எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 30, 2009

லலிதா நவரத்ன மாலை - கோர்த்தது!லலிதா நவரத்னமாலை:

வைரம்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவம் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
லலிதா நவரத்தினமாலையின் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


மாணிக்கம்

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப்புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையேமரகதம்

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீ மேலிடினும் ஜயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய் ஓம் லலிதாம்பிகையே!
புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


வைடூரியம்

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப் பறையாற்றொளியொத்தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசைவற்றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


நூற்பயன்:
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

துர்காஷ்டகம் - தொகுப்பு!
துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையேராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையேகன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
நீண்ட தாமதத்திற்கு மிகவும் மன்னிக்கவும். :(

Sunday, September 27, 2009

நவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி!

தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

Saturday, September 26, 2009

நவராத்திரி நாயகி - சரஸ்வதி!

சரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.

வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்.

வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.

நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.

சரஸ்வதியைப் பற்றிய செய்தி நாளையும் தொடரும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

நவராத்திரியில் நவசக்திகள் -அன்னையின் சேனையில்!


நாராயணி: மஹாவிஷ்ணுவின் அம்சமான இவளுக்கு வைஷ்ணவி என்ற பெயரும் உண்டு. அபயவரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்திய நாற்கரத்தினால், பசுமை நிறத்தோடு, பரந்தாமனின் அம்சங்களைக் கொண்டு கருடனை வாஹனமாய்க் கொண்டவள். நலமும், வளமும் பெற இவளைத் துதித்தல் நலம்.

கெளமாரி: கந்தனின் அம்சம் ஆன இவள் குமாரனின் பெயரால் கெளமாரி என அழைக்கப் படுகிறாள். நீல நிறம் பிடித்த நிறம். மயில் வாஹனத்தில் நான்கு கரங்களுடன், சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயவரதம் காட்டுவாள். ஜடாமகுடம் தரித்தவள்.

சாமுண்டி: சண்டன், முண்டன் என்னும் இருவரையும் அழிக்க சக்தியின் வடிவாய்த் தோன்றிய இவள் முக்கண் கொண்டவள். கரிய நிறத்தவள். கத்தி, சூலம், கபாலம் ஏந்தி அபய முத்திரை காட்டும் இவள் புலித்தோல் ஆடை அணிந்து காட்சி தருவாள். இவளை வணங்கினால் வாழ்வில் எத்தகைய துன்பமும் தீரும்.

இன்றைய அலங்காரமாய்ச் சிலர் அம்பிகையை சும்ப நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரியாக அலங்கரிப்பார்கள். ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்கள் கோலம் போட்டுப் பத்து வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபடவேண்டும். குழந்தைக்குப் பாதபூஜை செய்து, வெள்ளை நிற மலர்களான மல்லிகை, நந்தியாவட்டை போன்றவற்றால் அர்ச்சிக்கலாம். இந்தக் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆடை, அணிகளை வசதி உள்ளவர்கள் வாங்கிக் கொடுக்கலாம். காலை நிவேதனத்தில் பருப்புப் பாயாசம், உளுந்துவடை, அதிரசம், சுய்யம், போன்றவை இடம் பெறும். மாலை சுண்டல் கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம்: வைடூரியம்

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப் பறையாற்றொளியொத்தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசைவற்றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

நூற்பயன்:
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


மன்னிப்பு: இன்றைய பதிவு தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். நேற்று மதியம் மூன்று மணியில் இருந்து மாலை ஏழு மணி வரையில் மின்சாரம் இல்லை. அதுக்குப் பின்னரும் சீரான விநியோகம் இல்லை. இணையமும் இப்போத் தான் வந்தது.

நாளை துர்காஷ்டகமும், லலிதா நவரத்னமாலையும் தொகுத்து அளிக்கப் படும். நன்றி.

Friday, September 25, 2009

மண் சுமக்காமலேயே சாப்பிடச் செய்யும் புட்டு இது!


புட்டு செய்முறை:

நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.
அரிசி கால் கிலோ
பாகு வெல்லம் கால் கிலோ
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.
உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை: இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:
அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.


டிஸ்கி: மண் சுமக்காமலே சாப்பிடும்னு போடறதுக்குப் பதிலா செய்யும் னு போட்டிருக்கேன் தலைப்பிலே. திருத்திட்டேன்.விளக்கெண்ணெய் ஊத்திட்டுக் கவனிச்சுச் சொல்லாமல் விட்ட நல்ல உள்ளங்கள் வாழ்க! வளர்க! :))))))))))))))))

Thursday, September 24, 2009

நவராத்திரியில் நவ சக்திகள் - அன்னையின் சேனையில்-

. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். மேலும் அன்னைக்கு உதவிய அனைவரும் பெண்களே. அன்னையின் சேனையில் சேனாபதிகளாகவும், தளபதிகளாகவும், அன்னைக்கு மந்திரியாகவும் பணி புரிந்த அனைவரும் பெண்களே. அதனாலேயும் நவராத்திரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாய்ப் பத்து நாட்கள் கொண்டாடும் பண்டிகையாய் உள்ளது.

சப்தகன்னியர்கள்:
ப்ராம்மி: நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷமால தரித்து ஹம்ஸவாகனத்தில் வீற்றிருப்பவள். இவளை வணங்கினால் சகல கலைகளும் சித்திக்கும்.

வாராஹி: திருமாலின் வராஹ அவதாரத்தின் வடிவாய்த் தோன்றியவள். மேகநிறத்தினள். கரிய வண்னமே பிடிக்கும். வராஹமுகத் தோற்றம் உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லைதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவலை வணங்குவோர்வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி: மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். ரிஷபவாஹனத்தில் காட்சி கொடுக்கும் இவளை வழிபட்டால் மங்களங்கள் வந்தடையும்.

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அப்யாரதம் காட்டுவாள். வெண்ணிற யானை வாஹனம் சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.


நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் அம்பிகை காக்ஷி கொடுப்பாள். இன்று பத்மக் கோலமிட்டு அம்பிகையைப் பீடத்தில் அமர வைத்து அலங்கரிக்க வேண்டும். எட்டுச் சக்திகள் புடைசூழ, அபய வரதம் காட்டிய வண்ணம் மலர் அம்பு ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கும் இந்த துர்கையை வணங்கி வழிபட்டால் பகை அழியும். செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன் ஏற்படும் வண்ணம் மனதில் தைரியம் ஏற்படும். வல்லமை தருவாள் மஹா சக்தி! வாழியென்றே துதிப்போம். இந்த நாளில் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தையை துர்கையாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்றும் வழிபாட்டுக்கு முல்லை மலர்களும், வெண் தாமரை மலரும் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் தேங்காய் சாதம். இந்த வருஷம் எட்டாம் நாள் சனிக்கிழமை வருவதால் ஒரு சிலர் எள் சாதமும் செய்கின்றனர். என்றாலும் அம்பிகை வழிபாட்டுக்குத் தேங்காய் சாதமே சிறந்தது.

வெள்ளிக்கிழமைகளில் ஒரு சிலர் புட்டுப் போடுவார்கள். நேற்றே எழுத நினைச்சு மறந்துட்டேன். அவசரம்! என்றாலும் இந்த எட்டாம் நாளும் சிலர் போடுகின்றார்கள்.அஷ்டமி திதியான இன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்யப் படுவதால் சிலர் இன்றும் போடுவர். கடலைப்பருப்புச் சுண்டலும் செய்யலாம். இனி துர்காஷ்டகம்.

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம் புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

நவராத்திரியில் நவதுர்க்கைகள்! 7-ம் நாள் கூஷ்மாண்டா!

கூஷ்மாண்டா: வெள்ளிக்கிழமையின் தேவி இவள். கூஷ்மம் என்றால் முட்டை, அண்டம் என்றால் பிரபஞ்சம். பிரபஞ்சத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்தத் தேவியிடம் இருந்தே. பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்று சொல்லுவார்கள். திருஷ்டியைப் போக்கப் பூஷணிக்காயில் சிவப்புக் குங்குமத்தைத் தடவி நடுரோட்டில் போட்டு எல்லார் காலையும் உடைக்கிறோம். தேவி அப்படிச் செய்யச் சொல்லவில்லை. பூஷணிக்காயே உடைக்கவேண்டாம், அப்படியே உடைச்சாலும் திருஷ்டிப் பூஷணிக்காயை உடைச்சு ஒரு ஓரமாகவே போடலாம். இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளைப் போக்கிக் கண் திருஷ்டியைப் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றாள். சுக்கிரதசை, சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். அசுர குருவான சுக்கிரன் அள்ளித் தருவார் இவளை வணங்கினால். நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவியான இவள் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து இனிமையான நல்வாழ்வை அளிப்பாள். இந்த நவராத்திரி அனைவர் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பரப்பட்டும் என அன்னையை வேண்டிக் கொள்கின்றேன். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் ஸப்த ஒலிக்கோலம். அல்லது ஸந்தியா தாண்டவம். இந்த ஸந்தியா தாண்டவத்தில் இருந்து தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.


ஏழாம் நாளான இன்று திட்டாணிக் கோலம் போடவேண்டும். இன்றைய அலங்காரமாக தங்க சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சாம்பவியாக அலங்கரிக்கலாம். தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பாள் இவள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகவும், இடையில் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியது எனவும் சொல்லுவார்கள். ஆகவே இன்றிலிருந்து வெண்ணிற மலர்களாலேயே அர்ச்சித்தல் நன்று. வெண்தாமரைப் பூ, முல்லை, மல்லிகை போன்ற மலர்கள் ஏற்றவை. எட்டு வயதுள்ள பெண் குழந்தையை சாம்பவியாக வழிபடவேண்டும். இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் இவளிடமிருந்தே தோன்றியவை. இவளாலேயே மழை பொழிந்து நீர்வளம், நிலவளம் ஏற்படுகிறது என்பதால் இன்று அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள் மிகச் சிலர்.

இன்றைய நிவேதனம் வெண்பொங்கல். நன்கு குழைய வேகவைத்த வெண்பொங்கலைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்றைய சுண்டல் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

இனி துர்காஷ்டகம்.

ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தின் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீ மேலிடினும் ஜயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய் ஓம் லலிதாம்பிகையே!

Wednesday, September 23, 2009

நவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி!

ப்ரம்மசாரிணி: பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த பார்வதி மகேசனையே மணக்க எண்ணி விரதம் இருந்தாள். அப்போது அவளைச் சோதிக்க எண்ணிய ஈசன் அவள் முன் தோன்றி மகேசனை மணாளனாக அடைவது எளிதல்ல என்றும், அதற்காக அவள் தவமியற்றவேண்டும் என்றும் விருத்தனாக வந்து சொல்ல, அதன்படியே தவம் இயற்றினாள் பார்வதி. சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் பிரம்மசாரிணி எனப் போற்றப் பட்டாள். நவராத்திரியின் வியாழக்கிழமைக்கான தேவி இவளே. தவம் செய்யும் காமாக்ஷி இவள் வடிவே என்பர். வியாழக்கிழமைகளில் இவளைப் பூஜித்தால் வியாழன் ஆன தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்வு கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப் பட்ட அஷ்டவகைக்கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி ஆவாள்.

இன்றைய அலங்காரம்:

சர்ப்பராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி. (அதான் போல, நம்ம வீட்டுக்குக் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலாகியும் சுப்புக்குட்டியார் விசிட் செய்யலைனு பேசிட்டு இருந்தோம், ஞாயிறன்று காலங்கார்த்தாலே 4 மணிக்கு தரிசனம் கொடுத்துட்டு, என்னை வெளியே வந்து வாசல் தெளிக்க விடாமல் பயமுறுத்திட்டுப் போயிட்டார். இப்போ 5-30 மணிக்குத் தான் வெளியே எட்டியே பார்க்கிறேன்! :P சுப்புக்குட்டியார் தயவு!)தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்த சண்டிகா தேவி கையில் அக்ஷமாலை, கபாலம், தாமரை, தங்கக்கலசம் போன்றவற்றை ஏந்திய வண்ணம் காக்ஷி தருவாள். சஷ்டி தினமான இந்த ஆறாம் நாள் தேவியின் எண்ணற்ற பெயர்களை கோலமாவினால் எழுதுதல் நன்று.

இன்று ஏழு வயதுள்ள பெண் குழந்தையைச் சண்டிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே வழிபாட்டுக்கு உகந்தது எனினும் செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களையும் செந்தாமரைப் பூக்களோடு சேர்த்து அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் கல்கண்டு சாதம். (நம்ம ஃபேவரிட்) செய்முறை சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. ஒரு கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு வெறும் வாணலியில் வறுத்துப் பாலில் குழைய வேகவிடவேண்டும். அரை லிட்டர் பாலாவது தேவை. குழைந்த சாதத்தில் கட்டிக் கல்கண்டைப் போட்டு(டைமண்ட் கல்கண்டு நல்லா இருக்காது.) சேர்ந்து கொதித்து வந்தபின்னர் குங்குமப் பூ, ஜாதிக்காய், ஏலக்காய்,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரித்துக்க் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

இன்றைய சுண்டல் மொச்சைப்பருப்புச் சுண்டல்.

இனி துர்காஷ்டகம்.

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

Tuesday, September 22, 2009

நவராத்திரியில் நவ துர்கைகள் - காத்யாயனி ஐந்தாம் நாள்


காத்யாயினி: உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்
“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ” என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.

ஐந்தாம் நாள் கோலம் பாவைகள். இன்றைய அலங்காரமாக "காளிகா தேவி"யையோ, அல்லது சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சும்பாசுரனின் தூதுவன் அனுப்பிய தகவலைச் செவி மடுக்கும் கோலத்தில் அமர்ந்த துர்கையாகவோ அலங்கரிக்கலாம். ஆறு வயதுள்ள பெண் குழந்தையைக் "காளிகா" வாகப் பாவித்து வழிபடுதல் நல்லது. பகை நீங்கவும், இடையறாது தொல்லைகள் கொடுத்துவந்த எதிரிகள் அடங்கவும் இவளை வணங்குதல் நல்லது. இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே. முக்கியமாய்ச் செவ்வரளிப் பூ விசேஷமானது. இன்றைய நிவேதனம் பால் சாதம், குழைய வடித்த சாதத்தில் சுண்டக் காய்ச்சிய பசும்பாலையும் சர்க்கரையையும் சேர்த்து, ஏலம், முந்திரிகளால் அலங்கரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

இன்றைய சுண்டல் கடலைப்பருப்புச் சுண்டல்.

துர்காஷ்டகம்:
துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்தினம் மாணிக்கம்

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப்புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

Monday, September 21, 2009

சில அதிசய சம்பவங்கள்!

1.முப்பெரும் தேவியர் சந்திப்பு, அதுவும் நவராத்திரியில், மேலதிகத் தகவல்களுக்குஇங்கே காணவும்!

2. இட நெருக்கடி காரணமாய் குருவாயூரப்பனுக்கும், வெங்கடாசலபதிக்கும் சண்டை! விபரம் காண இங்கேவரவும்!

நவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந்த மாதா, 4-ம் நாள்!

இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!


சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

ஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.

, நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.

இன்றைய நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, வெல்லம் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.

இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.

துர்காஷ்டகம்:
உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்தின மாலையின் இன்றைய ரத்தினம் பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

Sunday, September 20, 2009

நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!

இன்றைய அலங்காரம் கல்யாணி!

மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.

மூன்றாம் நாளான இன்று கோலம் பூக்களாகப் போடவேண்டும். மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.

துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
ஸ்ரீ லலிதையின் படம் மேலே. திரு விக்னேஷ் அவர்களின் வேண்டுகோளை ஒட்டி மூன்றாம் நாளுக்கான விபரங்கள் இன்றே அளிக்கப் படுகிறது.

லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.

நவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி! 2

இன்றைய அலங்காரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி


சைலபுத்திரி: சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்தில் வணங்கவேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல். இன்னிக்கு ஓசிச் சுண்டல் இல்லை. அதனால் நோ படம்!

துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

Saturday, September 19, 2009

நவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்ரி! 1.!

இன்றைய அலங்காரம் துர்கை.

நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். இந்த வருஷம் நவராத்திரி சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கின்றது. அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல். வழக்கம்போல் சுண்டல் இரவல் தான். கூகிளார் கொடுத்தது. எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.

துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


திருமதி ஜெயஸ்ரீ நீலகண்டனின் விருப்பத்தின் படி லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

Tuesday, September 15, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகியும்!

தேவகியை நாம் பலநாட்கள் கழிச்சுப் பார்க்கிறோம். ரொம்ப இளைச்சுப்போய் முப்பது வயதிலேயே தலையும் நரைத்துப் போய் கண்களில் உயிரை வைத்துக் கொண்டு, தன்னுடைய மகன் எப்போ வருவான், தங்கள் அனைவருக்கும் மீட்சியைக் கொடுப்பான் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாள். அடுத்தடுத்துத் தான் பெற்ற ஆறு குழந்தைகளைக் கண்ணெதிரே கொல்லப்படுவதைக் கண்டவள். அவள் இதயம் என்ன இரும்பா? இல்லை கல்லா? எப்படித் தாங்கினாள்? கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எந்தத் தாய்க்கும் நேராத சோகம். அதோடு மட்டுமா? ஏழாவது குழந்தை பிறக்கும் முன்னரே வலுக்கட்டாயமாய் வெளியே எடுக்கப் பட்டு அவள் கணவனின் மற்றொரு மனைவியிடம் வளர்க்கக் கொடுக்கப் பட்டது. எட்டாவது குழந்தையோ பிறந்தே ஆகவேண்டும், அதை உடனே கொல்லவேண்டும் என்றே கம்சனின் திட்டம். அதற்காக அல்லும், பகலும் கண்காணிக்கப் பட்டாள். தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் அவளுக்குத் தனியே இருக்கச் சுதந்திரம் இல்லை. இறை அருளாலேயே அன்றிரவு மழையும், இடியுமாக வந்து அவளைப் பூதனையின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் குழந்தையையும் கோகுலத்துக்கு அனுப்ப முடிந்தது. ஆனால் ஏன் இப்படி? ஒரு இளவரசியாக இருந்தும் ஏன் இப்படித் துன்புற்றாள்? அனைவரும் கேட்கும் கேள்வி இது!


இந்த தேவகி படும் துயரம் சகிக்க முடியாத ஒன்று. கண்களின் எதிரே அடுத்தடுத்துத் தான் பெற்றெடுத்த குழந்தைகள் கொல்லப் பட்டு சோகத்தை அனுபவித்து, எட்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டும் என்ற ஒரே லக்ஷியத்தோடு வாழ்ந்தாள். சிலர் கேட்கின்றனர். புத்திசாலித் தனமான கேள்வியாய்ப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் தெரியும். வசுதேவரையும், தேவகியையும் ஏன் கம்சன் சேர்த்தேச் சிறையில் அடைத்தான்?? தனித் தனியாய்ப் பிரித்து வைத்திருக்கலாமே என்று கேட்கின்றனர். ஆனால் இறைவனின் படைப்புக்கும் இம்மாதிரியான காரியங்களுக்கும் காரணம் இல்லாமல் போகாது. தேவகியும், வசுதேவரும் இம்மாதிரியான ஒரு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப் பட்ட ஒன்று. இதை அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பின்னால் போய்ப் பார்க்கவேண்டும். காச்யபர் ஒரு ரிஷி. தக்ஷனின் மகள்களான திதி, அதிதி இருவரையும் காச்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் தக்ஷன். அக்காள் தங்கைகள் தான் என்றாலும் இருவருமே ஒற்றுமை இன்றியே இருந்தனர். அதிதி என்பவள் இளையவள். அவளுக்கு வெகு விரைவில் குழந்தை பிறந்தது. அவனே தேவர்களுக்குத் தலைவனாய் இருப்பான் என்றும் இந்திர பதவி வகிப்பான் என்றும் தெரிய வந்தது.

திதிக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் தங்கை அதிதிக்குக் குழந்தையும் பிறந்து மஹா பராக்கிரமசாலியான இந்திரனாகவும் அது ஏற்பட்டதை அறிந்து சற்றுப் பொறாமையுடனேயே காச்யபரிடம் போய்ப் பிள்ளை வரம் கேட்டாள் திதி. இந்திரனைப் போன்ற சகல உலகங்களும் போற்றும் வண்ணம் ஒரு குழந்தையை வேண்டினாள். அவளை தேவிக்கு விரதம் இருக்கச் சொன்னார் காச்யபர். முறைப்படி விரதம் இருந்தாள் திதி. உரிய நாளில் கருவுற்றாள். அவள் கருவுற்றதைக் கேள்விப் பட்ட அதிதிக்குப் பொறாமை மேலோங்க, நெஞ்சில் வஞ்சம் ஏற்பட்டது. தன் உடன் பிறந்த அக்காவாகவே இருந்தாலும் அவள் மகன் தன் மகனை விட மேலோங்கி இருப்பதை அவளால் பொறுக்கமுடியாது போல் இருந்தது. ஆகவே தன் மகனான இந்திரனை அழைத்து, “உன் பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தை உனக்கு எதிரியாகி விடுவான். உன் இந்திர பதவிக்கும் ஆபத்து ஏற்படும். சகல உலகும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்.” என்று கூறி வருந்தினாள். தாயின் துயர் கண்ட இந்திரன் பதவி ஆசையால் இயல்பாய்ப் பெரிய தாயாரிடம் ஏற்பட்ட பாசத்தைக் கூட மறந்து அவள் சிசுவைக் கர்ப்பத்திலேயே கொன்றால் என்ன என்று எண்ணினான். இதை எவ்விதம் முடிப்பது என யோசித்து திதியிடம் சென்றான். திதி மிகச் சிறந்த தேவி பக்தை. தேவிக்கு வழிபாடுகள் செய்யும் அவளுக்கு உதவிகள் செய்வது போல் நடித்துப் பணிவிடைகள் செய்தான் இந்திரன். திதியும் அதை உண்மையான அன்பு என எண்ணி இருந்தாள்.

ஒருநாள் வழிபாட்டின்போது விரதம் இருந்த அசதியாலும், கர்ப்பிணிகளுக்கே இயல்பான தளர்ச்சியாலும் திதி தன்னை மறந்து தூங்கினாள். தூங்கும்போது அவள் வாய் சிறிதே திறந்திருந்தது. இந்திரன் தன் சக்தியால் மிகச் சிறிய வடிவெடுத்து அவள் வாயின் வழியாக உள்ளே நுழைந்து கர்ப்பைப் பையை அடைந்து கர்ப்பத்தைச் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் கொன்றான். பின்னர் வெளியேறித் தன் தாயிடம் சென்று வெற்றி வீரனாய்த் தான் வந்திருப்பதைப் பெருமையுடனும் மகிழ்வுடனும் தெரிவித்தான். அவன் தாயும் மகனின் திறமையை எண்ணி மகிழ்ந்தாள். அப்போது கர்ப்பம் கலைந்ததால் கண் விழித்த திதி தன் தங்கையிடம் தன் துயரத்தைச் சொல்லி அழவேண்டும் என எண்ணிச் சென்றபோது தாயும், மகனும் பேசி மகிழ்ந்ததைக் கேட்டு மனம் மிகவும் நொந்து போனாள். தன் உடன் பிறந்த தங்கையே தன் குழந்தைக்கு எமனாய் வந்ததை எண்ணிக் கதறி அழுத வண்ணமே அவள் தன் தங்கையிடம், “என் குழந்தையைக் கர்ப்பத்திலேயே கொன்ற நீ, உன் குழந்தைகள் பிறந்ததுமே அடுத்தடுத்துக் கொல்லப் படுவதைக் கண் முன்னால் காண்பாய்! நீ பெற்ற குழந்தைகளை உன்னால் வளர்க்க முடியாமல், பாலூட்டிச் சீராட்டித் தாலாட்ட முடியாமல் குழந்தையை எண்ணி எண்ணிக் கலங்குவாய். எனக்கு இப்போது ஏற்பட்டிருப்பதை விட அதிக மடங்கு புத்திரசோகம் உனக்கு ஏற்படட்டும்.” என்று சாபம் கொடுத்தாள். அதிதி தன் கணவரான காச்யபரிடம் நடந்ததைச் சொல்லித் தன் அக்காவின் சாபத்தையும் சொல்லி மன்னிக்குமாறு கேட்க, அவரோ, “திதி தான் மன்னிக்கவேண்டும்.” என்று சொல்லி அவளிடம் அழைத்து வந்தார். இருவரையும் சேர்த்துப் பார்த்த திதி, காச்யபரும் இந்தச் செயலுக்கு உடந்தை என எண்ணிக் கொண்டு, “என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேர்த்தே!” என்று சொல்லிவிடுகிறாள். ஒருபாவமும் அறியாத காச்யபர் அவசரப் பட்டுவிட்டாயே திதி என எண்ணிக்கலங்கினார். என்றாலும் சாபம் விடவில்லை. இந்த அதிதிதான் தேவகியாகவும், காச்யபரே வசுதேவனாகவும் பிறந்து புத்திர சோகத்தில் துடிதுடித்தனர்.


அடுத்து ஜராசந்தனின் பூர்வீகம் வரும். இதுவும் இந்தத் தொடருக்குத் தேவையான ஒன்று.

Monday, September 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல் யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது? வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும் அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும். இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப் போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்? என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத் தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பினான். செய்தியில் யாதவ சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டிய கூட்டம் எனவும், இது கம்சனின் ஆணை எனவும் சொல்லி அனுப்பினான். கூட்டத்தின் கலந்துரையாடல் ரகசியமாக வைக்கப் படும். ஆகையால் இது ஓர் அவசியமான ரகசியக் கூட்டம் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டது. அதோடு பொதுமக்களுக்கு அன்றிலிருந்து பதினைந்தாம் நாள், கம்சன் அஸ்வமேத யாகத்துக்குச் சென்று வந்ததையும், வென்று வந்ததையும் கொண்டாடும் வகையில் ஒரு தனுர் யாகம் நடத்தப் போவதாயும், அந்த யாகத்துக்கு முந்திய ஒரு வாரமும் பலவிதமான கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டது. கொண்டாட்டங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தவிரவும், வீரர்களின் மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள், யானைகளின் சண்டைகள், வாள் வித்தை, வில் வித்தை போன்ற பல்வேறு விதமான போட்டிகளும் தேர்ச்சி பெற்ற சிறந்த வீரர்களால் நடத்தப் படும் எனவும் போட்டியில் வென்றவர்களுக்குப் பல்வேறுவிதமான பரிசுகள் காத்திருப்பதாயும் அறிவிக்கப் பட்டது.

பூதனையின் கணவனும், கம்சனின் படைத் தளபதியும் ஆன ப்ரத்யோதா மனைவி இறந்ததில் இருந்தே மனத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். தானோ, தன் மனைவியோ சரியான பாதையில் செல்லவில்லை என்பதும், அதன் காரணமாகவே இந்தத் துன்பம் என்பதும் அவனுக்கு நன்கு புரிந்தாலும், வெளிப்படையாகக் கம்சனின் ஆணையைச் சிரமேல் ஏற்று அதை நடத்த முனைந்தான். ஆனாலும் கம்சன் அவனை நம்பவில்லையோ? வெளிப்படையாக ப்ரத்யோதா தான் இந்த யாகத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப் போகின்றான் என்று இருந்தாலும், கம்சன் ரகசியமாய்த் தன் அருமை மனைவியும் ஜராசந்தனின் மகளும் ஆன மகத இளவரசியின் உறவினன் ஆன வ்ருத்திர்க்ஞன் என்பவனையே அழைத்து அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி அவன் மூலம் நடத்திக் கொண்டான். அதோடு இல்லாமல் ப்ரத்யோதாவுக்கு இன்னும் அதிர்ச்சி அளிக்கும் விதமாய் கம்சனின் மெய்க்காப்பாளர்களாய் இருந்த ப்ரத்யோதாவின் வீரர்கள் திருப்பி அனுப்பப் பட்டு அந்த இடத்தில் இப்போது விர்த்திர்க்ஞனின் வீரர்கள் பொறுப்பை ஏற்றிருந்தனர். கம்சனுக்குத் தன்னிடம் சந்தேகம் என்பதும், அதை அவன் வெளிப்படையாகக் கேட்காததும் ப்ரத்யோதாவின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்நாள் பூராவும் இந்த அரக்கனுக்குப் பணிவிடை புரிந்து வந்தும், பல்வேறு கொடிய செயல்களை இவன் செய்யச் சொல்லிச் செய்தும், இவனுக்கு நம்மிடம் நம்பிக்கை வரவில்லையே! இந்த மூடனுக்காக நான் என் மனைவியையே இழந்து என் குழந்தைகளையும் இழந்தேனே! மனம் நொந்தான் ப்ரத்யோதா.

ப்ரலம்பனின் கடைசி நிமிடங்கள் அவனுக்கு மறக்கவே முடியாத ஓர் அனுபவமாக அமைந்தது. வெளியே காவல் காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அவன் காதுகள் உள்ளே நடப்பதையே கூர்மையாகக் கவனித்துக் கிரஹித்துக் கொண்டிருந்தது. கடைசியில் ப்ரலம்பன் சொன்னது, “இவன் அந்த மஹா வாசுதேவனே! சாட்சாத் அந்தப் பரம்பொருளே!” என்றல்லவோ சொன்னான். ஆஹா, இது உண்மையாகவே இருக்கவேண்டும். அதான் இந்தக் கிழவன் ப்ரலம்பன் அந்த நந்தனின் குமாரனை எவ்விதமான இடையூறும் கொடுக்காமல் வளரவிட்டானோ? நம்மையும் அணுகவிடவே இல்லை, தானும் எந்தத் தொந்திரவும் கொடுக்கவில்லை. அதோடு அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த நந்தனின் குமாரனாய் வளர்பவன் வாசுதேவ கிருஷ்ணன் என்றும், தேவகியின் எட்டாம் குழந்தை, கம்சனின் யமன் என்பதும் தெரிந்தே வளரவிட்டிருக்கிறான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? ஆனால் பூதனை தேவகிக்குப் பெண்குழந்தை பிறந்ததாக அன்றோ சொன்னாள்? அவள் ஏன் அப்படிச் சொல்லவேண்டும்? அந்தப் பெண் குழந்தையைக் கம்சன் தூக்கியபோது அது ஏன் ஒரு விசித்திரக் கூச்சலுடன் கையை விட்டு நழுவிச் சென்றது? பூதனை ஏன் கோகுலத்துக் குழந்தைகளுக்கு விஷப் பால் ஊட்டச் சென்றாள்? ஒருவேளை, ஒருவேளை இப்படியும் இருக்குமோ?? பூதனைக்குத் தெரிந்திருக்கும் இவன் தான் நம்மைக் காக்கவல்ல ரக்ஷகன் என்று. அவனைக் கம்சனிடமிருந்து காக்கவும், எல்லாத்துக்கும் மேலே நம்மையும், நம் குழந்தைகளையும் காக்கவும் இப்படிச் செய்திருக்கலாமோ?

ப்ரலம்பனுக்கு மட்டுமில்லாமல் பூதனையும் அறிந்திருக்கிறாள் அந்தக் குழந்தைதான் காக்கும் கடவுள் என்று. இப்போது கம்சன் ஏதோ திட்டம் தீட்டுகிறான், அனைத்து யாதவர்களையும் ஒருசேர அழிக்கவேண்டும் என்று நினைக்கிறான். அது நடக்குமா? இப்போது நான் என்ன செய்வது? என்னுடைய சொந்த யாதவகுலத்துத் தலைவர்கள் அனைவரும் அழியக் காரணமாய்க் கம்சனுக்கு நான் உதவி செய்யவேண்டுமா? நானும் ஒரு தலைவன் தானே. கம்சனின் ஒரு கருவியாக நான் செயல்படவேண்டுமா? கம்சனுக்கு நான் உதவுகிறேன் என்றால் மட்டுமே எனக்கு இங்கே மதிப்புக் கொடுப்பான் கம்சன். அனைத்துத் தலைவர்களையும் அழித்தாலும் என்னை மட்டும் விட்டு வைப்பானோ? சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ப்ரத்யோதாவுக்கு அப்போது வந்த செய்தியால் சிந்தனை அறுபட்டது. கம்சன் உடனே வந்து அவனைக் காணச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறான். சேச்சே! இப்போது இருக்கும் மனநிலையில் கம்சனைக் காணவே பிடிக்கவில்லையே! அதுவும் இப்போது நாம் நினைப்பதை எல்லாம் கம்சன் அறிந்துவிட்டானானால். அவனுக்கு என்னமோ மனதை ஊடுருவிப் பார்க்கும் திறன் இருக்கிறது. அதுவும் இப்போது கம்சன் அவனுடைய பயத்தையும், நடுக்கத்தையும் உதறிவிட்டவன் போல் இருக்கிறான். ஏதோ திட்டம் அவன் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய நிதானமும், அதீதப் பணிவும் அவன் ஏதோ துர்நோக்கத்துடன் கூடிய திட்டம் ஒன்றை நிறைவேற்றப் போகின்றான் என்றே அறிவிக்கிறது. வேறு வழியே இல்லை. ப்ரத்யோதா கம்சனிடம் சென்றான்.

அவனைக் கண்டதும் கம்சன் மகிழ்ந்தவன் போல, “ நண்பா, நீ உடனே சென்ரு அக்ரூரரை அழைத்து வா. அல்லது அவரிடம் சொல். அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒன்று சேர்த்து அழைத்து வரும்படிச் சொல்லு. அதுவும் நாளை மதியம் நான் அனைவரையும் காண விரும்புவதாய்ச் சொல்லு.”

“அனைவரையுமா”

“ஆம், அனைவரையும். அவர்கள் அனைவரிடமும் நான் பேசி சமாதானமாய்ப் போக விரும்புகிறேன். ஆகையால் அனைவரையும், வரச் சொல்லு. புரிகிறதா ப்ரத்யோதா? ஒருவரும் விடக் கூடாது. என் தந்தையும் கலந்து கொள்ளப் போகின்றார் இந்தக் கூட்டத்தில்.”

“உத்தரவு, அரசே!” ப்ரத்யோதா கேட்டான், “ நானுமா கலந்து கொள்ளவேண்டும்?”
“நிச்சயமாய்! நிச்சயமாய்! நீ இல்லாமல் கூட்டமா?”
கம்சனின் போலிப் பணிவு வெளிப்பட்டது அவன் குரலில். ப்ரத்யோதா இந்தப் பணிவைக் கண்டு வெறுத்தான், பயந்தான். “சரி, உத்தரவு அரசே! என்றால் கூட்டம் நடக்கும் வேளையில் என்னுடைய வீரர்களைக் காவலில் அமர்த்தலாமா? நானும் காவலில் தானே இருக்கவேண்டும்?”

“உன்னை நீயே கஷ்டப் படுத்திக் கொள்ளாதே நண்பனே! இளவரசன் வ்ருத்திர்க்ஞன் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுவான்.”

“உத்தரவு அரசே!”

”சரி, அக்ரூரர் என்ன சொல்லுகின்றார் என்பதை என்னிடம் வந்து சொல்லு.” கம்சன் ப்ரத்யோதாவைப் போகலாம் எனச் சைகை காட்டினான். ப்ரத்யோதாவிற்குத் தன் காதுகளை நம்பமுடியவில்லை. இரக்கமற்ற இந்த அரக்கன் இப்போது சமாதானமா பேசப் போகின்றான். தன்னுடைய சொந்த ஒற்றர்களைத் திரட்டி மாளிகையில் நடப்பது பற்றி ஓரளவு அறிந்து கொண்ட ப்ரத்யோதா அக்ரூரரைக் காணச் சென்றான். தலை நரைக்கத் தொடங்கி இருந்த அக்ரூரர் ப்ரத்யோதாவின் வரவினால் ஆச்சரியம் அடைந்தார். அவருடைய சாந்தமான கண்கள் மட்டுமின்றி, முகமும் ப்ரத்யோதாவை வரவேற்றது. கம்சனின் செய்தியை ப்ரத்யோதா சொன்னதுமே, அக்ரூரருக்கும் இது கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது. “இது என்ன எதிர்பாராமல் இப்படி ஒரு கட்டளை?” என்று கேட்டார் அக்ரூரர், ப்ரத்யோதாவிடம். “தெரியவில்லை, எனக்கும் ஆச்சரியமாய்த் தான் இருந்தது. சற்றுமுன்னரே மன்னர் இதை என்னிடம் சொன்னார்.” என்றான் ப்ரத்யோதா.

“ம்ம்ம்ம்ம் நீ தான் தனுர்யாகம் பொறுப்பை ஏற்றிருக்கிறாயாமே? மாளிகைக் காவல் இப்போது உன்னிடம் இல்லையாமே? “ அக்ரூரர் கேட்டார். இந்த நல்ல மனிதனை ஏமாற்றி என்ன சாதிக்கப் போகிறான் கம்சன்? ப்ரத்யோதாவிற்கு அவரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அக்ரூரர் மேலும் கேட்டார். “ எங்கள் அனைவரிடமும் கம்சன் கோபமாக இருப்பதாகவே அறிந்தேன். அப்புறம் எப்படி இப்படி ஒரு கட்டளை?”

“ஆம், ஐயா, ஆனால் இன்று கம்சனைப் பார்த்தால் மனம் சமாதானம் அடைந்தவனாய்த் தோன்றினான். மிகவும் சிநேகிதமாய்ப் பேசினான்.”

“ஏன் இந்த திடீர் மாற்றம்?”

தயங்கிக் கொண்டே, “தெரியாதே!” என்றான் ப்ரத்யோதா. இந்த நல்ல மனிதனிடம் பொய் சொல்லவேண்டி உள்ளதே, நான் சொல்வது பொய் என்பதை இவர் கண்டு கொள்வாரா? இவரைக் காணவே வெட்கமாயும் உள்ளது. “ம்ம்ம்ம்ம்ம் ப்ரத்யோதா, நீ மன்னனுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்த மாற்றம் உண்மையா? அல்லது அனைவரையும் வரவழைத்து ஒரே இடத்தில் அனைவரையும் கொல்ல ஏதாவது திட்டமா? அப்படி ஒன்றும் நேர்மையானவனாய்த் தெரியவில்லையே இந்த இளவரசன் கம்சன்.” அனைவரும் கம்சனை மன்னன் எனவே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் உக்ரசேனர் உயிருடன் இருப்பதால் அக்ரூரரால் அவனை மன்னனாக ஏற்கமுடியவில்லை. ப்ரத்யோதாவோ தவித்தான். ரிஷியைப் போன்ற புனிதமான இந்த மனிதரிடம் அதுவும், நம் உறவினர்களுள் தலைமை ஸ்தானம் வகிப்பவர், அனைவராலும் வணங்கப் படுபவர் இவரிடம் போய்ப் பொய் சொல்லும்படி செய்துவிட்டானே இந்தக் கம்சன். அவரை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை ப்ரத்யோதாவிற்கு. “இளவரசருக்கு ஏதானும் திட்டம் இருக்கலாம். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.” என்று பொதுவாய்ச் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம் “ அக்ரூரரும் யோசித்தவண்ணமே கேட்டார், “ஏதேனும் துர்நோக்கம் வைத்திருப்பானோ?” “இருக்கலாம்” என்று சொல்லும் வண்ணம் தலையை ஆட்டினான் ப்ரத்யோதா. அப்போது அங்கே ஒரு இனிமையான குரல் கேட்டது. “வணங்கத் தக்கவரே, வருகிறீர்களா?? கர்காசாரியார்……………

ப்ரத்யோதாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி சிறு கூடு போன்ற உடலோடு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வயது முப்பதுக்கு மேல் இருக்காது, ஆனால் அவள் தலையோ நரைத்துப் போய், முகத்தில் சோகத்தின் எல்லை மீறிப் போய், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சோக உணர்வு நிரந்தரமாக முத்திரை இட்டுப்போயிருந்தது. யார் இவள்? உள்ளே வந்த அவள், தன் பேச்சை நிறுத்திக் கொண்டு பயத்தோடு ப்ரத்யோதாவைப் பார்த்தாள். அவள் பயம் அவள் கண்களில் தெரிந்தது. அக்ரூரர், “வா, தேவகி” என அவளை வரவேற்றார். என்ன????? இவளா தேவகி? உலகத்துச் சோகமெல்லாம் ஒன்று சேர்ந்து ஓருரு எடுத்து வந்தாற்போல் இருக்கிறாளே? அக்ரூரர், “இதோ இவன் யார் தெரிகிறதா?ப்ரத்யோதா, நம் யாதவ குலத்தின் அந்தகப் பிரிவைச் சேர்ந்த தலைவன் இவன், தெரியுமா?” என்று தேவகியைக் கேட்டார். தேவகிக்கு அவன் யாரென முதலில் புரியவில்லை. புரிந்ததும் அவள் உடலே நடுங்கியது. முகம் வெளுத்துக் கைகள், கால்கள் நடுங்க ஆரம்பித்தன. கீழே விழுந்துவிடுவாள் போல் இருக்கவே பக்கத்தில் உள்ள கதவைப் பிடித்துக் கொண்டாள். எந்த நிமிஷமும் மயங்கிவிழுந்துவிடுவாளோ என நினைக்கும்படியாகத் தோற்றமளித்தாள். வாயைத் திறக்காமலேயே தலையை மட்டும் ஆட்டி “தெரியும்” என்பதைச் சொன்னாள்.

Friday, September 11, 2009

இறவாத் தமிழன்!


"என்றுமிருக்கவுளங்கொண்டாய்
இன்பத் தமிழுக்கிலக்கியமாய்
இன்றுமிருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடிருப்பாய் நீ!"


கவிதையும் பாரதியுடைய கவிதையே. இறவாமை என்ற தலைப்பில் தாயுமானவரை வாழ்த்தி எழுதிய கவிதையின் முதல் நான்கு வரிகள். அம்பியோட பின்னூட்டத்தைப் பார்த்ததுமே இதைக் குறிப்பிடாததால் எல்லாரும் எழுதினது நான் தான்னு நினைச்சுக்கப் போறாங்களேனு பயம்! :)))))) கவிதை எல்லாம் எழுதி யாரையும் பயமுறுத்தறதா இல்லை. பாரதிக்கு அஞ்சலி!

Tuesday, September 08, 2009

கண்ணன் வருவான், கதை சொல்வான் - கம்சனின் கலக்கம்!


கண்ணை மூடினால் கண்ணன் வந்து தன்னைக் கொல்லுவதாய்த் தோன்றியது கம்சனுக்கு. அந்தப்பிள்ளையை அவன் பார்த்ததே இல்லை. என்றாலும் ஒருவேளை தேவகியின் மகனாய் இருக்கக் கூடும் என்ற சாத்தியமே போதுமானதாய் இருந்தது. கனவிலும், நனவிலும், , வந்து தொந்திரவு கொடுத்தான் அந்தச் சிறுவன். எக்காளமிட்டுச் சிரித்தான். கம்சனுக்கு அன்றிரவு தூக்கமே இல்லை. தூங்க முற்படும்போதெல்லாம் கெட்ட கனவு கண்டு விழித்து எழுந்தான். சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டு தன் அரண்மனையில் தன் பிரத்யேகப் படுக்கை அறையில் காவலாளிகள் காவல் காக்கத் தூங்குவதை நிச்சயம் செய்து கொண்டான். இரவுப் பொழுது கழிந்து மறுநாள் காலை புலர்ந்தது. கம்சன் மரணப்படுக்கையில் இருக்கும் தன் முதல் மந்திரியான ப்ரலம்பாவை அன்று எப்படியேனும் சென்று பார்த்துவிடுவது என நிச்சயம் செய்து கொண்டான். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நடக்கவோ, நிற்கவோ முடியாமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருக்கும் முதன்மந்திரியைக் காணத் தன் ரதத்தில் சென்றான். தன்னுடன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்துச் சென்றான்.அங்கே படுத்துக்கிடக்கும் ப்ரலம்பாவைக் கண்ட கம்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அரை நினைவோடு இருந்த மந்திரியைக் கண்டு கூட கம்சன் தன் காரியத்தையே குறியாக நினைத்தான்.

ப்ரத்யோதாவை வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு ப்ரலம்பாவின் வீட்டு மனிதர்களையும், மற்றவர்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவனுக்கு இருந்த ஆத்திரத்திலும், அவசரத்திலும் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல் அரை நினனவில் இருந்த அந்த மனிதனைப் போட்டு உலுக்கிச் சுயநினைவுக்குக் கொணர முனைந்தான் கம்சன். ஆனால் அவனோ, கண்ணைத் திறப்பதும், மீண்டும் மயங்குவதுமாகவே இருந்தான். கடும் பிரயத்தனத்தின் பேரில் ப்ரலம்பன் தன் கண்களைத் திறந்து பார்த்து கம்சனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தன் கைகளைக் கூப்பி வணங்க முற்பட்டான். கம்சன் விடவில்லை. இவனிடம் எப்படியாவது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமே?

“ப்ரலம்பா, நான் யார் தெரிகிறதா? பேசுவது காதில் விழுகிறதா?”
மேலும் இருமுறை கேட்டதும், ஒரு சிறிய கண்ணசைவினாலும், மெல்லிய குரலினாலும் ப்ரலம்பன் பதில் கொடுத்தான்

“ப்ரலம்பா, நன்றாய்க் கேள், யாரோ கிருஷ்ணனாமே? நந்தனின் மகனாமே? உனக்கு அவனைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்புறம் ரோஹிணிக்கும் ஒரு மகன் பிறந்திருக்கிறானாமே? பலராமன் என்று பெயராமே? கேள்விப் பட்டாயா?”

“ம்ம்ம்ம்” மெல்லிய முனகல் ப்ரலம்பனிடமிருந்து. “ஆஹா, அதுவும் அப்படியா, ப்ரலம்பா, இந்தக் கிருஷ்ணன் தானே பூதனையையும் திரிணாவிரதனையும் கொன்றது?” மீண்டும் மெல்லிய குரலில், “ம்ம்ம்ம்ம்ம்” என்றே பதில் வந்தது.

“அந்தக் கிருஷ்ணன் இப்போது பலசாலியாகவும், மிகவும் அழகாயும், அனைவரையும்கவரும் வண்ணமும் வளர்ந்திருக்கிறானாமே? அதுவும் அறிவாயா?”

“ம்ம்ம்ம்ம்ம்” மீண்டும் அதே குரல் ப்ரலம்பனிடமிருந்து. கம்சன் பல்லைக் கடித்தான். கடித்த பற்களினூடே கேட்டான்.” கிருஷ்ணனிடம் எல்லா கோபர்களும், கோபிகளும் உயிரையே வைத்திருக்கின்றார்களாமே? “
“ம்ம்ம்ம்ம்ம்ம், ஆம்”
“காலியன் என்ற கொடிய விஷநாகத்தைக் கூடக் கட்டி அடக்கிவிட்டானாமே?”
“ஆம் ஐயா” மிக மிக மெல்லிய குரலில் ப்ரலம்பன் சொல்கின்றான்.
அவ்வளவு தான், பாய்ந்தான் கம்சன். “முட்டாளே, அடி முட்டாளே, என்ன செய்து கொண்டிருந்தாய் இவ்வளவு வருஷங்களாய்? அவனை இவ்வளவு ஆகிருதியுடன் பலவானாக, இளைஞனாக வளரும்வரையில் நீ என்ன செய்தாய்? எப்படி அனுமதித்தாய்?” கம்சனின் கோபம் எல்லை மீறியது. ஆஹா, இவன் மரணப்படுக்கையில் இருந்தால்தான் என்ன? இவனைக் கொன்று விடலாமா? கம்சனின் கைகள் பரபரத்தன ப்ரலம்பனைக் கொல்வதற்கு.

அவனுடைய மந்திரியோ ஓரளவு தூக்க முடிந்த இடக்கையைத் தூக்கிக் கையை விரித்து, “நான் என்ன செய்திருக்க முடியும்?” என்று கேட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். இரக்கமற்ற கம்சனோ அவனைப் போட்டு உலுக்கு உலுக்கு என உலுக்கினனன். மீண்டும் பிரயத்தனத்துடன் கண்களைத் திறந்து பார்த்தவனைக் கம்சன், “இவனைப் பற்றிய தகவல்கள் உனக்கு வந்தனவா இல்லையா?” என்று கேட்டான். “ஆம் , வந்தன” என்றான் ப்ரலம்பன். “ அப்படியா? அப்படி என்றால் இந்தப் பையன் விருந்தாவனத்து கோபர்களையும் மற்ற மக்களையும் இந்திரவிழாவுக்குப் பதிலாக தன்னைத் தானே கடவுள் ஆக்கிக் கொண்டு தனக்குத் தானே விழா எடுத்துக் கொண்டான். அப்படித் தானே?”

அவ்வளவு உடல் பலஹீனத்திலும் கடுமையாக மறுத்தான் ப்ரலம்பன். “இல்லை, ஐயா, இல்லை” என்றான்.

“சரி, அப்படியே இருக்கட்டுமே, ஆனால் அவன் பசுக்களையும், மரங்கள், மலைகளையும், முக்கியமாய் கோவர்தனத்தையும் வழிபட்டு விழாவை மாற்றினான் இல்லையா? அது அவன் வேலை தானே?”

“ஆம்”
“ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?”
பேசமுடியாத ப்ரலம்பன் ப்ரத்யோதாவை நோக்கிக் கை காட்ட, கம்சன், “ஓ ப்ரத்யோதாவுக்குத் தெரியும் என்கின்றாய், அப்படித் தானே?” என்று கேட்க, ப்ரலம்பன், “ஆம்” என்று பதில் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம்ம் அப்போ, கிருஷ்ணனும் சேர்ந்து வழிபடப் பட்டிருக்கிறான் அந்த விழாவில், அதுவும் உண்மை, அப்படித் தானே?” கம்சன் அதட்டினான். ஆனால் ப்ரலம்பன் வாயைத் திறக்கவே இல்லை. “”””’ம்ம்ம்ம்ம்., இந்தக் கிருஷ்ணன் தான், முரட்டுத் தனம் நிறைந்தது என்றும் பைத்தியமோ எனவும் சொல்லப் பட்ட காளை அரிஷ்டனையும், முரட்டுக் குதிரை கேசியையும் கொன்றதும் இவன் தானோ? ப்ரத்யோதாதான் அதை ஏற்பாடு செய்திருந்தான் அல்லவா?” ப்ரலம்பன் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது எனச் சைகை மூலம் தெரிவித்தான். கம்சனுக்கு மீண்டும் எல்லை மீறிய கோபம் கொந்தளித்தது.

தன் கோபத்தை அடக்கவே முடியாமல் அவன் அந்த இறந்து கொண்டிருக்கும் மனிதனிடம் சொல்கின்றான்:” இதோ பார் ப்ரலம்பா, நீ மட்டும் எனக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு மேல் சேவை செய்திருக்காவிட்டால் இந்நேரம் நான் உன்னைக் கொன்றிருப்பேன். அதுவும் இதோ இந்த நிமிஷமே, என் வெறும் கைகளாலே உன்னைக் கொல்ல வேண்டும்போல் உள்ளது. உன்னை நம்பி என் அரசுப் பொறுப்பையும், அரசு நிர்வாகத்தையும் ஒப்படைத்ததற்கு நீ என்னை நன்றாக ஏமாற்றிவிட்டாய். உன்னுடைய பலஹீனத்தினால் என்னுடைய யாதவத் தலைவர்கள் இன்று ஒன்று கூடி என்னை எதிர்க்கும் வல்லமை பெற்றிருக்கின்றனர். இவர்களை நான் இங்கு இருக்கும்போது நசுக்கிக் கொண்டிருந்தேன். இன்று துளிர்த்துவிட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக நீ இந்தக் கிருஷ்ணனை இடைச்சிறுவனை இவ்வளவு தூரம் வளரும்படிச் செய்துவிட்டாய். அவனுடைய வல்லமையைப் பார்த்தால் இந்த மதுராபுரி மக்கள் அவன் தான் தங்களைக் காக்க வந்த கடவுள் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ப்ரலம்பா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்.”

ப்ரலம்பன் மிகுந்த கஷ்டத்துடன் தன் இருகைகளையும் கூப்பிக் கம்சனை வணங்க முற்பட்டான். பல்லைக் கடித்த கம்சன், “போலி வேஷதாரியே, நிறுத்து உன் வேஷத்தையும், நாடகத்தையும். உனக்கு என்னிடம் விசுவாசம் என்பதே கிடையாது. இரு, இரு, உனக்குக் கொஞ்சமாவது விசுவாசம் இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது சொல்லு. இதுவே உன்னிடம் நான் கேட்கும் கடைசி உதவி.” என்றான். ப்ரலம்பன் என்ன என்பது போலப் பார்த்தான். கம்சன் குனிந்து மிக மிக மெதுவாக ரகசியக்குரலில் கிசுகிசுப்பாகக் கேட்டான், “ இவன், இவன் , இந்த நந்தனின் மகன் என்கின்றார்களே, இவன் தான் தேவகி பெற்ற எட்டாவது பிள்ளையா?? “ அவன் கேட்டது என்னமோ மெதுவாய்த் தான். ஆனால் ப்ரலம்பனுக்கு அது ஒரு மிரட்டலாகவே தொனித்தது. அவன் வாயே திறக்கவில்லை.

“ஆஹா, பேசு, ப்ரலம்பா, பேசு, ஒரு பிராமணன் ஆன உன்னைக் கொல்லவேண்டும் என்ற என் ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை என்றால், நீ ஒரு பிராமணன் என்றும் பார்க்காமல் கொன்றே விடுவேன். சொல், அவன் தேவகியின் எட்டாவது பிள்ளையா?”
மிகுந்த கஷ்டத்துடன், சிரமத்துடன், தன் தலையையும் ஆட்டி, வாயினாலும், “ஆம்” என்று சொல்வதற்குள் ப்ரலம்பன் பட்ட கஷ்டம் அவனுக்கு மட்டுமே புரியும். “துரோகி, பச்சைத் துரோகி, என் உப்பைத் தின்றுவிட்டு எனக்கே துரோகமா செய்தாய்? நன்றி கெட்டவனே, ஏன் என்னிடமிருந்து மறைத்தாய் இந்த விஷயத்தை, சொல், இப்போதே சொல்.” உலுக்கினான் கம்சன் ப்ரலம்பனை. ப்ரலம்பனுக்கு உடல் ஆட்டம் கண்டு விட்டது. ஏற்கெனவே நோயின் கடுமையால் ஆட்டம் கண்டிருந்த உடல் இப்போது கம்சனால் மிகவும் தளர்ந்துவிட்டது. அவனால் கண்களையும் திறக்கமுடியவில்லை, பேசவும் முடியவில்லை. ஆனால் கம்சனும் விடவில்லை. மீண்டும், மீண்டும் உலுக்கிக் கேட்டான். ஏன், ஏன் ஏன்” இதுதான் கம்சனின் கேள்வி, மிகுந்த ப்ரயத்தனத்துடன் இது தான் தன்னுடைய கடைசி வார்த்தை என்பது போல் கஷ்டத்துடனேயே ப்ரலம்பன் சொன்னான். “ ஏன் என்றால், என்றால் மரியாதைக்குகந்த, முக்காலமும் தெரிந்த வியாசர் சொன்னார், இவன் அந்த வாசுதேவனே, சாட்சாத் மஹாவாசுதேவன்!" வாசுதேவன் என்ற உச்சரிப்பைச் சொன்ன மாத்திரத்தில் ப்ரலம்பனின் தலை சாய்ந்தது. தொண்டையில் இருந்து “க்ளக்” என்னும் ஒரு சப்தம் மாத்திரமே வந்தது. அப்புறம் அவனிடம் அசைவே இல்லை. கம்சன் அவனை பார்த்து மிரண்டான். ப்ரலம்பன் இறந்துவிட்டான். மரணம் ப்ரலம்பனுக்கு ஏற்பட்டதை நேரில் பார்த்ததினால் ஏற்பட்ட பயம் இன்னும் அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் இப்போதே தன்னையும் மரணம் துரத்துகின்றதோ என்ற பய உணர்வோடேயே அங்கிருந்து வேகமாய்ச் சென்றான் கம்சன்.