எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கண்ணன் மதுராவை விட்டு வெளியேறினான்!மேலும் தொடர்ந்த விகத்ரு, வசுதேவரின் ஒரு சகோதரியான குந்தி தேவி பரத குலத்து அரசனான பாண்டுவின் விதவை மனைவி எனவும் அவளுடைய ஐந்து குமாரர்களும் கண்ணனுக்கும், பலராமனுக்கும் அத்தை வழி சகோதரர்கள் ஆகின்றார்கள் என்பதையும் கூறிவிட்டு மேலும் சேதி நாட்டு அரசியான ஷ்ருதஷ்ரவா வசுதேவனின் மற்றொரு சகோதரி என்றும், அவர்கள் குமாரன் சிசுபாலன் கண்ணனுக்கும், பலராமனுக்கும் அத்தைவழி சகோதரன் எனவும் தெரிவித்தான். யாதவ குலம் பாரதம் என அழைக்கப் பட்ட இந்தப் பரந்து விரிந்த பிரதேசம் முழுதும் பரவி இருப்பதாயும் விந்திய மலைப்பகுதிகளும், சஹ்யாத்ரி மலைப்பகுதிகளும் யாதவர்களின் ஆதிக்கத்திலேயே இருப்பதாயும் கூறினான். இவ்வளவு பெரியதொரு குலத்தின் கண்ணின் கருமணியாகக் கண்ணன் தோன்றி இருப்பதாகவும் விகத்ரு தெரிவித்தான். ஜராசந்தன் அவர்கள் இருவரையும் செல்லுமிடமெல்லாம் துரத்தினாலோ, அல்லது ஸ்ரீகாலவன் இவர்களை ஏமாற்றினாலோ என்ன செய்ய முடியும் என வசுதேவன் கவலை அடைந்தான். கண்ணனோ தான் தர்மத்தின் பாதையை விட்டு அகலாமல் இருப்பதாகவும், ஆகவே தன்னைக் குறித்துக் கவலை கொள்ளவேண்டாம் எனவும் தான் மேற்கொண்டிருக்கும் தர்மம் தன்னைக் காக்கும் எனவும் திடமாய்க் கூறினான்.

“ஓஓ. அங்கே தர்மம் நிலைத்து வாழ்கின்றது கண்ணா,” கர்காசாரியார் உற்சாகமான குரலில் தொடர்ந்தார். “ஜமதக்னியின் குமாரன், பார்கவன் அங்கேதான் வாழ்கின்றான் எனக் கேள்விப் பட்டேன். அவர் ஷுர்பராகாவில் (இந்த ஷுர்பராகா தற்சமயம் மும்பைக்கு அருகே உள்ள சொபாரா என்னும் இடம் எனவும் சரித்திர காலத்துக்கு முன்னால் இங்கே ஒரு துறைமுகம் இருந்ததாகவும் முன்ஷிஜி சொல்கின்றார்.)வாழ்கின்றார் எனச் சொன்னாலும், அடிக்கடி சஹ்யாத்ரி மலைத்தொடர்களின் அரசர்கள் அரசாட்சி செய்யும் பகுதிகளுக்கு வந்து செல்கின்றார். உன்னுடைய பாதுகாப்புக்காக நான் அவரைத் தனியே சந்தித்து வேண்டிக்கொள்கிறேன்.” என்றார் கர்காசாரியார்.

“குருதேவா! அவரால் என்ன விதத்தில் எனக்கு உதவ முடியும்?? அவர்தான் தற்போது ஆயுதங்களைப் பிரயோகம் செய்யப் போவதில்லை எனச் சபதம் எடுத்துள்ளாரே?” என்றான் கண்ணன். “இருக்கலாம் கண்ணா, ஆனால் அவருடைய புத்தியும், விவேகமும், ஞானமும் அவர் க்ஷத்திரியர்களைக் கொல்லவேண்டி முன்பு உபயோகித்து வந்த பரசு என்னும் கோடரியை விட பலம் பொருந்தியதாகும்,” என்றார். “ம்ம்ம்?? சரி, பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் காலை பொழுது விடியும் முன்னரே நாங்கள் கிளம்பிவிடுகிறோம். மரியாதைக்குகந்த அரசரே, நாங்கள் சென்றதும் ஜராசந்தனுக்குத் தெரிவியுங்கள், கண்ணனையும், பலராமனையும் மதுராவில் காண முடியாது, அவர்களைத் தேடி வேறெங்கேனும் தான் அலையவேண்டும் என. அவன் எங்களைத் தேடி ஓடி வந்தானெனில் மதுரா நகருக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரிடாமல் காப்பாற்றலாம்.” என்றான் கண்ணன்.

கண்ணனுக்குத் தன்னைப் பெற்ற தாய் தேவகியிடம் விடை பெறுவது ஒரு கஷ்டமான காரியமாக இருந்தது. தேவகியின் அந்தப் புரம் சென்று அவளை வணங்கி விடைபெற்ற கண்ணனைக் கட்டிக்கொண்டு அழுத தேவகி, “என் குழந்தாய், உன்னை எனக்கே எனக்கென்று நான் அடையும் நாள் எந்நாளோ? அந்நாள் வருமா என்றே சந்தேகமாய் உள்ளது. உன்னைப் பற்றிய நினைப்பும், அதன் காரணமான பரிதவிப்பும் இல்லாமல் நான் இருக்கப் போகும் நாளும் எந்நாளோ?” எனச் சொல்லி விட்டுக் கண்ணீரை உகுத்தாள்.

“தாயே, நான் என்ன செய்வது? என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு காரணங்களாலேயே ஏற்படுகின்றது. ஜராசந்தன் இப்படித் துரத்தவில்லை எனில் நாங்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டோமே? மேலும் படைத் தலைவர் விகத்ரு சொன்னதில் இருந்து செல்லும் இடத்திலும் எனக்கு ஒரு வேலை காத்திருக்கிறதாய்த் தெரிகிறது.” கண்ணனின் இளநகை மேலும் விரிந்தது.

“கோவிந்தா, உனக்கு யாரும், எவரும் எந்தத் தொந்திரவும் ஒருபோதும் செய்யமுடியாது.” என்றாள் தேவகி. “யார் அம்மா என்னைத் தொந்தரவு செய்யப் போகின்றார்கள்? நான் தான் அவற்றைத் தேடிப் போய் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றேனே? அவை என்னைத் தேடிப் பாதி வழி வருவதற்குள் நான் அவற்றைப் போய் அடைந்து விடுகிறேன். ஆகையால் நீ என்னைக் குறித்துக் கவலை கொள்ளவும் வேண்டாம். மேலும் செல்லுமிடத்தில் எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கப் போவது யார் தெரியுமா? ஜமதக்னியின் புதல்வர் பார்கவர். யாருடைய ஆணையைக் கேட்டுக் கடலரசன் ஒதுங்கிச் சென்று நிலத்தை வெளியிட்டானோ, அவருடைய பாதுகாப்பு எங்களுக்குக் கிடைக்கப் போகிறது.”

“வேறு எவரேனும் உன்னுடன் வருகின்றனரா கண்ணா?”

“இல்லை தாயே! கூட்டமாய்ச் சென்றால் அனைவரின் கண்காணிப்பிலும் விழுவோம். நாங்கள் இருவர் மட்டுமே சென்றால் அதிகம் எவரும் கவனிக்கமாட்டார்கள். உத்தவன் மட்டுமே வருவான். எங்களுடன் குண்டினாபுரம் வரையிலும் சேர்ந்து போய்விட்டுப் பின்னர் கரவீரபுரத்திற்கு முன்னால் சென்று எங்கள் வரவை அவன் அறிவிப்பான். “

“குழந்தாய், மனதைத் தளரவிடாதே! எல்லாவற்றிலும் கவனமாய் இருந்து கொள்வாய்!”

“தாயே, நான் உனக்கு உறுதி அளிக்கிறேன். என்ன நேர்ந்தாலும் நான் தேவகியின் குமாரன் என்பதற்கு ஊறு விளைவிக்காவண்ணம் நடந்து கொள்வேன். நீ என்னை ஒரு கடவுள் என நினைத்திருக்கின்றாய் என்பதை நான் நன்கறிவேன். அப்படி ஒரு அவதாரமாகக் கடவுளாக நான் இருந்தால் அதற்குக் காரணம் உன்னைப் போன்ற ஒரு தெய்வீகமான அன்னையின் வயிற்றில் பிறந்ததே. நான் அதை ஒரு போதும் மறக்கமாட்டேன். எனக்கு அது தான் மேலும் பலம் சேர்க்கிறது.” கண்ணன் மனமாரச் சிரித்தான். அவன் உள்ளத்து மகிழ்ச்சி பேச்சிலும், சிரிப்பிலும் நன்கு புலப்பட்டது. அங்கிருந்து கண்ணன் விடைபெற்றுச் செல்லும்போது திரிவக்கரை வந்தாள். அவள் இப்போது தேவகியின் அந்தரங்கத் தோழியாகி இருந்தாள். கண்ணனைக் கண்டதும் தனியே அழைத்து அவனை வணங்கிய திரிவக்கரை தன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது என வேண்டிக் கொண்டாள். பூக்களையும், அவை அளிக்கும் சுகந்தத்தையும் எங்கே கண்டாலும் திரிவக்கரை தான் நினைவில் வருவாள் எனவும், அவளை மறப்பது இயலாத ஒன்றென்றும் கண்ணன் உறுதி அளித்துவிட்டுச் சென்றான். மறுநாள் விடிவதற்கு முன்னாலேயே கண்ணன், உத்தவனுடனும், பலராமனுடனும் ரதத்தில் ஏறிக்கொண்டு மதுரா நகரை விட்டு மக்கள் எவரும் அறியா வண்ணம் வெளியேறினான்.

விதர்ப்ப நாட்டில் இருந்த ருக்மிணி இந்தச் செய்தியைக் கேட்டதும் உள்ளம் துடிதுடித்துத் தவித்தாள். அவள் தமையனை எண்ணி எண்ணி மனம் கலங்கினாள். ஜராசந்தன் கண்ணனையும் பலராமனையும் அழிப்பதற்கு ருக்மியின் உதவியைக் கேட்க ருக்மியும் அதற்குத் தன் சம்மதத்தை அளித்திருந்தான். என்ன செய்யலாம்?? கலங்கிய ருக்மிணிக்குத் தன் தந்தையின் தகப்பன் ஆன கைஷிகனைக் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அவளிடம் மிக்க அன்பும், பாசமும் கொண்டிருக்கும் அவள் பாட்டனார் கட்டாயம் அவள் மனத்தைப் புரிந்து கொள்வார். என்ன தான் அவள் தந்தையான பீஷ்மகன் அரசனாக இருந்தாலும் அது பெயரளவுக்கே. உண்மையில் ருக்மியின் கொடுங்கோலாட்சி தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. இதைச் சகிக்க முடியாமல் தன்னால் இயன்ற அளவுக்கு ராஜரீக விஷயங்களில் தலையிட்டாள் ருக்மிணி.

பரசுராமரின் நேரடி சீடனான ருக்மியோ கண்ணனால் மதுரா நகரில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே இல்லை. எவ்வகையிலேனும் கண்ணனைப் பழிவாங்கத் துடித்த அவனுக்கு ஜராசந்தனின் இந்த அழைப்புத் தேனாய் இனித்தது. உடனே தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டான். ஜராசந்தனின் உதவி கிடைப்பதோடு அல்லாமல்,கண்ணனையும் பழி வாங்கிவிடலாம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதென்றால் சாமானியமா? அதன் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் பலாபலன்களை எண்ணிக் கனவு காண ஆரம்பித்தான் ருக்மி. ருக்மிணியும் அந்த இடைச் சிறுவனை மறக்கவே இல்லைதான். ஆனால் அவள் எண்ணங்களோ ருக்மியின் எண்ணங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. தன் அண்ணனை ஒரு பிடிவாதக் காரக் குழந்தையைப் போல் அன்றோ அந்தக் கண்ணன் நடத்தினான்! எவ்வளவு சாதுர்யமாகக் கம்சனைக் கொன்றான்? தனக்குக் கொடுக்கப் பட்ட அரசபதவியைக் கூடவன்றோ நிராகரித்துவிட்டான்! எவ்வளவு பாசம் கொண்டிருக்கின்றான் அவன் அன்னையான தேவகியிடம்! அந்தக் கூனிப் பெண் திரிவக்கரை...... ஆஹா, ஆம், அதுதான் சரி. ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்தாள்.

3 comments:

  1. enna mudivu seekiram aduta post

    ReplyDelete
  2. இப்போது தான் விட்ட பதிவு எல்லாம் முடித்தேன் தலைவி ;)

    ReplyDelete
  3. nalla thodar.. :) interesting read...

    ReplyDelete