எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 18, 2015

தேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து!

பத்தாம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதற்கும் முன்னிருந்தே  இந்தக் கோயில் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் சேரமான் பெருமாள் காலத்தில் தான் முதன் முதலில் கோயிலை எழுப்பப் பட்டதோடு அல்லாமல் பூஜை முறைகள், திருவிழாக்கள் போன்றவற்றை முறைப்படுத்தி ஆலய நிர்வாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்ததாக பழைய ஓலைச்சுவடிகள் கூறுவதாகச் சொல்கின்றனர். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னரே கோயில் புதுப்பிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். 1686 ஆம் வருடம் தீப்பிடித்ததில் கோயில் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் மறுபடியும் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனின் முயற்சியால் 1729 ஆம் வருஷம் புதுப்பிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது தான் மரத்தால் ஆன மூர்த்தம் அகற்றப்பட்டு கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையால் 12,000 சாளக்கிராமத்தால் ஆன புது அனந்தசயன மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அனந்த பத்மநாபர் கோயில் க்கான பட முடிவு

படம்: கூகிளாருக்கு நன்றி.

இதன் பின்னரே 1750 ஆண்டில் மகாராஜா மார்த்தாண்ட வர்மா முற்றிலும் அனந்தபத்மநாபரின் தாசனாக மாறி தனது அரசை இக்கோயிலின் இறைவன் ஆன பத்மநாப சுவாமிக்கு தானமாக அளித்துப் பட்டயமும் ஶ்ரீ அனந்தபத்மநாப சுவாமி பெயரில் எழுதித் தந்தார். அதோடு தன் உடைவாளையும் அவர் திருப்பாதங்களில் சமர்ப்பித்து பூரண சரணாகதி அடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினருக்கு "பத்மநாப தாசர்கள்" என்ற அடைமொழி அளிக்கப்பட்டு அவ்விதமே அழைத்து வந்தனர். குடியேற்ற வாத ஆட்சிக் காலத்துப் படைகளின் மரபுப்படி பிரிட்டிஷார் ஆட்சி புரிந்தபோது பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் மரியாதை செய்து வரப்பட்டது. இது சுதந்திரம் வந்த பின்னரும் சில காலம் நீடித்து இந்திய ராணுவமும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது. மன்னராட்சி நீக்கப்படும் வரை இம்முறை தொடர்ந்து கொண்டிருந்தது. தற்சமயம் முழுதும் நீக்கப்பட்டு விட்டது.

இதிகாச புராணங்களில் கூறி இருக்கும்படி இந்த இடம் பரசுராம க்ஷேத்திரங்கள் ஏழில் ஒன்று. கேரளத்தில் ஆரம்பித்துக் கர்நாடகாவின் திருக்கோகர்ணம் வரை பரசுராம க்ஷேத்திரம் என்கின்றனர்.  பொதுவாகப் பரசுராம க்ஷேத்திரங்களில் அது சிவன் கோயிலாக இருந்தாலும் சரி, விஷ்ணு கோயிலாக இருந்தாலும் சரி தனியாக அம்மன்/தாயார் சந்நிதி என இருக்காது. ஒரு சில கோயில்களில் ஒரே கர்ப்பகிரஹத்தில் கிழக்குப் பார்த்து சுவாமியும், மேற்குப் பார்த்து அம்மன்/தாயாரும் காணப்படலாம் என்றாலும் இது மிக அரிதாகவே காணப்படும். சக்தி வழிபாடு இங்கே அதிகம் என்பதாலும் இந்த ஆராதனைகள் மிக விசேஷமாகவும் நடத்தப்படுவதாலும் அம்பிகைக்குத் தனிக் கோயில்கள் நிறையக் காணப்படுகின்றன.  அம்பிகை பகவதி என்ற பொதுப்பெயராலேயே அழைக்கப்பட்டுக் கடுமையான ஆசாரங்களோடும், அனுஷ்டானங்களோடும்  ஆராதிக்கப்படுகிறாள். கேரளத்திலேயே இம்முறை அதிகம் காணப்படுகிறது. ஒரு சில கர்நாடகக் கோயில்களும் இந்தப் பரசுராம க்ஷேத்திரங்களாகவே அறியப்படுகின்றன. அது போல் தான் இங்கே திருவனந்தபுரத்திலேயும் பட்டாசாரியார்/நம்பூதிரி/போத்திகள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதிகாசபுராணங்களின்படி பார்க்கப் போனால் பத்மபுராணத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி புலையத் தம்பதிகள் மகாவிஷ்ணுவைக் குழந்தையாகப்பார்க்க ஆசைப்பட அவ்வண்ணமே மகாவிஷ்ணு காட்சி அளித்ததாகவும், அவர்கள் கொடுத்த அன்ன ஆகாரத்தையும் இறைவன் உண்டு களித்ததாகவும் சொல்கின்றனர். மேலும் சில குறிப்புகளின்படி திவாகர முனிவருக்கு முதன்முதல் காட்சி அளித்த இறைவனுக்கு அவர் என்ன கொடுப்பது எனப் புரியாமல் அப்போது கையில் இருந்த பச்சை மாங்காயை ஒரு சிரட்டையில் வைத்து இறைவனுக்குப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே இன்றளவும் கோயிலின் நிவேதனம் தேங்காய்ச் சிரட்டையில் வைத்தே இறைவனுக்குப் படைக்கப்பட்டு வருகிறது. உப்பு சேர்த்த மாங்காய் தான் இங்கே சிறப்பான நிவேதனம் என்றும் அதை வைத்து நிவேதனம் செய்யும் தேங்காய் ஓட்டின் மேல் தங்கத்தால் பூசப்பட்டிருப்பதாகவும் கிட்டத்தட்ட 1200 வருஷங்களுக்கும் மேல் பழமையானது இந்தத் தேங்காய்ச் சிரட்டை என்றும் சொல்கின்றனர். இந்தத் தேங்காய்ச் சிரட்டையில் தான் வில்வமங்கலத்து சாமியாரான திவாகர ஆசாரியார் பழுக்காத மாங்காயை உப்புச் சேர்த்து அளித்ததாகவும், அந்தச் சிரட்டையின் மேலேயே தடித்த தங்கத் தகடுகளைப் பதித்திருப்பதாகவும் சொல்கின்றனர்.


(தொடரும்)

29 comments:

 1. தேங்காய்ச் சிரட்டை பற்றிய தகவல்கள் அறியாதவை அம்மா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி நன்றிப்பா.

   Delete
 2. பரசுராம க்ஷேத்ரம் உள்ளிட்ட விவரங்கள் அறியாதவை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்.

   Delete
 3. ம்ம்ம் சில தகவல்கள் அறியாதவை...அறிந்து கொண்டோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன்/கீதா

   Delete
 4. அறிந்திராத பல தகவல்கள் கிடைக்கப்பெற்றேன்! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. அம்மா

  பத்மநாபசாமி கோயிலில் இருந்து கோவளம் செல்லும் வழியில் 4 கி மி தூரத்தில் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனி கோயில் உள்ளது.

  ஆதியில் அனந்த பத்மநாபன் திருவல்லத்தில் தலையும் தெற்கே சுமார் 15 கி மீ தூரத்தில் உள்ள திருப்பாதபுரம் என்ற இடத்தில் திருவடியும் உள்ள சுமார் 19 கி மீ அளவுள்ள மூர்த்தியாய் இருந்தார் என்றும் பின்னர் வில்வ மங்கள சாமியார் கேட்டுக்கொண்டபடி தற்போது உள்ள அளவில் நிறைந்தார் என்றும் கதை சொல்லுவர். மேலும் திருக்கண்ணபுரம் என்ற கோயிலும் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

  --
  Jayakumar

  P.S.

  எனது வயது 66. நான் தம்பியா அண்ணனா? ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. நீங்க அண்ணா தான். ஹிஹிஹிஹி!

   Delete
  2. @ jk22384, தம்பி என அழைத்தது பொதுவாகவே! இனி அண்ணா என்றே அழைக்கிறேன். பத்மநாப சுவாமி குறித்த மேல் அதிகத் தகவல்களைக் கொடுங்கள். நன்றி.

   Delete
  3. Sagothara, sagotharigalae, mamas and mamis, thank you for the info....most of them are new to me....

   Delete
  4. மௌலி, :) நல்வரவு. நீங்களே எங்களுக்குப் புதுசு தானே!

   Delete
 6. நீங்கள் நின்ற ஒத்தைக்கல் மண்டபத்தின் கீழ் தான் ஒரு பாதாள பொக்கிஷ அறை உள்ளது. அதன் மேல் நின்று தான் நீங்கள் பத்மநாபனை தரிசித்தீர்கள்.

  பத்மநாப சாமியை தரிசிக்கும் மன்னர்கள் அல்லது ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய பதவிகளை இழப்பது உறுதி. இவ்வாறு ஒரு சொல் நிலவில் உண்டு.

  பத்மநாப சுவாமியின் பொக்கிசங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய முக்கியமானவர்கள் (நீதிபதி உட்பட) திடீர் மரணம் அடைந்தார்கள்.

  பத்மநாபா சுவாமி கோயில் பட்டர்கள் நம்பி என்று அழைக்கப்படுவர்.

  பத்மநாபனின் விக்ரஹம் திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் விக்ரஹத்தை மாதிரியாக கொண்டு செய்யப்பட்டது.

  ஜெயகுமார்

  ReplyDelete
  Replies
  1. பட்டர்களை நம்பி என அழைக்கும் வழக்கம் உண்டு எனப் படித்திருக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியாததால் சொல்லவில்லை. ஆனால் மன்னர்கள் பதவிகளை இழப்பார்கள் எனில் இன்று வரை திருவாங்கூர் ராஜா தினம் தினம் சுவாமி தரிசனம் செய்து வருகிறாரே? பொக்கிஷங்கள் பற்றிய கதைகளைக் குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கேன். உங்கள் மேல் அதிகத் தகவலுக்கு மிக்க நன்றி.

   Delete
  2. தற்போதைய ராஜாவுக்கு ராஜபரம்பரையில் வந்த அரசர் என்பது பட்டம் மட்டுமே. அதிகாரங்கள் இல்லை. கோவிலில் அவர் trustee அவ்வளவு தான். அந்தப் பதவியும் தற்போது பறிக்கப்பட உள்ளது.

   பதவி இழந்தவர்கள் பட்டியிலில் நேபாள பிரதம மந்திரி பட்டராய், வாஜ்பாய் போன்றவர் அடக்கம். கடைசியாக நமது BCCI தலைவர் ஸ்ரீநிவாசன். இங்கு வந்து போனவுடன் தான் பிசிசிஐ தலைவர் பதவி இழந்தார்.
   --
   Jayakumar

   Delete
  3. நீங்கள் சொல்லிக் இருக்கும் விஷயங்கள் முற்றிலும் புதிதாக உள்ளன. இங்கே தஞ்சை பெருவுடையார் கோயிலைக் குறித்து அப்படிச் சொல்லுவார்கள். கேரளாவில் அனந்து மாட்டிக் கொண்டாரா? :)

   Delete
  4. இது ஒரு விதத்தில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதைதான். பதவியும் ஆட்சியும் நிரந்தரமல்ல. ஆனால் குறிப்பிட்டவர்கள் அவர்களுடைய முழு பதவிக்காலம் முடியும் முன்னரே பதவி இழந்தவர்கள், வாஜ்பாய் நமது அம்மாவினால் இறக்கப்பட்ட கதை உங்களுக்கு தெரியும். ஒரு கவர்ணர் ஜோதி வேங்கடச்சலமும் அப்படித்தான்.

   பத்மநாப சுவாமியின் கோவிலில் உள்ள பொக்கிசங்கள் மற்றும் சுரங்கப்பாதை பொக்கிச அறை கதவுகள் எல்லாம் போட்டோவும் காணொளியும் இணையத்தில் இருந்தன. தற்போது உள்ளனவா என்று தெரியவில்லை. இவை HISTORY tv யிலும் ஒளி பரப்பப்பட்டன.
   --
   Jayakumar

   Delete
  5. Pictures are available still in Google images. You can download some and make your blog little more attractive and popular.

   Jayakumar

   Delete
 7. இப்போது புரிகிறதா ஏன் ஒத்தக்கல் மண்டபத்தில் நம்சகரிக்கான் பாடில்லா.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், ராஜா மட்டும் தான் நமஸ்கரிக்கணும்னு சொல்வாங்க! அப்படித் தான் நான் கேள்விப் பட்டதும். முன்னர் கேரள யாத்திரை சென்ற பரணீதரன் எழுதினதும்.:)

   Delete
 8. தேங்காய் சிரட்டையில் சாப்பிடும் நம் அனந்துவைப்பற் நிறைய விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் அறிய முடிந்தது. கோயிலுக்குப் போயுள்ளேன். இவ்வளவு விரிவாக விஷயங்கள். மிக்க ஸந்தோஷம்..இம்மாதிரி மெனக்கெட்டு விசாரித்தெழுதினால்தான் முடியும். நல்ல விஷயங்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா, இங்கே ரங்கு மண் சட்டியில் தான் சாப்பிடுவார். தினம் தினம் புதுச் சட்டி! :) சில விபரங்கள் அங்கேயே இருக்கும் என் தங்கை (சித்தி பெண்) மூலம் அறிந்தது. மற்றவைகளில் பல படித்து தெரிந்து கொண்டவை.

   Delete
 9. அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். இந்தக் கோவிலில் நரசிம்மப் பெருமானுக்கு ஒரு சந்நிதி இருப்பதாக சொன்னார்கள் நாங்கள் போனபோது. இந்தக் கோவிலின் பொக்கிஷ அறைக்குப் பக்கத்தில் இந்த சந்நிதி இருப்பதால் - பலத்த காவலும் இருப்பதால் சேவிக்க முடியாது என்று சொன்னார்கள். எத்தனை பொக்கிஷம் இருந்து என்ன, பெருமாளுக்கு பளிச்சென்று வஸ்திரம் சாத்தக் கூடாதோ? சந்நிதியில் ஒரே புழுக்கம். பாவம் பெருமாள் எப்படித்தான் இங்கு சயனித்திருக்கிராரோ என்று நினைத்துக் கொண்டேன். எல்லாம் மனிதர்கள் ஆடும் ஆட்டம்!

  ReplyDelete
  Replies
  1. //அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.//

   ஹிஹிஹி, அண்ணாவும் தங்கையுமாக! :) சந்நிதியில் அவ்வளவெல்லாம் புழுக்கம் தெரியவில்லை. இத்தனைக்கும் சந்நிதிக்கு எதிரே இருக்கும் கம்பித் தடுப்பருகே நின்று கொண்டு தான் பார்த்தோம். விரட்டவும் இல்லை. நீங்க சொன்னாப்போல் நரசிம்ம சந்நிதி அருகே விடவில்லை. அந்த நேரம் மகாராஜாவின் நேரம் என்பதாலேயே எங்களை சீக்கிரமாகக் கிளம்பச் சொன்னார்கள். மற்றபடி கேட்ட தகவல்களை எல்லாம் கொடுத்து தரிசனம் செய்வித்தனர்.

   Delete
  2. ஆமா! அண்ணாவும் தங்கையுமாக - ஸாரி!

   Delete
 10. தேங்காய் சிரட்டையில் நிவேதனம்.... அறிந்திராத தகவல்..

  நன்றி....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், உங்களுக்கும் அறியாத தகவல் இருப்பதில் சந்தோஷம்! :)

   Delete
 11. அனந்துவை வேகமாக ‘பின்’ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.


  நன்றி

  ReplyDelete