எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 21, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கண்ணனுக்குப் புரிந்துவிட்டது!

பலராமன் அக்ரூரரிடம், “கம்சன் உங்களுக்கு வலைவிரிக்கும்வரையில் நீங்கள் ஏன் அசட்டையாக இருந்தீர்கள்? “ என்று கேட்டான். “

“நாங்கள் முட்டாள்கள், அதுவும் ஒரு வருடம் இருவருடம் அல்ல, பல வருடங்கள் முட்டாள்களாய்க் கம்சனுக்குக் கீழ்ப்படிந்து இருந்துவிட்டோம். கம்சன் ஒரு வஞ்சகன். பெரும்பாலான அந்தகர்கள் ப்ரலம்பனுக்குக் கீழே ஒன்று சேர்ந்து இருந்துவிட்டனர். அவனுடைய பிரதானத் தளபதியான ப்ரத்யோதாவோ மிகவும் பலமுள்ளவனாகவும், கம்சனிடம் அதீத விஸ்வாசமுள்ளவனாகவும் இருந்துவிட்டான். எங்கள் பக்கம் ஆட்களே இல்லாமல் போயிற்று.” என்றார் அக்ரூரர்.

கண்ணன் அப்போது குறுக்கிட்டு, “இவனைப் போன்ற ஒரு கொடியவனை இவ்வளவு வருடங்கள் வளரவிட்டதே மாபெரும் தவறு. அது போகட்டும், இன்று என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ம்ம்ம்ம்ம்ம்., இன்றோ, நாளையோ, தநுர்யாகத்தின் கடைசி நாளோ, தெரியலை, அவன் ஒரு கடைசி முடிவு எடுப்பான். அந்த முடிவு நமக்கெல்லாம் ஒரு பேரழிவாக இருக்கக் கூடும். நம் அனைவரையும் ஒருசேரக் கொல்லத் தயங்க மாட்டான் கம்சன்.” என்றார் அக்ரூரர்.

“எனில் எங்களை ஏன் இங்கே வரவழைத்தான் கம்சன்? எங்களையும் சாகடிக்கவா?” பலராமன் கேட்டான்.

அக்ரூரரால் பேசமுடியவில்லை. பின்னர் தன் வார்த்தைகளைத் தானே எண்ணிப் பார்த்துக் கொள்ளுவது போல், நிதானமாய்ப் பேச ஆரம்பித்தார். “அவனுக்குக் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும். கிருஷ்ணன் உயிருடன் இருந்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனம் பலித்துவிடும், ஆகையால் முதலில் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும், அதுவே அவன் எண்ணம்.” தனக்குள்ளேயே வார்த்தைகளை அளந்து பேசுவது போல் பேசினார் அக்ரூரர். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான். சிரிப்பைக் கேட்ட அக்ரூரருக்குச் சில்லிட்டது. இந்தச் சிரிப்பு! சாதாரண மானுடனின் சிரிப்பா? இல்லை, இல்லை, உலகத்து மக்கள் அனைவரின் விதியையும் அறிந்த ஒருவனின் சிரிப்பாக அல்லவோ காணப்படுகிறது. அனைவரின் விதியும் என் கையிலே என்ற அர்த்தம் நன்கு புலப்படுகின்றதே. அக்ரூரர் முதல்முறையாகக் கண்ணனைப் புரிந்து கொண்டார். இவன் சாமானியனே அல்ல. இவனின் தன்னம்பிக்கையும் சாதாரணமானதே அல்ல. இவன் சிரிப்பிலேயே இவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கிறதே! நம்பிக்கையின் ஊற்றுக் கண்ணனிடமிருந்து அக்ரூரருக்கும் பாய்ந்தது.

“அவனால் என்னைக் கொல்ல முடியாது. நான் தான் அவனைக் கொல்வேன்.” உறுதியான குரலில் கண்ணன் சொன்னான்.

“எப்படி அறிவாய் நீ?” அக்ரூரர் கேட்டார்.

“குரு கர்கரும், குரு சாந்தீபனியும் சொன்னார்கள்.”

“கண்ணா, அவர்கள் எங்களின் பல வருடத் துயரைப் பற்றிச் சொன்னார்களா? நாங்கள் அனுபவித்து வரும் துயரை நீ புரிந்து கொண்டாயா?”

“கம்சனின் அனைத்து துர் நடத்தைகளையும் எனக்குச் சொன்னார்கள்.”

“குழந்தாய், கண்ணா, உனக்குப் புரிந்திராது, நாங்கள் எத்தகையதொரு துக்கத்தையும், கஷ்டங்களையும் அனுபவித்தோம் என்று. இத்தனை கஷ்டங்களுக்கிடையிலேயும், இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறோம் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அத்தனையும் எதனால் தெரியுமா? நீ வருவாய், எங்களைக் காப்பாய் என்ற ஒரே நம்பிக்கையில் தான். உன் தாத்தாவும், யாதவகுலத் தலைவரும் ஆன உக்ரசேனரைச் சிறையில் வைத்திருக்கிறான் கம்சன். உன் தாயும், தந்தையுமோ எனில் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வது போல் வாழ்கின்றனர். உன் கூடப் பிறந்த சகோதரர்கள் ஆறு பேர் என் கண்ணெதிரே கம்சனால் பிறந்த உடனேயே கொல்லப் பட்டனர். பலராமனை எப்படிக் கஷ்டப்பட்டு மாற்றினோம் தெரியுமா? அவனாவது பிறக்கும் முன்னரே எடுத்து மாற்றப் பட்டான். ஆனால் நீ? பிறந்துவிட்டாய்! பிறந்த குழந்தையான உன்னை கோகுலத்துக்குக் கொண்டு நந்தனிடம் கொடுத்து, வளர்க்கச் சொல்லி! எல்லாம் எதுக்காக? என்றாவது ஒருநாள் நீ வருவாய்! நாரதர் சொன்னாப்போலவே கம்சனை உன் கைகளால் கொல்வாய். எங்கள் துன்பத்தைப் போக்குவாய்! என்ற நம்பிக்கையில் தான். வேத வியாசரும் இதையே தான் உறுதி செய்தார்.” பேசும்போதே அக்ரூரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“மாமா, அழாதீர்கள், அழவேண்டாம், நான் தான் வந்துவிட்டேனே!” கண்ணனின் குரலை அழும்பிள்ளையைச் சமாதானம் செய்யும் தகப்பனின் தொனி. “ நான் அறிந்து கொண்டேன் மாமா. கம்சன் எவ்வாறு யாதவ குலத்தை நாசம் செய்து வந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். அவர்கள் நிலம், பலம், சுகம், போகம், செல்வம் என அனைத்தையும் அபகரித்திருக்கிறான். பலம் பொருந்திய சிலரை மதுராவை விட்டு வெளியேயும் தள்ளிவிட்டான். ம்ம்ம்ம்ம்ம் நான் பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் யாதவகுலப் பெண்மணிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் அவனால் கொல்லப் பட்டன என்பதையும் நான் அறிந்தேன். “ கண்ணன் மெதுவான குரலில் பேசினாலும் அதில் தெரிந்த தீர்மானமும், உறுதியும், குரலின் தொனியும் கேட்பவர் எலும்பைச் சில்லிட வைத்தது.

“ஆம், கண்ணா, தான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என நினைத்துவிட்டான்.” என்றார் அக்ரூரர்.

“தர்மத்தை விட்டு விலகி விட்டான் வெகுதூரம் !” கண்ணனின் குரலின் அசாதாரணத் தொனியைக் கண்ட அக்ரூரர் உடல் சிலிர்க்க அவர் மனம் இன்னமும் உறுதிபடக் கண்ணனின் மேல் நம்பிக்கை வளர ஆரம்பித்தது. “கண்ணா, உன்னுடைய முக்கியமான வேலை, நீ பிறந்ததின் காரணம் அறிந்தாய் அல்லவா?” அக்ரூரர் கேட்டார், “ஆம்” என்றான் கண்ணன்.

“எப்படி, கண்ணா, எப்படி? எப்போது நீ இவற்றைப் புரிந்து கொண்டாய்?”

“பலநாட்களாகவே என்னுள் ஏதோ மாற்றங்கள். என்னனு புரியாமல் இருந்தது. ஆனால் ஆனால்” கண்ணன் யோசனையுடன் தொலை தூரத்தைப் பார்த்த வண்ணம் பேசினான்.” குரு கர்கரோடு, குரு சாந்தீபனியும் வந்து நான் உண்மையில் யார் என்பதைத் தெரிவித்தார்கள். அன்று எனக்குள் குழப்பம். மறுநாள் நான் கோவர்தன மலையின் உச்சிக்குப் போய் அங்கே இருந்து சுற்றிலும் பார்த்தேன். உதயம் ஆகிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்தேன். வேகமாய் ஓடிக் கொண்டிருந்த யமுனையைப் பார்த்தேன். சூரியன் உதயம் ஆகிக் கிரணங்கள் பூமியில் பட்டன. அப்போது!........ கண்ணன் நிறுத்தினான். “ மாமா, நான் சொல்லலாமா உங்களிடம்? நீங்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்வீர்களா? அல்லது நான் கேலிக்கு உள்ளாவேனா?”

"இல்லை, கண்ணா, சொல், நீ என்ன உணர்ந்தாய் என்பதைச் சொல், நான் சரியாகவே புரிந்து கொள்வேன்," என்றார் அக்ரூரர். கண்ணன் தொடர்ந்தான்.

2 comments:

  1. கண்ணன் வந்தே விட்டான். அன்பு கிருஷ்ணா, எங்கள் கவலைகளைப் போக்கு. தீய சக்திகளை அழித்து நன்மை கொண்டு வா.
    வெகு அருமையாகக் கதையைத் தருகிறீர்கள் கீதா.

    ReplyDelete
  2. அக்ரூரமும் கண்ணனும் உரையாடல் அருமை. அக்ரூரர் காலை சந்தியாவந்தனம் செய்ய நதியில் நீராடிய போது கண்ணன் காட்சி கொடுத்ததாக படித்தேன். அது இனிமேல் வருமா. இரண்டு நாளைக்கு ஒரு பதிவு இடுங்கள். பதிவுகளின் இடைவெளி எங்களை காக்க வைக்கின்றது. நன்றி.
    சுமந்திரர் போல அக்ரூரர் ஒரு நல்ல மந்திரி.

    ReplyDelete