குட்டிக்குஞ்சுலு வந்து ஒரு வாரம் ஆச்சு,. இதோ வெள்ளிக்கிழமை கிளம்பிடும். பெரிய மாதக் காலண்டரில் அது இங்கே இருந்து கிளம்பும் நாளையும், சென்னையிலிருந்து கிளம்பும் நாளையும் கொட்டை எழுத்தில் எழுதி வைச்சிருக்கு. இந்த முறை வண்டி இல்லாததால் அதுக்கு அவ அப்பாவோட எங்கேயும் போக முடியலை. வண்டியை நம்ம ரங்க்ஸ் வித்துட்டார். அது வாங்கி 20 வருஷத்துக்கும் மேல் ஆச்சு. பையர் எப்போவானும் வரச்சே எடுக்கறது தான். ஆனால் குஞ்சுலுவுக்கு அதில் போவது என்றால் சாப்பாடு கூட வேண்டாம். இந்த முறை ஏமாற்றமாகிப் போச்சு அதுக்கு. பள்ளியில் சேர்ந்த முதல் வாரமே ஸ்டார் ஆஃப் தெ வீக் விருது வாங்கிக் கொண்டு வந்தது. ரொம்ப ஓஹோனு படிக்காட்டியும் படிக்கிறது. ஆனால் வீட்டுக்கு வந்ததும் பள்ளிப் புத்தகங்களையே தொடமாட்டேன் என்கிறது. அதான் ஸ்கூலில் படிச்சுட்டேனே என்கிறது. அவங்க பாட்டியைப் போல இருக்குமோ?இஃகி,இஃகி, ஆனால் பாட்டி வீட்டுக்கு வந்ததும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கலைமகள்னு படிப்பா. இது அப்படி எல்லாம்படிக்கிறதே இல்லை. எங்க அப்பா ஸ்கூலுக்கே வந்து எச்.எம்மிடம் என்னைப் பற்றிப் புகார் சொல்லி அடிக்கச் சொல்லிட்டுப் போவார். அவங்களும் அடிக்கையில் எல்லாம் கல்கி, குமுதம் மட்டும் படிக்கத் தெரியுமானு அடிப்பாங்க. இத்தனைக்கும் முதல் 3 ராங்கிற்குள் தான் சுத்துவேன்.
ஆஹா, ஓஹோ நு எல்லாம் விருச்சிக ராசிக்குப் போடறாங்க. ஆனால் எனக்கென்னமோ ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. காலில் கல்லைப் போட்டுக் கொண்ட பின்னர் சில நாட்கள் அப்படியே போயிடும்னு நினைச்சால் திடீர்னு ரங்க்ஸுக்குப் பல்வலினு போன மருத்துவர் கிட்டே என்னோட பல்லையும் காட்ட, அவர் ஒரு பல் உடைஞ்சிருக்குனு சொல்லி அதை எடுத்துட்டேன் என்றார். சரி,இத்தோடு விடும்னு நினைச்சால் வெள்ளிக்கிழமை அன்றிலிருந்து விடாமல் ப்ல் வலி. இது என்னடா சோதனைனு நினைச்சேன். ஏற்கெனவே ரங்க்ஸுக்குப் பல்வலி வந்தால் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் இருக்க அதைப் போட்டுக் கொண்டு படுத்தேன். தூக்கமா? நல்ல நாளிலேயே வராது. உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதுனு சமாதானம் செய்துக்கணும். இன்னிக்குத் தூக்கம் வராததோடு வலப்பக்கம் கன்னம் வீங்கி உதடுகள் எல்லாம் கோணிக்கொண்டு ஒரு சின்ன ஆப்பிள் அளவுக்குக் கன்னம் வீங்கித் தொங்க ஆரம்பிச்சது. பையர் பயந்து போய் விட்டார்.
மருத்துவர்கள் யாருமே அப்போது இல்லை. நான் போய்க் கொண்டிருந்த மருத்துவரை அழைத்தால் அவர் நாளைக்குப் பார்த்துக்கலாம். மெடிகல் கடையில் சொல்லி வலியைக் குறைக்கும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்குங்கனு சொல்லிட்டார். வேறே வழி? பையர் போய் வாங்கி வர அதைப் போட்டுக் கொண்டு தூங்கினேன். காலை எழுந்ததும் மருத்துவரிடம் பேசி எத்தனை மணிக்கு வரணும்னு கேட்டால் அவர் வராதீங்க. உங்களுக்கு இங்கெல்லாம் வருவது கஷ்டம் என்கிறார். தனியாய் வரணும்னு சொல்றார் போலனு நினைச்சுப் பையர் வந்திருப்பதால் அவரோடு வரேன்னு சொல்லிட்டேன். ஏற்கெனவே 12 மணிக்கு மேல் தான் இருப்பேன்னு சொல்லி இருப்பதால் சாப்பாடு வந்தது சொல்லிட்டுக் கிளம்பினேன். ரங்க்ஸுக்கு ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி, அதிகம் வீட்டுக்குள்ளேயே அலைய வேண்டாம்னு சொல்லிப் படுக்கச் சொல்லிட்டுக் கிளம்பினோம். ஆட்டோ பெரிய ஆட்டோ வந்தது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற முடியலை. அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சின்ன ஸ்டூல் வைச்சிருந்ததால் அதை எடுத்துப் போட்டார், ஒரு மாதிரி ஏறிட்டேன்
ஒரு காலை வைச்சு ஏறிட்டேன். இன்னொரு காலை எடுக்கும் முன்னர் அதுவும் தொந்திரவு கொடுக்கும் இடக்கால். ஸ்டூல் ஆட ஆரம்பிச்சுடுத்து. உடனேயே கத்த ஆரம்பிக்கப் பையர் ஒரு பக்கமும் ஆட்டோ ஓட்டுநர் இன்னொரு பக்கமும் பிடித்துக்கொண்டு உள்ளே தள்ளினார்கள். ஒரு மாதிரியா உட்கார்ந்துட்டேன். தில்லை நகர் நோக்கி ஆட்டோ சென்றது. மருத்துவமனையின் விலாசத்தை வைத்துக் கண்டுபிடித்துக் கொண்டு கீழே இறங்கலாம்னு பார்த்தால் ஒரே அதிர்ச்சி. மருத்துவர், மருத்துவமனை எல்லாம் சரி. ஆனால் என்னால் அங்கே போக முடியாதே! என்ன செய்யப் போறேன்?