எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 27, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இதையே இன்னொரு விதமாயும் சொல்லுவதுண்டு. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆடைகளைக் களைந்து விட்டு கண்ணனைப் பரிபூரணச் சரணாகதி அடைந்தால், அவன் தன்னிடம் உள்ள ஞானமாகிய ஆடையைக் கொடுத்து நம்மை உய்விப்பான் எனவும் சொல்லுவதுண்டு. எந்த அர்த்தத்தில் இருந்தாலும் இது ஒரு மிக அரிதான, தத்துவார்த்தமான பொருளை உள்ளடக்கியது. ராதையும், கிருஷ்ணனும் கூடி இருந்து களிப்பது என்பதே நம்மிடம் உள்ள ஜீவசக்தியானது பரமாத்மாவின் ஆத்ம சக்தியோடு இணைவதையே குறிக்கும். கண்ணனின் ஜீவசக்தி ராதை. கண்ணனின் ஜீவசக்தி அவன் படைத்த நாம் எல்லாருமே ஆவோம். நம்மைப் படைத்துக் காத்து, உய்விக்கும் வழியும் இவ்விதம் காட்டுகின்றான் கண்ணன். அவனையே பரிபூரணமாய் சரணாகதி அடைவதன் மூலம் நாம் பேரின்பத்தைப் பெறமுடியும். (கூடியவரையிலும் வார்த்தைகளை எளிமையானதாய்ப் புரிந்து கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறேன். தத்துவார்த்தமான விளக்கம் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது.)

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.

அதே சமயம் கண்ணன் நம்மிடம் மட்டும் தனியான அன்பு வைத்திருக்கின்றான் எனச் செருக்கும் கொள்ளலாகாது. அப்போது கடவுள் நம்மிடமிருந்து மறைந்துவிடுவான். இங்கே கடவுள் மறைவான் என்பது நம்மிடம் உள்ள நற்குணங்கள் மறைவதையே குறிக்கும். என்றாலும் அன்றாட வாழ்க்கை நெறிக்கு ஏற்ப இதைப் பார்த்தோமானால் ஒவ்வொரு கோபரும், ஒவ்வொரு கோபியும் கண்ணன் தன்னிடம் மட்டுமே தனியான அன்பு காட்டுவதாய்ச் செருக்கடைந்தனர். இதை நாராயண பட்டத்திரி

“நிலீய தேஸெள மயி மய்யமாயம்
ரமாபதிர் விஸ்வ ம்நோபிராம:
இதிஸ்ம ஸர்வா: கலிதாபிமாநா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோ பூ:”

என்று சொல்லுகின்றார். ஸ்லோகத்தின் அர்த்தம், என் லக்ஷ்மீகாந்தனாகிய கண்ணன், என் அருமைக் காதலன், என்னிடம் மாத்திரம் தனிப்பட்ட அன்பு பூண்டிருக்கின்றான்.” என எண்ணிச் செருக்குற்றிருந்தனர். கண்ணன் அவர்களிடமிருந்து மறைந்துவிட்டான். அப்போது ராதை மட்டும் செருக்கடையாமல் இருந்ததால் அவளை மட்டும் தனியே அழைத்துச் சென்றுவிட்டான். இங்கே ராதை பூரண ஞானம் பெற்றவர்களைக் குறிப்பாள். சாதாரண மனிதர்களாகிய நாம் இறை அருளையும், இறைவனையும் பூரணமாய்ப் புரிந்து கொண்டுவிட்டதாய்ச் செருக்குக் கொள்கின்றோம் அல்லவா? அதே ஞானியரும், யோகியரும் அவ்விதம் செருக்கடைவதில்லை. அவர்களுக்குப் பரிபூரணப் பேரானந்தம் கிட்டியும், அதை வெளிக்காட்டுவதில்லை. ஆகவே இறைவன் அவர்களோடு எப்போது இருக்கின்றான்.

‘ராதாபிதாம் தாவதஜாத கர்வாம்
அதிப்ரியாம் கோபவதூம் முராரே:
பவாநுபாதாய கதோ விதூரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ:”

பட்டத்திரி சொல்கின்றார். “முராரியே, ராதை மட்டும் கர்வம் கொள்ளாதிருக்கத் தாங்கள் ராதையை அழைத்துக் கொண்டு தனியே சென்று ராஸக்ரீடையை நடத்தினீர்கள் அல்லவோ?”

பின்னர் கோபியர் கண்ணனைக் காணாமல் விசனமுற்றனர். இதோ கண்ணன், இதோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம்! என ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி, இல்லை, இல்லை, இதோ என்னோடு கண்ணன் விளையாடுகின்றானே எனச் சொல்ல மற்றும் சிலர் கண்ணன் எங்களை விட்டு விட்டு விளையாடப் போய்விட்டானோ என அழுது அரற்றினார்கள். எந்நேரமும் கண்ணன் நினைவிலேயே இருந்த அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்ணனைக் கண்டு இதோ என்னெதிரில் இருக்கின்றானே என மயங்கினர். அப்போது தனியே அழைத்துச் சென்ற ராதைக்குக் கண்ணன் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாய் அஹங்காரம் மேலிடக் கண்ணன் முற்றிலும் மறைந்தான். ராதை அழ ஆரம்பித்தாள். ராதையின் அழுகுரல் கேட்ட கோபியர் ஓடோடி வந்து பார்க்க கண்ணன் ராதையிடமும் இல்லைஎனக் கண்டு அனைவருமே தேட ஆரம்பித்தனர்.

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.

கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.

இங்கே கர்வம் கொண்ட ராதை, கடவுளைக் கண்டு ஆனந்தித்த ஞானியருக்கும், யோகியருக்கும் பரிபூரண ஆனந்தத்தை உணர்ந்து அனுபவித்த பின்னரும் ஒரு சிலருக்கு அதனால் ஏற்படும் கர்வத்தைக் குறிக்கும். இறைவனின் கருணையால் தங்களுக்குக் கிட்டிய பேரானந்தத்தை எண்ணி கர்வம் மேலிடுவதைக் குறிக்கின்றது. தங்கள் யோகத்தாலும், ஞானத்தாலும் அன்றோ இத்தகைய பெரும்பேறு? என எண்ணத் தோன்றியதைக் குறிக்கும்.


அனைவரும் கண்ணனைத் தேடி அலைந்தனர். காட்டில் நாற்புறமும் இருட்டுச் சூழ்ந்து கொண்டது. ஆனால் கண்ணன் இல்லை. யமுனைக்கரையில் அலையாய் அலைந்தனர். பிரலாபித்தனர். கண்ணனின் அருங்குணங்களைப் போற்றிப் பாடினார்கள். புகழ்ந்து பாடி இத்தகையதொரு அருமையான செல்வம் நம்மிடையே இருந்தும் நாம் நமது அறியாமையால் தொலைத்தோமே என எண்ணிக் கலங்கினார்கள். இது கஷ்டம் வரும்போது மட்டும் நாம் இறைவனைத் தேடி, அவனின் பெருங்கருணையை யாசிக்கும் சாமானியரின் குணத்தை இங்கே சுட்டும். என்றாலும் அப்படி இருந்தாலும் இறைவன் கருணை புரியவே செய்கின்றான். வருத்தத்தாலும், துக்கத்தாலும் மனம் கலங்கி இறைவனின் பேராற்றலை எண்ணிக் கண்ணீர் விட்ட வண்ணம் இருந்த கோபியர் மனம் மகிழும் வண்ணம் கண்ணன் அவர்கள் எதிரில் தோன்றினான். ஆஹா, மீண்டும் கண்ணனைச் சந்திப்போமா? அவன் அருட்பெருங்கருணை நமக்குக் கிட்டுமா என எண்ணிக் கலங்கித் தவித்த கோபியருக்குக் கண்ணன் மீண்டும் தரிசனம் கொடுத்ததும் திகைத்துத் திணறித் திக்கு முக்காடிப் போனார்கள். இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டான். நாம் வாழ்க்கைப் பெருங்கடலில் மூழ்கிவிட்டோம் என எண்ணிக் கலங்கும் நமக்கு எங்கிருந்தோ ஒரு உதவிக் கரம் நீண்டு, அந்தக் கரத்தின் உதவியால் நாம் மீண்டு வருவதை இது குறிக்கும். இறைவனின் பெருங்கருணையைக் கண்ட கோபியர் பேரானந்தம் அடைந்து என்ன செய்வது என அறியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

கதிவிதா க்ருபா கேபி ஸர்வதோ
த்ருத தயோதயா: கேசிதாஸ்ரிதே
கதிசிதீத்ருஸா மாத்ருஸேஷ்வபீத்
யபிஹிதோ பவாந் வல்லவீ ஜநை:”
இறைவனின் கருணை என்பது இயல்பானது. இயற்கையானது. சற்றும் வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் பொங்கிப் பிரவாஹிக்கும் வல்லமை கொண்டது. எனினும் இங்கே கோபியர் சொல்லுவது என்னவென்றால் தயை என்பது பலவிதமாய் இருந்தாலும், இயற்கையாய் தயை புரியும் சிலரைப் போல், அல்லாமல், அண்டியவர்களிடம் மட்டும் கருணை புரிபவர்களைப் போலும் அல்லாமல், கண்ணா, நீ எங்களிடம் இரக்கம் இல்லாமல் இருந்துவிட்டாயே? என உரிமையோடு கோவிக்கின்றனர். என்றாலும் கண்ணன் அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு , “ஏ, கோபியர்களே, உங்களைப் போல் பிரியமானவர்கள் எனக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் தவறை நீங்கள் உணரவேண்டும் என்றே நான் சற்று நேரம் மறைந்து இருந்தேன். நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். இனி என்பால் உங்கள் பிரேமையும், உங்கள் பால் என் பிரேமையும் பல்மடங்குப் பெருகும். கவலை வேண்டாம். உங்களைக் கைவிடவே மாட்டேன்.” என உறுதி அளிக்கின்றான்.

1 comment:

  1. \\கவலை வேண்டாம். உங்களைக் கைவிடவே மாட்டேன்\\

    அப்படியே நம்மையும் கூட சேர்த்துக்க சொல்லுங்கள் தலைவி ;)

    ReplyDelete