எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 07, 2025

பெண்களின் மனோபாவம் மாறுமா?

 கணவர் இறந்த பின்னரும் பெண்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்றே எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ இன்னமும் மனதில் எதுவும் ஒட்டவில்லை. ஏதோ போல் இருக்கு. எந்தச் சின்ன விஷயமானாலும் ரங்க்ஸிடம் சொல்லியே பழக்கம் என்பதால் சட்டென மனமும், உடலும் அவரைத் தேடி ஓடும். பின்னர் சாட்டை அடி போல் மனதில் அடி விழுந்ததும் யதார்த்த நிலை புரியும். சமாளித்துக் கொள்வேன். அதிலும் இரவுகளில் அவர் பக்கத்தில் படுத்திருக்கும் நினைப்பில் பேசிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். 12 மணி வரை தூக்கம் வராது. பின்னர் ஏதோ தூங்குவேன். எப்படி ஆனாலும் 3 மணி அல்லது மூன்றரை மணிக்கு விழிப்பு வந்துடும். இங்கே அடுக்களையில் போய் எதுவும் செய்ய முடியாது என்பதால் அப்படியே படுத்திருப்பேன். ஐந்து மணிக்குப் பிள்ளை, மருமகள் இறங்கி வரும்போது அவங்களுக்குத் தொந்திரவாய் இருக்கக் கூடாது எனப் படுத்தே இருப்பேன். சுமார் ஐந்தே முக்கால் அளவில் மருமகள் குழந்தைக்குக் காலை உணவு, மதிய உணவு தயாரித்து முடித்துவிட்டுக் குழந்தையைத் தயார் செய்ய மாடிக்குப் போவாள். 

அப்போ எழுந்திருந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றி (ஸ்வாமி விளக்கேற்றியதும் சட்டெனக்குங்குமம் வைத்துக் கொள்ளக் கை நெற்றிப் பொட்டிற்குப் போகும். கஷ்டத்துடன் நிறுத்திப்பேன்.)  பின்னர் காஃபி போட்டுப்பேன். சில நாட்கள் முதல்நாள் டிகாக்ஷனே இருக்கும். ஊரில் இருந்தவரை மாமா இருந்தால் குடிக்க மாட்டார் என்பதால் புதிதாகப் போடுவேன். இங்கே அப்படி எல்லாம் பார்ப்பதில்லை. ஏதோ குடித்து வைப்பேன் .அங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்தவரைக்கும் காலை எழுந்ததும் வழக்கம்போல் வாசல் தெளிக்கவெனப் போகவே கஷ்டமாக இருக்கும். எதிர் வீடுகளிலெல்லாம் அந்த நேரம் வாசல் தெளிக்க வந்தால் நம்மைப் பார்த்ததும் என்ன நினைச்சுக்குவாங்களோ என்று தயக்கமாக இருக்கும். ஆனால் என்னைப் பத்து நாட்களும் பார்க்கவே பார்க்காத ஒருத்தர் எந்தவிதமான மன வேறுபாடும் இல்லாமல் வந்து பார்த்துவிட்டு வெற்றிலை, பாக்கெல்லாம் வாங்கிக் கொண்டு போனார். இன்னொருத்தரோ மாமா இறந்த அன்றிலிருந்து நான் தோஹா கிளம்பும்வரை வெளியேயே வரலை.  இன்னும் சிலர் வந்துட்டுப் பார்த்துட்டுப் பின்னர் அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.அபார்ட்மென்டில் இது ஒரு பிரச்னை. தனி வீடெனில் தெரியாது. ஏனெனில் இங்கெல்லாம் இன்னமும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்ப்பவர்களும் கடைப்பிடிப்பவர்களும் இருக்காங்களே!

 நான் வெளியே வந்தால் அவங்க கண்ணில் பட்டு விடுவோமோ எனக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வெளியே வருவேன். வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தனவே. வங்கிக்கு, மருத்துவரைப்பார்க்கவெனப் போக வேண்டி இருந்தது. ஆனால் நெருங்கிய சொந்தங்கள் எந்தவிதமான மன வேறுபாடும் காட்டாமல் சகஜமாக வந்தனர். இதில் முக்கியமாக வெங்கட்டின் மனைவி, இன்னொரு இளம் சிநேகிதி, பெண்களூரிலிருந்து வந்தவர் என வந்தார்கள். அபார்ட்மென்டிலேயே சிலர் சகஜமாக வந்து நான் தனியாக இருப்பதால் ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டுவிட்டுப் போனார்கள். சிலர் உட்கார்ந்து பேசி ஆறுதலும் கொடுத்தனர். என்றாலும் ஒரு சிலர் இன்னமும் இந்த வேறுபாடுகளைப் பார்ப்பது, அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

இதுவும் கடந்து போகும் என நானும் கடந்து வந்து விட்டேன். வங்கிகளுக்குச் செல்வதெனில் மதியம் பனிரண்டுக்குக் கிளம்பிப் போய் மூன்றுக்குள் திரும்புமாறு பார்த்துக் கொண்டேன். அந்த நேரம் வீட்டில் இருக்கும் பெண்களின் ஓய்வு நேரமாக இருக்குமே. மருத்துவரைப் பார்க்க இரவு எட்டு மணிக்குப் போவேன். இப்படியே ஜூன், ஜூலை மாதங்களைக் கடத்திவிட்டு ஆகஸ்டிலும் பதினைந்து தேதி வரை ஓட்டிவிட்டு இங்கே வந்தாச்சு. இங்கே வந்த மறுநாளே சுப்புத்தாத்தா பேசினார் என்றாலும் வருவதாகச் சொல்லலை. அவர் வயதுக்கும் உடம்புக்கும் அவரை வரச் சொல்வதெல்லாம் சரியாய் இருக்காது என்பதால் நானும் அழைக்கவில்லை. தக்குடு தொடர்பில் இருந்தார். ஒரு நாள் கூப்பிட்டுப்பேசினார். என்னை அவங்க வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கார். அதன் கஷ்டம் இன்னும் அவருக்குப் புரியலை. வண்டியில் ஏறுவதே கஷ்டமாக இருக்கு. நடப்பது இன்னொரு கஷ்டம். இங்கெல்லாம் எங்கே போனாலும் டைல்ஸ் வழவழப்பாக இருப்பதால் சறுக்குகிறது. அதிலும் மருத்துவமனையில் எனக்கு நடக்கவே பயமாக இருந்தது/இருக்கு. நல்லவேளையாக வீல் சேர் கொண்டு வந்து விடுகின்றனர். இப்படியே போய் மருத்துவப் பரிசோதனை, கைரேகைகள் பரிசோதனை எல்லாமும் முடிச்சுக் கத்தார் ஐடியும் வாங்கிக் கொண்டு மருத்துவக் கார்டும் வாங்கி ஆச்சு. எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பேனு எல்லோரும் கேட்கிறாங்க. எனக்கே தெரியாது. இங்கே இன்னும் மனமே ஒட்டலை. இருப்பதும் தனித்தனி வீடுகள். யாரும் யாரையும் வந்தோ போயோ பார்ப்பதில்லை. யார் இருக்காங்கனு கூடத் தெரியாது.

நாட்கள் மட்டும் போய்க் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் எதுவும் எடுத்துவரலை. வெங்கட் மனைவி கின்டிலில் படிக்கச் சொல்லி இருக்கார். முயற்சி பண்ணணும். இப்போதைக்கு முகநூலில் தான் அதிகம் படித்து வருகிறேன். சில சமயம் திரும்பிப் போவோமா எனச் சந்தேகம் வருது. எப்படியும் பையர் மாமாவின் ஆறாம் மாசத்திதிகளை ஸ்ரீரங்கத்தில் போய்ச்செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். அப்போக் கூட்டிப் போகச் சொன்னால் கஷ்டம் என்கிறார். என்னமோ பார்ப்போம். கடவுள் விட்ட வழி.

6 comments:

  1. கீசா மேடம்... உங்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும் (ஏனென்றால் நீங்க பசங்க குடும்பத்தோடு தனியாக இருந்ததில்லை). இது சில மாதங்களிலேயே பழகிவிடும். என் தனிப்பட்ட கருத்து, குங்குமம் வைப்பதில் தவறில்லை. அது சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு வந்த ஒன்று. என் அம்மாவும் கடைசி வரை குங்குமம் வைத்திருந்தார்.

    ReplyDelete
  2. பழைமை முறை மாறாமல் இருப்பவர்கள், மாறிய காலத்திற்கு ஏற்றவர்கள் அல்லர். அதனால் நீங்க அவங்களைப் பற்றி மனதுல போட்டுக்கொள்ளாதீர்கள். முடிந்ததென்றால் சிறிது எடை குறைப்பை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புங்கள், அது உங்களுக்கும் கவனத்தைத் திருப்பும்.

    ReplyDelete
  3. நீங்க லேப்டாப் வைத்திருந்தால், டெலெகிராப் அப்ளிகேஷன் மூலமா பழைய நாவல்களைப் படி இறக்கிக்கொண்டு படிக்கலாம். இருந்தாலும் சேரில் உட்கார்ந்துகொண்டு கம்ப்யூட்டரில் படித்துக்கொண்டிருப்பது கால்களுக்குப் பாரமாக இருக்கும்.

    ReplyDelete
  4. இருக்கும் இடமே ஸ்ரீரங்கம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

    இன்னும் ஆறு மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலநிலை சூப்பராக ஆரம்பிக்கும். பிறகு மார்ச்சிலிருந்து வெயில் கொளுத்த ஆரம்பிக்கும்.

    தனியாக இருக்கும்போது இசை கேட்கலாம் (mp3 அல்லது யூடியூபில் மெதுவாக வைத்துக்கொண்டு).

    கொஞ்சம் யோசித்து ஒரு ஒழுங்குமுறை வைத்துக்கொண்டால், கவனம் திரும்பும். நான் மதியம் 12 மணி வரை ரொம்பவே பிஸி. போன் வந்தால்கூட என் ஒழுங்குமுறை தவறிவிடும். அப்படி பிஸியாக வைத்துக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  5. //இங்கு இன்னும் எவ்வளவு நாட்கள் என்று எல்லோரும் கேட்கிறாங்க// யார் கேட்கிறாங்க என்று நீங்க எழுதலை. யார் கேட்டாலும் அதைப்பற்றிக் கவலைப் படாதீங்க. உங்க பையர் மகள் வீட்டில் எத்தனை யுகங்கள் இருந்தாலும் யார் அதைப்பற்றிக் கேட்பது?

    ReplyDelete
  6. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

    ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதை நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை கீதாம்மா.

    இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும் தாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    இதுவும் கடந்து போகும்...... தைரியமாக இருங்கள்.

    ReplyDelete