எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 19, 2009

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்!

பெண்களுக்கு உரிய உரிமைகளோ இடமோ கிடைக்கவில்லை என்று சொல்லுபவர்கள் முதல்லே என்ன உரிமைகள் வேணும்னு சொல்லட்டுமே! சும்மா நம்மை நாமே தாழ்த்திக்கிறோம். அது போனாலே போதும்! எப்போதுமே பெண்களுக்குத் தடைகள்னு எதுவுமே இல்லை. சும்மா தடைகள் இருக்கிறதா நினைச்சுக்கறதும், ஆண்களைக் குறை சொல்லுவதும், இதனால் பெண் உரிமை வந்துடுச்சா??? கஷ்டப் படும் பெண்கள் இருக்காங்க, இல்லைனு சொல்லலை, அவங்க கஷ்டத்திலே இருந்து விடுவிக்க வழி பார்க்கணும். அவங்களோட உண்மையான தேவை என்னனு பார்க்கணும். பொதுவாகக் குறைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இப்போத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலேயும், பல விளம்பரங்களிலேயும் பெண்களைக் கேவலப் படுத்தறாப்போல் வேறே எதிலும் இல்லை. அதிலும் நெடுந்தொடர்கள் அது எந்த மொழியில் வந்தாலும் கதாநாயகியைத் தவிர மற்றப் பெண்கள் கொடுமைக்காரிகளாகவும், மாமனார், மாமியார், மைத்துனன், நாத்தனார், ஓரகத்தி போன்றோருக்குத் தீங்கு இழைப்பவளாகவும், எப்போவோ நடந்ததுக்குப் பழி வாங்குபவளாகவுமே சித்திரிக்கப் படுகின்றனர்.

இந்தப் பழி வாங்குவதில் அவங்க நெடுந்தொடரில் கூடப்பிறந்த அக்கா, தங்கை என வரும் பாத்திரங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. அக்கா, தங்கைனா சண்டை வரும் தான், இல்லைனு சொல்ல முடியாது. ஆனால் ஒருத்தி வாழ்க்கையை இன்னொருத்தி அழிக்கும் அளவுக்குப் போகுமா?? எங்கேயோ ஒன்றிரண்டு சம்பவங்கள் இம்மாதிரி நடந்தால் அதைப் பெரிசு படுத்தும் தினசரிகளும், தொலைக்காட்சிச் சானல்களுமே சமுதாயத்தையும், முக்கியமாய்ப் பெண்ணினத்தையும் கேவலப் படுத்துவதோடு அல்லாமல் அவங்க மனசில் விஷத்தையும் மறைமுகமாய் அல்ல நேரிடையாகவே பாய்ச்சுகிறது. பெண்ணியத்திற்காகக் குரல் கொடுக்கிறவங்க யாருமே இதுக்குக் குரல் கொடுப்பதில்லை. எத்தனை கேவலமாய் விளம்பரம் வந்தாலும் பணத்துக்காகச் சகிச்சுக்கும் பெண்கள் அதே குடும்பத்தில் மாமியாரோ, மாமனாரோ, கணவனோ சொன்னால் சகிச்சுக்கக் கூடாது என்பது குடும்ப உறவையே பாதிக்கும் என்பதை யாருமே உணரவில்லையா?? கணவன் கொடுமைனா தனிச்சு வந்துக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒருசில அபிப்பிராய பேதங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்குமே பிரிவது வழக்கமாகி வருகிறது. அதீத எதிர்பார்ப்பே காரணம் இதுக்கு! குறைகளைச் சகிச்சுக்க வேண்டாம். நம்மிடமும் குறை இருக்கு, மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைச்சாலே போதும்.பெரும்பாலும் ஆண்களைப் பழி வாங்கவே சில பெண்கள் வரதக்ஷணைக் கொடுமை எனச் சொல்லுகின்றார்கள் என்பதும் அதிகம் வெளியே வருவதில்லை. எத்தனையோ ஆண்கள் பெண்களால் அதுவும் மனைவியால் கொடுமைப் படுத்தப் படுவதும், மாமியார் மருமகளால் கொடுமைப் படுத்தப் படுவதும் வெளியே வரவில்லை. சட்டம் அவங்க பக்கம் பேசுவதில்லை. காவல் நிலையமும் அவங்க புகார்களை ஏத்துக்கறதில்லை. இது என்ன நியாயம்? எப்படி நியாயம்? இதிலே கூட சம உரிமைங்கறது மறுக்கப் படவில்லையா?? அதை ஏன் யாருமே கேட்கிறதில்லை? எப்படி கணவனின் தாய், தந்தையுடன் வாழ மறுக்க மனைவிக்கு உரிமை உண்டோ அதே உரிமை கணவனுக்கும் தன் மாமனார், மாமியாருடன் வாழ மறுக்க உண்டல்லவா?? இது அந்த அந்தக் குடும்பத்தில் என்ன வழக்கம் என்பதை அவர்களே பேசி முடிவு செய்து கொள்ள வேண்டிய ஒன்று. இடையில் புகுந்து கருத்துச் சொல்லும் தகுதி நம் யாருக்கும் இல்லை. சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் வாழணுமா, தனித்து வாழணுமா என்பதை அந்தப் பெண்ணும் அவள் கணவனுமே தீர்மானிக்கணும். கணவன், மனைவிக்குள்ளே அபிப்பிராய பேதமோ, சர்ச்சையோ வருவதில்லையா என்ன?? மாமியார், மருமகளுக்கும் அப்படித் தான் வரும். வந்தாகணும், வரலைனால் அவங்க அசாதாரண மனிதர்கள். அதோடு அப்படி எதிர்ப்பே இல்லாமல் இருக்கிறதும் நல்லது இல்லை. ஒருவர் மற்றவருக்குள் ஐக்கியமாகிவிட்டார், அவரோட எல்லாவிதமான, எப்படிப்பட்ட கருத்துக்களையும் எந்தவிதமான யோசனையும் இல்லாமல் ஏற்கத் தயாராகிவிட்டார் என ஆகிவிடும். அதனால் அபிப்பிராய பேதம் இருப்பதில் தப்பே இல்லை. ஆனால் அதையும் கடந்து ஜெயிச்சு வரது தான் வாழ்க்கை. ரெளத்திரம் பழகு எனப் பாரதி சொன்னதை யாரும் சரியான அர்த்தத்தில் புரிஞ்சுக்கலைனே சொல்லணும்.இந்தக் கூட்டுக் குடும்பம் என்பது ஓரளவாவது இன்னும் இந்த நாட்டில் நீடிப்பதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் இன்னமும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் போல் மாறாமல் இயங்கிக் கொண்டும், தாக்குப் பிடித்துக் கொண்டும் இருக்கிறது. குடும்பத்தைச் சார்ந்தே பொருளாதாரமும். குடும்பம் சமூகத்தையும் சமூகம் நகரங்களையும், நகரங்கள் நாடுகளையும் சார்கின்றது. பொருளாதாரத்தில் ஈடுபாடுகள் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்காது. என்றாலும் சும்மா வாதத்துக்காகச் சொல்கின்றார்கள் என்றே சொல்லலாம். பெண் விட்டுக் கொடுத்துப் போனால், அனுசரித்துப் போனால் அடிமை என்று சொல்லும் எண்ணம் அரசியல் வட்டாரத்தில் வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் விட்டுக் கொடுத்தே செல்லவேண்டும். அலுவலகத்தில், பேருந்துகளில் செல்லும்போது, தெருக்களில் நடக்கும்போது, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு நபர்கள் என அனைவரிடமும் நாம் விட்டுக் கொடுத்தே செல்லுகின்றோம். அதைக் கொஞ்சம் பெருமையாய்க் கூடச் சொல்லிப்போம். ஆனால் வாழ்க்கை பூராவும் ஒன்றாய் இருந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய கணவனோ, மனைவியோ, விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் சென்றால் அது அடிமைத் தனம். இது என்ன நியாயம்னு புரியலையே? இது இருபாலாருக்கும் பொருந்தும்.

மனைவி சொல்லுவது சரியாய் இருக்கின்றது என்று கணவன் அவற்றை ஏற்றுக் கொண்டால் உடனேயே மனைவிக்குப் பயந்தவன் என்ற பெயர் கிடைக்கும். மனைவி கணவனின் கூற்றை ஆமோதித்தால் உடனே அடிமை எனச் சொல்லுவது. எப்போது இந்தப் போக்கு மாறும்? கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் அவர்கள் இருவரை மட்டுமே சார்ந்தது. மூன்றாம் மனிதர் தலையீடோ, கருத்துக் கூறலோ முற்றிலும் நிராகரிக்கப் பட வேண்டியதே. ஆனால் இன்று அப்படி இல்லையே. தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, பத்திரிகைகளும் சரி தங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இவற்றை இன்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண், வீட்டில் மாமனார், மாமியாருக்கோ, கணவனுக்கோ கட்டுப்படக் கூடாது என்பது எழுதப் படாத ஒரு விதியாக இருந்து இன்று விவாதிக்கும் ஒரு விஷயமாக ஆகி விட்டது. குடும்ப அந்தரங்கங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. யார், யாருக்கோ அனுசரித்துச் செல்லும் பெண் ஏன் தன் நிலையான குடும்ப வாழ்க்கைக்காக அனுசரித்துச் செல்லக் கூடாது? கட்டாயமாய்க் கணவன், மனைவியானதும் இருவரின் எண்ணங்களிலும், பேதங்கள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர, அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடாது.


இன்னமும் அங்கங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் காட்டும் பெரியவங்களுக்கான மரியாதையும் குடும்பப் பொருளாதாரத்தைப் பெண்களும், ஆண்களும் சேர்ந்து கட்டுப் படுத்தலுமே இந்த நாட்டைப் பெரும் வீழ்ச்சியில் இருந்து காக்கின்றது. முக்கியமாய் உலகம் பூராவும் பொருளாதாரச் சீர்கேடால் அவதிப்பட நம் நாடோ அதை எதிர்த்து நின்றது. எதனால்??? இன்னமும் அழியாமல் இருக்கும் குடும்ப அமைப்பினால் மட்டுமே. இந்தக் குடும்ப அமைப்பு சிதறாமல் இருந்தாலே நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். குடும்ப அமைப்புதான் இந்த நாட்டின் தனிச்சிறப்பு. வேலை பார்க்குமிடத்திலும் பெண்களுக்கு நிறைய அவமானங்களையும் ,எதிர்ப்புகளையும் வக்கிரமான பேச்சுக்களையும் சமாளிக்கவேண்டி இருக்கு. அதைச் சமாளிக்கும் பெண்கள் உறவுக்காகவும், உறவுகளைக் காக்கவேண்டியும் இந்தச் சின்னத் தியாகத்தை(?)த் தாராளமாய்ச் செய்யலாம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை இதை அனைவரும் இப்போப் படிக்கிறதுமில்லை, படிக்கிறவங்க இதன் ஆழமான அர்த்தத்தை உணருவதும் இல்லை! ஒருத்தர் கேட்டார் இம்மாதிரித் தியாகம் செய்ததால் சிலையா வைக்கப் போறாங்கனு?? நான் என்ன அரசியல்வாதியா சிலை எல்லாம் எதிர்பார்க்க??? ஒவ்வொருவரும் அவங்க அவங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு பாடுபடறதுக்கெல்லாம் சிலை வைச்சால் இந்தியாவிலே சிலைகள் தான் இருக்கும். மனிதன் நடமாட முடியாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதும் கஷ்டம் தான் இல்லைங்கலை. அதுக்காக என் குடும்பம் சிறப்பாக இருக்க நான் பாடுபடுவதற்குச் சிலை வைக்கிறது என்று எதிர்பார்ப்பது ரொம்ப ஓவராய் இல்லை??? குடும்பத்தினர் பாராட்டவில்லை என்றாலும், நாம் எங்காவது வெளியே போயிட்டுச் சில நாட்கள் இருந்துட்டு வந்தால் நாம் உள்ளே நுழையும்போதே நாம் இத்தனைநாளா இல்லாமல் இருந்ததைக் குறித்து அவங்களுக்கு ஏற்பட்ட கஷ்டமும், நாம வந்துட்டதாலே அப்போ குடும்ப உறுப்பினர்கள் அடையும் ஆறுதலும், நிம்மதியுமே சொல்லிடும், அவங்களுக்கு நம் சேவை தேவை என்றும், நம் வரவுக்காகவும், நமக்காகவும் காத்திருக்காங்க என்பதும், நமக்கும் கொஞ்சம் சந்தோஷமே தருமே. அதிலிருந்தே உணரமுடியுமே? குடும்பம் சிறப்பாக இருந்தால் நல்ல குடும்பமாக அமைந்தால் அதன் மூலம் வருங்காலமும், வருங்காலச் சந்ததிகளும் அல்லவோ பயனடைவார்கள்??? எப்படி மாமரமும், தென்னை மரமும் வைக்கிறவன் அதில் பலனை எதிர்பார்க்க மாட்டானோ அவ்வாறே இதிலும் பலனை எதிர்பார்க்கக் கூடாது.

குடும்பத்திற்காகச் செய்வதற்கெல்லாம் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் எதிர்பார்த்தால் நாம் செய்யறதின் அர்த்தமே இல்லாமல் போயிடுமே? நம் நாட்டின் உயிர்நாடியே குடும்ப அமைப்புத் தான். அதில் தான் நம் பொருளாதாரமும் அடங்கி இருக்கிறது. குடும்பம் சிறப்பாக இருந்தாலே, அந்தத் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என அனைத்தும் சிறக்க முடியும். இன்னமும் இழுத்துப் பிடித்துக் கொண்டு உயிரை விடாமல் இருக்கும் இந்த நாட்டின் சொத்தான கலாசாரத்தைக் காக்கப் பாடுபடுவோம்.

6 comments:

 1. வாங்க மின்னல், சரியா மழைக்காலத்தில் மட்டுமே வரணும்னு வச்சிருக்கீங்க??? :)))) எப்படி இருக்கீங்க??? ரொம்பவே மின்னறீங்க???

  ReplyDelete
 2. சிந்திக்க வேண்டிய கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். பாரட்டுக்கள்

  ReplyDelete
 3. வாங்க டாக்டர் முருகானந்தம், முதல்வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 4. சாட்டை அடிகளாகச் சொற்கள் வந்து விழுகின்றன.
  தொலைக் காட்சியில் அவர்கள் குடும்ப சோதனைகளைச் சாதனைகளாக் காட்டுகிறது ஒரு பக்கம். அதிப் பார்த்துக் கெடுப் போகும் பெண்மனங்களை என்னவென்று சொல்வது.
  எக்காரணம் கொண்டும் சீரியல் பார்க்கக் கூடாது என்று திடமாக இருக்கிறேன்.
  நல்லதொரு கட்டுரை கீதா வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாங்க வல்லி, இந்தப் பின்னூட்டத்தைக் கவனிக்கலை. தொலைக்காட்சித் தொடர்கள் நேரத்தில் யார் வீட்டுக்கும் போகக் கூட யோசிக்கும்படியா இருக்கு இப்போதெல்லாம். பண்டிகைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். உறவுமுறைகளே அழிந்து வருகிறது.

  ReplyDelete