ஹாஹாஹா ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹு ஹெஹெஹெஹெஹெ என்ன சிரிப்புனு பார்க்கிறீங்க?
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது பக்ஷணச் சிரிப்பு!
இங்கே நான் அந்த பக்ஷணத்தை வைச்சே ஒரு புது ஐடம் பண்ணிட்டேனே!
இரண்டு நாட்களாக ஷோபா சொன்ன தயிர், ப.மி.யும், தில்லையகத்து கீதா சொன்ன க்ரீமோடு தயிரில் முறுக்கை ஊற வைப்பதும் மண்டையில் ஊறிக் கொண்டிருந்தது. பக்ஷணமும் காலி ஆகணும். ஒருத்தருக்கும் கொடுக்கவும் முடியலை. ஆகவே அவற்றை வைத்து தஹி சாட் பண்ண முடிவு செய்துட்டேன். நல்லவேளையா இப்போ விரத நாட்கள் ஏதும் இல்லை. தக்காளி, வெங்காயம் சேர்க்கலாம்.
முடிவு செய்வதும், அதைச் செயலாற்றுவதும் நமக்கு ஒரே சமயம் நடக்கும் ஒண்ணு தானே!
ரங்க்ஸைக் கேட்டேன். சோதனை எலியா? நானா? ம்ஹ்ஹூம்னு மறுத்துட்டார். பச்சை, மஞ்சள், சிவப்புக் கலர் துரோகி! போகட்டும்! ரசனை இல்லாத மனுஷன்! :P :P :P :P
மளமளவென ஒரு சின்ன நடுத்தர அளவுத் தக்காளியும் பெரிய வெங்காயத்திலே சின்ன அளவாக ஒன்றும் எடுத்துக் கொண்டேன். பொடிப்பொடியாக நறுக்கி ஒரு பேசினில் போட்டேன்.
பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம்.
அதன் பின்னர் ஒரு முறுக்கு, ஒரு தட்டை, இரண்டு உப்புச்சீடை, நாலு வெண்ணெய்ச் சீடை, இரண்டு சீப்பி ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்த்தேன்.
நிறையப் போட்டுவிட்டால் நான் மட்டும் இல்ல சாப்பிடணும். அதனால் கொஞ்சமாகவே சேர்த்தேன்.
இப்போ அதைச் சாப்பிடும் தட்டில் போட்டு அதன் மேல் ஒரு கரண்டி தயிரை ஊற்றினேன். உப்புச் சேர்க்காத தயிர்!
ஹூம், என்ன வருத்தம்னா பச்சைக் கொத்துமல்லியே வீட்டிலே இல்லை. தீர்ந்து விட்டது. ரங்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். வாங்கலையாம். வாடி இருந்ததாம். அதான் ஒரு குறை. அதோடு சாட் மசாலா இருந்தால் மேலே தூவி இருக்கலாம். காலா நமக் எனப்படும் கறுப்பு உப்புப் பொடியைக் கூடத் தூவிக்கலாம். தேவையான புளிச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியன இருந்தால் சேர்க்கலாம். காலா நமக் மட்டும் இருக்கு. அதையும் போட்டுக்கலை. மறந்துட்டேன். தயிர் சேர்த்து ஒரு கலவை கலந்து ஒரு நிமிஷம் வைத்துவிட்டுச் சாப்பிட்டேன். ரங்க்ஸ் வேண்டவே வேண்டாம்னு திட்டவட்டமாக (ராகுல் காந்தினு நினைப்பு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மறுத்துவிட்டார். போனால் போகட்டும்னு மனசுக்குள்ளே பாடிக் கொண்டு (வாய்விட்டுப் பாடினால் யாருங்க கேட்கிறது? எனக்கே சகிக்காது, பயந்துடுவேன்) சாப்பிட்டுவிட்டு ஒரு காஃபி சாப்பிட்டேன் பாருங்க! சொர்க்கம்!