எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 28, 2024

குட்டிக் குட்டிக் கிச்சாப்பயல் வந்துட்டுப் போனான்!

 வீட்டில் சார்ட் பேப்பர்களின் துண்டுகள் இல்லை. ஆங்காங்கே வண்ண, வண்ணக் கறைகள் இல்லை. கிண்ணங்களில் தண்ணீருடன் பிரஷ் எதுவும் இல்லை. கை கழுவும் வாஷ்பேசினில் வண்ணக் கறைகளோ தண்ணீர் தேங்கியோ இல்லை. எல்லாம் சுத்தமாக இருக்கு. சாப்பாடு மேஜையில் எதுவும் இல்லாமல் இடம் நிறைய இருக்கு. மணிக்கணக்காக உட்கார்ந்து சாப்பிடும் நபரைக் காணோம். அவரின் அழுகையும், சாப்பிட மாட்டேன் என்னும் பிடிவாதமும் இல்லை. மொத்தத்தில் வீட்டில் சப்தமே இல்லை. நிசப்தம். எங்கோ ஓர் குழந்தை அழுதால் குஞ்சுலுவோனு நினைக்கும் மனம். பின்னர் அவள் தான் ஊருக்குப் போயிட்டாளே என்பது நினைவில் வரும். காலையில் திரும்பத் திரும்ப வந்து கட்டிக் கொண்டது இன்னமும் உணர்வில் தோய்ந்திருக்கு. படிக்க அடம் பிடிக்கும்/சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை. கவலைப்படும் பெற்றோர்கள். ஊருக்குப் போய்விட்டது. 

இந்த வருஷமும் லிட்டில் கிருஷ்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவியா பாட்டி? எனக் கேட்டுக் கொண்டது. வாசலில் கோலம் போட்டுக் காலடிகள் வைச்சாச்சு என அவ அப்பா சொன்னதும் ஓடி வந்து பார்த்துக் கொண்டது. அக்கம்பக்கம் வீடுகளிலும் போடுவதைப் பார்த்தது. பூத் தொடுத்துக் கொண்டிருக்கையில் மாலையைத் தூக்கிப் பார்த்தது. பின்னர் சாயங்காலம் வாங்கிய பக்ஷணங்களோடு வீட்டில் பண்ணின பால் பாயசத்தையும், வடையையும் கூடவே தயிர், வெண்ணெய், பால், புதுசாய்க் காய்ச்சிய நெய், அவல், வெல்லம், தேங்காய், பழங்கள் எல்லாம் வைச்சு நிவேதனம் பண்ணி தீபாராதனை காட்டினேன். என்னவோ தெரியலை. அதனிடம் வழக்கமான உற்சாகம் தெரியலை. ஸ்ரீராம் சொன்னாப் போல் குழந்தை பெரிய பெண்ணாக ஆகிக் கொண்டு வருகிறாளோ? குழந்தைத் தனம் இன்னமும் இருக்கு. ஆனால் சந்தேகங்கள் கேட்கும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கும். நானாகச் சொன்னேன். ஜெயிலில் பிறந்தான் குட்டிக் கிருஷ்ணன் என. அவன் சகோதரி யோகமாயா பற்றிச் சொல்லிவிட்டு, நீ தான் யோக மாயா என்றேன்.  சிரித்துக் கொண்டாள், புரியலைனு நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த வருஷக் கிருஷ்ண ஜயந்தியை ஒப்பேத்தியாச்சு. கீழே படங்கள். இனி செப்டெம்பர் ஐந்தாம் தேதி எங்க ஆவணி அவிட்டமும், ஏழாம் தேதி நம்ம நண்பரின் விழாவும் வருது. எப்படிச் செய்ய்ப் போகிறேன்னு தான் புரியலை.







Wednesday, August 21, 2024

ஓட்டம் காட்டும் நாட்கள்! ஓடமுடியாமல் தவிக்கும் நான்!

 நேற்று காயத்ரி ஜபத்துக்கு எழுந்து வீல்சேரில் உட்கார்ந்த வண்ணம் அரை மணி நேரம் ஜபம் செய்தார் நம்ம ரங்க்ஸ். உதவியுடன் தானே நடந்து கழிவறை செல்கிறார். அவ்வப்போது தலை சுற்றல் எனச் சொல்லுவதாலும், தலை சுற்றல் இருப்பதாலும் தனியே விட பயம். மேலும் மருத்துவரும் கீழே விழாமல் பார்த்துக்கச் சொல்லி இருக்கார். சாப்பாடு மட்டும் இன்னமும் முன்னேற்றம் காண வில்லை. மருந்து வகைகள் ஓரளவுக்குக் குறைச்சிருக்காங்க. கதீட்டரை எடுத்தாச்சு, 

தொலைக்காட்சிப்பெட்டியைப் போடுவதே இல்லை. சென்ற நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து எப்போவானும் போட்டது தான். ஸ்ரீராமர் பிரதிஷ்டை பார்க்கப் போட்டப்போ தொலைக்காட்சிப் பெட்டி கொலாப்ஸ் ஆகி விட்டது. சுமார் எட்டுமாதங்களாகப் போடாமல் இருப்பதால் கேபிள் இணைப்பையே துண்டித்து விடலாம் என நினைக்கிறோம். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் ஒண்ணும் வித்தியாசம் தெரியலை. மேலும் உட்கார்ந்து பார்க்க நேரமே கிடைப்பதில்லை.

இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி 2000 ஆம் ஆண்டில் நம்ம ரங்ஸ் ஊட்டி அரவங்காடு ஃபாக்டரிக்கு மாற்றல் ஆகிப் போனப்போ வாங்கினது இதுவும் எல்ஜி கிரைண்டரும் ஒரே சமயம் வாங்கினோம். வீட்டில் பெரிய கிரைண்டர் தான் வாங்கி வைச்சிருந்தொம், அது சென்னையில் மட்டுமில்லாமல் ராஜஸ்தான், குஜராத் என எல்லா இடங்களுக்கும் கூடவே வந்தது. திரும்பவும் அம்பத்தூர் வந்தப்போ அதிகம் மனிதர்கள் இல்லாததாலும் குழவி ரொம்பப் பெரிசாக இருந்ததாலும், அப்போத் தான் தரைத்தளம் முழுவதும் டைல்ஸ் பதிச்சிருந்ததாலும் பழைய கிரைண்டரைக் கொடுத்துட்டு எல்ஜி அல்ட்ரா கிரைண்டர் சின்னது தான் வாங்கினோம், நேற்று வரை நன்றாகவே அரைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, தொலைக்காட்சிப் பெட்டியும் ஃபிலிப்ஸ் என்பதால் கலர் க்ளாரிடி, ஒலி, ஒளி எல்லாமே சிறப்பாக இருக்கும். இப்போவும் அதை மெகானிக் வந்து பார்த்துச் சின்னச் சின்னக் கோளாறுகளைச் சரி பண்ணினால் போதும். முன்னர் ஐசி போனப்போப் பார்த்த மெகானிக் வியந்து போனார். இதைப் போல் தொலைக்காட்சி உழைச்சதைப் பார்த்ததே இல்லைனும் சொன்னார். இப்போ 25  வருடங்கள் ஆகியும் கிரைண்டரும் சரி, தொலைக்காட்சிப் பெட்டியும் சரி, நன்றாகவே இருக்கிறது.

பையர் ஸ்மார்ட் டிவி வாங்கி அப்பா படுக்கும் அறையில் மாட்டுவதாகச் சொல்கிறார் வேண்டவே வேண்டாம்னு கெஞ்சிட்டு இருக்கோம். ஒரே சத்தமாக இருக்கும் என்பதோடு யாரும் அவ்வளவு ஆர்வமாகத் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில்லை. ஆகவே எதுவுமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டு இருக்கோம். அவ்வப்போது முகநூலில் வரும் கச்சேரிகளைப் போடுவேன். ஸ்லோகங்கள், உபன்யாசங்கள் போடுவது உண்டு. அதுக்கும் மேல் என்ன இருக்கு? எப்படியோ நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வரும் நாட்கள் நன்மை பயப்பனவாக அமையட்டும் என்று பிரார்த்திப்பது தவிர வேறே நினைப்பு இல்லை.