எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 15, 2009

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே!!!

காந்தியவாதி கல்யாணராமன் கேள்வி!! ஆட்சியாளர்கள் என்றால் யார்? சென்ற வருடத்து மீள் பதிவு, இந்த வருஷத்துக்கும் இதுவே பொருந்தும் என்பதால் புதுசா என்ன வேண்டிக்கிடக்கு??

ஜெயா + சானலில் இன்று 12-30 மணி அளவில் காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்த திரு கல்யாணராமனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்றைய நாட்களில் அரசும், நிர்வாகமும் பெருமளவில் ஊழலின் ஊற்றாக மாறி இருப்பது குறித்து வருந்திய அவர், காந்தி இருந்திருந்தால் 50 களிலேயே இந்த ஊழல் ஆரம்பித்ததை ஒட்டிப் புதிய கட்சி ஆரம்பித்து, மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போராடி இருந்திருப்பார் என்றும் கூறுகின்றார்.

சேவை புரிவது ஒன்றே நோக்கமாய்க் கொண்டிருந்த காந்தியும், அவரின் தொண்டர்களும் இத்தகைய புரட்சியைக் கட்டாயம் செய்திருப்பார்கள் என்றே சொல்கின்றார். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு விழிப்புணர்ச்சி வரவேண்டும் என்றும் சொல்கின்றார். காந்தியின் தொண்டர்களாய் இருந்த, ராஜாஜி, ஆசார்ய கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்ய வினோபாபாவே போன்றோர் அரசியலை விட்டும், கட்சியை விட்டும் விலகி மக்கள் சேவையில் இறங்கியதையும் உதாரணம் காட்டிய அவர், அவர்கள் கூட இப்போதைய நிலையில் புரட்சிக்கே ஆதரவு தெரிவித்து, இரண்டாவது சுதந்திரத்துக்குப் போராடுவார்கள் என்றே தாம் நினைப்பதாய்த் தெரிவித்தார்.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் அரசிடம் இருந்து பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், மேன்மேலும் சம்பளம் என்றும் வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் போன்றோர் அரசின் செலவில் பெருமளவு தங்கள் சொந்த உபயோகத்திற்கே பயன்படுத்துவதாயும், விமானப் பயணங்களையே விரும்புவதாயும் தெரிவித்த அவர், காந்தி கடைசி வரையில் ரயில் பயணமே மேற்கொண்டதையும், அதிலும் 3-ம் வகுப்பிலேயே, பிரயாணத்தை மேற்கொண்டதையும் சுட்டிக் காட்டினார்.

இன்றைய நாட்களில் அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலோர் அங்கே உள்ள பார்க், புல்தரை போன்றவற்றில் உலாவிக் கொண்டே இருப்பதாயும், அரசு நிர்வாகம் சீராக இல்லை என்றும் சொல்லும் அவர், அரசு அலுவலர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும், என்றும், சம்பளம் கிடைப்பதால், மேற்கொண்டு அதிக ஆசை இல்லாமல் அவர்கள் நிர்வாகத்தைச் சீராக நடத்துவதைத் தங்கள் கடமையாய்க் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். அரசு உங்கள் அரசு என்று கூறும் அரசியல்வாதிகள் தங்கள் அளவில் அப்படியே நினைத்துக் கொள்ளுவதாயும், தங்கள் சுயலாபங்களுக்கே அரசைப் பயன்படுத்துவதாயும் மறைமுகமாய்க் கூறிய அவர், அதே போல், பொதுச் சொத்து, உங்கள் சொத்து என்று கூறுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டு அனைவருமே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் முறைகேடாகப் பொதுச் சொத்தை அனுபவிப்பதோ செய்கின்றார்கள் என்றும் வருந்தினார்.

இன்றைய அரசைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்று உச்ச நீதி மன்றம் வருத்தத்துடன் கூறி இருக்கும் செய்தி வந்த தினசரியை எடுத்துக் காட்டிய அவர், தீவிரவாதம் மலிந்திருக்கும் இந்நாட்களில் போலீசுக்கு அதைத் தடுக்கும் பெரும்பங்கு இருப்பதாயும் கூறினார். போலீஸ் ஸ்டேஷன்களை மூடவேண்டும் என்று கூறிய அவர் அதற்கான உதாரணமாய்த் தன் வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்.

திரு கல்யாண ராமன் 20 வயதுகளில் இருக்கும்போது ஒரு ஆங்கிலேயக் கம்பனியில் வெல்பேர் ஆபிசர் என்ற போஸ்டில் நியமிக்கப் பட்டிருக்கின்றார். நியமிக்கப் பட்டு வேலையில் சேர்ந்து 3 நாட்கள் ஆகியும் அவருக்குத் தனி அறையோ, அல்லது தனி மேஜை, நாற்காலியோ கொடுக்கப் படவில்லை. இளவயது கல்யாணராமனுக்கு இது உறுத்தலாய் இருக்கத் தன் மேலதிகாரியான ஆங்கிலேயரைப் பார்த்து, தனக்குத் தனி அறையும், தனி மேஜை, நாற்காலியும் கேட்டிருக்கின்றார். அவர் முதுகில் ஒரு தட்டுத் தட்டிய அந்த அதிகாரி என்ன கூறினாராம் தெரியுமா??
"தம்பி, மேஜை , நாற்காலி போட்டு உட்காரவா வந்தாய்? போ, போய், தொழிற்சாலை முழுதும் சுற்றி வா, என்ன நடக்கின்றது என்று கவனி. அது தான் உன் வேலை! " தொழிற்சாலையைச் சுற்றி வந்து அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு பிடிப்பதும், பின்னர் நன்மைகளைக் கண்டறிவதுமே தன் வேலை என்று உணர்ந்ததாய்க் கூறும் அவர் நாட்டிலும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் மூடப் பட்டு போலீசார் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அப்போது தான் புதிதாக யார் வருகின்றார்கள் என்பதோ, அல்லது, எங்கே தவறு நடக்கின்றது என்றோ கண்டறிய முடியும், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்பது அவர் கருத்து.

மேலும் சேவை மனப்பான்மை இன்றைய நாட்களில் குறைந்துவிட்டதாய்ச் சொன்ன அவர், நாட்டை இன்று ஆண்டு கொண்டிருப்போர் அனைவருமே பெருமளவில் கொள்ளைக் காரர்களே என்பதாயும் வருந்துகின்றார். எல்லா விஷயங்களுக்கும் சரியான குறிப்புகளோடும், ஆதாரங்களையும் காட்டியே பேசிய இவர் பேட்டி திரும்பத் திரும்ப ஒளிபரப்பானால் ஒருவேளை மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ??? அல்லது அதுவும் கனவாகி விடுமோ??????

நாளை நமதே!!!!

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வாங்குவாய்

அச்சம் நீங்கினாயோ? அடிமை
ஆண்மை தாங்கினாயோ?

பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ???
தெய்வம் பார்க்குமோ???

8 comments:

  1. என்ன செய்யலாம் கீதா. காலச்சக்கிரத்தை ஒரு ஐம்பது வருடங்கள் பின்னால் ஓட்டி விடலாமா என்ற ஏக்கம் தான் வருகிறது.

    உண்மையான சுதந்திரம் யாருக்குக் கிடைத்திருக்கிறது.தெரியவில்லை.
    பாதகம் செய்வோரைக் கண்டால் பயப்படாதே,மோதி மிதித்துவிடு'' என்று சொல்லக் கூட புதிதாக ஒரு பாரதியார் வரவேண்டும்.
    வாழ்க பாரதம்.

    ReplyDelete
  2. //தம்பி மேஜை நாற்காலி போட்டு உட்காரவா வந்தாய்? போ, போய் தொழிற்சாலை முழுதும் சுற்றிவா, என்ன
    நடக்கின்றது என்றுகவனி, அதுதான் உன்
    வேலை//

    அவர் அவர் தம் கடமையை பலன் எதிர்பார்க்காமல் செய்தாலே நாடு நலம்
    பெறும்.

    வந்தே மாதர மென்போம்-எங்கள்
    மாநிலத் தாயை வண்ங்குது மென்போம்.

    சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தலைவி :)

    ReplyDelete
  4. ரொம்ப சரி, வல்லி, எங்க தெருவோட அழகைப் பார்த்திருக்கீங்க தானே? அதைச் செப்பனிட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. கடிதம் சென்றதாகவும் தெரியவில்லை. தபால் துறையில் விசாரித்தால் கடிதம் பெறப்படவில்லை என்று சந்தேகிக்கின்றனர். இப்படி இருக்கு நம்ம ஜனநாயகம்!

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு சார்/மேடம், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    //அவர் அவர் தம் கடமையை பலன் எதிர்பார்க்காமல் செய்தாலே நாடு நலம்
    பெறும்.//

    ஹிஹிஹி, நாம தான் நம்ம கடமைகளைச் சரிவரச் செய்கிறோமே, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை விடாமல் செலுத்தி. பலனை எம்பிக்களும், எம் எல் ஏக்களும் அனுபவிக்கிறாங்க இல்லை??? பலனை நாம எங்கே எதிர்பார்க்கிறோம்?? சொல்லுங்க??? :))))))))))))

    ReplyDelete
  6. வாங்க கோபி, சுதந்திர தின நல்வாழ்த்துகள். :)))))

    ReplyDelete
  7. வந்தே மாதர மென்போம்-எங்கள்
    மாநிலத் தாயை வண்ங்குது மென்போம்.

    சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அடுத்த வருஷத்துக்கும் இதையே போட்டுடலாம். ஒண்ணும் பெரிசா மாறாது!

    ReplyDelete