எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 31, 2017

புத்தாண்டு வாழ்த்து, ரஜினியின் அரசியல், அகத்திக்கீரை!

வலை உலகத் தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் சோதனைகள், தடங்கல்கள் நீங்கி அனைத்திலும் சிறப்பாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!

*********************************************************************************

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவிப்பு! தொலைக்காட்சி சானல்கள் அனைத்திலும் இன்றைய முக்கியச் செய்தி இது தான்! இதற்கு ஏன் எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கணும், கூச்சல், கூப்பாடுனு எனக்குப் புரியலை! இதற்கு முன்னர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி, ஜெ.ஜெயலலிதா, கடைசியாக மிக மிக எதிர்பார்ப்புடன், விஜய்காந்த்       ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது போல் இப்போ ரஜினி! அவ்வளவு தான்! அதுக்குள்ளே சிலர் ரஜினி பிஜேபிக்கு பினாமி என்றும் சொல்ல ஆரம்பிச்சுட்டனர். ஆன்மிகமும், இந்துத்துவாவும் தமிழ்நாட்டுக்குள் நுழைஞ்சுடும், நுழைய விடக் கூடாதுனு சிலர் உறுதிமொழி! ஹெஹெஹெ!  ஆன்மிகமும், இந்துத்துவாவும் அவ்வளவு கெடுதலா என்ன?

இன்னும் சிலருக்கு அவர் கன்னடக்காரர் என்பதால் எதிர்ப்பு! ஆனால் ரஜினியின் அதி தீவிர ரசிகர்களுக்கு இதெல்லாம் உறைக்கவில்லை என்பது தொலைக்காட்சியில் ரஜினி பேசும்போது அவங்களோட கூச்சல், கைதட்டல், விசில் சப்தம் ஆகியவற்றிலிருந்து தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை இவரால் என்ன செய்ய முடியும் என்பதே முதல் கேள்வி! தமிழக அரசியல்  என்னும் கப்பல் பல்வேறு வித,  விதமான தாக்குதல்களில் மூழ்கிக் கொண்டு நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.  மக்களை மூளைச்சலவை செய்து தேசியத்திலிருந்து பிரிக்கும் முயற்சி மிக வேகமாக நடந்து வருகிறது.

மத்திய அரசு செய்து வரும் பல நல்ல திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறாமல் அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்போதே மற்றவற்றிற்கும் மக்கள் மத்திய அரசையே குறை கூறிக் கொண்டு அவர்கள் தங்களை வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றனர். இதை எல்லாம் மக்களிடம் முக்கியமாக அடிமட்ட மக்கள் வரை தெளிவாக எடுத்துச் சொல்லும் அரசியல் கட்சி பிஜேபி உட்பட எதுவும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நாட்டு மாடுகளைக் காப்பதற்காகப் போராடுவதாய்ச் சொன்ன மக்கள் இப்போ எங்கே? நாட்டு மாடுகள் இப்போக் காப்பாற்றப்பட்டு விட்டனவா? அதே மக்கள் பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்தனர்!  மாட்டுக்கறி சாப்பிடுவது எங்கள் உரிமை என்றார்கள்.

ஆனால் இதை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று அவர்களைப் போராட வைத்தது ஒரு சில அரசியல் கட்சிகள் தான்! அவங்க தான் பிரிவினையும் வேணும் என்று சொல்பவர்கள். ஒரு பக்கம் பிரிவினை வேணும்னு சொல்லிக் கொண்டு மக்களைத் தூண்டி விட்டுக்கொண்டு மறுபக்கம் மத்திய அரசு எல்லா சௌகரியங்களையும் எங்களுக்குச் செய்து கொடுக்கலை என்றும் சொல்கின்றனர். ஆக அவங்க நிலைப்பாடு அவங்களுக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை!
********************************************************************************

நேற்று துவாதசிக்குச் சில வருடங்கள் கழித்து அகத்திக்கீரை சமைத்தேன். இங்கே தினம் தினம் கீரை கிடைக்கும். என்றாலும் அது என்னமோ வாங்க முடியறதில்லை! அகத்திக்கீரை பொதுவாய்க் கசக்கும் என்பார்கள். ஆனால் நேற்று நல்ல சுவையாக இருந்தது. அகத்திக்கீரைக்கு மருந்துகளை முறிக்கும் சக்தி உண்டு என்பதால் நேற்றைய தினம் முழுவதும் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை! அகத்தின் "தீ" யை சமனப்படுத்துவதால் இந்தப் பெயர் என்று சொல்கின்றனர்.  அதற்காக தினம் தினம் சாப்பிடவும் கூடாது! சாப்பிட்டால் எதிர்மறையான பலன்களைத் தரும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அது போல் மது, மாமிசம் போன்றவற்றுடனும் இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. முதல்நாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் வயிறு, முக்கியமாய் இரைப்பை சூடாக இருக்கும். அந்தச் சூட்டைத் தணித்துக் குளிர்விக்கும் பணியை அகத்திக்கீரை செய்கிறது. இதனால் முதல்நாள் பட்டினி இருந்த களைப்பும் அகலும். வயிறும் குளிரும். சூடு தணியும். மலச்சிக்கல் ஏற்படாது.  ரத்த அழுத்தம் சமனப்படும்.

அகத்திக்கீரை நன்மைகள் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்.

ஒவ்வொரு ஏகாதசிக்கும் பட்டினி இருப்பவர்கள் மறுநாள் உணவில் அகத்திக்கீரையைக் கட்டாயமாய்ச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

அகத்திக்கீரையை மட்டும் முதல் நாளே ஆய்ந்து நறுக்க வேண்டும் என்பார்கள். ஏன் என்பது தெரியவில்லை. ஆய்ந்து நறுக்கிய அகத்திக்கீரையைப் பாசிப்பருப்போடு சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வேகவிட்டுக் கொண்டு நீரை வடிகட்டவும். பின்னர் கடாயில் கடுகு, ஒரே ஒரு மி.வத்தல் தாளித்து வெந்த கீரையைப் போட்டுக் கொஞ்சம் வெல்லம் சேர்க்கவும். (வெல்லம் கட்டாயம் சேர்க்கணும். இல்லைனா கீரை சுவை பிடிக்காது.) பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி க் கீழே இறக்கவும். சுண்டைக்காய் வற்றல் போட்ட குழம்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் அனைவருக்கும் பிடித்துப் போகும்.


பி.கு. ஹெஹெஹெ, தலைப்பு எல்லோரையும் வர வைக்க! 

Saturday, December 30, 2017

மாதங்களில் நான் மார்கழி!

வருஷா வருஷம் மார்கழி மாசப் பதிவுகள் போடுவேன். இந்த வருஷம் 15 தேதி ஆகியும் எதுவும் போடலை! ஏற்கெனவே போட்டதை மீள் பதிவாகப் போட மனம் ஒப்பவில்லை. மற்ற எல்லோரும் முகநூலிலும், தனிப்பதிவாகவும் போட்டு வருவதைப் படித்து வருகிறேன். முகநூலில் ஓவியர் கேஷவ் வெங்கட்ராகவன் வரையும் ஓவியங்களைப் பார்த்து பிரமித்து வருகிறேன். தூக்கத்திலிருந்து ஆண்டாள் எழுப்புவது உண்மையில் அஞ்ஞானம் என்னும் மாயை ஆகிய தூக்கத்தில்  நாம் ஆழ்ந்திருப்பதிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து இறைவனின் அண்மையை உணரச் செய்து அவனைக் குறித்து நினைக்கவும், அவனோடு ஐக்கியமாகவும் தான் என்பதை அனைவரும் அறிவோம்.  இவ்வுலக விவகாரங்களில் நாம் ஆழ்ந்து போய் விடாமல் நம்மைத் தட்டி எழுப்பி நம் உள்ளொளியை நமக்குக் காட்டி அதன் மூலம் இறைவனுடன் ஐக்கியம் அடைய வைப்பதே திருப்பாவையின் மையக் கருத்து. இங்கே தோழியர் நமது ஐம்புலன்களே ஆவார்கள். ஐம்புலன்களையும் தட்டி எழுப்பி மனதை இறைவன் பால்  திருப்பச் சொல்கிறாள் ஆண்டாள்.

அதிலும் முதல் பாடலிலேயே வைகுண்டத்தை அடைய வேண்டுமெனில் யசோதையின் இளஞ்சிங்கமான கார்மேனிச் செங்கண் உடைய கண்ணனை அடைந்தோமெனில் அந்த நாராயணன் நமக்கே "பறை" தருவான். ஆகவே அவனைப் பாரோர் புகழப் பாடி ஆடுவோம் வாருங்கள் என அழைக்கிறாள். இந்த இடத்தில் பறை என்பது இறைவனின் அருளைச் சுட்டுகிறது என்பது என் கருத்து. 108 ஆவது திருப்பதியான வைகுண்டத்தை அடைய வேண்டுமெனில் நமக்கு அந்தப் பறை= அருள் கிட்டவேண்டுமெனில் பரந்தாமனுடன் நாம் கலக்க வேண்டுமெனில் நம் மனதை இறைவன் பால் திருப்பி அவன் புகழைப் பாடி உய்வோம் என்பதே திருப்பாவையின் உட்கருத்து!

அதிலும் கோவிந்த நாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிந்தா என்னும் பெயர் கண்ணனுக்கு எப்போது ஏற்பட்டது தெரியுமா?  கண்ணன் கோகுலத்தில் குழந்தையாக இருந்த சமயம்! இந்திரனுக்குத் தன்னால் தான் மழை பொழிகிறது என்னும் கர்வம்.  ஆகவே மழையை ஒரு சமயம் அதிகமாகப் பொழிய விட்டும், ஒரு சமயம் பொழியாமலும் வேடிக்கைகள் செய்து வந்தான். இந்திரனுடைய கர்வத்தை அறிந்து கொண்ட கண்ணனோ, மழை இயற்கையாகப் பொழிவது! இதில் இந்திரனின் தனித்தன்மை ஏதும் இல்லை என்பதை அவனுக்குப் புரிய வைப்பதற்காக, எப்போதும் கோகுலத்தில் நடைபெற்று வந்த இந்திர வழிபாட்டை நிறுத்திவிட்டு மலைகளும், செடி, கொடிகளும், மரங்களும் செழிப்பாக இருந்தாலே மழை பொழியும் என கோகுலத்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி கோவர்த்தனகிரிக்கு வழிபாடுகளை நடத்தச் சொல்லித் தானே முன்னின்று நடத்தியும் வைத்தான்.

கோவர்த்தன கிரி க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

தனக்குரிய மரியாதைகளும், வழிபாடுகளும் நிறுத்தப்பட்டதைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். பேய்மழையைப் பொழிவித்தான் கோகுலத்தில் அனைவரும் கண்ணனைச் சரணாகதி அடைந்தனர். கண்ணன் தன்னைச் சரணடைந்த அடியார்களைக் கைவிடுவானா?  கோவர்த்தனகிரியையே குடையாக மாற்றித் தூக்கிப் பிடித்து கோகுலத்தின் சர்வ ஜந்துக்களையும் ஆடு, மாடுகள், பசு, பக்ஷிகள், மனிதர்கள் உட்பட அனைவரையும் பாதுகாத்தான். பொதுவாக "கோ" என்றால் பசு என்று மட்டும் பொருள் அல்ல.  எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும் சொல். மழை பொழிவித்தும் கண்ணனைச் சரண் அடைந்தோர் காப்பாற்றப்பட்டதை அறிந்த இந்திரன் களைப்புடன் அவனும் கண்ணனைச் சரண் அடைந்தான். சகல ஜீவராசிகளையும் காத்து அருள் புரிந்ததால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்னும் பெயரைச் சூட்டி கோவிந்த பட்டாபிஷேஹம் செய்வித்தான்.  கோ எனில் பசுக்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளையும் குறிப்பது. விந்த எனில் கண்ணனை நாடிச் செல்வது! அனைத்து ஜீவராசிகளும் கண்ணனை நாடி அவனைச் சரண் அடைந்ததால்  மேலும் கோ என்னும் சொல் ஐம்பூதங்களையும், மனிதர்களின் ஐம்புலன்களையும் சேர்த்தே குறிப்பதால் நாமெல்லாம் தேடி அடையும் கடைசி லட்சியம் பரந்தாமனே என்பதால் கோவிந்தன் என்னும் பெயரை அவன் பெற்றான்.

சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா, கோவிந்தா!

திருவெம்பாவையும் நாயகன், நாயகி பாவத்தில் மாணிக்கவாசகர் பாடல்களைப் பாடி இருக்கிறார். உமை அம்மையின் அருளை வியந்து போற்றி அதை மழையாக உருவகப்படுத்தி இருப்பார். கன்னிப் பெண்கள் நல்ல கணவனைப் பெற்று நல்லதொரு அறம் நிரம்பிய இல்வாழ்க்கை வாழ்ந்தாலே சமூகம் தழைக்கும். சமூகம் சிறப்புற்றால் தான் நகரம், நாடு போன்றவை சிறக்கும். நாடு, நகரம் சிறப்புற்றால் இவ்வுலகே சிறப்புறும். எங்கும் அருளாட்சி நிலவும். ஆகவே சக்திக்கு நிகரான பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதற்குச் செய்யும் பிரார்த்தனைகளையே திருவெம்பாவையில் முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது. திருவெம்பாவையே பெண்களைச் சக்தியாக நினைத்து சக்தியை வியந்து பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

நடராஜர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

இறைவனின் திருவடியே சக்தி எனப்படுகிறது என்பார் ஒரு சாரார்.  அந்தத் திருவடியின் மூலமே இறைவனின் ஐந்தொழில்களும் நடைபெறுவதாக ஐதிகம்.  இறைவனின் ஐந்தொழில்கள் இல்லை எனில் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பேறு அடைவது எங்கனம்? இதைத் திருவெம்பாவையின் கடைசிப்பாடல் சொல்லுகிறது.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் (படைத்தல்)
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்    (காத்தல்)
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்  (எல்லா உயிர்களும் கடைசியில் வந்து சேரும் இடம், ஈசனின் பொற்பாதம் என்பதால் அழித்தல்)
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்  (இங்கே ஈசன் தன் அடி, முடியை மறைத்து அருளினார். ஈசன் எல்லையற்றவன் என்பதை அடி, முடி காணமுடியாவண்ணம் மறைத்து அருளினார்! ஆகவே இங்கே மறைத்தலை இவ்வரிகள் குறிக்கும்.)
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் (இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்தால் நாம் உய்வதற்கெனவே அவன் நம்மைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆட்கொண்டு அருள்கிறான். அவன் பாதங்களையே சரணம் என்று நம்பிக்கையுடன் இருந்தால் நமக்கு வீடு பேறு நிச்சயம்! பிறப்பற்ற நிலை தருவான்!)
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்!
ஆகவே அவன் நினைவுகளுடன் நாம் இந்த மார்கழியில் நீராடி அவனுடன் ஐக்கியமாவோம் என்பதே திருவெம்பாவையின் உட்கருத்து!

Tuesday, December 26, 2017

சமையலும், அரசியலும்! :)

சுமார் 20 வருடங்கள் முன்னர் வரை கிறிஸ்துமஸும், புது வருடமும் கேக் பண்ணாமல் இருந்ததில்லை. அப்போல்லாம் குழந்தைகளும் இருந்தனர். மாமியார், மாமனாருக்குக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் மில்க் மெயிட் மட்டும் சேர்த்துத் தான் கேக் செய்வேன். அவன் (oven) வாங்குவதற்கு முன்பே குக்கரில் மணல் போட்டுக் குக்கர் பாத்திரத்திலேயே வைத்துச் செய்திருக்கேன். பிஸ்கட்டுகளும் அப்படியே பண்ணி இருக்கேன். பிஸ்கட்டுகள் வெட்டுவதற்கு டிசைன் கட்டர்கள் கூட இருந்தன! அவன் (oven) வாங்கியதும் அதிலேயே பன், ப்ரெட், பிட்சா போன்றவையும் முயன்று பார்த்துச் செய்திருக்கேன்.

பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிப் பையரும் அம்பேரிக்கா போனதும் தான் அவனை (oven)  நம்ம ரங்க்ஸ் தூக்கி தானம் செய்தார். எனக்கு அவ்வளவா மனசு ஆகவில்லை என்றாலும் கேக்கோ, பன்னோ, ப்ரெட்டோ பண்ணினால் நான் மட்டும் தான் சாப்பிடணும்! போணி ஆகாது! வேணும்னாக் கடையில் வாங்கிச் சாப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன். இப்போ அதிரா கேக் செய்முறைச் சுட்டி கொடுத்திருக்காங்க! அதைப் பார்த்ததும் கேக் செய்யணும்னு ஆசை! ஆனால் அவன் (oven) இல்லை. மைக்ரோவேவில் வைக்கலாமானு தெரியாது! மொறு, மொறுனு போயிடுமோனு சந்தேகம்! பொதுவா சூடு செய்ய மட்டுமே மைக்ரோவேவ் பயன்பாடு! கேக்  பண்ணினாலும் நான் தான் சாப்பிடணும்! ) ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிஞ்சப்புறமா இதெல்லாம் சாப்பிடறதில்லை. நான் மாஜரின் எல்லாம் வாங்கினதும் இல்லை. சேர்த்ததும் இல்லை! எப்போவுமே  சுத்தமான வீட்டில் எடுத்த வெண்ணெய் தான் சேர்ப்பேன். மற்ற செயற்கைப் பொருட்கள் சேர்த்தது இல்லை, முட்டை உட்பட! ப்ளம் கேக் நல்லாவே வரும். இருந்தால் பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், டுட்டிஃப்ரூட்டி சேர்ப்பது உண்டு.

குழந்தைகள் அவங்க அவங்க வாழ்க்கையில் நிலைத்ததும் இதில் எல்லாம் ஆர்வம் குறைந்தும் விட்டது! இப்போக் கொஞ்ச நாட்களாக பிட்சா பண்ணணும்னு ஆவல் வந்திருக்கு. அதை மைக்ரோவேவில் வைக்கலாம்!  ஒரு நாள் முயன்று பார்க்கணும். பார்ப்போம்!  ஜாம்நகரில் இருந்தப்போ பிட்சா, ஹாட் டாக் எல்லாம் பண்ணிப் பார்த்திருக்கேன். ஹாட் டாக் கிட்டத்தட்ட பாவு வடானு மும்பையிலே விற்கிறாங்களே அதே மாதிரித் தான்! ஆனால் உ.கியைக் கடலைமாவுக் கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்காமல் அப்படியே கறியாகப் பயன்படுத்துவேன்.
*********************************************************************************

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஜீரணிக்க முடியலை! ஆனால் தமிழ்நாடு எப்போவுமே இலவசத்துக்கும், பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் உள்ள மாநிலம். இங்கே அதிகம் கஷ்டப்படாமல் எது கிடைத்தாலும் மக்கள் வாங்கத் தயார்! உழைப்புக் குறைந்து விட்டது! எதுக்கெடுத்தாலும் போராட்டம்! மத்திய அரசை எல்லாவற்றுக்கும், ஒரு சில விஷயங்களுக்கு மாநில அரசையும் குற்றம் சொல்கின்றனர். மத்திய அரசின் நல்ல திட்டங்கள் பலவும் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையவில்லை. பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டம் மூலமாக எங்கள் குடும்ப ஆட்டோக்காரருக்கும், எங்களுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யும் பெண்ணிற்கும் வீடு கிடைத்துள்ளது. முத்ரா திட்டம் மூலம் இங்கே ஒரு சில ஆட்டோக்கள் ஓடுகின்றன என்பதோடல்லாமல் குடும்ப ஆட்டோக்காரரும் புதிய ஆட்டோ சொந்தமாக வாங்குகிறார். எரிவாயு அடுப்பு இல்லாத பலருக்கும் அடுப்பும், எரிவாயு இணைப்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதெல்லாம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் என்பது மக்களுக்குப் போய்ச் சேரவில்லை!

தொழில்துறை, கல்வி, அரசியல், ஆன்மிகம் என எதை எடுத்தாலும் நமக்குத் தடுமாற்றம் தான். கல்வியில் தேர்வு எழுதாமலேயே நம்மைத் தேர்ச்சி பெற வைத்தால் சந்தோஷம்! அரசியல் கேட்கவே வேண்டாம். ஆன்மிகம் என்றால் இன்னும் மோசம். பக்திக்கும் ஆன்மிகத்துக்கும் வேறுபாடே தெரியாத மனிதர்கள்! குறைந்த பட்சம் தேச பக்தியாவது இருந்தது. இப்போது பலரின் பிரசாரங்களினால் அதற்கும் ஊறு! கலாசாரம், பண்பாடு, மொழி என அனைத்துமே பங்கப்பட்டுப் போய்க் கிடக்கிறது.  இது நாள் வரை நாம் கும்பிட்டு வந்த நம் கடவுளர் நமக்குக் கடவுளே இல்லை என்கின்றனர் சிலர்.   வாய் மூடிக் கேட்டுக் கொள்கிறோம். கோயில்கள் அனைத்தும் வணிக வளாகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை!  நம் பண்டிகைகளைக் கூட அரசியல்வாதிகள் தீர்மானிக்கின்றனர். தனிமனித சுதந்திரம் என்பதெல்லாம் இங்கே காண முடியவில்லை!

அரசு எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு எதிர்ப்பு! ஆனால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை கொடுக்கணும். இலவச மின்சாரம் கொடுக்கணும்! எங்கே இருந்து எப்படிக் கொடுக்கும் அரசு? எவ்விதத் திட்டங்களையும் முடிக்க விடாமல் ஆரம்ப நிலையிலேயே போராட்டங்கள் நடத்தித் திட்டங்களைத் தொடர விடாமல் செய்து வரும்போது எங்கே இருந்து அரசு கொடுக்கும்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?  நமக்குத் தெரிந்ததெல்லாம் சினிமா தான்! இன்று கூட ரஜினிகாந்த் ஏதோ கூட்டம் கூட்டி இருக்கார் போல! எல்லாத் தொலைக்காட்சி சானல்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு ரஜினியை நேரில் பார்த்த சந்தோஷம் மட்டுமில்லாமல் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்ததில் ஏதோ கிரீடமே சூட்டி விட்டாற்போல் நினைத்துக் கொள்கின்றனர்.

சினிமா நடிகரை நடிகராகத் தான் பார்க்கணும். அதோடு இல்லாமல் அவரும் நம்மைப் போன்ற மனிதர் தான்! எங்கோ வானத்திலிருந்து குதித்தவர் அல்ல! ஆனால் நாமோ அடிதடி, தள்ளு, முள்ளோடு நடிகர்களைப் பார்த்துப் பரவசம் அடைகிறோம். இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள் திசைமாறிப் போவதற்குத் திரைப்படங்களும் நடிகர்கள் அவற்றில் பேசும் வசனங்களுமே முக்கியக் காரணம் ஆகின்றன! நிழலில் சொல்லுவதை நிஜம் என நினைக்கும் மக்கள் கூட்டம்! என்னவோ போங்க! தமிழ்நாட்டின் நிலைமை சரியில்லை! சரியானபடி வழிநடத்த நல்லதொரு தலைமையும் இல்லை! நானும் நம்ம அதிரடி அதிரா மாதிரி ஊசிக்குறிப்பெல்லாம் போடலாமோனு ஜிந்திக்கிறேன். 

Friday, December 22, 2017

என்னவோ, ஏதோ! தப்பாய் நினைக்காதீங்க! :)

நான் கமென்டுகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லுவதில்லை என அதிரடி அதிராவுக்கும், நெல்லைத் தமிழனுக்கும் ஒரே குறை! எங்கே! ஒரு நாள் உட்கார்ந்தா இன்னொரு நாள் உட்கார முடியாது! பதிவு போட்டுடுவேன். அப்புறமா அன்னிக்குப் பூரா எழுந்துக்க முடியாது! இதிலே சில நாட்கள் இரண்டு வேளை நெபுலைசர் வைச்சுக்க மருத்துவர் கிட்டேப் போகும்படி இருந்தது. இப்போ வீட்டிலேயே நெபுலைசர் வாங்கியாச்சு!  கிட்டத்தட்ட இரண்டு மாசமாக உடம்பு சரியில்லாமல் போனது! அதில் சில நாட்கள் படுக்கை தான்! சாதம் மட்டும் வைப்பேன். அல்லது சாதம், ரசம் வைப்பேன். போய்ப் படுத்துடுவேன். என்னால் சாப்பிட முடியாது. வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைப்பார். மோர் சாதம் இல்லைனா ரசம் சாதம் மட்டும் கொஞ்சமாய்ச் சாப்பிடுவேன். ஒரே இருமல் துளைக்கும்! வயிற்றில் ஏதேனும் போனால் உடனே இருமல், குமட்டல், வாந்தி! வாயிலும் ருசி தெரியாது! காஃபி, டீ சுத்தமாய்ப் பிடிக்காமல் போனது. ஹார்லிக்ஸ் குடிச்சு ஒப்பேத்தினேன். ஆனால் அதுவும் பிடிக்காமல் போனது! வயிற்றுப் போக்கு அதிகமாக ஆரோரூட் கஞ்சி மட்டும் குடித்து வந்தேன். அதுவும் பிடிக்கலை.

என்றாலும் விடாப்பிடியாக அவ்வப்போது எழுந்து உட்கார்ந்து ஒரு மணி நேரமாவது மடிக்கணினியில் இருப்பேன். தொடர்ந்து பார்க்கவோ, படிக்கவோ முடியாது! உட்கார முடியாமல் வேதனை செய்யும். வயிற்றில் தொந்திரவு இருந்து கொண்டே இருந்தது.  இந்த இருமலும், குமட்டலும் வயிற்றுக் கோளாறால் தான் என்பது புரிந்தது. ஆகவே அதைச் சரி செய்யணும். அப்போத் தான் இருமலும் நிற்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே உடனே படுக்கணும் போல் இருந்தது. ரொம்ப யோசிச்சு இது அசிடிடியால் வந்த இருமல் தான் என்பதைப் புரிந்து கொண்டு முதல்லே பார்லி சேர்க்கலாம்னு முடிவு செய்து பார்லி வாங்கிக் கஞ்சி வைத்துக் கொண்டு பார்லித் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தேன். பின்னர் அங்கே இங்கே யோசிச்சுக் குடி தண்ணீரில் ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கொதிக்க வைச்சுக் குடித்தேன். மாறி மாறி ஒரு தரம் பார்லித் தண்ணீர் எனில் அடுத்த முறை சோம்புத் தண்ணீர் எனக் குடித்தேன்.  சிறுநீர் நிறம் மாற ஆரம்பித்தது. லகுவாகவும் பிரிந்தது. அதுக்கப்புறமாவே கொஞ்சம் குமட்டல் குறைந்தது.  ஒரு வேளை ஆகாரம் வயிற்றில் நிற்க ஆரம்பித்தது.

நல்லாக் கடைஞ்ச மோரில் கருகப்பிலை, ஜீரகம், இஞ்சி தட்டிப் போட்டுக் கல் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சுட வைத்து அந்தத் தெளிந்த நீரைக் குடித்தேன். அதிலே நல்ல பலன் தெரிந்தது. வாயின் அருசி குறைய ஆரம்பித்தது.  திங்களன்று எழுந்து வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்க்க முடிந்தது. அன்று மாலை கொஞ்சம் வெளியேயும் போக முடிந்தது. திங்கள் கிழமையிலிருந்து ஆகாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்கிறது. என்றாலும் இன்னமும் கடின உணவு எடுத்துக்கொள்ளலை! பயம் தான் காரணம். மறுபடி ஜீரணிப்பதில் பிரச்னை ஏற்பட்டால்!ஆகவே கொஞ்ச நாளைக்கு சிறுதானியங்கள், எண்ணெயில் பொரித்த பொருட்கள், வெளிச்சாப்பாடு ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்கி இருக்கேன். வெளியே போனால் தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. ஏற்கெனவே சென்னைக்குக் கல்யாணத்துக்குப் போனப்போக் கல்யாணத்தில் கொடுத்த குடிநீரால் தான் பிரச்னையோ எனச் சந்தேகம். ஏனெனில் எனக்கு எல்லா மினரல் நீரும் ஒத்துக்கறதில்லை. அக்வாஃபினா மட்டும் தான் சேரும். கல்யாணத்தில் பிஸ்லேரியின் தம்பி போல ஒன்று. அரை மனசா வேறே வழியில்லாமல் தான் குடிச்சேன். பக்கத்தில் எங்கேயானும் அக்வாஃபினா வாங்கி இருந்திருக்கலாம்! தோணலை!

என்றாலும் பல பதிவுகள் ஆரம்பிச்சு முடிக்காமல் ட்ராஃப்ட் மோடில் கிடக்கின்றன. சமையல் பக்கத்தில் எழுத முடியவில்லை. ஆன்மிகப் பயணம் பக்கத்தில் எழுதாமல் இரண்டு மாசமா அப்படியே இருக்கு! நான் எதையும் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடிக்கிற ரகம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தடுத்து ஏதேதோ காரணங்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் நாட்கள் நகர்ந்து வருகின்றன. தினசரிக் காரியங்களை முடிப்பதே பெரிய விஷயம் என்றாகி விட்டது! இனி எப்படியோ!

அதோடு கடந்த இரண்டு, மூன்று தினங்களாக வீட்டைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்து சுத்தம் செய்து கொடுத்தனர். அவங்க சுத்தம் செய்கையில் நான் அங்கே இருக்க முடியாது என்பதால் வீட்டின் வேறொரு அறையில் முற்றிலும் முகக்கவசம் போட்டு மூக்கு, வாயை மூடிக் கொண்டு போய் உட்கார்ந்திருந்தேன். அந்த அறையில் கணினி இருப்பதால் அன்று பிரச்னை இல்லை. சும்மா இருக்கிறதுக்குக் கணினியைப் பார்க்கலாம் என்று பொழுது போய் விட்டது. ஆனால் நேற்றுக் காலையிலிருந்து மின்சாரமும் இல்லை! ஒன்பது மணி நேர மின்வெட்டு! அறிவிப்பே இல்லை அல்லது எங்களுக்குத் தெரியாது! அதோடு சுத்தம் செய்யவும் வந்துவிட்டார்கள். ஆகவே நான் சமைத்து முடித்துவிட்டுப் போய் வேறொரு அறையில் உட்கார்ந்தவள் தான். மதியம் அவங்க உணவு இடைவேளை கொடுத்தப்போ வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடி உள்ளே போய்விட்டேன். மீண்டும் மாலை ஆறரை ஆச்சு வெளியே வர! வந்தால் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யணுமே! அந்த வேலை சரியா இருந்தது. ஏழரை மணிக்கப்புறமாக் கணினியில் உட்கார மாட்டேன். என்றாலும் நேற்று வேலைகள் முடிந்ததும் எட்டரை மணிக்குக் கொஞ்ச நேரம் மடல்கள் பார்த்தேன். அவ்வளவு தான்!  இனி வரும் நாட்கள் எப்படியோ! காலமும், நேரமும் இழுத்துக் கொண்டு செல்கிற திக்கில் பயணித்து வருகிறோம்.

Wednesday, December 20, 2017

ரயில் பயணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்!

ரயில் க்கான பட முடிவு

அண்ணா பெண் கல்யாணத்திற்குச் சென்னை சென்றபோது 4 ஆம் தேதி இரவு மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்றோம்.  இரண்டாம் வகுப்புக் குளிர்சாதனப் பெட்டியில் எங்களுக்கு எதிர் எதிரான இரண்டு கீழ்ப்படுக்கை இருக்கை. நாங்க ஶ்ரீரங்கத்தில் ஏறியதால் திருச்சியில் மேல்ப் படுக்கைக்காரங்க ஏறி இருக்காங்க. அவங்க இருவருமே சின்ன வயசுக்காரங்க! எனினும் ஐந்து வயதுப் பையர் ஒருத்தர் இருந்தார். அவரைக் காரணம் காட்டிக் கீழ்ப்படுக்கைகளை அவங்க வாங்கிக்கணும்னு எண்ணம்.  டிடி யிடம் கேட்டிருக்காங்க! அவர் அந்தப் படுக்கை எண்ணுக்குரிய ஆட்கள் வந்ததும் நீங்களே பேசிக்கோங்கனு சொல்லி இருக்கார் போல் தெரிந்தது. ஆகவே ஶ்ரீரங்கத்தில் நாங்க ஏறினதுமே இருவரும் முதலில் சென்ற என்னைப் பார்த்து ஆவலுடன் குழந்தை இருக்கான் ஆகவே நீங்க மேலே படுத்துக்குங்க என்று சொல்லவே என்னால் ஏற முடியாத நிலைமை என்பது உண்மை என்பதால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.

அப்போ அந்தக் குழந்தையின் அம்மா இன்னொருத்தர் யாருனு கேட்க, எங்க வீட்டுக்காரர், அதோ வரார் என்றேன். உடனே அவரிடம் கேட்க அவருக்கும் கழுத்துப் பிரச்னை என்பதால் மேல்ப் படுக்கையில் உள்ளே செல்வதே கஷ்டம் என்பதை எடுத்துரைத்தோம். இருவருக்கும் கோபம். அந்தக் குழந்தையிடம் நமக்குத் தான் இங்கேனு சொல்லி வைச்சிருக்காங்க போல! அது பாவம் மேலே போக மாட்டேன்னு ஒரே அடம்! என்ன செய்யறது! ஏற்கெனவே மணி பதினொண்ணைத் தாண்டி விட்டது. என்பதால் நாங்க படுத்துட்டோம். வேறே வழியில்லாமல் இருவரும் மறுபடி டிடியைப் பார்த்துக் கேட்டாங்க. அவரும் கையை விரித்து விட்டார். இப்போல்லாம் சீனியர் சிடிசனுக்கு அலாட் பண்ணினால் அதை மாத்த முடியாதுனு சொல்லிட்டார். அரை மனதாக இருவரும் மேலே ஏறினார்கள். அதுக்குள்ளே அந்தப் பெட்டியே அமர்க்களப்பட்டு விட்டது. அந்தப் பையர் மேலே போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க ஒரு வழியா அவரை மேலே ஏற்றிக் கொண்டாங்க.

ஆனால் இரவு முழுவதும் தூங்க விடவில்லை. அவங்களைப் போகச் சொல்லு! நான் கீழே தான் படுப்பேன்னு அழுதுட்டே வந்தார்! அரை மணி நேரம் தூங்கினால் ஜாஸ்தி! ரொம்பக் கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டு வந்தோம். வண்டியானா சொன்னாச் சொன்னபடி சரியாகக் காலை நாலேகால் மணிக்குச் சென்னை எழும்பூர் வந்து விட்டது! ஆனால் அப்போ மேலே மூணு பேரும் நல்ல தூக்கம்! எப்படியும் எழுந்து தானே ஆகணும்! நாங்க கீழே இறங்கி ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அம்பத்தூர் போய்ச் சேர்ந்தோம். 

மறுநாளே திரும்பியதால் மதியம் பல்லவனில் முன்பதிவு செய்திருந்தோம் அதிசயமாக இரட்டை இருக்கை கொண்ட சீட் கிடைத்தது. வண்டி நாங்க ஸ்டேஷனில் நுழையும்போது நடைமேடையில் இருந்தாலும் சுத்தம் செய்கிறார்கள் என்னும் அறிவிப்புப் பலகையை மாட்டிவிட்டுச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். முன்னெல்லாம் ஒரு பக்கம் சுத்தம் செய்யும்போது இன்னொரு பக்கம் போய் ஏறிப்பாங்க. இப்போ யாரையும் உள்ளே அனுமதிக்கலை. அப்படி ஏறினவங்களையும் கையைப் பிடிச்சுக் கீழே இறக்கி விட்டுட்டாங்க. முழுக்கச் சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிச்சாங்க. சுத்தம்னா சுத்தம் படு சுத்தம்!  மயக்கமே வரும்போல் இருந்தது. என்ன ஒண்ணு நம் மக்கள் வேர்க்கடலையை உரித்துத் தின்று விட்டுத் தோலை அங்கேயே போடுவாங்க! அதான் கவலை! ஆனால் அப்படி ஏதும் நடக்கலை!

காஃபி, தேநீர் கொண்டு வந்தாங்க. கல்யாண வீட்டில் மதியம் ரசம் சாதம் மட்டுமே சாப்பிட்டிருந்தேன். மற்றவை எதையும் சாப்பிடலை! ஆகவே தேநீர் வாங்கிக் கொண்டோம். அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் கப்பில் முக்காலுக்குத் தேநீரை ஊற்றிக் கொடுத்தார் தேநீர் விற்பவர். தேநீரைக் குடித்தால் இன்னுமொரு ஆச்சரியம். தேநீர் குடிக்கும்படி இருந்தது.  முன்னெல்லாம் கொஞ்சம் கடுமையாகவே பேசும் இந்த ஆட்கள் இப்போது மிகவும் தன்மையுடன், மரியாதையுடன் பேசுவதையும் காண முடிந்தது. அதோடு அடுத்தடுத்துத்   தின்பண்டங்கள் விற்பனை ஆகிக் கொண்டிருக்க விருத்தாசலம் வரும்போது ஒரு ஆள் கையில் பெரிய ப்ளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு வந்து ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸில் குப்பையைச் சேகரம் செய்வது போல் சேகரம் செய்து கொண்டு போனார். பின்னாடியே இன்னொருத்தார் சோப் ஆயில் அல்லது சுத்தம் செய்யும் திரவம் ஏதோ ஒன்றைத் தெளித்துக் கொண்டே தளத்தைத் துடைத்தார். 

ஶ்ரீரங்கம் வருவதற்குள்ளாக இம்மாதிரி இருமுறை நடந்தது. ரயிலும் ஏற்கெனவே சொன்ன மாதிரி சரியான நேரத்தில் ஶ்ரீரங்கம் வந்தும் விட்டது. எப்போவும் முதல் நடைமேடையிலேயே வண்டி நிற்கும். இப்போ நாலு நடைமேடைகள் கட்டி முடித்து விட்டதால் நாலாவதில் வடக்கே இருந்து வரும் வண்டிகளை நிறுத்துகிறார்களாம். கடந்த ஒரு வருடமாக ரயில் பயணமே செய்யாததால் இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. சுரங்கப்பாதை வழியாக வெளியேறி மேலே போகணும்! என்னடா செய்வோம்னு கவலையாக இருந்தது. நல்லவேளையாக இன்னொரு தம்பதிகள் எங்களுடன் ஶ்ரீரங்கத்தில் இறங்கினவர்கள் சாமான்கள் அவர்களுக்கு அதிகம் இல்லாததால் எங்களுடையதைத் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோ பிடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.  வீட்டிற்கு ஒன்பதே காலுக்கெல்லாம் வந்தாச்சு. கல்யாண வீட்டில் கொடுத்த இட்லியைச் சாப்பிட்டோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துச் செய்த ரயில் பயணம் சொகுசாக அமைந்தது. எல்லா ஊர்களுக்குச் செல்லும் ரயில்களிலும் இதே மாதிரி சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்கள்/கொடுத்திருப்பார்கள் என நம்புவோம். 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!