எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 16, 2007

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

9 comments:

 1. இந்த கோவிலுக்கு போன மாதிரி ஒரு எண்ணம். :)

  ReplyDelete
 2. தெரிந்த கதை.நானும் இங்க வந்தேன் என ஜாபிதா சொல்லிக்கறேன்.

  ReplyDelete
 3. கதை நல்லா இருக்கு. இந்த கோவிலுக்கு போயிருக்கிறேன். :)

  ReplyDelete
 4. @புலி, நீங்க தான் ஐயப்பன் வாகனம் ஆச்சே, போகாமல் இருக்க முடியுமா? :D

  @மதுரை, உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லிடப் போறேன்? :))))
  @அம்பி, இது ஒண்ணும் கதை இல்லை, நீங்க கோவிலுக்குப் போகலைனு நான் எங்கே சொன்னேன்?
  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  @வேதா, அது எப்படி? இவரைப் பார்க்காமல் உள்ளேயே போக முடியாதே? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???????

  ReplyDelete
 5. ம்ம்ம்...நான் இன்னும் இந்த கோவிலுக்கு எல்லாம் போனாது இல்லை..

  ReplyDelete
 6. எனக்கு அந்த "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" கிடைக்லை!! என் வீட்டில் இருந்த அய்யப்பன் சம்பந்தமான பொருட்கள் கோவிலில் கொடுத்தாச்சு!

  ReplyDelete
 7. @கோபிநாத், எங்கே, நீங்க தான் எப்போவும் பிசியா இருக்கீங்களே? :)))))

  @அபி அப்பா, பின்னூட்டம் நீங்க போட்டது தானா? சந்தேகமா இருக்கே? தப்பே இல்லை, இல்லை, என் கண்ணைக் கட்டுதா??????????

  ReplyDelete
 8. மதுரையில் இருப்பதனால் அழகர் கோவிலுக்குப் பல முறை சென்றதுண்டு.

  ReplyDelete
 9. பதினெட்டாம்படி கருப்பன்ன சாமிக்கும் ஐயப்பனுக்கும் தொடர்பு படுத்திக் கூறுவது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது.அழகர் கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் பரிச்சயமானவன் என்கிற வகையில் இம்மாதிரியான கதையை நான் இது வரை கேட்டதேயில்லை...ம்ம்ம்ம்

  கையப்பன்,ஐயப்பன்,தர்மசாஸ்தா என்றெல்லாம் அழைக்கப்படுபவர் உண்மையில் ஒரு பௌத்த துறவியாகவும், சபரிமலை ஒரு பௌத்த மடாலமாகவும் இருந்திருக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளதாக பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

  மேலும் அய்யப்பன் குறித்த மரபு வரலாறு ஒன்று உண்டு என்பதை எத்தனை பேர் அறிவீர்களென தெரியவில்லை....அதை அறிய இந்த தளத்தில் போய் பாருங்கள்...
  http://www.ayyappan-ldc.com/ayyappan-ldc_tamil/ayyappan-ldc_tamil.html

  நான் தர்மசாஸதாவை குறைகூறவோ குற்றப்படுத்தவோ இந்த பின்னூட்டத்தை இடவில்லை....தவறான பிம்பங்களை நாம் தொடரக்கூடாது என்பதற்காகவே இதை பின்னூட்டுகிறேன்.

  இது குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய ப்திவொன்று...

  http://sadhayam.blogspot.com/2006/06/blog-post_30.html#links

  ReplyDelete