எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 16, 2015

அவசரமாய்ச் சில எண்ணங்கள்!இப்போல்லாம் தற்கொலை செய்துக்கறவங்க அதிகமாகிக் கொண்டு இருக்காங்க. முன்னால் எல்லாம் தற்கொலை கோழைத்தனம்னு சொல்லிட்டு இருந்தோம்.இப்போ அப்படிச் சொல்லக் கூடாது என்பதோடு விருது கொடுக்காத குறையாகத் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஆதரவுகளும் பெருகிக் கொண்டு வருகிறது. இப்படியே போனால் அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியர்கள் வேலையே செய்யாமல் உட்கார்ந்திருந்தால் கூட மேலதிகாரிகள் அதைத் தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்படும். அதுவும் ஒரு நாள் நியாயப்படுத்தப்படும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.


இப்போல்லாம் ராமாயணத்தையும், ராமனையும் கிண்டல் செய்வது தான் அனைவருக்கும் முக்கியமான விஷயமாகவும் எளிதானதாகவும் இருக்கு. இப்போதைய அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தையும், சுற்றத்தார்களையும், மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். ஆனால் ராமர் வாழ்ந்த கால கட்டத்தில் மக்களின் பிரச்னைகளுக்கும், எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப அரசன் நாட்டை ஆண்டு வந்திருக்கிறான். இப்போது அது கேலிக் கூத்தாகத் தென்படுகிறது. மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் தானே மனைவியையே துறந்தான் ராமன்! அதனால் அவன் சந்தோஷமா அடைந்தான்? அல்லது இன்னொரு கல்யாணம் தான் பண்ணிக் கொண்டானா? அஸ்வமேத யாகம் செய்கையில் கூட சீதையைப் போன்ற பிரதிமையைத் தான் தன் பக்கம் வைத்துக் கொண்டான். மனைவி இருக்கையிலேயே துணைவியைத் தேடும் இந்தக்கால ஆண்களுக்கு இது புரிவது கஷ்டம் தான்.

இது இப்படி இருக்க ராமன் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்ட குகன், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரைக் குறித்தும் சென்னைப் பித்தன் என்பவர் முகநூலில் பகிர்ந்திருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குகன் வேடன் என்பதற்காகவோ, சுக்ரீவன் வாநரன் என்பதற்காகவோ, விபீஷணன் அரக்கனாக இருந்தான் என்பதற்காகவோ அவர்களைத் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொள்ளவில்லையாம். நிஷாத அரசன் குகன் என்பதற்காகவும், வாநர அரசனாகப் போகிறவன் சுக்ரீவன் என்பதற்காகவும், இலங்கை அரசனாகப் போகிறான் விபீஷணன் என்பதற்காகவும் ராமன் அவர்களைத் தன் சிநேகிதர்கள் ஆக்கிக் கொண்டானாம். அப்படியே இருந்தாலும் ராமனிடம் வரும்போது அவர்கள் வெற்று நபர்களாக அனைத்தும் இருந்தும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். மரவுரியையும், வில், அம்புகளையும் தவிர ராமனிடமும் எதுவும் இல்லை.  வந்து சேர்ந்த நபர்களும் அப்படியே! அப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் ஒருவரை நண்பராக ஏற்க எவ்வளவு யோசிப்போம் என்பதை நினைத்தால் இது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது புரியும்.

ஆனால் இப்போதெல்லாம் இப்படிப் பார்ப்பது தான், பார்ப்பது கூடச் சொல்லக் கூடாது, இல்லையா?  அவதானிப்பது தான் மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது. இதற்குத் தான் எக்கச்சக்கப் பாராட்டுகள்.

மோதி வெளிநாடு செல்வதையும், அவர் உடையணிவதையும் அனைவரும் கேலி செய்து வருகின்றனர்.  வெளிநாடுகள் செல்வதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு எவ்வளவு உயர்ந்து வருகிறது என்பதை அன்றாடம் தினசரிப் பத்திரிகை படிக்கிறவர்கள் புரிந்து கொள்ளலாம். மேலும் இப்போதெல்லாம் ரயிலில் பொதுப் பெட்டியில் கூடக் கழிப்பறை சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. சென்ற மாதம் திருக்கடையூருக்குச் செல்ல சோழன் விரைவு வண்டியில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை வரை பயணித்தோம். குறைந்த தூரமே என்பதால் குளிர்சாதனப் பெட்டிக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கலை. பொதுப் பெட்டியில் தான் பயணித்தோம். சுத்தமான கழிப்பறை, சுத்தமான கிழியாத இருக்கைகள். ஆனால் நம் ஜனங்கள் தான் வண்டியில் வந்து உட்கார்ந்ததும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், ரொட்டி சாப்பிட்ட பேப்பர்கள் எனப் போடுகின்றனர். அதற்கென உள்ள குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. தப்பு நம் மேலும் இருக்கிறது.

இந்த ஐஆர்சிடிசியில்  பயணச் சீட்டு வாங்குவதற்குப் போனால்  அங்கே கேட்குது பாருங்க captcha திரும்பத் திரும்பத்திரும்பத்திரும்பக் கேட்டுட்டே இருக்குது. வெறுத்துப் போயிட்டேன். அப்புறமா முன்னெல்லாம் பணம் செலுத்துவது மிகவும் எளிதாக இருந்து வந்தது.  எல்லா வங்கி பெயர்கள் க்ரெடிட் கார்டா, டெபிட் கார்டா என்னும் கேள்வி மட்டும் இருந்தது. எங்களோடது டெபிட் கார்டு. அதன் மூலம் தான் வாங்குவோம். டெபிட் கார்டுனு க்ளிக் செய்ததும் எந்த வங்கி டெபிட் கார்டு வசதி வைச்சிருக்கோ அதன் பெயரெல்லாம் வந்துட்டு இருந்தது. எங்களோட வங்கிக்கு நேரே க்ளிக் செய்தால் பயனாளர் பெயர் கடவுச் சொல் கொடுக்கச் சொல்லிக் கார்டு எண்ணையும், கணக்கு ஆரம்பித்த வருஷம், மாதமும் கேட்கும். எலலாம் கொடுத்தால் உடனே வங்கியிலிருந்து பணம் செலுத்தப்பட்டுப் பயணச் சீட்டு வந்து விடும். இப்போ முதலிலேயே எந்த வங்கினு கேட்குது. அந்த வங்கியின் தளத்துக்குப் போய்ப் பயனாளர் பெயர், கடவுச் சொல் கொடுத்துக் கணக்கைத் திறக்கிறதுக்குள்ளே போதும்டா சாமினு ஆயிடுது.

ஒரு வாரமாய் இடி, மின்னல், மழை, மோகினி என்பதால் கணினியிலேயே உட்கார முடியவில்லை. எதுவும் எழுதவும் முடியவில்லை. அதோடு குடியிருப்பு வளாகத்தில்  வேலை வேறே நடக்குது. அது முடிஞ்சதும் வீடு சுத்தம் செய்வதே பெரிய விஷயமாகி விடுகிறது.   ஏதோ நொ.சா. சொல்றேன். :)

23 comments:

 1. அது எப்படி முகநூலில் பிறர் எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது ஊர்ப்பட்ட நண்பர்களோ?நான் எப்போதாவது முகநூல் பக்கம் போவேன். வலை நண்பர் சுந்தர்ஜி இப்போது முகநூலில் அதிகம் எழுதுகிறார்.உட்டகங்கள் ஒரு மாயையே பிரதிபலிக்கிறது. கதைகளில் வரும் அன்னப் பட்சி போல் பிரித்தெடுக்க வேண்டும் உண்மையை.வீட்டிலிருந்தே வங்கிக் கணக்கை ஆப்பரேட் செய்ய இன்னும் கற்கவேண்டும் கார்டு எண்ணையும் கணக்கு ஆரம்பித்த வருஷம் மாதம் கேட்கும். எதற்கு.?

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி ஐயா. கார்டு எண்ணையும் கணக்கு ஆரம்பித்த மாதம் வருஷம் எல்லாம் ரயில் பயணச் சீட்டு வாங்குகையில் கேட்கும். :) நாங்க இணையம் மூலம் வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவது இல்லை. டெபிட் கார்ட் இருப்பதால் அதைக் கொடுத்துப் பயணச் சீட்டு வாங்கலாம். அதற்கு மட்டும் பயன்படுத்துவோம்.

   Delete
 2. அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சிகள் பற்றிப் படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவார்களே, அது போல!

  ராமாயணம், மகாபாரதச் சிந்தனைகள் புதியமுறைகளில.கருத்து வருவது அவரவர்கள் மாற்றி யோசிப்பதால்! போகட்டும் விடுங்கள்!

  சென்னையில் மழை பெரிய அளவில் பெய்யவில்லை என்றாலும் வெயிலும், மேகமூட்டமும், சிறு தூறல்களும் விழுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்குக் காலம்பர இங்கே பயங்கர மழை ஶ்ரீராம். இடியும் பயங்கரமாக இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியையும் போடுவதில்லை. கணினியையும் போடுவது இல்லை. புத்தகங்கள் படித்துப் பொழுதைப் போக்குகிறேன். :)

   Delete
 3. சென்னைப் பித்தன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே? சாதாரண மானுடனான ராமனுக்கு இவர்களின் ஆதரவு தேவைப்பட்ட்து என்பதால் ராமன் கூட்டணியாகச் செயல்பட்டிருக்கலாமே? ராமர் வாழ்ந்த காலத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ராமாயணத்தில்? மக்களுக்காக ராமன் செய்தது என்ன? அசோகராவது மரங்கள் நட்டார், ராமர் மரத்தைப் பிளந்தார்.. அதுவும் ஒரு மரம் இல்லை. ராமர் என்ன தான் செய்தார் சொல்லுங்களேன் ப்லீஸ்.. தெரியாமல் கேட்கிறேன். தப்பா நினைக்காதீங்க தெரியாமல் தான் கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் இருந்தாலும் சொல்லப் போவதில்லை. புரியாதவங்களுக்குச் சொல்லலாம். உங்களுக்குப் புரியாமல் இருக்குமா? உங்களை விட என் புரிதல் குறைவே! :)))))))

   Delete
  2. அய்யய்யோ குற்றச்சாட்டு இல்லை. அதுக்கு எனக்கு தகுதியில்லை. நிஜமாவே ராமர் அப்படி என்னதான் செஞ்சார்னு தெரிஞ்சுக்கத்தான்..

   Delete
 4. நானறிந்த வரை இந்தியாவின் மதிப்பு உயரவில்லை. இந்து மதப் பிரசாரகர் என்ற அளவில் தான் மோடியைப் பார்க்கிறார்கள். நல்லது செய்ய மோடிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. செய்கிறாரா பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இந்து மதத்துக்குப் பிரசாரகர் தேவையே இல்லை. இந்து மதத்திற்குப் பிரசாரம் மூலம் யாரையும் மாற்றவும் முடியாது, இந்துவாகப் பிறக்கவேண்டும். :)

   Delete
  2. இந்துவாக மாறினா பணம் தராங்களாமே?

   Delete
  3. எது வேணாலும் சொல்லிக்கலாமே!

   Delete
 5. ஒரு மானுடனாக மானுட அரசனாக ராமன் என்ன செய்தார் என்பதை நீங்க எழுதியே ஆகணும் ஹிஹி. ராமன் தன்னைப் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. காட்டுக்குப் போனதும் சீதையை மீட்டதும் பிற ராமாயண சம்பவங்கள் அத்தனையும் ராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசனாக என்ன செய்தான் என்பதும் தெரியாது. தெய்வம் அது இதென்று கிளப்பிவிட்டு ராமனை உயர்த்தி வைத்திருக்கிறோமே தவிர ராமன் மானிடம் மாண்புற என்ன செய்தார் என்பது கேள்விக்குறி. ராமன் was scheming and self centered என்பதற்கான ஆதாரங்களே அதிகம் இருப்பதாகக் கருதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், காட்டுக்குப் போனதும் சீதையை மீட்டதும் ராமனின் வெற்றியை எடுத்துக் காட்டத்தான். பிறப்பே அதற்குத் தானே! தனக்காக என்ன செய்து கொண்டார் என்று பட்டியல் கொடுங்களேன். ராமனை தெய்வமாக உயர்த்தியது பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே!

   Delete
  2. சட்னு சொல்லணும்னா வாலி வதம்.

   Delete
  3. ராமன் சீதையை மீட்டது வெற்றிக்காகத்தான்னு நானும் சொல்றேன்.

   Delete
  4. வாலி வதம் குறித்து மீள் பதிவு போட்டு நான்கு நாட்களாகின்றன. ராமன் சீதையை மீட்டது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல: அதுவும் ஒரு காரணம் என்றாலும் தன் மனைவி மாற்றான் வீட்டில் இருப்பது சகிக்காமலும் தான்! அதைக் காரணமாக வைத்து ராவணனை வதம் செய்வதற்கும் தான். எல்லாம் திட்டமிட்டே நடத்தப்பட்டன. ராமர் பிறப்பின் காரணமே அது தானே! இது தான் தெளிவாக வால்மீகியின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறதே! ராமன் ஆட்சி செய்த காலம் முழுவதும் எந்தக் கலவரங்களும், கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகளும் நடைபெற்றதாகப் பதிவாகவில்லை. மற்றபடி தாங்கள் செய்ததைக் கல்வெட்டில் பொறித்துக் கொள்வதெல்லாம் கி.பி,க்குப் பின் வந்த அரசர்கள் செய்தது, ராமாயண காலத்தில் தற்பெருமை என்பது இல்லை. ஆகையால் ராமன் செய்தவற்றைப் பட்டியலிட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை.

   Delete
  5. //ராமனை தெய்வமாக உயர்த்தியது பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே!// - தவறு கீசா மேடம். திவ்யப்ப்ரபந்தங்கள் வந்தது அதற்கு முன்னரே. அதிலும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் போன்ற பலர் பாடியுள்ளனர். இராமானுசர் காலம் 10ம் நூற்றாண்டு. குலசேகராழ்வார், 'அயோத்திமனே தாலேலோ' என்று பாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் அதற்கும் முற்பட்ட காலத்தது. 'நான் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்கிறேன், எந்த எந்த பழைய இலக்கியங்களில் இராமர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று.

   Delete
  6. ம்ம்ம்ம்ம், அப்படியா? ஆனால் இதைப் பற்றி உ.வே.சா. கூடச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன். யோசிச்சுச் சொல்லுங்க, எந்தப் பழமையான இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என! வால்மீகியில் வால்மீகியே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அது தெரியும். நான் சொன்னது தமிழ்நாட்டிலே மட்டும்! ஆனாலும் அதுக்கும் முன்னரே ராமாயணம் இருந்ததாகவே உ.வே.சா. சொல்லி இருக்கார். ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

   Delete
 6. அவரவர் இருக்கும் மனநிலை பொறுத்து கண்ணோட்டம் மாறும்... முழுதாக புரிந்து கொள்ளும் மனநிலையில் யாருக்குமே இல்லை எனக் கூட சொல்லலாம்... அப்புறம் தப்பு எப்போதும் நம்மிடமே உள்ளது என்கிற மனநிலை தொடர்ந்தால் எதுவும் இனிமை தான்...!

  ReplyDelete
  Replies
  1. உண்மை டிடி. தப்பு நம்மிடம் உள்ளது என்னும் மனநிலை அனைவருக்கும் வரணும். :)

   Delete
 7. ரொம்ப வருஷம் முன்ன இங்க ஒருத்தர் எங்கிட்ட புதிதா வந்திருந்த ஒருவரிடம் பழகுவதற்கு " இவங்க கிட்ட பழகி நட்பாக இவங்களால் நமக்கு என்ன ஆதாயம் ஏன்னன்னு பாத்துட்டு தானே பழகணும் நு சொன்னாங்க :) எனக்கு நெஜம்மாவே புரியல்ல. ஆ"ன்னு பாத்தேன்! I can't understand this mentality. Do we have to be calculative even for a simple smile and a good will ? it doesn't cost anything though!! சில நேரங்களில் சில மனிதர்கள். என்ன சொல்ல

  ReplyDelete
  Replies
  1. காரியவாதிகள்! ஆங்கிலத்தில் சொன்னால் materialist. வேறென்ன சொல்றது? ஆனால் எனக்கே இம்மாதிரி அனுபவம் உண்டு. என்னிடம் ஆதாயம் இருக்கும்வரை பழகிவிட்டுப் பின்னர் கழற்றி விட்டவர்கள் நிறையவே இருக்காங்க! :)))) உறவிலேயே அதிகம்!

   Delete
 8. இப்போ என்ன சொல்ல வரிங்க? அதை 4-5 அவரில் அழகா fbல சொல்லுங்க பார்க்கலாம் ��

  ReplyDelete