எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 30, 2008

அழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1

நவராத்திரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெண்களுக்கு மட்டுமான பண்டிகை என்றும் சொல்லலாம் என்றாலும், ஆண்களின் பங்கில்லாமல் இது நிறைவேறாது. பெண் தெய்வம் ஆகிய சக்திக்காகவும், அவள் தன் சக்தியால் அசுரத் தனங்களை ஒழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்ட பண்டிகை இது. தேவியரின் சக்தியை மூன்று வகையாய்ப்பிரிக்கின்றோம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூவகைப்படும் சக்திகளின் ஆதிசக்தி ஸ்ரீலலிதை ஆவாள். சக்தி உபாசகர்களால் பெரிதும் கொண்டாடப் படும் இந்த நவராத்திரி , அவரவர் வீட்டு வழக்கங்களின்படியே கொண்டாடப் படுகின்றது. என்றாலும் அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாய் நினைத்துச் சிறப்பித்து, அந்த, அந்தப் பருவத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக வழிபட்டு அதற்கு உகந்த நைவேத்தியங்கள் செய்து, அலங்காரங்கள் செய்து வழிபடுவது பலராலும் பின்பற்றப் படுகின்றது.

அசுர சக்தி மேலோங்க, மேலோங்க மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. ஆகவே பயம் போக்கும் துர்கைக்காக முதல் மூன்று நாட்களும், பயம் நீங்கி செல்வம் அடைய லக்ஷ்மியை நினைந்து அடுத்த மூன்று நாட்களும், அறிவையும், ஞானத்தையும் பெறக் கடைசி மூன்று நாட்களையும், முறையே துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவில் வைத்துப் பூஜிக்கின்றோம். இந்த நவராத்திரி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த முறைப்படி ஒவ்வொரு வகையாய்க் கொண்டாடப் படுகின்றது. அண்டை மாநிலம் ஆன கேரளாவில் கடைசி 2 நாட்கள் சரஸ்வதி பூஜையும், அதை அடுத்த விஜயதசமியும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விமரிசையாகக் கொலு வைத்து, பிறரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பரிசுப் பொருட்கள், சுண்டல் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு நாளுக்கும் உகந்த நைவேத்தியமும் பண்ணுவதுண்டு.

ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது. சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும், ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும், தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது. சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் இவளே, அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும் சரஸ்வதி என்பவளும் இவளே! அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச் சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே. அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.

இன்றைய நைவேத்தியம் புட்டு. சாதாரணமா வெள்ளிக்கிழமைக்குச் செய்வாங்க. ஆனால் நான் செவ்வாய்க்கிழமையும், நவராத்திரி முதல்நாளுமான இன்னிக்கே செய்துட்டேன். ஏனெனில் வெள்ளிக்கிழமை எல்லாருமே புட்டு செய்வதால் நம்ம புட்டு போணி ஆகாதே! அதான். இது இட்டிலிப் பானையில் வேக வைக்கும் புட்டு இல்லை. அரிசியை ஊற வைத்து சிவப்பாய் வறுத்து, மாவாக்கி, அந்த மாவில் வெந்நீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து உதிர், உதிராகக் கலந்து ஊற வைத்ததும், 3 மணி நேரம் கழித்து வெல்லம் பாகு உருண்டை உருட்டும் பதத்தில் எடுத்துக் கொண்டு அதில் கலக்கவேண்டும். இது சீக்கிரம் கெட்டுப் போகாது. படம் திராச சார் உபயம், போன நவராத்திரிக்கு அவர் போட்டது. :))))))))

இப்போதைய சேர்க்கை:

நேற்றுத் திங்கள் அன்றில் இருந்து பொதிகைத் தொலைக்காட்சியில் மாலை 6-30 மணிக்கு வேளுக்குடியின் கீதை உபதேசம் வரும் நேரத்தில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக "பராசக்தியின் பத்து பரிணாமங்கள்" என்ற தலைப்பிலே நிகழ்ச்சித் தொடர் ஆரம்பித்து உள்ளார்கள். கட்டாயமாய்த் தொலைக்காட்சி அந்த நேரம் பார்க்கும் வாய்ப்புடையவர்கள் தவற விடவேண்டாம். அன்னையின் தசமஹா சக்தியைக் குறிப்பிடும் விதமாய் அமைந்த முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணப் பாடல்களும், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. பாடல் பாடுபவர் கெளசல்யா சிவகுமார், தோழிகள். விளக்கமும் கெளசல்யாவே கொடுக்கின்றார். மிக அருமையான விளக்கங்கள். நேற்றுக் காலி என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அருமை. காலி என்பதே நாம் காளி என்று சொல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வடமொழியில் "ள" எழுத்துக் கிடையாது. நாம் தான் காளி என மாற்றிக் கொண்டுள்ளோம். தட்சிண காலி என்பதற்கு தென்புறம் என்ற திசையை மட்டும் குறிக்கும் அர்த்தம் இல்லை என்பதையும் நேர்மையான, திறமையான காலத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவளே காலி என்பதையும் முக்காலத்தையும் அவள் கட்டுப்படுத்தும் விதத்தையும், முத்தொழிலும் புரிகின்றவளே அவள் என்பதையும் நன்கு எடுத்துச் சொன்னார்.

Monday, September 29, 2008

சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?

ஹிஹிஹி, திவாவோட பதிவிலே இருந்து சுட்டுட்டு வந்தது தான் இன்னிக்குத் தலைப்பு. இப்போ என்னோட மனசு எப்படி இருக்குன்னா என்னத்தைச் சொல்றது? கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு! மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக மாற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது? அது என்னோட எடை மாதிரி! குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.

புத்தகங்களை வேண்டியது, வேண்டாதது பார்த்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே தள்ளி விட்டு முக்கியமானதை மட்டும் வச்சுக்கலாம்னா அதுவே 3 அலமாரிக்கும் மேலே வந்தது. இத்தனைக்கும் ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் வாங்கறதே இல்லை. இதிலே போகிற இடத்திலே கொடுக்கிற புத்தகங்கள், வாங்கற புத்தகங்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத அகராதிகள் என்று எல்லாம் குண்டு, குண்டாக இடத்தை அடைக்கத் துணிகளை ஒரு மாதிரி அடைச்சுத் தான் வைக்க வேண்டி இருந்தது. என்ன ஒரு புடவையை எடுத்தால் மொத்தமும் கீழே விழும். திரும்ப அடைக்கணும். அதுக்கு ஒரு நிமிஷம் தானே பிடிக்கும். ஆகவே அந்த அலமாரி பக்கமே வரதுக்கு வெறுத்துப் போய் அவர் விலகிக் கொள்ள நம்ம ராஜ்யம் தான் அங்கே ஒரு வருஷமாய். இப்போ கொலுவுக்கு அந்த அலமாரி வேண்டும்னு சொல்லவும் முந்தாநாள் சனிக்கிழமையிலே இருந்து ஆரம்பிச்சு ஒருவழியா நேத்திக்குத் தான் ஒழிச்சு முடிச்சேன். இந்த அழகிலே இ.கொ. cryptics போட உங்களை விட்டால் வேறே ஆளே இல்லைனு மெயில் அனுப்பிட்டு இருக்கார். எதைனு பார்க்கிறது. அதிலே ஒரு கண், இதிலே ஒரு கண்ணுனு முடிச்சுட்டுப் பார்த்தால் இ.கொ. அதுக்குள்ளே பப்ளிஷ் பண்ணிட்டார். மார்க் பரிட்சை பேப்பரிலே இருக்காமே, அங்கே போய்ப் பார்க்க பயமா இருக்கு. போகலை.

இந்த அழகிலே நேத்திக்குப் பெண்ணோட பிறந்த நாள். அவங்களைக் கூப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவே மறந்து போயாச்சு. நேத்திக்குப் பாவம் அவங்களே கூப்பிட்டபோதும் முதல்லே நினைப்பு வரலை. அப்புறம் தான் நினைப்பு வந்தது. ஒருமாதிரி, ஒருமாதிரிதான், சமாளிச்சாச்சு. அப்புறம் க்ரீட்டிங்ஸ் அனுப்பலாம்னு இணையம் பக்கம் வந்தால் டாடா இண்டிகாம் இணையம் வராது உனக்கு இப்போனு முன் ஜாக்கிரதையாக தொலைபேசித் தெரிவிக்க ஒருவழியாக் காலம்பர வந்திருக்கானு பார்த்துட்டு belated greetings அனுப்பி வச்சேன். நல்லவேளையா இதைப் படிக்கிற அளவுக்குப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் இந்த வருஷ கொலு ரொம்பவே ஆட்டி வச்சிருக்கு. எப்போவும் படி கட்ட இவ்வளவு சிரமம் பட்டதே இல்லை. இந்தப் படிகள் கட்ட ஒரு டீம் வொர்க் தேவைப்படுது. என்றாலும் எங்க டீம் மானேஜரின் சாமர்த்தியத்தினால் நாங்க இரண்டு பேருமாய்க் கட்டி பொம்மையும் வச்சாச்சு. நாளையில் இருந்து கொலு ஆரம்பம். தினமும் சுண்டலும் உண்டு. பதிவும் உண்டு. எல்லாரும் வந்து இருந்து கொலுபார்த்துட்டுச் சுண்டல் (பாடறவங்களுக்கு மட்டும்) வாங்கிட்டுப் போங்க.

அப்புறமா கொஞ்ச நாளைக்கு நவராத்திரி முடியறவரைக்கும் திருநாங்கூர் பதிவுகளை நிறுத்தி வச்சுக்கறேன். சுண்டல் வேணும்னா எல்லாரும் பேசாமல் நவராத்திரிப் பதிவுக்கு வந்துட்டுப் போங்க!நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி!!, ரொம்பவே சந்தோஷமா இருக்கே!) கவிநயாவுக்கு (பாவம்) கிடையாது. மத்தவங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்கலாம்.

Saturday, September 27, 2008

திருமணத் தம்பதிகளை வழிப்பறி செய்தவன் யார்? - 1

தென் தமிழ்நாட்டிலே பாண்டியநாட்டுத் தலங்களிலே, சிவனுக்கென நவ கைலாயங்களும், விஷ்ணுவுக்கென நவ திருப்பதிகளும், தாமிரபரணிக் கரையோரமாய் அமைந்துள்ளது. இவை அனைத்தையுமே சென்ற வருடம் சென்று பார்த்துவிட்டு வந்தோம், திருநெல்வேலியிலே தங்கிக் கொண்டு. முதலில் நாங்கள் போனது நவ திருப்பதிகள் தான். எல்லாமே தாமிரபரணிக் கரை தான். எல்லாத் திருப்பதிகளுமே திருக்குறுங்குடித் தொழிலதிபர் ஆன டி.வி.எஸ். சுந்தரம் அவர்களின் குடும்பத்தினரால் பரம்பரையாக நிர்வாகம் செய்யப் படுவதால் மிக மேன்மையான நிர்வாகமும், சுத்தமான கோயில்களுமாய் நன்றாகவே இருக்கின்றன. என்றாலும் இவற்றைப் பற்றி இன்னமும் எழுதவில்லை, அதற்குக் காரணம் தாமிரபரணியின் வரலாறு சரியாகத் தெரியாத காரணத்தாலேயே. இப்போக் கொஞ்சம் தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். கூடிய சீக்கிரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை இருக்கின்றது. அதற்கு முன்னோடியாக இப்போது எழுதப் போவது திருநாங்கூர் திவ்யதேசங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம். மொத்தம் பதினோரு திவ்யதேசங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாய் நான் பார்க்க நினைத்தது திருவாலி, திருநகரி திவ்ய தேசங்களே. திருமங்கை ஆழ்வாரின் சரித்திரத்தோடு தொடர்புடைய தலங்களில் இது முக்கியமானது.
***********************************************************************************

சோழவளநாடு. அங்கே ஒரு சிற்றூர் திருக்குறையலூர் என்ற பெயரில். ஊரில் தான் குறை என வருதே தவிர, முற்றிலும் குறையற்ற அந்த ஊரில் ஆலிநாடர் என்ற ஆண் மகன் ஒருவர் சோழநாட்டின் படையில் இருந்தார். அவரின் மனைவி பெயர் வல்லித் திரு ஆகும். இருவருக்கும் பிள்ளைக்கலி தீர்க்கத் தோன்றினான் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளை வளர்ந்து பெரிய மனிதன் ஆகி அந்த ஈசனையே ஆட்டி வைக்கப் போகின்றான் என அறியாத பெற்றோர் அவனுக்கு நீலன் எனப் பெயரிட்டனர். மகன் வளர்ந்தா. ஒரு குறையுமின்றி அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்தான், முக்கியமாய்ப் போர்க்கலை. மொழியறிவும், நூலறிவும் மிகுந்திருந்த அந்தப் பிள்ளைக்கு இயல்பாகவே கவி பாடும் திறனும் சேர்ந்து கொண்டது. சோழநாட்டு மன்னன் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவனைச் சும்மா விடலாமா என எண்ணிக் கொண்டு அவனைத் தன் படைத்தலைவனாகவும் ஆக்கிக் கொண்டான்.

மன்னன் சேவையிலும் குறையேதும் வைக்கவில்லை, குறையலூர்ப் பிள்ளை. மிகத் திறத்துடனேயும், வீரத்துடனேயும் இருந்து வந்தான். பகைவரை எளிதில் வென்ற அவனுக்கு மன்னன் "பரகாலன்" என்ற பட்டப் பெயரையும் அளித்துச் சிறப்பித்ததோடு அல்லாமல், அவன் பிறந்த அந்த நிலப் பகுதிக்குத்திருவாலிநாடு என்ற பெயரோடு அந்த நீலனையே சிற்றரசனாக்கி மகிழ்ந்தான். சிற்றரசன் ஆன நீலனும் மன்னன் சேவையில் மனமகிழ்ந்திருந்த நேரம். எல்லாமும் நன்றாக எத்தனை நாட்கள் இருக்கும்?? மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா??

மேலும் நீலன் "நாற்கவிப்பெருமாள்" என்பவரை வாதத்திலும் வென்று அவனுடைய நாற்கவி என்ற பட்டத்தையும் தனக்குரியதாக்கிக் கொண்டு விட்டானே?? இனி என்ன பாக்கி?? திருமணம் தான் பாக்கி. நீலனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு நிகரான பெண்ணரசி எங்கே பிறந்துள்ளாளோ?? சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா?? தெய்வீக மங்கை ஆன சுமங்கலை என்பவள் ரிஷி ஒருவரைக் கேலி பேசியதால் கிடைத்த சாபத்தால் பூலோகப் பெண்ணாக வாழ வந்தாள். அவள் தாயின் கருவிலே தோன்றாமல் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு அல்லித் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இருந்தாள்.
அவளை மருத்துவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார். அல்லி மலரில் தோன்றிய அல்லியை விட மென்மையான மங்கைக்குக் குமுத வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார் மருத்துவர். குமுதவல்லியை ஒருநாள் பார்த்தான் திருவெள்ளக் குளம் வந்த நீலன். குமுதவல்லி தேவலோகப் பெண்ணாய் இருந்த போது வைகுந்தவாசனின் வைகுந்தத்தில் அவனருகில் சாமரம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தமையால் இப்போதும் அவளுக்குத் திருமாலின் மேல் அளவு கடந்த பற்று இயல்பாகவே இருந்து வந்தது.

குமுதவல்லியைக் கண்டதும் அவள் மீது கரைகாணாக் காதல் கொண்ட திருமங்கை மன்னனோ மணந்தால் குமுதவல்லி, இல்லையே திருமணம் வேண்டாம் எனச் சொல்ல, குமுதவல்லியின் வளர்ப்புத் தந்தையிடம் பெண் கேட்டுச் சென்றனர். குமுதவல்லியோ, தான் தீவிர வைணவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், பன்னிரு திருமண் தரித்து, வைணவ இலச்சினையும் பெற்று, வந்தால் திருமணம் செய்து கொள்வதாய் நிபந்தனை விதிக்க, நீலனும் அதற்குக் கட்டுப்பட்டு திருநரையூர் நம்பியிடம் வைணவ இலச்சினைகள் பெற்று, பன்னிரு திருமண்ணும் தரித்து வைணவக் கோலத்தில் வர, குமுதவல்லியோ, தான் மேற்கொண்டிருக்கும் நோன்பு முடிய ஓராண்டு ஆகும் எனவும், அதுவரை தினமும் ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும்படியும் நீலனிடம் சொல்ல நீலன் குமுதவல்லியின் மீதுள்ள மிதமிஞ்சிய ஆசையில் அதற்கும் கட்டுப் படுகின்றான். விருந்துகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் நீலனின் அரண்மனையில் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து.

Thursday, September 25, 2008

தொல்காப்பியர் செய்த உதவி!

2 நாட்கள் முன்னர் சொந்த வேலையாகச் சிதம்பரம் சென்றிருந்தோம். என்னோட சிதம்பர ரகசியம் தொடரைப் படிச்ச தீட்சிதர் ஒருத்தர் எனக்குத் தனி மடல் அனுப்பி இருந்தார், சிதம்பரம் வந்தால் சந்திக்கச் சொல்லி. நானும் அவர் நம்ம நண்பருக்குத் தெரிஞ்ச தீட்சிதராக இருக்கும்னு நினைச்சு அவர் கிட்டேயும் அதைப் பத்திச் சொல்லி இருந்தேன். ஆனால் அங்கே போனதும் தான் தெரிஞ்சது, தொல்காப்பியரின் நண்பர் ஆன இந்த தீட்சிதர் கிட்டே இணைய இணைப்பே கிடையாது, இனிமேல் தான் வாங்கப் போறார்னு. எனக்கு மெயில் கொடுத்த தீட்சிதர் யாருனு புரியாமலேயே, திரும்பவும் வந்து சேர்ந்தாச்சு. வந்து அவருக்கு ஒரு மெயில் போட்டேன். இன்னும் பதில் வரலை. ஆனால் நான் அங்கே பார்த்ததும், பேசினதும் நம்ம தொல்காப்பியருக்குத் தெரிஞ்சவர் தான். ஆகவே அவர் பெயரைச் சொன்னதுமே புரிந்தும் கொண்டார். மேலும் நம்ம தொல்காப்பியர் சும்மா இருக்காமல், பழைய ஆபிச்சிலே இருக்கும்போது ஈ ஓட்டிக் கொண்டிருந்த போதிலே நம்ம சிதம்பர ரகசியம் தொடரைப் பிரிண்ட் அவுட் எடுத்து சிதம்பரம் பூராவும் பிட் நோட்டிஸ் மாதிரி விநியோகித்திருக்கின்றார். ஆகவே நம்ம பெயரையும், புகழையும் அங்கே பிரபலம் அடையச் செய்த தொண்டர்களில் முதன்மை ஸ்தானத்தையும் அடைந்து இருக்கின்றார்.

ஆகவே அங்கே போனதும், தொல்காப்பியரின் நண்பர்கள் எனத் தெரிந்ததும், ராஜ உபசாரம். இத்தனைக்கும் நாங்க இன்னும் இந்தத் தொல்காப்பியரைப் பார்த்ததே இல்லை. அதுவும் அவருக்குத் தெரியும். அந்தக் கால ராஜாக்களுக்கு நடக்கும் உபசாரத்தைச் சொன்னேன். தெரிஞ்சால் சாப்பிடாமலாவது போயிருக்கலாம். எங்க கட்டளை தீட்சிதர் வீட்டிலே நாங்க போனப்போ மாப்பிள்ளைக்கு விருந்து என்று தடபுடலாய்ச் சமைத்திருக்க அங்கே சாப்பிட்டதே ஜீரணம் ஆகலை. ராத்திரிக்கு வேறே கையிலே கொடுத்திருந்தாங்க. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். என்னோட பதிவுகளிலே அவர் படிச்ச வரைக்கும் அலசிப் பிழிந்து, காயப் போட்டுட்டு, இப்போ எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தையும், நம்ம கேஆரெஸ் என்னைக் கசக்கிப் பிழிய நினைப்பதையும், நான் கழுவின மீனில் நழுவுகிற மீனாய் நழுவுவதையும் எடுத்துச் சொன்னேன். நானும் என் பங்குக்கு ப்ரிண்ட் அவுட் எல்லாம் கரண்ட் இருக்கிற நேரமாய்ப் பார்த்து எடுக்க முயன்றால், ஆற்காட்டாரின் சதியினால் பாதி கூட முடியலை. ப்ரிண்டர் இன்னும் வெயிட்டிங்குனு அலறிட்டு இருக்கு.

மற்ற விஷயங்களைப் பேசிட்டுக் கிளம்ப ஆயத்தம் ஆகும்போது என் கணவர் திடீர்னு இன்னிக்கு ஸ்ரீமுஷ்ணம் போகலாம்னு இருந்தோம். உடம்பு முடியலை, அதனால் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கப் போறோம்னு சொல்லவே, அந்த தீட்சிதர் கொஞ்ச நேரம் யோசித்தார். ஸ்ரீமுஷ்ணம் இங்கே இருந்து 30 கி.மீ.க்கு மேலே இருக்கு, விருத்தாசலம் போகும் பாதையில் இருக்கு. இங்கே இருந்து பஸ்ஸில் போனால் திரும்ப ராத்திரி பத்து ஆகலாம். என்று சொன்னார். ஆகவே பயணத்தைக் கைவிடும் திட்டத்துடன் இருக்கும்போது திடீர்னு மொபைலில் யாருக்கோ தொலைபேசினார். பின்னர் வண்டியை எங்கேயே எடுத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்பாசடர் கார் வந்தது. ஸ்ரீமுஷ்ணம் அழைத்துப் போவார் டிரைவர், வந்தாச்சு என்று அறிவிக்கின்றார். அப்போதே மணி மாலை ஆறு ஆகி விட்டது. ஆகவே வண்டியில் போனால் ஒழிய சீக்கிரம் திரும்ப முடியாது என்று புரிந்து கொண்டு நாங்களும் கிளம்பினோம்.

அருமையான வண்டி, டிரைவருக்குச் சொந்த வண்டி.அருமையான டிரைவர். ரொம்பவே பெரும்போக்கான தன்மை. மிக மிக உயர்ந்த மனிதர், உருவத்தில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும். சாலை தான் சில இடங்களில் வழக்கமான நடைமுறையில் இருந்தது. மற்றபடி பெரும்பாலும் தேசீய நெடுஞ்சாலையாக இருந்ததால் வண்டியும் சீக்கிரமாய்ப் போனது. தரிசனமும் நல்லபடி ஆகித் திரும்பவும் 8-30க்குச் சிதம்பரம் வந்து சேர்ந்துவிட்டோம். ஏற்கெனவே தொல்காப்பியரின் நண்பரான தீட்சிதர் சொன்னபடிக்கு அவரைக் கோயிலில் சந்தித்தோம். டிரைவருக்குப் பணம் கொடுக்கவில்லை என்பதால் அவர் மூலம் செட்டில் பண்ணலாம் என்று போனால் வாங்கவே மறுத்துவிட்டார், அந்த தீட்சிதர். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. தொல்காப்பியருக்காக நான் இது கூடவா செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். கடைசியில் தோற்றது நாங்கள் தான்.

இனி சிதம்பரம் பற்றிய மற்ற தகவல்கள் வழக்கம்போல் சிதம்பர ரகசியம் பதிவுகளிலும், அங்கே போனப்போ பார்த்த கோயில்கள் பற்றிய தகவல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இந்த தீட்சிதரும் சில புத்தகக் குறிப்புகளும்,ஒரு புத்தகமும், மற்ற தகவல்களும் கொடுத்தார். மேலும் காலையில் இரண்டாம் கால பூஜையின் போது அங்கே தேவாரம் இசைத்த ஓதுவாரிடமும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். மற்ற வழிபாட்டுக்கு வந்த சாதாரண மக்களிடமும் கொஞ்சம், கொஞ்சம் பேசினேன். தேவாரப் பாடசாலையில் வழக்கம்போல் தேவாரம் கற்றுக் கொடுக்கப் படுவதையும் முதல்நாள் மாலை சென்றபோதும் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதில் ஒரு சில தீட்சிதர் பையன்களும் இருக்கின்றனர். விசாரித்ததற்கு நன்கு பாட வரும் இளைஞர்கள் சிறிய வயதில் இருந்தே கற்றுக் கொள்வதாய்த் தெரிவித்தனர். மேலும் தீட்சிதர்களிலும் பலருக்கு தேவாரம் பாட நன்கு தெரியும் என்பதையும் நேரில் கண்டிருக்கின்றேன். ஆகவே வரும் தலைமுறைக்கும் அதைச் சொல்லிக் கொடுக்க அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

அருஞ்சொற்பொருள்:

தொல்காப்பியர்= அபி அப்பா!

Saturday, September 20, 2008

கடைசிக் கட்டி மாம்பழம்!


வல்லி எழுதிய பாட்டி கதைகளைப் படிச்சதில் இருந்து எனக்கும் எங்க பாட்டி நினைவு வந்துடுச்சு. எங்க பாட்டினா எங்க அம்மாவோட அம்மா தான். அப்பாவோட அம்மாவை நாங்க யாருமே பார்த்ததில்லை. அப்பா பிறந்து 12-ம் வயதிலேயே அம்மாவை இழந்துட்டார். அப்பாவின் அதீதக் கோபத்துக்கு அதுவும் ஒரு காரணமோனு நாங்க பேசிப்போம். அது இருக்கட்டும், இங்கே அது வரலை. பாட்டி பத்தி இல்லை சொல்லணும். எங்க அம்மாவோட அம்மாவுக்கு 5 வயசிலே கல்யாணம்னு சொல்லுவாங்க. தாத்தாவுக்கு அப்போ பதினேழு வயசாம். வாயிலே விரலைப் போட்டுக் கொண்டு பையன் கழுத்தில் மாலை போட மறுத்த பெண் குழந்தையை, ஏதோ பட்சணம் கொடுத்து மாலை போட வச்சிருக்காங்க. அப்புறமாய்க் கல்யாணம் நடந்து ஊர்வலம் எல்லாம் அந்தக் கால வழக்கப் படி நடந்திருக்கு. பாட்டியின் கல்யாணத்திலே தான் அந்தப் பக்கங்களில், பாட்டியின் ஊர் பரமக்குடி. தாத்தாவுக்குப் பக்கத்திலே தென்னவராயன் புதுக்கோட்டை. அந்தக் கால ராமநாதபுரத்துக்காரங்களுக்கு இந்தப் புதுக்கோட்டை எதுனு புரியும்.

பாட்டி கல்யாணத்திலே தான் அவங்க தாத்தா ராஜம் ஐயர் அவர்கள் முதன் முதல் காபி கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்று அப்போ ஊரெல்லாம் பேச்சாய் இருக்கும்னு சொல்லுவாங்க. கல்யாணம் முடிஞ்சு பிறந்த வீட்டிலே கொஞ்ச நாட்கள் இருந்த பெண்ணைப் புக்ககம் பழகணும்கிறதுக்காக அப்போ அப்போ புக்ககம் அனுப்பும் வழக்கம் உண்டாம். தாத்தா கல்யாணம் முடிஞ்சு சட்டப்படிப்புப் படிக்க சென்னை போய்விட்டார். பாட்டியின் மாமனார் பக்கத்து ஊரில் இருந்து வந்து தன் மருமகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தம் செய்வாராம். பாட்டி வர மாட்டேன் என அழ, ஆரம்பிக்கப் பின் அழுது களைத்துப் போய் வாயில் விரல் போட்டுக் கொண்டு தூங்கிப் போக, தூங்கும் மருமகளைத் தாத்தாவின் அப்பா தூக்கிக் கொண்டு போவாராம். இப்படியே புக்ககம் பழக்கம் ஆன பாட்டி ஒருவழியாய் அங்கேயே தங்க வந்ததும், தன் மனைவி படிக்காமல் இருக்கக் கூடாது எனத் தாத்தாவே படிக்க ஆள் போட்டு படிப்பு சொல்லிக் கொடுத்திருக்கார்.

சிறு குழந்தையாக வந்த பாட்டி பின்னர் நிர்வாகத்திறமையில் இந்தக் கால நிதி மந்திரிகள் எல்லாம் யோசனை கேட்கும் அளவுக்குப் பிரமாதமான நிர்வாகம். தன் ஐந்து பெண்களையும், (என் அம்மா உள்பட) நாலு பிள்ளைகளையும் வளர்த்ததும் சரி, அவங்களுக்குத் தன்னோட திறமையில் .001% ஆவது இருக்கணும்னு வேண்டியது சொல்லிக் கொடுத்ததிலும் ஆகட்டும், பாட்டிக்கு நிகர் பாட்டியே தான். கடைசிவரையில் தன் மாமியாரைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு போஷித்ததிலும், திருமணம் ஆகாத தேசபக்தர் ஆன தன்னுடைய ஒரே கொழுந்தனாரை வைத்து சம்ரட்சணை பண்ணியதில் ஆகட்டும், அந்தத் திறமை யாருக்கும் வராது என்றே சொல்லலாம்.

நாங்க அப்போ மொத்தம் பெண் வயிற்றுப் பேத்திகள் ஆறுபேர். எங்களை விட 4 வயதே அதிகம் ஆன கடைசிச் சித்தி. எங்க பெரிய மாமாவின் பெண். ஆக மொத்தம் எட்டுப் பேர் சிறு பெண்களே இருப்போம். இதைத் தவிர, என் அண்ணாக்கள் இருவர், சித்தி பையன்கள் இருவர், என் தம்பி, பெரியம்மாவின் பையன்கள்2 பேர். என்று ஒரு மழலைப் பட்டாளமே இருக்கும் வீட்டில். அனைவருக்கும் காலம்பர பாட்டி கையால் பிசைந்த பழைய சாதமே காலை உணவு. முதல் நாள் மீந்த குழம்பில், ரசத்தின் அடி வண்டலையும் கொட்டிச் சுடவைத்திருக்கும். போதாதுக்கு மாவடு ஜாடி நிறைய இருக்கும். அழகர்கோயில் மாவடு. கிளி மூக்கு மாவடு என்றால் ரொம்பவே பிரசித்தி. இப்போ மாவடுவே கிடைக்கறதில்லை இதிலே கிளி மூக்கிற்கு அதுவும் அழகர் கோயில் வடுவுக்கு எங்கே போறது??

தோசையே கிடைக்கிறதில்ல இப்போ அழகர் கோயிலிலே! போகட்டும். பழையதுக்கு மறுபடியும் வருவோம். ஒரு பெரிய கல்சட்டி நிறையப் பழைய சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு, கீழே சிறிய தாமரை இலை அல்லது, புரச இலை, அல்லது வாழைச் சருகு போன்றவற்றில் ஊறுகாயை வைத்து விட்டு, கையை நீட்டச் சொல்லி எல்லார் கையிலும் பாட்டி ஒவ்வொரு கவளமாய் வைப்பார். போட்டி வேறே போடுவோம். கட்டை விரலால் அந்த சாதத்தில் குழி செய்து கொள்ளணும், குழம்பு வேண்டும்கிறவங்க. அந்தக் குழிக்குள் குழம்பு ஊற்றுவாங்க. அப்பாடா! எவ்வளவு பெரிய கவளம்?? அந்தக் குழி நிறையக் குழம்பு! போததுக்கு மாவடு வேறே. இத்தனையும் சாப்பிடும்போதே முதல்நாள் எங்களுக்குள் வந்த சண்டைக்கு அங்கே தீர்ப்புச் சொல்லப் படும். அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பிரித்துக் கொடுக்கப் படும். மத்தியான சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்க செய்யவேண்டிய வேலைகள் பற்றிச் சொல்லப் படும். தவிர, அநேகக் கதைகளும் சொல்லப் படும். பாட்டியின் குடும்பக் கதை, தாத்தாவின் குடும்பக் கதை போன்ற உண்மைச் சம்பவங்கள் தவிர, ராமாயணம், மகாபாரதம் போன்ற நாங்க படிச்ச, கேட்ட விஷயங்களில் உள்ளவையும் பேசுவோம்.

சாப்பிடும்போது எங்களுக்குள் வரும் போட்டியைச் சமாளிக்கப் பாட்டிப் பல யுக்திகளைக் கையாளுவார். சீக்கிரம், சீக்கிரம் அவசரமாய்ச் சாப்பிட்டால் ஜீரணமும் ஆகாது இல்லையா, ஆகவே அதுக்குப் பாட்டி செய்யும் தந்திரம், கடைசிக் கட்டி மாம்பழம் தான். பிசைந்த சாதத்தில் முடியும்போது வழித்து அடியில் உள்ள எல்லாவற்றையும் சேர்த்தால் வெண்ணெய் போல் வரும் அந்தக் கடைசி உருண்டையைப் பாட்டிக் கட்டி மாம்பழம் என்று சொல்லி யார் நிதானமாய்ச் சாப்பிடுவார்களோ அவங்களுக்கே என அறிவிப்பார். ஒவ்வொருத்தரும் அதுக்கும் போட்டி போடுவோம். அந்தக் கடைசிக் கட்டி மாம்பழத்தையும் எப்படியோ பகிர்ந்தும் கொடுத்துவிடுவார். யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.

சந்தேக நிவர்த்திக்கும் பாட்டி, தாத்தாவை விட்டால் வேறு ஆள் எங்களுக்கு இல்லை. அந்தக் கால விவேக போதினியில் இருந்து, ராஜமையர் எழுதிய முதல் நாவலில் இருந்து, பாரதியின் இந்தியா, சுதேசமித்திரன், மணிக்கொடி, சுதந்திரச் சங்கு (அந்நாட்களில் இந்தப் பத்திரிகைக்கு ஆங்கிலேய அரசு தடை போட்டிருக்கின்றது. அதன் மதுரை விநியோகஸ்தராகத் தாத்தாவின் தம்பி சங்கு நாராயணன் என்ற பெயரில் இருந்து வந்திருக்கின்றார். சிறையும் சென்றிருக்கின்றார்.) என்று மட்டும் இல்லாமல், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஆர், கமலாம்பாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புத்தகங்கள் வரையில் ஒரு பெரிய பொக்கிஷமே இருந்தது. பாட்டி அத்தனையையும் எங்களோடு போட்டி போட்டுக் கொண்டு படிப்பார். பாரதியின் சந்திரிகையின் கதை என்றால் பாட்டிக்கு ரொம்பவே பிடிக்கும். தாத்தா வீட்டிலேயே பல நாட்கள் வளர்ந்து வந்தபோது அதைப் படிக்க முடியாத அளவுக்குச் சிறு வயதாய் இருந்தது. பின்னர் அப்பா தம்பி பிறந்த பின்னர் மதுரையிலேயே நிரந்தரமாய்க் குடிவந்ததும், கழுதை அக்ரஹாரம் வாசம் தொடங்கியதும் லீவுக்குத் தான் தாத்தா வீடு என்றானது.

என்றாலும் செல்லும் அந்த இரண்டு மாசத்தில் எவ்வளவு படிக்க முடியுமே அத்தனையும் படித்து விடுவேன். ஆனாலும் அந்தக் கட்டி மாம்பழம் என்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரியவங்க ஆனதும் மறைந்தே போனது மட்டும் நிஜம். இப்போ நினைச்சாலும் வராது. கட்டி மாம்பழம்னு சொன்னாலும் யாருக்கும் புரியாது. அதுதான் உண்மை!

இ.கொ.வுக்கு வலை உலகமே புதிர்களைப் போடுகின்றது, நீங்க என்ன செய்யறீங்கனு கேள்வி. நிலைமை அப்படி இருக்கு. உட்காரணும் ஒரு மணி நேரமாவது. மின்சாரமே இருக்கிறதில்லை. டாகுமெண்டில் சேமித்தேன். ஆனால் உட்கார்ந்து எழுத நேரம் இருந்தால் தானே?? யோசிக்கவேறே யோசிக்கணும். மொக்கையா இப்படி எழுதிட்டுப் போக?? போய்ப் பார்க்கிறேன் மறுபடியும்!

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!

இந்தப் படத்தைப் பற்றி எழுதிச் சேர்த்திருந்தேன், அது என்னமோ பப்ளிஷ் கொடுக்கும்போது வரலை, திரும்பவும் எழுதறேன். எங்க வீட்டிலே பிள்ளையார் சதுர்த்தி அன்று பூஜை செய்த பிள்ளையார் இவர். கோபி அன்று வந்தபோது எடுத்தார் இந்தப் படத்தை. அவர் எடுத்த படங்களில் இது எனக்கு ரொம்பப் பிடிச்சது. பக்கத்தில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் பரிசாய்க் கிடைத்தது. பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந்துதான் எனக்குத் தெரியும், மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை, இப்போ வைக்கிறாங்களா தெரியலை!
*************************************************************************************
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.
அந்த‌ குற‌ம‌க‌ளான‌ வ‌ள்ளியுட‌ன் இணைய‌ முடிய‌வில்லையே என்ற‌ ஏக்க‌த்தோடு, துய‌ர‌த்தோடு இருக்கும் சுப்ர‌ஹ்ம‌ண்ய‌னான‌வ‌ர் நுழைந்த‌ அந்த‌ தினை வ‌ன‌த்திலே
யானையாகி, வ‌ள்ளியை ப‌ய‌முறுத்தி அக்க‌ணமே முருக‌னோடு திரும‌ண‌ம் முடித்த‌ பெருமாளே!

வ‌ள்ளி, நில‌த்திற்கு ச‌ற்று கீழே வ‌ள்ளிக்கொடியில் இருந்த‌வ‌ள். அதாவ‌து நில‌த்திற்குரிய‌ ஆதார‌மான‌ மூலாதார‌த்திற்கு கீழே குல‌ம் என‌ப்ப‌டும் இட‌த்தில் கொடி போல் சுற்றிக் கொண்டிருக்க‌க்கூடிய‌ வ‌ள்ளி எனும் குண்ட‌லினி. அவ‌ள் த‌ன் தெய்வ‌த‌ன்மையை இழ‌ந்து குற‌வ‌ப் பெண்ணாய் வாழ்கிறாள். அதாவ‌து குண்ட‌லினி அன்னை இறைவ‌னிட‌ம் ந‌ம்மை சேர்க்கும் வேலையை செய்யாம‌ல் உல‌க‌ செய‌ல்க‌ளை நாம் செய்ய‌ உத‌விக் கொண்டிருக்கிறாள். இதையே குறப்பெண் என்னும் குறியீட்டால் சிவ‌யோக‌ம் சொல்கிற‌து.
ச‌ஹ‌ஸ்ரார‌த்தில் இருக்கும் இறைவ‌னோ அவ‌ளுட‌ன் கூட‌ ஏங்குகிறார். வ‌ள்ளி வ‌ள‌ருகிறாள். அதாவ‌து ஆறு ஆதார‌ங்க‌ளை தாண்டி புருவ‌ ம‌த்திக்கு வ‌ருகிறாள். ஒவ்வொரு ஆதார‌த்திலும் ஒவ்வொரு தாம‌ரையிலும் ஒவ்வொரு குழ‌ந்தையாக‌ இருக்கும் முருக‌ன், புருவ‌ம‌த்தியிலே ஆறு ஆதார‌ வ‌டிவ‌த்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஆறுமுக‌னாய் விள‌ங்குகிறான். அங்கே அவ‌ன் பேரெழிலுட‌ன் இருப்ப‌த‌னால், முருக‌ன் என்ற‌ பெய‌ர் பெறுகிறான்.புருவ‌ம‌த்தியிலே நினைப்பு நிற்க‌ பெற்ற‌வ‌ர்க‌ள் அந்த‌ பேரெழிலால் ஈர்க்க‌ப்ப‌ட்டு அத‌ன் பின் உல‌க‌ ஈர்ப்புக‌ளால் பாதிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அதுவ‌ரை ஒரு வ‌ரைக்குள் இருந்த‌ தெய்வீக‌ ச‌க்தி முழுமையாவ‌தால், அங்கே அது சுப்ர‌ஹ்ம‌ணிய‌ன் என்ற‌ பெய‌ர் பெற்ற‌து. ப்ர‌ஹ்ம‌ என்றால் அள‌விற்குட்ப‌டாத‌, எண்ண‌ முடியாத‌, அறிந்துக்கொள்ள‌ முடியாத‌ என்று பொருள் விரியும். சுப்ர‌ஹ்ம‌ண்ய‌ என்றால் இன்னும் அழுத்தி சொல்வ‌து அவ்வ‌ள‌வுதான். ந‌ல்ல‌வ‌ன் என்றாலே ந‌ல்ல‌வ‌ன் என்றுதான் பொருள். ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் என்ப‌து போல‌.
அந்த‌ வ‌ள்ளியாகிய‌ குண்ட‌லினி புருவ‌ம‌த்தி வ‌ரை வ‌ந்துவிட்டு அத‌ன் மேல் ஏனோ ந‌க‌ராம‌ல் நின்றுவிடுகிறாள். அவ‌ள் இன‌த்தை சேர்ந்த‌ வேட‌னாய் வ‌ந்து அவ‌ள் ம‌ய‌ங்க‌வில்லை. அவ‌னோடு சேர‌வில்லை. இத‌ன் பொருள். இறைவ‌ன் இத்த‌கைய‌வ‌ன் என்னும் எண்ண‌த்தோடு புருவம‌த்தி வ‌ரை வ‌ரும் ஆன்மா, க‌ண்ணெதிரே இறை இருந்தும் அறியாம‌ல் திகைத்து நிற்கும். மிட்டாய் க‌டையில் இனிப்பை தொட‌ முடியாம‌ல் க‌ண்ணாடியை த‌ட‌வும் குழ‌ந்தையை போல‌.

அடுத்து கிழ‌வ‌னாய் வ‌ருகிறார். அத‌ன் பொருள் மிக‌ ப‌ழைய‌வ‌ன் என்ப‌தாகும். ஆதிப‌ர‌ம்பொருள் என்று த‌ன்னை காட்டியும் குண்ட‌லினி மேலே ந‌க‌ராது. அந்த‌ இட‌த்தில் சாத‌னைக‌ள் செல்லாது. ப‌யிற்சிக‌ள் ஏதும் இல்லை. அவ்விட‌மே அருளுக்காய் காத்திருக்கும் இட‌ம். தேனும் தினைமாவும் முருக‌ன் ஏற்ப‌து என்ப‌து முன்பு சொன்ன‌தே தான். தினைமாவு என்ப‌து மூலாதார‌த்தை சுட்டும் பூமித்த‌த்துவ‌ம். தேன் என்ப‌து அமுத‌ம்.
புருவ‌ம‌த்தியில் வாயுவையும், அமுத‌த்தையும் இறைவ‌ன் வ‌லிந்து ஏற்கிறான்.
இறைவ‌னும், இறைவியும் கூட‌ முடியாம‌ல் த‌விக்கும் அவ்விட‌த்தில் திடீரென ஓர் அருட்ச‌த்தி குண்ட‌லினியை வெகுவேக‌மாக‌ த‌ள்ளி க‌ண்ணிமைக்கும் நேர‌த்திற்குள் ச‌ஹ‌ஸ்ரார‌த்தில் சேர்த்துவிடும். அந்த‌ ப‌ல‌த்தோடு கூடிய‌ ச‌க்திக்கு இப‌ம் என்று பெய‌ர். யானை என்று பொருள்.
அச்சிறுமுருக‌ன் என்ப‌த‌ற்கு என்ன‌ பொருள் என்றால்,ஆதிப‌ர‌ம்பொருளாக‌ காட்சிய‌ளித்த‌து எவ்வித‌ குண‌ தோஷ‌முமில்லாம‌ல் சிறுவ‌னை போல் இருப்ப‌தால்!
ஆக‌ மூலாதார‌த்தில் வ‌ழி விடுப‌வ‌ராக‌வும், ந‌டுவே சும‌ப்ப‌வ‌ராக‌வும், புருவ‌ம‌த்தியில் பர‌ஞ்சோதியாக‌வும், அத‌ன்பின்னும் இணைப்பிற்கு கார‌ண‌ராக‌வும் இருப்ப‌து பிள்ளையார் என்னும் அனைவ‌ருடைய‌ செல்ல‌ப்பிள்ளை என்ப‌து சிவ‌யோகிக‌ள் கூற்று!

அனைவ‌ர‌து திருவ‌டிக‌ளையும் ப‌ணிந்து, விடைப்பெற்றுக் கொள்கிறேன்

Monday, September 15, 2008

ராமாயணப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும்!

ராமாயணப் பதிவுகளுக்குத் தனி மெயிலிலும், பதிவுகளிலும் பின்னூட்டங்கள் தொடருகின்றன. ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு என்பது பற்றிய பதிவில் அம்பி "காவிரிநதி" பற்றிய என்னோட கருத்தை வன்மையாகக் கிண்டல் செய்திருக்கின்றார். ஆனால் நான் அந்த மாதிரியான ஒரு நிகழ்வு இருந்ததாய்ப் படிச்சுட்டே எழுதினேன். எதிலே என்று தேடியும் கிடைக்கவில்லை, என்பது வருந்தக் கூடியதாய் இருக்கு. அதே கருத்துக்கு முகவை மைந்தன் தானும் படிச்சிருப்பதாயும் குமுதம் தீராநதியிலோ என்று சந்தேகப் படுவதாயும் எழுதி உள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ரமேஷ் சதாசிவம் அக்னி பரிட்சையில் தன் சந்தேகம் பற்றிக் கேட்டிருக்கின்றார். அதைத் தனியாகத் தான் எழுதவேண்டும். கூடியவரையில் விளக்கம் கொடுக்க முயல்கின்றேன். ஏனெனில் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம். விஞ்ஞான பூர்வமாய், அறிவியல் பூர்வமாய் சிந்தித்தால் அது நடக்காத ஒன்று. உணர்வு பூர்வமாய் சிந்திக்க வேண்டும்.

குமரன் சூர்ப்பநகையின் பையன் கொல்லப் பட்டது பற்றிக் கேட்டிருக்கின்றார். அது பற்றிய ஒரு சிறிய குறிப்பாய்த் தான் நான் படித்த மொழிபெயர்ப்பில் காணக் கிடைத்தது. மூலம் சம்ஸ்கிருதத்தில் கொஞ்ச நாட்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. நான் எழுதியதோ வால்மீகி அடிப்படை. ஆகையால் மற்ற ராமாயணங்களில் இது பற்றித் தேடவில்லை, என்றாலும் அருணகிரிநாதரின் திருப்புகழில் இது பற்றிய குறிப்பு வருகின்றது. தேடிப் பார்த்துப் போடுகின்றேன். அப்புறம் ரத்னேஷ் eve teasing பற்றிக் குறிப்பிடுகின்றார், பிறன் மனை நோக்காத பேராண்மை என்பது பற்றிய என்னுடைய கட்டுரைக்கு. அவர் சொல்லும் முதல் eve teasing கூனியை ராமர் கேலி செய்தார் என்பதே. அது வால்மீகியில் இல்லை என்பதை என்னால் நூற்றுக்கு நூறு உறுதியாய்ச் சொல்ல முடியும். கம்பராமாயணத்தில் மட்டுமே அந்த நிகழ்ச்சி வருகின்றது. கம்பர் குறிப்பிடுகின்றார் இது பற்றி ஏற்கெனவே ராமனுக்கும், கூனிக்கும் முன் பகை இருந்து வந்ததாயும், அதனால் கூனி பழி வாங்கினாள் என்றும். அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி வால்மீகியில் இல்லை.

அடுத்து அவர் சொல்லுவது சூர்ப்பநகையை ராமரும், லட்சுமணனும் கேலி செய்வது. அது வால்மீகியே குறிப்பிடுகின்றார். ஒரு சாதாரண மனிதனாகவே கடைசி வரையில் தன்னைக் காட்டிக் கொண்ட ராமன் ஒரு வயது சென்ற பெண், அதிலும் திருமணம் ஆகி ஒரு பையனையும் பெற்று விதவை ஆனவள், தன்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டதும், அவளைச் சீண்டிப் பார்த்தது உண்மையே. அதை வால்மீகி மறைக்கவே இல்லை. ஆனால் இதை eve teasing என்ற கோணத்தில் எடுத்துக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அறிந்த வரை அதன் அர்த்தம் வேறே என்று தோன்றுகின்றது. மற்றவற்றுக்கும் கூடியவரையில் பதில் எழுதுகின்றேன். இவை தற்சமயம் மனதில் தோன்றியது உடனே எழுதி விட்டேன். இணையம் சரியாக வருவதில்லை, மின்சார வெட்டினால். மின்சாரம் இருக்கும்போது எழுதி வச்சுக்கவும் முடியலை, நேரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். அதுவரையில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விடுங்கள். தெரிந்த வரையில், முடிந்தவற்றுக்கு பதில் கொடுக்க முயலுகின்றேன். நன்றி. படித்தவர்கள் அனைவருக்கும், இனி படிப்பவர்களுக்கும்.

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!

முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
மூன்று தமிழுக்குரிய இலக்கணங்களை, முதலில் இருக்க கூடிய மலையில் முதலில் எழுதிய முதன்மையானவனே!

இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ். இவை முறையே அகார, உகார, மகாரங்களை குறிக்கும். ம் என்பது இசையாகவும், உ என்பது வாயினால் அசைக்கப்பட்டு எழும்புவதால் நாடகம் என்றும், அ என்பது இயல்பாக எழுவதால் இயல் என்றும் சொல்லப்படுகிறது. முற்படுகிரி என்பது உடலை கடந்து சிரசுக்கு மேலே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் மனோவெளியில் முதலில் எண்ணமாக எழுவதால், அது முற்படு கிரி என்பர். அண்ணாந்து பார்த்தால்தான் அது மலை. அப்படி மேல் நோக்கி பார்ப்பதில் மிக உயர்வில் இருப்பது த்வாதசாந்த பெருவெளி. அங்கு இந்த அகார, உகார, மகாரமாகிய பிரணவம் எழுகிறது. அதை அங்கு பதித்தவராக இவர் இருக்கிறார். அவர் பாதையின் தொடக்கத்திலும் முதல்வனாக இருக்கிறார்; அனைத்திற்கும் காரணமான முதல்வனாகவும் இருக்கிறார்.

முப்புரமெரிசெய்த அச்சிவனுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா

முப்புர‌த்தை எரித்த‌ அந்த‌ சிவ‌னுடைய‌ இர‌த‌த்தின் அச்சாணியை உடைத்தெறிந்த‌ அதிதீர‌னே!
முப்புர‌ம் என்ப‌து ந‌ம்மை பிணைத்திருக்கும் மூன்று முடிச்சுக‌ள். ஆண‌வ‌ம், க‌ன்ம‌ம், மாயை என்ப‌ன‌வையே இவை. இவை முறையே ருத்ர‌ க்ர‌ந்தி, விஷ்ணு க்ர‌ந்தி, பிர‌ம்ம‌ க்ர‌ந்தி என‌ப்ப‌டும். தொப்புளுக்கும் , ஜ‌ன‌ன‌ குறிக்கும் இடையே பின்புற‌த்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்ப‌து பிர‌ம்ம‌ க்ர‌ந்தி. இது அறும்போது மாயை அழிகிற‌து. மாயை என‌ப்ப‌டுவ‌து பாலின‌ ஈர்ப்பும், உட‌லை காத்து ஆன்மாவை போற்றாது விட கார‌ண‌மாகும் ப‌ண‌ ஆசையுமேமாம். அதே போல் இதய‌த்திற்கும் தொண்டை குழியிற்கும் இடையே பின்புற‌த்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்ப‌து விஷ்ணுக்ர‌ந்தி. அது அறும்போது ம‌ன‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து உண‌ர்வுக‌ளின் தொந்த‌ர‌விலிருந்தும் விடுப‌டுகிறோம். இத‌னால் கன்ம‌ம் எனும் வினை அரிப்பிலிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. புருவ‌ம‌த்திக்கும் உச்சிக்கும் இடையே இருப்ப‌து ருத்ர‌ க்ர‌ந்தி. அது அறும்போது ஆண‌வ‌மும் ஒழிகிற‌து. அதாவ‌து நான் ம‌னித‌ன், ஜீவ‌ன் எனும் க‌ட்டிலிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. ந‌ம்முடைய‌ சுய‌ நிலை தெரிகிற‌து.
இப்படிப்பட்ட முப்புர‌த்தை எரிக்கும் ப‌ர‌ம‌சிவ‌னுடைய‌ இர‌த‌மான‌து எதுவெனில் சுழுமுனையில் பிர‌வேசிக்கும் பிராண‌வாயுவே! அந்த‌ வாயுவே மேலே ஏறும் போது கனலோடு சேர்ந்து மூன்று முடிச்சுகளாகிய முப்புரத்தை எரிக்கிற‌து.மூலாதார‌த்தில் அவ‌ரது அருளை பெறாத‌வ‌ர்க்கு வாயு அபான‌னாக‌ குத‌த்தின் வ‌ழியே வெளியே வ‌ந்து விடுகிற‌து. இதுவே இர‌த‌த்தின் அச்சை பொடி செய்த‌ செய‌ல். விநாய‌க‌ர் வ‌ழி விடும் போது நினைத்தாலும் வாயு குத‌த்தின் வ‌ழியே வெளியே வ‌ராது சுழுமுனையின் உள்ளே பிர‌வேசிக்கும்.
அப்ப‌ணி செஞ்ச‌டை யாதி புராத‌ன‌ன்
முப்புர‌ஞ் செற்ற‌ன‌ன் நென்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்
முப்புர‌மாவ‌து மும்ம‌ல‌ காரிய‌ம்
அப்புர‌ மெய்த‌மை யார‌றிவாரே.... (திரும‌ந்திர‌ம்)

Sunday, September 14, 2008

புயல் அடித்து விட்டது! ஆனால் ஓய்வில்லை!

சென்ற வருஷம் இந்த நாட்களில் ஹூஸ்டனில் தான் இருந்தோம். அப்போவும் சரியா நாங்க கிளம்பப் போகும் தேதிக்கு ஒரு வாரம் முன்னால் செப்டம்பர் 22 தேதி போல் ஹரிகேன் வரும் என்ற எச்சரிக்கை தினமும் தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பொதுவாய் புயல், காற்று, மழை எல்லாமும் நமக்கு எல்லாருக்குமே பழக்கம்தான். அதுவும் கடற்கரை ஓரத்தில் இருப்பவர்களுக்கு மிகப் பழக்கம் ஆகியிருக்கும். என் நினைவில் உள்ளவரையில் சென்னையில் ஒரு முறை புயலடித்தபோது, மின்சார வண்டியில், வந்து கொண்டிருக்க நேரிட்டபோது, ரெயிலை நிறுத்திவிட்டனர். ஒரு இரவு முழுதும் ரெயிலிலேயே இருக்கும்படி நேரிட்டது. அது தொலை தூரப் பயணிகள் வண்டியும் அல்ல. தினசரி யூனிட் வண்டி. காற்றின் வேகத்தில் ரெயில் பெட்டியே ஆடியது நன்றாய்த் தெரிந்தது. கீழைக் கடல்களிலேயே வேகம் அதிகமாய் உள்ள புயலும், அதைத் தொடர்ந்த பெருமழையும் வழக்கம்தான் என்றாலும் யு.எஸ்ஸின் கடலோர தென் மாநில நகரம் ஆன ஹூஸ்டனில் புயல் அடிக்கப் போகின்றது என்ற செய்தியில் இரண்டுவித அச்சம் ஏற்பட்டது.

அங்கே புயல் என்றால் நம்ம ஊரில் வர மாதிரி இல்லை. ஊரே காலி பண்ணும்படி இருக்கும். காற்றின் வேகமும் அதிகம். மின்சாரமும் கிடையாது. முன்னராகவே மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். குறைந்த பட்சமாய் 4,5 நாளைக்காவது சமைத்து வைத்துக் கொள்ளவேண்டும், அங்கேயே இருக்கும் பட்சத்தில். காபி, டீ, பால் போன்ற சூடான பானங்களோ, உணவைச் சுட வைத்துச் சாப்பிடுவதோ முடியாது. மின்சாரம் இல்லை என்றால் அடுப்பே இல்லையே?? யு.எஸ்ஸில் மிகச் சில இடங்களில் தான் எரிவாயு அடுப்புக்கள் உள்ளன. அட்லாண்டா அம்மாதிரியான ஒரு நகரம். மற்ற இடங்களிலும் எங்கேயே தேடிப் பார்த்தால் ஒரு சில குடியிருப்புகளில் கிடைக்கலாம். மற்றபடி எல்லாவற்றுக்கும் மின்சாரம் தான். தண்ணீரும் கிடைக்காது. ஊரெல்லாம் தண்ணீரில் மிதக்கும்போது குடிக்க நல்ல தண்ணீர் தேவையானதைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பு மூட்ட முடியாது. மண்ணெண்ணை கிடைக்காது. கிடைத்தாலும் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மூட்ட முடியாது. காற்றின் வேகத்தில் வீடுகள் தாக்குப் பிடிப்பதே அதிசயம்.

ஒரு சில இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் பிய்த்துக் கொண்டு வருவதுண்டு. ஆனால் சென்ற வருஷம் நாங்கள் இருந்தபோது இந்த ஹரிகேன் எங்களை ஏமாற்றி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் வந்திருந்தால் ஊருக்குத் திரும்பி இருக்க முடியுமா சந்தேகமே. விமானம் புறப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சரிதான் என்றாலும், இந்த வருஷம் செப்டம்பரில் ஐக் ஹரிகேன் வந்தே விட்டது.
ஹூஸ்டனில் எங்கே பார்த்தாலும் தண்ணீர். பக்கத்தில் உள்ள கால்வெஸ்டன் அநேகமாய்க் காலி செய்து விட்டார்கள். சென்ற வருஷம் தொழிலாளர் தினத்துக்கு முதல் நாள் தான் அங்கே போய் பீச், கடல் என்று எல்லாவற்றையும் சிறியதொரு கப்பலில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தோம். அந்த ஊர் இப்போது பார்க்கும் கோலத்தில் இல்லை. ஹூஸ்டனில் உள்ள எங்கள் பையருக்கு நேற்றுத் தொலைபேசி அழைப்புக் கொடுத்த போது அழைப்பே போகவில்லை. தொலைபேசிக்கு என இருந்த டவர் விழுந்துவிட்டதாம். தண்ணீர் இவ்வளவு உயரத்திலும், வேகத்திலும் வந்திருக்கின்றது. இப்படி வந்தால் டவர் விழாமல் என்ன செய்ய முடியும்? :((((ஆகவே செல்லில் சார்ஜ் இருந்தால் பேச முடியுமே என நினைத்துத் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தோம். அவர் காரில் தண்ணீர் புகுந்து விட்டது என்று அதை சுத்தம் செய்து வேறு இடத்தில் கொண்டுவிடப் போயிருந்தார். செல்லைக் கண்டுபிடித்தவர் புண்ணியவான்.

செல் பழக்கமே இல்லாமல் இருந்த எங்களுக்கு இப்போது அவசரத்திற்கு அது தான் கை கொடுக்கின்றது என்று சொல்லலாம். செல்லில் தண்ணீர் புகுந்துவிடும் என்று வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்ததால், செய்தியைப் பதிவு செய்து வைத்தோம். பின்னர் இரவு வெகு நேரம் கழித்துத் தொடர்பு கொண்டு பேசினார். அவங்க அபார்ட்மெண்டில் தண்ணீர் வந்தது தவிர வேறு தொந்தரவு இல்லை என்றாலும் பக்கத்து ப்ளாகில் உள்ள கட்டிடத்தில் ஜன்னல்கள் விழுந்து, அதுவும் வீட்டுக்குள் விழுந்திருக்கும் போலிருக்கு. ஒரே அமர்க்களமாம். இவங்க நல்லவேளையாக ஜன்னல் இல்லாத இடமாகப் பார்த்துப் படுக்கிறாங்களாம். அப்புறம் தான் நிம்மதியாய் இருந்தது. மெம்பிஸில் இருக்கும் பெண் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் போய்ச் சேரவே இந்த நேரம் 2 நாள் பிடிக்கும். அவ்வளவு ட்ராபிக் ஜாம் ஆகின்றதாம். மேலும் அலுவலகங்கள் எல்லாம் வியாழனில் இருந்து தான் விடுமுறையும் அறிவித்திருக்கின்றனர். விடுமுறை இல்லாமல் போக முடியாதே இந்தியா இல்லையே அது??? என்றாலும் மெம்பிஸில் உள்ள எங்கள் பெண் தம்பியைத் தொடர்பு கொண்டு அவ்வப்போது எங்களுக்கு நேர்முக வர்ணனை செய்து வருவதால் கொஞ்சம் அச்சமின்றி இருக்க முடிகின்றது. இயற்கைச் சீற்றம் ஒரே சீற்றமாய் இருக்கிறதே, எதனால் இப்படி?? இதைத் தடுக்கவே முடியவில்லை அல்லவா???

இப்போ ஹூஸ்டனில் curfew அறிவிப்புச் செய்திருக்கின்றனர். ஒன்றரை மில்லியன் மக்களுக்கு மேல் மாட்டிக் கொண்டு தவிப்பதாயும் சொல்கின்றனர். எங்க பையரும் அதில் ஒருவர். :(((((((( இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அவர்கள் துன்பம் தீரப் பிரார்த்திப்போம்.

Saturday, September 13, 2008

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!

மத்தள வயிறனை
சிவ‌யோக‌த்தில் வாயுவானது ம‌ல‌த்துவார‌த்திற்கு ச‌ற்று உள்ளே சேர்ந்து பின் சுழுமுனையில் பிர‌வேசிக்கும். அப்ப‌டி வாயு குவிவ‌தை அவ‌ர‌து பெருத்த‌ வ‌யிறாக‌ சொல்கிறார்க‌ள். பின் அவ்வாயு குண்ட‌லினியுட‌ன் சேர்ந்து பிர‌வேசிக்கும் போது ம‌த்த‌ள‌ம் போன்ற‌ ச‌ப்த‌ம் செவியில் கேட்கும். தூல‌த்திலும் முதுகெலும்பில் சிறித‌ள‌வில் கேட்கும்

உத்த‌மி புத‌ல்வ‌னை
அப்ப‌டி அங்கு சேர்ந்து, அங்குள்ள‌ குண்ட‌லினி என‌ப்ப‌டும் விடுவிக்கும் ச‌க்தி எழுப்ப‌ப்ப‌ட்ட‌வுட‌ன், அக்க‌ண‌மே அங்கு விநாய‌க‌ர் தென்ப‌டுகிறார். என‌வே அவ‌ர் புத‌ல்வ‌ராகிறார். வாலை எனும் குண்ட‌லினி அத‌ன் பின் க‌ண‌வ‌னை த‌விர‌வேறு யாரையும் விரும்பாத‌ த‌ன்மையை அடைகிற‌து. சாதகனுக்கு முழுக்க முழுக்க நன்மையையே செய்ய திருவுளம் கொள்கிறது. அத‌னால் அவ‌ளுக்கு அங்கே உத்த‌மி என்று பெய‌ர்.

ம‌ட்ட‌விழ் ம‌ல‌ர் கொடு ப‌ணிவேனே
தேன் வ‌ழியும் ம‌ல‌ரை கொண்டு ப‌ணிந்திடுவேன்.

ம‌ல‌ர் என்ப‌து வாச‌னையோடு கூடிய‌து. மூல‌தார‌த்திலிருந்து கிள‌ம்பும் வாயுவை ம‌ல‌ராக‌ கூறுகின்ற‌ன‌ர். மூலாதார‌ம் வாச‌னை தொழில் ந‌டைப்பெற‌ கார‌ண‌மான‌ இட‌ம். அத‌ன் வ‌ழியாக‌ வ‌ந்த‌ வாயு ம‌ல‌ராக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. வாயு இல்லாவிடில் ம‌ல‌ரின் வாசனையை அறிவ‌து எப்ப‌டி?
அப்ப‌டி புருவ‌ ம‌த்தி வரும்போது வ‌ழியும் அமுத‌த்தை தேனாக‌ சொல்கின்ற‌ன‌ர். அந்த‌ அமுத‌ம் தேனின் சுவையை போல‌ இருப்ப‌தாலும் அந்த‌ குறியீடு பொருந்துகிற‌து.
வாயுவையும், அத‌னால் ஏற்ப‌டும் ப‌ல‌னான‌ அமுத‌தாரையும் அங்கே வீற்றிருக்கும் இறைவனுக்கே அர்ப‌ணிக்கிறார். அத‌னால் என்ன‌ ஆகிற‌து என்றால், ஆண‌வ‌ம் மிக‌வும் குறைந்து இய‌ல்பான‌ ப‌ணிவு ஏற்ப‌டுகிற‌து.
புருவ‌ம‌த்தியில் ஆண‌வ‌ ம‌ல‌ம் அழிய‌ ஆர‌ம்பிக்கிற‌து. இந்த‌ இட‌த்தில் ஆண‌வ‌த்திற்கு கார‌ண‌மான‌ ருத்ர‌ க்ர‌ந்தி என‌ப்ப‌டும் ஆண‌வ‌ முடிச்சு ப‌ல‌கீன‌ப்ப‌ட்டு ஒழிய‌ ஆர‌ம்பிக்கிற‌து. இங்கே பெறும் ப‌ல‌ன்க‌ளை நாம் அனுப‌விக்காம‌ல் அவ‌ருக்கே அர்ப்ப‌ணிக்கும் த‌ன்மையால் அது கைகூடுகிற‌து.

Friday, September 12, 2008

வந்தல்லோ!! ஓணம் வந்தல்லோ!!!!

மஹாபலிச் சக்கரவர்த்தி வேள்விகள் செய்ய ஆரம்பித்தான். அவன் வேள்வியில் வரும் அத்தனை பேருக்கும் தான, தருமங்கள் கொடுத்து வந்தான். அப்போது அவன் ஏற்கெனவே தேவர்களால் வெல்ல முடியாமல் இருக்கின்றான். தேவலோகத்தையும் ஆண்டு வருகின்றான். இவன் மேலே மேலே வேள்விகள் செய்து வந்தால் அவன் சக்தி இன்னும் அதிகம் ஆகிவிடுமே என நினைத்த தேவர்கள், இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே தாம் காச்யபரின் மனைவி வயிற்றில் பிறந்திருப்பதாய்த் தெரிவித்திருந்தார். அந்தப் பிள்ளைக்குத் தக்க சமயம் வந்ததும் உபநயனம் செய்விக்கின்றார் காச்யபர். பிரம்மச்சாரியான அந்தப் பிள்ளை பிட்சை எடுக்கப் போகும் சமயம் மஹாபலியின் வேள்வியில் செய்யப் படும் தானங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வருகின்றான் அந்தப் பிள்ளை.

கையிலே தாழங்குடை, காலிலே பாதரட்சைகள். திருவோட்டை ஏந்திக் கொண்டு, உலகுக்கே அன்னம் அளிப்பவன், உலகுக்கே பிட்சை போடுபவன், மஹாபலியிடம் வந்து பிச்சை கேட்கின்றான். "பவதி பிட்சாம் தேஹி!" என! அடடா, இப்போ தானே தான, தருமங்கள் முடிந்தது! இந்தப் பிள்ளை இப்போ வந்து கேட்கின்றதே! பதறினான் மஹாபலி, சின்னஞ்சிறு பிள்ளை ஏதேனும் கொடுத்தே ஆகவேண்டுமே?? "அப்பா, நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? தானங்கள் அனைத்தும் கொடுத்து முடிந்துவிட்டதே?" என்று மஹாபலி கேட்க, மாயக் கள்வன், சிரித்துக் கொண்டே, "மஹாபலிச் சக்கரவர்த்தியே, நான் காச்யபரின் மகன். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். என் காலால் அளந்த மூவடி மண்ணே போதும். அதைக் கொடுங்கள்." என்று சொல்ல, மஹாபலியும் அவ்வண்ணமே தந்தேன் எனத் தன் கையில் உள்ள கமண்டலத்தில் நீர் வார்த்துத் தானம் செய்ய எத்தனிக்கின்றான்.

அசுர குருவான சுக்ராசாரியார் பார்க்கின்றார். அவருக்குப் புரிகின்றது உலகாள்பவனே, வாமன வடிவத்தில் வந்திருக்கின்றான், என்றும், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்றும். உடனேயே குலகுருவான அவர் மஹாபலியிடம் சொல்கின்றார், தானத்துக்கு ஒத்துக் கொள்ளாதே! இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று சொல்கின்றார். மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ?? தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்யம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த வாமனன், வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது. சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால்??? இது என்ன??? இவன் வாமனனா??? திரி விக்கிரமனா??? வளர்ந்து கொண்டே போகின்றானே???

ஓங்கி உலகளக்க ஆரம்பிக்கின்றான் திரி விக்கிரமன். ஆயிற்று ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்தாயிற்று. மூன்றடிக்கு இன்னொரு அடி குறையுதே?? மஹாபலி, இது என்ன?? மூன்றாவது அடியை எங்கே வைப்பேன்? என்று கேட்க, மஹாபலியோ, "தந்தேன் ஸ்வாமி!" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்துக்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன். அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளுகின்றான். மேலும் பரந்தாமனின் திரு நட்சத்திரமும் திருவோணமே ஆகும். "திரு" என்ற அடைமொழியோடு கூடிய இரு நட்சத்திரங்களில் ஒன்று ஆடவல்லானின் திருநட்சத்திரம் ஆன "திரு" ஆதிரை என்றால், பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திரு நட்சத்திரம் "திரு" ஓணம் ஆகும். அந்த நாள் இந்த நாள், இனிய நாள்! ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்.

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!


அடி பேணி:
அத்த‌கு இறைவ‌னின் திருவ‌டியை விரும்பி
திருவ‌டியை ஏன் விரும்ப‌ வேண்டும்? உட‌லில் பாத‌ம் த‌ன்னிச்சையாக‌ செய‌ல்ப‌டாத ப‌குதி. கை பேசும்போது தானாக‌ சைகை புரியும்; தலை ஆடும்; ஆனால் பாத‌ங்க‌ள் பெரும்பாலும் தன்னிச்சையாக‌ செயல்ப‌டாது. பேர‌றிவான‌ பர‌ம்பொருளின் திருவ‌டி போல‌ த‌ன் விருப்பு ஏதுமின்றி அத‌ன் விருப்ப‌ப்ப‌டி ந‌ட‌ப்ப‌தையே திருவ‌டி சேர்த‌ல் என்ப‌ர். அவ‌ரே அடியார். ம‌ன‌தை ஒடுக்கி, மூலாதார‌த்தில் வீற்றிருக்கும் ப‌ர‌ம்பொருளின் திருவிருப்ப‌த்திற்கு த‌ன்னை த‌ர‌ விரும்புப‌வ‌னே சாத‌க‌ன்.

க‌ற்றிடும் அடிய‌வ‌ர் புத்தியில் உறைப‌வ‌

பேர‌றிவோடு இயைந்து அத‌ன் வ‌ழிக்காட்டுத‌லில் ந‌ட‌ப்ப‌வ‌ரே க‌ற்றிடும் அடிய‌வ‌ர். மூலாதார‌த்திலுள்ள‌ க‌ரிமுக‌னின் திருவ‌டியை விரும்பி அதை பெற்று அதில் இணைந்த‌ அடியார்க‌ள் அவ‌ரிட‌மிருந்து இடைய‌றாத‌ வ‌ழிக்காட்டுத‌லைப் பெறுகின்ற‌ன‌ர். அவ்வாறு வ‌ழிக்காட்டுத‌ல் கிடைக்க‌ப்ப‌டும் இட‌ம் ஆஜ்ஞை; புருவ‌ ம‌த்தி. அந்த‌ இட‌மே புத்தியின் இட‌ம். ஆஜ்ஞை என்றால் க‌ட்ட‌ளை என்று பொருள். அங்கிருந்து பிழையில்லாத‌ வ‌ழிக்காட்டுத‌ல் அடியாருக்கு கிடைக்கிற‌து. ஆக‌வே புத்தியில் உறைப‌வ‌னாக‌ அவ‌ர் சொல்ல‌ப்ப‌டுகிறார். அங்கு ஐந்து க‌ர‌த்தோடு கூடிய‌ விண்மீனை போன்று ஒளியோடு இருப்ப‌தால் அவ‌ருக்கு ஐந்து க‌ர‌த்த‌ன் என்று சிவ‌யோகிக‌ள் சொல்கின்ற‌ன‌ர். அந்த‌ ஐந்து க‌ர‌த்தோடு கூடிய‌ விண்மீனில் ஒரு க‌ர‌ம் ச‌ற்று நீண்டு வால் ந‌ட்ச‌த்திர‌ம் போல் இருப்ப‌தால் தூம‌கேது என்றும் சொல்வ‌துண்டு.

க‌ற்ப‌க‌ம் என‌ வினை க‌டிதேகும்
அந்த‌ நிலையில் வேண்டிய‌ எல்லாம் கிடைக்கும்; இத‌னையே
எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்ப‌ல‌த்தே
வ‌ல்லான் த‌னையே ஏற்று
என்று வ‌ள்ள‌லார் சொல்வார்.
அந்த‌ இட‌ம் க‌ற்ப‌க‌ ம‌ர‌மாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து; சிந்தாம‌ணி என்றும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ இட‌த்தில் அனைத்து வினைப்ப‌ல‌ன்க‌ளும் ஒழிந்து போகின்ற‌ன‌. அந்த‌ புருவ‌ம‌த்தி இட‌த்திற்கு காசி என்றும் பெய‌ர். என‌வே தான் காசியில் முங்கினால் பாவ‌ம் தீரும் என்று கூற‌ப்ப‌டுவ‌தாக‌ சிவ‌யோகிக‌ள் கூறுவ‌ர். வார‌ணா என‌ப்ப‌டும் நாடியும், அஸி எனும் ந‌டும் நாடியும் அங்கே கூடுவ‌தால் அது வார‌ணாஸீ என‌ப்ப‌டுகிற‌து. அங்கே நிற்கும் நிலையை பெற்ற‌வ‌ன் அங்கே நிற்கையில் உட‌லை விடும்போது மீண்டும் வ‌ருவ‌தில்லை.

ம‌த்த‌மும் ம‌திய‌மும் வைத்திடும் அர‌ன் ம‌க‌ன்
ம‌த்த‌ம் என்றால் ஊம‌த்த‌ம்பூ; ம‌தி என்றால் நில‌வு. அர‌ன் சூடும் நில‌வோ பிறை நில‌வு.
ஆஞ்ஞையில் புருவ‌த்திற்கு ச‌ற்று மேலே பிறை நில‌வு போல‌ ஒளியும், அத‌ற்கு மேலே க‌ருநீல‌ நிற‌ ஒளியும் சாத‌க‌ர் காண்பார். அக்க‌ருநீல‌ஒளி ந‌டுவே விண்மீனை ஒத்த‌ வ‌டிவ‌த்தோடு, ஒளியோடு இறைவ‌ன் காண‌ப்ப‌டுவ‌தால் ம‌த்த‌மும் ம‌திய‌மும் வைத்த‌ அர‌ன்ம‌க‌னாய் அவ‌ர் குறியீட்டால் உண‌ர்த்த‌ப்ப‌டுவ‌தாக் சிவ‌யோக‌ம் சொல்கிற‌து.
ஹ‌ என்ப‌த‌ன் பொருள் ஆகாய‌ம்; ர‌ என்றால் அக்னி. ஹ‌ர‌ என்றால் ஆகாய‌மும் வாயுவும் சேர்ந்த‌து. வெளியின் நடுவே தோன்றும் ஓளியால் அறிய‌ப்ப‌டுப‌வ‌ரால் ஹ‌ர‌ன் ம‌க‌ன் என்னும் குறியீடு இங்கே!

ம‌ற்பொரு திர‌ள் புய‌
ம‌ல் யுத்த‌ம் செய்ப‌வ‌ருக்கு இருக்க‌க்கூடிய‌ திர‌ண்ட‌ தோள்.
புருவ‌ ம‌த்தியிற்கும் உள்ளே இருக்க‌க்கூடிய‌ அந்த‌ பேருண‌ர்வு பொருள்தான், இடம்தான் மொத்த‌ பிர‌ப‌ஞ்ச‌மும் தோன்றி, பிர‌திப‌லிக்க‌க்கூடிய‌ இட‌ம். இருக்கும் அனைத்தையும் தாங்க‌ கூடிய‌ ப‌ர‌ம்பொருள் அங்கே இருக்கிறார். ஆனால் அவ‌ரிட‌ம் இதனால் சிறித‌ள‌வு மாற்ற‌மும் இல்லை. அத‌னால் அனைத்தையும் தாங்கும் தோள் என்னும் குறியீடு சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

ம‌த‌யானை
யானையிற்கு மூன்று வித‌ ம‌த‌நீர் ஒழுகும் என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து.
தும்பிக்கையிலிருந்து ஒழுகுவ‌து; க‌ன்ன‌த்தின் இரு ப‌க்க‌ங்க‌ளிலும் ஒழுகுவ‌து; ஆண்குறியில் ஒழுகுவ‌து.
புருவ‌ம‌த்தியில் அதேபோல் இடை, பிங்க‌லை, சுழுமுனை என்னும் மூன்றிலிருந்தும் அங்கு பாய்கிற‌து. இடையில் பாய்வ‌து சோம‌பான‌ம் என்றும், பிங்க‌லையில் பாய்வ‌து சுராபான‌ம் என்றும், சுழுமுனையில் பாய்வ‌து அம்ருத‌ம் என்றும் சொல்ல‌ப்ப‌டும். இத‌னால் அள‌விலா ஆன‌ந்த‌த்தில் என்றும் இறைத்த‌ன்மை அங்கு இருப்ப‌தால் அதை ம‌த‌மாக குறியீட்டில் சொல்கின்ற‌ன‌ர். அங்கு ந‌ன்மை தீமை க‌ட்டிலிருந்து ஒருவ‌ன் விடுபடுவ‌தால் அதை ம‌த‌ம் என்று கூறுகின்ற‌ன‌ர்.

Thursday, September 11, 2008

பாரதியார் நினைவு நாள்


இந்த வருஷம் பாரதியார் நினைவுநாளுக்குத் தயார் ஆகும் முன்னரே, அவரின் பேத்தி திருமதி விஜயபாரதியின் கணவர் இறந்த செய்தி கிடைத்தது. இது இருவருக்கும் சேர்த்து அஞ்சலி. திருமதி விஜயபாரதியை நேரடியாகத் தெரியாது. கேள்விஞானம் மட்டுமே, எனினும் ஒருவரின் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல அதுவே போதும் அல்லவா? கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் போதாது. காலம் தான் மனப்புண்ணை ஆற்றி, அவர் தன் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கும் ஆற்றலை அவருக்கு இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.
*************************************************************************************
பாரதியாரின் சிட்டுக் குருவி கட்டுரையில் இருந்து சிலவரிகள்:

"இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு", "விடு", "விடு", என்று கத்துகிறது. இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.

"விடு விடு விடு: தொழிலை விடாதே, உண்மையை விடாதே, கூட்டை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே,
உள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பங்களை விடு.

சொல்லுவதற்கு இந்த வழி எளியதாய் இருக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னர் இதை வழக்கப் படுத்துதல் அருமையிலும் அருமை!"


"தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்ச்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ??"

இந்தப் பாட்டுத் தான் என்னை எப்போது உயிர்ப்போடு வைத்திருக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை. பலருக்கும் பிடித்த பாட்டும் கூட. ஆனாலும் மனம் பரிதவிப்பில் தவிக்கும்போது இந்தப் பாட்டே நினைவில் வரும். பாரதி இதை எழுதிய சூழ்நிலையும் அப்படித் தானோ என்று தோன்றும். காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!

முந்திய‌ ம‌ட‌லில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து ரிக் வேதம் என்று குறியீடாக சொல்லிக் கொள்வர்.

யோக‌த்தில் யோக‌ம்:

யோக‌த்தில் நுண்ணுட‌லிலேயே (சூக்ஷூம‌ம்) செய்ய‌ப்ப‌டும் மூன்றாவ‌து நிலை ப‌யிற்சி. சுழுமுனையில் உள்ளிருக்கும் சித்ரா, வ‌ஜ்ரா என‌ப்ப்டும் நாடிக‌ளை ப‌யிற்சி செய்ப‌வ‌ன் நேர‌டியாக‌ அறிகிறான். அவ‌ற்றையும் தாண்டி முக்கிய‌மாக‌ இருக்கும் பிர‌ம்ம‌ நாடியை காண்கிறான். தான் உட‌ல் அல்ல‌. பிராணனால் ஆன‌வ‌ன் என்று ஆணித்த‌ர‌மாக‌ உண‌ர்கிறான். எல்லாம் அடிப்ப‌டையில் ஒளியினால் ஆன‌வை என்று தெளிவாக‌ அறிந்துக்கொள்கிறான். அப்ப‌டி ஒளி மிக்க‌வ‌னாக‌ த‌ன்னை இவ‌ன் உண‌ர்வ‌தால் இவ‌னுக்கு தைஜ‌ஸ‌ன் என்று பெய‌ர். அதே போல‌ முத‌ன் நிலை ப‌யிற்சியாள‌ருக்கு வைசுவாந‌ர‌ன் என்று பெய‌ர். இர‌ண்டாம் நிலை ப‌யிற்சியாள‌ர் த‌ன்னை வைசுவாந‌ர‌ன் என்றும் உண‌ர‌ மாட்டார்; தைஜ‌ஸ‌ன் என்றும் அறிந்திருக்க‌ மாட்டார். Transition period.
இங்கு குரு சீட‌னுக்கு பிர‌ம்ம‌நாடியில் பிர‌வேசிக்கும் வ‌ல்ல‌மையையும், அதில் செய்ய‌ வேண்டிய‌வற்றை செய்யும் வ‌ல்ல‌மையையும் அளிப்ப‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. சீட‌னிட‌ம் ஞான‌க்க‌ன‌ல் எழும்புகிற‌து. முப்புர‌த்தையும் தீ சுட‌ தொட‌ங்குகிற‌து. இப்ப‌டி அன‌லெழும்பி ஒடுக்க‌ வேண்டிய‌து ஒடுக்க‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ ப‌யிற்சியின் ப‌ல‌ன் பொரியாக‌ குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ ப‌ல‌ன் இறைவ‌னுக்கு அளிக்க‌ப்ப‌டுகிற‌து. இத‌னால் கிட்ட‌த்த‌ட்ட‌ அச்ச‌ம் நீங்கிவிடுகிற‌து. பாவ‌ங்க‌ளின் ப‌ல‌ன் அழிந்துப்போகிற‌து. என‌வே இதைதான் நெற்பொரி உண்ப‌தால் பாவ‌ம் அழிகிற‌து என்று குறியீடாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌ சிவ‌யோகிக‌ள் கூறுகின்ற‌ன‌ர்.
இந்த‌ பயிற்சியை அத‌ர்வ‌ண‌ வேத‌ம் என்று ச‌ங்கேத‌மாக‌ சொல்லிக் கொள்வ‌ர்.


யோக‌த்தில் ஞான‌ம்:
பிர‌ம்ம‌நாடியில் பிர‌வேசித்து, ஆதார‌ங்க‌ளை தாண்டி, த‌ன்னுடைய‌ உண்மை நிலையில் சாத‌க‌ன் நிற்கிறான். இத‌ன் பிற‌கு இவ‌னை சாத‌க‌ன் என்று சொல்ல‌ முடியாது. குரு என்றே சொல்ல‌ வேண்டும். இறைவ‌ன் நினைப்ப‌தை இவ‌ன் செய்வ‌தால், இறைவ‌னின் திருவ‌டியில் ஐக்கிய‌மான‌வ‌ன் என்று கூற‌ப்ப‌டுகிறான். இந்நிலையில் இவ‌ன் பெறும் பேறை இறைவ‌னுக்கு அளிப்ப‌தை அப்ப‌மாக‌ கூறுகின்ற‌ன‌ர். இதை மோத‌க‌ம் எனும் கொழுக்க‌ட்டையாக‌வும் கூறுவ‌ர். ஜீவ‌ன் ந‌ன்றாக‌ ப‌க்குவ‌ப்ப‌ட்டு ச‌மைத்து அளிக்கும் ப‌ண்ட‌மாக‌ அது இருப்ப‌தால் இறைவ‌ன் அதை மிக‌வும் விருப்ப‌ப்ப‌ட்டு ஏற்றுக்கொள்கிறார். மோத‌க‌ப்ப்ரிய‌ன் என்று அவ‌ரை அழைப்ப‌தும் அத‌னால்தான். வெளியே வெள்ளை மாவால் இருந்தாலும், உள்ளே இனிப்பான‌ பூர‌ண‌ம் இருப்ப‌தை போல‌, பார்ப்ப‌த‌ற்கு சாதார‌ண‌ ம‌னித‌ன் போல‌ காண‌ப்ப‌டும் அவ‌ன் உள்ளே பூர‌ண‌த்துட‌ன் விள‌ங்குகிறான். என‌வே அவ‌னே இறைவ‌னால் முழுமையாக‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டுகிறான். இங்கு சாத‌க‌ன் த‌ன்னை அனைத்தையும் க‌ட‌ந்த‌வ‌னாக‌ அறிகிறான். துரிய‌ன் என்று கூற‌ப்ப‌டுகிறான். இந்த‌ நிலை பயிற்சிக்கு கிருஷ்ண‌ ய‌ஜுர்வேத‌த்தை குறியீடாக‌ சொல்லுவ‌ர்.

க‌ப்பிய‌ க‌ரிமுக‌ன்

இப்ப‌டி நான்கு வித‌மாக‌ அன்ப‌னால் அளிக்க‌ப்ப‌டுவ‌தை முழுமையாக் இறைவ‌ன் ஏற்ப‌தால் சாத‌க‌ன் இறைவ‌னோடு இறைவ‌னாக‌ க‌ல‌க்கிறான்.
த‌ன‌க்கு ஒன்று தேவையில்லாதாதாக் இருப்பினும் த‌ன் அடிய‌வ‌ருக்காக‌ ப‌ல‌னை பெற்றுக்கொள்வ‌தில் பெருவிருப்ப‌த்தை ஏற்ப‌டுத்திக் கொள்வ‌தால், உண‌வை விரும்ப‌க்கூடிய‌ வேழ‌மாக‌ அவ‌ர் சொல்ல‌ப்ப‌டுகிறார்.
எத‌னையும் வேண்டாத‌ ப‌ர‌ம்பொருள் ந‌ம்பொருட்டு ப‌ல‌னை நாடும் த‌ன்மையை பெறுவ‌தால் க‌ரியின் த‌லையை பெற்ற‌தாக‌ சொல்கின்ற‌ன‌ர். முழுமுத‌ற் பொருள் அத‌னால் மிக‌வும் கீழே மூலாதார‌த்தில் வ‌ந்து குடிக்கொண்ட‌து. மூலாதார‌த்தில் இறைவ‌னின் நிலையை யானையாக‌ க‌ண்ட‌ சிவ‌யோகிக‌ள் க‌ரிமுக‌ன் என்ற‌ன‌ர். யானை மாத்திர‌மே மூக்கால் நில‌த்தை சுவாசிக்க‌ கூடிய‌து. மூலாதார‌ம் வாச‌னைக்குரிய‌ செய‌லுக்கு கார‌ண‌மான‌ நாடிக‌ளும், வினையும் கொண்ட‌ இட‌ம். மூலாதார‌ம் பிருத்வி என‌ப்படும் பூமியின் த‌ன்மையை கொண்ட‌து. என‌வே மூக்கும், பூமியும் இணைவ‌தால் அங்கு விநாய‌க‌ர் என‌ப்ப‌டும் க‌ரிமுக‌ன் தெய்வ‌மாக‌ சிவ‌யோகிக‌ளால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

Wednesday, September 10, 2008

கொஞ்சம் நாட்கள், ! பொறுத்துக்கணும் நான்!!!

கொஞ்ச நாட்களாய் எதுவும் எழுத முடியவில்லை. கட்டாய ஓய்வாகிவிட்டது. அதனாலும், வேறு காரணங்களாலும், காழியூராரின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதாலும் நான் பதிவிட வில்லை. அவரின் பதிவுகள் முடிந்ததும், வழக்கம்போல் என்னோட அறுவை தொடரும். அதுவரையிலும் கொண்டாடுங்கள்! வாழ்த்துகள்.

கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்


அருணகிரிநாதர் எழுதிய "கைத்தல் நிறைகனி..." பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.


அக‌ வ‌ழிபாட்டிலும் இது சித்த‌ர் முறையிலான‌ சிவ‌ராஜ‌ யோக‌த்தை சேர்ந்த‌து. இதை அறிந்த‌வ‌ர் மிக‌வும் குறைவு. எங்காவ‌து ஒன்றிர‌ண்டு பேர் உண்மையில் இதை அறிந்த‌வ‌ராக இருப்ப‌ர்.
மேலெழுந்த‌வாரியாக‌ இதில் உள்ள‌ யோக‌ விள‌க்க‌த்தை சொல்ல‌ ஆசைப்ப‌ட்டேன். த‌குதி இல்லையானாலும் ஆசையின் உந்துத‌லாலும், இங்கிருக்கும் அன்ப‌ர்க‌ளுட‌ன் ஏதாவ‌து அள‌வ‌ளாவ‌ விருப்ப‌ம் கொண்ட‌தாலும் எழுதுகிறேன். சிவ‌யோக‌மெனில் என்ன‌ என்ப‌து குறித்து ஒரு மேலெழுந்த‌வாரியான‌ ஒரு idea கிடைக்கும் என்று ந‌ம்புகிறேன். ம‌ற்ற‌படி வேறு உப‌யோக‌ம் ஒன்றும் இருக்காது. (வ‌ழ‌க்க‌ம் போல‌வே).
இது ஒரு சாராரின் வழி. (One school of thought). கண்டிப்பாக அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்துக் கொண்டால் தவறேதுமில்லை அல்லவா?

கைத்த‌ல நிறைக‌னி, அப்ப‌மோடு அவ‌ல் பொரி க‌ப்பிய‌ க‌ரிமுக‌

நான்குவித‌மான உண‌வுக‌ள் இங்கே குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ன‌.
1. க‌னி
2. அவ‌ல்
3. பொரி
4. அப்ப‌ம்
அப்ப‌டியே உண்ணும் க‌னி; இடித்து உண்ணும் அவ‌ல்; பொரித்து உண்ணும் பொரி; ச‌மைத்து உண்ணும் அப்ப‌ம் என‌ நான்கு வித‌ம். ஔவையாரும் பால், தேன், பாகு, பருப்பு என‌ இதே போல் நான்கு வித‌மாக‌ கூறுயிருக்கிறார் பாருங்க‌ள்.

சிவ‌யோக‌த்தில் நான்கு வித‌மாக‌ எல்லாம் வ‌ல்ல‌ ப‌ர‌சிவ‌னுக்கு நைவேத்திய‌ம் ப‌டைக்க‌ப்ப‌டுகிற‌து.
யோக‌த்தில் ச‌ரியை = க‌னி
யோக‌த்தில் கிரியை = அவ‌ல்
யோக‌த்தில் யோக‌ம் = பொரி
யோக‌த்தில் ஞான‌ம் ‍= அப்பம்
யோகத்தில் சரியை:
யோக‌த்தில் தூல‌ உட‌லில் செய்ய‌படும் முத‌ல் நிலை ப‌யிற்சி ப‌க்குவ‌ம் ஏதுமின்றி அப்ப‌டியே செய்ய‌ப்ப‌டுகிற‌து. இதில் உட‌லும் நாடிக‌ளும் சுத்த‌மாகின்ற‌ன். உள்ளிருக்கும் ப‌ர‌ம‌னுக்கு ப‌ல‌ன் அப்ப‌டியே அளிக்க‌ப்ப‌டுகிற‌து. ஸ்தூல பஞ்சாக்ஷரி என்ப‌து இங்கே ம‌ந்திர‌மாகிற‌து. ஒவ்வொரு எழுத்தையும் எப்ப‌டி ஸ்தாபிப்ப‌து எனும் வல்லமை முழுமை பெற்ற‌வ‌ரால் தரப்படுகிறது. மூச்சை வாசியாக்குவ‌தும், சுழுமுனை அறிவும், அதன் திற‌ப்பும், மனதை ஓரளவு க‌ட்டுப்பாட்டிற்குள் கொண்டு வ‌ருத‌லும் பெரிய‌வ‌ர்க‌ளின் திருவுள‌த்தால் ப‌யிற்சியாள‌ர் உட‌னே பெறுகின்ற‌ன‌ர். அத‌னால் தான் இப்ப‌யிற்சி சாத்திய‌மாகிற‌து. இதையே தீக்ஷை எனும் சொல்லால் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.இந்த முதல் நிலை பயிற்சியை சாம வேதம் என்று குறியீடாக சொல்வர். இதில் காண்பான், காணப்படும் பொருள், காண்பது மூன்றும் அறியப்படுகிறது.

இந்த‌ ப‌யிற்சியின் விளைவால் ஏற்படும் பலன் க‌னியை ஒக்கும். அதை உள்ளிருக்கும் ப‌ர‌ம‌னுக்கு அர்ப்பணிப்ப‌தே க‌னியை புசித்த‌ல் என்ப‌தாகும். கைத்த‌லம் என்ப‌து உள்ள‌ங்கை. அது அப‌ய‌த்தை குறிப்ப‌து. இந்த‌ முத‌ல் ப‌யிற்சியின் மூல‌மாக‌ கிடைக்கும் ப‌ல‌னை சாத‌க‌ன் அர்ப்ப‌ணிக்கும்போது பய‌ம் குறைய‌ ஆர‌ம்பிக்கிற‌து. விதை, தோல் என எதையும் விடாமல் யானை விழுங்குவதை போன்று நாம் அர்ப்பணித்ததை இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

யோக‌த்தில் கிரியை:

யோக‌த்தில் சூக்கும (சூக்ஷும‌) உட‌லில் செய்யும் இர‌ண்டாம் நிலை ப‌யிற்சி சிறிது ப‌க்குவ‌ம் பெற்ற‌ பிற‌கு கிடைக்கிற‌து. அரிசி இடிக்க‌ப்ப‌டு அவ‌லாவ‌தை போன்று.
"ஆடிப் பொற் சுண்ண‌ம் இடித்து நாமே" என்று மாணிக்க‌வாச‌க‌ர் திருவாச‌க‌த்தில் குறிப்பிடும் நிலையாக‌ இதை சிவ‌யோகிக‌ள் குறிப்பிடுவ‌ர்.சூக்ஷும‌ ப‌ஞ்சாக்ஷ‌ரி இங்கே ம‌ந்திர‌மாகிற‌து. பிராண‌வாயு சுழுமுனையில் பிர‌வேசிக்க‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் சாத‌க‌ன் இந்த‌ இர‌ண்டாவ‌து தீக்ஷையை பெறுகிறார் என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து. ஆதார‌ங்க‌ளும், வ‌ழியும் குருவின் வ‌ல்ல‌மையால் சாத‌க‌ன் நேர‌டியாக‌ அறிகிறான். அந்த‌ ஆதார‌ங்க‌ளிலும், வ‌ழியிலும் வாயுவை கொண்டு செய்ய‌க் கூடிய‌தை செய்யும் திற‌னை குருவால் பெறுகிறான் என்று கூற‌ப்ப‌டுகிற‌து. அப்ப‌டி செய்து அத‌னால் விளையும் ப‌ல‌னை இறைவ‌னுக்கு அர்ப்ப‌ணிக்கிறான். இதில் அவ‌னால் அளிக்க‌ப்ப‌டும் ப‌ல‌னில் க‌னியில் இருப்ப‌து போல விதையோ, ஓடோ, தோலோ இல்லை. என‌வே இதில் இறைவ‌னுக்கு அளிப்ப‌து இன்னும் உய‌ர்வான‌தாக‌ இருக்கிற‌து. அப்ப‌டி அளிக்க‌ப்ப‌டும் சாத‌க‌னுக்கு அச்ச‌ம் பெரும‌ள‌வில் நீங்க‌ தொட‌ங்குகிற‌து. இருவ‌கை செல்வ‌மும் கிட்ட‌ ஆர‌ம்பிக்கிற‌து. இதைதான் குசேல‌ர் அவ‌ல் த‌ந்த‌ க‌தையாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து என்று இவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர்.


அடுத்து...)

Tuesday, September 09, 2008

கணபதி ராயன் தொடருகின்றான் "கைத்தல நிறைகனியுடன்"

முதலில் ஒரு சிறு அறிமுகம்: இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து வரப் போகும் கட்டுரை நான் எழுதியது இல்லை. நம்பிக்கைக் குழுமத்தின் உறுப்பினரும் எங்கள் நண்பருமான திரு காழியூரார் எழுதியது இது. யோகக் கலையில் பயிற்சிகள் பல செய்து வரும் அவர் "நம்பிக்கை" குழுமத்தில் வந்து எழுதுவது மிக மிக அதிசயம். அப்படி அவர் வந்து எழுதும் நாள் "நம்பிக்கை"க் குழுமத்தின் நன்னாளாகக் கருதப் படும். மிக மிக அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். அது சில சமயம் ஒரு நாளாக இருக்கும், சில சமயம் வாரம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சில சமயம் ஒரு மாதம் கூடக் கிடைக்கும். இம்முறை விநாயக சதுர்த்தி அன்று வந்து அவர் இட்ட பதிவினை அவரின் அனுமதியுடன் இங்கே மீண்டும் பதிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.இந்தப் பதிவு இதுவரை இம்முறையில் யாரும் எழுதாத ஒன்று மட்டுமில்லை. எழுதியதும் திரு காழியூரார் என்னும் சித்தர். அருணகிரிநாதரின் திருப்புகழின் முதல் பாட்டான, "கைத்தல நிறைகனி"யின் உள்ளார்ந்த விளக்கங்களை இங்கே காணலாம்.
எனதன்பு நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம்!
முன்பு விநாயக சதுர்த்தியின் போது நம்பியாண்டார் நம்பியின் நிகழ்ச்சியின் வழியாக எனக்கு புரிந்ததை எழுதியிருந்தேன். குழந்தை போல் மனம் கொண்டவருக்கு இறைவன் எளிதில் வந்துவிடுவான் என்பது அந்த நிகழ்ச்சியில் எனக்கு புரிந்தது. உடல் சார்ந்த எண்ணம் கொண்டவருக்காக அவர் ஸ்தூல வடிவத்திலும் வருகிறார் என்பது நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த நிகழ்ச்சி.

இன்னொன்று சித்தர்கள் முறையில் நடக்கும் அகவழிப்பாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், அகவழிப்பாட்டில் யோக‌சித்தர்கள் கடைப்பிடிக்கும் முறை. அருணகிரிநாதர் தான் சிவராஜயோகி என்பதை அவரது பாடல்களில் அவரே தெரிவித்திருப்பார்.
உதாரணம்:
...மகளி தோத இன்பின்மு யங்குதல்
ஒழியுமாறு தெளிந் துளம் அன்பொடு சிவயோகத்
துருகு ஞானப ரம்பர தந்திர‌
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி.... (அளக பாரம:திருசெந்தூர்)

சரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத ... (சுவாமிமலை)

...தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா... (சரணகமலாலயத்தை:திருசெந்தூர்)

...துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போத சுக... (சுருதிமுடி: பழநி)
எல்லாவற்றிற்கும் மேலாக,
"மூலங்கிள ரோருரு வாய் நடு..." என்ற பழநியில் பாடிய பாடலில் முழுக்க முழுக்க தான் சிவராஜயோகி என்பதை தெரிவித்திருப்பார்.
சிவராஜயோகமென்பது வெறும் ப்ராணாயாமம் சார்ந்தது அல்ல; வெறும் வாசி யோகமும் அல்ல. அதனால்தான் க‌ந்த‌ர‌ல‌ங்கார‌த்தில்
"துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே"
என்பார்.
அருணகிரிநாதர் எழுதிய "கைத்தல் நிறைகனி..." பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.

Monday, September 08, 2008

வைஷ்ணவ ஜனதோ!!!

தினமும் காலையில் 6-30ல் இருந்து 6-45 வரையிலும், அதே போல் மாலையிலும் அதே நேரத்தில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் கீதைப் பேருரை கேட்பது வழக்கம். பேருரையின் பிரவாகம் மட்டுமின்றி அவர் அழைத்துச் செல்லும் திவ்யதேசங்களின் சரித்திரத்தையும், தல புராணத்தையும் அவர் சொல்லும் அழகும், நேர்த்தியும் மனதைக் கவரும். கூடவே அதற்கான ஒளிபரப்புப் படங்களும் மிக மிக அழகான ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, தேவையான இடங்களில் தேவையான இடங்களைச் சுட்டும் வண்ணம் காட்டும் இயக்கம் என்று பொதிகையிலேயே தரத்தில் குறிப்பிடும்படியான முதல் நிகழ்ச்சியாக ஒரு (இரண்டு)வருஷத்துக்கும் மேலாக வருகின்றது. இன்று காலையில் வேளுக்குடி அவர்கள் அழைத்துச் சென்ற இடம் திருச்சித்திர கூடம். அனைவராலும் தில்லை என்றும் ஸ்ரீவைணவர்களால் திருச்சித்திரகூடம் என்றும் அழைக்கப் படும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி.

ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கண்வரிஷியின் வேண்டுகோளையும், புண்டரீகனின் வேண்டுகோளையும், அதற்கிணங்கி பகவான் இங்கே வந்தார் என்பதும் தவிர, ஸ்ரீமுஷ்ணத்தில் வராஹ அவதாரம் கொண்டு அசுரனைக் கொன்றதையும், அப்போது தில்லி, கில்லி என்ற இரு அரக்கிகளின் வதத்துக்குத் தில்லை வந்ததையும் குறிப்பிட்டார். கோவிந்தராஜனின் கிடந்த திருக்கோலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் கீழ்க்கண்ட பாடல்களால் கோவிந்த ராஜன் துதிக்கப் பட்டதையும் குறிப்பிட்டார்.
"தில்லையில் வந்து போக சயனம் கொண்ட மூர்த்திதான் திருராமனோ
தொல்லையே த்ந்து மண்ணையே உண்டு கட்டுண்ட பிள்ளை கண்ணனோ
இல்லையே யோகம் இல்லையே யாகம் திருவடியே கொள்ளுர் பத்தரோ
சொல்லையே தந்து உள்ளத்தில் கொண்டு பணிந்த கோவிந்தராஜனோ"
அந்த சன்னிதியில் இருக்கும் இரு உற்சவ மூர்த்திகளையும், அந்தத் திருமேனிகளின் இருந்த, நின்ற திருக்கோலத்தையும் விவரித்த அவர் மேற்கொண்டு சொன்னதே மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
//காயோடு நீடு கனியுண்டு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்கலம், ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்து என்பீர்
வாயோதும் வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்குத் தில்லை
திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்களே//

திருமங்கை மன்னனின் இந்த பாடலையும் குறிப்பிட்டுவிட்டு, இந்த கோவிந்தராஜர் தான் திருப்பதியில் ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்ற தகவலை மிக லேசாகத் தொட்டுச் சென்றார். திருவேங்கடத்தான் அங்கே ஆட்சி புரிந்த மன்னனுக்கு அருள் புரியும் முன்னர் தன் அண்ணாவான கோவிந்த ராஜனைக் கேட்கவேண்டும் என்று சொன்னதாயும், கூறிய அவர், இந்த மாபெரும் விஷயத்தைக் கோடிகாட்டியது வியப்பில் ஆழ்த்தியது. உண்மையில் நடுநிலைமை என்றால் என்ன என்பதும், மத சார்பின்மை என்றால் என்ன என்பதும் நன்றாகப் புரிய ஆரம்பித்தது. எந்த ஒரு தகவலையும் அதன் தன்மையும் மாறாமல் மனதிலும் படும் வண்ணம் எவ்வாறு கொடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் என்றே சொல்லவேண்டும். ஆற்றோட்டம் போன்ற சொற்பொழிவால் மட்டுமில்லை, இந்தப் பெரிய மனதாலும் திகைக்க வைத்தார் வேளுக்குடி அவர்கள்.

குஜராத்தி மொழியில் "வைஷ்ணவ ஜனதோ" என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்று உள்ளது. காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லப் படும் அதை எழுதியது நரசிமேதா அவர்கள். அந்தப் பாடலில் உண்மையான வைஷ்ணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான லட்சணங்கள் சொல்லப் பட்டிருக்கும். எனக்கு அந்தப் பாடல் தான் நினைவில் வந்தது. பல வருஷங்களுக்கு முன்னர் பள்ளியில் படிக்கும்போது(??) சரியாய் நினைவில்லை, கல்கியில் இந்தப் பாடலுக்கு கனு தேசாய் ஓவியங்களுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருத்தரை உதாரணம் காட்டி வெளிவந்த கட்டுரைகள் நினைவில் லேசாக இருக்கு. ஆனால் அந்தப் பாடல் மொத்தத்துக்கும் வேளுக்குடி அவர்கள் வாழும் உதாரணம்!

Saturday, September 06, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7


அம்பி சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருந்தார். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேயவேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது.

இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து, பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல்பலமும், மனபலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம்.
*************************************************************************************

இப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை, சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில், ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல, மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல, மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர்.

ஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5,7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. அஷ்ட விநாயகர் பற்றியும் எழுத ஆவல். எனினும் இப்போது இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

கணபதி பப்பா மோரியா
மங்கல மூரத்தி மோரியா

Friday, September 05, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 6.


ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா? மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!"

என்பது வள்ளுவன் வாக்கல்லவா? முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான்.

கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான்.

"என்ன? நாடாளும் மன்னன் நான்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!" என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:"மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு! என்னால் கொடுக்க முடியாது!" என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர்.

அப்போது ஒரு அசரீரி எழுந்து, "முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான "கணபதி" ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்." என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். "விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்." என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

விநாயகர் அன்று முதல் "சிந்தாமணி விநாயகர்" எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.

நாளை விஸர்ஜனம்-விநாயகர் நீரில் கரைக்கப் படுவார்.

Thursday, September 04, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர சதுர்த்தி வந்த கதை!

பிள்ளையார் குளிக்கத் தயாராய்க் காத்துட்டு இருக்கார். கீழே பாருங்க, சாப்பாடு அவருக்குக் கொடுக்கிறாங்க, எல்லாருக்கும் உண்டு, அம்பியைத் தவிர! :P இன்னிக்கு விஜய் தொலைக்காட்சியிலே பால கணேஷ் குழந்தைகளுக்கான கார்ட்டுன் படம் போட்டாங்க. ஹிஹிஹி, நானும் குழந்தை தானே, பார்த்துட்டு இருந்தேன்! நல்லாவே எடுத்திருக்காங்க, என்றாலும் இசை திரைப்பட இசையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ??? ஆனால் பிள்ளையார், ராக்-அன் -ரோல் ஆடுகின்றார், ஆங்கில இசைக்குக் கணங்களோடு ஆடுகின்றார், ஸ்கேட்டிங் செய்கின்றார், ஐஸ் ஸ்கேட்டிங் செய்கின்றார், சர்ஃபிங் செய்கின்றார். இப்படி மிக நாகரீகமாகவே குழந்தைகளின் மனதைக் கவருகின்றார். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு விசிலும் அடிக்கின்றார் மூஷிகனைப் பார்த்து, கொழுக்கட்டை திருடும்போதும், நந்தியை ஜெயிக்கும்போதும், கணங்களை ஜெயிக்கும்போதும். சிவனின் உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கணங்களோடு ஆடுவது, நம்ம வீட்டில் குழந்தை அப்பாவோட பேனா, பென்சில், மொபைல் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடும் நினைப்பே வருது. நந்தி மேல் சவாரி செய்யும் கணநாயகனைக் கொழுக்கட்டை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது பார்த்தால் குழந்தைகளின் மனதை நாம் மாற்றச் செய்யும் ஓர் முயற்சியாகவே மனதில் பதிகின்றது. ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும்! :))))))))))))) கொட்டம் அடிக்கிறார் பிள்ளையார். மறுபடி வந்தாலும் பார்க்கலாம், என்னைப் பொறுத்தவரை!
************************************************************************************

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.

ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் "விப்ரதன்" என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய "முத்கலர்" என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். "ப்ருகண்டி" என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன்.

Wednesday, September 03, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 4

இப்போது சங்கடஹர சதுர்த்தியில் முக்கியமான அங்காரக சதுர்த்தி வந்த விதம் பற்றிப் பார்ப்போமா??அங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய் கிரகம் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். பூமிக்கு மிக அருகே இருக்கும் கிரகம் அது என்பதோடு அல்லாமல் சிவந்த நிறத்துடனும் காணப்படும். நம் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியும். அந்தச் செவ்வாய் என்னும் அங்காரகன் ஈசன் ஆன பரமேஸ்வரனின் புத்திரன் என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயனின் அம்சமே அங்காரகன் என்றும் சொல்லுவார்கள். அங்காரகன் வழிபாட்டில் ஸ்கந்தன் என்னும் முருகன் மட்டுமல்லாமல் விநாயகருக்கும் சிறப்பான இடம் உண்டு.

வசிஷ்டரின் பரம்பரையில் வந்த பாரத்வாஜ முனிவருக்கும், தேவ மங்கை ஒருத்திக்கும் பிறந்த குழந்தை அங்காரகன். குழந்தை பிறந்ததுமே தேவமங்கை தேவலோகம் திரும்பிச் செல்ல, முனிவரோ தன் தவத்தை விட்டு விட்டு இல்லறத்தில் மூழ்கியதை நினைத்து நொந்துகொண்டு குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் தவத்தைத் தொடர நர்மாதைக்கரைக்குச் செல்லுகின்றார். குழந்தையின் மேல் பாசம் கொண்ட பூமித்தாய் அந்தக் குழந்தையைச் சொந்தக் குழந்தை போல் வளர்த்து வர, குழந்தை வளர்ந்து வந்தது. செந்நிறம் உள்ள அந்தக் குழந்தையை அங்காரகன் என்று அழைத்து வந்தாள்.

குழந்தை வளர்ந்து ஏழு வயதில் ஒரு நாள் தன் தாயான பூமித்தாயிடம் தன் தந்தை பற்றிக் கேட்கின்றான் அங்காரகன். தந்தை பாரத்வாஜ ரிஷி என்று தெரிந்ததுமே அவரைக் காண ஆவலாய் இருக்க, அவனை அழைத்துக் கொண்டு பாரத்வாஜ ரிஷியின் ஆசிரமம் சென்ற பூமா தேவி குழந்தையை அவருடையது என்பதைத் தெளிவு படுத்தி விட்டு அவரிடம் ஒப்படைக்கின்றாள். பாரத்வாஜரும் ஏற்றுக் கொண்டு முறைப்படி செய்யவேண்டிய உபநயனம் போன்ற சடங்குகளைச் செய்துவிட்டுப் பிள்ளைக்கு வேதங்களும் கற்றுக் கொடுக்க அங்காரகன் நான்கு வேதங்களிலும் தேர்ந்தவன் ஆகின்றான். பின்னர் தன் நிலை இன்னும் உயரவேண்டும் என்று விரும்பிய அங்காரகன் தந்தையின் ஆசிகளோடு காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பிக்கின்றான்.


விக்னங்களைத் தீர்க்கும் விக்ன விநாயகனை வேண்டி அவன் செய்த தவத்தால் மனம் மகிழ்ந்து விநாயகர் காட்சி அளிக்கின்றார், அது ஒரு மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று. அன்று தாமதமாய் சந்திரன் வரும் சந்திர உதய காலத்தில் அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுக்க, அவன் வேண்டுகோள் என்னவெனக் கேட்கின்றார் விநாயகர். அங்காரகனும் தான் தேவலோகம் சென்று தேவர்களோடு சேர்ந்து இருந்து அமிர்தம் அருந்தி அமரன் ஆக ஆசைப் படுவதாய்ச் சொல்லுகின்றான்


மேலும் உங்கள் சர்வ மங்கள சொரூபத்தைத் தரிசித்த என்னை இன்று முதல் உங்கள் பெயராலேயே மங்களன் என அழைக்கவும் வேண்டுகின்றேன். நான் உங்களை வழிபட்டுத் தரிசித்த இந்தச் சதுர்த்தி நன்னாளில் உலகத்து மக்கள் அனைவரும் வழிபட்டுத் தங்கள் துன்பங்கள் நீங்கப் பிரர்த்தித்தால் அவர்களின் இன்னல்களை நீக்கி அருள வேண்டும். மேலும் மங்களங்களை உண்டாக்கும் உங்கள் அருளால் என்னையும் அனைவரும் வழிபடும் கிரகமாய் ஆக்கவேண்டும். என்று அங்காரகன் கேட்க விநாயகரும் அவ்வாறே அருளுகின்றார்.விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்த இடத்திலேயே அவரின் விக்ரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து “மங்கள விநாயகர்” என்று பெயரிட்டு வழிபட்டான் அங்காரகன். பின்னர் விநாயகர் அருளால் தேவலோகம் சென்றடைந்து அமிர்தமும் அருந்தி அமரன் ஆனான். கூடவே நவகிரகங்களில் முக்கியமான கிரகமாகவும் ஆனான். அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய்க் கிழமை. அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுத்த அந்தச் செவ்வாய்க் கிழமையில் தேய்பிறைச் சதுர்த்தி வந்தால் அதை “அங்காரக சதுர்த்தி” என்று சொல்லுவதுண்டு. அன்று விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.

இன்று விநாயக சதுர்த்தி! அனைவருக்கும் வாழ்த்துகள். வேழமுகத்தோன் அருளால் அனைவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

Monday, September 01, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 3

கெளண்டின்ய ரிஷியின் ஆசிரமம்.தன் மனைவியான ஆசிரியையுடன் அங்கே இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொண்டிருந்தார் முனிவர். தூய தவ வாழ்க்கையை இல்லறத்துடன் கூடி அனுசரிப்பது எவ்வாறு என்பதற்கு ஒரு உதாரணமாய்த் திகழ்ந்தார் கெளண்டின்யர். ஆதி முதல்வனும், வேழமுகத்தோனும் ஆன விநாயகன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் கெளண்டின்யர் தினமும் அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தார். ரிஷிபத்தினியான ஆசிரியைக்குத் தான் ரிஷிபத்தினியாக இருந்தாலும் இவ்வுலகின் சுக,போக செளக்கியங்களையும் அனுபவிக்க முடியாமல் கணவர் தடை செய்கின்றார் என்ற ஒரு எண்ணமும் இருந்து வந்தது. முனிவரும் இதை நன்கு அறிவார்.

ஒருநாள் ஆசிரியை விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த மலர்கள் எத்தனையோ இருக்க அறுகம்புல்லை மட்டும் வைத்து அர்ச்சிப்பது ஏன் எனத் தன் கணவனை வினவினாள். கெளண்டியரும் பொறுமையாக அவளுக்கு அனலாசுரனை விழுங்கிய விநாயகர் பற்றியும், விநாயகர் வயிற்றில் அனலாசுரனைப் போட்டுக் கொண்டதால் வெப்பம் தாங்க முடியாமல் அக்னி உட்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பதறித் துடித்ததையும், அப்போது விநாயகரே, பிரம்மாவின் மூலம் தனக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை, அபிஷேகம் செய்யச் சொன்னதையும், மூவுலகிலும் இருந்து வந்த ரிஷி, முனிவர்கள் அனைவரும் 21 அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்ததையும் கூறுகின்றார். விநாயகரும் அதில் மகிழ்ந்து எனக்குப் பிடித்தமானது அறுகும், வன்னியுமே என்று சொல்லி மறைந்தாராம். இதைக் கூறினார் மனைவியிடம் கெளண்டியர். மனைவியோ, “எல்லாம் சரி, இந்த அறுகம்புல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது??எந்தப் பொருள் வாங்குவதானாலும் பணம் வேண்டுமே? அறுகம்புல்லால் ஆவது என்ன?” என்று ஏளனமாய்க் கேட்கின்றாள். அவளைக் கண்டு நகைத்த கெளண்டியர், “பெண்ணே, இந்தா, இந்த ஒரு அறுகம்புல் போதும். என் தவவலிமையால் உன்னை இந்திரலோகத்துக்கு அனுப்புகின்றேன். தேவேந்திரனிடம் சென்று இந்த அறுகம்புல்லின் எடைக்கு எடை செல்வம் பெற்று வருவாய்!” என்று சொல்லுகின்றார்.

அவளும் ஒத்துக் கொள்ள அறுகம்புல்லை அவளிடம் அளித்து, தன் தவ வலிமையால் அவளை இந்திரலோகம் அனுப்புகின்றார் கெளண்டின்யர். இந்திரனிடம் அந்த அறுகம்புல்லைக் காட்டி அதற்கு ஈடான செல்வத்தைக் கொடுக்குமாறு ஆசிரியை கேட்டாள். இந்திரனும் அந்த அறுகை தராசின் ஒரு தட்டிலே வைத்து, மறு தட்டிலே பொன்னை வைக்கின்றான். தன்னிடம் உள்ள அனைத்தையும் வைக்கின்றான். ஆனாலும் தட்டு உயரவில்லை. திகைத்த தேவேந்திரன் தன்னையே வைக்கின்றான். ஆசிரியை கூட கெளண்டியரின் ஆசிரமத்திற்கு வருகின்றான் அவளுக்கு அடிமையாக. ஆசிரியையும் புரிந்து கொள்ளுகின்றாள். பக்தியோடும், பூரண ஈடுபாட்டோடும் கொடுக்கும் ஒரு அறுகம்புல் எத்தகைய பெருஞ்செல்வத்துக்கும் ஈடாகாது என.

மனம் சலனம் அடையாமல் ஒரே நிலையில் இருந்து ஒருமைப்பாடு உண்டாக விநாயக வழிபாடே சிறந்தது. அதனாலேயே அந்தக் காலங்களில் மந்த புத்தியுள்ள மாணாக்கர்களைத் தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போடச் செய்வார்கள். இதன் மூலம் மூளை சுறுசுறுப்பு அடையும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்ப ஒரே வழி தோர்பி கரணம் தான். நெற்றியில் குட்டிக் கொள்ளுவதால் பிந்துவின் உள்ளே மறைந்திருக்கும் அமிர்த கலசம் எழும்பி உடல் முழுதும் பரவும். மன அமைதி ஏற்பட்டு மனம் ஒருமைப் படும். இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்றால் இன்று விஞ்ஞான பூர்வமாயும் இது நிரூபிக்கப் பட்டுள்ளது என்பதற்குஇ.கொ.வின் இந்தப் பதிவே சான்று.

விநாயகர் தோற்றத்தின் தத்துவமே தீமையைத் தடுப்பது ஆகும். விக்கின விநாயகன் என்பதன் அர்த்தமே அதுதான். நன்மை செய்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமலும், தீமை செய்பவர்களைத் தடுப்பதுமே விநாயகரின் தோற்றத்தின் தத்துவம். மனதில் உள்ள மாபெரும் அசுரன் ஆன தீயகுணம் நீங்கி, நல்ல குணம் பெருக விநாயக வழிபாடு உதவி செய்யும். இதைத் தான் அசுரர்களை வெல்வதற்காக விநாயகரை வழிபட்டுச் சென்றனர் தேவர்கள் என்று சொல்லுகின்றார்கள். நாம் நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் பல சமயம் தீய எண்ணமே மேலோங்குகின்றது அல்லவா? அந்த அசுர குணம் மேலோங்காமல் இருக்கவே விநாயக வழிபாடு அவசியம் ஆகின்றது. விநாயகர் திருக்கைலையின் சித்திரமண்டபத்தில் உள்ள ஏழுகோடி மந்திரங்களுக்கு நடுவில் உள்ள, “சமஷ்டிப் பிரணவம்” வ்யஷ்டிப் ப்ரணவம்” ஆகிய இரு ப்ரணவங்களின் சேர்க்கை என்று புராணங்கள் சில கூறுகின்றதாய்த் தெரியவருகின்றது.

விநாயகருக்கு ஒற்றைக் கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. விநாயகரை வழிபடுவோர் ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகலும் புகழ ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”டன் வாழ்வார்கள். “தத்துவ மசி” என்ற வாக்கியத்தின் வடிவே விநாயக சொரூபம். பிரணவ சொரூபம் ஆன விநாயகரின் காது, அகன்ற தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற சொல்லின் வடிவத்தைக் காட்டுகின்றது. திருவடிகள் ஞானசக்தியும், இச்சாசக்தியும். பேழை போன்ற பெரிய வயிற்றில் அனைத்து உலகும் அடங்கும். கரங்கள் ஐந்தொழில்களைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், மோதகக் கரம் காத்தலையும், அங்குசக் கரம் அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருள்வதையும் சுட்டுகின்றது. மூன்று கண்களாய் சூரியன், சந்திரன், அக்னியை உருவகம் செய்கின்றனர். விநாயகரின் நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சூரிய ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சிவ ரூபம் ஆகும்.

விநாயகரை வணங்க மறந்த பிரம்மன் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் சரியான உருவம் பெறாமல், இஷ்டத்துக்கு பேய், பிசாசுகள் போல் அலைய ஆரம்பிக்க தன் தவறை உணர்ந்த பிரம்மா விநாயரை வணங்கிப் பின்னர் சிருஷ்டி சக்தியைப் பிரயோகம் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்போது தேவர்கள் அமிர்தத்தால் ஆன மோதகம் ஒன்றை ஈசனிடம் கொடுக்க, விநாயரையும், முருகனையும் பார்த்து ஈசன் யார் முதலில் உலகைச் சுற்றிப் புண்ணியம் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கே இந்த மோதகம் என்று சொல்ல முருகன் மயிலேறி புண்ணிய நதிகளில் நீராடி, மலை, காடுகளில் உள்ள ஈசனின் சான்னித்தியத்தை அறிந்து வரப் புறப்படுகின்றார். விநாயகரோ தாய், தந்தையரை வணங்குவதே புண்ணியம், அதைவிடப் புண்ணியம் ஏதுமில்லை என்று சொல்லி அவர்களை வழிபட, ஈசன் மோதகத்தை விநாயகருக்கு அளிக்க அதுவே இன்று வரையிலும் விநாயகர் கையில் காட்சி அளிக்கின்றது. பிள்ளையாரப்பா, அம்பிக்கு இந்த மோதகத்தைக் கொடுத்துடாதே! பத்திரம்! இந்தக் கதை சற்றே மாறி மாம்பழக் கதையாகத் திரைப்படங்கள் மூலம் அறிகின்றோம். உண்மையில் இந்தக் கதையின் தாத்பரியம் மறைக்கப் பட்டு ஒரு மாம்பழத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்ட கடவுள்களாய்ச் சித்திரிக்கப் பட்டதிலே அது தான் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருக்கின்றோம். யாராக இருந்தாலும் முதலில் தாய், தந்தையருக்கே மரியாதை செய்யவேண்டும், தாய், தந்தையரைப் போற்ற வேண்டும், அவர்களைக் கடவுளுக்கு நிகராய் வணங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான தத்துவம். ஆனால் இன்று இது திரைப்படங்களின் தாக்கத்தால் பக்தர்களிடையே பிரிவை உண்டாக்கிப் பெரும் சண்டைக்கும் வழி வகுத்திருக்கின்றது. இது ஒரு துர்ப்பாக்கியமே.

தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்து, அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவையே அரைச்செங்கல்லைத் தூக்கிப் போட்டு இதன் மேல் நில் என்று சொன்ன புண்டரீகன் கதை எல்லாருக்கும் தெரியும் தானே? நம் தர்ம சாஸ்திரமும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தானே சொல்லுகின்றது. இந்தக் கதையின் உள் அர்த்தமே இது தான். மறக்காதீங்க. யாரும், யாரோடயும், எப்போவும், எதுக்காகவும் சண்டை போட்டுக்கலை, நாமளும் போட்டுக்க வேண்டாம்!

விநாயகர் வலம் வருவார்!