எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 07, 2025

விழி கிடைக்குமா? வாழ வழி கிடைக்குமா?

 மனது வேதனைப்  படும் சமயங்களில் எல்லாம் நான் புத்தகங்களே படிப்பேன், அதிலும் திரு தேவனின் புத்தகங்கள் என்றால் எத்தனாம் முறை என்றெல்லாம் கணக்கில்லை. கல்யாணி, ஜானகி, கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம் போன்றவை ஒவ்வொரு தரம் படிக்கும்போதும் புதிய கோணத்தைக் காட்டி மனசை லேசாக்கும். ஆகவே கடந்த நான்கு நாட்களாக ஸ்ரீமான் சுதர்சனமே படித்து வந்தேன். விறு விறுப்பாக நான் படிப்பதை நம்ம ரங்க்ஸ் மட்டும் பார்த்திருந்தாரானால் சிரித்துக் கிண்டல் செய்திருப்பார். ஆனால் எனக்கு உண்மையில் சுதர்சனம் படும் கஷ்டங்களை எல்லாம் படிக்கையில் நாங்க குடித்தனம் வைச்சப்போ நடந்தவையும் அதை எப்படி எல்லாம் சமாளித்தோம் என்பதும் நினைவில் வந்து போகும். இம்முறையும் அப்படிப் பழைய மலரும் நினைவுகள் வந்து மனதில் ஆறுத்டல் தோன்ற ஆரம்பித்தது. சுதர்சனம் முடிஞ்சு போய் அடுத்து ஜஸ்டிஸ் ஜகந்நாதனை எடுத்தேன். கல்யாணி, ஜானகி, எல்லாம் கிழிந்து விட்டன. கோமதியின் காதலன் தூள் தூளாக இருக்கு. வைச்சுப் படிக்க முடியாது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் அத்தனை ருசிகரமாகப் படிக்க மாட்டென் எனினும் அதிலும் நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லை.

ஆதியிடம் ஏற்கெனவே பாலங்கள் புத்தகம் கேட்டிருந்தேன். ஆனந்த விகடனில் தொடராக வந்தப்போப் படிச்சது. ஆதிக்கு இருந்த வேலை நெருக்கடியில் அவங்க தான் புத்தகம் எடுத்து வந்து கொடுக்கணும். திரும்ப வந்து வாங்கிப் போகனும். ரங்க்ஸ் இருந்தால் வண்டியில் போயிடுவார். ஒவ்வொரு சமயமும் அவர் இருந்தால் என்பதே தோன்றிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமை ஆதியே தன் வேலைகளை ஒதுக்கிட்டு இந்தப் புத்தகம் கொடுக்கவென்றே வீட்டுக்கு வந்தார். அப்போ ஜகந்நாதன் தான் படிச்சுட்டு இருந்தேன். விறுவிறுப்பே இல்லை. ஆதியோடு பேசியதில் கொஞ்சம் மன ஆறுதல் ஏற்பட்டது. அவருக்கும் மனப்பாரம் குறைஞ்சிருக்கும்.  அன்று தற்செயலாக முகநூல் மெசஞ்சரில் ஏதோ புதுச் செய்தி வந்திருப்பதாகக் காட்டவே என்னவென்று பார்த்தால் பழைய சிநேகிதி (எனக்குச் சின்னவங்க தான். மின் தமிழில் இருந்திருக்காங்க. பதிவுகளும் போட்டிருக்காங்க) பார்வதி ராமச்சந்திரன் ஞாயிறன்று இன்னொரு சிநேகிதரையும் அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வரப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவர் எங்கேயோ டெல்ல்லியிலோ/ பெண்களூரிலோ அல்லவா இருந்தார் என யோசித்தாலும் வரச் சொல்லி அழைப்பு விடுத்தேன்.

அன்றிர்வே திரு தி.வா. அவர்கள் கூப்பிட்டிருக்கார்/ இதைச் சொல்லத் தான். ஆனால் பெல் அடிக்கவே இல்லை என்பதோடு நானும் தொலைபேசியை ம்யூட்டில் வைத்திருந்தேன். ஆகவே அழைப்பு வந்தது ஞாயிறன்று காலை தான் தெரியும். காலை அவருக்கு பதில் செய்தி கொடுக்கையிலேயே அவரே அழைத்துப் பேசினார். ரங்க்ஸ் போனப்புறமா அன்னிக்குத் தான் முதல் முதலாக அழைத்திருந்தார். தொலைபேசி பிசியாக இருப்பதால் கூப்பிடலை என்றார். அவருடன் பேசிவிட்டுக் கொஞ்சம் ஆறுதலுடன் தொலைபேசியை வைக்கையில் பார்வதி ராமச்சந்திரன் வரப்போவதைத் தெரிவித்தார். மத்தியானம் இரண்டரை மணி அளவில் பார்வதியே தொலைபேசியில் அழைத்து 3 மணிக்கு மேல் வரப்போவதைச் சொன்னார். ஒண்ணும் சாப்பிட மாட்டோம் என்றும் நேற்று ஏகாதசி என்பதால் முழு விரதம் எனவும் சொன்னார். ஆனால் அவர் வருவதற்கு நான்கரை மணி ஆகிவிட்டது. அவருடனும் இன்னொரு நண்பருடனும் (அம்பாள் உபாசகர்) பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியலை. அதிலும் எங்கள் மானசீக குருவான திரு காழியூராரைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் இடம் பெற்றன.

கடைசியாக அவரைத் திருவண்ணாமலையில் 2020 ஆம் ஆண்டில்  எங்கள் குழும் நண்பர் ஒருத்தர் ரமணாசிரமத்தில் தங்கி இருந்தப்போப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அப்போதே குருநாதர் தம்மை இனித் தொலைபேசி, வாட்சப், மெசஞ்சரி மூலமெல்லாம் இனித் தொடர்பு கொள்ள முடியாதெனவும் தானாக எங்களைப் பார்க்க விரும்பிச் செய்தி அனுப்பிப் பார்ப்பதாகவும் இதுவே தன்னைப் பார்ப்பது கடைசி முறை என்ற தொனியில் பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் எனக்குப் புதுசு. ஆனால் அவரைப் பார்க்க வேறே என்ன வழி எனத் தெரியலையே என மனம் நொந்து போனாலும் ஓரளவு நம்பிக்கைக்கிற்றும் மனதில் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் அவரை நினைக்காத நாளில்லை. நாமெல்லாம் அதிர்ஷ்டம் பண்ணவில்லை என்பார்.. கடைசியில் அவர் ஒவ்வொருவருக்கும் எப்படி அறிமுகம் ஆனார் என்பதைப் பகிர்ந்து கொண்டோம் நேரமும் ஆயிற்று. நண்பர்கள் விடை பெறும் நேரமும் வரவே அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். இதில் பார்வதியுடன் வந்த எங்கள் நண்பர் முத்துச்சாமியுடன் அவருடன் கூட வேலை பார்ப்பவரும் வந்திருந்தார். விசாரித்தால் அவர் என்னுடைய எழுத்தை எல்லாம் படிச்சுட்டு என்னுடைய ரசிகர் ஆகிவிட்டாராம். முதல் முறையாக ஒரு ரசிகரைப் பார்த்ததில் மனம் சந்தோஷம் அடைந்தது என்னமோ உண்மை தான். இப்போக் கொஞ்சம் தெளிவாக இருப்பதால் இதை உடனே எழுதி இருக்கேன். எப்போ மனக்குரங்கு மரத்தில் ஏறுமோ தெரியாது. விழி கிடைக்குமா? வாழ வழி கிடைக்குமா? என்றே யோசித்து வருகிறேன். ஒரு முறையாவது காழியூராரைப் பார்த்து விடணும் என்பதும் மனதின் ஓர் ஓரத்தில்.