எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 02, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 15!


அம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள்.
“ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா!
ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி இருக்கும் அம்ருத வாவியிலே மணிமயமான படகிலே இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களைக் கரை சேர்க்கிறாள். பக்தர்களைக் கரை சேர்ப்பதாலேயே இவளைத் தாரா என்றும் அழைப்பார்கள். மின்னல் கொடி போலவே சூக்ஷ்மமான ஒளிமயமான ரூபம் உடைய அம்பிகை, சூரியன், சந்திரன், அக்னி இவர்கள் வடிவங்களில் ஒளிமயமாய்ப் பிரகாசிக்கிறாள். நம் மூலாதாரத்தில் இருந்து படிப்படியாய் மேலேறி வரும் சக்தியானவள் சஹஸ்ராரச் சக்கரத்தில் நிலைபெறுகிறாள். ஸஹஸ்ரதளத்தில் தாமரைக்காட்டில் நிலை பெறும் இவள் ஒருத்தியே அனைத்துமாவாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்டவாறு கூறும்.
“ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா ஸர்வாயுத-தரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ!!

சஹஸ்ரதளங்களுள்ள தாமரையில் அனைத்து வர்ணங்களோடுகூடிய சக்திகளுடன், சகலவிதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அநேக முகங்களோடும் யாகினீ என்ற பெயரோடு காட்சி அளிக்கிறாள். இதை பட்டர்,
“அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன் எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே!”

என்று தேவிக்கு தேவ மாதர்கள் பரிவார சக்திகளாக இருத்தலைக் குறிப்பிடுகிறார். அழகுத் தெய்வமான அம்பிகையின் காந்தி பொருந்திய முகத்தின் ஒளியானது நம் உள்ளத்து இருட்டைப் போக்கும் வல்லமை உடையது. அவளுடைய கரிய கேசத்தின் கருமை அவளைத் தியானிக்கு அடியவர்களின் மன இருளைப் போக்கி உள்ளொளியை வளர்க்கும். அவள் கூந்தலின் இயல்பான மணத்தை லலிதா சஹஸ்ரநாமம், “சம்பகாசோக-புந்நாக-செளகந்திக-லஸத்கசா!” என்கிறது. சம்பக மலர்கள், அசோக மலர்கள், புந்நாகம்(புன்னை) மலர்களின் வாசத்தைக் காட்டிலும் மணம் அதிகமாய் உள்ள கரிய கேசத்தை உடையவள் என்பது பொருள்படும். அந்தக் கேசத்தை இரண்டாய்ப் பிரிக்கும் வகிட்டை “ஸீமந்தம்” என்று சொல்வார்கள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருதி-ஸீமந்த –ஸிந்தூரீ” எனக் கூறும். நெற்றியில் இருந்து வகிடு ஆரம்பிக்கும் இடத்தை ஸீமந்தம் என்று சொல்வதோடு, சுமங்கலிகள் அங்கே குங்குமம் இட்டுக்கொள்வதும் வழக்கம். நெற்றியில் நடுவே பொட்டில்லாவிடிலும், இந்த ஸீமந்தம் எனப்படும் வகிட்டின் உச்சியில் சிந்தூரம், அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது கட்டாயமாய் அநுசரிக்கப் படும். இந்த உச்சித் திலகத்தை வைத்தே பட்டர் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார்.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழித்துணையே!”
என்கிறார். உதிக்கின்ற செங்கதிரைப் போன்று உச்சித் திலகத்தின் சிவந்த நிறம் காணப்படுகிறது என்று கூறுகிறார். சூரியன் உதித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டால் சூரியனை வெறும் கண்ணால் காணமுடியாது. அதே சமயம் உதய சூரியனைக் கண்ணால் நன்றாய்ப் பார்க்க முடியும். ஆகையால் உதிக்கின்ற சூரியன் என்பது இங்கே அதையும் சுட்டும். அம்பிகையை மனமாரத் தியானித்தால் அவளைக் கண்ணாரக் காண முடியும். உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்பது மெய்ஞ்ஞானம் பெற்ற ஞாநிகள் மதிக்கின்ற மாணிக்கம் போன்றவளே என்று வரும். மாதுளம்போது என்பது, அம்பிகையின் மாதுளை நிறத்தைக் குறிக்கும். “தாடிமீ குஸுமப்ரபா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறும். “மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்பது இங்கே தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்கின்ற மின்னற்கொடியான அம்பிகை என்று பொருள்படும். இத்தனை பெருமை வாய்ந்த லலிதாம்பிகையுடன் பண்டாஸுரன் போருக்கு வந்திருக்கிறான்.

பண்டாஸுரன் வது சக்தியின் சேனைகளோடு தன் சேனைகளையும் மோத விட்டான். சக்திகள் கோபத்துடன் அக்னிக்கோட்டைக்கு வெளியில் வந்து சண்டை போட்டனர். ராஜராஜேஸ்வரியான லலிதாம்பிகை பண்டாஸுரனைக் கண்டு இவனை அழிக்கவேண்டியது நாமே என உறுதி பூண்டாள்.
“அக்கினிக்கோட்டைக்கு வெளியில் வந்தாள்-ஸ்ரீ
சக்கரத்தில் அபசகுனங்கண்டாள்
ஒப்பற்ற அஸுராள் தம்பட்ட முரசுகள்
உக்கிரமாய்க் கொம்புகள் ஊதிக்கொண்டு
சக்திதேவிகளை அஸுரர்கள் எல்லோரும்
சண்டை பிடித்தடிக்கத் துவங்கினார்கள்
சக்தி தேவியர்கள் அப்போ அஸுர சேனைகளை
ஸம்ஹரிக்கின்றார்கள்-சோபனம் சோபனம்

அஸுர சேனைகளை சக்திதேவிகள் சுற்றிப் பிடித்திழுத்துக் கத்தியாலே குத்தியும், ஈட்டியாலே குத்தியும், கொன்றழிக்கின்றனர். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் இருபக்கமும் சாய்ந்து கிடக்கும் அசுரர்களின் தலைகளும், தேகங்களும் விருட்சங்களைப் போல் காட்சி அளித்தனவாம்.

யுத்தபூமிதனில் ரத்தப் பிரவாஹம்
ஓடுவதைக் கண்டு தேவரெல்லாம்
சக்திசேனையினால் அத்தனை அஸுராளும்
ஸம்ஹரிக்கப்பட்டுக் கிடப்பதையும்
அத்தனை யானை குதிரை சேனைகளெல்லாம்
ஆமை போல் மிதக்க ரத்த நதியில்
சித்தம் மகிழ்ந்து பாரிஜாதப் புஷ்பங்கள்
தேவிக்கு சொரிந்திட்டார்- சோபனம் சோபனம்

தேவர்களுஞ் சொர்ண புஷ்பமாரி சொரிந்து
திவ்விய சகுனங்களைக் காட்டினார்கள்
கோபத்துடனே பண்டாஸுரன் விழிசிவக்கவே
கொடூரமாய் உருட்டி விழித்துக்கொண்டு
தன்சேனை அஸுராளுக் கபஜயத்தைக் கண்டு
தாய் லலிதா தேவியை எதிர்த்தான்
அஞ்சாமல் தேவியும் பண்டாஸுரனைப் பார்த்து
அதிகக் கோபங் கொண்டாள்-சோபனம் சோபனம்
பண்டாஸுரன் தன் மாயையைக் காட்டி அம்பிகையை பயமுறுத்தப் பார்க்கிறான். மாயா சக்திகள் அனைத்துக்கும் தலைவியான அவளை எந்த மாயை பயமுறுத்தும். மாயையினால் அவன் இருட்டைக் கொண்டுவர, அம்பிகை சூர்யாஸ்திரத்தின் மூலம் அந்தக் காரிருட்டைப் போக்கினாள். குருடாஸ்திரம் விட்டு அம்பிகையைக் குருடாக்க நினைக்க, நேத்ராஸ்திரத்தால் அதை வென்றாள் அம்பிகை. வாயு அஸ்திரத்தைப் பண்டாஸுரன் போட, அம்பிகையோ வருணாஸ்திரத்தால் அதை முறியடித்தாள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வியாதிக்கிருமிகளை அனுப்ப, அவற்றைத் தன்வந்திரியான அச்சுதாநந்த கோவிந்த நாமத்ரய அஸ்திரத்தால் வென்றாள் பகவதி. அந்தகாஸ்திரத்தை அனுப்ப, ம்ருத்யுஞ்சயனால் அது வெல்லப் பட்டது. பார்த்தான் பண்டாஸுரன்.

மந்திரத்தால் சும்ப நிசும்பன் சண்டமுண்டன்
மஹிஷாஸுரனையவன் அனுப்பி வைத்தான்
அனுப்பி வைத்தான் அதைக்கண்டு மஹேச்வரி
அட்டஹாஸம் செய்தாளதிலிருந்து
அம்மனட்டஹாஸத்தால் துர்க்காதேவி யுண்டாகி
அஸுராளை ஸம்ஹரித்தாள் –சோபனம் சோபனம்

முன்னே வேதங்களைத் திருடின சோமுகன்
முதலான அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.

சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்

இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்

No comments:

Post a Comment