எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 13, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவார் - கர்கர் வந்தார்!

நந்தனின் தந்தைக்கு சிராத்தம் நடத்தி வைக்கவேண்டி கர்காசாரியார் மதுராவில் இருந்து வந்திருந்தார். உண்மையான காரணம் இதுவல்ல என்றாலும், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதே? தன்னுடன் மூன்று சீடர்களையும், மரியாதைக்கும், பெருமதிப்புக்கும் உரிய மற்றொரு குருவான சாந்தீபனி என்பவரையும் அழைத்து வந்திருந்தார். சாந்தீபனியோடு அவரின் மகன்களும், மற்றும் இரு சீடர்களும் வந்திருந்தனர். நீத்தார் கடன் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் நந்தன் கர்கரோடும், சாந்தீபனியோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு உடனேயே கிருஷ்ணனை அங்கே அழைத்தான். கிருஷ்ணன் ஆசாரியர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்துவிட்டுக் கூப்பிய கரங்களோடு அங்கே நின்றான். கர்கர் கிருஷ்ணனை ஆசீர்வதித்துவிட்டுச் சொன்னார்:
“கண்ணா, ஆசாரியர் சாந்தீபனி இவர் தான். இவரை உனக்காகவே இங்கே வரவழைத்தேன். இனி இவர் இங்கேயே தங்கி உனக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்களில் தேர்ச்சி பெறவும் சொல்லிக் கொடுப்பார். “

“என் தந்தைக்கு என்ன விருப்பமோ அதே என் விருப்பமும். ஆனால் குருதேவா, நான் என்ன யுத்தம் செய்யப் போகின்றேனா என்ன?? எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம்?” கிருஷ்ணன் கேட்டான்.

நந்தன் கர்காசாரியாரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் சொன்னான். “யாருக்குத் தெரியும்? ஒரு நாள் நீ அரசனாய்க் கூட ஆகலாம்.”
“இல்லை தந்தையே, நான் உங்களுடனே இருக்கவே ஆசைப்படுகிறேன். உங்களையும் யசோதை அம்மாவையும், இந்த பிருந்தாவனத்தையும், கோபர்கள், கோபிகள், மற்றும் நம்முடைய பசுக்கள், கன்றுகள் இவற்றைத் துறந்து எங்கேயும் செல்ல விருப்பமில்லை எனக்கு.”

கர்கர் கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணனைப் பார்த்து, “நந்தகுமாரா, மஹரிஷிகளுக்கெல்லாம் தலைவர் ஆனவர், முனிவர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவர், அவர் உன்னால் தான் தேசத்தில் அமைதியும், தர்மமும் கொண்டுவரப்படவேண்டும் என்றும் நீ இருக்குமிடத்திலேயே அவை இருக்கும் என்றும் சொல்லுகின்றார்.” என்று சொன்னார்.

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?” கண்ணன் கேட்டான்.
“என்ன? நீ அவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லையா? மஹான் வியாசர் தான் அவர். வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை?’” சாந்தீபனி இப்போது பேசினார்.

“ஓ, அவரா, பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் அவரைப் பற்றி. குரு கர்காசாரியார் சொல்லியுள்ளார். ஒருநாள் குருக்ஷேத்திரம் சென்று அவரை வணங்கவேண்டும்.” கண்ணன் சொல்லுகின்றான்.

அப்போது நந்தன் குறுக்கிட்டு, “ கண்ணா, என் அருமை மகனே, உன் வேண்டுகோளை இப்போது குரு கர்காசாரியாரும் சாந்தீபனியும் இருக்கும்போது சொல்லிவிடு. இனி நீயாச்சு, ஆசாரியர்களாச்சு. உன்னுடைய விசித்திரமான வேண்டுகோளால் என்னால் இனி அவதிப்படமுடியாதப்பா!” என்று பாதி கேலியாகவும், மீதி உண்மையாகவும் சொன்னான் நந்தன். கண்ணன் ஒன்று கேட்டான், நந்தன் அதை மறுத்தான் என்பது இன்று வரை கிடையாது. இனியும் அப்படி நேராமலிருக்குமா???

“என்ன கேட்கின்றான் கிருஷ்ணன்?” கர்கர் கேட்டார்.
“அவன் விருஷபாநுவின் மகள் ராதையை மணக்க விரும்புகிறான். உங்களுக்கு அவனைத் தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணனைவிட வயதில் மூத்தவள். மேலும் அவள் ஐயனுக்கென நிச்சயம் செய்யப் பட்டாவள். அதோடு கூட ஆசாரியரே, கண்ணன் எப்படி இருந்தாலும் ராதையை மணக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.” நந்தன் நிறுத்தினான்.

“ஏன் குருதேவா, ஏன்?” கண்ணன் கேட்டான்.

“எனெனில் அது நடக்கமுடியாத ஒன்று” குருதேவர் பதில் சொன்னார்.

“தந்தைதான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே? ஆனால் அவள் என்னை மணக்க விரும்புவதையும், நானும் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதையும் இங்கே சொல்லுகின்றேன். என்னை மன்னியுங்கள். “

“ம்ம்ம்ம்ம்ம்?? குழந்தாய், திருமணம் என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல. வெறும் விருப்பத்தின் பேரில் அது நடக்கவும் முடியாது. அது மாதிரி நடப்பது என்பது தர்மத்தின் பாதையில் செல்பவர்களால் முற்றிலும் ஏற்கமுடியாத ஒன்று. திருமணத்தில் வெறும் விருப்பத்தை மட்டும் பார்க்கமுடியாது மகனே. குடும்ப கெளரவம், குடிப்பிறப்பு, வயது, மனோபாவம், வளர்ப்பு, எதிர்காலம் என்று எத்தனையோ பார்க்கவேண்டும். இது சும்மா ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து இருக்கிறது மட்டும் இல்லை. மிகவும் புனிதமான ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அறமும், தர்மமும் கடைப்பிடித்து அதன் வழி வாழவேண்டிய முக்கியமான நோக்கம் திருமணத்தில் உள்ளது. இருவரும் ஒரு மனதோடு ஈருடல் ஓருயிராகிக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுகிறது.”

“திருமணம் செய்து கொள்ளுபவர்கள் அனைவருமேயா தர்மத்தின் பாதையில் அறவழியில் செல்லுகின்றனர்? நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே கெட்டுப் போகும்? இதில் அதர்மம் எங்கே வந்தது? நாங்கள் கோபர்கள் தானே? எங்களுக்கு எதற்கு இதெல்லாம்?””
கர்காசாரியார் சற்றே கவலையுடனும், யோசனையுடனும் நந்தனைப் பார்த்தார். “கிருஷ்ணா, தர்மங்களுக்குள்ளே மிக உயர்ந்த தர்மத்தை உன்னால் தான் காக்க முடியும். உனக்காக அது காத்திருக்கிறது.”

கிருஷ்ணன் வியப்போடு வயது முதிர்ந்த கர்காசாரியாரைப் பார்த்தான். குரு மேலும் சொன்னார்:” குழந்தாய், நீ பிறந்ததில் இருந்தே நான் உன்னை ஒவ்வொரு கணமும் அறிவேன். பார்த்தும் வருகிறேன். முனிவர்களில் சிறந்த வேதவியாசரே கூறியுள்ளார்,” இந்தப் பிள்ளையால்தான் தர்மம் காக்கப்படவேண்டும். இவன் பிறந்திருக்கும் காரணமே அதுதான். இது கடவுளரால் ஆணையிடப் பட்ட ஒன்று. என்று சொல்லியுள்ளார்.” இவ்விதம் சொல்லிவிட்டு கர்காசாரியார் சாந்தீபனியைப் பார்த்தார். சாந்தீபனியும் அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிவிட்டு, அதன் காரணமாகவே தான் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய மனிதர்களோடு தன்னுடைய விதி பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. சாந்தீபனியிடம், “நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான். “உன்னுடைய லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு!” என்றார் கர்காசாரியார். கண்ணன் புரியாமல் குழம்ப, நந்தன் மீண்டும் கண்ணசைக்கிறான் குருவிடம். உடனேயே கர்கர் மேலும் சொல்லுகின்றார். கண்ணனுக்கு இப்போது முழு உண்மையும் தெரியவேண்டிய தருணம் வந்துவிட்டது. அவனைத் தயார் செய்யவேண்டும். கர்காசாரியார் முடிவெடுத்துவிட்டார்.

2 comments:

  1. மௌலி சார் பதிவில் இருந்து இந்த சுட்டி கிடைத்தது. எந்த நூலை ஒற்றி எழுதி வருகிறீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல்.
    ~
    ராதா

    ReplyDelete
  2. வாங்க ராதா சார்/மேடம், முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. திரு முன்ஷி எழுதிய புத்தகம் தான் அடிப்படை.

    ReplyDelete