எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 27, 2026

ஒரு வருஷம் ஆகிவிட்டது! :(



ஆயிடுத்து. இன்னிக்கோட ஒரு வருஷம். ஆங்கிலத் தேதியைக் கணக்கில் எடுத்துண்டால் ஒரு வருஷம். தமிழ் மாசத்  திதியும் அமாவாசை அன்னிக்கு வந்தது தான். ஆனால் அது சூன்ய திதி என்பதால் பண்ணலை. அடுத்த வாரம் இந்தியா போகணும். கிட்டத்தட்டப் பத்தொன்பது வயதில் இருந்து பார்த்துப் பழகிய மனிதர். இப்போல்லாம் பத்தொன்பது வயசுக்குக் குழந்தை என்கின்றனர். சிலருக்குப் பள்ளிப் படிப்பே அப்போத் தான் முடியும். ஆனால் எனக்கோ கல்யாணமே ஆகி விட்டது. எங்க காலத்தில் என்னை விட இன்னும் சின்ன வயசில் கல்யாணம் ஆனவங்க உண்டு. அவ்வளவு ஏன் என்னோடு படிச்ச சில பெண்களும் எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். மிஞ்சிப் போனால் 16, 17 வயதுக்குள் தான் இருக்கும்.

இப்போவும் என்னால் இன்னமும் நம்ப முடியலை. இரவில் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறாப்போல் இருக்கும். திடீர்னு கூப்பிட்டாற்போல் தோன்றி முழிப்பு வரும். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து எப்படியும் ராத்திரி பனிரண்டு வரைக்கும் அவரோடத் தான் உட்கார்ந்து கொண்டு இருப்பேன். சில நாட்கள் தூங்கிடுவார். சில நாட்கள் சீக்கிரம் தூக்கம் வராது. அப்போ மட்டும் தூங்கறதுக்குனு ஒரு மாத்திரை கொடுக்கச் சொல்லி மருத்துவர் சிபாரிசு பண்ணி இருந்தார். அதைக் கொடுப்பேன். கொஞ்ச நேரம் புரண்டுவிட்டுப் பின் தூங்குவார். நான் என் படுக்கையில் வந்து படுத்துப்பேன்.

திடீர்னு ஹார்லிக்ஸ் கொடு பசிக்கிறது என்பார். ஒவ்வொரு சமயம் பசி தாங்கலை. சாதம் இருந்தால் நன்கு பிசைந்து மோர் விட்டுக் கரைச்சுக் கொடு என்பார். அந்த அகால வேளையில் சாதம் எப்படிக் கொடுப்பது? கொடுத்தாலும் ஒரு தம்பளர் சாப்பிட்டாலே அதிகம். பாதியில் திரும்பக் கொடுத்துடுவார். ஆனாலும் நல்ல நினைவுகள் இருந்தன. தானே எழுந்து நடமாட ஆரம்பிச்சப்புறமாப் பர்வாயில்லை. இனி ஆபத்து இருக்காது. மருந்துகள் மட்டும் தொடரணும் என்றே நினைச்சிருந்தோம். பிசியோ தெரபிஸ்டும் இனி தேவைன்னா கூப்பிடுங்க வந்து பார்க்கிறேன் என்று 2024 டிசம்பர் கடைசியில் விடை பெற்றார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நர்ஸ் பெண்களும் ஒவ்வொருவராக விடை பெற்றனர். இரவுக்கு மட்டும் யாரானும் வரட்டும் என்றால் அவரோ நான் இனி இந்தக் கட்டிலில் படுக்கப் போவதில்லை. நம்ம ரூமில் என்னோட கட்டிலில் என்னோட மெத்தையில் தான் படுத்துக்கப் போறேன்னு சொல்லிட்டு அங்கே வந்து படுக்க ஆரம்பிச்சார். இரவு கழிவறை போறச்சே மட்டும் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கணும். மற்றபடி பிரச்னை ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

திடீர்னு சர்க்கரை ஏறி, ஏறி, இறங்கி, இறங்கி நு விளையாட்டுக் காட்ட ஆரம்பிக்க எதுக்கும் காட்டிட்டு வந்துடலாம்னு தான் அன்னிக்கு மருத்துவமனைக்கே போனோம். திரும்பி வந்துடுவோம்னு நினைச்சோம். ஆனால் அங்கே போனப்போ சர்க்கரையை அதிகமாய்க் காட்ட மருத்துவர் உடனே எமர்ஜென்சியில் சேர்த்துவிட்டு எழுந்து நடமாடக் கூடாது என்பதால் கதீடரையும் போடச் சொல்லிட்டார். அவரோ எழுந்து கொண்டு டாய்லெட்டில் தான் போவேன்னு பிடிவாதம். எப்படியோ சமாளிச்சேன். நர்ஸ் பெண் ஒருத்தரை இரவுக்குத் துணைக்கு வரச் சொல்லி இருந்தேன். அவரும் இருந்தார். நானும் இருந்தேன். அன்னிக்கெல்லாம் தூங்கிட்டார். பின்னர்மறுநாள் வந்த ஒரு மருத்துவர் திடீர்னு வயிறு பெரிசா இருக்குனு சொல்லிட்டு என் ஜி ட்யூப் மூக்குவழியாப் போட்டு வயிற்றில் என்ன இருக்கோ அதை வெளியேத்தணும்னு சொல்ல, நான் கடுமையாக எதிர்த்தேன். ஆகவே காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து பார்க்கச் சொன்னார்கள். அவரும்   வந்து பார்த்துட்டு ஒண்ணும் தேவையில்லை. அசிடிடி மாத்திரை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டார். 

ஆனாலும் இவங்க கேட்கலை. நான் இல்லாதப்போ ஊரில் இருந்து வந்திருந்த பையரிடம் கையெழுத்து வாங்கி என் ஜி ட்யூபைப் போட்டாங்க. அதில் வந்தது தான் பிரச்னை. சாப்பாடே கிடையாது. மூக்கு வழியாகச் செல்லும் ட்யூப் மூலம் ஆகாரம். அதுவும் சொட்டுச் சொட்டாக. அவரோ பசிக்கிறது என்பார். ஒரே வேதனை..வயிற்றிலிருந்தோ பைல் தண்ணீர் மட்டும் மஞ்சளாக வந்திருந்தது. 24 மணி நேரத்துக்கு அதக்கு மேல் வேறே ஏதும் வயிற்றில் இருந்து வரலை. மறுபடியும்  காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் பார்க்க வந்தப்போ அவரை எழுதிக் கொடுக்கச் சொல்லி ட்யூபை அகற்றச் சொல்லி அகற்றினோம். பின்னர் வீட்டுக்குப் போய்விடலாம் என்னும் எண்ணத்தில் மருத்துவரைப் பார்க்க அவங்களும் சர்க்கரை குறைஞ்சிருக்கு. வீட்டில் வைச்சுப் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு டிஸ்சார்ஜ் எழுதி கொடுத்தார். 

வீட்டுக்கு வந்ததில் இருந்து மருந்துகள் எல்லாமும் ஐவி வழியாகவே கொடுக்கச் சொன்னதால் தெரிந்த நர்ஸ் வீட்டுக்கே வந்து இரண்டு வேளையும் மருந்தை ஏற்றிவிட்டுப் போவார். இதில் வீசிங் இருந்ததால் நடு நடுவே நெபுலைசர் வேறே வைச்சோம். ஆனாலும் பிடிவாதமாக எழுந்து நடப்பேன்னு நடந்தே கழிவறை செல்வார். நாங்க பிடிச்சுப்போம். என்னோட பெட்டில் படுத்துக்கணும். அங்கே கூட்டிப் போ என்று சொல்லவும் சரினு எங்க ரூமுக்கு வந்து அங்கே அவரோட படுக்கையில் படுக்க வைச்சோம். ஆனால் இந்த பெட்டில் ஐவி ஏற்றும் வசதி இல்லை என்பதால் மறுபடி அந்த ரூமுக்கே போனோம். ஒரு வார விடுமுறையில் வந்திருந்த பையர் கிளம்பி சனிக்கிழமை போனார். ஆனால் அவருக்கு திடீரெனப் பிள்ளையை யார்னு தெரியலை. தன்னோட தம்பினு நினைச்சுட்டுப் பேசினார். அப்போவே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கு. என்றாலும் என்னிடம் முழு நினைவோடு பேசினதோடு இல்லாமல் திங்கட்கிழமை அமாவாசை, இந்தத் தரம் உட்கார்ந்து தர்ப்பணம் பண்ண முடியுமா தெரியலை என்று வேறே சொன்னார். அந்தத் தரம் எழுந்து தர்ப்பணம் பண்ண முடியலை. ஆனால் சாயங்காலம் பிசியோ தெரபிஸ்ட் வந்தப்போ அவரைப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு நடந்தே போனார் . பிசியோ தெரபி முடிஞ்சதும் பாத்ரூமுக்கு நர்ஸும் நானும் பிடிச்சுக்கப் போயிட்டு வந்தார். 

ராத்திரியெல்லாம் பேசிண்டே இருந்தார். திடிர்னு என் கைகளைப் பிடிச்சுண்டு என்னை விட்டுட்டுப் போயிடாதே. நீ இல்லைனா நான் சோத்துக்குத் திண்டாடணும். என்னை யார் பார்த்துப்பாங்க? யார் பார்த்துண்டாலும் சரியா வராது. நு சொல்லிண்டே கைகளை இறுக்கிப் பிடிச்சுண்டார். விடவே இல்லை. சரினு நானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். சாதாரணமாகப் பேசிண்டே இருந்தார். நிகழ்காலம், இரவு என்பதெல்லாம் தெரிந்தது. ஆனால், பிள்ளை, பெண்ணைத் தெரியலை. பெண் கூப்பிட்டப்போ அவளைப் பேத்தினு நினைச்சுண்டார். அதொடு இல்லாமல் அவரோட அப்பா வந்திருப்பதாகவும் நினைச்சுண்டு இருந்தார். அப்பா சாப்பிட்டாரா? காஃபி குடிச்சாரானு எல்லாம் கேட்டார்.91 ஆம் ஆண்டிலேயே அவர் அப்பா (மாமனார்) இறந்துட்டார். ஆனால் அவருக்கு அப்பா இருக்கிறாப்போல் ஓர் எண்ணம் போல. பின்னர் அப்படியே தூங்கிப் போனார். சுமார் ஒன்றரை வரை அங்கே உட்கார்ந்துட்டு இரவுப்பணிக்கு வந்த நர்சிடம் கதீட்டர் பையை மாத்திக் கொட்டச் சொல்லிட்டுப் படுத்துக்கப் போனேன். தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துட்டு எப்போத் தூங்கினேனோ! திடீர்னு அவர் கூப்பிட்டாப்போல் இருக்கவே முழிச்சுண்டு மணியைப் பார்த்தால் வழக்கமா நான் எழுந்திருக்கும் நேரம் நாலரை மணி. சரி, பரவாயில்லைனு நினைச்சு எழுந்து கொண்டு வாசல் தெளிச்சுக் கோலம் போட்டு சாமி விளக்கேத்திட்டுக் காஃபி டிகாஷன் போட்டுப் பாலையும் அடுப்பில் வைச்சு அடுப்பைச் சின்னதாக்கிட்டு அவரை எழுப்பிப் பல் தேய்ச்சு விடலாம்னு போனால்............

அசையாமல் படுத்திருந்தது என்னமோ மனசை உறுத்தத் தொட்டுப் பார்த்தால் லேசாகச் சூடு இருந்தது. நேஞ்சில் கை வைச்சுப் பார்த்தாலும் மிக மிக லேசாக அடிச்சுண்டது. உடலில் சூடு இருந்ததால் உலுக்கினேன். ஆனாலும் எழுந்துக்கலை.  அபார்ட்மென்டில் கீழே இரண்டாம் தளத்தில் இருக்கும் மருத்துவருக்கு இன்டர்காம் மூலம் கூப்பிட்டால் பதிலே வரலை. சரினு எதிர்வீட்டு மாமா, அசோசியேஷன் தலைவர் ஆகியோரைக் கூப்பிட்டுவிட்டு ஆம்புலன்ஸுக்கும் தொலைபேசினேன். கீழே இருந்து வந்த மருத்துவருக்கும் உடலில் கொஞ்சம் சூடு இருப்பதாலும் நாடி மெலிதாக அடிப்பதாலும் முதல் சிகிச்சை செய்துடலாம்னு கீழே போய் உபகரணங்களை எடுத்து வந்தார். அதுக்குள்ளே 108 ஆம்புலன்ஸ் சகல ஏற்பாடுகளுடனும் மருத்துவருடனும் வந்து விட்டது. மருத்துவர் உதவி ஆட்களுடன் மேலே வந்தவர் அவரைப் பார்த்துட்டு உடனேயே உயிர் பிரிஞ்சாச்சு எனச் சொல்லிட்டார். பின்னர் இரு மருத்துவர்களும் சோதனை செய்துவிட்டு உறுதிப் படுத்தினார்கள்.  ராத்திரி எல்லாம் பேசிக்கொண்டு இருந்தாரே! எனக்கு அதுவே மனதில் ஓடியது. காதில் திரும்பத் திரும்ப அதுவே கேட்டுக் கொண்டிருந்தது. பண விவகாரங்களில் எல்லாம் நான் அதிகம் ஆர்வம் காட்டித் தெரிஞ்சுக்க விரும்பியதில்லை. அதெல்லாமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார்.  பிள்ளை, பெண்களிடமும் சொல்லுவார். எது எங்கே இருக்குனு தெரிஞ்சுக்காம இருக்காளே என்பார். அப்போவும் அதைப் பத்தித் தான் சொன்னார். இனிமேல் நீ என்ன பண்ணப் போறியோ, தெரியலை, உன்னைத் தனியா விட்டுட்டுப் போனேன்னா நீ என்ன செய்வே? என்றார். கடைசியில் அவர் முந்திண்டார். கொஞ்சம் முழிச்சுப் பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோனு நினைச்சுக்கறேன். 

நேத்திக்கு ராத்திரி கூடத் தூக்கமே வராமல் புரண்டு கொண்டிருந்தப்போப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டாப்போலயும், கீதா, கீதானு கூப்பிட்டாப்போலயும் ஓர் எண்ணம்.அவர் எப்படி மூச்சு விடுவாரொ அதே போல மூச்சுக்காற்று தான் எனக்குத் துல்லியமாக அவர் இருப்பைக் காட்டியது. ஒருவேளை இங்கே புது இடத்தில் நான் இருப்பதால் எனக்குத் துணையாக வராரோ என்னமோ!  சண்டைனு பெரிசாப் போட்டதில்லை. ஆனாலும் தினமும் சண்டை வரும். காய்கறி வாங்குவதில் சண்டை வரும். கால் கிலோ பீன்ஸோ, கொத்தவரையோ செலவழிக்க முடியாமல் செலவு செய்கையில் ஒரு கிலோ, அரை கிலோனு வாங்கிடுவார். கொத்துமல்லியா 3 கட்டு, புதினா இரண்டு கட்டு. தினுசு தினுசாகப் பச்சை மிளகாய்கள்னு வாங்குவார். அதை எல்லாம் செலவழிக்கத் திண்டாடுவேன். கோபம் வரும் சத்தம் போடுவேன். மற்றபடிப் பெரிய அளவில் சண்டையோ கருத்து வேறுபாடோ இல்லை. யாரானும் ஒருத்தர் இன்னொருத்தர் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவிடுவோம்.  

கூட்டுக் குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள். ஆனாலும் நான் அவரிடம் வருத்தத்தை மட்டும் காட்டிப்பேன். மற்றபடி புகார் சொன்னதில்லை. அவரும் எதுவுமே கேட்டுக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அமைதிதான். எவ்வளவோ பிரச்னைகள். பணத்தேவைகள்! நாங்க இருவருமே சமாளிச்சோம். வேலை செய்வதில், அது வீட்டு வேலையானாலும் சரி, சாமான்கள் வாங்க வெளியே போக வேண்டி இருந்தாலும் சரி, நான் விட்டுக் கொடுக்காமல் முன்னே நின்று எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன். எந்தவிதமான உதவியும் யாரும் செய்ய மாட்டாங்க. அதை எல்லாம் பொருட்படுத்தியதே இல்லை. அதே போல் பண விஷயத்திலும். அவர் மட்டும் தான் எல்லாவற்றையும் பார்த்துப்பார். பெரிய அளவிலோ சின்ன அளவிலோ யாருமே எந்தவிதமான உதவியும் செய்தது இல்லை. ஆனாலும் சமாளிச்சோம்.

 ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இருந்ததால் இது சாத்தியம் ஆனது. எப்படியோ 55 வருஷங்கள் ஓடிவிட்டன. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் தான். பார்க்கப் போனால் என்னை விட அவர் ஸ்ட்ராங். வலு உள்ளவர். அவரே இதைப் பெருமையாகச் சொல்லிப்பார். உன்னை விட ஏழெட்டு வயசு பெரியவன். ஆனால் உன்னை மாதிரி நான் சோப்ளாங்கி இல்லை என்பார். இந்த விஷயத்தில் நான் நிறைய மருந்து, மாத்திரை சாப்பிடுவதைக் கேலி செய்திருக்கார். ஆனால் கடைசியில் அவருக்கு இப்படி ஓர் உடல்நலக் கோளாறு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்றாலும் ரொம்பவே படுக்கையில் போடாமல் நடமாடிக் கொண்டு தன் நினைவு இருக்கிறச்சே தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.  இது தான் அவர் விரும்பியதும். விரும்பிய வண்ணம் கடவுள் அருள் செய்துவிட்டார். எனக்குத் தான் இனி எப்படியோ? எத்தனை காலமோ? காத்துட்டு இருக்கேன்.  என்னென்னவெல்லாமோ எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போ சுயப் புலம்பல்கள் எழுதும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கு. என்ன செய்ய முடியும்?

Friday, May 01, 2026

தொழிலாளர் தினம்!

இன்னிக்குத் தொழிலாளர்கள் தினம் எனக் குறிப்பிட்ட கட்சியினர் கொண்டாடுகின்றனர். ஆனால் தொழிலாளர்கல் சுகமாகவும் சௌகரியமாகவும் வாழ அவர்கள் ஏதேனும் உதவி இருக்காங்களா என்றால் இல்லைனே சொல்லணும். அவர்களோட முக்கிய எதிரிகள் தொழிலதிபர்கள் தான். இத்தனைக்கும் தொழிலதிபர்கள் தொழிலாளர்களுக்கு வேண்டிய சம்பளம், போனஸ், குழந்தைகள் படிப்பில் உதவி, மருத்துவ உதவி, தினசரி உணவு கொடுத்தல் எனப் பல உதவிகள் செய்தாலும் இவர்கள் திருப்தி அடைவதில்லை.

தொழிலாளர்களுக்காக அந்தக் குறிப்பிட்ட கட்சி என்ன செய்தது? அவங்களை வேலை இழந்து திண்டாட விட்டதைத் தவிர்த்து? கல்கத்தாவிலும் சென்னை, அம்பத்தூரிலும் இருந்த வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டது இவங்களாலே தான். தொழிலாளர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய ஒரு பெரிய தொழிற்சாலை முழுக்க முழுக்க மூடப்பட்டுப் பல தொழிலாளர்கள் தெருவில் விடப்பட்டனர். தொழிலாளர் தினம் என்றால் தொழிலாளர்கள் மும்முரமாகவும் ஆர்வமாகவும் தொழிலில் ஈடுபட்டுப் பெருக்கத் தானே வேண்டும்? அதை விடுத்துத் தொழிலதிபர்களை எதிர்ப்பதால் கிடைப்பது என்ன?  அம்பானியையும், அதானியையும் மட்டும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள் என்போர் நம் நாட்டின் தொலைக்காட்சி சானல்கள் நடத்துபவர்களை யாரென நினைக்கிறார்கள்? அதுவும் ஒரு கார்ப்பரேட் தொழில் தானே? மேலும் இந்தத் தொழிலதிபர்களால் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் எளிய மக்கள் இவை இல்லை எனில் என்ன செய்வார்கள்? நாம் எல்லாப் பக்கமிருந்தும் யோசிக்க வேண்டாமோ? கீழே காபி, பேஸ்ட் பண்ணி இருப்பது முகநூலில் கோடீஸ்வரன் சம்பத் என்பவருடைய பதிவு. இதைப் படிக்கையிலேயே மனம் கொதித்தது. இதுவரை எங்க குடும்பத்தில் நான் அடைந்த அவமானங்களையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த நான் இதைப் படித்ததும் என் மன நிலையை மாற்றிக் கொண்டேன்.

திரு கோடீஸ்வரன் சம்பத் என்பவர் முகநூலில் எழுதிய பதிவின் காப்பி, பேஸ்ட் இங்கே:- அவர் அனுமதி பெற முடியலை. ஏனெனில் மறுபடியும் இந்தப் பதிவைத் தேடினால் எனக்கு அது வரலை. :(  அனுமதிக்காகக் காத்திருந்ததால் தாமதம்.

1977-78களில் ஒரு நாள்: 

வழக்கம்போல பிர்லா நிறுவன தலைவர் திரு.ஆதித்ய பிர்லா, காலை கல்கத்தாவின் ரைட்டர் பில்டிங் (முதல்வர் அலுவலகம்) சாலையில் உள்ள இண்டியா எக்ஸ்சேஞ் கட்டிடத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்...

வழியெங்கும் கொண்டாட்டம், கம்யுனிசம் மாநில தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி முதல்முறையாக பதவி ஏற்க இருந்த நேரம். முதல்வர் அலுவலகம் அருகே பெருமளவு தொண்டர்கள் கூடியிருந்தனர்...

சிறிது நேரத்தில் ஜோதிபாசு அங்கே வர இருந்த சூழல். அந்த நேரம் பிர்லாவின் கார் அந்த சாலையில் நுழைய "முதலாளித்துவம் ஒழிக" என கத்திக் கொண்டே காரை சூழ்ந்தனர்...

அங்கே என்ன நடந்தது என்பதை அறியும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். 1900 முதல் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு கல்கத்தாவை ஒட்டி இருந்தது...  

இந்திய GDP-யில் 1/3 கிட்டத்தட்ட 35% கல்கத்தாவின் உழைப்பு. சணல், எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் என பலதரப்பட்ட தொழில்களில் முன்னோடியாக இருந்த மாநிலம்...

டாட்டா, பிர்லா என ஜாம்பாவான்கள் தங்கள் தொழிற்சாலைகளை அங்கே பெரும் முதலீடு செய்து அமைத்திருந்தனர்...

காரை சூழ்ந்த கம்யுனிச தொண்டர்கள் கண்ணாடிகளை உடைத்தனர். ஆதித்ய பிர்லாவை வெளியே இழுத்தனர். ஆளாளுக்கு அவரை தள்ளுவது, அடிப்பது, ஆடைகளை கிழிப்பது என வெறியுடன் தாக்கினர்... 

அவருடைய சட்டை பேண்ட்டை உருவி எறிந்தனர். அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க முடியாமல் நின்றவரை பார்த்து நகைத்தனர். அதற்குள் கார் முழுமையாக சிதைக்கப் பட்டுவிட்டது. பிர்லாவின் டிரைவர் கெஞ்சினார். அனைவரின் கால்களில் விழுந்தார்...

பிர்லாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். கூட்டம் வழிவிட்டு கைதட்டி ஆர்ப்பரித்தது. உள்ளாடைகளுடன் மெதுவாக நடந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த தன் அலுவலகத்தை அடைந்தார்...

அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை கண்டு அதிர்ந்தனர். அவர் அமைதியாக தன் அறையை அடைந்து கதவை சாற்றிக் கொண்டார். இதற்குள் தகவல் தெரிந்த காங்கிரஸ் தலைவர்கள் அங்கே வர, யாரையும் சந்திக்க மறுத்து விட்டார்...

1-2 மணி நேரத்தில் இந்த செய்தி கல்கத்தா முழுவதும் பரவ பத்திரிகையாளர்கள், முதல்வர் அலுவலகம், பிர்லா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்...

ஜோதிபாசுவிடம் பிர்லா தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு சிரித்துக் கொண்டே இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறிவிட்டு நகர்ந்தார்...

அன்று மாலை வரை அலுவலகத்தின் உள்ளேயே இருந்த பிர்லா, வீட்டிலிருந்து வேறு ஆடை, கார் வர, யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்...

அடுத்த நாள் காலை கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு சென்றார். மும்பை பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து ஆறுதல் சொல்ல முயல, இதற்குள் பிரதமர் அலுவலக ஃபோன் வர, ஒரே வரியில் பதிலளித்தார்...

இனி பிர்லா குழுவுக்கும் மே.வங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. அடுத்த பத்து வருடத்தில் மொத்த பிர்லா தொழிலும் மகராஷ்டிரா, குஜராத் என மாறியது...

1977-2011 கம்யுனிசத்தின் கோர பிடியில் சிக்கிய மே.வங்கம் இன்று பாரத அளவில் 24வது இடம். ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமிருந்து தொழிலாளர்கள் மே.வங்கம் பிழைக்க சென்றனர்...

ஆனால் கம்யுனிசம் வந்த பிறகு, மே.வங்க தொழிலாளர்கள் பாரதமெங்கும் பிழைக்க சென்றனர். கிட்டத்தட்ட 35 ஆயிரம் தொழில்கள் இந்த காலகட்டத்தில் மாநிலத்தை விட்டு வெளியேறின...

உலகின் மிகச் சிறந்த எளிமையான ஒழுக்கமான முதல்வர் எனப் போற்றப்பட்ட ஜோதிபாசு, மே.வங்கத்தை சீரழித்தார். ஆனால் அவரின் ஒரே வாரிசு சந்தன்பாசு மிகப்பெரிய தொழிலதிபர், பங்களாதேஷ், மே.வங்கத்தில் பல தொழில்களை நடத்துகிறார்...

ஜெய்ஹிந்த்...!

Tuesday, April 28, 2026

தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம். ஏப்ரல் 28/2026

சிந்தாமணியை அறிந்தது எவ்வாறு?



திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம் போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.


பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.


உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

Monday, April 06, 2026

நோ சமையல் டே!

 போன மாசமே பவர் கட் எனச் சொல்லி இங்கே உள்ள குடியிருப்போர்  குழுமத்தில் பகிர்ந்திருந்தனர். ஆனால் மறுநாள் வழக்கம்போலத் தான் இருந்தது. இன்னிக்குக் காலம்பர காலைக் காஃபி முடிச்சுட்டுப் பின்னர் சமையல் பண்ணுவதற்காகக் காய்கறிகளை எடுத்து வைக்க ஆறரை மணிக்குக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால், மின்சாரம் இல்லை. வீடு முழுக்கக் கவனிச்சுப் பார்த்தோம். மாடி, கீழே எங்கேயும் மின்சாரம் இல்லை. பின்னர் பையர் எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டார். ஒருவேளை நம்ம வீட்டில் மட்டும் ஏதேனும் ட்ரிப் ஆகி இருக்குமோனு. அவர் இல்லைனு சொல்லிட்டார். காலனி முழுக்க மின்சாரம் இல்லை. அதுக்குள்ளே மருமகளின் வாட்சப்பில் இந்தப் பகுதியில் இன்று பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை இருக்காதுனு சொல்லி இருக்காங்க.  மற்ற நாடுகளில் எப்படியோ தெரியலை. இங்கே கத்தாரில், தோஹாவில் நாங்க இருக்கும் பகுதியில் மின்சார அடுப்புத் தான். சீக்கிரமாக ஆயிடும். ஆனால் கைகளை மறந்து கூட அடுப்புப் பக்கம் வைச்சுடக் கூடாது. அபார்ட்மென்ட் குடியிருப்புக்களில் எரிவாயு போல நினைக்கிறேன். தக்குடுவைக் கேட்டால் தெரியும். போன மாதம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துட்டுப் போனார். பழைய நினைவுகளை மறுபடி புதுப்பித்துக் கொண்டோம். 

தினமும் ஆறரைக்கெல்லாம் குளிச்சுட்டு வந்துடுவேன். இன்னிக்கு அறையைக் கொஞ்சம் சுத்தம் செய்ததால் குளிக்க தாமதம். கடைசியில் குழாயைத் திறந்தால் தண்ணீர் மெலிதாக வந்து கொண்டிருந்தது. சமையலறைக்குழாய், குளியலறைக்குழாய்னு எல்லாத்தையும் திறந்து பார்த்துத் தண்ணீர் வரலை என்பதால் குளிக்க முடியலை.  ஒன்பதரை பத்துக்குள் வந்துடுமோனு காத்திருந்தேன். குளிச்சுட்டு சமைச்சுடலாம்னு. என்னோட அலைபேசியில் இணையம் வரவில்லை. மருமகள் ஹாட் ஸ்பாட் போட்டுத் தரேன்னு சொன்னாள். ஆனாலும் இணையம் பார்க்க முடியாது. சார்ஜ் ரொம்பக் கம்மியாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்குள்ளாகத் தீர்ந்தே போயிடும். ஆகவே போட்டுக்கலை. ஆனாலும் இணையம் இல்லாமல் வாட்சப்போ, மெசேஜ்களோ, அழைப்புக்களோ  வராது. சும்மாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன்.

பின்னர் குளியலறைக்குழாயில் மெலிதாக வந்து கொண்டிருந்த குழாய் நீரை  வாளியில் நிரப்பிக் கொண்டு (அம்மாடியோவ், சில்லோ சில்) குளிக்க ஆரம்பித்தேன், சுமார் பதினொன்றரை இருக்கும். அதுக்குள்ளே பையர் தொலைபேசியின் மூலம் நிலைமையைத் தெரிந்து கொண்டு சப்பாத்தி, சப்ஜிக்கு ஆர்டர் பண்ணிட்டார். நான் குளிச்சுட்டு வந்ததும் பனிரண்டு மணிக்கே மின்சாரமும் வந்தாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வேறே என்ன செய்வது? பனிரண்டே காலுக்குச் சாப்பாடு வந்தது. தந்தூரி ரொட்டி, தால், காலிஃப்ளவர் சப்ஜி, பனீர் சப்ஜி, சாலட், கொஞ்சம் போல் பாஸ்மதி அரிசி. நெய்யில் வறுத்து வேக வைத்துக் கொத்துமல்லி தூவினது. ஆக மொத்தம் இன்றைய தினம் சமையல் இல்லாத நாளாக ஆகி விட்டது.



Thanks to google for the picture. 




Friday, March 27, 2026

ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்?

 


Posted by Picasa


Posted by Picasaஸ்ரீராமவமி


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே

ஸ்ரீராம நவமி இன்னிக்கு. தினமும் ராமரை நினைச்சுண்டாலும் இன்னிக்கு ராமநவமி என்பதால் இரண்டு , மூன்று நாட்களாய் அவர் தான் நினைவில். கல்யாணம் ஆகிப்புக்ககத்தில் அழைத்த முதல் நாளில் முதல் நமஸ்காரம் இவருக்குத் தான் பண்ணினோம். இம்மாதிரியானத் தஞ்சாவூர் ஓவியப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் ஏதோ ஒன்றிரண்டு ஏதேனும் தீபாவளி மலர் மூலமாகப் பார்த்திருப்பேன். அப்போ ரொம்பச் சின்ன வயசு தானே. அதனால் அதிகம் இதெல்லாம் தெரிஞ்சிருக்கலை. அவரைப் பார்த்ததுமே மனதில் ஓர் நம்பிக்கை. இஅவர் நம்மை வழி நடத்துவார்னு நினைச்சுண்டேன். அப்போல்லாம் இந்தப்படம் எங்களிடம் வரும்னு தெரியவும் தெரியாது. முதலில் கருவிலியில் இருந்தே கிளம்புவாங்களானு தெரியாத நேரம். ஆகவே பெரிசாய் எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனால் 1982 -- 83 ஆம் வருஷங்களில் கருவிலியில் எல்லாவற்றையும் விற்று மாமனார் செட்டில் செய்து நிரந்தரமாக எங்களுடன் வந்திருக்க முடிவு செய்து கருவிலி வீட்டைக் காலி செய்தப்போ ராமரும் எங்களுடன் கும்பகோணத்தில் இருந்து எங்களுடன் சென்னைக்குப் பயணம் ஆனார். அதன் பின்னர் எங்களுடனேயே இருந்தார். எங்க வீட்டு கிரஹப்ரவேசம் நடந்தப்போ 83 ஆம் ஆண்டில் இவருக்காகவே ஸ்வாமி அலமாரியில் அளவு எடுத்துப் படம் வைப்பதற்காக இடம் ஏற்படுத்திக் கட்டினோம். அப்போவும் இவர் எங்களுடன் இருப்பார்னு நினைக்கலை. ஏனெனில் மாமனாருக்குத் தன் இரண்டாவது பையருக்குத் தான் இதைக் கொடுக்கணும் எனத் தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.. நாங்க வேறே ராஜஸ்தான், குஜராத்னு எல்லாம் போயிண்டு இருந்தோம். என்றாலும் வேறே சில தனிப்பட்ட காரணங்களுக்காக மைத்துனரிடம் தான் கொடுக்கணும்னு இருந்தார். 


ஆனால் அவரோ தன்னால் இதைப் பராமரிக்க முடியாதுனு சொல்லிட்டார். அவர் மனைவிக்கும் பெரிய அளவில் இது குறித்த ஆவல் எல்லாம் இல்லை என்பதால் இயல்பாக இது எங்களிடமே இருந்தது. கடைசி மைத்துனர் தனக்கு வேண்டாம் என முன்னரே சொல்லிட்டார். இப்படித் தான் இவர் எங்களுடன் வந்து இருக்க ஆரம்பித்தார். நாங்க 88 ஆம் ஆண்டில் மறுபடியும் ராஜஸ்தான், குஜராத் வந்தப்போ மாமனார் இருந்ததால் படம் வீட்டிலேயே ஸ்வாமி அலமாரியில் இருந்தது. பெரியவங்க காலத்தில் இவரை ஸ்வாமி அலமாரியின் மேல் தட்டிலும் கீழே உள்ள அலமாரியில் பஞ்சாயதன பூஜைக்கான விக்ரஹங்களும் சாளக்ராமமும் வைச்சுப்பூஜைகள் செய்திருக்காங்க. சொத்துப் பிரிவினையின் போது என் மாமனாருக்குப் படமும் அவர் அண்ணாவுக்கு விக்ரஹங்களும்னு கொடுத்திருக்காங்க. மாமனாரின் அண்ணாவுக்கு ஆண் வாரிசு இல்லை. பெண் வீட்டுக்கு விக்ரஹங்களைக் கொடுத்தப்போ பெண்ணின் மாமனார் மறுத்திருக்கார். அதே போல் அவங்களுக்கு ஏதோ பிரச்னை வர இந்த விக்ரஹங்கள் என் பெரிய மாமியாரிடமே இருந்தன. 

அவற்றை அவர் வைத்து பூஜிக்க முடியாமல் ஓர் பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் முதியோர் இல்லம் சென்றதால் இவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டார். இப்படியாகத் தானே அவை 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியில் மேலே படமும், கீழே விக்ரஹங்களும் என வைத்து இருந்தோம். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ராமரும் ரொம்ப குஷியாக ரங்கநாதர் என் குலதெய்வம் எனச் சொல்லிக் கொண்டு எங்களோடு பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னால் நாங்க என் நாத்தனாரின் மைத்துனர் வீட்டில் இருந்தோம். அங்கே உள்ள ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.

 . போன வருஷம் மாமா இருந்தார். ஸ்ரீராமநவமிக்குச் சாப்பாடு மட்டும் வெளியே வாங்கிக் கொண்டு பிரசாதங்கள் எல்லாம் வீட்டில் பண்ணினேன். மாமாவையே ராமருக்கு மாலை சாத்தச் சொன்னேன். முடியலை தான். ஆனாலும் நடமாடிக் கொண்டு இருந்ததால் ஆர்வமுடன் செய்தார். பூஜை எல்லாம் பண்ண முடியலை. சும்மாப் பிரசாதங்களை வைச்சு நிவேதனம் பண்ணினோம். கற்பூர ஆரத்தி காட்டினோம். இந்த வருஷம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருக்கேன்.

இப்போவும் தோஹா கிளம்பும் முன்னால் மைத்துனரிடம் படத்தையும் விக்ரஹங்களையும் வைச்சுக்கறீங்களானு கேட்டதுக்குத் தன்னால் முடியாது. வீட்டில் ஸ்வாமி அலமாரி ரொம்பச் சின்னது. மேலும் இந்தப் படங்களையும் விக்ரஹங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுக்கான முறைகளில் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதும் கஷ்டம் எனச் சொல்லிட்டார். தினசரி நிவேதனமே கஷ்டம் என்றா  ர். ஆகவே ராமர் ஸ்ரீரங்கத்தில் தனியாகத் தான் இருக்கார். விக்ரஹங்கள் எல்லாம் உள்ளே பெட்டியில். :(


விக்ரஹங்கள் அனைத்தும் ராமருடனேயே இடம் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் எடுக்கும் படங்களில் ஒளியின் பிரதிபலிப்பால் படம் சரியாக வந்திருக்காது. நெல்லை கேலி செய்துண்டே இருப்பார்.

Friday, March 06, 2026

நல்லதே நடக்கட்டும்!

 என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி.  நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும்  ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.

Sunday, March 01, 2026

அமைதி நிலவட்டும்! ஜெய் ஸ்ரீராம்.

 அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர்  நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.

Thursday, February 19, 2026

தாத்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.

 



 ஒரு நாள்  வழக்கம்போல மற்போர்‌ ஆரம்ப மாயிற்று. தஇனங்தகோறும்‌ பெற்று வந்த வெற்றி யினால்‌ பெருமித மடைகச்த மல்வீரர்‌ அன்று மிகவும்‌ உக்ஸாகத்தோடு இருக்கார்‌. வந்திருக்க கூட்டக்‌ தையும்‌ ௮௫௧ வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸா குத்தையும்‌ கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்த முண்டாயிற்று; £ இவரை ஜயிப்ப தற்கு கமது ஸமஸ்தானத்தில்‌ ஓர்‌ ஆள்‌ இல்லையே? என்ற எண்ணமே அதற்குக்‌ காரணம்‌. அரசருடைய உள்ளக்‌ குறிப்பை யறிம்த மந்திரிகள்‌ அருபிலிரும்‌ து பல வகையாக அவருடைய கவலையைப்‌ போக்கத்‌ கொடங்குனார்கள்‌. J


“மற்றோர்‌ அரசாங்கமாக இருந்தால்‌ இப்படிப்‌ பிற நாட்டு வீரனுக்கு இடங்கொடுக்குமா ? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷ்பாதியாகையால்‌ வித்தைக்கு மதிப்புக்‌ கொடுத்திருக்றோர்கள்‌. அத்த மல்வீரர்‌ எக்க சாட்டினராக இருக்தால்‌ என்ன ? நாம்‌ அளிக்‌ கும்‌ சம்மானத்தை அவர்‌ மிகவும்‌ உயர்வாகப்‌ போற்றிப்‌ பாதுகாப்பார்‌ ” என்றார்‌ ஒருவர்‌.


“மகாராஜா! இதற்குள்‌ மனம்‌ சலிக்கவேண்‌ டாம்‌. இன்னும்‌ ஸமஸ்தானத்து வீரர்கள்‌ யாவரும்‌  வரவில்லை. யாரோ இறு பிள்ளைகள்‌ இவ்வளவு காள்‌ அம்த வீரரோடு போக்குக்‌ காட்டி விளையாடி. னர்கள்‌. அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்.று தெரிந்து கொண்ட பிறகு காம்‌ போவோமென்று லை பெரிய வீரர்கள்‌ இருக்கிறார்கள்‌? என்று மற்‌ ரொருவர்‌ சொன்னார்‌.


இக்க ஸமஸ்தானத்தைப்‌ போல இவ்வளவு சிறப்பாகப்‌ பலவகையான வித்தைகளுக்கும்‌ ஆதரவு அளிப்பது வேறொன்றும்‌ இல்லையென்று ஜனங்கள்‌ பே௫ிக்கொள்ளுகிறார்கள்‌. மற்ற இடங்களில்‌ இந்த மற்போரைக்‌ காணுவது அரிது. ஆதலால்‌ இங்கே வெளியூர்களிலிரும்‌து பல ஜனங்கள்‌ வந்திருக்கிறார்‌ கள்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ ம்காராஜாவினுடைய பெருமையைப்‌ பற்றித்தான்‌ பேசிக்கொண்டிருக்‌ கிறார்கள்‌ ” என்று வேறொருவர்‌ பேசினர்‌.


அரசரோ மல்‌ விளையாடும்‌ இடத்தையே பார்த்‌ துக்கொண்டிருந்தார்‌. திடீரென்று அவர்‌, “அம்‌ தக்‌ கூட்டத்துக்கு நடுவில்‌ ஒரு பெரிய மூட்டை தெரி இறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. ஏதாவது வண்டி: நிற்பதாகவும்‌ தெரியவில்லையே. அங்கே அவ்‌ வளவு பெரிய மூட்டை இருக்கக்‌ காரணமென்ன ? ?' என்ற கேட்டார்‌.


அருகிலிருமக்தவர்கள்‌ எட்டிப்‌ பார்த்தார்கள்‌. ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கடையே தெரிந்தது. கூட்டம்‌ நெருக்கமாக இருந்தமையால்‌ அர்த மூட்‌ டைக்கு ஆதாரமான பொருள்‌ இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  மம்திரிமார்‌ அம்க மூட்டை எங்கே இருக்கற தென்று தெசிம்துவர ஓர்‌ ஆளை அனுப்பினர்‌. சிறிது மேரத்தில்‌ ஒருவன்‌ வம்து செய்தியைத்‌ தெரிவித்‌ கரன்‌) “ஒரு பிராமணர்‌ கம்‌ தலையில்‌ நெல்‌ மூட்டை யைச்‌ அமம்கபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்றொர்‌” என்று அவன்‌ கூறினான்‌. “ பிராமணரா | முட்டை மிகவும்‌ பெரிதாக இருக்றெதே; அதை அவர்‌ சமமக்துகொண்டே வேடிக்கை பார்ப்பகேன்‌?! என்னு அரசர்‌ ஆச்சரியத்தோடு கேட்டார்‌. மறுபடி. யும்‌ சமாசாரம்‌ வர்தது; “அவர்‌ அதைச்‌ சிறிதும்‌ கஷ்டமில்லாமல்‌ சமம்துகொண்டு நிற்றோர்‌. கீழே இறக்கவேண்டிய அவ௫யமில்லையென்று சொல்லு இருர்‌ ” என்னு தெரியவந்தது.


“ அத்தகைய மனிதரை காம்‌ பார்க்கவேண்‌ டும்‌” என்னு அரசர்‌ உத்தரவிட்டார்‌. அவரை அழைத்து வருவதற்காக ஒருவன்‌ சென்றான்‌.


அம்தப்‌ பிராமணர்‌ கஞ்சாவூர்‌ ஜில்லாவிலுள்ள ஹயைம்பேட்டைக்கருகில்‌ இருக்கும்‌ மாங்குடியென்‌ னம்‌ ஊரினர்‌. ஸ்மார்த்கப்பிராமணர்களுள்‌ மழகாட்டுப்‌ பிருகசரண வகுப்பைச்‌ சார்ந்தவர்‌. கைலாசைய ரென்பது அவர்‌ பெயர்‌. தஞ்சாவூரில்‌ இருந்த சாஜபக்துக்களாகிய மகாராஷ்டிரர்கள்‌ பக்கத்துக்‌ ரொமயங்களிலுள்ள தங்கள்‌ நிலங்களைக்‌ குத்த கைக்கு விட்டுவிடுவார்கள்‌. அம்தக்‌ குத்தகைக்காரர்‌ கள்‌ வருஷக்தோலும்‌ மெல்லைக்‌ கொணர்ந்து அவர்க ளிடம்‌ கொடுத்துவிடுவார்கள்‌. சிலர்‌ தாமே சுமந்து வத்து போட்டுவிட்டுச்‌ செல்வார்கள்‌. கைலாசையர்‌


அத்தகைய குத்தகைதாரர்களுள்‌ ஒருவர்‌.  அவர்‌ இரண்டு கலம்‌ நெல்லை ஒரு கோணியில்‌ மூட்டையாகக்‌ கட்டித்‌ தம்‌ தலையிற்‌ சுமந்துகொண்டு வந்தவர்‌ ; அம்ச வழியே செல்லுகையில்‌ பெருங்கூட்ட மொன்று இருப்பதைக்‌ கண்டு அங்கே வந்தார்‌. வளை வுக்குள்ளே மல்‌ விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்‌.


மிக்க பலமும்‌ கட்டுமுடைய ஆஜா.னுபாகு வான அவருடைய உடம்பு இரும்பைப்போன்‌ றிரும்‌ தது. நெற்றியில்‌ இருந்த திருமீறும்‌ கழுத்திலிருந்த : ருத்திராட்சமும்‌ அவருடைய இவபக்தியைப்‌ புலப்‌


படுத்தின. அவரும்‌ அவருடைய வகுப்பினரும்‌ இறந்த இவபக்தர்கள்‌ ; மூன்று காலத்தும்‌ ஏகலிங்‌ கார்ச்சனை செய்பவர்கள்‌. கைலாசையருடைய


வன்மைபொருந்திய உடலும்‌ சிவசின்னங்களின்‌ தோற்றமும்‌ பார்ப்பவர்களுக்குப்‌ பீமசேனனது ஞாபகத்தை உண்டாக்கின. திவபக்தியும்‌ தேகபல மும்‌ பொரும்‌ தயவர்களிற்‌ சிறந்தவனல்லவா அவன்‌ 2


கைலாசையர்‌ தம்‌ தலையிலிரும்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால்‌ அதை இறக்கிவைக்காமல்‌ நின்றபடியே மற்போர்‌ விளை யாட்டைப்‌ பார்த்துக்கொண்டிருக்தார்‌. அவர்‌ தோளில்‌ .ஒரு பை தொங்கியது. அதில்‌ ஐந்தாறு கவுளி வெற்றிலையும்‌ கொட்டைப்‌ பாக்கும்‌ ஒரு பெரிய பாக்கு வெட்டியும்‌ தேங்காயளவுள்ள சுண்ணாம்புக்‌ கரண்டகமும்‌ வைத்திருந்தார்‌. அம்த மல்‌ விளையாட்டைப்‌ பார்த்துக்கொண்டு மின்‌ றபடியே அவர்‌ காம்பும்‌ தரிக்கத்‌ தொடங்கினார்‌


நினைவு மஞ்சரி முதல் பாகத்திலிருந்து சில பகுதிகள்! இணைய இணைப்புச் சரியாக இல்லாத காரணத்தினால் முழுவதும் பகிரமுடியவில்லை. :(


Thursday, January 15, 2026

மதுரையும் மார்கழி மாசமும்!

 மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது. 



உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.



பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன். 

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம். 

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும்  ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும்.   கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும்.  காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((

Wednesday, January 14, 2026

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30

  திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்  திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்

 
திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!


 படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்  படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்

 

படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்   படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்
 
படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்

இன்று கடைசி நாள்.  போகிப் பண்டிகை.  ஆகவே படிக்கோலம் என்று சொல்லப்படும் மணைக் கோலம் போடலாம். விதவிதமாக அழகு செய்யப் பெண்களுக்குச் சொல்லியா தர வேண்டும்?

படங்களுக்கு நன்றி கூகிளார்!

வங்கம் என்றாலே கடலையே குறிக்கும் சொல்.  இங்கே அது பாற்கடலைக் கடைந்ததைக் குறிக்கும். கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் எனப் பெயர் பெற்றான் கண்ணன்.  "மாதவன்" என்னும் பெயருக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  "மா"என அழைக்கப்படும் ஶ்ரீ ஆகிய தாயாரின் கணவன் என்னும் பொருளிலும்,  மது வித்தை மூலம் உணரப்படும் பரம்பொருள் மாதவனாக ஆதி சங்கரராலும்,  மௌனம், தியானம், யோகம் ஆகியவற்றால் உணரப்பட்டு சித்தம் போன போக்கில் போகாமல் நிலைநிறுத்த உணரப்படுபவனாகப் பராசர பட்டராலும், "மா" எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவனாக ஹரி வம்சத்திலும் அறியப்படுகிறது.

இத்தகைய மாதவனை, கேசவனை அழகிய திருமுகத்தை உடைய கோபியர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் அவன் திருவடிகளைச் சரணம் என்று சென்று அவனை தரிசித்து இறைஞ்சி பாவை நோன்பின் விரத பலன்களைப் பெற்று வந்த விபரங்களை ஶ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பட்டர் பிரான் ஆன பெரியாழ்வாரின் செல்வத் திருமகள் ஆன கோதையாகிய நான் சொன்ன இந்த இனிய தமிழ்ப்பாடல்கள் முப்பதையும் தவறாமல் இந்த தனுர் மாதத்தில் பாவை நோன்பு நூற்றுச் சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் அழகிய உயர்ந்த அகன்ற தோள்களை உடைய செந்தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய திருமாலின் அருள் பெற்று அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.





மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,


அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன்.


நாராயணீயத்தில் பட்டத்திரி வேண்டுவதாவது
"அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம்

ஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே! உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.


நாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்

உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.
உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.