போன மாசமே பவர் கட் எனச் சொல்லி இங்கே உள்ள குடியிருப்போர் குழுமத்தில் பகிர்ந்திருந்தனர். ஆனால் மறுநாள் வழக்கம்போலத் தான் இருந்தது. இன்னிக்குக் காலம்பர காலைக் காஃபி முடிச்சுட்டுப் பின்னர் சமையல் பண்ணுவதற்காகக் காய்கறிகளை எடுத்து வைக்க ஆறரை மணிக்குக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால், மின்சாரம் இல்லை. வீடு முழுக்கக் கவனிச்சுப் பார்த்தோம். மாடி, கீழே எங்கேயும் மின்சாரம் இல்லை. பின்னர் பையர் எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டார். ஒருவேளை நம்ம வீட்டில் மட்டும் ஏதேனும் ட்ரிப் ஆகி இருக்குமோனு. அவர் இல்லைனு சொல்லிட்டார். காலனி முழுக்க மின்சாரம் இல்லை. அதுக்குள்ளே மருமகளின் வாட்சப்பில் இந்தப் பகுதியில் இன்று பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை இருக்காதுனு சொல்லி இருக்காங்க. மற்ற நாடுகளில் எப்படியோ தெரியலை. இங்கே கத்தாரில், தோஹாவில் நாங்க இருக்கும் பகுதியில் மின்சார அடுப்புத் தான். சீக்கிரமாக ஆயிடும். ஆனால் கைகளை மறந்து கூட அடுப்புப் பக்கம் வைச்சுடக் கூடாது. அபார்ட்மென்ட் குடியிருப்புக்களில் எரிவாயு போல நினைக்கிறேன். தக்குடுவைக் கேட்டால் தெரியும். போன மாதம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துட்டுப் போனார். பழைய நினைவுகளை மறுபடி புதுப்பித்துக் கொண்டோம்.
தினமும் ஆறரைக்கெல்லாம் குளிச்சுட்டு வந்துடுவேன். இன்னிக்கு அறையைக் கொஞ்சம் சுத்தம் செய்ததால் குளிக்க தாமதம். கடைசியில் குழாயைத் திறந்தால் தண்ணீர் மெலிதாக வந்து கொண்டிருந்தது. சமையலறைக்குழாய், குளியலறைக்குழாய்னு எல்லாத்தையும் திறந்து பார்த்துத் தண்ணீர் வரலை என்பதால் குளிக்க முடியலை. ஒன்பதரை பத்துக்குள் வந்துடுமோனு காத்திருந்தேன். குளிச்சுட்டு சமைச்சுடலாம்னு. என்னோட அலைபேசியில் இணையம் வரவில்லை. மருமகள் ஹாட் ஸ்பாட் போட்டுத் தரேன்னு சொன்னாள். ஆனாலும் இணையம் பார்க்க முடியாது. சார்ஜ் ரொம்பக் கம்மியாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்குள்ளாகத் தீர்ந்தே போயிடும். ஆகவே போட்டுக்கலை. ஆனாலும் இணையம் இல்லாமல் வாட்சப்போ, மெசேஜ்களோ, அழைப்புக்களோ வராது. சும்மாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன்.
பின்னர் குளியலறைக்குழாயில் மெலிதாக வந்து கொண்டிருந்த குழாய் நீரை வாளியில் நிரப்பிக் கொண்டு (அம்மாடியோவ், சில்லோ சில்) குளிக்க ஆரம்பித்தேன், சுமார் பதினொன்றரை இருக்கும். அதுக்குள்ளே பையர் தொலைபேசியின் மூலம் நிலைமையைத் தெரிந்து கொண்டு சப்பாத்தி, சப்ஜிக்கு ஆர்டர் பண்ணிட்டார். நான் குளிச்சுட்டு வந்ததும் பனிரண்டு மணிக்கே மின்சாரமும் வந்தாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வேறே என்ன செய்வது? பனிரண்டே காலுக்குச் சாப்பாடு வந்தது. தந்தூரி ரொட்டி, தால், காலிஃப்ளவர் சப்ஜி, பனீர் சப்ஜி, சாலட், கொஞ்சம் போல் பாஸ்மதி அரிசி. நெய்யில் வறுத்து வேக வைத்துக் கொத்துமல்லி தூவினது. ஆக மொத்தம் இன்றைய தினம் சமையல் இல்லாத நாளாக ஆகி விட்டது.
Thanks to google for the picture.