எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 27, 2009

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!

அப்பு ஊருக்குப் போயாச்சு. யு.எஸ். போய்விட்டது. அடுத்த வரவு இனி எப்போவோ தெரியலை!

வெறுமை, தனிமை! நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் அல்லது இனிய கனவொன்றைக் கண்டாற்போல் எண்ணம். மூன்று மாதங்கள் போனது தெரியவில்லை. வந்த புதுசில் நேரமாற்றத்தாலும், இடம் மாற்றத்தாலும், புதிதாய்ப் பார்ப்பதாலும் அழுது கொண்டிருந்தது. ஆனாலும் அது ஒரு பத்து நாளைக்குத் தான். அந்தப் பத்து நாளைக்குப் பின்னர் ஆரம்பிச்சு அது அடிச்ச கொட்டம் இருக்கே! காலம்பர எழுந்ததும், நேரே சமையலறைக்கு வந்துடும் தேடிண்டு. அன்னிக்குக் குடிக்கவேண்டிய ஜூனியர் ஹார்லிக்ஸைக் குடிச்சுட்டு, சமையலறையில் அதன் உயரத்துக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுக்கும். எட்டாவிட்டால் வீல் என்று ஒரு கத்தல், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால் எம்பி எதையாவது எடுத்துக் கொண்டிருக்கும்.

போய் வாங்கினால் சமர்த்தாய்க் கொடுத்துடும், உடனேயே அடுத்த விஷமம் ஆரம்பிக்கும். ஸ்பூன் ஸ்டாண்டை எவ்வளவு தள்ளி வச்சாலும் எம்பி எடுத்துடும். ஒரு ஸ்பூனை எடுத்துக் கொண்டு அதிலே கையில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம் எதையாவது எடுத்து அந்த ஸ்பூனில் வச்சு ஆடாமல், அசையாமல் எடுத்துப் போய் ஸ்வாமி அலமாரியில் ஸ்வாமிக்கு நைவேத்தியம் நடக்கும். அதுக்கு அப்புறம் வஜ்ராசனம் போஸில் உட்கார்ந்து ஸ்வாமியோடு பேச்சு, நடு நடுவில் கோலத்தை அழித்தல், இல்லைனா மறுபடி எழுந்து வந்து மிக்ஸியில் அரைக்கும்போது கலக்க வைத்திருக்கும் ப்ளாஸ்டிக் கரண்டியை எடுத்துக் கொண்டு, உ.கி. வெங்காயம் அல்லது எலுமிச்சம்பழம் பந்தாக மாறும். பந்தை அடிக்கிறாப்போல் அடிக்கும். எப்போவும் பிசியாக ஏதேனும் வேலை எனக்குச் சரியாக செய்யும். வேலை செய்யும் பெண் தேய்த்து வைக்கும் பாத்திரங்களை ஒன்றொன்றாய் எடுத்து வந்து தரும். எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடும். சின்னச் சின்னக் கால்களால் ஓடி,ஓடி ஒவ்வொருவரையும் கூப்பிடுவதும், ஸ்வாமிக்கு வைத்த பழைய பூக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னக் கைகளால் எடுத்துக் குப்பை வாளியில் போடுவதும், லொங்கு லொங்குனு ஓடும், அதைப் பார்த்தால் என் கண்ணில் ரத்தம் வரும். ஆனால் அதை உட்காரச் சொன்னால் உட்காராது.

மைக்ரோவேவ் அடுப்பு வைக்கும் ஸ்டாண்டின் அடியில் போய் உட்கார்ந்து நான் ஸ்டிக் தவாவில் கண்ணாடி துடைக்கும் துணியைப் போட்டுச் சப்பாத்தி பண்ணியாகும். சப்பாத்தினு சொல்லவராது. சொதாப்பி தான். சொதாப்பி பண்ணு, சாப்பிடு, சாப்பிடு, மம்மம் இந்தானு என் வாயிலே வந்து திணிக்கும். சில சமயம் அது சாப்பிடும்போதும் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து என் வாயில் ஊட்டுவதும் உண்டு. பீச்சுக்குக் கூட்டிப் போனப்போ அவ்வளவு தண்ணீரைப் பார்த்துட்டு, "கமகம்??" என்று ஆச்சரியத்துடன் பார்த்துப் பார்த்து சந்தோஷம் அடைந்தது. செயற்கை அருவியைப் பூங்காவில் பார்த்தும், "கமகம்?" என ஆச்சரியப் பட்டது. கொஞ்ச நேரம் நான் நின்னால் போதும், " ஐ ஃபிஃப்" ஐ ஃபிஃப்" என்று தொணதொணத்துத் தூக்கச் சொல்லும். ஐ ஃபிஃப் என்றால் பிக் மீ அப் என்று அர்த்தம்.

கோபம் வந்தால் சின்னச் சுட்டுவிரலைச் சுட்டிக் காட்டி "அச்சு" என்று சொல்லிவிட்டு யூ யூ யூ ஐ, ஐ ஐ என்று சொல்லும். அதுக்கு மேலே சொல்லத் தெரியாது. தான் தப்புப் பண்ணிட்டோம்னு தெரிஞ்சால் ஐ ஸோ சாரி, ஐ டிட் மீன் து, ஐ தாமஸ், என்று மன்னிப்புக் கேட்கும். உட்காரணும்னால் சங்க் சங்க், சங்கா என்று சொல்லும். படுக்கிறதுக்கு அழகா லை டவுன் தான். சொன்னதும் படுத்துக்கணும். மேலே ஏறிக் குதிக்கும். இன்னும் சில நாட்களுக்கு யாரேனும் வந்தால் கூட உட்காருனு சொல்லாமல், சங்க், சங்க், சங்கா என்று சொல்லுவோம் போல! இத்தனை நாள் நாங்க சாப்பிட்டதும் மம்மம் தான்,எது குடிச்சாலும் குடிச்சதும் கமகம் தான். தனக்கு ஏதேனும் வேணும்னால் பேபி வாண்ட், யெஸ்ஸ், கம் னு சொல்லிக் கூப்பிட்டுப் பொருளைக் காட்டி எடுத்துத் தரச் சொல்லும். இப்போ???

வேலையே இல்லை போல இருக்கு. அடுத்த முறை வரச்சே பெரிசா ஆயிடும். இதெல்லாம் நினைவிலேயே இருக்காது. நாங்க தான் நினைப்பு வச்சுட்டு இருக்கணும், அதையே நினைச்சுட்டு இருப்போம். அது எங்களையே நினைச்சுக்குமோ என்னமோ தெரியலை. பாரதியின் இந்தக் கவிதை தான் நினைப்பிலே வந்துட்டே இருக்கு. பாரதியும் நல்லா அனுபவிச்சுட்டே எழுதி இருக்கார்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக்களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே -உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே- கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளங்குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆவி தழுவதடீ!

உச்சி தனை முகந்தால் கருவம்
ஓங்கி வளருதடீ
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ

கன்னத்தில் முத்தமிட்டால் -உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடீ!

சற்றுன் முகஞ்சிவந்தால் மனது
சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ

உன் கண்ணில் நீ வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ

சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது
மூர்க்கந்தவிர்த்திடுவாய்

இன்பக் கதைகளெல்லாம் உன்னைப் போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ??

மார்பில் அணிவதற்கே உன்னைப் போல்
வைர மணிகளுண்டோ??
சீர் பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல்
செல்வம் பிறிதுமுண்டோ??

நானும், இந்த என் இனிய நினைவுகளுமாக இனி பொழுது கழியும். அடுத்த முறை அதைப் பார்க்கும்போது சொன்னால் புரிஞ்சுக்குமோ??

தெரியலை! இதே மாதிரி அதுவும் என்னை நினைச்சுக்குமா???

அதுவும் தெரியலை! :((((

Monday, July 20, 2009

இளைய தலைமுறையே இது உனக்காக!

சீரியஸா எழுதி இருக்கும்போது மொக்கையோனு தோணும். ஆனால் மொக்கை போடாம நம்ம பதிவு தான்னு எப்படி உறுதிப் படுத்தறது. அதுக்காகவும் ரொம்ப நாள் சந்தேகம் ஒண்ணுக்காகவும் இந்தப் பதிவு. இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாட்களா இருக்கு. தமிழ் மணம் எல்லாருக்கும் 2/2, 6/6 அப்படினு மதிப்பெண் கொடுக்கும்போது எனக்கு மட்டும் ஏன் 0/0 கொடுக்குது?? படிக்கிறச்சே கூட, ரொம்ப வருஷம் கழிச்சுக் கல்யாணம் ஆகிப் படிச்சுப் பரிக்ஷை எழுதின போது கூட 0/0 மதிப்பெண் எல்லாம் வாங்கினது இல்லை. தமிழ் மணம் எனக்கு மட்டும் இப்படித் தான் மதிப்பெண் போடுது, நானும் தெரிஞ்சவங்க பதிவுக்கெல்லாம் போறச்சே பார்த்துட்டேன். இந்த மதிப்பெண் விஷயம் எனக்கு என்னனு புரியலை! பரிந்துரை செய்யப் படும் பதிவுகளுக்கோ??? ஒண்ணுமே புரியலை உலகத்திலே! 0/0 மதிப்பெண் கொடுத்துட்டு நட்சத்திரமாக் கூப்பிடறாங்களேனும் யோசனையா இருக்கே???? அதுவும் யாருமே பரிந்துரை செய்யாத பதிவுகளை எழுதும் ஒருவருக்கு??? தமிழ் மணம் தான் பதில் சொல்லணும். அது என்ன கணக்கிலே இந்த மாதிரி போடறாங்க?? பதில் வரலைனா தலை வெடிச்சுடும்.
**************************************************************************************

இன்னிக்குத் தான் பார்த்தேன், கடைசிப் பதிவு சின்னதா இருக்கக் கூடாதாமே! நம்ம ஸ்டைலில் ஒரு மொக்கையோட நிறுத்தலாம்னு பார்த்தா இப்படிச் சொல்லி இருக்காங்க! என்ன எழுதறதுனு யோசிச்சேன். நம்ம இளைய தலைமுறைக்கு ஒண்ணுமே சொல்லலையே! அவங்களுக்கு ஏதாவது சொல்லிடலாம். பதிவும் நம்ம வழக்கம்போல் பெரிய பதிவா ஆயிடும். அப்பாடி நிம்மதி! எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும் திரும்பத் திரும்ப வரும் forwarded mail மாதிரி இதையும் திரும்பச் சொல்றேன்.
************************************************************************************
எந்த இந்துவும் மற்ற மதத்தின் கடவுளரை இழிவாய்ப் பேசுவதில்லை. எந்தவிதமான வழிபாட்டையும் பாவம் என்றோ அதனால் மரணம் சம்பவிக்கும் என்றோ கூறுவதில்லை. உலகின் அனைத்து மதங்களும், பலரும் செய்யும் ஆன்மீகப் பயணத்தை ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணமாகவே கருதுவார்கள். ஒரே ஒரு அளவில் தைக்கப் பட்ட சட்டையானது எப்படி அனைவருக்கும் பொருந்தாதோ, அவரவர் அளவுக்கேற்றபடி சட்டை எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அவரவர் மனநிலைப்படியும் தேவையான மதத்தையும், கடவுளையும் வழிபடுகின்றனர். இந்த சநாதன தர்மத்தின் விதிகளில் எங்கேயுமே இந்துக்கள் மட்டுமே கடைத்தேறுவார்கள், மற்றவர்கள் கடைத்தேற மாட்டார்கள் எனக் கூறவில்லை. எந்த இந்துமத குருவும் இவ்வாறு பிரசாரமும் செய்வதில்லை.


பல கண்டுபிடிப்புகளும் உலகிலேயே முதல்முறையாக இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுஸ்ருதராலேயே உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களின் உதவியால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. உலகிலேயே முதல்முறையாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதல், கண் புரை நீக்கம், செயற்கை மூட்டு மாற்றம், எலும்பு முறிவுக்கு, சிறுநீர்க் கற்கள் போன்றவற்றிற்கு மட்டுமல்லாமல், இன்றைக்குப் பரவலாய் அறியப் படும் ப்ளாஸ்டிக் சர்ஜரியும் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.
அனாடமி என்னும் உடற்கூறு இயல், பிசியாலஜி என்னப் படும் மிருகங்கள், தாவரங்களின் உடல்கூறு இயல், ஏதியாலஜி(?) என்னப் படும் நோய்க்காரணங்களையும் அதற்கான மருந்துகளையும் கண்டறியும் அறிவு, எம்ப்ரியாலஜி என்னப் படும் கருத்தரித்தல் பற்றிய அறிவு, ஜீரணப் பாதைகள் பற்றியும் ஜீரணம் பற்றியும் கண்டறிதல், மெடபாலிஸம், ஜெனடிக்ஸ் ,நோய்த் தடுப்பு போன்றவற்றில் சிறப்பான அறிவு பெற்றிருந்தனர்.

உலகத்தின் மற்ற கலாசாரங்களின் மனிதர்கள் நாடோடிகளாய்த் திரிந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயும், அதற்கும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னாலேயே நாகரீகமும், அறிவும் , செல்வ வளமும் பெற்றுத் திகழ்ந்த நாடாக இருந்தது. பாஸ்கராசாரியார் பூமி சூரியனைச் சுற்றும் நாட்களைத் துல்லியமாய்க் கண்டறிந்த முதல் மனிதர் ஆவார். அவர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே கண்டறிந்து சொன்னது 365.258756484 நாட்கள் என. எல்லையற்றது பிரபஞ்சம் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். Theory of Continued Fractions கண்டறிந்தவர் பாஸ்கராசாரியார் 2 ஆவார். இந்தியர்களாலேயே அங்க கணிதமும், க்ஷேத்திர கணிதமும் முன்னேற்றம் அடைந்தது. அங்க கணித முறைகள் யஜுர்வேதத்தில் விளக்கப் பட்டிருப்பதாய் அறிகின்றோம். நியூட்டனுக்கு ஆயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்பே கோவிந்தஸ்வாமின் என்பவர் Newton Gauss Interpolation formulaவைக் கண்டறிந்தார்.

பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள ஈஸ்டர் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட சில புராதன எழுத்துகள் இந்து சமவெளி நாகரீக எழுத்துகளோடு ஒத்துப் போகின்றது. வான சாஸ்திரத்தின் புத்தகமான சூரிய சித்தாந்தம் நினைவுக்குறிப்புகளில் இருந்தே வாய்மொழியாகச் சொல்லப் பட்டது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. கடைசியாக இது தொகுக்கப் பட்டது கி.மு. முதல் நூற்றாண்டில் எனச் சொல்லப் படுகின்றது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது வழிவழியாக வாய்மொழியாக வந்திருக்கிறது. அதில் பூமியின் குறுக்களவு கிட்டத் தட்ட 7,840 மைல்கள் எனச் சொல்லப் பட்டிருப்பது இன்றைய நவநாகரீக அளவையின் 7,926.7 மைல்களோடு கிட்டத் தட்ட ஒத்தே போகின்றது.

கணிதத்தில் "பை" என்பதன் மதிப்பை முதலில் கண்டறிந்தவர் போதாயனர் ஆவார். ஆறாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய கணக்காளர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே இவர் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருப்பதோடு இது பிரிட்டனின் கணிதமேதைகளால் 1999-ம் ஆண்டில் உறுதியும் செய்யப் பட்டுள்ளது. அல்ஜீப்ரா, ஜியோமிதி, ட்ரிக்னாமெட்ரி, கால்குலஸ், க்வாட்ரிக் ஈக்வேஷன்ஸ் எல்லாமே இந்தியர்களாலேயே பிரபலப் படுத்தப் பட்டுள்ளது. ஸ்ரீதராசாரியாரால் க்வாட்ரிக் ஈக்வேஷன்ஸ் பதினோராம் நூற்றாண்டில் அறிவிக்கப் பட்டது.

ரிக் வேதத்தில் சூரியனைக் குறித்த ஒரு ஸ்லோகத்தில் சூரியன் அரை நிமிஷத்தில் 2,202 யோஜனைகள் பிரயாணம் செய்வதாய்ச் சொல்லப் பட்டுள்ளது. இது இன்றைய ஒளியின் அளவைக்குறிக்கும் குறியீட்டோடு ஒத்துப் போகினது. உலகின் முதல் கிரானைட் கோயில் தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில் ஆகும். உலகப் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் இந்தியாவை சேர்ந்தது. ஆங்கிலேய ஆட்சியின் போது இங்கிலாந்து அரசி விக்டோரியாவிற்கு இந்தியாவின் சார்பாகப் பரிசளிக்கப் பட்ட அது தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள கண்காட்சி சாலையில் உள்ளது. 1896-ம் ஆண்டு வரையிலும் உலகில் வைரத்தின் தேவையை அதிகம் கண்டறிந்ததும், வைரம் அதிகம் கிடைத்த இடமும் இந்தியா தான் என அமெரிக்காவில் உள்ள ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் கூறுகிறது. செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டைக் கண்டு பிடித்த முதல் நாடு இந்தியாவே.

பரமபதம் என்னும் விளையாட்டைக் கண்டறிந்ததும் இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஞானதேவர் என்பவரே. மோக்ஷபதம் என்ற பெயருடன் அறிமுகம் செய்யப் பட்டது. யோகக் கலையுடன் சம்பந்தப் பட்ட களரியாட்டம், வர்மக்கலை, மற்றும் பெண்களுக்கான பரதநாட்டியம், மோகின் ஆட்டம், மணிபுரி ஆட்டம், குச்சிபுடி போன்றவை பிறந்த இடம் இந்தியா தான். உலகின் பெரிய காப்பியமான மஹாபாரதம் இந்தியாவின் வேத வியாசரால் எழுதப் பட்டது.

எல்லாவற்றுக்கும் மேல் ஆதார சுருதியாகவும், முதல் சப்தமாகவும் கருதப் படும் "ஓம்" பிறந்த இடம் இந்தியாவே.
************************************************************************************

இந்தியராக இருப்பதில் பெருமைப் படுவோம்! இந்தியாவின் கலாசாரத்தைக் காப்போம்.

ஜெய்ஹிந்த்!





ஒருவாரம் பலரையும் படிக்க வைச்சாச்சு கட்டாயமாய். கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கலாம், இந்தக் கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கலாம். அனைவருக்கும் என் நன்றி, விடை பெறுகின்றேன். பொறுமையாய்ச் சகித்துக் கொண்ட அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றியும்.

இளைய தலைமுறையே இது உனக்காக!

இந்தியா எப்படி இருந்திருக்கு? இப்போ எப்படி ஆயிடுச்சு பாருங்க! :( ஆனால் நாம் நாட்டைப் பற்றி எவ்வளவு பெருமை கொள்கின்றோம்? ஆராய்ந்தால் இல்லைனே சொல்ல வேண்டி இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிங்க. ஆச்சு, இன்னும் ஒரு பதிவுதான் போயிடுவேன், அதுக்குள்ளே சொல்லிட்டுப் போறேனே! கொஞ்சம் பொறுமையாத் தெரிஞ்ச விஷயமா இருந்தாலும் படிச்சு நினைவு கொள்ளுங்களேன்!

மெகஸ்தனிஸ் காலத்தில் இந்த நாட்டில் யாரானும் ஏதானும் கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக் கொள்ள ஆள் இல்லை என்றும், எந்தப் பண்டம் எங்கே இருந்தாலும், கிடைத்தாலும் திருட ஆள் இல்லை என்றும், மக்கள் பொய்யே சொல்லத் தெரியாமல் இருந்ததாகவும் சொல்லி இருக்கின்றான். இந்த நாடோ அல்லது இந்த நாட்டின் மதம் எனக் கூறப்படும் இந்து மதமோ சண்டை மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாக எந்த வரலாறும்கூறியதில்லை. சமூகப் பணிகளைக் காட்டி மற்றவரை இழுத்துக் கொண்டதும் இல்லை. பலமான குருபீடங்களும் கிடையாது. மாற்று மதத்தினர் படை எடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் பலவிதக் கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகியும், நயமாகவும், பயமாகவும் பல்வேறு பிரசாரங்களைச் சந்தித்தும் இந்த மதம் அழியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் சநாதன தர்மத்திலேயே இருக்கின்றனர். ஆனாலும், யுகாந்திரமாக பல எதிர்ப்புகள் வந்தாலும் அழியாமல் இருக்கிறது. இன்னமும் இருக்கும். உண்மையான மதச் சார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் சரியான விகிதத்தில் மதிப்புக் கொடுப்பதே ஆகும். ஆனால் இன்றைக்கு அப்படி நடக்கிறதா??

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை வழக்கத்தில் இருக்கும் வேதங்களை எடுத்துக் கொண்டால், வேதங்கள்தான் உலகிலேயே முதன்முறையாகக் கண்டறியப் பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே இவையும் இருந்ததாகவும், வாய்மொழியாகவே பத்தாயிரம் வருஷங்களுக்கு மேலாகச் சொல்லப் பட்டு வந்ததாகவும், 5,000 வருஷங்கள் முன்னரே அவை எழுதப் பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வருகின்றது. அக்னியைப் பற்றி ஆரம்பித்து அக்னியைப் பற்றியே முடியும் ரிக்வேதம், வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாய் இருப்பதாகும். இதில் தான் உலகத்து மக்கள் அனைவருக்குமான ஒற்றுமைப் பிரார்த்தனை ஸ்லோகமும் உள்ளது. இந்த ஸ்லோகத்தோடு தான் முடியும்.

யஜுர் வேதம் வழிபாடுகள் பற்றி விவரிக்கும். ரிக்வேத மந்திரங்கள் பலவும் இதிலும் கூறப்பட்டாலும், யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களையும் சொல்லும். வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக்வேதம் உதவினால் காரியத்தில் செய்ய யஜுர்வேதம் உதவும். ஸாமம் என்றால் மனதை சாந்தப் படுத்துவது என்று அர்த்தம். தேவசக்திகளையும், பரமாத்மாவையும் நமக்கு அருகே கொண்டு வரச் செய்வது ஸாமவேதம். ஒருத்தரை சந்தோஷப் படுத்த முகஸ்துதி செய்கின்றோம் அல்லவா? அப்படி ஸ்தோத்திரம் செய்யச் செய்வது ஸாமவேதம். ஸாம வேத மந்திரங்கள் அனைத்தும் ரிக்வேதத்தில் உள்ளவையே எனச் சொல்லப் பட்டாலும் இதில் ஆத்ம ஸ்ரேயஸும் தேவதா ப்ரீதியையும் விசேஷமாய் அளிக்கும் பாடல் உருவில் அமைந்து இருப்பதால் தனிச் சிறப்புப் பெற்றிருக்கிறது.அடுத்து அதர்வன் என்றால் புரோகிதர் என அர்த்தம் அதர்வா என்ற பெயருடைய ரிஷின் மூலம் பிரகாசமடைந்த வேதம் அதர்வ வேதம். பலவிதமான ஆபத்துகளையும் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மாந்த்ரீகம், தாந்த்ரீகம் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள் கோரமான பலவேறு ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில் இருக்கின்றன. அதே சமயம் உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் இருக்கின்றன.

உலகத்து சிருஷ்டி விசித்திரத்தைக் கொண்டாடும் ப்ருத்வி ஸூக்தம் என்னும் ஸ்லோகம் அதர்வ வேதத்தில் இருக்கிறது. யக்ஞங்களை மேற்பார்வை இடுகின்றவரை பிரம்மா எனச் சொல்லுவது வழக்கம்.. அந்த பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லுவது வழக்கம். இன்று பிரசித்தி அடைந்த பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துகள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவையே. அதிலும் மோக்ஷத்தைப் பற்றி விவரிக்கும் மாண்டூக்ய உபநிஷத் அதர்வ வேதம் ஆகும். மற்ற மூன்று வேதங்களுக்கான பொதுவான காயத்ரி மந்திரத்தை உபநயனத்தின் போது உபதேசம் செய்வார்கள். ஆனால் அதர்வ வேதத்தைக் கற்க வேண்டுமென்றால், ஏற்கெனவே உபநயனம் ஆகி இருந்தாலும் மீண்டும் ஓர் முறை உபநயனம் செய்து கொண்டே அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு பின்னர் அதர்வ வேதத்தைக் கற்கவேண்டும். மற்ற மூன்று வேதங்களுக்குமான பொதுவான காயத்ரி அதர்வ வேதத்துக்கு இல்லை. வேதங்களின் பொதுவான பெருமை, இது தான் தெய்வம், இவரைத் தான் வழிபடவேண்டும் என்று சொல்லாமல் எந்தத் தேவதையை எப்படி வழிபட்டாலும் ஒரே வழியில் கொண்டுவிடும் என்று காட்டுவது மட்டுமே தான்.

அதர்வண வேதத்தில் யுத்தத்தில் உண்டாகும் பலவிதமான காயங்களுக்கான சிகிச்சை முறைகள், அவற்றுக்கான மருந்துக்கான மூலிகைகள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டிய அடிப்படைகளை விவரித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. அவ்வளவு ஏன்? கல்லணை கட்டப் பட்டு 2,000 வருஷங்களுக்கு மேலாகியும் இன்றைக்கும் அதன் அமைப்பைப் பற்றி வியக்கின்றனர்.

எல்லாக் கலைகளும், விஞ்ஞான அறிவியல் நுட்பங்களும் இந்தியர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் ஏற்படும் அழிவுகள் உண்டாகக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை இருந்ததாலேயே மனப் பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டும் இவை சொல்லிக் கொடுக்கப் பட்டது. சாதாரணமானவர்கள் இவற்றை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பதும் காரணம். ஆனால் இவை அனைத்தும் தவறான கண்ணோட்டத்திலே பார்க்கப் படுகிறது. வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதையில் இல்லாத சாஸ்திர ஞானங்களே இல்லை என்று சொல்லுகின்றனர். இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டது.

இந்தியர்களாய்ப் பிறந்திருக்கும் நம்முடைய கலாசாரமும், நாகரீகமும் மிகவும் புராதனமான ஒன்று. எப்போது என்று சொல்ல முடியாத அநாதியான காலகட்டத்தில் இருந்தே நம் கலாசாரம் கண்ணியத்துடனும், கட்டுக்கோப்புடனும் இருந்து வந்திருக்கின்றது. உண்மையில் நாம் நம்முடைய இந்த அருமையான கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பதில் பெருமை அடைய வேண்டும். அதைக் கட்டிக் காக்க, உலகுக்குத் தெரிவிக்க முற்பட வேண்டும். ஆனால் நடப்பது என்ன??? நம் நாகரீகம், அநாகரீகம் என்றும் நம் கலாசாரம் முற்றிலும் பழைமையானது, வெறுக்கத் தக்கது எனவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களால் விதைக்கப் பட்ட உணர்வாகும். இந்த எதிர்ப்புணர்வு இன்றைய நாட்களில் மிகவும் அதிகம் ஆகி நம்முடைய அருமையான கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்குப் பதிலாக வெறுப்பே கொண்டிருக்கின்றோம். இந்தியர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் முட்டாள்கள் என்ற உணர்வை நாமே ஏற்படுத்திக் கொள்ளுவதோடல்லாமல், நம்மை நாமே முட்டாள்கள் எனவும் எண்ணுகின்றோம்.

1.கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு மற்ற எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை. ஆங்கிலேயர் வரும்வரைக்கும் உலகிலேயே செல்வம் மிகுந்த, தன்னிறைவு பெற்ற ஓர் நாடாகவே இருந்து வந்தது. அடிமைத் தனம் என்பது அறவே இருந்தது இல்லை.

எண்கள் முறையில் கணிதம் இந்தியாவிலே தான் ஆரம்பிக்கப் பட்டது. இந்தியர்களாலேயே கண்டு பிடிக்கப் பட்டது. கிறிஸ்துவுக்கு முன்னரே இவை இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு முன்னரே ஆர்ய பட்டா என்னும் இந்தியர் பூமியின் சுற்றுப்பாதையின் அளவு, அமைப்பு , வேகம் போன்றவற்றைக் கணக்கிட்டுக் கூறி விட்டார்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்ஷசீலாவில் ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத் தட்ட 60 விஷயங்களுக்கு மேல் கற்பிக்கப் பட்டது. நாளந்தாவில் ஆரம்பிக்கப் பட்ட பல்கலைக் கழகமும் உலகளவில் பிரபலமான ஒன்றாய் இருந்தது. சம்ஸ்கிருத மொழி அனைத்து மொழிகளுக்கும் மூலம் எனக் கருதப் பட்டது. ஹிப்ரூ மொழிக்கும், லத்தீன் மொழிக்கும் முந்தைய மொழி சம்ஸ்கிருதமே என அறியப் படுகின்றது. மூத்த மொழியாக இருப்பதோடு அல்லாமல், இன்றைய விஞ்ஞானத்திற்குப் பயனாகும் வகையிலும், ஒழுங்கான முறையிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இந்திய மக்கள் மட்டுமின்றி இந்தியக் கலாசாரத் தாக்கம் உள்ள மற்றச் சில நாடுகளிலும் சம்ஸ்கிருதம் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சம்ஸ்கிருதம் என்றாலே ஒழுங்கு என்றும், சுத்தமானது என்றும் அர்த்தம். உலகின் முதல் மருத்துவமுறை ஆயுர்வேதமே எனக் கருதப் பட்டது. முதல் அறுவை சிகிச்சையும் ஆயுர்வேதத்திலே இந்தியாவிலே செய்யப் பட்டது. குழந்தை பிறப்புக்காக அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருக்கின்றது.

கொலம்பஸ் இந்தியாவின் செல்வ வளத்தைப் பற்றிக் கேள்விப் பட்டே இந்தியாவைத் தேடி வந்தவர் பாதை மாறித் தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக அமெரிக்கக் கண்டத்தைக் கண்டறிந்தார். கடல் பயணமும் இந்தியர்களாலேயே, சிந்து நதிக்கரையில் கண்டு பிடிக்கப் பட்டது. சித்தாந்த சிரோன்மணி என்னும் நூலில் புவனகோசம் ஆறில் பாஸ்கராசாரியார் என்னும் கணித விஞ்ஞானி தான் முதன் முதல் பூமியின் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கண்டறிந்தார் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. ஐஸக் நியூட்டன் பிறப்பதற்கு 400 வருஷங்கள் முன்னரே இவர் கண்டறிந்தார்.



நம்ம திறமைகளை நினைச்சு நாமே பெருமைப் பட்டுக்கலாம். அதோடு சோழ அரசர்கள் காலத்திலேயே குடவோலை முறையில் தேர்தல்களும் நடத்தப் பட்டு வந்திருக்கிறதையும் கட்டாயமாய் அறிந்திருப்போம். பல ஆங்கிலேய பொறியியல் துறை வல்லுநர்களும் வியக்கும் வண்ணம் கட்டப் பட்ட கல்லணைக்கு(ம்ம்ம்ம்ம், இன்னும் பார்க்கலைங்க! :() ஈடு, இணை சொல்ல முடியுமா? கோயில்களை எடுத்துக்குங்களேன்! இப்படிப் பிரம்மாண்டமான கோயில்களை மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசனாலும் கட்டி இருக்க முடியாது அல்லவா?? கற்களைக் கொண்டு வந்து சேர்த்து, ஆயிரக்கணக்கான சிற்பிகளை வேலை வாங்கி, ஒவ்வொரு வாசலாக, ஒவ்வொரு நிலையாகக் கோபுரம் நிர்மாணித்து, அங்கே வெளிச்சம், காற்று வர முன் யோசனையுடன் ஏற்பாடுகள் செய்து, ஆனால், நாம் இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிஞ்சுட்டு வரதைப் பத்திக் கவலை கூடப் படறதில்லை. நம்மாலே நிச்ச்யம் இம்மாதிரியான கோயில்கள் கட்ட முடியாது. ஆனால் இருக்கிறதைக் காப்பாத்தலாம் அல்லவா??? பழமைக்கு மதிப்புக் கொடுக்கக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?

டிஸ்கி: பல்வேறு புத்தகங்களிலிருந்தும், தெய்வத்தின் குரல் புத்தகங்களிலிருந்தும்
நக்ஷத்திர வாரத்திற்கெனத் திரட்டியவை இந்தத் தகவல்கள்.

கடைசிக் கட்டி மாம்பழம், மாம்பழம் பற்றியே ஒண்ணு!

தேவதத்தனைக் காரைக்கால் அம்மையாருக்கு வாழ்க்கை கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாய் ஓர் இரக்க உணர்வு அனைவருக்கும் இருந்து வருகின்றது. பெண்ணுக்குச் செய்த அநீதி என நினைக்கின்றனர். உண்மையில் காரைக்கால் அம்மையார் பற்றிய இந்தக் கருத்துகள் இன்று மட்டும் புதியதாய் ஏற்பட்டவையே அல்ல. எப்படி சிலப்பதிகாரத்தில் கண்ணகியா, மணிமேகலையா, பாண்டிமாதேவியா, யார் சிறந்தவர் கற்பில் என ஏற்பட்டுப் பட்டி மன்றங்கள் நடந்தனவோ, அவ்வாறே நான் பள்ளி மாணவியாக இருக்கும் நாளிலேயே, காரைக்கால் அம்மையார், திலகவதியார், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, மூவரில் யாருடைய பக்தியும், தியாகமும் சிறந்தது என நடந்துள்ளது. மூவரில் மங்கையர்க்கரசி அரசியோடு அல்லாமல் சகலவித செளகரியங்களும், வசதிகளும் வாய்க்கப் பெற்றவள். கணவன் சமணனாக இருந்தாலும், தன் மனைவியின் சிவ பக்தியில் குறுக்கிடவில்லை. கடைசியில் கணவனையும் தன் பக்கம் திருப்பினாள். மங்கையர்க்கரசியாரின் பக்தியில் குறை சொல்ல முடியாதெனினும் மற்ற இருவரோடு ஒப்பிடும்போது அவளைத் தள்ளியே ஆகவேண்டும் என்று என் கருத்து.

தனக்கு நிச்சயிக்கப் பட்ட கணவன் போரில் இறந்தான் என்பது தெரிந்ததும், வாழ்நாள் பூராத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த திலகவதியாரின் பக்தியும், தியாகமும் காரைக்கால் அம்மையாரின் பக்திக்கும், தியாகத்துக்கும் சற்றும் குறைந்தது அல்லவே. தன் தம்பியான மருள்நீக்கியார் சமணமதத்தைச் சேர்ந்து இருந்ததை நினைத்து மனம் வருந்தியதோடு அல்லாமல் தம்பி மனம் மாறவும் அவர் பாடுபட்டார். கடைசியில் மருள் நீக்கியார், மனம் மாறி சமணத்தில் இருந்து சிவனடியாராக மாறி திருநாவுக்கரசர் என்ற பெயரோடு கீர்த்தியுடன் வாழ்வதைக் கண்டு மகிழ்ந்தாள். ஆனால் காரைக்கால் அம்மையார் வீட்டிற்கு ஒரே பெண். செல்வப் பெண். தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுத்துப் பிரிந்து செல்வதை விரும்பவில்லை. ஆகவே கணவனுடன் வாழ்ந்த காலத்திலும் பிறந்த வீட்டிலே தான் வாழ்ந்து வந்தார். கணவன் தான் அவருக்காக இங்கே வந்தார். அவர் கணவன் வீடு செல்லவில்லை. முதல் தவறே அங்கே ஆரம்பம்.

கணவனும், மனைவியும் தனிக்குடித்தனமாய் இருந்திருந்தாலும் கணவனுக்கும் அங்கே மறைமுகமாகவாவது ஒரு பிடிப்பு இருந்திருக்கும். அதுவும் இல்லை. அதோடு அவரோடு வாழ்ந்திருந்தால் என்ன என்ற கேள்விக்கான விடைக்கு இப்போது வருகின்றேன். காதலித்தால் மட்டும் போதுமா? இங்கே திலகவதியார் மட்டுமே தன் கணவனிடம் காதலோடு இருந்திருக்கின்றார். அதற்கான எதிர்வினை அவர் கணவனிடம் இல்லை. காதலிக்கப் படவும் வேண்டுமே? திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் இருவரும் மனமொத்து இருந்தாலே தாம்பத்தியம் சிறக்கும். வெறும் பிள்ளை, குட்டி பெறும் இயந்திரமாய்ப் பெண்ணை நினைத்து ஆணும், கடமைக்காகப் பெண்ணும் வாழ்வது எவ்வகையில் உயர்வு? அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் என்றே விலகிப் போனான் தேவதத்தன்.


அவன் அம்மையாரோடு வாழ்ந்திருந்தால்? ஒருவேளை அவனுக்கு மனைவியிடம் தன் காதலைத் தெரிவிக்க வேண்டிய நேரத்தில், அந்த அம்மையார் இறை பக்தியில் மூழ்கிப் போகலாம். அல்லது சிவத் தொண்டருக்குத் தொண்டு செய்ய விரும்பலாம். அதையும் தடுக்காமல் இருக்கவேண்டும். தடுத்துவிட்டு, நீ என்னை மட்டும் கவனி, இதெல்லாம் வேண்டாம், என்று சொன்னால் ஆணாதிக்கம் ஆகிவிடுமே. அப்போது அவனுக்கும், அவளுக்கும் ஒரு இடைவெளி உருவாகத் தான் செய்யும். நாள் ஆக, ஆக அந்த இடைவெளி பெரியதாகி நிரந்தரப் பிரிவுக்குத் தானே வழி வகுக்கும்.

காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுடன் இருந்தாலே மனம் சங்கமம் ஆகும். அம்மையாரின் மேல் காதலோ, அன்போ, பாசமோ இருந்திருந்தால் அது இவன் மனதிலும் எதிரொலிக்காதா? உறவோ, நட்போ, பாசமோ, காதலோ, நம்மிடம் அன்பு காட்டும் ஒருவரின் அன்பு நம் மனதிலும் பிரதிபலிக்கவேண்டும் அல்லவா? இங்கிலாந்தில் ராணி விக்டோரியா ஆட்சியின் போது ஒரு நாள், இரவு தன் மந்திரிகளோடு ஆலோசனை முடிந்து அந்த அம்மையார் படுக்க வந்தார். படுக்கை அறைக் கதவு தாளிட்டு இருந்தது. தன் கணவன் உள்ளே இருப்பதை உணர்ந்த அம்மையார் கதவைத் தட்ட அவர் உள்ளிருந்தே யார் எனக் கேட்கின்றார். முதல் முறை அம்மையார், "நான் தான் ராணி விக்டோரியா!" என்று சொல்கின்றார். கதவு திறக்கவில்லை. மீண்டும் கதவைத் தட்டிய அம்மையாருக்கு மூன்று முறைகள், "நான் ராணி விக்டோரியா வந்திருக்கின்றேன் எனச் சொல்லியும், கதவு திறக்கவே இல்லை. அப்போது தான் தன் தவறை உணர்ந்து கொண்ட விக்டோரியா ராணி, கடைசியில், "நான் உங்கள் மனைவி வந்திருக்கிறேன்!" எனச் சொன்னதும் கதவு திறந்தது எனச் சொல்லுவார்கள். இது பள்ளிப் பாடத்தில் படித்தது.

ஒரு அரசிக்கே இந்த நிலைமை ஏற்பட்டது என்றால் பக்தியில் உயர்ந்த யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ள எந்த ஆணுக்கும் தயக்கம் ஏற்படத் தானே செய்யும்??? மேலும் அன்போ, பாசமோ, காதலோ இயல்பாய் பூ மலருவது போலத் தானாக ஏற்பட வேண்டும் அல்லவா? வற்புறுத்தலுக்காக ஏற்படும் அன்பிலும், பாசத்திலும், காதலிலும் என்ன இன்பம் இருக்க முடியும்? சந்தேகமே! மீராபாய் கண்ணனையே நினைத்து வாழ்ந்து வந்தாள். குடும்ப வாழ்க்கையில் அவளால் ஈடுபடமுடியவில்லை. தவித்தாளே? கும்பராணாவும் அவள் மனதை மாற்றப் பலவகையிலும் முயன்று பார்த்தான் அல்லவோ? என்றாலும் முடிந்ததா?? மீராவின் மனம் கண்ணனைத் தவிர மற்றவரை ஏற்கவில்லையே? இங்கே மீரா கணவனுக்குத் தான் அளிக்க வேண்டிய இல்வாழ்வை மறுத்திருக்கின்றாள். ஆனால் அதில் தவறேதும் காண முடியாதல்லவா? நாம் அதைத் தவறு என்று சொல்வதும் இல்லை. மாறாகக் கும்பராணாவையே தவறாய் நினைக்கின்றோம். மீராவின் இஷ்டப் படி அவளை விடவில்லையே என நினைக்கின்றோம் அல்லவோ? பொதுவாகவே இது அவரவர் மனதைப் பொறுத்தது.

ஒரு சிலருக்குத் தவறாய்த் தோன்றுவது மற்றவருக்குச் சரியாத் தோணும். நாணயத்தின் இருபக்கமும் தலை இருப்பது இல்லை, அல்லது பூவும் இருப்பது இல்லை. தலையும், பூவும் மாறி, மாறித் தானே இருக்கு? அது தானே சுவை?? நாமும் பூ விழுமா? தலை விழுமா என்ற எதிர்பார்ப்போடே இருக்கின்றோம் அல்லவோ? அது போலத் தான் வாழ்க்கையும். ரொம்பவே நுணுக்கமான ஒன்று. சில விஷயங்கள் சொல்லிப் புரியாது. அந்த சூழ்நிலையில் இருந்து பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிஞ்சுண்டாலே போதும்!

Sunday, July 19, 2009

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்!

பெண் என்பவள் ஆதாரசக்தி. வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது. பெண் தான் கர்ப்பம் தரிக்கின்றாள். குழந்தையைப் பெற்று எடுத்து வளர்க்கின்றாள். அத்தகையதொரு மாபெரும் சக்தியை நம் இதிகாசங்களோ, புராணங்களோ இழித்துப் பேசி இருக்கின்றது என்ற கூற்றே தவறு அல்லது தவறான புரிதல் என்று சொல்லலாம். ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் ஆணின் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் திருமணமே செய்து கொள்ளாமல் பெண் தனித்து வாழ்வாள். ஆனால் ஆண் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு உறவின் முறைப் பெண்ணை ஏதோ ஒரு சமயம் நாட வேண்டி உள்ளது என்பதே உண்மை. கணவனை இழந்த பெண்களோ, அல்லது சிறு வயதிலேயே கணவன் விட்டு விட்டுச் சென்றாலோ பெண்கள் அஞ்சுவதில்லை. தன் மக்களைத் தாங்களே எப்பாடு பட்டாவது தாங்கி வளர்க்கின்றார்கள். அதே ஒரு ஆணால் தன்னந்தனியாக மனனவியோ, அல்லது வேறு ஒரு பெண்ணின் துணையோ இல்லாமல் தன் மக்களை வளர்க்க முடியாது என்பதும் உண்மை. கணவனை இழந்த பெண்களை விடவும், மனைவியை இழந்த ஆண்களே மனதளவில் மிகவும் பாதிக்கப் படுவது, ஆய்வில் மட்டுமில்லாமல் கண் கூடாகவும் தெரியும் ஒரு உணமை.

பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் பெருமளவும் பெண்களின் சக்தி சரியான முறையில் பிரயோகம் செய்யப் படுவதும் இல்லை. தவறான உள் நோக்கத்துடனேயே பிரயோகம் செய்யப் படுகின்றது. வியாபார நோக்கில் இன்றைய நாட்களில் பெரும்பாலும் தன் சக்தியைப் பெண் விரயம் ஆக்குகின்றாள். ஒரு போகப் பொருளாகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டு விட்டாள். தன்னிடம் உள்ள ஆத்ம சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணரவே இல்லை. ஆத்ம சக்தியைப் பிரயோகிக்கும் பெண்ணைக் கண்டால் ஆண் அஞ்சி நடுங்குவான். அந்தப் பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ முடியாது அவனால். அஞ்சி ஓடுவான்.பெண்ணின் அளப்பரிய சக்தியைத் தாங்க முடியாமலேயே இது நடக்கின்றது. ஆனால் அதே ஒரு பெண்ணாக இருந்தால் தன் கணவனின் ஆத்மசக்தியைத் தனக்கும் சேர்த்துத் துணையாக்கிக் கொண்டு, தன்னை அதோடு பிணைத்துக் கொண்டு, பிணைத்தது தெரியாமலேயே தன் இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ளுவது மட்டுமில்லாமல், தன் குலத்தையே தழைக்கச் செய்வாள். உண்மையில் பெண்கள் ஆண்களை விடப் பலம் படைத்தவர்கள் மனோரீதியாக. இதை இங்கே எழுதியதன் மூலம் நான் ஆண்களை மட்டம் தட்டியதாய் சிலர் நினைக்கலாம். என்றாலும் இன்றைய அறிவியல் ஆய்வுகளும் இதை நிரூபிக்கின்றன என்பது பல தினசரிகளிலும், இன்னும் பல புத்தகங்களிலும் கட்டுரைகளாக வந்திருக்கின்றது பல உதாரணங்களோடு.


முதலில் சொன்னதற்கு உதாரணம் புனிதவதியார். கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட கணவன், அவரிடம் பயந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயந்தான். பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும்.

ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? இது பெண்ணை அடிமையாகவே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் வழிபட வேண்டிய ஒருத்தியைத் தான் மனைவியாக்கிக் கொண்டு விட்டதால் மனம் பதறியே ஒதுங்குகின்றனர். இதனாலேயே நம் தமிழ் மூதாட்டியான ஒளவையும் இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ??? ஒருவேளை காரைக்கால் அம்மையாருக்கும் அத்தகையதொரு பக்குவம் சிறு வயதிலேயே வாய்க்கப் பெற்றிருக்கலாம். ஆனாலும் ஈசனே உமையிடம், "இவர் நம் அம்மை!" என்று கூறி இருக்கின்றார். அத்தகையதொரு பெருமை காரைக்கால் அம்மையாருக்குக் கிட்டியுள்ளது. இல்வாழ்வு வாழ்ந்து சாதாரணப் பெண்மணிகளைப் போல் குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இருந்திருந்தால் அனைவரையும் போல் தான் இவர் பெயரும் வெளியே தெரியாமல் இருந்திருக்கும். இப்படி ஒரு அரிய செயலை, வாலிபப் பருவத்திலேயே பேய்க்கோலத்தை விரும்பி ஏற்றுக் கொண்டதால் அல்லவோ அம்மையாரின் பெயர் இன்றளவும் போற்றப் படுகின்றது?? அந்தப் பேய்க்கோலமும் தன்னைப் பிறரிடம் இருந்து காத்துக்கொள்ளவே என்கின்ற போது அம்மையாரின் காலத்திலேயே இளம்பெண்களுக்குப் பாதுகாப்புக் கம்மியாகவே இருந்திருக்கின்றது என்பதும் புலனாகின்றது.

என்னோட இந்தக் கருத்தில் இப்போவும் மாற்றம் இல்லை. ஏனென்றால் இது தான் உண்மை, சத்தியம், அம்மையாருக்கு வேண்டுமானால் உலக வழக்கை ஒட்டி கணவனுடன் சேர்ந்து இருத்தல் தான் முறை என்ன எண்ணம் இருந்திருக்கலாம், அதில் தவறும் இல்லை, அதே சமயம் அம்மையாரினுள்ளே இருக்கும் ஆத்மஜோதியைத் தரிசனம் செய்ததுக்குப் பின்னும் அவரைச் சாதாரணப் பெண்போல் நடத்த எந்தக் கணவனாலும் முடியாது தான். அவன் புரிந்து கொண்டான். அதனாலேயே அதே ஊரிலே கூட வாழ்க்கை நடத்தாமல் வேறே ஊருக்குப் போனான். கல்யாணமும் செய்து கொண்டான். குழந்தையும் பெற்றுக் கொண்டு, அம்மையாரின் பெயரையே வைத்தான் அந்தக் குழந்தைக்கும். சாதாரணமாய் முதல் குழந்தைக்குக் குடும்பத்தின் மூத்தவர்கள் பெயரோ, குலதெய்வம் பெயரோதான் வைப்பது வழக்கம். அம்மையாரைத் தெய்வமெனக் கருதியதால் அம்மையாரின் பெயரையே வைத்தான். தாயாக வணங்க வேண்டிய பெண்ணைத் தாரமாக நினைத்து வாழ்ந்திருக்கின்றோமே என்ற அச்சம் கொண்டிருக்கின்றான். ஆனால் அம்மையாரின் பயமும், எதிர்பார்ப்பும் சகஜமே. ஏனெனில் ஒரு பெண் தனித்திருப்பது என்பதை எந்தக் காலத்திலும் யாரும் ஒப்புக் கொள்வதில்லை அல்லவா? அவர் தன்னைத் தான் உணரக் காலம், நேரம் வரவில்லை, எத்தனை பேருக்குத் தாங்கள் பிறந்ததின் அர்த்தம் அந்தப் பிறவியிலேயே தெரிய வருகின்றது?? கணவன் கைவிட்டதுமே இவருக்குப் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது. இதை விதி என்று சொல்வதை விட இறைவன் அவர் மனம் பக்குவம் அடைகின்றதா? இல்வாழ்வா? ஈசன் திருவடியா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் என்பதற்கு வைத்த சோதனையாகவே கொள்ளவேண்டும்.

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்!

பெண்களுக்கு உரிய உரிமைகளோ இடமோ கிடைக்கவில்லை என்று சொல்லுபவர்கள் முதல்லே என்ன உரிமைகள் வேணும்னு சொல்லட்டுமே! சும்மா நம்மை நாமே தாழ்த்திக்கிறோம். அது போனாலே போதும்! எப்போதுமே பெண்களுக்குத் தடைகள்னு எதுவுமே இல்லை. சும்மா தடைகள் இருக்கிறதா நினைச்சுக்கறதும், ஆண்களைக் குறை சொல்லுவதும், இதனால் பெண் உரிமை வந்துடுச்சா??? கஷ்டப் படும் பெண்கள் இருக்காங்க, இல்லைனு சொல்லலை, அவங்க கஷ்டத்திலே இருந்து விடுவிக்க வழி பார்க்கணும். அவங்களோட உண்மையான தேவை என்னனு பார்க்கணும். பொதுவாகக் குறைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இப்போத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலேயும், பல விளம்பரங்களிலேயும் பெண்களைக் கேவலப் படுத்தறாப்போல் வேறே எதிலும் இல்லை. அதிலும் நெடுந்தொடர்கள் அது எந்த மொழியில் வந்தாலும் கதாநாயகியைத் தவிர மற்றப் பெண்கள் கொடுமைக்காரிகளாகவும், மாமனார், மாமியார், மைத்துனன், நாத்தனார், ஓரகத்தி போன்றோருக்குத் தீங்கு இழைப்பவளாகவும், எப்போவோ நடந்ததுக்குப் பழி வாங்குபவளாகவுமே சித்திரிக்கப் படுகின்றனர்.

இந்தப் பழி வாங்குவதில் அவங்க நெடுந்தொடரில் கூடப்பிறந்த அக்கா, தங்கை என வரும் பாத்திரங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. அக்கா, தங்கைனா சண்டை வரும் தான், இல்லைனு சொல்ல முடியாது. ஆனால் ஒருத்தி வாழ்க்கையை இன்னொருத்தி அழிக்கும் அளவுக்குப் போகுமா?? எங்கேயோ ஒன்றிரண்டு சம்பவங்கள் இம்மாதிரி நடந்தால் அதைப் பெரிசு படுத்தும் தினசரிகளும், தொலைக்காட்சிச் சானல்களுமே சமுதாயத்தையும், முக்கியமாய்ப் பெண்ணினத்தையும் கேவலப் படுத்துவதோடு அல்லாமல் அவங்க மனசில் விஷத்தையும் மறைமுகமாய் அல்ல நேரிடையாகவே பாய்ச்சுகிறது. பெண்ணியத்திற்காகக் குரல் கொடுக்கிறவங்க யாருமே இதுக்குக் குரல் கொடுப்பதில்லை. எத்தனை கேவலமாய் விளம்பரம் வந்தாலும் பணத்துக்காகச் சகிச்சுக்கும் பெண்கள் அதே குடும்பத்தில் மாமியாரோ, மாமனாரோ, கணவனோ சொன்னால் சகிச்சுக்கக் கூடாது என்பது குடும்ப உறவையே பாதிக்கும் என்பதை யாருமே உணரவில்லையா?? கணவன் கொடுமைனா தனிச்சு வந்துக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒருசில அபிப்பிராய பேதங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்குமே பிரிவது வழக்கமாகி வருகிறது. அதீத எதிர்பார்ப்பே காரணம் இதுக்கு! குறைகளைச் சகிச்சுக்க வேண்டாம். நம்மிடமும் குறை இருக்கு, மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைச்சாலே போதும்.



பெரும்பாலும் ஆண்களைப் பழி வாங்கவே சில பெண்கள் வரதக்ஷணைக் கொடுமை எனச் சொல்லுகின்றார்கள் என்பதும் அதிகம் வெளியே வருவதில்லை. எத்தனையோ ஆண்கள் பெண்களால் அதுவும் மனைவியால் கொடுமைப் படுத்தப் படுவதும், மாமியார் மருமகளால் கொடுமைப் படுத்தப் படுவதும் வெளியே வரவில்லை. சட்டம் அவங்க பக்கம் பேசுவதில்லை. காவல் நிலையமும் அவங்க புகார்களை ஏத்துக்கறதில்லை. இது என்ன நியாயம்? எப்படி நியாயம்? இதிலே கூட சம உரிமைங்கறது மறுக்கப் படவில்லையா?? அதை ஏன் யாருமே கேட்கிறதில்லை? எப்படி கணவனின் தாய், தந்தையுடன் வாழ மறுக்க மனைவிக்கு உரிமை உண்டோ அதே உரிமை கணவனுக்கும் தன் மாமனார், மாமியாருடன் வாழ மறுக்க உண்டல்லவா?? இது அந்த அந்தக் குடும்பத்தில் என்ன வழக்கம் என்பதை அவர்களே பேசி முடிவு செய்து கொள்ள வேண்டிய ஒன்று. இடையில் புகுந்து கருத்துச் சொல்லும் தகுதி நம் யாருக்கும் இல்லை. சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் வாழணுமா, தனித்து வாழணுமா என்பதை அந்தப் பெண்ணும் அவள் கணவனுமே தீர்மானிக்கணும். கணவன், மனைவிக்குள்ளே அபிப்பிராய பேதமோ, சர்ச்சையோ வருவதில்லையா என்ன?? மாமியார், மருமகளுக்கும் அப்படித் தான் வரும். வந்தாகணும், வரலைனால் அவங்க அசாதாரண மனிதர்கள். அதோடு அப்படி எதிர்ப்பே இல்லாமல் இருக்கிறதும் நல்லது இல்லை. ஒருவர் மற்றவருக்குள் ஐக்கியமாகிவிட்டார், அவரோட எல்லாவிதமான, எப்படிப்பட்ட கருத்துக்களையும் எந்தவிதமான யோசனையும் இல்லாமல் ஏற்கத் தயாராகிவிட்டார் என ஆகிவிடும். அதனால் அபிப்பிராய பேதம் இருப்பதில் தப்பே இல்லை. ஆனால் அதையும் கடந்து ஜெயிச்சு வரது தான் வாழ்க்கை. ரெளத்திரம் பழகு எனப் பாரதி சொன்னதை யாரும் சரியான அர்த்தத்தில் புரிஞ்சுக்கலைனே சொல்லணும்.



இந்தக் கூட்டுக் குடும்பம் என்பது ஓரளவாவது இன்னும் இந்த நாட்டில் நீடிப்பதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் இன்னமும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் போல் மாறாமல் இயங்கிக் கொண்டும், தாக்குப் பிடித்துக் கொண்டும் இருக்கிறது. குடும்பத்தைச் சார்ந்தே பொருளாதாரமும். குடும்பம் சமூகத்தையும் சமூகம் நகரங்களையும், நகரங்கள் நாடுகளையும் சார்கின்றது. பொருளாதாரத்தில் ஈடுபாடுகள் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்காது. என்றாலும் சும்மா வாதத்துக்காகச் சொல்கின்றார்கள் என்றே சொல்லலாம். பெண் விட்டுக் கொடுத்துப் போனால், அனுசரித்துப் போனால் அடிமை என்று சொல்லும் எண்ணம் அரசியல் வட்டாரத்தில் வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் விட்டுக் கொடுத்தே செல்லவேண்டும். அலுவலகத்தில், பேருந்துகளில் செல்லும்போது, தெருக்களில் நடக்கும்போது, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு நபர்கள் என அனைவரிடமும் நாம் விட்டுக் கொடுத்தே செல்லுகின்றோம். அதைக் கொஞ்சம் பெருமையாய்க் கூடச் சொல்லிப்போம். ஆனால் வாழ்க்கை பூராவும் ஒன்றாய் இருந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய கணவனோ, மனைவியோ, விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் சென்றால் அது அடிமைத் தனம். இது என்ன நியாயம்னு புரியலையே? இது இருபாலாருக்கும் பொருந்தும்.

மனைவி சொல்லுவது சரியாய் இருக்கின்றது என்று கணவன் அவற்றை ஏற்றுக் கொண்டால் உடனேயே மனைவிக்குப் பயந்தவன் என்ற பெயர் கிடைக்கும். மனைவி கணவனின் கூற்றை ஆமோதித்தால் உடனே அடிமை எனச் சொல்லுவது. எப்போது இந்தப் போக்கு மாறும்? கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் அவர்கள் இருவரை மட்டுமே சார்ந்தது. மூன்றாம் மனிதர் தலையீடோ, கருத்துக் கூறலோ முற்றிலும் நிராகரிக்கப் பட வேண்டியதே. ஆனால் இன்று அப்படி இல்லையே. தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, பத்திரிகைகளும் சரி தங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இவற்றை இன்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண், வீட்டில் மாமனார், மாமியாருக்கோ, கணவனுக்கோ கட்டுப்படக் கூடாது என்பது எழுதப் படாத ஒரு விதியாக இருந்து இன்று விவாதிக்கும் ஒரு விஷயமாக ஆகி விட்டது. குடும்ப அந்தரங்கங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. யார், யாருக்கோ அனுசரித்துச் செல்லும் பெண் ஏன் தன் நிலையான குடும்ப வாழ்க்கைக்காக அனுசரித்துச் செல்லக் கூடாது? கட்டாயமாய்க் கணவன், மனைவியானதும் இருவரின் எண்ணங்களிலும், பேதங்கள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர, அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடாது.


இன்னமும் அங்கங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் காட்டும் பெரியவங்களுக்கான மரியாதையும் குடும்பப் பொருளாதாரத்தைப் பெண்களும், ஆண்களும் சேர்ந்து கட்டுப் படுத்தலுமே இந்த நாட்டைப் பெரும் வீழ்ச்சியில் இருந்து காக்கின்றது. முக்கியமாய் உலகம் பூராவும் பொருளாதாரச் சீர்கேடால் அவதிப்பட நம் நாடோ அதை எதிர்த்து நின்றது. எதனால்??? இன்னமும் அழியாமல் இருக்கும் குடும்ப அமைப்பினால் மட்டுமே. இந்தக் குடும்ப அமைப்பு சிதறாமல் இருந்தாலே நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். குடும்ப அமைப்புதான் இந்த நாட்டின் தனிச்சிறப்பு. வேலை பார்க்குமிடத்திலும் பெண்களுக்கு நிறைய அவமானங்களையும் ,எதிர்ப்புகளையும் வக்கிரமான பேச்சுக்களையும் சமாளிக்கவேண்டி இருக்கு. அதைச் சமாளிக்கும் பெண்கள் உறவுக்காகவும், உறவுகளைக் காக்கவேண்டியும் இந்தச் சின்னத் தியாகத்தை(?)த் தாராளமாய்ச் செய்யலாம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை இதை அனைவரும் இப்போப் படிக்கிறதுமில்லை, படிக்கிறவங்க இதன் ஆழமான அர்த்தத்தை உணருவதும் இல்லை! ஒருத்தர் கேட்டார் இம்மாதிரித் தியாகம் செய்ததால் சிலையா வைக்கப் போறாங்கனு?? நான் என்ன அரசியல்வாதியா சிலை எல்லாம் எதிர்பார்க்க??? ஒவ்வொருவரும் அவங்க அவங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு பாடுபடறதுக்கெல்லாம் சிலை வைச்சால் இந்தியாவிலே சிலைகள் தான் இருக்கும். மனிதன் நடமாட முடியாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதும் கஷ்டம் தான் இல்லைங்கலை. அதுக்காக என் குடும்பம் சிறப்பாக இருக்க நான் பாடுபடுவதற்குச் சிலை வைக்கிறது என்று எதிர்பார்ப்பது ரொம்ப ஓவராய் இல்லை??? குடும்பத்தினர் பாராட்டவில்லை என்றாலும், நாம் எங்காவது வெளியே போயிட்டுச் சில நாட்கள் இருந்துட்டு வந்தால் நாம் உள்ளே நுழையும்போதே நாம் இத்தனைநாளா இல்லாமல் இருந்ததைக் குறித்து அவங்களுக்கு ஏற்பட்ட கஷ்டமும், நாம வந்துட்டதாலே அப்போ குடும்ப உறுப்பினர்கள் அடையும் ஆறுதலும், நிம்மதியுமே சொல்லிடும், அவங்களுக்கு நம் சேவை தேவை என்றும், நம் வரவுக்காகவும், நமக்காகவும் காத்திருக்காங்க என்பதும், நமக்கும் கொஞ்சம் சந்தோஷமே தருமே. அதிலிருந்தே உணரமுடியுமே? குடும்பம் சிறப்பாக இருந்தால் நல்ல குடும்பமாக அமைந்தால் அதன் மூலம் வருங்காலமும், வருங்காலச் சந்ததிகளும் அல்லவோ பயனடைவார்கள்??? எப்படி மாமரமும், தென்னை மரமும் வைக்கிறவன் அதில் பலனை எதிர்பார்க்க மாட்டானோ அவ்வாறே இதிலும் பலனை எதிர்பார்க்கக் கூடாது.

குடும்பத்திற்காகச் செய்வதற்கெல்லாம் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் எதிர்பார்த்தால் நாம் செய்யறதின் அர்த்தமே இல்லாமல் போயிடுமே? நம் நாட்டின் உயிர்நாடியே குடும்ப அமைப்புத் தான். அதில் தான் நம் பொருளாதாரமும் அடங்கி இருக்கிறது. குடும்பம் சிறப்பாக இருந்தாலே, அந்தத் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என அனைத்தும் சிறக்க முடியும். இன்னமும் இழுத்துப் பிடித்துக் கொண்டு உயிரை விடாமல் இருக்கும் இந்த நாட்டின் சொத்தான கலாசாரத்தைக் காக்கப் பாடுபடுவோம்.

Saturday, July 18, 2009

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்!!!

மகளிர் தினத்துக்காக வேறு ஒரு தளத்துக்கு நான் எழுதி அனுப்பிய ஒரு கட்டுரையின் மறு பதிவு இங்கே/ இப்போதும் இந்தப் பதிவின் விஷயங்கள் ஏதும் மாறாத காரணத்தால் இது தேவை என நினைக்கிறேன். அந்தத் தளத்தில் இதற்குப் பல ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் யாரும் பதிலே எழுதவில்லை. நம்ம வலைப்பதிவர்கள் முக்கியமாய் நெருங்கிய தோழிகள் என்ன சொல்லப் போறாங்களோ புரியலை. :))))))))))))))))

உலக மகளிர் தினம் வந்தாச்சு. நம்ம மகளிர் முன்னேற்றக் கழகத்துக்காரங்களுக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். என்னமோ இந்தியாவில் அனைத்துப் பெண்களும் கொடுமைப் படுத்தப் படறாப்பலேயும், அதைக் காக்க வந்த ரட்சகர்கள் தாங்கள் தான் என்பதாகவும் ஆரம்பிச்சுப் பேசுவாங்க. தொலைக்காட்சிகளில் நடிகைகள் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுப்பாங்க. இன்னும் நம்ம ஜனாதிபதியும் சொல்லுவார். அரசியல் வாதிகள் மறக்காமல் மகளிருக்கென இட ஒதுக்கீடுக்காகப் போராடுவோம்னு சொல்லிட்டு அடுத்த பார்லிமெண்டிற்காகத் தேர்தல் வந்து இடம் பிடிச்சதும், மக்கள் சபையிலே அந்த மசோதாவைக் கொண்டுவருவதையே தள்ளியும் போடுவாங்க. இதிலே நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காட்டுகின்ற ஒற்றுமையை, நாட்டின் முன்னேற்றத்துக்குக் காட்டுவாங்களாங்கறதே சந்தேகம் தான். அவ்வளவு ஒற்றுமையா இருப்பாங்க.

சில மாதங்கள் முன் கர்நாடகத்தில் “ராம் சேனா” என்ற அமைப்பு பப் கலாசாரத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியது பெருமளவில் சர்ச்சைக்குள்ளானது. அனைத்து ஊடகங்களும் இதைப் பெரிது படுத்தியதோடு அல்லாமல், கர்நாடகாவின் மாநில ஆட்சி செய்யும் கட்சிதான் இதற்குக் காரணம் என்றும் சொல்கின்றன. அப்போது மும்பையில் தாக்கரே நடத்தியதற்கு யாரைக் காரணம் சொல்லுவது என்பதைச் செளகரியமாய் மறந்துட்டாங்க. ராம்சேனா அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” என்று அறை கூவல் விடுத்து பப் எனப் படும் மதுவிடுதிகளை நிரப்பப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

காந்தியால் வளர்க்கப் பட்ட ஒரு கட்சி, காந்தி எங்கள் தலைவர் எனக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, பெண்களை இழிவு படுத்தக் கூடாது, பெண்கள் அனைவரும் சமம், அவர்களின் நன்னடத்தையும், ஒழுக்கமும், தியாகமுமே முக்கியம் எனக் கூறிய தலைவரைப் பெற்ற ஒரு கட்சி இன்று இத்தனை தூரம் கீழ்த்தரமான போக்கைக் கடைப் பிடித்துப் பெண்களை இன்னும் இழிவு நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பெண்கள் குடிப்பதையும், போதையில் ஆடுவதையும் காந்தி எப்போது ஆதரித்தார் என்பதை இவர்கள் சொல்லிவிட்டுப் பெண்களைக் கூப்பிட்டிருக்கலாமே? காந்தியும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார். ஏற்கெனவே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கேவலப் படுத்தியது போதாது என்று இப்போது பப்களைப் பெண்களால் நிரப்பும் கலாசாரத்தைக் காங்கிரஸ்காரர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.

நம் கலாசாரம் சீரழிந்து, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கமும் சீர்கெட்டு வருகின்றது. இவருக்கு உண்மையிலேயே பெண்கள் மீதும், பெண்களின் உரிமைகள் மீதும் நம்பிக்கை இருந்தால் பெண்களை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்பினால், இதைக் கண்டித்திருக்கவேண்டும். அல்லது பெண்கள் பப் களுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றாவது சொல்லி இருக்கவேண்டும். நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி என்பதாலேயே அதற்கு எதிராக சமுதாயம் எப்படிப் போனால் என்ன? சமூகம் எப்படிச் சீரழிந்தால் என்ன? பெண்கள் குடித்துக் கெட்டலைந்தால் என்ன? அங்கே நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி. ஆகவே இப்படித் தான் பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கண்மூடித்தனமாக இவர் பேசுவதை இவர் வீட்டினரே மன்னிக்க மாட்டார்கள். வெளிநாட்டுக் கம்பனிகளும், ஐடி வேலைகளும், அவுட் சோர்ஸிங் வேலைகளும் இன்றைக்கு இளம் பெண்களையும், இளைஞர்களையும் பல்வேறுவிதமான தவறான வழியில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றது.


சமீபத்திய வேலைக்குறைப்பினால் பங்களூரில் வேலை இழந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு அதுவரையிலும் பிட்ஸா, பர்கர் கொடுத்து வளர்த்து வந்ததாயும், இப்போது வேறு வழியில்லாமல் ரசம் சாதம் மட்டும் கொடுக்கவேண்டி இருந்ததாகவும் வருந்தி இருக்கின்றனர். ஒரு பத்திரிகைப் பேட்டியில் இது வந்தது. நம் நாட்டு உணவு அதுவும் தென்னிந்திய உணவான ரசம் சாதம் என்றால் மிகக் கேவலம் போல் அவர்கள் பேசி இருப்பது மனதை வேதனைப் படுத்தியது. பிட்ஸாவும் பர்கரும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பது கூட அவர்கள் அறிய மாட்டார்களா? இத்தனைக்கும் குழந்தைக்கு மூன்று வயதே ஆகின்றது. அந்தக் குழந்தைக்கு இப்போதே சீஸும், வெண்ணையும், மாவுப்பண்டமும் செரிக்குமா? அதன் உடல்நிலை வளர வளர எப்படி இருக்கும்? நாளைய சமுதாயத்துக்கு ஒரு ஆரோக்கியமான மகனோ, மகளோ தரவேண்டிய பெற்றோர் இத்தகைய உணவின் மூலம் உடல்நலக்குறைவோடல்லவா ஒரு மனிதனைத் தரவேண்டி இருக்கும்? பெண்கள் இத்தகைய கலாசாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் ஒழுக்கம் க்கெடாதா? மது மயக்கத்தில் தங்களை மறந்து அவர்கள் தவறு செய்ய நேரிடும் அல்லவா?

சுதந்திரம் என்ற பெயரில் எல்லை எதுவெனத் தெரியாமல் எல்லை தாண்டுபவர்களையே சமூகம் பாராட்டும்படியாக இன்றைய ஊடகங்களும், அரசும் அவற்றுக்குத் துணை போகின்றன. கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்வது தான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப் பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம். படிப்பினால் பெண்களுக்கு அறிவு வளரும், நிலை உயரும், ஞானம் உண்டாகும் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதாலேயே இத்தகைய உரிமைகள் தங்களுக்கு ஏற்றது எனத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறியும் தேவை என்பதைத் தவறாய்ப் புரிந்து கொண்டு, எப்படி வேணாலும் உடை அணிந்து நிமிர்ந்த நன்னடையோடு செல்லலாம் எனவும், நேர்கொண்ட பார்வை என்பதை பப்புக்குச் செல்லும்போதும் அனைவரையும் நேரேயே பார்த்துக் கொண்டு எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இன்றிச் செல்லலாம் என்றும், நேர் கொண்ட பார்வை என்பதை, இதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பதே ஆகும் எனவும் தவறான புரிதலில் இருக்கின்றனர்.

சில ஆண்கள் பெண்கள் உடை அணிவதும் அவர்கள் உரிமை என்று சொல்லுகின்றனர். எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து பெண்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அவர்கள் கருத்து. இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போன்றதே! சுதந்திரம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உடை அணிவதில் மட்டும் சுதந்திரம் கொடுப்பதும், ஒரு வகையில் ஆணாதிக்கமே. பெண்ணின் உடை விஷயத்தில் தலையிட எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. என்றாலும் அதற்கென வரையறையைப் பெண்ணே தனக்குத் தானே நியமித்துக் கொள்ளவேண்டும். சமூகத்தில் அனைவரும் மதிக்கும்படி, பார்த்தாலே மரியாதை வரும்படியான உடையே சிறந்தது.


எந்த உரிமையும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இருந்தாலே மதிப்பு. நம் குடியரசுத் தலைவி ஜீன்ஸும், டீ ஷர்டும் அணிந்து, வெளிநாட்டு உறவினர்களை உபசரிக்க முடியுமா? அவ்வளவு ஏன்? வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பொதுக்கூட்டங்கள், மக்கள் சபை, மற்றப் பொது இடங்களில் கலந்து கொள்ளும்போது புடைவை அணிந்தே வருகின்றார். எப்போவாவது குளிர்காலத்தில் மட்டுமே சல்வார், குர்த்தா அணிந்து தோன்றக் காணலாம். பொதுக் கூட்டங்களிலும் புடைவை அணிந்தே வருகின்றார். மனதில் கட்டுப்பாடு இருந்தால், உடைக்கட்டுப்பாடு, செயல்களில் கட்டுப்பாடு, நல்லொழுக்கம் ஆகியவை தானே வரும். பெப்ஸி/கோகா கோலா, எதுனு தெரியலை, இவற்றின் தலைவியாக இருக்கும் இந்திரா நூயி யு.எஸ்.ஸில் கூடப் புடைவை அணிந்தே அலுவலகம் செல்வதாய்க் குறிப்பிட்டுள்ளார். திரைப்பட நடிகையாய் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடை அணிந்து வருவதை அனைவருமே விமரிசிக்காமல் இருப்பதும் இல்லை.

வடநாட்டு உடையான சல்வார், குர்த்தாவிற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததே? அது மாதிரித் தான் ஜீன்ஸ், டீஷர்டுக்கும் இப்போது எதிர்ப்பு. பின்னால் சரியாகிவிடும் என்பதே பலரின் கணிப்பு. திரைப்படத்தில் கூடக் கதாநாயகி கல்லூரி மாணவியாகவும், கதாநாயகனின் காதலியாகவும் இருக்கும் வரையில் தான் வித விதமாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவாள். திரைப்படக் கதாநாயகியின் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அவளைப் போன்ற அடக்கமாய் உடை உடுத்தும் பெண்ணைக் காண முடியாது. புடைவை, உச்சிப் பொட்டு,(அதுவரையிலும் நெற்றியில் ஒண்ணுமே இருக்காது.) தலையைச் சுற்றிக் குளித்த அடையாளமாகத் துண்டு கட்டிக் கொண்டு, கையில் ஒரு தீபாராதனைத் தட்டு, அல்லது சாம்பிராணித்தட்டு போன்றவற்றுடன் காலையில் வீட்டிலேயே முதல் ஆளாய் எழுந்து அனைத்து வேலைகளையும் கண்மூடித் திறக்கும் முன்னர் செய்பவளாய் மாறி விடுகின்றாள். அம்மாவுக்குக் கட்டுப் படாத அவளோட மைத்துனனோ இவள் ஒரு வார்த்தை சொன்னாலே அடிமையாகவும் மாறுவான். ம்ம்ம்ம்ம்ம் குறைந்த பக்ஷம் நம் பெண்கள் அப்படி எல்லாம் நடந்துக்காட்டியும், உடை அணிவதில் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கலாமே?

பெண்கள் தான் குடும்பத்தின் ஆணிவேர். இதைச் சொன்னால் வேர் வெளியே தெரியாம இருக்கிறாப்போல பெண்களையும் வெளியே தெரிய விடாம அடக்கறாங்கனு சொல்லுவாங்க. ஆனால் வேர்தான் ஒரு செடியையோ, மரத்தையோ தாங்கிப் பிடிக்கிறது. தண்ணீரையும் வேருக்குத் தான் ஊத்தணும். ஏன் செடியோட கிளைகளுக்கோ, இலைகளுக்கோ தண்ணீரை நேரடியாக விடக் கூடாதா? முடியாதல்லவா? அதிலும் பெண் ஆலமரம் போன்றவள். நன்றாக விழுது விட்டுப் படரும் குணம் உடையவள். வாழ்த்துச் சொல்லுவதே, "ஆல் போல் விழுதோடி, அருகு போல் வேரோடி" என்று தான் சொல்வது வழக்கம். வேர் போனால் மொத்தச் செடியும் போயிடுமே? அதுபோல பெண்ணுடைய பழக்கங்களால் அந்தக் குடும்பத்திற்கே பாதிப்பு உண்டாகும் அல்லவா? பெண்கள் தான் யோசிக்கணும். இங்கே யாரும், யாரையும் எப்போது கட்டிப் போட்டதில்லை. அடிமையாக நடத்தலை. ஒரு நியதிக்குக் கட்டுப் பட்டு அன்புக்கு அடிமையாகி நடக்கப் பெண்ணால் தான் முடியும்.

அப்பாடா, பெண்கள் உரிமை பற்றியும் பெண்கள் விடுதலை பற்றியும் பெண்ணீயம் பற்றியும் நான் எழுதறதே இல்லைனு சிலர் நினைச்சுட்டு இருந்தாங்க. இன்னிக்கு அதையும் தொட்டாச்சு. உண்மையான பெண் விடுதலை என்னனு புரிஞ்சுட்டுப் பேசணும் பெண்ணீயவாதிகள். ஆண்களுக்கு நிகராய் புகை பிடித்தலும், கவர்ச்சி என்ற பெயரில் உடை அணிவதோ, பப் சென்று அங்கே ஆண்களோடு சேர்ந்து குடிப்பதிலோ பெண் விடுதலை அடைவதில்லை. இந்தப் பெண்களை ஆதரிக்கும் ஆண்கள் எவரும் தங்கள் வீட்டுப் பெண்கள் இம்மாதிரி நடப்பதை விரும்ப மாட்டார்கள். புத்தியிலும், விவேகத்திலும், குழந்தைகளை ஒழுக்கத்தோடும், அறிவோடும் வளர்ப்பதிலும், குடும்பத்தை அரவணைத்துச் செல்லுவதிலுமே பெண் உயர்ந்து நிற்க முடியும். ஆனால் இதைத் தான் அடிமைத் தனம் என ஒரு சாரார் சொல்லி மூளைச் சலவை செய்கின்றனர். காலத்தின் கோலம் தான் இது. பெண்கள் சுயமாகச் சிந்தித்துத் தங்கள் குடும்பநலனுக்காகப் பாடுபட்டாலே ஒரு அருமையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்னும் இரண்டு நாட்கள் விடறதா இல்லை பெண்களை!:)))))))))

இதெல்லாம் என்ன வழக்கமோ???

திவா தன்னுடைய இந்தப் பதிவில்விவாஹம் திருமணத்தில் பொரி இடும் வழக்கம் எப்போ நுழைந்தது எனத் தெரியவில்லை என்று சொல்லி இருந்தார். குமரனும் அதற்கெனப் பல இலக்கிய நூல்களை ஆராய்ந்து பின்னூட்டம் எழுதி இருக்கின்றார். வைதீக முறைப்படி திருமணம் நடந்த ஆதாரங்கள் சிலப்பதிகாரத்தில் இருக்கின்றது ஆனால் பொரி இடுவது பற்றிய குறிப்பு இல்லை என்றும், ஆண்டாளின் வாரணமாயிரம் பாடல்களிலும், அம்மாதிரி எந்தக் குறிப்பும் இல்லை எனவும் சொல்லி இருக்கின்றார்.

// குமரன் (Kumaran) said...

இந்த லாஜ ஹோமத்தின் போது உடன்பிறந்தவன் (தம்பியோ அண்ணனோ உடன்பிறந்தார் முறை உள்ள ஒருவனோ) பொரியை எடுத்துப் பெண்ணின் குவிந்த கரத்தில் வைக்க வேண்டும் என்ற வழக்கம் எப்படி வந்தது? கோதை நாச்சியாரும் 'அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்டக் கனா கண்டேன்' என்று தான் சொல்கிறார். அவருடைய அண்ணன் தம்பிகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

http://godhaitamil.blogspot.com/2005/12/84.html

நாச்சியாரும் தாலி கட்டுவதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் மங்கல நாணைப் பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. அந்தணர் முன் நின்று நடத்திய அந்த திருமணத்தில் மங்கல நாண் இருந்திருக்கிறது. அதனால் தாலி கட்டுவது வைதிக மரபா தமிழர் மரபா என்று தெளிவாகத் தெரியவில்லை. :-)//

ஆனால் எந்த வழக்கமும் காரணங்களோடு தானே செய்யப் படுகின்றது. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை அல்லவா?? எந்த இந்துத் திருமணங்களை எடுத்துக் கொண்டாலும் மாப்பிள்ளை காசி யாத்திரை என்று புறப்படுவதும், தாலி கட்டுவதும், பொரி இடுவதும், சப்தபதியும் இல்லாமல் முடிவதில்லை.

சிருஷ்டியின் ஆதாரம் பெண்தான். படைப்புகள் அனைத்தும் அவளிடமிருந்தே வருகின்றன. பெண்ணுக்கு மனவலிமையை அளிப்பது சந்திரன் தான் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட பெண்ணால் தான் குடும்பம் கட்டிக் காக்கப் படுகின்றது என்பதும் உண்மை அல்லவா? அந்தப் பெண்ணால் தான் உறவுகள் சங்கிலித் தொடராக ஏற்படுகின்றன. திருமணத்தை எடுத்துக் கொண்டால் மாங்கல்ய தாரணத்தின் போது பெண்ணுக்குத் தாலி கட்டிக் கொள்ள மாப்பிள்ளையின் சகோதரி உதவுகின்றாள். இவ்வாறு அவள் பெண்ணோடு தன் உறவை பலப் படுத்திக் கொள்ளுகின்றாள். திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் பெண் போகும் முன்பே உறவு இதன் மூலம் பலப்படுகின்றது. தாலி கட்டி முடிந்து வைதீகச் சடங்குகள் ஆரம்பித்ததும் நெல் பொரியை அக்னிக்கு இட்டுப் பிரார்த்தனை செய்கின்றார்கள் இருவருமே. பெண் குடும்பநலனை வேண்டி நெல்பொரியை அக்னியில் இட மணமகன் அதற்கு உதவுகின்றான். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பநலன் வேண்டிப் பிரார்த்தித்து வேள்வியைச் செய்யும் நேரம் அதற்கு உதவியாக நெல்பொரியை எடுத்துப் பெண்ணின் கையில் கொடுத்து உதவுவது பெண்ணின் சகோதரன். இந்த உதவியின் மூலம் தன் சகோதரியின் குடும்பநலனுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் மணமகனோடு பெண்ணின் சகோதரனுக்கும் முதல் உறவு ஏற்படுகின்றது அல்லவா?

ஒரு மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் கோர்த்துக் கட்டியதின் மூலம் பெண்ணுக்கும், பையனுக்கும் மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர்கள், சம்பந்திகள், சகலர்கள் என ஏற்படுகின்றனர் அல்லவா? அதை நிரந்தரமாக நிலை நிறுத்தச் செய்யப் படும் வேள்வியில் பெண்ணும், பையனும் ஈடுபடும்போது அதற்கு உதவியாக நெல்பொரியை எடுத்துக் கொடுத்து உதவுவது பெண்ணின் சகோதரன். ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குச் சமமானது நெல்பொரி என்று சொல்லுவது உண்டு. அந்த நெல்பொரியை அக்னியில் இட்டு தன் கணவனின் நீண்ட ஆயுளுக்கும், அவரிடம் ஒப்படைக்கப் பட்ட என்னையும், அவரையும் காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் அந்த அக்னிக்கு இருப்பதாய் மந்திரங்கள் சொல்லி முதல்முறை நெல்பொரியை மணமகள் இடுவாள். பின் அக்னியை வலம் வந்து இரண்டாம் முறையாகச் செல்வத்தை வேண்டி மணமகன் மந்திரங்கள் சொல்ல இரண்டாம் முறையும் நெல்பொரியை சகோதரன் எடுத்துக் கொடுக்க இருவருமாய் அக்னியில் இடுவார்கள். பின் இரண்டாம் முறையும் அக்னியை வலம் வருவார்கள்.

மூன்றாம் முறை நெல்பொரியை அக்னியில் இடும் சமயம் இருவருக்கும் ஆரோக்கியம், சுகம், உணவு, அளிப்பதோடு மட்டுமல்லாமல் இருவரின் மன ஒற்றுமைக்கும் பிரார்த்தித்துக் கொண்டு நெல்பொரியை இடுவார்கள். பின்னர் மூன்றாம் முறையும் அக்னியை வலம் வருதல் நடக்கும். அதாவது வள்ளுவர் சொன்ன அறம், பொருள், இன்பம் மூன்றையும் வேத மந்திரங்கள் சொல்லி வேண்டி மும்முறையும் பிரார்த்தித்துக் கொள்ளுவதே நெல்பொரி இடுவதன் தாத்பரியம். இல்லறத்தை நல்லறமாக்கச் செய்யும் முயற்சியில் இருவரும் ஈடுபடுவதற்குப் பெண்ணின் குடும்பமும் உதவுகின்றது என்ற அர்த்தமே இதன் முக்கியத்துவத்தில் குறிக்கப் படுகின்றது. நெல்பொரியில் சூரியனின் அருள் இருப்பதால் அவன் மறு உருவமாக அதை நினைத்து பிரார்த்திக்கின்றனர். இதுவே பொரி இடுவதன் அர்த்தமும், சகோதரன் உதவி செய்வதன் அர்த்தமும். இது குறித்துப் படித்த புத்தகத்தைப் பலநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன். வேறே ஏதோ தேடும்போது இன்று இது கிடைத்தது. அதே போல் திருமணம் முடிந்ததும் நடக்கும் பிரவேச ஹோமத்திலும் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவை உண்டு. அது பற்றியும் திவா எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை லெளகீகம் என்பதாலோ என்னவோ???

Friday, July 17, 2009

தமிழா, தமிழா!

தமிழ் மணம் நட்சத்திரமா இருந்துட்டுத் தமிழ் சேவை கொஞ்சமாவது செய்ய வேண்டாமா? நான் சொல்லப் போகும் விஷயம் தமிழ் சேவை இல்லைனு எல்லாரும் சொல்லப் போறாங்க. நல்லாத் தெரியும். சொல்லப் போவது வேற்று மொழியையும் கற்பது பற்றியே. இங்கே பலருக்கும் பள்ளியில் தமிழ் ஒரு மொழியாக மட்டுமே இருப்பதாகவும், அனைத்துப் பாடங்களையும் தமிழிலேயே கற்றுக் கொடுப்பதில்லை என்றும், அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியிலேயே கற்றால்தான் நல்லது என்றும் சொல்கின்றனர். எனக்குப் பள்ளி நாட்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் மொழிக் கல்வி தான். ஆறாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலமும், ஹிந்தியும் ஆரம்பம். ஒன்பதாம் வகுப்பில் இருந்தே கணக்குப் பாடங்கள் ஆங்கிலத்தில் அறிமுகம். அப்போவும் அறிவியல் என்னப்படும் சயின்ஸ் பாடம் தமிழில் தான் படிச்சேன். ஆனாலும் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளையும் கூடவே கற்பதில் தவறில்லை. அதனால் இன்னும் விசாலமான அறிவே ஏற்படும் என்பதற்காக எழுதி இருக்கின்றேன்.


இப்போதைய அரசும் சரி, தமிழ்நாட்டு அரசுகளும் சரி சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி என்றே பேசுகின்றன. இப்போது கல்விக்கான மத்திய அமைச்சர் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யப் போவதாயும், மாணவர்களுக்குப் படிப்பின் சுமையையும், தேர்வுகளின் சுமையையும் குறைக்கப் போவதாகவும், அதற்காகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யப் போவதாகவும் தெரிவிச்சிருக்கார். இது எந்த அளவிற்கு மாணவர்களுக்குப் பயனாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. இதனால் பயனடையப் போவது நகரங்களில் உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களாய் மட்டுமே இருக்கலாம். கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு இது பயனாகுமா புரியவில்லை. ஏற்கெனவே பொது அறிவு, மற்றும் ஆங்கில அறிவு போன்றவற்றிலும், கணக்கு, சயின்ஸ் பாடங்களைத் தமிழில் படித்துவிட்டுக் கல்லூரிக்கு வருவதாலும் அந்த மாணாக்கர்களால் மற்ற மாணாக்கர்களோடு போட்டி போடமுடியவில்லை. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். மேலும் சமச்சீர் கல்வி என்றால் என்ன என்பதே இன்னும் விவாதத்தில் இருக்கு.

ஆகவே கிராமங்களின் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு இதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் சில எதிர்க்கின்றன என்பதையும் தினசரிகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வித் திட்டம் தேவை! அதற்கு மத்திய அரசின் NCERT பாடத் திட்டம் பெருமளவில் உதவும். மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பாடங்களைக் கற்க இந்தப் பாடத்திட்டம் பெருமளவும் உதவுகின்றது என்பதை நான் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன். மேலும் கிராமங்களில் அரசுப்பள்ளிகள் என்னதான் பாடங்களைக் கற்பித்து வந்தாலும் முறையான பரிசோதனைச் சாலைகளோ, கணினி வழிப்பாடங்களோ கற்பிக்க இன்னும் முடியாமல் தான் இருக்கிறது. அரசால் இதில் தன்னிறைவு காணமுடியவில்லை.

ஆனால் மத்திய அரசின் வீச்சு அதிகம், பெரியது. ஆகவே கிராமங்களில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவியல் பாடங்களைக் கற்க முறையான பரிசோதனைச் சாலைகளோ, கணினி கற்க தனியாகக் கணினியோ வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி NCERT பாடத் திட்டம் உள்ள நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுமதி கொடுக்கவேண்டும். தமிழ் வளராது, தமிழ் மொழி அழிந்துவிடும் என்றெல்லாம் மொழி உணர்வைச் சொல்லிக் கொண்டு இதைத் தடுத்தால் வருங்கால சமுதாயத்திற்குப் பெரும் பாதகம் செய்தவர்கள் ஆவோம். நம் தாய் மொழி அல்லாத வேறு மொழியைக் கற்றதினால் நமக்கு இன்னும் மொழி அறிவே அதிகம் ஆகும். தாய் மொழியின்மீது பற்றுக் குறையாது. என் சிநேகிதியின் அம்மா நல்லவர் என்று நான் சொல்லிவிட்டால் என் அம்மா கெட்டவங்கனு அர்த்தம் எடுத்துக்க முடியாதல்லவா? மொழியும் ஒரு தாய் தான். அவரவருக்கு அவரவர் தாய் மொழி தாயே ஆவாள்.


கொத்தனார் (ஹிஹிஹி, நம்ம இலவசம் தான்) சில மாதங்கள் முன்பு போட்ட பதிவில் இருந்து சில கருத்துகள் கீழே கொடுத்துள்ளேன். இன்று அனைவருமே சமச்சீர் கல்வியைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளார்கள். சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் சென்று அடையவேண்டும் எனச் சொல்லுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கம் அல்லவோ? இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாய் இருக்கின்றது. இப்போதே நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப் பெறவேண்டும் அல்லவா? நம் தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள், மெட்ரிக் முறை, மாநில அரசுக் கல்வி முறை, மத்திய அரசுக் கல்வி முறை இது தவிர பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் உயர்தரப் பள்ளிகள் ஆன கான்வெண்டுகளின் கல்வி முறை எனக் கல்வித்திட்டங்களும், தேர்வு முறைகளும் முற்றிலும் மாறுபடுகின்றது.

இவை அனைத்தும் ஒரே கல்வி முறையைப் பின்பற்றினாலே சமச்சீர் கல்வி என்று சொல்லலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. என்னுடைய அனுபவத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசுப் பாடத்திட்டம் குழந்தைகள் கல்வி கற்க மிகவும் ஏதுவாய் இருக்கின்றது. அவற்றில் மனப்பாடம் செய்யும் வேலை இல்லாமல் பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தானாகவே அவற்றில் ஈடுபாட்டுடன் விரும்பிப் படிக்கும் வண்ணமும், தானாக எழுதும் வண்ணமும் இருக்கின்றது. மனப்பாடம் செய்து அதைப் பரிட்சைத் தாளில் கக்கிவிட்டுப் போகும் முறை இல்லை. பாடங்கள் நன்கு மனதில் பதியும் வண்ணம் சொல்லிக் கொடுக்கப் படுகின்றது. சிறந்த கல்வி முறை எனப் பலராலும் பாராட்டப் பட்டிருக்கின்றது. மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க உலகத் தரத்தில் போட்டியிட்டு வெல்லும் திறமையையும் அளிக்கின்றது.

அத்தகையதொரு கல்வியைத் தரக் கூடியவையாக அனைத்துப் பள்ளிகளையும் மாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பக்ஷமாக கிராமத்துப் பிள்ளைகள் படிக்கவாவது இத்தகையதொரு கல்வித் திட்டத்தை முன் வைக்கலாம். அதற்கு ஒரே வழி நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதே. அங்கே ஹிந்தி சொல்லிக் கொடுக்கின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக மொழிப்பற்று என்ற பெயரில் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் அரசுகள் அனுமதிப்பதில்லை. ஆனால் இதன் மூலம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு எத்தகையதொரு அரிய சந்தர்ப்பம் இழக்க நேரிடுகின்றதை என்பதை வெகு சுலபமாய் அரசியல்வாதிகள் மறந்துவிடுகின்றனர். நவோதயா பள்ளிகளைக் கிராமங்களில் அனுமதிப்பதன் மூலம், உயர்தரக் கல்வி மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் கூட கிராமத்து மாணாக்கர்கள் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். பரிசோதனைக் கூடங்களில் அவர்களே சோதனைகளைச் செய்து பார்க்க வசதிகள் கிட்டும்.

ஆங்கில அறிவு மேம்படும். விஞ்ஞானப் பாடங்களும் கணினி பற்றிய பாடங்களும் முறையாகக் கற்றுத் தரப் படும். மேலும் மத்திய அரசின் வீச்சு மாநில அரசை விட அதிகம் என்பதால் இதற்காகச் செலவு செய்வதும் மத்திய அரசுக்கு எளிது. ஆனால் அரசியல்வாதிகளும், தமிழார்வலர்களும் சொல்லுவது ஹிந்தி இருக்கக் கூடாது என்பது. இப்போது மத்திய அமைச்சர்களாய் இருக்கும் தமிழ்நாட்டு மந்திரிகள் பலரும் ஹிந்தியில் தெளிவாகவும், இலக்கண சுத்தமாயும் பேசும் தகுதி படைத்தவர்கள். அதனால் தமிழர்கள் இல்லை என ஆகிவிடுமா? குறைந்த் பக்ஷமாய் எட்டாம் வகுப்பு வரையிலுமாவது ஹிந்தியை அனுமதித்துவிட்டுப் பின்னர் விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம் எனக் கொண்டு வரலாம். தமிழ் மொழி கற்பது கட்டாயம் என்றும் சொல்லலாம். மூன்று மொழிகள் கற்கவேண்டுமே எனச் சொல்லுபவர்களுக்கு என்னோட மறுமொழி என்னவெனில் சிறு குழந்தைகளுக்கு மொழி சுலபமாய் வந்துவிடும். வேற்று மொழியான ஆங்கிலத்தை எல்கேஜியில் இருந்து கற்கவில்லையா?

வேண்டுமானால் மூன்றாம் வகுப்பு வரையிலும் தமிழும், ஆங்கிலமும் தான் என்று வைத்துவிட்டுப் பின்னர் நாலாம் வகுப்பில் இருந்து ஹிந்தியைக் கொண்டு வரலாம். இதன் மூலம் ஆசிரியப் படிப்புப் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். சம்பளம் மத்திய அரசே கொடுப்பதால், நமக்கும் சுமை ஏறாது. ஹிந்தியை மட்டும் எட்டாம் வகுப்பு வரை கற்றுக் கொடுத்துவிட்டு நிறுத்தலாம். இதன் மூலம் வெளி மாநிலங்கள் சென்று சம்பாதிக்க விரும்பும் மாணாக்கர்கள், அல்லது படிக்க விரும்பும் மாணாக்கர்கள் பயன் அடைவார்கள். அரசியல் நோக்கத்திற்காக ஹிந்தி கற்கும்போது வயிற்றுப் பிழைப்புக்காக ஹிந்தி கற்கலாமே? மற்ற மாநிலங்கள் இதன் மூலம் வெகுவாகப் பயனடைகின்றன. அவர்களின் இலக்கியமும் நமக்கு வருகின்றது. நம் இலக்கியமும், படைப்புகளும் அவர்களையும் சென்றடையவேண்டுமெனில் மொழிப் பரிமாற்றம் அவசியம். தமிழே இல்லாமல் படிப்பதை நிச்சயமாய் ஆமோதிக்க முடியாது.

குஜராத்திற்குச் சென்றால் தமிழரோ, தெலுங்கரோ, மலையாளியோ குஜராத்தியில் தான் படிக்கணும், படிக்க முடியும். எந்த விதமான ஆரவார சப்தமும் இல்லாமல் அங்கே நூறு வருஷங்களுக்கும் மேலாக குஜராத்தி மீடியத்தில் தான் கற்பிக்கப் படுகின்றது. கூடவே ஹிந்தி கற்றுக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படவில்லை. தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபாவின் தனிப்பட்ட தேர்வுகள் தவிர, பள்ளியிலும் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கின்றது. அரசுப் பள்ளிகள் தவிர மற்றப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியும் இருக்கின்றது. நவோதயா பள்ளிகளில் முழுக்க முழுக்க ஹிந்தி, ஆங்கிலம் தான். மாநில மொழி கற்கவென்று உள்ளூர் மக்களில் மாநில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நவோதயா பள்ளிகளில் கற்பிக்கப் படுகின்றது. இந்த மாநில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப் படுகின்றது. ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலத்தில் பேசவும் தனி வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அங்கே இதன் மூலம் பெருமளவில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கவும் முடியும். கல்வியை வியாபாரம் ஆக்காமல் அதே சமயம் கல்வியைக் கற்றுக் கொடுத்துச் சம்பாதிக்கவும் முடியும் என்று காட்டுகின்றனர். ஆகவே உள்ளூர் மாணவர்கள் வெளிமாநிலத்தவர்கள் வந்தாலும் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ, அல்லது உள்ளூர் மக்களுடன் தங்கள் தாய்மொழியிலே உரையாடவும், வெளிமாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கெனச் செல்லவும் வசதியாய் இருக்கின்றது. நவோதயா பள்ளிகள் சிறப்பாக நடத்தப் படுகின்றன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் இருப்பதால் சிறு சிறு குறைகளும் நிவர்த்தி செய்யப் படுகின்றன.

Objectives of Scheme

*

to provide good quality modern education to the talented children predominently from the rural areas, without regard to their family's socio-economic condition.
*

to ensure that all students of Jawahar Navodaya Vidyalayas attain a reasonable level of competence in three languages as envisaged in the Three Language Formula.
*

to serve, in each district, as focal points for improvements in quality of school education in general through sharing of experiences and facilities.


மேலே கொடுத்திருப்பது நவோதயா பள்ளிகள் நாடு முழுதும் திறந்திருப்பதன் நோக்கம். கிராமங்களில் இத்தகைய பள்ளிகளைக் கொண்டு வந்தால், அதன் மூலம் மருத்துவப் படிப்புக்கான பொதுத் தேர்வு, பொறியியல் துறை, மற்றும் சில மேலாண்மைப் பட்டப் படிப்புக்கான பொதுத் தேர்வு போன்றவற்றில் கிராமத்துப் பள்ளி மாணாக்கர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரும். இந்த என் சி இ ஆர் டி பாடத் திட்டத்தின் முக்கிய நோக்கமே மாணாக்கர்கள் பாடங்களைத் தாங்களாகவே புரிந்து கொண்டு தன்னிறைவு பெறுவதே.

இப்போ கீழே முனைவர் குழந்தைசாமி அவர்களின் கேள்வி பதிலில் தமிழ்மொழி கற்பது பற்றிய இரு கேள்வி-பதில்கள்:-
முனைவர் வா செ குழந்தைசாமிஅவர்களுடனான நேர்காணல் அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது.
இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

(கீதா)இதுக்கு என்னோட கருத்து: எங்கோ ஒரு சிலர் தமிழ் படிக்காததால் தீங்கு நேரிடாது எனக் கூறுகின்றார் முனைவர். தமிழ் படிக்காததால் எவ்வாறு தீங்கு நேரிடாதோ அவ்வாறே தமிழ்நாட்டுக் கிராமங்களின் விருப்பப் படும் மாணாக்கர்களும் தமிழ் தவிர மற்றொரு மொழி கற்பதும் தவறாகாது. தீங்கும் நேராது. சொல்லப் போனால் மனமும் விசாலம் அடையும். குறுகிய மனப்பான்மை ஏற்படாது. மொழிப்பற்று என்ற பெயரில் மற்ற மொழிகளையும் வேற்று மொழி பேசுவோரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும், மொழி வெறி ஏற்படாமலும் இருக்கும். தேசீய உணர்வு மேலோங்குவதோடு, சகிப்புத் தன்மையும் அதிகரிக்கும். இன்றைய தேவை அதீத சகிப்புத் தன்மையே.

மேலும் நம் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள முக்கியச் சிறப்பு என்னவெனில் மற்ற நாடுகளிலிருந்து இங்கே வந்தவர்கள் யாரானாலும் அவர்களைத் தங்கள் நாகரீகம், பழக்கவழக்கங்களிலிருந்தும், மொழியிலிருந்து சற்றும் மாற்றாமல், எவ்வாறு குளிர்சாதனப் பெட்டி பல்வேறு விதமான பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கின்றதோ அவ்வாறே, தெலுங்கர், மராட்டியர், கன்னடர், செளராஷ்டிரர் என அனைவரையும் அவர்களின் சொந்த மொழியையும், வழக்கங்களையும், கலாசாரத்தையும் விடாமல் பாதுகாத்துக் கொடுத்து வந்திருக்கின்றது. இதற்கு தியாகராஜ ஸ்வாமிகளின் தெலுங்குக் கிருதிகளும், நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் செளராஷ்டிரக் கீர்த்தனைகளையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப் பட்ட ஒரு மொழியானது மற்ற மொழிகளை இயல்பாகவே அரவணைத்துச் செல்லும்போது தமிழன் மற்ற மொழிகளைக் கற்பதில் என்ன தவறு ஏற்படமுடியும்?

கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன்.
இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன்


(கீதா)என்னோட கருத்து:- ஏன் தீர்க்க முடியாது??? புரியவில்லை. வெளிநாட்டு வாழ் குஜராத்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மாநிலத்தை மட்டுமில்லாமல் தங்களுடைய பூர்வீகக் கிராமத்தையும் மேம்படுத்தப் பலவிதங்களிலும் நிதி உதவி செய்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு என அறக்கட்டளைகள் அமைத்தும், சாலை மேம்பாடு, குடிநீர் வசதி,நீண்டகால மின் திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி உதவியும் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்குக் கடந்த நூறு வருஷங்களாக இலவசப் படிப்பை அளித்து வருகின்றனர். அனைத்தும் குஜராத்தி மொழியிலேயே கற்பிக்கப் பட்டாலும் மாணவர்கள் மற்ற மொழிகள் கற்பதில் தடை ஏதும் இல்லை. அஹமதாபாதில் தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் இருக்கின்றன. அவை தமிழை ஒரு மொழியாகவே கற்பித்தாலும் மாணாக்கர்கள் அதை விரும்பிப் படிக்கும் வண்ணம் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர். ஹிந்தி அங்கே ஆட்சி மொழி இல்லை என்றாலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் ஹிந்தியும் ஆங்கிலமும் ஏற்கப் படுகின்றன. ஆகையால் நம் அரசும், மொழி வல்லுநர்களும், பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் ஆசிரியப் பெருமக்களும் இணைந்து நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் வரவிட்டாலே மாணவ சமுதாயத்திற்குப் பெரும் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள்.

Thursday, July 16, 2009

மனம் கவர்ந்த பதிவுகளும், சில தளங்களும் -2

பூக்கள் என்றால் யாருக்குத் தான் ஆசையா இருக்காது?? அதிலும் இந்தப் பாரிஜாதம் என அழைக்கப் படும் பவளமல்லிப் பூக்களைப் பார்க்கணுமா?? இதோ இங்கே போங்க, இவங்களைப் பத்தின எந்தத் தகவலும் கிடைக்கலை. உமா ஆத்திரேயா என்று பெயர் மட்டும் கிடைத்தது. ப்ரொஃபைலுக்குப் போக முடியலை. போக முடிஞ்சவங்க சொல்லலாம், ஆனால் நான் பூக்களைப் பார்த்துட்டு வர இங்கே போவேன், அதுவும் புத்தம்புதிய தோட்டத்துப் பூக்கள்! My Garden நண்பர் ஆகிரா அறிமுகம் செய்தார் இந்த வலைப்பதிவை.


இப்போ எழுதப் போறது "அழகி" விஷி என்னும் விஸ்வநாதனைப் பற்றி. இவரை அறியாதவர்கள் இருக்கமுடியாது என்றாலும் இவர் கையில் மாட்டிய அழகி நாட்கள் ஆக, ஆக, மேலும் மேலும் புதுமையும், பொலிவும் பெற்று இன்னமும் மெருகேறி அழகாகவே இருக்கிறாள். மனித அழகிக்கு ஏற்படும் வயதான தோற்றம் இவளிடம் காண முடியாது. அழகியைக் காணவேண்டுமா?? இதோ இங்கே பாருங்கள்! அழகி எத்தனை அழகாகக் காட்சி அளிக்கின்றாள்??அழகோ அழகு

அழகியை வைத்து இத்தனை திறமை காட்டும் விஷியைப் பற்றி அறிய இதோ இங்கே!VISHYஅழகியின் அழகான முகம் பற்றி அறிய இதோஅழகிய அழகிஅழகி கொடுக்கும் புதிய வசதிகள் பற்றிய ஓர் எளிய அறிமுகம் கீழே:-
Azhagi - It's different - Easy Tamil Transliteration in ALL applications, Auto Transliteration, Reverse Transliteration, Dual Screen Transliteration and more - www.azhagi.com

As of Azhagi 6.0.7, one can try out transliteration in Hindi and other languages [in beta stage - Malayalam, Kannada, Telugu, Punjabi, Bengali, etc.] too in ALL applications.


அடுத்து திரு தமிழ்த்தேனீ என அழைக்கப் படும் கிருஷ்ணமாச்சாரிரங்கஸ்வாமி. இவரின் தாயார் ஆர்.கமலம்மாள், அந்தக் காலத்துப் பிரபலமான பெண் எழுத்தாளரில் முக்கியமானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருவதோடு, எக்ஸ்நோரா அமைப்பிலும் சேர்ந்து பணியாற்றி வருகின்றார். சுற்றுச் சூழல் மாசுபடுவதை எதிர்த்து நடக்கும் கருத்தரங்குகளிலும், தமிழ்ப் புத்தகங்கள் மின்னாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொதுசேவைகள் செய்வதிலும் முன்னணியில் இருக்கிறார்.தமிழ்த்தேனீ இந்திய மக்கள் தளத்தில் அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையிலும், கலைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் ஆகியன காணக் கிடைக்கும். உங்கள் படைப்புகளையும் அளிக்கலாம்.

அடுத்து ஆகிரா ராஜகோபாலன். இவர் மழலைகள். காம் என்னும் தளத்தின் ஆசிரியர். சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகக் கதைகள் மூலமும், பல்வேறு நீதிக்கதைகள், அயல்நாட்டுச் சரித்திரம், தெய்வீகக் கதைகள், தமிழ் இலக்கியம், வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கும், நம் நாட்டில் வாழும் பிள்ளைகளுக்கும் இணையம் மூலம் தமிழ் கற்றுக் கொடுத்தல் ஆகியன செய்து வருகின்றார். இவரிடம் உள்ள தனிச் சிறப்பு எந்தச் சம்பவத்துக்கும், எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்ற திரைப்படப் பாடல்களை ஒளி, ஒலி பரப்புச் செய்துவிடுவார். தொழில் முறையில் பொறியாளரான இவர் தற்சமயம் வெப் டிசைனிங்(தமிழில் என்னங்க??) செய்து வருகின்றார். இவர் பொறுப்பில் நிலாச்சாரல், சிஐடி இந்தியா. காம், ஏரோமாடிக் சிஸ்டம்ஸ், தமிழ்யூனிட்.காம், தமிழ் லிடரேசர்.நெட், எஜுகேஷனல்செர்விஸ்.நெட் , தமிழிசை.காம் போன்ற பல்வேறு தளங்களுக்கு டிசைனிங் செய்து வருகின்றார். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் கணினித் தமிழ், தமிழ் இலக்கணம், கவிதைகள், விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் போன்றவற்றையும் தொகுத்து அளிக்கின்றார். மழலைகள் தளம் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழியிலும் மாதம் இருமுறை வெளியிடுகிறது படைப்புகளை. உங்கள் குழந்தைகளின் படைப்புகளையும் வெளியிடலாம். சிறுகுழந்தைகளின் ஓவியங்கள், கதைகள், கட்டுரைகள் போன்றவையும் வெளியிட அனுப்பலாம். தளத்தின் முகவரி இதோ!மழலைகள் இங்கே சென்று பார்க்கலாம். மழலைகளின் ஆசிரியர் பட்டாளத்திற்கெனத் தனித் தனியாக அறிமுகப் பக்கங்கள் உள்ளன. :D

அடுத்தது எனக்கு மிகவும் பிடிச்ச, அடிக்கடி போய்ப் பார்க்கும், படிக்கும் தளம்னு சொல்லலாம், இந்தத் தளத்தை.Dharampal இப்போச் சில மாசமாப் போகலை என்றாலும் இதில் உள்ள செய்திகள் பெருமளவில் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என ஆசைப் படுகிறேன். பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இருந்த இந்தியாவின் நிலையும், அப்போது இந்திய மக்கள் எவ்வளவு படிப்பறிவு பெற்றிருந்தனர் என்பதும், விவசாயம் எத்தனை சிறப்பாகவும் சீராகவும் செம்மையாகவும் நடைபெற்றது எனவும் அறியவேண்டுமா?? பல வருஷங்கள் ஆய்வு நடத்திய காந்தீயவாதியான தரம்பால் அவர்களின் இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள். செங்கல்பட்டு மாவட்டம் 1770-களில் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய ஓர் வர்ணனை இதோ!

"The district of Chengalpattu had around 2,200 localities in it around 1770s10. A majority of the localities also had one or several sub- habitats situated at some distance from the main habitat. These localities largely were villages where the main economic activity was agriculture and animal husbandry. But quite a number had very little agriculture. Some of these latter were towns and places of great learning and many of pilgrimage, while others were centres of weaving, fishing, oil manufacture, stone work and other crafts. The twin towns of Kanchipuram were an ancient centre of learning and had been a centre of politics, administration, industry and commerce in Southern India until at least the 7th Century AD. Even in 1770, Kanchipuram was a major religious centre, as it also is today, and of people engaged in various other crafts. While around 2,200 localities are listed in this 1770 survey, the main data available pertains only to 1,910 localities. Amongst these 1,554 had human habiation, and 356 had no habitation at all around 1770. These 1,554 localities and 62,529 houses in them besides temples, shrines, centres of scholarship, resting places for travellers and the like. The number of temples and shrines in the district was around 3000 to 4000; some of their structures dated back to the 7th Century AD."

இது ஆங்கிலேய ஆதிக்கம் முழுமையடையும் முன்னர் உள்ள நிலைமை. நம்முடைய கோயில்களும் சரி, அதைச் சார்ந்த ஊர்களும் சரி மிக மிகப் புராதனப்பெருமை உள்ளவை. காலம் காலமாக அரசர்களும், மந்திரிகளும், மற்றவர்களும் இவற்றைப் பெருமையுடன் பராமரித்து நமக்குக் கொடுத்து வந்திருக்கின்றனர். எந்த அரசனும் கொடுமைப் படுத்தியோ, அல்லது துன்புறுத்தியோ, அல்லது வற்புறுத்தலின் பேரிலோ இந்த அழகான சிற்பங்களையும், சிலைகளையும், பிரம்மாண்டமான கோயில்களையும் கட்டியதாக வரலாறு சொல்லவில்லை. ஆனால் நாம் நம் வருங்கால சந்ததியினருக்கென என்ன வைத்திருக்கிறோம்?? இருக்கிறதையும் அழிக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லிக்கலாம். :(

நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் - 2

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும் நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத் தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப் பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச் சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி, மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது. எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில் காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத் திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டார்.

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளை அவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம் இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம் வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை. ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும் என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார். உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார். ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில் உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன். தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப் பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில் ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.

ஆதாரம்:உ.வே.சா. அவர்களின் நினைவு மஞ்சரி, மற்றும் தெய்வத்தின் குரல். பேராசிரியரும், மிகச் சிறந்த தமிழபிமானியும் ஆனவரும், பெரிய புராணத்தை ஆய்வு செய்து இந்த விஷயத்தை உறுதி செய்தவரும் ஆன அமரர் திரு அ.ச.ஞானசம்மந்தன் அவர்களும் ஒருமுறை இதைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.



இன்னும் முடிக்கலை, மிச்சம் எழுதணும். எப்போனு தெரியலை! :)))))))

நந்தனாரை வேதியர் தடுத்தாரா? ஏற்கெனவேயே இது பற்றிப் போட்ட பதிவை இங்கே காணலாம்.

Wednesday, July 15, 2009

பெரிய புராணத்தில் நந்தன் சரித்திரம்!

Sunday, February 18, 2007

212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா?
தியாக ராஜனுக்கு ஒரே கோபம். நந்தனாரைத் தடுத்தது வேதியர் யாரும்
இல்லை என்று நான் சொன்னதற்கு. அப்புறம் இன்று தற்செயலாகச் சக்தி
விகடன் படித்தபோது அதிலும் இந்தச் செய்தி (எனக்காகவே வந்தாற்போல்)
வந்திருந்தது. இருந்தாலும் நானும் பெரிய புராணம் புத்தகத்தை (ஓசி தான்) வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போ எழுதப் போறது என்னோட சொந்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதினதை அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.

திருஆதனூரையும், அதன் செழுமையையும் வர்ணிக்கும் சேக்கிழார் அங்கிருக்கும் புலைப்பாடியைப் பற்றியும் வர்ணித்து விட்டு இத்தகைய புலைப்பாடியில் முன் ஜென்ம வாசனையால் இறைவனான சிவனை நினைந்த வண்ணம் ஒருத்தர் இருந்தார் என்றும் அவர் பெயர் "நந்தனார்"
என்றும் கூறுகிறார். அதற்கான செய்யுள் பெரிய புராணத்தில் 1051-ம் எண்ணில் வருகிறது.

"இப்படித்தாகிய கடைஞர் இருப்பின்வரைப் பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வோடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளரானார்."

என்று நந்தனாரைப் பற்றிக் கூறும் சேக்கிழார் நந்தனார் உணர்வு தெரிந்த நாள் முதலாய்ப் பிறைமதியான கண்ணி மாலை சூடிய பெருந்தகையான சிவனிடத்தில் சிந்தை செலுத்தித் தன் மனதைக் கட்டுப்படுத்தி மறந்தும் தீத் தொழில் செய்யாமல் சிவனின் கீழ் தான் அடிமை என்னும் நினைப்புடன் வாழ்ந்து வந்தார்.அவருடைய தொழில் ஊருக்காக வெட்டிமைத் தொழில் செய்வது. அதற்காக ஊரார் கொடுத்த மானிய நிலத்தின் வருவாயில் வாழ்ந்தார். அதைக் குறிக்கும் செய்யுள்

"ஊரில் விடும் பறைத்துடவை உணவுரிமையாக் கொண்டு
சார்பில் வருந் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்."

-1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே (தன்னுடைய குலத் தொழிலின் காண் இயல்பாக விளைந்த அச்சத்தினால்) போகாமல் வெளியே நின்றே தொழுது ஆடிப்பாடி வந்தவர். இவருக்கு ஒரு முறை "திருப்புன்கூர்" என்னும் ஊரில் உள்ள சிவனைத் தரிசிக்கும் ஆவல் மேலிட்டது. கோயில் வாயிலில் நின்று இறைவனைக் குறித்த துதிகள் செய்து ஆடிப் பாடிய நந்தனாருக்கு இறைவனைக் காண தனக்கு நேரே காண ஆசை வந்தது. அப்போதெல்லாம் கோயிலில் வாயிலுக்கு நேரே நந்தியைத் தவிர ஏதும் மறைக்காமல் கோயிலைக் கட்டினார்கள் போலும். நந்தனாரின் ஆசையை உணர்ந்த இறைவன் அவருக்கு அருள் செய்ய விரும்பித்
தனக்கு எதிரே இருந்த நந்தியை விலகி இருக்குமாறு பணித்தது தான் இன்று
ரொம்பவே பிரசித்தி அடைந்து இருக்கும் "சற்றே விலகி இரும் பிள்ளாய்!" என்னும் சொற்றொடர். சேக்கிழார் இதைக் குறிப்பிடுகையில் சொல்கிறார்:

"சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும்பிட வேண்டும் என நினைத்தார்கது நேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்."
-1057-ம் பாடல்என்று கூறுகிறார்.

இனி நந்தனாரின் தில்லைப் பயணம் பற்றிப் பார்ப்போம்.நந்தனார் சிவபதிகள் பலவற்றுக்கும் போய் வணங்கி உண்மையான திருத் தொண்டைச்
செய்து வாழ்ந்திருக்கும் வேளையில் தில்லைக்குச் செல்ல வேண்டும் என்ற
பேராவல் அவர் உள்ளத்தே எழுந்தது. கோயில் என்றால் சைவர்களுக்குச்
"சிதம்பரம்" என்று தற்காலத்தில் அழைக்கப்படும் தில்லை தான். தில்லைவனம் சூழ்ந்த தில்லைச் சிதம்பரத்தில் ஆடும் நடராஜரின் திருவடி
தரிசனத்திற்காக நந்தனார் தில்லை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தாலும் "நம் குலத்துக்குப் பொருந்துமோ?" என எண்ணி வருந்தி "நாளைப் போவேன்!" எனக் கூறுகிறார். யாரும் அவரைத் தடுக்க வில்லை. அவராகவே தானே தனியாக எடுத்த முடிவு தான். அதைக் குறிக்கும் பாடல்

"அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிய அணை தருதன்மை உறுகுலதோடிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான் ஏவல் எனப்போக்கொழிவார்
நன்றுமெழுங்காதல் மிக நாளைப்போவேன் என்பார்."
-1061-ம் பாடல்

இப்படிச் சொன்னவர் ஒருநாள் தில்லைப் பயணம் மேற்கொண்டார். அங்கே தில்லை வாழ் அந்தணரின் ஒழுக்கத்தாலும், தவ நெறியாலும் கவரப்பட்டு,வேதங்கள் ஓதுகிற மடங்கள் இருப்பதையும் பார்த்து
யோசிக்கிறார் மேலே செல்லலாமா என. அதற்குரிய பாடல்:

"செல்கின்ற போழ்தந்த திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந்தீவளர்த்து பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெருங் கிடையோது மடங்கள் நெருங்கினவுங் கண்டு
அல்குந்தம் குலநினைத்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்." -1063-ம் பாடல்

இவ்வாறு மூவாயிரம் ஆகுதிகள் இருக்கும் வேதிகைகள் நிறைந்த இவ்வூருக்கு உள்ளே நான் போகலாமா என யோசித்தவாறே நகர் வலம் வருகிறார். இரவும் வந்தது. எவ்வாறு நடராஜப் பெருமானின் ஆனந்தக்
கூத்தைக் காண்பது என்ற நினைப்புடனே உறங்கும் நந்தனாரின் கனவில் பிறைசூடிய பெருமான் தோன்றி அருள் செய்கிறார். முக்கண்ணனார் கூறியதாக சேக்கிழார் எழுதுகிறார்:

"இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் என்ன மொழிந்து
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளானார் அருளி அம்பலத்தே மேவினார்." -1068-ம் பாடல்

நந்தனாரைத் தீக்குள் இறங்கிப் புனிதராக மாறி பூநூல் அணிந்த தில்லைவாழ்
அந்தணருடன் நீ கோயிலுக்குள் வருவாயாக எனக் கூறிய இறைவனார்
தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் அவ்வாறே தோன்றி நந்தனார் மூழ்கத்
தீஅமைத்துக் கொடுக்கும்படிக் கட்டளை இடுகிறார். அச்சத்துடன் நந்தனாரைத்
தேடிப் போகும் தில்லைவாழ் அந்தணரைத் தீமூட்டித் தருமாறு நந்தனார் வேண்ட அவர்களும் இறைவனைத் துதித்து அவ்வாறே செய்கிறார்கள். தீயில் மூழ்கிய நந்தனார் புதுப் பிறவி எடுத்தாற்போல் மீண்டு வந்து தில்லை வாழ்
அந்தணர்களுடன் அம்பலத்து ஆடுவானின் சன்னதிக்குச் சென்று இறைவனுடன் ஐக்கியம் ஆகிறார். அதற்குரிய பாடல்கள்;

"செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந்துபி நாதம்
வந்தெழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள்பொழிந்தார்." -1073-ம் பாடல்

திருவுடைய தில்லை வாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அருமறைசூழ் திருமன்றி ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாராம் மறை முனிவர்" -1074-ம் பாடல்

"தில்லைவாழ் அந்த்ணரும் உடன் செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்." -1075-ம் பாடல்

இது தான் பெரியபுராணத்தில் நாம் காணும் நந்தனாரின் சரித்திரம். தவிர, பெரிய புராணத்தில் சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். அவர்களின் தவநெறியைப் பற்றியும், சீலத்தையும், ஒழுக்கத்தையும், சிவனையன்றி சிந்தையில் எவரையும் கொள்ளாத பாங்கையும் போற்றித் தான் பாடி இருக்கிறார். அந்தப் பகுதி நான்
சிதம்பரம் தீட்சிதர் வரலாறு எழுத எண்ணி உள்ளேன். அப்போது விரிவாக
எழுதுகிறேன். இதைத் தவிர தேவாரம் பாடுவதைப் பற்றியும் கேட்டிருந்தார்.
தேவாரம் அங்கே தினமும் பாடப் படுகிறது, குறிப்பிட்ட நேரங்களில் தேவாரம் பாடாமல் ஆரத்தி எடுக்கப் பட மாட்டாது. தவிர மார்கழி மாதம் நடராஜர் திரு உலா வரும்போது தேவாரம் ஓதுவோர் முன் சென்று தேவாரம் ஓதிக் கொண்டு போக, பின்னே நடராஜர் அதைக் கேட்டுக்
கொண்டு போக அவர் பின்னே வேதம் ஓதுவோர் வேதம் ஓதிக் கொண்டு வரும் காட்சியை இன்றும் திருவாதிரைத் திருநாளில் காணலாம்.

*************************************************************************************

இரண்டு வருஷங்கள் முன்னால் முத்தமிழ்க்குழுமத்தில் ஒருவரின் கேள்விக்காகப் போட்ட பதிவு இது. திரு திவாகர் பெரியபுராணத்தைப் பார்க்கணும்னு சொல்லி இருக்கிறார். அதுக்காகவும் தனி மடல்களில் சில நண்பர்கள் கேட்டதுக்காகவும் ஓர் மறு பதிவாகப் போட்டுள்ளேன். நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் -பகுதி இரண்டும், மனதைக் கவர்ந்த சில பதிவுகளும், தளங்களும் இதை அடுத்து வெளியாகும்படியாக அமைத்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும்.

நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள்! 1

கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ப் பண்டிதர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் நந்தன் சரித்திரம் எழுதப் பட்டிருந்த வேளை. சேக்கிழாரால் எழுதப் பட்டிருந்த பெரிய புராணத்தில் வரும் "திருநாளைப் போவார்" என்னும் சரித்திரம் தான் பாரதியார் அவர்களால் நந்தன் சரித்திரமாய் எழுதப் பட்டது. அந்நாளில் பிரபலமாகக் கவி பாடும் திறன் பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள் சேக்கிழாரின் திருநாளைப் போவார் சரித்திரத்தில் உள்ள உண்மைக்கு மாற்றாகத் தாம் எழுதிய நந்தன் சரித்திரத்தில் பண்ணை மிராசுதார் நந்தனைத் தில்லைக்குப் போகாமல் தடுத்ததாய் எழுதி இருந்தார். உண்மையில் நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் தஞ்சை ஜில்லாவின் சில மிராசுதார்கள் தங்கள் வயல்களில் "பண்ணையம்" (விவசாயம்) செய்யும் உழவர்களை ரொம்பவே துன்புறுத்தி வந்ததைக் கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏழை மக்களும் பெரும்பாலும் துன்பத்தைச் சகித்துக் கொண்டே இருந்ததையும் கண்டார். ஏற்கெனவே நந்தனார் என்னும் கீழ்க்குலம் என்று சொல்லப் படும் குலத்தைச் சேர்ந்த ஒரு நாயன்மாரின் வாழ்க்கைச் சரிதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட அவரின் இரக்க உள்ளமானது, இந்த வாழ்க்கைச் சரிதத்தைக் கவிதையாக எழுத வைத்தது. அந்தக் கவிதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் சிருஷ்டித்தார் ஒரு வேதியரை. அந்த வேதியரை மிக்கக் கொடூர மனம் படைத்தவராய்ச் சித்தரித்தார். உண்மையில் சொந்தமாய் விவசாயம் பண்ணிக் கொண்டு ஊர், ஊராகச் சிவன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நந்தனாரை ஒரு வேதியரின் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.

நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும் இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய் இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர் நினைவில் வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார் பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்: இல்லை என்பதே! பின்னர் நடந்தது. நாளைக்குப் பார்க்கலாமா?

ஆதாரம்:உ.வே.சா. அவர்களின் நினைவு மஞ்சரி, மற்றும் தெய்வத்தின் குரல். பேராசிரியரும், மிகச் சிறந்த தமிழபிமானியும் ஆனவரும், பெரிய புராணத்தை ஆய்வு செய்து இந்த விஷயத்தை உறுதி செய்தவரும் ஆன அமரர் திரு அ.ச.ஞானசம்மந்தன் அவர்களும் ஒருமுறை இதைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மனம் கவர்ந்த சில பதிவுகளும், சில தளங்களும்!

இந்தப் பதிவுகளைப் பத்தி யாருக்கும் தெரியாமல் இருக்காது. தமிழ்மணம் நட்சத்திர வாரத்திலே பதிவுகளை அறிமுகம் செய்வது உண்டா என்பதும் தெரியாது. ஆனாலும் சில பதிவுகள் என்னைக் கவர்ந்தவை. சிலருடைய தமிழ்த் தொண்டும் என்னை ஆச்சரியப் படுத்த வைக்கிறது. அந்த அளவுக்கு என்னால் முடியாது என்பதாலும் இது பரவலாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும் என்னளவில் என்னைக் கவர்ந்த ஒரு சில பதிவுகளைப் பத்தி முதலில் சொல்லுகின்றேன். முதலில் வருபவர் தங்கமணி அம்மா.

தமிழ்க் கவிதைகள் எழுதும் தங்கமணி அம்மாவின் பதிவு இதோ!தங்கமணிஇங்கே. சந்த வசந்தம் குழுமத்தில் இருக்கிறாராம். 69 வயதாகும் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக இவரைப் பற்றிய குறிப்பு சொல்லுகின்றது. தமிழிலக்கணத்தை இப்போ சந்த வசந்தம் குழுமம் மூலம் திரும்பவும் கற்று மரபுக் கவிதைகள் எழுதி வருகின்றார். இவ்வளவு இலக்கணமும் நினைவில் வச்சுக்கிறதுனா எனக்குக் கஷ்டமா இருக்கும் போல் இருக்கு! அம்மா அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை! விடாமல் போய்ப் படிச்சுடுவேன். முதலில் அறிமுகம் செய்தது ஜீவா வெங்கட்ராமன். பட்டாம்பூச்சி விருதை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போத் தான் அவங்க வலைப்பதிவைப் பற்றித் தெரிய வந்தது. அதுக்கப்புறம் அவங்களோட பதிவுகளுக்குப் போகாமல் இருப்பதில்லை.மரபுக் கவிதைகளில் விருப்பம் உள்ளவர்கள் போய்ப்படிக்கலாம். எப்படி அருமையா எழுதறாங்கனு புரியும்.

அடுத்து ஈரோடு நாகராஜ் தன்னம்பிக்கை மிகுந்த இவர் ஒரு மிருதங்க வித்வான். அதற்கேற்ற தாள லயத்தோடு கூடிய பதிவுகள். பல்வேறு விஷயங்களையும் பற்றி எழுதி வரும் இவர் தங்கமணி அம்மாவின் பதிவுகளின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் கச்சேரிக்குச் செல்லும் ஊர்களைப் பற்றிய தொகுப்பும், அங்கே உள்ள முக்கியமான கோயில்கள் பற்றியும் தொகுத்து அளித்து வருகின்றார். பயணக் கட்டுரை, சங்கீதக் கட்டுரைகள், அன்றாட நிகழ்வுகள் என விதவிதமாகத் தருவதோடு அவ்வப்போது சிறு கவிதையும் எழுதுகிறார். இப்போ தொலைக்காட்சியில் வந்த நட்பைப் பற்றிய விவாதத்தைப் பற்றி எழுதி உள்ளார். சென்னை ஆன்லைன் தளத்திலும் இவரின் பதிவுகள் வருகின்றன. சங்கீதம் பற்றியும், அருமையான கச்சேரிகள் பற்றியும் விரிவாக எழுதுகின்றார். சங்கீத ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான ப்திவு இது.


அடுத்து நம்ம பழமை! பழமைபேசிரொம்பவே எழிலாய்க் கொங்குத் தமிழில் பழமை பேசிட்டுத் திரிகிறார். அதோடு அவரிடம் ஒரு தமிழ்ப் புதையலே இருக்குங்க! அதிலும் கணக்குகள் போடுவாரு பாருங்க, நான் அந்தச் சமயமாப் பார்த்து ஒளிஞ்சுக்குவேன். இதோ மாதிரிக்கு ஒரு கணக்கு!

ஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன், 300 படி பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழி(ஒரு படி)பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?இந்தக் கணக்குக்கு விடை கண்டு பிடிங்க! :))))) முடியாதவங்க பழமையின் பதிவிலே போய்ப் பார்க்கவும்! அரிய, அழகிய தமிழ்ச்சொற்களஞ்சியத்தையே இவரின் பதிவுகளில் காணமுடியும்.


அடுத்தது ரொம்பவே அருமையான புதையல் ஒன்று. இந்த இளைஞரின் உழைப்பும், ஆர்வமும், விடாமுயற்சியும், செய்வன திருந்தச் செய்யும் இயல்பும் என்னை அதிசயத்தில் ஆழ்த்தும். சிங்கப்பூரில் இருக்கும் கப்பல் கட்டுமானத் துறை(?) பொறியாளரான இவருக்குச் சிற்பங்களில் ஈடுபாடு. பல்லவர் காலச் சிற்பங்களிலும், பிற்காலச் சோழர் காலச் சிற்பங்களிலும் உள்ள நுணுக்கமான வேறுபாட்டைக் கூட கண்டறியும் அளவுக்குச் சிற்பக்கலை பற்றிய அறிவு இவருக்கு உள்ளது. சிற்பங்களையும், கல்வெட்டுக்களையும் ஆராய்வதோடு அல்லாமல் அவற்றின் சரித்திரப் பின்னணி, சிற்பம் செதுக்கும்போது என்ன நினைத்துச் சிற்பி இதைச் செதுக்கி இருப்பார் என்பதில் இருந்து எல்லாவற்றையும் பற்றி நன்கு யோசிக்கின்றார். தேர்ந்தெடுத்த சிற்பங்களைப் படம் எடுத்து, அதன் புராணக் கதைகளின் பின்னணியோடு ,அவற்றின் பொருத்தமான விளக்கங்களோடு நமக்குக் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தாக அளிக்கின்றார். திரு திவாகரின்வம்சதாரா எம்டன் நாவலுக்காக இவர் வரைந்த ஓர் ஓவியம் மிகவும் அற்புதமான உணர்ச்சிக் கலவை. அருமையான ஓவியரும் கூட இவர். இவரின் பதிவுகளைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இடுகின்றார். கல்லிலே கலைவண்ணம்கண்டான் எனத் தமிழ்ப் பதிவுக்குப் பெயர் வைத்துள்ளார். அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு பதிவு இது.

அடுத்து திரு தி.வா. அவர்கள் புதிதாக ஆரம்பித்திருக்கும் ஓர் பதிவு. இல்லம் குழும நண்பர், சென்ற மாதம் சதாபிஷேஹம் கண்டவர், திரு நடராஜன் ஒரு பறவைக் காதலர். பறவைகள் பற்றிய மிக அருமையான ஓர் ஆய்வே செய்து வருகின்றார். எந்தப் பறவையைப் பத்திக் கேட்டாலும் தூக்கத்தில் கூட அது பற்றிச் சொல்லுவார். பறவைக் காதலர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான எழுத்து அவருடையது. அவர் எழுதும் எழுத்துக்களையும், அரிதான பறவைகளின் புகைப்படங்களையும், அவருக்குத் தொழில் நுட்பத்தில் சிறிது பிரச்னை இருப்பதால், திரு தி.வா. திரட்டி ஓர் கூட்டுப் பதிவாக மாற்றி திரு நடராஜனின் சதாபிஷேஹப் பரிசாய் அளித்துள்ளார். இதோ இங்கே உண்மையில் இதைவிடச் சிறந்த பரிசை தனது சதாபிஷேஹத்திற்கு திரு நடராஜன் பெற்றிருக்க மாட்டார். அவரின் எண்ணங்கள், எழுத்துகள், பறவைகளின் தொடர்கள் காலத்துக்கும் கணினியில் அனைவரும் காணக் கிடைக்கும் வண்ணம செய்திருக்கிறார் திரு தி.வா. அவர்கள். தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கு இடையில் இந்த மாதிரியான ஓர் உதவியையும் செய்ய தி.வா.வுக்கு இறைவன் நேரம் அளிப்பதும் இறைவனின் கருணையாலன்றி வேறென்ன???

அடுத்தும் திரு தி.வா. செய்து வரும் ஓர் முக்கியப் பணி பற்றியே. அது இடம் பெறும் தளம் தமிழ் மரபுஇந்தத் தளத்திலே போய் அல்லது கீழ்க்கண்ட சுட்டியைக் க்ளிக்கினால் வரும் பக்கத்தில் தி.வா. அவர்கள் புத்தகங்களை மின்னாக்கம் செய்யும் முறை பற்றி விளக்கம் கொடுத்திருப்பதைக் காணமுடியும். பல அரிய புத்தகங்களை இவ்விதம் மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையின் நூலகப் பிரிவில் சேர்த்து வருகின்றார். மின்னாக்கப் பட்டறையும் அவ்வப்போது குழும நண்பர்களுக்காக நடத்தி வருகின்றார். கல்லூரி மாணவ, மாணவிகளும் இதில் சேர்ந்து பயனடைகின்றனர். மின் பதிப்பாக்கம்இது பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கேகாணலாம். புத்தகங்களை நூலகம் இங்கே காணமுடியும். இது தவிர லினக்ஸ் மொழிமாற்றமும் செய்து வருகின்றார். அது பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது. லினக்ஸ் புரிஞ்சுக்கற அளவுக்கு மூளை இல்லை. நாளாகலாம். இதைப் படிக்கும் நண்பர்களுக்குப் புத்தகங்களைச் சேமிக்கவேண்டி இருப்பின் இந்தப் பட்டறையில் சேர்ந்து பயனடையலாம். அல்லது புத்தகங்களை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அனுப்பி அவர்கள் மூலம் மின்னாக்கம் செய்ய உதவலாம். வருங்காலச் சந்ததியினருக்கு நிரந்தரமாக ஒரு புதையலை அளிக்கின்றனர் தமிழ் மரபு அறக்கட்டளையினர். தமிழ் மரபு அறக்கட்டளை செய்யும் தமிழ்ப் பணிகள் எண்ணிலடங்காதது. அடுத்துச் சில தளங்கள் பற்றி.

Tuesday, July 14, 2009

ஒரு அவசரப் பதிவு இது, பெருமாளையே காணோம்!

பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((

எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?

தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.

R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.


சில மாதங்கள் முன்னே நான் போட்ட இந்தப் பதிவு இது. இப்போ இந்தப் படத்தில் மூலவருக்கு முன்னே இருக்கும் உற்சவ விக்கிரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டது. பெருமாளுக்கு அரைவேலி நிலம் இருந்தும் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுட்டு இருந்தார். இப்போ அவரோட உற்சவரையே தூக்கிண்டு போயாச்சு! நிலத்தில் விளைந்ததை எல்லாம் இந்தக் கோயிலின் உள்ளேயே வைத்துக் கொண்டு பெருமாளுக்கு ஒரு பிடி அரிசி கூடக் கொடுக்காமல் சாப்பிட்டிருக்காங்க. எப்படி மனசு வந்தது? இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்?? மனசு கொதிச்சுப் போய் எழுதி இருக்கேன். இதுக்கு என்ன நீதி? எப்போ கிடைக்கும்? கண்ணீருடனே எழுதறேன்!