்குணியாவாள். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளையும் பிக்ஷுவாக ஆகிவிடுவான். ஆனால் இங்கே ஆம்ரபாலி சரியான வில்லி. பலரை அழிக்கிறாள். ஒழிக்கிறாள். கடைசியில் பிரசவத்தின்போது ஏற்படும் சிற்சில சிக்கல்களில் முதலை வாயில் போய் இறக்கிறாள். கொடூரமான சாவு!  திரைப்படமாக வந்தபோது வைஜயந்திமாலா நடிச்சிருந்தார்னு நினைக்கிறேன். இங்கே வேறே மாதிரி வந்திருக்கும்.  அதே போல் வேகவதி நதியில் விடும் அத்தியோலைகள் முக்கூடல் சங்கமத்தில் அவரவர் கைரேகைகளை வைத்துக்  கண்டெடுக்கும் நிகழ்வும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மாதிரிச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எனப் பலவும் எக்காலத்திலும் இருந்து வந்திருக்கிறது என்பதே நமக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம். இதிலும் சதிவேலை நடக்க, அதிலிருந்து இயற்கையே காப்பாற்றிக் கொடுக்கும் அற்புதங்களும் நடைபெறுகிறது. அதிலும் இலைகளைக் கொண்டு வந்து கொடுப்பது யார் என்பதை நினைத்தால் இன்னமும் ஆச்சரியம் தான்! 


Wednesday, April 07, 2021

தூங்கி எழுந்துட்டேன்!

 நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. எங்கேயோ திக்குத் தெரியாத காட்டில் சுத்திட்டு வந்தாப்போல் எண்ணம்.  பத்துநாட்களாகக் கடைசி மைத்துனரின் வருஷ ஆப்திக வேலைகள் நெட்டி வாங்கிற்று. அவருக்கு வெளியில் போல் வாங்கவேண்டிய வேலைகள் எனில் எனக்கு வீட்டிற்குள்ளேயே செய்ய வேண்டியவை. இந்தச் சூட்டோடு சூடாகக் கண் மருத்துவரிடமும் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தேதி கேட்டால் அவங்க இன்னும் முத்தட்டும், ஆறு மாசமாவது ஆகணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஒரு வழியாக அந்தப் பிரச்னை தீர்ந்தது என்றால் பெரிய மைத்துனரும் ஓரகத்தியும் மும்பையில் இருந்ததால் அவங்க ஆப்திகத்துக்கு வருவாங்களா இல்லையானு கவலை/ பிரச்னை. குடும்பப் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டு அப்படி அவங்க வர முடியாத பக்ஷத்தில் நாங்களே செய்வதற்கு இயலுமா எனக் கேட்டுச் சொல்லச் சொன்னோம். அவரும் தர்ம சாஸ்திரப் புத்தகங்கள்/ தன்னோட குரு எனக் கேட்டுவிட்டு பெரிய மைத்துனர் அனுமதி கொடுக்கணும், சாஸ்திர ரீதியாக எனச் சொன்னார். 

மும்பையில் ஊரடங்கு வரப் போவதாகச் சொன்னதால் அவரால் அங்கிருந்து கிளம்ப முடியுமா என்பதே பிரச்னையாக இருந்தது. ஆகவே அவரிடம் எதுக்கும் இருக்கட்டும் என வாட்சப், ஸ்கைப் மூலமாக இங்கிருந்து புரோகிதர் சொல்லி அங்கே மும்பையில் மைத்துனர் அனுமதி கொடுக்குமாறு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டாலும் எப்படியேனும் தான் கிளம்பி வரப் பார்ப்பதாகவும் உறுதி அளித்தார். நல்லவேளையாகப் போன ஞாயிறன்று அவங்க சென்னைக்குக் கிளம்பி வந்து பின்னர் சனியன்று இங்கே ஶ்ரீரங்கமும் வந்து விட்டார்கள். மற்ற நாத்தனார்களால் வர இயலவில்லை. வந்த வரைக்கும் போதும். இவர் தானே முக்கியம் என நாங்களும் பேசாமல் இருந்துட்டோம். சமையலுக்கும் மாமி கிடைத்து மூன்று நாட்கள் காரியங்களும் நல்லபடியாக நடந்து முடிந்தன. வந்தவங்களும் திரும்பச் சென்னை போய் விட்டார்கள். இந்தச் சமயம் பார்த்து மும்பை ஊரடங்கு அறிவிப்பால் அனைவரும் மும்பையிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மைத்துனரின் பிள்ளை அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இனி எப்போது மும்பை போக முடியும்னு தெரியலை.

நேற்று சுபம் முடிந்து அனைவரும் கிளம்பிப் போனதும் நாலரைக்கு மேல் நாங்க ஓட்டுச்சாவடிக்குப் போய் எங்க கடமையையும் ஆத்திவிட்டு வந்தோம். கூட்டமே இல்லை. மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டக் கையுறையை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டுச் சுத்தம்/சுகாதாரம் பேணி இருந்தார்கள். நம் மக்களுக்கு இந்தப் பழக்கம் போகவே போகாது. வாய் கிழியப் பேசுவார்கள். அங்கிருந்தவர்களும் இது குறித்த சிந்தனை இல்லாமலேயே இருந்தார்கள். நான் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் போட்டவர் பெயர் வருதானு பார்த்துட்டு இருந்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெளியே இருந்து ஒரு தேர்தல் அதிகாரி அம்மா, வெளியே வாம்மானு கத்தினார். ஆனாலும் நான் பார்த்துட்டுத் தானே வந்தேன். அப்புறமா எங்கானும் மாறிடுச்சுனா ஒரு ஓட்டு வீணாகிடாதோ? இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது தான்! :) இங்கேயும் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு எனச் சொன்னார்கள். இன்று வரை எதுவும் தெரியலை. ஆனால் மஹாராஷ்ட்ராவில் இருந்து சென்னை வர ஈ பாஸ் தேவை. மைத்துனர் பிள்ளை பாஸ் எடுத்துக் கொண்டே வந்திருக்கார். வெளி மாநிலங்கள் எனில் ஈ பாஸ் தேவை போல. பெருகி வருகிறது கொரோனா!  விரைவில் அடங்கும் எனச் சொன்னாலும் கவலையும், பயமுமாகத் தான் இருக்கு. 

ரஜினிகாந்துக்கு "தாதா சாஹேப் பால்கே" விருது கொடுத்திருக்காங்களாம். ஒரே அமர்க்களம். இதிலே சிலருக்கு ரஜினி தமிழர் இல்லைனும், (எனக்கும்) அதனால் நாம் குதிக்க வேண்டாம் எனவும் கருத்து. பொதுவாக ரஜினி தமிழ்ப்படங்கள் மூலமே பிரபலம் ஆனதால் அவருக்கு விருது கொடுத்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகையே கௌரவிச்ச மாதிரித் தான். இன்னும் சிலருக்குக் கமலஹாசன் /உல(க்)கை நாயகருக்குக் கொடுக்கலைனு வருத்தமாம். இப்போ அவர் தேர்தலில் நிற்பதால் இப்போ விருது கொடுத்தால்/அறிவித்தால் சரிப்படாது என நினைச்சிருக்கலாம்.  என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒரு வழியாக மிரட்டிக் கொண்டிருந்த இரண்டு பிரச்னைகளுக்கு அதுவாகவே தீர்வு கிடைச்சிருக்கு. இதான் இறைவன் கருணை என்பது. இனி அடுத்தடுத்து வரும் பிரச்னைகளுக்கும் இப்படியே தீர்வைக் கொடுப்பான் என நம்புகிறேன்.

எங்க பெண்ணிற்கு ஒரு மாசமாக வயிற்றில் பிரச்னை. வாயுக் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்வதில்லை. மோர் குடித்தால் கூட ஜீரணம் ஆகாததோடு ஏப்பமாக வருகிறது. என்ன செய்யறதுனு புரியலை. அவளை இங்கே வா, வந்து மருத்துவம் பார்த்துக்கலாம்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா. நாங்க போகலாம்னா நேரடியாக விமானம் இருக்கானு தெரியலை. அவ இப்போ வராதீங்க என்கிறாள். என்ன செய்யறதுனே புரியாமல் ஒரே குழப்பம் ஒரு மாசமாக. விரைவில் இந்தப் பிரச்னையும் தீரணும்னு பிரார்த்தித்துக் கொண்டு இருக்கோம்.

Friday, April 02, 2021

ஜீவி சாருக்கு என்னோட பதில்!

பாசவலை

அந்தப் பெண் வித்யா தன் இரட்டை வடம் செயின் நகையுடன் தன் பிறந்த வீட்டிற்குள் நுழைகையிலேயே, "வாம்மா,வித்யா. நேற்று தான் மாப்பிள்ளை இங்கே வந்துட்டுப் போனார். எல்லா விஷயத்தையும் சொன்னார்.. நீ வருவேன்னும் நீங்க தான் வித்யாவுக்கு அவளுக்குப் புரியற மாதிரி எல்லாத்தையும் சொல்லணும்ன்னும் சொன்னார். இதோ நீயே வந்துட்டே.. " என்று அவள் அப்பா முகமலர்ச்சியுடன் அவளை எதிர்கொண்டார்.


மேலே ஜீவி சார் எழுதிய கருத்துரை. இதில் அவர் சொல்லி இருப்பது மறைமுகமாக வித்யாவின் கணவன் அவன் அப்பா ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டது போலவும், வித்யாவை அவ அப்பா எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைக்கணும்னும் பொருள் வராப்போல் எழுதி இருக்கார். முதல்லே இதிலே இரண்டு தவறுகள். நேர வித்தியாசங்கள் சரியா வரலை. ஏனெனில் நான் எழுதின கதையில் வித்யா தன் மாமனாரிடம் தான் நகையை விற்க மறுநாள் ஊருக்குப் போவதாகச் சொல்லுவாள். அதற்கு முன்னால் அவள் ஊருக்குச் செல்லப் பயணச் சீட்டு முன்பதிவு செய்யவே அவள் கணவன் வெளியே சென்றிருப்பதாயும் வரும். அப்படி இருக்கையில் அவன் எப்படி வித்யாவிடம் கூடச் சொல்லாமல் தன் மாமனார் ஊருக்கு வித்யா போவதற்கு முன்னாலேயே போய்த் தன்னோட வீட்டில் சரிபாதிப் பங்கை/அதுவும் தான் அரசுக் கடன் பெற்றுக் கட்டும் வீட்டில் (பின்னால் எல்லாம் முடிந்தவுடன் அந்த வீடு குடியரசுத் தலைவர் பெயரில் பதிவு செய்யப்படும். கடன் முடியும்வரை அவர் தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்.) தன் தம்பிகளுக்கு சந்தோஷமாய்க் கொடுப்பதாயும் அதற்கு வித்யா உடன்பட வேண்டும் என்றும் கேட்டிருக்க முடியும்? 

அவன் வெளியூருக்குச் சென்றதாகவே வரவில்லை. சொல்லப் போனால் அந்தப் பாத்திரம் கதையில் நுழையவே இல்லை. வித்யாவின் மாமனார் தன் பிள்ளை ஒத்துக்கொண்டுவிட்டான் என்று வித்யாவிடம் சொன்னால் அதைக் கேட்டுவிட்டுக் கொஞ்சமானும் பயத்துடன் அவளும் ஒத்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில் பொய் சொல்கிறார் என்பது உடனேயே வித்யாவின் சந்தேகம் மூலம் தெரிந்து விடுகிறது. அதோடு வித்யா அடுத்த நாள் பிறந்த ஊருக்குப் போகப் போகிறாள். அப்படி இருக்கையில் அவளை வழி அனுப்பவோ, அவள் தனியாய்ப் போவதால் குழந்தைகளின் பொறுப்பை ஏற்கவோ இல்லாமல் அவளுக்கும் தெரியாமல் அவள் கணவன் தான் மட்டும் முன்னால் போய்த் தன் மாமனாரிடம் வீட்டை நான் எழுதிக் கொடுக்கத் தயார். அதற்கு வித்யாவைச் சம்மதிக்கச் செய்யுங்கள் என்று கேட்க முடியும்? அப்போ வித்யா ஊருக்குக் கிளம்பும்போது கணவன் அங்கே இல்லை என்றல்லவோ ஆகிறது? தனக்குக் கூடச் சொல்லாமல் தன் கணவன் தன் அப்பாவைப் போய்ப் பார்த்து இப்படிச் சொன்னால் அது வித்யாவுக்கும் அவள் கணவனுக்கும் இடையே பிரச்னைகளை உண்டு பண்ணாதா? தான் மறுத்த ஒரு விஷயத்திற்குத் தன் கணவன் தனக்குக் கூடத் தெரியாமல் ஒத்துக் கொண்டு தன் அப்பாவிடமும் சொல்லி இருப்பது வித்யாவுக்கு அவன் செய்யும் துரோகம் ஆகாதா?

அதோடு கடன் வாங்கிக் கட்டும் வீட்டில் எப்படி இம்மாதிரிப் பங்கு தர முடியும்? பின்னால் தன் குழந்தைகள் படிப்பு அல்லது திருமணத்திற்குச் செலவுக்குப் பணம் வேண்டுமெனில் அந்த வீட்டை விற்க முடியுமா வித்யாவின் கணவனால்? அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் இல்லை எனில் அந்த வீட்டின் கதி? வித்யாவின் அப்பா தான் தன் மகளுக்கு துரோகம் நினைப்பாரா? மனதார அவரால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டு வித்யாவையும் அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியுமா? அப்படி எனில் வித்யா அவருடைய சொந்தப் பெண்ணே இல்லை என்றே ஆகும். ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என இருக்கும்  பெற்றோர்களை ஜீவி சார் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். இம்மாதிரி உள்ளதை உள்ளபடியே சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டு போவதால் தான் பலருடைய துரோகங்களும் ஏற்கும்போது அதிர்ச்சி தாங்காமல் தற்கொலை வரை போகிறது. யாருக்கும் எந்தவிதமான அதிர்ச்சிகளையோ, துன்பங்களையோ தாங்க முடியாமல் போகிறது. எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.  இதை விடக் கொடுமையான சம்பவங்களை எல்லாம் பார்த்திருக்கேன். பேரக்குழந்தையோடு மருமகளை வீட்டுக்குள் விடாமல் வெளியேயே வெயிலில் நிறுத்தி வைத்த மாமனார்.மாமியாரை அறிவேன். இதெல்லாம் கதை அல்ல நிஜம்! 

எல்லோரும் தப்பு/தவறு செய்யும் சாதாரண மனிதர்கள் தான். சிலருக்கு அதை ஒத்துக்கொள்ள முடிகிறது. பலரால் முடியவில்லை. மத்யமர் குழுவிலே போய்ப் பார்த்தால் அறுபதைக் கடந்த பல பெண்களும் மாமியார்களால் தாங்கள் மூத்த மருமகளாகப் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பார்கள். அனைத்தும் உண்மை! கணவனால் கொடுமை/மாமியார்/மாமனாரால் கொடுமை என நாற்பதாண்டுகள் முன் வரை பெண்களுக்கு நடந்ததும் உண்மை. காலம் மாறி வருகிறது. இப்போதைய மாமியார்களோ/மாமனார்களோ/மருமகள்களோ அப்படி இல்லை. ஒருவரின் தேவை மற்றவருக்கு வேண்டும் என்பதைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதே சமயம் தங்களுக்குள்ளாக ஒரு கோடு போட்டுக் கொண்டு அந்தக் கோட்டை விட்டு வெளிவராமல்/உள்ளேயும் போகாமல் எல்லையிலே இருந்து கொண்டு கவனமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கதைக்கு வேண்டுமானால் ஜீவி சார் சொல்லி இருக்காப்போல் கற்பனையைக் கலந்து சொல்ல முடியும்! ஆனால் உண்மை சுடும்!

Thursday, April 01, 2021

என்னவேணா சொல்லிக்கோங்க! :)))))))

எழுதலாமா வேண்டாமானு ரொம்ப யோசிச்சு எழுதுகிறேன். இன்னிக்குக் காலம்பரக் கண் மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்னு சமைச்சு வைச்சுட்டுக் கிளம்பினோம். பத்தரை மணி ஆகி விட்டது. கூட்டம் தான். ஆனாலும் போனதும் உடனே அங்கே உதவிக்கு இருக்கும் பெண்கள் கண்ணைச் சோதித்துப் பார்த்துவிட்டு அவங்க கருத்தை எழுதிட்டு மருத்துவரைப் பார்க்கக் காத்திருக்கச் சொன்னார்கள்.  காத்திருந்தோம். மருத்துவர் பார்த்துட்டுக் காடராக்ட் இன்னும் அவ்வளவு பெரிசாக வரலை. உங்களுக்குக் கண் எப்படித் தெரியுது? என்று கேட்டார். கண்ணாடி போட்டால் கொஞ்சம் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் கண்ணாடி போட்டாலும் பிரதிபலிப்பு./கண்ணுக்குள் வெளிச்சம், பூச்சி பறத்தல் என இருப்பதைச் சொன்னேன். சரி, ரெடினாவையும் பார்த்துடறேன். டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணி கழிச்சுப் பார்க்கலாம்னு சொன்னார். அதே போல் டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணிக்கும் மேல் (இரண்டு தரம் போட்டுட்டாங்க. ஒரே எரிச்சல் தாங்கலை!) காத்திருந்து பின்னர் போனதுக்கு ரெடினாவில் ஒண்ணும் பிரச்னை இல்லை. காடராக்ட் மிஸ்ட் போலத் தான் இருக்கு இப்போ. போன முறைக்கு இந்த முறை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. பவர் தான் மாற்றம் கண்டிருக்குனு சொல்லிட்டு அவங்களுக்கு நேரே மீண்டும் கண்ணில் அழுத்தம், பவர் சோதனை எனப் பண்ணிப் பார்த்தார்.

பின்னர் கண்ணிற்கு இப்போது உடனடியாக அறுவை சிகிச்சை தேவை இல்லை. ஒரு மாதத்திற்கு விடமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, கண்ணில் சொட்டு மருந்தும் விட்டுக் கொள்ளுங்கள். அதோடு பவர் வேறே மாற்றம் கண்டிருப்பதால் வேறே கண்ணாடிக்கு எழுதித் தரேன்னு சொல்லிட்டார். அறுவை சிகிச்சை இப்போதைக்கு வேண்டாம். நான் சொல்றேன், எப்போப் பண்ணணும்னு! அப்போப் பண்ணிக் கொண்டால் போதும்னு சொல்லிட்டார். உள்ளூர சந்தோஷம் தான். வீட்டில் பல பிரச்னைகள்.  தீர்வு காணப் பிரார்த்தனைகள்/ முயற்சிகள். அதோடு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு மாதம் சமைக்க முடியாது என்றும் சொல்கின்றனர். ஒரு நாள்//இரண்டு நாள்னாப் பரவாயில்லை. ஒரு மாசம் வாங்கிச் சாப்பிட்டால் ஒத்துக்கணுமே இரண்டு பேருக்கும் என்று அது வேறு கவலை! எல்லோருமே வயதான்வர்கள். யாரை உதவிக்குனு கூப்பிட முடியும்!  அதோடு வேறு சில பொதுவில் சொல்லிக் கொள்ள முடியாத கஷ்டங்கள்! சொல்லப் போனால் நான் மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது பட்ட கஷ்டத்தை விடக் கஷ்டம் இப்போது இருக்காது. 40 வருடங்கள் முன்னர் இப்போதைப் போல் லேசர் சிகிச்சை எல்லாம் இல்லை. அறுவை சிகிச்சை ஆகி உணர்வு வர ஆரம்பித்ததும் வலி வரும் பாருங்க! அந்த மாதிரி வலியை ஆயுளில் அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க மாட்டாங்க! அப்படி ஒரு வலி! ஒன்றரை நாட்கள் இருந்தது. அதை விட இதில் பெரிதாக வலி எல்லாம் இருக்கப் போவதில்லை.

ஆனாலும் சந்தோஷம் தான். இப்போது அறுவை சிகிச்சை இல்லைனதும். அதை முகநூலில் போட்டேனா! ஏப்ரல் ஃபூல்னு சிலரும், பயந்து கொண்டு நானாக அறுவை சிகிச்சைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சிலரும் சொல்றாங்க. சொல்றவங்களோட கருத்து அது! அதை என்னால் மாத்த முடியாது. கண் என்னோடது. அதற்குப் பிரச்னைன்னா கஷ்டப் படப் போவதும் நான் தானே! ஆகவே அறுவை சிகிச்சையை வேண்டாம்னு பயந்து கொண்டு சொல்லவெல்லாம் இல்லை.  அப்படி நினைப்பவர்கள் நினைச்சுக்கட்டும். :)))))))) வேறே என்ன சொல்லுவது? அவரவர் கருத்து அவரவருக்கு. இப்போதைக்குக் குறைந்த பட்சமாக ஆறு மாசம் அறுவை சிகிச்சை என்பது இல்லை. நடுவில் பிரச்னை வந்தால் உடனே வரச் சொல்லி இருக்காங்க. பிரச்னை இல்லாமல் இருக்கட்டும்னு பிரார்த்தித்துக் கொண்டிருக்கேன். 

Friday, March 26, 2021

நம்பெருமாளைப் பார்க்க முடியலையே! :(

இங்கே ஶ்ரீரங்கத்துக்கு  வந்து சுமார் பத்து வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனாலும் நம்ம ரங்கு (நம்பெருமாள்) ஒவ்வொரு முறையும் பங்குனி மாசத் திருவிழாவின் போது உறையூருக்குப் போக எங்க தெரு வழியாத் தான் போயிட்டு அதே வழியாத் திரும்பியும் வரார்னு எனக்கு/எங்களுக்கு நேத்திக்குத் தான் தெரியும். அசடு மாதிரிப் பத்து வருஷமா இந்த விஷயமே தெரியாமல் நம்பெருமாளைப் பார்க்காமல் இருந்திருக்கோமேனு நினைச்சால் மனசு கஷ்டமா இருக்கு. அவரானால் ரங்க நாயகிக்குத் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறாரா அதனால் விடிகாலை மூன்றிலிருந்து நான்கு மணிக்குள்ளாக (ரங்கநாயகி கண் அசரும் நேரம்) உறையூருக்குப் போகிறார். அங்கே போய்க் கல்யாணம் ஆகிச் சேர்த்தி எல்லாம் முடிஞ்சப்புறமா கமலவல்லியை அங்கேயே விட்டுட்டு எங்கே ரங்கநாயகிக்குத் தெரிஞ்சுடுமோனு உடனேயே அடிச்சுப் பிடிச்சுண்டு ஓட்டமா ஓடி வரார். போகும்போது கல்யாணம் பண்ணிக்கப் போற குஷியிலே நிதானமாக ரசிச்சுக் கொண்டு போனவர் திரும்பி வரச்சே விழப்போகும் அடியை நினைச்சு ஓட்டமா ஓடி வரார். இன்னிக்குக் காலம்பர 3 மணிக்குத் திரும்பி இருக்கார். அதுவும் தெரியாமல் போச்சு. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் கூப்பிடறேன் மாமினு சொல்லிட்டுக் கூப்பிடவே இல்லை. 

ஆனால் போகும்போது பார்த்திருக்காங்க அந்தப் பெண்மணி. அப்போவும் எங்களைக் கூப்பிடலை. இன்னிக்குக் காலம்பர இங்கேயே ஷண்முகா கல்யாண மண்டபம் காரங்க நம்பெருமாளுக்கு மரியாதை எல்லாம் செய்து சுமார் 20 நிமிடங்கள் போல் இங்கேயே நின்னுட்டு இருந்திருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தெரியவே இல்லை. என்ன போங்க! அம்பேரிக்கா போகும் முன்னர் ரங்குவைப் பார்த்தது. பெரிய ரங்குவைத் தான் பார்க்க முடியலை. இவரையாவது பார்ப்போம்னா அதுவும் முடியலை. எப்போக் கொடுத்து வைச்சிருக்கோ தெரியலை. நன்றி மாலை மலர்! 

இங்கே வந்ததும் இன்னிக்கு இருக்கு அவருக்கு. மட்டையடித் திருவிழா! 
ரங்கநாயகித் தாயாருடன் நம்பெருமாளின் சேர்த்தி சேவை. இப்போது ஶ்ரீரங்கத்தில் இந்த மட்டையடித் திருவிழா நடந்து வருகிறது. இன்னிக்குத் தான் நம்பெருமாள் உறையூரிலிருந்து திரும்பி இருக்கிறபடியால் அநேகமா இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கும்.

இவை எல்லாம் 2018 ஆம் ஆண்டிலோ என்னமோ எடுத்த படங்கள். சுமார் 2 வருஷங்களாக நம்பெருமாளைப் படம் எடுக்கவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பார்க்கவும் முடியாமல் போகிறது. அவர் தான் மனசு வைச்சு தரிசனம் கொடுக்கணும்.

Tuesday, March 23, 2021

பல்லவர்களுடன் அத்திமலைத் தேவன்!

எனக்கு முதல் முதல் அத்தி வரதர் பற்றிய தகவல் நான் கல்யாணம் ஆகி வேலைக்குப் போனப்போக் கூட வேலை பார்த்த ஶ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கனகவல்லி என்னும் சிநேகிதி மூலம் தெரிய வந்தது. ஆனாலும் அப்போ எல்லாம் இத்தனைத் தகவல்கள் தெரியாது/யாரும் சொல்லவில்லை. 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்தி வரதர் வெளியே வருவார் என்பது மட்டுமே தெரிய வந்தது. ஏன் உள்ளே வைச்சிருக்காங்க என்பதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் அவரை வெளியே வைக்கக் கூடாது எனவும், அதோடு இல்லாமல் அந்நியப் படையெடுப்பின்போது அத்திவரதர் மறைத்து வைக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் யாருமே அக்கினியிலிருந்து தோன்றியவர் எனச் சொல்லவில்லை. அதை முதலில் நரசிம்மா மூலமே தெரிந்து கொண்டேன். என் வாழ்நாளில் 79 ஆம் வருடம் ஒரு முறை அத்தி வரதர் வெளி வந்திருக்கிறார். அப்போ நாங்க சிகந்திராபாதில் இருந்தோம். ஆனால் இம்முறை அத்தி வரதர் வந்தப்போ நடந்தாப்போல் கோலாகலக் கொண்டாட்டங்கள், கூட்டங்கள், விமரிசனங்கள் ஏதும் அப்போ இருந்ததாய்த் தெரியலை.  அல்லது முழுக்க முழுக்கக் குடும்பச் சூழ்நிலையில் முழுகி இருந்த எனக்குத் தெரியலை. 

காஞ்சிக் கோயிலில் அத்திவரதர் மூழ்கி இருக்கும் அனந்த சரஸ் குளமும், அதன் மண்டபத்தில் ஆடிய நடிகை (கோழி கூவுது விஜி) க்கு நேர்ந்த துயரச் சம்பவங்கள் பற்றியும் அறிய நேர்ந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சி! இப்படியும் நடக்குமா என்பது! ஆனால் நடந்திருக்கே! நரசிம்மாவுக்கும் அத்தி வரதர் அந்நியப் படையெடுப்பில் பின்னமாக்கப்பட்டதாகச் சொல்லி இருக்காங்க. அவர் முழுத்தகவல்களுக்குகாகவும் தேடி அலைந்திருக்கார். காஞ்சியின் தல வரலாற்றிலும் அத்தி வரதர் தோன்றிய விதம் சொல்லப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எனக்குப் புதிது. அத்தி மரத்தை மஹாவிஷ்ணு என்பார்கள். வீட்டில் அத்திமரம் இருப்பதையும் விசேஷம் எனச் சிலரும், இருக்கக் கூடாது எனச் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அகத்தி வேறே அத்தி வேறே!  அந்த அத்திமரம் பற்றி நாம் அறியாத பல தகவல்களைச் சொல்கிறார் நரசிம்மா! அத்திமரம்/பூவரசு எனவும் தேவ உடும்பரம் எனவும் பெயர் பெற்றிருப்பதாய்ச் சொல்கிறார். அதோடு அல்லாமல் இது உக்கிரத்தைத் தணிக்கும் என்பதாலேயே கோபத்துடன் பாய்ந்த வேகவதியான சரஸ்வதியின் உக்கிரம் அத்திமரத்துண்டுகளைப் போட்டதும் நிதானம் கொண்டதாயும் தெரிவிக்கிறார். 

எல்லாவற்றையும் விட ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற தகவல் என்னன்னா புத்தர் ஞானம் பெற்றது இந்த தேவ உடும்பர அத்திமரத்தினடியில் தான் என்கிறார். புத்தருக்கு ஞானம் கிடைத்ததாலே போதி மரம் என்னும் பெயரைப் பெற்றதாகவும். இந்த தேவ உடும்பர அத்திமரம் தென்னாட்டில் காஞ்சியிலும் வடக்கே புத்த கயாவில் புத்தர் ஞானம் பெற்ற இடத்திலும் இருந்ததாயும், வடக்கே இருந்த தேவ உடும்பர அத்தி மரத்தைத் தான் அசோகன் வலிந்து மணந்து கொண்ட கலிங்கத்து இளவரசி திஸ்ஸரக்கா நாசமாக்கினதாயும் சொல்கிறார். ஆனால் இந்த மரத்தின் தன்மை இதன் வேர்/பூ/விதையை இன்னொரு மரத்தில் நட்டால் உடனே அந்த மரத்தோடு இணைந்து மீண்டும் ஜனிக்கும் என்பதும் ஆச்சரியமான செய்தி. அப்படி வந்தது தான் இப்போது நாம் அனைவரும் பார்க்கும் போதி மரம் என்றும் சொல்கிறார்.  அதோடு இல்லை, சிவன் கையிலிருக்கும் உடுக்கை இந்த தேவ உடும்பர அத்திமரத்தால் செய்யப்பட்டது எனவும் சொல்கிறார். அதனாலேயே இதை"உடம்ரூ" என அழைத்த வட இந்தியர்கள் இப்போது கொச்சையாய் "டம்ரூ" எனச் சொல்வதாயும் சொல்கிறார்.

அத்திமரம் அஷ்டமாசித்திகளையும் அளிக்க வல்லதாம்.தத்தாத்ரேயர் நின்று கொண்டிருப்பது தேவ உடும்பர அத்திமரத்தின் கீழ்தான் என்கிறார்கள். வடமொழியில் இந்த மரம் "காஞ்சி" என அழைக்கப்பட்டதால் இந்த மரங்கள் நிறைந்திருந்த காஞ்சியைக் காஞ்சி என்னும் பெயராலும் "அத்திவனம்" என்னும் பெயராலும் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கிறார். புத்தகயாவில் இருந்தது இந்த மரம் தான் என்றும் இப்போதுள்ள அரசமரம் அல்ல என்றும் திட்டவட்டமாய்ச் சொல்லுகிறார். இதன் விதையை வேறொரு மரத்தில் விதைத்தால் அது வளர்ந்து மூல மரத்தைப் பிளந்து கொண்டு வந்துவிடும் தன்மை உள்ளது என்கிறார். 

இத்தகைய சக்தி வாய்ந்த அத்திமரம் வடக்கே பாழ்பட்டுவிட்டதை அறிந்து கொண்டு தெற்கே இருக்கும் அத்திமரத்தையும், அத்தி வரதனையும் தேடிக்கொண்டு பல மன்னர்கள் படை எடுத்து வருகின்றனர். அவர்களில் சமுத்ரகுப்தனும் ஒருவன். ஆனால் இங்கே வந்ததும் மனம் மாறிப் பல்லவர்களோடு சமரசம் செய்து கொண்டு தான் வந்ததற்கு அடையாளமாகச் சித்ரகுப்தன் கோயிலைக் கட்டிவிட்டுச் செல்வதாய்க் கூறுகிறார் நரசிம்மா. அந்தச் சித்ரகுப்தன் கோயில் நாம் இப்போது பார்க்கும் இடத்தில் யமனுடைய கணக்குப் பிள்ளையாகக் காட்சி தந்தாலும் சமுத்ரகுப்தன் கட்டும்போது அவனை நினைத்துக் கட்டவில்லை என்கிறார்.  

உபபாண்டவர்களைக் கொன்ற அஸ்வத்தாமாவுக்குக் கண்ணன் கொடுத்த சாபத்திலிருந்து நீங்க முடியாமல் பரசுராமரின் ஆலோசனையின்படி அவன் தெற்கே வந்து அத்தி வனம் எனப்படும் அத்திவரதர் இருப்பிடத்திற்கு வந்து தவம் செய்ய வருகிறான். அங்கே அவன் உடல்நிலையைக் கூடக் கருதாமல் ஓர் பெண் மணந்து கொள்ள அவள் மூலம் இரு பிள்ளைகளைப் பெறுகிறான் அஸ்வத்தாமா. அவர்களில் தொண்டைச்செடி மாலையுடன் இருக்கும் புலிசோமா என்னும் பெயருள்ள  பிள்ளையின் வம்சாவழியினரே பல்லவர்கள் என்னும் பெயருடன் நாட்டை ஆளத் தொடங்குகின்றனர். இன்னொரு பிள்ளையான அஸ்வதன் என்பவன் தன் தாயுடன் செல்கிறான். அவன் தான்  சாவகத் தீவு என அப்போது அழைக்கப்பட்ட காம்போஜத்தின் அரசனாகிறான். அவர்கள் கடைப்பிடிப்பது தேவராஜ மார்க்கம் எனப்படும் தெய்விக நெறி. இங்கேயோ புலிசோமா அத்திவரதரையே குலதெய்வமாய்க் கொண்டு தேவராஜனாக வணங்கி வருகிறான்.  அத்தி வரதரை ஸ்தாபிதம் செய்யும்போது குபேரன் யக்ஷ நேத்திரக் கற்களால் ஆன மாலை ஒன்றைச் செய்து அத்திவரதருக்கு அளிக்கிறான். அந்த மாலையை சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தன்று அத்தி வரதருக்கு அணிவித்தால் அன்றைய தினம் விண்ணில் ஏற்படும் ஒளி மிகப் பிரகாசமாகக் காம்போஜம் வரையும் தெரியுமாம். மேலும் அப்போது அத்திவரதர் கிழக்கே பார்த்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததால் ஒவ்வொரு சித்திரை ஹஸ்தத்தன்றும் காம்போஜத்தில் பூகம்பமும் ஏற்படுமாம். காஞ்சிக்கு நேர் கோட்டில் காம்போஜத்தின் தலைநகரான தரும நகரம் இருக்கிறதாயும் சொல்கிறார். காஞ்சியிலும் ஒரு தரும நகரம் இருந்திருக்கிறது.

அதே போல் அக்காலத்தில் தக்ஷசீலா/நாளந்தாவைப் போல் காஞ்சியின் முக்கூடல் கடிகை எனப்படும் பல்கலைக்கழகமும் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. மாணவர்கள் நானா திசைகளிலிருந்தும் வந்து கல்வி கற்றுக்கொண்டு செல்வதும் போவதுமாக இருந்திருக்கின்றனர். கிட்டத்தட்டக் கதையையே சொல்கிறேனோ? தெரியலை. ஆனால் பல்லவர்கள் காலம் அஸ்வத்தாமாவின் மகனில் இருந்து ஆரம்பிக்கிறது. சிம்ம விஷ்ணு காலத்தில் பிரபலம் அடைகிறது. அத்திவரதருக்காகவும், அவருடைய ஶ்ரீதள மணிமாலைக்காகவும் பலரும் வருகின்றனர். அதனால் ஏற்படும் சிக்கல்கள்! அத்திவரதரை வைத்துக் கொண்டு அஸ்வமேத யாகம் செய்தால் நினைத்தது நடக்கும் எனவும் மொத்த பாரதத்தையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்துவிடலாம் எனவும் பல மன்னர்கள் அத்தி வரதரை அடையவும் தேவ உடும்பர மரத்தின் பட்டைகளுக்காகவும் போர் தொடுக்கின்றனர். அவர்கள் முயற்சி பலித்ததா? 


தொடரும்!

Monday, March 22, 2021

"அத்திமலைத் தேவன்" படித்து விட்டீர்களா?

 குட்டிக்குஞ்சுலு பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டது. முன்னெல்லாம் விளையாட்டுக்கு "நான் பிசி" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே ஓடும். இப்போ நிஜம்மாவே பிசி. அதிலும் பள்ளியில் சுமார் ஒன்றரை மணி நேரம் விளையாட விடுகிறார்களாம். அதில் கொட்டம் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் விளையாடியபோது ஏற்பட்ட அழுக்கை நீக்கக் குளிப்பாட்டும்போதே தூங்கி விடுகிறதாம். பாவம்! அதுக்குப் பாலும் அங்கே சரியாய்க் கிடைப்பதில்லை. இங்கே பள்ளிகளில் உணவு அம்பேரிக்கா மாதிரி அவங்க கொடுப்பதில்லை. நாம் தான் கொடுத்து அனுப்பணும். குஞ்சுலுவுக்கு அதைச் சாப்பிடத் தெரியவில்லை/அல்லது பிடிக்கலை. அது வேறே! நாமெல்லாம் பள்ளியில் படிக்கையில் பள்ளி அருகேயே வீடு இருந்ததால் மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வந்திருப்போம். நாங்க வந்தோம். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லை.  குஞ்சுலுவுக்கு இங்கே பல்லி, கரப்பான், மரவட்டை, மற்றச் சில ஊர்வன போன்றவற்றைப்பார்க்க முடிகிறதாம். ஆகையால் வீட்டுக்குள் எப்போதும் செருப்பு அணிந்து கொண்டே இருக்கின்றனர். குஞ்சுலு தனியாக வீட்டுக்குள் சுற்றி விளையாடவும் யோசிக்கிறது. நாளடைவில் எல்லாம் பழகி விட்டால் இந்தியா வந்தால் அதற்குப் புதுசாகத் தோணாது. எங்க அப்பு என்னிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் "பாட்டி, பல்லி இன்னமும் இருக்கா?" என்று கேட்பாள். நானும் பல்லியைப் படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பி இருக்கேன்.  அப்புவுக்கு இந்தியா பிடிக்கும். சொல்லப் போனால் இங்கே வந்து எங்களுடன் இருந்து எங்களைப் பார்த்துக்கவும் அவளுக்கு ஆசை! 

*********************************************************************************

ஒரு வழியாக "அத்திமலைத் தேவன்" ஐந்து பாகங்களையும் முடித்துவிட்டேன். கடந்த ஒரு மாதமாகச் சமைத்தேன், சாப்பிட்டேன், வேலைகள் செய்தேன், எல்லாம் அன்றாட நிலவரப்படி நடந்து வந்தாலும் ஏதோ வேறே காலத்தில் இருந்தாப்போல் ஒரு எண்ணம். இவ்வுலகில் இருப்பவை கண்களில் பட்டாலும் மனதில் பதியாமல் இருந்தது,குஞ்சுலுவைத் தவிர்த்து. இப்போ அத்திமலைத் தேவனை முடிச்சதும் நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. அத்திமலைத் தேவன் என்னும் ஒரு புத்தகம் வெளிவந்ததும் அதைப் படித்துவிட்டு ஆதி வெங்கட்,, அவர் மகள் ரோஷ்ணி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு படித்ததையும் ஆதி விவரித்திருந்தார். அப்போதெல்லாம் அவ்வளவு மனதைக் கவரவில்லை. அதன் முக்கியக் கரு அத்திவரதர் என்பது குறித்த விபரம் அப்போது தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் நாளாவட்டத்தில் தெரிய வந்தது. நரசிம்மா அதற்கு முன்னர் எழுதிய சில நாவல்களை ஆதியிடமிருந்து வாங்கிப் படித்திருந்தேன்.  இதை யாரிடமிருந்து வாங்கிப் படிப்பது? ரொம்ப யோசனை! அப்போத் தான் திடீரென எதிர்பாராவிதமாகப் புத்தகங்கள் கிடைத்தன. கொடுத்தவருக்கு நன்றி சொல்லி விட்டுச் சீக்கிரம் திருப்பணுமே என்னும் எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தாலும் நடு நடுவில் தொடர முடியாமல் பிரச்னைகள்.  அத்தி வரதர் காஞ்சிக்குச் சென்று அடையும் வரை எப்படி அக்ஞாதவாசம் இருந்தாரோ அம்மாதிரி நானும் புத்தகத்தைத் தொடாமலேயே சில/பல நாட்கள் இருக்க நேர்ந்தது. அப்புறமா ஒருவழியாகத் தொல்லைகள் கொஞ்சம் குறைந்து புத்தகத்தைத் தொடர முடிந்தது.

***********************************************************************************

பல்லவர்கள் சரித்திரம் எனக்குக் கல்யாணம் ஆன புதுசில் முதல் முதல் காஞ்சி போனப்போத் தெரிய வந்து ஆச்சரியமா இருந்தது. ஆனால் அப்போவும் முழு விபரங்கள் தெரியாது. பின்னர் நாளாவட்டத்தில் "தெய்வத்தின் குரல்" புத்தகம் மூலம் காஞ்சிப் பெரியவர் பல்லவ குலத்தைப் பற்றிச் சொல்லி இருப்பது குறித்துத் தெரிய வந்தது. அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதும், பாரத்வாஜ கோத்திரம் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் அதில் காம்போஜத்தைப் பற்றியோ தேவராஜ மார்க்கம் பற்றியோ குறிப்பிட்டிருந்ததாய் நினைவில் இல்லை. நரசிம்மா தொண்டை நாட்டுக்காரர் தானே! அதனால் பல்லவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கார் போல என நினைத்தால் அவர் எங்கேயோ போய்விட்டார். சாணக்கியன் காஞ்சிபுரத்துக்காரர் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகிறார். ஆனால் இதில் ஒரு விஷயம் எனக்குப் புதிதல்ல. அது தான் அசோகனின் கொலை வெறி! இது ஹிந்தி படிச்சிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகனின் கொலைவெறியை வைத்து ஹிந்தியில் நாவல்கள், பாடல்கள், நாடகங்கள் என வந்திருக்கு. நான் விஷாரத் படிக்கையில் தெரிந்து கொண்டேன். தன் சொந்த அண்ணனையே காதல் போட்டியிலும்/அரியணைப் போட்டியிலும் கொன்றுவிட்டு அசோகன் பட்டத்துக்கு வந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேன். கலிங்கத்துப் போர் அவன் மனதை மாற்றியது என்றாலும் அதற்கான வலுவான காரணங்களை "அத்திமலைத் தேவன்" மூலமே அறிந்து கொண்டேன்.

போதி மரம் குறித்த தகவல்கள் புதியவை. அது அசோகன் மனைவியால் சிதைக்கப்பட்ட தகவலும் புத்தம் புதிது. ஆம்ரபாலியை நாடகமாகப் படித்திருக்கேன் ஹிந்தியில்! இதில் நிறைய விபரங்கள். தாய் வயிற்றில் இருந்த பிம்பிசாரனைக் குழந்தையாகப் பாதுகாத்த முறையும், அதுவும் தாய் இறந்த பின்னரும், செலுகஸ் நிகேடார் மகளை சந்திரகுப்தன் மணந்து கொண்டான் என்பதை நாம் படிச்சிருக்கோம். ஆனால் பிம்பிசாரன் அவளுக்குப் பிறந்த பிள்ளை அல்ல என்பது புதிது! அவன் சந்திரகுப்தனின் இந்திய மனைவிக்குப் பிறந்தவன் என்னும் செய்தியை இப்போது அறிந்தேன்.  தேவ உடும்பர மரம் பற்றியும் ஸ்ரீதள மணி பற்றியும் புதிதாக அறிந்தேன். ஸ்ரீதள மணி மாலை உக்ரோதயமாக மாற்றப்பட்டு தன் உக்கிரத்தைக் காட்டி வந்து கடைசியில் ஒருத்தருக்கும் கிடைக்காமல் கடலடியில் மறைந்தது நானே சொந்தமாக எதையோ இழந்து விட்டாற்போல் ஒரு எண்ணம். 

என்ன தான் புத்திசாலியாகவும் ஓர் அரசையே உருவாக்கும் சாமர்த்தியம், திறமை நிறைந்திருந்தாலும் சாணக்கியர் செய்த தவறு தேவ உடும்பர மரம் பற்றியும் அத்திமலைத் தேவன் பற்றியும் வடக்கேயும் போய்ச் சொன்னது தான். அதன் விளைவுகள் அசோகனின் மகள், மகன், அவர்களுடன் வந்த ஆம்ரபாலி எனத் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் வடக்கே இருந்து வந்த மன்னர்களுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தெற்கே இருந்த சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள சொந்த, பந்தங்கள், விருப்பு, வெறுப்புகள் என ஆரம்பிக்கின்றன. அதற்குள் விரிவாக நாளைப் பார்ப்போம். 

தொடரும்!

Friday, March 19, 2021

நான் போட்ட எட்டு! (2007 ஆம் ஆண்டு)

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன? அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே! நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. "சிதம்பர ரகசியம்" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் "பம்பாய் ராயல் நேவி" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P 

1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு! ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.

 2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் "ஷுக்லா" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த "சுப்ரமணியம்" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட "பாட்லிபாய்" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் "பிரியா வடை" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி "ஷுக்லா" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.

 3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், "Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான். 

4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும்? சொல்லுங்க? அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.) 

5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

 6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன " Hercule Poirot" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை. 

7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை. 

8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் "திருக்கைலாய யாத்திரை" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை! இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது. *********************************************************************************** 

திரு ஜிஎம்பி அவர்கள் எட்டெட்டு வாழ்க்கைப் பதிவைப் பார்த்ததும் முன்னர் போட்ட எட்டுகள் நினைவில் வந்தன. அப்போதெல்லாம் அடிக்கடி தொடர் பதிவு இருக்கும்.  2007 ஆம் ஆண்டில் போட்ட எட்டு இது. இதற்குப் பிறகும் போட்டிருக்கும் நினைவு இருக்கு. தேடிப் பார்க்கணும். இது ஒரு மீள் பதிவு. 


எட்டுப் போடுங்க!  பழைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். இதிலே கீழே நான் அழைத்தவங்க பெயர்கள் இருந்தன. அதை மட்டும் எடிட் செய்துட்டுப் பதிவை மட்டும் போட்டிருக்கேன். 


புதுப்பதிவு போடத்தான் ஆசை! ஆனால் இப்போ வேணாம்னு தள்ளிப் போட்டிருக்கேன். அது வரைக்கும் நான் உங்க எல்லோருடைய நினைவில் இருக்கணுமே! அதான் மீள் பதிவு!

Sunday, March 07, 2021

ஏதோ சொல்லி இருக்கேன்!

 வர வர எழுதுவதில் மனம் பதிவது இல்லை. ஏனோ தெரியலை. கணினியில் உட்காரும் நேரமும் குறைஞ்சிருக்கு. வழக்கம் போல் இம்முறையும் வயிறு சரியாக நாட்கள் எடுத்து விட்டன. அதோடு வீட்டிலும் வேலைப் பளு அதிகம். குட்டிக் குஞ்சுலுவும் அவ பெற்றோருடன் நைஜீரியாவுக்குப் போய்ச் சேர்ந்து அவங்க இருக்கப் போகும் ஊருக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். குஞ்சுலு முகத்தில் இனம் தெரியாத சோகம் இருப்பதாய் எனக்கும் அவருக்கும் தெரிகிறது. ஆனால் பையர் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். அவங்க மூன்று பேரும் கம்பெனியின் விருந்தினர் விடுதியில் பதினைந்து நாட்கள் க்வாரன்டைனில் இருக்காங்க. அது முடிஞ்சு கொரோனா பரிசோதனை எல்லாம் ஆகிப் பின்னர் தாற்காலிக வீட்டிற்குப் போகணும். இன்னமும் சாமான்கள் எல்லாம் வந்து சேரவில்லை. குஞ்சுலு ஏற்கெனவே சாப்பிடாது. இங்கே அதுக்கு எல்லாம் பிடிக்கணும். நாங்க பார்க்கையில் விளையாடிக் கொண்டிருந்தது. தானாகவே விளையாடிக்கும். நல்லவேளையா அதோடப் பத்துப் பதினைந்து பேபீஸ்களில் முக்கியமான சில பேபீஸ் கூடவே வந்து சேர்ந்து விட்டன. இல்லைனா ஏங்கிப் போயிருக்கும். எல்லா பேபீஸும் படுக்கையில் அதோடு படுத்துக்கொள்ளணும். இப்போ நாலைந்து பேபீஸ் மட்டும் தான் இருக்கின்றன. 

அம்பேரிக்காவில் சென்ட்ரலைஸ்ட் ஏசி. வீடு முழுக்க எப்போதும் இருக்கும். இங்கே நம்ம ஊர் மாதிரி ஸ்ப்லிட் ஏசி எல்லா அறைகளிலும் போட்டிருக்காங்க. பையர் இப்போவே வியர்க்கிறது என்றார். அங்கேயும் இந்தியாவுக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம்.  இப்போ இங்கே மாலை ஆறு மணி எனில் அங்கே மதியம் ஒன்றரை மணி. மாலை நான்கு மணிக்குப் பையர் கூப்பிட்டால் அங்கே நண்பகலுக்கு அரை மணி முன்னதாக பதினொன்றரை ஆகிறது. ஒரு விதத்தில் வசதி. இன்னொரு விதத்தில் வசதி இல்லை. நாளையிலிருந்து பையருக்கு அலுவலக வேலையை இந்த விருந்தினர் விடுதியில் இருந்தே செய்யும்படி இருக்கும். அப்போ அவருக்கு வர முடியாது. அவங்க இரவு ஆரம்பிக்கையில் நமக்கு நடு இரவு ஆகி இருக்கும். நம்ம காலைஆறு மணி எனில் அவங்களுக்கு நடு இரவு ஒன்றரை மணி. ஆகவே பையருக்கு அலுவலகம் விடுமுறை என்றால் தான் குழந்தையைப் பார்க்க முடியும். அம்பேரிக்காவில் எனில் ராத்திரி படுக்கும்போது எப்படியும் பார்த்துடலாம். இது கொஞ்சம் கஷ்டம் தான்.

********************************************************************************

கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதிலும் கணவன், மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும், பெண் பெற்றோரைக் கொல்வதும், மகன் பெற்றோரைக் கொல்வதுமாக அதிகரித்து வருகின்றன கொலைகள். எல்லாம் பணத்தாசை/ குடியில் ஆசை! மக்களுக்குப் பணத்தின் தேவை இருக்க வேண்டும் தான். ஆசையும் இருக்கத்தான் செய்யும். அதுக்காகப் பெற்றோரைக் கொல்லும் அளவுக்கா? அதுவும் குடித்துவிட்டு! என்னவோ தமிழகம் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. வீண் பெருமை பேசிக்க மட்டும் பேசிப்பாங்க! நாங்கள் தனித் தமிழர்கள் என்று! 

Wednesday, February 24, 2021

என்ன செய்யலாம்?

 நாம தான் வியர்டுனு நினைச்சால், நம்ம கணினிகளும் கூட அப்படித்தான் இருக்கு. டெல் மடிக்கணினியில் அது கீழே விழுந்ததில் இருந்தே பிரச்னைகள் இருந்தாலும் ஒரு மாதிரியா ஓடிட்டு இருந்தது. இப்போ அதுக்கு பாட்டரி மாத்தணும்னு சொன்னதாலே அதையும் மாத்திட்டோம். அதுக்கப்புறமாத் திடீர்னு ஒரு நாள் மவுஸ் வேலை செய்யலை. மவுஸின் பாட்டரியையும் மாற்றினால் அப்படியும் வேலை செய்யலை. மவுஸ் தான் வீணாயிடுச்சோனு நினைச்சால் கணினியில் >>>>>>>>>>>>>>>>>>> இப்படியே தொடர்ந்து வந்து எல்லா இடங்களையும் தானாக நிரப்பிக்கொண்டு ஓட ஆரம்பிச்சுடுத்து. சரினு வேறே மவுஸ் வாங்கி வந்து அதை ஒருவழியாக வேலை செய்யறது எப்படினு கண்டுபிடிச்சுக் கொஞ்ச நாட்கள் ஓட்டினால் அது ஓடியது. போன வாரம் வரைக்கும். மறுபடி மவுஸ் வேலை செய்யவில்லையேனு நினைச்சால் அதே பழைய பிரச்னை. கணினியில் தானாகவே எல்லா இடங்களிலும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே வந்து நிரப்பிக் கொள்கிறது. சரினு கணினியை மூட நினைச்சால் ஷட் டவுன் பண்ணும் ஐகானிலும் ஏதோ ஒரு பக்கம் திறந்து ஷட் டவுன் பண்ணவே முடியாமல் இப்படியே >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> வர என்னென்னவோ செய்து ஒரு வழியாக் கணினியை மூடினேன்.

இன்னொரு கணினி தோஷிபா சுமாராக வேலை செய்தாலும் பதினோரு வருடங்கள் ஆனதாலே என்னமோ அப்பப்போ கொஞ்சம் தகராறு பண்ணிக்கும். இரண்டு மடிக்கணினிகளுமே ஜிமெயில் திறப்பது என்றால் பிடிவாதமாக மறுத்துவிடும்.  cannot sync. error 105 என்றே வரும். திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்ப முயற்சி செய்ததும் ஒரு முறை போனால் போகுது இணைந்து தொலைக்கும். இது இரு கணினிகளிலுமே இருக்கு. தினம் தினம் போராட்டம் தான். ஒவ்வொரு முறையும் ஜிமெயில் திறப்பதற்குள்ளாக என்பாடு உன்பாடு என்றாகி விடுகிறது. இந்த அழகில் தான் இதோடு குடித்தனம் பண்ணிண்டு இருக்கேன். என்னத்தைச் சொல்லுவது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன? யாரானும் தொ.நு.நி. இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா! எப்படியும் இன்னிக்குக் கணினி மருத்துவரைக் கூப்பிடப் போறேன். டெல் மடிக்கணினியை ஒரு வாரமா எடுக்கவே இல்லையே. அதை எப்படியானும் சரி பண்ணணும். என்ன செய்யலாம்? 

Monday, February 22, 2021

உன்னோடு வாழ்தல் அரிது! :(

 ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் -ஒரு நாளும்

என் நோவறியா இடும்பை கூர் என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது!

என்னவோ தெரியலை. ஒண்ணு மாத்தி ஒண்ணு பிரச்னையா வந்துட்டே இருக்கு. போன வாரம் கைவலி வந்து இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டேன். அதுக்கு மாத்திரை சாப்பிடும்போதே வயிறு கொஞ்சம் தகராறு செய்து கொண்டிருந்தது. மாத்திரையின் தாக்கம்னு நினைச்சுட்டு இருந்தேன். அதன் பிறகு இரண்டு நாட்களுக்கும் மேல் நான் தான் சமைச்சேன். இட்லி மாவெல்லாம் தயார் செய்து வைச்சேன். சனிக்கிழமையும் நான் தான் சமைச்சேன். மத்தியானம் சாப்பிடும்போதெல்லாம் ஒண்ணும் தெரியலை. சாப்பிட்டு முடிச்சதும் வயிறு ஒரு மாதிரியா இருந்தது. அதை அலட்சியம் செய்யலாம்னு செய்துட்டு நான் பாட்டுக்கு என் வேலைகளைப் பார்த்தேன். தெரிந்த மாமி ஒருத்தர் வீட்டில் செய்த காராசேவு வாங்கி வைச்சிருந்தார் நம்மவர். எனக்கூ அது ஆரம்பத்திலிருந்தே ஒத்துக்கலை. ஆகவே கிட்டேயே போகாமல் இருந்தேன். அன்னிக்குனு பார்த்து விதி அழைக்கவே அந்தக் காராசேவ் கொஞ்சமாகவும் இருந்ததால் அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தேநீரையும் குடிச்சேன். அப்போக் கூட வயிறு முணுக் முணுக் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. அதன் பிறகு இரவுக்கு இட்லி வார்த்துச் சட்னி அரைச்சுச் சாப்பிட்டது தான்!

அதன் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கே ஒரு ஆச்சரியம். இட்லி சாப்பிட்டதில் இருந்தே வயிறு வலி அதிகம் ஆக வெந்நீரில் அஷ்ட சூரணம்போட்டுச் சாப்பிட்டேன். ஏலக்காய்களை வாயில் போட்டுப் பச்சைக்கற்பூரத்துடன் மென்றேன். வறுத்த சோம்பை வாயில் போட்டு மென்றேன். எதுக்கும் அசையாமல் குமட்ட  அதிகம் ஆகவே சுமார் ஒன்பது மணி அளவில் வாந்தி தாங்க முடியாது என்ற நிலைமையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தால் மறுநாள் காலை நான்கு மணி வரைக்கும் இடைவிடாத வாந்தி. இதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் ஒன்பதரை மணிக்கே மருத்துவரிடம் போய்ச் சொல்லி (அவருக்கு அடிக்கடி எனக்கு இப்படி வருவதால் நல்ல பழக்கம்) மாத்திரைகளும் ஓஆர் எஸ் ரீஹைட்ரேஷன் சால்ட் டெட்ரா பாக்கும் வாங்கி வந்தார். அந்த மாத்திரைகளை வாயில் போட்டுத் தண்ணீரோடு உள்ளே இறக்க முடியலை. எல்லாம் வெளியே வந்து விட்டது. காலை நான்கு மணிக்கு வயிற்றில் ஏதும் இல்லைனதும் வாந்தி, குமட்டல் நின்றது. எழுந்திருக்கவே முடியலை. காஃபி குடிக்கவும் பிடிக்கலை. அவரே எழுந்து காஃபி போட்டுக் குடிச்சுட்டு எனக்கும் வைச்சிருந்தார். பிடிக்காமல் குடிச்சு வைச்சேன். மறுபடி படுத்துட்டேன்.

எப்போ எழுந்தேன்னு தெரியாது. ஒரே மயக்க நிலை. ஒண்ணும் சாப்பிடத் தோணலை. சாப்பாடு வாங்கி வைச்சிருந்தார். ஆனால் நான் சாப்பிடலை. நல்லவேளையாக முதல் நாள் கரைச்சு வைச்சிருந்த மோர் நிறையவே இருந்ததால் அதைப் போகவரக் குடிச்சு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். மறுபடி மாலை நான்கு மணிக்குப் படுத்தால் ஆறு மணிக்கு விளக்கு வைக்கையில் தான் விழித்தேன். இரவுக்கு ஒரே ஒரு தோசையைக் கஷ்டப்பட்டு விழுங்கி விட்டுப் படுத்தது தான் தெரியும். காலை இரண்டரைக்குத் தான் விழிச்சேன். அப்புறமாச் சரியாத் தூக்கம் வரலை. ஆறரை மணிக்கு எழுந்து வெந்நீர் போட்டுவிட்டுக் காஃபி என்னும் திரவத்தை வேண்டாவெறுப்பாய் விழுங்கிட்டுக் குளித்துப் படுக்கை எல்லாம் சுத்தம் செய்து போர்வை, தலையணை உறைஆகியவற்றைத் தோய்க்கப் போட்டுவிட்டுக் கஞ்சியைக் கஷ்டப்பட்டுக் குடிச்சேன்.கஞ்சி போட்டு வைச்சிருந்தார். கஞ்சி குடிச்சதும் மறுபடி ஒரு மயக்கம். படபடப்பு. போய்ப் படுத்துட்டேன். ஒன்பது மணிக்குக் குஞ்சுலு வந்ததும் தான் எழுந்து வந்தேன். இப்போக் கூட இணையத்துக்கு வரலாமா வேண்டாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துட்டு (நல்லவேளையா யாரும் தேடலை)

அது என்னமோ என் வயிறு இப்படித் தான் அடிக்கடி திடீரெனத் தொந்திரவு செய்யும் என்பதால் உணவு விஷயத்தில் ஏகக்கட்டுப்பாடுகள். ஆனால் எல்லோருக்கும் இது புரிவதில்லை. நான் சும்மாவானும் உபசாரம் பண்ணிக்கிறேன்னு நினைப்பாங்க/நினைக்கிறாங்க! என்ன செய்ய முடியும்! நம்ம வயிறு தான். ஆனால் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எங்கே இருக்கு! வெளியே எங்காவது போனால் கூட ஆயிரம் ஜாக்கிரதை. கூடியவரை பயணங்களில் சாப்பிடாமல் பழச்சாறு, லஸ்ஸி எனப் பொழுதைக் கழிப்பேன். அப்படியே சாப்பிட்டாலும் ஏதானும் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துப்பேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் வயிற்றில் முணுக் முணுக் இன்னும் குறையலை. சாப்பாடு பிடிக்கலை. மெல்ல மெல்லச் சரியாகும். பிள்ளையார் துணை!

Friday, February 19, 2021

தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள்!

 


தாத்தாவின் கல்யாணம் பற்றி அவரே எழுதியது!

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன


காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.

நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்


எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

Wednesday, February 17, 2021

பல்சுவைக் கதம்பம்!


அம்மா, அப்பா யார் கல்யாணமோ, நினைவில் இல்லை, என் கல்யாணத்தில் இந்த ஃபோட்டோ எடுக்கலை, அப்புறமா ஐந்து வருஷம் கழிச்சு அண்ணா கல்யாணமோ பத்து வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணமோ நினைவில் இல்லை. எங்க குடும்ப வாட்சப் குழுமத்தின் லோகோ!  ரேவதி அவங்க அம்மா, அப்பா ஃபோட்டோவைப்  போடும்போதெல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் பதிவுகள் எழுதும்போது நினைவில் வராது. இன்னிக்கு என்னமோ அதிசயமா காலரியில் இந்தப்படம் தானாகவே சேமிப்பில் இருந்தது. உடனே டவுன்லோட் பண்ணிட்டேன். 


 இது ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு எதிரே! தெருக்கள் நான்கு சந்திக்கும் இடம். இங்கே வலப்பக்கத்துத் தெருவும் எதிரே உள்ள தெருவும் மட்டும் இருக்கிறது. மரங்கள் ஆரம்பிப்பதில் இருந்து கீழே கொஞ்சம் வரைகோடாகத் தெரியும் எல்லையிலிருந்து பையர் வீட்டுப் பகுதி ஆரம்பம். அங்கிருந்து உள்ளே தெரியும் முக்கியக் கதவு வரை பனி விழுந்திருக்கிறது. போன வருஷம் ஃபெப்ரவரியில் அங்கே தான் இருந்தோம். உறைநிலைக்குச் சென்றாலும் இப்படி மைனஸில் எல்லாம் போகலை. தண்ணீர் வராது எனக் குழாயை மட்டும் சொட்டுச் சொட்டாக விழும்படி பண்ணி வைப்பாங்க. மற்றபடி தண்ணீர் எல்லாம் வந்தது. இப்போத் தண்ணீர், மின்சாரம், இணையம் எதுவும் இல்லை. எப்படியோ டாட்டா சேமிப்பில் பையர் கூப்பிட்டு 2 நிமிஷங்கள் பேசுவார். பெண் வாட்சப்பில் செய்தி கொடுப்பாள். அவ்வளவே! குட்டிக் குஞ்சுலு என்ன செய்யறதுனு புரியலை. பையரிடம் கேட்டோம். அவருக்குச் சரியாப் புரியலை போல! ஒண்ணும் சொல்லலை. நாங்க மெம்பிஸில் இருந்தப்போ 2,3 தரம் இந்த மாதிரிப் பனி மழை பார்த்திருக்கோம். இங்கே விட மெம்பிஸில் அதிகமாக இருக்கும். 

***********************************************************************************

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரே வேலை, வேலை, வேலை மும்முரம். திங்களன்று அண்ணா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் வந்தாங்க. தம்பி வற்புறுத்திச் சொன்னதால் காடரிங் சாப்பாடு ஏற்பாடு செய்தோம். மதுரைக்காரங்களாம். ஆனால் எங்களுக்குத் தெரியலை யார் என்பது. சமையல் உண்மையாகவே நன்றாக இருந்தது. இரவு இட்லி, சட்னி, சாம்பார் கேட்டிருந்தோம். அதுவும் நம்மைப் போலவே துணி போட்டு வார்த்திருந்தாங்க. மிருதுவாக நன்றாக இருந்தது. சாம்பாரும் ஓட்டலில் வைக்கும் சாம்பார் மாதிரி வைச்சிருந்தாங்க. ஆனால் இரண்டு பேருக்குக் கொடுக்க மாட்டாங்களாம். குறைந்தது பத்துப்பேராவது இருந்தால் நல்லது. அக்கம்பக்கம் வீடுகளில் வாங்கிப்பாங்கன்னாக் கொடுக்கிறோம் என்றார்கள். நாம தான் அலையறோம்னா எல்லோருமா? இஃகி,இஃகி,இஃகி! அதிர்ஷ்டம் அம்புடுதேன்னு விட்டுட்டோம்.

***********************************************************************************

நெல்லைத் தமிழர் தக்காளிக் கூட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணும் செய்முறை கேட்டிருந்தாராம். எங்கே/எப்போ/எதிலேனு நினைவில் இல்லை.  குழுமத்தின் வாட்சப்பில் கேட்டிருந்தார் ஏன் எழுதலைனு! இப்போக் கொடுக்கிறேன்.

சாப்பாட்டுக்குத் தொட்டுக்கப் பண்ணுவதெனில் கால் கிலோ தக்காளிக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளிகளை நன்கு அலம்பித்துண்டங்களாக நறுக்கி ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது கல்சட்டி அல்லது வாணலியில் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். தக்காளி சீக்கிரமே குழைந்து விடும். அப்போது வெந்த பருப்பைச் சேர்க்கவும். பருப்பு அதிகமாய்த் தெரிந்தால் தனியாய் எடுத்து வைக்கவும். கூட்டின் சுவையைக் கெடுத்து விடும். ஒரு மிளகாய் வற்றலோடு தேங்காய்த் துருவலும் ஜீரகமும் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கூட்டில் கலக்கவும். தேவையானால் கொஞ்சமாக அரிசி மாவு கரைத்து விடவும். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தோடு தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்த கூட்டுக்கு வெங்காயத்தை முதலில் வதக்கிக் கொண்டு அதில் தக்காளியைச் சேர்த்து வேகவிடவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்துக்கொண்டு  வெந்த பருப்பைக் கலந்து அரைத்து விட்டதையும் கலந்து ஒரு கொதி விட்டுப்பின்னர் தாளிக்கவும்.

இரண்டு நாட்களாக உள்ளங்கையிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வலி! தலை பின்னிக்கவோ, சாதம் பிசைந்து சாப்பிடவோ முடியலை. வலி நிவாரண மாத்திரைகள் போட்டுக் கொண்டு இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் உள்ளங்கை வலி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாமல் வயிறு தொந்திரவு வேறே! அதனால் அதிகம் இணையத்துக்கு வர முடியலை.